திருச்செந்தூர் - 0063. தண்தேன் உண்டே


அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

தண் தேனுண்டே (திருச்செந்தூர்)

மாதர் ஆசையில் பட்டு மாண்டு, சுடலை ஏகாமுன் வந்தருளி 
பாதமலரைத் தந்து ஆட்கொள்ள வேண்டல்.

தந்தா தந்தா தந்தா தந்தா
     தந்தா தந்தத் ...... தனதான


தண்டே னுண்டே வண்டார் வஞ்சேர்
     தண்டார் மஞ்சுக் ...... குழல்மானார்

தம்பா லன்பார் நெஞ்சே கொண்டே
     சம்பா வஞ்சொற் ...... றடிநாயேன்

மண்டோ யந்தீ மென்கால் விண்டோய்
     வண்கா யம்பொய்க் ...... குடில்வேறாய்

வன்கா னம்போ யண்டா முன்பே
     வந்தே நின்பொற் ...... கழல்தாராய்

கொண்டா டும்பேர் கொண்டா டுஞ்சூர்
     கொன்றாய் வென்றிக் ...... குமரேசா

கொங்கார் வண்டார் பண்பா டுஞ்சீர்
     குன்றா மன்றற் ...... கிரியோனே

கண்டா கும்பா லுண்டா யண்டார்
     கண்டா கந்தப் ...... புயவேளே

கந்தா மைந்தா ரந்தோள் மைந்தா
     கந்தா செந்திற் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


தண் தேன் உண்டே வண்டு ஆர்வம் சேர்
     தண் தார் மஞ்சுக் ...... குழல்மானார்

தம்பால், ன்பு ஆர் நெஞ்சே கொண்டே,
     சம்பாவம் சொற்று ...... அடிநாயேன்,

மண் தோயம் தீ மென்கால் விண் தோய்
     வண் காயம், பொய்க் ...... குடில்வேறாய்,

வன் கானம் போய் அண்டா முன்பே,
     வந்தே நின்பொன் ...... கழல்தாராய்.

கொண்டாடும் பேர் கொண்டாடும் சூர்
     கொன்றாய்! வென்றிக் ...... குமரேசா!

கொங்குஆர் வண்டு ஆர் பண்பாடும் சீர்
     குன்றா மன்றல் ...... கிரியோனே!

கண்டு ஆகும் பால் உண்டாய், ண்டார்
     கண்டா! கந்தப் ...... புயவேளே!

கந்து ஆம் மைந்து ஆர் அம்தோள் மைந்தா!
     கந்தா! செந்திற் ...... பெருமாளே.

பதவுரை


     கொண்டாடும் பேர் --- தன்னைக் கொண்டாடிப் புகழ்கின்றவர்களை,

     கொண்டாடும் சூர் கொன்றாய் --- மகிழ்ந்து கொண்டாடுகின்ற சூரபன்மனைக் கொன்றவரே!

     வென்றி குமர ஈசா --- வெற்றியையுடைய குமாரக் கடவுளாகிய தலைவரே!

     கொங்கு ஆர் வண்டு --- பூந்தாதுகளில் நிறைந்துள்ள வண்டுகள்,

     ஆர் பண்பாடும் --- அரிய பண்களைப் பாடுகின்ற,

     சீர் குன்றா --- சிறப்பு குறையாத,

     மன்றல் கிரியோனே --- திருமணஞ் செய்துகொண்ட மலையாகிய வள்ளிமலையில் வாழ்பவரே!

     கண்டு ஆகும் பால் உண்டாய் --- கற்கண்டு போன்ற (உமையம்மையின்) திருமுலைப்பால் உண்டவரே!

     அண்டார் கண்டா --- பகைவரைக் கண்டித்தவரே!

     கந்த புயவேளே --- நறுமணம் நிறைந்த புயாசலத்தை உடையவரே!

     கந்து ஆம் மைந்து ஆர் அம்தோள் மைந்தா --- கம்பத்துக்கு நிகரான வலிமை நிறைந்த அழகிய தோள்களையுடைய வீரரே!

     கந்தா --- கந்தக் கடவுளே,

     செந்தில் --- திருச்செந்தூரில் எழுந்தருளியிருக்கும்,

     பெருமாளே --- பெருமையிற் சிறந்தவரே!

     தண் தேன் உண்டே --- குளிர்ந்த தேனைப் பருகி,

     வண்டு ஆர்வம் சேர் --- வண்டுகள் அன்புடன் மொய்க்கின்ற,

     தண் தார் மஞ்சு குழல் மானார் தம்பால் --- குளிர்ந்த   பூமாலை சூடிய மேகம் போன்ற கூந்தலையுடைய மாதர்களிடம்,

     அன்பு ஆர் நெஞ்சே கொண்டே --- அன்பு நிறைந்த மனத்தைக் கொண்டு,

     சம்பாவம் சொற்று --- நிகழ்ச்சிகளை யெல்லாம் பேசுகின்ற, அடி நாயேன் --- அடிமையாகிய நாயினேன்,

     மண் --- மண்ணும்,

     தோயம் --- தண்ணீரும்,

     தீ --- நெருப்பும்,

     மென்கால் --- மெல்லிய காற்றும்,

     விண் --- வெளியும்,

     தோய் வண் காயம் --- தோய்ந்துள்ள வளங்கொண்ட உடம்பாகிய,

     பொய் குடில் வேறாய் --- பொய்யாகிய சரீரத்தினின்றும் உயிர் நீங்கி,

     வன் கானம் போய் --- கொடுங் கானகம் போய்,

     அண்டா முன்பே --- நெருங்கா முன்னர்,

     வந்தே நின் பொன் கழல் தாராய் --- அடியேன் முன் வந்தருளி தேவரீடைய அழகிய திருவடி மலரைத் தந்தருளுவீர்.

பொழிப்புரை

         தன்னைப் புகழ்கின்றவர்களை ஆதரித்து மகிழ்கின்ற சூரபன்மனைக் கொன்றவரே!

         வெற்றி நிறைந்த குமாரக் கடவுளே!

         பூ மலர்களில் நிறைந்த வண்டுகள் அருமையான பண்களைப் பாடுகின்ற சிறப்பு குறையாத வள்ளி மலையில் எழுந்தருளியிருப்பவரே!

         கற்கண்டுபோல் இனிமை நிறைந்த அம்பிகையின் திருமுலைப்பாலை உண்டவரே!

         பகைவரைக் கண்டித்தவரே!

         வாசனை தங்கிய புயத்தையுடைய உபகாரியே!

         தூண் போன்ற வலிமை நிறைந்த அழகிய தோள்களையுடைய இளம் பூரணரே!

         கந்தக் கடவுளே!

         திருச்செந்தூரில் எழுந்தருளியிருக்கும் பெருமிதமுடையவரே!

         குளிர்ந்த தேனை யுண்டு வண்டுகள் அன்பு செய்கின்ற குளிர்ந்த மலர்மாலை சூடி மேகம் போல இருக்குங் கூந்தலையுடைய பொது மாதர்களிடம் ஆசை வைத்த மனத்தை யுடையவனாய் அவர்களுடைய செயலைப் பாராட்டிப் பேசுகின்ற நாயேனாகிய அடியேன்,

     மண், நீர், நெருப்பு, காற்று, வெளி என்ற ஐம்பூத சேர்க்கையாலாகிய இப் பொய்யாகிய உடம்பிலிருந்து உயிர் நீக்கி, சுடுகாடு சென்று சேரா முன்னம் தேவரீர் எளியேன்முன் எழுந்தருளி அழகிய அடிமலரைத் தந்தருளுவீர்.


விரிவுரை

தண் தேன் உண்டே வண்டு ---

தண், தேன் என்று பிரித்துக் கொள்க; குளிர்ந்த தேன் குளிர்ந்த மலர்களிலிருந்து வண்டுகள் தமது திறமையால் மிகவும் பாடுபட்டு சிறிது சிறிதாக எடுத்துக் கொண்டு வந்து சேகரிப்பது தேன். வண்டு இல்லையேல் தேன் இல்லை.

தாங்கள் உண்ணாமலும் ஒய்ந்து சிறிது நேரங்கூட இருக்காமலும், உழைத்து உழைத்துத் தேனைக் கொணர்ந்து சேர்க்கின்றன தேனீக்கள். அதனைப் பிறர் அபகரித்துக் கொள்ளுகின்றனர். உண்ணாமலும் உடுக்காமலும் பிறருக்குக் கொடுக்காமலும், சேர்த்து வைக்கின்ற லோபியினுடைய பொருளும் பிறரால் கவரப்படும்.

உடாஅதும் உண்ணாதும் தம்உடம்பு செற்றும்
கெடாஅத நல்லறமும் செய்யார் - கொடாஅது
வைத்தீட்டி னார் இழப்பர், வான்தோய் மலைநாட !
உய்த்தீட்டும் தேனீக் கரி.                             ---  நாலடியார்        

தண்டார் மஞ்சுக் குழல் மானார் ---

வண்டுகள் மகிழ்ந்து மொய்க்கின்ற குளிர்ந்த மலர் மாலைகளை வகை வகையாகக் கட்டித் தமது கூந்தலில் பொதுமகளிர் சூடிக்கொள்வார்கள்.

அந்தக் கூந்தல் கருமை நிறமாக இருப்பதனால் மேகம் போல் அழகாக இருக்கும்.

மஞ்சு-மேகம். மானார்-மான்போன்றவர்கள். வண்டார்-தண்டார் எனப் பதம் பிரித்துக் கொள்க.

தன்பாலார் நெஞ்சே கொண்டே ---

மனிதர்களாகிய நாம் இந்த மனித உடம்பை நமக்குத் தந்த இறைவனிடம் அன்பு வைக்கவேண்டும். இடையறாத இன்பத்தை வழங்குபவன் இறைவன். அத்தகைய எம்பெருமானிடம் அன்பு வைக்காது, இன்பம் போல் தோன்றும் துன்பத்தைத் தரும் பொதுமகளிர் பால் வைக்கின்றனர். அதனால் எத்தனை எத்தனைக் கேடுகளை யடைகின்றனர்.
  
சம்பாவம் சொற்றடி நாயேன் ---

சம்பவம்-என்பது சம்பாவம் என வந்தது. சம்பவம்-நிகழ்ச்சி. பொதுமகளிருடைய செயல்களைக் குறித்து அவர் பால் மயல் கொண்டோர் வியந்து நயந்து பேசி இன்புறுவர். அதிலே அவர்கட்கு மகிழ்ச்சி. இறைவனுடைய திருநாமங்களைச் சொல்வதற்காகவே இந்த நா அமைந்துள்ளது.

கற்றுக் கொள்வன வாயுள நாவுள
இட்டுக் கொள்வன பூவுள நீருள
கற்றைச் செஞ்சடையானுளன் யாமுளம்
எற்றுக்கோ நமனால் முனி வுண்பதே.         ---  அப்பர்.

மண், தோயம், தீ மென்கால், விண் தோய் வண்காயம் பொய்க் குடில் ---

இந்த உடம்பு மண் முதலிய ஐம்பெரும் பூதங்களினால் ஆகியது. பஞ்சபூத பரிணாம சரீரம். ஐம்பெரும் பூதங்களின் சேர்க்கையால் இது வந்துள்ளது. நிலை பேறில்லாதது. நீர்மேல் குமிழிக்கு நிகரானது.

ஐந்துவகை யாகின்ற பூதபே தத்தினால்
                 ஆகின்ற ஆக்கைநீர்மேல்
      அமர்கின்ற குமிழியென நிற்கின்ற தென்னநான்
                 அறியாத காலமெல்லாம்
புந்திமகி ழுறவுண் டுடுத்தின்ப மாவதே
                 போந்தநெறி என்றிருந்தேன்
      பூராய மாகநின தருள்வந் துணர்த்தஇவை
                 போனவழி தெரியவில்லை
எந்தநிலை பேசினும் இணங்கவிலை யல்லால்
                 இறப்பொடு பிறப்பையுள்ளே
      எண்ணினால் நெஞ்சது பகீரெனுந் துயிலுறா
                 திருவிழியும் இரவுபகலாய்ச்
செந்தழலின் மெழுகான தங்கம்இவை என்கொலோ
                 சித்தாந்த முத்திமுதலே
      சிரகிரி விளங்கவரு தக்ஷிணா மூர்த்தியே
                 சின்மயா னந்தகுருவே.            --- தாயுமானவர்.

   `ககனமு மநிலமும் அனல்புனல் நிலமமை
       கள்ளப் புலால்            கிருமிவீடு’        ---  திருப்புகழ்.

பொய்யான உடம்பை மெய் என்று நம்பி, தவநெறி சேராது அவநெறி சேர்ந்து, காமதேனுவின் பாலைக் கமரில் கொட்டியதுபோல் தமது நேரத்தை வீணாக்கி மானுடர் வறிதே கெடுகின்றனர்; அந்தோ! பரிதாபம்.

காடுவெட்டி நிலம் திருத்திக் காட்டு எருவும் போட்டுக்
     கரும்பைவிட்டுக் கடுவிரைத்துக் களிக்கின்ற உலகீர்
கூடுவிட்டுப் போயினபின் எதுபுரிவீர்? எங்கே
     குடியிருப்பீர்? ஐயோ!நீர் குறித்தறியீர். இங்கே
பாடுபட்டீர். பயன்அறியீர். பாழ்க்கு இறைத்துக் கழித்தீர்.
     பட்டதெலாம் போதும்.இது பரமர்வரு தருணம்.
ஈடுகட்டி வருவீரேல் இன்பம் மிகப் பெறுவீர்.
     எண்மைஉரைத் தேன்அலன், நான் உண்மையுரைத் தேனே.

ஆற்றுவெள்ளம் வருவதன்முன் அணைபோட அறியீர்,
     அகங்காரப் பேய்பிடித்தீர், ஆடுதற்கே அறிவீர்,
கூற்றுவருங் கால்அதனுக்கு எதுபுரிவீர், ஐயோ!
     கூற்று உதைத்த சேவடியைப் போற்ற விரும்பீரே,
வேற்று உரைத்து வினைபெருக்கி மெலிகின்ற உலகீர்,
     வீண்உலகக் கொடுவழக்கை விட்டுவிட்டு வம்மின்,
சாற்று உவக்க எனது தனித் தந்தை வருகின்ற
     தருணம்இது, சத்தியம், சிற்சத்தியைச் சார்வதற்கே.

பொய் விளக்கப் புகுன்றீர், போது கழிக்கின்றீர்,
     புலைகொலைகள் புரிகின்றீர், கலகல என்கின்றீர்,
ஐவிளக்கு மூப்பு மரணாதிகளை நினைத்தால்
    அடிவயிற்றை முறுக்காதோ? கொடிய முயற்றுலகீர்,
கைவிளக்குப் பிடித்து ஒருபாழ்ங் கிணற்றில் விழுகின்ற
     களியர் எனக் களிக்கின்றீர், கருத்து இருந்தும் கருதீர்,
மெய்விளக்கும் எனது தந்தை வருகின்ற தருணம்
       மேவியது, ங்கு அடைவீரேல் ஆவிபெறுவீரே.

என்று உலகினரை நோக்கி அருளால் பாடுகின்றார் இராமலிங்க அடிகளார்

பொய்க்கூடு கொண்டு புலம்புவனோ, எம்இறைவர்
மெய்க்கூடு சென்று விளம்பிவா பைங்கிளியே.      ---  தாயுமானவர்.

வன்கானம் போய் அண்டா முன்பே ---

இந்த உடம்பு இறைவனை யடைவதற்காக வந்தது. தானே வரவில்லை; முன் செய்த மாதவத்தின் பயனாய் இறைவன் தர வந்தது. இந்த உடம்பாலாய பயன் இருவினைகளின் வேரறுத்து மும்மலத் தொடர்பையும் அகற்றி அருளின் தொடர்பு கொண்டு இறைவனுடன் இரண்டறக் கலத்தலேயாம்.

அந்த முயற்சியில் ஈடுபடாதார் செத்து செத்துப் பிறப்பதே தொழிலாகியுழல்வர்.

கண்உண்டு கா, கருத்துஉண்டு நோக்க,கசிந்துஉருகி
பண்உண்டு பாட, செவிஉண்டு கேட்க, பல்பச்சிலையால்
எண்உண்டு சாத்த, எதிர் நிற்க ஈசன் இருக்கையிலே,
மண்உண்டு போகுது ஐயோ! கெடுவீர் இந்த மானுடமே..

என்று வருந்துகின்றார் பட்டினத்து சுவாமிகள்.

ஆகவே இந்த உடம்பு அழியுமுன் நற்கதிக்குரிய நலத்தைத் தேடிவிட வேண்டும். அதிலே அயராத முயற்சி யிருக்க வேண்டும்.

தெய்வத் திருமலைச் செங்கோட்டில் வாழும் செழும் சுடரே
வை வைத்த வேற்படை வானவனே மறவேன் உனை நான்
ஐவர்க்கு இடம்பெற கால் இரண்டு ஓட்டி அதில் இரண்டு
கைவைத்த வீடு குலையும் முன்னே வந்து காத்தருளே.

என்ற அருணகிரிநாதரது கந்தரலங்காரத்தை  நினைத்தால் எந்தக் கல் மனந்தான் கரையாது?
  
காதலார் மைந்தருந் தாயராருஞ் சுடும்
       கானமே பின்தொடர்ந்           தலறாமுன்
சூலம்வாள் தண்டு செஞ் சேவல் கோதண்டமும்
       சூடு தோளுந் தடந்           திருமார்பும்
தூயதாள் தண்டையுங் காண ஆர்வஞ் செயுந்
       தோகைமேல் கொண்டுமுன்     வரவேணும்”    ---  (காலனார்) திருப்புகழ்.

வந்தே நின்பொற் கழல்தாராய் ---

முருகா! அடியேனுடிய உடம்பை விட்டு உயிர் போகுமுன் சிறியேன்முன் தேவரீர் எழுந்தருளி வந்து எளியேனுக்கு உமது பொன்னார் திருவயடியைத் தந்து காத்தருள வேண்டும்” என்று அருணகிரிநாதர் உள்ளம் உருகி முறையிடுமாறு நம்மைத் தூண்டுகின்றார். அந்த வழியைக் காட்டுகின்றார். அவர் பரகதிக்குச் சிறந்த வழிகாட்டி.


கொண்டாடும்பேர் கொண்டாடுஞ்சூர் கொன்றாய் ---

தன்னை யார் யார் கொண்டாடுகிறார்களோ அவர்களை யெல்லாம் மகிழ்ந்து ஆதரிப்பான் சூரபத்மன், தன்னைக் கொண்டாடுவதற்கென்றே பலரை வைத்திருப்பர் சிலர். அதனை இன்றுங் காணலாம்! சிலருக்குத் தன்னை கொண்டாடினால் அதில் ஒரு பெரு மகிழ்ச்சி, அறிஞர்கள்  தன்னை யாராவது புகழ்ந்தால் வருந்துவர் நாணுவர்.

மாலை நேரத்தில் மரத்தின் இலைகள் தலைகவிழ்ந்திருந்தன. அதனைக் கண்டு கூறவந்தார் புலவர். “தன்னைப் புகழக் கேட்ட மதிநலம் படைத்த மாண்புடைய ஒருவன் தலைக் கவிழ்ந்திருப்பது போல் இருக்கின்றன” என்கின்றார்.


சூர் கொன்றாய் ---

சூர்-துன்பம். துன்பத்தைச் செய்கின்றவன் சூரபன்மன்; அதனால் சூர் எனப்பட்டனன். இவன் 108 யுகங்கள் வாழ்ந்து அமரர்கட்கு அலக்கண் புரிந்தான். அதனால் அவனை மாய்த்தனர் குமாரக் கடவுள். இது மறக் கருணையென வுணர்க. குற்றஞ் செய்கின்ற மகனைத் தாய் அல்லது தந்தை அடிக்கின்றனர். மகன் மீது பகை காரணமாகவா அடிக்கின்றனர்? இல்லை. அவன் திருந்தி உய்யவேண்டும் என்ற கருணையினாலேயே தண்டிக்கின்றனர். அதுபோல் உயிருக்குத் தந்தையாகிய இறைவன் குற்றம் புரிந்தோரை உய்யும்பொருட்டுத் தண்டிக்கின்றனர். போற்றுபவர்க்கு அறக் கருணையும், அல்லார்க்கு மறக் கருணையும் புரிந்து ஆட்கொள்வது இறைவனுடைய இயல்பு.

கொங்கார் வண்டார் பண்பாடும் ---

கொங்கு ஆர் வண்டு ஆர் பண் பாடும் எனப் பதப்பிரிவு செய்க.

கொங்கு-வாசனை. அது தனியாகு பெயராக இங்கே மலரைக் குறிக்கின்றது. “கொங்கு தேர் வாழ்க்கை யஞ்சிறைத் தும்பி” என இறைவன் தருமிக்குப் பாடித் தந்த பாடலாலும் அறிக.

ஆர்-நிறைதல்.

வண்டு-ஆர். இங்கே ஆர் என்ற சொல்லுக்கு அருமையென்பது பொருள்.

மலர்களில் நிறைந்த வண்டுகள் தேனையுண்ணும் பொருட்டு அரிய பண்களைப் பாடும். ஏன்? மலர் விரியும் பொருட்டு. நல்ல பண்ணைக் கேட்டவுடன் அரும்பு மலர்கின்றது. இசைக்கு அத்துணை வலிமையுள்ளது. இன்றும் பிச்சைக் கேட்க வருகின்ற யாசகர்கள் ஏதாவது ஒரு பாடலைப் பாடிக்கொண்டே வருவது கண்கூடு. பாடல் கேட்டவர் பரிசில் தருவர். அது போல் வண்டு பாடும் பண்ணுக்குப் பரிசிலாக மலர்த் தேன் தருகின்றது.

சீர்குன்றா மன்றல் கிரியோனே ---

மன்றல் கிரி என்பது வள்ளிமலை. வள்ளியைப் பெருமான் மணந்து கொண்டதனால் இப்பெயர்பெற்றது. வள்ளிமலை மிகுந்த மகிமை வாய்ந்தது. உலக மாதா இங்கு அவதரித்து வளர்ந்தனர்; வேதங்களும், முனிவரும் மூவருந்தேவருந் தேடிக் காணாத திருமுருகன் இம்மலையைத் தேடி வந்து; மறை கமழும் மலரடி நோவ இம் மலையில் நடந்தான் எனில் இம்மலையின் பெருமை நம்மால் இத்தன்மைத்து என்று நினைக்கவும், சொல்லவும் தரமோ?

வீடும் சுரர்மா முடி வேதமும் வெங்
காடும் புனமும் கமழும் கழலே

என்ற அநுபூதியின் திருவாக்கால் இவ் வள்ளிமலையின் பெருமையை உணர்க.

வள்ளிமலை

இம்மலைத் தொண்டை நாட்டில் வடஆர்க்காடு மாவட்டத்தில், திருவல்லம் (புகைவண்டி நிலையம் உண்டு) என்ற திருத்தலத்தின் வடக்கே 5 கல் தொலைவில் விளங்குகின்றது. முருகன் அடியார்கள் அனைவரும் வாழ்நாளில் ஒரு முறையாவது அவசியம் சென்று தரிசிக்க வேண்டும். இல்லையேல் வள்ளியம்மையின் திருவருளை எங்ஙனம் பெற முடியும்? தங்கள் குருநாதர் பிறந்த தலத்தைக் காண இஸ்லாமிய அன்பர்கள் பல்லாயிரம் மைல் கடந்து பாலைவனம் வழியே பொருள் நிரம்பச் செலவழித்துப் போகின்றார்கள். முருகன் அடியார்கள் நம் நாட்டில் எளிதாகப் போகக் கூடிய வள்ளிமலை சென்று இயற்கையாகக் குகைக் கோயிலில் வற்றாத கருணாமூர்த்தியாக எழுந்தருளியுள்ள வள்ளி கல்யாண வரதனைச் சேவிக்க வேண்டாமா?

திருவல்லம், சென்னையிலிருந்து பெங்களூர் போகும் இருப்புப் பாதையில் காட்பாடிக்கு அருகில் உள்ளது. திருவல்லம் தேவார, திருப்புகழ், பெரியபுராணப் பாடல்கள் பெற்ற அரிய தலம். அதன் அருகில் வள்ளிமலை இருப்பதனால் போகும் வழியில் திருவல்லத்தையும் தரிசிக்கலாம்.

ஒருகல்லில் இரு மாங்காய்களை வீழ்த்தியது போல், ஒரு முயற்சியில் இருதலங்களைத் தரிசித்த நன்மை கிடைக்கும். நீவா நதிக்கரையில் திருவல்லம் என்னும் தலம் இருக்கின்றது. வில்வவன நாதர் என்பது சுவாமி பேர். அருமையான ஆலயம். அன்பர்கள் அனைவரும் திருவல்லம் தரிசித்து, அதனைக் கடந்து அம்மை அவதரித்த அரிய தலமாகிய வள்ளிமலையைச் சேவித்து அருள் நலத்தைப் பெறுவார்களாக.

கண்டு ஆகும் பால் உண்டாய் ---

கண்டு-கற்கண்டு. கற்கண்டு போல் இனிமையாகவுள்ள அம்மை திருமுலைப்பாலுண்டதைத் தெரிவிக்கின்றது. “திருந்தப் புவனங்கள் ஈன்ற பொற்பாவை திருமுலைப்பால் அருந்தி”
என்பது கந்தர் அலங்காரம்.

கந்தா மைந்தாரந்தோள் மைந்தா ---

கந்து ஆம் மைந்து ஆர் அம் தோள் எனப் பதப் பிரிவு செய்க.

         கந்து              - தூண். தூண்போன்ற
         மைந்து            - வலிமை. வலிமை நிறைந்த
         ஆர்                - அருமை. அரிய
         அம்                 - அழகு. அழகிய
         தோள் மைந்தா     - தோளையுடைய வீரரே!

கந்தா செந்திற் பெருமாளே ---

கந்தன் என்பது முருகனுடைய நாமங்களில் உயர்வுடையது. செந்தில் - இரண்டாவது படை வீடு; சுவாதிட்டானத் தலம்.

கருத்துரை

         சூரசங்காரரே! வள்ளிமலை வேலவரே! செந்திலாண்டவரே! மாதராசையிற் பட்டு மாண்டு சுடலை ஏகாமுன் வந்தருளி பாதமலரைத் தந்து ஆட்கொள்ள வேண்டும்.


No comments:

Post a Comment

பொது --- 1081. இசைந்த ஏறும்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் இசைந்த ஏறும் (பொது) முருகா!  அடியேன் அயர்ந்தபோது வந்து அருள வேண்டும். தனந்த தானந் தனதன தானன ...... தனதான...