திருச்செந்தூர் - 0070. தோலொடு மூடிய


அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

தோலொடு மூடிய (திருச்செந்தூர்)

முருகா!
உலகத் துன்பம் அற,
திருவருள் புரிந்து மெய்ஞ்ஞான தவத்தைத் உண்டாக்கச் செய்யாதோ?


தானன தானன தானன தந்தத்
     தானன தானன தானன தந்தத்
     தானன தானன தானன தந்தத் ...... தனதான


தோலொடு மூடிய கூரையை நம்பிப்
     பாவையர் தோதக லீலைநி ரம்பிச்
     சூழ்பொருள் தேடிட வோடிவ ருந்திப் ...... புதிதான

தூதொடு நான்மணி மாலைப்ர பந்தக்
     கோவையு லாமடல் கூறிய ழுந்தித்
     தோமுறு காளையர் வாசல்தொ றும்புக் ...... கலமாருங்

காலனை வீணனை நீதிகெ டும்பொய்க்
     கோளனை மானமி லாவழி நெஞ்சக்
     காதக லோபவ்ரு தாவனை நிந்தைப் ......புலையேனைக்

காரண காரிய லோகப்ர பஞ்சச்
     சோகமெ லாமற வாழ்வுற நம்பிற்
     காசறு வாரிமெய்ஞ் ஞானத வஞ்சற் ...... றருளாதோ

பாலன மீதும னான்முக செம்பொற்
     பாலனை மோதப ராதன பண்டப்
     பாரிய மாருதி தோள்மிசை கொண்டுற் ...... றமராடிப்

பாவியி ராவண னார்தலை சிந்திச்
     சீரிய வீடணர் வாழ்வுற மன்றற்
     பாவையர் தோள்புணர் மாதுலர் சிந்தைக் .கினியோனே

சீலமு லாவிய நாரதர் வந்துற்
     றீதவள் வாழ்புன மாமென முந்தித்
     தேமொழி பாளித கோமள இன்பக் ...... கிரிதோய்வாய்

சேலொடு வாளைவ ரால்கள்கி ளம்பித்
     தாறுகொள் பூகம ளாவிய இன்பச்
     சீரலை வாய்நகர் மேவிய கந்தப் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


தோலொடு மூடிய கூரையை நம்பி,
     பாவையர் தோதக லீலை நிரம்பி,
     சூழ்பொருள் தேடிட ஓடி வருந்தி, ...... புதிதான

தூதொடு நான்மணி மாலை ப்ரபந்தக்
     கோவை உலாமடல் கூறி அழுந்தி,
     தோம்உறு காளையர் வாசல் தொறும் புக்கு ......அலமாரும்

காலனை, வீணனை, நீதி கெடும் பொய்க்
     கோளனை, மானம் இலாவழி நெஞ்ச,
     காதக லோப வ்ருதாவனை, நிந்தைப்......புலையேனை,

காரண காரிய லோக ப்ரபஞ்சச்
     சோகம் எலாம் அற, வாழ்வுற நம்பில்
     காசுஅறு வாரி மெய்ஞ்ஞான தவம் சற்று ...... அருளாதோ?

பால் அன மீது மன் நான்முக செம்பொன்
     பாலனை, மோது அபராதன! பண்டு அப்
     பாரிய மாருதி தோள்மிசை கொண்டுஉற்று ....அமராடிப்

பாவி இராவணனார் தலை சிந்தி,
     சீரிய வீடணர் வாழ்வு உற, மன்றல்
     பாவையர் தோள்புணர் மாதுலர் சிந்தைக்கு.....இனியோனே!

சீலம் உலாவிய நாரதர் வந்து உற்று,
     ஈது அவள் வாழ்புனம் ஆம்என, முந்தித்
     தேமொழி பாளித கோமள இன்பக் ...... கிரிதோய்வாய்!

சேலொடு வாளை வரால்கள் கிளம்பி,
     தாறுகொள் பூகம் அளாவிய இன்பச்
     சீரலை வாய்நகர் மேவிய கந்தப் ...... பெருமாளே.


பதவுரை

      பால் அன மீது மன் --- பால்போன்ற வெண்ணிறமுடைய அன்னவாகனத்தின் மீது நிலைபெற்றவனும்,

     நான்முக --- நான்கு முகங்களை உடையவனும்,

     செம்பொன் பாலனை --- சிவந்த இலக்குமிதேவியின் குமாரனுமாகிய பிரமதேவனை,

     மோது அபராதன --- (பிரணவப் பொருள் வினவி அது கூறாது விழித்தமையால்) கரங்களால் மோதித் தண்டனையைப் புரிந்தவரே!

      பண்டு அ பாரிய மாருதி தோள்மிசை கொண்டு உற்று --- முன்னாளில் பருத்த வடிவுடைய அந்த அநுமனது தோள்மிசை யூர்ந்து (இலங்கையை) அடைந்து,

     அமர் ஆடி --- போர் புரிந்து,

     பாவி இராவணனார் தலை சிந்தி --- கொடும் பாவியாகிய இராவணனது தலைகள் பத்தையும் அறுத்துக் கீழே விழ்த்தி,

     சிரீய வீடணர் வாழ்வுற --- சிறப்புடைய விபீஷணர் இலங்கைக்கு அரசனாகி இன்புற்று வாழ்வுறச் செய்து,

     மன்றல் பாவையர் தோள்புணர் --- வாசனைத் தங்கிய சீதையென்னும் திருமகள், ஜெயத்தால் வந்த ஜெயமகளென்னும் இரு மகளிரது புயத்தில் சேர்ந்த,

     மாதுலர் சிந்தைக்கு இனியோனே --- திருமாமனாகிய நாராயண மூர்த்தியினது உள்ளத்திற்கு இனிமையான மருகோனே!

      சீலம் உலாவிய நாரதர் வந்து உற்று --- நல்லொழுக்கத்திற் சிறந்த நாரதமுனிவர் திருத்தணிகை மாமலையில் வந்தடைந்து (முருகவேளை அழைத்தேகி),

     ஈது அவள் வாழ் புனமாம் என --- வள்ளியம்மையார் வாழ்கின்ற தினைப்புனம் இதுதான் என்று காட்ட,

     முந்தி --- முன்னாளில்,

     தே மொழி --- தேன்போன்ற இனிய மொழியை உடையவரும்,

     பாளித --- சந்தனக் குழம்புகளை அணிந்தவரும்,

     கோமள --- இளமை உடையவரும்,

     இன்பக் கிரி தோய்வாய் --- இன்பமலை போன்றவருமாகிய வள்ளிநாயகியைப் பொருந்தியவரே!

      சேலொடு வாளை வரால்கள் கிளம்பி --- சேற் கெண்டைகளும், வாளை மீன்களும், வரால் மீன்களுந் துள்ளியெழுந்து,

     தாறுகொள் பூகம் அளாவிய --- குலைகளையுடைய கமுகு மரங்களில் விளையாடும்,

     இன்ப --- இன்பத்தையுடைய,

     சீரலைவாய் நகர் மேவிய கந்த --- திருச்சீரலைவாய் என்னும் செந்திலம்பதியில் விரும்பி உறைகின்ற கந்தமூர்த்தியே!

     பெருமாளே --- பெருமையிற் சிறந்தவரே!

      தோலொடு மூடிய கூரையை --- தோலாலே மூடி வைத்துள்ள சிறுகுடிலை (உடம்பை),

     நம்பி --- நிலைத்திருக்கும் என நம்பி,

     பாவையர் தோதக லீலை நிரம்பி --- பெண்களது, வஞ்சகத்தையுடைய காமலீலை மிகுந்து,

     சூழ்பொருள் தேடிட --- நிலையின்றி சுற்றுகின்ற செல்வத்தை ஈட்டுதற் பொருட்டு,

     ஓடி வருந்தி --- பல திசைகளிலும் ஓடி மிகவும் வருத்தமுற்று,

     புதிதான --- நூதனமான,

     தூது ஓடு நான் மணிமாலை ப்ரபந்த கோவை உலா மடல் கூறி --- தூது, நாண்மணிமாலை, கோவை, உலா, மடல் முதலிய பிரபந்தங்களை அந்த நரர்கள்மீது பாடி,

     அழுந்தி --- அந் நரத் துதியிலேயே அழுந்திய மனத்தை உடையனாகி,

     தோம் உறு காளையர் --- குற்றம் நிறைந்த ஆடவருடைய

     வாசல்தொறும் புக்கு --- வீடுகள் தோறும் புகுந்து,

     அலமாரும் --- அலைந்து திரியும்,

     காலனை --- கால்களையுடையவனை,

     வீணனை --- வீணே நாள் போக்குபவனை,

     நீதிகெடும் பொய் கோளனை --- நீதிநெறி கெட்ட பொய்யே பேசும் தன்மையுடைய கோள் சொல்லுபவனை,

     மானம் இலா வழி நெஞ்ச --- பெருமையில்லாத தீய வழியிற் செல்லும் உள்ளத்தையுடைய,

     காதக --- கொலைத்தன்மையும்,

     லோப --- உலோபத்தன்மையும் உடைய,

     விருதாவனை --- விருதாவாகக் காலங்கழிப்பவனை,

     நிந்தைப் புலையேனை --- உலகத்தார்கள் நிந்தித்தற்குரிய புலைத்தொழில் உடையவனை,

     காரண காரிய லோக ப்ரபஞ்ச --- காரண காரியங்களால் வந்த உலக வாழ்க்கையின்,

     சோகம் எலாம் அற --- துன்பங்கள் முழுவதும் அறவே நீங்கப்பெற்று,

     வாழ்வு உற நம்பில் --- முத்திப்பேற்றை அடைந்து இன்ப வாழ்வையடைய, விரும்பினால்,

     காசு அறு --- குற்றமற்ற,

     வாரி --- கடல்போன்ற

     மெய்ஞான தவம் சற்று அருளாதோ --- உண்மை ஞானத்தோடு கூடிய தவநிலையை (அடியேனுக்கு நினது திருவருள்) சிறிது அருள் புரியாதோ?


பொழிப்புரை

         பால்போன்ற வெண்ணிறமுடைய அன்னவாகத்தின் மீது நிலைபெற்றுள்ளவனும், நான்கு முகங்களை உடையவனும், சிவந்த இலக்குமியின் குமாரனுமாகிய பிரமதேவனைப் பிரணவார்த்தஙம் கேட்டு அதனை உரைக்காது விழித்தமையால், கரங்களால் மோதித் தண்டனை புரிந்தவரே!

         முன்னாளில் பெரிய வடிவத்தோடு நின்ற அநுமனது தோள்மிசை ஊர்ந்துவந்து போர் புரிந்து, பாவத்தொழிலை மேற்கொண்ட இராவணனது தலைகள் பத்தும் சிந்துமாறு அறுத்துத் தள்ளி, நல்லொழுக்கமுடைய விபீஷணர் (இலங்காபுரி அராட்சியைப் பெற்று) இன்புற்று, வாழுமாறு, மணம் பொருந்திய சீதையாகிய திருமகள், ஜயத்தால் உண்டாகிய ஜெயலட்சுமி ஆகிய இருபாவையரது தோள் புணர்ந்த திருமாமனாகிய நாராயணமூர்த்தியினது சிந்தைக்கு இனிய திருமருகரே!

         ஒழுக்கத்தால் மிக்க நாரதமுனிவர் (திருத்தணிகை மாமலை) வந்தடைந்து, வள்ளிநாயகியார் வாழுகின்ற தினைப்புனம் இதுதான் என்று காட்ட, முன்னாளில், தேன் போன்ற மதுர மொழியுடையவரும், சந்தனம் அணிபவரும், இளமை உடையவரும், இன்ப மலையனையவருமாகிய வள்ளிப்பிராட்டியாரை அணைபவரே!

         சேல், வாளை, வரால் முதலிய மீன்கள் நீர்ப்பெருக்கால் துள்ளியெழுந்து குலைகளோடு கூடிய கமுகு மரங்களின் மேல் தாவி விளையாடும் இன்பத்தை நல்கும் திருச்செந்திலம்பதியில் விரும்பி வாழுகின்ற கந்தக் கடவுளே!

     பெருமையின் மிக்கவரே!

         தோலால் மூடிய கூரை வீட்டிற்கு நிகராகிய இவ்வுடம்பை நிலைத்திருக்கும் என நம்பி, பெண்களது வஞ்சனையோடு கூடிய காமலீலையில் மிகவும் ஈடுபட்டு, நிலையின்றிச் சுற்றுகின்ற பொருளைத் தேடும் பொருட்டு திசைகள் தோறும் ஓடி வருத்தம் உற்று, நூதனமான நான்மணி மாலை, கோவை, உலா, மடல் முதலிய பிரபந்தங்களை நரர்கள் மீது பாடி, அந் நரத் துதியிலேயே அழுந்திக் குற்றமுடைய மனிதர்களது வீடுகள் தோறும் சென்று அலைந்து சுழலுகின்ற கால்களை உடையவனை, வீண்பொழுது போக்குபவனை, நீதிநெறியற்ற பொய்மொழியும் கோளும் சொல்லுபவனை, பெருமையில்லாத் தீய நெறியில் நின்ற நெஞ்சத்தையுடைய கொலை உலோபம் முதலிய தீயகுண மிக்க விருதாவனை, எல்லோராலும் நிந்திக்கப்படுகின்ற புலையனை, காரண காரிய உலக வாழ்வாலாகிய துன்பங்களெல்லாம் அறவே நீங்கப் பெற்று இன்ப வாழ்வுறுமாறு விரும்பினால், குற்றமற்ற கடல்போன்ற மெய்யுணர்வுடன் கூடிய தவநிலை அடியேனுக்கு உண்டாகத் தேவரீரது திருவருள் சிறிது அருள் புரியாதோ?


விரிவுரை

தோலொடு கூடிய கூரையை நம்பி ---

இந்த உடம்பு கூரை வீட்டிற்கு நிகரானது. கூரை வீட்டை ஓலையால் மூடியுள்ளதைப் போல் அவ்வுடம்பைத் தோலால் மூடியுளது. ஒருமனிதன் கல்வீடு, ஓட்டுவீடு, மாடிவீடு இவைகளில் வாழ்ந்தால் நெருப்பு பயம் அதிகமின்றி ஒரு சில நாளாவது அந்த வீட்டில் சுகமாக வாழலாம். கூரை வீட்டில் இருப்பவன் நெருப்பு, காற்று, மழை முதலியவைகளுக்கு மிகவும் அஞ்சி வாழ்வான். கூரை வீட்டிற்கு விரைவில் அழிவு நேரும். கூரை வீடு என்றும் நிலைத்திருக்கும் என நம்புதற்கில்லை. அதுபோல், கூரை வீடு அனைய இவ்வுடம்பிற்கும் விரைவில் அழிவு நேரும். பிணி, முதுமை முதலியவைகள் உண்டாகிக் கெடும். இதனை நம்பி இருத்தல் பெரும் தவறு, யாக்கை நிலையற்றது என்று உணர்ந்து ஆன்ம லாபத்தை விரைந்து தேடவேண்டும். “புல்லின் நுனியினுள்ள நீர் எப்படி நிலைக்காதோ, அதுபோல் இவ்வுடம்பும் நிலையற்றது என்று உணர்ந்து இப்பொழுதே அறவினையைச் செய்க. நாம் பார்த்திருக்கும் போதே, ஒருவன் பிறந்து நின்று, இருந்து, கிடந்து சுற்றத்தார்கள் அலற இறந்து படுகின்றான், இதனைக் கண்கூடாகக் காண்கின்றோம். ஆதலால் இதனை நம்பியிராதே” என்று கூறும் நாலடியாரின் நல்வாக்கை உன்னுக.

"புல்நுனிமேல் நீர்போல் நிலையாமை என்று எண்ணி
இன்இனியே செய்க அறவினை, --- இன்இனியே
நின்றான், ருந்தான், கிடந்தான்,தன் கேள்அறலச்
சென்றான் எனப்படுத லால்".

இத்தகைய சரீரமாகிய கூரை வீடு இடிகின்ற காலத்தில் குமாரக் கடவுளது திருவடியே துணை செய்யும்.

பாவையர் தோதக லீலை நிரம்பி ---

கூரை வீட்டிற்கு நெருப்பு எப்படி அழிவை உண்டாக்குமோ, அப்படி உடம்பிற்கு அழிவை உண்டாக்குவது பொது மகளிரது போகம். ஆவியீடேறும் நெறியை வேண்டுவார், வரைவின் மகளிரை விழையாதொழிக.

சூழ் பொருள் தேடிட ஓடி வருந்தி ---

மேற்கூறிய விலைமகளிர் பொன் கொடுத்தாலன்றி விரும்பாராதலால், பொருள் தேடும்பொருட்டு பல ஊர்களிலும் சென்று வருந்த நேரும். சிறிது கை வறண்டால் விலைமாதர் வெறுத்து விரட்டுவர். ஓயாமல் பொருள் கொடுத்த வண்ணமாகவே இருத்தல் வேண்டும். விளக்கும் வேசையர் நட்பும் ஒன்று.  விளக்கு நெய் வற்றிவிட்டால் அணைந்துவிடும். அதுபோல் வேசையர் நட்பு பொருள் வற்றிவிட்டால் ஒழியும்.

"விளக்கு ஒளியும் வேசையர் நட்பும் இரண்டும்
துளக்குஅற நாடின்,வேறு அல்ல, - விளக்கொளியும்
நெய்அற்ற கண்ணே அறுமே, அவர்அன்பும்
கையற்ற கண்ணே அறும்".                   --- நாலடியார்.

தூது ---

பாணன் முதலிய உயர்திணையோடும், கிள்ளை முதலிய அஃறிணையோடும்,  ஆண்பாலும், பெண்பாலும் அவரவர் காதலைச்சொல்லித் தூதுபோய் வாவெனக் கூறுவது. கிள்ளை விடு தூது, வண்டுவிடு தூது, நெஞ்சுவிடு தூது, பணவிடுதூது, தமிழ்விடு தூது முதலியவற்றில் காண்க.

நான்மணி மாலை ---

வெண்பாவும், கலித்துறையும், விருத்தமும், அகவலுமாக அந்தாதித் தொடையாகப் பாடுவது. நாற்பது கவிகளால் செய்யப்படுவது. கோயில் நான்மணிமாலை, திருவாரூர் நான்மணிமாலை, நால்வர் நான்மணிமாலை முதலியவற்றில் காண்க.

கோவை ---

இருவகைப்பட்ட முதற்பொருளும்,  பதினான்கு வகைப்பட்ட கருப்பொருளும், பத்து வகைப்பட்ட உரிப்பொருளும் பொருந்திக் கைக்கிளை முதலுற்ற அன்புடைக் காமப் பகுதியவாம் களவொழுக்கத்தினையும், கற்பொழுக்கத்தினையும் கூறுதலே எல்லையாகக் கட்டளைத் துறை நானூற்றால் திணைமுதலாகத் துறையீறாகக் கூறப்பட்ட பன்னிரண்டாகப் பாட்டுறுப்பும் வழுவின்றித் தோன்றப் பாடுவது. இது வெண்பா, அகவல், கலி, வஞ்சி, வண்ணம் இவற்றாலும் வழங்கப்படும். திருக்கோவையார், திருவெங்கைக் கோவை காண்க.

உலா ---

இளமைப் பருவமுதல் தலைமகனைக் குலம் குடிப்பிறப்பு மங்கல பரம்பரை இவற்றால் இன்னான் என்பது தோன்றத் தலைமையாய் மாதர் நெருங்கிய வீதியிடத்து அவன் பவனிவர ஏழு வயதுள்ள பேதை, அதற்கு மேல் ஒன்பது வயதுள்ள பெதும்பை,  அதற்கு மேல் பன்னிரண்டு வயதுள்ள மங்கை, அதற்கு மேல் பதினான்கு வயதுள்ள மடந்தை, அதற்கு மேல் பதினெட்டு வயதுள்ள அரிவை,  அதற்கு மேல் இருபத்தொரு ஒயதுள்ள தெரிவை, அதற்கு மேல் முப்பத்திரண்டுக்கு மேல் ஒயதுள்ள பேரிளம்பெண் ஆகிய ஏழுவகைப் பருவ மடந்தையர்களும் கண்டு காமுற்றுத் தொழுததாக நேரிசைக் கலிவெண்பாவால் கூறுவது.

"பேதை தனக்குப் பிராயம் ஏழு, பெதும்பை ஒன்பது,
ஓதிய மங்கைக்குப் பனிரண்டு ஆகும், ஒளிர் மடந்தை
மாதர்க்கு ஈரேழ், அரிவை பதினெண், மகிழ் தெரிவை
சாதி மூவேழ் எனும், பேரிளம்பெண் நால் எட்டு தையலர்க்கே". --- தனிப்பாடல்.

பன்னிரு பாட்டியல், நவநீதப் பாட்டியல், பிங்கலை நிகண்டு ஆகியவை வயது வரையறையில் மாறுபடுகின்றன. பருவம் ஏழு என்பதில் மாறுபாடு இல்லை.

மடல் ---

கனவில் ஒரு பெண்ணைக் கண்டு கலவியின்பம் நுகர்ந்தோன் விழித்தபின் அவள் பொருட்டு மடல் ஊர்வேன் என்பதைக் கலிவெண்பாவினால் முற்றுவிப்பது.

இத்தகைய பிரபந்தங்களைப் பொருள் பெறும் பொருட்டு நற்குணம் இல்லா நரர்களை, மட்டின்றிப் புகழ்ந்து பாடி அலைவது சில புலவரது தொழில். அங்ஙனம் அலைந்து நரத் துதி செய்து சேகரித்த பொருளைக் கொண்டு வந்து, தாம் இச்சித்த போக மாதரிடம் தந்து உழல்வர்.

காலனை ---

பல உயிர்களையுங் கருணையின்றிக் கொல்வதால் இயமனுக்கு நிகரானவனை என்றனர். 

எவ்வுரும் அறிவு என்று இராது, வ் வுயிர்க்கெலாம்
 எமனாய் இருந்த துட்டன்”       --- பாம்பன் சுவாமிகள்.


வீணனை ---

நமது ஆயுளில் ஒவ்வொரு கணமும், விலைமதிக்க முடியாத மாணிக்கமாம். இத்தகைய அருமையான காலத்தை இழந்து விட்டால் மீளவும் பெறமுடியாது எத்தனைக் கோடிப் பொன் கொடுத்தாலும் கழிந்த நாள் வாராது. அதனை வறிதே கழிக்காமல் ஒவ்வொரு கணமும் தெய்வ சிந்தனையுடன் தவப்பொழுதாகக் கழிக்கவேண்டும்.

நாளாய போகாமே நஞ்சணியும் கண்டனுக்கே
 ஆளாய அன்பு செய்வோம்”       --- திருஞானசம்பந்தர்.

போதுஅவமே இழந்து போனது மானம் என்பது அறியாத
 பூரியன்”                        --- (பூரணவார கும்ப) திருப்புகழ்.


நிந்தைப் புலையேனை ---

புலால் உண்பவர்கள் புலையர்கள்; புலையர்கள் என்பது பிறப்பினாலன்று.  புலைப் புசிப்பு உடையோர்கள் யாவராயினும் புலையரே.

"ஆருயிர் கொல்லார் மேலோர்,
     அறவினை அறிந்த கல்லோர்,
தீமனம் அடக்க வல்லார்,
     இவர்களே தேவராவார்;
காமராய்க் கற்பு அழித்தோர்
     களவுசெய்து உடல் வளர்த்தோர்
மாமிசம் தின்போர் எல்லாம்
     மானிடப் புலையர் தாமே.

     பிறவுயிர்களைக் கொன்று தின்போர், கங்கை முதலான புண்ணிய நதிகளில் பொருந்தி நீராடினாலும், கடவுளைப் பூசித்தாலும், மாரிபோல் வாரி வழங்கினாலும், ஞானசாத்திரங்கள் பலவற்றை குற்றம் நீங்கக் கற்றிருந்தாலும் நரகருலகு அடைந்து நலிவுறுவது திண்ணம் என்று அழுத்தமாகக் குறிப்பிடுகின்றார் :

"கங்கையில் புகுந்திட்டாலும்
     கடவுளைப் பூசித்தாலும்
மங்குல்போல் கோடிதானம்
     வள்ளலாய் வழங்கிட்டாலும்
சங்கையில்லாத ஞான
     சாத்திரம் உணர்ந்திட்டாலும்
பொங்குறு புலால் புசிப்போன்
     போய்நரகு அடைவன் அன்றே"

என்றார் வள்ளலார்.

     புலாலை உண்ணும் புலையரை யாவருங்காண இயம தூதர்கள் துன்பமிகுந்த தீவாய் நரகில் மல்லாக்கத் தள்ளி வருத்துவர்.

பொல்லாப் புலாலை நுகரும் புலையரை
எல்லாருங் காண இயமன்தன் தூதுவர்
செல்லாகப் பற்றித் தீவாய் நரகத்தின்
மல்லாக்கத் தள்ளி மறித்து வைப்பாரே.   --- திருமந்திரம்.


இதுவேயும் அன்றி கருணை என்பது ஒரு சிறிதும் இன்றி, ஒரு தீங்கும் இயற்றாது உபகாரம் புரியும் ஆடு கோழி பன்றி மீன் முதலிய ஏழைப் பிராணிகளைக் கொன்று அவற்றின் புலாலை உண்ணும் கொடியவர், அவர்கள் கொன்ற பிராணிகளின் உடலில் உள்ள மயிர்கள் எத்துணை அளவோ அத்துணைக் காலம் வெப்பமான நரகங்களை அனுபவித்து, மிகவும் துன்புற்று, புழுக்களோடு கூடிய வாயுடையவரால், தொழுநோய் முதலியப் பிணிகளை யடைந்து உழலுவர்.

கொன்று விலங்கின் தசைநுகரும்   
     கொடுமையோர் அவ்விலங்கின் உடல்
 துன்று மயிர் எத்துணையாம், த்
         துணைய காலம் வெந்நரகின்
 ஒன்றி நுகர்வாய் புழு ஒழுக
         உலப்பர் என்கை உணர்ந்தேயோ,
 கன்று சினவெங் கொடு விலங்கும்
         புலவூன் தின்னக் கருதாவால்.        --- சிவதருமோத்தரம்


காரண காரிய லோக ---

உலகம் காரணம் காரியம் என இருவகைத்து. உயிர்கள் புரியும் நல்வினை தீவினை காரணத்தால் காரியப்படுவது காரிய உலகம். இவைகட்குக் காரணமாவது காரண உலகம். இவ்விரு உலகங்களின் துன்பங்களும் நீங்க வேண்டுமாயின் மெய்ஞ்ஞான தவம் அவசியம் வேண்டும்.

பாரிய மாருதி ---

விசுவரூபத்தை எடுத்து அரும்பெருங் காரியத்தைப் புரிந்தோராதலால் அநுமாரைப் பாரிய மாருதி என்றனர்.

பாவி இராவணன் ---

அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை
 நின்றரில் பேதையா ரில்”                --- திருக்குறள்.

அயலானுடைய பத்தினியைக் கரவாகக் கொண்டு போனவனாதலால் பாவி என்றனர்.

சீரிய வீடணர் ---

சீலம், தவம், பொறை, இறையன்பு முதலிய நற்குண நல்லொழுக்க முடையவர் விபீஷணர்.

சீலம் உலாவிய நாரதர் ---

நாரதர் சுப்ரமண்ய பக்தியிற் சிறந்தவர்: கந்தபுராணத்துத் தட்சகாண்டத்துக் கந்தவிரத படலத்தில் உள்ளவாறு, கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திரம் முதல் நாளாகிய பரணி நாள், உதயத்தில் யாவன் ஒருவன் நித்திய கருமம் முடித்துப் பரிசித்தனாய், ஒருவேளை உண்டு, மறுநாள் கார்த்திகை தினத்தன்று அதிகாலை எழுந்து, புண்ணிய நதியில் நீராடி, தூய ஆடையுடுத்தி, முருகவேளை அலங்கரித்து அருச்சித்து, நீர் சந்தன புஷ்ப தூப தீப நிவேதனங்களால் வழிபாடு செய்து, முருகவேள் சரித்திரத்தைப் பக்தியுடன் கேட்டு உபவாசம் இருந்து, பகல் முழுவதும் குகச் சிந்தையுடன் இருந்து, இரவில் தருப்பையைப் பரப்பி அதன் மீதிருந்து, அரிவையரை அணுவளவும் நினையாது, அறுமுக வள்ளலின் அடிமலரை உன்னி, துயில் புரியாது, தியானம் புரிந்த நிலையில் இருந்து, விடிந்த உரோகணி நகட்சத்திரத்தில் விடியற்காலையில் நீராடி, நித்தியக் கரும முடித்து, கந்த வேளை முன்பு போல் வழிபட்டு, அடியார்களுடன் இருந்து பாரணை பண்ணி, அப் பகல் உறங்காது வைகி, மாலைக் கடன் முடித்து, அன்றிரவு உறங்கவேண்டும். இவ்விதம் கந்த விரதத்தை விநாயகமூர்த்தி பணித்தவாறு, நான்முகன் மகனாராகிய நாரத முனிவர் பன்னிரண்டாண்டு ஆற்றிக் கந்தவேளைத் தரிசித்துத் தேவ இருடிகளில் முதன்மைப் பேறு பெற்றனர். இவர் வள்ளி நாயகியை மணம் புணருமாறு விண்ணப்பம் புரிய, அவரை வழி காட்டுமாறு செய்து, வள்ளிநாயகியை வரைபக எறிந்த வடிவேல் அண்ணல் மணம்புரிந்து கொண்டனர்.

இதன் தத்துவம்

வள்ளியென்பது ஜீவான்மா;
முருகன் பரமான்மா;
நாரதர் வள்ளியினது தபோசக்தி;
தபோசக்திதான் ஆண்டவனை அருள்புரிய அழைத்துவரும்.

முருகவேள் வள்ளிநாயகியைத் திருமணம் புணர்ந்த வரலாறு

தீய என்பன கனவிலும் நினையாத் தூய மாந்தர் வாழ் தொண்டை நன்னாட்டில், "திருவல்லம்" என்னும் திருத்தலத்திற்கு வடபுறத்தே, மேல்பாடி என்னும் ஊரின் அருகில், காண்பவருடைய கண்ணையும் கருத்தையும் ஒருங்கே கவரும் அழகு உடைய வள்ளிமலை உள்ளது. அந்த மலையின் சாரலில் சிற்றூர் என்னும் ஒரு ஊர் இருந்தது. அந்த ஊரில் வேடர் தலைவனும், பண்டைத் தவம் உடையவனும் ஆகிய நம்பி என்னும் ஒருவன் தனக்கு ஆண்மக்கள் இருந்தும் பெண் மகவு இன்மையால் உள்ளம் மிக வருந்தி, அடியவர் வேண்டும் வரங்களை நல்கி அருளும் ஆறுமுக வள்ளலை வழிபட்டு, குறி கேட்டும், வெறி ஆட்டு அயர்ந்தும், பெண் மகவுப் பேற்றினை எதிர்பார்த்து இருந்தான்.

கண்ணுவ முனிவருடைய சாபத்தால் திருமால் சிவமுனிவராகவும், திருமகள் மானாகவும், உபேந்திரன் நம்பியாகவும் பிறந்து இருந்தனர். அந்தச் சிவமுனிவர், சிவபெருமானிடம் சித்தத்தைப் பதிய வைத்து, அம்மலையிடம் மாதவம் புரிந்து கொண்டு இருந்தார். பொன் நிறம் உடைய திருமகளாகிய அழகிய மான், சிவமுனிவர் வடிவோடு இருந்த திருமால் முன்னே உலாவியது. அம்மானை அம்முனிவர் கண்டு உள்ளம் விருப்புற்று, தெய்வப் புணர்ச்சி போலக் கண்மலரால் கலந்தார். பிறகு தெளிவுற்று, உறுதியான தவத்தில் நிலைபெற்று நின்றார்.

ஆங்கு ஒரு சார், கந்தக் கடவுளைச் சொந்தமாக்கித் திருமணம் செய்துகொள்ளும் பொருட்டுத் தவம் புரிந்து கொண்டு இருந்த சுந்தரவல்லி, முன்னர் தனக்கு முருகவேள் கட்டளை இட்டவாறு, அந்த மானின் வயிற்றில் கருவில் புகுந்தாள். அம்மான் சூல் முதிர்ந்து, இங்கும் அங்கும் உலாவி, உடல் நொந்து, புன்செய் நிலத்தில் புகுந்து, வேட்டுவப் பெண்கள் வள்ளிக் கிழங்குகளை அகழ்ந்து எடுத்த குழியில் பல்கோடி சந்திரப் பிரகாசமும், மரகத வண்ணமும் உடைய சர்வலோக மாதாவைக் குழந்தையாக ஈன்றது. அந்தப் பெண் மானானாது, குழந்தை தன் இனமாக இல்லாமை கண்டு அஞ்சி ஓடியது. குழந்தை தனியே அழுதுகொண்டு இருந்தது.

அதே சமயத்தில், ஆறுமுகப் பெருமானுடைய திருவருள் தூண்டுதலால், வேட்டுவ மன்னனாகிய நம்பி, தன் மனைவியோடு பரிசனங்கள் சூழத் தினைப்புனத்திற்குச் சென்று, அக் குழந்தையின் இனிய அழுகை ஒலியைக் கேட்டு, உள்ளமும் ஊனும் உருகி, ஓசை வந்த வழியே போய், திருப்பாற்கடலில் பிறந்த திருமகளும் நாணுமாறு விளங்கும் குழந்தையைக் கண்டான். தனது மாதவம் பலித்தது என்று உள்ளம் உவந்து ஆனந்தக் கூத்து ஆடினான். குழந்தையை எடுத்து, தன் மனைவியாகிய கொடிச்சியின் கரத்தில் கொடுத்தான். அவள் மனம் மகிழ்ந்து, குழந்தையை மார்போடு அணைத்தாள். அன்பின் மிகுதியால் பால் சுரந்தது. பாலை ஊட்டினாள். பிறகு யாவரும் சிற்றூருக்குப் போய், சிறு குடிலில் புகுந்து, குழந்தையைத் தொட்டிலில் இட்டு, முருகப் பெருமானுக்கு வழிபாடு ஆற்றினர். மிகவும் வயது முதிர்ந்தோர் வந்து கூடி, வள்ளிக் கிழங்கை அகழ்ந்து எடுத்த குழியில் பிறந்தமையால், குழந்தைக்கு "வள்ளி" என்று பேரிட்டனர். உலக மாதாவாகிய வள்ளிநாயகியை நம்பியும் அவன் மனைவியும் இனிது வளர்த்தார்கள்.

வேடுவர்கள் முன் செய்த அருந்தவத்தால், அகிலாண்டநாயகி ஆகிய எம்பிராட்டி, வேட்டுவர் குடிலில் தவழ்ந்தும், தளர்நடை இட்டும், முற்றத்தில் உள்ள வேங்கை மர நிழலில் உலாவியும், சிற்றில் இழைத்தும், சிறு சோறு அட்டும், வண்டல் ஆட்டு அயர்ந்தும், முச்சிலில் மணல் கொழித்தும், அம்மானை ஆடியும் இனிது வளர்ந்து, கன்னிப் பருவத்தை அடைந்தார்.

தாயும் தந்தையும் அவருடைய இளம் பருவத்தைக் கண்டு, தமது சாதிக்கு உரிய ஆசாரப்படி, அவரைத் தினைப்புனத்திலே உயர்ந்த பரண் மீது காவல் வைத்தார்கள். முத்தொழிலையும், மூவரையும் காக்கும் முருகப் பெருமானுடைய தேவியாகிய வள்ளி பிராட்டியாரை, வேடுவர்கள் தினைப்புனத்தைக் காக்க வைத்தது, உயர்ந்த இரத்தினமணியை தூக்கணங்குருவி, தன் கூட்டில் இருள் ஓட்ட வைத்தது போல் இருந்தது.

வள்ளி நாயகியாருக்கு அருள் புரியும் பொருட்டு, முருகப் பெருமான், கந்தமாதன மலையை நீங்கி, திருத்தணிகை மலையில் தனியே வந்து எழுந்தருளி இருந்தார். நாரத மாமுனிவர் அகிலாண்ட நாயகியைத் தினைப்புனத்தில் கண்டு, கை தொழுது, ஆறுமுகப் பரம்பொருளுக்குத் தேவியார் ஆகும் தவம் உடைய பெருமாட்டியின் அழகை வியந்து, வள்ளி நாயகியின் திருமணம் நிகழ்வது உலகு செய்த தவப்பயன் ஆகும் என்று மனத்தில் கொண்டு, திருத்தணிகை மலைக்குச் சென்று, திருமால் மருகன் திருவடியில் விழுந்து வணங்கி நின்றார். வள்ளிமலையில் தினைப்புனத்தைக் காக்கும் பெருந்தவத்தைப் புரிந்துகொண்டு இருக்கும் அகிலாண்ட நாயகியைத் திருமணம் புணர்ந்து அருள வேண்டும் என்று விண்ணப்பித்தார்.  முருகப்பெருமான் நாரதருக்குத் திருவருள் புரிந்தார்.

வள்ளிநாயகிக்குத் திருவருள் புரியத் திருவுள்ளம் கொண்டு, கரிய திருமேனியும், காலில் வீரக்கழலும், கையில் வில்லம்பும் தாங்கி, மானிட உருவம் கொண்டு, தணியா அதிமோக தயாவுடன், திருத்தணிகை மலையினின்றும் நீங்கி, வள்ளிமலையில் வந்து எய்தி, தான் சேமித்து வைத்த நிதியை ஒருவன் எடுப்பான் போன்று, பரண் மீது விளங்கும் வள்ளி நாயகியாரை அணுகினார்.

முருகப்பெருமான் வள்ளிநாயகியாரை நோக்கி, "வாள் போலும் கண்களை உடைய பெண்ணரசியே! உலகில் உள்ள மாதர்களுக்கு எல்லாம் தலைவியாகிய உன்னை உன்னதமான இடத்தில் வைக்காமல், இந்தக் காட்டில், பரண் மீது தினைப்புனத்தில் காவல் வைத்த வேடர்களுக்குப் பிரமதேவன் அறிவைப் படைக்க மறந்து விட்டான் போலும். பெண்ணமுதே! நின் பெயர் யாது? நின் ஊர் எது? நின் ஊருக்குப் போகும் வழி எது? என்று வினவினார்.

நாந்தகம் அனைய உண்கண்
     நங்கை கேள், ஞாலம் தன்னில்                     
ஏந்திழையார்கட்கு எல்லாம்
     இறைவியாய் இருக்கும்நின்னைப்                               
பூந்தினை காக்க வைத்துப்
     போயினார், புளினர் ஆனோர்க்கு                       
ஆய்ந்திடும் உணர்ச்சி ஒன்றும்
     அயன் படைத்திலன்கொல் என்றான்.

வார் இரும் கூந்தல் நல்லாய்,
     மதி தளர்வேனுக்கு உன்தன்                  
பேரினை உரைத்தி, மற்று உன்
     பேரினை உரையாய் என்னின்,                                   
ஊரினை உரைத்தி, ஊரும்
     உரைத்திட முடியாது என்னில்
சீரிய நின் சீறுர்க்குச்
     செல்வழி உரைத்தி என்றான்.

மொழிஒன்று புகலாய் ஆயின்,
     முறுவலும் புரியாய் ஆயின்,                              
விழிஒன்று நோக்காய் ஆயின்
     விரகம் மிக்கு உழல்வேன், உய்யும்                                
வழி ஒன்று காட்டாய் ஆயின்,
     மனமும் சற்று உருகாய் ஆயின்                             
பழி ஒன்று நின்பால் சூழும்,
     பராமுகம் தவிர்தி என்றான்.    
    
உலைப்படு மெழுகது என்ன
     உருகியே, ஒருத்தி காதல்
வலைப்படுகின்றான் போல
     வருந்தியே இரங்கா நின்றான்,
கலைப்படு மதியப் புத்தேள்
     கலம் கலம் புனலில் தோன்றி,
அலைப்படு தன்மைத்து அன்றோ
     அறுமுகன் ஆடல் எல்லாம்.

இவ்வாறு எந்தை கந்தவேள், உலகநாயகியிடம் உரையாடிக் கொண்டு இருக்கும் வேளையில், வேட்டுவர் தலைவனாகிய நம்பி தன் பரிசனங்கள் சூழ ஆங்கு வந்தான். உடனே பெருமான் வேங்கை மரமாகி நின்றார். நம்பி வேங்கை மரத்தைக் கண்டான். இது புதிதாகக் காணப்படுவதால், இதனால் ஏதோ விபரீதம் நேரும் என்று எண்ணி, அதனை வெட்டி விட வேண்டும் என்று வேடர்கள் சொன்னார்கள். நம்பி, வேங்கை மரமானது வள்ளியம்மையாருக்கு நிழல் தந்து உதவும் என்று விட்டுச் சென்றான்.

நம்பி சென்றதும், முருகப் பெருமான் முன்பு போல் இளங்குமரனாகத் தோன்றி, "மாதரசே! உன்னையே புகலாக வந்து உள்ளேன். என்னை மணந்து இன்பம் தருவாய். உன் மீது காதல் கொண்ட என்னை மறுக்காமல் ஏற்றுக் கொள். உலகமெல்லாம் வணங்கும் உயர் பதவியை உனக்குத் தருகின்றேன்.  தாமதிக்காமல் வா" என்றார்.

என் அம்மை வள்ளிநாயகி நாணத்துடன் நின்று, "ஐயா, நீங்கள் உலகம் புரக்கும் உயர் குலச் செம்மல். நான் தினைப்புனப் காக்கும் இழிகுலப் பேதை. தாங்கள் என்னை விரும்புவது தகுதி அல்ல. புலி பசித்தால் புல்லைத் தின்னுமோ?" என்று கூறிக் கொண்டு இருக்கும்போதே, நம்பி உடுக்கை முதலிய ஒலியுடன் அங்கு வந்தான். எம்பிராட்டி நடுங்கி, "ஐயா! எனது தந்தை வருகின்றார். வேடர்கள் மிகவும் கொடியவர். விரைந்து ஓடி உய்யும்" என்றார். உடனே, முருகப் பெருமான் தவவேடம் கொண்ட கிழவர் ஆனார்.

நம்பி, அக் கிழவரைக் கண்டு வியந்து நின்றான். பெருமான் அவனை நோக்கி, "உனக்கு வெற்றி உண்டாகுக. உனது குலம் தழைத்து ஓங்குக. சிறந்த வளம் பெற்று வாழ்க" என்று வாழ்த்தி, திருநீறு தந்தார். திருநீற்றினைப் பெருமான் திருக்கரத்தால் பெறும் பேறு மிக்க நம்பி, அவர் திருவடியில் விழுந்து வணங்கி, "சுவாமீ! இந்த மலையில் வந்த காரணம் யாது? உமக்கு வேண்டியது யாது?" என்று கேட்டான். பெருமான் குறும்பாக, "நம்பீ! நமது கிழப்பருவம் நீங்கி, இளமை அடையவும், உள்ளத்தில் உள்ள மயக்கம் நீங்கவும் இங்குள்ள குமரியில் ஆட வந்தேன்" என்று அருள் செய்தார். நம்பி, "சுவாமீ! தாங்கள் கூறிய (குமரி - தீர்த்தம்) தீர்த்தத்தில் முழுகி சுகமாக இருப்பீராக. எனது குமரியும் இங்கு இருக்கின்றாள். அவளுக்குத் தாங்களும், தங்களுக்கு அவளும் துணையாக இருக்கும்" என்றான். தேனையும் தினை மாவையும் தந்து, "அம்மா! இந்தக் கிழ முனிவர் உனக்குத் துணையாக இருப்பார்" என்று சொல்லி, தனது ஊர் போய்ச் சேர்ந்தான்.

பிறகு, அக் கிழவர், "வள்ளி மிகவும் பசி" என்றார். நாயகியார் தேனையும் தினைமாவையும் பழங்களையும் தந்தார். பெருமான் "தண்ணீர் தண்ணீர்" என்றார். "சுவாமீ! ஆறு மலை தாண்டிச் சென்றால், ஏழாவது மலையில் சுனை இருக்கின்றது. பருகி வாரும்" என்றார் நாயகியார். பெருமான், "வழி அறியேன், நீ வழி காட்டு" என்றார். பிராட்டியார் வழி காட்டச் சென்று, சுனையில் நீர் பருகினார் பெருமான்.

(இதன் தத்துவார்த்தம் --- வள்ளி பிராட்டியார் பக்குவப்பட்ட ஆன்மா. வேடனாகிய முருகன் - ஐம்புலன்களால் அலைக்கழிக்கப்பட்டு நிற்கும் ஆன்மா. பக்குவப்பட்ட ஆன்மாவைத் தேடி, பக்குவ அனுபவம் பெற, பக்குவப்படாத ஆன்மாவாகிய வேடன் வருகின்றான். அருள் தாகம் மேலிடுகின்றது. அந்தத் தாகத்தைத் தணிப்பதற்கு உரிய அருள் நீர், ஆறு ஆதாரங்களாகிய மலைகளையும் கடந்து, சகஸ்ராரம் என்னும் ஏழாவது மலையை அடைந்தால் அங்கே அமுதமாக ஊற்றெடுக்கும். அதனைப் பருகி தாகத்தைத் தணித்துக் கொள்ளலாம் என்று பக்குவப்பட்ட ஆன்மாவாகிய வள்ளிப் பிராட்டியார், பக்குவப் படாத ஆன்மாவாகிய வேடனுக்கு அறிவுறுத்துகின்றார். ஆன்மா பக்குவப்பட்டு உள்ளதா என்பதைச் சோதிக்க, முருகப் பெருமான் வேடர் வடிவம் காண்டு வந்தார்  என்று கொள்வதும் பொருந்தும்.)

வள்ளிநாயகியைப் பார்த்து, "பெண்ணே! எனது பசியும் தாகமும் நீங்கியது. ஆயினும் மோகம் நீங்கவில்லை. அது தணியச் செய்வாய்" என்றார். எம்பிராட்டி சினம் கொண்டு, "தவ வேடம் கொண்ட உமக்கு இது தகுதியாகுமா? புனம் காக்கும் என்னை இரந்து நிற்றல் உமது பெருமைக்கு அழகோ? எமது குலத்தார் இதனை அறிந்தால் உமக்குப் பெரும் கேடு வரும். உமக்கு நரை வந்தும், நல்லுணர்வு சிறிதும் வரவில்லை. இவ்வேடருடைய கூட்டத்திற்கே பெரும் பழியைச் செய்து விட்டீர்" என்று கூறி, தினைப்புனத்தைக் காக்கச் சென்றார்.

தனக்கு உவமை இல்லாத தலைவனாகிய முருகப் பெருமான்,  தந்திமுகத் தொந்தியப்பரை நினைந்து, "முன்னே வருவாய், முதல்வா!" என்றார். அழைத்தவர் குரலுக்கு ஓடி வரும் விநாயகப்பெருமான் யானை வடிவம் கொண்டு ஓடி வந்தனர். அம்மை அது கண்டு அஞ்சி ஓடி, கிழமுனிவரைத் தழுவி நின்றார். பெருமான் மகிழ்ந்து, விநாயகரைப் போகுமாறு திருவுள்ளம் செய்ய அவரும் நீங்கினார்.

முருகப் பெருமான் தமது ஆறுதிருமுகம் கொண்ட திருவுருவை அம்மைக்குக் காட்டினார். வள்ளநாயகி, அது கண்டு ஆனந்தமுற்று, ஆராத காதலுடன் அழுதும் தொழுதும் வாழ்த்தி, "பெருமானே! முன்னமே இத் திருவுருவைத் தாங்கள் காட்டாமையால், அடியாள் புரிந்த அபசாரத்தைப் பொறுத்து அருளவேண்டும்" என்று அடி பணிந்தார். பெருமான் பெருமாட்டியை நோக்கி அருள் மழை பொழிந்து, "பெண்ணே! நீ முற்பிறவியில் திருமாலுடைய புதல்வி. நம்மை மணக்க நல் தவம் புரிந்தாய். உன்னை மணக்க வலிதில் வந்தோம்" என்று அருள் புரிந்து, பிரணவ உபதேசம் புரிந்து, "நீ தினைப்புனம் செல்.  நாளை வருவோம்" என்று மறைந்து அருளினார்.

அம்மையார் மீண்டும் பரண் மீது நின்று "ஆலோலம்" என்று ஆயல் ஓட்டினார். அருகில் உள்ள புனம் காக்கும் பாங்கி வள்ளிநாயகியிடம் வந்து,  "அம்மா! தினைப்புனத்தை பறவைகள் பாழ் படுத்தின. நீ எங்கு சென்றாய்" என்று வினவினாள். வள்ளியம்மையார், நான் மலை மீது உள்ள சுனையில் நீராடச் சென்றேன்" என்றார். 

"அம்மா! கருமையான கண்கள் சிவந்து உள்ளன. வாய் வெளுத்து உள்ளது. உடம்பு வியர்த்து உள்ளது. முலைகள் விம்மிதம் அடைந்து உள்ளன. கையில் உள்ள வளையல் நெகிழ்ந்து உள்ளது. உன்னை இவ்வாறு செய்யும் குளிர்ந்த சுனை எங்கே உள்ளது? சொல்லுவாய்" என்று பாங்கி வினவினாள்.   

மை விழி சிவப்பவும், வாய் வெளுப்பவும்,
மெய் வியர்வு அடையவும், நகிலம் விம்மவும்,
கை வளை நெகிழவும் காட்டும் தண் சுனை
எவ்விடை இருந்து உளது? இயம்புவாய் என்றாள்.  

இவ்வாறு பாங்கி கேட், அம்மையார், "நீ என் மீது குறை கூறுதல் தக்கதோ?" என்றார். 

வள்ளியம்மையாரும் பாங்கியும் இவ்வாறு கூடி இருக்கும் இடத்தில், ஆறுமுகப் பெருமான் முன்பு போல் வேட வடிவம் தாங்கி, வேட்டை ஆடுவார் போல வந்து, "பெண்மணிகளே! இங்கு எனது கணைக்குத் தப்பி ஓடி வந்த பெண் யானையைக் கண்டது உண்டோ? என்று வினவி அருளினார். தோழி, "ஐயா! பெண்களிடத்தில் உமது வீரத்தை விளம்புவது முறையல்ல" என்று கூறி, வந்தவர் கண்களும், இருந்தவள் கண்களும் உறவாடுவதைக் கண்டு, "அம்மை ஆடிய சுனை இதுதான் போலும்" என்று எண்ணி, புனம் சென்று இருந்தனள். பெருமான் பாங்கி இருக்கும் இடம் சென்று, "பெண்ணே! உன் தலைவியை எனக்குத் தருவாய். நீ வேண்டுவன எல்லாம் தருவேன்" என்றார். பாங்கி, "ஐயா! இதனை வேடுவர் கண்டால் பேராபத்தாக முடியும். விரைவில் இங்கிருந்து போய் விடுங்கள்" என்றாள்.

தோட்டின் மீது செல் விழியினாய் தோகையோடு என்னைக்                   
கூட்டிடாய் எனில், கிழிதனில் ஆங்கு அவள் கோலம்
தீட்டி, மா மடல் ஏறி, நும் ஊர்த் தெரு அதனில்
ஓட்டுவேன், இது நாளை யான் செய்வது" என்று உரைத்தான்.                                 

பாங்கி அது கேட்டு அஞ்சி, "ஐயா! நீர் மடல் ஏற வேண்டாம். அதோ தெரிகின்ற மாதவிப் பொதும்பரில் மறைந்து இருங்கள். எம் தலைவியைத் தருகின்றேன்" என்றாள். மயில் ஏறும் ஐயன், மாதவிப் பொதும்பரில் மறைந்து இருந்தார். பாங்கி வள்ளிப்பிராட்டியிடம் போய் வணங்கி, அவருடைய காதலை உரைத்து, உடன்பாடு செய்து, அம்மாதவிப் பொதும்பரிடம் அழைத்துக் கொண்டு போய் விட்டு, "நான் உனக்கு மலர் பறித்துக் கொண்டு வருவேன்" என்று சொல்லி மெல்ல நீங்கினாள். பாங்கி நீங்கவும், பரமன் வெளிப்பட்டு, பாவையர்க்கு அரசியாகிய வள்ளிநாயகியுடன் கூடி, "நாளை வருவேன், உனது இருக்கைக்குச் செல்" என்று கூறி நீங்கினார்.

இவ்வாறு பல பகல் கழிந்தன. தினை விளைந்தன. குன்றவாணர்கள் ஒருங்கு கூடி விளைவை நோக்கி மகிழ்ந்து, வள்ளியம்மையை நோக்கி, "அம்மா! மிகவும் வருந்திக் காத்தனை. இனி உன் சிறு குடிலுக்குச் செல்வாய்" என்றனர்.

வள்ளிநாயகி அது கேட்டு வருந்தி, "அந்தோ என் ஆருயிர் நாயகருக்கு சீறூர்க்கு வழி தெரியாதே! இங்கு வந்து தேடுவாரே" என்று புலம்பிக் கொண்டே தனது சிறு குடிலுக்குச் சென்றார்.

வள்ளிநாயகியார் வடிவேற் பெருமானது பிரிவுத் துன்பத்திற்கு ஆற்றாது அவசமுற்று வீழ்ந்தனர். பாவையர்கள் ஓடி வந்து, எடுத்து அணைத்து, மேனி மெலிந்தும், வளை கழன்றும் உள்ள தன்மைகளை நோக்கி, தெய்வம் பிடித்து உள்ளது என்று எண்ணினர். நம்பி முதலியோர் உள்ளம் வருந்தி, முருகனை வழிபட்டு, வெறியாட்டு அயர்ந்தனர். முருகவேள் ஆவேசம் ஆகி, "நாம் இவளைத் தினைப்புனத்தில் தீண்டினோம். நமக்குச் சிறப்புச் செய்தால், நம் அருளால் இது நீங்கும்" என்று குறிப்பில் கூறி அருளினார். அவ்வாறே செய்வதாக வேடர்கள் சொல்லினர்.

முருகவேள் தினைப்புனம் சென்று, திருவிளையாடல் செய்வார் போல், வள்ளியம்மையைத் தேடிக் காணாது நள்ளிரவில் சீறூர் வந்து, குடிலுக்கு வெளியே நின்றார். அதனை உணர்ந்த பாங்கி, வெளி வந்து, பெருமானைப் பணிந்து, "ஐயா! நீர் இப்படி இரவில் இங்கு வருவது தகாது. உம்மைப் பிரிந்த எமது தலைவியும் உய்யாள். இங்கு நீர் இருவரும் கூட இடம் இல்லை. ஆதலால், இவளைக் கொண்டு உம் ஊர்க்குச் செல்லும்" என்று தாய் துயில் அறிந்து, பேய் துயில் அறிந்து, கதவைத்திறந்து, பாங்கி வள்ளிப்பிராட்டியாரைக் கந்தவேளிடம் ஒப்புவித்தாள்.

தாய்துயில் அறிந்து, தங்கள்
     தமர்துயில் அறிந்து, துஞ்சா
நாய்துயில் அறிந்து, மற்றுஅந்
     நகர்துயில் அறிந்து, வெய்ய
பேய்துயில் கொள்ளும் யாமப்
     பெரும்பொழுது அதனில், பாங்கி
வாய்தலில் கதவை நீக்கி
     வள்ளியைக் கொடுசென்று உய்த்தாள்.

(இதன் தத்துவார்த்த விளக்கம் --- ஆன்மாவை வளர்த்த திரோதமலமாகிய தாயும், புலன்களாகிய தமரும், ஒரு போதும் தூங்காத மூலமலமாகிய நாயும், தேக புத்தியாகிய நகரமும், சதா அலைகின்ற பற்று என்ற பேயும், இவை எல்லாம் துயில்கின்ற வேளையில் திருவருளாகிய பாங்கி,  பக்குவ ஆன்மா ஆகிய வள்ளியம்மையாரை முருகப் பெருமான் கவர்ந்து செல்லத் துணை நின்றது. "தாய் துயில் அறிதல்" என்னும் தலைப்பில் மணிவாசகப் பெருமானும் திருக்கோவையார் என்னும் ஞானநூலில் பாடியுள்ளார்.)

வள்ளி நாயகியார் பெருமானைப் பணிந்து, "வேதங்கள் காணாத உமது விரை மலர்த்தாள் நோவ, என் பொருட்டு இவ்வேடர்கள் வாழும் சேரிக்கு நடந்து, இவ்விரவில் எழுந்தருளினீரே" என்று தொழுது நின்றார்.

பாங்கி பரமனை நோக்கி, "ஐயா! இங்கு நெடிது நேரம் நின்றால் வேடர் காண நேரும். அது பெரும் தீமையாய் முடியும். இந்த மாதரசியை அழைத்துக் கொண்டு, நும் பதி போய், இவளைக் காத்து அருள்வீர்" என்று அம்மையை அடைக்கலமாகத் தந்தனள். எம்பிரான் பாங்கிக்குத் தண்ணருள் புரிந்தார். பாங்கி வள்ளநாயகியைத் தொழுது அணைத்து, உன் கணவனுடன் சென்று இன்புற்று வாழ்வாய்" என்று கூறி, அவ்விருவரையும் வழி விடுத்து, குகைக்குள் சென்று படுத்தாள். முருகப் பெருமான் வள்ளிநாயகியுடன் சீறூரைத் தாண்டிச் சென்று, ஒரு பூங்காவில் தங்கினார்.

விடியல் காலம், நம்பியின் மனைவி எழுந்து, தனது மகளைக் காணாது வருந்தி, எங்கும் தேடிக் காணாளாய், பாங்கியை வினவ, அவள் "நான் அறியேன்" என்றாள். நிகழ்ந்ததைக் கேட்ட நம்பி வெகுண்டு, போர்க்கோலம் கொண்டு தமது பரிசனங்களுடன் தேடித் திரிந்தான். வேடர்கள் தேடுவதை அறிந்த வள்ளிநாயகி, எம்பெருமானே! பல ஆயுதங்களையும் கொண்டு வேடர்கள் தேடி வருகின்றனர். இனி என்ன செய்வது.  எனது உள்ளம் கவலை கொள்கின்றது" என்றார்.

முருகவேள், "பெண்ணரசே! வருந்தாதே. சூராதி அவுணர்களை மாய்த்த வேற்படை நம்மிடம் இருக்கின்றது. வேடர்கள் போர் புரிந்தால் அவர்களைக் கணப்பொழுதில் மாய்ப்போம்" என்றார். நம்பி வேடர்களுடன் வந்து பாணமழை பொழிந்தான். வள்ளிநாயகியார் அது கண்டு அஞ்சி, "பெருமானே! இவரை மாய்த்து அருள்வீர்" என்று வேண்டினாள். பெருமான் திருவுள்ளம் செய்ய, சேவல் கொடி வந்து கூவியது. வேடர் அனைவரும் மாய்ந்தனர். தந்தையும் உடன் பிறந்தாரும் மாண்டதைக் கண்ட வள்ளிநாயகியார் வருந்தினார். ஐயன் அம்மையின் அன்பைக் காணும் பொருட்டு சோலையை விட்டு நீங்க, அம்மையாரும் ஐயனைத் தொடர்ந்து சென்றார்.

இடையில் நாரதர் எதிர்ப்பட்டார். தன்னை வணங்கி நின்ற நாரதரிடம் பெருமான் நிகழ்ந்தவற்றைக் கூறி அருளினார். நாரதர், "பெருமானே! பெற்ற தந்தையையும் சுற்றத்தாரையும் வதைத்து, எம்பிராட்டியைக் கொண்டு ஏகுதல் தகுதி ஆகுமா? அது அம்மைக்கு வருத்தம் தருமே" என்றார். முருகப் பெருமான் பணிக்க, வள்ளிநாயகியார் "அனைவரும் எழுக" என்று அருள் பாலித்தார். நம்பி தனது சேனைகளுடன் எழுந்தான். பெருமான் ஆறு திருமுகங்களுடனும், பன்னிரு திருக்கரங்களுடனும் திருக்காட்சி தந்தருளுனார். நம்பிராசன் வேடர்களுடன், அறுமுக வள்ளலின் அடிமலரில் விழுந்து வணங்கி, உச்சிக் கூப்பிய கையுடன், "தேவதேவா! நீரே இவ்வாறு எமது புதல்வியைக் கரவு செய்து, எமக்குத் தீராப் பழியை நல்கினால் நாங்கள் என்ன செய்வோம்? தாயே தனது குழந்தைக்கு விடத்தை ஊட்டலாமா? எமது குல தெய்வமே! எமது சீறூருக்கு வந்து, அக்கினி சான்றாக எமது குலக்கொடியை திருமணம் புணர்ந்து செல்வீர்" என்று வேண்டினான். முருகப் பெருமான் அவன் முறைக்கு இரங்கினார்.

கந்தக் கடவுள் தமது அருகில் எழுந்தருளி உள்ள தேவியைத் திருவருள் நோக்கம் செய்ய, வள்ளிநாயகியார் தமது மானுட வடிவம் நீங்கி, பழைய வடிவத்தைப் பெற்றார். அதனைக் கண்ட, நம்பி முதலியோர், "அகிலாண்ட நாயகியாகிய வள்ளிநாயகியார் எம்மிடம் வளர்ந்த்து, நாங்கள் செய்த தவப்பேறு" என்று மகிழ்ந்தான். முருகப் பெருமான் வள்ளிநாயகியைத் திருமணம் புணர்ந்து, திருத்தணிகையில் வந்து உலகம் உய்ய வீற்றிருந்து அருளினார்.

முருகப் பெருமான் வள்ளிநாயகியைத் திருமணம் புணர்ந்த வரலாறு, பெரும் தத்துவங்கள் பொதிந்தது. தக்க ஞானாசிரியர் வாய்க்கத் தவம் இருந்தால், அவர் மூலம் உண்மைகள் வெளிப்படும். நாமாக முயன்று பொருள் தேடுவது பொருந்தாது. அனுபவத்துக்கும் வராது.


சேலொடு......சீரலைவாய் ---

திருச்செந்தூரில் நீர்வளம் மிகுந்திருப்பதால் வயல்களில் வாழும் வாளை முதலிய மீனினங்கள் துள்ளிக் குதித்து கமுகுகளில் தாவி விளையாடுகின்றன.

கருத்துரை

         நான்முகனைத் தண்டனை புரிந்தவரே! இராவண சம்மாரம் புரிந்த இரகு வீரரது மருகரே! நாரதனார் புகல வள்ளிபிராட்டியை மணந்தவரே! செந்திமாநகரத்தில் வாழும் கந்தமூர்த்தியே! பெருமையின் மிக்கவரே! தோலால் மூடிய சிறுகுடிலை நம்பி, மாதர் மயலுற்று, பொருள் தேடுமாறு நரதுதி செய்து அலையும் தீயவனாகிய அடியேன் விரும்பினால், உலக துன்பமற மெய்ஞ்ஞான தவத்தைத் தமது திருவருள் சிறிது உண்டாக்கச் செய்யாதோ?

No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...