அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
குழைக்கும் சந்தன (திருச்செந்தூர்)
முருகா!
பொதுமாதர் ஆசையை விட்டு,
திருவடி மலர் அருள்
தனத்தந்தம் தனத்தந்தம்
தனத்தந்தம் தனத்தந்தம்
தனத்தந்தம் தனத்தந்தம் ...... தனதானா
குழைக்குஞ்சந் தனச்செங்குங்
குமத்தின்சந் தநற்குன்றங்
குலுக்கும்பைங் கொடிக்கென்றிங் ...... கியலாலே
குழைக்குங்குண் குமிழ்க்குஞ்சென்
றுரைக்குஞ்செங் கயற்கண்கொண்
டழைக்கும்பண் தழைக்குஞ்சிங் ...... கியராலே
உழைக்குஞ்சங் கடத்துன்பன்
சுகப்பண்டஞ் சுகித்துண்டுண்
டுடற்பிண்டம் பருத்தின்றிங் ...... குழலாதே
உதிக்குஞ்செங் கதிர்ச்சிந்தும்
ப்ரபைக்கொன்றுஞ் சிவக்குந்தண்
டுயர்க்குங்கிண் கிணிச்செம்பஞ் ...... சடிசேராய்
தழைக்குங்கொன் றையைச்செம்பொன்
சடைக்கண்டங் கியைத்தங்குந்
தரத்தஞ்செம் புயத்தொன்றும் ...... பெருமானார்
தனிப்பங்கின் புறத்தின்செம்
பரத்தின்பங் கயத்தின்சஞ்
சரிக்குஞ்சங் கரிக்கென்றும் ...... பெருவாழ்வே
கழைக்குங்குஞ் சரக்கொம்புங்
கலைக்கொம்புங் கதித்தென்றுங்
கயற்கண்பண் பளிக்குந்திண் ...... புயவேளே
கறுக்குங்கொண் டலிற்பொங்குங்
கடற்சங்கங் கொழிக்குஞ்செந்
திலிற்கொண்டன் பினிற்றங்கும் ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
குழைக்கும் சந்தனச் செம் குங்-
குமத்தின் சந்த நல் குன்றம்
குலுக்கும் பைங்கொடிக்கு என்று இங்கு......இயலாலே
குழைக்கும் குண் குமிழ்க்கும் சென்று
உரைக்கும் செங்கயல் கண் கொண்டு,
அழைக்கும், பண் தழைக்கும் சிங்- ...... கியராலே
உழைக்கும் சங்கடத் துன்பன்,
சுகப்பண்டம் சுகித்து உண்டுஉண்டு,
உடல் பிண்டம் பருத்து இன்றுஇங்கு ...... உழலாதே,
உதிக்கும் செங்கதிர்ச் சிந்தும்
ப்ரபைக்கு ஒன்றும், சிவக்கும் தண்டு
உயர்க்கும் கிண்கிணிச் செம்பஞ்சு ...... அடிசேராய்
தழைக்கும் கொன்றையைச் செம்பொன்
சடைக் கண்டு, அங்கியைத் தங்கும்
தரத்து, அஞ்செம் புயத்து ஒன்றும் ...... பெருமானார்
தனிப் பங்கின் புறத்தின் செம்-
பரத்தின் பங்கயத்தின் சஞ்-
சரிக்கும் சங்கரிக்கு என்றும் ...... பெருவாழ்வே!
கழைக்கும் குஞ்சரக் கொம்பும்,
கலைக்கொம்பும் கதித்து என்றும்
கயற்கண் பண்பு அளிக்கும் திண் ...... புயவேளே!
கறுக்கும் கொண்டலில் பொங்கும்
கடல் சங்கம் கொழிக்கும், செந்
திலில் கொண்டு அன்பினில் தங்கும் ...... பெருமாளே.
பதவுரை
தழைக்கும் கொன்றையை செம்பொன் சடை கண்டு --- தழைத்துள்ள கொன்றை மலரை சிவந்த பொன்போன்ற சடாமுடியில் சேர்த்தும்,
அங்கியை தங்கும் தரத்து அம் செம்புயத்து ஒன்றும் பெருமானார் --- நெருப்பைத் தங்கும்படியாக அழகிய சிவந்த திருக்கரத்திலே சேர்த்தும் உள்ள சிவபெருமானுடைய,
தனிப் பங்கின் புறத்தின் --- ஒப்பற்ற ஒரு பாகத்திலும்,
செம் பரத்தின் --- செவ்விய பரமண்டலத்திலும்,
பங்கயத்தின் --- இதயத் தாமரையிலும்,
சஞ்சரிக்கும் --- உலாவி நலம் புரிகின்ற,
சங்கரிக்கு என்றும் பெருவாழ்வே --- உமாதேவிக்கு எந்நாளும் பெருவாழ்வாக விளங்கும் புதல்வரே!
கழைக்கும் குஞ்சரக் கொம்பும் --- மூங்கில் போன்ற திரண்ட தோள்களையுடைய யானையின் மகளாகிய தெய்வயானை அம்மையும்,
கலைக் கொம்பும் --- மான் மகளாகிய வள்ளியம்மையும்,
என்றும் கதித்து --- எந்நாளும் எழுச்சியுற,
கயல் கண் பண்பு அளிக்கும் --- மீன் போன்ற அவர்களுடைய கண்களுக்கு இன்பந்தருகின்ற,
திண்புய வேளே --- வலிய தோள்களையுடையவரே!
கறுக்கும் கொண்டலில் பொங்கும் கடல் --- கருமையாய் மேகம்போல் பொங்கியெழும் கடலானது,
சங்கம் கொழிக்கும் --- சங்குகளைக் கொழிக்கும்படியான,
செந்திலில் கொண்டு அன்பினில் தங்கும் பெருமாளே --- திருச்செந்தூரில் அன்புகொண்டு எழுந்தருளியுள்ள பெருமையின் மிக்கவரே!
குழைக்கும் சந்தனம் --- குழைத்துக் கலந்த சந்தனம்,
செம் குங்குமத்தின் --- சிவந்த குங்குமப் பூ முதலிய வாசனைப் பண்டங்கள் பூசப்பட்டுள்ள,
சந்த நல் குன்றம் குலுக்கும் --- அழகிய நல்ல மலைப்போன்ற கொங்கைகளைக் குலுக்குகின்ற,
பைங்கொடிக்கு என்று இங்கு இயலாலே --- பசுங்கொடிபோல் விளங்கி இவ்விடத்தில் தகுதியினால்,
குழைக்கும் --- குழையணிந்துள்ள காதினிடத்து,
குண் குமிழ்க்கும் --- நிறமுள்ள குமிழம் பூவைப்போன்ற மூக்கினிடத்தும்,
சென்று உரைக்கும் --- சென்று பேசுவது போன்ற,
செம் கயல் கண்கொண்டு அழைக்கும் --- சிவந்த மீனை ஒத்த கண்களைக் கொண்டு அழைக்கின்ற,
பண் தழைக்கும் சிங்கியராலே --- மனத்தில் விஷமத்தையும் நாவில் இனிய சொல்லையும் கொண்ட விஷமிகளாகிய விலைமகளிர் பொருட்டு,
உழைக்கும் சங்கடத் துன்பன் --- உழைக்கின்றதால் வரும் வேதனையாகிய துன்பத்தில் உழல்கின்ற அடியேன்,
சுகப் பண்டம் கசித்து உண்டு உண்டு --- சுகமான பண்டங்களை இனிமையுடன் உண்டு உண்டு,
உடல் பிண்டம் பருத்து --- உடலாகிய பிண்டம் மிகவும் பருமையடைந்து,
இன்று இங்கு உழலாதே --- இந்நாள் இப்பூமியில் அலையாமல்,
உதிக்கும் செம்கதிர் சிந்தும் --- உதிக்கின்ற சிவந்த சூரியன் சிந்துகின்ற,
ப்ரபைக்கு ஒன்றும் சிவக்கும் தண்டு --- ஒளிக்கு ஒப்பான சிவந்த தண்டையையும்,
உயர்க்கும் கிண்கிணி --- உயர்ந்த கிண்கிணியையும் அணிந்த,
செம் பஞ்சு அடி சேராய் --- சிவந்த பஞ்சுபோன்ற மெல்லிய திருவடியிலே அடியேனைச் சேர்த்து அருள்வீர்.
பொழிப்புரை
தழைத்துள்ள கொன்றை மலரைச் சிவந்த பொன்போன்ற சடையில் தரித்து, அழகிய கரத்தில் மழுவை ஏந்தும் சிவபெருமானுடைய ஒரு புறத்திலும், பரமண்டலத்திலும், ஆன்மாக்களின் இதயத் தாமரையிலும் உலாவுகின்ற, பார்வதியம்மையின் பாலரே!
மூங்கில்போல் திரண்ட தோள்களை உடைய தெய்வயானையம்மை, வள்ளியம்மை என்ற இருவரும் எப்போதும் செழிப்புற, அவர்களுடைய திருக்கண்களுக்கு இன்பத்தை அளிக்கின்ற திருத்தோள்களை உடைய உபகாரியே!
கருத்த மேகம் போல் எழுந்து அலைகள் சங்குகளைக் கொழிக்கின்ற கடலின் கரையில் விளங்கும் செந்தி மாநகரை இடமாகக் கொண்டு அன்புடன் வசிக்கின்ற பெருமிதம் உடையவரே!
வாசனைப் பண்டங்களுடன் குழைத்த சந்தனத்தையும், சிவந்த குங்குமப் பூவையும் பூசப்பட்டுள்ள, அழகிய நல்ல மலைப்போன்ற தனங்களைக் குலுக்கும் பசிய கொடிப் போல் தோன்றி, தகுதியோடு குழையணிந்த வெவியிடத்தும், சிவந்த குமிழம் பூப்போன்ற நாசியிடத்தும் சென்று பேசுவதுபோல் புரண்டு புரண்டு அழகு செய்கின்ற, செம்மீன் போன்ற கண்களைக்காட்டி இளைஞர்களை ஆசையால் அழைக்கின்ற நஞ்சு போன்ற பொருட்பெண்டிர் பொருட்டு உழைத்து துன்பப்படுகின்ற நாயேன், இனிய உணவுப் பொருள்களை சுவை பார்த்து உண்டு உண்டு உடம்பை பருக்க வைத்து, இந்த நாளில், இத்தலத்தில் வீணே உழலாமற்படிக்கு, உதயசூரியன் சிந்துகின்ற செவ்வொளிப் போன்ற சிவந்த தண்டையையும், உயர்ந்த கிண்கிணியையும் அணிந்த செம்பஞ்சுபோன்ற மெல்லிய திருவடிக்கமலத்தில் சேர அருள்புரிவீர்.
விரிவுரை
குழைக்குஞ் சந்தனம் ---
சந்தனத்தில் புனுகு சவ்வாது பன்னீர் முதலிய வாசனைப் பொருள்களை சோத்துக் குழைப்பர்.
செங்குங்குமம் ---
சிவந்த குங்குமப் பூவை அரைத்து, சந்தனம் குங்குமப்பூ முதலிய கலவைகளை விலைமகளிர் தனங்களின் மீது அழகுறப் பூசி இளைஞரை மயக்குவர்.
குன்றம் குலுக்கும் பைங்கொடி:-
கொடிப்போன்ற விலைமகளிர் தனங்களாகிய மலைகளைத் தாங்கி நிற்கின்றனர். கொடி மலையைத் தாங்குகின்றது என்ற நயம் சுவையுடையது. மலையின் மீது கொடிப் படர்வது இயல்பு. இங்கே கொடியின் மீது மலைகள் நிற்கின்றன என்று அழகுறக் கூறுகின்றனர். மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழில் குமரகுருபரர் “மது கரம் வாய்மடுக்கும் குழற்காடு எந்தும் இளவஞ்சிக் கொடியே வருக” என்று கூறும் அழகிய நயமும் ஈண்டு சிந்தித்தற்கு உரியது. காட்டிலே கொடியிருப்பது இயல்பு. இங்கே “கொடியின் மீது ஒரு காடு விளங்குகின்றது” என்று கூறிய அழகு எத்துணை அரிய சுவைத் தருகின்றது என்பதைச் சிந்தித்து மகிழ்க.
குழைக்கும் குண் குமிழ்க்கும் சென்று உரைக்கும் செங்கயற்கண் ---
பெண்மணிகளுடைய கண்கள் மீன்போலே புரண்டு புரண்டு அழகு செய்யும்.அதனால் கயற்கண் என்றார். அக்கண்கள் நீண்டு இருக்கும். அக் கண்ணிலுள்ள கருமணி காதுவரை நீண்டுள்ள கண்களில் இப்படியும் அப்படியும் ஓடுவது நாசியிடமும், காதினிடமும் ஏதோ ஒரு செய்தியை யுரைப்பதன் பொருட்டுப் போவதுபோல் இருக்கின்றது என்று அழகாகச் சுவாமிகள் கூறுகின்றார்கள்.
பண் தழைக்கும் ---
அப்பெண்கள் நல்ல பண்களைப் பாடுவார்கள். இனிய பண்கள் அவர்கள்பால் செழிப்புற்றிருக்கின்றன.
சிங்கியர் ---
சிங்கி --- குளிர்ந்து கொல்லும் பாஷாணம்.
குளிர்ச்சியாகப் பேசி உறவாடி வதைக்கும் தன்மை உடையவர் சிங்கியர் என்றனர்.
உழைக்குஞ் சங்கடத் துன்பன் ---
மேலே கூறிய விலைமகளிருக்கு நிரம்பவும் பொருள் தரும் பொருட்டு, மோகாந்தகாரம் உற்று இடையறாது உழைத்து, அதனால் அளவற்ற துன்பத்தை அடைவர். ஆன்ம ஈடேற்றத்திற்கு என்று உழைக்காமல் விழலுக்கு முத்துலை இட்டு இறைக்கும் மூடரைப் போல் வறிதே உழைத்து அரிய மாநுடப் பிறப்பை அழிப்பர்.
அழலுக்குள் வெண்ணெய் எனவே உருகி, பொன் அம்பலத்தார்
நிழலுக்குள் நின்றுதவம் உஞற்றாமல், நிட்டூரமின்னார்
குழலுக்கு இசைந்த வகைமாலை கொண்டு, குற்றவேல் செய்து,
விழலுக்கு முத்துலை இட்டுஇறைத்தேன், என் விதிவசமே. --- பட்டினத்தார்.
சுகப்பண்டம் சுகித்து உண்டு உண்டு ---
இனிய உணவுகளை நாடி நாடி அவற்றிலேயே அதிக விருப்பமுற்று உண்டு உண்டு உவப்பர். அதைத் தவிர அருள் விருப்பம் உறாது கெடுவர். உணவு நசையே ஆன்ம ஈடேற்றத்திற்குத் தடை. உணவு நசை கொண்டு சதா நீரில் உழலும் மீன் தூண்டிலில் அகப்பட்டு மடிவதையுங் காண்க. தண்ணீரில் வாழும் ஏனைய பிராணிகள் தூண்டிலில் அகப்படுவதில்லை.
சோற்றிலே விருப்பம் சூழ்ந்திடில், ஒருவன்
துன்னும்நல் தவம்எலாம் சுருங்கி,
ஆற்றிலே கரைத்த புளிஎனப் போம்என்று,
அறிஞர்கள் உரைத்திடல் சிறிதும்
போற்றிலேன், உன்னைப் போற்றிலேன், சுவையில்
பொருந்திய காரசாரம்சேர்
சாற்றிலே கலந்த சோற்றிலே ஆசை
தங்கினேன், என்செய்வேன் எந்தாய். --- திருவருட்பா.
நாவினுக்கு அடிமையாகி நலன் அழியக் கூடாது. நாவை வென்றவர் நானிலத்தை வென்றவராவார்.
ஆகவே முத்தி நலம் பெற விழைவோர் உணவு ஆசையை ஒழித்து, ஒருமை நலம் பெறக்கடவர்.
உடற்பிண்டம் பருத்து இன்று இங்கு உழலாதே ---
நன்கு வயிறு புடைக்க உண்டு உண்டு உடம்பைப் பருக்க வைப்பர் சிறியோர். ஊன் சுருங்கினால்தான் உள்ளொளி பெருகும். “ஊனினைச் சுருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்தமாய தேனினைச் சொரிந்து புறம்புறந் திரிந்த செல்வமே” என்பார் மணிவாசகப் பெருந்தகையார்.
சிலர் உடம்பைப் பருக்க வைத்து அவ்வுடம்பைக் கண்டு கண்டு மகிழ்வர். சற்று இளைத்தால் அந்தோ! இளைத்து விட்டோமே என்று கவல்வர். என்னே மதியுடைமை? உடம்பு பருத்தால் மாண்ட பிறகும் நால்வருக்கு வருத்தம் தருமே என்று கருதினாரில்லை. இந்த உடம்பினைச் சிலர் அடிக்கடி நிறுத்து நிறை பார்த்துக் கொள்வர். நிலைக் கண்ணாடியில் கண்டு இன்புறுவர்.
புன்புலால் உடம்பின் அசுத்தமும், இதனில்
புகுந்து நான் இருக்கின்ற புணர்ப்பும்,
என்பொலா மணியே, எண்ணிநான் எண்ணி
ஏங்கிய ஏக்கம் நீ அறிவாய்,
வன்புலால் உண்ணு மனிதரைக் கண்டு
மயங்கி,உள் நடுங்கி ஆற்றாமல்,
என்புஎலாம் கருக இளைத்தனன், அந்த
இளைப்பையும், ஜய,நீ அறிவாய். --- திருவருட்பா.
எனவே இந்த உடம்பின் பால் இச்சை வையாது அருள் நாட்டம் அடைதல் வேண்டும். பற்றற்றவருக்கு உடம்பு மிகையாகத் தோன்றும்.
மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல், பிறப்புஅறுக்கல்
உற்றார்க்கு உடம்பு மிகை. --- திருக்குறள்.
நித்திரையில் செத்தபிணம் நேரும்உடற்கு, இச்சைவையாச்
சுத்தர்களே நல்ல துறவோர் பராபரமே. --- தாயுமானார்.
உதிக்குஞ் செங்கதிர்ச் சிந்தும் ப்ரபைக் கொன்றும் ---
முருகப் பெருமானுடைய திருவடியிலிருந்து அருள்ஞான ஒளி இடையறாது வீசும். ’ஓவற இமைக்கும் சேண் விளங்கு அவிரொளி’ என்பார் நக்கீரர்.
“உததியிடை கடவுமர கதஅருண குலதுரக
உபலளித கனகரத சதகோடி சூரியர்கள்
உதயமென அதிகவித கலபகக மயிலின்மிசை
உகமுடிவின் இருளகல ஒருசோதி வீசுவதும்” --- சீர்பாதவகுப்பு.
உயர்க்கும் கிண்கிணி ---
பெருமானுடைய திருவடியில் விளங்குங் கிண்கிணி வேதநாதத்தைத் தரும் இனிமையுடையது. அதனால் உயர்வு பெறுகின்ற கிண்கிணி என்றனர்.
செம்பஞ்சு அடி சேராய் ---
சிவந்த பஞ்சினைப்போன்ற மென்மையானது இறைவனுடைய திருவடி - வன்மை மனமுடைய நாயேனை மென்மையான திருவடியிற் சேர்த்து அருள்புரிவீர் என்று குறிப்பிடுகின்றார்.
நாம் நடந்து சென்றால் நமது நிழல் நம்முடன் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும். அந்த நிழல் நம்மை விட்டகலாது. ஆனால் நாம் நிழலில் சென்றால் உடல் நிழல் அகலும். அதுபோல பிறவி நிழல் நெடுங்காலமாக நம்மைத் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கின்றது. முருகவேளுடைய திருவடி நிழலை நாம் அடைந்தால், பிறவி நிழல் நிச்சயமாக நீங்கிவிடும். தவநிலையில் நின்று, திருவடி நிழலை ஒவ்வொருவரும் பெறுமாறு முயலுக.
தழைக்கும் கொன்றையைச் செம்பொன் சடைக்கண்டு ---
சிவபெருமானுக்கு உவந்த மலர் கொன்றை. “நறுங் கொன்றைப் போதினுள்ளான்” என்பது அப்பர் திருவாக்கு. கொன்றை மலரின் ஐந்து இதழ்களும் திரு ஐந்தெழுத்தைக் குறிக்கும். கொன்றை மலரின் நடுவில் வளைந்துள்ள தோடுகள் ஓங்காரத்தைக் குறிக்கும். ஓம் சிவாயநம என்ற பஞ்சாக்கர சொரூபமானது கொன்றை மலர். சிவபெருமான் அதனால் அம்மலரை அன்புடன் திருமுடியிற் சூடியுள்ளார். கொன்றைமலரால் பரமசிவத்தை அர்ச்சிப்பார் அருள் நலம் பெறுவர்.
கொன்றை மலர் மாலையை சயத்ரதன் வளைத்து இட்டபடியால் அதனைத் தாண்டுதற்கு அஞ்சி அபிமன்யு, மீண்டுஞ் செருக்களம் புகுந்து உயிர்த் துறந்தனன். சிவபெருமானுடைய கொன்றை மாலையைத் தாண்டுவது பெரும் பாவம் என்று அஞ்சியே அவன் இறந்தனன்.
“மறந்தனையோ எங்களையும், மாலையினால்
வளைப்புண்டு, மருவார் போரில்
இறந்தனையோ, என்கண்ணே! என்னுயிரே!
அபிமா! இன்று என் செய்தாயால்”
என்று புலம்புகின்றார் தருமர்.
அங்கியைத் தங்கும் தரத்து அஞ்செம்புயத்து ஒன்றும் பெருமானார் ---
’அங்கியை தங்குந்தரத்து அம்செம்புயத்து ஒன்றும்’ எனப் பதப் பிரிவு செய்க.இங்கு புயம் என்பது கரம் என்ற பொருளில் வந்தது. திருக்கரத்தில் அக்கினியை ஏந்தியவர் சிவபெருமான்.
தனிப் பங்கின் ---
இறைவனுடைய இடப்பாகத்தைப் பெற்று உமாதேவியார் பிரியாதிருப்பார். பாகம் பிரியாள் என்று அம்மைக்கு ஒரு பேருண்டு.
செம்பரத்தின் ---
செவ்விய பரமண்டலத்தில் விளங்குபவர். சிவஞான வெளியென வுணர்க.
பங்கயத்தின் ---
ஆன்மாக்களின் இதய தாமரையில் இருப்பவர்.
சங்கரி ---
சம்--- சுகம், கரி --- செய்பவர்; உயிர்கட்குச் சுகத்தைச் செய்பவர். ஆதலின் சங்கரி எனப்பேர் பெற்றனர்.
கழைக்கும் ---
கழை --- மூங்கில். மூங்கில் போன்ற தோள் என்று தோள் வருவித்துப் பொருள் செய்யப்பெற்றது.
குஞ்சரங் கொம்பு ---
குஞ்சரம் --- ஐராவதம். வெள்ளை யானையால் வளர்க்கப் பெற்ற தெய்வயானை.
கலைக்கொம்பு ---
கலைமானால் பெறப்பட்ட வள்ளியம்மை.
கயற்கண் பண்பளிக்கும் திண்புய வேளே ---
கண் பண்பு --- கருணை. கண்ணுக்கு அணிகலம் கண்ணோட்டம். வள்ளி தெய்வயானை யம்மையார்களின் கண்களுக்கு எந்நாளும் இன்பத்தை வழங்கி வீறுபெற்று விளங்குவது வேலவனுடைய தோள்.
கருத்துரை
உமை மைந்தரே! வள்ளி தேவசேனையின் காதலரே! செந்திலாண்டவரே! மாதராசையைத் தவிர்த்து, அடியேன் உமது திருவடி சேர அருளுவீர்.
No comments:
Post a Comment