திருத் தூங்கானைமாடம்


திருத் தூங்கானைமாடம்
(பெண்ணாகடம்)

     நடு நாட்டுத் திருத்தலம்.

     தற்போது பெண்ணாடம் என்று வழங்கப்படுகின்றது.

     விழுப்புரம் - திருச்சிராப்பள்ளி சாலையில் விருத்தாசலத்திற்கு அருகில் உள்ள இரயில் வண்டி நிலையம். விருத்தாசலத்தில் - திட்டக்குடி சாலையில், விருத்தாசலத்தில் இருந்து 17 கி.மீ. தொலைவில் உள்ளது.

     சென்னை - திருச்சிராப்பள்ளி நெடுஞ்சாலையில் தொழுதூரில் இருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள திருத்தலம்.

இறைவர்                : சுடர்க்கொழுந்தீசர், பிரளயகாலேசுவரர்.

இறைவியார்           : ஆமோதனம்பாள், கடந்தைநாயகி, அழகிய காதலி.
 
தல மரம்                : சண்பகம்.

தீர்த்தம்                  : கயிலைத்தீர்த்தம், பார்வதிதீர்த்தம் (பரமானந்ததீர்த்தம்),                                                                இந்திர தீர்த்தம்,  முக்குளம், வெள்ளாறு.


தேவாரப் பாடல்கள்    :       1. சம்பந்தர் - ஒடுங்கும் பிணிபிறவி.
                                             2. அப்பர்   -   பொன்னார் திருவடிக்கு.

          இவ்வூரில் ஆறாயிரம் கடந்தையர்கள் (வீரமக்கள்) வாழ்ந்ததால் 'கடந்தை நகர் ' எனப் பெயர் பெற்றதென்பர்.

          ஆழி புரண்டக்கால் அசையாது அதிகார நந்தி மூலம் பிரளய கால வெள்ளத்தைத் தடுத்த பெருமானின் திருத்தலம்.

          இந்திரனின் பூசைக்காக மலர்களைப் பறிக்க வந்த தேவகன்னியர் இத்தலத்து இறைவனைக் கண்டு மகிழ்ந்து வழிபாடியற்றி வாழ்ந்தனர். மலர் வராமைக் கண்ட இந்திரன் காமதேனுவை அனுப்ப அது வந்து, நிலையறிந்து, தானும் இறைவனை வழிபட்டு நின்றது. காமதேனுவை தேடிச்செல்லுமாறு இந்திரன் தன் வெள்ளை யானையை அனுப்ப, அதுவும் வந்து, நிலைமை கண்டு, இறைவனை வணங்கி, அங்கேயே நின்றுவிட, ஒன்றும் புரியாத இந்திரன், தானே புறப்பட்டுத் தேடிவந்து, நிலைமையறிந்து, பெருமானை வழிபட்டான் என்பது வரலாறு. எனவே மேற்சொல்லிய மூவரும் (பெண் + ஆ + கடம்) வழிபட்டதலம் - பெண்ணாகடம் எனப் பெயர் பெற்றதென்பர்.

          இக்கோயிலுக்கு 'தூங்கானைமாடம்' (தூங்கு ஆனை மாடம்) (கஜப் பிரஷ்டம்) என்பது பெயர்.

          காமதேனு பூசை செய்யும்போது வழிந்தோடிய பால் கயிலை தீர்த்தத்தில் நிரம்பி குளமாகியது என்பர்.

          மூலஸ்தானத்திற்கு வடபால் கட்டு மலைமேல் சௌந்தரேசுவரர் (சிவலிங்கம்) சந்நிதி தனிக் கோபுரத்துடன் கூடிய கோயில் உள்ளது. இத்தலத்திற்கு அருகில் உள்ள சௌந்தரசோழபுரத்தில் வாழ்ந்த சௌந்தரவல்லி என்னும் தேவரடியார், பண்டம் மாற்ற இத்தலத்திற்கு வரும்போது, கடைவீதியிலிருந்தே வழிபடுவதற்கேற்ப இக்கோயில் கட்டப்பட்டதென்று ஒரு செய்தி சொல்லப்படுகிறது.

          வெள்ளாற்றின் கரையில் உள்ள இத்தலத்தினை வழிபட வந்த சோழ மன்னன், ஆற்றில் வெள்ளம் வந்தமையால் அக்கரையில் இருந்தவாறே தவஞ்செய்ய, அவனுக்கு அருள்புரியவேண்டி, இறைவன் அவன் காணுமளவுக்கு உயர்ந்து காட்சி தந்தார்; அதுவே இம்மலைக் கோயிலாகும் என்ற செவிவழிச் செய்தியொன்றும் சொல்லப்படுகிறது.

          கலிக்கம்ப நாயனாரால் வெட்டுண்ட அவர் மனைவியின் கை மீண்டும் துளிர்க்க அருளிச் செய்த பிரான் ஆதலின் இறைவனுக்கு 'கைவழங்கீசர் ' என்ற பெயரும் உண்டு.

சிறப்புக்கள்

          திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரின் பாடல் பெற்றத் தலம்.

          அப்பர் - சூல இடபக் குறி பொறிக்குமாறு வேண்டிப் பெற்ற தலம்.

          கலிக்கம்ப நாயனார் அவதரித்து சிவத் தொண்டாற்றிய சிவப்பதி. நாயனாரின் திருவுருவச் சிலை திருக்கோயிலில் உள்ளது.

          அவதாரத் தலம்   : பெண்ணாகடம் (தூங்காணைமாடம்).
          வழிபாடு        : சங்கம வழிபாடு.
          முத்தித் தலம்     : பெண்ணாகடம்.
          குருபூசை நாள்    : தை - ரேவதி.

    பணியாளே சிவனடியாராக வரக்கண்டு, நீர் வார்க்கத் தாமதித்த மனைவியின் கையை வெட்டிய கலிக்கம்ப நாயனார் வீடுபேறு பெற்றதலம்.

கலிக்கம்ப நாயனார் வரலாறு

         திருப்பெண்ணாகடம் என்னும் தலத்திலே வணிகர் குலத்திலே அவதரித்தவர். திருத்தூங்கானை மாடத்துள் வீற்றிருக்கும் சிவக்கொழுந்தை வழிபடுவார். சிவனடியார்களுக்குத் திருவமுது செய்விப்பார். 

         ஒருநாள், நாயனார் வழக்கப்படி அடியவர்களை அமுது செய்விக்க அழைத்து வந்தார். நாயகியார் கரக நீர் வார்க்க, நாயனார் அடியவர்களுடைய திருவடிகளை விளக்கி வந்தார்.  அவ் அடியவருள் ஒருவர், நாயனாரிடம் முன்பு பணி செய்தவர்.  அவருக்கு ஏற்பட்ட முனிவால் பணியை விடுத்துச் சென்றவர்.  அவ் அடியவர் திருவடிகளை நாயனார் விளக்கப் புகுந்தார்.  அப்பொழுது அம்மையார், 'இவர் நம்மிடத்தில் முன்னே பணிசெய்து போனவர் போலும்' என்று எண்ணினார். அதனால் கரக நீர் வார்க்கச் சிறிது காலம் தாழ்த்தது.  இதை உணர்ந்த நாயனார், இவருடைய முன் நிலையைக் குறித்து இவள் வெகுள்கிறாள் என்று கருதி, வாளாயுதத்தை எடுத்தார். கரகத்தை வாங்கிக் கீழே வைத்தார். வாளால் அம்மையார் திருக்கரத்தைத் துணித்தார். பின்னர், தாமே கரக நீர் வார்த்து, அடியவர் திருவடியை விளக்கினார். அவரையும் மற்றவரையும் அமுது செய்வித்தார். இம் முறையில் கலிக்கம்ப நாயனார் திருத்தொண்டு செய்து, சிவனடியைச் சேர்ந்தார்.

மெய்கண்டார் வரலாறு

         மெய்கண்டார் சந்தான குரவர்கள் நால்வரில் முதலாமவர்.  சைவ சித்தாந்த சாத்திரமரபையும், சைவ சமயத்துக்கான குரு மரபையும் தோற்றுவித்தவர் மெய்கண்டாரே ஆகும். இவர் பிறந்தது நடுநாட்டின் பெண்ணாடகம் என்னும் ஊராகும். 
அச்சுதக் களப்பாளர் என்னும் சைவ வேளாளப் பெருநிலக் கிழார் வசித்து வந்தார். அவருக்கு நெடுநாட்களாகக் குழந்தைப் பேறு இல்லை. ஆகவே தம் குலகுருவான சகலாகம பண்டிதர் அருள்நந்தி சிவம் என்பவரிடம் சென்று தம் குறையைச் சொல்லி பரிகாரம் தேடினார். சகலாகம பண்டிதரும் மூவர் தேவாரங்களில் கயிறு சார்த்திப் பார்த்தார். கயிறு சார்த்திய இடத்தில் திருஞானசம்பந்தரின் திருவெண்காட்டு தேவாரப் பதிகத்தின் இரண்டாம் பாடல் கிடைத்தது.

பேயடையா பிரிவெய்தும்; பிள்ளையினோடு உள்ளம் நினைவு
ஆயினவே வரம் பெறுவர்; ஐயுற வேண்டா ஒன்றும்,
வேய் அனதோள் உமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர்
தோய்வினையார் அவர் தம்மைத் தோயாவாம் தீவினையே

என்ற திருப்பாடல் வந்ததைக் கண்டு சகலாகம பண்டிதர், “பிள்ளையினோடு உள்ளம் நினைவு ஆயினவே வரம் பெறுவர்; ஐயுற வேண்டா ஒன்றும்” என்னும் இந்த வரிகளைச் சுட்டிக் காட்டிப் பிள்ளை பிறக்கும் என்று ஆறுதல் கூறித் “திருவெண்காட்டுத் தலம் சென்று அங்குள்ள மூன்று குளங்களிலும் நீராடி வழிபட்டால் கட்டாயம் பிள்ளை பிறக்கும்; கவலைப்பட வேண்டாம்” என்று கூறி அனுப்பி வைத்தார்.  உடனே அச்சுதகளப்பாளர் தம் மனைவியோடு திருவெண்காடு சென்று மூன்று குளங்களான, சூரிய தீர்த்தம், அக்னி தீர்த்தம், சக்ர தீர்த்தம் போன்றவற்றில் முறையே நீராடி திருவெண்காட்டு ஈசனை வழிபடலானார். ஒரு நாள் அவர் கனவில் ஈசன் தோன்றி, “அச்சுத களப்பாளா! இப்பிறவியில் உனக்குப் பிள்ளை வரம் இல்லை;  ஆனால் நீ எம் சீர்காழிப் பிள்ளையின் திருப்பதிகத்தில் நம்பிக்கை வைத்து இங்கு வந்து வழிபட்டு விரதம் இருந்ததால் உனக்குத் திருஞான சம்பந்தனைப் போன்றதொரு தெய்வமகன் பிறப்பான்” என்று அருளுகிறார்.  அவ்வாறே அச்சுத களப்பாளருக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது. குழந்தைக்குத் திருவெண்காட்டு ஈசனின் பெயரான சுவேதவனப் பெருமாள் என்ற பெயரே வைக்கப்பட்டது.  குழந்தை பிறந்ததிலிருந்தே சிவபக்திச் செல்வனாய் விளங்கிற்று.  குழந்தைக்கு இரண்டு வயது இருக்கையில் ஒரு அதிசயம் நடந்தது.

         திருக்கயிலையில் உபதேசம் பெற்ற பரஞ்சோதி முனிவர், கயிலையில் இருந்து அகத்தியரைக் காணவேண்டிப் பொதிகைக்கு ஆகாய மார்க்கமாகப் பறந்து கொண்டிருந்தார்.  அப்போது திருவெண்ணெய்நல்லூரில் மாமன் வீட்டில் இருந்த குழந்தை சுவேதவனப் பெருமாள் வீட்டு வாசலில் விளையாடிக்கொண்டிருந்தார். பரஞ்சோதி முனிவர் அவ்வழியே வான வீதியில் செல்கையில் அவருக்கு மேலே செல்லமுடியாமல் தடங்கல் ஏற்பட்டது. அதிசயித்த முனிவர் காரணம் அறிய வேண்டிக் கீழே நோக்கினார். அருள் ஒளியுடன் கூடிய குழந்தை ஒன்று கீழே விளையாடுவதைக் கண்டார்.  உடனேயே அவருக்கு ஞானநாட்டத்தில் அக்குழந்தை பெரிய மகானாக வரப் போவதும், இந்த இரண்டாம் வயதிலேயே குழந்தை உபதேசம் பெறக்கூடிய பக்குவத்தோடு காத்திருப்பதையும் உணர்ந்து கொண்டார். உடனே விண்ணிலிருந்து மண்ணுக்கு இறங்கியவர் குழந்தையைத் தம் கைகளால் எடுத்து அணைத்துக்கொண்டு பரிச, நயன தீக்கைகளை அளித்தார். சிவஞான உபதேசமும் செய்வித்தார். 

         பரஞ்சோதி முனிவரின் குருவின் பெயர் சத்தியஞான தரிசினி என்பதாகும். அந்தப் பெயரையே தமிழாக்கம் செய்து குழந்தையின் ஞானமார்க்கப் பெயரை "மெய்கண்டார்" என தீக்கைத் திருநாமமாக மாற்றியும் அருளிச் செய்தார். பின்னர் வான்வழியே சென்றுவிட்டார். அன்றுமுதல் சுவேதவனப்பெருமாள் மெய்கண்டார் ஆனார். சமய குரவர்களில் முதல்வரான திருஞானசம்பந்தர் தம் மூன்றாம் வயதில் எவ்வாறு இறைவனால் ஆட்கொள்ளப்பட்டு அன்னையின் ஞானப்பாலை உண்டு ஞானம் பெற்றார். சந்தானகுரவரில் முதல்வரான மெய்கண்டாரும் ஈராண்டில் குருவால் ஆட்கொள்ளப்பட்டு ஞான உபதேசம் பெற்றார்.  இன்றைய சைவசித்தாந்த சாத்திர மரபைத் துவங்கி வைத்தவர் மெய்கண்டாரே ஆகும். மெய்கண்டாரால் அருளப் பெற்ற ஒரே சாத்திர நூல் சிவஞானபோதம் ஆகும்.

         சகலாகம பண்டிதருக்கு இந்தச் செய்தி தெரிய வந்தது.  அவர் தாம் சொல்லிப் பிறந்த குழந்தை இவ்வளவு புகழோடு குழந்தைப் பருவத்திலேயே சீடர்கள் பலரோடும் திகழ்வது கண்டு ஆணவம் தலைக்கேற, ஒருநாள் அவரைக் காணச் சென்றார்.  அப்போது மெய்கண்டார் ஆணவ மலம் குறித்துச் சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருந்தார். உடனே சகலாகம பண்டிதர் மெய்கண்டாரை ஒரே கேள்வியில் வீழ்த்தி விட நினைத்து “ஆணவ மலத்தின் சொரூபம் யாது?” எனக் கேட்க, மெய்கண்டார் தம் சுட்டு விரலை நீட்டி அவரையே காட்டினார். தம்மையே ஆணவமலத்தின் சொரூபமாகக் குழந்தை குரு காட்டியதும் சகலாகம பண்டிதரின் ஆணவம் அடங்கிப் பக்குவம் வந்தது.  வயதையும் பொருட்படுத்தாமல் விரைந்து சென்று மெய்கண்டாரின் திருவடிகளில் வீழ்ந்து, தம்மையும் சீடனாக ஏற்றுக்கொள்ளும்படி வேண்டினார். அவ்வாறே மெய்கண்டாரும் அவரைத் தம் சீடனாக ஏற்றுக்கொண்டு ஞான உபதேசம் அளித்தார். ஏற்கெனவே மெய்கண்டாருக்கு 48 மாணவர்கள் இருந்தனர். அருள்நந்தி 49-ஆம் மாணவராக ஆனார்;  சிலநாட்களில் மெய்கண்டாரை அடுத்து இரண்டாம் சந்தான குரவராக ஆனார். மெய்கண்டார் எவ்வளவு  காலம் இவ்வுலகில் வாழ்ந்தார் என்பது குறித்துச் சரியாகத் தெரியவில்லை. ஆனால் திருவெண்ணெய்நல்லூரிலேயே முக்தி அடைந்ததாய்த் தெரிய வருகிறது. அவரது சமாதிக்கோயில் திருவாவடுதுறை ஆதீனத்தால் நிர்வகிக்கப்படுவதாயும் தெரிய வருகிறது.  திருவாவடுதுறை ஆதீனம் அவர் பிறந்த இடமான பெண்ணாகடத்தில் களப்பாளர்மேடு என்னும் பெயரில் வழங்கிய இடத்தைக் கண்டுபிடித்து அங்கே மெய்கண்டாருக்காக நினைவு நிலையம் கட்டி மெய்கண்டாரின் விக்கிரகமும் நிறுவப் பெற்றதாயும், தெரிந்து கொள்கிறோம்.

         கோயிலின் முன் வாயிலில் தென்பால் குடவரை விநாயகரை இருக்கிறார்.

          இக்கோபுரவாயிலில் மேல்பக்கச் சுவரின் தென்பால் மெய்கண்டார் கோயில் உள்ளது. நேர் எதிரில் கலிக்கம்ப நாயனார் காட்சி தருகிறார்.

          30 அடி உயரமுள்ள அழகான கொடிக்கம்பம் அருகில் கிழக்கு நோக்கிய பிரதோஷ நந்தி சந்நிதி உள்ளது.

          மூலவரின் விமானம் ஐராவதம் வழிபட்டதற்கு அடையாளமாக யானை நிற்பதுபோல் (கஜப்ருஷ்ட அமைப்பு) அமைந்துள்ளது.

          மூலவர் சுயம்பு லிங்கம். சற்று உயரமானது, ஆவுடையார் சதுர வடிவானது.

          கர்ப்பக்கிருகத்தின் முன்வாயில் தவிர, ஏனைய மூன்று புறங்களிலும் இறைவனைக் கண்டு வணங்குமாறு சன்னல்கள் - பலகணிகள் அமைந்திருப்பது சிறப்புடையது.

          தலமரத்தின் கீழ் சண்டேஸ்வரரின் சந்நிதி உள்ளது.

          இத்தலத்திற்கு, ஐராவதம் வழிபட்டதால் 'தயராசபதி' என்றும், ஆதிநாளில் மலர்வனமாக விளங்கியதால் 'புஷ்பவனம், புஷ்பாரண்யம்' என்றும் இந்திரன் வழிபட்டதால் 'மகேந்திரபுரி' என்றும், பார்வதி வழிபட்டதால் 'பார்வதிபுரம்' என்றும், நஞ்சுண்ட இறைவனின் களைப்பைத் தீர்த்த தலமாதலின் 'சோகநாசனம்' என்றும், சிவனுக்குகந்த பதியாதலின் 'சிவவாசம்' என்றும் வேறு பெயர்கள் உள்ளன.

          சித்திரை சதய விழாவில் அப்பர் சுவாமிகள் சைவ சமயம் சார்ந்து, இறைவனை வேண்டி, சூலமும் இடபக்குறியும் பொறிக்குமாறு வேண்டிப்பெற்ற விழா கொண்டாடப்படுகிறது.

          மறைஞான சம்பந்தர் பிறந்த தலமும் இதுவே. இவர் பெயரில் தனி மடம் உள்ளது.

மறைஞானசம்பந்தர் வரலாறு

         அருள்நந்தி சிவாசாரியாரின் மாணவர் ஆவார். இவர் திருப்பெண்ணாகடத்தில் வைதிக சைவ அந்தணர் குலத்தில் பராசர கோத்திரத்தில் அவதரித்தவர்.  ஏழாவது ஆண்டில் இவருக்கு உபநயனம் நிகழ்ந்தது. பின்பு மரபுக்கு ஏற்ப வேதங்களையும் சிவாகமங்களையும் முறையாகப் பயின்று தெளிந்தார். பின்னர், அருள்நந்தி சிவாசாரியாரை அடைந்து, பந்தம் அறுத்து ஆட்கொள்ள வேண்டினார்.

         அருள்நந்தி சிவம் இவருக்கு சிவதீட்சை தெய்து வைத்துச் சிவஞானத்தை உயர்த்தி அருளினார். அதன் பிறகு சிதம்பரத்தை அடைந்து, தில்லை அம்பலவாணனை வழிபட்டுச் சீவன்முத்தராக வாழ்ந்து வந்தார். இவரை வந்தடைந்த உமாபதி சிவாசாரியாருக்கு ஞான உபதேசம் செய்து, ஓர் ஆவணி மாதத்து உத்தர நட்சத்திரத்தில் , சிதம்பரத்திற்கு மேற்குப் பக்கத்தில் உள்ள திருக்களஞ்சேரியில் சுத்த அத்துவித முத்தி ஆகிய சிவசாயுச்சியத்தை எய்தினார்.

          சேது மகாராசா இத்திருக்கோயிலில் திருப்பணிகள் செய்ததோடு தேரும் அமைத்துத் தந்துள்ளார்.

          சோழர் காலக் கல்வெட்டுக்கள் பல இக்கோயிலில் உள்ளன. கல்வெட்டுக்களில் இத்தலத்து இறைவன் "தூங்கானைமாடம் உடைய நாயனார்" என்று குறிப்பிடப்படுகின்றனர்.

          கோயிலுக்குப் பொன், பசு, நிலம் முதலியவை விட்ட செய்திகள், கல்வெட்டால் தெரிய வருகின்றன.

         வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "பூங்குழலார் வீங்கு ஆனை மாடம் சேர் விண் என்று அகல் கடந்தைத் தூங்கானைமாடச் சுடர்க்கொழுந்தே" என்று போற்றி உள்ளார்.


திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 184
ஆங்கு நாதரைப் பணிந்துபெண்
         ணாகடம் அணைந்து, அரு மறைஓசை
ஓங்கு தூங்கானை மாடத்துள்
         அமர்கின்ற ஒருதனிப் பரஞ்சோதிப்
பாங்கு அணைந்து, முன் வலங்கொண்டு
         பணிவுற்று, பரவுசொல் தமிழ்மாலை
"தீங்கு நீங்குவீர் தொழுமின்கள்"
         எனும்இசைப் பதிகமும் தெரிவித்தார்.

         பொழிப்புரை : அங்கு, திருமுதுகுன்றத்தில், வீற்றிருக்கும் தலைவரை வணங்கி, விடை பெற்றுச் சென்று `திருப்பெண்ணாகடம்\' என்ற பதியை அடைந்து, அரிய மறைகளின் ஓசை முழங்கும் `திருத்தூங்கானைமாடம்\' என்ற அக்கோயிலுள் விரும்பி வீற்றிருக்கின்ற ஒப்பற்ற மேலாய ஒளியான இறைவரின் அருகணைந்து, வலம் வந்து, திருமுன்பு பணிந்து, எழுந்து, போற்றும் சொல் தமிழ் மாலையான, `தீங்கினின்றும் நீங்கும் கருத்துடையீர்களே! இங்குத் தொழுமின்கள்\' என்ற கருத்துடைய இசைப் பதிகத்தைப் பாடியருளினார்.

         குறிப்புரை : இதுபொழுது அருளிய பதிகம் `ஒடுங்கும்' (தி.1 ப.59) எனத் தொடங்கும் பழந்தக்கராகப் பதிகம் ஆகும். இப்பதிகத்துள்ள பாடல்கள் பத்தும், `உலகியலை விடுத்து வீட்டுலகம் அடையக் கருதுவீர் திருத்தூங்கானை மாடம் தொழுமின்களே' என ஆற்றுப் படுத்துகின்றன. அவற்றை உளங் கொண்டே ஆசிரியர் சேக்கிழாரும், இவ்வாறு மொழிந்தருளுகின்றார்.

1.059 திருத்தூங்கானைமாடம்         பண் - பழந்தக்கராகம்
                                    திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
ஒடுங்கும் பிணிபிறவி கேடுஎன்றுஇவை
         உடைத்துஆய வாழ்க்கை ஒழியத்தவம்
அடங்கும் இடம்கருதி நின்றீர் எல்லாம்
         அடிகள் அடிநிழல் கீழ் ஆள்ஆம்வண்ணம்
கிடங்கும் மதிலும் சுலாவி எங்கும்
         கெழுமனைகள் தோறும் மறையின்ஒலி
தொடங்கும் கடந்தைத் தடம்கோயில்சேர்
         தூங்கானை மாடம் தொழுமின்களே.

         பொழிப்புரை :வெளிப்படுதற்குரிய காலம் வருந்துணையும் ஒடுங்கியிருக்கும் நோய் இனிவரும் பிறப்புகள், துன்பங்கள் ஆகியனவாய இவைகளை உடைய இவ்வாழ்க்கை நீங்கத்தவம் புரிதற்குரிய இடத்தை விரும்பி நிற்கும் நீவிர் எல்லீரும் அகழும் மதிலும் சூழ்ந்து எல்லா இடங்களிலும் உள்ள வீடுகள்தோறும் வேதங்களின் ஒலிகள் ஒலிக்கும் கடந்தை என்னும் ஊரில் உறையும் அடிகளாகிய சிவபெருமானின் அடிநிழலின்கீழ் அவருக்கு ஆளாகுமாறு அவர் கோயிலாகிய திருத்தூங்கானைமாடம் செல்வீராக.


பாடல் எண் : 2
பிணிநீர சாதல் பிறத்தல்இவை
         பிரியப் பிரியாத பேரின்பத்தோடு
அணிநீர மேல்உலகம் எய்தல்உறில்
         அறிமின் குறைவுஇல்லை ஆன்ஏறுஉடை
மணிநீல கண்டம் உடையபிரான்
         மலைமக ளும்தானும் மகிழ்ந்துவாழும்
துணிநீர்க் கடந்தைத் தடம்கோயில்சேர்
         தூங்கானை மாடம் தொழுமின்களே.

         பொழிப்புரை :பிணிகளின் தன்மையினை உடைய சாதல் பிறத்தல் ஆகியன நீங்க, எக்காலத்தும் நீங்காத பேரின்பத்தோடு கூடிய அழகிய தன்மை வாய்ந்த, மேலுலகங்களை நீவிர் அடைய விரும்பினால், விடையேற்றை ஊர்தியாகவும், கொடியாகவும் உடையவனும், நீலமணி போன்ற கண்டத்தினைக் கொண்டவனும் ஆகிய சிவபிரான் மலைமகளும் தானுமாய் மகிழ்ந்து வாழும், தெளிந்த நீரை உடைய கடந்தையில் ஒளியோடு கூடிய திருத்தூங்கானைமாடக் கோயிலை அறிந்து தொழுவீராக. உங்கட்கு யாதும் குறைவில்லை.


பாடல் எண் : 3
சாநாளும் வாழ்நாளும் தோற்றம்இவை
         சலிப்புஆய வாழ்க்கை ஒழியத்தவம்
ஆம்ஆறு அறியாது அலமந்துநீர்
         அயர்ந்தும் குறைவுஇல்லை ஆன்ஏறுஉடைப்
பூமாண் அலங்கல் இலங்குகொன்றை
         புனல்பொதிந்த புன்சடையி னான்உறையும்
தூமாண் கடந்தைத் தடம்கோயில்சேர்
         தூங்கானை மாடம் தொழுமின்களே.

         பொழிப்புரை :இறக்கும் நாளும், வாழும் நாளும், பிறக்கும் நாளும் ஆகிய இவற்றோடு கூடிய சலிப்பான வாழ்க்கை நீங்கச் செய்யும் தவம் யாதென அறியாது நீவிர் மறந்ததனாலும் யாதும் குறைவில்லை. விடையேற்றை ஊர்தியாகக்கொண்டு மலர்களில் மாட்சிமையுற்று விளங்கும் கொன்றை மாலையும், கங்கையும் தங்கிய சிவந்த சடையினை உடைய சிவபிரான் உறையும் தூய்மையான, மாண்புடைய கடம்பைநகரில் விளங்கும் பெரிய கோயிலாக அமைந்த திருத்தூங்கானை மாடத்தைத் தொழுவீராக. அது ஒன்றே தவத்தின் பயனைத் தரப்போதுமானதாகும்.


பாடல் எண் : 4
ஊன்றும் பிணிபிறவி கேடுஎன்று இவை
         உடைத்தாய வாழ்க்கை ஒழியத்தவம்
மான்று மனம்கருதி நின்றீர் எல்லாம்
         மனம்திரிந்து மண்ணில் மயங்காதுநீர்
மூன்று மதில்எய்த மூவாச்சிலை முதல்வர்க்கு
         இடம்போலும் முகில்தோய்கொடி
தோன்றும் கடந்தைத் தடம்கோயில்சேர்
         தூங்கானை மாடம் தொழுமின்களே.

         பொழிப்புரை :நிலையான நோய், பிறப்பு, இறப்பு, துன்பம் இவற்றை உடைய வாழ்க்கை நீங்கவும், நிலையான வீடு பேற்றைப் பெறவும், தவம் செய்ய விரும்பி மயங்கி நிற்கும் நீவிர் எல்லீரும் மனம் வேறுபட்டு உலகில் மயங்காது, திரிபுரங்களை எய்த அழியாத வில்லை ஏந்தியவரும், உலகின் தலைவருமாகிய சிவபிரானது இடமாக விளங்குவதாய், வானளாவிய கொடிகள் தோன்றும் கடந்தை நகரில் உள்ள பெரிய கோயிலாக அமைந்த திருத்தூங்கானைமாடத்தைத் தொழுவீர்களாக.


பாடல் எண் : 5
மயல்தீர்மை இல்லாத தோற்றம்இவை
         மரணத்தொடு ஒத்துஅழியு மாறுஆதலால்
வியல்தீர மேல்உலகம் எய்தல்உறின்
         மிக்குஒன்றும் வேண்டா விமலன்இடம்
உயர்தீர ஓங்கிய நாமங்களால்
         ஓவாது நாளும் அடிபரவல்செய்
துயர்தீர் கடந்தைத் தடம்கோயில்சேர்
         தூங்கானை மாடம் தொழுமின்களே.

         பொழிப்புரை :மயக்கம் நீங்காத பிறப்பிறப்புக்கள் அழியும் வழிகள் ஆதலால் அவற்றின் நீங்கி மேலுலகம் எய்த நீவிர் விரும்பினால் பெரிதாய முயற்சி எதுவும் வேண்டா. எளிய வழியாகச் சிவபிரானது இடமாக விளங்குவதும் நம் துயர்களைத் தீர்ப்பதும் ஆகிய கடந்தை நகரில் உள்ள பெரிய கோயிலாகிய திருத்தூங்கானைமாடத்தை அடைந்து அப்பெருமானுடைய மிக உயர்ந்த திருப்பெயர்களைக் கூறி இடைவிடாது அவன் திருவடிகளைத் தொழுவீர்களாக.


பாடல் எண் : 6
பல்நீர்மை குன்றிச் செவிகேட்புஇலா
         படர்நோக் கில்கண் பவளந்நிறம்
நல்நீர்மை குன்றித் திரைதோலொடு
         நரைதோன் றும்காலம் நமக்குஆதல்முன்
பொன்நீர்மை துன்றப் புறந்தோன்றும்நல்
         புனல்பொதிந்த புன்சடையி னான்உறையும்
தொல்நீர்க் கடந்தைத் தடம்கோயில்சேர்
         தூங்கானை மாடம் தொழுமின்களே.

         பொழிப்புரை :புலன் நுகர்ச்சிக்குரிய பல தன்மைகளும் குறைந்து காதுகள் கேளாமல் கண்களில், சென்று பற்றும் பார்வைகுன்றிப் பவளம் போன்ற உடல்நிறம் குன்றிச் சுருங்கிய தோலோடு நரை தோன்றும் மூப்புக் காலம் நம்மை வந்து அணுகுமுன் பொன்போன்ற நிறம் பொருந்திய கங்கை தங்கிய செஞ்சடையினையுடைய சிவபிரான் உறையும், பழமையான புகழையுடைய கடம்பை நகர்த்தடங்கோயிலாகிய திருத்தூங்கானைமாடத்தைத் தொழுவீர்களாக.


பாடல் எண் : 7
இறையூண் துகளோடு இடுக்கண்எய்தி
         இழிப்புஆய வாழ்க்கை ஒழியத்தவம்
நிறைஊண் நெறிகருதி நின்றீர்எல்லாம்
         நீள்கழ லேநாளும் நினைமின் சென்னிப்
பிறைசூழ் அலங்கல் இலங்குகொன்றை
         பிணையும் பெருமான் பிரியாத நீர்த்
துறைசூழ் கடந்தைத் தடம்கோயில்சேர்
         தூங்கானை மாடம் தொழுமின்களே.

         பொழிப்புரை :குறைந்த உணவோடு பல்வகைத் துன்பங்களையும் எய்தி வருந்தும் இழிந்த வாழ்க்கை நீங்க, தவமாகிய நிறைந்த உணவைப் பெறும் வழியாதென மயங்கி நிற்கும் நீவிர் அனைவீரும், முடியில் பிறை சூடியவரும், கொன்றை மாலை அணிந்தவரும் ஆகிய பெருமான் பிரியாது உறைவதாய், நீர்த்துறைகள் சூழ்ந்த கடந்தை நகரிலுள்ள தடங்கோயிலாகிய தூங்கானைமாடத்தை நாளும் நினைந்து தொழுவீர்களாக.


பாடல் எண் : 8
பல்வீழ்ந்து நாத்தளர்ந்து மெய்யில்வாடிப்
         பழிப்புஆய வாழ்க்கை ஒழியத்தவம்
இல்சூழ் இடம்கருதி நின்றீர் எல்லாம்
         இறையே பிரியாது எழுந்துபோதும்
கல்சூழ் அரக்கன் கதறச்செய்தான்
         காதலியும் தானும் கருதிவாழும்
தொல்சீர்க் கடந்தைத் தடம்கோயில்சேர்
         தூங்கானை மாடம் தொழுமின்களே.

         பொழிப்புரை :பல்வீழ்ந்து பேச்சுத் தளர்ந்து, உடல் வாடிப் பலராலும் பழிக்கப்படும் இவ்வுலக வாழ்க்கை நீங்கத் தவம் புரியும் இடம் யாதெனக்கருதி நிற்கும் நீவிர் அனைவீரும் சிறிதும் காலம் தாழ்த்தாது எழுந்துவருவீர்களாக. கயிலைமலையைப் பெயர்த்த இராவணனைக் கதறுமாறு அடர்த்த சிவபிரான் மலைமகளும் தானுமாய்க் கருதி வாழும் பழமையான புகழையுடைய கடம்பை நகரில் உள்ள பெருங்கோயிலாகிய தூங்கானைமாடத்தைத் தொழுவீர்களாக.


பாடல் எண் : 9
நோயும் பிணியும் அருந்துயரமும்
         நுகர்உடைய வாழ்க்கை ஒழியத்தவம்
வாயும் மனம்கருதி நின்றீர் எல்லாம்
         மலர்மிசைய நான்முகனும் மண்ணும்விண்ணும்
தாய அடிஅளந்தான் காணமாட்டாத்
         தலைவர்க்கு இடம்போலும் தண்சோலைவிண்
தோயும் கடந்தைத் தடம்கோயில்சேர்
         தூங்கானை மாடம் தொழுமின்களே.

         பொழிப்புரை :உடலை வருத்தும் நோய்களும், மனத்தை வருத்தும் கவலைகளும் அவற்றால் விளையும் துன்பங்களும் ஆகியவற்றை நுகர்தற்குரிய இவ்வாழ்க்கை நீங்கத் தவம் புரியும் எண்ணத்துடன் நிற்கும் நீவிர் அனைவீரும் தாமரை மலர்மேல் உறையும் நான்முகனும், மண்ணையும், விண்ணையும் அடியால் அளந்த திருமாலும் காணமாட்டாத தலைவனாகிய சிவபிரானுக்குரிய இடமாகிய விண் தோயும் சோலைகளால் சூழப்பட்ட கடந்தை நகரிலுள்ள திருத்தூங்கானைமாடப் பெருங்கோயிலைத் தொழுவீர்களாக.


பாடல் எண் : 10
பகடூஊர் பசிநலிய நோய்வருதலால்
         பழிப்புஆய வாழ்க்கை ஒழியத்தவம்
முகடுஊர் மயிர்கடிந்த செய்கையாரும்
         மூடுதுவர் ஆடையரும் நாடிச்சொன்ன
திகழ்தீர்ந்த பொய்ம்மொழிகள் தேறவேண்டா
         திருந்துஇழையும் தானும் பொருந்திவாழும்
துகள்தீர் கடந்தைத் தடம்கோயில்சேர்
         தூங்கானை மாடம் தொழுமின்களே.

         பொழிப்புரை :பெரும்பசி நலிய, நோய்கள் வருத்துவதால், பழிக்கத்தக்க இவ்வாழ்க்கை நீங்கத் தவம் செய்ய விரும்பும் நீவிர் தலையை முண்டிதமாக்கித் திரிபவரும், உடலைத் துவராடையால் போர்த்தவரும் ஆகிய சமண புத்தர்களின் ஞானம் நீங்கிய பொய் மொழிகளைத் தெளியாது இறைவன் இறைவியோடு பொருந்தி வாழும் குற்றமற்ற கடந்தை நகர்த் தடங்கோயிலாகிய திருத்தூங்கானை மாடத்தைத் தொழுவீர்களாக.


பாடல் எண் : 11
மண்ஆர் முழவுஅதிரும் மாடவீதி
         வயல்காழி ஞானசம் பந்தன்நல்ல
பெண்ணா கடத்துப் பெருங்கோயில்சேர்
         பிறையுரிஞ்சும் தூங்கானை மாடம் மேயான்
கண்ணார் கழல்பரவு பாடல்பத்தும்
         கருத்துஉணரக் கற்றாரும் கேட்டாரும்போய்
விண்ணோர் உலகத்து மேவிவாழும்
         விதிஅதுவே ஆகும் வினைமாயுமே.

         பொழிப்புரை :மார்ச்சனையோடு கூடிய முழவு ஒலி செய்யும் மாட வீதிகளைக் கொண்டுள்ள வயல்கள் சூழ்ந்த சீகாழிப் பதியில் தோன்றிய ஞானசம்பந்தர் பெண்ணாகடத்தில் பெருங்கோயிலாக விளங்கும் வானளாவிய திருத்தூங்கானைமாடத்து இறைவன் திருவடிகளைப் பரவிப் பாடிய பாடல்கள் பத்தையும் கற்றவரும், கேட்டவரும் விண்ணவர் உலகத்தை மேவி வாழ அப்பாடல்களே தவப்பயன்தரும்; வினைகள் மாயும்.

                                             திருச்சிற்றம்பலம்


---------------------------------------------------------------------------------

        
திருநாவுக்கரசர் திருப்பதிக வரலாறு


பெரிய புராணப் பாடல் எண் : 148
திருஅதிகைப் பதிமருங்கு திருவெண்ணெய் நல்லூரும்,
அருளுதிரு ஆமாத்தூர், திருக்கோவலூர் முதலா
மருவுதிருப் பதிபிறவும் வணங்கி, வளத் தமிழ்பாடி,
பெருகு விருப்புடன் விடையார் மகிழ்பெண்ணாகடம் அணைந்தார்.

         பொழிப்புரை : திருவதிகையின் அருகிலுள்ள திருவெண்ணெய்நல்லூரும், அருள் தருகின்ற திருவாமாத்தூரும், திருக்கோவலூரும் முதலாகப் பொருந்திய பதிகள் பலவற்றையும் வணங்கி, செழுமையுடைய தமிழ்ப்பதிகங்களைப் பாடி, ஆனேற்றை ஊர்தியாக உடைய சிவபெருமான் விரும்பி வீற்றிருக்கும் திருப்பெண்ணாகடத்தைப் பெருவிருப்புடன் அடைந்தார்.

         குறிப்புரை :திருவெண்ணெய் நல்லூரில் அருளிய பதிகம் கிடைத்திலது.

திருஆமாத்தூரில் அருளிய பதிகங்கள் இரண்டாம், அவை:

1.    திருக்குறுந்தொகை: `மாமாத்தாகிய ஈசனை` (தி.5 ப.44) எனத் தொடங்குவது. 2. திருத்தாண்டகம்: `வண்ணங்கள் தாம்பாடி` (தி.6 ப.9) எனத் தொடங்குவது.

2.    திருக்கோவலூரில் அருளிய பதிகம், `செத்தையேன்` (தி.4 ப.69) எனத் தொடங்கும் திருநேரிசைப் பதிகமாகும். `முதலாமருவு திருப்பதிகள்` எனக் குறிப்பன, திருவிடையாறு, திருநெல்வெண்ணெய் முதலாயினவாம். பதிகங்கள் எவையும் கிடைத்தில.

3.    திருமுண்டீச்சரம் என்ற பதியை இவ்விடத்துக் குறிப்பிட்டு, அப்பதியில் அருளியது, `ஆர்த்தான்` (தி.6 ப.85) எனத் தொடங்கும் பதிகமாகும் என வெள்ளைவாரணனார் கூறுவர்.


பெ. பு. பாடல் எண் : 149
கார்வளரும் மாடங்கள் கலந்தமறை ஒலிவளர்க்கும்
சீர்உடை அந்தணர்வாழும் செழும்பதியின் அகத்து எய்தி,
வார்சடையார் மன்னு திருத் தூங்கானை மாடத்தைப்
பார்பரவும் திருமுனிவர் பணிந்து ஏத்திப் பரவினார்.

         பொழிப்புரை : மேகங்கள் தவழ்வதற்கு இடமான மாளிகைகளில், பொருந்திய மறையொலியை வளர்க்கின்ற சிறப்பையுடைய மறையவர்கள் வாழ்கின்ற அச்செழும் பதியுள் போய், நீண்ட சடையையுடைய சிவபெருமான் நிலைபெற்று விளங்கும் திருத்தூங்கானை மாடக்கோயிலை, உலகவர் போற்றும் திருநாவுக்கரசர் பணிந்து போற்றிப் பரவினார்.

         குறிப்புரை : ஒருயானை படுத்திருப்பது போலும் வடிவில் இக் கோயிலின் கருவறை விமானம் அமைந்திருத்தலின் தூங்கானை மாடம் எனப் பெயர் பெறுவதாயிற்று. இதுகோயிலின் பெயர். பெண்ணாகடம் என்பது ஊரின் பெயர்.


பெ. பு. பாடல் எண் : 150
"புன்நெறியாம் அமண்சமயத் தொடக்குஉண்டு போந்தஉடல்
தன்னுடனே உயிர்வாழத் தரியேன் நான், தரிப்பதனுக்கு
என்னுடைய நாயக! நின் இலச்சினை இட்டு அருள்"என்று
பன்னுசெழுந் தமிழ்மாலை முன்நின்று பாடுவார்.

         பொழிப்புரை : `இழிவான சமண் சமயப் பிணிப்புடைய இவ் வுடலுடனே உயிர் வாழ்வதற்கு மனமிசையேன் ஆதலின் என் உயிர்த் தலைவரே! நான் உயிர் வாழ்வதற்கு உமது இலச்சினையை இட்டருள வேண்டும்` என்னும் கருத்தமைவுடைய செந்தமிழ் மாலையைத் திருமுன்பு நின்று பாடுவாராய்.

  
பெ. பு. பாடல் எண் : 151
"பொன்ஆர்ந்த திருவடிக்குஎன் விண்ணப்பம்" என்றுஎடுத்து,
முன்ஆகி எப்பொருட்கும் முடிவுஆகி நின்றானை,
தன்ஆகத்து உமைபாகம் கொண்டானை, சங்கரனை,
நல்நாமத் திருவிருத்தம் நலம் சிறக்கப் பாடுதலும்.

         பொழிப்புரை : `பொன்னார் திருவடிக் கொன்றுண்டு விண்ணப்பம்` (தி.4 ப.109) எனத் தொடங்கி, எப்பொருட்கும் முதலும் முடிவுமாகி நின்று அருளுகின்ற இறைவரை, தம் திருமேனியில் ஒருமருங்கில் உமையம்மையாரைக் கொண்டவரை, சங்கரரை, அவருடைய நல்ல திருப்பெயர்களைப் பாடும் திருவிருத்தப் பதிகத்தை நலம் சிறக்கப் பாடவும்,


பெ. பு. பாடல் எண் : 152
நீடுதிருத் தூங்கானை மாடத்து நிலவுகின்ற
ஆடக மேருச் சிலையான் அருளால்,ஓர் சிவபூதம்
மாடுஒருவர் அறியாமே வாகீசர் திருத்தோளில்
சேடுஉயர் மூஇலைச்சூலம் சினவிடையின் உடன்சாத்த.

         பொழிப்புரை : செல்வம் நிலைபெறும் திருத்தூங்கானை மாடத்தில் நிலவும் பொன்னான மேருமலையை வில்லாக உடைய பெருமானின் திருவருளால், ஒரு சிவபூதமானது, அருகிலுள்ளார் யாரும் அறியாதவாறு வந்து, திருநாவுக்கரசரின் திருத்தோள்களில் ஒளி மிக்க மூவிலைச்சூலக் குறியைச் சினமுடைய ஆனேற்றின் குறியுடனே சாத்த,

         குறிப்புரை : இவ்விடத்து அருளப் பெற்ற திருப்பதிகம் `பொன்னார் திருவடிக் கொன்றுண்டு விண்ணப்பம்` (தி.4 ப.109) எனத் தொடங்கும் திருவிருத்தமாகும். இப்பதிகத்துள் கிடைத்துள்ள பாடல்கள் மூன்றேயாம். முதற்பாடலில் `சூலமென் மேற்பொறி` என்றும், இரண்டாவது பாடலில் `திருவடி நீறென்னைப் பூசு` என்றும், மூன்றாவது பாடலில், `இடவம் பொறித்தென்னை யேன்றுகொள்` என்றும் வேண்டிக் கொண்டுள்ளார் நாவரசர்.


பெ. பு. பாடல் எண் : 153
ஆங்குஅவர்தம் திருத்தோளில் ஆர்ந்ததிரு இலச்சினையைத்
தாம்கண்டு, மனங்களித்து, தம்பெருமான் அருள்நினைந்து,
தூங்குஅருவி கண்பொழியத் தொழுது,விழுந்து, ஆர்வத்தால்
ஓங்கியசிந் தையர்ஆகி "உய்ந்துஒழிந்தேன்" என எழுந்தார்.

         பொழிப்புரை : அவர் தம் திருத்தோளில் நிறைந்த திரு இலச்சினைகளைக் கண்டு, மனம் மகிழ்ந்து, தம்பெருமானின் திருவருளை நினைந்து, இழிந்து வரும் அருவி எனக் கண்களில் நீர் வடிய, வணங்கி, நிலத்தில் விழுந்து, மீதூர்ந்த அன்பால் நிரம்பி, மேல் எழுந்த சிந்தையராய் `நான் உய்ந்தேன்` எனக் கூறி எழுந்தார்.


பெ. பு. பாடல் எண் : 154
தூங்கானை மாடத்துச் சுடர்க்கொழுந்தின் அடிபரவி,
பாங்குஆகத் திருத்தொண்டு செய்துபயின்று அமரும் நாள்,
பூங்கானம் மணங்கமழும் பொருஇல்திரு அரத்துறையும்
தேங்காவின் முகில்உறங்கும் திருமுதுகுன்றமும் பணிந்து.

         பொழிப்புரை : திருத்தூங்கானை மாடத்தில் வீற்றிருக்கும் சுடர்க் கொழுந்தான பெருமானின் திருவடிகளைப் போற்றி செய்து, இயன்ற முறையில் திருப்பணிகளும் செய்து, அத்திருப்பதியில் விரும்பி எழுந்தருளியிருக்கும் நாள்களில், அழகிய காட்டுப் பூக்களின் மணம் கமழ்கின்ற ஒப்பற்ற திருவரத்துறையினையும், தேன் பொருந்திய சோலைகளில் மேகங்கள் தவழும் திருமுதுகுன்றத்தையும் வணங்கி.


4. 109   திருத்தூங்கானைமாடம்               திருவிருத்தம்
                                    திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
பொன்ஆர் திருவடிக்கு ஒன்றுஉண்டு விண்ணப்பம்போற்றிசெய்யும்
என்ஆவி காப்பதற்கு இச்சைஉண் டேல்,இருங் கூற்றுஅகல
மின்ஆரும் மூவிலைச் சூலம்என் மேல்பொறி, மேவுகொண்டல்
துன்ஆர் கடந்தையுள் தூங்கானை மாடச் சுடர்க்கொழுந்தே.

         பொழிப்புரை : விரும்பி மேகங்கள் தங்குதல் பொருந்திய பெண்ணாகடத்திலுள்ள திருக்கோயிலாகிய தூங்கு ஆனை மாடத்தில் ஒளிப் பிழம்பாய் இருக்கும் பெருமானே! உன்னுடைய பொன்போன்ற திருவடிகளில் அடியேன் செய்யும் விண்ணப்பமாகிய வேண்டுகோள் ஒன்று உளது. அஃதாவது அடியேனுடைய உயிரைப் பாதுகாக்கும் விருப்பம் உனக்கு உண்டானால், யான் சமண சமயத்தில் வாழ்க்கையின் பெரும் பகுதியை வீணாக்கினவன் என்று மக்கள் கூறும் பழிச் சொற்கள் நீங்குமாறு, உன்னுடைய அடிமையாக அடியேனை எழுதிக் கொண்டாய் என்பது புலப்பட ஒளிவீசும் முத்தலைச் சூலப் பொறியை அடியேன் உடம்பில் பொறித்து வைப்பாயாக.


பாடல் எண் : 2
ஆஆ சிறுதொண்டன் என் நினைந்தான் என்றுஅரும்பிணிநோய்
காவாது ஒழியில் கலக்கும்உன் மேல்பழி, காதல்செய்வார்
தேவா! திருவடி நீறு என்னைப் பூசு,செந் தாமரையின்
பூஆர் கடந்தையுள் தூங்கானை மாடத்துஎம் புண்ணியனே.

         பொழிப்புரை : செந்தாமரைப் பூக்கள் நிறைந்த கடந்தையுள் தூங்கானைமாடத்து உறையும் எம் புண்ணியனே! `ஐயோ` இச்சிறு தொண்டன் என்னை விருப்புற்று நினைத்தான் என்று திருவுளம் பற்றிப் பெரிய பிணிகளும் நோய்களும் தாக்காதவாறு அடியேனைப் பாதுகாவாமல் விடுத்தால் புண்ணியனாகிய உனக்குப் பழி வந்து சேரும். ஆதலின் விரும்பும் அடியவர் தலைவனாகிய நீ உன் திருவடிகள் தோய்ந்த நீற்றினை அடியேன் மீது பூசுவாயாக.

பாடல் எண் : 3 - 9
* * * * * * * * *

பாடல் எண் : 10
கடவும் திகிரி கடவாது ஒழியக் கயிலை உற்றான்
படவும், திருவிரல் ஒன்று வைத்தாய், பனி மால்வரைபோல்
இடவம் பொறித்து என்னை ஏன்று கொள்ளாய், இருஞ் சோலைதிங்கள்
தடவும் கடந்தையுள் தூங்கானை மாடத்துஎம் தத்துவனே.

         பொழிப்புரை : பெரிய சோலைகளிலே சந்திரன் பொருந்தி உலவும் கடந்தைத் தலத்தில் உள்ள தூங்கானை மாடத்தில் உறையும் எம் மெய்ப்பொருளே! செலுத்திய தேர்ச்சக்கரம் மேல் உருளாது தடைப்படக் கயிலையைப் பெயர்க்க முற்பட்ட இராவணன் உடல் நெரியுமாறு அழகிய கால்விரல் ஒன்றால் அழுத்தியவனே! பெரிய இமய மலைபோன்ற வெண்ணிறமுடைய காளை வடிவப் பொறியை அடியேன் உடலில் பொறித்து அடியேனை உன் தொண்டனாக ஏற்றுக் கொள்வாயாக.

                                             திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment

பொது --- 1081. இசைந்த ஏறும்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் இசைந்த ஏறும் (பொது) முருகா!  அடியேன் அயர்ந்தபோது வந்து அருள வேண்டும். தனந்த தானந் தனதன தானன ...... தனதான...