திருச்செந்தூர் - 0037. ஏவினை நேர்விழி


அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

ஏவினை நேர்விழி (திருச்செந்தூர்)

திருவடியில் வாழ்வு பெற வேண்டல்

தானன தானன தானன தானன
     தானன தானன ...... தனதானா


ஏவினை நேர்விழி மாதரை மேவிய
     ஏதனை மூடனை ...... நெறிபேணா

ஈனனை வீணனை ஏடெழு தாமுழு
     ஏழையை மோழையை ...... அகலாநீள்

மாவினை மூடிய நோய்பிணி யாளனை
     வாய்மையி லாதனை ...... யிகழாதே

மாமணி நூபுர சீதள தாள்தனி
     வாழ்வுற ஈவது ...... மொருநாளே

நாவலர் பாடிய நூலிசை யால்வரு
     நாரத னார்புகல் ...... குறமாதை

நாடியெ கானிடை கூடிய சேவக
     நாயக மாமயி ...... லுடையோனே

தேவிம நோமணி ஆயிப ராபரை
     தேன்மொழி யாள்தரு ...... சிறியோனே 

சேணுயர் சோலையி னீழலி லேதிகழ்
     சீரலை வாய்வரு ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


ஏவினை நேர்விழி மாதரை மேவிய
     ஏதனை, மூடனை, ...... நெறிபேணா

ஈனனை, வீணனை, ஏடுஎழுதா முழு
     ஏழையை, மோழையை, ...... அகலாநீள்

மாவினை மூடிய நோய் பிணியாளனை,
     வாய்மை இலாதனை, ...... இகழாதே

மாமணி நூபுர சீதள தாள்தனி
     வாழ்வுற ஈவதும் ...... ஒருநாளே?

நாவலர் பாடிய நூல்இசையால் வரு
     நாரதனார் புகல் ...... குறமாதை

நாடியெ, கானிடை கூடிய சேவக!
     நாயக! மாமயில் ...... உடையோனே!

தேவி, மநோமணி, ஆயி, பராபரை,
     தேன்மொழியாள் தரு ...... சிறியோனே!

சேண் உயர் ஞோலையின் நீழலிலே திகழ்
     சீரலைவாய் வரு ...... பெருமாளே.

பதவுரை

         நாவலர் பாடிய நூல் இசையால் வரு நாரதனார் புகல் குறமாதை நாடியெ --- புலவர்கள் பாடிய நூல்களை இசையால் பரப்பி வருகின்ற நாரத முனிவர் புகன்ற, குறமகளாகிய வள்ளியம்மையாரை நாடிச் சென்று

     கான் இடை கூடிய சேவக --- கானகத்திலே மருவிய வீரரே!

         நாயக --- தலைவரே!

         மாமயில் உடையோனே --- சிறந்த மயிலை வாகனமாக உடையவரே!

         தேவி ---

     மனோமணி ---   மனத்திற்கு இசைந்த மணியும்,

     ஆயி --- அகில உலகங்களுக்கும் அன்னையும்,

     பராபரை ---  பெரிய பொருளும்,

     தேன் மொழியாள் தரு சிறியோனே --- தேன் போன்ற இனிய மொழியை உடையவரும் ஆகிய பார்வதியம்மையார் தந்தருளிய இளம் புதல்வரே!

         சேண் உயர் சோலையின் நீழலிலே திகழ் --- விண்ணளவாக உயர்ந்துள்ள சோலையின் நிழலிலே விளங்குகின்ற

     சீரலைவாய் வரு பெருமாளே --- திருச்செந்தூரில் எழுந்தருளியுள்ள பெருமையின் மிகுந்தவரே!

         ஏவினை நேர் விழி மாதரை மேவிய ஏதனை --- அம்பை நிகர்த்த கண்களையுடைய பெண்களை விரும்பிய, குற்றமுடையவனை,

     மூடனை --- அறிவில்லாதவனை,

     நெறி பேணா ஈனனை --- நல்வழியை விரும்பாத குறைபாடு உடையவனை,

     வீணனை --- வீண்பொழுது போக்குபவனை,

     ஏடு எழுதா முழு ஏழையை --- ஏடு எடுத்து எழுதாத முழுமுட்டாளை,

     மோழையை --- மடையனை,

     அகலா நீள் மாவினை மூடிய நோய் பிணியாளனை --- நீங்காது நீண்டுள்ள பெருவினை மூடிய நோய்களால் கட்டுண்டவனை,

     வாய்மை இலாதனை --- உண்மை இல்லாதவனை,

     இகழாதே --- இகழ்ந்து தள்ளிவிடாமல்,

     மாமணி நூபுர சீதள தாள் --- சிறந்த இரத்தினமணிகள் பதித்த சிலம்புகள் தரித்ததும், குளிர்ச்சியுடையதும் ஆகிய தேவரீருடைய திருவடியை,

     தனி வாழ்வு உற ஈவதும் ஒருநாளே --- ஒப்பற்ற வாழ்வைப் பெறுமாறு அடியேனுக்குத் தந்து உதவுவதும் ஒருநாள் உளதோ?


பொழிப்புரை

         புலவர்கள் பாடிய நூல்களை இசையினால் பாடிப் பரப்பி வருகின்ற நாரத முனிவர் அறிவித்த வள்ளி பிராட்டியை நாடிக் கானகஞ் சென்று அவரை மருவிய வீரரே!

         தனிப்பெருந் தலைவரே!

         சிறந்த மயில் வாகனரே!

         ஒளியுருவமானவரும் மனத்தில் மணியாக இருப்பவரும், எல்லா வுலகங்கட்கும் அன்னையும், பெரும் பொருளும், தேன் போன்ற சொற்களையுடையவரும் ஆகிய உமையம்மையார் பெற்ற இளம் புதல்வரே!

         விண்ணளவாக உயர்ந்து சோலையின் நிழலிலே விளங்குகின்ற திருச்செந்தூரில் எழுந்தருளியுள்ள பெருமிதம் உடையவரே!

         கணைபோன்ற கூரிய கண்களையுடைய பெண்களை விரும்பி குற்றமுடையவனும், மூடனும், நன்னெறியை விரும்பாத குறைபாடுடையவனும், வீண் பொழுது போக்குபவனும், கல்வியறிவே யில்லாத பாமரனும், மடையனும், விட்டு நீங்காது நீண்டுள்ள பெருவினைகள் மூடிய நோய்களால் கட்டுண்டவனும், உண்மையில்லாதவனும் ஆகிய அடியேனை இகழ்ந்து தள்ளிவிடாமல், உயர்ந்த இரத்தின மணிகள் பதித்த சிலம்பணிந்த குளிர்ந்த திருவடியை, அடியேன் ஒப்பில்லாத உயர்ந்த வாழ்வைப் பெறுமாறு தருகின்ற நாள் என்று உண்டாகுமோ? 

விரிவுரை

ஏவினை நேர்விழி மாதர் ---

ஏ - கணை, அம்பு; பெண்களின் கண்கள் கணைபோன்று கூர்மையானவை. கணை நெஞ்சைப் பிளப்பதுபோல் அவர்கள் பார்வையும் மனதைப் பிளக்கும் வன்மையுள்ளது.

ஏதனை ---                             

ஏதம் - குற்றம். மன வாக்கு காயங்களால் குற்றம் உடையவன்.

மூடனை ---

அறிவில்லாதவன்; அறியவேண்டியதை அறியாததும், துன்பத்தை இன்பமாகவும், இன்பத்தைத் துன்பமாகவும் மயங்கியறிந்தும் கெடுகின்றவன்.

நெறி பேணா ஈனனை ---

நெறி - வழி -- உய்யும் வழி. ஆன்மா ஈடேற்றத்திற்கு உரிய நெறியை விரும்பாத குறைபாடு உடையவன். ஈனம் - குறைவு; அங்கவீனன், அறிவீனன் என்பவற்றைக் காண்க.

வீணனை ---

வீண் காரியங்களைச் செய்து வீண்பொழுது போக்குபவன்.  விலைமதிக்க முடியாத இரத்னம் நமது வாழ்நாட்கள். ஒரு நிமிஷம் எத்தனையோ கோடிப் பொன் பெறும். இறைவன் தந்த இந்த அரிய வாழ்நாளை வீழ்நாளாகக் கழிப்பது எத்துணைப் பேதமை.

வேடிச்சி கொங்கை விரும்பும் குமரனை, மெய் அன்பினால்
பாடிக் கசிந்து, உள்ளபோதே கொடாதவர், பாதகத்தால்
தேடிப்புதைத்துத் திருட்டில் கொடுத்துத் திகைத்து இளைத்து
வாடிக் கிலேசித்து வாழ்நாளை வீணுக்கு மாய்ப்பவரே.    ---  கந்தர் அலங்காரம்.

உய்ந்திட வீணாள் படாதருள் புரிவாயே”      ---  (கொம்பனை) திருப்புகழ்.

ஏடு எழுதா முழு ஏழை ---

ஏழை - அறிவில்லாதவன்.
உலக வழக்கில் செல்வமில்லாதவனை ஏழை என்பர்.
நூல் வழக்கில் அறிவில்லாதவன் ஏழை எனப்படுகின்றான்.

மோழை ---

மோழை - மடமை. அறிவின்மையுடையவன் மோழை.

அகலாநீள் மாவினை மூடிய நோய் பிணியாளன் ---

அகலாது நீண்டு மூண்டு மூடிய பெரிய வினையால் எய்தும் நோயினால் கட்டுண்டவன். பிணி-பிணிப்பது.

வாய்மை இல்லாதனை ---

வாய்மை - மனமும் வாக்கும் ஒத்துப் போவது. இதனால் அகத் தூய்மை யுண்டாகும்.

மனத்தொடு வாய்மை மொழியின், தவத்தொடு
தானம் செய்வாரின் தலை.               ---  திருக்குறள்

        
இகழாதே ---

முருகா! தீவினை நிறைந்த சிறியோனை இகழ்ந்து ஒதுக்கி விடாதே. மாதா பிதாக்கள் தமது புதல்வன் எத்துணைத் தீயவனேனும் அவனை யடித்துத் துரத்த மாட்டார்கள்தானே.

   மாசான நாலெண் வகைதனை நீ நானெ னாத அறிவுளம்
    வாயாத பாவி இவனென       நினையாமல்
  மாதாபி தாவி னருணலம் மாறாம காரி லெனையினி
    மாஞான போத மருள் செய   நினைவாயே”        ---  (ஆசாரவீனன்) திருப்புகழ்.

நாவலர் பாடிய நூலிசையால் வரு நாரதர் ---

புலவர்கள் பாடிய பாடல்களை இசையினால் பாடி எங்கெங்கும் பரப்புகின்றவர் நாரத முனிவர். நாரதர் சிறந்த முருகபக்தர். திருப்பரங்குன்றத்தில் ஒரு புறம் தெய்வானை அம்மையாரும் மற்றொரு புறம் நாரத முனிவரும் முருகன் அருகில் வீற்றிருப்பது கண்கூடு. முருகன் அருகில் அமரும் பேறு பெற்றவர் நாரத முனிவர், உலகிற்கு உபகாரமே புரிபவர். கலகம் புரிபவர் என்று உலகம் கூறுவது பிழை. “சீலம் உலாவிய நாரதர்” என்று திருப்புகழில் அருணகிரிநாதர் கூறியிருக்கின்றனர்.

நாரதனன்று சகாய மொழிந்திட
  நாயகி பைம்புன மதுதேடி”    ---  (பாரநறுங்) திருப்புகழ்.

சேண் உயர் சோலையின் நீழலிலே திகழ் சீரலைவாய் ---

சீரலைவாய் - திருச்செந்தூர். வானளாவிய சோலைகள் சூழ்ந்த அரிய திருத்ததலம் திருச்செந்தூர்.

வளரும் வாழையு மஞ்சளும் இஞ்சியும்
  இடைவிடாது நெருங்கிய மங்கல
  மகிமை மாநகர் செந்திலில் வந்தருள் பெருமாளே.   ---  (கமலமாது) திருப்புகழ்.

கருத்துரை

         வள்ளிமணவாளரே! உமை மைந்தரே! செந்திற் கந்தவேளே! உமது திருவடியில் வாழ்வுபெற அருள் புரிவீர்.

No comments:

Post a Comment

பொது --- 1081. இசைந்த ஏறும்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் இசைந்த ஏறும் (பொது) முருகா!  அடியேன் அயர்ந்தபோது வந்து அருள வேண்டும். தனந்த தானந் தனதன தானன ...... தனதான...