திருச்செந்தூர் - 0055. கொலைமத கரிஅன


அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

கொலை மதகரி (திருச்செந்தூர்)

மாதர் மயக்கத்தை விட்டு, திருவருள் நெறியில் நின்று திருவடி பெற

தனதன தனதன தனதன தன
     தந்தத் ...... தனதானா


கொலைமத கரியன ம்ருகமத தனகிரி
     கும்பத் ...... தனமானார்

குமுதஅ முதஇதழ் பருகியு ருகிமயல்
     கொண்டுற் ...... றிடுநாயேன்

நிலையழி கவலைகள் கெடவுன தருள்விழி
     நின்றுற் ...... றிடவேதான்

நினதிரு வடிமல ரிணைமன தினிலுற
     நின்பற் ...... றடைவேனோ

சிலையென வடமலை யுடையவர் அருளிய
     செஞ்சொற் ...... சிறுபாலா

திரைகட லிடைவரும் அசுரனை வதைசெய்த
     செந்திற் ...... பதிவேலா

விலைநிகர் நுதலிப மயில்குற மகளும்வி
     ரும்பிப் ...... புணர்வோனே

விருதணி மரகத மயில்வரு குமரவி
     டங்கப் ...... பெருமாளே.

பதம் பிரித்தல்


கொலைமத கரி அன, ம்ருகமத தனகிரி
     கும்பத் ...... தன மானார்,

குமுத அமுத இதழ் பருகி உருகி, மயல்
     கொண்டு உற் ...... றிடு நாயேன்,

நிலைஅழி கவலைகள் கெட, உனது அருள்விழி
     நின்று, ற் ...... றிடவே தான்,

நின திருவடி மலர் இணை மனதினில் உற
     நின் பற்று ...... அடைவேனோ?

சிலை என வடமலை உடையவர் அருளிய
     செஞ்சொல் ...... சிறுபாலா!

திரைகடல் இடைவரும் அசுரனை வதைசெய்த
     செந்தில் ...... பதிவேலா!

விலைநிகர் நுதல்இப மயில்,குறமகளும்,
     விரும்பிப் ...... புணர்வோனே!

விருது அணி மரகத மயில்வரு குமர!
     விடங்கப் ...... பெருமாளே.

 பதவுரை


         சிலை என வடமலை உடையவர் அருளிய --- வடதிசையின்கணுள்ள மகாமேருகிரியை வில்லாகக் கொண்டருளிய சிவபெருமான் பேரருளோடு தோற்றுவித்தருளிய

     செம் சொல் சிறுபாலா --- செவ்விய தமிழ்மொழிக்கு இறைவராகிய இளங்குழவியே!

         திரை கடல் இடை வரும் அசுரனை வதை செய்த --- அலைகளை வீசும் சமுத்திரத்தின் மத்தியில் மாமரமாகத் தோன்றி எதிர்த்து வந்த அசுரனாகிய சூரபன்மனை சங்கரித்தருளிய

     செந்தில் பதி வேலா --- திருச்செந்தூர் என்னும் திருப்பதியில் எழுந்தருளியுள்ள வேலாயுதக் கடவுளே!

         விலை நிகர் நுதல் இப மயில் --- வில்லைப்போல் வளைந்து அழகுடன் விளங்கும் புருவங்களை உடையவர்களாகிய, மயில் போன்ற தெய்வகுஞ்சரி அம்மையாரையும்,

      குறமகளும் --- குறவர் குலத்தில் தோன்றிய வள்ளி அம்மையாரையும்

     விரும்பி புணர்வோனே --- விருப்பங்கொண்டு (அவர்கள் செய்த தவங்காரணமாகக்) கலந்து கொள்பவனே!

         விருது அணி மரகத மயில் வரு குமர --- வெற்றியைத் தெரிவிக்கும் கொடி, வீர கண்டாமணி இவைகளுடன் கூடிய மரகதம் போன்ற நிறத்தை உடைய மயில்வாகனத்தின் மீது எழுந்தருளி வருகின்ற குமாரக் கடவுளே!

         விடங்க --- அழகின் மிக்கவரே!

         பெருமாளே --- பெருமையின் மிக்கவரே!

         கொலை மத கரி அ(ன்)ன --- கொல்லும் குணமுடைய மதயானையின் மத்தகத்திற்கு நிகரானவையும்,

     ம்ருகமத --- கஸ்தூரியை அணிந்தவையும்,

     தனகிரி கும்ப தனமானார் --- பொன்மலைக்கு சமமானவையும், கும்பத்தை யொத்தவையுமாகிய, - பயோதரங்களையுடைய மகளிரது,

     குமுத அமுத இதழ் பருகி உருகி --- செவ்வாம்பல் மலரை யொத்த இதழ்களில் பெருகும் அமிர்தத்தைப் பானஞ் செய்து,  அதனால் மிகவும் உருகி,

     மயல் கொண்டு உற்றிடும் நாயேன் --- காம மயக்கத்தைக் கொண்டு மேலும் மேலும் அவ்வாசை வழியிலேயே பொருந்தியுள்ள நாய்க்குச் சமானமாகிய அடியேன்,

     நிலை அழி கவலைகள் கெட --- அடியேனை நிலைகலங்கச் செய்யும் கவலைகள் அறவே அழிந்து போகவும்,

     உனது அருள்விழி நின்று உற்றிட --- (ஏ தான் - அசை) தேவரீரது திருவருள் பார்வையிலேயே உறுதியுடன் நின்று அச் செந்நெறியில் மேலும் மேலும் பொருந்தியிருக்கவும்,

     நின திருவடிமலர் இணை மனதினில் உற --- தேவரீரது திருவடிமலர்கள் இரண்டும் அடியேனது மனத் தாமரையின்கண் வந்து பொருந்தி விளங்கவும்,

     நின் பற்று அடைவேனோ --- தேவரீரது பற்றை அடியேன் அடைய மாட்டேனோ?

பொழிப்புரை

         மகாமேரு கிரியை வில்லாகவுடைய சிவபெருமான் தமது பேரருளால் தோற்றுவித்தருளிய செந்தமிழ் மொழிக்குத் தலைவராகிய இளம்பூரணரே!

         அலைகளை உடைய கடலின் நடுவில் மாமரமாகத் தோன்றி எதிர்த்துப் போர் புரிந்துகொண்டு வந்த சூரபன்மனை மறக் கருணையால் சங்கரித்தருளிய செந்திலம்பதியில் வாழும் வேற்படை நாயகரே!

         வில்லைப் போன்ற புருவங்களை உடையவர்களாகிய மயில் போன்ற தெய்வகுஞ்சரி அம்மையாரையும் குறவர் குலத்தில் தோன்றிய வள்ளி அம்மையாரையும் அன்னார்கள் அரிதில் செய்த தவம் காரணமாக விருப்பத்துடன் புணர்ந்து அருள்பவனே!

         வெற்றியின் அறிகுறிகளாகிய விருது, வீரக்கழல் முதலியவைகளை உடைய அழகிய பச்சைமயில் வாகனத்தின் மீது அடியார் பொருட்டு எழுந்தருளி வருகின்ற குமாரக் கடவுளே!

         கட்டழகரே!

         பெருமையின் மிக்கவரே!

         கொல்லும் தொழிலை உடையதும், மதத்தை உடையதுமாகிய, யானையின் மத்தகத்தையும், பொன்மலையையும், கும்பத்தையும் ஒத்து கஸ்தூரி அணிந்துள்ள தனபாரங்களை உடைய மாதர்களது செவ்வாம்பலை நிகர்த்த இதழ்களின் அமிர்த ரசத்தைப் பருகி, அதனால் மனமுருகி, மோகாந்தகாரமாகிய மயக்கத்தை உற்று, அத்துறையிலேயே உழலும்படியான அடியேன், நிலைகுலையச் செய்யும் கவலைகள் நீங்கவும்,

     தேவரீரது திருவருட் பார்வையில் உறுதியுடன் நின்று அவ்வழியிலேயே பொருந்தி இருக்கவும், தேவரீரது அருண சரணாரவிந்தங்கள் இரண்டும் அடியேனது மனதில் வந்து சேரவும், தேவரீரது பற்றை அடியேன் அடைய மாட்டேனோ?


விரிவுரை

கொலை மதகரி ---

தனத்திற்கு யானையின் மத்தகத்தை நிகரென்று கூறவந்த நம் பரமாசிரியர் “கொலை மதகரி” என்று குறிப்பிட்டுள்ளதை ஊன்றி நோக்குக. யானை எவ்வாறு கொல்லும் தொழிலையுடையதோ, அவ்வாறு மானார் நட்பும் நமது அறிவையும், ஆக்கத்தையும், ஆயுளையும், ஏனைய நலன்களையும், கொல்லும் தன்மை அடையதாம். யானை எவ்வாறு மதங்கொண்டு வரம்புமீறித் திரியுமோ, அவ்வாறே அவ் விலைமகளிரும் நாணம் முதலியன இன்றி வரம்பு கடந்து திரிவர். மதங்கொண்ட யானையை அறிவுடையவர்கள் அங்குசத்தால் அடக்குவது போல், மகளிரது விழைவையும், வைராக்கியம் என்னும் அங்குசத்தால் அறிவுடையார் அடக்கக் கடவர்.

வனமுலை சயிலம்அல, கொலையமன் என.................
 ............உணர்வொடு புணர்வதும் ஒருநாளே”         --- (விடமுமமுதமு) திருப்புகழ்.

கும்பத்தனம் ---

தலைகீழாகக் கவிழ்க்கப்பட்டுள்ள கும்பமே தனத்திற்கு உவமையாதலால், அக் கும்பத்தைப்போல் தனமும், மனிதர்களைத் தலைகீழாக நரகம் முதலிய துன்பத்தில் கவிழ்க்குந் தன்மையுடைத்து.

அமுத இதழ் பருகி உருகி ---

மகளிரது அதராமிர்தத்தை நாடோறும் பருகி, அதனால் மிகவும் உருகிக் கெடுகின்றனர்.

       அருவ மிடையென வருபவர் துவரிதழ்
        அமுது பருகியு முருகியும்”                --- திருப்புகழ்.

நிலையழி கவலை..........மனதினில் உற ---

மேற்கூறிய அற்ப சுகமாகிய மின்னல் வாழ்வைப் பெரிதென எண்ணி மயங்கி, அறிவு குன்றி, மனம் விழைந்தவாறு கங்குல்பகலாக அலைந்து, கவலைக்காளாகின்றனர். அக் கவலைகள் அறவே நீங்குவதற்கு வழி இறைவன் பற்றையடைவதாம். அப்பற்றின் முதிர்ச்சி இறைவனது திருவருள் நெறியில் அசைவற்று நிற்பதாம். அவ்வாறு நின்றவர் மனத்தில் இறைவனது திருவடித் தாமரை மலரும்; ஆதலால் இறைவன் பற்றை யடைந்தோர்க்குத் துன்ப நீக்கமும், அதனால் இன்ப ஆக்கமும், திருவருணெறியின் திறமும், இறைவன் திருவடிப் பேறும் முறையே உண்டாகுமென்பது தேற்றம்.


நின்பற்று அடைவேனோ ---

மேற்காட்டியபடி இறைவன் பற்றை யடைந்தவர்க்கு ஏனைய பற்றுக்கள் தூங்கியோன் கைப்பொருள் போல் தாமே நீங்கும். இதனைப் பொய்யிற் புலவரும் கூறுமாறு காண்க.

       பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
       பற்றுக பற்று விடற்கு.

இறைவன் பற்றைப்பற்றி பற்றுவிட்டு, அவன் அருணசரணார விந்தங்களைத் தம் மனத்தில் வைக்கப் பெற்றோர்க்கு, அணுத்துணையேனும் கவலைகள் வாரா; இறைவன் திருவடியைச் சாராதவர்க்கு, ஒருபோதும் மனக்கவலையை மாற்றமுடியாது.

       தனக்குவமை யில்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
       மனக்கவலை மாற்றல் அரிது.       --- திருக்குறள்.

ஏனைய பற்றுக்களை விட்டு, எம்பிரானுடைய திருவடியைப் பற்றப் பெறுநாள் என்றோ, அன்றுதான் நாம் பிறந்தவராவோம்; அப்பொழுதுதான் பிறவாத் தன்மையும் பெறுவோம்.

மற்றுப் பற்று எனக்கு இன்றி, நின்திருப் பாதமே மனம் பாவித்தேன்,
 பெற்றலும் பிறந்தேன், இனிப் பிறவாத தன்மை வந்து எய்தினேன்”   --- சுந்தரர்

என் பெற்ற தாயரும் என்னைப் பிணம் என்று இகழ்ந்து விட்டார்,
பொன் பெற்ற மாதரும் போ என்று சொல்லிப் புலம்பிவிட்டார்,
கொன் பெற்ற மைந்தரும் பின் வலம் வந்து குடம் உடைத்தார்,
உன் பற்று ஒழிய ஒரு பற்றும் இல்லை உடையவனே.                   --- பட்டினத்தார்.

 
செஞ்சொல் ---

செஞ்சொல்” என்பதற்குப் பிரணவமொழி என்று பொருள் கொள்வாரும் உளர்.  செஞ்சொன் மாதிசை வடதிசை குடதிசை விஞ்சு கீழ்திசை” என்று நம் அருணகிரிநாதரே பிறிதோரிடத்தில் தென்திசையைக் குறிக்க வந்தபோது தமிழ்மொழியையுடைய திசை என்பதற்கு “செஞ்சொல் மாதிசை” என்று கூறி யுள்ளாராதலால், “செஞ்சொல்” என்பதற்கு, தமிழ் மொழி என்பதே ஆசிரியர் கருத்தாகும். மொழிகளிலே தமிழ் மொழியே இனிய சொற்களையுடையது என்பதும் போதரும்.

சிறுபாலா ---

விநாயகமூர்த்திக்கு இளையோன் என்பதையும், என்றும் இளையோனாக இருப்பேன் என்பதையும் உணர்த்துகின்றார்.

என்றும் அகலாத இளமைக்கார”  --- (சந்தனசவாது) திருப்புகழ்.

திரைகடலிடை வரு மசுரன் ---

சமுத்திரத்திற்கு மத்தியில் மாமரமாகத் தோன்றி, ஆயிரத்தெட்டு அண்டங்களும் நிழல்படுமாறு, இரும்பின் மயமான இலைகளையுடைய கிளைகளை அசைப்பதால் உயிர்களுக்குப் பெருந் துன்பத்தை விளைத்தான் சூரபன்மன்.

இபமயில் குறமகளும் விரும்பிப் புணர்வோனே ---

தெய்வயானையாகிய கிரியாசக்தியையும், வள்ளியம்மையாகிய இச்சாசக்தி யையும், ஆன்மாக்களுக்கு அருள் செய்யும் பொருட்டு இறைவன் விரும்பிச் சேர்கின்றனன்.

விருதணி மரகத மயில் ---

எம்பெருமான் எழுந்தருளிவரும் பச்சை ப்ரவாள மயில், துரக கஜரத கடக விகடதட நிருதர்குல துஷ்டர் நிஷ்டூரமுடையதும் நெடியமுது ககனமுக டுறவீசி நிமிரு மொரு நீலக்கலாபமுடையதும் படர் சக்ரவாளகிரி துகள் பட வையாளி வருந் திறமுடையதுமாகத் திகழ்வதால், விருதுகளை யணிந்து வெற்றியைத் தெரிவித்துக்கொண்டு வருகிறது.

குமர விடங்க ---

திருச்செந்தூரிலுள்ள உத்சவ மூர்த்திக்குக் ’குமரவிடங்கர்’ என்று திருநாமம். விடங்கர்-உளிபடா மூர்த்தி என்றும் பொருள்.

கருத்துரை

         மலைவில்லாரருளிய செந்தமிழ்க் குமாரரே! சூரபன்மனை வதைத்தருளிய செந்திலதிபரே! வள்ளிதேவசேனா காந்தரே! மரகதமயில் மிசைவரும் குமரவிடங்கப்பெருமாளே! விலைமகளிரது மயக்கத்தையுடைய அடியேன் கவலைகள் நீங்கவும், திருவருள் நெறியில் நிற்கவும், தேவரீரது திருவடி எனது மனதின்கண் பொருந்தவும், தேவரீருடையப் பற்றை அடைய மாட்டேனோ!




        

No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...