திருத்தினை நகர்


திருத் தினைநகர்
(தீர்த்தனகிரி)

     நடு நாட்டுத் திருத்தலம்.

         கடலூர் - சிதம்பரம் பிரதான சாலையில், கடலூருக்கு சுமார் 18 கி.மீ. தொலைவிலுள்ள ஆலப்பாக்கம் தாண்டி மேட்டுப்பாளையம் என்ற கிராமம் வரும். அங்கிருந்து தீர்த்தனகிரிக்குச் செல்லும் சாலை பிரிகிறது. பிரியும் சாலையில் சுமார் 5 கி.மீ. சென்று இத்திருத்லத்தை அடையலாம்.

இறைவர்              : சிவக்கொழுந்தீசர், திருந்தீஸ்வரர்.

இறைவியார்           : நீலாயதாக்ஷி, ஒப்பிலாநாயகி,                                                                     கருந்தடங்கண்ணி, இளங்கொம்பன்னாள்.

தல மரம்                : கொன்றை.

தீர்த்தம்                 : ஜாம்பவ தீர்த்தம்.

தேவாரப் பாடல்கள்    : சுந்தரர் - நீறு தாங்கிய திருநுத.

     முன்னொரு காலத்தில் இப்பகுதியில் வசித்த ஒரு விவசாய தம்பதியினரான பெரியான் என்னும் பள்ளனும் அவன் மனைவியும் சிவன் மீது அதிக பக்தியுடன் இருந்தனர். தினமும் ஒரு சிவ பக்தருக்கு உணவளித்து விட்டு அதன் பின்பு உண்பதை வழக்கமாக கொண்டிருந்தனர். ஒரு சமயம் சிவன் அவர்களது பக்தியை சோதிக்க எண்ணி, எந்த சிவபக்தரையும் அவர் வீட்டுப்பக்கம் செல்லாதபடி செய்தார். எனவே, விவசாயி தோட்டத்தில் உள்ள பணியாளர்களுக்கு உணவு கொடுக்கலாம் என்று நினைத்து, தன் மனைவியுடன் தோட்டத்திற்கு சென்றான். ஆனால் அங்கும் பணியாளர்கள் யாரும் இல்லை. எனவே அவர்கள் நீண்ட நேரம் அங்கேயே காத்திருந்தனர். அப்போது இறைவன் அடியவராக வந்து அன்னம் கேட்க, விவசாயி வீட்டிற்குச் சென்று உணவு எடுத்து வருவதாகக் கூறினான். அடியவராக வந்து இறைவன் அவனிடம் "நான் உழைக்காமல் எதுவும் சாப்பிட மாட்டேன். எனவே, உன் தோட்டத்தில் எனக்கு ஏதாவது வேலை கொடு! அதற்கு கூலியாக வேண்டுமானால் சாப்பிடுகிறேன்" என்றார். பள்ளனும் ஒத்துக்கொண்டு, தன் தோட்டத்தை உழும்படி கூறினான். இறைவன் வயலில் இறங்கி உழுதார். தம்பதியர் இருவரும் வீட்டிற்கு சென்று, உணவை எடுத்துக்கொண்டு திரும்பினர். அப்போது, தோட்டத்தில் அன்று விதைக்கப்பட்டிருந்த தினைப் பயிர்கள் அனைத்தும் நன்கு விளைந்து, கதிர்கள் முற்றி, அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தன. ஆச்சரியமடைந்த விவசாயி சந்தேகத்துடனே அடியவருக்கு அருகிலிருந்த கொன்றை மரத்தின் அடியில் அன்னமிட்டான். அடியவர் சாப்பிட்ட பின்பு, அவரிடம் "ஒரே நாளில் தினைப்பயிர் விளைந்தது எப்படி?"' என தன் சந்தேகத்தை கேட்டான். அடியவராக வந்த முதியவர் மறைந்து, சிவபெருமானாக அவனுக்கு காட்சி தந்து, தானே அடியவராக வந்ததை உணர்த்தினார். சிவதரிசனம் கண்டு மகிழ்ந்த விவசாயி இறைவனை அங்கேயே எழுந்தருளும்படி வேண்டிக்கொண்டான். இறைவனும் சுயம்பு லிங்கமாக அவ்விடத்தில் எழுந்தருளினார். அதிசயமாக ஒரே நாளில் தினை விளைந்ததால் இத்தலம் தினைநகர் என்று பெயர் பெற்றது.

     கிழக்கு நோக்கியஇராஜகோபுரம் மூன்று நிலைகளுடன் விளங்குகிறது. கோபுர வாயில் வழி உள் நுழைந்தால் நேரே கவசமிட்ட கொடிமரம். நந்தி, பலிபீடம் ஆகியவற்றைக் காணலாம். வெளிப் பிரகாரத்தில் வலதுபுறம் அம்பாள் சந்நிதி உள்ளது. மேலும் இந்த பிராகாரத்தில் நால்வர், விநாயகர், சுப்பிரமணியர், வீரசேன ம  ன்னன் ஆகியோரின் சந்நிதிகளும், தலமரமாகிய கொன்றையும், பைரவர், சூரியன் திருமேனிகளும் உள்ளன. பிரகார வலம் முடித்து, தெற்கிலுள்ள பக்கவாயில் வழியாக உள்ளே சென்றால் நேரே நடராச சபை உள்ளது. நடராச மூர்த்தியின் கீழே பீடத்தில் மகாவிஷ்ணு, சங்கை வாயில் வைத்து ஊதுவது போலவும், பிரம்மா பஞ்சமுக வாத்யம் வாசிப்பது போலவும், சிறிய மூர்த்தங்கள் உள்ளன. திருமால், பிரம்மா இருவரது இசைக்கேற்ப சிவன் நடனமாடும் இக்காட்சியை காண்பது மிகவும் அபூர்வம். இந்த தரிசனம் விசேஷ பலன்களை தரக்கூடியது. நடனம், இசை பயில்பவர்கள் இச்சந்நிதியில் சிறப்பு பூஜைகள் செய்து வேண்டிக்கொள்கின்றனர். இதனால், கலைகளில் சிறப்பிடம் பெறலாம் என்பது நம்பிக்கை. உள் மண்டபத்தில் இடதுபுறம் நோக்கினால் மூலவர் இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

     கோஷ்ட மூர்த்தங்களாக நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, இலிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோரைக் காணலாம். லிங்கோத்பவருக்கு இருபுறமும் பிரம்மா, விஷ்ணு நின்று தரிசிக்கும் இறைவனை தரிசிக்கும் கோலத்தில் காணப்படுகின்றனர். சண்டேசுவரர் சந்நிதியும் உள்ளது.

         காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "நம்பு விடை ஆங்கும் தினை ஊர்ந்து அருளாய் என்று அன்பர் தொழுது ஓங்கும் தினையூர் உமாபதியே" என்று போற்றி உள்ளார்.


சுந்தரர் திருப்பதிக வரலாறு

          சுந்தரர் திருஅதிகைப் பெருமானை வழிபட்டு, தென்திசையில் கங்கை என்னும் திருக்கெடிலத்தில் திளைத்து ஆடி,  அங்கிருந்த போய், மாவலியின் வேள்வியில் வாமன வடிவில் சென்று மண் இரந்த திருமால் வழிபட்ட திருமாணிகுழியை வணங்கி, திருத்தினை நகர் சென்று வழிபட்டு அருளிய திருப்பதிகம். (பெரிய புராணம் - தடுத்தாட்கொண்ட புராணம்)


பெரிய புராணப் பாடல் எண் : 237/91
பரம்பொருளைப் பணிந்துதாள்
         பரவிப்போய், பணிந்தவர்க்கு
வரம்தருவான் தினைநகரை
         வணங்கினர், வண் தமிழ்பாடி,
நரம்புஉடையாழ் ஒலிமுழவின் 
         நாதஒலி வேதஒலி
அரம்பையர்தம் கீதஒலி
         அறாத் தில்லை மருங்குஅணைந்தார்.

         பொழிப்புரை : திருமாணிகுழியில் வீற்றிருந்தருளும் இறைவனை வணங்கி, அவ்விடத்தினின்றும் சென்று அடியவர்க்கு வேண்டும் வரங்களைத் தந்தருளும் பெருமான் எழுந்தருளியிருக்கும் திருத்தினை நகரை வணங்கி, வளமான திருப்பதிகத்தைப் பாடி, நரம்புகளையுடைய யாழோசையும், முழவோசையும், நான்மறையோசையும், தெய்வமகளிரின் இன்னிசைப் பாடல் ஓசையும் ஆகிய இவைகள் எக்காலமும் நீங்காதிருக்கும் தில்லையின் அருகே அடைந்தருளினார்.

         குறிப்புரை : திருத்தினை நகரில் பாடிய பதிகம் `நீறு தாங்கிய` (தி.7 ப.64) எனத் தொடங்கும் திருப்பதிகமாகும். இப்பதிகப் பாடல்தொறும் `திருத்தினை நகருட் சிவக்கொழுந்தினைச் சென்றடை மனனே` என வருவதால், இத்திருப்பதியைச் சென்று அடையுமுன் பாடப்பட்டதெனத் தெரிகிறது. இது பற்றியே சேக்கிழாரும் தினைநகரை வணங்கினர் எனக் கூறி, பின் `வண்டமிழ் பாடி` எனக் குறித்தருளுகின்றார். நெஞ் சறிவுறுத்தலாக அருளப் பெற்றிருக்கும் இப்பதிகம், பன்முறையும் படித்து இன்புறுதற்குரியதாம்.


7. 064    திருத்தினைநகர்                      பண் - தக்கேசி
                                    திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
நீறு தாங்கிய திருநுத லானை,
         நெற்றிக் கண்ணனை, நிரைவளை மடந்தை
கூறு தாங்கிய கொள்கையி னானை,
         குற்றம் இல்லியை, கற்றைஅம் சடைமேல்
ஆறு தாங்கிய அழகனை, அமரர்க்கு
         அரிய சோதியை, வரிவரால் உகளும்
சேறு தாங்கிய திருத்தினை நகருள்
         சிவக்கொ ழுந்தினைச் சென்றுஅடை மனனே

         பொழிப்புரை : மனமே , நீ , திருநீற்றை அணிந்துள்ள அழகிய நெற்றியையுடையவனும் , அந்நெற்றியில் ஒரு கண்ணை உடைய வனும் , வரிசைப்பட்ட வளைகளையணிந்த உமையவளைத் தனது ஒரு கூற்றில் வைத்த செய்கையை யுடையவனும் , குற்றம் சிறிதும் இல்லாத வனும் , கற்றையாகிய அழகிய சடையின் கண் நீரைக் கட்டியுள்ள அழகனும் , தேவர்களுக்கு அரிய ஒளியாய் உள்ளவனும் ஆகிய , வரியையுடைய வரால் மீன்கள் துள்ளுகின்ற , சேற்றையுடைய திருத்தினைநகரில் எழுந்தருளியிருக்கின்ற , நன்மையின் மேலெல்லை யாயுள்ள பெருமானை அணுகச் சென்று அடைவாயாக .


பாடல் எண் : 2
பிணிகொள்ஆக்கை பிறப்புஇறப்பு என்னும்
         இதனைநீக்கி, ஈசன் திருவடி யிணைக்குஆள்
துணிய வேண்டிடில் சொல்லுவன் கேள்நீ,
         அஞ்சல் நெஞ்சமே, வஞ்சர்வாழ் மதில்மூன்று
அணிகொள் வெஞ்சிலை யால்உகச் சீறும்
         ஐயன், வையகம் பரவிநின்று ஏத்தும்
திணியும் வார்பொழில் திருத்தினை நகருள்
         சிவக்கொ ழுந்தினைச் சென்றுஅடை மனனே

         பொழிப்புரை : மனமே , நீ , நோயுடைய உடம்புகளிற் பிறத்தலும் , பின்பு அவற்றினின்று இறத்தலும் ஆகிய இவ்வல்லலை ஒழித்து இறைவன் திருவடியிணைக்கு ஆளாதலைத் துணிந்து நிற்க விரும் பினால் , அதற்கு வழிசொல்லுவேன் ; கேள் ; வஞ்சனையை இயல்பாக உடைய அசுரர்கள் வாழ்ந்த மூன்று ஊர்களை , அழகிய , கொடிய வில்லால் அழியுமாறு வெகுண்ட தலைவனாகிய , செறிந்த , நீண்ட சோலைகளையுடைய திருத்தினை நகரில் எழுந்தருளியிருக்கின்ற , உலகமெல்லாம் , முன்னிலையாகவும் , படர்க்கையாகவும் நின்று துதிக் கின்ற , நன்மையின் மேலெல்லையாய் உள்ள பெருமானை , அணுகச் சென்று அடைவாயாக ; மனமே , அஞ்சாதி .


பாடல் எண் : 3
வடிகொள் கண்இணை மடந்தையர் தம்பால்
         மயல் அதுஉற்று,வஞ் சனைக்குஇட மாகி
முடியு மாகரு தேல்,எருது ஏறும்
         மூர்த்தி யை,முதல் ஆயபி ரானை,
அடிகள் என்றுஅடி யார்தொழுது ஏத்தும்
         அப்பன், ஒப்புஇலா முலைஉமை கோனை,
செடிகொள் கான்மலி திருத்தினை நகருள்
         சிவக்கொ ழுந்தினைச் சென்றுஅடை மனனே

         பொழிப்புரை : மனமே , நீ , மாவடுப்போலும் கண்ணிணை களையுடைய மாதர்பாற் செல்கின்ற மையலைப் பொருந்தி , அம் மையல் காரணமாகத் தோன்றுகின்ற பல , வஞ்சனைகளுக்கும் இடமாய்க் கெட்டொழிய நினையாதி ; மற்று , எருதில் ஏறுகின்ற மூர்த்தி யும் , எப்பொருட்கும் முதலாகிய பெருமானும் , அடியார்கள் , ` எம் அடிகள் ` என்று வணங்கித் துதிக்கும் அப்பனும் , இணையில்லாத பெருமையையுடைய தனங்களையுடைய உமைக்குத் தலைவனும் ஆகிய , புதல்களைக்கொண்ட காடுகள் நிறைந்த திருத்தினைநகரில் எழுந்தருளியிருக்கின்ற நன்மையின் மேலெல்லையாய் உள்ள பெருமானை அணுகச் சென்று அடைவாயாக .


பாடல் எண் : 4
பாவ மேபுரிந்து அகலிடம் தன்னில்
         பல பகர்ந்து, அலமந்து, உயிர் வாழ்க்கைக்கு
ஆவ என்றுஉழந்து அயர்ந்துவீ ழாதே,
         அண்ணல் தன்திறம் அறிவினால் கருதி
மாவின் ஈர்உரி உடைபுனைந் தானை,
         மணியை, மைந்தனை, வானவர்க்கு அமுதை,
தேவ தேவனை, திருத்தினை நகருள்
         சிவக்கொ ழுந்தினைச் சென்றுஅடை மனனே

         பொழிப்புரை : மனமே , நீ , அகன்ற நிலப்பரப்பின்கண் தீவினை களையே செய்தும் , பொய்கள் பலவற்றையே பேசியும் திரிந்து , உயிர்வாழ்வதற்கு இவையே ஏற்புடையன என்று கருதித் துன்பமுற்று மெலிந்து அழியாதி ; மற்று , உலகிற்கு முதல்வனாய் உள்ளவனது இயல்புகளை , நல்லாசிரியர்பாற் பெற்ற அறிவினால் சிந்தித்து , புலியினது உரித்த தோலை உடுத்தவனும் , மாணிக்கம்போல்பவனும் , யாவர்க்கும் வலிய சார்பாய் உள்ளவனும் , தேவர்களுக்கு அமுதம் போல்பவனும் , அவர்கள் அனைவர்க்கும் இறைவனும் ஆகிய திருத்தினைநகரில் எழுந்தருளியிருக்கின்ற , நன்மையின் மேலெல்லை யாய் உள்ள பெருமானை அணுகச் சென்று அடைவாயாக .

  
பாடல் எண் : 5
ஒன்று அலாஉயிர் வாழ்க்கையை நினைந்திட்டு,
         உடல் தளர்ந்து,அரு மாநிதி இயற்றி,
என்றும் வாழலாம் எமக்குஎனப் பேசும்
         இதுவும் பொய்என வேநினை, உளமே,
குன்று உலாவிய புயம்உடை யானை,
         கூத்த னை, குலாவிக்குவ லயத்தோர்
சென்று எலாம்பயில் திருத்தினை நகருள்
         சிவக்கொ ழுந்தினைச் சென்றுஅடை மனனே

         பொழிப்புரை : உளமே , ஒருபொருளல்லாத உயிர் வாழ்க்கையைப் பெரிய பொருளாக நினைந்து , அந் நினைவின் வழியே , ` மெய் வருந்த , அரிய பெரிய பொருட்குவையை ஈட்டி என்றும் இனிது வாழ்தல் எமக்கு இயலும் ` என்று உலகத்தார் பேசுகின்ற இச் செருக்குரைதானும் பொய் என்பதனை நினை ; மனமே , மலைபோலும் தோள்களை உடையவனும் , பல கூத்துக்களை வல்லவனும் ஆகிய உலகில் உள்ளவர் எல்லாம் சென்று பலகாலும் மகிழ்ந்து தங்குகின்ற திருத் தினை நகரில் எழுந்தருளியிருக்கின்ற , நன்மையின் மேலெல்லையாய் உள்ள பெருமானை , அணுகச் சென்று அடைவாயாக .


பாடல் எண் : 6
வேந்த ராய்உலகு ஆண்டு,அறம் புரிந்து
         வீற்றி ருந்தஇவ் வுடல்இது தன்னைத்
தேய்ந்து இறந்துவெந் துயர்உழந் திடும்இப்
         பொக்க வாழ்வினை விட்டிடு நெஞ்சே,
பாந்தள் அங்கையில் ஆட்டுஉகந் தானை,
         பரம னை,கடல் சூர்தடிந் திட்ட
சேந்தர் தாதையை, திருத்தினை நகருள்
         சிவக்கொ ழுந்தினைச் சென்றுஅடை மனனே

         பொழிப்புரை : மக்கள் , அரசராய் நின்று உலகத்தை ஆண்டு, செங் கோல் செலுத்திப் பெருமிதத்துடன் அமர்ந்திருந்ததற்கு இடமாய் நின்ற மனித உடம்பாகிய இதனை , இதனொடு கொண்ட தொடர்பு நாள் தோறும் தேயப்பெற்று , பின்பு விட்டு நீங்கி , கொடிய துன்பத்தை நுகர் கின்ற இந்நிலையில்லாத வாழ்வினை , மனமே , சிறிதும் விரும்பாது விடு ; மற்று , மனமே, பாம்பை அகங்கையிற் கொண்டு ஆட்டுதலை விரும்பியவனும் , யாவர்க்கும் மேலானவனும் , கடலில் மாமரமாய் நின்ற சூரனை அழித்த முருகப் பெருமானார்க்குத் தந்தையும் ஆகிய , திருத்தினை நகரில் எழுந்தருளியிருக்கின்ற , நன்மையின் மேலெல்லை யாய் உள்ள பெருமானை , அணுகச் சென்று அடைவாயாக .


பாடல் எண் : 7
தன்னில் ஆசுஅறு சித்தமும் இன்றி,
         தவம் முயன்று, அவம் ஆயின பேசி,
பின்னல் ஆர்சடை கட்டிஎன்பு அணிந்தால்,
         பெரிதும் நீந்துவது அரிது,அது நிற்க
முன் எலாம்முழு முதல்என்று வானோர்
         மூர்த்தி ஆகிய முதலவன் தன்னைச்
செந்நெல் ஆர்வயல் திருத்தினை நகருள்
         சிவக்கொ ழுந்தினைச் சென்றுஅடை மனனே

         பொழிப்புரை : மனமே , தன்னிடத்துக் குற்றமின்றி நிற்கும் மனத்தை யுடையராகாது , தவத்தொழிலைச் செய்து , பயனில்லாத சொற்களைப் பேசி , பின்னுதல் பொருந்திய சடைகளைச்சேர்த்துக் கட்டிக்கொள்ளு தலுடன் எலும்பினை அணிந்து கொள்ளுதலாகிய வேடத்தைப் பூண்டு கொண்டாலே , மக்கள், பிறவியாகிய கடலை முற்றக் கடந்துவிடுதல் இயலாது; ஆதலின், அந்நிலை நின்னின் வேறாய் நிற்க , நீ , தேவர் கட்குத் தேவனாய் உள்ள பெருந்தேவனாகிய , செந்நெற் பயிர்கள் நிறைந்த வயல்களையுடைய திருத்தினை நகரில் எழுந்தருளியிருக் கின்ற , நன்மையின் மேலெல்லையாய் உள்ள பெருமானை , அணுகச் சென்று , இவனே , தொன்மையாய முழுமுதற் கடவுள் என்று துணிந்து அடைவாயாக .


பாடல் எண் : 8
பரிந்த சுற்றமும் மற்றுவன் துணையும்
         பலருங் கண்டுஅழுது எழ,உயிர் உடலைப்
பிரிந்து போம்,இது நிச்சயம், அறிந்தால்,
         பேதை வாழ்வுஎனும் பிணக்கினைத் தவிர்ந்து,
கருந்தடங் கண்ணி பங்கனை, உயிரை,
         கால காலனை, கடவுளை விரும்பிச்
செருந்தி பொன்மலர் திருத்தினை நகருள்
         சிவக்கொ ழுந்தினைச் சென்றுஅடை மனனே

         பொழிப்புரை : மனமே , அன்புள்ள சுற்றத்தாரும் , மற்றும் துணை யாயுள்ளாரும் ஆகிய பலருங் கண்டு , உடல்மேல் விழுந்து அழுது எழும்படி , உயிர் உடலைப் பிரிந்து அப்பாற் போய்விடும் ; இது நிச்சயம் . இதனை நீ அறிந்துளை என்றால் , அறியாமையையுடைய வாழ்வாகிய இம் மாறுபட்ட நெறியை நீங்கி , கரிய பெரிய கண்களை யுடையவளாகிய உமையது பாகத்தை உடையவனும் , உயிர்களில் நிறைந்திருப்பவனும் , காலனுக்குக் காலனும் , எல்லாப் பொருளையும் கடந்துள்ளவனும் ஆகிய , செருந்தி மரங்கள் பொன்போலும் மலர்களை மலர்கின்ற திருத்தினை நகரில் எழுந்தருளியிருக்கின்ற , நன்மையின் மேலெல்லையாகிய பெருமானை , விரும்பி , அணுகச் சென்று அடைவாயாக .


பாடல் எண் : 9
நமை எலாம்பலர் இகழ்ந்துஉரைப் பதன்முன்
         நன்மை ஒன்றுஇலாத் தேரர்புன் சமணாம்
சமயம் ஆகிய தவத்தினார் அவத்தத்
         தன்மை விட்டுஒழி, நன்மையை வேண்டில்,
உமைஒர் கூறனை, ஏறுஉகந் தானை,
         உம்பர் ஆதியை, எம்பெரு மானை,
சிமயம் ஆர்பொழில் திருத்தினை நகருள்
         சிவக்கொ ழுந்தினைச் சென்றுஅடை மனனே

         பொழிப்புரை : மனமே , நீ நன்மையை அடையவிரும்பினால் , நன்மை சிறிதும் இல்லாத புத்தமும் சமணமும் ஆகிய சமயங்களைப் பொருந்திய தவத்தினரது பயனில்லாத செயல்களை விட்டொழி ; நம்மைப் பலர் இகழ்ந்து பேசுதற்கு முன்பே , உமையை ஒரு பாகத்தில் உடையவனும் , எருதை விரும்பி ஏறுபவனும் , தேவர்கட்கு முதல் வனும் , எங்கட்குத் தலைவனும் ஆகிய , மலைச்சிகரம் போலப் பொருந்திய சோலைகளையுடைய திருத்தினை நகரில் எழுந்தருளி யிருக்கின்ற , நன்மையின் மேலெல்லையாகிய பெருமானை , அணுகச் சென்று அடைவாயாக .


பாடல் எண் : 10
நீடு பொக்கையில் பிறவியைப் பழித்து
         நீங்க லாம்என்று மனத்தினைத் தெருட்டி,
சேடு உலாம்பொழில் திருத்தினை நகருள்
         சிவக்கொ ழுந்தினைத் திருவடி இணைதான்
நாட லாம்புகழ் நாவலூர் ஆளி,
         நம்பி, வன்தொண்டந், ஊரன் உரைத்த
பாடலாம் தமிழ் பத்துஇவை வல்லார்
         முத்தி ஆவது பரகதிப் பயனே

         பொழிப்புரை : எல்லையில்லாத , நிலையற்ற பிறவியை வெறுத்து , அதனினின்றும் நாம் நீங்குதலே பொருந்துவது என்று சொல்லி மனத்தைத் தெளிவித்து , திரட்சி பொருந்திய சோலைகளையுடைய திருத்தினைநகரில் எழுந்தருளியிருக்கின்ற, நன்மையின் மேலெல்லை யாயுள்ள பெருமானது திருவடியிணையை நினைத்தற்கு ஆகும் , புகழையுடைய திருநாவலூர்க்குத் தலைவனும் , வன்றொண்டனும் ஆகிய நம்பியாரூரன் பாடிய தமிழ்ப் பாடல்களாகிய இவை பத்தினை யும் பாட வல்லவர் அடையும் இன்ப நிலையாவது , மிக மேலான நிலையாகிய முடிந்த பயனேயாம் .

                                             திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment

பொது --- 1030. விட்ட புழுகுபனி

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்   விட்ட புழுகுபனி (பொது)   முருகா!  விலைமாதர் கூட்டுறவால் எனது அறிவு மயங்காமல் காத்து அருள்.            ...