திரு வடுகூர்


திரு வடுகூர்
(ஆண்டார் கோயில், திருவாண்டார் கோயில்)

     நடு நாட்டுத் திருத்தலம்.

         விழுப்புரம் - பாண்டிச்சேரி ரயில் பாதையில் உள்ள சின்னபாபு சமுத்திரம் ரயில் நிலையத்தில் இருந்து 4 கி.மீ. தொலைவில் வடுகூர் திருத்தலம் உள்ளது.

     அருகில் உள்ள நகரங்கள் விழுப்புரம் மற்றும் பாண்டிச்சேரி. விழுப்புரத்திலிருந்து கோலியனூர், கண்டமங்கலம் வழியாக பாண்டிச்சேரி செல்லும் தேசீய நெடுஞ்சாலையில் புதுவை மாநில எல்லைக்குள் நுழைந்து, திருபுவனை என்ற ஊரைக் கடந்து சிறிது தூரம் சென்றால் சாலையோரத்திலுள்ள சற்று உட்புறமாக உள்ள திருவாண்டார் கோயிலை அடையலாம்..

இறைவர்          : வடுகீசுவரர், வடுகநாதர், வடுகூர்நாதர்.

இறைவியார்      : திரிபுரசுந்தரி, வடுவகிர்க்கண்ணி.

தல மரம்           : வன்னி.

தீர்த்தம்            : வாமதேவ தீர்த்தம்.

தேவாரப் பாடல்கள்: சம்பந்தர் - சுடுகூரெரிமாலை அணிவர்


         இந்திய தொல்பொருள் ஆராய்ச்சிக் கழகத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வரும் இவ்வாலயத்திற்கு இராஜகோபுரம் இல்லை. அழகிய சுற்றுமதில்களுடன் கிழக்கு நோக்கிய ஒரு நுழைவாயில் மட்டுமே உள்ளது. நுழைவாயிலுக்கு வெளியே நந்தி ஒன்று காணப்படுகிறது. முகப்பு வாயிலைக் கடந்ததும் உள்ளே நுழைந்தவுடன் கொடிமரம், பலிபீடம், நந்தி மற்றும் 18 கால் மண்டபம் உள்ளது. இங்கு தெற்கு நோக்கியவாறு இறைவி வடுவகிர்க்கன்னி அம்மை சந்நிதி உள்ளது. அம்பாள் 4 கரங்களுடன் எழிலாகக் காட்சி தருகிறாள். இந்த மண்டபத்தைக் கடந்தவுடன் அர்த்த மண்டபம் உள்ளது. அர்த்த மண்டபத்தின் நுழைவாயிலின் இருபுறமும் துவாரபாலகர்கள் உருவம் சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக காணப்படுகிறது. அர்த்த மண்டபத்தை அடுத்து மூலவர் கருவறை இருக்கிறது. மூலவர் ஒரு சுயம்பு லிங்கம். வெளிப் பிரகாரத்தில் தென் திசையில் தனி விமானத்துடன் உள்ள நால்வர் சந்நிதி, கன்னி மூலையில் விநாயகர் சந்நிதி, நிருதி மூலையில் வள்ளி தெய்வானையுடன் கூடிய ஆறுமுகன் சந்நிதி ஆகியவை இருக்கின்றன.

         இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் உள்ளது. இத்தலத்தில் முருகப்பெருமான் ஆறு திருமுகங்களுடனும் 12 திருக்கரங்களுடனும் மயில் மீது அமர்ந்த கோலத்தில் தனது தேவியர் இருவருடன் எழுந்தருளியுள்ளார்.

         அர்த்த மண்டபத்தையும், கருவறையையும் உள்ளடக்கிய சுவர்களின் வெளிப்பிரகாரத்தில் கல்வெட்டுக்கள் பல காணப்படுகின்றன. மேலும் தெற்கு நோக்கிய பிச்சாடனர், தட்சினாமூர்த்தி, மேற்கு நோக்கிய லிங்கோத்பவர், வடக்கு நோக்கிய துர்க்கை, அர்த்தநாரீசுவரர் ஆகியோரின் உருவங்கள் உள்ளன. இக்கோவிலின் கருவறை விமானம் தஞ்சை பெரிய கோவில் பாணியில் அமைந்துள்ளது. இத்தலத்தில் உள்ள கல்வெட்டுகள் மூலம் இத்தலம் முதலாம் பராந்தக சோழன் காலத்தைச் சேர்ந்தது என்று அறியப்படுகிறது. மேலும் முதலாம் ராஜராஜ சோழன், முதலாம் ராஜேந்திர சோழன், முதலாம் குலோத்துங்க சோழன் ஆகியோர் கலத்து கல்வெட்டுகளும் கணப்படுகின்றன.

         வெளிப் பிராகாரம் சுற்றி வரும்போது மேற்குப்புற மதில் சுவற்றில் ஆமை, மீன் ஆகியவற்றின் ஒரு புடைப்புச் சிற்பம் காணப்படுகிறது. இது பற்றிய விபரம் தெரியவில்லை.

     முண்டாசுரன் என்பவன் சிவனை நோக்கி கடுந்தவம் செய்து அவரிடமிருந்து தேவாசுரர்களாலும், பிறரால் சாகாமலும் இருக்க வரங்கள் பெற்றான். வரங்கள் பெற்ற முண்டாசுரன் தேவர்கள், பிரம்மா ஆகியோருடன் போர் புரிந்து வெற்றி பெற்றான். பிரம்மா முதலியோர் சிவனிடம் சரணடைந்தனர். சிவன் ஆணைப்படி வடுக பைரவர் தோன்றி முண்டாசுரனை வதம் செய்கிறார். ஆகையால் இத்தலத்தில் சிவபெருமான் வடுகநாதர் என்றும், வடுகபைரவர் அசுரனைக் கொன்ற கொலைப்பழி தீர தவம் செய்து பேறு பெற்றதால் இத்தலம் வடுகூர் என்றும் பெயர் பெற்றது. ஆண்டார் கோயில் என்பது கோயிலுக்குப் பெயர். கோயிலின் பெயரே பிற்காலத்தில் ஊருக்குப் பெயராயிற்று. ஆண்டார் கோயில் என்பது இன்று வழக்கில் திருவாண்டார் கோயில் என்றாயிற்று.

         ஆலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும். நாள் தோறும் இருகால வழிபாடுகள் நடைபெறுகின்றன. கார்த்திகை அஷ்டமியில் பைரவருக்கு இங்கு விசேஷமான பூஜைகள் நடைபெறுகின்றன. இது தவிர, ஞாயிறு தோறும் அன்பர்களின் உபயமாகப் பைரவருக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. சித்திரைப் பெருவிழா ஏக தின உற்சவமாக நடைபெறுகிறது.

     வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "வேற்றா வடு கூர் இதயத்தினார்க்கு என்றும் தோற்ற வடுகூர்ச் சுயம் சுடரே" என்று போற்றி உள்ளார்.


திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 962
செல்வம் மல்கிய தில்லைமூ
         தூரினில் திருநடம் பணிந்துஏத்தி,
பல்பெ ருந்தொண்டர் எதிர்கொளப்
         பரமர்தம் திருத்தினை நகர்பாடி,
அல்கு தொண்டர்கள் தம்முடன்
         திருமாணி குழியினை அணைந்துஏத்தி,
மல்கு வார்சடை யார்திருப்
         பாதிரிப் புலியூரை வந்துற்றார்.

         பொழிப்புரை : செல்வம் நிறைந்த `தில்லை\' என்ற பழம் பெரும் பதியில் இறைவரின் திருக்கூத்தை வணங்கிப் போற்றிப் பெருந் தொண்டர்கள் பலரும் வரவேற்கச் சென்று, இறைவரின் `திருத்தினை\' நகரை அடைந்து பாடிச்சென்று, அத்தொண்டர்களுடன் `திருமாணி குழியினை\' அடைந்து போற்றி, செறிந்து பொருந்திய நீண்ட சடையை உடைய இறைவரின் `திருப்பாதிரிப்புலியூரை\' வந்து அடைந்தார்.

         குறிப்புரை : இத்திருப்பதிகளில் திருமாணிகுழிக்கு அமைந்த பதிகம் மட்டுமே கிடைத்துளது. அப்பதிகம் `பொன்னியல்\' (தி.3 ப.77): பண்:சாதாரி.


பெ. பு. பாடல் எண் : 963
கன்னி மாவனம் காப்புஎன
         இருந்தவர் கழல்இணை பணிந்து,அங்கு
முன்னம் மாமுடக் கால்முயற்கு
         அருள்செய்த வண்ணமும் மொழிந்துஏத்தி,
மன்னு வார்பொழில் திருவடு
         கூரினை வந்துஎய்தி வணங்கிப்போய்,
பின்னு வார்சடை யார்திரு
         வக்கரை பிள்ளையார் அணைவுற்றார்.

         பொழிப்புரை : ஞானசம்பந்தர் பெரிய `கன்னிவனத்தைத்\' தம் காவலிடமாகக் கொண்டு எழுந்தருளிய சிவபெருமானின் இரண்டு திருவடிகளையும் பணிந்து, அப்பதியில் முன் நாளில் முடங்கிய காலுடன் முயலாய் ஒறுக்கப்பட்ட மங்கண முனிவர் சாபநீக்கம் பெற அருள் செய்த தன்மையையும் பதிகத்தில் மொழிந்து போற்றிச் சென்று, நீண்ட சோலைகள் சூழ்ந்த திருவடுகூரினை அடைந்து, நீண்ட சடை யுடைய இறைவரின் `திருவக்கரை\' என்ற பதியை அடைந்தார்.

         குறிப்புரை : உமையம்மையார் தவம் செய்து அருள்பெற்ற இடம் ஆதலின், இவ்வூர் கன்னியாவனம் என்றும் அழைக்கப்பெற்றது. திருப்பாதிரிப்புலியூரில் அருளிய பதிகம் `முன்னம் நின்ற' (தி.2 ப.121) எனத் தொடங்கும் செவ்வழிப் பண்ணிலமைந்த பதிகமாகும். இப் பதிகத்தின் முதற் பாடலில், `முன்னம் நின்ற முடக்கால் முயற்கருள் செய்து, நீள் புன்னை நின்று கமழ்பாதிரிப் புலியூருளான்' எனவருவது கொண்டு, ஆசிரியர் இவ்வரலாற்றை எடுத்து மொழிகின்றார்.

         திருவடுகூரில் அருளிய பதிகம் `சுடுகூர்எரிமாலை' (தி.1 ப.86) எனத் தொடங்கும் குறிஞ்சிப் பண்ணிலமைந்த பதிகமாகும்.


1. 087  திருவடுகூர்                  பண் - குறிஞ்சி
                                    திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
சுடுகூர் எரிமாலை அணிவர், சுடர்வேலர்,
கொடுகூர் மழுவாள்ஒன்று உடையார், விடைஊர்வர்,
கடுகுஊர் பசிகாமம் கவலை பிணிஇல்லார்,
வடுகூர் புனல்சூழ்ந்த வடுகூர் அடிகளே.

         பொழிப்புரை :சுடும் தன்மை மிக்க தீபமாலையை அணிபவரும், ஒளி பொருந்திய சூலத்தினரும், கொடிய மழுவாயுதம் ஒன்றைக் கையில் உடையவரும், விடையை ஊர்ந்து வருபவரும், நீர் வளம் மிக்க வடுகூர் இறைவர் ஆவார். மிக்க பசி காமம் கவலை பிணி ஆகியன இல்லாதவரும் ஆவர்.


பாடல் எண் : 2
பாலும் நறுநெய்யும் தயிரும் பயின்றுஆடி
ஏலும் சுடுநீறும் என்பும் ஒளிமல்கக்
கோலம் பொழில்சோலைக் கூடி மடஅன்னம்
ஆலும் வடுகூரில் ஆடும் அடிகளே.

         பொழிப்புரை :பால், நறுமணம் மிக்க நெய், தயிர் ஆகியவற்றை விரும்பி ஆடி, பொருந்துவதான வெண்ணீறு, என்புமாலை ஆகியவற்றை ஒளிமல்க அணிந்து அழகிய பொழில்களிலும் சோலைகளிலும் வாழும் அன்னங்கள் கூடி ஆரவாரிக்கும் வடுகூரில் நம் அடிகளாகிய இறைவர் மகிழ்வோடு ஆடுகின்றார்.


பாடல் எண் : 3
சூடும் இளந்திங்கள் சுடர்பொன் சடைதன்மேல்
ஓடும் களியானை உரிபோர்த் துஉமைஅஞ்ச
ஏடு மலர்மோந்துஅங்கு எழில்ஆர் வரிவண்டு
பாடும் வடுகூரில் ஆடும் அடிகளே.

         பொழிப்புரை :ஒளி பொருந்திய பொன்போன்ற சடைமுடிமேல் இளந்திங்களைச்சூடி, மதம் கொண்டு தன்பால் ஓடி வந்த யானையை, உமையம்மை அஞ்சக் கொன்று, அதன் தோலைப் போர்த்து, அழகு பொருந்திய வரி வண்டுகள் இதழ்களோடுகூடிய மலர்களை முகர்ந்து தேனுண்டு பாடும் வடுகூரில், அடிகள் நடனம் ஆடுவர்.


பாடல் எண் : 4
துவரும் புரிசையும் துதைந்த மணிமாடம்
கவர எரிஓட்டிக் கடிய மதில்எய்தார்
கவரும் மணி கொல்லைக் கடிய முலைநல்லார்
பவரும் வடுகூரில் ஆடும் அடிகளே.

         பொழிப்புரை :செந்நிறமும், மதிலும் செறிந்த அழகிய மாடங்களை அழிக்குமாறு தீயைச் செலுத்தி அம்மதில்கள் அழியுமாறு அம்பு எய்த சிவபெருமானார், காவல் பொருந்திய முலையாராகிய பெண் கொடிகள் முல்லைநிலத்தில் கைகளால் இரத்தினங்களைப் பொறுக்கி எடுக்கும் வடுகூரில் நடம்பயிலும் அடிகளாவர்.


பாடல் எண் : 5
துணிஆர் உடைஆடை துன்னி அரைதன்மேல்
தணியா அழல்நாகம் தரியா வகைவைத்தார்
பணிஆர் அடியார்கள் பலரும் பயின்றுஏத்த
அணியார் வடுகூரில் ஆடும் அடிகளே.

         பொழிப்புரை :துணிக்கப் பெற்றதாகிய கோவண ஆடையை இடையிலே தரித்து அதன்மேல் தீப்போன்ற விட வெம்மை தணியாத நாகத்தை அழகுறத் தரித்தவராகிய அடிகள் அடியவர் பலரும் பணிந்து பரவி வாழ்த்த அழகிய வடுகூரில் ஆடியருள்கின்றார்.


பாடல் எண் : 6
தளரும் கொடிஅன்னாள் தன்னோ டுஉடனாகிக்
கிளரும் அரவுஆர்த்துக் கிளரும் முடிமேல்ஓர்
வளரும் பிறைசூடி வரிவண்டு இசைபாட
ஒளிரும் வடுகூரில் ஆடும் அடிகளே

         பொழிப்புரை :சுமை பொறுக்காது தள்ளாடும் கொடி போன்ற வளாகிய உமையம்மையோடு கூடி , விளங்கும் பாம்பினை இடையிலே கட்டிக் கொண்டு விளக்கம் பொருந்திய முடிமேல் வளரும் பிறைமதி ஒன்றைச் சூடி , வரிகள் பொருந்திய வண்டுகள் இசைபாட பலராலும் நன்கறியப்பட்ட வடுகூரில் அடிகளாகிய பெருமான் ஆடியருள்கின்றார் .


பாடல் எண் : 7
நெடியர் சிறிதுஆய நிரம்பா மதிசூடும்
முடியர் விடை ஊர்வர் கொடியர் மொழிகொள்ளார்
கடிய தொழில்காலன் மடிய உதைகொண்ட
அடியர் வடுகூரில் ஆடும் அடிகளே.

         பொழிப்புரை :வடுகூரில் ஆடும் அடிகள் பேருருவம் கொள்பவர். சிறிதான கலைநிரம்பாத பிறைமதியைச் சூடும் முடியை உடையவர். விடையை ஊர்ந்து வருபவர். கொடியவர் மொழிகளை ஏற்றுக் கொள்ளாதவர். கொல்லும் தொழிலைச் செய்யும் காலன் மடியுமாறு உதைத்தருளிய திருவடியினர்.


பாடல் எண் : 8
பிறையும் நெடுநீரும் பிரியா முடியினார்
மறையும் பலபாடி மயானத்து உறைவாரும்
பறையும் அதிர்குழலும் போலப் பலவண்டுஆங்கு
அறையும் வடுகூரில் ஆடும் அடிகளே.

         பொழிப்புரை :அதிர்கின்ற பறையும் வேய்ங்குழலும் போலப் பல வண்டுகள் ஒலிக்கும் சோலைகளை உடைய வடுகூரில் ஆடும் அடிகள், இளம்பிறை, பெருகிய கங்கை நீர் ஆகியன பிரியாத திருமுடியை உடையவர். வேதங்களில் உள்ள சந்தங்கள் பலவற்றையும் பாடிக்கொண்டு இடுகாட்டில் உறைபவர்.

  
பாடல் எண் : 9
சந்தம் மலர்வேய்ந்த சடையின் இடைவிம்மு
கந்தம் மிகுதிங்கள் சிந்து கதிர்மாலை
வந்து நயந்துஎம்மை நன்றும் அருள்செய்வார்
அந்தண் வடுகூரில் ஆடும் அடிகளே.

         பொழிப்புரை :அழகு தண்மை ஆகியவற்றை உடைய வடுகூரில் ஆடும் அடிகள் அழகிய மலர்கள் வேய்ந்த சடையின்கண் பெருகி எழும் மணம் மிகும் பிறைமதி வெளியிடும் கிரணங்களை உடைய மாலைநேரத்தில் வந்து விரும்பி எமக்கு நன்றாக அருள் செய்வார்.


பாடல் எண் : 10
திருமால் அடிவீழத் திசைநான் முகனாய
பெருமான் உணர்கில்லாப் பெருமான் நெடுமுடிசேர்
செருமால் விடைஊரும் செம்மான் திசைவில்லா
அருமா வடுகூரில் ஆடும் அடிகளே.

         பொழிப்புரை :எட்டுத் திசைகளிலும் ஒளிபரவுமாறு அரிய பெரிய வடுகூரில் நடனம் ஆடும் அடிகள், திருமால் தம் அடியை விரும்பித் தோண்டிச் செல்லவும், திசைக்கு ஒரு முகமாக நான்கு திருமுகங்களைக் கொண்ட பிரமனாகிய தலைவனும் அறிய முடியாத பெரிய முடியினை உடைய இறைவர், போர் செய்யத்தக்க விடைமீது எழுந்தருளிவரும் சிவந்தநிறத்தினர்.


பாடல் எண் : 11
படிநோன்பு அவையாவர் பழியில் புகழான
கடிநாண் இகழ் சோலை கமழும் வடுகூரைப்
படியா னசிந்தை மொழியார் சம்பந்தன்
அடிஞா னம்வல்லார் அடிசேர் வார்களே.

         பொழிப்புரை :இவ்வுலகில் கூறப்படும் நோன்புகள் பலவற்றுக்கும் உரியவராய் விளங்கும் சிவபிரான் எழுந்தருளியதும், குற்றமற்ற புகழோடு கூடிய மணம் கமழும் சோலைகளால் மணம் பெறுவதுமான வடுகூரில் மேவிய இறைவன் திருவடிகளில் படிந்த மனத்தோடு ஞானசம்பந்தன் பாடிய இப்பதிகத்தமிழை ஓதி, அடிசேர்ஞானம் பெற்றார், திருவடிப்பேறு பெறுவர்.

                                             திருச்சிற்றம்பலம்



No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...