திருச்செந்தூர் - 0059. சந்தன சவ்வாது


அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

சந்தன சவ்வாது (திருச்செந்தூர்)

முருகா!
மாதர் மயலில் வாடும் அறிவிலியை,
ஆட்கொண்டு அருள்

தந்ததன தானதன தத்தான
     தந்ததன தானதன தத்தான
     தந்ததன தானதன தத்தான ...... தனதான


சந்தனச வாதுநிறை கற்பூர
     குங்குமப டீரவிரை கத்தூரி
     தண்புழுக ளாவுகள பச்சீத ......       வெகுவாச

சண்பகக லாரவகு ளத்தாம
     வம்புதுகி லாரவயி ரக்கோவை
     தங்கியக டோரதர வித்தார ......      பரிதான

மந்தரம தானதன மிக்காசை
     கொண்டுபொருள் தேடுமதி நிட்டூர
     வஞ்சகவி சாரஇத யப்பூவை ......     யனையார்கள்

வந்தியிடு மாயவிர கப்பார்வை
     அம்பிலுளம் வாடுமறி வற்றேனை
     வந்தடிமை யாளஇனி யெப்போது ...... நினைவாயே

இந்த்ரபுரி காவல்முதன் மைக்கார
     சம்ப்ரமம யூரதுர கக்கார
     என்றுமக லாதஇள மைக்கார ......    குறமாதின்

இன்பஅநு போகசர சக்கார
     வந்தஅசு ரேசர்கல கக்கார
     எங்களுமை சேயெனரு மைக்கார ...... மிகுபாவின்

செந்தமிழ்சொல் நாலுகவி தைக்கார
     குன்றெறியும் வேலின்வலி மைக்கார
     செஞ்சொலடி யார்களெளி மைக்கார ...... எழில்மேவும்

திங்கள்முடி நாதர்சம யக்கார
     மந்த்ரவுப தேசமகி மைக்கார
     செந்தினகர் வாழுமரு மைத்தேவர் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


சந்தன, சவாது, நிறை கற்பூர,
     குங்கும, படீர, விரை கத்தூரி,
     தண் புழுகு, அளாவு களபச் சீத, ......வெகுவாச

சண்பக, கலார, வகுளத் தாம,
     வம்பு துகில் ஆர வயிரக்கோவை
     தங்கிய கடோரதர, வித்தார, ...... பரிதான,

மந்தரம் அதான தனம் மிக்க ஆசை
     கொண்டு, பொருள் தேடும், தி நிட்டூர
     வஞ்சக, விசார, இதயப் பூவை ......    அனையார்கள்,

வந்திஇடு மாய விரகப் பார்வை
     அம்பில் உளம் வாடும் அறிவு அற்றேனை,
     வந்து அடிமை ஆள இனி எப்போது ...... நினைவாயே?

இந்த்ர புரி காவல் முதன்மைக் கார!
     சம்ப்ரம மயூர துரகக் கார!
     என்றும் அகலாத இளமைக் கார! ......     குறமாதின்

இன்ப அநுபோக சரசக் கார!
     வந்த அசுரேசர் கலகக் கார!
     எங்கள்உமை சேய்என்அருமைக் கார! ...... மிகுபாவின்

செந்தமிழ்சொல் நாலு கவிதைக் கார!
     குன்று எறியும் வேலின் வலிமைக் கார!
     செஞ்சொல் அடியார்கள் எளிமைக் கார! ...எழில்மேவும்

திங்கள் முடி நாதர் சமயக் கார!
     மந்த்ர உபதேச மகிமைக் கார!
     செந்தி நகர் வாழும் அருமைத்தேவர் ...... பெருமாளே.



பதவுரை

         இந்த்ர புரி காவல் முதன்மைக் கார --- தேவந்திரனுடைய நகரமாகிய அமராவதியைக் காத்தருளுகின்ற, தலைமை உடையவரே!

         சம்ப்ரம மயூர துரகக் கார --- மிகவும் சிறந்த மயிலை குதிரைபோல் வாகனமாகக் கொண்டவரே!

         என்றும் அகலாத இளமைக் கார --- எக்காலத்தும் நீங்காத இளமையுடையவரே!

         குறமாதின் இன்ப அநுபோக சரசக் கார --- வள்ளியம்மையாருடைய இன்ப நுகர்ச்சியில் திருவிளையாடல் புரிபவரே!

         வந்த அசுர ஈசர் கலகக் கார --- போருக்கு வந்த அசுரர்த் தலைவர்களுடன் போர் புரிந்தவரே!

         எங்கள் உமை சேய் என் அருமைக்  கார --- எங்களுடைய உமாதேவியின் குழந்தை யென்று கூறப்பெறுகின்ற அருமை வாய்ந்தவரே!

         மிகு பாவின் செந்தமிழ் சொல் நாலு கவிதைக் கார --- மிகுந்த இனங்களையுடையப் பாடல்களினால் செந்தமிழ்ச் சொல் புலவர்கள் கூறிய நான்கு கவிகளை உடையவரே!

         குன்று எறியும் வேலின் வலிமைக் கார --- கிரவுஞ்ச மலையைப் பிளந்த வேலினுடைய ஆற்றலை யுடையவரே!

         செஞ்சொல் அடியார்கள் எளிமைக் கார --- இனிய சொற்களையுடைய அடியவர்களுக்கு எளிமையானவரே!

         எழில் மேவும் திங்கள் முடிநாதர் சமயக் கார --- அழகு மிகுந்த சந்திரனை முடிமேல் புனைந்த சிவமூர்த்தியினுடைய சைவ சமயத்தை வளர்ப்பவரே!

         மந்த்ர உபதேச மகிமைக் கார --- மந்திரத்தை உபதேசிக்கிற மகிமையை யுடையவரே!

         செந்தில் நகர் வாழும் அருமைத் தேவர் பெருமாளே --- திருச்செந்தூரில் எழுந்தருளியுள்ள அருமையான தேவர்கள் போற்றும் பெருமையில் சிறந்தவரே!

         சந்தன சவாது நிறை கற்பூர குங்கும படீர விரை கத்தூரி தண் புழுகு அளாவு களப --- சந்தனம், சவ்வாது, நிறைந்த பச்சைக் கற்பூரம், குங்குமப்பூவுடன் சேர்ந்த சந்தனம், மணமுள்ள கஸ்தூரி, குளிர்ந்த புனுகுச்சட்டம்,  இவைகளின் கலவைப் பூசப்பட்டதாய்,

     சீத வெகுவாச சண்பக, கலார, வகுளத்தாம --- குளிர்ந்து மிகுந்த வாசனையை உடைய சண்பக மலரும்,செங்கழுநீர் மலரும், மகிழம்பூக்களும் அணிந்துள்ளதாய்,

     வம்பு துகில் ஆர வயிர கோவை தங்கிய --- கச்சும், ஆடையும், முத்துமாலையும், வயிரமணி மாலையும், பொருந்தியுள்ளதாய்,

     கடோர தர வித்தார பரிதான --- கடினமும், உயரமும், அகலமும், பருமையும் உடையதாய்,

     மந்தரம் அது ஆனதன --- மந்தர மலைபோன்ற கொங்கைகளை உடையவராய்,

     மிக்க ஆசை கொண்டு பொருள் தேடும் --- மிக்க ஆசைக் கொண்டு பணம் தேடுகின்றவராய்

     அதி நிட்டூர வஞ்சக விசார இதய பூவை அனையார்கள் --- மிகவும் கொடுமையுடைய, வஞ்சனைச் செயல்களை ஆராய்கின்ற மனத்தையுடைய, நாகணவாய்ப் பறவை போன்ற பொது மகளிருடைய,

     வந்தி இடு மாய விரக பார்வை அம்பில் உளம் வாடும் --- துன்பத்தைத் தருகின்ற மாயமும் காமமும் நிறைந்த பார்வையாகிய அம்பினால் உள்ளம் வாடுகின்ற,

     அறிவு அற்றேனை --- அறிவு அற்றுப் போன அடியேனிடம்,

     வந்து அடிமை ஆள இனி எப்போது நினைவாயே --- எழுந்தருளி வந்து அடிமையாகக் கொண்டு ஆட்கொள்ள இனி எப்போது தேவரீர் நினைப்பீரோ?


பொழிப்புரை


         இந்திரனது நகரமாகிய அமராவதியைக் காத்தருளும் முதல்வரே!

         மிக்க பெருமையுடைய மயிலைக் குதிரை வாகனம் போல் செலுத்துபவரே!

         எந்நாளும் அகலாத இளமை உடையவரே!

         வள்ளிநாயகியை (ஆன்மாக்களின் பொருட்டு) மணந்து வாழ்பவரே!

         போருக்குவந்த அசுர வேந்தர்களை யழித்தவரே! எங்கள் உமாதேவியின் புதல்வர் என்னும் அருமையுடையவரே!

         மிகுந்த பாவினங்களை யுடைய செந்தமிழ் மொழியால் அடியார்கள் பாடும் நான்கு கவிகளை யுடையவரே!

         கிரவுஞ்ச மலையைப் பிளந்த வேலாயுதத்தின் ஆற்றலை யுடையவரே!

         இனிய சொற்களையுடைய அடியார்களிடம் எளிமைப் பூண்டவரே!

         அழகிய சந்திரனைச் சூடிய சிவமூர்த்தியின் சமயத்தைப் பரப்புகின்றவரே!

         திருச்செந்தூரில் வாழுந் தேவர்கள் போற்றும் பெருமிதம் உடையவரே!

         சந்தனம், சவ்வாது நிறைந்த பச்சைக் கற்பூரம், குங்குமப்பூ கலந்த சந்தனம், கஸ்தூரி, குளிர்ந்த புனுகு, இவைகள் கலந்த கலவைக் குழம்பு பூசப்பட்டதாய், குளிர்ச்சியும், மிகுந்த மணமும் உடைய சண்பக மலர், செங்கழுநீர் மலர், மகிழ மலர், முதலிய மாலைகளையுடையதாய், இரவிக்கை, ஆடையுடன் கூடியதாய், முத்துமாலை, வைரமாலை பூண்டதாய், கடினமும் உயர்வும் விசாலமும் பருமையும் உடையதாய், மந்தரமலைபோல் உள்ள தனங்களை உடையவராய், மிக்க ஆசைக்கொண்டு பணத்தைத் தேடுகின்ற மிகுந்த கொடியவர்களாய், வஞ்சனையான ஆராய்ச்சியுடைய மனம் உடையவர்களாய், நாகணவாய்ப் பறவை போன்றவர்களாய் உள்ள பொதுமாதர்களுடைய, துன்பத்தைத் தருகின்ற மாயமும், காமமும் உடைய கண்பார்வையாகிய அம்பினால் மனம் வாடுகின்ற அறிவற்றவனாகிய அடியேன் முன் எழுந்தருளி வந்து, என்னை ஆட்கொள்ளுமாறு இனி எப்போது நினைப்பேனோ?

விரிவுரை

இந்த்ர புரி காவல் முதன்மைக் கார ---

இந்திரனுடைய நகரமாகிய அமராவதியை சூரபன்மனுடைய மகன் பானுகோபன் இடித்துத் தீக்கு இரையாக்கிப் பொடிசெய்து அழித்துவிட்டனன். முருகப்பெருமான் சூராதியவுணரை அழித்து, இடிந்த அமராவதியைப் புதுப்பித்து, இந்திரனுக்கு முடிசூட்டி, அவனை ஐராவத முதுகில் ஏற்றி பவனி வரச்செய்து மீளவும் அந்நகருக்கு இடர்வரா வண்ணம் பாதுகாவல் புரிந்தனர்.

தேர்அணியிட்டுப் புரம்எரித்தான் மகன் செங்கையில்,வேல்
கூர்அணியிட்டுஅணு வாகிக் கிரௌஞ்சம் குலைந்து,ரக்கர்
நேர்அணியிட்டு வளைந்தகடகம் நெளிந்தது, சூர்ப்
பேர்அணிகெட்டது, தேவேந்த்ர லோகம் பிழைத்ததுவே.
                                                                                       ---  கந்தர் அலங்காரம்

என்று அருணகிரிநாதர் பிற இடங்களிலும் முருகன் இந்திரபுரியைக் காத்தருளிய கருணைத் திறத்தை வியந்து கூறுகின்றார்.

இந்திராதி தேவர்கள், இளம்பூரணனைச் சரணடைந்து தொழுது வழிபட்டதனால், இமையவர்கள் நகரை எம்பெருமான் காவல் புரிந்தனர். “தொழுது வழிபடும் அடியர் காவல்காரப் பெருமாளே” எனவரும் பழநிமலைத் திருப்புகழாலும் இதனை அறிக.

சம்ப்ரம மயூர துரகக் கார ---

மயில் மிகவும் பெருமை உடையது; ஓங்கார வடிவமானது. அது வாகனத்துக்குரிய குதிரை போல் எம்பெருமானை என்றும் தாங்கி நிற்பது. அதனால், அருணகிரிநாதர் பல இடங்களில் மயிலைக் குதிரை என்றே உருவகம் புரிகின்றார்.

என்றும் அகலாத இளமைக் கார ---

முருக மூர்த்திக்குரிய அநேக சிறப்புக்களில், முதன்மையும் வேறு எத்தேவருக்கு மில்லாத தனிமையும் இந்த மாறாத இளமையேயாகும். அதனால் பாம்பன் அடிகள் அடிக்கடி “இளம் பூரணன்” என்று எம்பெருமானைக் குறிப்பிடுவார்கள். என்றும் குழந்தை வடிவில் நின்று அடியவர்க்கு இன்ப அருள் பாலிக்கும் தெய்வம் முருகன். தன்பால் காதலித்துவந்த அடியவர்க்கு முருகன் இளநலங்காட்டி முன்னின்று வேண்டியாங்கு வேண்டியவரம் கொடுத்து அருள்புரிவன்.

மணங்கமழ் தெய்வத்து இளநலங்காட்டி
 அஞ்சல் ஓம்புமதி அறிவல் நின்வரவு என
 அன்புடை நன்மொழி அளைஇ விளிவு இன்று
 இருள்நிற முந்நீர் வளைஇய உலகத்து
 ஒருநீ யாகத் தோன்ற விழுமிய
 பெறலரும் பரிசில் நல்கும்”         ---  திருமுருகாற்றுப்படை.

குமாரசாமி என்ற திருப்பெயராலும், பாலசுப்ரமணியம் என்ற திருப்பெயராலும் இதனை அறிக.

குறமாதின் இன்ப அநுபோக சரசக் கார ---

இறைவன், திருவருளாகிய அம்பிகையுடன் கூடியிருக்கின்றான் எனபதன் உட்பொருள், உயிர்களை உய்விக்கும் பொருட்டு என்பதே ஆகும்.

தென்பால் உகந்துஆடும் தில்லைச் சிற்றம்பலவன்
பெண்பால் உகந்தான் பெரும்பித்தன் காணேடி,
பெண்பால் உகந்திலனேல், பேதாய்! இருநிலத்தோர்
விண்பால் யோகுஎய்தி வீடுவர் காண்சாழலோ.  ---  திருவாசகம்.

இங்கே வள்ளியம்மை இச்சாசக்தி. இச்சாசக்தியுடன் முருகன் கலந்திருப்பது, உயிர்கள் இச்சையமைந்து, கன்மங்களைத் துய்த்து, கன்ம நீக்கம் பெற்று, மலபரிபாகமுற்று, வீடுபேறு பெரும் பொருட்டே என உணர்க.

வந்த அசுரேசர் கலகக் கார ---

அசுரர்கள் தலைவர்களாகிய சூராதி அவுணர்கள், அமரர்களைச் சிறை விடுமாறு ஆறுமுகப்பெருமான் கூறிய அறிவுரையைக் கேட்டு உய்யாமல், மூர்க்கத்தனம் மேல்கொண்டு போர்க்களத்தில் எதிர்த்து வந்தார்கள். பலப்பல மாயப்போர் புரிந்தார்கள். இறைவன் அவர்களைத் தண்டித்தது மறக்கருணையாம் என்க.

குற்றம் செய்கின்ற புதல்வனை அவன் திருந்தி உய்தல் வேண்டும் என்ற கருணையால் தந்தை தண்டிக்கிறார். இதே நியாயந்தான் முருகவேள் அசுரேசரைத் தண்டித்தது என்பதை உணர்க.

எங்கள் உமை சேய் என் அருமைக்  கார ---

உமா-உ.ம.அ. என்ற மூன்று மந்திரங்களின் சேர்க்கையே உமா என்ற மந்திரம் என உணர்க. உ-காத்தல், ம-ஒடுக்கல், அ-அக்கல். முத்தொழில்களையும் தனது சந்நிதியில் தனது ஆற்றலைக் கொண்டு செய்விக்கும் முதல்வி உமா தேவியார். அவளின்றி ஓர் அணுவும் அசையாது. ஞானத்தின் சொரூபம்; சகல லோக ஏகநாயகி அப்பரம நாயகியின் அன்பு நிறைந்த இளங்குழவி முருகவேள். பார்வதி பாலன் என்ற அருமைக்கும் பெருமைக்கும் உரியவர் முருகர்.

இனி உமை என்பது சித்த.; முருகர் என்பது ஆனந்தம். அறிவிலிருந்து ஆனந்தம் தோன்றும். “ஞானாநந்தம்” “அறிவானந்தம்” “சித்தானந்தம்!’ என்று வரும் சொற்களை உன்னுக. அஞ்ஞானத்திலிருந்து துன்பம் தோன்றும். ஆகவே அருணகிரிநாதருக்கு அம்பிகையின் பரிபூரண அருள் உண்டு. அவர் பல இடங்களில் அம்பிகையை வாயார வாழ்த்துகின்றார். “எங்கள் தாய்” என்று அவர் கூறும் உரிமையை நோக்குக.

நாளுமினியகனி எங்களம்பிகை”    ---  (ஓலமறை) திருப்புகழ்.

அமுதமதை அருளிஎமை ஆளும் எந்தைதன்
 திருவுருவின் மகிழ்எனது தாய்பயந்திடும் புதல்வோனே”
                                                                    ---  (ஒருவரையும்) திருப்புகழ்.

மிகுபாவின் செந்தமிழ் சொல் நாலு கவிதைக் கார ---

தமிழில் பாவினங்கள் நான்கு.

ஆசுகவி, மதுரகவி, சித்திரகவி, வித்தாரகவி என்பவை;

ஆசுகவி விரைந்து உடனுக்குடன் பாடுவது.

மதுரகவி இனிமையாகப் பாடுவது.

சித்ரகவி ஏகபாதம், நாகபந்தம், தேர்ப்பந்தம், மயூரபந்தம்கோமுத்திரி முதலியவை.

வித்தாரகவி, பலவித சாங்கோபாங்கமாகப் பாடுவது.

இந்த நாலு கவிகளையும் பாடும் திறத்தைத் தன்னை வழிபட்ட அடியவர்கட்கு அள்ளித்தரும் வள்ளல் முருகன்.

நாகாசல வேலவ! நாலு கவி
 த்யாகா! சுரலோக சிகாமணியே”      ---  கந்தர் அநுபூதி.

இந்த நாற்கவிகளிலும் வல்லவர் நம் அருணகிரிநாதர். இதனை அவரே சீர்பாத வகுப்பில் கூறுகின்றார்.

முடியவழி வழிஅடிமை எனும்உரிமை அடிமைமுழுது
    உலகுஅறிய மழலைமொழி கொடுபாடும் ஆசுகவி
 முதலமொழி வன,நிபுண, மதுபமுக ரிதமவுன
    முகுள பரிமள நிகுல கவிமாலை சூடுவதும்”    ---  சீர்பாத வகுப்பு.

                                                                                
குன்று எறியும் வேலின் வலிமைக் கார ---

தாரகனுக்குத் தோழனும், மாயத்தில் வல்லவனுமாகிய கொடிய அசுரன், தேவர்களையும், முனிவர்களையும் வருத்துவதே தொழிலாக உடையவன். பரம சாதுவாகிய பறவை அன்றில். அதற்கு கிரவுஞ்சம் என்று மற்றொரு பேரும் உண்டு. அந்த கிரவுஞ்சப் பறவை உருவில் மலைபோல் நின்று அவன் வஞ்சனை செய்வான். அதனால் அந்த அசுரன் கிரவுஞ்சாசுரன் எனப்படுவான். அகத்தியர் சாபத்தினால், அவன் மலை உருவாகவே நின்று கொடுமை பலசெய்து வந்தான். முருகனுடைய வேல் அக் கிரவுஞ்ச மலையைப் பிளந்து அக் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைத்தது. அது முதல் அமரரும், இருடியரும் இடர்த் தீர்ந்தனர்.

செஞ்சொல் அடியார்கள் எளிமைக் கார ---

செவ்விய இனிய சொற்களை மொழியும் அடியார்களிடம், மூவருந் தேவருங்காணாத முருகன் மிக எளியவனாக நின்று அருள்புரிவான்.

மாலயனுக்கு அரியானே மாதவரைப் பிரியானே”
                                                                      ---  (காலனிடத்) திருப்புகழ்.

அபிநவ துங்க கங்கா நதிக்கு மைந்த
 அடியவர்க்கு எளியோனே”         ---  (தமரகுரங்) திருப்புகழ்.

திங்கள் முடிநாதர் சமயக் கார ---

திங்கள் முடிநாதர் சமயம் சிவசமயம்.

சிவசமயத்திற்குரிய மூர்த்தி குமாரமூர்த்தி.

குமாரக்கடவுள் திருஞானசம்பந்தரை அதிஷ்டித்து சிவமயத்தைப் பாதுகாத்தருளினார்.

முருக வழிபாடு வேறு. சிவவழிபாடு வேறு என எண்ணிச் சிலர் மலைவர். சிவமூர்த்தமே முருகமூர்த்தம். நடராஜ வடிவம் தட்சிணாமூர்த்தி வடிவம் என சிவ மூர்த்தங்களில் பல காணப்படுவதுபோல முருகமூர்த்தமும் ஒன்று என உணர்க. இதனை அறியாது அழிந்தவன் சூரபன்மன்.

எனவே சூரபன்மன் செய்த பிழையை மற்றவர்கள் மேற்கொள்ளக்கூடாது. சிவமூர்த்தமே குமாரமூர்த்தம். குமாரமூர்த்தியை வழிபடுவோர் தாம் ஒழுகுவது கௌமார சமயம் எனவும் கூறியிடர்ப்படுவர்.

இத்தகைய இடர்களை நீக்கவே அருணகிரிநாதர் முருகனைச் சிவசமயமூர்த்தி என விளக்கமாக விளம்புகின்றார்.

திருமருவு புயன்அயனொடு அயிரா வதக்குரிசில்
அடிபரவு பழநிமலை கதிர்காமம் உற்றுவளர்
சிவசமய அறுமுகவ திருவேர கத்தில்உறை பெருமாளே”
                                                 ---  (குமரகுருபர முருககுக) திருப்புகழ்.


மந்திர உபதேச மகிமைக் கார ---

மந்திரங்களை அவரவர் பக்குவத்திற்கு ஏற்ப, குருவாக நின்று உபதேசிக்கின்ற மூர்த்தி முருகமூர்த்தியாகும். அவரைக் குருவாகக் கொண்டு வழிபட்டால். அவர் நிச்சயமாக ஒரு சமயம் குருவாய் வெளிப்பட்டு அருள்புரிவார்.

அகத்தியருக்கும், அருணகிரிநாதருக்கும் குருமூர்த்தியாக வந்து மந்திரோபதேசம் புரிந்தருளினார். உண்மைத் துறவியாக அண்மையில் வாழ்ந்த பாம்பன் சுவாமிகளுக்கும் குருமூர்த்தி வந்து அருள் புரிந்தனர்.

முருகன் தனிவேல் முனிநம் குருஎன்று,
 அருள் கொண்டுஅறியார் அறியுந்தரமோ,
 உருவுஅன்று, ருஅன்று உளதுஅன்று, லதுஅன்று,
 இருள்அன்று, ளிஅன்று, ன நின்றதுவே”     ---  கந்தர்அநுபூதி

என்ற அநுபூதியை ஊன்றிப் படித்து உணர்க. மேலும் இறுதியாகிய அநுபூதியிலும் உறுதியுடன் “குருவாய் வருவாய் அருள்வாய் குகனே” என்று சுவாமிகள் பாடி முடிக்கின்றனர். எல்லோருக்கும் அவனே குரு. “ஆதி திருப்புகழை மேவுகின்ற கொற்றவன்” அவனே ஆகும்.

உப --- அண்மை; தேசம் --- இடம்.

இறைவனுடைய அருகில் ஆன்மாவைச் சேர்ப்பது உபதேசம்.

செந்தி நகர்வாழும் அருமைத் தேவர் பெருமாளே ---

திருச்செந்தூரில் நினைவுகளாகிய அலைகள் வந்து இறைவன் திருவடியிலே ஓய்ந்து ஒடுங்கிவிடுகின்றன. அதனால் “அலைவாய்” என்று அப்பதிக்கு மற்றொரு பேருமுண்டு. அது பிறவிப் பெருங்கடலின் துறைமுகப் பட்டினம் ஆகும். அங்கு சென்றோர் பிறவிக் கடலினின்று உய்வுபெற்று, முத்திக்கரை சேர்வர். அதனால் அங்கு வந்து தேவர்கள் வழிபடுகின்றார்கள். அந்த அருமையை யுடையவர்கள் என்று குறிப்பிடுகின்றார்.

கருத்துரை

         செந்தி மாநகரம் மேவிய கந்த நாயகனே! பந்த பாசத்தைத் தரும் மாதர் மயலில் அகப்படாவண்ணம் அடியேனை ஆண்டருள்வீர்.

No comments:

Post a Comment

பொது --- 1081. இசைந்த ஏறும்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் இசைந்த ஏறும் (பொது) முருகா!  அடியேன் அயர்ந்தபோது வந்து அருள வேண்டும். தனந்த தானந் தனதன தானன ...... தனதான...