திரு ஒற்றியூர்


திரு ஒற்றியூர்,
சென்னை

     தொண்டை நன்னாட்டுத் திருத்தலம்.

     இத்திருத்தலம் சென்னை மாநகரின் வடக்குப் பகுதியில் சென்னை செண்ட்ரல் இரயில் நிலையத்தில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. சென்னை நகரின் எல்லாப் பகுதிகளில் இருந்தும் நகரப் பேருந்துகள் திருவொற்றியூருக்கு செல்கின்றன. புறநகர் இரயில் நிலையமும் திருவொற்றியூரில் இருக்கிறது.


இறைவர்              : ஆதிபுரீஸ்வரர், புற்றிடங்கொண்டார்,  படம்பக்கநாதர்
                                எழுத்தறியும் பெருமாள்தியாகேசர், ஆனந்தத் தியாகர்.

இறைவியார்         : திரிபுரசுந்தரி, வடிவுடையம்மை, வடிவுடை மாணிக்கம்.

தல மரம்              : மகிழ மரம்.

தீர்த்தம்               : பிரம தீர்த்தம்.


தேவாரப் பாடல்கள்    : 1. சம்பந்தர் - 1. விடையவன் விண்ணும்

                                             2. அப்பர் -1. வெள்ளத்தைச் சடையில்,
                                                              2. ஓம்பினேன் கூட்டை வாளா,
                                                             3. செற்றுக் களிற்றுரி கொள்கின்ற,
                                                             4. ஒற்றி யூரும் ஒளிமதி,
                                                             5. வண்டோங்கு செங்கமலங்.

                                      3. சுந்தரர்  -  1. அழுக்கு மெய்கொடுன்,
                                                            2. பாட்டும் பாடிப் பரவி.

     முன்னொரு காலத்தில் பூமியில் பிரளயம் எற்பட்டது. பிரளயத்திற்குப் பின் புதிய உலகம் படைக்க பிரம்மா கேட்ட போது சிவபெருமான் தன் சகதியால் வெப்பம் உண்டாக்கி அவ்வெப்பத்தால் பிரளய நீரை ஒற்றி எடுத்தார். அந்த வெப்ப கோள வடிவத்திலிருந்து ஒரு மகிழ மரத்தடியில் ஒரு சிவலிங்கம் சுயம்புவாகத் தோன்றியது. பிரளய நீரை ஒற்றி எடுத்தமையால் இத்தலத்திற்கு ஒற்றியூர் எனப் பெயர் அமையப் பெற்றது. மற்றொரு காரணமாக இறைவன் வாசுகி என்கிற பாம்பை தன்னுள் அடக்கிக் கொண்டதால் (ஒற்றிக் கொண்டதால்) அவர் ஒற்றீசர் என அழைக்கப்பட்டு இத்தலம் ஒற்றியூர் என அழைக்கப்பட்டது.

         பிரளயத்திற்குப் பின் தோன்றிய முதல் சுயம்பு சிவலிங்கம் ஆனதால் இத்தல இறைவன் ஆதிபுரீஸ்வரர் என்றும், பாம்பை தன்னுள் அடக்கிக் கொண்டதால் படம்பக்கநாதர் என்றும் அழைக்கப்படுகிறார். இறைவனின் லிங்கத் திருமேனி புற்று மண்ணால் ஆனது.

     வருடத்தில் 3 நாட்களைத் தவிர மற்ற நாட்களில் லிங்கம் கவசத்தால் மூடியே இருக்கும். ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாத பெளர்ணமி நாளில் கவசம் திறக்கப்பட்டு 3 நாட்களுக்கு இறைவனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். இந்த நாட்களில் இறைவனை புற்று வடிவமாகக் கண்டு தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.

         இராஜகோபுரம் கிழக்கு நோக்கி 5 நிலைகளுடன் காட்சி தருகின்றது. கோபுர வாயிலைக் கடந்து உள்ளே சென்றவுடன் விசாலமான வெளிப் பிரகாரம் உள்ளது. கிழக்குச் சுற்று வெளிப் பிரகாரத்தின் வலதுபுறம் இறைவி வடிவுடை அம்மன் சந்நிதி அமைந்திருக்கிறது. மேலும் கிழக்கு வெளிப் பிரகாரத்தில் நவக்கிரக சந்நிதி, விநாயகர் சந்நிதி, பாலசுப்ரமணியர் சந்நிதி மற்றும் குழந்தையீசுவரர் சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்திருக்கின்றன.

     மேற்கு வெளிச் சுற்றுப் பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில் அண்ணாமலையார் சந்நிதியும், பின்பு வரிசையாக ஜம்புலிங்கேசுவரர் சந்நிதி, நாகலிங்கேசுவரர் சந்நிதி, காளத்திநாதர் சந்நிதி, மீனாட்சி சுந்தரேசுவரர் சந்நிதி அமைந்துள்ளன. வடமேற்கு மூலையில் ஒற்றீசுவரர் சந்நிதி தனி முகப்பு மண்டபத்துடன் அமைந்திருக்கிறது. வடக்கு வெளிச் சுற்றுப் பிரகாரத்தில் பைரவர் சந்நிதி, கல்யாணசுந்தரர் சந்நிதி இருக்கின்றன. பைரவர் வடக்கு நோக்கி நின்ற நிலையில் தனது வாகனமான நாய் இல்லாமல் காட்சி தருகிறார். தலமரம் மகிழமரம் இந்த வடக்கு வெளிப் பிரகாரத்தில் தான் உள்ளது.

         மூலவர் ஆதிபுரீஸ்வரர் சந்நிதி கிழக்கு ராஜகோபுர வாயிலுக்கு நேரே இல்லாமல் சற்று இடதுபுறம் தள்ளி அமைந்திருக்கிறது. தெற்கு வெளிச்சுற்றில் உள்ள வாயில் வழியாக மூலவர் கருவறையுள்ள பகுதியை அடையலாம். தெற்கு வெளிச்சுற்றில் உள்ள வாயில் அருகில் கிழக்கு நோக்கிய தியாகராஜர் சந்நிதி இருக்கிறது. உள்ளே நுழைந்தவுடன் இடதுபுறம் மூலவர் ஆதிபுரீசுவரர் சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கருவறைப் பிரகாரம் சுற்றி வரும்போது வடக்குச் சுற்றில் இத்தலத்திற்கு பெருமை சேர்க்கும் வட்டப்பாறை அம்மன் சந்நிதி வடக்கு நோக்கி இருக்கிறது. இச்சந்நிதிக்கு நேர் எதிரே உள்ள வாயில் வழியாக வடக்கு வெளிச்சுற்றுப் பிரகாரத்தை அடையலாம்.

         27 நட்சத்திரங்கள் இங்கு வந்த நட்சத்திரங்களின் நாயகனான சிவபெருமானை வழிபட்டு ஒவ்வொன்றும் ஒரு சிவலிங்கமாக மாறி முக்தி பெற்று பக்தர்களுக்கு அருள் வழங்குகின்றன. அந்தந்த ராசிக்காரர்கள் பிறந்த நாளில் அந்த ராசி லிங்கத்தை வழிபடுவது இத்தலத்தில் மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது. தெற்கு வெளிப் பிரகாரத்தில் 27 நட்சத்திர லிங்கங்கள் வரிசையாக உள்ளன.

சுந்தரர் திருமணம்

         ஞாயிறு என்னும் ஊரிலே வேளாளர் ஒருவர் இருந்தார். அவர் ஞாயிறு கிழார் என்பவர். திருக்கயிலையிலே நம்பியாரூரரைக் காதலித்த இருவருள் அனிந்திதையார் என்பவர் ஞாயிறு கிழாருக்குத் திருமகளாகப் பிறந்தார்.  அவருக்குச் சங்கிலியார் என்னும் திருநாமம் சூட்டப்பட்டது.  சங்கிலியார் உமையம்மையாரிடத்து இயற்கை அன்பு உடையவராக வளர்ந்தார்.  திருமணப் பேச்சு வந்தபோது, "நான் ஒரு சிவனடியாருக்கு உரியவள், இவர்கள் என்ன செய்வார்களோ" என்று மனம் கலங்கி மயங்கி விழுந்தார்.  மயக்கம் தெளிந்ததும், மணம் பேச முயன்ற தந்தையைப் பார்த்து, "நீங்கள் பேசிய வார்த்தை எனக்குப் பிடிக்கவில்லை. நான் சிவனடியார் ஒருவருக்கு உரியவள்.  இனி, நான் திருவொற்றியூரை அடைந்து திருவருள் வழி நடப்பேன்" என்றார்.  பெற்றோருக்கு நடுக்கமும் அச்சமும் உண்டாயின.  சங்கிலியார் சொன்னதை வெளியிடாமல் அவர்கள் வாழ்ந்து வந்தனர்.

         ஞாயிறு கிழாரின் மரபில் தோன்றிய ஒருவன் சங்கிலியாரை மணம்பேச ஞாயிறு கிழார்பால் சில முதியோரை அனுப்பினான்.  அவனுக்குச் சங்கிலியார் நிலை தெரியாது.  அம் முதியவர்கள் ஞாயிறு கிழாரிடம் வந்து தாங்கள் வந்த கருத்தைத் தெரிவித்தார்கள்.  ஒருவாறு இனிய மொழி பேசி வந்தவர்களை அனுப்பி வைத்தார் ஞாயிறு கிழார்.  அவர்களை அனுப்பினவன் ஏதோ ஒரு தீங்கு செய்து மாண்டவனைப் போல் மாண்டான்.  அச் செய்தி ஞாயிறு கிழாருக்கு எட்டியது.  இனிச் சங்கிலியார் கருத்தின் வழி நடப்பதே சரி என்று பெற்றோர் எண்ணினர்.  திருவொற்றியூரில் கன்னிமாடம் ஒன்றைச் சமைத்து, அதில் சங்கிலியாரை இருத்தினர்.

         சங்கிலியார் கன்னிமாடத்தில் இருந்துகொண்டு ஆண்டவனை வழிபட்டு வந்தார்.  அவருக்குப் பழைய திருக்கயிலாயத் திருத்தொண்டின் உணர்ச்சி முகிழ்க்கலாயிற்று.  பூமண்டபத்தில் திரை சூழ்ந்த ஓரிடத்தில் இருந்து பூமாலை கட்டித் திருக்கோயிலுக்கு அனுப்பி வந்தார்.

         திருக்காளத்தியை வழிபட்ட நம்பியாரூர் பெருமான் திருவொற்றியூர் வந்தார்.  வக்கம்போல் ஒரு நாள் திருக்கோயிலுக்குச் சென்றார்.  இறைவனைத் தொழுதவர், அடியார்கள் செய்யும் திருத்தொண்டுகளையும் தனித்தனியே கண்டு வணங்கி, பூமண்டபத்தினுள் சென்றபோது, சங்கிலியார் திரையை நீக்கி, ஆண்டவனுக்கு அணிவிக்கும் பொருட்டு, பூமாலையைத் தோழிகளிடம் தந்து மின்போல் மறைந்தார்.  பண்டைவிதி கடைக்கூட்ட சங்கிலியாரை நம்பியாரூரர் கண்டார்.

         வெளியே வந்தவர், அங்கிருந்த சிலரைப் பார்த்து, "பூமண்டபத்திலே இருந்த நங்கை என் மனதைக் கவர்ந்தாள்.  அவள் யார்" என்று வினவினார்.  அவர்கள், "சங்கிலியார் அவர் பேர். கன்னிகை, சிவபெருமானுக்குத் தொண்டு செய்பவர்" என்றார்கள்.  அது கேட்ட நம்பியாரூரர், "இப் பிறவி இருவர் பொருட்டு அளிக்கப்பட்டது. அவருள் ஒருத்தி பரவை.  மற்றொருத்தி இவள்தான்" என மருண்டார்.  திருக்கோயிலுக்குச் சென்றார்.  "திங்கள் வதனச் சங்கிலியைத் தந்து என் வருத்தம் தீரும்" என்று இறைவரை வேண்டினார்.  வெளியே வந்து திருக்கோயிலின் ஒருபுறத்திலே இருந்து சிவபெருமானை நினைந்து நினைந்து உருகலானார்.  மாலைக் காலம் வந்தது. 

         சிவபெருமான் தம் தோழர்பால் வந்து, "சங்கிலியை உனக்குத் தருகின்றோம்.  கவலையை ஒழி" என்றார்.  நம்பியாரூரர், "பெருமானே, அன்று என்னைத் தடுத்து ஆட்கொண்டு அருளீனீர்.  இன்று என் விருப்பத்திற்கு இணங்கி வந்து அருள் செய்தீர்" என்று வியந்து, வணங்கி, மகிழ்ந்தார்.

         சங்கிலியார் கனவிலே சிவபெருமான் தோன்றினார்.  "என் தவமே தவம்.  பெருமான் எழுந்தருளினார்" என்று சங்கிலியார் எழுந்தார், தொழுதார், ஆனந்த பரவசமாயினார்.  "நம்பியாரூரன் என்பவன் நம் மாட்டுப் பேரன்பு உடையவன்.  நம்மால் தடுத்து ஆட்கொள்ளப் பெற்றவன். அவன் உன்னை விரும்பி, என்னை  வேண்டினான்.  அவனை மணம் செய்து கொள்வாய்" என்றார்.  சங்கிலியார், "பெருமான் ஆணைப்படி இசைகின்றேன்.  ஆனால், திருமுன்னே முறையிட்டுக் கொள்ள வேண்டுவது ஒன்று உண்டு. திருவாரூரில் மகிழ்ச்சியுடன் வாழ்பவர் அவர்.  இதைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.    சிவபெருமான், "உன்னைப் பிரிந்து போகாதவாறு ஒரு சபதம் செய்து கொடுப்பான்" என்றார்.

         சிவபெருமான் மீண்டும் நம்பியாரூரர் பால் எழுந்தருளி, "சங்கிலியிடம் உன் கருத்தைத் தெரிவித்தோம்.  ஒரு குறை உண்டு.  அக் குறையைத் தீர்த்தல் வேண்டும்" என்றார். "அவள் முன்னிலையில் உன்னைப் பிரிந்து போகேன் என்று ஒரு சபதம் இன்று இரவே செய்து கொடு" என்றார்.  நம்பியாரூரர், "எதைச் செய்தல் வேண்டுமோ, அதைச் செய்வேன்.  உமது அருள் வேண்டும்" என்றார்.

         இச் சபதம் பிற பதிகளை வணங்குதற்கு இடையூறாக இருக்குமே என்று எண்ணிய நம்பியாரூரர்,  சிவபெருமான வணங்கி, "பெருமானே, சபதம் செய்து கொடுக்கச் சங்கிலியோடு திருச் சந்நிதிக்கு வருவேன்.  அப்போது, அடிகள் திருமகிழ்க்கீழ் எழ்ந்தருளல் வேண்டும்" என்று வேண்டினார்.  அதற்கிசைந்த பெருமான், சங்கிலியாரிடம் சென்று, "ஆரூரன் சபதம் செய்து கொடுக்க இசைந்தான்.  உன்னுடன் கோயிலுக்கு வருவான்.  அப்பொழுது மகிழமரத்தின் அடியில் சபதம் செய்து கொடுக்கும்படி கேட்பாயாக" என்றார்.

         சங்கிலியார் திருவருளை நினைந்து துயிலாதவரானார்.  தோழிமார்களை எழுப்பி நிகழ்ந்ததை அவர்களுக்குக் கூறினார். அவர்களும் மகிழ்வெய்தி அம்மையாரைத் தொழுதார்கள்.  திருப்பள்ளி எழுச்சிக்கு மலர் தொடுத்துத் தோழிமார்களுடன் திருக்கோயிலுக்குப் புறப்பட்டார். தம்பிரான் தோழர் முன்னே எழுந்து, சங்கிலியார் வரவை எதிர்நோக்கிக் கொண்டிருந்தார்.  சங்கிலியாரைக் கண்டு அவர் அருகே சென்று சிவபெருமான் அருளிச் செய்ததைச் சொன்னார். சங்கிலியார் நாணத்தால் ஏதும் பேசாமல் திருக்கோயிலுக்குச் சென்றார். நம்பியாரூரரும் தொடர்ந்தார்.  சந்நிதியை அடைந்தனர்.

         நம்பியாரூரர் சங்கிலியைப் பார்த்து, "நான் உன்னைப் பிரியேன் என்று சபதம் செய்து கொடுத்தல் வேண்டும். முன்னே வா" என்றார்.  சங்கிலியார் வாயிலாக எல்லாவற்றையும் அறிந்திருந்த தோழிமார்கள், "அடிகள், இதற்காக இறைவன் திருமுன்னர் சபதம் செய்தல் ஆகாது" என்றனர்.  "சபதம் எங்கே செய்து தருவது" என்றார்.  "மகிழின் கீழ்" என்றனர்.  நம்பியாரூரர் மருண்டார்.  வேறு வழியில்லை.  "அப்படியே செய்கிறேன்" என்றார். மூவாத திருமகிழை முக்காலும் வலம் வந்து, "நான் சங்கியிலைப் பிரியேன்" என்று சபதம் செய்து கொடுத்தார்.  அதைக் கண்ட சங்கிலியார் மனம் வருந்தினார்.  "சிவபெருமான் ஆணையால் பாவியேன் இக் காட்சியைக் காண நேர்ந்தது" என்று நைந்து ஒரு பக்கத்திலே மறைந்து வருந்தினார்.  நம்பியாரூரர் திருக்கோயிலுக்குச் சென்று இறைவனை வழிபட்டுச் சென்றார். சங்கிலியார் தமது திருத்தொண்டினைச் செய்து கன்னிமாடத்தில் இருந்தார்.

         அன்று இரவு சிவபெருமான் திருவொற்றியூரில் உள்ள தொண்டர்கள் கனவில் தோன்றி, நம்பியாரூரருக்குச் சங்கிலியாரைத் திருமணம் செய்து கொடுக்கும்படி கட்டளை இட்டார்.  தொண்டர்கள் அச் சிவப்பணியை அடுத்த நாளே நிறைவேற்றினார்கள்.  தம்பிரான் தோழர் சங்கிலியாரோடு திருவொற்றியூரிலே இன்பம் நுகர்ந்து வந்தார்.

         வசந்த காலம் வந்தது.  தென்றல் காற்றானது நம்பியாரூரருக்குத் திருவாரூர் வசந்த விழாவினை நினைவூட்டியது.  "எத்தனை நாள் பிரிந்து இருக்கேன், என் ஆரூர் இறைவனையே" என்று மனமுருகப் பாடினார்.  நாளுக்கு நாள் திருவாரூர் வேட்கை முடுகி எழ, ஒருநாள் திருக்கோயிலுக்குப் போய்த் தொழுது, திருவொற்றியூரை விட்டு நீங்கினதும், அவருடைய இரு விழிகளும் மறைந்தன.  நம்பியாரூரர் மூர்ச்சித்தார், திகைத்தார், பெருமூச்சு விட்டார்.  சபதம் தவறியமையால் இது நேர்ந்தது என்று எண்ணி, பெருமானையே பாடி இத் துன்பத்தைப் போக்கிக் கொள்வேன் என்று உறுதி கொண்டு, "அழுக்கு மெய்கொடு உன் திருவடி அடைந்தேன்" என்னும் திருப்பதிகத்தை அருளினார். சிலர் வழிகாட்டத் திருமுல்லைவாயிலுக்கு எழுந்தருளினார்

         நம்பியாரூரர் சங்கிலியார் திருமணம் நிகழ்ந்த மகிழமரம் வடக்கு வெளிப் பிரகாரத்தில் உள்ளது. இந்த சபத நிகழ்ச்சி இன்றும் மாசிப் பெருவிழாவின் போது "மகிழடி சேவை" விழாவாக நடைபெறுகிறது. 

         தல விருட்சம் அத்தி மரம். மகிழ மரமும் சுந்தரர் திருமணத்தால் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

         வெள்ளிக்கிழமைகளில் காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரையிலும், பெளர்ணமி நாட்களில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், மற்ற நாட்களில் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

கலிய நாயனாரின் அவதாரத் தலம்.

         அவதாரத் தலம்   : திருவொற்றியூர்.
         வழிபாடு          : இலிங்க வழிபாடு.
         முத்தித் தலம்     : திருவொற்றியூர்.
         குருபூசை நாள்    : ஆடி - கேட்டை.

         தொண்டை நாட்டில் திருவொற்றியூரிலே செக்குத் தொழிலை உடைய வணிகர் மரபிலே தோன்றியவர் கலிய நாயனார். செல்வமுடைய இவர் சிவபெருமானுக்கு உரிமைத் தொண்டில் ஈடுபட்டுத் திருவெற்றியூர்த் திருக்கோயிலில் உள்ளும் புறமும் திருவிளக்கிடும் திருத்தொண்டினைச் செய்து வந்தார். இவரது உண்மைத் தொண்டின் பெருமையை புலப்படுத்தத் திருவுள்ளம் கொண்ட சிவபெருமான் திருவருளால் இவரது செல்வம் அனைத்தும் இவரைப் பிணித்த இருவினைப் போல் குறைய, வறுமை நிலை உண்டாயிற்று. அந்நிலையில் தமது மரபில் உள்ளார் தரும் எண்ணெயை வாங்கி விற்று அதனால் கிடைத்த பொருளால் தாம் செய்யும் திருவிளக்குப் பணியை இடைவிடாது செய்தார். பின்னர் எண்ணெய் தருவார் கொடாமையால், கூலிக்குச் செக்காடி, அக்கூலி கொண்டு விளக்கு எரித்தார். வேலையாட்கள் பெருகித் தம்மைக் கூலிக்கு அமர்த்திக் கொள்வார் இல்லாமையால், வீடு முதலிய பொருட்களை விற்று, விளக்கெரித்தார். முடிவில் தம் மனைவியாரை விற்பதற்கு நகர் எங்கும் விலைகூறி வாங்குவார் இல்லாமையால் மனம் தளர்ந்தார். திருவிளக்கேற்றும் வேளையில் ஒற்றியூர்த் திருக்கோயிலை அடைந்து “திருவிளக்குப் பணி தடைப்படின் இறந்துவிடுவேன்” எனத்துணிந்து எண்ணெய்க்கு ஈடாக தமது உதிரத்தையே நிறைத்தற்குக் கருவி கொண்டு தமது கழுத்தை அரிந்தார். அப்பொழுது ஒற்றியூர்ப் பெருமானது அருட்கரம், நாயனாரது அரியும் கையைத் தடுத்து நிறுத்தியது. அருட்கடலாகிய சிவபெருமான் விடைமீது தோன்றியருள, உடம்பின் ஊறு (காயம்) நீங்கித் தலைமேற் கைகுவித்து வணங்கி நின்றார். சிவபெருமான் அவரைப் பொற்புடைய சிவபுரியில் பொலித்திருக்க அருள் புரிந்தார்.

         முற்றத்துறந்த பட்டினத்து அடிகள் முத்தி பெற்றத் தலம்; வடலூர் வள்ளற்பெருமானின் வாழ்வொடு இயைந்த பதி.

         தட்சிணாமூர்த்தி சந்நிதிக்கு பக்கத்தில் ஆதிசங்கரர் உருவமும்; அடுத்துள்ள வேப்பமர நிழலில் பெரிய லிங்கம் ஆவுடையாரின்றி உள்ளது.

     வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "தேர்ந்து உலகர் போற்றும் திருவொற்றிப் பூங்கோயிற்குள் பெரியோர் சாற்றும் புகழ் வேத சரமே" என்று போற்றி உள்ளார்.


திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 1030
திருவேற்காடு அமர்ந்தசெழுஞ் சுடர்பொற் கோயில்
         சென்றுஅணைந்து, பணிந்து,திருப் பதிகம்பாடி,
வருவேற்று மனத்துஅவுணர் புரங்கள் செற்றார்
         வலிதாயம் வந்துஎய்து, வணங்கிப் போற்றி,
உருஏற்றார் அமர்ந்து உறையும் ஓத வேலை
         ஒற்றியூர் கைதொழச்சென்று உற்றபோது,
பொருவேட்கை தருவாழ்வு பெற்ற தொண்டர்
         பெரும்பதியோர் எதிர்கொள்ளப் பேணி வந்தார்.

         பொழிப்புரை : ஞானசம்பந்தர் திருவேற்காட்டில் விரும்பி வீற்றிருக்கும் செழுஞ்சுடரான இறைவரின் அழகான கோயிலில் சென்று சேர்ந்து, வணங்கித் திருப்பதிகம் பாடியருளி, செந்நெறிகளை எதிர்த்துவரும் வேறுபட்ட உள்ளமுடைய பகைவரான அவுணரின் முப்புரங்களையும் எரித்த இறைவரின் `திருவலிதாயத்தில்\' வந்து போற்றி, அழகான விடையூர்தியையுடைய இறைவர் விரும்பி வீற்றிருக்கும் குளிர்ந்த கடற்கரையில் உள்ள திருவொற்றியூரை வணங்குவதற்குச் சென்ற போது, பெருவிருப்பம் கொண்டு வாழ்வு பெற்ற தொண்டர்களும் அப்பதியில் உள்ளவர்களும் அவரை எதிர்கொண்டு வரவேற்க அன்புடன் வந்தனர்.


பெ. பு. பாடல் எண் : 1031
மிக்கதிருத் தொண்டர்தொழுது அணையத் தாமும்
         தொழுதுஇழிந்து, "விடையவன்"என்று எடுத்துப் பாடி,
மைக்குலவு கண்டத்தார் மகிழும் கோயில்
         மன்னுதிருக் கோபுரத்து வந்து தாழ்ந்து,
தக்கதிருக் கடைக்காப்புச் சாற்றி, தேவர்
         தம்பெருமான் திருவாயில் ஊடு சென்று
புக்குஅருளி வலங்கொண்டு, புனிதர் முன்பு
         போற்றெடுத்துப் படியின்மேல் பொருந்த வீழ்ந்தார்.

         பொழிப்புரை : பெருகிய திருத்தொண்டர்கள் தொழுத வண்ணம் வந்து சேர, பிள்ளையார் தாமும் அவர்களை வணங்கிய வண்ணம் முத்துச் சிவிகையினின்றும் இழிந்து, `விடையவன்\' என்ற தொடக்கம் உடைய பதிகத்தை எடுத்துப் பாடி, கருமை பொருந்திய திருக்கழுத்தையுடைய சிவபெருமான் வீற்றிருக்கும் திருக்கோயிலின் முன்னுள்ள கோபுரத்தருகில் வந்து, நிலத்தில் விழுந்து வணங்கிப் பொருந்திய திருக்கடைக்காப்பினையும் பாடி, இறைவரின் கோயில் வாயிலின் வழியே உள்ளே புகுந்து, வலம் வந்து, தூயவரான இறைவர் திருமுன்பு போற்றி நிலம் பொருந்த வீழ்ந்து வணங்கினார்.

         குறிப்புரை : `விடையவன்' என்று தொடங்கும் பதிகம் பஞ்சமப் பண்ணிலமைந்ததாகும் (தி.3 ப.57). தொண்டர்கள் எதிர்கொள்ளத் தொடங்கிய இத்திருப்பதிகம், திருவீதி கடந்து, திருகோயிலின் முன் திருக்கடைக்காப்பு அமைய நிறைவுற்றுள்ளது. பாடல் தொறும் `உறையும் இடம் ஒற்றியூரே' என நிறைவு பெறுவதும், திருக்கடைக்காப்பில் `ஒற்றியூரைச் சொன்ன' என அமையப் பெற்றிருப்பதும் இப்பதிகம் அருளப் பெற்ற இடவகைமையை அறிவதற்கு அரணாகின்றன.


பெ. பு. பாடல் எண் : 1032
பொன்திரள்கள் போல்புரிந்த சடையார் தம்பால்
         பொங்கிஎழுங் காதல்மிகப் பொழிந்து விம்மி,
பற்றிஎழும் மயிர்ப்புளகம் எங்கும் ஆகி,
         பரந்துஇழியும் கண்அருவி பாய நின்று,
சொல்திகழும் திருப்பதிகம் பாடி ஏத்தி,
         தொழுது,புறத்து அணைந்து அருளி, தொண்ட ரொடும்
ஒற்றிநகர் காதலித்து அங்கு இனிது உறைந்தார்,
         உலகுஉய்ய உலவாத ஞானம் உண்டார்.

         பொழிப்புரை : பொன்னின் திரள் என முறுக்கிய சடையை உடைய இறைவர்பால் பெருகி எழுகின்ற பெருவிருப்பம் மிகவும் மேலோங்க விம்மித் திருமேனியைப் பற்றி, மேல் எழுகின்ற மயிர்க்கூச்சு மேனி எங்கும் நிரம்பப் பரவி, வழியும் கண்ணீர்ப் பெருக்குப் பாய்ந்தொழுக நின்று, சொற்பொருள் மிகவும் விளங்கும் திருப்பதிகத்தைப் பாடி, உலகம் உய்யும் பொருட்டுக் கெடுதல் இல்லாத சிவஞான அமுதுண்ட சம்பந்தர், திருவொற்றியூரில் விரும்பி அங்குத் தங்கியிருந்தார்.


திருஞானசம்பந்தர் திருப்பதிகம்

3. 057     திருவொற்றியூர்             பண் - பஞ்சமம்
                                    திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
விடையவன், விண்ணுமண்ணும் தொழ நின்றவன், வெண்மழுவாள்
படையவன், பாய்புலித்தோல் உடை கோவணம், பல்கரந்தைச்
சடையவன், சாமவேதன், சசி தங்கிய சங்கவெண்தோடு
உடையவன், ஊனம்இல்லி, உறையும் இடம் ஒற்றியூரே.

         பொழிப்புரை :சிவபெருமான் இடபவாகனத்தை உடையவன். விண்ணுளோரும் , இம்மண்ணுலக மாந்தரும் தொழுது போற்ற விளங்குபவன் . கறைபடியாத மழுப்படை உடையவன் . பாயும் புலித்தோலுடையும் , கோவணமும் உடையவன் . பலவிதமான மலர்களைச் சடையில் அணிந்தவன் . சாமகானப் பிரியன் . சந்திரனைச் சடையில் தாங்கி, சங்கினால் ஆகிய வெண்மையான தோடு என்னும் காதணி அணிந்தவன் . குறைவில்லாத அப்பெருமான் தன்னை வழிபடும் அடியவர்களின் ஊனமாகக் கருதப்படும் குற்றம் குறைகளைக் களைந்து வீற்றிருந்தருளும் இடம் திருவொற்றியூர் என்னும் திருத்தலம் ஆகும் .


பாடல் எண் : 2
பாரிடம் பாணிசெய்யப் பறைக் கண்செறு பல்கணப்பேய்
சீரொடும் பாடல்ஆடல் இலயம் சிதை யாதகொள்கைத்
தார்இடும் போர்விடையன் தலைவன்,தலை யேகலனா
ஊர்இடும் பிச்சைகொள்வான் உறையும் இடம் ஒற்றியூரே.

         பொழிப்புரை : பூதகணங்கள் பண்ணிசைத்துப் பாட , பறைகள் கொட்ட , கண்டாரைக் கொல்லவல்ல பல்வேறு பேய்க்கணங்கள் தாளத்தோடு இலயம் கெடாதவாறு பாடி ஆடத் திருநடனம் புரிபவன் . கிண்கிணிமாலை அணிந்த போர்செய்யும் தன்மையுடைய இடபவாகனத்தில் வீற்றிருந்தருளும் தலைவன் . பிரமகபாலத்தை உண்கலனாகக் கொண்டு ஊர்தோறும் திரிந்து பிச்சை ஏற்பவன் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது திருவொற்றியூர் என்னும் திருத்தலம் ஆகும் .


பாடல் எண் : 3
விளிதரு நீருமண்ணும், விசும் போடுஅனல் காலும்ஆகி
அளிதரு பேரருளான், அரன் ஆகிய ஆதிமூர்த்தி
களிதரு வண்டு பண்செய் கமழ் கொன்றையி னோடுஅணிந்த
ஒளிதரு வெண்பிறையான் உறையும் இடம் ஒற்றியூரே.

         பொழிப்புரை : ஓசையுடன் பாயும் நீர் , நிலம் , ஆகாயம் , நெருப்பு , காற்றுமாகி , மன்னுயிர்களைக் காக்கும் பெருங்கருணையாளன் ஆகிய சங்கார கர்த்தாவாகிய சிவபெருமானே உலகத்தோற்றத்திற்கும் நிமித்த காரணனாவான் . மலர்களிலுள்ள தேனைப்பருகிய மகிழ்ச்சியில் வண்டுகள் பண்ணிசைக்கும் நறுமணம் கமழும் கொன்றை மாலையோடு ஒளிரும் வெண்பிறைச் சந்திரனையும் சடையில் அணிந்த அச் சிவபெருமான் வீற்றிருந்தருளுவது திருவொற்றியூர் என்னும் திருத்தலமாகும் .


பாடல் எண் : 4
அரவமே கச்சதாக அசைத்தான்,அலர் கொன்றை அம்தார்
விரவிவெண் ணூல்கிடந்த விரை யார்வரை மார்பன்,எந்தை
பரவுவார் பாவம்எல்லாம் பறைத்து, படர் புன்சடைமேல்
உரவுநீர் ஏற்றபெம்மான் உறையும் இடம் ஒற்றியூரே.

         பொழிப்புரை : சிவபெருமான் இடையிலே பாம்பைக் கச்சாக அணிந்தவர் . கொன்றை மலர்மாலை அணிந்தவர் . வெண்ணிற முப்புரி நூலணிந்து கலவைச் சாந்தணிந்த மலைபோன்ற மார்பை உடையவர் . எம் தந்தையான அச் சிவபெருமான் தம்மை வணங்குவாரின் பாவத்தைப் போக்கிப் படர்ந்த சடையின் மேல் கங்கையைத் தாங்கியவர் . அவர் வீற்றிருந்தருளும் இடம் திருவொற்றியூர் என்னும் திருத்தலம் ஆகும் .


பாடல் எண் : 5
விலகினார் வெய்ய பாவம் விதி யால்அருள் செய்து, நல்ல
பலகினார் மொந்தைதாளம் தகுணிச்சமும் பாணியாலே
அலகினால் வீசி,நீர்கொண்டு அடிமேல் அலர் இட்டுமுட்டாது
உலகினார் ஏத்தநின்றான் உறையும் இடம் ஒற்றியூரே.

         பொழிப்புரை : கொடிய பாவத்திலிருந்து விடுபட்ட பக்குவ ஆன்மாக்கட்கு , விதிப்படி அருள்செய்து , சிவபெருமான் நல்ல பல வகையான வாத்தியங்களான மொந்தை , தாளம் , தகுணிச்சம் என்னும் ஒருவகை தோற்கருவி முதலியன ஒலிக்கப் பாட்டோடும் , தாளத் தோடும் எண்தோள் வீசி நின்று ஆட , உலகத்தோர் அவன் திருவடியில் மலர்களைத் தூவி , தங்கள் வழிபாடு தடைப்படா வண்ணம் துதித்து வணங்க அவன் வீற்றிருந்தருளும் இடம் திருவொற்றியூர் என்னும் திருத்தலமாகும் .


பாடல் எண் : 6
கமையொடு நின்றசீரான், கழ லுஞ்சிலம் பும்ஒலிப்பச்
சுமையொடு மேலும்வைத்தான், விரி கொன்றையும் சோமனையும்,
அமையொடு நீண்டதிண்தோள் அழகாயபொன் தோடுஇலங்க
உமையொடும் கூடிநின்றான் உறையும் இடம் ஒற்றியூரே.

         பொழிப்புரை : பொறுமையுடன் விளங்கும் தலைவனான சிவபெருமான் , தன் திருவடிகளிலுள்ள கழலும் , சிலம்பும் ஒலிக்கச் சடைமுடியில் மலர்ந்த கொன்றையையும் , சந்திரனையும் தாங்கிய , நீண்ட வலிமையான தோளழகு உடையவன் . காதில் பொன்னாலாகிய தோடு பிரகாசிக்க உமாதேவியோடு சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது திருவொற்றியூர் என்னும் திருத்தலம் ஆகும் .


பாடல் எண் : 7
நன்றியால் வாழ்வதுஉள்ளம், உலகுக்கு ஒரு நன்மையாலே
கன்றினார் மும்மதிலும் கரு மால்வரை யேசிலையாப்
பொன்றினார், வார் சுடலைப் பொடி நீறுஅணிந்து, ஆர்அழல்அம்பு
ஒன்றினால் எய்தபெம்மான் உறையும் இடம் ஒற்றியூரே.

         பொழிப்புரை : உள்ளத்தில் பிறருக்கு உபகாரமாய் வாழவேண்டும் என்பதை உலகிற்கு உணர்த்தச் சிவபெருமான் , உலகத்தார்க்கு தீமை செய்த அசுரர்கள் வாழும் முப்புரங்களையும், பெருமை வாய்ந்த மேருமலையை வில்லாகக் கொண்டு அக்கினிக்கணை ஒன்றை எய்து அழித்தவர். நெடிய சுடலைப்பொடியாகிய நீற்றினை அணிந்தவர். அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவொற்றியூர் என்னும் திருத்தலமாகும் .


பாடல் எண் : 8
பெற்றியால் பித்தன்ஒப்பான், பெரு மான்கரு மான்உரிதோல்
சுற்றியான், சுத்திசூலம் சுடர்க் கண்ணுதல் மேல்விளங்கத்
தெற்றியால் செற்றஅரக்கன் உட லைச்செழு மால்வரைக்கீழ்
ஒற்றியான் முற்றும்ஆள்வான் உறையும் இடம் ஒற்றியூரே.

         பொழிப்புரை : பித்தனைப் போன்று விளங்கும் சிவபெருமான் , செய்கையால் அறிவில் பெரியவனாவான் . கலைமானின் தோலைச் சுற்றி உடுத்தவன் . சுத்தி , சூலம் என்பன ஏந்தியவன் . நெற்றிக்கண் உடையவன் . கோபமுடைய அரக்கனான இராவணன் கயிலை மலையைப் பெயர்த்து எடுக்க , அவன் அம்மலையின்கீழ் நெரியுமாறு தன் காற்பெருவிரலை அழுத்தியவன் . உலகம் முழுவதையும் ஆட் கொண்டருளும் அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது திருவொற்றியூர் என்னும் திருத்தலமாகும் .


பாடல் எண் : 9
திருவின்ஆர் போதினானும், திரு மாலுமொர் தெய்வம்உன்னித்
தெரிவினால் காணமாட்டார், திகழ் சேவடி சிந்தைசெய்து
பரவினார் பாவம்எல்லாம் பறையப்படர் பேரொளியோடு
ஒருவனாய் நின்றபெம்மான் உறையும் இடம் ஒற்றியூரே.

         பொழிப்புரை : இலக்குமி எழுந்தருளிய தாமரை மலரில் வீற்றிருந்தருளும் பிரமனும், திருமாலும் ஒப்பற்ற தெய்வத்தைக் காணவேண்டும் என நினைத்துத் தம் அறிவால் தேடிக் காணமாட்டாதவர் ஆயினர் . சிவபெருமானின் சிவந்த திருவடிகளை மனத்தால் சிந்தித்து வழிபடுபவர்களின் பாவம் எல்லாம் அழியப் படர்ந்த பேரொளியோடு ஒப்பற்றவனாயிருந்த அச் சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவொற்றியூர் என்னும் திருத்தலம் ஆகும் .


பாடல் எண் : 10
தோகைஅம் பீலிகொள்வார், துவர்க் கூறைகள் போர்த்துஉழல்வார்,
ஆகமச் செல்வனாரை அலர் தூற்றுதல் காரணமாக்
கூகைஅம் மாக்கள்சொல்லைக் குறிக் கொள்ளன்மின், ஏழுலகும்
ஓகைதந்து ஆளவல்லான் உறையும் இடம் ஒற்றியூரே.

         பொழிப்புரை : நடந்து செல்லும்போது எறும்பு முதலிய சிறு பூச்சிகள் மிதிபட்டு இறந்துவிடாதிருக்க மயில்தோகை ஏந்திப் பெருக்கிச் செல்லும் சமணர்களும் , துவர் ஆடையைப் போர்த்திய புத்தர்களும் , ஆகமம் அருளிய , ஆகம நெறியில் பூசிக்கப்படும் செல்வரான சிவபெருமானைப் பழித்துக் கூறுவதால் , கோட்டான் போன்று ஐயறிவுடைய விலங்குகட்கு ஒப்பாவாராதலால் அவர்கள் கூறும் சொற்களைப் பொருளெனக் கொள்ள வேண்டா . ஏழுலகும் மகிழுமாறு ஆட்கொள்ள வல்ல சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவொற்றியூர் என்னும் திருத்தலமாகும் .


பாடல் எண் : 11
ஒண்பிறை மல்குசென்னி இறைவன் உறை ஒற்றியூரைச்
சண்பையர் தம்தலைவன் தமிழ் ஞானசம் பந்தன்சொன்ன
பண்புனை பாடல்பத்தும் பரவிப் பணிந்து ஏத்தவல்லார்
விண்புனை மேல்உலகம் விருப்பு எய்துவர், வீடுஎளிதே.

         பொழிப்புரை : ஒளிரும் பிறைச்சந்திரனைத் தலையில் சூடிய இறைவனான சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருவொற்றியூரை , சண்பை என்று கூறப்படும் சீகாழியில் சிவம் பெருக்க அவதரித்த தலைவனான தமிழ் ஞானசம்பந்தன் அருளிய பண்ணோடு கூடிய இப்பாடல்கள் . பத்தையும் ஓதி வழிபட வல்லவர்கள் விண்ணிலுள்ள சுவர்க்கலோகத்தை அடைந்து வீடுபேற்றை எளிதில் அடைவர் .

                                             திருச்சிற்றம்பலம்

----------------------------------------------------------------------------------------------------------


திருநாவுக்கரசர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 332
வரைவளர்மா மயில்என்ன மாடமிசை மஞ்சுஆடும்
தரைவளர்சீர்த் திருமயிலைச் சங்கரனார் தாள்வணங்கி,
உரைவளர்மா லைகள்அணிவித்து, உழவாரப் படையாளி,
திரைவளர்வே லைக்கரைபோய்த் திருஒற்றி யூர்சேர்ந்தார்.

         பொழிப்புரை : மலைமீது வளரும் பெரிய மயிலைப் போல மாடங்களின் மீது மேகம் தவழ்கின்ற, உலகில் வளரும் சிறப்பை உடைய திருமயிலாப்பூரில் வீற்றிருக்கின்ற பெருமானின் திருவடிகளை வணங்கி, உரை பெருகும் தமிழ் மாலைகளைச் சாத்தி, உழவாரப் படையையுடைய நாவரசர், அலைகள் தவழ்கின்ற கடற்கரை வழியே சென்று திருவொற்றியூரை அடைந்தார்.

         குறிப்புரை : மயிலாப்பூரில் `உரைவளர் மாலைகள் அணிவித்து` என்பதற்கேற்பப் பல பதிகங்களை நாவரசர் அருளியிருத்தல் வேண்டும். எனினும் இதுபொழுது எவையும் கிடைத்தில.


பெ. பு. பாடல் எண் : 333
ஒற்றியூர் வளநகரத்து ஒளிமணிவீ திகள்விளக்கி,
நல்கொடிமா லைகள்பூகம் நறுங்கதலி நிரைநாட்டி,
பொன்குடங்கள் தூபங்கள் தீபங்கள் பொலிவித்து,
மற்றுஅவரை எதிர்கொண்டு கொடுபுக்கார் வழித்தொண்டர்.

         பொழிப்புரை : வளமை வாய்ந்த திருவொற்றியூர் நகரின் ஒளிபொருந்திய அழகிய வீதிகளை விளக்கி, நல்ல கொடிகளையும், மாலைகளையும், பாக்கும் வாழைகளுமான இவற்றையும் நிரல்பட நாட்டி, பொன்னால் ஆன நிறைகுடங்களையும், நறுமணப் புகை களையும், விளக்குகளையும் அழகுற அமைத்துத் தொண்டர்கள் நாவுக்கரசரை வரவேற்று நகரினுள்ளே அழைத்துச் சென்றனர்.


பெ. பு. பாடல் எண் : 334
திருநாவுக் கரசரும்அத் திருவொற்றி யூர்அமர்ந்த
பெருநாகத் திண்சிலையார் கோபுரத்தை இறைஞ்சிப்புக்கு,
ஒருஞானத் தொண்டருடன் உருகிவலம் கொண்டு, அடியார்
கருநாமம் தவிர்ப்பாரைக் கைதொழுது முன்வீழ்ந்தார்.

         பொழிப்புரை : திருநாவுக்கரசரும் அந்தத் திருவொற்றியூரில் அமர்ந்தருளும் பெரிய மலையாகிய வலியவில்லை உடைய பெருமானின் கோபுரத்தை வணங்கி, உள்ளே புகுந்து, ஒருமையுணர்வாய ஞானத்தையுடைய அத்தொண்டர்களுடன், உள்ளம் உருகி, வலம் வந்து, அடியவரின் பிறவிப் பிணிப்பைத் தவிர்க்கும் பெருமானைக் கைதொழுது திருமுன்பு விழுந்து வணங்கியவர்.


பெ. பு. பாடல் எண் : 335
எழுதாத மறைஅளித்த எழுத்துஅறியும் பெருமானைத்
தொழுது, ஆர்வம் உறநிலத்தில் தோய்ந்து, எழுந்தே,  அங்கம் எலாம்
முழுதுஆய பரவசத்தின் முகிழ்த்தமயிர்க் கால்மூழ்க,
விழுதாரை கண்பொழிய, விதிர்ப்புஉற்று விம்மினார்.

         பொழிப்புரை : எழுதாத மறைகளை வழங்கியருளிய எழுத்தறியும் பெருமானைத் தொழுது, அன்புமிகப் பெற்று, நிலம் தோய வணங்கி, எழுந்து உடல் முழுதும் மயிர்க் கூச்செறியத் திளைத்துக் கண்கள் தாரையாய் நீரைப் பொழிய, உடல் விதிர்த்து விம்மியவராய்.


பாடல் எண் : 336
"வண்டுஓங்கு செங்கமலம்" எனஎடுத்து மனம்உருகப்
பண்தோய்ந்த சொல்திருத்தாண் டகம்பாடிப் பரவுவார்,
விண்தோய்ந்த புனல்கங்கை வேணியார் திருவுருவம்
கண்டு,ஓங்கு களிசிறப்பக் கைதொழுது, புறத்துஅணைந்தார்.

         பொழிப்புரை : `வண்டோங்கு செங்கமலம்`(தி.6 ப.45) எனத் தொடங்கி, உள்ளுருகப் பண் பொருந்திய சொற்களான திருத்தாண் டகப் பதிகத்தைப் பாடிப் போற்றுபவர், வானிலுள்ள கங்கையைச் சடையில் வைத்த இறைவரின் திருவடிவைக் கண்டு, பெருகிய இன்பம் மிகக் கைதொழுது கோயிலின் புறத்தை அடைபவராய்.

         குறிப்புரை : `வண்டோங்கு செங்கமலம்` (தி.6 ப.45) எனத் தொடங்கும் இத்திருப்பதிகம் இறைவன் திருமுன்னிலையில் அருளியதாகும்.

திருநாவுக்கரசர் திருப்பதிகம்

                                    6. 045    திருவொற்றியூர்
                                        திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
வண்டுஓங்கு செங்கமலம் கழுநீர் மல்கும்
         மதமத்தம் சேர்சடைமேல் மதியம் சூடி,
திண்தோள்கள் ஆயிரமும் வீசி நின்று,
         திசைசேர நடமாடிச் சிவலோ கனார்
உண்டார்நஞ்சு உலகுக்கு ஓர்உறுதி வேண்டி,
         ஒற்றியூர் மேய ஒளிவண் ணனார்,
கண்டேன்நான் கனவகத்தில் கண்டேற்கு, என்தன்
         கடும்பிணியும் சுடுந்தொழிலும் கைவிட் டவே.

         பொழிப்புரை :சிவலோகநாதராய ஒற்றியூரில் விரும்பி உறையும் சோதிவடிவினர், வண்டுகள் மொய்க்கும் செந்தாமரை, கழுநீர், ஊமத்தை இவற்றை அணிந்த சடை மீது பிறை சூடி, ஆயிரம் தோள்களையும் எட்டுத் திசைகளின் எல்லைகளையும் அவை அடையுமாறு வீசிக்கொண்டு, கூத்தாடி, உலகுக்கு நலன் பயப்பதற்காக விடத்தை உண்டவர். அவரை அடியேன் கனவில் கண்டேனாக, அவ்வளவில் என் கடிய நோயும் அவை செய்த செயல்களும் நீங்கி விட்டன .


பாடல் எண் : 2
ஆகத்துஓர் பாம்புஅசைத்து, வெள்ஏறு ஏறி,
         அணிகங்கை செஞ்சடைமேல் ஆர்க்கச் சூடி,
பாகத்துஓர் பெண்உடையார், ஆணும் ஆவர்,
         பசுஏறி உழிதரும்எம் பரம யோகி,
காமத்தால் ஐங்கணையான் தன்னை வீழக்
         கனலா எரிவிழித்த கண்மூன் றினார்,
ஓமத்தால் நான்மறைகள் ஓதல் ஓவா
         ஒளிதிகழும் ஒற்றியூர் உறைகின் றாரே.

         பொழிப்புரை :மார்பில் பாம்பு சூடி , வெண்ணிறக் காளையை இவர்ந்து, கங்கையைச் சடையில் ஆரவாரிக்குமாறு சூடிப் பார்வதி பாகராய், ஆண்மைத் தொழிலராய், அக்காளையை இவர்ந்தே உலகங்களைச் சுற்றி உலவும் மேம்பட்ட யோகியாய், காமவேட்கையில் பழகுகின்ற ஐந்து மலரம்புகளை உடைய மன்மதன் சாம்பலாகி விழுமாறு வெகுண்டு மூன்றாம் கண்ணைத் தீப் புறப்பட விழித்த பெருமான், வேள்விகளோடு நான்கு வேதம் ஓதுதலும் நீங்காத ஞான ஒளி விளங்கும் ஒற்றியூரில் உகந்தருளியிருக்கின்றார் .


பாடல் எண் : 3
வெள்ளத்தைச் செஞ்சடைமேல் விரும்பி வைத்தீர்,
         வெண்மதியும் பாம்பும் உடனே வைத்தீர்,
கள்ளத்தை மனத்தகத்தே கரந்து வைத்தீர்,
         கண்டார்க்குப் பொல்லாது கண்டீர், எல்லே
கொள்ளத்தான் இசைபாடிப் பலியும் கொள்ளீர்,
         கோள்அரவுங் குளிர்மதியும் கொடியும் காட்டி
உள்ளத்தை நீர்கொண்டீர், ஓதல் ஓவா
         ஒளிதிகழும் ஒற்றியூர் உடைய கோவே.

         பொழிப்புரை :வேதம் ஓதுதல் நீங்காத ஞான ஒளி திகழும் ஒற்றியூரை உடைய தலைவரே , நீர் விரும்பிக் கங்கையைச் சடையில் சூடி , அதன்கண் பிறையையும் பாம்பையும் உடன் வைத்து, காதல் உணர்வாகிய வஞ்சனையை மனத்தில் மறைத்து வைத்திருப்பது காண்பவர்களுக்குப் பெரியதொரு தீங்காய்த் தோன்றுவதாகும். பகற்பொழுதில் பிச்சை வாங்கவருபவரைப் போல இசையைப் பாடிக் கொண்டு வந்து, பிச்சையையும் ஏலாது, உம்முடைய பாம்பு , பிறை , காளை எழுதிய கொடி இவற்றைக் காணச் செய்து , எம் உள்ளத்தைக் கொள்ளை கொண்டு விட்டீர் . இதனைச் சற்று நினைத்துப் பார்ப்பீராக .


பாடல் எண் : 4
நரைஆர்ந்த விடைஏறி, நீறு பூசி,
         நாகங்கச்சு அரைக்குஆர்த்து, ஓர் தலைகை ஏந்தி,
உரையாவந்து இல்புகுந்து பலிதான் வேண்ட,
         "எம்அடிகள் உம்ஊர்தான் ஏதோ" என்ன,
"விரையாதே கேட்டியேல், வேல்கண் நல்லாய்,
         விடும்கலங்கள் நெடுங்கடலுள்நின்றுதோன்றும்
திரைமோதக் கரைஏறிச் சங்கம் ஊரும்
         திருவொற்றியூர்" என்றார் தீய வாறே.

         பொழிப்புரை :வெள்ளை நிறக் காளையை இவர்ந்து, நீறுபூசி, இடுப்பில் பாம்பைக் கச்சாக உடுத்தி , மண்டைஓட்டைக் கையில் ஏந்தி, ஏதும் பேசாது, எம் இல்லத்தினுள் வந்து பிச்சை வேண்ட , ` எம் வணக்கத்திற்கு உரியவரே ! உம் ஊர் யாது ?` என்று யான் வினவ ` வேல் போன்ற கண்களை உடைய பெண்ணே ! அவசரப்படாமல் கேள். கடலில் மரக்கலங்கள் காணப்படுவதும் , திரைகள் தள்ளுவதனால் சங்குகள் கரையை அடைந்து தவழ்வதுமாகிய திருஒற்றியூர் ` என்றார் . ஒற்றியூரே ஒழியச் சொந்த ஊர் ஒன்று இல்லாமையால் அவரை எங்குச் சென்று மீண்டும் காணஇயலும்! என்ற எண்ணத்தால் அவருக்கு என ஒரு சொந்த ஊர் இல்லாதது என் தீவினையே என்றாள் .


பாடல் எண் : 5
மத்தமா களியானை உரிவை போர்த்து,
         வானகத்தார் தானகத்தார் ஆகி நின்று,
பித்தர்தாம் போல்அங்குஓர் பெருமை பேசி,
         பேதையரை அச்சுறுத்திப் பெயரக் கண்டு,
பத்தர்கள்தாம் பலருடனே கூடிப் பாடி,
         "பயின்றுஇருக்கும் ஊர்ஏதோ, பணீயீர்" என்ன
"ஒத்துஅமைந்த உத்திரநாள் தீர்த்த மாக
         ஒளிதிகழும் ஒற்றியூர்" என்கின் றாரே.

         பொழிப்புரை :மதயானைத் தோலைப் போர்த்தித் தேவருலகில் இருக்க வேண்டிய அவர் , எம் வீட்டிற்குள் வந்து பைத்தியம் பிடித்தவரைப் போலத் தாமே தம் பெருமையைப் பேசிக்கொண்டு , பெண்களைப் பயமுறுத்திவிட்டு வெளியே வரக் கண்டு, பத்தர்கள் பலரும் அவரை அணுகி ` நீங்கள் பாடிக்கொண்டே தங்கியிருக்கும் ஊர் யாது ?` என்று வினவப் பங்குனி உத்திரத்தில் தீர்த்தவிழாக் கொண்டாடும் ஒளி திகழும் ஒற்றியூர் என்றார்


பாடல் எண் : 6
கடிய விடைஏறிக் காள கண்டர்
         கலையோடு மழுவாள்ஓர் கையில் ஏந்தி,
இடிய பலிகொள்ளார், போவார் அல்லர்,
         எல்லாந்தான் "இவ்வடிகள் யார்"என் பாரே,
வடிவுடைய மங்கையும் தாமும் எல்லாம்
         வருவாரை எதிர்கண்டோம், மயிலாப் புள்ளே
செடிபடுவெண் தலையொன்று  ஏந்தி வந்து
         திருவொற்றி யூர்புக்கார் தீய வாறே.

         பொழிப்புரை :நீலகண்டர் கைகளில் மானையும் மழுவையும் ஏந்தி , விரைந்து செல்லும் காளையை இவர்ந்து , இடவந்த உணவையும் பிச்சையாகக் கொள்ளாராய் , இடத்தை விட்டு நீங்காதவராயும் உள்ள இப்பெரியவர் யார் என்று எல்லோரும் மருண்டனர் . முன்பு இவர் வடிவுடையமங்கையும் தாமுமாய் மயிலாப்பூரில் வந்த காட்சியைக் கண்டுள்ளோம் . பின் ஒரு நாள் புலால் நாற்றம் வீசும் மண்டை ஓட்டை ஏந்தி இங்கு உலவியவராய்த் திருவொற்றியூரில் புகுந்து விட்டார் . இவர் எவ்வூரார் என்பதனைக் கூட அறிய முடியாமல் இருப்பது நம் தீவினையாகும் .


பாடல் எண் : 7
வல்லாராய் வானவர்கள் எல்லாம் கூடி
         வணங்குவார், வாழ்த்துவார், வந்து நிற்பார்,
"எல்லே, எம் பெருமானைக் காணோம்" என்ன
         எவ்வாற்றால் எவ்வகையால் காண மாட்டார்,
நல்லார்கள் நான்மறையோர் கூடி நேடி,
         "நாம்இருக்கும் ஊர்பணியீர், அடிகேள்" என்ன,
"ஒல்லைதான் திரையேறி ஓதம் மீளும்
         ஒளிதிகழும் ஒற்றியூர்" என்கின் றாரே.

         பொழிப்புரை :தேவர்கள் எல்லோரும் கூடி வணங்கி வாழ்த்தி நிற்கும் பெருமான் எல்லாச் செயல்கள் செய்வதிலும் வல்லாராகவே , பகற் காலத்தில் எந்த வழியினாலும் எந்த வடிவினாலும் தேவர்கள் தம்மைக் காணமாட்டாதவராய் , இவ்வுலகில் எழுந்தருளப் பெண்களும் நான்மறைவல்லோர்களும் ஒன்று கூடி அவரைத் தேடிக் கண்டு `சான்றீரே ! தாங்கள் இருக்கும் ஊர் யாது` என்று வினவ, விரைவில் கடல் அலைகள் கரையில் மோதி மீளும் ஒற்றியூர் என்கின்றார் .


பாடல் எண் : 8
நிலைப்பாடே நான்கண்டது, ஏடீ, கேளாய்,
         நெருநலைநற் பகல் இங்குஓர் அடிகள் வந்து,
கலைப்பாடுங் கண்மலருங் கலக்க நோக்கி,
         கலந்து பலியிடுவேன், எங்கும் காணேன்,
சலப்பாடே இனிஒருநாள் காண்பேன் ஆகில்,
         தன்ஆகத்து என்ஆகம் ஒடுங்கும் வண்ணம்
உலைப்பாடே படத்தழுவிப் போகல் ஒட்டேன்
         ஒற்றியூர் உறைந்துஇங்கே திரிவானையே.

         பொழிப்புரை :தோழி ! நான் என் பண்டை நிலையை அடைவதற்கு முடிவு செய்த வழியைக் கூறுகின்றேன் கேளாய் . நேற்று நடுப்பகலில் இங்குப் பெரியவர் ஒருவர் வந்து என் உடையினது பெருமையும் கண்களும் அவர் உள்ளத்திலும் கண்களிலும் பொருந்துமாறு என்னைக் கூர்ந்து நோக்கி என்னை உள்ளத்தால் கலந்தாராக, அவருக்கு உணவு கொண்டு வரச்சென்ற நான் திரும்பி வர எங்கும் காணேனாய், வஞ்சனையாக மறைந்து விட்டார். இனி ஒருநாள் அவரைக் காண்பேனானால் அவர் மார்பிலே என் மார்பு அழுந்தும் வண்ணம் என் முலைச்சுவடு அவர் மார்பில் படும்படியாகத் தழுவிக்கொண்டு , ஒற்றியூரில் தங்கி இங்கு உலவும் அவரை , என்னை விடுத்து ஒற்றியூருக்குப் போக விடமாட்டேன் .


பாடல் எண் : 9
மண்அல்லை, விண்அல்லை, வலயம் அல்லை,
         மலைஅல்லை, கடல்அல்லை, வாயு அல்லை,
எண்அல்லை, எழுத்துஅல்லை, எரியும் அல்லை,
         இரவுஅல்லை, பகல்அல்லை, யாவும் அல்லை,
பெண்அல்லை, ஆண்அல்லை, பேடும் அல்லை,
         பிறிதுஅல்லை, ஆனாயும் பெரியாய், நீயே
உள் நல்லை நல்லார்க்குத் தீயை அல்லை,
         உணர்வுஅரிய ஒற்றியூர் உடைய கோவே.

         பொழிப்புரை :எங்கள் உள்ளத்தால் உணரமுடியாத ஒற்றியூர்த் தலைவனே . நீ - மண், விண், ஞாயிறு முதலிய மண்டலங்கள், மலை, கடல், காற்று, எரி, எண், எழுத்து, இரவு, பகல், பெண், ஆண், பேடு, முதலிய அல்லையாயும் இவற்றுள் கரந்து எங்கும் பரந்துள்ள பெரியையாயும் பெண்களுக்குத் தீமை செய்யாத நல்ல உள்ளத்தையாயும் உள்ளாய் .


பாடல் எண் : 10
மருவுஉற்ற மலர்க்குழலி மடவாள் அஞ்ச,
         மலைதுளங்க, திசைநடுங்க, செறுத்து நோக்கி,
செருவுற்ற வாள்அரக்கன் வலிதான் மாள,
         திருவடியின் விரல்ஒன்றால் அலற ஊன்றி,
உருஒற்றி அங்குஇருவர் ஓடிக் காண
         ஓங்கினஅவ் ஒள்அழலார், இங்கே வந்து,
"திருவொற்றி யூர்நம்ஊர்" என்று போனார்
         செறிவளைகள் ஒன்றுஒன்றாச் சென்ற வாறே.

         பொழிப்புரை :எம்பெருமான், தன்னைப் பொருந்திய மலர் சூடிய கூந்தலை உடைய பார்வதி அஞ்சுமாறு, இராவணன் செய்த செயலால் கயிலை மலை அசைய, எண்திசைகளும் நடுங்க, அவனை வெகுண்டு நோக்கி, அவன் பலம் முழுதும் அழியுமாறு திருவடிவிரல் ஒன்றினால் அவன் அலறுமாறு அழுத்தி, தன் உருவத்தைத் தேடிப் பிரமனும் திருமாலும் முயன்று காணுமாறு தீப்பிழம்பாய் உயர்ந்த பெருமானார் இங்கே ( என்னிடத்தில் ) வந்து தம்முடைய ஊர் திருவொற்றியூர் என்று கூறிச் சென்றார். அவர் நினைவால் என்னுடைய செறிந்த வளையல்கள் ஒன்று ஒன்றாய் கழன்று விட்டன.

                                             திருச்சிற்றம்பலம்

திருநாவுக்கரசர் திருப்பதிக வரலாறு


பெ. பு. பாடல் எண் : 337
விளங்குபெரும் திருமுன்றில் மேவுதிருப் பணிசெய்தே,
உளங்கொள்திரு விருத்தங்கள், ஓங்குதிருக் குறுந்தொகைகள்,
களங்கொள்திரு நேரிசைகள், பலபாடிக் கைதொழுது
வளங்கொள்திருப் பதிஅதனில் பலநாள்கள் வைகினார்.

         பொழிப்புரை : விளங்கும் பெருமையையுடைய திருமுற்றத்தில் பொருந்திய திருப்பணிகள் செய்து, உளங்கொண்ட திருவிருத்தங் களும், பொருட்பொதிவால் ஓங்கி நிற்கும் திருக்குறுந்தொகைகளும், மிடற்றை இடனாகக் கொண்டு பாடப்படும் திருநேரிசைகளும் ஆகிய பலவற்றையும் பாடிக், கைகளால் தொழுது, வளம் பொருந்திய அத் திருவொற்றியூரில் பல நாள்கள் தங்கியிருந்தார்.

         குறிப்புரை : திருவிருத்தங்கள், திருக்குறுந்தொகைகள், திருநேரிசைகள் பலபாடி என ஆசிரியர் பன்மைச் சொற்களால் குறித்திருப்பதால் ஒவ்வொரு யாப்பு அமைவிலும் பற்பல பதிகங்களை அருளியிருக்க வேண்டும் எனத் தெரிகிறது. எனினும் இதுபொழுது கிடைத்திருக்கும் பதிகங்கள் நான்கேயாம். அவை:

1. `வெள்ளத்தை` - (தி.4 ப.45) திருநேரிசை.
2. `ஓம்பினேன்` (தி.4 ப.46) - திருநேரிசை.
3. `செற்றுக் களிற்று` (தி.4 ப.86) - திருவிருத்தம்.
4. `ஒற்றியூரும்` (தி.5 ப.24) - திருக்குறுந்தொகை.


திருநாவுக்கரசர் திருப்பதிகங்கள்

4. 045   திருவொற்றியூர்                              திருநேரிசை
                                    திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
வெள்ளத்தைச் சடையில் வைத்த வேதகீ தன்தன் பாதம்
மெள்ளத்தான் அடைய வேண்டில், மெய்தரு ஞானத் தீயால்
கள்ளத்தைக் கழிய நின்றார் காயத்துக் கலந்து நின்று
உள்ளத்துள் ஒளியும் ஆகும் ஒற்றியூர் உடைய கோவே.

         பொழிப்புரை : கங்கையைச் சடையில் வைத்தவனாய் வேதம் பாடும் பெருமானுடைய பாதங்களை மெதுவாக வழுவின்றிப் பெற விரும்பினால் , மெய்ப்பொருளை வழங்கும் ஞானமாகிய தீயினால் கள்ளம் முதலிய குற்றங்களாகிய காட்டினை எரித்தொழித்துச் செப்பஞ் செய்த அடியவர்களுடைய உள்ளத்திலே ஒற்றியூர் உடைய பெருமான் சிவப்பிரகாசமாக விளங்குவான் .


பாடல் எண் : 2
வசிப்புஎனும் வாழ்க்கை வேண்டா, வானவர் இறைவன் நின்று
புசிப்பதுஓர் பொள்ளல் ஆக்கை அதனொடும் புணர்வு வேண்டில்,
அசிர்ப்புஎனும் அருந்த வத்தால், ஆன்மாவின் இடம் அதுஆகி,
உசிர்ப்புஎனும் உணர்வும் உள்ளார் ஒற்றியூர் உடைய கோவே.
 
         பொழிப்புரை : ஒரு குறுகிய காலத்து உயிர் வாழ்வதாகிய வாழ்க்கையை வாழ விரும்பாது , உணவு உண்பதனாலேயே செயற்படும் ஒன்பது துளைகளை உடைய இவ்வுடம்பில் , தேவர்தலைவனாகிய எம் பெருமான் கூடி நிற்றலை விரும்புவீராயின் , நீர் உடம்பு இளைக்க நோற்கும் அரிய தவத்தின் பயனாய் உம் ஆன்மாவில் இடம் பெற்று , உம் மூச்சுக்காற்றிலும் உணர்விலும் கலந்து உறைவான் திருவொற்றியூரை இடமாகக் கொண்ட எம்பெருமான் .


பாடல் எண் : 3
தானத்தைச் செய்து வாழ்வான் சலத்துஉளே அழுந்து கின்றீர்,
வானத்தை வணங்க வேண்டில் வம்மின்கள், வல்லீர் ஆகில்,
ஞானத்தை விளக்கை ஏற்றி, நாடியுள் விரவ வல்லார்,
ஊனத்தை ஒழிப்பர் போலும், ஒற்றியூர் உடைய கோவே.

         பொழிப்புரை : பல கொடைகளைத் தக்கவருக்கு வழங்கி வாழும் பொருட்டுப் பலவித சஞ்சலங்களிலே அழுந்தி மன அலைதலைவுற்று நிற்கின்ற நீங்கள் , சஞ்சலமற்ற வாழ்வு தரும் அருள் வெளியை வணங்குதற்கு ஆற்றல் உடையிராயின் வாருங்கள் . சிவஞானமாகிய தீபத்தை ஏற்றி ஆராய்ந்து அநுபூதியில் கண்டு சிவனாந்தம் நுகரவல்ல அடியார்களுடைய பிறவிப் பிணியை அடியோடு கழித்து வீடுபேறு நல்குவான் ஒற்றியூர்ப் பெருமான் .


பாடல் எண் : 4
காமத்துள் அழுந்தி நின்று கண்டரால் ஒறுப்புஉண் ணாதே,
சாமத்து வேதம் ஆகி நின்றதுஓர் சயம்பு தன்னை
ஏமத்தும் இடை இராவும் ஏகாந்தம் இயம்பு வார்க்கு,
ஓமத்துள் ஒளியது ஆகும் ஒற்றியூர் உடைய கோவே.

         பொழிப்புரை : உலக வாழ்வில் பலபற்றுக்களில் பெரிதும் ஈடுபட்டுக் கூற்றுவனுடைய ஏவலர்களால் தண்டிக்கப்பெறாமல் சாமவேத கீதனாகிய தான்தோன்றி நாதனைப் பகற்பொழுதில் நான்கு யாமங்களிலும் இரவுப் பொழுதில் நள்ளிரவு ஒழிந்த யாமங்களிலும் தனித்திருந்து உறுதியாக மந்திரம் உச்சரித்து வழிபடுபவர்களுக்கு ஒற்றியூர்ப் பெருமான் வேள்வியின் ஞானத்தீயாகக் காட்சி வழங்குவான் .


பாடல் எண் : 5
சமையமேல் ஆறும் ஆகி, தான்ஒரு சயம்பு ஆகி,
இமையவர் பரவி ஏத்த இனிதின்அங்கு இருந்த ஈசன்,
கமையினை உடையர் ஆகிக் கழல்அடி பரவு வார்க்கு
உமைஒரு பாகர் போலும் ஒற்றியூர் உடைய கோவே.

         பொழிப்புரை : அறுவகை வைதிகச் சமயங்களாகித் தான்தோன்றி நாதராய்த் தேவர்கள் முன்நின்று புகழ்ந்து துதிக்க , அவர்களிடையே மகிழ்வுடன் இருக்கும் , எல்லோரையும் அடக்கியாளும் பெருமானாய் , பகைவர் செய்யும் தீங்குகளையும் பொறுக்கும் பொறுமை உடையவர் ஆகித் தம் திருவடிகளை முன் நின்று வழிபடுபவர்களுக்கு பார்வதி பாகராய்க் காட்சி வழங்குவார் ஒற்றியூர்ப்பெருமான் .


பாடல் எண் : 6
ஒருத்திதன் தலைச்சென் றாளைக் கரந்திட்டான் உலகம் ஏத்த
ஒருத்திக்கு நல்லன் ஆகி, மறுப்படுத்து ஒளித்து மீண்டே
ஒருத்தியைப் பாகம் வைத்தான், உணர்வினால் ஐயம் உண்ணி
ஒருத்திக்கு நல்லன் அல்லன் ஒற்றியூர் உடைய கோவே.

         பொழிப்புரை : ஒற்றியூர்ப்பெருமான் . தன் தலையை அடைந்த கங்கையைச் சடையில் மறைத்து அக்கங்கைக்கு இனியவன் போன்று அவளைச் சிறை செய்து மறைத்து , மீண்டும் பார்வதியாகிய ஒருத்தியை உடம்பின் ஒருபாகமாகக்கொண்டு , தன் விருப்பத்தோடு பிச்சை எடுத்து உண்ணும் அப்பெருமான் கங்கை உமை என்ற இருவருள் ஒருவருக்கும் நல்லவன் அல்லன் .


பாடல் எண் : 7
பிணம் முடை உடலுக் காகப் பித்தராய்த் திரிந்து, நீங்கள்
புணர்வுஎனும் போகம் வேண்டா, போக்கலாம் பொய்யை நீங்க,
நிணம்உடை நெஞ்சின் உள்ளால் நினைக்குமா நினைக்கின் றாருக்கு
உணர்வினோடு இருப்பர் போலும் ஒற்றியூர் உடைய கோவே.

         பொழிப்புரை : பிணமாதலும் முடை நாற்றமும் உடைய இவ்வுடம்பைப் பேணிப் பாதுகாப்பதற்காக அதனிடத்து விருப்பினிராய்த் திரிந்து சிற்றின்ப வேட்கையை நீவிர்கொள்ளற்க. போக்குவதற்கு உரியதாகும் பொய்யான இப்பிறவிப்பிணியைப் போக்க, கொழுப்பினை உடைய இவ்வுடலின் நெஞ்சினுள் கரந்து உறையும் இறைவரைத் தியானிக்கும் முறையாலே தியானிக்கும் அடியவர்களுக்கு ஒற்றியூர்ப் பெருமான் வாய்த்த சிவஞானத்தோடு குணியாய் இருந்து விளங்குவார் .


பாடல் எண் : 8
பின்னுவார் சடையான் தன்னைப் பிதற்றிலாப் பேதை மார்கள்,
துன்னுவார் நரகந் தன்உள் , தொல்வினை தீர வேண்டின்,
மன்னுவான் மறைகள் ஓதி, மனத்தின்உள் விளக்கு ஒன்று ஏற்றி
உன்னுவார் உள்ளத்து உள்ளார் ஒற்றியூர் உடைய கோவே.

         பொழிப்புரை : முறுக்கேறிய நீண்ட சடையை உடைய ஒற்றியூர்ப் பெருமானுடைய திருநாமங்களை அடைவு கேடாகப் பலகாலும் வாய்விட்டு உரைக்காத அறிவிலிகளே ! நீர் இனி அடையப்போகும் நரகத்தில் அனுபவிக்கக் கூடிய பழைய வினைகள் நீங்கவேண்டும் என்று நீர் கருதினால் நிலைபெற்ற மேலான வேதங்களை ஓதி மனத்தினுள்ளே ஞானச் சுடர்விளக்கை ஏற்றித் தியானிப்பவர் உள்ளத்தில் அவர் உள்ளார் என்பதனை உணர்ந்து செயற்படுவீராக .


பாடல் எண் : 9
முள்குவார் போகம்வேண்டின் முயற்றியால் இடர்கள் வந்தால்
எள்குவார் எள்கி நின்றுஅங்கு இதுஒரு மாயம் என்பார்
பள்குவார் பத்தர் ஆகிப் பாடியும் ஆடி நின்றும்
உள்குவார் உள்ளத்து உள்ளார் ஒற்றியூர் உடைய கோவே.

         பொழிப்புரை : நெஞ்சமே ! உன்னால் தழுவப்படும் மகளிருடைய இன்பத்தை நீ விரும்பினால் அதனை அடையப்பலகாலும் முயல்கின்றாய் , அவர்கள் உனக்கு ஒரு துயரம் வந்தால் அதனைத் தீர்க்க முற்படாமல் உன்னைப் பரிகசிப்பர் . உன்னுடைய இந்த நிலை புதுமையாய் இருக்கிறது என்று இகழ்வார்கள் . அம்மகளிர் மோகத்தை அச்சத்தால் விடுத்தவராய் ஒற்றியூர்ப் பெருமானுக்கு அடியவராய்ப் பாடியும் ஆடியும் நின்று தியானிப்பவர் உள்ளத்தில் அவர் நிலை பெற்றிருப்பவராய்த் துன்பம் வரும்போது அதனைத் துடைப்பவர் ஆவார் என்பதனை உணர்ந்து வாழ் .


பாடல் எண் : 10
வெறுத்துஉகப் புலன்கள் ஐந்தும் வேண்டிற்று வேண்டும் நெஞ்சே,
மறுத்துஉக ஆர்வச் செற்றக் குரோதங்கள் ஆன மாயப்
பொறுத்துஉகப் புட்ப கத்தேர் உடையானை அடர ஊன்றி
ஒறுத்துஉகந்து அருள்கள் செய்தார் ஒற்றியூர் உடையகோவே.

         பொழிப்புரை : நெஞ்சே ! புலன்கள் ஐந்தனையும் நுகரச் செய்யும் பொறிகள் ஐந்தும் நீ வெறுத்து அழியுமாறு தாம் முன்பு வேண்டியவற்றையே பலகாலும் வேண்டி நிற்கும் . பொறிகளுக்கு இரை வழங்குதலை மறுத்து ஆர்வம் பகை கோபம் எனும் இவை அழியுமாறு மற்றவரால் வரக்கூடிய துன்பங்களைப் பொறுத்து மகிழ்வோடிருப்பாயாக . புட்பகவிமானத்தை உடைய இராவணனை முதலில் ஒறுத்துப் பின் உகந்து அருள் செய்தவர் ஒற்றியூர்ப் பெருமான் .
                 
                                             திருச்சிற்றம்பலம்


4. 046    திருவொற்றியூர்          திருநேரிசை


                                             திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
ஓம்பினேன் கூட்டை வாளா, உள்ளத்துஓர் கொடுமை வைத்துக்
காம்புஇலா மூழை போலக் கருதிற்றே முகக்க மாட்டேன்
பாம்பின்வாய்த் தேரை போலப் பலபல நினைக்கின் றேனை
ஓம்பிநீ உய்யக் கொள்ளாய் ஒற்றியூர் உடைய கோவே.

         பொழிப்புரை : உள்ளத்துள்ளே நேர்மைக்குப் புறம்பான வளைவான செய்திகளைத் தேக்கி வைத்துக் கொண்டு இவ்வுடம்பினைப் பயனற்ற வகையில் பாதுகாத்துக்கொண்டு , காம்பு இல்லாத அகப்பை முகக்கக் கருதியதனை முகக்க இயலாதவாறுபோல , உன் திருவருள் துணை இல்லாததனால் நினைத்த பேறுகளைப் பெற இயலாதேனாய்ப் பாம்பின் வாயில் அகப்பட்ட தேரை விரைவில் தான் அழியப் போவதனை நினையாது வேறு என்னென்னவோ எல்லாம் நினைப்பதுபோல எண்ணாத பல எண்ணங்களையும் எண்ணி நெஞ்சம் புண்ணாகின்ற அடியேனை ஓம்பி அடியேன் உய்யும் வண்ணம் ஒற்றியூர்ப் பெருமானாகிய நீ அருளவேண்டும் .


பாடல் எண் : 2
மனம்எனும் தோணி பற்றி, மதிஎனும் கோலை ஊன்றிச்
சினம்எனுஞ் சரக்கை ஏற்றிச் செறிகடல் ஓடும் போது
மனன்எனும் பாறை தாக்கி மறியும்போது அறிய ஒண்ணாது
உனைஉனும் உணர்வை நல்காய் ஒற்றியூர் உடைய கோவே.

         பொழிப்புரை : ஒற்றியூர் உடைய கோவே ! மனம் என்னும் தோணியைப் பொருந்தி, அறிவு என்று சொல்லப்படும் சவள் தண்டை ஊன்றிச் சினம் எனும் சரக்கை அத்தோணியில் ஏற்றிப் பாசக்கடலாகிய பரப்பில் அத்தோணியைச் செலுத்தும்போது மன்மதன் என்ற பாறை தாக்க அத்தோணி கீழ்மேலாகக் கவிழும்போது உன்னை அறிய இயலாதேனாய் வருந்துவேன் . அப்போது அடியேன் என்னை மறந்து உன்னையே தியானிக்கும் அறிவை அடியேனுக்கு விரும்பி அளிப்பாயாக .

                                             திருச்சிற்றம்பலம்


4. 086    திருவொற்றியூர்                      திருவிருத்தம்
                                             திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
செற்றுக் களிற்று உரி கொள்கின்ற ஞான்றுசெருவெண் கொம்பு ஓன்று
இற்றுக் கிடந்தது போலும் இளம்பிறை பாம்புஅதனைச்
சுற்றிக் கிடந்தது கிம்புரி போலச் சுடர்இமைக்கும்
நெற்றிக்கண் மற்றுஅதன் முத்து ஒக்குமால் ஒற்றி யூரனுக்கே.

         பொழிப்புரை : யானையைக் கொன்று அதன் தோலைப் போர்வைக்காகக் கொண்ட காலத்தில் போரிடுகின்ற அதனுடைய வெண்மையான தந்தம் ஒன்று ஒடிந்து கிடந்ததுபோல அமைகின்றது . அதனைச் சுற்றிப் பாம்பு கிடத்தல் தந்தத்துக்கிடுங் கிம்புரிப் பூண் போலாகிறது . திருநுதலில் உள்ள நெற்றிக்கண் அத்தந்தத்திலிருந்து தெறித்த முத்தினை யொப்பதாகின்றது திருவொற்றியூர்ப் பெருமானிடத்து .


பாடல் எண் : 2
சொல்லக் கருதியது ஒன்று உண்டு கேட்கில், தொண்டாய் அடைந்தார்
அல்லல் படக்கண்டு பின்என் கொடுத்தி, அலைகொள் முந்நீர்
மல்லல் திரைச்சங்கம் நித்திலம் கொண்டுவம்பு அக்கரைக்கே
ஒல்லைத் திரைகொணர்ந்து எற்று ஒற்றியூர்உறை உத்தமனே.

         பொழிப்புரை : கடலின் வளமான அலைகள் சங்குகளிலுள்ள முத்துக்களைக் கொண்டு மணம் வீசும் கரைகளிலே ஒதுக்கிச் சேர்க்கும் ஒற்றியூரில் உகந்தருளியிருக்கும் உத்தமனே ! நீ கேட்பதற்குத் திருச்செவி சார்த்துவாயாகில் அடியேன் கூற நினைக்கும் செய்தி ஒன்று உளது . அஃதாவது உனக்கு அடிமைகளாய் வந்து சேர்ந்த அடியவர்கள் துன்பப்படுவதைப் பார்த்துக் கொண்டே வாளா இருக்கும் நீ இப்பொழுது அவர் துன்பத்தைத் தீர்க்காமல் எதிர் காலத்தில் அவர்களுக்கு யாது வழங்கத் திருவுள்ளம் பற்றியுள்ளாய் ?


பாடல் எண் : 3
பரவை வருதிரை நீர்க்கங்கை பாய்ந்துஉக்க பல்சடைமேல்
அரவம் அணிதரு கொன்றை இளந்திங்கள் சூடியதுஓர்
குரவ நறுமலர் கோங்கம் அணிந்து குலாயசென்னி
உரவு திரைகொணர்ந்து எற்று ஒற்றி யூர்உறை உத்தமனே.

         பொழிப்புரை : பரந்து வருகின்ற அலைகளை உடைய கங்கை நீர் பாய்ந்து சிதறும்படிக்கான வன்மையதாயப் பலவாக உள்ள சடைத் தொகுதி மீது பாம்போடு பிறையையும் கொன்றை குரவம் கோங்கம் ஆகியவற்றின் நறுமலர்களையும் அணிந்து விளங்கும் திருமுடியினனாய்க் கடல் அலைகள் கடல்படு பொருள்களை மோதிக் கொண்டு வந்து கரையில் சேர்க்கின்ற திருஒற்றியூரில் வீற்றிருக்கும் உத்தமனே !


பாடல் எண் : 4
தான்அகம் காடுஅரங் காக உடையது தன்அடைந்தார்
ஊன்அகம் நாறும் முடைதலை யில்பலி கொள்வதும் தான்
தேன்அக நாறும் திருவொற்றி யூர்உறை வார் அவர்தாம்
தான்அக மேவந்து போனகம் வேண்டி உழிதர்வரே.

         பொழிப்புரை : உள்ளிடமெல்லாந் தேன்மணங் கமழுந் திருவொற்றியூரில் உறையும் பெருமான் தான் ஆடரங்காகக் கொள்வதும் காடு . தன்னை அடைந்தார் இடும் பலியை ஏற்பதும் உள்ளுரத் தசையின் முடை நாற்றம் வீசும் தலையோட்டில் . அவர் தானாகவே வீடு வீடாக வந்து உணவு வேண்டித் திரிபவரும் ஆவார் .


பாடல் எண் : 5
வேலைக் கடல்நஞ்சம் உண்டுவெள் ஏற்றொடும் வீற்றுஇருந்த
மாலைச் சடையார்க்கு உறைவிடம் ஆவது வாரிகுன்றா
ஆலைக் கரும்பொடு செந்நெல் கழனி அருகுஅணைந்த
சோலைத் திருவொற்றி யூரைஎப் போதும் தொழுமின்களே.

         பொழிப்புரை : கடலிற் தோன்றிய நஞ்சை உண்டு இருண்ட கண்டத்துடன் வெள்ளை இடபத்தை ஊர்ந்தருளும் , அந்தி செவ்வானம் போன்ற சடையினரான சிவபெருமானுக்கு உறைவிடமாவது வருவாய் குறையாத ( ஆலைக் ) கரும்புகளோடு செந்நெல்லும் மிகும் வயல்களைச் சூழ்ந்து சோலைகள் விளங்கப்பெறுவதுமான திருவொற்றியூர் . அதனை எப்பொழுதுமே தொழுமின்கள் .


பாடல் எண் : 6
புற்றினில் வாழும் அரவுக்கும் திங்கட்கும் கங்கை என்னும்
சிற்றிடை யாட்கும் செறிதரு கண்ணிக்கும் சேர்வுஇடமாம்
பெற்றுஉடை யான், பெரும் பேச்சுஉடை யான், பிரியாது எனைஆள்
விற்றுஉடையான், ஒற்றியூர் உடை யான்தன் விரிசடையே.

         பொழிப்புரை : இடப வாகனத்தை உடையவனாய் , தன்னைப் பற்றிச் சான்றோர்கள் பேசும் பொருள்சேர் புகழுரை தாங்குபவனாய் , என்னைத் தன் விருப்பப்படி விற்பதற்கும் உரிமை உடைய அடியவனாகக் கொண்டவனாய் ஒற்றியூரை உறைவிடமாக உடைய சிவ பெருமானுடைய விரிந்த சடை , புற்றில் வாழும் பாம்புக்கும் , பிறைச் சந்திரனுக்கும் , கங்கை என்ற பெயரை உடைய , சிறிய இடுப்பை உடைய நங்கைக்கும் , ஒற்றைப் பூந்தொடையாகிய முடிமாலைக்கும் இருப்பிடமாகும் .


பாடல் எண் : 7
இன்றுஅரைக் கண்உடை யார்எங்கும் இல்லை இமயம்  என்னும்
குன்றர் ஐக்கு அண்நல் குலமகள் பாவைக்குக் கூறுஇட்டநாள்
அன்றுஅரைக் கண்ணும் கொடுத்து உமை யாளையும் பாகம் வைத்த
ஒன்றரைக் கண்ணன்கண் டீர் ஒற்றியூர் உறை உத்தமனே.

         பொழிப்புரை : இவ்வுலகில் முழுக்கண் உடையவர்களே காணப்படுகின்றனரே யன்றி அரைக்கண் உடையவர் ஒருவரும் இரார் . ஆனால் , இமவான் என்று போற்றப்படும் மலைத் தலைவனுக்கு வளர்ப்பு மகளாகக் கிட்டிய நல்ல மேன்மையை உடைய பார்வதிக்கு உடம்பைச் செம்பாதியாகப் பங்கிட்டுக் கொடுத்த காலத்திலே தன் முக் கண்களில் செம்பாதியான ஒன்றரைக் கண்கள் அவளுக்காயினதால் மீதியுள்ள ஒன்றரைக் கண்ணனாகவேயுள்ளார் திருவொற்றியூரில் உறையும் உத்தமனாம் எம்பெருமான் .


பாடல் எண் : 8
சுற்றிவண்டு யாழ்செயும் சோலையும் காவும் துதைந்து இலங்கு
பெற்றிகண் டால் மற்று யாவருங் கொள்வர், பிறர்இடைநீ
ஒற்றி கொண்டாய், ஒற்றி யூரையும் கைவிட்டு உறும் என்று எண்ணி
விற்றி கண்டாய், மற்று இது ஒப்பது இல்இடம் வேதியனே.

         பொழிப்புரை : வேதத்தால் பரம் பொருள் என்று போற்றப்படும் ஒற்றியூர்ப் பெருமானே ! வண்டுகள் எப்பொழுதும் சுற்றிக்கொண்டு யாழ் போல ஒலிக்கும் பூஞ்சோலைகளும் பெருமரச்சோலைகளும் செறிந்து விளங்கும் உன் ஒற்றியூரின் சிறப்பினை நோக்கினால் அதனை யாவரும் விலைகொடுத்து வாங்கிக் கொள்வர் . அது கருதி நீ ஒற்றியாகப் பெற்று அனுபவிக்கும் இவ்வொற்றியூரையும் பிறரிடம் விற்று அதனைக் கைவிட எண்ணுதியேல் அது ஏற்புடையதன்று . இதனை ஒத்த சிறப்பான இருப்பிடம் பிறிது யாதுமில்லை என்பதனைத் தெரிந்து கொள்வாயாக .


பாடல் எண் : 9
சுற்றிக் கிடந்து ஒற்றி யூரன் என் சிந்தை பிரிவுஅறியான்,
ஒற்றித் திரிதந்து நீஎன்ன செய்தி, உலகம் எல்லாம்
பற்றித் திரிதந்து, பல்லொடு நாமென்று கண்குழித்துத்
தெற்றித்து இருப்பது அல்லால், என்ன செய்யும் இத் தீவினையே.

         பொழிப்புரை : என் தீவினையே ! திருவொற்றியூர்ப் பெருமான் என்றும் பிரியாது என் உள்ளத்தைச் சுற்றிச் சூழ்ந்து கொண்டுள்ளான் . அவ்வாறாக , நீ என்னை , அடியொற்றித் திரிந்து கொண்டிருப்பதால் நீ சாதிக்கப் போவதென்ன ? நான் செல்லிடமெல்லாம் அடியொற்றித் திரிந்து தனக்கு வேட்டை வாய்க்காமையால் ஆத்திரமுற்று பல்லையும் நாவையும் மென்று கொண்டு சோக மிகுதியாற் கண் குழிந்து கால் தெற்றித் தானே சோர்ந்திருப்பதைவிட இத்தீவினையால் எனக்கெதிர் எதுவும் நேர்தற்கிடமின்றாம் .


பாடல் எண் : 10
அம்கண் கடுக்கைக்கு முல்லைப் புறவம், முறுவல்செய்யும்
பைங்கண் தலைக்குச் சுடலை, களரி பருமணிசேர்
கங்கைக்கு வேலை,  அரவுக்குப் புற்று,  கலைநிரம்பாத்
திங்கட்கு வானம் திருவொற்றி யூரர் திருமுடியே.

         பொழிப்புரை : திருவொற்றியூர்ப் பெருமான் திருமுடியானது அழகிய தேனை உடைய கொன்றை மலருக்கு , முல்லை நிலக்காடு ஆகவும் ( உத்தமமான ஆடவர் உடலில் இயல்பாகவே முல்லைப் பூவின் மணம் கமழும் . குறுந்தொகை - 193) சிரிக்கும் தலைமாலையா யிருந்து சிரிக்குங் கபாலங்களுக்குச் சுடுகாடாகவும் , பருத்த இரத்தினக் கற்களை அலைத்து வரும் கங்கைக்கு அது சென்று சேரும் கடலாகவும் , பாம்புக்கு அதன் உறைவிடமான புற்றாகவும் , பிறைக்கு அஃது உலவும் வானமாகவும் உள்ளதாகும் .


பாடல் எண் : 11
தருக்கின வாள்அரக் கன்முடி பத்து இறப் பாதம்தன்னால்
ஒருக்கின வாறுஅடி யேனைப் பிறப்புஅறுத்து ஆளவல்லான்
நெருக்கின வானவர் தானவர் கூடிக் கடைந்தநஞ்சைப்
பருக்கினவாறு என்செய்கேந் ஒற்றி யூர்உறை பண்டங்கனே.

         பொழிப்புரை : ஒற்றியூரிலே உறைகின்ற பண்டரங்கக் கூத்தனான பெருமான் செருக்குக் கொண்ட இராவணனுடைய பத்துத் தலைகளும் நெரியுமாறு கால்விரலால் நெரித்தொடுக்கினது போலவே அடியேனுடைய பிறப்பையும் போக்கி அடியேனை அடிமையாகக் கொள்ளவல்லவன் . நெருங்கி நின்ற தேவர்களும் அசுரர்களும் கூடிப் பாற்கடலைக் கடைந்தபோது எழுந்த நஞ்சினை அவனையே பருகுமாறு செய்த வினை இருந்தவாறென் ? ஆ ! என் செய்கேன் நான் !

                                             திருச்சிற்றம்பலம்

5. 024    திருவொற்றியூர்              திருக்குறுந்தொகை
                                         திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
ஒற்றி ஊரும் ஒளிமதி பாம்பினை
ஒற்றி ஊரும் அப் பாம்பும் அதனையே
ஒற்றி ஊர ஒருசடை வைத்தவன்
ஒற்றி யூர்தொழ நம்வினை ஓயுமே.

         பொழிப்புரை : ஒளி விளங்குகின்ற மதி பாம்பினை ஒற்றி ஊரும் ; பாம்பும் அம்மதியினைக் கொள்வதற்காக ஒற்றி ஊர்ந்து வரும் ; இவ்வாறு இவை ஒன்றையொன்று ஒற்றி ஊரும்படியாக ஒருசடையில் வைத்த சிவபெருமானுக்குரிய ஒற்றியூரைத் தொழ நம்வினைகள் ஓயும் .


பாடல் எண் : 2
வாட்டம் ஒன்றுஉரைக் கும்மலை யான்மகள்
ஈட்ட வேஇருள் ஆடி இடுபிணக்
காட்டில் ஓரி கடிக்க எடுத்ததுஓர்
ஓட்டை வெண்தலைக் கைஒற்றி யூரரே.

         பொழிப்புரை : மலையரசன் மகளாகிய உமாதேவியார் தளர்ச்சியாகிய ஒன்று உரைக்க , பேய்க்கணங்கள் நெருங்க நள்ளிரு ளின்கண் இடுபிணக்காட்டில் ஓரி கடிக்கும்படியாக எடுத்த துளை உடைய வெண்தலையினைக் கையிலே உடையவர் ஒற்றியூர்த் தலத்து இறைவர் .


பாடல் எண் : 3
கூற்றுத் தண்டத்தை அஞ்சிக் குறிக்கொண்மின்
ஆற்றுத் தண்டத்து அடக்கும் அரன்அடி
நீற்றுத் தண்டத்த ராய்நினை வார்க்கு எலாம்
ஊற்றுத் தண்டுஒப்பர் போல் ஒற்றி யூரரே.

         பொழிப்புரை : கூற்றுவனால் வருந்தண்டமாகிய இறப்புக்கு அஞ்சி , அறத்தின் ஆற்றினால் அனைத்தையும் இயக்கும் சிவபிரானடியைக் குறிக்கொள்ளுவீராக ! திருநீற்றினைப்பூசி வணங்கி யெழுந்து நினைக்கின்ற அன்பர்க்கெல்லாம் இனிப்பு ஊறும் கரும்பினை ஒத்து இனிப்பர் ஒற்றியூர்த் தலத்து இறைவர்.


பாடல் எண் : 4
சுற்றும் பேய்சுழ லச்சுடு காட்டுஎரி
பற்றி ஆடுவர் பாய்புலித் தோலினர்
மற்றை யூர்கள்எல் லாம்பலி தேர்ந்துபோய்
ஒற்றி யூர் புக்கு உறையும் ஒருவரே.

         பொழிப்புரை : மற்றையூர்களிலெல்லாம் சென்று பலி தேர்ந்து பெற்று மீண்டுபோய் ஒற்றியூரிற்புக்கு உறையும் ஒப்பற்றவராகிய இறைவர் பாய்கின்ற புலியினையுரித்த தோலுடையினராய் , சுற்றி நிற்கின்ற பேய்கள் சுழலச் சுடுகாட்டின்கண் கையில் எரியினைப் பற்றி ஆடும் இயல்பினர் .


பாடல் எண் : 5
புற்றில் வாள்அரவு ஆட்டி உமையொடு
பெற்றம் ஏறு உகந்து ஏறும் பெருமையான்
மற்றை யாரொடு வானவ ரும்தொழ
ஒற்றி யூர்உறை வான்ஓர் கபாலியே.

         பொழிப்புரை : மற்றையவர்களோடு தேவர்களும் தொழுமாறு ஒற்றியூரில் உறைவானாகிய கபாலம் கைக்கொண்ட இறைவன் புற்றிலுறையும் வாள்போன்று வருத்தந்தரவல்ல பாம்பினை ஆட்டி உமையோடு ஆனேற்றின்மேல் உயர்ந்து ஏறித்தோன்றும் பெருமையை உடையவன் .


பாடல் எண் : 6
போது தாழ்ந்து புதுமலர் கொண்டுநீர்
மாது தாழ்சடை வைத்த மணாளனார்
ஓது வேதிய னார்திரு வொற்றியூர்
பாதம் ஏத்தப் பறையும்நம் பாவமே.

         பொழிப்புரை : போதுகளைவிட்டுப் பூத்த புதுமலர்களைக் கொண்டு கங்கையைத் தாழ்சடையின் கண் வைத்த மணாளனாரும் , திருவொற்றியூரில் வேதம் ஓதும் வித்தகரும் ஆகிய பெருமானின் திருவடிகளை ஏத்தினால் நம் பாவங்கள் கெடும் .


பாடல் எண் : 7
பலவும் அன்னங்கள் பன்மலர் மேல்துஞ்சும்
கலவ மஞ்ஞைகள் கார்என வெள்குறும்
உலவு பைம்பொழில் சூழ்திரு வொற்றியூர்
நிலவி னான் அடி யேஅடை நெஞ்சமே.

         பொழிப்புரை : நெஞ்சமே ! அன்னங்கள் பலவும் பலமலர்கள் மேல் தூங்குவதும் கருமை உடைய இருள் விளைத்தலைக் கண்டு பைம்பொழிலை அங்கு உலவும் தோகையுடைய மயில்கள் மேகமெனக் கருதிப் பின் அவையின்மை தெரிந்து வெட்கமுறுதற் சிறப்புடையதுமாகிய திருவொற்றியூரில் விளங்குகின்ற இறைவன் திருவடிகளையே அடைவாயாக !


பாடல் எண் : 8
ஒன்று போலும் உகந்து அவர் ஏறிற்று
ஒன்று போலும் உதைத்துக் களைந்தது
ஒன்று போல் ஒளி மாமதி சூடிற்று
ஒன்று போல்உகந் தார் ஒற்றி யூரரே.

         பொழிப்புரை : உயர்ந்து அவர் ஏறியதும் ஒரு விடையினை; உதைத்துக் களைந்ததும் ஒரு கூற்றுவனை ; சூடியதும் ஒளி விளங்கும் ஒரு மதியினை ; இவையனைத்தும் ஒன்றுபோல் உகந்தவர் ஒற்றி யூர்த்தலத்து இறைவர் .


பாடல் எண் : 9
படைகொள் பூதத்தர் வேதத்தர் கீதத்தர்
சடைகொள் வெள்ளத்தர் சாந்தவெண் நீற்றினர்
உடையும் தோல் உகந் தார்உறை ஒற்றியூர்
அடையும் உள்ளத் தவர்வினை அல்குமே.

         பொழிப்புரை : பூதப்படை கொண்டவரும் , வேதத்தவரும் , இனியகீதத்தவரும் , சடையிற்கொண்ட கங்கையினரும் , சாந்தமெனப் பூசும் வெண்ணீற்றினரும் , தோலை உடையாக உகந்தவரும் ஆகிய பெருமான் உறைகின்ற ஒற்றியூரை அடையும் உள்ளத்தவர்களின் வினைகள் சுருங்கும் .


பாடல் எண் : 10
வரையி னால்உயர் தோள்உடை மன்னனை
வரையி னார்வலி செற்றவர் வாழ்விடம்
திரையி னார்புடை சூழ்திரு ஒற்றியூர்
உரையி னால்பொலிந் தார்உயர்ந் தார்களே.

         பொழிப்புரை : மலையென உயர்ந்த தோள்களை உடைய மன்னனான இராவணனை ஒரு சிறு எல்லையில் ஆற்றல் கெடுத்த பெருமான் வாழும் இடம் , அலைகள் பக்கங்களிற்சூழ்ந்த திரு வொற்றியூர் ; அதனை வாக்கினாற் கூறி விளக்கமுறுவோரே உயர்ந்த வராவர் .
                                             திருச்சிற்றம்பலம்


----------------------------------------------------------------------------------------------------------

சுந்தரர் திருப்பதிக வரலாறு

            சுவாமிகள், திருக்காளத்தியிலிருந்து திருப்பருப்பதம், திருக்கேதாரம் இவற்றை இறைஞ்சிப் பாடிச் சிலநாள் தங்கியிருந்து, பெருமான் வீற்றிருக்கும் பல தலங்களையும் வணங்கிக்கொண்டு, பூவுலகச் சிவலோகம் என விளங்கும் திருவொற்றியூரை அடைந்தார். அடியவர்கள் மங்கலப் பொருள்கள் முதலியவற்றுடன் எதிர்கொள்ளத் திருக்கோயிலை யடைந்து, ஏட்டு வரியில் 'ஒற்றிநகர் நீங்க' என்று எழுதும் பெருமானைத் தொழுது பாடியருளியது இத்திருப்பதிகம். (தி. 12 ஏயர்கோன். புரா. 204)

பெரிய புராணப் பாடல் எண் : 199
அங்குச் சிலநாள் வைகியபின்
         அருளால் போந்து, பொருவிடையார்
தங்கும் இடங்கள் எனைப்பலவும்
         சார்ந்து, தாழ்ந்து, தமிழ்பாடிப்
பொங்கு புணரிக் கரைமருங்கு
         புவியுள் சிவலோகம் போலத்
திங்கள் முடியார் அமர்ந்ததிரு
         ஒற்றியூரைச் சென்றுஅடைந்தார்.

         பொழிப்புரை : இந்நிலையில் அங்குச் சில நாள்கள் இருந்தருளிய பின், பெருமானின் திருவருள் பெற்றுப் பொருதலில் வல்ல ஆனேற்று ஊர்தியையுடைய பெருமான் எழுந்தருளியிருக்கும் ஏனைய பதிகள் பலவும் சென்று வணங்கித் தமிழ்ப் பதிகங்கள் பாடிப் போற்றிப் பொங்கும் அலைகளையுடைய கடற்கரையோரத்தில் விளங்கும் இந் நிலவுலகில் சிவலோகம் எனச் சிறந்து விளங்கும் இளம்பிறையினை முடிமேற் சூடிய சிவபெருமான் அமர்ந்தருளும் திருவொற்றியூரைச் சென்றடைந்தார்.


பெ. பு. பாடல் எண் : 200
அண்ணல் தொடர்ந்து ஆவணங்காட்டி
         ஆண்ட நம்பி எழுந்தருள,
எண்ணில் பெருமை ஆதிபுரி
         இறைவர் அடியார் எதிர்கொள்வார்,
வண்ண வீதி வாயில்தொறும்
         வாழை கமுகு தோரணங்கள்
சுண்ண நிறைபொற் குடந்தூப
         தீபம் எடுத்துத் தொழஎழுங்கால்.

         பொழிப்புரை : பெருமனார் தாமே தொடர்ந்து வந்து ஆவணம் காட்டி ஆட்கொள்ளப்பெற்ற நம்பியாரூரர் எழுந்தருளலும், எண்ணற்ற பெருமையுடைய தோற்றமில் காலத்தே தோன்றிய திருவொற்றியூர்ப் பெருமான்பால் அன்பு கொண்ட அடியார்கள் வந்து எதிர்கொள்பவர்கள், அழகு பொருந்திய தம் வீதிகளின் வாயில்கள் தோறும் வாழை, கமுகு, தோரணங்கள், பொற்சுண்ணம் நிறைந்த பொற்குடங்கள், நறும்புகை, ஒளிவிளக்கு முதலியவற்றை எடுத்து நகரை அணிசெய்து, நம்பிகளைத் தொழ வந்தபொழுது,


பெ. பு. பாடல் எண் : 201
வரமங் கலநல் லியம்முழங்க
         வாச மாலை அணிஅரங்கில்
புரமங் கையர்கள் நடமாடப்
         பொழியும் வெள்ளப் பூமாரி
அரமங் கையரும் அமரர்களும்
         வீச அன்பர் உடன்புகுந்தார்
பிரமன் தலையில் பலிஉகந்த
         பிரானார் விரும்பு பெருந் தொண்டர்.

         பொழிப்புரை : சிறந்த மங்கலமுடைய நல்ல இயங்கள் முழங்கிட, நறுமணமுடைய மாலைகள் அணிசெய்யும் நாட்டிய அரங்குகளில், சிலம்பணிந்த பெண்கள் நடனமாடிட, எங்கும் பொழியும் மழைவெள்ளம் போல் பூ மழையைத் தேவப்பெண்களும் தேவர்களும் பொழிந்திட, நான்முகனது தலையில் பலியை உவந்து ஏற்றருளும் சிவபெருமான் விரும்பும் பெருந்தொண்டராம் நம்பிகள், அன்பர்களுடன் அந்நகரில் புகுந்தனர்.


பெ. பு. பாடல் எண் : 202
ஒற்றியூரில் உமையோடும்
         கூட நின்றார் உயர்தவத்தின்
பற்று மிக்க திருத்தொண்டர்
         பரந்த கடல்போல் வந்துஈண்டி,
சுற்றம் அணைந்து துதிசெய்யத்
         தொழுது, தம்பி ரான்அன்பர்
கொற்ற மழஏறு உடையவர்தம்
         கோயில் வாயில் எய்தினார்.

         பொழிப்புரை : திருவொற்றியூரில் உமையம்மையாரோடும் கூட நின்றருளும் சிவபெருமானது உயர்ந்த தவத்தில் பற்றுமிக்க திருத்தொண்டர்கள், பரந்த பெருங் கடல்போலப் பெருக வந்துகூடி, அவரது சுற்றம் போல அணைந்து போற்ற, தாமும் அவர்களைத் தொழுது, பெருமானின் அன்பராம் நம்பிகள், வெற்றி பொருந்திய இளையவிடையை ஊர்தியாகவுடைய பெருமானது கோயில் வாயில் முன்பாக வந்தடைந்தார்.


பெ. பு. பாடல் எண் : 203
வானை அளக்கும் கோபுரத்தை
         மகிழ்ந்து பணிந்து, புகுந்து,வளர்
கூனல் இளவெண் பிறைச்சடையார்
         கோயில் வலங்கொண்டு, எதிர்குறுகி,
ஊனும் உயிரும் கரைந்துஉருக,
         உச்சி குவித்த கையினுடன்,
ஆன காத லுடன் வீழ்ந்தார்,
         ஆரா அன்பின் ஆரூரர்.

         பொழிப்புரை : வானினை அளப்பது போலும் கோபுரத்தை மகிழ்ந்து பணிந்து உள்ளே புகுந்து, வளர்ந்துவரும் வளைந்த இளமை ஆன வெண்பிறையைச் சடைமேல் உடைய பெருமானது கோயிலை வலங்கொண்டு, திருமுன்பு சேர்ந்து, ஊனும் உயிரும் கரைந்து உருகிட உச்சிமீது குவித்த கையுடன் உள்ளத்துப் பெருகிய காதலுடன், ஆராத அன்பினையுடைய நம்பியாரூரர் வீழ்ந்து வணங்கினார்.


பெ. பு. பாடல் எண் : 204
ஏட்டு வரியில் ஒற்றியூர்
         நீங்கல் என்ன எழுத்தறியும்,
நாட்ட மலரும் திருநுதலார்
         நறும்பொற் கமலச் சேவடியில்
கூட்டும் உணர்வு கொண்டுஎழுந்து,
         கோதுஇல் அமுத இசைகூடப்
"பாட்டும் பாடிப் பரவி" எனும்
         பதிகம் எடுத்துப் பாடினார்.

         பொழிப்புரை...ஏட்டின் வரியினிடையே "ஒற்றி நகர் நீங்கலாக" என்னும் எழுத்தினைப் புகுத்தி எழுதும் எழுத்தறியும் பெருமானாகிய, கண்பூத்த திருநுதலினை உடைய பெருமானது நறிய அழகிய கமலச் சேவடியிற் கூட்டுகின்ற உணர்ச்சியினை மேற்கொண்டு எழுந்து, குற்றமில்லாத அமுத இசை பொருந்தப் "பாட்டும் பாடிப் பரவி" என்று தொடங்கும் முதலையுடைய திருப்பதிகத்தினைத் தொடங்கிப் பாடியருளினார்.

         குறிப்புரை : `பாட்டும் பாடிப் பரவி எனத் தொடங்கும் பதிகம் குறிஞ்சிப் பண்ணில் அமைந்ததாகும் (தி.7 ப.91).


சுந்தரர் திருப்பதிகம்


7. 091    திருவொற்றியூர்                   பண் - குறிஞ்சி
                                    திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
பாட்டும் பாடிப் பரவித் திரிவார்
ஈட்டும் வினைகள் தீர்ப்பார் கோயில்,
காட்டும் கலமும் திமிலும் கரைக்கே
ஓட்டும் திரைவாய் ஒற்றி யூரே

         பொழிப்புரை : உரையாற் சொல்லுதலேயன்றிப் பாட்டாலும் பாடித் துதித்து நிற்பார் செய்த வினைகளை நீக்குகின்ற இறைவரது இடம், மக்கள் தம் பால் சேர்க்கின்ற பெரிய மரக்கலங்களையும் , சிறிய படகு களையும் கரையிற் சேர்க்கின்ற கடல் அலைகள் பொருந்திய திரு வொற்றியூரே .


பாடல் எண் : 2
பந்தும் கிளியும் பயிலும் பாவை
சிந்தை கவர்வார் செந்தீ வண்ணர்,
எந்தம் அடிகள் இறைவர்க் கிடம்போல்
உந்தும் திரைவாய் ஒற்றி யூரே

         பொழிப்புரை : பந்தாடுதலையும் , கிளியை வளர்த்தலையும் பலகாலும் செய்கின்ற , பாவை போல்வாளாகிய உமையவளது மனத்தைக் கவர்பவரும் , சிவந்த நெருப்புப்போலும் நிறத்தையுடைய வரும் , எங்கள் தலைவரும் ஆகிய இறைவருக்கு இடமாவது , பல பொருள்களைத் தள்ளி வருகின்ற கடல் அலைகள் பொருந்திய திருவொற்றியூரே .


பாடல் எண் : 3
பவளக் கனிவாய்ப் பாவை பங்கன்,
கவளக் களிற்றின் உரிவை போர்த்தான்,
தவழும் மதிசேர் சடையாற்கு இடம்போல்
உகளும் திரைவாய் ஒற்றி யூரே

         பொழிப்புரை : பவளமும் , கனியும் போலும் இதழையுடைய, பாவை போன்றவளாகிய உமையது பாகத்தை உடையவனும் , கவளத்தை உண்கிற களிற்றி யானையினது தோலைப் போர்த்தவனும் , தவழ்ந்து பெயரும் பிறை பொருந்திய சடையையுடையவனும் ஆகிய இறைவனுக்கு இடமாவது , புரளுகின்ற கடல் அலைகள் பொருந்திய திருவொற்றியூரே .


பாடல் எண் : 4
என்னது எழிலும் நிறையும் கவர்வான்,
புன்னை மலரும் புறவில் திகழும்,
தன்னை முன்னம் நினைக்கத் தருவான்,
உன்னப் படுவான் ஒற்றி யூரே.

         பொழிப்புரை : முதலில் யான் நினைக்குமாறு தன்னைத் தருபவனும் , பின்பு என்னால் நினைக்கப்படுவனும் ஆகிய இறைவன் , எனது அழகையும் , மன உறுதியையும் கவர்தற்பொருட்டு , திருவொற்றி யூரில் , புன்னை மலர்கள் மலர்கின்ற கானலிடத்தே விளங்குவான் .


பாடல் எண் : 5
பணங்கொள் அரவம் பற்றி, பரமன்
கணங்கொள் சூழக் கபாலம் ஏந்தி,
வணங்கும் இடைமென் மடவார் இட்ட
உணங்கல் கவர்வான் ஒற்றி யூரே.

         பொழிப்புரை : படத்தையுடைய பாம்பைக் கையில்பிடித்திருப்பவனும் , மேலானவனும் , பூத கணங்கள் சூழத் தலையோட்டை ஏந்திச் சென்று , துவளுகின்ற இடையினையுடைய மகளிர் இடுகின்ற சோற்றை ஏற்பவனும் ஆகிய இறைவன் திருவொற்றியூரிலே நீங்காது எழுந் தருளியிருப்பான் .


பாடல் எண் : 6
படையார் மழுவன், பால்வெண் நீற்றன்,
விடையார் கொடியன், வேத நாவன்,
அடைவார் வினைகள் அறுப்பான், என்னை
உடையான் உறையும் ஒற்றி யூரே

         பொழிப்புரை : படைக்கலத் தன்மை பொருந்திய மழுவையும் , பால்போலும் வெள்ளிய திருநீற்றையும் , இடபம் பொருந்திய கொடியையும் , வேதத்தை ஓதுகின்ற நாவையும் உடையவனும் , தன்னை அடைக்கலமாக அடைபவரது வினைகளை ஒழிப்பவனும் , என்னை ஆளாக உடையவனும் ஆகிய இறைவன் ` திருவொற்றி யூரிலே நீங்காது எழுந்தருளியிருப்பான் .


பாடல் எண் : 7
சென்ற புரங்கள் தீயில் வேவ
வென்ற விகிர்தன், வினையை வீட்ட
நன்று நல்ல நாதன், நரைஏறு
ஒன்றை உடையான் ஒற்றி யூரே

         பொழிப்புரை : வானத்தில் உலாவிய மதில்கள் நெருப்பில் வெந்தொழியுமாறு அவற்றை வென்ற , வேறுபட்ட தன்மையை உடைய வனும் , வினைகளைப் போக்குதற்கு மிகவும் நல்ல கடவுளும் , வெண்மையான இடபம் ஒன்றை உடையவனும் ஆகிய இறைவன் , திருவொற்றியூரிலே நீங்காது எழுந்தருளியிருப்பான் .


பாடல் எண் : 8
கலவ மயில்போல் வளைக்கை நல்லார்
பலரும் பரவும் பவளப் படியான்,
உலகின் உள்ளார் வினைகள் தீர்ப்பான்,
உலவும் திரைவாய் ஒற்றி யூரே

         பொழிப்புரை : தோகையையுடைய மயில்போலும் , வளையை அணிந்த கைகளையுடைய அழகிய மகளிர் பலரும் துதிக்கின்ற , பவளம்போலும் உருவத்தையுடையவனாகிய இறைவன் , கரையில் வந்து உலாவுகின்ற கடல் அலைகள் பொருந்திய திருவொற்றியூரில் இருந்தே , உலகில் உள்ளவரது வினைகளை எல்லாம் தீர்ப்பான் .


பாடல் எண் : 9
பற்றி வரையை எடுத்த அரக்கன்
இற்று முரிய விரலால் அடர்த்தார்,
எற்றும் வினைகள் தீர்ப்பார், ஓதம்
ஒற்றும் திரைவாய் ஒற்றி யூரே

         பொழிப்புரை : தமது மலையைப்பற்றி அசைத்த அரக்கனாகிய இராவணனை , அவனது உறுப்புக்கள் ஒடிந்து முரியும்படி நெருக்கின வராகிய இறைவர் , கடல் நீர் சூழ்ந்த , அலைகள் பொருந்திய திரு வொற்றியூரில் இருந்தே , அடியவரைத் தாக்குகின்ற வினைகளை நீக்குவார் .


பாடல் எண் : 10
ஒற்றி ஊரும் அரவும் பிறையும்
பற்றி ஊரும் பவளச் சடையான்,
ஒற்றி யூர்மேல் ஊரன் உரைத்த
கற்றுப் பாடக் கழியும் வினையே.

         பொழிப்புரை : ஒன்றை ஒன்று உராய்ந்து ஊர்கின்ற பாம்பும் , பிறையும் பற்றுக்கோடாக நின்று ஊரும் பவளம்போலும் சடையை உடைய இறைவனது திருவொற்றியூர்மேல் நம்பியாரூரன் பாடிய இப்பாடல்களை நன்கு கற்றுப்பாடினால் , வினைகள் நீங்கும் .
                                             திருச்சிற்றம்பலம்

சுந்தரர் திருப்பதிக வரலாறு:

         தம்பிரான் தோழர், பெருமான் அருளால் மகிழமரத்தடியில் சபதம் செய்து, சங்கிலியாரை மணந்து, மகிழ்வுடனிருந்து, திருவாரூர்ப் பெருமானது வசந்த விழாவைக் காண, திருவொற்றியூர் எல்லை நீங்கியதும் இரு கண்களின் ஒளி மறைந்து, அதனால் மூர்ச்சித்து "சூளுறவு மறுத்ததால் இவ்வினை வந்து எய்தியது'. என்று எண்ணி, 'எம்பெருமானை இத்துயர் நீங்கப் பாடுவேன்' என்று நினைந்து பாடிருளியது இத் திருப்பதிகம். (தி. 12 பெரிய, புரா. ஏயர்கோன். புரா. )

பெரிய புராணப் பாடல் எண் : 270
பொங்குதமிழ்ப் பொதியமலைப் பிறந்து, பூஞ் சந்தனத்தின்
கொங்குஅணைந்து, குளிர்சாரல் இடைவளர்ந்த கொழுந்தென்றல்
அங்குஅணைய, திருவாரூர் அணிவீதி அழகர்அவர்
மங்கலநாள் வசந்தம்எதிர் கொண்டுஅருளும் வகைநினைந்தார்.

         பொழிப்புரை : தமிழ் மேன்மேலும் தழைத்து வளருகின்ற பொதிய மலையில் தோன்றி, பூக்கள் மலரும் சந்தன மரங்களின் அடுக்கலில் அணைந்து, குளிர்ந்த மரச்சாரலிடையாக வளர்ந்து வரும் மிருதுவாய தென்றல் காற்று அங்கு வீசிடவும், அக்காற்றின் நலம் கண்ட நம்பிகள், திருவாரூரின் அழகிய வீதிகளில் வசந்த விழாப்பெருநாள்களில் எழுந்தருளி உலாப்போகும் பெருமான் எதிராக வசந்தக் காற்று எதிர் கொண்டு வணங்கும் தன்மையை நினைந்தருளினார்.

பெ. பு. பாடல் எண் : 271
வெண்மதியின் கொழுந்துஅணிந்த வீதிவிடங் கப்பெருமான்,
ஒண்ணுதலார் புடைபரந்த ஓலக்கம் அதன்இடையே,
பண்அமரும் மொழிப்பரவை யார்பாடல் ஆடல்தனைக்
கண்ணுறமுன் கண்டுகேட் டார்போலக் கருதினார்.

         பொழிப்புரை : (அதுபொழுது) நம்பிகள், வெண்பிறையின் கொழுந்து அணிந்த வீதிவிடங்கப் பெருமானது, அழகிய நெற்றியை யுடைய பெண்கள் சூழ்ந்திடக் கொலு வீற்றிருக்கும் திருமண்டபத்துப் பண் பொருந்தும் மொழியையுடைய பரவையாரது பாடல் ஆடல் ஆகிய இவைகளைத் தம் கண்முன்னாகக் கண்டு கேட்கப்பெற்றாற் போலவே கருதினார்.


பெ. பு. பாடல் எண் : 272
பூங்கோயில் அமர்ந்தாரை, புற்றிடங்கொண்டு இருந்தாரை,
நீங்காத காதலினால் நினைந்தாரை நினைவாரை,
பாங்காகத் தாமுன்பு பணியவரும் பயன்உணர்வார்,
"ஈங்குநான் மறந்தேன்" என்று ஏசறவால் மிகஅழிவார்.

         பொழிப்புரை : பூங்கோயிலில் வீற்றிருக்கும் புற்றிடங் கொண்ட பெருமானாரை, நீங்காத காதலினால் தம்மை நினைத்திருப்பவரை தாமும் நினைந்து அருளுவாரைத் தாம் முன்னைய நாள்களில் பணிய, அதனால் வருகின்ற இன்பப் பயனை உணர்வாராகிய அவர், இங்கே நான் மறந்தேனே என எண்ணிப் பதைப்பால் மிகவும் மனம் அயர்வாராய்,


பெ. பு. பாடல் எண் : 273
மின்ஒளிர்செஞ் சடையானை வேதமுதல் ஆனானை,
மன்னுபுகழ்த் திருவாரூர் மகிழ்ந்தானை, மிகநினைந்து
பன்னியசொல் "பத்திமையும் அடிமையையும் கைவிடுவான்"
என்னும்இசைத் திருப்பதிகம் எடுத்துஇயம்பி இரங்கினார்.

         பொழிப்புரை : மின்போல் ஒளிரும் செஞ்சடையையுடைய பெருமானை, மறைகட்கெல்லாம் முதற்பொருளாயினானை, சீர் மன்னிய புகழுடைய திருவாரூரில் மகிழ்ந்திருப்பவனை, மிகவும் நீள நினைந்து, பலபடப் புகழ்ந்த சொற்களாலாய `பத்திமையும் அடிமை யையும் கைவிடுவான்\' எனத் தொடங்கும் இசையுடைய பதிகத்தால் பாடி, மிகவும் இரங்கினார்.

         குறிப்புரை : `பத்திமையும் அடிமையையும் கைவிடுவான்\' எனத் தொடங்கும் பதிகம், பழம்பஞ்சுரப் பண்ணில் அமைந்ததாகும் (தி.7 ப.51).

சுந்தரர் திருப்பதிகம்

7. 051    திருவாரூர்                   பண் - பழம்பஞ்சுரம்
                                             திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
பத்திமையும் அடிமையையும்
         கைவிடுவான் பாவியேன்
பொத்தினநோய் அதுஇதனைப்
         பொருள்அறிந்தேன் போய்த்தொழுவேன்
முத்தினைமா மணிதன்னை
         வயிரத்தை மூர்க்கனேன்
எத்தனைநாள் பிரிந்து இருக்கேன்
         என்ஆரூர் இறைவனையே.

         பொழிப்புரை : பாவியும் , மூடனும் ஆகிய யான் , என் அன்பையும் , அடிமையையும் விட்டொழியும்படி , முத்தும் , சிறந்த மாணிக்கமும் , வயிரமும் போன்ற எனது திருவாரூர் இறைவனைப் பிரிந்து எத்தனை நாள் இவ்விடத்திற்றானே இருப்பேன் ! என்னை மூடியுள்ள நோயாகிய இவ்வுடம்பின் மெய்ம்மையை அறிந்துகொண்டேன் ; ஆதலின் இங்கு இரேன் ; விரையச் சென்று அவனை வணங்குவேன் .


பாடல் எண் : 2
ஐவணமாம் பகழிஉடை அடல்மதனன் பொடியாகச்
செவ்வணமாம் திருநயனம் விழிசெய்த சிவமூர்த்தி
மைஅணவும் கண்டத்து வளர்சடைஎம் ஆர்அமுதை
எவ்வணம்நான் பிரிந்துஇருக்கேன் என்ஆரூர் இறைவனையே.

         பொழிப்புரை : ஐந்து வகையான அம்புகளைப் பெற்ற , வெற்றியையுடைய மன்மதன் சாம்பலாகுமாறு , செந்நிறமான அழகிய நெற்றிக் கண்ணைத் திறந்த சிவமூர்த்தியாகிய , கருமை பொருந்திய கண்டத்தையும் , நீண்ட சடையினையும் உடைய , எங்கள் அரிய அமுதம் போன்ற எனது திருவாரூர் இறைவனைப் பிரிந்து , நான் எவ்வாறு இவ்விடத்திற்றானே இருப்பேன் ! இரேன்; விரையச்சென்று அவனை வணங்குவேன் .


பாடல் எண் : 3
சங்கு அலக்குந் தடம்கடல்வாய்
         விடம்சுடவந்து அமரர்தொழ
அங்குஅலக்கண் தீர்த்துவிடம்
         உண்டு உகந்த அம்மானை
இங்குஅலக்கும் உடல்பிறந்த
         அறிவுஇலியேன் செறிவுஇன்றி
எங்குஉலக்கப் பிரிந்து இருக்கேன்
         என்ஆரூர் இறைவனையே.

         பொழிப்புரை : வருத்துதலைச் செய்கின்ற உடலிற்பட்டு இவ்வுலகிற் பிறந்த அறிவில்லேனாகிய யான் , தேவர் , சங்குகள் விளங்குகின்ற பெரிய கடலிடத்துத் தோன்றிய ஆலகாலவிடம் தம்மைச் சுடுகை யினாலே அடைக்கலமாக வந்து வணங்க , அப்பொழுதே அவரது துன்பத்தை நீக்கி , அவ்விடத்தை உண்டு , அவரை விரும்பிக் காத்த பெரியோனாகிய எனது திருவாரூர் இறைவனை அடைதல் இன்றிப் பிரிந்து , எவ்விடத்து இறத்தற்பொருட்டு இவ்விடத்திற்றானே இருப்பேன் ! இரேன் ; விரையச் சென்று அவனை வணங்குவேன் .


பாடல் எண் : 4
இங்ஙனம்வந்து இடர்ப்பிறவிப்
         பிறந்து அயர்வேன் அயராமே
அங்ஙனம்வந்து எனைஆண்ட
         அருமருந்து என் ஆர்அமுதை
வெங்கனல்மா மேனியனை
         மான்மருவுங் கையானை
எங்ஙனம்நான் பிரிந்து இருக்கேன்
         என்ஆரூர் இறைவனையே.

         பொழிப்புரை : இவ்வுலகில் வந்து , துன்பத்தைத் தருகின்ற பிறப்பிற் பிறந்து மயங்குவேனாகிய யான் , அங்ஙனம் மயங்காதவாறு நான் பிறந்திருந்த ஊரிற்றானே வந்து என்னை அடிமையாக்கிக்கொண்ட அரிய மருந்தும் , அமுதும் போல்பவனும் , வெம்மையான நெருப்புப் போலும் சிறந்த திருமேனியை உடையவனும் , மான் பொருந்திய கையை உடையவனும் ஆகிய எனது திருவாரூர் இறைவனைப் பிரிந்து , நான் எவ்வாறு இவ்விடத்திற்றானே இருப்பேன் ! இரேன் ; விரையச் சென்று அவனை வணங்குவேன் .


பாடல் எண் : 5
செப்பஅரிய அயனொடுமால் சிந்தித்தும் தெரிவு அரிய
அப்பெரிய திருவினையே அறியாதே அருவினையேன்
ஒப்பரிய குணத்தானை இணைஇலியை அணைவு இன்றி
எப்பரிசு பிரிந்து இருக்கேன் என்ஆரூர் இறைவனையே

         பொழிப்புரை : நீக்குதற்கரிய வினையையுடையேனாகிய யான் , சொல்லுதற்கரிய பெருமையையுடைய , ` பிரமதேவனும் , திருமாலும் ` என்னும் அவர்தாமும் நினைத்தற்கும் , காண்பதற்கும் அரிய அத் தன்மைத்தாய பெரிய செல்வமாய் உள்ளவனும் , பிறர் ஒருவரது குணமும் நிகர்த்தல் இல்லாத அருட்குணங்களை யுடையவனும் , பிறர் ஒருவரும் தனக்கு நிகரில்லாதவனும் ஆகிய எனது திருவாரூர் இறைவனை நினைத்தலும் , அடைதலும் இன்றிப் பிரிந்து , எவ்வாறு இவ்விடத்திற்றானே இருப்பேன் ! இரேன் ; விரையச் சென்று அவனை வணங்குவேன் .


பாடல் எண் : 6
வன்நாக நாண்வரைவில் அங்கிகணை அரிபகழி
தன்ஆகம் உறவாங்கிப் புரம்எரித்த தன்மையனை
முன்னாக நினையாத மூர்க்கனேன் ஆக்கைசுமந்து
என்ஆகப் பிரிந்துஇருக்கேன் என்ஆரூர் இறைவனையே

         பொழிப்புரை : வலிய பாம்பு நாணியும் , மலை வில்லும் , திருமால் அம்பும் , அங்கியங் கடவுள் அம்பின் முனையுமாகத் தன் மார்பிற் பொருந்த வலித்து முப்புரத்தை எரித்த தன்மையை உடையவனாகிய எனது திருவாரூர் இறைவனை முன்பே நினைந்து போக முயலாத மூடனேனாகிய யான் , அவனைப் பிரிந்து , என்னாவதற்கு இவ் வுடலைச் சுமந்து இவ்விடத்திற்றானே இருப்பேன் ! இரேன் ; விரையச் சென்று அவனை வணங்குவேன் .


பாடல் எண் : 7
வன்சயமாய் அடியான்மேல் வருங்கூற்றின் உரம்கிழிய
முன்சயம்ஆர் பாதத்தால் முனிந்து உகந்த மூர்த்திதனை
மின்செயும்வார் சடையானை விடையானை அடைவுஇன்றி
என்செயநான் பிரிந்து இருக்கேன் என்ஆரூர் இறைவனையே

         பொழிப்புரை : பின்னிடாத வெற்றியையுடையவனாய்த் தன் அடியவன்மேல் வந்த கூற்றுவனை அவனது மார்பு பிளக்கும்படி வெற்றி பொருந்திய தனது திருவடியால் முன்பு உதைத்து , பின்பு எழுப்பிய மூர்த்தியும் , மின்னலினது ஒளியை உண்டாக்குகின்ற நீண்ட சடையையும் , விடையையும் உடையவனும் ஆகிய எனது திருவாரூர் இறைவனை அடைதல் இன்றிப்பிரிந்து , நான் , என் செய்வதற்கு இவ் விடத்திற்றானே இருப்பேன் ! இரேன் ; விரையச் சென்று அவனை வணங்குவேன் .


பாடல் எண் : 8
முன்நெறிவா னவர்கூடித்
         தொழுது ஏத்தும் முழுமுதலை
அந்நெறியை அமரர்தொழும்
         நாயகனை அடியார்கள்
செந்நெறியைத் தேவர்குலக்
         கொழுந்தை மறந்து இங்ஙனம் நான்
என்அறிவான் பிரிந்துஇருக்கேன்
         என்ஆரூர் இறைவனையே

         பொழிப்புரை : பிற உயிர்கட்கு அவை செல்லுமாறு நிற்கும் நெறி யாய் உள்ள பிரமனும் , மாயோனும் கூடி வணங்கிப் போற்றுகின்ற முழு முதற் பொருளானவனும் , அப்பொருளை அடையும் நெறியாய் உள்ள வனும் , ஏனைய தேவரும் வணங்கும் தலைவனும் , எல்லாத் தேவருள்ளும் சிறந்த தேவனும் , தன் அடியார்களுக்குச் செவ்விய நெறியாய் விளங்குபவனும் ஆகிய எனது திருவாரூர் இறைவனைப் பிரிந்து மறந்து , நான் , எதனை அறிந்து அனுபவித்தற்பொருட்டு இவ்விடத் திற்றானே இருப்பேன் ! இரேன் ; விரையச் சென்று அவனை வணங்குவேன் .

பாடல் எண் : 9
கற்றுஉளவான் கனியாய
         கண்ணுதலைக் கருத்துஆர
உற்று உளன்ஆம் ஒருவனைமுன்
         இருவர் நினைந்து இனிது ஏத்தப்
பெற்று உளன்ஆம் பெருமையனைப்
         பெரிதுஅடியே கை அகன்றிட்டு
எற்று உளனாய்ப் பிரிந்துஇருக்கேன்
         என்ஆரூர் இறைவனையே

         பொழிப்புரை : மெய்ந்நூல்களைக் கற்று நினைக்குமிடத்துச் சிறந்த கனிபோல இனிக்கின்ற , கண்ணையுடைய நெற்றியையுடையவனும் , என் உள்ளத்தில் நிரம்பப் பொருந்தியுள்ளவனாகிய ஒப்பற்றவனும் , முன்பு இருவராகிய மாலும் அயனும் நினைந்து நன்கு போற்றப் பெற்ற பெருமையை உடையவனும் ஆகிய எனது திருவாரூர் இறைவனை , அவன் அடியேனாகிய யான் எனது ஒழுக்கத்தைப் பெரிதும் நீங்கிப் பிரிந்து , எதன்பொருட்டு இறவாது உள்ளேனாய் , இவ்விடத்திற்றானே இருப்பேன் ! இரேன் ; விரையச் சென்று அவனை வணங்குவேன் .


பாடல் எண் : 10
ஏழ்இசையாய், இசைப்பயனாய்,
         இன்அமுதாய், என்னுடைய
தோழனுமாய், யான்செய்யும்
         துரிசுகளுக்கு உடனாகி,
மாழைஒண்கண் பரவையைத் தந்து
         ஆண்டானை, மதியில்லா
ஏழையேன் பிரிந்துஇருக்கேன்,
         என்ஆரூர் இறைவனையே

         பொழிப்புரை : ஏழிசைகளைப் போன்றும் , அவ்விசைகளின் பயனாகிய பண்களைப் போன்றும் , இனிய அமுதத்தைப்போன்றும் இன்பத்தைத் தந்து , அதன்மேல் என்னுடைய தோழனும் ஆகி , யான் செய்யும் குற்றங்களுக்கு உடன்பட்டு , மாவடுவின் வகிர்போலும் , ஒளி பொருந்திய கண்களையுடைய பரவையை எனக்கு ஈந்து என்னை அடிமைகொண்டவனாகிய எனது திருவாரூர் இறைவனை , அறி வில்லாத எளியேன் பிரிந்து இவ்விடத்திற்றானே இருப்பேனோ ! இரேன் ; விரையச் சென்று அவனை வணங்குவேன் .


பாடல் எண் : 11
வங்கம்மலி கடல்நஞ்சை
         வானவர்கள் தாம்உய்ய
நுங்கிஅமுது அவர்க்குஅருளி
         நொய்யேனைப் பொருட்படுத்துச்
சங்கிலியோடு எனைப் புணர்த்த
         தத்துவனைச் சழக்கனேன்
எங்கு உலக்கப் பிரிந்து இருக்கேன்
         என்ஆரூர் இறைவனையே

         பொழிப்புரை : தேவர்கள் பிழைத்தற்பொருட்டு , மரக்கலங்கள் நிறைந்த கடலில் தோன்றிய நஞ்சினைத் தான் உண்டு , அமுதத்தை அவர்கட்கு அருளினவனும் , சிறியேனை ஒரு பொருளாகவைத்து என் வேண்டுகோளுக்கு இரங்கி , என்னைச் சங்கிலியோடு கூட்டுவித்த மெய்ப்பொருளாய் உள்ளவனும் ஆகிய எனது திருவாரூர் இறை வனைப் பொய்யனாகிய யான் எங்கு இறப்பதற்குப் பிரிந்து இவ் விடத்திற்றானே இருப்பேன் ! இரேன் ; விரையச் சென்று அவனை வணங்குவேன் .


பாடல் எண் : 12
பேர்ஊரும் மதகரியின் உரியானைப் பெரியவர்தம்
சீர்ஊரும் திருவாரூர்ச் சிவன்அடியே திறம்விரும்பி
ஆரூரன் அடித்தொண்டன் அடியன்சொல் அகலிடத்தில்
ஊர்ஊரன் இவைவல்லார் உலகவர்க்கு மேலாரே

         பொழிப்புரை : செயற்கரிய செய்த பெரியார் தம் புகழ்மிக்கு விளங்கும் திருவாரூரில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானது திரு வடியைச் சென்று சேரும் திறத்தையே விரும்பி , புகழ்மிகுந்த மதயானையின் தோலையுடைய அவனை , அவன் அடித்தொண்டனாகிய , இவ்வுலகின்கண் எங்கும் செல்கின்ற நம்பியாரூரன் சொல்லிய இப் பாடல்களைப் பாடவல்லவர் , உலகர் எல்லார்க்கும் மேலானவராவர் .
                                             திருச்சிற்றம்பலம்



சுந்தரர் திருப்பதிக வரலாறு

பெ. பு. பாடல் எண் : 274
பின்ஒருநாள் திருவாரூர் தனைப்பெருக நினைந்துஅருளி
உன்னஇனி யார்கோயில் புகுந்துஇறைஞ்சி ஒற்றிநகர்
தன்னைஅக லப்புக்கார், தாம்செய்த சபதத்தால்
முன்அடிகள் தோன்றாது கண்மறைய, மூர்ச்சித்தார்.

         பொழிப்புரை : பின்பொரு நாள், திருவாரூரினை மிகவும் நினைந்தருளி, நினைக்க இனிமைதரும் பெருமானாரது திருவொற்றியூர்க் கோயிலுக்குள் சென்று பணிந்து, தாம் திருவாரூருக்குப் போக ஒருப்பட்டுத் திருவொற்றியூர் நகரினின்றும் அகன்றிடத் தாம் முன்செய்த சூளுரையால், தம் அடி பெயர்ந்திடும் நிலையறியாது கண் ஒளி மறைய மயங்கினார்.


பெ. பு. பாடல் எண் : 275
செய்வதனை அறியாது திகைத்துஅருளி, நெடிதுஉயிர்ப்பார்,
மைவிரவு கண்ணார்பால் சூள்உறவு மறுத்ததனால்
இவ்வினைவந்து எய்தியதாம் எனநினைந்து,எம் பெருமானை
வெவ்வியஇத் துயர்நீங்கப் பாடுவேன் எனநினைந்து.

         பொழிப்புரை : மேற்செய்வதறியாது திகைத்தருளி, நெடிது பெருமூச்செறிபவர், மைபூசிய கண்களையுடைய சங்கிலியார்பாலா கச் செய்த சூளுரையை மறுத்தலால், இவ்விளைவு நேர்ந்தது என எண்ணி எம்பெருமானைக் கொடிய இத்துயர் நீங்கிடப் பாடுவேன் என நினைந்து,

  
பெ. பு. பாடல் எண் : 276
"அழுக்கு மெய்கொடு"என்று எடுத்தசொற் பதிகம்
         ஆதி நீள்புரி அண்ணலை ஓதி
வழுத்து நெஞ்சொடு தாழ்ந்துநின்று உரைப்பார்,
         மாதொர் பாகனார் மலர்ப்பதம் உன்னி
இழுக்கு நீக்கிட வேண்டும்என்று இரந்தே,
         எய்து வெந்துயர்க் கையற வினுக்கும்
பழிக்கும் வெள்கி,நல் இசைகொடு பரவிப்
         பணிந்து சாலவும் பலபல நினைவார்.

         பொழிப்புரை : `அழுக்கு மெய் கொடு\' எனத் தொடங்கும் செஞ்சொல் திருப்பதிகத்தை, ஆதியாய திருவொற்றியூர் இறைவனாரைப் போற்றி வணங்கும் நெஞ்சோடு தாழ்ந்து, அங்கு நின்று பாடும் அவர், உமையொரு கூறராய பெருமானாரின் மலரனைய திருவடிகளை நினைந்து, தமக்கு நேர்ந்த இழுக்கு நீங்கிட வேண்டும் என்று இரந்து துயர் தரும் செயலற்ற நிலைக்கும் தமக்குக் கண்பார்வை இழந்ததால் வந்த பழிக்கும் நாணி, நல்ல இசை கொண்டு எம்பெருமானைப் போற்றிப் பணிந்து பல பல நினைவாராய்,

         குறிப்புரை : `அழுக்கு மெய் கொடு' எனத் தொடங்கும் பதிகம் தக்கேசிப் பண்ணில் அமைந்ததாகும் (தி.7 ப.54).


பெ. பு. பாடல் எண் : 277
அங்கு நாதர்செய் அருள்அது வாக,
         அங்கை கூப்பிஆ ரூர்தொழ நினைந்தே,
பொங்கு காதன்மீ ளாநிலை மையினால்
         போது வார்வழி காட்ட,முன் போந்து
திங்கள் வேணியார் திருமுல்லை வாயில்
         சென்று இறைஞ்சி, நீடிய திருப்பதிகம்
"சங்கிலிக் காகஎன் கண்களை மறைத்தீர்"
         என்று சாற்றிய தன்மையிற் பாடி.

         பொழிப்புரை : அங்குத் திருவொற்றியூர் இறைவர் செய்த அருள் அதுவேயாகத் தம் அழகிய கைகளைக் கூப்பி வணங்கித் திருவாரூர்ச் சென்று தொழ விரும்பிப் பொங்கும் காதலால், வழிக்கொள்ளும் அவர், முன்போவார் வழிகாட்டிடச் சென்று, இளம்பிறையைச் சடையிலுடைய பெருமானின் வடதிருமுல்லைவாயில் என்னும் திருப்பதிக்குச் சென்று வணங்கி, பெருமை மிகுந்த திருப்பதிகம் பாடுவார், `சங்கிலிக்காக என் கண்களை மறைத்தீர்' எனப் பாடியருளினார்.

         குறிப்புரை : வடதிருமுல்லைவாயிலில் அருளிய `திருவும் மெய்ப் பொருளும்' (தி.7 ப.69) எனத் தொடங்கும் தக்கேசிப் பண்ணில் அமைந்த பதிகத்தின் இரண்டாவது பாடலில் வரும் `சங்கிலிக்கா என் கண் கொண்ட பண்ப\' எனவருவதை ஆசிரியர் இங்குச் சொல்கிறார்.


சுந்தரர் திருப்பதிகம்

7. 054    திருவொற்றியூர்                  பண் - தக்கேசி
                                    திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
அழுக்கு மெய்கொடுஉன் திருவடி அடைந்தேன்,
         அதுவும் நான்படற் பாலதுஒன்று ஆனால்,
பிழுக்கை வாரியும் பால்கொள்வர் அடிகேள்,
         பிழைப்பன் ஆகிலும் திருவடிப் பிழையேன்,
வழுக்கி வீழினும், திருப்பெயர் அல்லால்
         மற்று நான்அறி யேன்மறு மாற்றம்,
ஒழுக்க என்கணுக்கு ஒருமருந்து உரையாய்
         ஒற்றி யூர்எனும் ஊர்உறை வானே

         பொழிப்புரை : தலைவனே , ` ஒற்றியூர் ` என்று பெயர் சொல்லப் படுகின்ற ஊரின்கண் எழுந்தருளியிருப்பவனே , அடியேன் , உன் திருவடியை இடையீடின்றி யடையமாட்டாது , மாசுடைய உடம்பு கொண்டே அடைவேனாயினேன் ; அவ் விழி நிலைதானும் நான் அடையத்தக்க தொன்றாகியேவிடுமாயின் , ஒளியிழந்த என் கண்ணுக்கு ஊற்றத்தக்கதொரு மருந்தையேனும் , என் வேண்டு கோளுக்கு விடையாக நீ சொல்லியருள் ; ஏனெனில் , பசு முதலிய வற்றினிடத்திற் பாலை விரும்புவோர் , அவை இடுகின்ற சாணத்தை எடுத்தற் றொழிலைச் செய்தாயினும் அதனைக் கொள்வர் ; அதுபோல , நீ என் குற்றங்களை நோக்கி , இகழாது , உயிர்களிடத்து நீ விரும்புவ தாகிய குணம் என்னிடத்து இருத்தலை நோக்கி என்னை ஏற்றருளுதல் வேண்டும் . அக் குணமாவது ; யான் எப் பிழைசெய்வேனாயினும் , உன் திருவடிக்குப் பிழையைச் செய்யேன் ; வழுக்கிவிழும் பொழுதும் உன் திருப்பெயரைச் சொல்லுதலன்றி , வேறொன்றை அறியேன் .


பாடல் எண் : 2
கட்ட னேன்பிறந் தேன்உனக்கு ஆளாய்க்
         காதற் சங்கிலி காரண மாக,
எட்டி னால்திக ழுந்திரு மூர்த்தீ,
         என்செய் வான்அடி யேன்எடுத்து உரைக்கேன்,
பெட்டன் ஆகிலும் திருவடிப் பிழையேன்,
         பிழைப்பன் ஆகிலும் திருவடிக்கு அடிமை
ஒட்டி னேன்,எனை நீசெய்வது எல்லாம்
         ஒற்றி யூர்எனும் ஊர்உறை வானே

         பொழிப்புரை : ` எட்டு ` என்னும் எண்ணின் வகையினால் விளங்குகின்ற சிறந்த வடிவங்களையுடையவனே , ` ஒற்றியூர் ` என்று பெயர்சொல்லப் படுகின்ற ஊரின்கண் எழுந்தருளியிருப்பவனே , துன்பத்தைத் தரும் வினையையுடையேனாகிய யான் , அவ்வினை காரணமாக , இம் மண்ணுலகிற் பிறந்தேன் ; பிறந்து உனக்கு ஆளாகி , இடையே மாதரை விரும்பி மணந்தேனாயினும் , உன் திருவடியை மறந்திலேன் ; பிறவற்றைச் செய்யத் தவறினேனாயினும் , திருவடிக்குச் செய்யும் அடிமையில் இடைவிடாது நின்றேன் ; என்ன செய்தற் பொருட்டு அவற்றை நான் இப்பொழுது எடுத்துரைப்பேன் ! இத் துன்பமெல்லாம் , என்காதலுக்கு இடமாய் நின்ற சங்கிலி காரணமாக நீ செய்வனவேயாகும்


பாடல் எண் : 3
கங்கை தங்கிய சடைஉடைக் கரும்பே,
         கட்டி யே,பலர்க்கும் களை கண்ணே,
அங்கை நெல்லியின் பழத்திடை அமுதே,
         அத்தா, என்இடர் ஆர்க்குஎடுத்து உரைக்கேன்,
சங்கும் இப்பியும் சலஞ்சலம் முரல
         வயிரம் முத்தொடு பொன்மணி வரன்றி
ஒங்கு மாகடல் ஓதம்வந்து உலவும்
         ஒற்றி யூர்எனும் ஊர்உறை வானே

         பொழிப்புரை : கங்கை பொருந்தியுள்ள சடையையுடையவனே , அடியார்கட்குக் கரும்பும் , கட்டியும் , அகங்கையிற்கிடைத்த நெல்லிக் கனியில் உள்ள அமுதமும்போல இனிமையைத் தருகின்றவனே , அனைவர்க்கும் பற்றுக்கோடாய் உள்ளவனே , தந்தையே, சங்குகளும் , சிப்பிகளும் , சலஞ்சலம் என்னும் சங்குகளும் ஒலிக்க , ` வயிரம், முத்து , பிற மணிகள் , பொன் ` என்பவற்றை வாரிக்கொண்டு , பெரிய கடலின் கண் உயர எழுகின்ற அலைகள் வந்து உலவுகின்ற , ` ஒற்றியூர் ` என்று பெயர் சொல்லப்படுகின்ற ஊரின்கண் எழுந்தருளியிருப்பவனே , நீயே எனக்குத் துன்பஞ் செய்வையாயின் , அதனை நான் யாரிடம் நீக்குமாறு எடுத்துச்சொல்வேன் !


பாடல் எண் : 4
ஈன்று கொண்டதுஓர் சுற்றம்ஒன்று அன்றால்,
         யாவர் ஆகில்என் அன்புடை யார்கள்,
தோன்ற நின்றுஅருள் செய்துஅளித் திட்டால்
         சொல்லு வாரைஅல் லாதன சொல்லாய்,
மூன்று கண்உடை யாய்அடி யேன்கண்
         கொள்வ தேகணக் குவ்வழக்கு ஆகில்,
ஊன்று கோல்எனக்கு ஆவது ஒன்று அருளாய்
         ஒற்றி யூர்எனும் ஊர்உறை வானே

         பொழிப்புரை : ` ஒற்றியூர் ` என்று பெயர் சொல்லப் படுகின்ற ஊரின்கண் எழுந்தருளியிருப்பவனே . ` தாய் பெற்றதனால் கொள்ளப் பட்டதொரு சுற்றம் என்பது ஒரு பொருளன்று ; அன்புடையவர்கள் யாராய் இருப்பினும் என் என்கின்ற இம்முறைமை பற்றி . நீ உன்னிடத்து அன்புசெய்பவரை , உனது இயற்கை வடிவம் அவர்கட்குப் புலனாகுமாறு வெளிநின்று ஆட்கொண்டுவிட்டால் , அதன்பின் உன் பெயரையே சொல்லிக் கொண்டிருப்பவரை , நீ ஒரு ஞான்றும் கடுஞ்சொற் சொல்லுவாயல்லை ; அங்ஙனமாகவும் , மூன்று கண்களை யுடையையாகிய நீ உன் அடியேனது இரண்டு கண்களைப் பறித்துக் கொள்வது , யான் செய்த குற்றங் காரணமாக நீதி நூல்களில் உள்ள முறைமையே யாகில் , எனக்கு உதவியாய் நிற்பதோர் , ஊன்று கோலையேனும் அளித்தருள் .


பாடல் எண் : 5
வழித்த லைப்படு வான்முயல் கின்றேன்,
         உன்னைப் போல்என்னைப் பாவிக்க மாட்டேன்,
சுழித்த லைப்பட்ட நீர்அது போலச்
         சுழல்கின் றேன்,சுழல் கின்றதுஎன் உள்ளம்,
கழித்த லைப்பட்ட நாய்அது போல,
         ஒருவன் கோல்பற்றிக் கறகற இழுக்கை
ஒழித்து, நீஅருள் ஆயின செய்யாய்,
         ஒற்றி யூர்எனும் ஊர்உறை வானே

         பொழிப்புரை : ` ஒற்றியூர் ` என்று பெயர்சொல்லப் படுகின்ற ஊரின்கண் எழுந்தருளியிருப்பவனே , யான் நன்னெறியைத் தலைப் படவே முயல்கின்றேன் ; ஒருஞான்றும் என்னை உன்னைப்போல ஒன்றாலும் தாக்குண்ணாத பெருமையேனாக நினைக்கின்றிலேன் ; அங்ஙனமாகவும் , நீ என் கண்ணைப் பறித்துக் கொண்டதனால் , வழிதெரியாது , சுழியிடத்துப்பட்ட நீர் போலச் சுழலாநின்றேன் . என் உள்ளமும் ஒன்றும் அறியாது சுழல்கின்றது ; இவற்றையும் , கழியிற் பொருந்திய நாயைப் போல ஒருவன் தரும் கோலை விடாதுபற்றி நின்று , அவனால் , ` கறகற ` என்று இழுக்கப்படுதலையும் ஒழித்து , நீ உனது திருவருள்களை எனக்கு அளித்தருள் .


பாடல் எண் : 6
மானை நோக்கியர் கண்வலைப் பட்டு
         வருந்தி, யான்உற்ற வல்வினைக்கு அஞ்சித்
தேனை ஆடிய கொன்றையி னாய்,உன்
         சீலமும் குணமும் சிந்தி யாதே
நானும் இத்தனை வேண்டுவது அடியேன்
         உயிரொ டும்,நர கத்துஅழுந் தாமை
ஊனம் உள்ளன தீர்த்துஅருள் செய்யாய்,
         ஒற்றி யூர்எனும் ஊர்உறை வானே

         பொழிப்புரை : தேன் நிறைந்த கொன்றை மாலையை அணிந்தவனே , ` ஒற்றியூர் ` என்று பெயர் சொல்லப்படுகின்ற ஊரின் கண் எழுந்தருளியிருப்பவனே , யான் மான்போலும் பார்வையினை யுடைய மாதரது கண்ணோக்காகிய வலையில் அகப்பட்டு , உனது செயல்முறையையும் , குணத்தையும் நினையாமலே செய்துவிட்ட பெரிய குற்றத்திற்கு அஞ்சியே , நானும் பிறர் போல உன்னை இத் துணை இரந்துவேண்டுவதாயிற்று ; அதனால் , என்றும் உன் அடி யேனாகிய யான் உயிரோடே நரகத்தில் மூழ்காதபடி , எனக்கு உண்டாகிய குறையினை நீக்கி அருள் செய்யாய் .


பாடல் எண் : 7
மற்றுத் தேவரை நினைந்து,உனை மறவேன்,
         எஞ்சி னாரொடு வாழவும் மாட்டேன்,
பெற்றி ருந்து பெறாதுஒழி கின்ற
         பேதை யேன்,பிழைத் திட்டதை அறியேன்,
முற்று நீஎனை முனிந்திட அடியேன்
         கடவது என், உனை நான்மற வேனேல்,
உற்ற நோய்உறு பிணிதவிர்த்து அருளாய்
         ஒற்றி யூர்எனும் ஊர்உறை வானே

         பொழிப்புரை : ` ஒற்றியூர் ` என்று பெயர்சொல்லப் படுகின்ற ஊரின் கண் எழுந்தருளியிருப்பவனே , நான் பிறர் ஒருவர் தேவரை நினைந்து உன்னை மறந்தேனில்லை ; அத்தன்மையான நெஞ்சை யுடையவருடன் சேர்ந்திருக்கவும் மாட்டேன் ; அங்ஙனமாக , நீ என்னை முற்றும் வெகுளுமாறு , உன்னை இனிதே பெற்றிருந்தும் பெறாதொழிகின்ற பேதையேனாகிய யான் செய்த பிழைதான் இன்னதென்று அறிகின்றிலேன் ; நான் உன்னை ஓர் இமைப்பொழுதும் மறவேனாயினேன் , இதன்மேல் , உன் அடியேனாகிய யான் செய்யக் கடவதாய் எஞ்சி நிற்பதொரு கடமை யாது ! ஒன்றுமில்லையாதலின் , யான் உற்ற துன்பத்தையும் , மிக்க பிணியையும் நீக்கியருள் .


பாடல் எண் : 8
கூடி னாய்மலை மங்கையை நினையாய்,
         கங்கை ஆயிர முகம்உடை யாளைச்
சூடினாய் என்று சொல்லிய புக்கால்,
         தொழும்பனே னுக்கும் சொல்லலும் ஆமே,
வாடி நீஇருந்து என்செய்தி மனமே,
         வருந்தி யான்உற்ற வல்வினைக்கு அஞ்சி
ஊடி னால்இனி ஆவதுஒன் றுஉண்டே,
         ஒற்றி யூர்எனும் ஊர்உறை வானே

         பொழிப்புரை : ` ஒற்றியூர் ` என்று பெயர் சொல்லப் படுகின்ற ஊரின் கண் எழுந்தருளியிருப்பவனே , ` நீ முதலில் மலைமகளை ஒரு பாகமாகப் பொருந்தினாய் ; பின்பு ஆயிரமுகமுடைய கங்கையாளை முடியில் சூடினாய் ; இதனை நினைகின்றிலையே ` என்று சொல்லப் புகுந்தால் , அஃது அடிமையாகிய எனக்குக் கூடுமோ ! ` மனமே நீ துன்ப முற்று என்ன பெறப்போகின்றாய் ` என்று மனத்தோடே சொல்லிக் கொண்டு. யான்அடைந்த குற்றத்திற்கு அஞ்சி உன்னிடத்திலே பிணங் கினால் , இனி வருவதொன்று உண்டோ ?


பாடல் எண் : 9
மகத்தில் புக்கதுஓர் சனிஎனக்கு ஆனாய்,
         மைந்த னே,மணி யே,மண வாளா,
அகத்தில் பெண்டுகள் நான்ஒன்று சொன்னால்,
         அழையல் போ,குரு டா,எனத் தரியேன்,
முகத்திற் கண்இழந்து எங்ஙனம் வாழ்கேன்,
         முக்க ணா,முறை யோ,மறை ஓதீ,
உகைக்கும் தண்கடல் ஓதம்வந்து உலவும்
         ஒற்றி யூர்எனும் ஊர்உறை வானே

         பொழிப்புரை : வேதத்தை ஓதுபவனே , மணி முதலியவற்றைக் கரையிடத்துக் கொணர்ந்து சேர்க்கும் தண்ணிய கடல் அலைகள் வந்து உலவுகின்ற , ` ஒற்றியூர் ` என்று பெயர் சொல்லப்படுகின்ற ஊரின்கண் எழுந்தருளியிருப்பவனே , எனக்கு வலிமையாய் உள்ளவனே , மணி போல்பவனே , அழகுடையவனே , நீ எனக்கு , ` மகம் ` என்னும் நாண் மீன்கீழ் வந்த, ` சனி` என்னும் கோள் போல்பவனாயினை ; அகத்தில் உள்ள பெண்டுகள் , நான் , ஆவது ஒரு காரியம் சொன்னால் , ` கண்ணிலியே நீ என் அறிவாய் ; கூவாதே ; போ ` என்று சொல்வதை நான் பொறுக்கமாட்டேன் ; முகத்தில் கண்ணில்லாமல் நான் எவ்வாறு வாழ்வேன் ? மூன்று கண்களையுடையவனே , இது முறையோ !


பாடல் எண் : 10
ஓதம் வந்துஉல வுங்கரை தன்மேல்
         ஒற்றி யூர்உறை செல்வனை, நாளும்
ஞாலந் தான்பர வப்படு கின்ற
         நான்ம றைஅங்கம் ஓதிய நாவன்,
சீலந் தான்பெரி தும்மிக வல்ல
         சிறுவன், வன்றொண்டன், ஊரன் உரைத்த
பாடல் பத்துஇவை வல்லவர் தாம்போய்ப்
         பரகதி திண்ணம் நண்ணுவர் தாமே

         பொழிப்புரை : கடல் அலைகள் வந்து உலவுகின்ற கரையின்மேல் உள்ள திருவொற்றியூரில் எழுந்தருளியிருக்கின்ற செல்வனை , என்றும் உலகத்தாரால் போற்றப்படுகின்ற நான்கு வேதம் , வேதத்தின் ஆறு அங்கங்கள் இவற்றை ஓதிய நாவையுடையவனும் , ஒழுக்கத்தில் மிகவல்ல இளமையை யுடையவனும் வன்றொண்டனும் ஆகிய நம்பி யாரூரன் பாடிய இப் பத்துப்பாடல்களாகிய இவைகளை வல்லவர்கள் , மேலான கதியைப் போய் அடைவார்கள் ; இது திண்ணம் .

                                             திருச்சிற்றம்பலம்


No comments:

Post a Comment

பொது --- 1081. இசைந்த ஏறும்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் இசைந்த ஏறும் (பொது) முருகா!  அடியேன் அயர்ந்தபோது வந்து அருள வேண்டும். தனந்த தானந் தனதன தானன ...... தனதான...