திரு வெண்பாக்கம்
(பூண்டி - நீர்த்தேக்கம்)
தொண்டை நன்னாட்டுத் திருத்தலம்.
திருவள்ளூர் நகரில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் இந்தத் திருத்தலம்
உள்ளது. திருவள்ளூரில் இருந்து நகரப் பேருந்துகள் பூண்டி செல்கின்றன. ஆலயத்தின்
அருகிலேயே பேருந்து நிறுத்தம் உள்ளது. திருவள்ளூர் - ஊத்துக்கோட்டை பேருந்தில்
சென்று வழியில் நெய்வேலி கூட்டு சாலையில் இறங்கி பூண்டி செல்லும் சாலையில் 1 கி.மீ. சென்றும் இத்திருத்தலத்தை
அடையலாம்.
இறைவன்
-- ஊன்றீசுவரர், ஆதாரதண்டேசுவரர்,
இறைவி -- மின்னொளி
அம்மை
பதிகம் -- சுந்தரர்
- பிழையுளன பொறுத்திடுவர்.
தேவார காலத்தில் இருந்த பழைய கோயில்
குசத்தலை ஆற்றின் கரையில் திருவிளம்பூதூரில் இருந்தது. திருவிளம்பூதூருக்குப்
பத்ரிகாரண்யம் என்றும் பெயர். (இலந்தை மரக்காட்டுப் பகுதி). சுந்தரருக்கு
ஊன்றுகோலை இறைவன் அளித்தருளிய தலம் இதுதான். 11ஆம் நூற்றாணை்டைச் சேர்ந்த இக்கோயில் பல
கல்வெட்டுக்களையும் கொண்டிருந்தது.
சென்னை நகரின் குடிதீர் தேவைக்காக பூண்டி
நீர்த்தேக்கம் அமைக்க, குசத்தலை ஆற்றில்
அணையைக் கட்ட 1942ல் அரசு முயற்சிகளை
மேற்கொண்டது. அதற்காக அணை கட்ட நிலப்பகுதிகளை எடுத்துக் கொண்டபோது அப்பகுதியில்
தேவார காலத்தில் இருந்த ஊன்றீசுவரர் ஆலயம் உள்ள திருவிளம்பூதூரும் அடங்கிற்று.
அப்போதைய அறநிலையத்துறை அமைச்சராக இருந்த
திரு எம். பக்தவத்சலம் அவர்கள்,
அப்போதைய
அறநிலையத்துறை ஆணையராக இருந்த திரு. உத்தண்டராமப் பிள்ளை அவர்கள் ஆகியோரின்
பெருமுயற்சியால் திருவிளம்பூதூர் கோயில் அங்கிருந்து எடுக்கப்பட்டு, தற்போதுள்ள இடத்தில் - பூண்டியில் புதிய
கோயிலாகக் கட்டப்பட்டது. இச்செய்தி பற்றிய குறிப்பு அம்பாள் சந்நிதி வாயிலில் கல்லிற் பொறித்து
வைக்கப்பட்டுள்ளது. பழைய ஆலயத்தில் இருந்த சிலைகள், சிற்பங்கள், மண்டபத் தூண்கள் ஆகியவை யாவும்
பெயர்த்து எடுக்கப்பட்டு புதிய ஆலயம் நிர்மாணிக்கும் போது அதில் வைக்கப்பட்டன.
சுந்தரர் திருவொற்றியூரில் தங்கி
இருக்கும் போது சங்கிலி நாச்சியாரை "திருவொற்றியூரில் இருந்து பிரிய
மாட்டேன்" என்று சபதம் செய்து கொடுத்து திருமணம் செய்து கொண்டார். தென்றல்
காலம் வந்தது. தென்றல் காற்று நம்பியாரூரருக்குத் திருவாரூர் வசந்த விழாவை
நினைவூட்டிற்று. "எத்தனை நாள்
பிரிந்து இருக்கேன் என் ஆரூர் இறைவனையே" என்று பாடினார். நாளுக்கு நாள் திருவாரூர் வேட்கை முறுகி எழவும், திருக்கோயிலுக்குப் போய் இறைவறைத்
தொழுது, திருவொற்றியூரை
விட்டு நீங்கினார். அவர் தம் இரு விழிகளும் மறைந்தன. நம்பியாரூர் மூர்ச்சித்தார், திகைத்தார், பெருமூச்சு விட்டார். சபதம் தவறினமையால்
நேர்ந்த துன்பத்தை இறைவரைப் பாடியே போக்கிக் கொள்வேன் என்று உறுதிகொண்டு, "அழுக்கு மெய்கொடு உன்
திருவடி அடைந்தேன்" என்று தொடங்கும் திருப்பதிகத்தினைப் பாடி, "ஒழுக்க என் கண்ணுக்கு
ஒரு மருந்து உரையாய்" என்று வேண்டினார்.
"ஊன்றுகோல் ஆவது ஒன்று அருளாய்" என்று வேண்டினார். "உற்றநோய் உறுபிணி தீர்த்து அருளாய்"
என்று வேண்டினார். ஊறு நீங்கவில்லை. திருவாரூருக்குப் போகவேண்டும் என்னும்
உறுதியில் இருந்து பிறழாமல், சிலர் வழிகாட்ட, திருமுல்லைவாயிலுக்குச் சென்று, "சங்கிலிக்காக என் கண்
கொண்ட பண்ப, நின் அடியேன்
படுதுயர் களையாய்" என்று பாடினார். அங்கிருந்து திருவெண்பாக்கம் சென்றார்,
"கோயிலில்
ஊள்ளீரோ" என்று, "பிழையுள
பொறுத்திடுவர்" என்னும் திருப்பதிகத்தினைப் பாடினார். இறைவன் அவருக்கு
ஊன்றுகோல் தந்து, "உளோம் போகீர்"
என்றார்.
ஊன்றுகோல் பெற்ற சுந்தரர் கோபத்தில் அதை
வீசியெறிய, அது நந்தியின் மேல்
பட்டு அதன் கொம்பு உடைந்ததாகவும்,
அதனாலேயே
இந்த சிவாலயத்தில் உள்ள சிவன் சந்நிதி முன் உள்ள நந்தியின் வலது கொம்பு உடைந்து
காணப்படுகிறது என்றும் ஒரு கதை சொல்லப்படுகிறது.
திருவெண்பாக்கம்
ஊன்றீசுவரர் ஆலயம் திருவேற்காடு கருமாரியம்மன் ஆலய நிர்வாகத்தைச் சேர்ந்ததாக
உள்ளது. இப்போதுள்ள ஆலயத்திற்கு கிழக்கிலும், தெற்கிலும் வாயில்கள் இருந்தாலும், பிரதான சாலையில் உள்ள தெற்கு நுழைவு
வாயில் தான் முக்கிய வாயிலாக உள்ளது. கிழக்கு நுழைவு வாயில் முன் புதர்கள் மண்டிக்
கிடப்பதால் அது உபயோகத்தில் இல்லை. தெற்கு நுழைவு வாயில் வழியாக உள்ளே
நுழைந்தவுடன் இடதுபுறம் வெளிப் பிரகாரத்தில் வழித்துணை விநாயகர் ஒரு சிறிய
சந்நிதியில் காணப்படுகிறார். கிழக்கு வெளிப் பிரகாரத்தில் சற்று உயரமான
மண்டபத்தில் நந்தி மற்றும் பலிபீடம் இருக்கின்றன. சுவாமி சந்நிதி, அம்பாள் சந்நிதி மற்றும் இதர சந்நிதிகள்
எல்லாம் சற்று உயரமான மண்டபத்தினுள் அமைந்திருக்கின்றன. கிழக்கு வாயில் வழியாக
உள்ளே சென்றால் நேர் எதிரே ஊன்றீசுவரர் சந்நிதி உள்ளது. இறைவன் கிழக்கு நோக்கி
உள்ளார். தெற்கு வாயில் வழியாக உள்ளே சென்றால் நேர் எதிரே அம்பாள் மின்னொளி அம்மை
சந்நிதி தெற்கு நோக்கி உள்ளது. கண் பார்வை இழந்த சுந்தரருக்கு அவ்வப்போது
மின்னலாகத் தோன்றி வழிகாட்டியதால் அம்பாளுக்கு மின்னொளி அம்மை என்று பெயர்
வந்ததாகவும் சொல்லப்படுகிறது. சுவாமி மற்றும் அம்பாள் சந்நிதிகளை தனித்தனியாக வலம்
வர வசதிகள் உள்ளன. சுவாமி சந்நிதி கருவறைச் சுற்றில் உள்ள விநாயகர், வள்ளி தெய்வானையுடன் ஆறுமுகர், மகாலட்சுமி சந்நிதிகள் பார்த்து
பரவசமடைய வேண்டிவை. கருவறை கோஷ்டத்தில் கணபதி, லிங்கோத்பவர், தட்சினாமூர்த்தி, பிரம்மா, துர்கை ஆகியோரைக் காணலாம். சுவாமி
சந்நிதி முன் நந்தி, பலிபீடம், அருகில் சுந்தரர் ஊண்றுகோலுடன் நின்று
கொண்டிருக்கிறார். உள் மண்டபத்தில் பைரவர், நால்வர் சந்நிதி, அருணகிரிநாதர், சூரியன், நவக்கிரகங்கள் சந்நிதி ஆகியவை கிழக்குப்
பக்கம் இருக்கின்றன.
வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக்
கலிவெண்பாவில், "தேசு ஊரன் கண் பார்க்க
வேண்டும் எனக் கண்டு, ஊன்றுகோல் கொடுத்த வெண்பாக்கத்து அன்பர் பெறும் வீறாப்பே"
என்று போற்றி உள்ளார்.
காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
சுந்தரர்
திருப்பதிக வரலாறு
சுவாமிகள், திருவொற்றியூரில் சங்கிலியாரை
மணப்பதற்காகச் செய்த சபத மொழியைக் கடந்ததனால் கண் ஒளி மறைய, வழிச் செல்வோருடன் சென்று வடதிருமுல்லை
வாயிலை வணங்கிப் பாடியபின், திருவெண்பாக்கம்
அடைந்து, தொண்டர்களுடன்
வலமாகத் திருக்கோயில்முன் எய்தி கைதலை மேற்கொண்டு புகழ்ந்து பரவி, 'நீர் கோயிலுள் உளீரோ?' என்று கேட்க, பெருமானும் ஊன்று கோல் ஒன்றை அருளி, அயலார் போல, 'உளோம் போகீர்' என்று கூறிய மொழி கேட்டு வருந்திப்
பாடியருளியது இத்திருப்பதிகம். (தி. 12
ஏயர்கோன். புரா. 280)
பெரிய
புராணப் பாடல் எண் : 278
தொண்டை
மானுக்குஅன்று அருள்கொடுத்து அருளும்
தொல்லை வண்புகழ்
முல்லை நாயகரை,
கொண்ட
வெந்துயர் களைகஎனப் பரவி,
குறித்த காதலின்
நெறிக்கொள வருவார்,
வண்டுலா
மலர்ச் சோலைகள் சூழ்ந்து
மாட மாளிகை நீடுவெண்
பாக்கம்
கண்ட
தொண்டர்கள் எதிர்கொள வணங்கி,
காயும் நாகத்தர்
கோயிலை அடைந்தார்.
பொழிப்புரை : தொண்டைமான் என்னும்
அரசனுக்கு முன்னைய நாளில் அருள் புரிந்திடும், வடதிருமுல்லைவாயிலில் அமர்ந்தருளும்
தலைவனை நினைந்து, `அடியனேன் கொண்ட
கொடும் துயர் களைந்திடுவாய்\' எனப் போற்றித்
திருவாரூர் மேல் குறித்த காதலால் வழிக் கொண்டு வருபவர், வண்டுகள் மொய்த்திடும் சோலைகள் சூழ்ந்து, மாட மாளிகைகள் நிரல்பட அமைந்து
விளங்கிடும் திருவெண்பாக்கத்தில் உள்ள அடியவர்கள் நகர எல்லையில் எதிர்கொண்டிடத்
தாம் அவரை வணங்கிக் கொலை புரியும் யானையை உரித்த சிவபெருமானது அக்கோயிலைச்
சென்றடைந்தார்.
பெ.
பு. பாடல் எண் : 279
அணைந்த
தொண்டர்கள் உடன்வல மாக
அங்கண் நாயகர்
கோயில்முன் எய்திக்
குணங்கள்
ஏத்தியே பரவி,அஞ் சலியால்
குவித்த கைதலை
மேற்கொண்டு நின்று,
வணங்கி, "நீர்மகிழ் கோயிலு
ளீரே"
என்ற வன்தொண்டர்க்கு, ஊன்றுகோல் அருளி
இணங்கு
இலா மொழியால் "உளோம் போகீர்"
என்று இயம்பினார்
ஏதிலார் போல.
பொழிப்புரை : தம்முடன் வந்த
தொண்டர்களுடன் வலமாக வந்து, திருமுன்பு சென்று, பெருமானது குணங்களைப் போற்றி வணங்கி, அஞ்சலியால் கூப்பிய கரங்களைத் தலைமேற்
கொண்டு வணங்கிக் கண் தெரியாத கையறவால், `எம்பிரானே!
நீர் கோயிலில் உள்ளீரோ?' என்று கேட்ட
நம்பிகளுக்கு, எம்பிரான் ஓர்
ஊன்றுகோல் கொடுத் தருளி, இதமுடன் எடுத்துச்
சொல்லாத ஒரு வார்த்தையாக `உளோம் போகீர்' என்று மொழிந்தார்; தாம் ஒரு தொடர்பிலார் போல.
குறிப்புரை : குழைவிரவு வடிகாதா
என்றலும், கோயிலில் உள்ளாயோ
என்றதும் கடுஞ்சொற்களேயாகும். எனினும் அவற்றை அவர்தம் வருத்த மிகுதியால் கூற, பெருமானும் `உளோம்' என்ற அளவில் கூட நில்லாது `போகீர்' என்றும் கூறிப் போகச் செய்தமை
நம்பிகளுக்குப் பெரு வருத்தத்தைத் தந்துள்ளது. இதனைப் பாடல் தொறும் கூறுவதோடு அமையாது, 9ஆவது பாடலில், `ஒன்னலரைக் கண்டார் போல்' என்று, அருளியது அவர்தம் வருத்த மிகுதியை
மேலும் காட்டுவதாகும். 10 ஆவது பாடலில் `ஊன்றுவதோர் கோல் அருளி' என்றது அச்செயல் தானும் தமக்கு
ஓராற்றான் ஆறுதல் தந்தமையைக் குறித்தருளியதாகும். இவ்வகையில் இப்பாடற் குறிப்புகள், ஆசிரியர் தம் வரலாற்று அமைவிற்குஎடுத்துக்காட்டுகள்
ஆகின்றன.
பெ.
பு. பாடல் எண் : 280
"பிழை உளன பொறுத்திடுவர்" என்று எடுத்து, பெண்பாகம்
விழை
வடிவின் பெருமானை, வெண்பாக்கம்
மகிழ்ந்தானை,
இழைஎன
மாசுணம் அணிந்த இறையானைப் பாடினார்,
மழைதவழும்
நெடும்புரிசை நாவலூர் மன்னவனார்.
குறிப்புரை : `பிழையுளன பொறுத்திடுவர்' எனத் தொடங்கும் பதிகம் சீகாமரப் பண்ணில்
அமைந்ததாகும் (தி.7 ப.89).
7. 089 திருவெண்பாக்கம் பண் - சீகாமரம்
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
பிழைஉளன
பொறுத்திடுவர் என்றுஅடியேன்
பிழைத்தக்கால்,
பழிஅதனைப்
பாராதே, படலம் என்கண்
மறைப்பித்தாய்,
குழைவிரவு
வடிகாதா! கோயில் உளாயே, என்ன
உழை உடையான்
உள் இருந்து உளோம்போகீர் என்றானே
பொழிப்புரை : ` குழை பொருந்திய , தூங்குங்காதினை உடையவனே , நம்மாட்டுப் பிழை உளவாவனவற்றை நம்
பெருமானார் பொறுத்துக்கொள்வார் என்னும் துணிவினால் அடியேன் பிழை செய்தால், அதனைப் பொறாததனால் உனக்கு உளதாகும்
பழியை நினையாமலே நீ என் கண்ணைப் படலத்தால் மறைத்து விட்டாய்; இதுபோது இக்கோயிலினுள்ளே இருக்கின்றாயோ?` என்று யான் வினாவ, மானை ஏந்திய அவன், ` உளோம் ; போகீர் ` என்று சொன்னானன்றே ! இதுவோ அவனது
கண்ணோட்டம் !
பாடல்
எண் : 2
இடைஅறியேன், தலைஅறியேன், எம்பெருமான் சரணம்
என்பேன்,
நடை உடையன், நம் அடியான், என்று அவற்றைப் பாராதே,
விடைஉடையான், விடநாகன், வெண்ணீற்றன், புலியின்தோல்
உடைஉடையான், எனை உடையான், உளோம்போகீர் என்றானே.
பொழிப்புரை : யான் யாதொரு
செயலிலும் ` முதல் இன்னது ; நடு இன்னது ; முடிவு இன்னது ;` என்று அறியேன் ; ` எம் பெருமானே எனக்குப் புகலிடம் ; ஆவது ஆகுக ` என்று கவலையற்றிருப்பேன் ; அதனையறிந்திருந்தும் , இடப வாகனத்தை யுடையவனும் , விடம் பொருந்திய பாம்பை அணிந்தவனும் , வெண்மையான நீற்றைப் பூசு பவனும் , புலியின் தோலாகிய உடையை உடையவனும் , என்னை ஆளாக உடையவனும் ஆகிய இறைவன் , ` இவன் நம்மையே அடைக் கலமாக அடைதலை
யுடையவன் ; நமக்கு அடியவன் ` என்ற முறைமை களை நினையாமலே , ` உளோம் ; போகீர் ` என்று சொன்னானன்றே ; இதுவோ அவனது கண்ணோட்டம் !
பாடல்
எண் : 3
செய்வினைஒன்று
அறியாதேன் திருவடியே சரண்என்று,
பொய்அடியேன்
பிழைத்திடினும் பொறுத்திட நீ வேண்டாவோ,
பைஅரவா, இங்கு இருந்தாயோ என்ன, பரிந்து என்னை
உய்ய அருள்
செய்ய வல்லான், உளோம்போகீர் என்றானே
பொழிப்புரை : படத்தையுடைய பாம்பை
அணிந்தவனே , ` உனது திருவடியே புகல்
` என்று கருதி , ` செய்யத்தக்க செயல் இது ; தகாத செயல் இது ` என்பதைச் சிறிதும் அறியாத
பொய்யடியேனாகிய யான் , அறியாமையாற்
பிழைசெய்தேனாயினும் , பொறுத்தல் உனக்குக்
கடமையன்றோ ; அங்ஙனம் பொறுத்து
எனக்கு அருள் பண்ணாமை யின் , நீ இங்கே
இருக்கின்றாயோ ` என்று யான் உரிமையோடு
வினாவ , எப்பொழுதும் என்மேல்
அருள்கூர்ந்து , என்னை உய்யுமாறு தன்
திருவருளைச் செய்ய வல்ல எம்பெருமான் , இதுபோது
, ` உளோம் ; போகீர் ` என்று சொன்னானன்றே ; இதுவோ அவனது கண்ணோட்டம் !
பாடல்
எண் : 4
கம்புஅமரும்
கரிஉரியன், கறைமிடற்றன், காபாலி,
செம்பவளத்
திருவுருவன், சேயிழையோடு உடன்ஆகி,
நம்பி, இங்கே இருந்தாயே, என்றுநான் கேட்டலுமே,
உம்பர்தனித்
துணை எனக்கு உளோம்போகீர் என்றானே
பொழிப்புரை : ` நம்பியே , நீ , செவ்விய அணியினை யுடைய மலை மகளோடு
உடனாயினவன் ஆதலின் , இருவீரும் இங்கே
இருக்கின்றீர் களோ ` என்று நான் வினவ , அசைதல் பொருந்திய யானையினது தோலையும்
கறுத்த கண்டத்தையும் , கபாலத்தையும் , செவ்விய பவளம்போலும் உருவத்தையும்
உடையவனும் , தேவர்களுக்கு ஒப்பற்ற
துணைவனும் ஆகிய இறைவன், எனக்கு, `உளோம்; போகீர்` என்று சொன்னானன்றே ! இதுவோ அவனது
கண்ணோட்டம் !
பாடல்
எண் : 5
பொன்இலங்கு
நறுங்கொன்றை புரிசடை மேல்பொலிந்து
இலங்க
மின்இலங்கு
நுண்இடையாள் பாகமா எருதுஏறித்
துன்னிஇரு
பால்அடியார் தொழுதுஏத்த, அடியேனும்
உன்னமதாய்க்
கேட்டலுமே, உளோம்போகீர் என்றானே
பொழிப்புரை : பொன்போல விளங்குகின்ற
, நறுமணம் பொருந்திய
கொன்றைமலர் , சடையின்மேற்
பொருந்துதலால் , மேலும் பொலிவுற்று
விளங்க , மின்னலினது தன்மை
விளங்குகின்ற நுண்ணிய இடையினை உடையவள் ஒருபாகத்தில் இருக்க , எருதை ஏறு பவனாகிய சிவபெருமானை , இருபாலும் அடியார்கள் நெருங்கி , வணங்கித் துதிக்க , யானும் உயர்ந்த முறைமையினாலே , ` கோயில் உளாயே ` என்று கேட்க , அவன் , ` உளோம் ; போகீர் ` என்று சொன்னா னன்றே ! இதுவோ அவனது
கண்ணோட்டம் !
பாடல்
எண் : 6
கண்ணுதலால்
காமனையும் காய்ந்த திறல், கங்கைமலர்
தெண்ணிலவு
செஞ்சடைமேல் தீமலர்ந்த
கொன்றையினான்,
கண்மணியை
மறைப்பித்தாய், இங்கு இருந்தாயோ என்ன,
ஒண்ணுதலி
பெருமான் தான், உளோம்போகீர் என்றானே
பொழிப்புரை : யாவரையும்
வெல்லுகின்ற காமனையும் தனது நெற்றிக்கண்ணால் எரித்த ஆற்றலையுடைய , கங்கை விளங்குகின்ற , தெள்ளிய நிலவை அணிந்த சடையின்மேல்
தீயின்கண் மலர்ந்தது போலத் தோன்றுகின்ற கொன்றை மலரை உடைய பெருமானை , அடியேன் , ` என் கண்மணியை மறைப்பித்தவனே , இங்கு இருக்கின்றாயோ ?` என்று வினவ , ஒள்ளிய நெற்றியையுடைய வளாகிய
உமையம்மைக்குத் தலைவன் , ` உளோம் ; போகீர் ` என்று சொன்னானன்றே ! இதுவோ அவனது
கண்ணோட்டம் !
பாடல்
எண் : 7
பார்நிலவு
மறையோரும் பத்தர்களும்
பணிசெய்யத்
தார்நிலவு
நறுங்கொன்றைச் சடையனார், தாங்கஅரிய
கார்நிலவு
மணிமிடற்றீர், ஈங்கு இருந்தீரே என்ன
ஊர்அரவம்
அரைக்குஅசைத்தான், உளோம்போகீர் என்றானே
பொழிப்புரை : `மாலையாகப் பொருந்திய மணம் உடைய கொன்றைப்
பூவை அணிந்த சடையை உடையவரே, தாங்குதற்கரிய
நஞ்சுபொருந்திய, நீலமணி போலும்
கண்டத்தையுடையவரே, நீர், மண்ணுலகிற் பொருந்திய அந்தணர்களும், அடியவர்களும் பணி செய்ய இங்கு
இருக்கின்றீரோ? என்று யான் வினவ, ஊர்கின்ற பாம்பை அரையிற்கட்டிய இறைவன், `உளோம்; போகீர்` என்றானன்றே ! இதுவோ அவனது கண்ணோட்டம் !
பாடல்
எண் : 8
வார்இடங்கொள்
வனமுலையாள் தன்னோடு மயானத்துப்
பாரிடங்கள்
பலசூழப் பயின்றுஆடும்
பரமேட்டி,
கார்இடங்கொள்
கண்டத்தன், கருதும்இடம்
திருவொற்றி
யூர்இடம்
கொண்டு இருந்தபிரான் உளோம்போகீர் என்றானே
பொழிப்புரை : கச்சினது இடம்
முழுவதையுங் கொண்ட அழகிய தனங்களை யுடையவளாகிய உமையோடு , பூதங்கள் பல சூழ , முதுகாட்டிற் பலகாலும் ஆடுகின்ற , மேலான நிலையில் உள்ளவனும் , கருமை நிறம் தனக்கு இடமாகக் கொண்ட
கண்டத்தை யுடையவனும் , தான் விரும்பும்
இடமாகிய திருவொற்றியூரையே தனக்கு இடமாகக் கொண்டவனும் ஆகிய இறைவன் , யான் வினவியதற்கு , ` உளோம் ; போகீர் ` என்று சொன்னானன்றே ! இதுவோ அவனது
கண்ணோட்டம் !
பாடல்
எண் : 9
பொன்நவிலும்
கொன்றையினாய்! போய் "மகிழ்க்
கீழ்இரு"என்று
சொன்னஎனைக்
காணாமே, "சூள்உறவு
மகிழ்க்கீழே"
என்னவல்ல
பெருமானே, இங்கு இருந்தாயோ,என்ன
ஒன்னலரைக்
கண்டால்போல் உளோம்போகீர் என்றானே
பொழிப்புரை : ` பொன்போலுங் கொன்றை மலரை அணிந்த பெருமானே
, நீ , கோயிலை விட்டுப்போய் மகிழ மரத்தின் கீழ்
இரு` என்று சொன்ன என்னை, அதன் பொருட்டுக் காணாமலே, சங்கிலியிடம் சென்று, `சூளுறவு, மகிழ மரத்தின் கீழே ஆகுக ` என்று சொல்ல வல்ல பெருமானே! நீ , இங்கு இருக்கின்றாயோ என்று யான் வினவ , எம்பெருமான் , என்னை , பகைவரைக் கண்டாற்போல வெறுத்து , ` உளோம் ; போகீர் ` என்று சொன்னானன்றே ! இதுவோ அவனது
கண்ணோட்டம் !
பாடல்
எண் : 10
மான்திகழுஞ்
சங்கிலியைத் தந்து வரு
பயன்கள்எல்லாம்
தோன்றஅருள்
செய்து அளித்தாய் , என்றுஉரைக்க, உலகமெலாம்
ஈன்றவனே, வெண்கோயில் இங்கு இருந்தாயோ என்ன
ஊன்றுவது ஓர்
கோல்அருளி, உளோம்போகீர் என்றானே
பொழிப்புரை : ` மான் போல விளங்குகின்ற சங்கிலியை எனக்கு
ஈந்து , அதனால் உளவாகின்ற
பயன்களெல்லாம் எனக்கு நன்கு விளங்கும்படி திருவருள் செய்து காத்தாய் ` என்று சொல்லுதற்கு , ` உலகத்தையெல்லாம் பெற்ற தந்தையே , வெண்கோயிலாகிய இவ்விடத்தில் நீ
இருக்கின்றாயோ ` என்று யான் வினவ , எம் பெருமான் , ஊன்றுவதாகிய ஒருகோலை அருளி , ` உளோம் ; போகீர் ` என்றா னன்றே ! இத்துணையது தானோ அவனது
கண்ணோட்டம் !
பாடல்
எண் : 11
ஏர்ஆரும்
பொழில்நிலவு வெண்பாக்கம்
இடங்கொண்ட
கார்ஆரும்
மிடற்றானைக் காதலித்திட்டு
அன்பினொடும்
சீர்ஆரும்
திருவாரூர்ச் சிவன்பேர்சென்
னியில்வைத்த
ஆரூரன்
தமிழ்வல்லார்க்கு அடையா வல்வினை தானே
பொழிப்புரை : புகழ் நிறைந்த
திருவாரூரில் உள்ள சிவ பெருமானது திருப்பெயரைத் தலையில் வைத்துள்ள நம்பியாரூரன் , அழகு நிறைந்த சோலைகள் விளங்குகின்ற
திருவெண்பாக்கத்தை இடமாகக் கொண்ட ,
கருமை
நிறைந்த கண்டத்தை யுடையவனை மிக விரும்பி , அன்போடும் பாடிய இத்தமிழ்ப் பாடல்களைப்
பாட வல்லவர்மேல் , வலிய வினைகள் வந்து
சாராவாம் .
திருச்சிற்றம்பலம்
No comments:
Post a Comment