திருச்செந்தூர் - 0036. உருக்கம் பேசிய


அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

உருக்கம் பேசிய (திருச்செந்தூர்)

முருகா!
பொதுமளிர் மீது அன்பு வைக்காமல்,
உனது திருவடியில் அன்பு வைத்து உய்ய அருள்.


தனத்தந் தானன தானன தானன
     தனத்தந் தானன தானன தானன
     தனத்தந் தானன தானன தானன ...... தனதான


உருக்கம் பேசிய நீலியர் காசுகள்
     பறிக்குந் தோஷிகள் மோகவி காரிகள்
     உருட்டும் பார்வையர் மாபழி காரிகள் ...... மதியாதே

உரைக்கும் வீரிகள் கோளர வாமென
     வுடற்றுந் தாதியர் காசள வேமனம்
     உறைக்குந் தூரிகள் மீதினி லாசைகள் ...... புரிவேனோ

அருக்கன் போலொளி வீசிய மாமுடி
     யனைத்துந் தானழ காய்நல மேதர
     அருட்கண் பார்வையி னாலடி யார்தமை .....மகிழ்வோடே

அழைத்துஞ் சேதிகள் பேசிய காரண
     வடிப்பந் தானென வேயெனை நாடொறும்
     அதிக்கஞ் சேர்தர வேயரு ளாலுட ...... னினிதாள்வாய்

இருக்குங் காரண மீறிய வேதமும்
     இசைக்குஞ் சாரமு மேதொழு தேவர்கள்
     இடுக்கண் தீர்கன னேயடி யார்தவ ...... முடன்மேவி

இலக்கந் தானென வேதொழ வேமகிழ்
     விருப்பங் கூர்தரு மாதியு மாயுல
     கிறுக்குந் தாதகி சூடிய வேணிய ...... னருள்பாலா

திருக்குந் தாபதர் வேதிய ராதியர்
     துதிக்குந் தாளுடை நாயக னாகிய
     செகச்செஞ் சோதியு மாகிய மாதவன் ...... மருகோனே

செழிக்குஞ் சாலியு மேகம ளாவிய
     கருப்பஞ் சோலையும் வாழையு மேதிகழ்
     திருச்செந் தூர்தனில் மேவிய தேவர்கள் ....பெருமாளே.


பதம் பிரித்தல்


உருக்கம் பேசிய நீலியர், காசுகள்
     பறிக்கும் தோஷிகள், மோக விகாரிகள்,
     உருட்டும் பார்வையர், மா பழி காரிகள், ...... மதியாதே

உரைக்கும் வீரிகள், கோள் அரவு ஆமென
     உடற்றும் தாதியர், காசு அளவே மனம்
     உறைக்கும் தூரிகள் மீதினில் ஆசைகள் ......புரிவேனோ?

அருக்கன் போல் ஒளி வீசிய மாமுடி
     அனைத்தும் தான் அழகாய் நலமே தர,
     அருட்கண் பார்வையினால் அடியார் தமை, .....மகிழ்வோடே

அழைத்தும் சேதிகள் பேசிய, காரண
     வடிப்பம் தான் எனவே, எனை நாள்தொறும்
     அதிக்கம் சேர் தரவே அருளால்,டன் ......இனிது ஆள்வாய்.

இருக்கும், காரண மீறிய வேதமும்,
     இசைக்கும் சாரமுமே தொழு தேவர்கள்
     இடுக்கண் தீர் கனனே! அடியார் தவம் ...... உடன்மேவி

இலக்கம் தான் எனவே தொழவே மகிழ்,
     விருப்பம் கூர்தரும் ஆதியுமாய் உலகு
     இறுக்கும் தாதகி சூடிய வேணியன் ...... அருள்பாலா!

திருக்கும் தாபதர், வேதியர் ஆதியர்
     துதிக்கும் தாள்உடை நாயகன் ஆகிய
     செகச்செஞ் சோதியும் ஆகிய மாதவன் ......மருகோனே!

செழிக்கும் சாலியும், மேகம் அளாவிய
     கருப்பம் சோலையும், வாழையுமே திகழ்
     திருச்செந்தூர் தனில் மேவிய தேவர்கள் ....பெருமாளே.


பதவுரை

      இருக்கும் --- இருக்கு வேதமும்,

     காரணம் மீறிய வேதமும் --- காரணங்களைக் கடந்து நிற்கும் (தனிப் பெருஞ்சிறப்புடைய) தமிழ்வேதமும்,

     இசைக்குஞ் சாரமும் தொழு --- அவ்வேதங்களில் மறைந்துள்ள உட்கருத்துக்களைத் தெளிவாக விளக்கிக் கூறும் வேதசாரமாகிய ஆகமங்களும், (ஏ-பிரிநிலை) தொழுது வழிபட நின்றவரும்,

     தேவர்கள் இடுக்கண் தீர் கனனே --- தேவர்களுடைய துன்பத்தைத் தீத்தருளியவருமாகிய, கண்ணியமுள்ளவரே,

      தவமுடன் மேவி --- தவவொழுக்கத்துடன் வந்து,

     இலக்கந்தான் என தொழ --- இலட்சக்கணக்கான, (ஏ-அசை) அடியார்கள் தொழுது வழிபட,

     மகிழ் விருப்பம் கூர்தரு ஆதியுமாய் --- மகிழ்ந்து அவ்வடியார் மீது அன்புகொள்ளும், முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளுமாய்,

     உலகு இறுக்கும் --- உலகங்களை எல்லாம் (சர்வசங்கார காலத்தில்) சங்கரிக்கும் தனிப்பெருந்தலைவராய்,

     தாதகி சூடிய வேணியர் அருள்பாலா --- ஆத்தி மலரையணிந்து கொண்டுள்ள சடைமுடியுடையவராய் எழுந்தருளியுள்ள சிவபெருமான் அருளிய திருக்குமாரரே!

      திருக்கும் தாபதர் --- அறிவுக் கண்ணுடன் விளங்கும் முனிவர்களும்,

     வேதியர் ஆதியர் துதிக்கும் தாள் உடை நாயகன் ஆகிய --- வேதங்களை உணர்ந்த அந்தணர் முதலியோர்களும், தோத்திரம் புரியும் திருவடிகளையுடைய தேவர்களுக்குத் தலைவரும்,

     செகச் செஞ்சோதியும் ஆகிய மாதவன் மருகோனே --- செவ்விய செகச்சோதியாய் விளங்குபவருமாகிய திருமாலினது திருமருகரே!

      செழிக்கும் சாலியும் --- செழிப்புடன் வளர்ந்துள்ள நெற்பயிரும்,

     மேகம் அளாவிய கருப்பஞ் சோலையும் --- மேகமண்டலத்தை அளாவி வளர்ந்துள்ள கருப்பஞ்சோலையும்,

     வாழையுமே திகழ் --- வாழை மரங்களும், (ஏ-அசை) என்றும் விளங்கப் பெற்றுள்ள,

     திருச்செந்தூர் தனில் மேவிய தேவர்கள் பெருமாளே --- திருச்செந்தூர் எனும் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள, - தேவர்களுக்குத் தேவராக விளங்கும் பெருமையில் மிக்கவரே!

      உருக்கம் பேசிய நீலியர் --- மனம் உருகும்படி நயமாகப் பேசுகின்ற கொடியவரும்,

     காசுகள் பறிக்கும் தோஷிகள் --- பணத்தைப் பிடுங்கும் பாவிகளும்,

     மோக விகாரிகள் --- பெரிய பழிகளைக் கூறுபவர்களும்,

     மதியாதே உரைக்கும் பீரிகள் --- ஒருவரையும் மதியாமற்படி அலறிச் சத்தமிட்டுப் பேசுகின்றவர்களும்,

     கோள் அரவாம் என உடற்றும் தாதியர் --- விடத்தையுடைய பாம்பைப் போல் வருத்துகின்ற தாசிகளும்,

     காசு அளவே மனம் உறைக்கும் தூரிகள் மீதினில் --- அவரவர்கள் தரும் பணத்திற்குத்தக்க அளவிலேயே மனத்தை வைக்கும் துன்மார்க்கருமாகிய விலைமகளிர்மேல்,

     ஆசைகள் புரிவேனோ --- இனி அன்பு கொள்வேனோ  (கொள்ளேன்)

     அருக்கன் போல் ஒளி வீசிய --- சூரியனைப்போல் ஒளி வீசுகின்ற,

     மாமுடி அனைத்தும் தான் --- பெருமைமிக்க இரத்திரன கிரீடங்கள் யாவும்,

     அழகாய் நலமே தர --- காண்பவர்களுக்கு அழகாக விளங்கி நன்மையே வழங்க,

     அருள் கண் பார்வையினால் --- கருணைப் பொழியும் திருக்கண் பார்வையால்,

     அடியார்தமை மகிழ்வோடே அழைத்தும் --- அடியார்தமை மகிழ்ச்சியுடன் வலிய அழைத்தும்,

     சேதிகள் பேசிய காரண --- ஞானச் செய்திகளைப் பேசுகின்ற காரணப் பொருளே!

     வடிப்பம் தான் என (ஏ- அசை) --- செப்பம் என்று சொல்லும்படி,

     நாள்தோறும் அதிக்கம் சேர் தர --- (அடியேன்) தினந்தோறும் மென்மேலும் மேன்மையடையும் வண்ணம்,

     அருளால் உடன் எனை இனிது ஆள்வாய் ---- உமது திருவருளால் இக்கணத்திலேயே அடியேனை இனிது ஆட்கொண்டருள்வீர்.

பொழிப்புரை

         இருக்குவேதமும், காரணங்களைக் கடந்து நிற்கும் பெருஞ் சிறப்புடைய தமிழ் வேதமும், அவ்வேதங்களில் மயங்கக் கூறி உண்மைப் பொருள்களைத் தெளிவுறக் கூறும் வேத சாரமாகிய ஆகமங்களும், தொழுது வழிபாடு செய்ய நின்றவரும், தேவர்களது துன்பத்தை நீக்கி அருள்பவருமாகிய கண்ணியமுள்ளவரே!

         தவவொழுக்கத்துடன் அடைந்து இலட்சக்கணக்கான அடியார்கள் வணங்க மகிழ்ந்து, அவர்கள் மீது அன்பு கொள்ளும் ஆதி பராபரவஸ்துவாக விளங்குபவரும், சர்வ சுங்காரகாலத்தில் உலகத்தைச் சங்கரிப்பவரும், ஆத்தி மலரைச் சூடிய சடாமுடியை யுடையவருமாகிய சிவபெருமானருளிய திருக்குமாரரே!

         அறிவுக் கண்கள் விளங்கப் பெற்ற முனிவர்களும், வேதியர் முதலியவரும் துதிக்கும் திருவடிக் கமலங்களுடைய தேவ சிரேட்டரும், செகச்செஞ் சோதியுமாகிய நாராயணரது திருமருகரே!

         செழிப்புடன் வளர்ந்துள்ள செந்நெற் பயிரும், மேகமண்டலம் வரை வளம்பெற்றோங்கிய கருப்பஞ் சோலையும், வாழையும் நெருங்கி விளங்கிக் கொண்டிருக்கும் திருச்செந்தூர் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளிய தேவர்களுக்குத் தேவர் என்னும் பெருமையில் மிக்கவரே!

         உருக்கமாகப் பேசி மனத்தைக் கவரும் நீலிகளும், பணத்தைப் பறிக்கும் தோஷிகளும், மோகத்தால் விகாரத்தன்மை யுற்றவர்களும், மேலும் கீழும் பக்கமுமாக விழிகளை உருட்டிப் பார்க்கும் பார்வையுடையவர்களும், பெரிய பழியைச் சுமத்தும் பழிகாரிகளும், ஒருவரையும் மதியாமற்படி வேகமாகப் பேசுபவர்களும், நச்சுப் பற்களையுடைய அரவத்தைப்போல் பிறரைத் துன்புறுத்தும் தாசிகளும், அவரவர்கள் தரும் பணத்தின் அளவாகவே மனத்தைச் செலுத்தும் துன்மார்க்கிகளுமாகிய பொருட் பெண்டிர் மீது அடியேன் இனி ஆசை வைப்பேனா? (ஒரு போதும் வையேன்) சூரியனைப் போல் ஒளி வீசுகின்ற பெருமைமிக்க மணி மகுடங்கள் அனைத்துமே அழகாகப் பார்ப்பவர்களுக்கு நன்மையே வழங்க, திருவருள் பொழியும் திருக் கண்பார்வையால் அடியார்களைச் சந்தோஷத்துடன் வலிய அழைத்து ஞானவுரைகளைப் பேசுகின்ற காரண வஸ்துவே! நடுநிலைமை என்று சொல்லும்படி தினந்தோறும் மென்மேலும் மேன்மையை அடையுமாறு உமது திருவருளால் உடனே அடியேனை இனிது ஆட்கொண்டருள்வீர்.

விரிவுரை

அருக்கன்போல்......நலமே தர ---

     முருகப்பெருமானுடைய ஆறு திருமுகங்களிலும் உள்ள எல்லா மணிமகுடங்களும் மிக்க ஒளியுடன் ஆறு இளங் கதிர்களைப் போல் பிரகாசித்துக்கொண்டு தெரிசிப்போர்களுக்கு நலன்களையே வழங்கிக் கொண்டிருக்கின்றன.

அருட்கண் பார்வை ---

     குமாரக் கடவுளது பன்னிரண்டு விழிகளிலும் கடலைப்போல் அருள் வெள்ளம் வழிந்து கொண்டேயிருக்கிறது.

மறுவறு கடலென மருவுப னிருவிழி
 வழிந்த அருளே பொழிந்தது ஒருபால்”        --- கொலுவகுப்பு

துங்கநீள் பன்னிரு கருணை விழிமலரும்” --- (விழையுமனி) திருப்புகழ்.

     அக் கருணை ஒழுகும் கடைக்கண் பார்வை நமது மேல் சற்று பட்ட உடனே மும்மலங்களும் வெந்து நீறாகி விடுகின்றன; மெய்ஞ்ஞானம் மிளிர்கின்றது; அப்பார்வையின் பெருமை தான் என்னே! என்னே! அதனைப் பெற்ற பரம குருமூர்த்தியாகிய அருணகிரியடிகளின் பாக்கியந்தான் என்னே!

ஆணவ அழுக்கு அடையும் ஆவியை விளக்கி, அநு
 பூதி அடைவித்தது ஒரு பார்வைக்காரனும்”    --- திருவேளைக்காரன் வகுப்பு.

கனகத்தினு நோக்கு இனிதாய் அடி
 யவர் முத்தமிழால் புகவே, பர
 கதிபெற்றிட நோக்கிய பார்வையும்....     மறவேனே.---  (சதுரத்தரை) திருப்புகழ்.

     கந்தப்பெருமானுடைய அக்கடைக்கண் அருட்பார்வையால் இவை இவை உண்டாகுமென கடைக்கணியல் வகுப்பில் கூறியதைக் கண்டு மகிழ்க.

  அலைகடல் வளைந்துடுத்த எழுபுவி பரந்திருக்கும்
    அரசென நிரந் தரிக்க                  வாழலாம்
  அளகையர சன்றனக்கும் அமரரர சன்றனக்கும்
    அரசென அறஞ்செலுத்தி               யாளலாம்
  அடைபெறுவ தென்றுமுத்தி அதிமதுர செந்தமிழ்க்கும்
    அருள்பெற நினைந்து சித்தி             யாகலாம்
  அதிரவரு மென்று முட்ட அலகில்வினை சண்டைநிற்க
    அடலெதிர் புரிந்து வெற்றி              யாகலாம்
  இலகியந லஞ்செய்புட்ப கமுமுட னிறம்வெளுத்த
    இமவர செனும் பொருப்பு               மேறலாம்
  இருவரவர் நின்றிடத்து மெவரெவ ரிருந்திடத்தும்
    ஒருவனிவ னென்றுணர்ச்சி               கூடலாம்
  எமபடர்தொ டர்ந்தழைக்கில் அவருட னெதிர்ந்துளுட்க
    இடியென முழங்கி வெற்றி               பேசலாம்    
...........................................................   பாருளீர்...................வேலினான்...............கடைக்கணியலையும்     நினைந்திருக்க                         வாருமே”

     அடியார் தமை மகிழ்வோடே அழைத்தும் சேதிகள் பேசிய கருணைக் கடவுளாதலால், கந்தப்பெருமான் அடியார்களை மகிழ்ந்து வலிய அழைத்து நல்லுரைகளை உபதேசித்து அருள் புரிகிறார்.

அடியவர் இச்சையில் எவைஎவை உற்றன:-
அவை தருவித்து அருள் ....        பெருமாளே”   ---  (கலகலெனச்சில) திருப்புகழ்.

காரண ---

     உலகங்களுக்கும், சிருட்டியாதி ஐந்தொழில்களுக்கும், பிறவற்றிற்கும் காரணமாய் நின்ற முழுமுதற் கடவுள் முருகப் பெருமானேயாவர். இதனை, அப்பெருமானது திருவருள் துணை கொண்டு, ஞான விழியால் நோக்கிய சூரபன்மன் வாயார வாழ்த்தி வழுத்துதலைக் கண்டு தெளிக.

கோலமா மஞ்ஞை தன்னில் குலவிய குமரன் தன்னைப்
பாலன்என்று இருந்தேன் அந்நாள், பரிசுஇவை உணர்ந்திலேன் யான்
மால்அயன் தனக்கும் ஏனை வானவர் தமக்கும் யார்க்கும்
மூலகா ரணமாய் நின்ற மூர்த்தி,ம் மூர்த்தி அன்றோ.--- கந்தபுராணம்.

இருக்குந்.......தொழு ---

குகமூர்த்தி வேதாகமங்களால் தொழப்பட்டனர்.

ஆலம் உண்ட கோன், அகண்ட லோகம்உண்ட மால்,விரிஞ்சன்
 ஆரணங்கள் ஆகமங்கள்                   புகழ்தாளும்” --- (தோலெலும்பு)-திருப்புகழ்.

தேவர்கள் இடுக்கண் தீர் கனனே:-

     சூராதி அவுணர்களால் நூற்றெட்டு யுகங்களாக தேவர்கள் துன்புற்று இனி இன்புறுங்காலமும் எய்துமோ? என்று ஏங்கி இளம் பூரணனாகிய எம்பெருமானிடம் தமது குறைகளை முறையிட, அறுமுகக் கடவுள் போந்து அவுணர்களது மறச் செயலை யழித்து அறநெறியை வளர்த்து அமரர்கள் அல்லலை நீக்கி என்றும் அழியா இன்பத்தை வழங்கினார்.

அடியவர் வினையும் அமரர்கள் துயரும்
    அறஅருள் உதவும்               பெருமாளே”  ---  (திரிபுரமதனை) திருப்புகழ்.

வானாடரசாளும்படிக்கு வாவா என வா என்று அழைத்து
    வானோர் பரிதாபம் தவிர்த்த        பெருமாளே”--- (ஆராதன) திருப்புகழ்.


கருத்துரை

         வேதாகமங்களால் தொழப்பட்டவரே! தேவர் துயர்தீர்த்த கனம் பொருந்தியவரே! ஆதிபராபர முதல்வரும் சர்வ சங்கார கர்த்தரும், ஆத்திமலர் அணிந்த வேணியருமாகிய சிவனுடைய திருக்குமாரரே! முனிவர் மறையோர் முதலியோர் துதிக்கும் செகச்சோதியாகிய திருமகள் கொழுநர் மருகரே! திருச்செந்திலாதிப! தேவதேவரே! பொருள் பறிக்கும் இருமனப் பெண்டிராகிய விலைமகளிர் மீது அன்பு கொள்வேனோ? (கொள்ளேன்) மென்மேலும் நன்மையடையுமாறு அடியேனை உடனே யாட்கொள்வீர்.


No comments:

Post a Comment

முயலை விட்டுக் காக்கையின் பின் போதல் கூடாது

  முயல் விட்டு ,  காக்கைப் பின் போவது கூடாது. -----        இருப்பதை விட்டுப் பறப்பதைப் பிடிப்பது கூடாது என்பார்கள்.  எளிமையாகச் செய்யக்கூடிய...