திருச்செந்தூர் - 0049. குடர்நிணம் என்பு


அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

குடர்நிணம் என்பு (திருச்செந்தூர்)

திருவடியைத் தந்து ஆள

தனதன தந்த தனதன தந்த
     தனதன தந்த ...... தானாந்தனனா


குடர்நிண மென்பு சலமல மண்டு
     குருதிந ரம்பு ......           சீயூன் பொதிதோல்

குலவு குரம்பை முருடு சுமந்து
     குனகிம கிழ்ந்து ......        நாயேன் தளரா

அடர்மத னம்பை யனையக ருங்க
     ணரிவையர் தங்கள் ......    தோடோய்ந் தயரா

அறிவழி கின்ற குணமற வுன்றன்
     அடியிணை தந்து ......       நீயாண் டருள்வாய்

தடவியல் செந்தில் இறையவ நண்பு
     தருகுற மங்கை ......        வாழ்வாம் புயனே

சரவண கந்த முருகக டம்ப
     தனிமயில் கொண்டு ......    பார்சூழ்ந் தவனே

சுடர்படர் குன்று தொளைபட அண்டர்
     தொழவொரு செங்கை ...... வேல்வாங் கியவா

துரிதப தங்க இரதப்ர சண்ட
     சொரிகடல் நின்ற ......      சூராந் தகனே.


பதம் பிரித்தல்


குடர்,நிணம், என்பு, சலம், மலம், மண்டு
     குருதி, நரம்பு, ......          சீ,ஊன் பொதிதோல்

குலவு குரம்பை, முருடு சுமந்து,
     குனகி மகிழ்ந்து ......        நாயேன் தளரா,

அடர்மதன் அம்பை அனைய கருங்கண்
    அரிவையர் தங்கள் ......     தோள்தோய்ந்து அயரா,

அறிவு அழிகின்ற குணம் அற உன்தன்
     அடிஇணை தந்து ......       நீ ஆண்டு அருள்வாய்.

தடஇயல் செந்தில் இறையவ! நண்பு
     தரு குற மங்கை ......       வாழ்வாம் புயனே!

சரவண! கந்த! முருக! கடம்ப!
     தனிமயில் கொண்டு ......    பார் சூழ்ந்தவனே!

சுடர்படர் குன்று தொளைபட, அண்டர்
     தொழ, ரு செங்கை ...... வேல் வாங்கியவா!

துரித பதங்க இரத ப்ரசண்ட
     சொரிகடல் நின்ற ......      சூர அந்தகனே.


பதவுரை

         தட இயல் செந்தில் இறையவ --- விசாலமான பெருமையுடைய திருச்செந்தூரில் எழுந்தருளியுள்ள தலைவரே!

         நண்பு தரு குறமங்கை வாழ்வாம் புயனே --- அன்புடைய வள்ளியம்மையாருக்கு வாழ்வாக விளங்கும் திருப்புயத்தை யுடையவரே!

         சரவண --- சரவணப் பொய்கையில் தோன்றியவரே!

         கந்த --- கந்தப் பெருமானே!

         முருக --- முருகவேளே!

         கடம்ப --- கடப்பமாலைத் தரித்தவரே!

         தனிமயில் கொண்டு பார் சூழ்ந்தவனே --- ஒப்பற்ற மயில்மீது ஏறிக்கொண்டு உலகை வலம் வந்தவரே!

     சுடர் படர் குன்று தொளை பட அண்டர் தொழ --– ஒளி பரந்த கிரவுஞ்ச மலைத் தொளைபடவும் தேவர்கள் வணங்கவும்,

     ஒரு செங்கை வேல் வாங்கியவா --- ஒப்பற்ற சிவந்த திருக்கரத்தினின்றும் வேலாயுதத்தை விடுத்தவரே!

         துரித பதங்க இரத ப்ரசண்ட --- வேகமாகச் செல்லும் பறவையாகிய மயிலைத் தேராகக் கொண்ட பெரிய வீரரே!

         சொரி கடல் நின்ற சூர அந்தகனே --- அலை வீசுகின்ற கடலுக்கு நடுவே நின்ற சூரபன்மனுக்கு முடிவைச் செய்தவரே!

         குடர் நிணம் என்பு சலம் மலம் --- குடல், கொழுப்பு, எலும்பு,  நீர், மலம்,

     மண்டு குருதி --- நிரம்பியுள்ள உதிரம்,

     நரம்பு, சீ, ஊன் பொதிதோல் குலவு குரம்பை --- நரம்பு, சீழ், மாமிசம், மூடியுள்ள தோல், இவைகள் கூடிய சிறு குடிலாகிய,

     முருடு சுமந்து --- இந்தக் கட்டையைத் தூக்கிச் சுமந்து,

     குனகி மகிழ்ந்து --- கொஞ்சிப் பேசியும் மகிழ்ந்தும்,

     நாயேன் தளரா --- நாயினேன் தளர்ச்சியுற்றும்,

     அடர் மதன் அம்பை அனைய கருங்கண் அரிவையர் தங்கள் --- நெருங்கி வரும் மன்மதனுடைய கணையை ஒத்த கரிய கண்களுடைய பெண்களின்,

     தோள் தோய்ந்து அயரா --- தோளில் மூழ்கி அயர்ச்சியுற்றும்,

     அறிவு அழிகின்ற குணம் அற --- அறிவு அழிந்து போகின்ற தீய குணம் அற்றுப்போக,

     உன்தன் அடியிணை தந்து --- தேவரீரது இரண்டு திருவடிகளைக் கொடுத்து,

     நீ ஆண்டு அருள்வாய் --- அடியேனை நீ ஆட்கொண்டு அருள் புரிவீராக.

பொழிப்புரை

         விசாலமான பெருமையுடைய திருச்செந்தூரில் எழுந்தருளியிருக்கும் தலைவரே!

         அன்பு மிகுந்த வள்ளியம்மைக்கு வாழ்வாக விளங்கும் திருத்தோள்களை உடையவரே!

         சரவணபவரே!

         கந்தக்கடவுளே!

         முருகப் பெருமானே!

         கடப்ப மலர் மாலை யணிந்தவரே!

         ஒப்பற்ற மயில்மீது ஆரோகணித்து உலகத்தை வலம் வந்தவரே!

         ஒளி வீசுகின்ற கிரவுஞ்சமலைத் தொளைபடவும், தேவர்கள் வணங்கி வழிபடவும், ஒப்பற்ற சிவந்த திருக்கரத்தில் வேலாயுதத்தை எடுத்து ஏவியவரே!

         வேகமாகப் பறக்கும் மயில் பறவையாகிய தேரின் மீது உலாவும் வீரரே!

         அலை வீசுகின்ற கடலில் நின்ற சூரபன்மனுக்கு முடிவைச் செய்தவரே!

         குடல், கொழுப்பு, எலும்பு, நீர், மலம், நிறைந்த உதிரம், நரம்பு, சீழ், மாமிசம் இவைகளின்மீது போர்த்து வைத்துள்ள தோல் என்ற சிறு குடிலாகிய இந்த உடம்பு என்ற கட்டையைச் சுமந்து கொஞ்சிப் பேசி மகிழ்ந்தும், அடியேன் தளர்ந்தும், நெருங்கிவரும் மன்மதனுடைய பாணம் போன்ற கரிய கண்களையுடைய பெண்களுடைய தோளைத் தழுவி அயர்ச்சியுற்றும் அறிவு அழிகின்ற தீயகுணம் நீங்குமாறு, தேவரீருடைய இரண்டு திருவடிகளைத் தந்து அடியேனை ஆட்கொண்டருளுவீர்.


விரிவுரை

குடர் நிணம் என்பு........குலவு குரம்பை ---

குரம்பை - சிறு வீடு.

இந்த உடம்பு சிறு வீடு போன்றது. இந்த வீட்டிலுள்ள பண்டங்கள், அத்தர் புனுகு சவ்வாது என்ற வாசனைகள் அல்ல; குடல் கொழுப்பு எலும்பு சலம் மலம் உதிரம் நரம்பு சீழ் முதலியவைகள். இவை தெரியாவண்ணம் தோல் போட்டு மூடி மறைத்திருக்கிறது. இந்த அசுத்தமான உடம்பில் வாழ்வது மிகவும் அருவருப்பானது. அன்றியும் இந்த உடம்பு கனமானது. நாலுபேர் சுமக்கும் உடம்பை நாம் தனியே தூக்கிச் சுமக்கின்றோம்.

மானார் விழியைக் கடந்து ஏறி வந்தனன், வாழ்குருவும்
கோனாகி என்னைக் குடியேற்றிக் கொண்டனன், குற்றமில்லை,
போனாலும் பேறு, இருந்தாலும் நற்பேறு, இது பொய் அன்றுகாண்,  
ஆனாலும் இந்த உடம்போடு இருப்பது அருவருப்பே.      --- பட்டினத்தார்

கள்ளப் புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே”        ---  திருவாசகம்

குரம்பை மலசலம் வழுவளு நிணமொடு
எலும்புஅணி சரி தசையிரல் குடல்நெதி
குலைந்த செயிர்மயிர் குருதியோ டிவைபல கசுமாலக் குடில்”   ---  திருப்புகழ்.

குனகி மகிழ்ந்து நாயேன் தளரா ---

குனகுதல் - கொஞ்சிப் பேசுதல், மனைவி மக்களுடன் கொஞ்சிப்பேசி மகிழ்ந்து, பின்னர் தளர்ச்சியடைவர்.

அடர் மதனம்பை அனைய கருங்கண் அரிவையர் ---

மதன்-மன்மதன். மன்மதன்-உள்ளத்தை உடைப்பவன். இவன் திருமாலின் சித்தத்தில் பிறந்ததனால் சித்தஜன் எனப்படுவான். இவன் அசுரர் மீது செல்லுங்கால் இரும்பு வில்லும், மாநுடர் மீது செல்லுங்கால் கரும்பு வில்லும், தேவர்கள்மீது செல்லுங்கால் மலர் வில்லும் கொண்டு போர்ப் புரிவான். இவனுக்குக் கணைகள் ஐந்து மலர்கள். அம்மலர்ப் போன்ற கண்களை யுடையவர்கள் பெண்கள். மன்மதனுடைய கணைகள் மயக்கத்தைப் புரிவதுபோல் பெண்களின் கண்களும் ஆடவர் மனத்தை மயக்கும் வலிமை யுடையவை.

அறிவு அழிகின்ற குணம் அற ---

மாதர் மயல் அறிவை அழிக்கும்.

நண்டுசிப்பி வேய்கதலி நாசம்உறும் காலத்தில்
கொண்ட கருஅளிக்கும் கொள்கைபோல், --- ஒண்தொடீ,
போதம் தனம் கல்வி பொன்றவரும் காலம்,அயல்
மாதர்மேல் வைப்பார் மனம்.                  --- ஔவையார்.

மேலும் நல்ல குணங்களை மாற்றி தீய குணங்களை நல்கும்.

 
தட இயல் செந்தில் ---

தடம்-விசாலம். இயல்-பெருமை. அளவற்ற பெருமையுடையது திருச்செந்தூர், “பரமபதமாய செந்தில்” “கயிலை மலையனைய செந்தில்” என்றும் சுவாமிகள் கூறுகின்றனர்.

தனிமயில் கொண்டு பார் சூழ்ந்தவனே ---

முருகப்பெருமான் திருமயிலின்மீது ஆரோகணித்து அகில உலகங்களையும் ஒரு நொடிப்பொழுதுக்குள் வலம் வந்தனர். அவர் அருட்ஜோதி மயமானவர். சூரியன் உதித்தால், சூரிய ஒளி எங்கும் ஒரு கணத்தில் பரவுவது போல், சிவஞான சூரியனாகிய முருகன் தன் அருள் ஒளியை எங்கும் ஒரு கணத்தில் பரப்பினார்.

   உருகும் அடியவர் இருவினை இருள்பொரும்
  உதய தினகர இமகரன் வலம்வரும்
  உலக முழுதொரு நொடியினில் வலம்வரு பெருமாளே”
                                                         --- (பகிர நினைவொரு) திருப்புகழ்.

சுடர்படர் குன்று தொளைபட ---

கிரவுஞ்ச மலைப் பொன்மயமானது, “சொன்னக் கிரவுஞ்சகிரி” “பொன்னஞ் சிலம்பு” என்று கந்தரலங்காரத்தில் வருவதைக் காண்க. அதன் பொன்னொளி நன்கு பரந்து நின்றது; காண்பார் கண் கூசும்படி வீசியது. அதனை எம்பெருமான் வேலினால் பிளந்து அழித்தனர்.

துரித பதங்க இரத ப்ரசண்ட ---

துரிதம்-வேகம். பதங்கம்-பறை. வேகமாக பறக்கும் மயிலை இரதம்போல் கொண்டு எங்கும் உலாவுகின்ற வீரன் முருகன்.

சொரிகடல் நின்ற சூராந்தகனே ---

சூரபன்மன் முருக வேளுடன் போர்ப் புரிந்து இறுதியில் உறுதி யிழந்து கடலில் மாமரமாக நின்றான். கந்தக் கடவுள் கதிர் வேலை ஏவி, அண்டங்கள் முழுவதும் நிழல்படுமாறு எஃகு இலைகளுடன் அசைந்து உலகம் நடுங்குமாறு செய்த அம் மாமரத்தைப் பிளந்தனர்.

கடற் சலந்தனிலே யொளி சூரனை
உடற் பகுந்திரு கூறென வேயது
கதித் தெழுந்தொரு சேவலு மாமயில் விடும்வேலா      ---  (மனத்திரைந்) திருப்புகழ்.

சூரனுக்கு அந்தத்தை (முடிவை)ச் செய்தபடியால் “சூராந்தகனே” என்றனர்.

சூர குலாந்தகனே”                                  ---  கந்தர் அலங்காரம்

நிருதரார்க்கொரு காலா ஜேஜெய.’            ---  திருப்புகழ்.


கருத்துரை

         செந்திற் கந்தவேளே! குன்றம் எரிந்த கூர்வேலா! சூரசங்கார! உமது திருவடித் தந்து ஆண்டருள்வீர்.



No comments:

Post a Comment

பொது --- 1081. இசைந்த ஏறும்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் இசைந்த ஏறும் (பொது) முருகா!  அடியேன் அயர்ந்தபோது வந்து அருள வேண்டும். தனந்த தானந் தனதன தானன ...... தனதான...