அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
கொம்பனையார்
(திருச்செந்தூர்)
முருகப் பெருமானை அன்புடனும்
ஆசாரத்துடனும் பூசித்து,
வீணாள்
படாமல் உய்ந்திடத் திருவருள் புரிய வேண்டல்
தந்தன
தானான தானன
தந்தன தானான தானன
தந்தன தானான தானன ...... தனதான
கொம்பனை
யார்காது மோதிரு
கண்களி லாமோத சீதள
குங்கும பாடீர பூஷண ...... நகமேவு
கொங்கையி
னீராவி மேல்வளர்
செங்கழு நீர்மாலை சூடிய
கொண்டையி லாதார சோபையில் ...மருளாதே
உம்பர்கள்
ஸ்வாமிந மோநம
எம்பெரு மானேந மோநம
ஒண்டொடி மோகாந மோநம ...... எனநாளும்
உன்புக
ழேபாடி நானினி
அன்புட னாசார பூசைசெய்
துய்ந்திட வீணாள்ப டாதருள் ...... புரிவாயே
பம்பர
மேபோல ஆடிய
சங்கரி வேதாள நாயகி
பங்கய சீபாத நூபுரி ...... கரசூலி
பங்கமி
லாநீலி மோடிப
யங்கரி மாகாளி யோகினி
பண்டுசு ராபான சூரனொ ...... டெதிர்போர்கண்
டெம்புதல்
வாவாழி வாழியெ
னும்படி வீறான வேல்தர
என்றுமு ளானேம நோகர ...... வயலூரா
இன்சொல்வி
சாகாக்ரு பாகர
செந்திலில் வாழ்வாகி யேயடி
யென்றனை யீடேற வாழ்வருள் ......
பெருமாளே.
பதம் பிரித்தல்
கொம்பு
அனையார் காது மோது இரு
கண்களில், ஆமோத சீதள
குங்கும பாடீர பூஷண ...... நகமேவு
கொங்கையில், நீர் ஆவி மேல்வளர்
செங்கழு நீர்மாலை சூடிய
கொண்டையில், ஆதார சோபையில் ...மருளாதே,
உம்பர்கள்
ஸ்வாமி! நமோநம,
எம்பெரு மானே! நமோநம,
ஒண்தொடி மோகா! நமோநம, ...... என, நாளும்
உன்
புகழே பாடி நான் இனி
அன்புடன் ஆசார பூசை செய்து
உய்ந்திட, வீண்நாள் படாது, அருள் ...... புரிவாயே
பம்பரமே போல ஆடிய
சங்கரி, வேதாள நாயகி,
பங்கய சீபாத நூபுரி, ...... கரசூலி,
பங்கம்
இலா நீலி, மோடி,
பயங்கரி, மாகாளி, யோகினி,
பண்டு சுரா பான சூரனொடு ...... எதிர்போர்கண்டு,
எம்
புதல்வா! வாழி வாழி,
எனும்படி வீறான வேல்தர,
என்றும் உளானே! மனோகர! ...... வயலூரா!
இன்சொல்
விசாகா! க்ருபாகர!
செந்திலில் வாழ்வு ஆகியே, அடி
யென் தனை ஈடேற வாழ்வுஅருள் ......
பெருமாளே.
பதவுரை
பம்பரமே போல ஆடிய சங்கரி ---
(அம்பலத்தினில் இறைவன் நிர்த்தனஞ் செய்யுங்கால்) பம்பரத்தைப் போலவே சுழன்று ஆடிய
சங்கரியும்,
வேதாள நாயகி --- வேதாள பூத கணங்களுக்குத்
தலைவியும்,
பங்கய சீ பாத நூபரி --- தாமரைக்கு நிகரானதும்
சிறப்பு வாய்ந்ததுமான திருவடிகளில் சிலம்புகளை யணிந்து கொண்டிருப்பவரும்,
கர சூலி --- சூலத்தைக் கரத்திலே தாங்கிக்கொண்டு
இருப்பவரும்,
பங்கம் இலா நீலி --- குற்றமில்லாத நீலநிறத்தை
உடையவரும்,
மோடி --- துர்க்கையும்,
பயம் ஹரி --- அடியார்களது பயத்தை
அகற்றுபவரும்,
மாகாளி
--- மகாகாளியும்,
யோகினி --- யோகினி யென்னும் தேவதையாக
இருப்பவருமாகிய உமாதேவியார்,
பண்டு சுரா பான சூரனொடு --- முன்னாளில்
கள்ளருந்தும் அசுரகுலத்திற் பிறந்த சூரபன்மனொடு,
எதிர்போர் கண்டு --- எதிர்த்துப் போர்
செய்வதைக் கண்டு,
எம் புதல்வா வாழி வாழி எனும்படி --- “எனது குமாரனே!
நீ நீடுழி வாழ்வாயாக” என்று உன்னை வாழ்த்தும்படி,
வீறான வேல்தர --- வெற்றியை யுடைய
வேலாயுதத்தைத் தரித்துக் கொண்டிருப்பவரே!
என்றும் உளானே --- எந்நாளிலும்
அழிவின்றி நித்திய பரவஸ்துவாக உள்ளவரே!
மனோகர --- விரும்பப்படுந் தன்மையினரே!
வயலூரா --- வயலூர் என்னும் புண்ணியத் திருத்தலத்தில்
எழுந்தருளியுள்ளவரே!
இன் சொல் விசாகா --- இனிய சொற்களைப்
பேசும் விசாகமூர்த்தியே!
க்ருபை ஆகர --- கருணைக்கு உறைவிடமானவரே!
செந்திலில் வாழ்வு ஆகியே --- திருச்செந்தூர்
என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி,
அடி என் தனை ஈடேற வாய்வு அருள் பெருமாளே ---அடியேனை
உய்யுமாறு நல்வாழ்வை அருளிய பெருமையில்
சிறந்தவரே!
கொம்பு அனையார் காது மோது இரு கண்களில் ---
கொம்பைப்போல் ஒல்கும் தன்மையுடைய (விலை) மகளிரது காதுகள் வரையிலும் சென்று மோதுகின்ற
நீண்ட இருகண்களின் அழகிலும்,
ஆமோத சீதள குங்கும --- மகிழ்ச்சியை விளைவிப்பதும், குளிர்ந்துள்ள குங்குமக் கலப்புகளையும்,
பாடீர --- சந்தனக் குழம்பையும்,
பூஷண --- ஆபரணங்களையும்
அணிந்துள்ளதும்,
நகம் மேவும் கொங்கையில் --- மலை போன்றதுமாகிய தனபாரங்களின் அழகிலும்,
நீர் ஆவிமேல் வளர் --- நீர் நிலைகளில் பூத்த
செங்கழுநீர் மாலை சூடிய கொண்டையில் ---
செங்கழுநீர் மலர்களை முடித்துள்ள கூந்தலின் அழகிலும்,
ஆதார சோபையில் மருளாதே --- உடம்பின் அழகிலும்
மனமயக்கம் அடையாமல்,
உம்பர்கள் ஸ்வாமீ நமோ நம --- தேவர்களுக்குத்
தலைவரே! நமஸ்காரம் நமஸ்காரம்,
எம்பெருமானே நமோநம --- அடியேங்களாகிய எமக்கு நாயகரே!
நமஸ்காரம் நமஸ்காரம்,
ஒண்தொடி மோகா நமோநம --- பிரகாசமான வளையல்களை அணிந்துள்ள
வள்ளிநாயகியார் மீது மோகமுடையவரே!
நமஸ்காரம் நமஸ்காரம்;
என நாளும் --- என்று நாள்தோறும்,
உன் புகழே பாடி --- தேவரீரது திருப்புகழையே
பாடி,
நான் இனி அன்புடன் ஆசார பூசை செய்து ---
அடியேன் இனிமேல் தேவரீரிடத்து மெய்யன்போடு தூய்மையாக இருந்து உம்மைப் பூசித்து,
நாள் வீண்படாது உய்ந்திட --- அடியேனுடைய
வாழ்நாள் வீணாகாது உய்யுமாறு,
அருள்புரிவாய் (ஏ- அசை) --- திருவருள்
புரிவீர்.
பொழிப்புரை
(சிவபெருமான் சிற்றம்பலத்தில் இன்ப நடனம்
புரியுங்கால் அந்நடனத்திற்கிசைய) பம்பரத்தைப்போல் திருநடனம் புரிந்த சங்கரியும், பூத வேதாள கணங்களுக்குத் தலைவியும், தாமரை மலரையொத்த சிறப்பு வாய்ந்த
திருவடிகளில் சிலம்புகளை யணிந்து கொண்டிருப்பவரும், திரிசூலத்தைக் கரமலரில் தரித்துக்கொண்டிருப்பவரும், குற்றமில்லாத நீல நிறத்தையுடையவரும், துர்க்கையும், அடியார்களது அச்சத்தை அகற்றுபவரும், மகாகாளியும், யோகினி என்னும் தேவதையாக இருப்பவரும்
ஆகிய உமாதேவியார், முன்னாளில் மதுபானஞ்
செய்யும் அசுரனாகிய சூரபன்மனோடு எதிர்த்துப் போர் புரியக் கண்டு, “எமது குமாரனே! நீ நீடூழி வாழ்வாயாக”
என்று வாழ்த்துமாறு வெற்றி பொருந்திய வேற்படையைத் தரித்தவரே!
என்றும் அழியாத நித்திய சொரூபரே!
விரும்பப்படுந் தன்மையினரே!
வயலூரில் எழுந்தருளியிருப்பவரே!
இனிய சொல்லையுடைய விசாக மூர்த்தியே!
கருணைக்கு உறைவிடமானவரே!
திருச்செந்தூரில் வாழ்ந்துகொண்டு
அடியேன் ஈடேறுமாறு திருவருள் செய்யும் பெருமை மிக்கவரே!
பூங்கொம்பைப் போல் அழகாக ஒல்குந்
தன்மையுடைய விலைமகளிரது காது வரை நீண்டுள்ள இருகண்களிலும், குளிர்ந்த குங்குமக்
கலப்பையும் சந்தனக் குழம்பையும் அணிந்து கொண்டு மகிழ்ச்சியைத் தருவதும் மலைக்கு
நிகரானதுமாகிய தனபாரங்களிலும், நீர் நிரம்பிய
தடாகங்களில் பூத்துள்ள செங்கழுநீர் மாலையை முடித்துள்ள கூந்தலிலும், உடலின் அழகிலும், அடியேன் மனத்தை வைத்து மயக்கத்தை
யடையாமல்,
`தேவர்களுக்குத்
தலைவரே! நமஸ்காரம்; நமஸ்காரம்; எமது பெருமானே! நமஸ்காரம்; நமஸ்காரம்; ஒளியுள்ள வளையலையணிந்துள்ள
வள்ளிபிராட்டியார்மீது மோகத்தை யுடையவரே! நமஸ்காரம் நமஸ்காரம்,’ என்று,
தினந்தோறும் தேவரீரது திருப்புகழ்ப்
பாமாலைகளையே பாடி, அடியேன்(அவமே சென்ற
நாள் சென்றாலும்) இனியாவது அன்புடனும் ஆசாரத்துடனும் தேவரீரது திருவடிக்
கமலங்களைப் பூசித்து, வீண் நாள் படாது
உய்யுமாறு திருவருள் புரிவீர்.
விரிவுரை
கொம்பு
அனையார்
---
பெண்கள்
இடை சிறுத்து இளங்கொடிபோல் அசையுந் தன்மையுடையோர் ஆதலால், கொம்புக்கு நிகரானவர் என்று கூறுவது
கவிகளின் மரபு. பிறரும் இவ்வாறு கூறுமாறு காண்க.
“பூத்தவிளங் கொம்பனைய
பூவை முகங்கோடாமல்” -மகாபாரதம்.
காதுமோது
இரு கண்களில்
---
கண்கள்
நீண்டிருப்பது மாதர்க்குச் சிறந்த இலக்கணமாம். அங்ஙனம் நீண்டிருப்பதால்
அக்கண்களிலுள்ள கருவிழிகள் பிறழ்வது காதுகளுடன் போர் புரிய வருவது போலத்
தோன்றுகிறது என்பது கவிநயம். இதனை,
மன்மதனது
கொலைசெய்யும் நஞ்சு பூசப்பட்ட கொடிய வேல் போல் அஞ்சன மெழுதிய விழியானது தன்னோடு
போர் செய்ய வருதலினாலே அக் கண்ணின் பகையாகிய குவளை மலரைத் தான் படைத்துணையாகச்
சேர்த்து வைப்பது போல் குவளை மலரை ஒரு பெண் அழகிய காதின் மிசை சூடினாள் என்னும்
பொருள் தரும் அடியில் கண்ட அழகிய செய்யுளிலுங் காண்க.
வேனலம்பதி
கொலைவிடம் ஊட்டிய வெவ்வேல்
மான
அஞ்சனம் எழுதிய விழிபொர வரலால்
தானதன்பகை
தனைத்துணை கொண்டுறுந் தகைபோல்
பாலனஞ்செவி
மிசையணிந் தனளொரு பாவை. ---பிரபுலிங்கலீலை
நகமேவு ---
நகம்
- மலை. நகக்குறி பொருந்தின தனம் என்று கூறுவாருமுளர்.
உம்பர்கள்
ஸ்வாமி
---
மூவர்
தேவாதிகள் தம்பிரானாதலால் முருகப் பெருமான் தேவர்கள் யாவருக்கும் தலைவராவர்.
“தேவதேவ தேவாதி தேவப்
பெருமாளே” --- (பேரவாவறா) திருப்புகழ்.
தேவர்
நாயகன் ஆகியே என்மனச் சிலைதனில் அமர்ந்தோனே!
மூவர்
நாயகன் எனமறை வாழ்த்திடு முத்தியின் வித்தே! இங்கு
ஏவர்
ஆயினும் நின்திருத் தணிகைசென்று இறைஞ்சிடின், அவரே
என்
பாவ
நாசம் செய்து என்தனை ஆட்கொள்ளும் பரஞ்சுடர் கண்டாயே
--- திருவருட்பா.
ஒண்டொடி
மோகா
---
வள்ளியென்பது
ஜீவான்மா; அதனை ஆட்கொள்ள வேண்டும் என்ற மோகம்
தயையினால் முருகப்பெருமானுக்கு உளது.
பணியா
என,
வள்ளி
பதம் பணியும்
தணியா
அதிமோக தயா பரனே” --- கந்தர் அநுபூதி.
நாளும்
உன்புகழே பாடி
---
பிரமனது
கையெழுத்தை அழித்து இனி, தாய் உதரத்திற்
பிறக்க வொட்டாத வேலாயுதனது திருப்புகழையே பாடுதல் வேண்டும். பிற புகழ்க்கவிளைக்
கற்று பாடுதல் கூடாது. பிறப்பிறப்பற் பெம்மானாகிய முருகன் புகழொன்றே இம்மை மறுமை
நலன்களை நல்கும்.
அழித்துப்
பிறக்கவொட்டா அயில் வேலன் கவியை அன்பால்
எழுத்துப்பிழை
அறக் கற்கின்றிலீர், எரி மூண்டது என்ன
விழித்துப்
புகை எழப் பொங்கு வெம் கூற்றன் விடும் கயிற்றால்
கழுத்தில்
சுருக்கிட்டு இழுக்கும் அன்றோ கவி கற்கின்றதே.
---
கந்தர்அலங்காரம்.
கிழியும்படி
அடல் குன்று எறிந்தோன் கவி கேட்டு உருகி
இழியும்
கவி கற்றிடாது இருப்பீர்; எரிவாய் நரகக்
குழியும்
துயரும் விடாய்ப்படக் கூற்றுவன் ஊர்க்குச் செல்லும்
வழியும்
துயரும் பகரீர் பகரீர் மறந்தவர்க்கே. --- கந்தர்அலங்காரம்.
நாகமலையில்
வாழும் கந்தசுவாமியே! உன் திருப்புகழை யான் கேட்டறிந்த மாத்திரத்தில் நினது
கோழிக்கொடி என் ஆத்மாவை அபயங் கொடுத்து ஆண்டு கொண்டது; உன் வேலாயுதம் பிறப்புக்கிடமான பேராசையை
ஒழித்துவிட்டது; உன் தேவிமாரது
திருவடியுங் கிடைத்தது, இனி யான் தேட
வேண்டியது என்ன இருக்கிறது? என்னும் பொருள் தரும்
அருணைக்கோனது அருள் வாக்கையும் உன்னுக.
செவிக்குன்ற
வாரண நல்கிசை பூண்டவன் சிந்தை யம்பு
செவிக்குன்ற
வாரண மஞ்சலென் றாண்டது நீண்ட கன்மச்
செவிக்குன்ற
வாரண வேலாயுதஞ் செற்ற துற்றன கட்
செவிக்குன்ற
வாரண வள்ளிபொற்றாண் மற்றென் றேடுவதே” ---
கந்தரந்தாதி.
ஆதலால், “யார் வேண்டினாலும் கேட்ட பொருள் ஈயும்
தியாகாங்க சீலனாம்” முருகப்பெருமானது தெய்வீகம் பொருந்திய திருப்புகழையே அன்புடன்
ஓதி, அப்பரம பிதாவினது
திருவருளைப் பெறுவார்களாக.
“எல்லாரும் ஞானத் தெளிஞரே? கேளீர்சொல்
கல்எல்லாம்
மாணிக்கக் கல்ஆமோ? - பொல்லாக்
கருப்புகழைக்
கேட்குமோ, கானமயில் வீரன்
திருப்புகழைக்
கேட்குஞ் செவி? ”
அன்புடனாசார
பூசை
---
பூஜா
என்னும் வடசொல் ஆகார ஈறுகெட்டு பூசை யென்று மருவியது. பூ - கன்மங்களைப் பூர்த்திசெய்து; ஜா - சிவஞானத்தை உதிக்கச் செய்வது
என்பது பொருள். இப் பூசை ஒவ்வொருவரும் செய்யற்பாலது. பூசைக்கு ஆசாரமும் அன்பும் சிறந்த
அங்கங்களாம். மனவாக்குகட்கு எட்டாத ஆண்டவனைப் பூசிப்பதற்கு நமது கரங்களும் ஏனைய
உறுப்புகளும் “என்ன மாதவஞ் செய்தனவோ” என்று இடையறாத அன்புடனும், தீய எண்ணங்களை எண்ணாமல் மனோசுத்தமுடனும், அவமொழிகளைப் பேசாமல் வாக்கு
சுத்தமுடனும், அசுத்தப் பொருள்களைத்
தொடாமல் காய சுத்தமுடனுமாக இருந்து இறைவனைப் பூசிக்க வேண்டும்.
வீணாள்
படாது அருள் புரிவாயே ---
கிடைத்தற்கரிய
வாழ்நாளை அவத்தொழில்களிலும் களியாடல்களிலும் வீண் சிந்தனைகளிலுமாக வாளா கழிக்காமல், “இரைதேடுவதோடு இறையுந்தேடு” என்ற
அமுதவசனப்படி உடம்பை வளர்ப்பதற்காக உழைப்பதோடு உயிரை வளர்ப்பதற்கும்
பாடுபடவேண்டும். சிவசிந்தனையும்,
சிவ
வழிபாடுமே உயிருக்கு உறுதி பயப்பனவாம்.
“வீணே நாள் போய்விடாமல் ஆறாறுமீதில்
ஞானோப தேசம் அருள்வாயே” --- (மாலாசை)
திருப்புகழ்.
எம்
புதல்வா வாழிவாழி எனும்படி ---
சூரபன்மாவோடு
தமது குமாரராகிய குகப்பெருமான் போர்ப் புரியுங்காலை, உமாதேவியார் தமது புதல்வருக்கு வெற்றி
யுண்டாமாறு “வாழி வாழி” என்று வாழ்த்துகிறார்.
ஆணவமலமாகிய சூரபன்மன் காமக்குரோதாதி
துர்க்குணங்களாகிய அசுரர்களுடன் அறநெறிப் பிறழ்ந்து, சமதமாதி சற்குணங்களாகிய அமரர்களுக்குத்
துன்பம் புரிந்தபோது, மறத்தை அழித்து
அறத்தை நிலைநாட்டுமாறு ஞான பண்டிதராகிய எந்தை கந்தவேள், அசுத்த போகமாகிய கள்ளைக் குடித்து
மயங்கியுள்ள அவ்வாணவ மலமாகிய சூரனோடு எதிர்த்துப் போர்புரிந்து ஆணவமலத்தை அழிப்பதைக்கண்ட அருட்சத்தியாகிய அம்பிகை மனமகிழ்ந்து, ”சத்து வடிவாகிய சிவபெருமானுக்கும், சித்து வடிவமாகிய எனக்கும் தோன்றிய
ஆனந்த வடிவமாகிய அண்ணலே! நீ ஆன்மாக்களின் ஆணவமலத்தை அழிப்பதற்காகவே வெளிப்பட்டுத்
தோன்றினை. ஆதலால் ஆன்மாக்களது மலத்தைக் கெடுத்து ஆனந்தத்தைக் கொடுத்துக்கொண்டு
நீடூழி வாழ்வாயாக” என்று வாழ்த்துகிறார் என்பது அதன் தத்துவம்.
என்றும்
உளானே
---
நம்
குமரக் கடவுள் மாறுபாடின்றி என்றும் ஒரு படித்தாக விளங்குகின்ற நித்திய வடிவினர்.
மனோகர ---
இளங்
குமாரமூர்த்தியாய்த் திகழும் இன்ப வடிவினராதலால், எல்லோராலும் விரும்பப்படுகின்றார்.
வயலூரா ---
அருணகிரியாரைத்
திருவருணையில் ஆண்டுகொண்டு “நம் வயலூருக்கு வா” என்று ஆறுமுகப் பெருமான்
அருளிச்செய்து, வயலூரில்
திருப்புகழில் “இன்ன இன்ன வைத்துப் பாடு” என்று திருவருள் புரிந்த தெய்வீகம்
பொருந்திய திவ்விய க்ஷேத்திர மாதலால், அருணகிரியார்
தன்னையாட்கொண்ட வயலூரின் மீதுள்ள அளவற்ற அன்பின் பெருக்கால், அடிக்கடி அநேக பாசுரங்களில்”வயலூரா”
“வயலூரா” என்று அருளிச் செய்தனர்.
இன்சொல் ---
கருணைக்கு உறைவிடமாகிய கந்தப்பெருமான்
இன்சொல்லை உடையவராகி இருக்கின்றனர். ஒவ்வொருவரும் வன்சொல்லை அறவே ஒழித்து, இன் சொல்லையே எஞ்ஞான்றும் யாரிடத்தும்
உரைக்கவேண்டும். நம்மைப் பார்த்துப் பிறர் கடுமையாகப் பேசினால் நமக்கு எத்துணை
வருத்தம் உண்டாகிறது? இனிமையாகப் பேசினால்
எத்துணை மகிழ்ச்சியுண்டாகிறது. அதனை யுற்று நோக்கி நாமும் பிறரிடத்துப் பேசும்போது
கடுஞ் சொற்களை மறந்தும் பேசாது,
இனிய
சொற்களையே பேசுவோமாக.
இன்சொல்
இனிது ஈன்றல் காண்பான், எவன்கொலோ
வன்சொல்
வழங்கு வது --- திருக்குறள்
கருத்துரை
உமாதேவியார் வாழ்த்து கூற வெற்றிவேலைத்
தாங்கி யுள்ளவரே! நித்தியரே! மனோகரமானவரே! வயலூரில் எழுந்தருளியவரே! விசாகரே!
கிருபாகரரே! திருச்செந்தூரரே! விலைமகளிரது கண்கள், தனங்கள், கரிய கூந்தல், அழகிய உடல் என்பனவற்றைக்கண்டு மருளாமல், தேவரீரது திருப்புகழையே பாடி, தேவரீரை அன்புடனும் ஆசாரத்துடனும்
பூசித்து, வீணாள் படாமல்
உய்ந்திடத் திருவருள் புரிவீராக.
No comments:
Post a Comment