திருக் காளத்தி



திருக் காளத்தி
(ஸ்ரீ காளஹஸ்தி)

     சித்தூர் மாவட்டம். ரேணிகுண்டா - கூடூர் இரயில் மார்க்கத்தில் உள்ள இருப்புப் பாதை நிலையம்.

     திருப்பதியிலிருந்து 40 கி. மீ. தொலைவிலும், சென்னையிலிருந்து 110-கி. மீ. தொலைவிலும் உள்ள சிறந்த தலம்.

     திருப்பதி; ரேணிகுண்டாவிலிருந்து அடிக்கடி பேருந்துகள் உள்ளன.

     சென்னையிலிருந்தும், காஞ்சிபுரத்திலிருந்தும் பேருந்துகள் செல்கின்றன.


இறைவர்          : காளத்தீசுர சுவாமி, காளத்திநாதர்குடுமித்தேவர்.

இறைவியார்      : ஞானப்பிரசுன்னாம்பிகை, ஞானப்பூங்கோதை.

தல மரம்          : மகிழம்.

தீர்த்தம்           : பொன்முகலியாறு.

வழிபட்டோர்      : சிலந்தி, பாம்பு, யானை, முசுகுந்தன், பரத்வாஜ மகரிஷி,                                                    சிவகோசரியார் முதலியோர்.

தேவாரப் பாடல்கள்: 1. சம்பந்தர் -1. சந்தமார் அகிலொடு,
                                                      2. வானவர்கள் தானவர்கள்.

                                      2. அப்பர்   -  1. விற்றூணொன் றில்லாத.

                                      3. சுந்தரர்  -  1. செண்டா டும்விடையாய்.


          ஸ்ரீ(சீ) - காளம் - அத்தி = சிலந்தி - பாம்பு - யானை ஆகிய மூன்றும் வழிபட்டுப் பேறு பெற்ற சிறப்புடைய தலம்.

          இங்கு வந்த அகத்தியர் விநாயகரை வழிபடாமல் போகவே, பொன்முகலி ஆறு நீர் இன்றி வற்றியது. அகத்தியர் தம் தவறு உணர்ந்து பாதாளத்தில் - ஆழத்தில் விநாயகரைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டு அருள் பெற்றார் என்பது தல வரலாற்றுச் செய்தி. (பாதாள விநாயகர் சந்நிதி உள்ளது.)

          'திருமஞ்சனக் கோபுரம் ' எனப்படும் கோபுரத்திலிருந்து பார்த்தால், நேரே பொன்முகலி ஆறு தெரியும்; ஆற்றுக்குச் செல்வதற்கு படிக்கட்டுகள் உள்ளன. இவ்வழியே தான் திண்ணனார் (கண்ணப்பர்) பொன்முகலி நீரைக் கொண்டுவந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்தார் என்று சொல்லப்படுகிறது.

         சண்டேசுவரர் சந்நிதி - மூலவர் பாணம் மட்டும் ஒன்று மிக உயரமாக உள்ளது; முகலாயர் படையெடுப்பின்போது கோயிலில் உள்ள மூல விக்ரகங்களை உடைத்துச் செல்வங்களை அபகரித்து வந்தனர்; அவ்வாறு இங்கு நிகழாதபடி தடுக்கவே மூலவருக்கு முன்னால் இதைப் பிரதிஷ்டை செய்து வைத்து அவ்விடத்தை மூடி விட, வந்தவர்கள் இதையே உண்மையான மூலவர் என்றெண்ணி, உடைத்துப் பார்த்து, ஒன்றும் கிடைக்காமையால் திரும்பி விட, பின்பு சிலகாலம் கழித்து மூலவர் சந்நிதி திறக்கப்பட்டதாம். அப்போது முன் இடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு, படையெடுப்பாளர்களால் உடைக்கப்பட்ட பாணமே இது என்று சொல்லப்படுகிறது.

          நக்கீரர் இம்மலையில் வந்து தங்கி நதியில் நீராடி இறைவனைத் தொழுது வெப்பு நோயிலிருந்து முழுமையாக நீக்கம் பெற்றாராம்.

          பஞ்சபூத தலங்களுள் இது வாயுத் தலம். தட்சிண (தென்) கயிலாயம் என்னும் சிறப்புடையது.

          சுவர்ணமுகி எனப்படும் பொன்முகலி ஆற்றின் கரையில் உள்ள தலம். இவ் ஆறு வடக்கு முகமாகப் பாய்ந்து ஓடுவதால் உத்தரவாகினி - இவ்விடம் சிறப்பாக சொல்லப்படுகிறது.

          அன்புக்குச் சான்றான கண்ணப்பர் வழிபட்டு இறைவனுடைய வலப்பக்கத்தில் நிற்கும் பெரும் சிறப்பு வாய்ந்த பதி; அவர் தொண்டாற்றி வீடு பேறு பெற்ற விழுமிய தலம்.

          'அட்டமாசித்திகள் அணைதரு காளத்தி ' எனச் சிறப்பிக்கப்படும் அற்புதத் தலம்.

          நக்கீர தேவர் 'கயிலை பாதி காளத்தி பாதி ' பாடியுள்ள பெருமை பெற்ற தலம்.

          அருச்சுனன், தன் தீர்த்த யாத்திரையில் இங்கு வந்து இறைவனை வழிபட்டும், பரத்வாஜ மகரிஷியைக் கண்டு வணங்கி சென்றதாகவும் சொல்லப்படுகிறது.

          மலையடிவாரத்தில் உள்ளது கோயில்; இம்மலை, 'கைலாசகிரி ' (கண்ணப்பர் மலை என்றும் மக்களால்) என்று வழங்கப்படுகிறது. (இந்நிலப் பரப்பை தொண்டைமான் ஆண்டமையை நினைப்பூட்டும் வகையில், காளத்தி செல்லும், வழியில் 'தொண்டைமான் நாடு ' என்னும் ஓரூர் உள்ளது. தற்போது தெலுங்கு நாட்டில் உள்ள பகுதியாதலின், மக்கள் 'தொண்டமநாடு ' என்று வழங்குகின்றனர்.)

          இத்தலம் சிறந்த 'ராகு, கேது க்ஷேத்ரம்' என்று அழைக்கப்படுகிறது.

          ஏழு நிலைகளுடன் கம்பீரமாகக் திகழும் இக்கோபுரம் (காளிகோபுரம்) ஸ்ரீ கிருஷ்ண தேவராயரால் கி. பி. 1516-ல் கட்டப்பட்டது. நூற்றுக்கால் மண்டபத்தைக் கட்டியவரும் இவரே.

          கோயிலின் பிரதான வாயிலில் உள்ள இக்கோபுரமும் (பிக்ஷசாலா கோபுரம்), ஏனைய கோபுரங்களும் 12-ம் நூற்றாண்டில் வீரநரசிம்ம யாதவராயரால் கட்டப்பட்டனவாகும்.

          இத்தலம் அப்பிரதக்ஷண வலமுறையில் அமைந்துள்ளது.

          பாதாள விநாயகர் சந்நிதி - விநாயகர் 35 அடி ஆழத்தில் உள்ளார். விநாயகர் அமர்ந்துள்ள இடம், பொன்முகலியாற்றின் மட்டத்தில் உள்ளதாகச் சொல்லப்படுகிறது.

          இரண்டு கால்களை நிறுத்தி சுவரோடு சேர்த்துக் கட்டப்பட்ட சிறிய மண்டபம் சுவரோரமாகவுள்ளது; கவனித்தால்தான் தெரியும். பலபேர், 'காளத்தி சென்று வந்தேன்' என்று சொன்னால், 'இரண்டு கால் மண்டபம் ' பார்த்தாயா? என்று கேட்கும் வழக்கம் உள்ளது.

          சொக்கப்பனை கொளுத்தி, எரிந்த கரியை அரைத்து (ரக்ஷையாக) சுவாமிக்கு கறுப்புப் பொட்டாக இடுவது; இங்கு விசேஷம்.

          இரு கொடி மரங்களில் ஒன்று கவசமிட்டது; மற்றொன்று ஒரே கல்லால் ஆன 60 அடி உயரமுள்ள கொடி மரமாகும்.

          பிரதான கோபுரம் 'தக்ஷிண கோபுரம் ' எனப்படுகிறது; 11-ஆம் நூற்றாண்டில் குலோத்துங்க சோழனின் ஆட்சியில் அவனுடைய நேரடி மேற்பார்வையில் அதற்கென நியமிக்கப்பட்ட கோயிற் குழுவினரால் இக்கோபுரம் கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இக்கோபுர வாயிலில் நுழைந்து வலமாக வரும்போது தரையில் வட்டமாக குறித்துள்ள இடங்களில் நின்று பார்த்தால் கைலாச மலையையும் சுவாமி விமானத்தையும் தரிசிக்கலாம்.

          இங்குள்ள சரஸ்வதி தீர்த்தத்தை, இயற்கையில் பேசவராத குழந்தைகளுக்கு கொடுத்தால் நன்கு பேச வரும் என்ற நம்பிக்கை உள்ளது.

          இங்கு வந்து பாடிப் பரவிய திருஞானசம்பந்தர், இங்கிருந்தவாறே கயிலாயம், கேதாரம், கோகர்ணம், திருப்பருப்பதம், இந்திரநீலப்பருப்பதம் முதலிய தலங்களைப் பாடித் தொழுதார். சுந்தரரும் அவ்வாறே.

     ஆலங்காடு பணிந்த அப்பர் காளத்தி வந்து தொழுதபோது வடகயிலை நினைவு வர, கயிலைக் கோலம் காண எண்ணி, யாத்திரையைத் தொடங்கினார். திருவல்லம் தொழுது இங்கு வந்த சுந்தரர் இறைவனைப் பாடி, இங்கிருந்தவாறே திருப்பருப்பதம், திருக்கேதாரம் முதலிய தலங்களைப் பாடிப் போற்றினார்.

          மூலவர், சுயம்பு - தீண்டாத் திருமேனி. சிவலிங்கத் திருமேனி அற்புதமான அமைப்புடையது. ஆவுடையார் பிற்காலத்தில் கட்டப்பட்டது.

          சுவாமி மீது தங்கக் கவசம் (பார்ப்பதற்கு பட்டைகளாகத் தெரிவது) சார்த்தும் போதும் எடுக்கும் போதும் கூட சுவாமியைக் கரம் தீண்டக்கூடாது. இக்கவசத்தில் இருபத்தேழு நட்சத்திரங்களும் பொறிக்கப்பட்டுள்ளது.

          சிவலிங்கத் திருமேனி மிகவும் உயரமானது; இதன் அடிப்பாகத்தில் சிலந்தி வடிவமும், மத்தியில் யானையின் இரு தந்தங்களும், மேற்புறத்தில் ஐந்து தலை பாம்பு வடிவமும் வலப்பால் கண்ணப்பர் கண் அப்பிய வடுவும் அழகுற அமைந்துள்ளன. சிவலிங்கத்தின் மேற்புறம் ஐந்து தலை நாகம் போலவே காட்சி தருகிறது. கருவறை அகழி அமைப்புடையது.

          மூலவர் எதிரில் கதவருகில் உள்ள இரு தீபங்கள் காற்றினால் மோதப் பெற்றதுபோல் எப்போதும் அசைந்து கொண்டு, இது வாயுத்தலம் என்பதை நிதர்சனமாகக் காட்டிக் கொண்டிருக்கிறது.

          கண்ணப்பரால் அபிஷேகம் செய்யப்பெற்ற மூர்த்தியாதலின் இச்சந்நிதியில் திருநீறு தரும் மரபில்லையாம்; பச்சைக் கற்பூரத்தைப் பன்னீர் விட்டு அரைத்துத் தீர்த்தத்தில் கலந்து சங்கு ஒன்றில் வைத்து தரிசிப்போருக்கு தருகின்றனர். (நாம் திருநீற்றுப் பொட்டலம் வாங்கித் தந்தால் அதை சுவாமி பாதத்தில் வைத்து தருகிறார்கள்.

          மூலவருக்கு கங்கை நீரை தவிர (சுவாமிக்கு மேலே தாரா பாத்திரம் உள்ளது) வேறெதுவும் மேனியில் படக்கூடாது. பிற அபிஷேகங்கள் அனைத்தும் ஆவுடையாருக்கே.

          சர்ப்ப தோஷம் முதலியவை நீங்கும் தலமாதலின் இங்கு இராகு கால தரிசனம், இராகுகால சாந்தி முதலியன விசேஷமாகச் சொல்லப்படுகிறது.

          இக்கோயிலில் உச்சி காலம் முடித்து நடை சார்த்தும் வழக்கமில்லை;  காலை முதல் இரவு வரை திறந்தே இருக்கின்றது.

          நாள்தொறும் நான்கு கால பூசைகளே உள்ளன. அர்த்தசாமப் பூசை இல்லையாதலின், சாயரட்சை பூசையுடன் முடித்து, இரவு 8 மணிக்கு சுவாமி, அம்பாளை பள்ளியறையில் அப்படியே எடுத்துக் கொண்டுபோய்ச் சேர்ப்பித்து விடுகிறார்கள்.

          கிருஷ்ணதேவராயர், அவருடைய மனைவி, சீதை, லட்சுமணன், ஆஞ்சநேயர் சப்தரிஷிகள், சித்திரகுப்தர், யமன், தருமர், வியாசர் முதலியோர் பிரதிஷ்டை செய்ததாக பல சிவலிங்கங்களும், ஸ்ரீ ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்ததாக பெரிய ஸ்படிகலிங்கமும் உள்ளது.

          இத்தலம் கிரகதோஷ நிவர்த்தித் தலமாதலால், இங்கு நவக்கிரகங்கள் இல்லை. சனிபகவான் மட்டும் உள்ளார்.

          அம்பாள் - ஞானப்பூங்கோதை நின்ற திருக்கோலம்; திருவடியில் ஸ்ரீ ஆதிசங்கர பகவத் பாதரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட 'அர்த்த மேரு ' உள்ளது. அம்பாள் இருப்பு ஒட்டியாணத்தில் 'கேது ' உருவமுள்ளது.

          'கைலாசமலை ' - கண்ணப்பர் திருவடி தோய்ந்த இடம். இம்மலை 25 கி.மீ. பரப்புடையது. இம்மலைக்காட்டில் பல இடங்களில் தீர்த்தங்களும், சிவலிங்கத் திருமேனிகள் உள்ள கோயில்களும், கண்ணப்பர் திருவுருவங்களும் உள்ளன.

          திருகாளத்தி உடையார் கோயிலில் மலைமேல் ஒரு மடம் இருந்தது. இது சசிகுல சாளுக்கிய வீரநரசிங்கத்தேவன் திருக்காளத்தி தேவனான யாதவராயரால் கட்டப்பட்டது. இதுவன்றி தியாகமேகன் மடம் ஒன்று இருந்ததாம்.

          பொங்கல் விழாவில் ஒரு நாளிலும், பெருவிழாவில் ஒரு நாளிலுமாக ஆண்டில் இரு நாள்களில் சுவாமி இம்மலையை வலம் வருகிறார்; அவ்வாறு வரும்போது மக்களும் மூவாயிரம் பேருக்குக் குறையாமல் உடன் செல்வார்களாம். இவ்வலம் காலைத் தொடங்கி மறுநாள் முடிவுறுமாம்.

          சுவாமியின் திருக்கல்யாண விழாவின்போது பொது மக்கள் திரளாகக் கூடித் தத்தம் திருமணங்களைச் சந்நிதியில் செய்து கொள்ளும் வழக்கம் இத்தலத்தில் உள்ளது.

          தட்சிண கைலாசம், அகண்ட வில்வாரண்யம், பாஸ்கர க்ஷேத்திரம் என்றெல்லாம் புகழப்படும் இத்தலத்தில் வழிபடுவது முக்தி எனப்படுகிறது.

          இங்கு "நதி-நிதி-பர்வதம்" என்ற தொடர் வழக்கில் உள்ளது. நதி என்பது சந்திரகிரிமலையில் தோன்றிப் பாய்ந்து வருகின்ற சுவர்ணமுகி - பொன்முகலியாற்றையும், நிதி - அழியாச் செல்வமான இறைவியையும் இறைவனையும், பர்வதம் - கைலாசகிரியையும் குறிப்பனவாம்; இம்மூன்றையும் தரிசிப்பது விசேஷமெனப்படுகிறது.

          பொன்முகலி உத்தரவாகினி. ஆதலால் இங்கு அஸ்தி கரைப்பது விசேஷமாகும்.

          அம்பாள் கருவறையை வலம் வரும்போது வட்டமாகத் தரையில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள மூலை இடத்தில் மூன்று தலைகள் சேர்ந்திருப்பது போன்ற சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. இவ்விடத்தினடியில் சக்தி வாய்ந்த யந்த்ரம் இருப்பதால் இங்கு அமர்ந்து ஜபம் செய்வது மிகவும் விசேஷமாகச் சொல்லப்படுகிறது.

          கைலாசகிரியில் சற்று சுற்றினாற்போல் கற்களின் மீது ஏறிச் சென்றால் அங்குள்ள சிறிய கோயிலில், ஒரு கால் மடக்கி ஒரு காலூன்றியவாறு உள்ள ஒரு உருவம் உள்ளது; இவ்வுருவம் நக்கீரர் என்றும் சித்தி பெற்றவர் என்றும் சொல்கின்றனர்; ஆனால் இவ்வுருவம் பற்றி ஏதும் நிச்சயயிக்க முடியவில்லை.

          கண்ணப்பர் கோயில் - இக்கோயில் மண்டபமும் சுற்றிய தாழ்வாரமும் ஆடல்வல்லான் கங்கைகொண்டானாகிய இருங்கோளன் தாயாராகிய புத்தங்கையாரால் கட்டப்பட்டது.

          சோழ, விஜயநகர, காகதீய மன்னர்கள் காலத்திய கல்வெட்டுக்கள் உள்ளன; இறைவன் 'தென்கயிலாயமுடையார் திருக்காளத்தி உடைய நாயனார் ' என்று கல்வெட்டுக்களில் குறிக்கப்படுகிறார்.

          முதற் குலோத்துங்கன் காலக் கல்வெட்டு 'காளத்தி உடையான் மரக்கால் ' என்ற அளவு கருவி இருந்ததாக குறிப்பிடுகிறது.

கண்ணப்ப நாயனார் வரலாறு

         பொத்தப்பி நாட்டிலுள்ள ஓர் ஊர் உடுப்பூர். இவ்வூரில் வேடுவ சாதியினர் வாழ்வர். இவர்களுள் அதிபதியாக நாகனார் என்பவர் இருந்தார். நாகனாரின் மனைவியார் தத்தையார். இவ்விருவரும் முருகப் பெருமானைக் கும்பிட்டு ஓர் திண்ணிய ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தனர். அக்குழந்தைக்குத் திண்ணனார் என்ற நாமம் சூட்டிச் சீராட்டிப் பாராட்டி வளர்த்தனர். திண்ணனார் வளர்பிறை போல் வளர்ந்து பதினாறு வயதுப் பருவத்தை அடைந்தார். அவ்வேளை நாகனாரும் முதுமையுற்று முன்பு போல் வேட்டைத் தொழிலாற்றும் வலிமையற்றவரானார். ஆதலால் தன் மைந்தனுக்கு உடைத் தோலும் சுரிகையும் அளித்து வேடுவ குல முதலியாக்கினார்.

         குலமுதலியாகிய திண்ணனார் வேட்டைத் தொழில் தாழ்த்தியமையால் காட்டிற் பெருகிய கொடிய மிருகங்களை அழித்தல் பொருட்டு "கன்னி வேட்டை"க்குச் செல்ல ஆயத்தமானார். அவருடன் வேட்டுவ மறவர் எல்லாம் திரண்டனர். கடி நாய்கள் முன்னே பாய்ந்து சென்றன. வேட்டுவர் ஓடி வேட்டைக் காட்டை வளைத்து உட்புகுந்து பல்வேறு ஓசைகளை எழுப்பி வேட்டையாடலாயினர். கரடி, புலி, சிங்கம் ஆகியன தாள் அறுவனவும், தலை துணிவனவும், குடர் சரிவனவுமாயின.

     அவ்வேளையில் கடியதோர் பன்றி, வேட்டைக் காட்டினின்றும் வெளியேறி ஓடலாயிற்று. அதனைக் கண்ணுற்ற திண்ணனார் தன் அடி வழியே முடுக்கிய கடுவிசையில் ஓடலாயினார். நாணன், காடன் என்போர் அவரைப் பிந்தொடர்ந்து சென்றனர். ஓடி இளைத்து ஒரு மரச் சூழலில் ஒதுங்கி நின்ற பன்றியைத் திண்ணனார் தம் சுரிகையைக் கொண்டு கொன்றார்.  நாணனும் காடனும் இப்பன்றியைத் தின்று பசியாறி நீரும் குடிப்போம் என்றனர். திண்ணனார் "இக்காட்டில் நீர் எங்கே உள்ளது? எனக் கேட்டார். நாணன் ஒரு தேக்கு மரத்தைக் காட்டி அம் மரத்துக்கு அப்பால் ஒரு குன்றின் அயலில் குளிர்ந்த பொன்முகலி ஆறு பாய்கின்றது எனக் கூறினான். பன்றியைக் காவிக் கொண்டு அவ்விடம் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். வழியில் திருக்காளத்தி மலை திண்ணனார் கண்ணில் பட்டது. பட்டதும் "அம்மலைக்குச் செல்வோம்" என்றார். "மலைக்குச் சென்றால் நல்ல காட்சி காணலாம்; அங்கே குடுமித்தேவர் இருப்பார்; கும்பிடலாம்" என நாணன் சொன்னான். மலையை நெருங்கிச் செல்ல திண்ணாருக்கு இனம் புரியாததோர் சுக உணர்வு தோன்றியது. அவருக்குத் தன்மேலிருந்து பாரம் போவது போன்ற உணர்ச்சி பெருகியது. மனதில் புதிரானதோர் உணர்வு அரும்பலாயிற்று. "தேவர் இருக்கும் இடம் செல்வோம்" என விரைந்து நடந்தார்.

     பொன்முகலி ஆற்றை அடைந்ததும், காடனிடம் தீ உண்டு பண்ணுமாறு கூறித் தாம் நாணனுடன் சென்றார். ஆற்றில் தெளிந்த தீர்த்த நீர் அவர் சிந்தை தெளியச் செய்தது. குடுமித்தேவரிடம் பெருகும் அன்பின் சுகமே தனக்கேற்பட்ட 'புதிரான' சுக உணர்வு என்ற விளக்கம் ஏற்படலாயிற்று. மலைச்சாரலை அடைந்த போது உச்சிக்காலமாயிருந்தது. அவ்வேளையில் தேவர்கள் வந்து காளத்திநாதரை வழிபடுவர். அவ்வாறு வழிபடும்போது தேவ துந்துபி எழுதும். அவ்வாத்திய ஓசை திண்ணனாருக்குக் கேட்டது. "இது என்ன இசை" என்று கேட்டார். நாணனுக்கோ அது மலைப்பெருந்தேன் வண்டின் இரைச்சலாகவே தோன்றியது.

     திண்ணனாரது முன்னைத் தவத்தின் பயன் முன்னி எழ முடிவிலா அன்பு பெருகலாயிற்று. அவ்வன்பும் நாணனும் முன்பு செல்லத் தான் மலை ஏறிச் சென்றார். தத்துவப் படிகளைத் தாண்டி சிவதத்துவத்தைச் சாரும் சிவஞானியாரைப் போலச் சென்றுகொண்டு இருந்தார். இவ்வண்ணம் சென்றுகொண்டிருந்த அன்பாளர் காண்பதற்கு முன்னமே காளத்திநாதரின் அருள் திருநோக்கம் திண்ணனார் மேல் பதிந்தது. திண்ணனார் முன்னைச் சார்பு முற்றாய் நீங்கியது. அவர் ஒப்பற்ற அன்புருவானார். அன்புருவான திண்ணனார் மலைக்கொழுந்தாய் உள்ள தேவரைக் கண்டார். அன்பின் வேகத்தால் விரைந்து ஓடிச் சென்று தழுவினார். மோந்தார், ஐயர் அகப்பட்டுக்கொண்டார் என ஆனந்தப்பட்டார். "கரடி, சிங்கம், திரியும் காட்டில் இப்படித் தனியாக இருப்பதோ" என்று இரங்கினார். இரங்கி நின்ற திண்ணனார் கண்ணில் தேவரின் உச்சியில் பச்சிலை, பூ என்பன தெரிந்தன.

     "நான் இது அறிவேன்; முன்னர் உன் தந்தையாரோடு வந்த ஒருநாள் பார்ப்பான் ஒருவன் குளிர் நீராட்டி" இலையும் பூவும் இட்டு உணவு படைத்து, சில சொற்களும் சொல்லி நின்றான்; இன்றும் அவனே இச்செய்கை செய்தான்" என நாணன் கூறினான். "இதுவே திருக்காளத்தி நாயனாருக்கு இனிய செய்கை" என்று அதைக் கடைப்பிடிக்கத் திண்ணப்பர் ஆசை கொண்டார். நாயனார் பசியோடிருக்கின்றாரே; இவருக்கு இறைச்சி கொண்டு வரவேண்டுமென விரும்பினார். ஆனால் அவரைத் தனியே விட்டுச் செல்லவும் மனம் வரவில்லை. சற்றுநேரம் சஞ்சலப் பட்டபின் துணிவுகொண்டு கைகூப்பித் தொழுதுவிட்டு வில் எடுத்து விரைவுடன் இறங்கிச் சென்றார். பன்றி கிடைக்கும் இடத்தை அடைந்து உறுப்பு அரிந்து வைத்திருந்த இறைச்சியை தீயில் வதக்கி, வாயில் சுவை பார்த்து, இனியனவெல்லாம் கல்லையிற் சேர்த்தார். இடையில் காடன் ஏதேதோ வினவினான். அவையெல்லாம் திண்ணனார் காதில் விழவேயில்லை. நாணன், "குடுமித் தேவரிடத்து வங்கினைப் பற்றி மீளாவல்லுடும்பென்ன நின்ற" அவர்தம் நிலையை காடனுக்கு எடுத்துக் கூறினான். இருவரும் இனிச் செயலில்லை; நாகனாரிடம் செல்வோம் எனச் சென்றனர்.

     திண்ணப்பார் கல்லையில் சேர்த்த ஊனமுது ஓர் கையிலும், வாயில் பொன்முகலி ஆற்று மஞ்சன நீரும், தலையிற் பள்ளித் தாமமும் (பூக்கொத்து) ஆக நாயனார் மிக்க பசியோடிருப்பாரென இரங்கியவராய் விரைந்து வந்தார். வந்து குடுமித்தேவரின் குடுமியில் இருந்த பூக்களைத் தம் செருப்பணிந்த காலினால் துடைத்தார். வாயின் நீரினால் அன்பு உமிழ்வார் போல் அபிடேகமாடினார். தலையிலிருந்த பூங்கொத்துக்களை தேவர் குடுமியில் சூட்டினார். கல்லையிலிருந்து ஊனமுதைத் தேவரின் முன்பு வைத்து "இனிய ஊன் நாயனீரே! நானும் சுவை கண்டேன்; அமுது செய்தருளும்" என்று இவ்வாறான மொழிகள் சொல்லி அமுது செய்வித்தார். அந்தி மாலையானதும் இரவில் கொடிய விலங்குகள் வரும் என்று அஞ்சி வில்லுடான் நின்றார். இரவெல்லாம் கண் துயிலாது நின்ற வீரர் விடியற்காலம் ஆனபோது "இன்று நாயனாருக்கு இனிய ஊனமுது படைக்க வேண்டுமென்ற ஆர்வம் கொண்டார்". இருள் பிரியாத வேளையிலே காட்டினுள் புகுந்தார். அவரின் முன்னே அவரைப் பிரியாது திரியும் நாயும் சென்றது.

         அன்று பகல் போதில் காளத்தி நாதரை அர்ச்சித்து வழிபட சிவகோசரியார் எனும் அந்தணர் பூசைத் திரவியங்களுடன் வந்தார். சாத்திரம் கற்ற ஆசார சீலரான அவ்வந்தணர் நித்தமும் சிவலிங்கத்திற்கு ஆகமவிதிப்படி பசும் நெய்பூசி, மணமிகு பூக்களோடு வில்வம் தூவி, தூயாடைக் கட்டி, எங்கும் மணங்கமழும் வண்ணம் வாசனை திரவியமிட்டு, நேரம் தவறாமல் பூசை செய்பவராக சிவனுக்கே தன்னை அர்ப்பணித்துக் கொண்டவராக திகழ்ந்தார். சிவனாரின் சிறப்புகளுள் மெய் சிலிற்க வைப்பது யாதெனில், குணங்களில் இருவேறு துருவங்களாக இருப்பவரும் சிவனாரால் ஆட்கொள்ளப்படுவதே..

         வந்தவர் காளத்தியப்பர் முன்னிலையில் கிடக்கும் இறைச்சி, எலும்பு ஆகியவற்றைக் கண்டு திகைத்து கால்களை அகல மிதித்தபடியே நின்றார். மூன்றுகால பூசைகாணும் சிவலிங்கத்தின் முன் இரத்த நெடி கமகமக்க மாமிசத்துண்டுகள் வி்ல்வத்துடன் இணைந்து விரவிக் கிடப்பதைக் கண்ட அவர் கடுஞ்சினம் கொண்டார். வேட்டுவச் சாதியினரே இவ்வேலையைச் செய்தனராதல் வேண்டும் எனச் சோர்ந்தார்.

         பூசைக்கு நேரம் தாழ்க்கின்றதென்ற உணர்வு எழுந்ததும் இறைச்சி, எலும்பு என்பனவற்றை எடுத்து எறிந்து திருவலகு கொண்டு செருப்பு அடி, நாயடி என்பனவற்றையெல்லாம் மாற்றியபின், பொன்முகலி சென்று நீராடினார். மீண்டு வந்து பழுது புகுந்து தீரப் பவித்திரமாம் செய்கை (பிராச்சித்தம்) செய்து ஆகமவிதி முறைப்படியான பூசனை செய்து சென்றார்.

         இருள் பிரியாப் போதில் காட்டினுள் புகுந்த திண்ணனார் தாம் அறிந்த வேட்டைத் திறத்தால் வேறுவேறு மிருகமெல்லாம் கொன்று ஓரிடத்தில் சேர்த்து, வக்குவன வக்குவித்து, கோலினில் கோர்த்து, தீயினில் காய்ச்சி, தேக்கிலைக் கல்லையிற் சேர்த்தார். அதிற் தேனும் பிழிந்து கலந்தார். முன்போன்றே பள்ளித் தாமமும் வாய்க்கலசத்து மஞ்சனமும், ஊனமுதமுமாய் காளத்தியப்பரிடம் விரைந்து வந்தார். 'இது முன்னையிலும் நன்று; நானும் சுவை கண்டேன்; தேனும் கலந்தது; தித்திக்கும்' என மொழிந்து திருவமுது செய்வித்தார்.

         இவ்வண்ணம் பகல் வேட்டையாடி இனிய செய்கை செய்வதும் இரவில் கண்ணுறங்காது காவல் புரிவதுமாகத் திண்ணப்பர் இருந்தனர். ஆகம முறைப்படி பூசனை புரிந்து சிவகோசாரியார் ஒழுகினார். நாணன், காடன் என்போர் சென்று சொன்ன சொற்கேட்டு ஆறாக் கவலையுடன் வந்த நாகனாரும், கிளையினரும் முயலும் வகையெல்லாம் முயன்றும் தம் கருத்து வாராமல் கைவிட்டுச் சென்றனர்.

         சிவகோசாரியார் நாளும் நாளும் நிகழும் அநுசிதம் குறித்து மிகவும் மனம் நொந்தார்.  அவலம் செய்வது யாரென்றறிய ஈசனிடமே முறையிட்டார். அவர் பெருமானை வேண்டிய வண்ணம் துயின்ற வேளையில் பெருமான் கனவில் தோன்றி "இச்செய்கை செய்பவனை நீ இகழ வேண்டாம். அவனுடைய வடிவெல்லாம் நம்மிடத்தில் கொண்ட அன்பாய் அமைவது; அவனுடைய அறிவெல்லாம் நமை அறியும் அறிவு; அவனுடைய செயலெலாம் நமக்கு இனியன. இதனை நாளை உமக்குக் காட்டுவோம். நாளை இரவு தான் கொலு வீற்றிருக்கும் இடத்தினருகே மறவில் இருந்து நடப்பனக் கண்டு மனந்தெளிவாய்" என வாய்மொழிந்தார்.

     சிவகோசாரியார் பெருமானது அருளிப் பாட்டை நினைந்து உருகிய சிந்தையராய் அற்புதம் அறியும் ஆர்வத்தோடு வந்து பூசனையாற்றி ஒளிந்திடவே திருவிளையாடல் காட்சியினிதே அரங்கேறியது.

         திண்ணப்பர் திருக்காளத்தி அப்பரைச் சேர்ந்து ஐந்து பகலும் ஐந்து இரவும் கழிந்தன. ஆறாம் நாள் விடியற்பொழுதில் கண் துயிலாது நின்ற கண்ணப்பர் வழக்கம் போன்று காட்டினுள் சென்று வேட்டையாடி ஊனமுது ஆதியனவற்றுடன் வந்து கொண்டிருந்தார். அவருக்குத் தோன்றிய சகுனங்கள் சஞ்சலம் தருவனவாய் இருந்தன. தீய பறவைகளின் ஒலி கொண்டு 'இது இரத்தப் பெருக்கிற்கான துர்க்குறி' எனத் துணுக்குற்றார். நாயனாருக்கு ஏது நேர்ந்ததோ என எண்ணியவராய் விரைந்து வந்தார். வந்தவர் பெருமானது கண்ணில் பெருகும் இரத்ததைக் கண்டார். கண்டதும் பதைபதைத்து மயக்கமெய்தினார். அவரது வாயின் நீர் சிந்தியது. கைசோர்ந்து இறைச்சி சிதறியது. தலையின் பள்ளித்தாமம் சோர்ந்தது. நிலத்தில் துடித்து வீழ்ந்தார். விழுந்தவர் மயக்கம் தெளிந்து எழுந்து சென்று இரத்ததைத் துடைத்துப் பார்த்தார். இரத்தம் நிற்காமல் பெருகிக்கொண்டே இருந்தது. செய்வதறியாது பெருமூச்சுவிட்டு மீளவும் சோர்ந்து விழுந்தார். வீழ்ந்தவர் எழுந்து வில்லும் அம்பும் கொண்டு இத்தீச்செயல் செய்த விலங்குகளுடன் வேடர்கள் உளரோ? என்று எங்கும் தேடிச்சென்றார். எவரையும் காணாது வந்து பெருமானின் பாதங்களைக் கட்டிப்பிடித்துக் கொண்டு அழுது புலம்பினார். ஓர் எண்ணம் எழுந்ததும் வெருண்டதோர் எருதுபோல் காடெங்கும் திரிந்து பச்சிலைகளைப் பறித்து வந்து கண்ணில் பிழிந்து பார்த்தார். மருந்து பலன் தராமையால் நொந்தார். "ஊனுக்கு ஊன்" என்ற மருந்து நினைவு வரவே, கண்ணுக்குக் கண் என்ற புத்தி புகுந்தது. ஆதலால் தமது ஒரு கண்ணை தோண்டி இரத்தம் பெருகும் பெருமானின் கண்ணில் அப்பினார். நின்ற செங்குருதி கண்டார். நிலத்தினின்றும் எறப் பாய்ந்தார். தோள் கொட்டினார். "நன்று நான் செய்த இந்த மதி" என மகிழ்ந்தார். மகிழ்ந்த அன்பாளர் மற்றைக் கண்ணினின்றும் குருதி பெருகுவதைக் கண்டார். கண்டதும் ஒரு கணம் கவலையுற்றார். மறுகணமே இதற்கோர் அச்சம் கொளேன்; மருந்து கண்டேன் என்றவராய் தம் மற்றைக் கண்ணைத் தோண்ட முனைந்தார். கண் அடையாளம் காண்பதற்காகத் தன் இடதுகாலைப் பெருமானின் கண்ணில் ஊன்றினார். உள் நிறைந்த விருப்போடு அம்பினை ஊன்றினார். இச்செய்கை கண்டு தேவதேவர் தரித்திலர். தம் திருக்கையால் தடுத்தனர். "கண்ணப்ப நிற்க என் வலத்தினில் என்றும் நிற்க" என்று அமுத வாக்கு அருளினார். இதனை ஞானமாமுனிவர் கண்டனர்; கேட்டனர். தேவர்கள் பூமழை பொழிந்து வாழ்த்தினர். இதனிலும் பெரிய பேறுண்டோ?

         சிவபெருமான் பெருமையை 100 சுலோகங்களில் பறை சாற்றும் சிவானந்தலஹரி என்ற தன்னுடைய (வடமொழி) நூலில் ஆதி சங்கரர் 61 வது சுலோகத்தில் கடவுட்பற்று என்பதற்கு உயர்ந்த இலக்கணம் சொல்கிறார். அவ்விலக்கணத்திற்குச் சிகரம் வைத்தாற்போல் 63 வது சுலோகத்தில் கண்ணப்பரின் உள்நிறைந்த அன்பின் மூன்று செய்கைகளையும் குறிப்பிட்டுவிட்டு இதுவன்றோ பக்தி , கடவுளன்பர் என்பதற்கு இவ்வேடுவனே இலக்கணம் என்கிறார். அச்சுலோகத்தின் உரை கீழ்வருமாறு:

வழிநடைநடந்த மிதியடி பசுபதியின் அங்கத்திற்கு குறிகாட்டியாகிறது;
வாயிலிருந்து உமிழ்ந்த நீர் புரங்கள் எரித்தவனுக்கு நீராடலாகிறது;
சிறிதுண்டு சுவைகண்ட ஊனமுது தேவனுக்கும் படையலாகிறது;
பக்தி என்னதான் செய்யமாட்டாது? அன்பரென்போர் வேடுவனன்றி வேறு எவர்?

இந்த சுலோகத்திற்கு உரையாசிரியர்கள் உரை எழுதும்போது, இதனில் தீவிர பக்தியின் மூன்று படிகள் சித்தரிக்கப் பட்டிருப்பதாகக் கூறுகிறார்கள்.

         சுலோகத்தின் மூன்றாவது வரி முதல் படி. தான் சிறிது சுவைத்துவிட்டு மீதமுள்ளதும் அதே விதத்தில் தேனொழுக இனிக்கும் என்று சொல்வதில் ஒருவித நம்பிக்கைதான் இருக்கிறதே தவிர முழுமையாக அறுதிப்படுவது இயலாது. அதனால் இது தீவிர பக்தியில் ஒரு சாமானியப்படிதான்.
   
         சுலோகத்தின் இரண்டாவது வரி அடுத்த படி. வாயிலிருந்து உமிழ்ந்த நீர் ஆண்டவனுக்கு அபிஷேகமாகிறது. ஆனால் 'அது' என்னும் ஆண்டவனின் ஆனந்தத்தில் சங்கமமாகும் 'இது' என்னும் இந்த ஜீவனின் உமிழ்நீர் இன்னும் 'அது', 'இது' என்ற இரட்டையின் மயக்கத்தில்தான் இருக்கிறது. அதனால், இது தீவிரபக்தியின் அடுத்த மேல் படி என்று சொல்லலாமே தவிர தீவிரபக்தியின் உச்சகட்டமாகச்சொல்லமுடியாது.
   
         சுலோகத்தின் முதல் வரியை தீவிர பக்தியின் உச்சநிலையாகச் சொல்லலாம். ஏனென்றால், பக்தன் தன் மிதியடியையே தேவனின் கண்ணில் வைக்கும்போது, அங்கு தேவன் வேறு, தான் வேறு என்ற பாகுபாடெல்லாம் பறந்து போய்விட்டது. 'தத் த்வம் அஸி' (அதுவே நீ) என்ற உபநிஷத்து மகாவாக்கியப்படி, அந்தப் பரம்பொருளே இந்த ஜீவன் என்ற இலக்கணம் ருசுவாகிறது!

கண்ணப்பன் ஒப்பது ஓர் அன்பு இன்மை கண்டபின்
என்அப்பன் என்ஒப்பு இல் என்னையும் ஆட்கொண்டு அருளி
வண்ணப் பணித்து, ன்னை "வா" என்ற வான் கருணை
சுண்ணப்பொன் நீற்றற்கே சென்று ஊதாய் கோத்தும்பி

         கண்ணப்பனுக்கு ஈடான அன்பு என்னிடம் இல்லாவிட்டாலும் கூட இறைவர் என்னையும் ஆட்கொண்டருளியதாகத் திருவாசகம்,  திருகோத்தும்பியில் மணிவாசகப் பெருமான் குறிப்பிடுகின்றார்.

         "தொண்டுசெய்து நாள் ஆறில் கண் இடந்து அப்ப வல்லேன் அல்லேன், நான் இனிச் சென்று ஆள் ஆவது எப்படியோ, திருக் காளத்தி அப்பருக்கே" என்று பட்டினத்தாரும் பாடினார்.

     "கலை மலிந்தசீர் நம்பி கண்ணப்பர்க் கடியேன்" என்பது சுந்தரர் பாடி அருளிய திருத்தொண்டத் தொகை.

     வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "எள்ளல் உறும் கோள் அத்தி நீக்கும் குணத்தோர்க்கு அருள் செய் திருக் காளத்தி ஞானக் களஞ்சியமே" என்று போற்றி உள்ளார்.


திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு


பெரிய புராணப் பாடல் எண் : 1015
இறைவர்திருக் காரிகரை இறைஞ்சி, அப்பால்
         எண்இல்பெரு வரைகள்இரு மருங்கும், எங்கும்
நிறைஅருவி நிரைபலவாய் மணியும் பொன்னும்
         நிறை துவலை புடைசிதறி நிகழ்ப ஆகி,
அறைகழல் வானவர்க்கு இறைவன் குலிச ஏற்றால்
         அற்றசிறை பெற்று, அவன்மேல் எழுவதற்குச்
சிறகடித்துப் பறக்கமுயன்று உயர்ந்த போலும்
         சிலைநிலத்தில் எழுந்தருளிச் செல்லா நின்றார்.

         பொழிப்புரை : சிவபெருமானின் திருக்காரிகரையைத் தொழுது, மேற்சென்று அளவில்லாத பெரிய மலைகளின் இருபக்கங்களிலும் எங்கும் நீர் நிறைந்த அருவிகள் பல வரிசையான மணிகளையும் பொன்னையும் நிறைந்த நீர்த்துளிகளையும் பக்கங்களில் நிரம்பச் சிதற, ஒலிக்கின்ற கழலை அணிந்த தேவேந்திரனின் வச்சிரப் படைத் தாக்குதலால் அறுபட்ட இறகுகளைப் பெற்று, அவன் மீது போருக்கு எழுவதற்காகச் சிறகுகளை விரித்துப் பறக்க முயன்று உயர்ந்தன போன்ற காட்சிதரும் மலைகள் சூழ்ந்த நாட்டின் பகுதியில் எழுந்து அருளிச் செல்பவராய்,

 
பெ. பு. பாடல் எண் : 1016
மாதவர்கள் நெருங்கு குழாம் பரந்து செல்ல,
         மணிமுத்தின் பரிச்சின்னம் வரம்புஇன்று ஆக,
பூதிநிறை கடல்அணைவது என்ன, சண்பைப்
         புரவலனார் எழுந்தருளும் பொழுது, சின்னத்
தீதுஇல்ஒலி பலமுறையும் பொங்கி எங்கும்,
         'திருஞான சம்பந்தன் வந்தான்' என்னும்
நாதம்நிறை செவியினவாய், மாக்கள் எல்லாம்
         நலம்மருவு நினைவுஒன்றாய் மருங்கு நண்ண.

         பொழிப்புரை : திருத்தொண்டர்களின் கூட்டம் பரந்து செல்ல, அழகிய முத்துச் சின்னங்கள் உண்டாக்கும் ஓசை அளவில்லாது எழ, திருநீறு நிறைந்த கடல் அணைவதைப் போல் சீகாழித் தலைவரான ஞானசம்பந்தர் வரும்போது, திருச்சின்னங்களின் ஒப்பில்லாத ஒலி பலமுறையாலும் மேன்மேல் மிக, எங்கும் `திருஞானசம்பந்தர் வந்தார்' என்று உண்டாகும் ஒலி நிறைந்த காதுகளை உடையன ஆதலால், ஐந்து அறிவுடைய விலங்குச் சாதிகள் எல்லாம் தம் இயல்பான தீமையின்றி நன்மை பொருந்திய நினைவு ஒன்றையே மேற்கொண்டு பக்கங்களில் வந்து பொருந்த,

         குறிப்புரை : ஞானசம்பந்தர் எனும் திருப்பெயரைக் கேட்ட அளவில், பொல்லா விலங்குகளும் புன்மை நீங்கி நன்மை பெருக அவரை எதிர் கொள்வனவாயின.


பெ. பு. பாடல் எண் : 1017
கானவர்தம் குலம்உலகு போற்ற வந்த
         கண்ணப்பர் திருப்பாதச் செருப்புத் தோய,
மானவரிச் சிலைவேட்டை ஆடும் கானும்,
         வானமறை நிலைபெரிய மரமும், தூறும்,
ஏனைஇமை யோர்தாமும் இறைஞ்சி ஏத்தி
         எய்தவரும் பெருமையவாம் எண் இலாத
தானமும், மற்று அவைகடந்து, திருக்காளத்தி
         சாரஎழுந் தருளினார் சண்பை வேந்தர்.

         பொழிப்புரை : வேடுவர் குலத்தை உலகமானது போற்றுமாறு, அக்குலத்தில் வந்து தோன்றிய கண்ணப்ப நாயனாரின் திருவடிகளில் அணிந்த செருப்புத் தேயுமாறு பெரிய கட்டமைந்த வில்வேட்டை ஆடும் காடுகளும், வானத்தை மறைக்குமாறு நீண்ட பெரிய மரச்சோலைகளும், தூறுகளும், தேவர்களும் போற்றும் பெருமையுடைய அளவில்லாத மற்ற இடங்களும் ஆகியவற்றையெல்லாம் கடந்து சென்று, திருக்காளத்தி மலையை அணுகச் சென்றார் சீகாழித் தலைவர்.


பெ. பு. பாடல் எண் : 1018
"அம்பொன்மலைக் கொடிமுலைப்பால் குழைத்த ஞானத்து
         அமுதுஉண்ட பிள்ளையார் அணைந்தார்" என்று,
செம்பொன்மலை வில்லியார் திருக்கா ளத்தி
         சேர்ந்ததிருத் தொண்டர் குழாம்அடைய ஈண்டி,
பம்புசடைத் திருமுனிவர், கபாலக் கையர்,
         பலவேடச் சைவர், குல வேடர், மற்றும்
உம்பர்தவம் புரிவார், அப் பதியில் உள்ளோர்,
         உடன்விரும்பி எதிர்கொள்ள உழைச்சென்று உற்றார்.

         பொழிப்புரை : அழகிய இமவானின் மகளாரான கொடி போன்ற உமையம்மையாரின் திருமுலைப்பாலில், குழைத்த ஞான அமுதத்தை உண்ட `ஆளுடைய பிள்ளையார் வருகின்றார்' என்று எண்ணி, மேருமலையை வில்லாகக் கொண்ட இறைவரின் திருக்காளத்தியில் உள்ள திருத்தொண்டர் கூட்டம் நெருங்கி வர, நெருங்கிய சடையையுடைய முனிவர்களும், மண்டை ஓட்டை ஏந்தும் காபாலியர்களும், மற்றும் மாவிரதம் முதலான பற்பல வேடங்களை உடைய சைவர்களும், மேன்மையான தவம் செய்தவரும், அப்பதியில் உள்ளவருடன் கூடி மகிழ்ந்து, எதிர் கொள்ள, அவர் அருகே சேர்ந்தனர்.


பாடல் எண் : 1019
திசைஅனைத்தும் நீற்றின்ஒளி தழைப்ப, மண்மேல்
         சிவலோகம் அணைந்தது எனச் சென்றபோது,
மிசைவிளங்கும் மணிமுத்தின் சிவிகை நின்றும்
         வேதபாரகர் இழிந்து, வணங்கி, மிக்க
அசைவுஇல்பெருந் தொண்டர்குழாம் தொழுது, போற்றி,
         'அர' எனும் ஓசையில்அண்டம் நிறைப்ப, அன்பால்
இசைவிளங்கும் தமிழ்விரகர், "திருக்கா ளத்தித்
         திருமலை, இம்மலைகளில் யாது" என்று கேட்டார்.

         பொழிப்புரை : எல்லாத் திசைகளிலும் திருநீற்றின் ஒளி பரவ, `இந்த உலகத்தில் சிவலோகம் வந்து சேர்ந்தது\' எனக் கூறுமாறு சென்றபோது, மேலே விளங்கும் அழகிய முத்துச் சிவிகையினின்றும் இறங்கி, மறைகளில் வல்ல ஞானசம்பந்தர், வணங்கி, எதிர் கொண்ட மன அசைவற்ற பெரிய திருத்தொண்டர் கூட்டம் தொழுது வணங்கி `அர அர!\' என்ற பேரொலியால் அண்டம் முழுதும் நிறையுமாறு செய்யப் புகழினால் எங்கும் விளங்கும் தமிழ் வல்லுநரான ஞானசம்பந்தர் அவர்களை நோக்கி, `இங்குத் தோன்றும் மலைகளுள் திருக்காளத்தி மலை எது?' என்று வினவினார்.


பெ. பு. பாடல் எண் : 1020
வந்துஅணைந்த மாதவத்தோர் வணங்கித் தாழ்ந்து,
         "மறைவாழ்வே, சைவசிகா மணியே, தோன்றும்
இந்தமலை, காளனோடு அத்தி தம்மில்
         இகலிவழி பாடுசெய இறைவர்மேவும்
அந்தம்இல்சீர்க் காளத்தி மலையாம்" என்ன
         அவனிமேல் பணிந்து எழுந்து அஞ்சலிமேல் கொண்டு
சிந்தைகளி மகிழ்ச்சி வரத் திருஇராகம்
         "வானவர்கள் தானவர்" என்று எடுத்துச் செல்வார்.

         பொழிப்புரை : எதிர்கொண்டு வரவேற்ற தொண்டர்கள் ஞானசம்பந்தரை வணங்கி `மறையவர்களின் வாழ்வாகியவரே! சைவத் தலைவர்களுள் சிறந்தவரே! நம் எதிரே தோன்றும் இம் மலைதான், முன்நாளில் `காளன்' என்னும் பாம்பும், `அத்தி\' என்னும் யானையும், தம்முள் மாறுபட்டுத் தம்மைப் பூசை செய்த இறைவர் எழுந்தருளியுள்ள கேடில்லாத சிறப்புடைய திருக்காளத்தி மலையாகும்' என உரைப்ப, அப்போது ஞானசம்பந்தர் விழுந்து வணங்கி எழுந்து, கைகளைத் தலைமீது குவித்து, மனத்துள் மிக்க மகிழ்ச்சி எழுதலால் `வானவர்கள் தானவர்கள்' எனத் தொடங்கும் திருப்பதிகத்தைத் திருவிராக அமைப்பில் பாடியவாறு மேற்செல்வாராய்,

         குறிப்புரை : `வானவர்கள் தானவர்கள்' எனத் தொடங்கும் பதிகம் சாதாரிப் பண்ணில் அமைந்ததாகும் (தி.3 ப.69). `வாய் கலசமாக வழிபாடு செயும் வேடன் மலராகு நயனம், காய்கணையினாலிடந்து ஈசன் அடிகூடு காளத்திமலையே\' எனக் கண்ணப்பரைப் பிள்ளையார் போற்றப்பெறும் சிறப்பே இங்கு எடுத்து மொழியப்படுகிறது.


3. 069    திருக்காளத்தி                        பண் - சாதாரி
                                             திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
வானவர்கள் தானவர்கள் வாதைபட
         வந்ததுஒரு மாகடல்விடம்
தான்அமுது செய்து,அருள் புரிந்தசிவன்
         மேவுமலை தன்னைவினவில்,
ஏனம்இள மானினொடு கிள்ளைதினை
         கொள்ள,எழிலார் கவணினால்
கானவர்தம் மாமகளிர் கனகமணி
         விலகுகா ளத்திமலையே.
        
         பொழிப்புரை :தேவர்களும் , அசுரர்களும் வருந்தித் துன்புறுமாறு பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய ஆலகால விடத்தை , தான் அமுது போன்று உண்டு அருள் செய்த சிவபெருமான் வீற்றிருந்தருளும் மலை எது என வினவினால் , பன்றிகள் , இளமான்கள் , கிளிகள் இவை தினைகளைக்கவர வேட்டுவ மகளிர்கள் பொன்னாலும் , இரத்தினங்களாலும் ஆகிய ஆபரணங்களைக் கவண்கற்களாக வீசி விரட்டும் சிறப்புடைய திருக்காளத்திமலையாகும் .


பாடல் எண் : 2
முதுசினவில் அவுணர்புரம் மூன்றும்ஒரு
         நொடிவரையின் மூளஎரிசெய்
சதுரர்,மதி பொதிசடையர், சங்கரர்
         விரும்புமலை தன்னைவினவில்,
எதிர்எதிர வெதிர்பிணைய எழுபொறிகள்
         சிதறஎழில் ஏனம் உழுத
கதிர்மணியின் வளர்ஒளிகள் இருள்அகல
         நிலவுகா ளத்திமலையே.

         பொழிப்புரை : மிகுந்த கோபத்துடன் மேருமலையை வில்லாகக் கொண்டு பகையசுரர்களின் முப்புரங்களையும் ஒருநொடிப் பொழுதில் எரியுண்ணும்படி செய்த சமர்த்தர் சிவபெருமான் . அவர் சந்திரனைத் தரித்த சடையையுடையவர் . எல்லா உயிர்கட்கும் நன்மையே செய்பவர் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் மலை , எதிரெதிராக உள்ள மூங்கில்கள் உராய்வதால் தோன்றிய நெருப்புப் பொறிகளாலும் , பன்றிகள் கொம்பினால் மண்ணைக் கிளறும்போது கிடைத்த மணிகளாலும் இருள் நீங்க விளங்குகின்ற திருக்காளத்தி மலையாகும் .


பாடல் எண் : 3
வல்லைவரு காளியைவ குத்துவலி
         ஆகி, மிகு தாரகனைநீ
கொல்லஎன விடுத்துஅருள் புரிந்தசிவன்
         மேவுமலை கூறிவினவில்,
பல்பலஇ ருங்கனி பருங்கிமிக உண்டுஅவை
         நெருங்கி இனமாய்க்
கல்அதிர நின்றுகரு மந்திவிளை
         யாடுகா ளத்திமலையே.

         பொழிப்புரை : தாரகன் இழைத்த துன்பம் கண்டு , விரைந்து நீக்கவரும் காளியை நோக்கி , ` வலிமை மிகுந்த தாரகன் என்னும் அசுரனை நீ கொல்வாயாக ` என்று மொழிந்து அருள்செய்த சிவ பெருமான் வீற்றிருந்தருளும் மலை , பலவகைச் சுவைமிகுந்த பெரிய கனிகளின் சாற்றை அருந்தி , ஒரே கூட்டமாய் மொய்த்து , மலை அதிரும்படி கருங்குரங்குகள் விளையாடுகின்ற திருக்காளத்தி மலையாகும் .


பாடல் எண் : 4
வேய்அனைய தோள்உமையொர் பாகம்அது
         வாகவிடை ஏறி,சடைமேல்
தூயமதி சூடி,சுடு காடில்நடம்
         ஆடிமலை தன்னைவினவில்,
வாய்கலச மாகவழி பாடுசெய்யும்
         வேடன்மலர் ஆகுநயனம்
காய்கணை யினால்இடந்து ஈசன்அடி
         கூடுகா ளத்திமலையே.

         பொழிப்புரை : மூங்கிலைப் போன்ற தோளுடைய உமாதேவியைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு , இடப வாகனத்தில் ஏறி , சடைமுடியில் தூயசந்திரனைச் சூடி , சுடுகாட்டில் நடனம் ஆடும் சிவபெருமான் வீற்றிருந்தருளும் மலை , வாயே அபிடேக கலசமாக வழிபாடு செய்த வேடராகிய கண்ணப்பர் , தம் மலர்போன்ற கண்ணைக் கொடிய அம்பினால் தோண்டி இறைவனுக்கு அப்பி , இறைவனின் திருவடியைச் சார்ந்த சிறப்புடைய திருக்காளத்தி மலையாகும் .


பாடல் எண் : 5
மலையின்மிசை தனில்முகில்போல் வருவதுஒரு
         மதகரியை மழைபொல்அலறக்
கொலைசெய்துஉமை அஞ்சஉரி போர்த்தசிவன்
         மேவுமலை கூறிவினவில்,
அலைகொள்புனல் அருவிபல சுனைகள்வழி
         இழியவயல் நிலவுமுதுவேய்
கலகலென ஒளிகொள்கதிர் முத்தம்அவை
         சிந்துகா ளத்திமலையே.

         பொழிப்புரை : மலையின்மேல் தவழும் மேகம்போல் வந்த மதம்பொருந்திய யானையானது இடிபோல் பிளிற , அதனைக் கொன்று உமாதேவி அஞ்சும்படி அதன் தோலைப் போர்த்திக் கொண்ட சிவபெருமான் வீற்றிருந்தருளும் மலை , அலைகளையுடைய நீர் மலையிலிருந்து அருவிபோல் இழிந்து , பல சுனைகளின் வழியாக வயல்களில் பாய , அருகிலுள்ள முற்றிய மூங்கில்கள் கலகல என்ற ஒலியுடன் , கதிர்போல் ஒளிரும் முத்துக்களைச் சிந்தும் திருக்காளத்திமலையாகும் .


பாடல் எண் : 6
பாரகம் விளங்கிய பகீரதன்
         அருந்தவம் முயன்ற பணிகண்டு
ஆரருள் புரிந்து,அலைகொள் கங்கைசடை
         ஏற்ற அரன் மலையைவினவில்,
வார்அதர் இருங்குறவர் சேவலின்
         மடுத்தவர் எரித்த விறகில்
கார்அகில் இரும்புகை விசும்பு கமழ்
         கின்ற, காளத்திமலையே.

         பொழிப்புரை : பாரதபூமியில் சிறந்து விளங்கிய பகீரதன் என்னும் மன்னன் , பிதிரர்கட்கு நற்கதி உண்டாகுமாறு அரியதவம் செய்து வானிலுள்ள கங்கையைப் பூவுலகிற்குக் கொண்டுவர , அவனுக்கு அருள்செய்து , பெருக்கெடுத்த கங்கையைத் தன் சடையில் தாங்கிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் மலை , நெடிய வழிகளையுடைய கானகக் குறவர்கள் தங்கள் குடிசையில் அடுப்பெரித்த , கரிய அகில் கட்டையிலிருந்து கிளம்பிய பெரியபுகை ஆகாயத்தில் மணக்கின்ற திருக்காளத்திமலையாகும் .


பாடல் எண் : 7
ஆரும்எதி ராதவலி ஆகிய
         சலந்தரனை ஆழியதனால்
ஈரும்வகை செய்துஅருள் புரிந்தவன்
         இருந்தமலை தன்னைவினவில்,
ஊரும்அரவம் ஒளிகொள் மாமணி
         உமிழ்ந்துஅவை உலாவிவரலால்
கார்இருள் கடிந்துகன கம்மென
         விளங்குகா ளத்திமலையே.

         பொழிப்புரை : தன்னை எதிர்த்துப் போர்செய்ய யாரும் வாராத , வலிமை மிகுந்த சலந்தராசுரனின் தலையைச் சக்கராயுதத்தால் பிளந்து தேவர்கட்கு அருள்புரிந்த சிவபெருமான் வீற்றிருந்தருளும் மலை , ஊர்ந்து செல்லுகின்ற பாம்புகள் உமிழ்ந்த இரத்தினங்களின் ஒளியால் கரிய இருள் நீங்கப் பெற்று, பொன்மலைபோல் பிரகாசிக்கின்ற திருக்காளத்தி மலையாகும் .


பாடல் எண் : 8
எரிஅனைய சுரிமயிர் இராவணனை
         ஈடுஅழிய எழில்கொள்விரலால்
பெரியவரை ஊன்றி,அருள் செய்தசிவன்
         மேவுமலை பெற்றிவினவில்,
வரியசிலை வேடுவர்கள் ஆடவர்கள்
         நீடுவரை யூடுவரலால்
கரியினொடு வரிஉழுவை அரியினமும்
         வெருவுகா ளத்திமலையே.

         பொழிப்புரை : நெருப்புப்போல் சிவந்த சுருண்ட முடிகளையுடைய இராவணனின் வலிமை அழியுமாறு , தன் அழகிய காற்பெருவிரலை ஊன்றிப் பெரிய கயிலைமலையின் கீழ் அவனை அழுத்தி , பின் அருள்செய்த சிவபெருமான் வீற்றிருந்தருளும் மலை , நீண்ட வில்லேந்திய வேடர்கள் நெடிய மலையினூடே வருவதால் , யானைகளும் , வரிகளையுடைய புலிகளும் , சிங்கக் கூட்டங்களும் அஞ்சுகின்ற திருக்காளத்திமலையாகும் .


பாடல் எண் : 9
இனதுஅளவில் இவனதுஅடி இணையும்,முடி
         அறிதும்என இகலும்இருவர்,
தனதுஉருவம் அறிவரிய சகலசிவன்
         மேவுமலை தன்னை வினவில்,
புனவர்புன மயில்அனைய மாதரொடு
         மைந்தரு மணம்புணருநாள்
கனகம்என மலர்கள்அணி வேங்கைகள்
         நிலாவுகா ளத்திமலையே.

         பொழிப்புரை : குறிப்பிட்ட இந்தக் கால எல்லைக்குள் இவன் திருவடியும் , திருமுடியும் அறியவேண்டும் என்று தமக்குள் மாறுபட்ட திருமாலும் , பிரமனும் முனைந்து தேடியும் அறிவதற்கு அரியவனாய் விளங்கியவன் சிவபெருமான் . அப்பெருமான் வீற்றிருக்கும் மலை , தினைப்புனத்திலுள்ள வேடுவர்கள் மயிலொத்த சாயலுடைய பெண்களை மைந்தர்களுக்கு மணம் செய்விக்கும் நாளில் பொன் போன்ற மலர்களைப் பூத்து அழகிய வேங்கைகள் விளங்கும் திருக்காளத்திமலையாகும் .


பாடல் எண் : 10
நின்றுகவ ளம்பலகொள் கையரொடு
         மெய்யில்இடு போர்வையவரும்,
நன்றிஅறி யாதவகை நின்றசிவன்
         மேவுமலை நாடிவினவில்,
குன்றின்மலி துன்றுபொழில் நின்றகுளிர்
         சந்தின்முறி தின்றுகுலவிக்
கன்றினொடு சென்றுபிடி நின்றுவிளை
         யாடுகா ளத்திமலையே.

         பொழிப்புரை : நின்று கொண்டே கவளமாக உணவு உண்ணும் சமணர்களும் , உடம்பில் போர்த்த போர்வையுடைய புத்தர்களும் தனது பேரருளை அறியாவண்ணம் விளங்கும் சிவபெருமான் வீற்றிருந்தருளும் மலை , நெருங்கிய சோலைகளில் உள்ள குளிர்ந்த சந்தனத் தழைகளைத் தம் கன்றுகளுடன் சென்று தின்று பெண் யானைகள் விளையாடுகின்ற திருக்காளத்தி மலையாகும் .


பாடல் எண் : 11
காடுஅதுஇடம் ஆகநடம் ஆடுசிவன்
         மேவுகா ளத்திமலையை,
மாடமொடு மாளிகைகள் நீடுவளர்
         கொச்சைவயம் மன்னுதலைவன்,
நாடுபல நீடுபுகழ் ஞானசம்
         பந்தன்உரை நல்லதமிழின்
பாடலொடு பாடும்இசை வல்லவர்கள்
         நல்லர்பர லோகம்எளிதே.

         பொழிப்புரை : சுடுகாட்டை அரங்காகக் கொண்டு ஆடுகின்ற சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற காளத்திமலையைப் போற்றி , மாடமாளிகைகள் நீண்டு ஓங்கி வளர்ந்துள்ள கொச்சைவயம் என்னும் சீகாழியின் நிலைபெற்ற தலைவனும் , பலநாடுகளிலும் பரவிய புகழையுடையவனுமாகிய ஞானசம்பந்தன் நல்ல தமிழில் அருளிய இப்பாடல்களை இசையுடன் ஓத வல்லவர்கள் சிறந்தவர்களாவர் . அவர்கள் சிவலோகம் அடைதல் எளிதாகும் .

                                             திருச்சிற்றம்பலம்


பெரிய புராணப் பாடல் எண் : 1021
திருந்தியஇன் னிசைவகுப்பத் திருக்கண் ணப்பர்
         திருத்தொண்டு சிறப்பித்துத் திகழப் பாடி,
பொருந்துபெருந் தவர்கூட்டம் போற்ற வந்து,
         பொன்முகலிக் கரைஅணைந்து, தொழுது போகி,
அருந்தவர்கள் எம்மருங்கும் மிடைந்து செல்ல,
         ஆளுடைய பிள்ளையார், அயன்மால்தேடும்
மருந்துவெளியே இருந்த திருக்கா ளத்தி
         மலைஅடிவாரம் சார வந்து தாழ்ந்தார்.

         பொழிப்புரை : திருந்திய இனிய பண்ணமைதி பெறத் திருக் கண்ணப்பரின் திருத்தொண்டைச் சிறப்பித்துப் பாடியருளி, பொருந்திய பெரிய திருத்தொண்டர் கூட்டம் சூழ்ந்து போற்ற எழுந்தருளி வந்து, பொன்முகலி யாற்றின் கரையை அடைந்து, வணங்கிச் சென்று, அரிய தவத்தவர்களான திருத்தொண்டர்கள் எம்மருங்கும் சூழ்ந்து வர, ஆளுடைய பிள்ளையார், நான்முகனும் திருமாலும் தேடிக் காண இயலாத மருந்தான இறைவர், வெளிப்பட எழுந்தருளியிருந்த திருக்காளத்தி மலையின் அடிவாரத்தினை அணுக வந்து, நிலத்தில் பொருந்த விழுந்து வணங்கினார்.


பெ. பு. பாடல் எண் : 1022
தாழ்ந்துஎழுந்து, திருமலையைத் தொழுது கொண்டே,
         தடஞ்சிலா தலசோபா னத்தால் ஏறி,
வாழ்ந்துஇமையோர் குழாம்நெருங்கு மணிநீள் வாயில்
         மருங்குஇறைஞ்சி, உட்புகுந்து, வளர்பொற் கோயில்
சூழ்ந்துவலம் கொண்டு, இறைவர் திருமுன்பு எய்தி,
         தொழுதுதலை மேல்கொண்ட செங்கை போற்றி,
வீழ்ந்துஎழுவார், கும்பிட்ட பயன்காண் பார்போல்
         மெய்வேடர் பெருமானைக் கண்டு வீழ்ந்தார்.

         பொழிப்புரை : ஞானசம்பந்தர் தாழ்ந்து எழுந்து அம்மலையை வணங்கியவாறே அகன்ற மலைப்படிகளின் வழியே ஏறிச் சென்று, வாழ்வடைந்த தேவர்களின் கூட்டம் நெருங்கியுள்ள மணிகளை உடைய நீண்ட திருவாயிலின் முன் வணங்கிக் கோயிலுள் புகுந்து, அக்கோயிலை வலமாக வந்து, இறைவரின் திருமுன்பு சார்ந்து, தொழுது, தலையின் மேலே கூப்பிய சிவந்த திருக்கைகளுடன் போற்றி, நிலம் பொருந்த விழுந்து வணங்கி, எழுந்து செல்பவராய், அவ்வாறு கும்பிட்டதன் பயனைக் காண்பவரைப் போல், மெய்ம்மையான வேடர் பெருமானாம் திருக்கண்ணப்ப நாயனாரைக் கண்டு அவருடைய அடிகளில் வீழ்ந்தார்.


பெ. பு. பாடல் எண் : 1023
உள்ளத்தில் தெளிகின்ற அன்பின் மெய்ம்மை
         உருவினையும், அவ்வன்பின் உள்ளே மன்னும்
வெள்ளச்செஞ் சடைக்கற்றை நெற்றிச் செங்கண்
         விமலரையும், உடன்கண்ட விருப்பும் பொங்கி,
பள்ளத்தில் இழிபுனல்போல் பரந்து செல்ல,
         பைம்பொன்மலை வல்லிபரிந்து அளித்த செம்பொன்
வள்ளத்தில் ஞானஆ ரமுதம் உண்டார்
         மகிழ்ந்துஎழுந்து, பலமுறையும் வணங்குகின்றார்.

         பொழிப்புரை : மனத்தில் தெளிவாய்க் கொள்கின்ற அன்பின் மெய்ம்மையான வடிவத்தையும், அந்த அன்பினுள் நிலையாய் வீற்றிருக்கின்ற கங்கை தாங்கிய சிவந்த சடையையும் நெற்றியில் சிவந்த விழியையும் உடைய குற்றமற்ற இறைவரையும் ஒருசேர ஓரிடத்தில் கண்டதால் ஆன விருப்பமும் மேலிடத்தினின்றும் பள்ளத்தில் இழிந்து ஓடும் நீர்போல் மேன்மேல் மிக பசும்பொன் மலை மன்னன் மகளான கொடிபோன்ற உமையம்மையார் அருளுடன் அளித்த செம்பொன் கிண்ணத்தில் ஞான அமுதை உண்டருளிய ஞானசம்பந்தர் மகிழ்ந்து வணங்கி எழுந்து பலமுறையும் வணங்குவாராகி,


பெ. பு. பாடல் எண் : 1024
பங்கயக்கண்அருவிநீர் பாய நின்று,
         பரவும்இசைத் திருப்பதிகம் பாடி ஆடி,
தங்குபெரும் களிகாதல் தகைந்து தட்ப,
         தம்பெருமான் கழல்போற்றும் தன்மைநீட,
அங்குஅரிதில் புறம்போந்து,அங்கு அயன்மால் போற்ற
         அரியார்தம் திருமலைக்கீழ் அணைந்து, இறைஞ்சிப்
பொங்குதிருத் தொண்டர்மடம் காட்ட, அங்குப்
         புக்குஅருளி இனிதுஅமர்ந்தார் புகலி வேந்தர்.

         பொழிப்புரை : தாமரை போன்ற கண்களினின்றும் கண்ணீர் வழிந்தோட நின்று, போற்றும் பண் பொருந்திய திருப்பதிகத்தைப் பாடி, ஆனந்தக் கூத்தாடி, தம் உள்ளத்துள் தங்கிக் கிடக்கும் பெருங்களிப்பும் காதலும் வலிந்து தம்மை அங்கேயே தகைத்து நிறுத்த, அதனால் தம் பெருமானின் திருவடிகளைப் போற்றி நிற்கும் இயல்பு நீடித்தலால், அங்கிருந்து அரிதாக வெளியே போந்து, நான்முகனும் திருமாலும் போற்றுதற்கரிய இறைவரின் திருக்காளத்தி மலையின் அடியில் வந்து அணைந்து, வணங்கிச் சென்று, பெருகிய தொண்டர்கள் திருமடத்தைக் காட்டச் சென்று, புகுந்த பிள்ளையார் அங்குத் தங்கியிருந்தார்.

         குறிப்புரை : இதுபொழுது அருளிய திருப்பதிகம் கிடைத்திலது.


பெ. பு. பாடல் எண் : 1025
யாவர்களும் அறிவுஅரிய இறைவன் தன்னை,
         ஏழ்உலகும் உடையானை, எண்ணி லாத
தேவர்கள்தம் பெருமானை, திருக்கா ளத்தி
         மலையின்மிசை வீற்றிருந்த செய்ய தேனை,
பூஅலரும் பொழில்புடைசூழ் சண்பை ஆளும்
         புரவலனார் காலங்கள் தோறும் புக்கு,
பாஅலர்கொண் டுஅடிபோற்றி, பருகி ஆர்ந்து,
         பண்புஇனிய திருப்பதியில் பயிலும் நாளில்.

         பொழிப்புரை : யாவரும் அறிதற்கரிய இறைவரை, ஏழ் உலகங்களையும் உடையவரை, எண்ணிறந்த தேவர்களின் தலைவரை, திருக்காளத்தி மலையின் மீது வீற்றிருக்கும் சிவந்த தேனை, மலர்கள் மலரும் சோலை சூழ்ந்த சீகாழியை ஆளும் வேந்தரான திருஞானசம்பந்தர், உரிய காலங்கள் தோறும் சென்று திருக்கோயிலுள் புகுந்து, பதிகம் என்ற மலர் கொண்டு அருச்சனை செய்து, போற்றிப் பருகி, நிறைவாகத் துய்த்துச் செம்மையான பண்புகளால் இனிய அத்திருப்பதியைப் பொருந்தித் தங்கியிருந்த அந்நாள்களில்,

         குறிப்புரை : உரிய காலங்கள் தொறும் சென்று பாடிய பதிகங்கள் எவையும் கிடைத்தில.


பெ. பு. பாடல் எண் : 1026
அங்கண்வட திசைமேலும் குடக்கின் மேலும்
         அருந்தமிழின் வழக்குஅங்கு நிகழாது ஆக,
திங்கள்புனை முடியார்தம் தானம் தோறும்
         சென்றுதமிழ் இசைபாடும் செய்கை போல,
மங்கையுடன் வானவர்கள் போற்றி இசைப்ப
         வீற்றிருந்தார் வடகயிலை வணங்கிப் பாடி,
செங்கமல மலர்வாவித் திருக்கே தாரம்
         தொழுது, திருப்பதிக இசை திருந்தப் பாடி.

         பொழிப்புரை : அவ்விடத்திற்கு, வடக்கிலும் மேற்கிலும் உள்ள நாடுகளில் அரிய தமிழின் வழக்கு நிகழாததால், ஞானசம்பந்தர், பிறைச்சந்திரனைச் சூடிய முடியையுடைய இறைவரின் பிறபதிகள் தோறும் சென்று திருப்பதிகத் தமிழ் இசைபாடும் செயல் போல், தேவர்கள் தொழுது போற்றுமாறு எழுந்தருளியிருக்கும் சிவபெருமானின் வடகயிலை மலையை இங்கு இருந்தபடியே வணங்கித் திருப்பதிகம் பாடிச் செந்தாமரை மலர்கள் மலர்வதற்கு இடமான நீர் நிலைகளைக் கொண்ட திருக்கேதாரத்தையும் வணங்கித் திருப்பதிகம் இசையுடன் பாடி,

         குறிப்புரை : இப்பதிகளை நோக்கி அருளிய பதிகங்கள்:

1.    வடகயிலை :- 1. பொடிகொள் உருவர் (தி.1 ப.68) -தக்கேசி.
                   2. வாளவரி (தி.3 ப.68) - சாதாரி.

                         2. திருக்கேதாரம் :- தொண்டர் (தி.2 ப.114) - செவ்வழி.


பெ. பு. பாடல் எண் : 1027
கூற்று உதைத்தார் மகிழ்ந்தகோ கரணம் பாடி,
         குலவுதிருப் பருப்பதத்தின் கொள்கை பாடி,
ஏற்றின்மிசை வருவார்இந் திரன்தன் நீல
         பருப்பதமும் பாடிமகிழ்ந்து, இறைவர் தானம்
போற்றியசொன் மலர்மாலை பிறவும் பாடி,
         புகலியர்தம் பெருந்தகையார் புனிதம் ஆகும்
நீற்றின்அணி கோலத்துத் தொண்டர் சூழ
         நெடிது மகிழ்ந்து, அப்பதியில் நிலவு கின்றார்.

         பொழிப்புரை : இயமனைக் காலால் உதைத்த இறைவர் மகிழ்ந்தருளும் கோகரணத்தைப் பாடி, விடையின் மீது எழுந்தருளி வரும் இறைவரின் இந்திரநீலபருப்பதத்தையும் பாடி, மற்றும் போற்றுதற்குரிய செம்மலர்களால் திருப்பதிகள் பிறவற்றையும் பாடி, சீகாழிப் பதியினரின் தலைவரான ஞானசம்பந்தர், தூய திருநீற்றின் விளக்கம் மிகுகோலமுடைய தொண்டர்கள் சூழ்ந்து வர, மிகவும் மகிழ்ந்து அப்பகுதியில் தங்கி இருப்பவராய்,

         குறிப்புரை : இப்பதிகளை நோக்கியருளிய பதிகங்கள்:

1.திருக்கோகரணம்: என்றும் அரியான் (தி.3 ப.79) - சாதாரி. 2.திருப்பருப்பதம்: சுடுமணி (தி.1 ப.118) - வியாழக் குறிஞ்சி.

3.திருஇந்திரநீலப் பருப்பதம்: குலவு பாரிடம் (தி.2 ப.27) – இந்தளம்.

         மற்று இறைவர் தானம் பிறவும் என்பன: வாரணாசி, அனேகதங்காவதம், கோடீச்சுரம், சோமேசம், பீமேசம், பிரயாகை, மதுரை, காஞ்சி, அவந்திகை முதலியனவாகலாம் என்பர் சிவக்கவிமணியார். இவற்றுள் பதிகம் கிடைத்துள்ள பதி ஒன்றே. அது - அனேகதங்கா வதம்: பதிகம்: நீடல் மேவு - பண்: இந்தளம்.


பெ. பு. பாடல் எண் : 1028
தென்திசையில் கயிலைஎனும் திருக்காளத்தி
         போற்றி,இனிது அமர்கின்றார், திரைசூழ் வேலை
ஒன்றுதிரு வொற்றியூர் உறைவார் தம்மை
         இறைஞ்சுவது திருவுள்ளத்து உன்னி, அங்கண்
இன்தமிழின் விரகர்அருள் பெற்று மீள்வார்,
         "எந்தையார் இணையடிஎன் மனத்த" என்று
பொன்தரளம் கொழித்துஇழி பொன் முகலிகூடப்
         புனைந்த திருப்பதிகஇசை போற்றிப் போந்தார்.

         பொழிப்புரை : தெற்குத் திக்கில் உள்ள திருக்கயிலை எனக் கூறப்படுகின்ற திருக்காளத்தியைப் போற்றி இனிதாக அங்குத் தங்கியிருப்பவர், அலைசூழ்ந்த கடலின் கரைசார்ந்த திருவொற்றியூரில் வீற்றிருக்கும் இறைவரைச் சென்று வணங்குதலை மனத்தில் கொண்டு, அங்கிருந்து இனிய தமிழ் விரகரான ஞானசம்பந்தர், இறைவரின் திருவருள் விடைபெற்று, மீண்டு வருபவர், `எந்தையார் இணையடி என் மனத்துள்ளவே\' என்ற கருத்துடன் பொன்னும் முத்தும் கொழித்து வரும் பொன் முகலியாற்றையும் குறித்துத் திருப்பதிக இசையால் போற்றிவருவாரானார்.

         குறிப்புரை : இதுபொழுது அருளிய பதிகம் `சந்தமார் அகிலொடு' (தி.3 ப.36) எனத் தொடங்கும் கொல்லிப் பண்ணில் அமைந்த பதிகமாகும். இப்பதிக முதற்பாடல் முதல் இரண்டு அடிகளில், பொன்முகலியாற்றின் வளம் கூறி, நிறைவாக `எந்தையார் இணையடி என்மனத்துள் ளவே\' என்றருளுகின்றார் பிள்ளையார். இக்கருத்தை முகந்தே ஆசிரியர் சேக்கிழார், இப்பாடலில் அருளுகின்றார். நிறைவாகவுள்ள இக்கருத்தே, காளத்தியினின்றும் விடைகொண்டு போதருங்கால் பாடியது என அருளுதற்கேதுவாயிற்று.


பெ. பு. பாடல் எண் : 1029
மன்னுபுகழ்த் திருத்தொண்டர் குழாத்தி னோடும்,
         மறைவாழ வந்தவர்தாம் மலையும், கானும்,
முன்அணைந்த பதிபிறவும் கடந்து போந்து,
         முதல்வனார் உறைபதிகள் பலவும் போற்றி,
பன்மணிகள் பொன்வரன்றி அகிலும் சாந்தும்
         பொருதுஅலைக்கும் பாலிவட கரையில், நீடு
சென்னிமதி அணிவார்தம் திருவேற் காடு
         சென்றுஅணைந்தார் திருஞானம் உண்ட செல்வர்.

         பொழிப்புரை : நிலைபெற்ற புகழையுடைய தொண்டர் கூட்டத்துடன் மறைகள் வாழும் படியாய்த் தோன்றிய ஞானசம்பந்தர், மலைகளையும், காடுகளையும் சேர்ந்த பதிகள் பலவற்றையும் கடந்து வந்து, முழுமுதல்வராகிய சிவபெருமான் வீற்றிருக்கும் திருப்பதிகள் பலவற்றையும் போற்றிச் சென்று, பலமணிகளையும் பொன்னையும் இழுத்துக் கொண்டும், அகில், சந்தனம் முதலான மரங்களை மோதி அடித்துக் கொண்டும் ஓடும் பாலியாற்றின் வடக்குக் கரையில் நிலைபெற்ற திருச்சடையில் பிறைச்சந்திரனைச் சூடிய இறைவரின் திருவேற்காட்டினைச் சிவஞான அமுது உண்ட செல்வரான பிள்ளையார் சென்று அடைந்தார்.

         குறிப்புரை : நிலைபெற்ற புகழையுடைய தொண்டர் கூட்டத்துடன் மறைகள் வாழும் படியாய்த் தோன்றிய ஞானசம்பந்தர், மலைகளையும், காடுகளையும் சேர்ந்த பதிகள் பலவற்றையும் கடந்து வந்து, முழுமுதல்வராகிய சிவபெருமான் வீற்றிருக்கும் திருப்பதிகள் பலவற்றையும் போற்றிச் சென்று, பலமணிகளையும் பொன்னையும் இழுத்துக் கொண்டும், அகில், சந்தனம் முதலான மரங்களை மோதி அடித்துக் கொண்டும் ஓடும் பாலியாற்றின் வடக்குக் கரையில் நிலைபெற்ற திருச்சடையில் பிறைச்சந்திரனைச் சூடிய இறைவரின் திருவேற்காட்டினைச் சிவஞான அமுது உண்ட செல்வரான பிள்ளையார் சென்று அடைந்தார்.


3. 036    திருக்காளத்தி                   பண் - கொல்லி
                                    திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
சந்தம்ஆர் அகிலொடு சாதிதேக் கம்மரம்
உந்துமா முகலியின் கரையினில் உமையொடும்
மந்தம்ஆர் பொழில்வளர் மல்குவண் காளத்தி
எந்தையார் இணையடி என்மனத்து உள்ளவே.

         பொழிப்புரை :சந்தனம், அகில், சாதிக்காய், தேக்கு ஆகிய மரங்களை அலைகளால் உந்தித் தள்ளிவரும் சிறப்பான பொன்முகலி என்னும் ஆற்றின் கரையில், தென்றல் காற்று வீசும் சோலைகள் வளர்ந்து பெருக, வள்ளல் தன்மையுடைய எம் தந்தையாகிய காளத்தி நாதர் உமாதேவியோடு, அவருடைய திருவடிகள் எம் மனத்தில் பதியுமாறு வீற்றிருந்தருளுகின்றார்.


பாடல் எண் : 2
ஆலமா மரவமோடு அமைந்தசீர்ச் சந்தனம்
சாலமா பீலியும் சண்பகம் உந்தியே,
காலம்ஆர் முகலிவந்து அணைதரு காளத்தி
நீலம்ஆர் கண்டனை நினையுமா நினைவதே.

         பொழிப்புரை :ஆல், மா, குங்கும மரம், சந்தனம் ஆகிய மரங்களும், மிகுதியான மயிற்பீலியும், சண்பகமும் அலைகளால் தள்ளப்பட்டுப் பருவக்காலங்களில் நிறைகின்ற பொன்முகலி என்னும் ஆற்றின் கரையில் அமைந்துள்ள திருக்காளத்தி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் நீலகண்டனான இறைவனை எவ்வகையில் நினைந்து வழிபடுதல் பொருந்துமோ அத்தன்மையில் நினைந்து வழிபடுதல் நம் கடமையாகும்.


பாடல் எண் : 3
கோங்கமே குரவமே கொன்றைஅம் பாதிரி
மூங்கில்வந்து அணைதரு முகலியின் கரையினில்
ஆங்குஅமர் காளத்தி அடிகளை அடிதொழ
வீங்குவெந் துயர்கெடும் வீடுஎளிது ஆகுமே.

         பொழிப்புரை :கோங்கு, குரவம், கொன்றை, பாதிரி, மூங்கில் ஆகிய மரங்களைத் தள்ளிக் கொண்டுவரும் பொன்முகலி ஆற்றின் கரையில் வீற்றிருக்கும் காளத்திநாதரின் திருவடிகளைத் தொழுது போற்ற, பெருகிவரும் கொடிய துன்பம் கெடும். முத்திப்பேறு எளிதாகக் கைகூடும்.


பாடல் எண் : 4
கரும்புதேன் கட்டியும் கதலியின் கனிகளும்
அரும்புநீர் முகலியின் கரையினில் அணிமதி
ஒருங்குவார் சடையினன் காளத்தி ஒருவனை
விரும்புவார் அவர்கள்தாம் விண்ணுலகு ஆள்வரே.

         பொழிப்புரை :கரும்பு, தேன் கட்டி, வாழைக்கனி ஆகியவற்றை விளைவிக்கும் நீர்வளமுடைய பொன்முகலி ஆற்றின் கரையில், அழகிய பிறைச்சந்திரனை நீண்ட சடையில் சூடி வீற்றிருந்தருளும் ஒப்பற்ற காளத்திநாதரை விரும்பிப் பணிபவர்கள் விண்ணுலகை ஆள்வார்கள்.


பாடல் எண் : 5
வரைதரும் அகிலொடு மாமுத்தம் உந்தியே
திரைதரு முகலியின் கரையினில் தேமலர்
விரைதரு சடைமுடிக் காளத்தி விண்ணவன்
நிரைதரு கழல்இணை நித்தலும் நினைமினே.

         பொழிப்புரை :மலையில் வளரும் அகிலும் முத்துக்களும் அலைகளால் தள்ளப்பட்டு வரும் பொன்முகலி ஆற்றின் கரையில், தேன் துளிக்கின்ற நறுமண மலர்களைச் சடைமுடியில் அணிந்து விளங்கும், காளத்தியிலுள்ள தேவாதி தேவனாகிய சிவபெருமானின் ஒலிக்கின்ற வீரக்கழல்களை அணிந்த திருவடிகளைத் தினந்தோறும் நினைந்து போற்றி வழிபடுவீர்களாக.

பாடல் எண் : 6, 7
* * * * * * * *

பாடல் எண் : 8
முத்துமா மணிகளும் முழுமலர்த் திரள்களும்
எத்துமா முகலியின் கரையினில் எழில்பெறக்
கத்திட அரக்கனைக் கால்விரல் ஊன்றிய
அத்தன்தன் காளத்தி அணைவது கருமமே.

         பொழிப்புரை :இராவணன் கயிலைமலையின் கீழ் நெரியும்படி தன் காற்பெருவிரலை ஊன்றிய சிவபெருமான், முத்துக்களும், மணிகளும், மலர்க்கொத்துக்களும் அலைகளால் தள்ளப்பட்டு வரும் பொன்முகலி ஆற்றின் கரையில் அமைந்துள்ள அழகிய திருக்காளத்தி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றான். அத்திருத்தலத்தை அடைந்து அப்பெருமானை வணங்குதல் நம் கடமையாகும்.


பாடல் எண் : 9
மண்ணும்,மா வேங்கையும் மருதுகள் பீழ்ந்துஉந்தி
நண்ணுமா முகலியின் கரையினில் நன்மைசேர்
வண்ணமா மலரவன் மாலவன் காண்கிலா
அண்ணலார் காளத்தி ஆங்குஅணைந்து உய்ம்மினே.

         பொழிப்புரை :வேங்கை, மருது ஆகிய மரங்கள் வேருடன் வீழ்த்தப்பட்டுச் சேற்று மண்ணுடன் கலந்து தள்ளப்பட்டு வரும் பொன்முகலியாற்றின் கரையில், அழகிய தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனும், திருமாலும் காண்பதற்கு அரியவனும், எவ்வுயிர்கட்கும் நன்மையே செய்கின்றவனுமான சிவபெருமான் வீற்றிருந்தருளு கின்றான். அத்திருத்தலத்தை அடைந்து வணங்கிப் போற்றி உய்தி பெறுங்கள்.


பாடல் எண் : 10
வீங்கிய உடலினர், விரிதரு துவர்உடைப்
பாங்கிலார் சொலைவிடும், பரன்அடி பணியுமின்,
ஓங்குவண் காளத்தி உள்ளமோடு உணர்தர
வாங்கிடும் வினைகளை வானவர்க்கு ஒருவனே.

         பொழிப்புரை :பருத்த உடலுடைய சமணர்களும், புத்தர்களும் இறையுண்மையை உணராது கூறும் சொற்களைக் கை விடுக. இறைவனுடைய திருவடிகளை வணங்கிப் போற்றுங்கள். வளமுடன் ஓங்கும் வள்ளலாகிய திருக்காளத்திநாதனை உள்ளத்தால் உணர்ந்து மனம் ஒன்றி வழிபட்டால் தேவர்களுக்கெல்லாம் தலைவனான அச்சிவபெருமான், வழிபடும் உயிர்களின் வினைகளைத் தீர்த்து நன்மை செய்வான்.


பாடல் எண் : 11
அட்டமா சித்திகள் அணைதரு காளத்தி வட்டவார்
சடையனை வயல்அணி காழியான்
சிட்டநான் மறைவல ஞானசம் பந்தன்சொல்
இட்டமாப் பாடுவார்க்கு இல்லையாம் பாவமே.

         பொழிப்புரை :அட்டமா சித்திகளைத் தரும் திருக்காளத்தியில் வீற்றிருந்தருளும் நீண்ட சடைமுடியுடைய சிவபெருமானைப் போற்றி, வயல் வளமிக்க அழகிய சீகாழியில் அவதரித்த நான்கு வேதங்களை யும் நன்கு கற்றுவல்ல ஞானசம்பந்தன் அருளிய இத்திருப்பதிகத்தை விரும்பி ஓதவல்லவர்கட்குப் பாவம் இல்லை.

                                             திருச்சிற்றம்பலம்

----------------------------------------------------------------------------------------------------------
    
திருநாவுக்கரசர் திருப்பதிக வரலாறு

பெரி. புராணப் பாடல் எண் : 342
"திருவாலங் காடுஉறையும் செல்வர்தாம்" எனச்சிறப்பின்
ஒருவாத பெருந்திருத்தாண் டகம்முதலாம் ஓங்குதமிழ்ப்
பெருவாய்மைத் தொடைமாலை பலபாடி, பிறபதியும்
மருவுஆர்வம் பெறவணங்கி, வடதிசைமேல் வழிக்கொள்வார்.

         பொழிப்புரை : `திருவாலங்காடு உறையும் செல்வர் தாமே` என நிறைவுறும், என்றும் நீங்காத சிறப்பையுடைய பெருந்திருத் தாண்டகப் பதிகம் முதலாக ஓங்கும் பெருவாய்மைத் தமிழ் மாலைகள் பலவற்றையும் பாடிப் பிறபதிகளையும் பொருந்திய ஆர்வம் மீதூர வணங்கி, அங்கிருந்து வடதிசை நோக்கிச் செல்வாராய்.

         குறிப்புரை : `திருவாலங்காடுறையும் செல்வர் தாமே` என நிறைவுறும் திருப்பதிகம் `ஒன்றா வுலகனைத்தும்` (தி.6 ப.78) எனத் தொடங்கும் திருத்தாண்டகமாகும். இத்தாண்டகம் முதலாகத் `தொடை மாலை பல பாடி` என்றாரேனும் இதுபொழுது கிடைத்திருக்கும் பதிகம் ஒன்றேயாம். அது `வெள்ளநீர்` (தி.4 ப.68) எனத் தொடங்கும் திருநேரிசைப் பதிகம் ஆகும். பெருந்திருத்தாண்டகம் எனச் சேக்கிழார் குறிப்பன இத் திருப்பதிகமும், `அரியானை` (தி.6 ப.1) எனத் தொடங்கும் தில்லைத் திருத்தாண்டகமுமாம்.

பெ. பு. பாடல் எண் : 343
பல்பதியும் நெடுங்கிரியும் படர்வனமும் சென்றுஅடைவார்,
செல்கதிமுன் அளிப்பவர்தம் திருக்காரிக் கரைபணிந்து,
தொல்கலையின் பெருவேந்தர், தொண்டர்கள்பின், உம்பர்குழாம்
மல்குதிருக் காளத்தி  மாமலைவந்து எய்தினார்.

         பொழிப்புரை : பல பதிகளிலும், பெரிய மலைகளிலும், படர்ந்த காடுகளிலும் சென்று அடைவாராகி, உயிர்க்குரிய வீடுபேற்றை வழங்கியருளுபவராய இறைவர் வீற்றிருந்தருளுகின்ற திருக்காரிகரை என்ற பதியை வணங்கிப், பழமையான கலைஞானங்களின் வேந்தரான நாயனார், தேவர் கூட்டங்கள் தொண்டர்களின் பின்னே நிறைவுற வரும் திருக்காளத்தி என்ற பெரிய மலையைச் சென்று அடைந்தார்.


பெ. பு. பாடல் எண் : 344
பொன்முகலித் திருநதியின் புனிதநெடும் தீர்த்தத்தில்
முன்முழுகி, காளத்தி மொய்வரையின் தாழ்வரையில்
சென்னிஉறப் பணிந்து, எழுந்து, செங்கண்விடைத் தனிப்பாகர்
மன்னும்மலை மிசைஏறி, வலங்கொண்டு வணங்குவார்.

         பொழிப்புரை : நாவரசர் பொன்முகலி என்ற ஆற்றின் தூய நீரில் முழுகித், திருக்காளத்தித் தொடர் மலைகளின் தாழ்வரையில், தலையானது நிலம் பொருந்த வணங்கி எழுந்து, சிவந்த கண்களை உடைய ஆனேற்றினை ஊர்தியாகக் கொண்ட ஒப்பற்ற சிவபெருமான் நிலையாய் எழுந்தருளியிருக்கும் அம்மலையின் மீது ஏறி வலம் கொண்டு வணங்குபவராய்,


பெ. பு. பாடல் எண் : 345
காதுஅணிவெண் குழையானை, காளத்தி மலைக்கொழுந்தை,
வேதமொழி மூலத்தை, விழுந்து, இறைஞ்சி, எழுந்து,பெரும்
காதல்புரி மனங்களிப்பக் கண்களிப்பப் பரவசமாய்
நாதனை"என் கண்ணுளான்" எனும் திருத்தாண் டகம்நவின்றார்.

         பொழிப்புரை : காதில் அணிந்த வெண்மையான சங்கினாலாய குழையை உடையவரைத், திருக்காளத்தி மலையின் கொழுந்து போல்பவரை, மறை மொழியின் மூலமானவரைக் கீழே விழுந்து வணங்கி எழுந்து, மீதூர்ந்த அன்புடைய மனம் களிப்படையவும், கண்கள் களிக்கவும் தம்வயம் இழந்த நிலையில் இறைவரை வணங்கி, `என் கண் உளான்` என்ற நிறைவுடைய திருத்தாண்டகத்தைப் பாடியருளினார்.

         குறிப்புரை : இங்குக் குறிக்கப் பெற்ற தாண்டகம், `விற்றூண் ஒன்றில்லாத` (தி.6 ப.8) எனும் முதற் குறிப்புடையதாகும்.

 
பெ. பு. பாடல் எண் : 346
மலைச்சிகரச் சிகாமணியின் மருங்குஉற,முன் னேநிற்கும்
சிலைத்தடக்கைக் கண்ணப்பர் திருப்பாதம் சேர்ந்து இறைஞ்சி,
அலைத்துவிழும் கண் அருவி ஆகத்துப் பாய்ந்துஇழிய,
தலைக்குவித்த கையினராய்த் தாழ்ந்து, புறம் போந்துஅணைந்தார்.

         பொழிப்புரை : மலையுச்சியில் முடிமணியாய் முளைத்து எழுந்தருளிய இறைவரின் அருகில், பொருந்த முன்பு நிற்கும் வில் ஏந்திய கையையுடைய கண்ணப்ப நாயனார் திருவடிகளை அணைந்து வணங்கிப், பெருகி வரும் கண்ணீர், அருவி எனத் திருமேனியில் பாய்ந்து இழியத், தலைமீது கூப்பிய கைகளுடன் வணங்கி வெளியே வந்து சேர்ந்தார்.

         குறிப்புரை : மேற்கூறிய திருத்தாண்டகத்தில் (தி.6 ப.8), பதினொன்றாவது பாடலில் `கண்ணாரக் காண்பார்க்கோர் காட்சியான் காண்` எனக் கூறப்பெறும் அநுபவம் கண்ணப்பர் கண்ட அநுபவமாயிருத்தலும் அறியத் தக்கது.


பெ. பு. பாடல் எண் : 347
சேண்நிலவு திருமலையில் திருப்பணி ஆயினசெய்து,
தாணுவினை அம்மலைமேல் தாள்பணிந்த குறிப்பினால்,
பேணுதிருக் கயிலைமலை வீற்றிருந்த பெருங்கோலம்
காணும்அது காதலித்தார், கலைவாய்மைக் காவலனார்.

         பொழிப்புரை : மிகவும் உயர்ந்த அம்மலையில் திருத் தொண்டுகளைச் செய்து இறைவரை வழிபட்ட குறிப்பின் காரணமாக, எல்லோராலும் விரும்பத் தகும் திருக்கயிலையில் வீற்றிருந்தருளும் பெருமானார் திருக்கோலத்தைக் கண்டு மகிழ விரும்பினார், கலைகளையும் அவற்றின் உண்மையையும் உணர்ந்த நாவரசர்.

         குறிப்புரை : காழிப் பிள்ளையாருக்கும் சுந்தரருக்கும் இத்திருப்பதியே தம் செலவு நயப்பில் வடபுல எல்லையாயிற்று. நாவுக்கரசருக்கு இத் திருப்பதியிலிருந்து திருக்கயிலாயம் சென்று வணங்கும் விருப்பம் உளவாகத் திருக்கயிலைக் காட்சியைத் திருவையாற்றில் காணநேர்ந்தது. சுந்தரருக்குத் திருவருளால் வெள்ளை யானையின் மீது திருக்கயிலை செல்லவும், பெருமானை வணங்கித் மகிழவும் நேர்ந்தது. ஞானசம்பந்தருக்கு மண்ணுலகத்தில் உள்ள திருநல்லூர்ப் பெருமணத்திலேயே இறைக்காட்சியைக் காணவும், இறை ஒளியுடன் ஒன்றவும் நேர்ந்தது. `ஆட்பாலவர்க்கு அருளும் வண்ணமும் ஆதிமாண்பும் கேட்பான் புகில் அளவில்லை` (தி.3 ப.54 பா.4) என்பதே அறியத் தக்கதாம்.


         6.008   திருக்காளத்தி           திருத்தாண்டகம்
                                    திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
விற்றுஊண்ஒன்று இல்லாத நல்கூர்ந் தான்காண்,
         வியன்கச்சிக் கம்பன்காண், பிச்சை அல்லால்
மற்றுஊண்ஒன்று இல்லாத மாசது ரன்காண்,
         மயானத்து மைந்தன்காண், மாசுஒன்று இல்லாப்
பொன்தூண்காண், மாமணிநல் குன்றுஒப் பான்காண்,
         பொய்யாது பொழில்ஏழும் தாங்கி நின்ற
கல்தூண்காண், காளத்தி காணப் பட்ட
         கணநாதன் காண், அவன்என் கண் உளானே.

         பொழிப்புரை :விற்று அப்பணத்தால் உணவு வாங்குவதற்குரிய பொருள் ஒன்றும் தன்பால் கொள்ளாத வறியவனைப் போலக் காட்சி வழங்கி, கச்சி ஏகம்பத்தில் உகந்தருளியிருந்து, பிச்சை எடுத்தலைத் தவிர உணவுக்கு வேறு வழியில்லாத பெருந்திறமையனாய், மயானத்துக் காணப்படுபவனாய், ஏழு உலகங்களையும் இடையறாது தாங்கி நிற்கும் கற்றூண் போல்வானாய்க் காளத்தியில் காட்சி வழங்கும் சிவகணங்களின் தலைவனாகிய எம்பெருமான் எப்பொழுதும் என் மனக்கண்களுக்குக் காட்சி வழங்கியவாறே உள்ளான்.


பாடல் எண் : 2
இடிப்பான்காண் என்வினையை, ஏகம் பன்காண்,
         எலும்பு ஆபரணன்காண், எல்லாம் முன்னே
முடிப்பான்காண், மூவுலகும் ஆயி னான்காண்,
         முறைமையால் ஐம்புரியும் வழுவா வண்ணம்
படித்தான் தலைஅறுத்த பாசு பதன்காண்,
         பராய்த்துறையான், பழனம்,பைஞ் ஞீலி யான்காண்,
கடித்தார் கமழ்கொன்றைக் கண்ணி யான்காண்,
         காளத்தி யான், அவன்என் கண் உளானே.

         பொழிப்புரை :என் வினைகளை அழிப்பவனாய், ஏகம்பத்தில் உறைபவனாய், அணிகலன்களாக எலும்புகளையே அணிபவனாய், எல்லா உலக நிகழ்ச்சிகளையும் வகுத்து அமைப்பவனாய், மூவுலகங்களிலும் வியாபித்திருப்பவனாய், பஞ்சாதியாக முறையாக வழு ஏதுமின்றி வேதங்களை ஓதும் பிரமனின் ஐந்தாம் தலையை நீக்கிய பசுபதி என்ற அடையாளங்களை உடையவனாய், பராய்த்துறை பழனம் பைஞ்ஞீலி இவற்றில் உகந்தருளியிருப்பவனாய்க் கொன்றைப் பூவினாலாய மார்புமாலை, முடிமாலை இவற்றை அணிபவனாகிய காளத்திப் பெருமான் என்கண் உள்ளான்.


பாடல் எண் : 3
நாரணன்காண், நான்முகன்காண், நால்வே தன்காண்,
         ஞானப் பெருங்கடற்குஓர் நாவாய் அன்ன
பூரணன்காண், புண்ணியன்காண், புராணன் தான்காண்,
         புரிசடைமேல் புனல்ஏற்ற புனிதன் தான்காண்,
சாரணன்காண், சந்திரன்காண், கதிரோன் தான்காண்,
         தன்மைக்கண் தானேகாண், தக்கோர்க்கு எல்லாம்
காரணன்காண், காளத்தி காணப் பட்ட
         கணநாதன்காண், அவன்என் கண் உளானே.

         பொழிப்புரை :நாராயணனாய் , பிரமனாய் , நான்கு வேதங்களையும் ஓதுபவனாய் , ஞானப் பெருங்கடலின் அக்கரையை அடையச் செய்யும் படகு போன்ற நிறைவானவனாய்ப் புண்ணியனாய்ப் பழையோனாய் , முறுக்குண்ட சடை மீது கங்கையை ஏற்ற தூயோனாய் , எங்கும் இயங்குபவனாய்ச் சந்திர சூரியர்களை உடனாய் இருந்து செயற்படுப்போனாய் , நற்பண்புகளில் தனக்கு உவமை இல்லாதானாய் , மெய்யுணர்வுடையோருக்குத் தானே முதற் பொருளாகத் தோன்றுபவனாய்க் காளத்தியில் காட்சி வழங்கும் சிவகணத் தலைவனாகிய எம்பெருமான் என்கண் உள்ளான் .


பாடல் எண் : 4
செற்றான்காண் என்வினையை, தீயாடி காண்,
         திருவொற்றி யூரான்காண், சிந்தை செய்வார்க்கு
உற்றான்காண், ஏகம்பம் மேவி னான்காண்,
         உமையாள்நல் கொழுநன்காண், இமையோர்ஏத்தும்
சொல்தான்காண், சோற்றுத் துறை உளான்காண்,
         சுறாவேந்தன் ஏவலத்தை நீறா நோக்கக்
கற்றான்காண், காளத்தி காணப் பட்ட
         கணநாதன்காண், அவன்என் கண் உளானே.

         பொழிப்புரை :என் தீவினைகளை அழித்துத் தீயின்கண் கூத்து நிகழ்த்தித் தன்னைத் தியானிப்பவர்களுக்கு நெருக்கமானவனாய் , உமா தேவியின் கணவனாய், தேவர்கள் துதிக்கும் வேத வடிவினனாய், மன் மதனுடைய அம்பு செலுத்தும் ஆற்றலைச் சாம்பலாக்கக் கற்றவனாய், ஒற்றியூர், ஏகம்பம், சோற்றுத்துறை என்ற திருத்தலங்களில் உறை பவனாய்க் காளத்தியில் காணப்படும் கணநாதன் என்கண் உள்ளான் .


பாடல் எண் : 5
மனத்தகத்தான், தலைமேலான், வாக்கிந் உள்ளான்,
         வாயாரத் தன்அடியே பாடும் தொண்டர்
இனத்தகத்தான், இமையவர்தம் சிரத்தின் மேலான்,
         ஏழ்அண்டத்து அப்பாலான், இப்பால் செம்பொன்
புனத்தகத்தான், நறுங்கொன்றைப் போதின் உள்ளான்,
         பொருப்புஇடையான், நெருப்புஇடையான், காற்றின் உள்ளான்
கனத்தகத்தான், கயிலாயத்து உச்சி உள்ளான்,
         காளத்தி யான், அவன்என் கண் உளானே.

         பொழிப்புரை :மனத்திலும் தலைமேலும் சொற்களிலும் உள்ளானாய் , மனம் மெய்மொழிகளைச் செயற்படுத்தித் தன் திருவடிகளை வாயாரப்பாடும் தொண்டர் இனத்தானாய் . தேவர்கள் தலை மேலானாய் , ஏழுலகங்களையும் கடந்தவனாய் , இவ்வுலகில் செவ்விதாகிய பொன் போன்ற நல்ல விளைவை நல்கும் குறிஞ்சி முதலிய நிலத்தில் உள்ளானாய் , நறிய கொன்றைப் பூவில் உறைபவனாய் , மலை நெருப்பு காற்று மேக மண்டலம் இவற்றில் உடனாய் இருந்து இவற்றைச் செயற்படுப்பவனாய்க் கயிலாயத்து உச்சி உள்ளானாகிய காளத்திப் பெருமான் என்கண் உள்ளான் .


பாடல் எண் : 6
எல்லாம்முன் தோன்றாமே தோன்றி னான்காண்,
         ஏகம்பம் மேயான்காண், இமையோர் ஏத்தப்
பொல்லாப் புலனைந்தும் போக்கி னான்காண்,
         புரிசடைமேற் பாய்கங்கை பூரித் தான்காண்,
நல்லவிடை மேல்கொண்டு நாகம் பூண்டு
         நளிர்சிரம்ஒன்று ஏந்திஓர் நாணாய் அற்ற
கல்லாடை மேற்கொண்ட காபா லிகாண்,
         காளத்தி யான், அவன்என் கண் உளானே.

         பொழிப்புரை :ஏனைய பொருள் தோன்றுதற்கு முன்னும் இருப்பவனாய் , ஏகம்பத்து விரும்பி உறைபவனாய், தேவர்கள் துதிக்கப் பொறிவாயில் ஐந்து அவித்தவனாய், முறுக்கேறிய சடையின் மேல் பாய்ந்த கங்கையை அதன்கண் நிரப்பியவனாய், பெரிய காளைமீது ஏறிப் பாம்புகளைப் பூண்டு குளிர்ந்த மண்டை யோட்டை ஏந்தி , நாணத்தைக் காப்பதொரு பொருளாகத்துறந்தார் அணியும் காவி யாடை உடுத்துக் காபாலம் என்னும் கூத்தாடும் காளத்திநாதன் என் கண் உள்ளான் .


பாடல் எண் : 7
கரிஉருவு கண்டத்துஎம் கண்ணு ளான்காண்,
         கண்டன்காண், வண்டுஉண்ட கொன்றை யான்காண்,
எரிபவள வண்ணன்காண், ஏகம் பன்காண்,
         எண்திசையும் தான்ஆய குணத்தி னான்காண்,
திரிபுரங்கள் தீயிட்ட தீயா டிகாண்,
         தீவினைகள் தீர்த்திடும்என் சிந்தை யான்காண்,
கரிஉரிவை போர்த்துஉகந்த காபா லிகாண்,
         காளத்தி யான், அவன்என் கண் உளானே.

         பொழிப்புரை :நீலகண்டனாய் , எமக்குக் காட்சி வழங்குபவனாய் , அருளால் ஏற்ற பெற்றியின் பல்வேறு வடிவு உடையவனாய் , வண்டுகள் நுகரும் கொன்றைப் பூவினை அணிந்தவனாய் , ஒளிவீசும் பவள வண்ணனாய் , ஏகம்பனாய் , எட்டுத் திசைகளும் தானேயாய பண்பினனாய் , முப்புரங்களையும் தீக்கொளுவியவனாய் . நெருப்பிடையே கூத்து நிகழ்த்துபவனாய் , என் உள்ளத்திலிருந்து தீவினைகளை அழிப்பவனாய் , யானைத் தோலைப் போர்த்து மகிழ்ந்து காபாலக் கூத்து ஆடுபவனாய்க் காளத்திப் பெருமான் என் கண் உள்ளான் .


பாடல் எண் : 8
இல்ஆடிச் சில்பலிசென்று ஏற்கின் றான்காண்,
         இமையவர்கள் தொழுதுஇறைஞ்ச இருக்கின் றான்காண்,
வில்ஆடி வேடனாய் ஓடி னான்காண்,
         வெண்நூலும் சேர்ந்த அகலத் தான்காண்,
மல்ஆடு திரள்தோள்மேல் மழுவா ளன்காண்,
         மலைமகள்தன் மணாளன்காண், மகிழ்ந்து முன்னாள்
கல்லாலின் கீழ்இருந்த காபா லிகாண்,
         காளத்தி யான்,அவன்என் கண் உளானே.

         பொழிப்புரை :இல்லங்கள் தோறும் சென்று அவர்கள் வழங்கும் சிறு அளவினவாகிய உணவுகளை ஏற்கின்றவனாய் , தேவர்கள் தொழுது வழிபடப்படுகின்றவனாய் , வில்லை ஏந்தி வேடன் உருக் கொண்டு பன்றிப்பின் ஓடியவனாய் . பூணூலும் பூண்ட மார்பினனாய் , வலிய திரண்ட தோளில் மழுப்படை ஏந்தியவனாய் , பார்வதி கணவனாய் , மகிழ்வோடு ஒரு காலத்தில் கல்லால மரத்தின் கீழ்த் தென் முகக் கடவுளாய் இருந்தவனாய்க் காபாலக்கூத்து ஆடுபவனாய்க் காளத்தியில் உகந்தருளியிருக்கும் சிவபெருமான் என்கண் உள்ளான் .


பாடல் எண் : 9
தேனப்பூ வண்டுஉண்ட கொன்றை யான்காண்,
         திருஏகம் பத்தான்காண், தேன்ஆர்ந்து உக்க
ஞானப்பூங் கோதையாள் பாகத் தான்காண்,
         நம்பன்காண், ஞானத்து ஒளி ஆனான்காண்,
வானப்பேர் ஊரும் அறிய ஒடி
         மட்டித்து நின்றான்காண், வண்டுஆர் சோலைக்
கானப்பே ரூரான்காண், கறைக்கண் டன்காண்,
         காளத்தி யான், அவன்என் கண் உளானே.

         பொழிப்புரை :வண்டுகள் நுகரும் தேனை உடைய கொன்றை சூடியாய்த் திரு ஏகம்பத்தனாய் , தேன் ஒழுகும் பூக்களை அணிந்த ஞானப்பூங்கோதை அம்மையை இடப்பாகமாகக் கொண்டவனாய் , நமக்கு இனியவனாய் , ஞானப் பிரகாசனாய் , ஊழியிறுதியில் வானமும் உலகும் அழியுமாறு விரைந்து ஒடுக்க வல்லவனாய் , வண்டுகள் பொருந்திய சோலைகளை உடைய திருக்கானப்பேரூரில் உறைபவனாய் நீலகண்டனாய்க் காளத்திப் பெருமான் என்கண் உள்ளான் .


பாடல் எண் : 10
இறையவன்காண், ஏழ்உலகும் ஆயி னான்காண்,
         ஏழ்கடலும் சூழ்மலையும் ஆயி னான்காண்,
குறையுடையார் குற்றேவல் கொள்வான் தான்காண்,
         குடமூக்கில் கீழ்க்கோட்டம் மேவி னான்காண்,
மறைஉடைய வானோர் பெருமான் தான்காண்,
         மறைக்காட்டு உறையும் மணிகண் டன்காண்,
கறைஉடைய கண்டத்துஎம் காபா லிகாண்,
         காளத்தி யான், அவன்என் கண் உளானே.

         பொழிப்புரை :யாவருக்கும் முதல்வனாய் , ஏழுலகும் , ஏழ் கடலும் இவற்றைச் சுற்றிய மலைகளும் ஆகிப் பலகுறைபாடுகளையும் உடைய உயிர்கள் தனக்குச் செய்யும் குற்றறேவல்களை ஏற்றுக் குடமூக்குத் தலத்திலுள்ள கீழ்க்கோட்டத்தை விரும்பி , வேதம் ஓதும் வானோருக்கும் தலைவனாய்த் திருமறைக் காட்டுத் தலத்தில் தங்கும் நீலகண்டனாய்க் கறைக் கண்டனாய்க் காபாலக்கூத்து ஆடும் காளத்திப் பெருமான் என்கண் உள்ளான் .


பாடல் எண் : 11
உண்ணா அருநஞ்சம் உண்டான் தான்காண்,
         ஊழித்தீ அன்னான்காண், உகப்பார் காணப்
பண்ஆரப் பல்இயம் பாடி னான்காண்,
         பயின்றநால் வேதத்தின் பண்பி னான்காண்,
அண்ணா மலையான்காண், அடியார் ஈட்டம்
         அடியிணைகள் தொழுதுஏத்த அருளு வான்காண்,
கண்ணாரக் காண்பார்க்குஓர் காட்சி யான்காண்,
         காளத்தி யான், அவன்என் கண் உளானே.

         பொழிப்புரை :பிறர் உண்ண இயலாத கொடிய நஞ்சினை உண்டவனாய் , ஊழித் தீயை ஒப்ப அழிப்பதனைச் செய்பவனாய்ப் பண்களுக்குப் பொருந்தப் பல வாச்சியங்களை இயக்கிப் பாடியவனாய் , தான் ஓதிய நான்கு வேதங்களில் கூறப்பட்ட இறைமைப் பண்புகளை உடையவனாய், அண்ணாமலையானாய், அடியார் கூட்டம் தன் திருவடிகளைத் தொழுது போற்றுமாறு அருளுபவனாய் , தன்னை மனக்கண்களால் காண்பவர்களுக்கு அரிய காட்சிப் பொருளாய் இருப்பவனாய் உள்ள காளத்திப் பெருமான் என்கண் உள்ளான் .

                                             திருச்சிற்றம்பலம்

----------------------------------------------------------------------------------------------------------


சுந்தரர் திருப்பதிக வரலாறு:

         சுந்தரர், திருமாற்பேறு, திருவல்லம் முதலான பல பதிகளையும் வணங்கித் திருக்காளத்தி அடைந்து கண்ணப்பரை ஆட்கொண்டருளும் இறைவர் மகிழ்ந்து வீற்றிருக்கும் திருக்காளத்திமலைமேல் மருந்தைத் தொழுது பாடியருளியது இத்திருப்பதிகம். (தி. 12 ஏயர்கோன். புரா. 195-197)

பெரிய புராணப் பாடல் எண். 195
மன்னு திருமாற் பேறுஅணைந்து வணங்கிப் பரவி, திருவல்லம்
தன்னுள் எய்தி இறைஞ்சிப்போய், சாரும் மேல்பால் சடைக்கற்றைப்
பின்னல் முடியார் இடம்பலவும் பேணி வணங்கி, பெருந்தொண்டர்
சென்னி முகில்தோய் தடங்குவட்டுத் திருக்கா ளத்தி மலைசேர்ந்தார்.

         பொழிப்புரை : அதன்பின், நிலைபெற்ற திருமாற்பேறு என்னும் திருப்பதியை அடைந்து வணங்கிப் போற்றி, திருவல்லம் அடைந்து வணங்கிப் போய், மேற்குப் புறமாக உள்ள கற்றையாய சடைமுடியையுடைய பெருமான் வீற்றிருக்கும் இடங்கள் பலவற்றையும் விருப்புடன் வணங்கிச் சென்ற பெரிய தொண்டரான நம்பிகள், முடியின் மீது முகில் படியும் அகன்ற சிகரங்களுடைய திருக்காளத்தி மலையினைச் சேர்ந்தார்.


பெ. பு. பாடல் எண் : 196
தடுக்கல் ஆகாப் பெருங்காதல் தலைநின்று அருளும் கண்ணப்பர்
இடுக்கண் களைந்துஆட் கொண்டுஅருளும் இறைவர் மகிழ்ந்த காளத்தி
அடுக்கல் சேர அணைந்து, பணிந்து அருளால் ஏறி, அன்புஆறு
மடுப்பத் திருமுன் சென்றுஎய்தி, மலைமேல் மருந்தை வணங்கினார்.

         பொழிப்புரை : தடுத்தற்கரிய பெருங்காதல் தலைநின்று விளங்கும் கண்ணப்ப நாயனாரது துன்பத்தைக் களைந்து ஆட்கொண்டருளும் இறைவர், மகிழ்ந்து வீற்றிருக்கும் திருக்காளத்தி மலையினைச் சேரச் சென்று பணிந்து, அப்பெருமான் திருவருள் மீதூர அம்மலை மீது ஏறி, அன்பெனும் ஆறு கரையது புரளக் காளத்தி அப்பரின் திருமுன்பாகச் சென்று, அம்மலைமேல் என்றும் பிறவிப் பிணிக்கு மருந்தாக இருந்தருளும் பெருமானை வணங்கினார்.


பெ. பு. பாடல் எண் : 197
வணங்கி உள்ளங் களிகூர மகிழ்ந்து போற்றி, மதுரஇசை
அணங்கு "செண்டாடு" எனும்பதிகம் பாடி, அன்பால் கண்ணப்பர்
மணங்கொள் மலர்ச்சே வடிபணிந்து, வாழ்ந்து, போந்து, மன்னுபதி
இணங்கு தொண்ட ருடன்கெழுமி இன்புற்று இருக்கும் அந்நாளில்.

         பொழிப்புரை : வணங்கி, உள்ளம் களிகூர்ந்திட மகிழ்ந்து போற்றி, இனிமை மிகுந்த இசையால், `செண்டாடும் விடையாய்\' எனத் தொடங்கிடும் திருப்பதிகத்தைப் பாடி, அன்பினால் கண்ணப்ப நாயனாரது மணம் நிறைந்து விளங்கும் தாமரை மலர் போலும் சிவந்த திருவடிகளைப் பணிந்து, பெரும்பேறு பெற்று, வெளியே வந்து விளங்கும் அத்திருக்காளத்தியில் தம்முடன் இணங்கிய அடியாருடன் பொருந்தி இன்புற்று இருக்கும் அந்நாள்களில்,

         குறிப்புரை : `செண்டாடும் விடையாய்' எனத் தொடங்கும் பதிகம் நட்டராகப் பண்ணில் அமைந்ததாகும் (தி.7 ப.26).


பெ. பு. பாடல் எண் : 198
வடமா திரத்துப் பருப்பதமும், திருக்கேதார மலையும் முதல்,
இடமா அரனார் தாம்உவந்த எல்லாம், இங்கே இருந்துஇறைஞ்சி,
நடம் ஆடியசே வடியாரை நண்ணி னார்போல் உள்நிறைந்து,
திடமாம் கருத்தில் திருப்பதிகம் பாடி, காதல் சிறந்துஇருந்தார்.

         பொழிப்புரை : வடபுலத்துள்ள நிலைபெற்ற திருப்பருப்பதம், திருக்கேதாரம் ஆகிய மலைப்பதிகளையும், இவை முதலாக உள்ள சிவபெருமான் உவந்து உறைகின்ற பிற இடங்களையும், திருக்காளத்தியில் இருந்தவாறே வணங்கி, அத்திருப்பதிகளில் சென்று கூத்தியற்றும் திருவடிகளை உடைய பெருமானை நேரில் சென்று வணங்கினாற் போல் உள்ளம் மகிழ்ந்து, உறைப்புடைய திருவுள்ளத்தால், அப்பதிகளை உளம் கொண்ட நிலையில் திருப்பதிகங்கள் பாடியருளினார்.


பெ. பு. பாடல் எண் : 199
அங்குச் சிலநாள் வைகியபின், அருளால் போந்து, பொருவிடையார்
தங்கும் இடங்கள் எனைப்பலவும் சார்ந்து, தாழ்ந்து, தமிழ்பாடி,
பொங்கு புணரிக் கரைமருங்கு புவியுள் சிவலோகம் போலத்
திங்கள் முடியார் அமர்ந்த திரு ஒற்றியூரைச் சென்றுஅடைந்தார்.

         பொழிப்புரை : இந்நிலையில் அங்குச் சில நாள்கள் இருந்தருளிய பின், பெருமானின் திருவருள் பெற்றுப் பொருதலில் வல்ல ஆனேற்று ஊர்தியையுடைய பெருமான் எழுந்தருளியிருக்கும் ஏனைய பதிகள் பலவும் சென்று வணங்கித் தமிழ்ப் பதிகங்கள் பாடிப் போற்றிப் பொங்கும் அலைகளையுடைய கடற்கரையோரத்தில் விளங்கும் இந் நிலவுலகில் சிவலோகம் எனச் சிறந்து விளங்கும் இளம்பிறையினை முடிமேற் சூடிய சிவபெருமான் அமர்ந்தருளும் திருவொற்றியூரைச் சென்றடைந்தார்.



7. 026    திருக்காளத்தி                  பண் - நட்டராகம்
                                    திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
செண்டு ஆடும்விடையாய், சிவனே, என் செழுஞ்சுடரே
வண்டு ஆரும்குழலாள் உமைபாகம் மகிழ்ந்தவனே,
கண்டார் காதலிக்கும் கணநாதன் எம் காளத்தியாய்,
அண்டா, உன்னை அல்லால் அறிந்து ஏத்த மாட்டேனே.

         பொழிப்புரை : விரைந்து நடக்கும் இடப வாகனத்தை உடையவனே, சிவபெருமானே, செழுமையான ஒளி வடிவினனே, வண்டுகள் நிறையச் சூழும் கூந்தலையுடைய உமையம்மையை ஒரு பாகத்தில் விரும்பிக் கொண்டவனே , உன்னைக் கண்டவர் பின்பு நீங்காது பேரன்பு செய்யப்படுபவனே , பூதக் கூட்டத்திற்கு அரசனே , திருக் காளத்தியில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானே , பரவெளியில் விளங்குபவனே , அடியேன் உன்னை யல்லது பிறரைக் கடவுளராக அறிந்து போற்றுதலே இலன் ; ஆதலின், அடியேனுக்கு அருள் பண்ணுதல் வேண்டும் .


பாடல் எண் : 2
இமையோர் நாயகனே, இறைவா,என் இடர்த்துணையே,
கமைஆர் கருணையினாய், கரு மாமுகில் போல்மிடற்றாய்,
உமைஓர் கூறுஉடையாய், உருவே, திருக் காளத்தியுள்
அமைவே, உன்னை அல்லால் அறிந்து ஏத்த மாட்டேனே.

         பொழிப்புரை : தேவர்கட்குத் தலைவனே , கடவுளே , என் துன்பங்களை விலக்குதற்குத் துணையாய் நின்று உதவுபவனே , பொறுமை நிறைந்த அருளையுடையவனே , கரிய பெரிய மேகம் போலும் கண்டத்தை யுடையவனே உமையம்மையை ஒரு பாகத்தில் உடைய அவ்வடிவத்தை உடையவனே , திருக்காளத்தியுள் எழுந்தருளியிருப்பவனே , அடியேன் , உன்னையன்றிப் பிறரைக் கடவுளராக அறிந்து போற்றுதலே இலன் ; ஆதலின் , எனக்கு அருள்பண்ணுதல் வேண்டும் .


பாடல் எண் : 3
படைஆர் வெண்மழுவா, பகலோன்பல் உகுத்தவனே,
விடைஆர் வேதியனே, விளங்குங்குழைக் காதுஉடையாய்,
கடைஆர் மாளிகைசூழ் கண நாதன்எம் காளத்தியாய்,
உடையாய் உன்னை அல்லால் உகந்து ஏத்த மாட்டேனே.

         பொழிப்புரை : படைக்கலமாகப் பொருந்திய வெள்ளிய மழுவை உடையவனே , சூரியனது பல்லை உதிர்த்தவனே , இடபத்தின்கண் பொருந்தும் அந்தணனே , ஒளிவிடுகின்ற குழையை யணிந்த காதினை உடையவனே , அழகிய வாயில்கள் பொருந்திய மாளிகைகள் சூழ்ந்த திருக்காளத்தியில் எழுந்தருளியிருப்பவனே ; பூதகண நாதனே , என்னை உடையவனே , அடியேன் , உன்னையல்லது , பிறரை விரும்பிப் போற்றுதலே இலன் ; ஆதலின் , எனக்கு அருள்பண்ணுதல் வேண்டும் .



பாடல் எண் : 4
மறிசேர் கையினனே, மத மாவுரி போர்த்தவனே,
குறியே, என்னுடைய குருவே, உன்குற் றேவல்செய்வேன்,
நெறியே நின்றுஅடியார் நினைக் குந்திருக் காளத்தியுள்
அறிவே, உன்னை அல்லால் அறிந்து ஏத்த மாட்டேனே.

         பொழிப்புரை : மான் கன்று பொருந்திய கையை உடையவனே . மதம் பொருந்திய யானையின் தோலைப் போர்த்தவனே , யாவராலும் குறிக்கொள்ளப்படும் பொருளே , என்னை மாணாக்கனாக உடைய ஆசிரியனே , அடியவர்கள் நன்னெறிக் கண்ணே நின்று நினைக்கின்ற திருக்காளத்தியுள் எழுந்தருளியிருக்கின்ற அறிவுருவனே , அடியேன் உன்னையல்லது பிறரைக் கடவுளராக அறிந்து போற்றுதலே இலன் ; உனது சிறு பணி விடைகளையே செய்வேன் ; ஆதலின் , எனக்கு அருள் பண்ணுதல் வேண்டும் .


பாடல் எண் : 5
செஞ்சேல் அன்னகண்ணார் திறத்தேகிடந்து உற்று,அலறி
நஞ்சேன் நான்அடியேன், நலம் ஒன்றுஅறி யாமையினால்,
துஞ்சேன் நான்ஒருகால், தொழுதேன் திருக் காளத்தியாய்,
அஞ்சாது உன்னை அல்லால் அறிந்து ஏத்த மாட்டேனே.

         பொழிப்புரை : திருக்காளத்தியில் எழுந்தருளியிருப்பவனே , உன் அடியவனாகிய நான் , நன்மை ஒன்றையே உணர்ந்து நில்லாத காரணத்தால் , சிவந்த சேல்போலும் கண்களையுடைய மாதர் கூற்றிலே கிடந்து , மிகக்கதறி வருந்தினேன் ; அதனிடையே ஓரொருகால் , நான் மடிந்திராது உன்னை வணங்கினேன் ; எவ்வாறாயினும் அச்சமின்றி , உன்னை யல்லது பிறரைக் கடவுளராக அறிந்து போற்றுதலைச் செய்தலே இலன் ; ஆதலின் , எனக்கு அருள் பண்ணுதல் வேண்டும் .


பாடல் எண் : 6
பொய்யவன் நாய்அடியேன், புகவே நெறிஒன்று அறியேன்,
செய்யவன் ஆகிவந்து இங்கு இடர் ஆனவை தீர்த்தவனே,
மெய்யவ னே,திருவே, விளங்கும் திருக் காளத்திஎன்
ஐய, நுன் தன்னை அல்லால், அறிந்து ஏத்த மாட்டேனே.

         பொழிப்புரை : நடுவு நிலைமையை உடையவனாகி வந்து , பொய்யை உடையவனும் , நாய்போலும் அடியவனும் , அழிவில் இன்பத்துள் புகுதற்கு வழி ஒன்றும் அறியாதவனும் ஆகிய எனது துன்பங்களை யெல்லாம் நீக்கி ஆட்கொண்ட பெருமானே, உண்மை வடிவினனே , பேரின்பமானவனே , புகழுடையதாகிய திருக்காளத்தியில் எழுந்தருளியிருப்பவனே , என் தலைவனே , அடியேன் , உன்னையன்றிப் பிறரைக் கடவுளராக அறிந்து போற்றுதலே இலன் ; ஆதலின் , எனக்கு அருள் பண்ணுதல் வேண்டும் .


பாடல் எண் : 7
கடியேன் காதன்மையால் கழல் போதுஅறி யாதஎன்னுள்
குடியாக் கோயில்கொண்ட குளிர் வார்சடை எம்குழகா,
முடியால் வானவர்கள் முயங்கும் திருக் காளத்தியாய்
அடியேன் உன்னை அல்லால் அறியேன்மற்று ஒருவரையே.

         பொழிப்புரை : வன்கண்மை உடையவனும் , அன்போடு உன் திருவடித் தாமரைகளை உணர்தலைச் செய்யாதவனும் ஆகிய என் நெஞ்சம் உனக்கு உறைவிடமாகுமாறு அதனைக் கோயிலாகக்கொண்டு எழுந்தருளியிருக்கின்ற குளிர்ந்த நீண்ட சடையை உடைய எங்கள் அழகனே , தேவர்கள் தம் தலையினால் திருவடியைச் சேர்கின்ற திருக்காளத்திப் பெருமானே , அடியேன் உன்னையன்றி மற்றொரு வரைக் கடவுளராக அறிதலே இலன் ; ஆதலின் , எனக்கு அருள் பண்ணுதல் வேண்டும் .


பாடல் எண் : 8
நீறுஆர் மேனியனே, நிமலா,நினை அன்றிமற்றுக்
கூறேன் நாஅதனால், கொழுந்தே, என் குணக்கடலே,
பாறுஆர் வெண்தலையில் பலிகொண்டுஉழல் காளத்தியாய்,
ஏறே, உன்னை அல்லால் இனி ஏத்த மாட்டேனே.

         பொழிப்புரை : திருநீறு நிறைந்த திருமேனியை உடையவனே , தூயவனே , தலையாயவனே , எனக்கு அருட்கடலாய் நிற்பவனே , பருந்து சூழும் வெள்ளிய தலையில் பிச்சையேற்றுத் திரியும் , திருக்காளத்திப் பெருமானே , ஆண் சிங்கம் போல்பவனே , அடியேன் உன்னை யறிந்தபின் உன்னையன்றிப் பிறர் ஒருவரைப் போற்றுதலே இலன் ; என் நாவால் ஒன்று செய்வதாயின் , உன்னையன்றி மற்றொரு பொருளைச் சொல்லுதல்தானும் இலேன் ; ஆதலின் , எனக்கு அருள் பண்ணுதல் வேண்டும் .


பாடல் எண் : 9
தளிர்போல் மெல்அடியாள் தனை ஆகத்து அமர்ந்துஅருளி,
எளிவாய் வந்துஎன்உள்ளம் புகுதவல்ல எம்பெருமான்,
களிஆர் வண்டுஅறையும் திருக் காளத்தி உள்ளிருந்த
ஒளியே,  உன்னை அல்லால் இனி ஒன்றும் உணரேனே.

         பொழிப்புரை : தளிர்போலும் மெல்லிய பாதங்களையுடைய உமாதேவியைத் திருமேனியில் விரும்பி வைத்தருளி , எளிமை உண்டாக என் உள்ளத்தில் புகவல்ல எம்பெருமானே , மலர்களில் களிப்புப் பொருந்திய வண்டுகள் ஒலிக்கின்ற திருக்காளத்தியில் எழுந்தருளி யிருக்கின்ற அறிவு வடிவனே , அடியேன் உன்னையன்றி மற்றொரு பொருளையும் உணர்தலே இலன் ; ஆதலின் , எனக்கு அருள்பண்ணுதல் வேண்டும் .


பாடல் எண் : 10
கார் ஊரும்பொழில்சூழ் கண நாதன்எம் காளத்தியுள்
ஆரா இன்அமுதை, அணி நாவல் ஆரூரன்சொன்ன
சீர்ஊர் செந்தமிழ்கள் செப்புவார் வினை ஆயினபோய்ப்
பேரா விண்ணுலகம் பெறுவார் பிழைப்பு ஒன்றுஇலரே.

         பொழிப்புரை : மேகம் நிறைந்த சோலைகள் சூழ்ந்த திருக்காளத்தியுள் எழுந்தருளியிருக்கின்ற எங்கள் சிவபெருமானாகிய தெவிட்டாத இனிய அமுதம் போல்வானை , அழகிய திருநாவலூரில் தோன்றிய நம்பியாரூரன் பாடிய புகழ் மிக்க இச்செந்தமிழ்ப் பாடல்களைச் சொல்லுகின்றவர்கள் , வினையாய் உள்ளன யாவும் நீங்கப்பெற்று , சிவலோகத்தை அடைவார்கள் ; குற்றம் யாதும் இலராவர் .

                                             திருச்சிற்றம்பலம்



1 comment:

  1. அருமை ,அருமை, அருமை ,
    தங்களின் சிவத்தொண்டிற்கு தலை வணங்குகிறேன், வாழ்க நீவீர் வளர்க நும் சிவத்தொண்டு

    ReplyDelete

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...