அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
காலனார் வெங்கொடும்
(திருச்செந்தூர்)
எமன் வருமுன், மயில் மீது வந்து அருள வேண்டல்
தானனா
தந்தனம் தானனா தந்தனம்
தானனா தந்தனம் ...... தனதான
காலனார்
வெங்கொடுந் தூதர்பா சங்கொடென்
காலினார் தந்துடன் ...... கொடுபோகக்
காதலார்
மைந்தருந் தாயரா ருஞ்சுடுங்
கானமே பின்தொடர்ந் ...... தலறாமுன்
சூலம்வாள்
தண்டுசெஞ் சேவல்கோ தண்டமுஞ்
சூடுதோ ளுந்தடந் ...... திருமார்பும்
தூயதாள்
தண்டையுங் காணஆர் வஞ்செயுந்
தோகைமேல் கோண்டுமுன் ...... வரவேணும்
ஆலகா
லம்பரன் பாலதா கஞ்சிடுந்
தேவர்வா ழன்றுகந் ...... தமுதீயும்
ஆரவா
ரஞ்செயும் வேலைமேல் கண்வளர்ந்
தாதிமா யன்றனன் ...... மருகோனே
சாலிசேர்
சங்கினம் வாவிசூழ் பங்கயஞ்
சாரலார் செந்திலம் ...... பதிவாழ்வே
தாவுசூ
ரஞ்சிமுன் சாயவே கம்பெறுந்
தாரைவே லுந்திடும் ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
காலனார்
வெம் கொடும் தூதர் பாசம் கொடு,
என்
காலின் ஆர் தந்து உடன் ...... கொடுபோக,
காதலார்
மைந்தரும் தாயர் ஆரும் சுடும்
கானமே பின் தொடர்ந்து ...... அலறாமுன்,
சூலம்,வாள், தண்டு, செஞ்சேவல், கோதண்டமும்,
சூடுதோளும், தடம் ...... திருமார்பும்,
தூயதாள்
தண்டையும் காண, ஆர்வம் செயும்
தோகைமேல் கொண்டுமுன் ...... வரவேணும்.
ஆலகாலம்
பரன் பாலதாக, அஞ்சிடும்
தேவர் வாழ, அன்று உகந்து ...... அமுதுஈயும்
ஆரவாரம்
செயும் வேலைமேல் கண்வளர்ந்த
ஆதி மாயன் தன் நன் ...... மருகோனே!
சாலிசேர்
சங்கினம், வாவிசூழ் பங்கயம்,
சாரல் ஆர் செந்தில்அம் ...... பதிவாழ்வே!
தாவுசூர்
அஞ்சி முன் சாய, வேகம் பெறும்
தாரை வேல் உந்திடும் ...... பெருமாளே.
பதவுரை
ஆலகாலம் பரம் பாலது ஆக --- ஆலகால
விடமானது பரம் பொருளான சிவபெருமானிடம் போய்ச் சேர்ந்தபின்,
அஞ்சிடும் தேவர் வாழ --- அந்த விடத்தைக்
கண்டு பயந்தோடிய தேவர்கள் உய்ந்து இன்புற்று வாழுமாறு,
அன்று --- பாற்கடலைக் கடைந்த அந்த நாளில்,
உகந்து அமுது ஈயும் - மகிழ்ச்சியுடன் அத்தேவர்களுக்கு அமுதத்தைக்
கொடுத்தருளியவரும்,
ஆரவாரஞ்செயும் --- பெரிய ஒலியைச் செய்யும்,
வேலை மேல் கண் வளர்ந்த - திருப்பாற்கடலின் மிசை
யோக நித்திரை செய்பவரும்,
ஆதிமாயன் தன் --- சிவபெருமானது ஆதிசக்தியாக
விளங்குபவரும் ஆகிய நாராயணமூர்த்தியின்,
மருகோனே --- திருமருமகனாக எழுந்தருளியவரே!
சாலி சேர் சங்கினம் --- நெல்வயல்களில்
சேர்ந்துள்ள சங்கினங்களும்,
பங்கயஞ் சூழ்வாவி --- தாமரைகள் சூழ்ந்து
நிறைந்துள்ள தடாகங்களும்,
சாரல் ஆர் --- அருகே அமைந்துள்ள அருமையான,
செந்தில் அம்பதி வாழ்வே --- அழகிய
திருச்செந்தூர் என்னும் செழும்பதியில் வாழ்கின்றவரே!
தாவு சூர் அஞ்சி முன் சாய ---
போர்க்களத்தில் தாவிவந்த சூரபன்மன்
முன்னாளில்
பயந்து பின்னிட்டு இரியுமாறு,
வேகம் பெறும் தாரை வேல் உந்திடும் பெருமாளே ---
வேகம் பொருந்திய கூர்மையான
வேலாயுதத்தைச் செலுத்திய பெருமையில் சிறந்தவரே!
காலனார் வெம்கொடும் தூதர் --- இயமனது வெப்பமும் கொடுமையுமுடைய தூதர்கள்,
பாசம் கொடு என் காலின் ஆர்தந்து ---
பாசக்கயிற்றைக் கொண்டுவந்து எனது பிராண வாயுவுடன்
சேர்த்துக்
கட்டி,
உடன்கொடு போக --- தம்முடன் அடியேனுடைய
உயிரைக் கொண்டுபோக,
காதல் ஆர் மைந்தரும் --- மிகுந்த அன்புடைய
பிள்ளைகளும்,
தாயர் ஆரும் --- தாயார் முதலிய அனைவரும்,
சுடுகானம் (ஏ-அசை) பின் தொடர்ந்து ---
சுடுகாடு வரை அடியேனுடைய உடலைப் பின்தொடர்ந்து வந்து,
அலறாமுன் --- வாய்விட்டு கதறியழும் மரண அவத்தை
அடையும் முன்னர்,
சூலம்வாள் தண்டுசெம் சேவல் கோதண்டமும் ---
சூலாயுதம் வாளாயுதம் தண்டாயுதம் அழகிய சேவற்கொடி வில் இவைகளை,
சூடு தோளும் --- அணிந்து கொண்டுள்ள
தோள்களையும்,
தடம் திரு மார்பும் --- விசாலமான அழகிய
மார்பையும்,
தூய தாள் தண்டையும் --- பரிசுத்தமான
பாதங்களையும் அவைகளில் அணிந்துள்ள தண்டையையும்,
காண --- அடியேன் தரிசிக்கும் வண்ணம்,
ஆர்வம் செயும் தோகை மேல் கொண்டு --- அன்பு
செய்கின்ற மயில்வாகனத்தின் மிசை ஊர்ந்து,
முன் வரவேணும் --- அடியேன் முன்னே வந்து
திருவருள் புரியவேண்டும்.
பொழிப்புரை
ஆலகால விடமானது பரம் பொருளாகிய
சிவபெருமானிடஞ் சேர்ந்தபின், அவ்விடத்தைக் கண்டு
அஞ்சி ஓடிய தேவர்கள் வாழுமாறு திருப்பாற்கடலைக் கடைந்த அந்நாளில் மகிழ்ச்சியுடன்
அத்தேவர்களுக்கு அமிர்தத்தை நல்கிவரும், ஆரவாரிக்கும்
பாற்கடலில் பள்ளிகொண்டு அறிதுயில் புரியும் சிவபெருமானது ஆதிசக்தியும் ஆகிய
நாராயணரது திருமருகரே!
செந்நெல் வயல்களில் சேர்ந்துள்ள
சங்கினங்களும், தாமரைகள் நிறைந்துள்ள
தடாகங்களும் சோந்துள்ளதும் அருமையும் அழகியதுமாகிய திருச்செந்தூர் என்னும்
தலத்தில் வாழ்கின்றவரே!
போருக்குத் தாவி வந்த சூரபன்மன் எதிர்
நிற்க முடியாது அஞ்சிப் பிறகிட்டு இரியுமாறு வேகம் பெற்ற கூரிய வேலாயுதத்தைச்
செலுத்திய பெருமையில் சிறந்தவரே!
வெப்பமும் கொடுமையும் கோபமும் உடைய
காலதூதர்கள் பாசக்கயிற்றைக் கொண்டு வந்து என்னுடைய பிராணவாயுவுடன் சேர்த்துக்
கட்டி தங்களுடன் என்னைக் கொண்டுபோக,
என்னிடத்தன்புள்ள
மைந்தரும் தாயாரும் ஏனைய உறவினரும் என் சடலத்துடன் தொடர்ந்து சுடுகாடு மட்டும்
வந்து வாய்விட்டுக் கதறி அலறி அழுகின்ற அந்த மரணாவஸ்தை யடையாமுன், அடியேனைக் காப்பாற்றுவதற்காக சூலம், வாள், தண்டு செஞ்சேவற்கொடி, வில் இந்த ஆயுதங்களைச் சூடுகின்ற
பன்னிரு தோள்களையும் விசாலமான அழகிய மார்பையும் தூய்மையான திருவடிகளையும்
திருவடியிலணிந்துள்ள தண்டையி னையும் அடியேன் தெரிசிக்குமாறு தம்மிடத்தில் அன்பு
புரியும் தோகை மயிலின் மீது ஊர்ந்து அடியேன் முன்வந்து அருள்புரிய வேண்டும்.
விரிவுரை
காலனார்.............................அலறாமுன் ---
இயம
தூதர்கள் பாசக்கயிற்றால் கட்டி உயிரைப் பற்றிச் செல்லுங்கால், உடலுக்குத் துணைவர்களாகிய உறவினரால்
காத்தற்கு இயலாது. சுடுகாடு மட்டும் தொடர்ந்து வந்து கதறியழுவார்கள். உயிர்த் துணைவராகிய
முருகப்பெருமான் திருவருள் ஒன்றே துணை செய்து காப்பாற்றும். எனவே இயம தூதுவர்
பற்றிக் கொண்டுபோய் நரகத்திலிட்டு வருத்துவர். அவ் விபத்து வருமுன் ஆண்டவனுடைய
தெரிசனத்தை விரும்புகிறார்.
சூலம்வாள்................................வரவேணும் ---
கால
தூதுவர்கள் வெருவிப் பிறகிட்டு ஓடுதற் பொருட்டு சூலம் முதலிய ஆயுதங்களுடன்
வரவேணுமென்றனர்.
ஆலகாலம்
பரன் பாலது ஆக
---
தேவர்கள், நரை திரை மூப்பு பரணம் என்னுந்
துன்பங்களால் வருந்தியதால்,திருமாலிடன் அத்துன்ப
நீக்கத்திற்கு வழி யாதென வினவ, திருமால் பாற்கடலைக்
கடைந்து அமிர்த முண்டால் அத்துன்பங்கள் அணுகாவென, அமரருடன் பாற்கடலைக் கடைந்த காலத்தில்
விநாயக வழிபாடு செய்யாமையால் ஆலகால விடந்தோன்ற, அவ் விடத்தீமையைக் கண்டு நாரணனாதி தேவர்
வெருவியோடி முக்கட்பெருமான் பால் முறையிட சிவபெருமான் தேவர்களைக் காப்பாற்றும்
பொருட்டு ஒருவரும் அணுக முடியாத விடத்தை எடுத்து அகத்தேயுள்ள ஆன்மாக்களும், புறத்தே யுள்ள ஆன்மாக்களும்
உய்தற்பொருட்டு, புறத்திலும்
வைக்காமல், அகத்திலும் வைக்காமல்
இரண்டிற்கும் மத்தியமாகிய கண்டத்தில் வைத்து அகத்தும் புறத்தும் உள்ள ஆன்ம
கோடிகளைக் காப்பாற்றித் திருநீலகண்டராகத் திகழ்ந்தனர்.
தேவர்வாழ...................அமுது
ஈயும்
---
பின்னர்
விநாயக வழிபாடு புரிந்து பாற்கடலைக் கடைய அமிர்தம் தோன்றியது.திருமால் ஜகன்மோகினி
வடிவந்தாங்கி அமரர்கள் இன்புற்று வாழுமாறு அமிர்தத்தை அவர்களுக்கு நல்கினார்.
தாவுசூர்................தாரைவேல் ---
ஒருவராலும்
வெல்லுதற்கு முடியாத சூரபன்மன் அஞ்சி ஓடுமாறு கூரியவேலைச் செலுத்தினர். அதன்
தத்துவமாவது; சூரபன்மன் என்பது
ஆணவமலம். அது மிகவும் வலிமையுடையது. இறைவன் திருவருள் ஞானத் தாலன்றி வெல்லுதற்கு
முடியாது. ஆணவமலம், நான் எனது என்ற பற்றை
விளைவிக்கும். அதனால் சூரபன்மனை இரு பிளவாக வேலாயுதம் பிளந்தது. வேல் என்பது
ஞானம். அந்த ஞானம் ஆழ்ந்தும் அகன்றும் கூர்மையாகவும் இருத்தல் வேண்டும்.
வேற்படையானது அடித்தண்டு நீண்டு இலையின் நடுப்பாகம் விசாலித்தும் முனை மிகவும்
கூர்மையாகவும் இருப்பதை நுனித்துணர்க. “ஆழ்ந்த கன்ற நுண்ணியனே” என்பது திருவாசகம்.
ஞானபண்டிதராம்
குமாரக்கடவுள் கரத்திலே ஞானசக்தியாம் கூரிய வேலாயுதம் விளங்குவதையும், படையின் வடிவ அமைப்பையும் உணர்க.
கருத்துரை
தேவர்களுக்கு அமிர்தத்தை நல்கிய அறிதுயில்
அமர்ந்தோனது மருகரே! செந்திலம்பதியில் வாழ்பவரே! சூரனை வென்ற வேற்படையை உடையவரே!
காலதூதர்கள் வந்து உயிரைப் பற்றிச் செல்லுமுன், சூலம் முதலிய ஆயுதங்களுடன் மயில் மிசை
வந்து அருள் புரியவேண்டும்.
No comments:
Post a Comment