திரு முதுகுன்றம்


திரு முதுகுன்றம்
(விருத்தாசலம்)

     நடு நாட்டுத் திருத்தலம்.

         தேவாரப் பாடல்களில் திருமுதுகுன்றம், தற்போது விருத்தாசலம் என்று வழங்கப்படுகிறது. விருத்தாசலம் இரயில் நிலையத்தில் இருந்து 2 கி.மி. தொலைவில் திருக்கோயில் உள்ளது. விருத்தாசலம் சென்னையில் இருந்து 215 கி.மீ. தொலைவில் உள்ளது. தமிழ்நாட்டிலுள்ள முக்கிய நகரங்களில் இருந்து விருத்தாசலம் செல்ல பேருந்து வசதி உள்ளது.

     அழகுத் தமிழில் "திருமுதுகுன்றம்" என்பது, வடமொழியில் "விருத்தாசலம்" என்று ஆனது.  தற்போது, விருத்தாசலம் என்றே வழங்கப்படுகின்றது. 


     "முதுகுன்றம்" என்ற சிவத்தலத்தின் பெயரை வடமொழியில் மொழி பெயர்க்கத் தெரியாதவர்கள் "விருத்தாசலம்" என்று பேர் அமைத்து விட்டார்கள். "விருத்தாசலம்" என்றால் "கிழமலை" என்று பொருள். பழமலை கிழமலையாகி விட்டது. முதுகுன்றம் அல்லது பழமலை என்றே தமிழில் வழங்குதல் வேண்டும்.

இறைவர்                  : பழமலைநாதர், விருத்தகிரீசுவரர்

இறைவியார்               : பெரிய நாயகி, பாலாம்பிகை,  விருத்தாம்பிகை

தல மரம்                    : வன்னி

தீர்த்தம்                    : மணிமுத்தாறு, அக்னி, குபேர, சக்கர தீர்த்தங்கள்

தேவாரப் பாடல்கள்    :
                           1. சம்பந்தர் -  1. மத்தாவரை நிறுவிக்கடல்,
                                                      2. தேவராயும் அசுரராயும்,
                                                      3. நின்று மலர்தூவி,
                                                      4. மெய்த்தாறு சுவையும்,
                                                      5. தேவா சிறியோம் பிழையை,
                                                      6. வண்ணமா மலர்கொடு,
                                                      7. முரசதிர்ந் தெழுதரு.

                           2. அப்பர்   -   1. கருமணியைக் கனகத்தின்.

                           3. சுந்தரர்  -   1. பொன்செய்த மேனியினீர், 
                                                      2. நஞ்சி யிடையின்று நாளை,
                                                      3. மெய்யை முற்றப்பொடி.

         நான்கு புறமும் சுமார் 26 அடி உயரமுள்ள மதிற்சுவரையும், 660 அடி நீளமும், 390 அடி அகலமும் உடைய ஒரு பெரிய கோயிலாகும். ஆலயத்தின் 4 புறமும் 7 நிலைகளையுடைய பெரிய கோபுரங்கள் காண்போரைக் கவரும் வண்ணம் நெடிதுயர்ந்து காணப்படுகின்றன. ஆலயத்திற்குப் பெருமை சேர்க்கும் வகையில் ஐந்து பிரகாரம், ஐந்து நந்தி, ஐந்து கொடிமரம், ஐந்து தீர்த்தம் இவ்வாலயத்தில் உள்ளன. கிழக்கே உள்ளே பிரதான வாயில் வழியாக உள்ளே சென்றால் 16 தூண்களை உடைய மண்டபம் இருக்கிறது. முதல் வெளிப் பிரகாரத்தில் விநாயகர் சந்நிதி கிழக்கு நோக்கி சுமார் 18 அடி பள்ளமான இடத்தில் அமைந்துள்ளது. பாதாள விநாயகர் என்று அழைக்கப்படும் இவரை வணங்கினால் எல்லாக் குறைகளும் நீங்கி நல்ல வாழ்வு அமையும் என்பதால் பக்தர்கள் இங்கு வந்து இவரை வணங்குகின்றனர்.

திருவும் கல்வியும் சீரும் தழைக்கவும்
கருணை பூக்கவும் தீமையைக் காய்க்கவும்
பருவமாய் நமது உள்ளம் பழுக்கவும்
பெருகும் ஆழத்துப் பிள்ளையைப் பேணுவாம்

என்று விருத்தாசலம் தலபுராணம் இவ் விநாயகரைப் பாடும்.

          இத்தலத்தின் இறைவி பெரிய நாயகி அம்மையின் சந்நிதி ஒரு தனி கோவிலாக முதல் பிரகாரத்தின் வடபுறம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. மூன்றாம பிரகாரத்தில் 63 நாயன்மார்களில் உருவச் சிலைகளும், பிந்து மாதவப் பெருமாள் சந்நிதியும் உள்ளன. 63 மூவர் பிரகாரத்தின் வடகிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் காலபைரவர் மூர்த்தம் காசியில் இருப்பது பொன்ற வடிவமைப்புக் கொண்டது.

         நான்காம் பிரகாரத்தில் இத்தலத்தின் மூலவர் பழமலைநாதர் கருவறை இருக்கிறது. கருவறையின் வாயிலில் இரு புறமும் துவாரபாலகர்கள் சிலைகள் காணப்படுகின்றன. மூன்றாம் பிரகாரத்தின் வடமேற்கு கோஷ்டத்தில் விருத்தாம்பிகை சந்நிதி உள்ளது.

         ஆகமக் கோயில்: சைவ சமயத்தில் 28 ஆகமங்கள் உண்டு. இவற்றை 28 லிங்கங்களாக இத்தலத்தில் முருகப்பெருமான் பிரதிஷ்டை செய்து பூஜை செய்துள்ளார். இந்த இலிங்கங்கள் கைலாசப் பிராகாரத்தின் வடமேற்கு பகுதியில் தனி சந்நிதியில் அமைந்துள்ளன. இதில் தெற்கு வரிசையில் உள்ள இலிங்கங்களில் நடுவில் விநாயகரும், மேற்கு வரிசையில் உள்ள இலிங்கங்களின் நடுவில் வள்ளி தெய்வானையுடன் முருகனும் அருள்பாலிக்கின்றனர். 28 ஆகமங்களுக்குரிய பெயர்களான, காமிகேசுவரர், யோகேசுவரர், சிந்தியேசுவரர், காரணேசுவரர், அஜிதேசுவரர், தீபதேசுவரர், சூட்சமேசுவரர், சகத்திரேசுவரர், அம்சுமானேசுவரர், சப்பிரபேதேசுவரர், விசயேசுவரர், விசுவாசேசுவரர், சுவாயம்பேசுவரர், அநலேசுவரர், வீரேசுவரர், ரவுரவேசுவரர், மகுடேசுவரர், விமலேசுவரர், சந்திரஞானேசுவரர், முகம்பிபேசுவரர், புரோத்கீதேசுவரர், லலிதேசுவரர், சித்தேசுவரர், சந்தானேசுவரர், சர்வோத்தமேசுவரர், பரமேசுவரர், கிரணேசுவரர், வாதுளேசுவரர் என்ற பெயர்கள் அவற்றுக்கு சூட்டப்பட்டுள்ளன. இந்த அமைப்பு வேறு எங்கும் காண இயலாத சிறப்பாகும். இக்கோயிலை ஆகமக்கோயில் என்றும் அழைப்பார்கள்.

         இத்தலத்தின் தல விருட்சமான வன்னிமரம் சுமார் 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. ஆதி காலத்தில் இக்கோயிலுக்கு திருப்பணி செய்த விபசித்து முனிவர் திருப்பணி வேலை செய்தவர்களுக்கு இந்த வன்னிமரத்தின் இலைகளைப் பறித்து கூலியாக கொடுத்தார் என்றும் அவை அத்தொழிலாளர்களின் உழைப்புக்கேற்ப பொற்காசுகளாக மாறியது என்று தலபுராணம் கூறுகிறது.

         இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது மூன்று பாடல்கள் உள்ளன. இத்தலத்தில் மூன்றாம் பிரகாரத்தில் ஆறுமுருகப்பெருமான் 12 திருக்கரங்களுடன் தனது தேவியர் இருவருடன் மயில் வாகனத்தில் எழுந்தருளியுள்ளார்.

         சுந்தரர் திருமுதுகுன்றத்தினை அடைந்து இறைவரைப் பாடினார்.  முதுகுன்றப் பெருமான் தம தோழருக்கு 12000 பொற்காசுகள் கொடுத்தார். நம்பியாரூரர் சிவபெருமானை வணங்கி, "இப்பொன் முழுதும் திருவாரூருக்கு வருதல் வேண்டும்.  அதனால் திருவாரூரிலே உள்ளோர்க்கு ஒரு வியப்புத் தோன்றுதல் வேண்டும்" என்று வேண்டினார். பொன் திரளை மணிமுத்தாற்றிலே இட்டுத் திருவாரூர்க் குளத்தில் எடுத்துக் கொள்ளுமாறு இறைவன் அருள் வாக்குச் செய்தார். அது கேட்ட நம்பியாரூரர் அன்று எனை ஆட்கொண்ட அருள் இதில் அறிவேன் என்று சொல்லு, மச்சம் வெட்டி எடுத்துக் கொண்டு, பொன்னை எல்லாம் மணிமுத்தாற்றிலே இட்டார்.

         இந்தத் தலத்தில் உயிர்விடும் எல்ல உயிர்களுக்கும் இறைவி பெரியநாயகி தம்முடைய ஆடையினால் வீசி இளைப்பாற்ற இறைவன் பழமலைநாதர் பஞ்சாட்சர உபதேசத்தைப் புரிந்தருளி அந்த உயிர்களை தம்முடைய உருவமாக ஆக்கும் தலம் என்பது கந்தபுராணம் வாயிலாக நாம் அறியும் செய்தியாகும்.

  "தூசினால் அம்மைவீசத் தொடையின்மேற் கிடத்தித் துஞ்சும்
 மாசிலா உயிர்கட் கெல்லாம் அஞ்செழுத்தியல்பு கூறி
 ஈசனே தனது கோலம் ஈந்திடும் இயல்பால் அந்த
 காசியின் விழுமிதான முதுகுன்ற வரையும் கண்டான்."
                                                           (கந்தபுராணம் - வழிநடைப்படலம்)

         ஆகையால் இத்தலம் விருத்தகாசி என்றும் வழங்கப்படுகிறது. காசியைக் காட்டிலும் சிறந்தது. இந்தத் திருமுதுகுன்றத்தில் வழிபாடு செய்தால் காசியில் செய்த புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். ஆதியில் பிரம்மதேவர் இந்த மண்ணுலகைப் படைக்க விரும்பியபோது சிவபெருமானை துதிக்க அவரும் அருள் செய்தார். பின்னர் தானே ஒரு மலையாகத் தோன்றினார். அதன் பின்னரே பிரம்மா படைத்த மலைகளும் தோன்றின. இந்த மலைகளுக்கெல்லாம் சிவபெருமான் மலையாகத் தோன்றிய மலையே முன்னால் தோன்றியது என்பதால் இது பழமலை என்றும் இத்தலத்து இறைவன் பழமலைநாதர் என்றும் வழங்கப்படுகிறார்.

         காசியைப்போன்று விருத்தாசலமும் முக்தி தலமாகும். வடக்குக் கோபுர வாயிலுக்கு நேரே வடபால் மணிமுத்தாற்றில் நீராட வேண்டும். இவ்விடம் "புண்ணிய மடு" எனப்படுவதாகும். இந்த புண்ணிய மடுவில் இறந்தோரின் எலும்புகளை இட்டால், அவை கூழாங்கற்களாக மாறிவிடும். இங்குள்ள மணிமுத்தாறு நதியில் நீராடி மூலவர் பழமலைநாதரை வழிபட்டால், காசியில் நீராடி விசுவநாதரை வழிபட்ட பலன் கிடைக்கும், பிணிகள் யாவும் அகன்று சித்தி அடைவர் என்பது நம்பிக்கை.

         இக்கோயிலில் ஆடிப்பூர திருவிழா, வைகாசி வசந்த உற்சவம், மார்கழி திருவாதிரை, மாசிமகம் 10 நாள் பெருவிழா ஆகியவை மிகவும் சிறப்பாக நடைபெறுகின்றன.

         குருநமசிவாயர் என்னும் மகான் 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். ஒருமுறை அவர் திருவண்ணாமலையிலிருந்து சிதம்பரம் சென்ற போது வழியில் திருமுதுகுன்றத்தில் இரவு தங்கினார். பழமலை நாதரையும் பெரிய நாயகியையும் தரிசித்து விட்டுக் கோயிலுள் ஒருபக்கத்தில் படுத்திருந்தார். பசிமிகுந்தது. பசி உண்டான போதெல்லாம் அம்பிகையைப் பாடி உணவைப் பெற்று உண்ணும் வழக்கமுடைய இவர் பெரிய நாயகியை துதித்து

     நன்றி புனையும் பெரிய நாயகி எனுங்கிழத்தி
     என்றும் சிவனாரிடக் கிழத்தி - நின்ற
     நிலைக் கிழத்தி மேனி முழுநிலக் கிழத்தி
     மலைக் கிழத்தி சோறு கொண்டு வா”

என்று பாடினார். பெரிய நாயகி, முதியவடிவில் எதிரே தோன்றி "என்னைப் பலமுறையும் கிழத்தி என்று ஏன் பாடினாய்?"” கிழத்தி எவ்வாறு சோறும் நீரும் கொண்டு வர முடியும் என்று கேட்க, குருநமசிவாயர்,

     முத்தி நதி சூழும் முதுகுன் றுறைவாளே
     பத்தர் பணியும் பதத்தாளே - அத்தன்
     இடத்தாளே முற்றா இளமுலை மேலார
     வடத்தாளே சோறு கொண்டு வா”

என்று பாடினார். அம்மையும் மகிழ்ந்து இளமை நாயகியாக வடிவு கொண்டு வந்து உணவு படைத்தாள் என்று சொல்லப்படுகிறது. பெரிய நாயகியே குருநமசிவாயருக்கு இளமை நாயகியாக வந்து உணவளித்ததால் இவ்வாலயத்தில் இளமை நாயகிக்குத் (பாலாம்பிகை) தனிக்கோயில் உள்ளது.

         காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.

     வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "தேவு அகமாம் மன்றம் அமர்ந்த வளம் போல் திகழ்ந்த முதுகுன்றம் அமர்ந்த அருட்கொள்கையே" என்று போற்றி உள்ளார்.
 

திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 180
அங்கு நின்றுஎழுந்து அருளி,மற்று
         அவருடன் அம்பொன்மா மலைவல்லி
பங்கர் தாம்இனிது உறையுநல்
         பதிபல பரிவொடும் பணிந்துஏத்தி,
துங்க வண்தமிழ்த் தொடைமலர்
         பாடிப்போய்த் தொல்லைவெங் குருவேந்தர்
செங்கண் ஏற்றவர் திருமுது
         குன்றினைத் தொழுதுசென்று அணைகின்றார்.

         பொழிப்புரை : திருஎருக்கத்தம்புலியூர் என்னும் அப்பதியினின்றும் புறப்பட்டு மேற்சென்று, அழகிய பொன்மலையில் தோன்றியருளிய உமையம்மையை ஒரு கூற்றில் கொண்ட சிவபெருமான் இனிதாய் உறைகின்ற பதியாகிய பலவற்றிற்கும் சென்று பணிந்து ஏத்தி, உயர்ந்த வண்டமிழ்ப் பாமாலைகள் பாடிச் சென்று, பழமையான சீகாழித் தலைவரான பிள்ளையார் சிவந்த கண்களையுடைய ஆனேற்றை ஊர்தியாகக் கொண்ட சிவபெருமானின் `திருமுதுகுன்றத்தை' வணங்கிச் சென்று அணைபவராய்,


பெ. பு. பாடல் எண் : 181
மொய்கொள் மாமணி கொழித்துமுத்
         தாறுசூழ் முதுகுன்றை அடைவோம்என்று
எய்து சொன்மலர் மாலைவண்
         பதிகத்தை இசையொடும் புனைந்துஏத்திச்
செய்த வத்திரு முனிவரும்
         தேவரும் திசையெலாம் நெருங்கப்புக்கு
ஐயர் சேவடி பணியும்அப்
         பொருப்பினில் ஆதரவு உடன்சென்றார்.

         பொழிப்புரை : `பெருமணிகளை மிகுதியாகக் கொழித்துக் கொண்டு வரும் திருமணிமுத்தாறு சூழும் திருமுதுகுன்றத்தைச் சென்றடைவோம்\' என்று பொருந்தும் சொல்மலர்களாலாய பதிகத்தை இசையுடன் பாடிப் போற்றி, சிறந்த தவத்தையுடைய முனிவர்களும் தேவர்களும் திசையனைத்தும் நெருங்கப் புகுந்து, இறைவரின் சேவடிகளை வணங்குகின்ற அப்பழமலையினிடத்து அன்பு மீதூரச் சென்றடைந்தார்.

         குறிப்புரை : `முதுகுன்றடைவோமே' எனும் தொடர், பதிகம் முழுதும் அமைந்துள்ளது. அப்பதிகம் `மத்தா வரை' (தி.1 ப.12) எனத் தொடங்கும் நட்டபாடைப் பண்ணாலாமைந்த பதிகம் ஆகும். இஃது திருப்பதியை அணையும் பொழுது அருளியதாகும்.


திருஞானசம்பந்தர் திருப்பதிகம்

1.012 திருமுதுகுன்றம்                        பண் – நட்டபாடை
                                             திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
மத்தாவரை நிறுவிக்கடல் கடைந்துஅவ்விடம் உண்ட
தொத்துஆர்தரு மணிநீண்முடிச் சுடர்வண்ணனது இடமாம்
கொத்தார்மலர் குளிர்சந்துஅகில் ஒளிர்குங்குமங் கொண்டு
முத்தாறுவந்து அடிவீழ்தரு முதுகுன்றுஅடை வோமே.

         பொழிப்புரை :மந்தர மலையை மத்தாக நட்டுக் கடலைக் கடைந்தபோது, கொடிது எனக் கூறப்பெறும் ஆலகால விடம் தோன்ற, அதனை உண்டவனும், பூங்கொத்துக்கள் சூடிய அழகிய நீண்ட சடை முடியினனும், எரி சுடர் வண்ணனும் ஆகிய சிவபெருமான் எழுந்தருளிய இடம்; மலர்க் கொத்துக்கள் குளிர்ந்த சந்தனம் அகில் ஒளிதரும் குங்கும மரம் ஆகியவற்றை அலைக்கரங்களால் ஏந்திக் கொண்டு வந்து மணிமுத்தாறு அடிவீழ்ந்து வணங்கும் திருமுதுகுன்றமாகும். அதனை அடைவோம்.


பாடல் எண் : 2
தழைஆர்வட வியவீதனில் தவமேபுரி சைவன்,
இழைஆர்இடை மடவாளொடும் இனிதாஉறைவு இடமாம்,
மழைவான்இடை முழவஎழில் வளைவாள்உகிர் எரிகண்
முழைவாள்அரி குமிறும்உயர் முதுகுன்றுஅடை வோமே.

         பொழிப்புரை :தழைகளுடன் கூடிய ஆலமர நீழலில் யோகியாய் வீற்றிருந்து தவம் செய்யும் சிவபிரான், போகியாய் நூலிழை போன்ற இடையினை உடைய உமையம்மையோடு மகிழ்ந்துறையும் இடம், மேகங்கள் வானின்கண் இடித்தலைக் கேட்டு யானையின் பிளிறல் எனக்கருதி அழகிதாய் வளைந்த ஒளி பொருந்தி விளங்கும் நகங்களையும் எரிபோலும் கண்களையும் உடையனவாய்க் குகைகளில் வாழும் சிங்கங்கள் கர்ச்சிக்கும் உயர்ந்த திருமுதுகுன்றமாகும். அதனை வழிபடச் செல்வோம்.


பாடல் எண் : 3
விளையாததொர் பரிசில்வரு பசுபாசவே தனை,ஒண்
தளைஆயின தவிரவ்வருள் தலைவன்னது சார்பாம்
களைஆர்தரு கதிர்ஆயிரம் உடையவ்வவ னோடு
முளைமாமதி தவழும்உயர் முதுகுன்றுஅடை வோமே.

         பொழிப்புரை :உயிர்களுடன் அநாதியாகவே வருகின்ற வேதனைகளைத் தரும் பாசங்களாகிய ஒள்ளிய தளைகள் நீங்குமாறு அருள்புரிதற்கு எழுந்தருளிய சிவபிரானது இடம், ஒளி பொருந்திய கிரணங்கள் ஆயிரத்தைக் கொண்ட கதிரவனும் முளைத்தெழுந்து வளரும் சந்திரனும் தவழும் வானளாவிய மலையாகிய திருமுதுகுன்றமாகும். அதனை அடைவோம்.

         குருவருள் : இறை, உயிர், தளை என்ற முப்பொருள்களும் என்றும் உள்ள உண்மைப் பொருள்கள். ஒரு காலத்தே தோன்றியன அன்று. இக்கருத்தையே `விளையாததொர் பரிசில்வரு பசுபாச வேதனை ஒண்தளை` என்றார். இவை நீங்க அருள்பவனே இறையாகிய தலைவன் என்று குறிப்பிட்டுள்ளார். இதில் பசு - உயிர். பாசம் - ஆணவம். வேதனை - நல்வினை தீவினையாகிய இருவினைகள். ஒண்தளை - மாயை. ஆணவக்கட்டினின்றும் ஆன்மாவை விடுவிப்பதற்குத் துணை செய்வதால் மாயையை ஒண்தளை என்றார்.


பாடல் எண் : 4
சுரர்மாதவர் தொகுகின்னரர் அவரோதொலைவு இல்லா
நரர்ஆனபன் முனிவர்தொழ இருந்தான்இடம் நலம்ஆர்
அரசார்வர அணிபொற்கலன் அவைகொண்டுபல்நாளும்
முரசுஆர்வரு மணமொய்ம்புஉடை முதுகுன்றுஅடை வோமே.

         பொழிப்புரை :தேவர்களும், சிறந்த தவத்தை மேற்கொண்டவர்களும், கின்னரி மீட்டி இசை பாடும் தேவ இனத்தவரான கின்னரரும், மக்களுலகில் வாழும் மாமுனிவர்களும் தொழுமாறு சிவபிரான் எழுந்தருளிய இடம், அழகிய அரசிளங்குமாரர்கள் வர அவர்களைப் பொன் அணிகலன்கள் கொண்டு வரவேற்கும் மணமுரசு பன்னாளும் ஒலித்தலை உடைய திருமுதுகுன்றமாகும். அதனை அடைவோம்.


பாடல் எண் : 5
அறைஆர்கழல் அந்தன்தனை அயின்மூவிலை அழகார்
கறைஆர்நெடு வேலின்மிசை ஏற்றான்இடம் கருதில்,
முறைஆயின பலசொல்லிஒண் மலர்சாந்துஅவை கொண்டு
முறையால்மிகு முனிவர்தொழு முதுகுன்றுஅடை வோமே.

         பொழிப்புரை :ஒலிக்கின்ற வீரக்கழல் அணிந்த அந்தகாசுரனைக், கூரிய மூவிலை வடிவாய் அமைந்த குருதிக் கறைபடிந்த அழகிய நீண்ட வேலின் முனையில் குத்தி ஏந்திய சிவபெருமானது இடம் யாதெனில், முனிவர்கள் பலரும் வேதங்கள் பலவும் சொல்லி நறுமலர் சந்தனம் முதலான பொருள்களைக் கொண்டு முறைப்படி சார்த்தி வழிபடுகின்ற திருமுதுகுன்றமாகும். அதனை நாம் அடைவோம்.


பாடல் எண் : 6
ஏஆர்சிலை எயினன்உரு வாகிஎழில் விசயற்கு
ஓவாதஇன் அருள்செய்தஎம் ஒருவற்குஇடம் உலகில்
சாவாதவர் பிறவாதவர் தவமேமிக உடையார்
மூவாதபல் முனிவர்தொழு முதுகுன்றுஅடை வோமே.

         பொழிப்புரை :அம்புகள் பூட்டிய வில்லை ஏந்திய வேட உருவந்தாங்கி வந்து போரிட்டு அழகிய அருச்சுனனுக்கு அருள்செய்த எம் சிவபெருமானுக்கு உகந்த இடம், சாவாமை பெற்றவர்களும், மீண்டும் பிறப்பு எய்தாதவர்களும், மிகுதியான தவத்தைப் புரிந்தவர்களும், மூப்பு எய்தாத முனிவர் பலரும் வந்து வணங்கும் திருமுதுகுன்றமாகும். நாமும் அதனைச் சென்றடைவோம்.


பாடல் எண் : 7
தழல்சேர்தரு திருமேனியர், சசிசேர்சடை முடியர்,
மழமால்விடை மிகஏறிய மறையோன்உறை கோயில்,
விழவோடுஒலி மிகுமங்கையர் தகும்ஆடக சாலை
முழவோடுஇசை நடமுன்செயும் முதுகுன்றுஅடை வோமே.

         பொழிப்புரை :தழலை ஒத்த சிவந்த திருமேனியரும், பிறைமதி அணிந்த சடைமுடியினரும், இளமையான திருமாலாகிய இடபத்தில் மிகவும் உகந்தேறி வருபவரும், வேதங்களை அருளியவருமாகிய சிவபிரான் எழுந்தருளிய கோயில், விழாக்களின் ஓசையோடு அழகு மிகு நங்கையர் தக்க நடனசாலைகளில் முழவோசையோடு பாடி நடனம் ஆடும் திருமுதுகுன்றம் ஆகும். அதனை நாமும் சென்றடைவோம்.


பாடல் எண் : 8
செதுவாய்மைகள் கருதிவ்வரை எடுத்ததிறல் அரக்கன்
கதுவாய்கள்பத்து அலறீஇடக் கண்டான்உறை கோயில்
மதுவாயசெங் காந்தள்மலர் நிறையக்குறைவு இல்லா
முதுவேய்கள்முத்து உதிரும்பொழில் முதுகுன்றுஅடைவோமே.

         பொழிப்புரை :பொல்லா மொழிகளைக் கருதிக் கயிலை மலையைப் பெயர்த்தெடுத்த வலிய இராவணனின் வடுவுள்ள வாய்கள் பத்தும் அலறும்படி கால்விரலால் ஊன்றி அடர்த்த சிவபிரானது கோயில் விளங்குவதும், தேன் நிறைந்த இடம் உடைய செங்காந்தள் மலர்களாகிய கைகள் நிறையும்படி முதிய மூங்கில்கள் குறைவின்றி முத்துக்களை உதிர்க்கும் பொழில்களால் சூழப்பட்டதுமாகிய திருமுதுகுன்றை நாம் அடைவோம்.


பாடல் எண் : 9
இயல்ஆடிய பிரமன்அரி இருவர்க்குஅறிவு அரிய
செயல்ஆடிய தீஆர்உரு ஆகிஎழு செல்வன்
புயலாடுவண் பொழில்சூழ்புனல் படப்பைத்தடத்து அருகே
முயல்ஓடவெண் கயல்பாய்தரு முதுகுன்றுஅடை வோமே.

         பொழிப்புரை :தற்பெருமை பேசிய பிரமன் திருமால் ஆகிய இருவராலும் அறிதற்கரிய திருவிளையாடல் செய்து எரியுருவில் எழுந்த செல்வனாகிய சிவபிரான் எழுந்தருளியதும், மேகங்கள் தோயும் வளமையான பொழில்கள், நீர்வளம் மிக்க நிலப்பரப்புகள், நீர் நிலைகட்கு அருகில் வரும் முயல்கள் ஓடுமாறு வெள்ளிய கயல்மீன்கள் துள்ளிப்பாயும் குளங்கள் இவற்றின் வளமுடையதும் ஆகிய திருமுதுகுன்றத்தை நாம் அடைவோம்.


பாடல் எண் : 10
அருகரொடு புத்தர்அவர் அறியாஅரன், மலையான்
மருகன்,வரும் இடபக்கொடி உடையான்இடம் மலர்ஆர்
கருகுகுழல் மடவார்கடி குறிஞ்சியது பாடி
முருகன்னது பெருமைபகர் முதுகுன்றுஅடை வோமே.

         பொழிப்புரை :சமணர்களாலும் புத்தர்களாலும் அறியப் பெறாத அரனும், இமவான் மருகனும், தோன்றும் இடபக் கொடி உடையோனும், ஆகிய சிவபிரான் எழுந்தருளிய இடம், மலர் சூடிய கரியகூந்தலை உடைய இளம் பெண்கள் தெய்வத்தன்மை வாய்ந்த குறிஞ்சிப் பண்ணைப்பாடி முருகப் பெருமானின் பெருமைகளைப் பகரும் திருமுதுகுன்றமாகும். அதனை நாம் அடைவோம்.


பாடல் எண் : 11
முகில்சேர்தரு முதுகுன்றுஉடை யானைம்மிகு தொல்சீர்ப்
புகலிந்நகர் மறைஞானசம் பந்தன்உரை செய்த
நிகர்இல்லன தமிழ்மாலைகள் இசையோடுஇவை பத்தும்
பகரும்அடி யவர்கட்குஇடர் பாவம் அடை யாவே.

         பொழிப்புரை :மேகங்கள் வந்து தங்கும் திருமுதுகுன்றத்தில் விளங்கும் பெருமானைப் பழமையான மிக்க புகழையுடைய புகலிநகரில் தோன்றிய மறைவல்ல ஞானசம்பந்தன் உரைத்த ஒப்பற்ற தமிழ்மாலைகளாகிய இப்பதிகப் பாடல்கள் பத்தையும் இசையோடு பகர்ந்து வழிபடும் அடியவர்களைத் துன்பங்களும் அவற்றைத் தரும் பாவங்களும் அடையா.

                                             திருச்சிற்றம்பலம்

----------------------------------------------------------------------------------------------------------

திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 182
வான நாயகர் திருமுது
         குன்றினை வழிபட வலம்கொள்வார்,
தூந றும்தமிழ்ச் சொல்இருக்குக்
         குறள் துணைமலர் மொழிந்துஏத்தி,
ஞான போனகர் நம்பர்தம்
         கோயிலை நண்ணி, அங்கு உள்புக்கு,
தேன் அலம்புதண் கொன்றையார்
         சேவடி திளைத்த அன்பொடு தாழ்ந்தார்.

         பொழிப்புரை : தேவதேவரான சிவபெருமானின் திருமுதுகுன்றத்தை வழிபடும் பொருட்டு, அதை வலமாய் வருகின்றவராய்த் தூய நல்ல தமிழ்ச் சொற்களால் திருவிருக்குக்குறட் பதிகமாகிய துணை மலர்களை மொழிந்து, போற்றிச் சிவபெருமானின் கோயிலை அடைந்து, உட்சென்று, தேன்சிந்தும் குளிர்ந்த கொன்றை மலர்மாலை அணிந்த சிவபெருமானின் அடிகளில், ஞான அமுதத்தை உண்ட பிள்ளையார், மிகுந்த அன்புடனே தாழ்ந்து வணங்கினார்.

         குறிப்புரை : திருக்கோயிலை வலம் வரும் பொழுது அருளிய திருவிருக்குக்குறள் பதிகம், `நின்று மலர்தூவி\' (தி.1 ப.93) எனத் தொடங்கும் குறிஞ்சிப் பண்ணில் அமைந்த திருப்பதிகமாகும்.

திருஞானசம்பந்தர் திருப்பதிகம்

1.093 திருமுதுகுன்றம்                    பண் - குறிஞ்சி
                                             திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
நின்று மலர்தூவி இன்று முதுகுன்றை
நன்றும் ஏத்துவீர்க்கு என்றும் இன்பமே.

         பொழிப்புரை :இன்றே திருமுதுகுன்றம் சென்று, அங்குள்ள இறை வரை மலரால் அருச்சித்து நின்று நல்லமுறையில் துதிப்பீராயின் உமக்கு எக்காலத்தும் இன்பம் உளதாம்.


பாடல் எண் : 2
அத்தன் முதுகுன்றைப் பத்தி ஆகிநீர்
நித்தம் ஏத்துவீர்க்கு உய்த்தல் செல்வமே.

         பொழிப்புரை :நீர் திருமுதுகுன்றத்துத் தலைவனாய் விளங்கும் இறைவன்மீது பக்தி செலுத்தி நாள்தோறும் வழிபட்டு வருவீராயின் உமக்குச் செல்வம் பெருகும்.


பாடல் எண் : 3
ஐயன் முதுகுன்றைப் பொய்கள் கெடநின்று
கைகள் கூப்புவீர் வையம் உமதாமே.

         பொழிப்புரை :திருமுதுகுன்றத்துள் விளங்கும் தலைவனாகிய சிவபிரானை நீர் பலவகையான பொய்கள் இன்றி மெய்மையோடு நின்று கைகளைக் கூப்பி வழிபடுவீர்களாயின் உலகம் உம்முடையதாகும்.


பாடல் எண் : 4
ஈசன் முதுகுன்றை நேசம் ஆகிநீர்
வாச மலர்தூவப் பாச வினைபோமே.

         பொழிப்புரை :திருமுதுகுன்றத்து ஈசனை நீர் அன்போடு மணம் பொருந்திய மலர்களால் அருச்சித்துவரின் உம் பாசங்களும் அவற்றால் விளைந்த வினைகளும் நீங்கும்.


பாடல் எண் : 5
மணிஆர் முதுகுன்றைப் பணிவார் அவர்கண்டீர்
பிணியா யினகெட்டுத் தணிவார் உலகிலே.

         பொழிப்புரை :அழகிய திருமுதுகுன்றத்து இறைவரைப் பணிபவர் கள், பிணிகளிலிருந்து விடுபட்டு உலகில் அமைதியோடு வாழ்வார்கள்.


பாடல் எண் : 6
மொய்ஆர் முதுகுன்றில் ஐயா எனவல்லார்
பொய்யார் இரவோர்க்குச் செய்யாள் அணியாளே.

         பொழிப்புரை :அன்பர்கள் நெருங்கித் திரண்டுள்ள திருமுதுகுன்றத்து இறைவனை, நீர், ஐயா என அன்போடு அழைத்துத் துதிக்க வல்லீர்களாயின் இரப்பவர்க்கு இல்லை என்னாத நிலையில் திருமகள் நிறை செல்வத்தோடு உமக்கு அணியள் ஆவாள்.


பாடல் எண் : 7
விடையான் முதுகுன்றை இடையாது ஏத்துவார்
படையா யினசூழ உடையார் உலகமே.

         பொழிப்புரை :திருமுதுகுன்றத்து விடை ஊர்தியை உடைய சிவ பிரானை இடையீடுபடாது ஏத்துகின்றவர், படைகள் பல சூழ உலகத்தை ஆட்சிசெய்யும் உயர்வை உடையவராவர்.


பாடல் எண் : 8
பத்துத் தலையோனைக் கத்த விரல்ஊன்றும்
அத்தன் முதுகுன்றை மொய்த்துப் பணிமினே.

         பொழிப்புரை :பத்துத் தலைகளை உடைய இராவணனை அவன் கதறி அழுமாறு கால்விரலை ஊன்றி அடர்த்த திருமுதுகுன்றத்துத் தலைவனாகிய சிவபிரானை நெருங்கிச் சென்று பணிவீராக.


பாடல் எண் : 9
இருவர் அறியாத ஒருவன் முதுகுன்றை
உருகி நினைவார்கள் பெருகி நிகழ்வோரே.

         பொழிப்புரை :திருமால் பிரமர்களாகிய இருவரும் அறியவொண் ணாத திருமுதுகுன்றத்தில் விளங்கும் பெருமானை மனம் உருகி நினைப்பவர் பெருக்கத்தோடு வாழ்வர்.


பாடல் எண் : 10
தேரர் அமணரும் சேரும் வகையில்லான்
நேர்இல் முதுகுன்றை நீர்நின்று உள்குமே.

         பொழிப்புரை :புத்தர் சமணர் ஆகியோர்க்குத் தன்னை வந்தடையும் புண்ணியத்தை அளிக்காத சிவபெருமான் எழுந்தருளியுள்ள ஒப்பற்ற திருமுதுகுன்றத்தை அங்‌கு நின்று நீவீர் நினைந்து தியானிப்பீராக.


பாடல் எண் : 11
நின்று முதுகுன்றை நன்று சம்பந்தன்
ஒன்றும் உரைவல்லார் என்றும் உயர்வோரே.

         பொழிப்புரை :திருமுதுகுன்றம் சென்று நின்று பெருமை உடை யவனாகிய ஞானசம்பந்தன் ஒன்றி உரைத்த இப்பதிகப் பாடல்களை ஓத வல்லவர் எக்காலத்தும் உயர்வு பெறுவர்.

                                             திருச்சிற்றம்பலம்

---------------------------------------------------------------------------------------------------------

                                         திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு


பெரிய புராணப் பாடல் எண் : 183
தாழ்ந்து எழுந்துமுன், "முரசுஅதிர்ந்து
         எழும்" எனும் தண்தமிழ்த் தொடைசாத்தி,
வாழ்ந்து போந்து, அங்கண் வளம்பதி
         அதன்இடை வைகுவார், மணிவெற்புச்
சூழ்ந்த தண்புனல் சுலவுமுத்
         தாற்றொடு தொடுத்தசொல் தொடைமாலை
வீழ்ந்த காதலால் பலமுறை
         விளம்பியே மேவினார் சிலநாள்கள்.

         பொழிப்புரை : வணங்கி எழுந்து, இறைவன் திருமுன்பு நின்று, `முரசதிர்ந்தெழுதரு\' என்ற தண்ணார் தமிழ் மாலையைப் பாடி, இன்புற்று வெளிப்போந்து, வளம் மிக்க அத்திருப்பதியில் தங்கியிருந்தார். அவர் மணிகளையுடைய அந்தத் திருமுதுகுன்றத்தைச் சூழ்ந்த நீருடைய `முத்தாற்றினுடனே\' சேர்த்து இயற்றிய திருப்பதிக மாலையை விரும்பிய அன்புடனே பலமுறையும் கூறி, அங்குச் சில நாள்கள் தங்கியிருந்தார்.

         குறிப்புரை : இறைவன் திருமுன்பு அருளியது `முரசதிர்ந்தெழுதரு' (தி.3 ப.99) எனத் தொடங்கும் சாதாரிப் பண்ணிலமைந்த பதிகமாகும். இப்பதியில் வாழ்ந்தருளிய பொழுது, மணிமுத்தாறு நதியுடன் இணைந்த பல பதிகங்களை அருளிச் செய்தார் என ஆசிரியர் அருளுகின்றார். இப் பதிக்கென இவ்வமையத்து அருளியனவாகக் காணக் கிடைக்கும் பிற பதிகங்கள் நான்காம். அவை:

1.    `தேவராயும்' (தி.1 ப.53) – பழந்தக்கராகம்

2.    `மெய்த்தாறு' (தி.1 ப.131) - மேகராகக் குறிஞ்சி

3.    `தேவாசிறியோம்' (தி.2 ப.64) – காந்தாரம்

4.    `வண்ண மாமலர்' (தி.3 ப.34) - கொல்லி.

         2ஆவது பதிகத்தில் 1, 11 ஆகிய இருபாடல்களிலும், 4ஆவது பதிகத்தில் 4ஆவது பாடலிலும் மணிமுத்தாறு பேசப்படுகின்றது. சேக்கிழார் திருவாக்கை நோக்கின், மணிமுத்தாற்றினை இணைத்துப் பாடிய மேலும் சில பதிகங்கள் இருக்கலாம் எனக் கருத இடமுண்டு.
திருஞானசம்பந்தர் திருப்பதிகங்கள்

3. 099   திருமுதுகுன்றம்                      பண் - சாதாரி
                                             திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
முரசுஅதிர்ந்து எழுதரு முதுகுன்றம் மேவிய
பரசுஅமர் படைஉடை யீரே,
பரசுஅமர் படைஉடை யீர், உமைப் பரவுவார்
அரசர்கள் உலகில் ஆவாரே.

         பொழிப்புரை : பூசை, திருவிழா முதலிய காலங்களில் முரசு அதிர்ந்து பேரோசை எழுப்புகின்ற திருமுதுகுன்றம் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற மழுப்படையை உடைய சிவபெருமானே! மழுப்படையையுடைய உம்மைப் போற்றி வணங்குபவர்கள் உலகினில் அரசர்கள் ஆவர்.


பாடல் எண் : 2
மொய்குழ லாளொடு முதுகுன்றம் மேவிய
பைஅர வம்அசைத் தீரே,
பைஅர வம்அசைத் தீர், உமைப் பாடுவார்
நைவுஇலர் நாள்தொறும் நலமே.

         பொழிப்புரை : அடர்ந்த கூந்தலையுடைய உமாதேவியோடு திருமுதுகுன்றம் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற, பாம்பைக் கச்சாக அரையில் கட்டியுள்ள சிவபெருமானே! பாம்பைக் கச்சாகக் கட்டியுள்ள உம்மைப் பாடுவார் எவ்விதக் குறையும் இல்லாதவர். நாள்தோறும் நன்மைகளையே மிகப்பெறுவர்.


பாடல் எண் : 3
முழவுஅமர், பொழில்அணி முதுகுன்றம் மேவிய
மழவிடை அதுஉடை யீரே,
மழவிடை அதுஉடை யீர்,உமை வாழ்த்துவார்
பழியொடு பகைஇலர் தாமே.

         பொழிப்புரை : முழவுகள் ஒலிக்கின்றதும், சோலைகளால் அழகு பெற்றதுமான திருமுதுகுன்றம் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற, இளமைவாய்ந்த இடபத்தை, வாகனமாகவும் கொடியாகவும் உடைய சிவபெருமானே! இளமைவாய்ந்த இடபத்தை வாகனமாகவும், கொடியாகவும் கொண்ட உம்மை வாழ்த்துபவர்கள் பழியும், பாவமும் இல்லாதவர்கள் ஆவர்.


பாடல் எண் : 4
முருகுஅமர் பொழில்அணி முதுகுன்றம் மேவிய
உருவுஅமர் சடைமுடி யீரே,
உருவுஅமர் சடைமுடி யீர்,உமை ஓதுவார்
திருவொடு தேசினர் தாமே.

         பொழிப்புரை : வாசனை பொருந்திய சோலைகள் அழகு செய்கின்ற திருமுதுகுன்றம் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற, அழகு பொருந்திய சடைமுடியினை யுடையவரே! அழகு பொருந்திய சடைமுடியினை உடையவராகிய உம்மைப் போற்றி வணங்குபவர்கள் செல்வமும், புகழும் உடையவர்.

பாடல் எண் : 5, 6, 7,
* * * * * * * * * *

பாடல் எண் : 8
முத்தி தரும்உயர் முதுகுன்றம் மேவிய
பத்து முடிஅடர்த் தீரே,
பத்து முடிஅடர்த் தீர்,உமைப் பாடுவார்
சித்தநல் லவ்வடி யாரே.

         பொழிப்புரை : முத்தியைத் தருகின்ற உயர்ந்த திருமுதுகுன்றம் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்றவரும், இராவணனின் பத்துத் தலைகளையும் அடர்த்தவருமான சிவபெருமானே! இராவணனின் பத்துத் தலைகளையும் அடர்த்த உம்மைப் பாடுவார் அழகிய சித்தமுள்ள அடியவர்களாவார்கள்.


பாடல் எண் : 9
முயன்றவர் அருள்பெறு முதுகுன்றம் மேவி,அன்று
இயன்றவர் அறிவுஅரி யீரே,
இயன்றவர் அறிவுஅரி யீர்,உமை ஏத்துவார்
பயன்தலை நிற்பவர் தாமே.

         பொழிப்புரை : தவநெறியில் முயல்பவர்கள் அருள்பெறுகின்ற திருமுதுகுன்றம் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற, அன்று தம் செருக்கால் காணத் தொடங்கிய பிரமன், திருமால் இவர்களால் காண்பதற்கு அரியவராக விளங்கிய சிவபெருமானே! பிரமனும், திருமாலும் அறியவொண்ணாதவராகிய உம்மைப் போற்றி வழிபடுவர்கள் சிறந்த பயனாகிய முத்தியைத் தலைக்கூடுவர்.


பாடல் எண் : 10
மொட்டுஅலர் பொழில்அணி முதுகுன்றம் மேவிய
கட்டுஅமண் தேரைக்காய்ந் தீரே,
கட்டுஅமண் தேரைக்காய்ந் தீர்,உமைக் கருதுவார்
சிட்டர்கள், சீர்பெறு வாரே.

         பொழிப்புரை : மொட்டுக்கள் மலர்கின்ற சோலைகளையுடைய அழகிய திருமுதுகுன்றத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற, கட்டுப் பாட்டினையுடைய சமணர்களையும், புத்தர்களையும் கோபித்தவரான சிவபெருமானே! சமணர்களையும், புத்தர்களையும் கோபித்த உம்மைத் தியானிப்பவர்கள் சிறந்த அடியார்கள் பெறுதற்குரிய முத்திப் பேற்றினைப் பெறுவர்.


பாடல் எண் : 11
மூடிய சோலைசூழ் முதுகுன்றத்து ஊசனை
நாடிய ஞானசம் பந்தன்
நாடிய ஞானசம் பந்தன செந்தமிழ்
பாடிய அவர்பழி இலரே.

         பொழிப்புரை : அடர்ந்த சோலைகள் சூழ்ந்த திருமுதுகுன்றம் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளும் சிவபெருமானைத் திருஞானசம்பந்தர் போற்றி அருளினார். அவ்வாறு திருஞானசம்பந்தர் போற்றியருளிய இச்செந்தமிழ்ப் பதிகத்தைப் பாடுபவர்கள் பழியிலர் ஆவர்.

                                             திருச்சிற்றம்பலம்
    

1.053  திருமுதுகுன்றம்                   பண் - பழந்தக்கராகம்
                                    திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
தேவராயும், அசுரராயும், சித்தர்,செழு மறைசேர்
நாவராயும், நண்ணுபாரும், விண்,எரி,கால், நீரும்
மேவராய விரைமலரோன் செங்கண்மால் ஈசன்என்னும்
மூவர்ஆய முதல்ஒருவன் மேயதுமு துகுன்றே.

         பொழிப்புரை :தேவர், அசுரர், சித்தர், செழுமையான வேதங்களை ஓதும் நாவினராகிய அந்தணர், நாம் வாழும் மண், விண், எரி, காற்று, நீர் ஆகிய ஐம்பூதங்கள், மணம் மிக்க தாமரை மலர் மேல் உறையும் நான்முகன், சிவந்த கண்களை உடைய திருமால், உருத்திரன் ஆகிய மும்மூர்த்திகள் ஆகிய எல்லாமாகவும் அவர்களின் தலைவராகவும் இருக்கின்ற சிவபிரான் எழுந்தருளியிருப்பது திருமுதுகுன்றத் தலமாகும்.


பாடல் எண் : 2
பற்றும்ஆகி வான்உளோர்க்குப் பல்கதிரோன் மதிபார்
எற்றுநீர்தீக் காலும்மேலை விண்இயமா னனோடு
மற்றுமாதுஓர் பல்உயிராய் மால்அயனும் மறைகள்
முற்றும்ஆகி வேறும்ஆனான் மேயதுமு துகுன்றே.

         பொழிப்புரை :தேவர்கட்குப் பற்றுக் கோடாகியும், பல வண்ணக் கதிர்களை உடைய ஞாயிறு, திங்கள் மண், கரையை மோதும் நீர், தீ, காற்று, மேலே உள்ள ஆகாயம், உயிர் ஆகிய அட்ட மூர்த்தங்களாகியும் எல்லா உயிர்களாகியும் திருமால், பிரமன் வேதங்கள் முதலான அனைத்துமாகியும் இவற்றின் வேறானவனும் ஆகிய சிவபிரான் எழுந்தருளியிருக்கும் தலம் திருமுதுகுன்றம் ஆகும்.


பாடல் எண் : 3
வாரிமாகம் வைகுதிங்கள் வாள்அரவஞ் சூடி
நாரிபாகம் நயந்துபூமேல் நான்முகன்தன் தலையில்
சீரிதாகப் பலிகொள்செல்வன் செற்றலும்தோன் றியதுஓர்
மூரிநாகத்து உரிவைபோர்த்தான் மேயதுமு துகுன்றே.

         பொழிப்புரை :கங்கை, வானகத்தே வைகும் திங்கள், ஒளி பொருந் திய பாம்பு ஆகியவற்றை முடிமிசைச் சூடி உமையம்மையை ஒரு பாகமாக விரும்பி ஏற்று, தாமரை மலரில் உறையும் பிரமனது தலைகளில் ஒன்றைக் கொய்து அத்தலையோட்டில் பலி ஏற்கச் செல்பவனும், தன்னைச் சினந்து வந்த வலிய யானையைக் கொன்று அதன் தோலைப் போர்த்தியவனும் ஆகிய சிவபிரான் எழுந்தருளிய தலம் திருமுது குன்றம்.


பாடல் எண் : 4
பாடுவாருக்கு அருளும்எந்தை, பனிமுதுபௌ வமுந்நீர்
நீடுபாரும் முழுதும்ஓடி அண்டர்நிலை கெடலும்
நாடுதானும் மூடும்ஓடி ஞாலமும்நான் முகனும்
ஊடுகாண மூடும்வெள்ளத்து உயர்ந்ததுமு துகுன்றே.

         பொழிப்புரை :தன்னைப் பாடிப் பரவுவார்க்கு அருள் செய்யும் எந்தையாகிய சிவபிரான் எழுந்தருளிய தலம், குளிர்ந்த பழமையான கடல் நீண்ட மண் உலகிலும் தேவர் உலகிலும் பரவி, அவர்தம் இருப்பிடங்களை அழித்ததோடு நாடுகளிலும் அவற்றின் இடையிலும் ஓடி, ஞாலத்துள்ளாரும் நான்முகன் முதலிய தேவரும் உயிர் பிழைக்க வழி தேடும்படி, ஊழி வெள்ளமாய்ப் பெருகிய காலத்திலும் அழியாது உயர்ந்து நிற்பதாகிய, திருமுதுகுன்றமாகும்.


பாடல் எண் : 5
வழங்குதிங்கள், வன்னிமத்தம், மாசுணம் மீசுஅணவிச்
செழுங்கல்வேந்தன் செல்விகாண, தேவர்திசை வணங்க,
தழங்குமொந்தை தக்கைமிக்க பேய்க்கணம்பூ தஞ்சூழ
முழங்குசெந்தீ ஏந்திஆடி மேயதுமு துகுன்றே.

         பொழிப்புரை :வானத்தில் சஞ்சரிக்கும் திங்கள், வன்னியிலை ஊமத்தம் மலர், பாம்பு, ஆகியவற்றைத் திருமுடிமீது நெருக்கமாகச் சூடி, இமவான் மகளாகிய உமையவள் காணத் தேவர்கள் எல்லாத் திசைகளிலும் நின்று வணங்க, மொந்தை, தக்கை, ஆகியன அருகில் ஒலிக்க, பேய்க்கணங்கள் பூதங்கள் சூழ்ந்து விளங்க, முழங்கும் செந்தீயைக் கையில் ஏந்தி ஆடும் சிவபெருமான் மேவிய தலம் திரு முதுகுன்றமாகும்.


பாடல் எண் : 6
சுழிந்தகங்கை தோய்ந்ததிங்கள் தொல்அராநல் இதழி
சழிந்தசென்னிச் சைவவேடம் தான்நினைந்து ஐம்புலனும்
அழிந்தசிந்தை அந்தணாளர்க்கு அறம்பொருள்இன் பம்வீடு
மொழிந்தவாயான் முக்கண்ஆதி மேயதுமு துகுன்றே.

         பொழிப்புரை :சுழிகளோடு கூடிய கங்கை, அதன்கண் தோய்ந்த திங்கள், பழமையான பாம்பு, நல்ல கொன்றை மலர் ஆகியன நெருங்கிய சென்னியை உடைய முக்கண் ஆதியாகிய சிவபிரானுடைய சைவ வேடத்தை விருப்புற்று நினைத்து, ஐம்புலன்களும் மனமும் அழிந்த சிந்தையினராகிய சனகர் முதலிய அந்தணாளர்கட்கு அறம் பொருள் இன்பம் வீடு ஆகியவற்றை உபதேசித்த திருவாயினனாய் எழுந்தருளியிருப்பது திருமுதுகுன்றம் ஆகும். தாள் நினைத்து, தாள் இணைத்து என்பவும் பாடம்.


பாடல் எண் : 7
* * * * * * *
பாடல் எண் : 8
மயங்குமாயம் வல்லர்ஆகி வானினொடு நீரும்
இயங்குவோருக்கு இறைவன்ஆய இராவணன்தோள் நெரித்த
புயங்கராக மாநடத்தன் புணர்முலைமாது உமையாள்
முயங்குமார்பன் முனிவர்ஏத்த மேயதுமு துகுன்றே.

         பொழிப்புரை :அறிவை மயங்கச் செய்யும் மாயத்தில் வல்லவராய் வான், நீர் ஆகியவற்றிலும் சஞ்சரிக்கும் இயல்பினராய அரக்கர்களுக்குத் தலைவனாகிய இராவணனின் தோளை நெரித்த வலிமையோடு பாம்பு நடனத்தில் விருப்புடையவனும், செறிந்த தனபாரங்களை உடைய உமையம்மையைத் தழுவிய மார்பினனும் ஆகிய சிவபிரான் முனிவர்கள் ஏத்த எழுந்தருளி விளங்கும் தலம் திருமுதுகுன்றமாகும்.


பாடல் எண் : 9
ஞாலம்உண்ட மாலுமற்றை நான்முகனும் அறியாக்
கோலம்அண்டர் சிந்தைகொள்ளார், ஆயினும் கொய் மலரால்
ஏலஇண்டை கட்டிநாமம் இசைய எப்போதும் ஏத்தும்
மூலம்உண்ட நீற்றர்வாயான் மேயதுமு துகுன்றே.

         பொழிப்புரை :உலகங்களை உண்ட திருமாலும், நான்முகனும் அறிய முடியாத இறைவனது திருக்கோலத்தைத் தேவர்களும் அறியாதவர் ஆயினர். நாள்தோறும் கொய்த மலர்களைக் கொண்டு இண்டை முதலிய மாலைகள் தொடுத்துத் தன் திருப்பெயரையே எப்போதும் மனம் பொருந்தச் சொல்பவரும், மூலமலத்தை அழிக்கும் திருநீற்றை மெய்யிற் பூசுபவருமாகிய அடியவர்களின் வாயில், நாமமந்திரமாக உறைந்தருளுகின்ற அப்பெருமான் மேவிய தலம் திருமுதுகுன்றமாகும்.


பாடல் எண் : 10
உறிகொள்கையர் சீவரத்தர் உண்டுஉழல்மிண் டர்சொல்லை
நெறிகள்என்ன நினைவுறாதே நித்தலும் கை தொழுமின்
மறிகொள்கையன் வங்கமுந்நீர்ப் பொங்குவிடத் தைஉண்ட
முறிகொள்மேனி மங்கைபங்கன் மேயதுமு துகுன்றே.

         பொழிப்புரை :குண்டிகையை உறியில் கட்டித் தூக்கிய கையினரும், காவியாடையைத் தரித்தவரும், உண்டு உழல்பவரும் ஆகிய சமண புத்தர்கள் கூறுவனவற்றை நெறிகள் எனக் கருதாது, நாள் தோறும், சென்று வணங்குவீராக. மானை ஏந்திய கையினனும், கப்பல்கள் ஓடும் கடலிடைப் பொங்கி எழுந்த விடத்தை உண்டவனும், தளிர் போலும் மேனியளாகிய உமையம்மையை ஒருகூறாக உடையவனுமாகிய சிவபிரான் மேவியுள்ளது திருமுதுகுன்றமாகும். அத்திருத்தலத்தை வணங்குவீராக.


பாடல் எண் : 11
மொய்த்துவானோர் பல்கணங்கள் வணங்குமு துகுன்றைப்
பித்தர்வேடம் பெருமைஎன்னும் பிரமபுரத் தலைவன்
* * * * * * *

         பொழிப்புரை :தேவர் கணங்கள் பலவும் நிறைந்து செறிந்து வணங்கும் திருமுதுகுன்றத்திறைவனை, பித்தர் போலத் தன் வயம் இழந்து திரிவாரின் தவவேடம் பெருமை தருவதாகும் எனக் கருதும் பிரமபுரத்தலைவனான ஞானசம்பந்தன்... ...

                                             திருச்சிற்றம்பலம்



1.131 திருமுதுகுன்றம்                பண் - மேகராகக்குறிஞ்சி
                                    திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
மெய்த்துஆறு சுவையும், ஏழ்இசையும்,எண்
         குணங்களும், விரும்புநால்வே
தத்தாலும் அறிவொண்ணா நடைதெளியப்
         பளிங்கேபோல் அரிவைபாகம்
ஒத்து, ஆறு சமயங்கட்கு ஒருதலைவன்
         கருதும் ஊர்உலவுதெண்ணீர்
முத்தாறு வெதிர்உதிர நித்திலம்வா
         ரிக்கொழிக்கு முதுகுன்றமே.

         பொழிப்புரை :மெய்யினால் அறியத்தக்கதாகிய ஆறு சுவைகள் ஏழிசைகள், எண் குணங்கள், எல்லோராலும் விரும்பப்பெறும் நான்கு வேதங்கள் ஆகியவற்றால் அறிய ஒண்ணாதவனும், அன்போடு நடத்தலால் தெளியப் பெறுபவனும், பளிங்கு போன்றவனும், உமையம்மையை ஒரு பாகமாக உடையவனும், ஆறு சமயங்களாலும் மாறுபாடின்றி ஏற்றுக் கொள்ளப் பெறும் ஒரே தலைவனும் ஆகிய சிவபிரான் விரும்பும் ஊர், தெளிந்த நீர் நிறைந்த மணிமுத்தாறு மலையின்கண் உள்ள மூங்கில்கள் உதிர்க்கும் முத்துக்களை வாரிக்கொணர்ந்து கரையிற் கொழிக்கும் திருமுதுகுன்றமாகும்.


பாடல் எண் : 2
வேரிமிகு குழலியொடு வேடுவனாய்
         வெங்கானில் விசயன்மேவு
போரின்மிகு பொறைஅளந்து பாசுபதம்
         புரிந்துஅளித்த புராணர்கோயில்,
காரின்மலி கடிபொழில்கள் கனிகள்பல
         மலர்உதிர்த்துக் கயமுயங்கி
மூரிவளங் கிளர்தென்றல் திருமுன்றில்
         புகுந்துஉலவு முதுகுன்றமே.

         பொழிப்புரை :தேன் மணம் மிகும் கூந்தலையுடைய உமையம்மை யோடு வேட்டுவ உருவந்தாங்கி அருச்சுனன் தவம் புரியும் கொடிய கானகத்திற்குச் சென்று அவனோடு போர் உடற்றி அவன் பொறுமையை அளந்து அவனுக்குப் பாசுபதக் கணையை விரும்பி அளித்த பழையோனாகிய சிவபிரான் உறையும் கோயில், மழையால் செழித்த மணமுடைய சோலைகளில் கனிகளையும் பல மலர்களையும் உதிர்த்து, நீர் நிலைகளைப் பொருந்தி வலிய வளமுடைய தென்றல் காற்று அழகிய வீடுகள் தோறும் புகுந்து உலவும் திருமுதுகுன்றமாகும்.


பாடல் எண் : 3
தக்கனது பெருவேள்விச் சந்திரன்,இந்
         திரன்,எச்சன், அருக்கன், அங்கி
மிக்கவிதா தாவினொடும் விதிவழியே
         தண்டித்த விமலர்கோயில்,
கொக்குஇனிய கொழும்வருக்கை கதலிகமுகு
         உயர்தெங்கின் குலைகொள்சோலை
முக்கனியின் சாறுஒழுகிச் சேறுஉலரா
         நீள்வயல்சூழ் முதுகுன்றமே.

         பொழிப்புரை :தக்கன் செய்த பெருவேள்வியில் சந்திரன், இந்திரன், எச்சன், சூரியன், அனலோன், பிரமன், முதலியவர்களை வீரபத்திரனைக் கொண்டு தண்டித்த விமலனாகிய சிவபெருமான் உறையும் கோயில், இனிய மாங்கனிகள், வளமான பலாக்கனிகள், வாழைக் கனிகள் ஆகிய முக்கனிகளின் சாறு ஒழுகிச் சேறு உலராத நீண்ட வயல்களும் குலைகளையுடைய கமுகு, தென்னை ஆகிய மரங்கள் நிறைந்த சோலைகளும் சூழ்ந்த திருமுதுகுன்றமாகும்.


பாடல் எண் : 4
வெம்மைமிகு புரவாணர் மிகைசெய்ய
         விறல்அழிந்து, விண்உளோர்கள்
செம்மலரோன் இந்திரன்மால் சென்றுஇரப்ப,
         தேவர்களே தேர்அதாக,
மைம்மருவு மேருவிலு, மாசுண நாண்,
         அரிஎரிகால் வாளியாக,
மும்மதிலும் நொடிஅளவில் பொடிசெய்த
         முதல்வன்இடம் முதுகுன்றமே.

         பொழிப்புரை :கொடுமை மிகுந்து முப்புரங்களில் வாழும் அவுணர்கள் தீங்கு செய்ய அதனால் தங்கள் வலிமை அழிந்து தேவர்களும், பிரமனும், இந்திரனும், திருமாலும் சென்று தங்களைக் காத்தருளுமாறு வேண்ட, தேவர்களைத் தேராகவும், மேகங்கள் தவழும் உயர்ச்சியையுடைய மேருமலையை வில்லாகவும், வாசுகி என்னும் பாம்பை நாணாகவும், திருமால், அனலோன், வாயுவாகிய முத்தேவர்களையும் அம்பாகவும் கொண்டு அவுணர்களின் மும்மதில்களையும் ஒரு நொடிப் பொழுதில் பொடி செய்த தலைவனாகிய சிவபிரானது இடம், திருமுதுகுன்றமாகும்.


பாடல் எண் : 5
இழைமேவு கலைஅல்குல், ஏந்திழையாள்
         ஒருபாலாய், ஒருபால்எள்காது
உழைமேவும் உரிஉடுத்த ஒருவன்இருப்
         பிடம்என்பர், உம்பர்ஓங்கு
கழைமேவு மடமந்தி மழைகண்டு
         மகவினொடும் புகஒண்கல்லின்
முழைமேவு மால்யானை உரைதேரும்
         வளர்சாரல் முதுகுன்றமே.

         பொழிப்புரை :மேகலை என்னும் அணிகலன் பொருந்திய அல்குலையும், அழகிய முத்துவடம் முதலியன அணிந்த மேனியையும் உடையவளாகிய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு தனக்குரியதான ஒருபாகத்தே மான்தோலை இகழாது உடுத்த ஒப்பற்றவனாகிய சிவபிரானது இருப்பிடம், ஊரின் நடுவே உயர்ந்த மூங்கில்மேல் ஏறி அமர்ந்த மடமந்தி, மழை வருதலைக் கண்டு அஞ்சித்தன் குட்டியோடும் ஒலி சிறந்த மலைக்குகைகளில் ஒடுங்குவதும், பெரியயானைகள் இரை தேர்ந்து திரிவதும் நிகழும் நீண்ட சாரலையுடைய திருமுதுகுன்றமாகும்.


பாடல் எண் : 6
நகைஆர்வெண் தலைமாலை முடிக்குஅணிந்த
         நாதன்இடம், நன்முத்தாறு
வகைஆரும் வரைப்பண்டம் கொண்டு, இரண்டு
         கரைஅருகும் மறியமோதித்
தகையாரும் வரம்புஇடறிச் சாலிகழு
         நீர்குவளை சாயப்பாய்ந்து
முகைஆர்செந் தாமரைகள் முகமலர
         வயல்தழுவு முதுகுன்றமே.

         பொழிப்புரை :சிரித்தலைப் பொருந்திய வெண்மையான தலை மாலையை முடியில் அணிந்துள்ள நாதனாகிய சிவபிரானது இடம், நல்ல மணிமுத்தாறு வகை வகையான மலைபடு பொருள்களைக் கொண்டு நெல், கழுநீர், குவளை ஆகியன சாயுமாறு பாய்ந்து வந்து, தாமரை மொட்டுக்கள் முகம் மலரும்படி வயலைச் சென்றடையும் திருமுதுகுன்றமாகும்.


பாடல் எண் : 7
அறங்கிளரும் நால்வேதம் ஆலின்கீழ்
         இருந்துஅருளி அமரர்வேண்ட
நிறங்கிளர்செந் தாமரையோன் சிரம்ஐந்தின்
         ஒன்றுஅறுத்த நிமலர்கோயில்,
திறங்கொண்மணித் தரளங்கள் வரத்திரண்டுஅங்கு
         எழில்குறவர் சிறுமிமார்கள்
முறங்களினால் கொழித்து,மணி செலவிலக்கி    
        முத்துஉலைப்பெய் முதுகுன்றமே.

         பொழிப்புரை :அறநெறி விளங்கித் தோன்றும் நான்கு வேதங்களை ஆலின்கீழ் இருந்து சனகாதியர்க்கு அருளி, தேவர்கள் வேண்டுகோளுக்கு இணங்கி, செந்நிறம் விளங்கும் தாமரையில் எழுந்தருளிய பிரமனின் ஐந்து தலைகளில் ஒன்றைக் கொய்த நிமலனாகிய சிவ பிரானது கோயில், முற்றிய மாணிக்கங்கள். முத்துக்கள் ஆகியன ஆற்றில் வருதலைக் கண்டு அழகிய குறவர் குடிப்பெண்கள் திரண்டு சென்று அவற்றை முறங்களால் வாரிமணிகளை விலக்கிப் புடைத்து முத்துக்களை அரிசியாக உலையில் பெய்து சிற்றில் இழைத்து விளையாடி மகிழும் திருமுதுகுன்றமாகும்.


பாடல் எண் : 8
கதிர்ஒளிய நெடுமுடிபத்து உடையகடல்
         இலங்கையர்கோன் கண்ணும்வாயும்
பிதிர்ஒளிய கனல்பிறங்கப் பெருங்கயிலை
         மலையைநிலை பெயர்த்தஞான்று,
மதில்அளகைக்கு இறைமுரல மலர்அடிஒன்று
         ஊன்றி, மறை பாட ஆங்கே
முதிர்ஒளிய சுடர்நெடுவாள் முன்ஈந்தான்
         வாய்ந்தபதி முதுகுன்றமே.

         பொழிப்புரை :கதிரவன் போன்ற ஒளியுடைய நீண்ட மகுடங்களைச் சூடிய பத்துத் தலைகளையுடைய இராவணன் கண்களும், வாயும், ஒளிபரவும் தீ வெளிப்படச் சினங்கொண்டு பெரிய கயிலாயமலையை நிலைபெயர்த்த காலத்து, மதில்கள் சூழ்ந்த அளகாபுரிக்கு இறைவனாகிய குபேரன் மகிழுமாறு, மலர்போன்ற தன் திருவடி ஒன்றை ஊன்றி அவ் இராவணனைத் தண்டித்துப் பின் அவன் மறைபாடித் துதித்த அளவில் அவனுக்கு மிக்க ஒளியுள்ள நீண்ட வாளை முற்படத்தந்த சிவபிரான் எழுந்தருளிய பதி திருமுதுகுன்றமாகும்.

  
பாடல் எண் : 9
பூஆர்பொன் தவிசின்மிசை இருந்தவனும்
         பூந்துழாய் புனைந்தமாலும்
ஓவாது கழுகுஏனமாய் உயர்ந்துஆழ்ந்து,
         உறநாடி, ஊண்மைகாணாத்
தேஆரும் திருவுருவன் சேரும்மலை,
         செழுநிலத்தை மூடவந்த
மூவாத முழங்குஒலிநீர் கீழ்தாழ
         மேல்உயர்ந்த முதுகுன்றமே.

         பொழிப்புரை :தாமரை மலராகிய அழகிய தவிசின்மிசை விளங்கும் பிரமனும், அழகிய துளசிமாலை அணிந்த திருமாலும், அன்னமாகவும், பன்றியாகவும் உருமாறி வானில் பறந்தும், நிலத்தை அகழ்ந்தும் இடைவிடாது தேடியும் உண்மை காண இயலாத தெய்வஒளி பொருந்திய திருவுருவை உடையவனாகிய சிவபிரான் எழுந்தருளிய மலை, ஊழிக் காலத்து உலகத்தை மூடுமாறு முழங்கி வந்த கடல்நீர் கீழ்ப்படத் தான் மேல் உயர்ந்து தோன்றும் திருமுதுகுன்றமாகும்.


பாடல் எண் : 10
மேனியில் சீவரத்தாரும், விரிதருதட்டு
         உடையாரும் விரவலாகா
ஊனிகளாய் உள்ளார்சொல் கொள்ளாது,உம்
         உள்ளுணர்ந்துஅங்கு உய்மின்தொண்டீர்,
ஞானிகளாய் உள்ளார்கள் நான்மறையை
         முழுதுஉணர்ந்து, ஐம் புலன்கள்செற்று,
மோனிகளாய், முனிச்செல்வர் தனித்துஇருந்து
         தவம்புரியும் முதுகுன்றமே.

         பொழிப்புரை :உடம்பில் துவராடை புனைந்த புத்த மதத்தினரும், விரிந்த ஓலைத் தடுக்கை உடையாகப் பூண்ட சமணர்களும், நட்புச் செய்து கோடற்கு ஏலாதவராய்த் தங்கள் உடலை வளர்த்தலையே குறிக்கோளாக உடைய ஊனிகளாவர். அவர்கள் சொற்களைக் கேளாது ஞானிகளாக உள்ளவர்களும், நான்மறைகளை உணர்ந்தவர்களும், ஐம்புலன்களை வென்ற மௌனிகளும், முனிவர்களாகிய செல்வர்களும், தனித்திருந்து தவம் புரியும் திருமுதுகுன்றை உள்ளத்தால் உணர்ந்து, தொண்டர்களே! உய்வீர்களாக.


பாடல் எண் : 11
முழங்குஒலிநீர் முத்தாறு வலம்செய்யும்
         முதுகுன்றத்து இறையை, மூவாப்
பழங்கிழமைப் பன்னிருபேர் படைத்துஉடைய
         கழுமலமே பதியாக்கொண்டு,
தழங்குஎரிமூன்று ஓம்புதொழில் தமிழ்ஞான
         சம்பந்தன் சமைத்தபாடல்
வழங்கும்இசை கூடும்வகை பாடும்அவர்
         நீடுஉலகம் ஆள்வர்தாமே.

         பொழிப்புரை :ஆரவாரத்தோடு நிறைந்துவரும் மணிமுத்தாறு வலஞ்செய்து இறைஞ்சும் திருமுதுகுன்றத்து இறைவனை, முதுமையுறாததாய்ப் பழமையாகவே பன்னிரு பெயர்களைக் கொண்டுள்ள கழுமலப்பதியில் முத்தீ வேட்கும் தொழிலையுடைய தமிழ் ஞானசம் பந்தன் இயற்றிய இப்பதிகப் பாடல்களைப் பொருந்தும் இசையோடு இயன்ற அளவில் பாடி வழிபடுபவர் உலகத்தை நெடுங்காலம் ஆள்வர்.

                                    திருச்சிற்றம்பலம்

2.064 திருமுதுகுன்றம்                    பண் - காந்தாரம்
                                    திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
தேவா, சிறியோம் பிழையைப் பொறுப்பாய், பெரியோனே,
ஆஆ என்றுஅங்கு அடியார் தங்கட்கு அருள்செய்வாய்,
ஓவா உவரிகொள்ள உயர்ந்தாய் என்றுஏத்தி
மூவா முனிவர் வணங்கும் கோயில் முதுகுன்றே.

         பொழிப்புரை :அழிவற்ற முனிவர்கள், தேவனே! பெரியோனே! சிறியோமாகிய எங்கள் பிழையைப் பொறுத்தருளுவாயாக. அடியவர் துன்புற நேரின், ஆ! ஆ! எனக்கூறி இரங்கி அவர்கட்கு அருள்புரிபவனே! ஒழியாது கடல் பெருகி உலகைக் கொள்ள முற்பட்டபோது உயர்ந்தவனே! என்று ஏத்தி வணங்கும் கோயிலை உடையது முதுகுன்றாகும்.


பாடல் எண் : 2
எந்தை இவன்என்று இரவி முதலா இறைஞ்சுவார்
சிந்தை உள்ளே கோயில் ஆகத் திகழ்வானை,
மந்தி ஏறி இனமா மலர்கள் பலகொண்டு
முந்தித் தொழுது வணங்கும் கோயில் முதுகுன்றே.

         பொழிப்புரை :எமக்குத் தந்தையாவான் இவனே என்று, சூரிய பூசையை முதலிற்கொண்டு சிவபூசை செய்து வழிபடும் அடியவர்களின் சிந்தையைக் கோயிலாகக் கொண்டு அதன் உள்ளே திகழ்பவனைக் குரங்குகள் கூட்டமாய் மரங்களில் ஏறிப் பல மலர்களைக் கொண்டு முற்பட்டுத் தொழுது வணங்கும் கோயிலை உடையது முதுகுன்றாகும்.


பாடல் எண் : 3
நீடு மலரும் புனலும் கொண்டு நிரந்தரம்
தேடும் அடியார் சிந்தை உள்ளே திகழ்வானை,
பாடும் குயிலின் அயலே கிள்ளை பயின்றுஏத்த
மூடும் சோலை முகில்தோய் கோயில் முதுகுன்றே.

         பொழிப்புரை :மிகுதியான மலர்களையும் தண்ணீரையும் கொண்டு எப்பொழுதும் பூசித்துத் தேடும் அடியவர் சிந்தையுள்ளே விளங்கும் இறைவனை, பாடும் குயில்களும் அயலே கிள்ளைகளும் பழகி ஏத்தச் சோலைகளும் முகில்களும் தோய்ந்து மூடும் கோயிலை உடையது முதுகுன்றாகும்.


பாடல் எண் : 4
தெரிந்த அடியார் சிவனே என்று திசைதோறும்
குருந்த மலரும் குரவின் அலரும் கொண்டுஏந்தி
இருந்தும் நின்றும் இரவும் பகலும் ஏத்தும்சீர்
முரிந்து மேகம் தவழும் சோலை முதுகுன்றே.

         பொழிப்புரை :அறிந்த அடியவர்கள் சிவனே என்று திசைதோறும் நின்று குருந்த மலர்களையும் குரா மலர்களையும் கொண்டு பூசித்து ஏத்தி அமர்ந்தும் நின்றும் இரவும் பகலும் ஏத்தும் சீரையுடையதும், விட்டு விட்டு மேகங்கள் தவழும் உயர்ந்த கோயிலை உடையதும் முதுகுன்றாகும்.


பாடல் எண் : 5
வைத்த நிதியே, மணியே, என்று வருந்தி, தம்
சித்தம் நைந்து சிவனே என்பார் சிந்தையார்,
கொத்துஆர் சந்தும் குரவும் வாரிக் கொணர்ந்துஉந்து
முத்தாறு உடைய முதல்வர் கோயில் முதுகுன்றே.

         பொழிப்புரை :சேம வைப்பாக வைக்கப்பெற்ற நிதி போன்றவனே! மணி போன்றவனே! என்று கூறி, போற்றாத நாள்களுக்கு வருந்தித் தம் சிந்தை நைந்து சிவனே என்று அழைப்பவரின் சிந்தையில் உறைபவர் சிவபெருமான். சந்தனக் கொத்துக்களையும் குரா மரங்களையும் வாரிக் கொணர்ந்து கரையில் சேர்ப்பிக்கும் மணிமுத்தாற்றை உடைய அம்முதல்வரின் கோயில் முதுகுன்றாகும்.


பாடல் எண் : 6
வம்புஆர் கொன்றை வன்னி மத்த மலர்தூவி
நம்பா என்ன நல்கும் பெருமான் உறைகோயில்,
கொம்புஆர் குரவு கொகுடி முல்லை குவிந்துஎங்கும்
மொய்ம்புஆர் சோலை வண்டு பாடும் முதுகுன்றே.

         பொழிப்புரை :மணமுடைய கொன்றை மலர், வன்னியிலை, ஊமத்த மலர் ஆகியவற்றைத்தூவி நம்பனே! என்று அழைக்க அருள் நல்கும் பெருமான் உறைகோயில், கொம்புகளை உடைய குராமரம், கொகுடி வகை முல்லை ஆகிய மரம் கொடி முதலியவை செறிந்து மொய்ம்புடையவாய் விளங்கும் சோலைகளை உடைய முதுகுன்றாகும்.


பாடல் எண் : 7
* * * *

பாடல் எண் : 8
வாசம் கமழும் பொழில்சூழ் இலங்கை வாழ்வேந்தை
நாசம் செய்த நங்கள் பெருமான் அமர்கோயில்,
பூசைசெய்து அடியார் நின்று புகழ்ந்துஏத்த
மூசி வண்டு பாடும் சோலை முதுகுன்றே.

         பொழிப்புரை :மணம் கமழும் பொழில் சூழ்ந்த இலங்கை வாழ் வேந்தனாகிய இராவணனின் வலிமையை அழித்த நம்பெருமான் அமர்கின்ற கோயில், அடியவர் பூசை செய்து நின்று புகழ்ந்து போற்ற விளங்குவதும், வண்டுகள் மொய்த்துப்பாடும் சோலைகளை உடையதுமான முதுகுன்றாகும்.


பாடல் எண் : 9
அல்லி மலர்மேல் அயனும், அரவின் அணையானும்
சொல்லிப் பரவித் தொடர ஒண்ணாச் சோதிஊர்,
கொல்லை வேடர் கூடி நின்று கும்பிட
முல்லை அயலே முறுவல் செய்யும் முதுகுன்றே.

         பொழிப்புரை :அக இதழ்களை உடைய தாமரை மலர்மேல் உறையும் பிரமனும், பாம்பணையிற் பள்ளி கொள்ளும் திருமாலும் தோத்திரம் சொல்லி வாழ்த்தித் தொடர, அவர்களால் அறிய ஒண்ணாத சோதியாய் நின்றவனது ஊர், முல்லை நிலத்தில் வேடர்கள் கூடிநின்று கும்பிட அதனைக் கண்டு முல்லைக் கொடிகள் அருகில் இருந்து கண்டு, அரும்புகளால் முறுவல் செய்யும் முதுகுன்றாகும்.


பாடல் எண் : 10
கருகும் உடலார், கஞ்சி உண்டு, கடுவேதின்று,
உருகு சிந்தை இல்லார்க்கு அயலான் உறைகோயில்,
திருகல் வேய்கள் சிறிதே வளையச் சிறுமந்தி
முருகின் பணைமேல் இருந்து நடம்செய் முதுகுன்றே.

         பொழிப்புரை :கரிய உடலினராய், கஞ்சி உண்டு கடுக்காய் தின்று இரக்கமற்ற மனமுடையவராய்த் திரியும் சமண புத்தர்கட்கு அயலானாய் விளங்கும் சிவபிரான் உறையும் கோயில், கோணலை உடைய மூங்கில்கள் சிறிதே வளைந்திருக்கச் சிறிய மந்திகள் அகில் மரங்களின் கிளைகளின் மேல் நின்று நடனம் புரியும் முதுகுன்றமாகும்.


பாடல் எண் : 11
அறைஆர் கடல்சூழ் அந்தண் காழிச் சம்பந்தன்
முறையால் முனிவர் வணங்கும் கோயில் முதுகுன்றைக்
குறையாப் பனுவல் கூடிப் பாட வல்லார்கள்
பிறைஆர் சடைஎம் பெருமான் கழல்கள் பிரியாரே.

         பொழிப்புரை :ஒலிக்கின்ற கடலால் சூழப்பட்ட அழகும் தண்மையும் வாய்ந்த சீகாழிப்பதியில் தோன்றிய ஞானசம்பந்தன் முனிவர்கள் முறையால் வணங்கும் திருமுதுகுன்றத்துக் கோயிலை நிறைவாகப் பாடிய இப்பனுவலைக் கூடிப்பாட வல்லவர்கள் பிறை பொருந்திய சடையினை உடைய எம்பெருமானின் திருவடிகளைப் பிரியார்.
                                             திருச்சிற்றம்பலம்


3. 034    திருமுதுகுன்றம்                 பண் - கொல்லி
                                             திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
வண்ணமா மலர்கொடு வானவர் வழிபட
அண்ணலார் ஆயிழை யாளொடும் அமர்விடம்
விண்ணின்மா மழைபொழிந்து இழியவெள் அருவிசேர்
திண்ணில்ஆர் புறவுஅணி திருமுது குன்றமே.

         பொழிப்புரை :பல வண்ண மலர்களைக் கொண்டு வானவர்கள் வழிபடச் சிவபெருமான் அழகிய ஆபரணங்கள் அணிந்த உமாதேவியோடு இனிது வீற்றிருந்தருளும் இடமாவது , வானத்திலிருந்து மழை பொழிந்து வெள்ளருவியாகப் பாயச் செழித்த திண்மையான முல்லை நிலம் சூழ விளங்கும் அழகிய திருமுதுகுன்றம் ஆகும் .


பாடல் எண் : 2
வெறிஉலாம் கொன்றைஅம் தாரினான், மேதகு
பொறிஉலாம் அரவுஅசைத்து ஆடி,ஓர் புண்ணியன்,
மறிஉலாம் கையினான் மங்கையோடு அமர்விடம்
செறிஉளார் புறவுஅணி திருமுது குன்றமே.

         பொழிப்புரை :வாசனை பொருந்திய கொன்றை மாலையை அணிந்து , படமெடுக்கும் புள்ளிகளையுடைய பாம்பை இடையில் கட்டி ஆடுகின்ற புண்ணிய மூர்த்தியான சிவபெருமான் , இளமான் கன்றை ஏந்திய திருக்கரத்தை உடையவனாய் , உமாதேவியோடு வீற்றிருந்தருளுகின்ற இடமானது சோலைகள் நிறைந்த அழகிய திருமுதுகுன்றம் ஆகும் .


பாடல் எண் : 3
ஏறினார் விடைமிசை இமையவர் தொழ,உமை
கூறனார், கொல்புலித் தோலினார், மேனிமேல்
நீறனார், நிறைபுனல் சடையனார் நிகழ்விடம்,
தேறல்ஆர் பொழில்அணி திருமுது குன்றமே.

         பொழிப்புரை :இறைவன் , இடபவாகனத்தில் ஏறித் தேவர்கள் தொழுது போற்ற , உமாதேவியைத் தன் திருமேனியில் ஒரு கூறாகக் கொண்டு , கொல்லும் தன்மையுடைய புலியின் தோலை ஆடையாக அணிந்து , திருமேனியில் திருவெண்ணீறு அணிந்து , நிறைந்த கங்கையைச் சடைமுடியில் தாங்கி வீற்றிருந்தருளும் இடமாவது , தேன் துளிகளையுடைய மலர்கள் விளங்கும் சோலைகள் சூழ்ந்த அழகிய திருமுதுகுன்றம் ஆகும் .


பாடல் எண் : 4
உரையினார் உறுபொருள் ஆயினான், உமையொடும்
விரையின்ஆர் கொன்றைசேர் சடையினார் மேவிடம்,
உரையின்ஆல் ஒலியென ஓங்குமுத் தாறுமெய்த்
திரையின் ஆர்எறிபுனல் திருமுது குன்றமே.

         பொழிப்புரை :இறைவன் வேதத்தால் நுவலப்படும் பொருளாக விளங்குபவன் . உமாதேவியை உடனாகக் கொண்டு நறுமணம் கமழும் கொன்றை மலரைச் சடைமுடியில் அணிந்தவன் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம் , பக்தர்கள் உரைக்கும் அரநாமத்தின் ஒலியென அலையோசை எழுப்பும் , பெருகுகிற மணிமுத்தாறுடைய திருமுதுகுன்றம் ஆகும் .


பாடல் எண் : 5
கடியவா யினகுரல் களிற்றினைப் பிளிற,ஓர்
இடியவெங் குரலினோடு ஆளிசென் றிடுநெறி
வடியவாய் மழுவினன், மங்கையோடு அமர்விடம்
செடியதுஆர் புறவுஅணி திருமுது குன்றமே.

         பொழிப்புரை :கனத்த குரலில் ஆண் யானையானது பிளிற , இடிபோன்ற குரலில் கர்ச்சிக்கும் சிங்கம் செல்லும் வழிகளில் , கூரிய முனையுடைய மழுப்படை ஏந்தி , உமாதேவியோடு இறைவன் வீற்றிருந்தருளும் இடமாவது செடிகொடிகள் அடர்ந்த குறிஞ்சிப் புறவிடமான அழகிய திருமுதுகுன்றம் ஆகும் .


பாடல் எண் : 6
கானம்ஆர் கரியின் ஈர்உரிவையார், பெரியதோர்
வானம்ஆர் மதியினோடு அரவர்தாம் மருவிடம்,
ஊனம் ஆயினபிணி அவைகெடுத்து உமையொடும்
தேனம்ஆர் பொழில்அணி திருமுது குன்றமே.

         பொழிப்புரை :காட்டில் திரியும் யானையின் தோலை உரித்துப் போர்வையாகப் போர்த்திய இறைவன் , அகன்ற வானத்தில் தவழும் சந்திரனையும் , பாம்பையும் அணிந்து , உயிர்களைப் பற்றியுள்ள குற்றமான ஆணவம் என்னும் நோயைத் தீர்த்து , அருளும் பொருட்டு உமாதேவியோடு வீற்றிருந்தருளும் இடமாவது , தேன் துளிக்கும் பூஞ்சோலைகளையுடைய அழகிய திருமுதுகுன்றம் ஆகும் .


பாடல் எண் : 7
மஞ்சர்தாம், மலர்கொடு வானவர் வணங்கிட
வெஞ்சொலார் வேடரோடு ஆடவர் விரும்பவே,
அஞ்சொலால் உமையொடும் அமர்விடம் அணிகலைச்
செஞ்சொலார் பயில்தரும் திருமுது குன்றமே.

         பொழிப்புரை :வலிமை மிகுந்தவராகிய சிவபெருமானைத் தேவர்கள் மலர்தூவிப் போற்றி வணங்க , கொடுந்தொழில் செய்யும் வேடர்களும் , பிற ஆடவர்களும் விரும்பித் தொழ , அழகிய இன்சொல் பேசும் உமாதேவியோடு இறைவர் வீற்றிருந்தருளும் இடம் வேதங்களை நன்கு கற்றவர்களும் , பக்திப் பாடல்களைப் பாடுபவர்களும் வசிக்கின்ற திருமுதுகுன்றம் ஆகும் .

பாடல் எண் : 8
காரின்ஆர் அமர்தரும் கயிலைநன் மலையினை
ஏரின்ஆர் முடிஇரா வணன்எடுத் தான்இற
வாரின்ஆர் முலையொடும் மன்னினார் மருவிடம்,
சீரினார் திகழ்தரும் திருமுது குன்றமே.

         பொழிப்புரை :மழை பொழியும் கார்மேகம் போன்று உயிர்கட்கு அருள்புரியும் சிவபெருமான் வீற்றிருக்கும் நன்மைதரும் கயிலை மலையினை , அழகிய முடியுடைய இராவணன் எடுத்தபோது , அவனை நலியச் செய்த இறைவன் , கச்சணிந்த முலையுடைய உமாதேவியோடு வீற்றிருந்தருளும் இடம் சிறப்பு மிக்க திருமுதுகுன்றம் ஆகும் .


பாடல் எண் : 9
ஆடினார் கானகத்து, அருமறை யின்பொருள்
பாடினார், பலபுகழ்ப் பரமனார் இணைஅடி,
ஏடின்ஆர் மலர்மிசை அயனுமால் இருவரும்
தேடினார் அறிஒணார் திருமுது குன்றமே.

         பொழிப்புரை :இறைவர் சுடுகாட்டில் திருநடனம் ஆடியவர் . அரிய வேதங்களை அருளி , அவற்றின் உட்பொருளை விரித்தோதியவர் . எவ்வுயிர்கட்கும் தலைவரான அவர் தம் திருவடிகளை இதழ்களையுடையை தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனும், திருமாலும் தேடியும் அறியப்பட வொண்ணாதவர். அப்பெருமானார் வீற்றிருந்தருளும் இடம் திருமுதுகுன்றம் ஆகும்.



பாடல் எண் : 10
மாசுமெய் தூசுகொண்டு உழல்சமண் சாக்கியர்
பேசுமெய் உளவுஅல்ல, பேணுவீர் காணுமின்,
வாசம்ஆர் தருபொழில் வண்டுஇனம் மிசைசெயத்
தேசம்ஆர் புகழ்மிகும் திருமுது குன்றமே.

         பொழிப்புரை :அழுக்கு உடம்பையும் , அழுக்கு உடையையுமுடைய சமணர்களும் , புத்தர்களும் கூறும் மொழிகள் மெய்ம்மையானவை அல்ல . வாசனை பொருந்திய சோலைகளில் வண்டினங்கள் இசைக்க , அழகும் , புகழும் மிகுந்த திருமுதுகுன்றம் என்னும் திருத்தலத்தைத் தரிசித்து , அங்குள்ள இறைவனைப் போற்றி வழிபடுங்கள் .


பாடல் எண் : 11
திண்ணின்ஆர் புறவுஅணி திருமுது குன்றரை
நண்ணினான் காழியுள் ஞானசம் பந்தன்சொல்
எண்ணினால் ஈர்ஐந்து மாலையும் இயலுமாப்
பண்ணினால் பாடுவார்க்கு இல்லையாம் பாவமே.

         பொழிப்புரை :செழுமையான சோலைகளையுடைய திருமுதுகுன்றத்தில் வீற்றிருந்தருளும் இறைவனை மனம் , வாக்கு , காயம் மூன்றும் ஒன்றுபட வழிபட்டு , சீகாழியில் அவதரித்த ஞானசம்பந்தன் அருளிய இத்திருப்பதிகத்தைப் பண்ணிசையோடு பாடவல்லவர்களின் பாவம் நீங்கும் .

                                             திருச்சிற்றம்பலம்

----------------------------------------------------------------------------------------------------------


திருநாவுக்கரசர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 154
தூங்கானை மாடத்துச் சுடர்க்கொழுந்தின் அடிபரவி,
பாங்குஆகத் திருத்தொண்டு செய்து, பயின்று அமரும் நாள்,
பூங்கானம் மணங்கமழும் பொருஇல்திரு அரத்துறையும்,
தேம்காவில் முகில்உறங்கும் திருமுதுகுன் றமும்பணிந்து.

         பொழிப்புரை : திருத்தூங்கானை மாடத்தில் வீற்றிருக்கும் சுடர்க் கொழுந்தான பெருமானின் திருவடிகளைப் போற்றி செய்து, இயன்ற முறையில் திருப்பணிகளும் செய்து, அத்திருப்பதியில் விரும்பி எழுந்தருளியிருக்கும் நாள்களில், அழகிய காட்டுப் பூக்களின் மணம் கமழ்கின்ற ஒப்பற்ற திருவரத்துறையினையும், தேன் பொருந்திய சோலைகளில் மேகங்கள் தவழும் திருமுதுகுன்றத்தையும் வணங்கி.

         குறிப்புரை :  திருமுதுகுன்றத்தில் அருளிய பதிகம் `கருமணியை` எனத் தொடங்கும் திருத்தாண்டகம் ஆகும். திருமுதுகுன்றம் என்பது இன்று விருத்தாசலம் என அழைக்கப்பெறுகிறது. திருமுதுகுன்றம் என்பதே பழமையும் தகுதியும் உடைய பெயராகும்.


பெ. பு. பாடல் எண் : 155
வண்தமிழ்மென் மலர்மாலை புனைந்து அருளி மருங்கு உள்ள
தண்துறைநீர்ப் பதிகளிலும் தனிவிடையார் மேவி இடம்
கொண்டு அருளுந் தானங்கள்   கும்பிட்டுக் குணதிசைமேல்
புண்டரிகத் தடஞ்சூழ்ந்த நிவாக்கரையே போதுவார்.

         பொழிப்புரை : வளமான தமிழால் ஆய மென்மையான மலர் மாலைகளைப் புனைந்து, அருகில் உள்ள குளிர்ந்த துறைகளையுடைய நீர்வளம் மிக்க திருப்பதிகளிலும், ஒப்பில்லாத ஆனேற்றூர்தியையுடைய சிவபெருமான் அவ்வவ்விடங்களிலும் எழுந்தருளியிருக்கும் திருக்கோயில்களையும் வணங்கிக் கிழக்குத் திசையை நோக்கி, தாமரைக் குளங்களால் சூழப்பட்ட நிவாநதியின் கரைவழியாய்ச் செல்பவராய்,


திருநாவுக்கரசர் திருப்பதிம்


6. 068     திருமுதுகுன்றம்        திருத்தாண்டகம்
                                    திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
கருமணியை, கனகத்தின் குன்றொப் பானை,
         கருதுவார்க்கு ஆற்ற எளியான் தன்னை,
குருமணியை, கோள்அரவுஒன்று ஆட்டு வானை,
         கொல்வேங்கை அதளானை, கோவ ணன்னை,
அருமணியை, அடைந்தவர்கட்கு அமுதுஒப் பானை,
         ஆன்அஞ்சும் ஆடியை, நான் அபயம் புக்க
திருமணியை, திருமுதுகுன்று உடையான் தன்னை,
         தீவினையேன் அறியாதே திகைத்த வாறே.

         பொழிப்புரை :கண்ணின் கருமணியைப் போன்று அருமையானவனாய், பொற்குன்று ஒப்பவனாய், தியானிக்கும் அடியவர்களுக்கு மிகவும் எளியவனாய், நல்ல நிறமுடைய மாணிக்கமாய், கொடிய பாம்பு ஒன்றினை ஆட்டுபவனாய், வேங்கைத்தோலை உடுத்தவனாய், கோவணம் அணிந்தவனாய், சிந்தாமணியாய், தன்னைச் சரணம் புகுந்தவர்களுக்கு அமுதம் போன்று இனியனாய், பஞ்ச கவ்விய அபிடேகத்தை உகப்பவனாய், அடியேன் சரணடைந்த வீடுபேறாகிய செல்வத்தை நல்கும் மணியாய்த் திருமுதுகுன்றத்தில் உறையும் பெருமானை, தீவினையை உடைய நான் இதுகாறும் உள்ளவாறு அறியாமல் மயங்கிப்போனேனே.


பாடல் எண் : 2
கார்ஒளிய கண்டத்துஎம் கடவுள் தன்னை,
         காபாலி கட்டங்கம் ஏந்தி னானை,
பார்ஒளியை, விண்ஒளியை, பாதாளனை,
         பால்மதியம் சூடிஓர் பண்பன் தன்னை,
பேரொளியை, பெண்பாகம் வைத்தான் தன்னை,
         பேணுவார் தம்வினையைப் பேணி வாங்கும்
சீர்ஒளியை, திருமுதுகுன்று உடையான் தன்னை,
         தீவினையேன் அறியாதே திகைத்த வாறே.

         பொழிப்புரை :நீலகண்டனாய்க் காபாலக்கூத்து ஆடுபவனாய், கட்டங்கப்படையை ஏந்தியவனாய், நில உலகு விண் உலகு பாதாள உலகு இவற்றிற்கு ஒளி வழங்குபவனாய், வெள்ளிய பிறையைச் சூடியவனாய், நற்பண்புக்கு நிலைக்களனாய், தனக்கு நிகரில்லாத ஞான ஒளியை உடையவனாய், பார்வதி பாகனாய், தன்னை விரும்பும் அடியவர்களைத் தானும் விரும்பி, அவர்கள் வினைகளைப் போக்கும் சிறப்பான புகழ் ஒளியை உடையவனாய்த் திருமுதுகுன்றத்தில் உறையும் பெருமானை, தீவினை உடைய நான் இதுகாறும் உள்ளவாறு அறியாமல் மயங்கிப் போனேனே.


பாடல் எண் : 3
எத்திசையும் வானவர்கள் தொழநின் றானை,
         ஏறுஊர்ந்த பெம்மானை, எம்மான் என்று
பத்தனாய்ப் பணிந்தஅடியேன் தன்னைப் பன்னாள்
         பாமாலை பாடப் பயில்வித் தானை,
முத்தினை, என்மணியை, மாணிக் கத்தை,
         முளைத்துஎழுந்த செழும்பவளக் கொழுந்துஒப் பானை,
சித்தனை, என் திருமுதுகுன்று உடையான் தன்னை,
         தீவினையேன் அறியாதே திகைத்த வாறே.

         பொழிப்புரை :எல்லாத் திசைகளிலும் தேவர்களால் தொழப்படுபவனாய், இடப வாகனனாய், அடியேன் என் தலைவன் என்று பக்தி யோடு பணியத் தன்னைப் பல நாளும் பாமாலை பாடப் பழகுவித்தவனாய், முத்து, மணி, மாணிக்கம், முளைத்தெழுந்த செம்பவளக் கொத்து என்பன போலக் கண்ணுக்கு இனியவனாய், எல்லாம் செய்ய வல்லவனாய்த் திருமுதுகுன்றத்தில் உறையும் பெருமானை, தீவினை உடைய நான் இதுகாறும் உள்ளவாறு அறியாமல் மயங்கிப் போனேனே.


பாடல் எண் : 4
ஊன்கருவின் உள்நின்ற சோதி யானை,
         உத்தமனை, பத்தர்மனம் குடிகொண் டானை,
கான்திரிந்து காண்டீபம் ஏந்தி னானை,
         கார்மேக மிடற்றானை, கனலை, காற்றை,
தான்தெரிந்துஅங்கு அடியேனை ஆளாக் கொண்டு
         தன்னுடைய திருவடிஎன் தலைமேல் வைத்த
தீங்கரும்பை, திருமுதுகுன்று உடையான் தன்னை,
         தீவினையேன் அறியாதே திகைத்த வாறே.

         பொழிப்புரை :உடம்பில் கருவாகி நின்ற உயிருக்குள் ஒளி வடிவாய் உள்ளவனாய், உத்தமனாய், அடியார் மனத்தில் உறைபவனாய், காட்டில் வேடனாய்த் திரிந்து அருச்சுனன் பொருட்டுக் காண்டீபம் என்ற வில்லினை ஏந்தியவனாய், கார்மேகம் போன்ற நீலகண்டனாய், கனலாகவும், காற்றாகவும் உள்ளானாய், தானே ஆராய்ந்து அடியேனைத் தன் அடிமையாகக் கொண்டு தன்னுடைய திருவடிகளை என் தலைமேல் வைத்த கரும்பு போன்ற இனியனாய், திருமுதுகுன்றத்தில் உறையும் பெருமானை, தீவினை உடைய நான் இதுகாறும் உள்ளவாறு அறியாமல் மயங்கிப் போனேனே.


பாடல் எண் : 5
தக்கனது பெருவேள்வி தகர்த்தான் ஆகி,
         தாமரையான் நான்முகனும் தானே ஆகி,
மிக்கதுஒரு தீவளிநீர் ஆகா சம்மாய்
         மேல்உலகுக்கு அப்பாலாய் இப்பா லானை,
அக்கினொடு முத்தினையும் அணிந்து தொண்டர்க்கு
         அங்குஅங்கே அறுசமயம் ஆகி நின்ற
திக்கினை, என் திருமுதுகுன்று உடையான் தன்னைத்
         தீவினையேன் அறியாதே திகைத்த வாறே.

         பொழிப்புரை :தக்கனுடைய பெரிய வேள்வியை அழித்து, தாமரையில் உறையும் பிரமனும் தானேயாகி, ஐம்பூதங்களும், மேலுலகும், அதற்கு அப்பாலும் இப்பாலுமாய்ப் பரந்து, சங்கு மணியையும், முத்தையும் அணிந்து, அடியவர்களுக்கு அவர்களுடைய பக்குவ நிலைக்கு ஏற்ப ஆறு வைதிக சமயங்களாகிய வழியானவனாய், திருமுதுகுன்றத்தில் உறையும் பெருமானை, தீவினை உடைய நான் இதுகாறும் உள்ளவாறு அறியாமல் மயங்கிப் போனேனே.


பாடல் எண் : 6
புகழ்ஒளியை, புரம்எரித்த புனிதன் தன்னை,
         பொன்பொதிந்த மேனியனை, புராணன் தன்னை,
விழஒலியும் விண்ஒலியும் ஆனான் தன்னை,
         வெண்காடு மேவிய விகிர்தன் தன்னை,
கழல்ஒலியுங் கைவளையும் ஆர்ப்ப ஆர்ப்பக்
         கடைதோறும் இடுபிச்சைக்கு என்று செல்லும்
திகழ்ஒளியை, திருமுதுகுன்று உடையான் தன்னை,
         தீவினையேன் அறியாதே திகைத்த வாறே.

         பொழிப்புரை :புகழாகிய ஒளியை உடையவனாய், திரிபுரத்தை எரித்த தூயோனாய், பொன்னிறம் அமைந்த திருமேனியனாய், பழமையானவனாய், விண்ணின் பண்பாகிய ஒளியும் திருவிழாக்களில் கேட்கப்படும் ஒலியும் ஆகியவனாய், வெண்காட்டில் உறையும் விகிர்தனாய், கால்களில் அணிந்த கழல்களின் ஒலியும் கைவளைகளின் ஒலியும் சிறக்க வீடுகள் தோறும் பிச்சைக்கு என்று சஞ்சரிக்கும் மேம்பட்ட ஒளியை உடையவனாய், திருமுதுகுன்றத்தில் உறையும் பெருமானை, தீவினை உடைய நான் இதுகாறும் உள்ளவாறு அறியாமல் மயங்கிப் போனேனே.


பாடல் எண் : 7
போர்த்துஆனை யின்உரிதோல், பொங்கப் பொங்கப்
         புலிஅதளே உடையாகத் திரிவான் தன்னை,
காத்தானை ஐம்புலனும், புரங்கள் மூன்றும்
         காலனையும் குரைகழலால் காய்ந்தான் தன்னை,
மாத்துஆடிப் பத்தராய் வணங்கும் தொண்டர்
         வல்வினைவேர் அறும்வண்ணம் மருந்தும் ஆகித்
தீர்த்தானை, திருமுதுகுன்று உடையான் தன்னை,
         தீவினையேன் அறியாதே திகைத்த வாறே.

         பொழிப்புரை :யானையை உரித்த தோலைப் போர்த்துத் திருமேனியின் ஒளி சிறக்குமாறு புலித்தோலை உடுத்துத் திரிவானாய், பொறிவாயில் ஐந்தவித்தானாய், முப்புரங்களையும் வெகுண்டவனாய், காலனைத் திருவடியால் உதைத்தவனாய், மேம்பட்ட கூத்தினை நிகழ்த்துபவனாய், பத்தர்களாய் வணங்கும் அடியார்களுடைய வலிய வினைகளும், அவற்றால் நிகழும் நோய்களும், நீங்குமாறு மருந்தாகி அவற்றைப் போக்கியவனாய், திருமுது குன்றத்தில் உறையும் பெருமானை, தீவினை உடைய நான் இதுகாறும் உள்ளவாறு அறியாமல் மயங்கிப் போனேனே.


பாடல் எண் : 8
துறவாதே ஆக்கை துறந்தான் தன்னை,
         சோதி முழுமுதலாய் நின்றான் தன்னை,
பிறவாதே எவ்வுயிர்க்குந் தானே ஆகிப்
         பெண்ணினோடு ஆண்உருவாய் நின்றான் தன்னை,
மறவாதே தன்திறமே வாழ்த்தும் தொண்டர்
         மனத்துஅகத்தே அனவரதம் மன்னி நின்ற
திறலானை, திருமுதுகுன்று உடையான் தன்னை,
         தீவினையேன் அறியாதே திகைத்த வாறே.

         பொழிப்புரை :இயல்பாகவே உடம்பு இன்றி இருப்பவனாய், சோதி வடிவினனாய், தான் பிறப்பெடுக்காமல் பிறவி எடுக்கும் உயிர்களுக்கெல்லாம் தானே நலன் செய்பவனாய், பெண்ணுருவும், ஆண் உருவுமாக இருப்பவனாய், தன்னை மறவாமல், தன் பண்பு செயல்களையே வாழ்த்தும் அடியவர்களின் உள்ளத்தே எப்பொழுதும் நிலைபெற்றிருக்கும் பண்பினை உடையவனாய், திருமுதுகுன்றத்தில் உறையும் பெருமானை, தீவினை உடைய நான் இதுகாறும் உள்ளவாறு அறியாமல் மயங்கிப் போனேனே.


பாடல் எண் : 9
பொன்தூணை, புலால்நாறு கபாலம் ஏந்திப்
         புவலோகம் எல்லாம் உழிதந் தானை,
முற்றாத வெண்திங்கள் கண்ணி யானை,
         முழுமுதலாய் மூவுலகும் முடிவுஒன்று இல்லாக்
கல்தூணை, காளத்தி மலையான் தன்னை,
         கருதாதார் புரமூன்றும் எரிய அம்பால்
செற்றானை, திருமுதுகுன்று உடையான் தன்னை,
         தீவினையேன் அறியாதே திகைத்த வாறே.

         பொழிப்புரை :பொன்மயமான தூண்போல்பவனாய், புலால் நாற்றம் வீசும் மண்டையோட்டினை ஏந்தி மேல் உலகம் எல்லாம் திரிபவனாய், பிறையை முடிமாலையாக அணிந்தவனாய், முழுமுதற் கடவுளாய், எல்லா உலகங்களிலும் விரவி நின்று, தனக்கு இறுதி யில்லாது கற்றூண்போல அவற்றைத் தாங்குபவனாய்க் காளத்தி மலையில் உறைபவனாய், பகைவருடைய மும்மதில்களையும் எரியுமாறு வில்லால் அழித்தவனாய், திருமுதுகுன்றம் உறையும் பெருமானை, தீவினை உடைய நான் இதுகாறும் உள்ளவாறு அறியாமல் மயங்கிப் போனேனே.


பாடல் எண் : 10
இகழ்ந்தானை இருபதுதோள் நெரிய ஊன்றி,
         எழுநரம்பின் இசைபாட இனிது கேட்டுப்
புகழ்ந்தானை, பூந்துருத்தி மேயான் தன்னை,
         புண்ணியனை, விண்ணவர்கள் நிதியம் தன்னை,
மகிழ்ந்தானை மலைமகள்ஓர் பாகம் வைத்து,
         வளர்மதியம் சடைவைத்து மால்ஓர் பாகம்
திகழ்ந்தானை, திருமுதுகுன்று உடையான் தன்னை,
         தீவினையேன் அறியாதே திகைத்த வாறே.

         பொழிப்புரை :தன்னை இகழ்ந்து, கயிலையை அசைத்த இராவணனுடைய இருபது தோள்களும் நெரியுமாறு விரலை ஊன்றி, அவன் ஏழுநரம்புகளைக் கொண்டு இசைபாட, அதனை இனிது கேட்டு, அவன் இசை ஞானத்தைப் புகழ்ந்தவனாய், பூந்துருத்தியில் உறையும் புண்ணியனாய், தேவர்களுக்குச் செல்வமாய், பார்வதி பாகனாய் மகிழ்ந்தவனாய், பிறையைச் சடையில் சூடித் திருமாலைத் திருமேனியின் ஒருபாகமாகக் கொண்டு விளங்குபவனாய், திருமுதுகுன்றத்தில் உறையும் பெருமானை, தீவினை உடைய நான் இதுகாறும் உள்ளவாறு அறியாமல் மயங்கிப் போனேனே.
                                             திருச்சிற்றம்பலம்


   
சுந்தரர் திருப்பதிக வரலாறு ---  ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்.

பெரிய புராணப் பாடல் எண் : 104
கூடலை யாற்றூர் மேவும் கொன்றைவார் சடையி னார்தம்
பீடுஉயர் கோயில் புக்குப் பெருகிய ஆர்வம் பொங்க
ஆடகப் பொதுவில் ஆடும் அறைகழல் வணங்கிப் போற்றி
நீடுஅருள் பெற்றுப் போந்து திருமுது குன்றில் நேர்ந்தார்.

         பொழிப்புரை :  கூடலையாற்றூர் என்னும் அத்திருநகரில் வீற்றிருந்தருளும், கொன்றை மலர் சூடிய சடையையுடைய, பெருமானது பெருமை மிகுந்த கோயிலினுள் புகுந்து, உள்ளத்துப் பெருகிய ஆர்வம் பொங்கிட, பொன்னாலாய திருச்சபையில் திருக்கூத்தியற்றும் பெருமானின் வீரக்கழலை யணிந்த திருவடிகளை வணங்கிப் போற்றிப் பேரருள் பெற்றுப் பின் திருமுதுகுன்றத்தைச் சென்று சேர்ந்தார்.


பெ. பு. பாடல் எண் : 105
தடநிலைக் கோபு ரத்தைத் தாழ்ந்துமுன் இறைஞ்சிக் கோயில்
புடைவலம் கொண்டு புக்குப் போற்றினர் தொழுது வீழ்ந்து
நடநவில் வாரை "நஞ்சியிடை" எனும் செஞ்சொல் மாலைத்
தொடைநிகழ் பதிகம் பாடித் தொழுதுகை சுமந்து நின்று.

         பொழிப்புரை : பெருகிய நிலைகளையுடைய கோபுரத்தை முன் வணங்கிக் கோயிலைச் சூழ வலம் வந்து புகுந்து, எஞ்ஞான்றும் மாறாது கூத்தியற்றிவரும் பெருமானைக் கண்ட அளவிலேயே கைதொழுது வீழ்ந்து, `நஞ்சியிடை\' எனத் தொடங்கும் பதிகத்தைப் பாடித் தொழுது, தலைமேல் கூப்பிய கையராய் நின்று,

         குறிப்புரை : `நஞ்சியிடை' எனத் தொடங்கும் திருப்பதிகம் கொல்லிக்கௌவாணப் பண்ணில் அமைந்ததாகும் (தி.7 ப.43).

சுந்தரர் திருப்பதிகம்


7. 043   திருமுதுகுன்றம்              பண் - கொல்லிக் கௌவாணம்
                                    திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
நஞ்சி இடைஇன்று நாளைஎன்று உம்மை நச்சுவார்
துஞ்சியிட் டால், பின்னைச் செய்வதுஎன் அடிகேள்சொலீர்,
பஞ்சி யிடப்புட்டில் கீறுமோ,பணி யீர்அருள்
முஞ்சி யிடைச்சங்கம் ஆர்க்கும் சீர்முது குன்றரே.

         பொழிப்புரை : முஞ்சிப் புல்லின் புதல்மேல் சங்கு தங்கி ஒலிக்கின்ற புகழையுடைய திருமுதுகுன்றத்தில் எழுந்தருளியிருப்பவரே, எங்கள் தலைவரே, உம்மை நெஞ்சுருகி விரும்புகின்ற அடியவர், `நீர் அருள் செய்யும் காலம் இன்று வாய்க்கும்; நாளை வாய்க்கும்` என்று எண்ணிக் கொண்டேயிருந்து இறந்துவிட்டால், அதன்பின்பு நீர் அவர்களுக்குச் செய்வது என்ன இருக்கின்றது? பஞ்சியை அடைப்பதனால் குடுக்கை உடைந்து விடுமோ? விரைந்து அருள்புரியீர்.


பாடல் எண் : 2
ஏரிக் கனகக் கமல மலர்அன்ன சேவடி
ஊர்இத் தனையும் திரிந்தக் கால்அவை நோங்கொலோ,
வாரிக் கண்சென்று வளைக்கப் பட்டு வருந்திப்போய்
மூரிக் களிறு முழக்கு அறாமுது குன்றரே.

         பொழிப்புரை : பெரிய களிற்றியானை, வெள்ளத்தினிடத்திற் சென்று அதனால் வளைத்துக்கொள்ளப்பட்டு மீளமாட்டாது வருந்திப் பின் அரிதில் மீண்டு பிளிறுதல் நீங்காத திருமுதுகுன்றத்தில் எழுந் தருளியிருப்பவரே, உமது, அழகு பொருந்திய, பொற்றாமரை மலர் போலும் செவ்விய இத்திருவடிகள், இத்தனை ஊரிலும் திரிந்தால், அவை வருந்துமோ! வருந்தாவோ!


பாடல் எண் : 3
தொண்டர்கள் பாட,விண் ணோர்கள் ஏத்த உழிதர்வீர்,
பண்டுஅகம் தோறும் பலிக்குச் செல்வதும் பான்மையே,
கண்டகர் வாளிகள் வில்லி கள்புறங் காக்குஞ்சீர்
மொண்டகை வேள்வி முழக்கு அறாமுது குன்றரே.

         பொழிப்புரை : கைவாள் ஏந்தியவர், பெருவாள் ஏந்தியவர், வில் ஏந்தியவர் ஆகிய பலரும் புறத்து நின்று காக்கின்ற, புகழையுடைய, நெய் முதலியவற்றை முகந்து சொரிகின்ற கைகளால் வளர்க்கப்படு கின்ற வேள்விகளின் முழக்கம் நீங்காத திருமுதுகுன்றத்தில் எழுந் தருளியிருப்பவரே, நீர், அடியவர்கள் பாடவும், தேவர்கள் துதிக்கவும் தலைவராய்த் திரிவீர்; ஆதலின், பழைமையான இல்லங்கள்தோறும் பிச்சைக்குச் செல்வது தகுதியோ?


பாடல் எண் : 4
இளைப்புஅறி யீர்,இம்மை ஏத்துவார்க்கு அம்மை செய்வதுஎன்,
விளைப்புஅறி யாதவெங் காலனை உயிர் வீட்டினீர்,
அளைப் பிரியா அரவு அல்கு லாளொடு கங்கைசேர்
முளைப்பிறைச் சென்னிச் சடைமு டிமுது குன்றரே.

         பொழிப்புரை : தன் செயல் விளைப்பதறியாது வந்த கொடிய இயமனை உயிர்போக்கியவரே, புற்றினின்றும் நீங்காத பாம்பின் படம் போலும் அல்குலையுடைய உமையோடு கங்கையும் பொருந்திய, இளைய பிறையையுடைய, தலைக்கண் உள்ள சடைமுடியையுடைய, திருமுதுகுன்றத்தில் எழுந்தருளியிருப்பவரே, இப்பிறப்பில் உம்மைப் போற்றுகின்றவர்களது தளர்ச்சியை நினைக்கமாட்டீர்; வரும் பிறப்பில் நீர் அவர்கட்குச் செய்வது என்ன இருக்கின்றது?


பாடல் எண் : 5
ஆடி அசைந்துஅடி யாரும் நீரும் அகந்தொறும்
பாடிப் படைத்த பொருள் எலாம்உமை யாளுக்கோ
மாட மதில்அணி கோபு ரம்மணி மண்டபம்
மூடி முகில்தவழ் சோலை சூழ்முது குன்றரே.

         பொழிப்புரை : மாடங்கள்மேலும், மதில்மேலும், அழகிய கோபுரங்கள் மேலும், மணிமண்டபங்கள்மேலும், மேகங்கள் மூடிக்கொண்டு தவழ்கின்ற, சோலை சூழ்ந்த திருமுதுகுன்றத்தில் எழுந்தருளியிருப்பவரே, அடியாரும் நீருமாகச் சென்று இல்லந்தோறும் ஆடியும், பாடியும் வருந்திச் சேர்த்த பொருள்களெல்லாம், உம் தேவிக்கு மட்டில்தான் உரியனவோ? எம்போல்வார்க்குச் சிறிதும் உரியது இல்லையோ?


பாடல் எண் : 6
இழைவளர் நுண்இடை மங்கையோடு இடு காட்டிடைக்
குழைவளர் காதுகள் மோத நின்று குனிப்பதே,
மழைவள ருந்நெடுங் கோட்டி டைமத யானைகள்
முழைவளர் ஆளி முழக்கு அறாமுது குன்றரே.

         பொழிப்புரை : மேகங்கள் மிகுந்த நீண்ட சிகரங்களிடையே மதத்தையுடைய யானைகளும், குகைகளில் வளர்கின்ற யாளிகளும் முழங்குதல் நீங்காத திருமுதுகுன்றத்தில் எழுந்தருளியிருப்பவரே, நீர், நூல் தங்கியுள்ளதுபோலும், நுட்பமான இடையினையுடைய மங்கையோடு இடுகாட்டின்கண், குழை பொருந்திய காதுகள் பக்கங்களில் மோதும்படி முற்பட்டு நின்று நடனமாடுவதோ?


பாடல் எண் : 7
சென்று இல்இடைச்செடி நாய்கு ரைக்க, சேடிச்சிகள்
மன்றில் இடைப்பலி தேரப் போவது வாழ்க்கையே,
குன்றில் இடைக்களிறு ஆளி கொள்ளக் குறத்திகள்
முன்றில் இடைப்பிடி கன்றி டும்முது குன்றரே.

         பொழிப்புரை : குன்றில் களிற்றியானையைச் சிங்கம் உண்டுவிட, அதன் பிடியானையையும், கன்றையும் குறத்திகள் தங்கள் குடிலின் முன் கட்டிவைத்துக் காக்கின்ற திருமுதுகுன்றத்தில் எழுந்தருளி யிருப்பவரே, நீர், பல இல்லங்களிலும் சென்று, அங்குள்ள இழிந்த நாய்கள் குரைக்க, தொழுத்திகள் தெருவில் வந்து இடுகின்ற அந்தப் பிச்சையை வாங்கச் செல்வது, மேற்கொள்ளத் தக்க வாழ்க்கையோ?


பாடல் எண் : 8
அந்தி திரிந்துஅடி யாரும்நீரும் அகந்தொறும்
சந்திகள் தோறும் பலிக்குச் செல்வது தக்கதே,
மந்தி கடுவனுக்கு உண்பழம் நாடி மலைப்புறம்
முந்தி அடிதொழ நின்ற சீர்முது குன்றரே.

         பொழிப்புரை : பெண் குரங்கிற்கும், ஆண் குரங்கிற்கும் உண்ணுதற் குரிய பழங்களை அவைகள் தேடிக்கொண்டு மலைப்புறங்களில் முற்பட்டுச் சென்றபொழுது அவைகள் கண்டு, அன்புகொண்டு வணங்குமாறு நின்றருளுகின்ற, புகழையுடைய திருமுதுகுன்றத்து இறைவரே, நீரும் அடியாருமாக இல்லந்தோறும், அந்தியிலும், சந்தியிலும் பிச்சைக்குச் சென்று திரிவது தக்கதோ?


பாடல் எண் : 9
செட்டிநின் காதலி ஊர்கள் தோறும் அறஞ்செய
அட்டுமின் சில்பலிக்கு என்று அகங்கடை நிற்பதே,
பட்டிவெள் ஏறுஉகந்து ஏறுவீர் பரிசு என்கொலோ
முட்டி அடிதொழ நின்ற சீர்முது குன்றரே.

         பொழிப்புரை : யாவரும் எதிர்வந்து அடிவணங்க நிற்கின்ற, புகழையுடைய திருமுதுகுன்றத்து இறைவரே, அளவறிந்து வாழ்பவளாகிய உம் மனைவி ஊர்கள்தோறும் , அறம் வளர்க்க, நீர், இல்லங்களின் வாயில் தோறும் சென்று `இடுமின்` என்று இரந்து, சிலவாகிய பிச்சைக்கு நிற்றல் பொருந்துமோ? கட்டுள் நில்லாத வெள்ளிய எருது ஒன்றை விரும்பி ஏறுவீராகிய உமது தன்மைதான் என்னோ?

  
பாடல் எண் : 10
எத்திசையும் திரிந்து ஏற்றக்கால் பிறர் என்சொலார்,
பத்தியி னால்இடு வார் இடைப்பலி கொள்மினோ,
எத்திசை யுந்திரை ஏற மோதிக் கரைகள்மேல்
முத்திமுத் தாறு வலஞ்செய் யும்முது குன்றரே.

         பொழிப்புரை : எப் பக்கங்களிலும் அலைபுரண்டு செல்லும்படி இரு கரைகளின்மேலும் மோதுகின்ற முத்தியைத் தருகின்ற முத்தாறு வலம்சூழ்ந்து செல்கின்ற திருமுதுகுன்றத்து இறைவரே, ஒன்றையும் நீக்காது எல்லா இடங்களிலும் திரிந்து பிச்சை ஏற்றால், பிறர் என்ன சொல்லமாட்டார்கள்? ஆகையால், அன்போடு இடுகின்றவர் இல்லத்தில் மட்டும் சென்று பிச்சை வாங்குமின்.


பாடல் எண் : 11
முத்திமுத் தாறு வலஞ்செ யும்முது குன்றரைப்
பித்தன்ஒப் பான்அடித் தொண்டன் ஊரன் பிதற்றுஇவை
தத்துவ ஞானிகள் ஆயினார் தடுமாற்றுஇலார்
எத்தவத் தோர்களும் ஏத்து வார்க்குஇடர் இல்லையே.

         பொழிப்புரை : முத்தியைத் தருகின்ற முத்தாறு வலமாகச் சூழ்ந்து ஓடுகின்ற திருமுதுகுன்றத்து இறைவரை, அவர் திருவடிக்குத் தொண்டனாய் உள்ள, பித்துக்கொண்டவன் போன்ற நம்பியாரூரன் பிதற்றிய இப்பாடல்களை, தத்துவஞானிகளாயினும், பிறழாத உள்ளத்தை உடைய அன்பர்களாயினும், எத்தகைய தவத்தில் நிற்பவராயினும் பாடுகின்றவர்களுக்கு, துன்பம் இல்லையாகும்.
                          
திருச்சிற்றம்பலம்
----------------------------------------------------------------------------------------------------------

சுந்தரர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 106
நாதர்பால் பொருள் தாம் வேண்டி,
         நண்ணிய வண்ணம் எல்லாம்
கோதுஅறு மனத்துள் கொண்ட
         குறிப்பொடும் பரவும் போது,
தாதுஅவிழ் கொன்றை வேய்ந்தார்
         தரஅருள் பெறுவார், சைவ
வேதியர் தலைவர் மீண்டும்
         "மெய்யில்வெண் பொடி"யும் பாட.

         பொழிப்புரை : குற்றமற்ற தம் மனத்தில், தம் தலைவர்பால் பொருள் வேண்டிவந்த குறிப்போடும் வணங்கும் பொழுது, இதழ்கள் விரிந்த கொன்றை மலரைச் சூடிய பெருமான் பொருள் தர, அருள் பெறுவாராய நம்பிகள், மீண்டும் திருமுதுகுன்றத்து இறைவரை `மெய்யில் வெண்பொடி' எனத் தொடங்கும் பதிகம் பாடிடலும்,

         குறிப்புரை : `மெய்யை முற்றப் பொடிபூசி' (தி.7 ப.63) எனத் தொடங்கும் திருப்பதிகம் தக்கேசிப் பண்ணில் அமைந்ததாகும். பாடலில் வரும் சொற்கிடக்கையைச் சிறிது மாற்றி, மெய்யில் வெண்பொடியும் பாட என்றருளினார்.

     
சுந்தரர் திருப்பதிகம்


7. 063 நம்பிஎன்ற திருப்பதிகம்  பண் - தக்கேசி
திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
மெய்யைமுற் றப்பொடிப் பூசிஓர் நம்பி
         வேதம்நான் கும்விரித்து ஓதிஓர் நம்பி
கையில்ஓர் வெண்மழு ஏந்திஓர் நம்பி
         கண்ணும் மூன்றுஉடையான்ஒரு நம்பி
செய்யநம் பிசிறு செஞ்சடை நம்பி
         திரிபுரம் தீஎழச் செற்றது ஓர் வில்லால்
எய்தநம் பிஎன்னை ஆள்உடை நம்பி
         எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே

         பொழிப்புரை : திருமேனி முழுதும் திருநீற்றைப் பூசியுள்ள ஒப்பற்ற நம்பியே , வேதங்கள் நான்கையும் விரித்துப் பாடிய ஒப்பற்ற நம்பியே , கையில் ஒரு வெள்ளிய மழுவை ஏந்திய ஒப்பற்ற நம்பியே , கண்கள் மூன்றை உடையவனாகிய நம்பியே, செம்மை நிறம் உடைய நம்பியே, புல்லிய சிவந்த சடையை யுடைய நம்பியே, முப்புரங்களை நெருப்பு எழுமாறு  வளைக்கப்பட்டதொரு வில்லால் எய்த நம்பியே, என்னை ஆளாக உடைய நம்பியே , நீயே எங்கட்கு எப்பிறப்பிலும் தலைவன் .


பாடல் எண் : 2
திங்கள் நம்பி, முடிமேல் அடி யார்பால்
         சிறந்தநம்பி, பிறந்த உயிர்க்கு எல்லாம்
அம்கண்நம்பி, அருள் மால்விசும்பு ஆளும்
         அமரர் நம்பி, குமரன்முதல் தேவர்
தங்கள் நம்பி, தவத்துக்கு ஒரு நம்பி,
         தாதை என்றுஉன் சரண்பணிந்து ஏத்தும்
எங்கள்நம்பி, என்னை ஆள்உடை நம்பி,
         எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே

         பொழிப்புரை : திருமுடியில் பிறையை அணிந்த நம்பியே , அடியாரிடத்து இனிது விளங்கி நிற்கும் நம்பியே , பிறப்பினை எடுத்த உயிர்களுக்கெல்லாம் அவ்விடத்து மறைந்து நின்று அருள்செய்யும் நம்பியே , மயக்கத்தைத் தரும் வானுலகத்தை ஆள்கின்ற , தேவர்கட்குத் தலைவனாகிய நம்பியே , முருகன் முதலிய முத்தர்கட்குத் தலைவ னாகிய நம்பியே , வழிபடப்படுதற்கு ஒப்பற்ற நம்பியே , ` நீயே உலகிற்குத் தந்தை ` என்று தெளிந்து உன் திருவடிகளைப் பணிந்து துதிக்கின்ற எங்களுக்குச் சிறந்து நிற்கின்ற நம்பியே , என்னை ஆளாக உடைய நம்பியே , நீயே எங்கட்கு எப்பிறப்பிலும் தலைவன் .


பாடல் எண் : 3
வருந்தஅன் றும்மத யானை உரித்த
         வழக்குநம்பி, முழக் கும்கடல் நஞ்சம்
அருந்துநம்பி, அமரர்க்கு அமுது ஈந்த
         அருளின்நம்பி, பொருளால் அருநட்டம்
புரிந்தநம்பி, புரி நூல் உடை நம்பி,
         பொழுதும் விண்ணும்முழுதும் பல ஆகி
இருந்தநம்பி, என்னை ஆள்உடை நம்பி,
         எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே

         பொழிப்புரை : அன்று , மதத்தையுடைய யானையை அது வருந்துமாறு உரித்த நீதியை உடைய நம்பியே , ஓசையைச் செய்கின்ற கடலில் உண்டாகிய நஞ்சினை உண்ட நம்பியே , அதன்கண் தோன்றிய அமுதத்தைத் தேவர்களுக்கு ஈந்த அருளுடைய நம்பியே , அவ் வருளாகிய பொருள் காரணமாக அரிய நடனத்தைச் செய்கின்ற நம்பியே , முப்புரி நூலையுடைய நம்பியே , காலமும் வானமும் முதலிய எல்லாப் பொருள்களுமாய்ப் பலவாகி நிற்கின்ற நம்பியே , என்னை ஆளாக உடைய நம்பியே , நீயே எங்கட்கு எப்பிறப்பிலும் தலைவன் .


பாடல் எண் : 4
ஊறும்நம்பி, அமு தாஉயிர்க்கு எல்லாம்
         உரியநம்பி, தெரி யம்மறை அங்கம்
கூறும் நம்பி முனிவர்க்கு, அரும் கூற்றைக்
         குமைத்த நம்பி, குமையாப் புலன் ஐந்தும்
சீறும் நம்பி, திரு வெள்ளடை நம்பி,
         செங்கண்வெள் ளைச்செழும் கோட்டுஎருது என்றும்
ஏறும் நம்பி, என்னை ஆள்உடை நம்பி,
         எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே

         பொழிப்புரை : உள்ளத்தில் , அமுதம்போல ஊற்றெழுகின்ற நம்பியே , எல்லா உயிர்கட்கும் புகலிடமாகிய நம்பியே , முனிவர்கட்கு , வேதத்தையும் , அதன் அங்கத்தையும் அறியக் கூறிய நம்பியே , அழித்தற்கரிய கூற்றுவனை அழித்த நம்பியே , அடக்குதற்கு அரிய ஐம்புல ஆசைகளையும் கடிந்தொதுக்கிய நம்பியே , திருவெள்ளடைக் கோயிலில் வாழும் நம்பியே , சிவந்த கண்களையும் , செழுமையான கொம்புகளையும் உடைய , வெண்மையான எருதையே எந்நாளும் ஏறுகின்ற நம்பியே , என்னை ஆளாக உடைய நம்பியே , நீயே எங்கட்கு எப்பிறப்பிலும் தலைவன் .


பாடல் எண் : 5
குற்ற நம்பி, குறுகார் எயில் மூன்றைக்
         குலைத்த நம்பி, சிலையா வரை கையில்
பற்று நம்பி, பரமானந்த வெள்ளம்
         பணிக்கும் நம்பி, எனப் பாடுதல் அல்லால்,
மற்று நம்பி, உனக்கு என்செய வல்லேன்
         மதிஇலி யேன்படு வெம்துயர் எல்லாம்
எற்று நம்பி, என்னை ஆள்உடை நம்பி,
         எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே

         பொழிப்புரை : அறிவிலேனாகிய யான் படுகின்ற கொடிய துன்பங்களை எல்லாம் ஓட்டுகின்ற நம்பியே , என்னை ஆளாக உடைய நம்பியே , உன்னை , ` மலையை வில்லாக வளைத்த நம்பியே , பின்பு அதனைக் கையிற்பிடித்து நின்ற நம்பியே , பின்பு அதனால் பகைவரது மதில்கள் மூன்றை அழித்த நம்பியே , அடியார்களுக்குப் பேரின்ப வெள்ளத்தை அளித்தருளுகின்ற நம்பியே ` எனப் பாடுவதையன்றி ஒப்பற்ற பெரிய நம்பியாகிய உனக்கு யான் வேறு என் செய்ய வல்லேன் ! நீயே எங்கட்கு எப்பிறப்பிலும் தலைவன் .


பாடல் எண் : 6
அரித்தநம்பி அடி கைதொழு வார்நோய்,
         ஆண்டநம்பி, முன்னை ஈண்டுஉல கங்கள்
தெரித்தநம்பி, ஒரு சேவுடை நம்பி,
         சில்பலிக்கு என்றுஅகம் தோறும்மெய் வேடம்
தரித்த நம்பி, சமயங்களின் நம்பி,
         தக்கன்தன் வேள்வி புக்குஅன்று இமையோரை
இரித்த நம்பி, என்னை ஆள்உடை நம்பி,
         எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே
        
         பொழிப்புரை : உனது திருவடியைக் கைகளால் தொழுகின்றவரது துன்பங்களை அரித்தொழிக்கின்ற நம்பியே , நெருங்கிய உலகங்கள் பலவற்றையும் முன்பு ஆக்கிய நம்பியே , பின்பு அவைகளைக் காக்கின்ற நம்பியே , ஒற்றை எருதையுடைய நம்பியே , இல்லந்தோறும் சென்று ஏற்கும் சில பிச்சைக்கென்று , திருமேனியில் அதற்குரிய வேடத்தைப் பூண்ட நம்பியே , சமயங்கள் பலவற்றிற்கும் தலை வனாகிய நம்பியே , அன்று தக்கன் வேள்விச்சாலையிற் புகுந்து , ஆங்கிருந்த தேவரை எல்லாம் அஞ்சியோடச் செய்த நம்பியே , என்னை ஆளாக உடைய நம்பியே , நீயே எங்கட்கு எப்பிறப்பிலும் தலைவன் .


பாடல் எண் : 7
பின்னைநம் பும்புயத் தான்நெடு மாலும்
         பிரமனும் என்று இவர் நாடியும் காணா
உன்னை நம்பி, ஒருவர்க்கு எய்தல் ஆமே
         உலகுநம்பி, உரை செய்யும் அது அல்லால்
முன்னைநம்பி, பின்னும் வார்சடை நம்பி,
         முழுதுஇவை இத்தனையும் தொகுத்து ஆண்டது
என்னை நம்பி, எம்பிரான் ஆய நம்பி,
         எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே

         பொழிப்புரை : ` நப்பின்னை ` என்பவள் விரும்புகின்ற தோள்களை யுடையவனாகிய நீண்ட உருவத்தையுடைய திருமாலும் , பிரமனும் என்று சொல்லப்பட்ட இவர்கள் தேடியும் காணமாட்டாத நம்பியே , உலகிற்கு ஒருவனாய நம்பியே , உன்னை வாழ்த்துதலாகிய அதுவன்றி , அணுகுதல் ஒருவர்க்கு இயல்வதோ ! எல்லாப் பொருட்கும் முன்னே உள்ள நம்பியே , பின்னிய நீண்டசடையையுடைய நம்பியே , உன் இயல்பெல்லாம் இவை போல்வனவே ; ஆயினும் , இத்தனையை யும் தோன்றாவாறு அடக்கி , பெருநம்பியாகிய நீ எளிவந்து என்னை ஆண்டது என்னையோ ? எமக்குப் பெருமானாகிய நம்பியே , நீயே எங்கட்கு எப்பிறப் பிலும் தலைவன் .


பாடல் எண் : 8
சொல்லைநம்பி, பொரு ளாய்நின்ற நம்பி,
         தோற்றம் ஈறும் முதல் ஆகிய நம்பி,
வல்லைநம்பி அடி யார்க்கு அருள் செய்ய,
         வருந்திநம்பி உனக்கு ஆட்செய கில்லார்
அல்லல்நம்பி படுகின்றது என், நாடி
         அணங்கு ஒரு பாகம்வைத்து எண்கணம் போற்ற
இல்லநம்பி, இடு பிச்சைகொள் நம்பி,
         எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே

         பொழிப்புரை : சொற்களாய் நிற்கும் நம்பியே , அச்சொற்களின் பொருள்களாய் நிற்கும் நம்பியே , எப்பொருளின் தோற்றத்திற்கும் , ஒடுக்கத்திற்கும் முதல்வனாகிய நம்பியே , அடியார்க்கு அருள்செய்ய வல்லையாகிய நம்பியே , உனக்கு ஆட்செய்ய மாட்டாதார் , உலகில் வருத்தத்தை அடைந்து அல்லல் படுதற்குக் காரணம் என் நம்பி நம்பீ ? பதினெண் கணங்களும் போற்ற , உமையை ஒருபாகத்தில் வைத் திருந்தும், இல்லங்களை நாடிச்சென்று அங்கு உள்ளவர் இடுகின்ற பிச்சையை ஏற்கின்ற நம்பி . நம்பீ , நீயே எங்கட்கு எப்பிறப்பிலும் தலைவன் .

  
பாடல் எண் : 9
காண்டுநம்பி கழல் சேவடி என்றும்,
         கலந்துஉனைக் காதலித்து ஆட்செய்கிற் பாரை
ஆண்டுநம்பி, அவர் முன்கதி சேர
         அருளும்நம்பி, குரு மாப்பிறை பாம்பைத்
தீண்டுநம்பி, சென்னி யில்கன்னி தங்கத்
         திருத்துநம்பி, பொய்ச் சமண்பொருள் ஆகி
ஈண்டுநம்பி, இமை யோர்தொழு நம்பி,
         எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே

         பொழிப்புரை : நம்பியாகிய உனது கழல் அணிந்த திருவடியைக் காண்போம் என்னும் உறுதியோடும் மனம்பற்றி உன்னை விரும்பி உனக்கு ஆட்செய்கின்றவரை , நீ ஆட்கொண்டு அவர் விரைந்து உயர்கதி அடையுமாறு அருள்செய்கின்ற நம்பி நம்பீ , ஒளியையுடைய சிறந்த பிறை பாம்பைப் பொருந்துகின்ற முடியில் , ` கங்கை ` என்னும் நங்கை தங்கும்படி இனிது வைத்துள்ள நம்பி நம்பீ , சமணர்க்குப் பொய்ப்பொருளாய் மறைந்து நின்று , எங்கட்கு மெய்ப்பொருளாய் வெளிநிற்கின்ற நம்பியே , தேவர்கள் வணங்குகின்ற நம்பியே , நீயே எங்கட்கு எப்பிறப்பிலும் தலைவன் .


பாடல் எண் : 10
கரக்கும்நம்பி கசி யாதவர் தம்மை,
         கசிந்தவர்க்கு இம்மையோடு அம்மையில் இன்பம்
பெருக்குநம்பி, பெரு கக்கருத்தா * * * *

         பொழிப்புரை : உன்னிடத்து மனம் உருகாதவருக்கு உன்னை மறைத்துக்கொள்கின்ற நம்பியே , அன்பு செய்பவர்க்கு இப்பிறப்பிலும் , வரும் பிறப்பிலும் இன்பத்தை மிகத் தருகின்ற நம்பியே , ...........

         குறிப்புரை : ` கரத்தி நம்பி ` என்பதும் பாடம் . இத்திருப்பதிகத்துள் , இதற்குப் பின்னுள்ளவற்றை நாம் பெற்றிலேம் . இத்திருப்பாட்டின் பின்னுள்ள அடிகள் மறைந்துபோயின .
                                             திருச்சிற்றம்பலம்

---------------------------------------------------------------------------------------------------------


சுந்தரர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 107
பனிமதிச் சடையார் தாமும்
         பன்னிரண்டு ஆயி ரம்பொன்
நனிஅருள் கொடுக்கும் ஆற்றால்
         நல்கிட, உடைய நம்பி
தனிவரு மகிழ்ச்சி பொங்க,
         தாழ்ந்துஎழுந்து அருகு சென்று,
கனிவிட மிடற்றி னார்முன்,
         பின்ஒன்று கழறல் உற்றார்.

         பொழிப்புரை : குளிர்ந்த பிறையணிந்த சடைமுடியையுடைய சிவபெருமானும், அவருக்குப் பன்னிரண்டாயிரம் பொன்னினை மிகவும் அருள் செய்யும் வகையில் கொடுத்திடலும், ஆளுடைய நம்பிகளுக்குத் தனித்துத் தமது உள்ளத்து எழும் மகிழ்ச்சி பொங்கிட, பெருமானைத் தாழ்ந்து வணங்கி, எழுந்து, அருகாகச் சென்று, கனிந்த நஞ்சை உண்டருளிய கழுத்தினை உடைய பெருமான் திருமுன்பு நின்று, மேலும் விண்ணப்பிப்பாராய்,


பெ. பு. பாடல் எண் : 108
"அருளும்இக் கனகம் எல்லாம்
         அடியனேற்கு ஆரூர் உள்ளோர்
மருள்உற வியப்ப அங்கே
         வரப்பெற வேண்டும்" என்ன,
தெருள்உற எழுந்த வாக்கால்,
         "செழுமணி முத்தாற்று இட்டுஇப்
பொருளினை முழுதும் ஆரூர்க்
         குளத்திற்போய்க் கொள்க"என்றார்.

         பொழிப்புரை : பெருமான் எனக்குத் தந்தருளிய இப்பொன் எல்லாம், திருவாரூரில் உள்ளார் கண்டு மருட்சியுறவும், அதிசயித்திடும்படியாகவும் அங்கு வரும்படி செய்தல் வேண்டுமென்று வேண்டிடலும், அதுபொழுது அவர் தெளிவு கொள்ளும்படி, வானில் எழுந்த திருவாக்கால், `ஆரூரனே! செழுமையான மணிமுத்தாற்றில் இட்டு, இப்பொருளை எல்லாம் திருவாரூர்க் குளத்தில் போய்ப் பெற்றுக் கொள்வாய்!\' என்றருளினார்.


பெ. பு. பாடல் எண் : 109
என்றுதம் பிரானார் நல்கும் 
         இன்அருள் பெற்ற பின்னர்
வன்தொண்டர் மச்சம் வெட்டிக் 
         கைக்கொண்டு மணிமுத் தாற்றில்
பொன்திரள் எடுத்து நீர்உள்
         புகவிட்டுப் போது கின்றார்
"அன்றுஎனை வலிந்துஆட் கொண்ட
         அருள்இதில் அறிவேன்" என்று.

         பொழிப்புரை : தம் பெருமானார் அருளிய வானொலியைக் கேட்ட பின்னர், வன்றொண்டராய நம்பிகள், அப்பொன்னின் அடை யாளம் தெரிதற்காக ஒரு துண்டினை வெட்டி, அதனைக் கையிற் கொண்டு, ஏனைய பொன்னின் திரளை அழகிய மணிமுத்தாற்றில் சேருமாறு விடுத்துத் திருவாரூர் நோக்கிப் போகின்றவர், `அன்று எனைத் தாமே வலிய வந்து ஆட்கொண்டருளிய இறைவனின் திருவருளை, இச்செயலில் மீளவும் அறிவேன்\' என்று,


பெ. பு. பாடல் எண் : 110
மேவிய காதல் தொண்டு
         விரவுமெய் விருத்தி பெற்றார்
ஆவியின் விருத்தி யான
         அந்தணர் புலியூர் மன்றில்
காவிஅம் கண்டர் கூத்துக்
         கண்டுகும் பிடுவன் என்று
வாவிசூழ் தில்லை மூதூர்
         வழிக்கொள்வான் வணங்கிப் போந்தார்.

         பொழிப்புரை : பெருமானிடத்துப் பொருந்திய பெருவிருப்பால் தொண்டு செய்து, உடற்கு வளர்ச்சி தரும் பொன்னைப் பெற்றவர், உயிர்க்கு வளர்ச்சி தரும் (நிலையான இன்பம்) அந்தணர்கள் போற்றும், புலியூரெனும் தில்லைப்பகுதியின் கண்ணுள்ள கனகசபையில் நீலகண்டப் பெருமானின் திருக்கூத்தைக் கண்டு கும்பிடுவன் என்று கருதி, குளங்கள் சூழ்ந்த தில்லை என்னும் ஊரை நோக்கிச் செல்லும் நோக்கத்தில், திருமுதுகுன்றப் பெருமானை வணங்கிப் போயினார்.

----------------------------------------------------------------------------------------------------------

         திருமுதுகுன்றத்தினை வழிபட்டுப் பொருள் பெற்ற நம்பியாரூரர் வழியில் உள்ள திருத்தலங்களை வழிபட்டு, திருவாரூர் சென்றடைந்தார்.

ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்

பெரிய புராணப் பாடல் எண் : 125
மூவாத முதல்ஆகி நடுஆகி முடியாத
சேஆரும் கொடியாரைத் திருமூலட் டானத்துள்
ஓவாத பெங்காதல் உடன்இறைஞ்சிப் புறம்போந்து
தாவாத புகழ்ப்பரவை யார்திருமா ளிகைசார்ந்தார்.

         பொழிப்புரை : எஞ்ஞான்றும் அழியாத முதலாகி, நடுவாகி, முடிதலும் இல்லாத ஆனேற்றுக் கொடியையுடைய சிவபெருமானைத் திருமூலட்டானத்தில் எழுந்தருளி இருக்கும் பெருமானை, ஒழியாத பெருங்காதலுடன் வணங்கி, அருள்பெற்று, வெளியே வந்தருளிக் குறைவிலாத புகழுடைய பரவையாரது திருமாளிகையைச் சென்று சேர்ந்தார்.


பெ. பு. பாடல் எண் : 126
பொங்குபெரு விருப்பினொடு புரிகுழலார் பலர்போற்றப்
பங்கயக்கண் செங்கனிவாய்ப் பரவையார் அடிவணங்கி,
"எங்களையும் நினைந்துஅருளிற்று" எனஇயம்ப இனிதுஅளித்து
மங்கைநல்லார் அவரோடும் மகிழ்ந்து உறைந்து வைகும்நாள்.

         பொழிப்புரை : நம்பிகள் மாளிகை வருதலும், மிக்க பெரு விருப்புடன் அழகிய கூந்தலையுடைய பெண்கள் பலரும் போற்ற, தாமரை மலர் போன்ற கண்களையும், செங்கனி போன்ற வாயினையும் உடைய பரவையார் எதிர்வந்து, திருவடிகளில் பணிந்தருளி, `எங்களையும் நினைந்து அருளிற்று\' என மொழிந்திடலும், நம்பியாரூரரும் அவர்களுக்கு இனிய அருள் புரிந்து, பெண்களில் நல்லாராய பரவையாருடன் மகிழ்ந்து தங்கியிருக்கும் நாள்களில்,


பெ. பு. பாடல் எண் : 127
"நாயனார் முதுகுன்றர் நமக்குஅளித்த நல்நிதியம்
தூயமணி முத்தாற்றில் புகவிட்டேம், துணைவர் அவர்
கோயிலின்மா ளிகைமேல்பால் குளத்தில், அவர் அருளாலே,
போய்எடுத்துக் கொடுபோதப் போதுவாய்" எனப்புகல.

         பொழிப்புரை : ஒருநாள் பரவையாரை நம்பிகள் நோக்கியருளி, உயிர்கட்குத் தலைவராய திருமுதுகுன்றத்துப் பெருமானார், நமக்கு வழங்கிய நல்ல நிதியமாகிய பொன்னின் குவியலை எல்லாம் அவர்தம் திருவருளின்படி மணிமுத்தாற்றில் புக விடுத்தோம், நம் துணைவராய திருவாரூர்ப் பெருமானின் கோயிலின் மேற்குப் புறத்தே உள்ள கமலாலயக் குளத்தில் அவரது அருளால் அதனை எடுத்து உனக்குத் தருவதற்கு, நீ என்னுடன் வருவாய் எனப் புகலுதலும்,


பெ. பு. பாடல் எண் : 128
"என்னஅதி சயம்இதுதான், என்சொன்ன வாறு"என்று
மின்இடையார் சிறுமுறுவல் உடன்விளம்ப, மெய் உணர்ந்தார்,
"நல்நுதலாய் என்னுடைய நாதன்அரு ளால்குளத்தில்
பொன்அடைய எடுத்து, உனக்குத் தருவதுபொய் யாது" என்று.

         பொழிப்புரை : அதுகேட்டுப் புன்சிரிப்புடன் மின்னலையொத்த இடையையுடைய பரவையார், ஈதென்ன அதிசயம்! என்றலும், உண்மைப் பொருளினை உணர்ந்த நம்பிகளும், `நல்ல நெற்றியையுடைய பரவையே! என்னுடைய பெருமானின் அருளால் அக்குளத்தில் பொன் முழுவதையும் எடுத்துத் தருவது பொய்யாகாது! என்று கூறியருளுதலும்,


பெ. பு. பாடல் எண் : 129
ஆங்குஅவரும் உடன்போத, அளவுஇறந்த விருப்பினுடன்
பூங்கோயில் உள்மகிழ்ந்த புராதனரைப் புக்குஇறைஞ்சி,
ஓங்குதிரு மாளிகையை வலம்வந்துஅங்கு உடன், மேலைப்
பாங்கு திருக் குளத்து அணைந்தார் பரவையார் தனித்துணைவர்.

         பொழிப்புரை : அதுகேட்ட பரவையாரும் அவருடன் வர, அவ்வம்மையின் ஒப்பற்ற துணைவராகிய நம்பிகள், அளவுகடந்த விருப்பத்துடன் திருவாரூர்ப் பூங்கோயிலில் அமர்ந்தருளும் முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளாய பெருமானை உட்புகுந்து வணங்கி, மேலோங்கிய கோயில் மாளிகையை வலமாக வந்து, உடனாக மேற்குப் புறத்ததாக விளங்கிடும் திருக்குளத்திற்கு வந்துற்றார்.


பெ. பு. பாடல் எண் : 130
மற்றுஅதனின் வடகீழ்பால் கரைமீது வந்துஅருளி
முற்றுஇழையார் தமைநிறுத்தி முனைப்பாடித் திருநாடர்
கற்றைவார் சடையாரைக் கைதொழுது குளத்தில்இழிந்து
அற்றைநாள் இட்டுஎடுப்பார் போல்அங்குத் தடவுதலும்.

         பொழிப்புரை : பின்பு அந்தக் குளத்தின் வடகிழக்குக் கரையின் மேலாக வந்தருளி, முழுமையான நல்ல பல அணிகளை அணிந்த பரவையாரை அங்கு நிறுத்திப் பின்னர் திருமுனைப்பாடி என்னும் நாட்டைத் தமக்குப் பிறப்பிடமாக உடைய நம்பிகள், தொகுதியாக நீண்டு விளங்கும் சடையையுடைய பெருமானைக் கைதொழுது, குளத்துள் இறங்கி, அன்றைய நாளில் பொன்னைப் போட்டு எடுப்பார் போன்று, அங்குப் பொற்குவியலைப் பெறத் தண்ணீரில் தடவுதலும்,


பெ. பு. பாடல் எண் : 131
நீற்றுஅழகர் பாட்டுஉவந்து, திருவிளையாட் டில்நின்று
மாற்றுஉறுசெம் பொன்குளத்து வருவியாது ஒழிந்து அருள
"ஆற்றினில் இட்டுக் குளத்தில் தேடுவீர், அருள்இதுவோ
சாற்றும்"எனக் கோல் தொடியார் மொழிந்து அருளத் தனித்தொண்டர்.

         பொழிப்புரை : நீற்றினால் அழகு பொலியும் திருமேனியையுடைய பெருமானும், அதுபொழுது சுந்தரரது திருப்பாட்டை விரும்பிக் கேட்பதொரு திருவிளையாட்டைச் செய்வாராய், சிறந்த மாற்றுடைய செம்பொன்னைக் குளத்தில் வருவியாது மறைத்து அருளலும், அது கண்டு கரையில் நின்ற வளையல் அணிந்த பரவையாரும், நம்பிகளை நோக்கி, `ஆற்றில் இட்டுக் குளத்தில் தேடும் தலைவரே! இறைவனின் இன்னருள் இதுதானோ?' எனக் கூறலும், தனித்தொண்டராம் நம்பிகள்,


பெ. பு. பாடல் எண் : 132
"முன்செய்த அருள்வழியே முருகுஅலர்பூங் குழற்பரவை
தன்செய்ய வாயில்நகை தாராமே தாரும்" என
மின்செய்த நூன்மார்பின் வேதியர்தாம் முதுகுன்றில்
"பொன்செய்த மேனியினீர்" எனப்பதிகம் போற்றிஇசைத்து.

         பொழிப்புரை : பெருமானே! முன்னர் வானொலி வழி வழங்கியவாறே, அழகு விளங்கும் மலர்களைச் சூடிய கூந்தலுடைய பரவையினது சிவந்த வாயில் இகழ்ச்சிக் குறிப்புத் தோன்றாதவாறு பொன்னினைத் தந்தருளும் என்று, மின்னலையொத்த ஒளியை யுடைய நூல் அணிந்த மார்பினையுடைய சுந்தரரும், முதுகுன்றில் அமர்ந்த இறைவரை உளங்கொண்டு `பொன்செய்த மேனியினீர்\' எனத் தொடங்கும் பதிகத்தைப் போற்றிப் பாடி,

         குறிப்புரை : `பொன்செய்த மேனியினீர்' எனத் தொடங்கும் பதிகம் நட்டராகப் பண்ணில் அமைந்ததாகும் (தி.7 ப.25).


பெ. பு. பாடல் எண் : 133
முட்டஇமை யோர்அறிய முதுகுன்றில் தந்தபொருள்
சட்டநான் பெறாது ஒழிந்த தளர்வினால் கையறவாம்
"இட்டளத்தை இவள்எதிரே கெடுத்துஅருளும்" எனும்திருப்பாட்டு
எட்டுஅளவும் பொன்காட்டாது ஒழிந்து அருள ஏத்துவார்.

         பொழிப்புரை : முழுவதும் தேவர் அறிய, நீர் திருமுதுகுன்றில் தந்தபொருளை, மிகவும் உடன்பெறாது போன தளர்ச்சியினால் வரும் துன்பமாம் அக் கொடுமையை, இப் பரவை முன்னாகக் கொடுத்தருளும் என மொழிகின்ற அத்திருப்பாட்டைப் பாடியருளலும் பெருமான் எட்டுணையேனும் பொன் காட்டாது ஒழிந்தருளப் பின்னும் போற்றுவாராய்,


பெ. பு. பாடல் எண் : 134
"ஏத்தாதே இருந்துஅறியேன்" எனும் திருப்பாட்டு எவ்வுலகும்
காத்துஆடும் அம்பலத்துக் கண்உளன் ஆம் கண்ணுதலைக்
"கூத்தா தந்து அருளாய்இக் கோமளத்தின் முன்" என்று
நீத்தாரும் தொடர்வுஅரிய நெறிநின்றார் பரவுதலும்.

         பொழிப்புரை : எம்பெருமானே! `உம்மை எக்காலமும் ஏத்தாது இருந்தறியேன்\' எனும் கருத்தமைவுடைய திருப்பாட்டில், எவ்வுலகினையும் துன்புறாது அம்பலத்துள் நிறைந்து காத்து ஆடுகின்ற கண்ணுதற் பெருமானையே நினைந்து உருகி, கூத்தா! பொன்னினைத் தந்தருள்வாய்! இப்பரவை முன்பாக என்று, பற்றுக்களை எல்லாம் அறுத்தெரிந்த பெரியோர்களும் தொடர்ந்து பற்றுதற்கரிய நெறி நின்ற ஆரூரர் போற்றுதலும்,


பெ. பு. பாடல் எண் : 135
கொந்துஅவிழ்பூங் கொன்றைமுடிக் கூத்தனார் திருவருளால்
வந்துஎழுபொன் திரள்எடுத்து வரன்முறையால் கரைஏற்ற
அந்தரத்து மலர்மாரி பொழிந்து இழிந்தது அவனி உளோர்
"இந்த அதிசயம் என்னே? யார்பெறுவார்?" எனத்தொழுதார்.

         பொழிப்புரை : கொத்துக்களாய் விரிந்த கொன்றைமாலையை முடிமீது சூடியவரும், எஞ்ஞான்றும் திருக்கூத்தியற்றுபவருமான இறைவனின் திருவருளால், அப்பொழுது குளத்தின்கண் வந்த பொன்னின் திரளினை எடுத்து, வரன்முறையால் கரையில் சேர்த்திடலும், விண்ணிலிருந்து மலர்மழை பொழிந்து தரையில் வழிந்ததும், இதனைக் கண்ட நிலவுலகில் உள்ளோர் யாவரும் இவ்வதிசயம் இருந்தவாறு என்னே! இறைவனின் வியத்தகு கருணைப்பெருக்கை யார் பெறுவார்? எனப் போற்றித் தொழுதார்கள்.


சுந்தரர் திருப்பதிகம்

7. 025  திருமுதுகுன்றம்                   பண் - நட்டராகம்
                                    திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
பொன்செய்த மேனியினீர், புலித் தோலை அரைக்குஅசைத்தீர்
முன்செய்த மூஎயிலும் எரித்தீர், முதுகுன்று அமர்ந்தீர்
மின்செய்த நுண்இடையாள் பரவை இவள் தன்முகப்பே
என்செய்த வாறுஅடிகேள் அடியேன் இட்டளம் கெடவே.

         பொழிப்புரை : பொன்னைப்போலும் திருமேனியை உடையவரே , புலியினது தோலை அரையில் உடுத்தவரே , நன்கு செய்யப்பட்ட மூன்று மதில்களையும் முன்பு எரித்தவரே , திருமுதுகுன்றத்தில் விரும்பி இருப்பவரே , அடிகளே , மின்னல் போலும் நுண்ணிய இடையை யுடையவளும் , ` பரவை ` என்னும் பெயரினளுமாகிய இவள் முன்னே , அடியேனது துன்பங் கெடுதற்கு நீவிர் என் செய்தவாறு !

  
பாடல் எண் : 2
உம்பரும் வானவரும் உடனே நிற்கவே, எனக்குச்
செம்பொனைத் தந்துஅருளித் திகழும்முது குன்றுஅமர்ந்தீர்
வம்புஅம ருங்குழலாள் பர வைஇவள் வாடுகின்றாள்
எம்பெரு மான்அருளீர் அடி யேன்இட் டளம்கெடவே.

         பொழிப்புரை : எம் பெருமானிரே , நீர் , முன்பு , வானத்தில் உள்ள தேவர்களும் , அவர்கட்குமேல் உள்ள ` அயன் , மால் ` என்பவர்களும் கண்டுநிற்க எனக்குச் செம்பொன்னைக் கொடுத்து, விளங்குகின்ற திரு முதுகுன்றத்தில் எனக்குத் துணையாய் இருந்தீர் ; இப்பொழுது , மணம் பொருந்திய கூந்தலையுடையவளும் , ` பரவை ` என்னும் பெயரினளும் ஆகிய இவள் பொருள் முட்டுப்பாட்டினால் மெலிகின்றாள் ; அது பற்றிய அடியேனது துன்பங் கெடுமாறு அருள்செய்தல் வேண்டும் .


பாடல் எண் : 3
பத்தா, பத்தர்களுக்கு அருள்செய்யும் பரம்பரனே,
முத்தா, முக்கணனே, முதுகுன்றம் அமர்ந்தவனே,
மைத்து ஆரும்தடங்கண் பர வைஇவள் வாடாமே,
அத்தா, தந்துஅருளாய், அடி யேன்இட் டளம்கெடவே.

         பொழிப்புரை : எப்பொருட்கும் பற்றுக்கோடானவனே , அடியார்களுக்கு அருள் பண்ணுகின்ற மேலான பொருட்கும் மேலானவனே , இயல்பாகவே பாசத்தின் நீங்கினவனே , மூன்று கண்களையுடையவனே , திருமுதுகுன்றத்தில் விரும்பி இருப்பவனே , என் அப்பனே , மை தீட்டப்பட்டு அழகு நிறைந்த பெரிய கண்களையுடைய . ` பரவை ` என்னும் பெயரினளாகிய இவள் , பொருள் முட்டுப்பாட்டினால் வருந்தாதபடி , அடியேனது துன்பங்கெடுமாறு செம்பொன்னைத் தந்தருள் .


பாடல் எண் : 4
மங்கையொர் கூறுஅமர்ந்தீர், மறை நான்கும் விரித்துஉகந்தீர்,
திங்கள் சடைக்குஅணிந்தீர், திக ழும்முது குன்றுஅமர்ந்தீர்,
கொங்கைநல் லாள்பரவை குணம் கொண்டுஇருந் தாள்முகப்பே
அங்கணனே, அருளாய் அடி யேன்இட் டளம்கெடவே.

         பொழிப்புரை : உமையை ஒரு பாகத்தில் விரும்பி வைத்தவரே , வேதங்கள் நான்கினையும் விரித்து அருளிச்செய்து அதனை அறநூலாக விரும்பியவரே , சடையின்கண் சந்திரனை அணிந்தவரே , விளங்குகின்ற திருமுதுகுன்றத்தில் விரும்பி இருப்பவரே , கண்ணோட்டம் உடையவரே , தனங்கள் அழகியாளும் , யான் சொல்லியதைச் சொல்லியவாறே கருதும் தன்மை உடையவளும் , ` பரவை ` என்னும் பெயரினளுமாகிய இவள் முன்னே , அடியேனது துன்பங் கெடுமாறு அருள்புரிதல் வேண்டும் .


பாடல் எண் : 5
மைஆ ரும்மிடற்றாய், மரு வார்புர மூன்றுஎரித்த
செய்ஆர் மேனியனே, திக ழும்முது குன்றுஅமர்ந்தாய்,
பைஆ ரும்அரவு ஏர்அல்கு லாள்இவள் வாடுகின்றாள்
ஐயா, தந்துஅருளாய், அடி யேன்இட் டளம்கெடவே.

         பொழிப்புரை : மைபோலப் பொருந்திய கண்டத்தை யுடையவனே , பகைவரது மூன்று ஊர்களை எரித்த , செவ்விய அழகு நிறைந்த திருமேனியையுடையவனே , விளங்குகின்ற திருமுதுகுன்றத்தில் விரும்பி இருப்பவனே , தலைவனே , பாம்பினிடத்துப் பொருந்தியுள்ள படம்போலும் எழுச்சியையுடைய அல்குலினை யுடைய பரவையாகிய இவள் பொருளின்றி வருந்துகின்றாள் ; ஆதலின் அதுபற்றிய அடியேனது துன்பங்கெடுமாறு , செம்பொன்னைத் தந்தருள் .


பாடல் எண் : 6
நெடியான் நான்முகனும் இர வியொடும் இந்திரனும்
முடியால் வந்துஇறைஞ்ச முது குன்றம் அமர்ந்தவனே
படிஆரும் இயலாள் பர வைஇவள் தன்முகப்பே
அடிகேள் தந்துஅருளீர் அடி யேன்இட் டளம்கெடவே.

         பொழிப்புரை : திருமாலும், பிரமனும், சூரியனும், இந்திரனும் வந்து தலையால் வணங்கும்படி, திருமுதுகுன்றத்தில் விரும்பி இருப்பவனே , தலைவனே , பெண்மைப் பண்புகள் நிறைந்த இயல்பினை உடையவளும், `பரவை` என்னும் பெயரினளுமாகிய இவள் முன்னே, அடியேனது துன்பங் கெடுமாறு செம்பொன்னைத் தந்தருள் .


பாடல் எண் : 7
கொந்துஅண வும்பொழில்சூழ் குளிர் மாமதில் மாளிகைமேல்
வந்துஅண வும்மதிசேர் சடை மாமுது குன்றுஉடையாய்!
பந்துஅண வும்விரலாள் பர வைஇவள் தன்முகப்பே
அந்தணனே, அருளாய் அடி யேன்இட் டளம்கெடவே.

         பொழிப்புரை : கொத்துக்கள் பொருந்திய சோலைகள் சூழ்ந்த குளிர்ந்த பெரிய மதில்கள் மேலும் , மாளிகைகள் மேலும் வந்து தவழ்கின்ற சந்திரன் பொருந்திய சடையினை உடைய பெரிய திருமுது குன்றத்தையுடையவனே , அந்தணனே , பந்து பொருந்திய விரலை உடையவளும் , ` பரவை ` என்னும் பெயரினளும் ஆகிய இவள் முன்னே , அடியேனது துன்பங் கெடுமாறு அருள்பண்ணுவாய் .


பாடல் எண் : 8
பரசு ஆரும்கரவா, பதின் எண்கண மும்சூழ
முரசார் வந்துஅதிர முது குன்றம் அமர்ந்தவனே,
விரைசே ருங்குழலாள் பர வையிவள் தன்முகப்பே
அரசே தந்துஅருளாய் அடி யேன்இட் டளங்கெடவே.

         பொழிப்புரை : மழுப் பொருந்திய கையை யுடையவனே , பதினெண் கணங்களும் புடை சூழவும், முரசு அணுக வந்து முழங்கவும் திருமுதுகுன்றத்தில் விரும்பி இருப்பவனே, எல்லா உலகிற்கும் அரசனே, நறுமணம் பொருந்திய கூந்தலை உடையவளும், `பரவை` என்னும் பெயரினளும் ஆகிய இவள் முன்னே, அடியேனது துன்பங் கெடுமாறு செம்பொன்னைத் தந்தருள் .


பாடல் எண் : 9
ஏத்தாது இருந்துஅறியேன், இமை யோர்தனி நாயகனே,
மூத்தாய் உலகுக்கெல்லாம், முது குன்றம் அமர்ந்தவனே,
பூத்துஆரும் குழலாள் பர வைஇவள் தன்முகப்பே
கூத்தா தந்துஅருளாய் கொடி யேன்இட் டளம்கெடவே

         பொழிப்புரை : தேவர்கட்கு ஒப்பற்ற தலைவனே , எல்லா உயிர் கட்கும் மூத்தவனே, திருமுதுகுன்றத்தில் விரும்பி இருப்பவனே , கூத்துடையானே , உன்னை யான் பாடாமல் இருந்தறியேன் ; ஆதலின் , மலர்கள் மலர்ந்து பொருந்துகின்ற கூந்தலையுடையவளும் , ` பரவை ` என்னும் பெயரினளும் ஆகிய இவள்முன்னே , அடியேனது துன்பங் கெடுமாறு செம்பொன்னைத் தந்தருள் .


பாடல் எண் : 10
பிறைஆரும் சடைஎம் பெரு மான்அரு ளாய்என்று
முறையால் வந்துஅமரர் வணங் கும்முது குன்றர்தம்மை
மறையார் தம்குரிசில் வயல் நாவல் ஆரூரன்சொன்ன
இறையார் பாடல்வல்லார்க்கு எளி தாம்சிவ லோகம்அதே.

         பொழிப்புரை : தேவர்கள் பலரும் தம் வரிசைக்கேற்ப முறையாக வந்து வணங்கும் திருமுதுகுன்றரை , அந்தணர் தலைவனும் , வயல் களையுடைய திருநாவலூரினனும் ஆகிய நம்பியாரூரன் , ` பிறை பொருந்திய சடையினையுடைய எம்பெருமானே அருள்புரியாய் ` என்று வேண்டிப்பாடிய , இறைவனது திருவருள் நிறைந்த இப் பாடல்களை நன்கு பாட வல்லவர்க்குச் சிவலோகம் எளிய பொருளாய் விடும் .

                                             திருச்சிற்றம்பலம்




No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...