அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
கட்டழகு விட்டு
(திருச்செந்தூர்)
முருகா!
மரணம் நேருமுன்
உன் சரணம் அடைய அருள்
தத்ததன
தத்தத் தனந்தந் தனந்ததன
தத்ததன தத்தத் தனந்தந் தனந்ததன
தத்ததன தத்தத் தனந்தந் தனந்ததன ...... தனதான
கட்டழகு
விட்டுத் தளர்ந்தங் கிருந்துமுனம்
இட்டபொறி தப்பிப் பிணங்கொண் டதின்சிலர்கள்
கட்டணமெ டுத்துச் சுமந்தும் பெரும்பறைகள் ......முறையோடே
வெட்டவிட
வெட்டக் கிடஞ்சங் கிடஞ்சமென
மக்களொரு மிக்கத் தொடர்ந்தும்
புரண்டும்வழி
விட்டுவரு மித்தைத் தவிர்ந்துன் பதங்களுற ......வுணர்வேனோ
பட்டுருவி
நெட்டைக் க்ரவுஞ்சம் பிளந்துகடல்
முற்றுமலை வற்றிக் குழம்புங் குழம்பமுனை
பட்டஅயில் தொட்டுத் திடங்கொண் டெதிர்ந்தவுணர்
...... முடிசாயத்
தட்டழிய
வெட்டிக் கவந்தம் பெருங்கழுகு
நிர்த்தமிட ரத்தக் குளங்கண் டுமிழ்ந்துமணி
சற்சமய வித்தைப் பலன்கண் டுசெந்திலுறை
......பெருமாளே.
பதம் பிரித்தல்
கட்டழகு
விட்டுத் தளர்ந்து, அங்கு இருந்துமுனம்
இட்டபொறி தப்பி, பிணங் கொண்டதின், சிலர்கள்
கட்டணம் எடுத்துச் சுமந்தும், பெரும்பறைகள் .....முறையோடே
வெட்டவிட
வெட்டக் கிடஞ்சங் கிடஞ்சம் என,
மக்கள் ஒருமிக்கத் தொடர்ந்தும், புரண்டும், வழி
விட்டுவரு மித்தைத் தவிர்ந்து,உன் பதங்கள்உற ......உணர்வேனோ?
பட்டு
உருவி நெட்டைக் க்ரவுஞ்சம் பிளந்து,
கடல்
முற்றும் மலை வற்றிக் குழம்பும் குழம்ப, முனை
பட்டஅயில் தொட்டுத் திடங்கொண்டு எதிர்ந்த
அவுணர் .....முடிசாய,
தட்டு
அழிய வெட்டிக் கவந்தம் பெருங்கழுகு
நிர்த்தமிட, ரத்தக் குளங்கண்டு உமிழ்ந்துமணி
சற்சமய வித்தைப் பலன்கண்டு, செந்தில்உறை ....பெருமாளே.
பதவுரை
பட்டு உருவி நெட்டை
க்ரவுஞ்சம் பிளந்து --- பட்டு உருவும்படி நிமிர்ந்திருந்த
கிரௌஞ்சமலை பிளக்குமாறும்,
கடல் முற்றும் அலை வற்றி குழம்பும் குழம்ப
--- சமுத்திர முழுவதும் தண்ணீர் அலைகள் வற்றி குழம்பாகக் குழம்புமாறும்,
முனைப்பட்ட அயில் தொட்டு --- கூர்மையுடைய
வேலை ஏவி,
திடம் கொண்டு எதிர்ந்த அவுணர் முடி சாய
--- உறுதிகொண்டு எதிர்த்த அசுரர்கள்
தலைகள்
சாயவும்,
தட்டு அழிய வெட்டி --- தடையின்றி
வெட்டி
கவந்தம் பெரும் கழுகு நிர்த்தம் இட ---
தலையில்லாத உடம்புகளும் பெரிய கழுகுகளும் நடனஞ் செய்யவும்,
ரத்த குளம் கண்டு உமிழ்ந்து மணி ---
உதிரத்தினால் குளங்களை உண்டாக்கி முடிகளில் உள்ள
இரத்தினமணிகள் சிந்தும்படிச் செய்து,
சற்சமய வித்தைப் பலன் கண்டு --- உத்தம
சமயத்தின் சாத்திரத்தின் பயனைக் கண்டு,
செந்தில் உறை பெருமாளே ---
திருச்செந்தூரில் எழுந்தருளியுள்ள பெருமையின் மிகுந்தவரே!
கட்டழகு விட்டு
தளர்ந்து அங்கு இருந்து --- திரண்ட அழகு நீங்கி அங்கே
ஒடுங்கியிருந்து,
முனம் இட்ட பொறி தப்பி --- முன்னே
நன்கு உதவி செய்த ஐம்பொறிகளும் கலங்கி,
பிணம் கொண்டதின் --- பிணம் என்ற நிலை
அடைந்த வுடனே,
சிலர்கள் கட்டணம் எடுத்து சுமந்தும் ---
சிலர் சேர்ந்து தமக்குரிய கூலியைப் பெற்றுக்கொண்டு சுமந்து சென்று,
பெரும் பறைகள் முறையோடே --- பெரிய பறை
வாத்தியங்கள் முறையாக,
வெட்டவிட வெட்டக் கிடஞ்சங் கிடஞ்சம் என
--- வெட்டவிட வெட்டக்கிடஞ்சங் கிடஞ்சம் என்று ஒலிக்க,
மக்கள் ஒருமிக்க தொடர்ந்தும் --- உறவினர்கள்
ஒருமித்துத் தொடர்ந்து வந்தும்,
புரண்டு வழிவிட்டு வரும் மித்தை தவிர்த்து
--- புரண்டு அழுதும் வழி விட்டுத்
திரும்புகின்ற பொய் வாழ்வை விடுத்து,
உன் பதங்கள் உற உணர்வேனோ ---
தேவரீருடைய திருவடிகளைப் பொருந்துமாறு
உணர்வையடைய
மாட்டேனோ!
பொழிப்புரை
நிமிர்ந்திருந்த கிரவுஞ்சமலையில் பட்டு
அதனை ஊடுருவிப் பாய்ந்து பிளந்தும்,
கடல்
முழுவதும் வற்றிக் குழம்பாகவும்,
கூர்மை
மிகுந்த வேலாயுதத்தை விடுத்து உறுதியுடன் எதிர்த்த சூராதியசுரர்களின் தலை சாயவும், தடையற்று அவர்களும் கூத்தாடவும், உதிரத்தினால் குளத்தை யுண்டாக்கியும், முடிமணிகள் சிந்தியும், உண்மைச் சமயத்தின் பயனைக்கண்டு செந்தில்
மாநகரில் எழுந்தருளிய பெருமிதம் உடையவரே;
திரண்ட அழகு நீங்கித் தளர்ச்சியுற்று
ஒடுங்கி, அங்கே இருந்தும் முன்
உதவி செய்த மெய், வாய், கண், நாசி, செவி என்ற ஐம்பொறிகளும் கலக்கமுறவும், பிணம் என்ற பேருடன் கிடந்தபோது, கூலி கொண்டு சிலர் எடுத்துக்கொண்டு போக, பெரிய பறைவாத்தியங்கள் முறையோடு
வெட்டவிட வெட்டக் கிடஞ்சங் கிடஞ்சம் என்ற ஒலியுடன் ஒலிக்கவும். உறவினர்கள் திரண்டு
தொடர்ந்து வரவும், புரண்டு அழவும், வழிவிட்டுத் திரும்புகின்ற இந்தப் பொய்வாழ்வை
விட்டு நீங்கி, உமது திருவடிக்
கமலத்தில் சேரும் உணர்வை அடியேன் பெறமாட்டேனோ?
விரிவுரை
கட்டு
அழகு விட்டுத் தளர்ந்து ---
முதுமையால்
உடம்பு தளர்ந்தவுடன், திரண்டு கட்டுக் கோப்பாக
இருந்த அழகு நீங்கி விடும். தாடை ஒடுக்கு விழும். கண் குழியும். இதழ்த் தொங்கும்.
பளப்பள என்றிருந்த மேனி வாழைச் சருகுபோல் திரைத்துவிடும். நரையும் வந்து
விகாரமாகிவிடும். அக்காலத்தில் அங்கும் இங்கும் நடமாட்டம் இன்றி அடங்கி ஒடுங்கி
இருக்கவேண்டி வரும்.
முனம்
இட்ட பொறி தப்பி ---
பொறிகள்:
மெய், வாய், கண், முக்கு, காது இவைகளின் மூலம் உலக ஞானம்
அறியப்படுகின்றது. இந்த ஐந்து பொறிகளும் எத்துணையோ நலன்கள் செய்கின்றன. ஆனால், இறுதிக்காலத்தில் இவைகள் தத்தம் செயல்
இழந்து அடங்கிவிடும்.
“புலனைந்தும்
பொறிகலங்கி நெறிமயங்கி
அறிவு
அழிந்திட்டு, ஐம் மேல் உந்தி
அலமந்த போதாக, அஞ்சேல் என்றுஅருள்
செய்வான் அமரும்கோயில்” --- திருஞானசம்பந்தர்.
“மைவரும் கண்டத்தர் மைந்த
'கந்தா' என்று வாழ்த்தும் இந்தக்
கைவரும்
தொண்டு அன்றி மற்று அறியேன் கற்ற கல்வியும் போய்ப்
பை
வரும் கேளும் பதியும் கதறப் பழகி நிற்கும்
ஐவரும்
கைவிட்டு மெய்விடும்போது உன் அடைக்கலமே.” --- கந்தரலங்காரம்
பொறி
புலன்கள் நெறிமயங்கா முன் இறைவனை வாழ்த்தியும், வணங்கியும், பாடியும் அவன் புகழ்க் கேட்டும், கண் குளிரத் தரிசித்தும் உய்வு பெற
வேண்டும். பொறி புலன்கள் அவன் தந்தவை. அவைகளால் அப்பரம கருணாநிதியை வழிபடவேண்டும்.
கோளில்
பொறியில் குணம் இலவே, எண்குணத்தான்
தாளை
வணங்காத் தலை --- திருக்குறள்.
சிலர்கள்
கட்டணம் எடுத்துச் சுமந்தும் ---
உயிர்
போன பின் உடம்பைச் சிலர் கூடி, கூலி கொண்டு சுமந்து
மயானத்தை அடைவார்கள். அது தான் நமது கடைசி யாத்திரை. மரண யாத்திரை என்று பேர். அம்
மரணம் நேருமுன் முருகன் சரணம் அடைதல் வேண்டும்.
மக்கள்
ஒருமிக்கத் தொடர்ந்தும் ---
உயிர்
நீங்கிய உடம்பை மயானத்திற்குக் கொண்டு போகும் போது, உறவினர்கள் ஒருங்கு கூடி அழுது கொண்டு
உடன் செல்லுவர். புரண்டு அழுவர்.
வழிவிட்டு
வரு மித்தைத் தவிர்த்து ---
இவ்வாறு
உடன் சென்ற சுற்றத்தார் சிறிது தூரம் போய் வழிவிட்டுத் திரும்பி விடுவார்கள்.
மித்தை - பொய்.
ஆகவே, இந்த வாழ்வு நிலையில்லாதது. தோன்றி
நின்று மறைவது. இந்த மித்தையைத் தவிர்த்து பவித்ர வாழ்வு தருபவன் முருகன்.
“மத்த மலத்ரய மித்தை
தவிர்த்து, அருள்
சுத்த
பவித்ர நிவர்த்தி அளிப்பவன்” --- பூதவேதாள வகுப்பு
வழிவிட்டு
வருமித்தை: வரும் இத்தை எனப் பதப்பிரிவு செய்து, வரும் இதனை எனவும் பொருள் கொள்ளலாம்.
பட்டுருவி
நெட்டை க்ரவுஞ்சம் பிளந்து..குளம் கண்டு ---
தாரகாசுரனுடைய
மாயைக்கு துணை புரிந்து நிமிந்த மலை வடிவில் நின்றவன் கிரவுஞ்ச அசுரன். அம்மலையின்
நிமிர்ந்த தன்மையைப் போக்கி வேலாயுதத்தால் பிளந்து அழித்தனர். மேலும் கடல்
குழம்பியது. போர்க்களத்தில் தலைபோன கவந்தங்கள் நடனஞ் செய்தன; உதிரம் பெருகி குளம்போல் தேங்கியது.
இவ்வண்ணம் எம்பெருமான் அசுரர்களை யழித்து உலகை உய்வித் தருளினார்.
சற்சமய
வித்தைப் பலன் கண்டு ---
சற்சமயம்---
சத்-உண்மை. உண்மைச் சமயமாக விளங்குவது சைவ சமயம். அதற்குச் சமமான சமயம் இல்லை.
சைவ
சமயமே சமயம் சமயாதீதப் பழம்பொருளைக்
கைவந்திடவே
மன்றுள் வெளிகாட்டும் இந்தக் கருத்தைவிட்டுப்
பொய்வந்துழலும்
சமயநெறி புகுதவேண்டாம் முத்திதரும்
தெய்வச்
சபையைக் காண்பதற்குச் சேரவாரும் செகத்தீரே. --- தாயுமானார்
இச்
சமய உண்மையைக் காட்ட முருகன் திருச்செந்தூரில் சிவலிங்கம் வைத்துப்
பூசிக்கின்றார்.
கருத்துரை
சூரசங்காரம் புரிந்த செந்திற் குமாரரே!
பொய் வாழ்வு நீங்கி உமது திருவடிபெற அருள்புரிவீர்.
No comments:
Post a Comment