திருக் கள்ளில்


திருக் கள்ளில்


     தொண்டை நன்னாட்டுத் திருத்தலம்.

     திருக்கள்ளம், திருக்கண்டலம் என்று வழங்கப்படுகின்றது.

     சென்னை - பெரியபாளயம் சாலை வழியில் உள்ள கன்னிப்புத்தூர் (கன்னிகைப்பேர்) என்ற கிராமத்தில் இறங்கி 4 கி.மீ. சென்றால் இத் திருத்தலத்தை அடையலாம்.

     சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து நேரடி நகரப் பேருந்து வசதி திருக்கண்டலம் செல்ல இருக்கிறது.

     திருவள்ளூர் மற்றும் செங்குன்றம் ஆகிய ஊர்களில் இருந்தும் கன்னிப்புத்தூர் (கன்னிகைப்பேர்) வந்து இத்திருத்தலத்தை அடையலாம்.

     கன்னிகைப்பேர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து திருகண்டலம் செல்ல ஆட்டோ வசதி உள்ளது.

இறைவர்                       : சிவானந்தேசுவரர்.

இறைவியார்                  : ஆனந்தவல்லி.

தல மரம்                       : அலரி

வழிபட்டோர்                  : பிருகு முனிவர்.

தேவாரப் பாடல்கள்         : திருஞானசம்பந்தர் - முள்ளின்மேல் முதுகூகை.


     கிழக்கில் ஒரு ஐந்து நிலை இராஜகோபுரத்துடன் இவ்வாலயம் காட்சி அளிக்கிறது. ஆலயத்திற்கு வெளியே நந்தி தீர்த்தம் என்ற திருக்குளம் உள்ளது. கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தவுடன் எதிரே கொடிமரம், பலிபீடம் மற்றும் நந்தி மண்டபம் இருக்கிறது. அதையடுத்து நேரே இறைவனை கருவறை உள்ளது. சிவானந்தேசுவரர் சதுர ஆவுடையார் மீது லிங்க உருவில் கிழக்கு நோக்கி அருட்காட்சி தருகிறார். சுவாமி விமானம் தூங்கானை மாட அமைப்புடையது. இறைவன் சந்நிதிக்கு இடதுபுறம் சுப்பிரமணியர் சந்நிதியும், அதையடுத்து அம்பாள் ஆனந்தவல்லி அம்மை சந்நிதியும் கிழக்கு நோக்கி அமைந்திருக்கின்றன. இந்த மூன்று சந்நிதிகளும் சோமஸ்கந்தர் வடிவில் அமைந்திருப்பது மிகவும் விசேஷம்.

         ஆலயத்தில் ஒரு விசாலமான வெளிப் பிரகாரம் மட்டும் உள்ளது. தெற்கு வெளிப் பிரகாரத்தில் தென்மேற்குப் பகுதியில் விநாயகர் சந்நிதியும், காளத்தீசுவரர் சந்நிதியும் அமைந்திருக்கின்றன. வடக்குப் பிரகாரத்தில் சக்தி தட்சிணாமூர்த்தி சந்நிதி உள்ளது. இத்தலத்தில் உறையும் சிவானந்தேசுவரரை பிருகு முனிவர் ஆயிரம் கள்ளி மலர்களால் அர்ச்சித்து வழிபாடு செய்து வந்தார். இறைவன் சக்தி தட்சிணாமூர்த்தி வடிவில் காட்சியளித்து வரமளித்தார். எனவே இந்த சக்தி தட்சிணாமூர்த்தியை விசேஷ வழிபாடு செய்வதன் மூலம் இனிய இல்லறம், தம்பதிகள் ஒற்றுமை, நல்ல புத்திரப்பேறு, சிறந்த அறிவாற்றல், செல்வச் செழிப்பு ஆகிய அனைத்தையும் பெற்று சிவானந்தப் பேறு பெறலாம்.

         இறைவன் கருவறை கோஷ்டத்தில் நர்த்தன விநாயகர், மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். சண்டேஸ்வரர் சந்நிதியும் இறைவன் சந்நிதிக்கு வெளியே தெற்கு நோக்கியபடி அமைந்துள்ளது. நால்வர் சந்நிதியும், நவக்கிரக சந்நிதியும் உள்ளன.

     வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "பண்பு ஆர்க்கும் நள் இப்பதியே நலம் தரும் என்று அன்பர் புகும் கள்ளில் பதி நம் கடப்பாடே" என்று போற்றி உள்ளார்.

         காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் தரிசனத்திற்காக திறந்திருக்கும்.


திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 1012
திருப்பாசூர் அணைந்துஅருளி, அங்கு மற்றுஅச்
         செழும்பதியோர் எதிர்கொள்ளச் சென்று, புக்கு,
பொருப்பரையன் மடப்பாவை இடப்பா கத்துப்
         புராதனர் வேய்இடங்கொண்ட புனிதர் கோயில்
விருப்பினுடன் வலங்கொண்டு, புக்குத் தாழ்ந்து,
         வீழ்ந்து,எழுந்து, மேனிஎலாம் முகிழ்ப்ப நின்றே,
அருட்கருணைத் திருவாளன் நாமம் "சிந்தை
         இடையார்" என்று இசைப்பதிகம் அருளிச் செய்தார்.

         பொழிப்புரை : திருப்பாசூரை அணைந்து, அங்கு அச்செழும் பதியார் வந்து எதிர்கொள்ளப் பதியுள் போய்ப் புகுந்து, மலை அரச னின் மகளான பார்வதி அம்மையாரை இடமருங்காகக் கொண்ட பழமை உடையவரும், மூங்கிலை இடமாகக் கொண்டவருமான இறைவரின் திருக்கோயிலுள் விருப்பத்துடன் வலமாக வந்து, உள்ளே புகுந்து, இறைவரின் திருமுன்பு, நிலம் பொருந்த விழுந்து வணங்கி எழுந்து, திருமேனி முழுதும் மயிர்க்கூச்செறிய நின்று, அருட்கருணை என்ற செல்வத்தை உடைய இறைவரின் திருநாமத்தைச் `சிந்தை யிடையார்' எனத் தொடங்கி இசையுடன் கூடிய அத்திருப்பதிகத்தைப் பாடியருளினார்.


பெ. பு. பாடல் எண் : 1013
மன்னுதிருப் பதிகஇசை பாடிப் போற்றி,
         வணங்கிப்போந்து, அப்பதியில் வைகி, மாடு
பிஞ்ஞகர்தம் வெண்பாக்கம் முதலாய் உள்ள
         பிறபதிகள் பணிந்துஅணைவார், பெருகும் அன்பால்
முன்நிறைந்த திருவாய் மஞ்சன நீராட்டு
         முதல்வேடர் கண்ணப்ப நாயனாரை,
உன்னிஒளிர் காளத்தி மலை வணங்க
         உற்ற,பெருவேட்கையுடன் உவந்து சென்றார்.

         பொழிப்புரை : பிள்ளையார் நிலைபெறும் இசையையுடைய திருப்பதிகத்தைப் பாடிப் போற்றிச் சென்று, அப்பதியில் எழுந்தருளி யிருந்தவர், பின்பு அத்திருப்பதியின் அருகில் இறைவர் எழுந்தருளி இருக்கும் திருவெண்பாக்கம் முதலான பிற பதிகளையும் வணங்கிச் செல்வாராய், பெருகும் அன்பால் முன் திருவாய் நிறைந்த நீரால் இறைவரைத் திருமுழுக்காட்டும் முதல்வரான கண்ணப்ப நாயனாரை எண்ணி, விளங்கும் திருக்காளத்தி மலையைத் தொழுவதற்குப் பொருந்திய பெருவிருப்புடன் மகிழ்ந்து சென்றருளினார்.

         குறிப்புரை : திருவெண்பாக்கம் முதலாயுள்ள பதிகள் திருக்கள்ளில் முதலாயினவாகலாம். திருவெண்பாக்கப் பதிகம் கிடைத்திலது.

         திருக் கள்ளிலில் அருளிய பதிகம் `முள்ளின்மேல் முதுகூகை' (தி.1 ப.119) எனத் தொடங்கும் வியாழக் குறிஞ்சிப் பண்ணில் அமைந்ததாகும்.



1.119 திருக்கள்ளில்                  பண் - வியாழக்குறிஞ்சி
                                             திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
முள்ளின்மேல் முதுகூகை முரலும் சோலை,
வெள்ளின்மேல் விடுகூறைக் கொடி விளைந்த
கள்ளின்மேய் அண்ணல் கழல்கள் நாளும்
உள்ளுமேல் உயர்வுஎய்தல் ஒரு தலையே.

         பொழிப்புரை :முள்ளுடைய மரங்களின்மேல் இருந்து முதிய கூகைகள் ஒலிக்கும் சோலைகள் சூழ்ந்ததும், விளமரங்களின்மேல் படர்ந்த கூறைக் கொடிகள் விளைந்து தோன்றுவதுமாய கள்ளில் என்னும் இத்தலத்தில் எழுந்தருளிய சிவபிரான் திருவடிகளை நாள்தோறும் நினைவோமானால் உயர்வெய்துதல் உறுதியாகும்.


பாடல் எண் : 2
ஆடலான், பாடலான், அரவங்கள் பூண்டான்,
ஓடுஅலால் கலன்இல்லான் உறை பதியால்,
காடுஅலால் கருதாத கள்ளில் மேயான்,
பாடுஎலாம் பெரியார்கள் பரசு வாரே.

         பொழிப்புரை :ஆடல் பாடல்களில் வல்லவனும், பாம்புகள் பல வற்றை அணிந்தவனும், தலையோட்டையன்றி வேறு உண்கலன் இல்லாதவனும், சுடுகாட்டைத் தவிர வேறோர் இடத்தைத் தனது இடமாகக் கொள்ளாதவனும் ஆகிய சிவபிரான், பெரியோர்கள் அருகிலிருந்து அவன் புகழைப் பரவக்கள்ளில் என்னும் தலத்தைத் தான் உறையும் பதியாகக் கொண்டுள்ளான்.


பாடல் எண் : 3
எண்ணார்மும் மதில்எய்த இமையா முக்கண்,
பண்ஆர்நான் மறைபாடும் பரம யோகி,
கண்ஆர்நீறு அணிமார்பன், கள்ளில் மேயான்,
பெண்ஆணாம் பெருமான்எம் பிஞ்ஞ கனே.

         பொழிப்புரை :பகைவர்களாகிய அசுரர்களின் மும்மதில்களை எய்து அழித்தவனும், இமையாத மூன்று கண்களை உடையவனும் இசையமைப்போடு கூடிய நான்மறைகளைப் பாடி மகிழும் மேலான யோகியும், கண்களைக் கவரும் வண்ணம் திருநீறு அணிந்த மார் பினனும், பெண் ஆண் என இருபாலாகக் கருதும் உமைபாகனும் ஆகிய பெருமான், கள்ளில் என்னும் இத்தலத்தில் எழுந்தருளியுள்ளான்.


பாடல் எண் : 4
பிறைபெற்ற சடைஅண்ணல், பெடைவண்டு ஆலும்
நறைபெற்ற விரிகொன்றைத் தார் நயந்த
கறைபெற்ற மிடற்றுஅண்ணல், கள்ளில் மேயான்,
நிறைபெற்ற அடியார்கள் நெஞ்சு உளானே.

         பொழிப்புரை :பிறை சூடிய சடையை உடைய அண்ணலும், பெண்வண்டுகளோடு ஆண் வண்டுகள் கூடி ஒலிக்கும் தேன் நிறைந்த விரிந்த கொன்றை மாலையை விரும்பிச் சூடிய, விடக்கறை பொருந்திய கண்டத்தை உடையவனும், மனநிறைவு பெற்ற அடியவர்களின் நெஞ்சங்களில் நிறைந்து நிற்பவனுமாகிய சிவபிரான், கள்ளில் என்னும் இத்தலத்தே எழுந்தருளியுள்ளான்.


பாடல் எண் : 5
விரையாலும், மலராலும், விழுமை குன்றா
உரையாலும், எதிர்கொள்ள ஊரார் அம்மாக்
கரைஆர்பொன் புனல்வேலிக் கள்ளில் மேயான்,
அரைஆர்வெண் கோவணத்த அண்ணல் தானே.

         பொழிப்புரை :இடையில் வெண்ணிறமான கோவணத்தை உடுத்த சிவபிரான் மணம் கமழும் ஐவகை மணப் பொருள்களாலும் மலர்களாலும் சீர்மை குன்றாத புகழுரைகளாலும் ஊர் மக்கள் எதிர்கொள்ள, அழகியவும் பெரியவுமான கரைகளை உடைய பொன்னி நதியின் கிளையாறு சூழ்ந்துள்ள கள்ளில் என்னும் இத்தலத்தே எழுந்தருளியுள்ளான்.


பாடல் எண் : 6
நலன்ஆய பலிகொள்கை நம்பான், நல்ல
வலன்ஆய மழுவாளும் வேலும் வல்லான்,
கலன்ஆய தலைஓட்டான், கள்ளில் மேயான்,
மலன்ஆய தீர்த்துஎய்தும் மாதவத் தோர்க்கே.

         பொழிப்புரை :மக்கட்கு நன்மைகள் உண்டாகத் தான் பலியேற்கும் கொள்கையனாகிய நம்பனும், அழகிய வெற்றியைத் தரும் மழு வாள் வேல் ஆகியவற்றில் வல்லவனும், உண்கலனாகிய தலையோட்டை உடையவனும் ஆகிய சிவபிரான், தன்னை எய்தும் மாதவத்தோர்க்கு மும்மலங்களைத் தீர்த்து அருள்பவனாய்க் கள்ளில் என்னும் இத்தலத்தில் எழுந்தருளியுள்ளான்.


பாடல் எண் : 7
பொடியார்மெய் பூசினும், புறவில் நறவம்
குடியாஊர் திரியினும், கூப்பி டினும்,
கடியார்பூம் பொழிற்சோலைக் கள்ளில் மேயான்
அடியார்பண்பு இகழ்வார்கள் ஆதர் களே.

         பொழிப்புரை :மணம் கமழும் அழகிய பொழில்களும் சோலைகளும் சூழந்த கள்ளிலில் எழுந்தருளிய இறைவன் அடியவர்கள் திருநீற்றுப் பொடியை உடலில் பூசினும், சோலைகளில் எடுத்த தேனை உண்டு திரியினும் பலவாறு பிதற்றினும் அவர்கள் மனம் இறைவன் திருவருளிலேயே அழுந்தியிருக்குமாதலின் அடியவர்களின் குணம் செயல்களை இகழ்பவர்கள் அறியாதவர்களாவர்.


பாடல் எண் : 8
திருநீல மலர்ஒண்கண் தேவி பாகம்,
புரிநூலும் திருநீறும் புல்கு மார்பில்,
கருநீல மலர்விம்மு கள்ளில் என்றும்
பெருநீல மிடற்றுஅண்ணல் பேணு வதே.

         பொழிப்புரை :அழகிய நீலமலர் போன்ற ஒளி பொருந்திய கண் களை உடைய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு, முப்புரிநூலும் திருநீறும் பொருந்திய மார்பினனாய் விளங்கும் கரியமிடற்று அண்ணலாகிய சிவபிரான் என்றும் விரும்புவது கருநீலமலர்கள் மிகுந்து பூத்துள்ள கள்ளில் என்னும் தலமாகும்.

பாடல் எண் : 9
வரிஆய மலரானும் வையந் தன்னை
உரிதுஆய அளந்தானும் உள்ளு தற்குஅங்கு
அரியானும், அரிதாய கள்ளில் மேயான்
பெரியான்என்று அறிவார்கள் பேசு வாரே.

         பொழிப்புரை :சிவந்த வரிகளைக் கொண்ட தாமரை மலர்மேல் உறையும் பிரமனும், உலகங்களைத் தனக்கு உரியதாகுமாறு அளந்த திருமாலும், நினைத்தற்கும் அரியவனாய் விளங்கும் பெரியோனாகிய இறைவன், அரியதலமாய் விளங்கும் கள்ளிலில் எழுந்தருளி உள் ளான். அறிந்தவர்கள் அவனையே பெரியோன் எனப் போற்றிப் புகழ்வர்.


பாடல் எண் : 10
ஆச்சியப் பேய்களோடு அமணர் குண்டர்
பேச்சுஇவை நெறிஅல்ல, பேணு மின்கள்,
மாச்செய்த வளவயல் மல்கு கள்ளில்
தீச்செய்த சடைஅண்ணல் திருந்து அடியே.

         பொழிப்புரை :பரிகசிக்கத்தக்க பேய்கள் போன்றவர்களாகிய அமணர்களும், புத்தர்களும், கூறும் உரைகள் உண்மையான நெறிகளை மக்கட்கு உணர்த்தாதவை. எனவே அவர்தம் உரைகளைக் கேளாது விடுத்து, பெருமைக்குரிய வளவயல்கள் நிறைந்த கள்ளிலில் விளங்கும் தீத்திரள் போன்ற சடைமுடியை உடைய சிவபிரானுடைய அழகிய திருவடிகளையே பேணுவீர்களாக.

பாடல் எண் : 11
திகைநான்கும் புகழ்காழிச் செல்வ மல்கு
பகல்போலும் பேர்ஒளியான், பந்தன், நல்ல
முகைமேவு முதிர்சடையன் கள்ளில் ஏத்தப்
புகழோடும் பேரின்பம் புகுதும் அன்றே.

         பொழிப்புரை :நால்திசை மக்களாலும் புகழப்பெறும் சீகாழிப்பதியில் செல்வவளம் நிறைந்த பகல் போன்ற பேரொளியினனாகிய ஞானசம்பந்தன், நறுமணம் கமழும் மலர் அரும்புகள் நிறைந்த, முதிர்ந்த சடைமுடி உடையவனாகிய சிவபிரானது கள்ளிலைப் போற்றிப் பாடிய இத்திருப்பதிகத்தைப் பாடி ஏத்தினால், புகழோடு பேரின்பம் அடையலாம்.

                                             திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...