அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
தெருப்புறத்து
(திருச்செந்தூர்)
மாதர் மயலை நீக்கி அருள
தனத்த
தத்தத் தனத்தனா
தனத்த தத்தத் தனத்தனா
தனத்த தத்தத் தனத்தனா ...... தந்ததான தனனா
தெருப்பு
றத்துத் துவக்கியாய்
முலைக்கு வட்டைக் குலுக்கியாய்
சிரித்து ருக்கித் தருக்கியே ...... பண்டைகூள
மெனவாழ்
சிறுக்கி
ரட்சைக் கிதக்கியாய்
மனத்தை வைத்துக் கனத்தபேர்
தியக்க முற்றுத் தவிக்கவே ...... கண்டுபேசி யுடனே
இருப்ப
கத்துத் தளத்துமேல்
விளக்கெ டுத்துப் படுத்துமே
லிருத்தி வைத்துப் பசப்பியே ...... கொண்டுகாசு
தணியா
திதுக்க
துக்குக் கடப்படா
மெனக்கை கக்கக் கழற்றியே
இளைக்க விட்டுத் துரத்துவார் ...... தங்கள்சேர்வை
தவிராய்
பொருப்பை
யொக்கப் பணைத்ததோ
ரிரட்டி பத்துப் புயத்தினால்
பொறுத்த பத்துச் சிரத்தினால் ...... மண்டுகோப
முடனே
பொரப்பொ
ருப்பிற் கதித்தபோ
ரரக்கர் பட்டுப் பதைக்கவே
புடைத்து முட்டத் துணித்தமா ...... லன்புகூரு
மருகா
வரப்பை
யெட்டிக் குதித்துமே
லிடத்தில் வட்டத் தளத்திலே
மதர்த்த முத்தைக் குவட்டியே ...... நின்றுசேலி
னினம்வாழ்
வயற்பு
றத்துப் புவிக்குள்நீள்
திருத்த ணிக்குட் சிறப்பில்வாழ்
வயத்த நித்தத் துவத்தனே ...... செந்தில்மேவு
குகனே.
பதம் பிரித்தல்
தெருப்
புறத்துத் துவக்கியாய்,
முலைக் குவட்டைக் குலுக்கியாய்,
சிரித்து உருக்கித் தருக்கியே, ...... பண்டைகூளம், எனவாழ்
சிறுக்கி
ரட்சைக்கு இதக்கியாய்,
மனத்தை வைத்து, கனத்தபேர்
தியக்கம் உற்றுத் தவிக்கவே ...... கண்டுபேசி, உடனே
இருப்பு
அகத்துத் தளத்துமேல்
விளக்கு எடுத்துப் படுத்து,மேல்
இருத்தி வைத்துப் பசப்பியே ...... கொண்டு, காசு தணியாது
"இதுக்கு
அதுக்கு" கடப் படாம்
எனக் கை கக்கக் கழற்றியே,
இளைக்க விட்டுத் துரத்துவார், ...... தங்கள் சேர்வை
தவிராய்,
பொருப்பை
ஒக்கப் பணைத்தது, ஓர்
இரட்டி பத்துப் புயத்தினால்
பொறுத்த பத்துச் சிரத்தினால் ......
மண்டுகோபம் உடனே
பொரப் பொருப்பில் கதித்த போர்
அரக்கர் பட்டுப் பதைக்கவே,
புடைத்து முட்டத் துணித்தமால் ......
அன்புகூரு மருகா,
வரப்பை
எட்டிக் குதித்து, மேல்
இடத்தில், வட்டத் தளத்திலே,
மதர்த்த முத்தைக் குவட்டியே ......நின்று,சேலின் இனம்வாழ்
வயல்
புறத்துப் புவிக்குள் நீள்
திருத்தணிக்குள் சிறப்பில் வாழ்
வயத்த, நித்தத் துவத்தனே, ...... செந்தில்மேவு குகனே.
பதவுரை
பொருப்பை ஒக்க பணைத்த --- மலையை
நிகர்த்துப் பருத்தனவாம்,
ஓர் இரட்டி பத்து புயத்தினால் --- ஒப்பற்ற
இருபது தோள்களினாலும்,
பொறுத்த பத்து சிரத்தினால் --- தாங்கியுள்ள
பத்துத் தலைகளினாலும்,
மண்டு கோபம் உடனே --- மூண்டெழுந்த கோபத்துடன்,
பொர --- போர் செய்ய,
பொருப்பில் கதித்த போர் அரக்கர் --- மலைபோல்
கொதித்து எழுந்து போர் புரியும் அசுரர்கள் அனைவரும்,
பட்டு பதைக்கவே புடைத்து --- சிதைந்து பதை
பதைக்குமாறு அடித்து,
முட்ட துணித்த மால் --- எல்லோரையும் வெட்டி
ஒழித்த ஸ்ரீராமர்,
அன்பு கூரு மருகா --- அன்பு மிகவுங்கொண்டுள்ள
திருமருகரே!
வரப்பை ஒட்டி குதித்து --- வயலின்
வரப்பின் மீது தாவிக்குதித்து,
மேல் இடத்தில் வட்ட தளத்திலே --- வயலின்
மேல்பகுதியில் வட்டமான நிலப்பரப்பில்
மதர்த்த முத்தை குவட்டியே நின்று --- செழித்த
முத்துக்களை ஒன்றுபடக் குவித்துக் கூட்டிநின்று,
சேலின் இனம் வாழ் --- சேல் மீன் கூட்டங்கள்
வாழும்,
வயல் புறத்து --- வயல் புறங்களைக் கொண்ட,
புவிக்குள் நீள் --- இப் பூதலத்தில் புகழால்
ஓங்கிய,
திருத்தணிக்குள் --- திருத்தணிகை என்ற
திருத்தலத்தில்,
சிறப்பில் வாழ் --- சிறப்புடன் வாழ்கின்ற,
வயத்த --- வெற்றியினரே!
நித்தத் துவத்தனே --- என்றும் உள்ளவரே!
செந்தில் மேவு குகனே ---
திருச்செந்தூரில் எழுந்தருளியுள்ள குகப்பெருமானே!
தெரு புறத்துத் துவக்கியாய் ---
தெருவின் வெளிப்புறத்திலேயே எப்போதும் கட்டுண்டவர்போல் நிற்பவராய்,
முலைக் குவட்டை குலுக்கியாய் --- மலைபோன்ற
தனங்களை அசைப்பவராய்,
சிரித்து --- ஆடவரை மயக்கும் பொருட்டு
புன்னகை புரிந்தும்,
உருக்கி --- ஆண்களின் உள்ளத்தை உருக்கியும்,
தருக்கியே --- நம்மினும் உயர்ந்தவர் இல்லை
என்று அகங்கரித்தும்,
பண்டை கூளம் என வாழ் --- பழைய குப்பை என்று
வாழ்கின்ற,
சிறுக்கி --- இளம் பருவமுள்ள விலைமகளிர்,
ரட்சைக்கு இதக்கியாய் --- தம்மை
விரும்புவோரைக் காத்தளிப்பவரைப் போல இனிய மொழிகளை மொழிகின்றவராய்,
மனத்தை வைத்து --- செல்வத்தின் மீது மனத்தை
வைத்து,
கனத்த பேர் தியக்கமுற்று தவிக்கவே --- பலமான
பேர்வழிகள் கூட மயக்கங்கொண்டுத் தவிக்குமாறு,
கண்டு பேசி --- அவர்களைப் பார்த்துப்
பேசியும்,
உடனே இருப்பு அகத்து தளத்து மேல் --- உடனே
அந்த ஆடவரைத் தமது இருப்பிடமான வீட்டின் மேல் தளத்தில் கொண்டுபோய்,
விளக்கு எடுத்து --- விளக்கை எடுத்துவிட்டு,
படுத்து மேல் இருத்தி வைத்து --- சயனித்து
மேலே இருக்குமாறு வைத்து,
பசப்பியே கொண்டு --- பசப்பு நடிப்புகளை
நடித்துக்கொண்டு,
காசு தணியாது --- கொடுத்த பணம் போதாது,
இதுக்கு அதுக்கு --- “இதற்கு வேண்டும்
அதற்குவேண்டும்” என்று கூறி,
கடபடாம் என --- கடபடம் என்று ஜகஜாலப்
பேச்சுக்களைப் பேசி,
கை கக்க கழற்றியே --- கையில் உள்ள
பொருள்களைக் கக்குமாறு செய்து பிடுங்கி,
இளைக்கவிட்டு துரத்துவார் --- பின்னர்
சோர்வுற்றுப் போகும்படித் துரத்துகின்ற பொது மாதர்களின்,
தங்கள் சேர்வை தவிராய் --- அவர்களுடைய நட்பை அகற்றி
அருளுவீர்.
பொழிப்புரை
மலையை நிகர்த்துப் பருத்துள்ள இருபது
புயங்களாலும், (மகுடத்தை)
தாங்கியுள்ள பத்துத் தலைகளாலும்,
மிகுந்த
கோபத்துடன் (இராவணன்) போர் புரிய,
அவனுடன்
மலைபோல் கொதித்து எழுந்துபோர் புரிந்த அசுரர்கள் சிதைந்து பதைபதைக்குமாறு அடித்து, எல்லோரையைும் வெட்டியழித்த திருமாலின்
அவதாரமாகிய ஸ்ரீராமர், அன்பு மிகவும்
கொண்டுள்ள திருமருகரே!
வயலின் வரப்பின்மீது தாவிக் குதித்து
மேல் பகுதியில் வட்டமாகவுள்ள நிலப்பரப்பின் மீது வளமையாகவுள்ள முத்துக்களைக்
குவித்து விளையாடுகின்ற மீன் கூட்டங்கள் வாழ்கின்ற வயற்புறங்களைக் கொண்ட, பூதலத்தில் புகழால் நீண்ட திருத்தணியில்
சிறப்புடன் வாழ்கின்ற வெற்றியாளரே!
என்றும் உள்ளவரே!
திருச்செந்தூரில் வாழுகின்ற குகப்
பெருமானே!
நடுத் தெருவிலேயே கட்டுண்டு நிற்பவராய், மலைபோன்ற தனங்களை அசைப்பவராய், (ஆடவர் மயங்குமாறு) சிரிப்பவராய், அவருடைய உள்ளத்தை உருக்கி, தருக்கி பழைய குப்பை என உதவாக்கரையாக
வாழ்கின்ற இளம் பொதுமகளிர், காத்து ரட்சிப்பவர்
போல் இனிய சொற்களைப் புகல்பவராய்,
செல்வத்தில்
மனத்தை வைத்து, பலமான பேர்வழிகளையும்
தியங்க வைத்துப் பரதவிக்குமாறு,
அவர்களைக்
கண்டு பேசி, உடனே தாங்கள்
இருக்கும் வீட்டுக்கு அழைத்துக் கொண்டுபோய், மேல்மாடியில் வைத்து, விளக்கை நிறுத்தி, சயனித்து, ஆடவரை இருத்திப் பசப்புரைப் பகன்று, அவர்கள் தந்த பணம் போதாது என்று கூறி, கடம்படம் என்று உருட்டி கைப்பணத்தைக்
கக்குமாறு செய்து, அவர்கள் இளைத்தவுடன்
அவர்களை வீட்டைவிட்டு விரட்டியடிக்கும் விலைமாதர்களின் நட்பைத் தவிர்த்து அருள்
புரிவீர்.
விரிவுரை
தெருப்புறத்து
.........சிரித்து உருக்கித் தருக்கியே :-
விலைமகளிர்
தமது தெருவழியே வரும் இளைஞர்களைக் கண்ணெனும் வலைவீசிப் பிடித்துப் பொருள்
பறிக்கும் நோக்கமுடன் சதா தெருவிலேயே நின்று கொண்டிருப்பர். அடிக்கடி ஆடவரை
நோக்கிக் காரணமின்றியே சிரித்து மனத்தை உருக்குவர்.
“நகைகொளு மவர்கள்
உடைமை மனமுடனே பறிப்பவர்கள்”.
“முலையிலுறு
துகில்சரிய நடுவீதி நிற்பவர்கள்”
--- (குமரகுருபர
முருககுகனே) திருப்புகழ்.
தருக்கு
---
அகங்காரம், நம்மினும் அழகுடையார் ஒருவரும்
இல்லையென்று கருதி அகங்கரித்திருப்பர்.
பண்டை
கூளம் எனவாழ் சிறுக்கி ---
கூளம்-குப்பை, பழமையான குப்பைப்போன்று மிகவும்
சீர்கேடானவர் அம்மகளிர் என உரைக்கின்றார்.
ரட்சைக்கு
இதக்கியாய்
---
தம்மிடம்
வரும் ஆடவரைத் தாமே எந்நாளும் இனிது காத்தருள்பவரைப் போல் நடித்து, இன்னுரை புகன்று இதம் பதமாக நடப்பர்.
மனத்தை
வைத்து
---
இங்கே
செல்வத்தின் மேல் மனத்தை வைப்பவர் எனப்பொருள் செய்யப் பெற்றது. செல்வம் என்பதை
அவாய் நிலையாகக் கொள்க.
கனத்த பேர்
தியக்கம் உற்றுத் தவிக்கவே ---
மிகவுஞ்
சமர்த்தரான பேர்வழிகளும், அப்பொது மகளிரின்
சாகசத்தில் மயங்கி அறிவு தியங்கித் தவிப்பர். அத்துணை மாய வித்தையை அம்மகளிர்
புரிவர்.
இருப்பு அகத்துத்
தளத்து மேல்
---
தம்மைக்
கண்டு மதிமயங்கி, கதிகலங்கி நின்ற
ஆடவர்களை “ஏன் இங்கு நிற்க வேண்டும்; உங்கள்
பாதம் பட்டால் போதும் வாருங்கள்;
இதோ
என் வீடு; இன்று உங்களைக் கண்டதனால்
என் மனம் அளவற்ற மகிழ்ச்சி அடைகின்றது. இன்று நான் கடைத்தேறும் நாள்.
தாமதிக்கவேண்டாம். வாருங்கள்” என்று கனியமுதம் போன்ற இனியவுரை கூறி அழைத்துச்
செல்வர்.
கொண்டு
காசு தணியாது
---
எவ்வளவு
காசு தந்தாலும், மேலும் மேலும் பறிக்க
வேண்டும் என்ற ஆசையாளராயிருப்பர்?
நெருப்பில்
எத்துணை நெய் விடினும் அது தணியாது. மேலும், கொழுந்து விட்டு எரிவது போல, அவர்கள் ஆசை நெருப்புக்குப் பொருள் நெய்
போல ஆகும்.
இதுக்கு
அதுக்கு
---
“புடவை எடுக்கவேண்டும், நகை வாங்கவேண்டும், வீடு வாங்கவேண்டும், கடன் தீர்க்கவேண்டும்” என்றெல்லாம் கூறி, தம்பால் தரும் தனவந்தரிடம் மெல்ல
மெல்லப் பொருளைப் பறிப்பர்.
கடபடா
மென
---
கடபட
மென ஒலித்து உருட்டிப் பேசுதல்-இப்படிச் சில புலவர்களும் உருட்டிப் பேசுவர்.
கற்றதும்
கேட்டதும் தானே ஏதுக்காக,
கடபடம்என்று
உருட்டுதற்கோ, கல்லால் எம்மான்
குற்றம்அறக்
கைகாட்டும் கருத்தைக் கண்டு
குணங்குறி
அற்று இன்பநிலை கூடஅன்றோ? ---
தாயுமானார்.
கை
கக்கக் கழற்றியே ---
கையிலே
உள்ள காசுகளை எப்படியும் கக்குமாறு புரட்சிகள் புரிவர். அவர்கள் மயலில் சிக்கிய
மாந்தர் மதிமயங்கி உள்ள பொருள் எல்லாவற்றையும் தந்துவிட்டு, ஓட்டாண்டி ஆவர்.
இளைக்கவிட்டு
துரத்துவார் ---
கை
வரண்டு போனவர்களை அதிர்வெடி வைத்து முடுக்கி விரட்டித் துரத்தியடிப்பார்கள்.
நா ஆர
வேண்டும் இதம்சொல்லுவார், உனை நான்பிரிந்தால்
சாவேன்
என்றே இருந்து ஒக்க உண்பார்கள், கைதான் வறண்டால்
போய் வாரும்
என்று நடுத்தலைக்கே குட்டும் பூவையருக்கு
ஈவார், தலைவிதியோ இறைவா கச்சி ஏகம்பனே. --- பட்டினத்தார்.
தங்கள்
சேர்வை தவிராய் ---
“இத்தகைய
பொதுமகளிருடைய நட்பு இம்மை மறுமை இரண்டையும் அழிக்கும். ஆதலால் முருகா அவருடன்
சேரும் தீமையிலிருந்து என்னை விலக்கிக் காப்பாற்றி யருள்வீர்” என்று அருணகிரிநாதர், மன்மதனை எரித்த கனற்கண்ணில் வந்த ஞான
பண்டிதனை வேண்டுகின்றார்.
பொருப்பை
ஒக்கப் பணைத்தது ஓர் .......துணித்தமால் ---
5வது 6வது அடிகளில் இராவண சங்காரத்தைப் பற்றி
சுவாமிகள் கூறுகின்றார். இராவணன் பிறன்மனை நயத்தல் என்ற பெரும்பிழை செய்தான்.
அதனால் குலத்தோடும் பிற நலத்தோடும் மாய்ந்து ஒழிந்தான்.
அறன்கடை
நின்றாருள் எல்லாம் பிறன்கடை
நின்றாரில்
பேதையாரு இல். --- திருக்குறள்.
பத்தினியிருக்க, அவளைப் புறக்கணித்து, மற்றொருவன் பத்தினியை விரும்பி அவள்பால்
ஏக்குற்று நிற்பவனே மூடர்கள் கூட்டத்திற்குத் தலைவன்.
இதனைக்
கும்பகர்ணன் தன் தமயனை நோக்கி அழகாக இடித்து அறவுரைப் பகர்ந்தான்.
நன்னக
ரழிந்ததென நாணினை நயத்தால்
உன்னுயி
ரெனத்தகைய தேவியர்கள் உன்மேல்
இன்னகை
தரத்தர ஒருத்தன் மனையுற்றாள்
பொன்னடி
தொழத்தொழ மறுத்தல் புகழ் போலாம்.
மாரீசன்
இராவணனை நோக்கி யுரைக்கின்றான்.
நாரங்
கொண்டார் நாடுகவர்ந்தார் நடையல்லா
வாரங்
கொண்டார் மற்றொருவர்க்காய் மனைவாழும்
தாரங்
கொண்டார் என்றிவர் தம்மைத் தருமந்தான்
ஈருங்
கண்டாய் கண்டகர் உய்ந்தார் எவரையா?
புவிக்குள்
நீள் திருத்தணி ---
திருத்தணி
உலகுக்கு உயிர் போன்றது. தெரிசிப்பார் வினைகளைத் தணிப்பது. அதனால் தணிகை எனப்பெயர்
பெற்றது. “வரையிடங்களில் சிறந்தது தணிகை மால்வரையே” என்ற கந்த புராணத்
திருவாக்காலறிக.
வயத்த ---
வயம்-வெற்றி, வெற்றியை யுடையவன் முருகன், வெற்றி வேற்பரமன்.
நித்துத்துவனே ---
நித்தம்-அழிவில்லாதது.
நித்தத்துவன்-அழிவில்லாதவன்; என்றும் உள்ள
பரம்பொருள் குமரவேள். அப்பரமனையன்றி ஏனைய அனைத்தும் அநித்த மானவை. ஆகவே நித்தப்
பொருளாகிய இறைவனைச் சார்தல் வேண்டும்.
“நிதியே நித்தியமே என்
நினைவே” --- (மதியால்) திருப்புகழ்.
நாம் அழிகின்ற பொருளைச் சார்ந்தால் அழிவைப்
பெறுவோம், அழிவற்ற பொருளைச்
சார்ந்தால் அழிவின்மையைப் பெறுவோம்.
சார்புணர்ந்து
சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்
சார்தரா
சார்தரு நோய். ---
திருக்குறள்.
ஆகவே
எல்லா ஆன்மாக்களும் நித்தப்பொருளாகிய நிமலனைச் சார்ந்து நித்தத்துவத்தைப்
பெறுவார்களாக.
கருத்துரை
திருமால் மருகரே! தணிகாசலபதியே! செந்திலாண்டவரே!
மாதர் நட்பை நீக்கி யருள்புரிவீர்.
No comments:
Post a Comment