திரு
எருக்கத்தம்புலியூர்
நடு நாட்டுத் திருத்தலம்.
தற்போது இராஜேந்திரப்பட்டினம் என்று
வழங்குகிறது.
விருத்தாசலம் - ஆண்டிமடம் -
ஜெயங்கொண்டான் சாலையில் விருத்தாசலத்தில் இருந்து 12 கி.மீ. தொலைவில் இந்தத் திருத்தலம்
இருக்கிறது. அருகில் உள்ள இரயில் நிலையம் விருத்தாசலம். திருமுட்டம் என்கிற வைணவத்
தலம் அருகில் உள்ளது. திருமுட்டம் - விருத்தாசலம் பாதையில் சென்றும் திருமுட்டத்தை
அடுத்துள்ள இத்தலத்தை அடையலாம்.
இறைவர்
: நீலகண்டேசுவரர், சுவேதார்க்கவனேசுவரர்.
இறைவியார்
: அபீதகுஜநாயகி, நீலமலர்கண்ணி, நீலோற்பலாம்பாள்.
தல
மரம் : வெள்ளெருக்கு.
தீர்த்தம் : நீலோற்பலதீர்த்தம்.
தேவாரப்
பாடல்கள் : சம்பந்தர் - படையார்
தருபூதப்.
வியாக்ர பாதர் என்னும் புலிக்கால் முனிவர்
பூசித்த திருத்தலங்கள் புலியூர் என்னும் பெயருடன் விளங்குகின்றன. புலியூர்த்தலங்களில்
திருஎருக்கத்தம்புலியூர் தலமும் ஒன்றாகும். மற்றவை: 1) திருப்பாதிரிப்புலியூர், 2) பெரும்பற்றப்புலியூர் (சிதம்பரம்), 3) திருப்பெரும்புலியூர் 4) ஓமாம்புலியூர்.
புலிக்கால் முனிவரான வியாக்ரபாதர், தன் தந்தை மாத்தியந்தனரிடம் தில்லை
நடராஜரின் பெருமையை கேட்டறிந்து,
அங்கு
வந்து திருமூலநாதரை வழிபட்டு வந்தார். அன்று மலர்ந்த பூக்களைப் பறித்து வந்து
இறைவனுக்கு அர்ச்சிப்பது இவரது வழக்கம். பொழுது புலர்ந்தால் வண்டுகள் மலர்களிலுள்ள
மகரந்தத்தை உண்பதால் பூக்களின் தூய்மை போய்விடுகிறது என்று நினைத்த அவர், முன் இரவிலேயே மரங்களில் ஏறி பூ பறிக்க
புலிக்கால்களையும், அம்மலர்களை ஆராய்ந்து
பார்த்து பறிக்க புலியின் கண்களையும் பெற்றார். அதனால் இவருக்கு வியாக்ரபாதர்
(வடமொழியில் வியாக்ரம் என்றால் புலி) என்று பெயர் வந்தது. தமிழில் புலிக்கால்
முனிவர் என்று அழைக்கப்பட்டார். எருக்கினைத் தல விருட்சமாக உடைய புலியூராதலின்
திருஎருக்கத்தம்புலியூர் என்று பெயர் பெற்றது.
ராஜராஜசோழ மன்னனுக்கு புத்திர
பாக்கியத்தையும், அவனுடைய மகன்
ராஜேந்தர சோழனுக்கு திருமண வரத்தையும் தந்தருளிய தலம் என்ற பெருமை இத்தலத்திற்கு
உண்டு. இராஜேந்த சோழ மன்னன் இவ்வாலயத்திற்கு ஏராளமான திருப்பணிகள்
செய்திருக்கிறான். ஆதலால் இத்தலத்திற்கு இராஜேந்திரப் பட்டினம் என்று இவ்வூர்
மக்கள் பெயர் சூட்டியதாக வரலாறு.
இவ்வாலயத்தின் ராஜகோபுரம் 5 நிலைகளையுடையது. கோபுர வாயில் கடந்து
உள்ளே சென்றால் பலிபீடம், கொடிமரம், நந்தி மண்டபம் உள்ளன. வலதுபுறம் சிறிய
விநாயகர் சந்நிதி உள்ளது. வெளிச்சுற்றில் இடதுபுறத்தில் நவக்கிரகமும் நால்வரும்
உள்ளனர். 63 நாயன்மார்களில்
ஒருவரான திருநீலகண்ட யாழ்ப்பாணருடைய அவதாரத்தலம் திருஎருக்கத்தம்புலியூர். இவரது
திருவுருவம் மதங்க சூளாமணியாருடன் கூடியுள்ளது. மகாகணபதி, விசுவநாதர் விசாலாட்சி, முருகர், இலக்குமி ஆகிய சந்நிதிகளை வணங்கி உட்சென்றால்
இறைவன் திருநீலகண்டேஸ்வரர் சந்நிதி உள்ளது. கோஷ்டமூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, இலிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். மார்ச் மாதம்
16ம் தேதி முதல் 20ம் தேதி வரையிலும் சூரியஒளி மூலவர் மீது
படுவது இவ்வாலயத்தின் சிறப்பம்சங்களில் ஒன்று. கருவறைச் சுற்றில் வள்ளி, தெய்வானை சமேத முருகர் சந்நிதி உள்ளது.
திருக்கயிலாயத்தில்
சிவன் வேதங்களின் உட்பொருளை பார்வதிக்கு உபதேசித்துக் கொண்டிருக்கும் போது
பார்வதியின் கவனம் சிதறியது. அதனால் அவளை பரதவர் குலத்தில் மீனவப் பெண்ணாகப்
பிறக்குமாறு இறைவன் சபித்தார். இதனால் கோபமடைந்த முருகன், தன் தாயை சிவபெருமான் சபிப்பதற்கு
காரணமாக இருந்த வேதாகம நூல்களை கடலில் வீசி எறிந்தார். முருகனின் இச்செயலுக்காக
இறைவன் அவரை மதுரையில் தனபதி என்பவரின் மகனாக உருத்திரசர்மர் என்ற பெயரில்
ஊமைப்பிள்ளையாக பிறக்கும்படி சபித்தார். உரிய வயது வந்த போது பல சிவத்தலங்களுக்கு
சென்று வழிபாடு செய்தார். கடைசியாக எருக்கத்தம்புலியூர் வந்து சிவலிங்கம் அமைத்து
வழிபட்டு பேசும் திறன் பெற்றார். குமரன் வழிபட்டதால் சிவன் திருக்குமாரசாமி என்ற்
பெயரிலும் இத்தலத்தில் விளங்குகிறார். உருத்திரசன்மரின் உருவம் இக்கோவிலில்
உள்ளது. அறிவில் சிறந்த முருகப்பெருமானுக்கு ஊமைத்தன்மை நீங்கியது போல், திறமையிருந்தும் பயம், கோபம் முதலியவற்றால் பேசத்
தெரியாதவர்கள் இங்கு வந்து பூஜை செய்து நிவாரணம் பெறலாம்.
இத்தலத்தின் பெருமையை கேட்ட தேவர்களும், முனிவர்களும் இங்கு வந்து பறவையாகவும், மரங்களாகவும் மாறி ஈசனை வழிபட்டு
வந்தனர். அங்கே வந்த வேடர்கள் பறவைகளை கொல்லவும், மரங்களை வெட்டவும் முயன்றனர்.
தேவர்களும், முனிவர்களும்
இறைவனிடம் முறையிட, அவர்களை யாருக்கும்
பயன்படாத வெள்ளெருக்கு மரங்களாக மாறி வழிபடும்படி கூறி மறைந்தார். அவ்வாறே அவர்கள்
யாருக்கும் பயன்படாத வெள்ளெருக்கு மரங்களாக மாறி, இத்தலத்தில் இறைவனை வழிபட்டனர்.
வெள்ளெருக்கு மரம் தல விருட்சமாக உள்ள இத்தலம் எருக்கத்தம்புலியூர்
என்றழைக்கப்பட்டது.
காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக்
கலிவெண்பாவில், "நாடிய வான் அம்புலியூர்
சோலை அணி வயல்கள் ஓங்கு எருக்கத்தம்புலியூர் வேத சமரசமே" என்று போற்றி உள்ளார்.
திருநீலகண்ட யாழ்ப்பாணரின் அவதாரப்பதி.
அவதாரத் தலம் : திருஎருக்கத்தம்புலியூர் (இராசேந்திரப்பட்டினம்)
வழிபாடு : குரு வழிபாடு.
முத்தித் தலம் : திருநல்லூர்ப்பெருமணம்
குருபூசை நாள் : வைகாசி - மூலம்.
திருநீலகண்ட
யாழ்ப்பாணர் வரலாறு
திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் சைவ
சமயத்தவர்களால் போற்றப்படும் நாயன்மார்களுள் ஒருவர். இவர் திரு
எருக்கத்தம்புலியூரில் யாழின் மூலமாக இன்னிசை வளர்க்கும் பெரும்பாணர் குலத்தில்
பிறந்தவர். இவர் சிவபெருமானுடைய திருப்புகழை யாழ்மூலம் இசைக்க, ஏழிசையிலும் வல்லவரான தம் மனைவியார்
மதங்கசூளாமணியாருடன் சோழ நாட்டிலுள்ள திருத்தலங்களை வணங்கி பாண்டி நாட்டின்
தலைநகராகிய மதுரையை அடைந்தார். அங்கு திருவாலவாய்த் திருக்கோயிலின் வாயிலை அடைந்து
முன்நின்று இறைவனது புகழ்சேர் புகழ்மாலைகளை யாழிலிட்டு இசைத்துப் போற்றினார். அவ்
இன்னிசையைக் கேட்டு மகிழ்ந்த ஆலவாய் இறைவர், அன்றிரவு தம் தொண்டர்க்கு எல்லாம்
கனவில் தோன்றித் திருநீலகண்டப் பெரும்பாணரை தமது திருமுன் கொண்டு புகும்படி
பணித்தருளினார். அவ்வாறே பாணனார்க்கும் உணர்த்தி அருளினார். இறைவரது விருப்பப்படி
பாணர் திருவாலவாய் திருக்கோயிலுள்ள இறைவன் திருமுன் புகுந்திருந்து அவரது
மெய்ப்புகழை யாழிலிட்டு இசைத்துப் போற்றினார். தரையினில் சீதம் தாக்கில் சந்த யாழ்
நரம்பு தளர்ந்து நெகிழும் என்று பாணர்க்குப் பலகை இடும்படி இறைவர் அசரீரி
வாக்கினால் அருள் செய்தார். அவ்வாறே தொண்டர்கள் பாணருக்குப் பொற்பலகை இட்டனர்.
பாணரும் பொற்பலகையில் ஏறியமர்ந்து உமையொருபாகர் வண்ணங்களை உலகெலாம் அறிய இசைத்துப்
போற்றினார்.
ஆலாவாய் இறைவரைப் போற்றி அருள் பெற்ற
பெரும்பாணர் பல தலங்களையும் வழிபட்டுத் திருவாரூரரை அடைந்தார். அங்கு தமது குல
மரபின் படி கோயில் வாயிலின் முன் நின்று இறைவர் புகழ்த்திறங்களை யாழில் இட்டு
இசைத்தார். பாணரது இன்னிசைக்கு உவந்து ஆரூர் அண்ணலார், பாணர் உட்சென்று வழிபட, வடதிசையில் வேறொரு வாயிலை
வகுத்தருளினார். பாணர் அவ்வழுயே புகுந்து ஆரூர்த்திருமூலட்டானத்து அமர்ந்த இறைவர்
முன் சென்று ஆளுடைய பிள்ளையாரை வணங்கும் விருப்பினராய் சீகாழிப்பதியை அடைந்தார்.
திருஞானசம்பந்தப் பிள்ளையாருடன் சிவபெருமான் உறையும் திருத்தலங்களை வணங்கி
இன்னிசைத் திருத்தொண்டு புரிந்து வந்த யாழ்ப்பாணர், தமது மனைவி மதங்கசூளாமணியாருடன்
திருநல்லூர்ப் பெருமணத்தில் ஆளுடைய பிள்ளையாரின் திருமணத்தைக் கண்டு அவருடனே கூட
அடியார் திருக்கூட்டத்துடன் ஈறில் பெருஞ்சோதியினுட் புகுந்து ஈறிலாப் பேரின்ப
வாழ்வு பெற்றார்.
திருஞானசம்பந்தர்
திருப்பதிக வரலாறு
பெரிய
புராணப் பாடல் எண் : 177
பொங்கு
தெண்திரைப் புனிதநீர்
நிவாக்கரைக் குடதிசை
மிசைப்போந்து,
தங்கு
தந்தையா ருடன்பரி
சனங்களும் தவமுனி
வரும்செல்ல,
செங்கை
யாழ்திரு நீலகண்
டப்பெரும் பாணனார் உடன்சேர,
மங்கை
யார்புகழ் மதங்கசூ
ளாமணி யார்உடன் வர, வந்தார்.
பொழிப்புரை : நீர் பெருகுகின்ற
தெளிந்த அலைகளையுடைய, தூய நீர் நிரம்பிய, நிவா நதிக்கரையின் வழியே, மேற்குத் திசையில் சென்று, தம்முடன் வந்தருளும் தந்தையாரான சிவபாத
இருதயர், அடியவர்கள், தவமுனிவர்கள், செவ்விய கையில் யாழையுடைய திருநீலகண்ட
யாழ்ப்பாணர், அவர் மனைவியாரான
மதங்கசூளாமணியாரும் யாவரும் உடன்வர ஆளுடைய பிள்ளையார் சென்றருளினார்.
குறிப்புரை : கொல்லி மலை, பச்சைமலை ஆகிய இம்மலைகளிலிருந்து வரும்
கானாரியாறு, எழுமூர் ஆறு, என்பனவும், கல்விராயன் மலையிலிருந்து பல
சிற்றாறுகளாகப் பெருகி, ஆற்றூர், ஆறகனூர், சின்னசேலம் வழியாக வரும் இப்போது வசிஷ்ட
நதி என்று வழங்கும் ஆறும், கல்விராயன் மலை, மற்றும் சில சரிவுகளிலிருந்து வரும்
மயூர நதி, திருமணிமுத்தாறு
(திருமுதுகுன்றம் வழியாக வருவது),
தேனாறு
முதலியவைகளும் ஆங்காங்கு வந்து கூடி, வடவெள்ளாறு
என்ற பெயரால் பெருகி வரும் சிறப்புடையது நிவா நதியாகும். ஆதலின் ஆசிரியர், `பொங்கு தெண்டிரைப் புனிதநீர் நிவா' என்றார் (சிவக் கவிமணியவர்கள்
குறிப்பு).
பெ.
பு. பாடல் எண் : 178
இருந்த
டங்களும் பழனமும்
கடந்துபோய், எருக்கத்தம் புலியூரின்
மருங்கு
சென்றுஉற, நீலகண்
டப்பெரும் பாணனார்
வணங்கி, "கார்
நெருங்கு
சோலைசூழ் இப்பதி
அடியனேன் பதி"என, நெடிதுஇன்புற்று
அருங்க
லைச்சிறு மழஇளங்
களிறுஅனார்
அங்குஅணைந்து அருள்செய்வார்.
பொழிப்புரை : பெரிய நீர்
நிலைகளையும் வயல்களையும் கடந்து சென்று திருஎருக்கத்தம்புலியூரின் அருகில் சென்று
சேர, திருநீலகண்ட
யாழ்ப்பாணர் திருமுன் வந்து வணங்கி நின்று, மேகங்கள் நெருங்கியதும் பூஞ்சோலைகள்
சூழ்ந்ததுமான இத்திருப்பதி, அடியேனின் பதியாகும்
என்று விண்ணப்பித்துக் கொள்ள, மிகவும்
மகிழ்ச்சியடைந்து, அரிய மறை முதலிய கலைகள்
யாவும் விளங்குதற்கு இடமான அத்திருப்பதியை சிறிய இளைய யானைக் கன்றைப் போன்ற
பிள்ளையார் அணைந்து அருள் செய்பவராய்,
பெ.
பு. பாடல் எண் : 179
"ஐயர் நீர்அவ தரித்திட
இப்பதி அளவுஇல்மா
தவமுன்பு
செய்த
வாறு"எனச் சிறப்பு உரைத்து,
அருளிஅச் செழும்பதி
இடங்கொண்ட
மைகொள்
கண்டர்தம் கோயிலின்
உள்புக்கு, வலம்கொண்டு வணங்கி, பார்
உய்ய
வந்தவர் செழுந்தமிழ்ப்
பதிகம்அங்கு இசையுடன்
உரைசெய்தார்.
பொழிப்புரை : `ஐயரே! நீர் இங்குத் தோன்றுதற்கு
இத்திருப்பதியானது அளவற்ற பெருந்தவத்தைச் செய்திருந்தது எனச் சிறப்பித்துக் கூறி, அச் செழிப்புடைய திருப்பதியில் இடம்
கொண்டு எழுந்தருளி இருக்கும் திருநீலகண்டரான இறைவரின் திருக்கோயிலுக்குள் சென்று
வணங்கி, உலகுய்யத் தோன்றிய
பிள்ளையார் செழுந்தமிழ்ப் பதிகத்தை இசையுடன் அருள்செய்தார்.
குறிப்புரை : இத்திருப்பதியில்
பாடியருளியது `படையார் தரு' (தி.1 ப.89) என்று தொடங்கும் குறிஞ்சிப் பண்ணில்
அமைந்த பதிகமாகும். சிறந்த அடியவர்கள் உடன் இருக்கப் பாடுங்கால் அவர்களை அப்பதிகப்
பாடல்களுள் ஒன்றிலோ அல்லது பதிகம் முழுமையாகவோ கூடச் சிறப்பித்துப் பாடுவது
சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய பெருமக்களின் இயல்பாகும்.
இதனை அவரவர் வரலாற்றிலும் ஆங்காங்குக் காண இயலுகின்றது. அந்நிலையில், யாழ்ப்பாணர் தில்லையில், தம்பதி முதலாயவற்றிற்கு வரவேண்டும் என
விண்ணப்பித்துக் கொண்டும், உடன் வந்தும், திருப்பதிகங்களை யாழிலிட்டு இசைத்தும்
வர, அவரைச் சம்பந்தர்
அவர்தம் திருப்பதியில் அருளிய இப்பதிகத்துள் ஓரிடத்தேனும் வைத்துப் பாடாது இரார்
என்றே நினைய வேண்டியுள்ளது. இப்பதிகத்துள் ஏழாவது பாடல் கிடைத்திலது. ஒருகால்
அப்பாடலில் இயைத்துப் பாடி இருக்கலாம் அன்றி இத்திருப்பதிக்கு, இப்பதிகம் தவிரப் பிறபதிகங்கள் இருந்து, அவற்றில் வைத்துப் பாடப்பெற்று, அவை இன்று கிடைக்காமலும் இருக்கலாம், திருவருள்.
திருஞானசம்பந்தர் திருப்பதிகம்
1.089
திருஎருக்கத்தம்புலியூர் பண்
- குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
படையார்
தருபூதப் பகடுஆர் உரிபோர்வை
உடையான், உமையோடும் உடன் ஆயிடு,கங்கைச்
சடையான், எருக்கத்தம்
புலியூர்த் தகுகோயில்
விடையான்
அடிஏத்த மேவா வினைதானே.
பொழிப்புரை :படைகளாக அமைந்த
பூதகணங்களை உடையவனும், யானையின் தோலைப்
போர்வையாகக் கொண்டவனும், உமையம்மையோடு உடனாய்
விளங்குபவனும், வந்து பொருந்திய
கங்கையை ஏற்ற சடையை உடையவனும் ஆகிய எருக்கத்தம்புலியூரில் விளங்கும் தகுதிவாய்ந்த
கோயிலில் எழுந்தருளிய விடை ஏற்றை உடைய பெருமான் திருவடிகளை ஏத்துவாரை, வினைகள் வந்து சாரா.
பாடல்
எண் : 2
இலைஆர்
தருசூலப் படைஎம் பெருமானாய்,
நிலைஆர்
மதில்மூன்று நீறுஆய் விழஎய்த
சிலையான், எருக்கத்தம்
புலியூர்த் திகழ்கோயில்
கலையான்
அடிஏத்தக் கருதா வினைதானே.
பொழிப்புரை :இலை வடிவமாக அமைந்த
சூலப்படையை உடையவனும், எம்பெருமானும், நிலைபெற்ற முப்புரங்களையும் நீறாய்ப்
பொடிபடுமாறு கணை எய்த வில்லை உடையவனும், எருக்கத்தம்புலியூரில்
விளங்கும் கோயிலில் மேவியிருப்பவனும் ஆகிய கலைகளின் வடிவான சிவபிரானின் திருவடிகளை
ஏத்தி வாழ்த்துவோரை, வினைகள் கருதா.
பாடல்
எண் : 3
விண்ணோர்
பெருமானே, விகிர்தா, விடைஊர்தீ,
பெண்ஆண்
அலியாகும் பித்தா, பிறைசூடீ,
எண்ஆர்
எருக்கத்தம் புலியூர் உறைகின்ற
அண்ணா
எனவல்லார்க்கு அடையா வினைதானே.
பொழிப்புரை :விண்ணவர் தலைவனே, வேறுபட்ட வடிவும் பண்பும் உடையவனே, விடைமீது ஏறிவருபவனே! பெண், ஆண், அலி என்னும் திணை பால் பாகுபாடுகளைக்
கடந்துள்ளவனே, பித்தனே, பிறை சூடியவனே, எல்லோராலும் எண்ணத்தகும்
எருக்கத்தம்புலியூரில் உறைகின்ற தலைவனே என்றுரைத்துப் போற்ற வல்லவரை, வினைகள் அடையா.
பாடல்
எண் : 4
அரையார்
தருநாகம் அணிவான், அலர்மாலை
விரைஆர்
தருகொன்றை உடையான், விடைஏறி,
வரையான், எருக்கத்தம் புலியூர்
மகிழ்கின்ற
திரைஆர்
சடையானைச் சேரத் திருஆமே.
பொழிப்புரை :இடையிலே பாம்பைப்
பொருந்துமாறு அணிந்துள்ளவனும், மணம் கமழும் கொன்றை
மலர் மாலையை அணிந்துள்ளவனும், விடைமீது ஏறி
வருபவனும், கயிலை மலையைத்
தனக்குரிய இடமாகக் கொண்டவனும், எருக்கத்தம்புலியூரில்
மகிழ்ந்து உறைபவனும் ஆகிய அலைகள் வீசும் கங்கை நதியை, சடைமிசைத்தரித்த சிவபிரானைச்
சேர்வோர்க்குச் செல்வங்கள் வந்து சேரும்.
பாடல்
எண் : 5
வீறுஆர்
முலையாளைப் பாகம் மிகவைத்துச்
சீறா
வருகாலன் சினத்தை அழிவித்தான்,
ஏறான்
எருக்கத்தம் புலியூர் இறையானை
வேறா
நினைவாரை விரும்பா வினைதானே.
பொழிப்புரை :வேறொன்றற்கில்லா
அழகினை உடைய தனங்களைக் கொண்ட உமையம்மையை, இடப்
பாகமாகச் சிறப்புடன் வைத்துக் கொண்டருளியவனும், சீறி வந்த காலனின் சினம் அடங்கச்
செய்தவனும், இடப ஊர்தியை
உடையவனும், எருக்கத்தம்புலியூரில்
எழுந்தருளியுள்ள இறைவனும் ஆகிய சிவபிரானைத் தனித்திருந்து தியானிப்பவரை வினைகள்
விரும்பா.
பாடல்
எண் : 6
நகுவெண்
தலைஏந்தி, நானாவிதம் பாடிப்
புகுவான்
அயம்பெய்ய, புலித்தோல்
பியற்கிட்டுத்
தகுவான்
எருக்கத்தம் புலியூர்த் தகைந்துஅங்கே
தொகுவான்
கழல்ஏத்தத் தொடரா வினைதானே.
பொழிப்புரை :சிரிக்கும் வெள்ளிய
தலையோட்டைக் கையில் ஏந்திப் பலவிதமாகப் பாடிக்கொண்டு மகளிர் இடும் பிச்சையை ஏற்கப்
புகுபவனாய்ப் புலித்தோலைத் தோளில் இட்டுக்கொண்டு தகுதி வாய்ந்தவனாய் எருக்கத்தம்புலியூரில்
தங்கி அங்கே நிலைத்திருப்பவனாகிய இறைவன் கழல்களை ஏத்த வினைகள் தொடரா.
பாடல்
எண் : 7
* * * * * * * * *
பாடல்
எண் : 8
ஆஆ
எனஅரக்கன் அலற அடர்த்திட்டுத்
தேவா
என,அருளார் செல்வம்
கொடுத்திட்ட
கோவே, எருக்கத்தம் புலியூர்
மிகுகோயில்
தேவே
என, அல்லல் தீர்தல்
திடமாமே.
பொழிப்புரை :ஆ ஆ என்ற இரக்கக்
குறிப்போடு இராவணன் அலறுமாறு அவனை அடர்த்து, பின் தேவா என அவன் வேண்ட அருள் நிறைந்த
செல்வங்கள் பலவற்றை வழங்கியருளிய தலைவனே, எருக்கத்தம்புலியூரில்
விளங்கும் சிறப்புமிக்க கோயிலில் எழுந்தருளும் தேவனே என்று போற்ற, நம் அல்லல்கள் தீர்தல் உறுதியாகும்.
பாடல்
எண் : 9
மறையான்
நெடுமால்காண்பு அரியான்,
மழுஏந்தி,
நிறையா
மதிசூடி, நிகழ்முத் தின்தொத்தே
இறையான்
எருக்கத்தம் புலியூர் இடங்கொண்ட
கறைஆர்
மிடற்றானைக் கருதக் கெடும்வினையே.
பொழிப்புரை :வேதங்களை ஓதும் நான்முகனும், நெடுமாலும் காணுதற்கு அரியவனே, மழுவைக் கையில் ஏந்தியவனே, கலை நிறையாத பிறை மதியைச் சூடியவனே, முத்துக்களின் கொத்துப் போன்ற இறையோனே
என்று போற்றி, எருக்கத்தம்புலியூரை
இடமாகக் கொண்ட கறைமிடற்று அண்ணலை நினைந்தால், வினை கெடும்.
பாடல்
எண் : 10
புத்தர்
அருகர்தம் பொய்கள் புறம்போக்கிச்
சுத்தி
தரித்துஉறையும் சோதி, உமையோடும்
நித்தன், எருக்கத்தம் புலியூர்
நிகழ்வாய
அத்தன், அறவன்தன் அடியே
அடைவோமே.
பொழிப்புரை :புத்தர் சமணர்
ஆகியோர்தம் பொய்யுரைகளை விலக்கித் தூய்மையைத் தழுவி விளங்கும் ஒளி வடிவினனாய், உமையம்மையாருடன் நித்தம் மணாளனாக
விளங்குவோனாய், எருக்கத்தம்புலியூரில்
விளங்கிக் கொண்டிருக்கும் அறவடிவினனாகிய தலைவன் அடிகளை, நாம் அடைவோம்.
பாடல்
எண் : 11
ஏர்ஆர்
எருக்கத்தம் புலியூர் உறைவானைச்
சீர்ஆர்
திகழ்காழித் திருஆர் சம்பந்தன்
ஆரா
அருந்தமிழ் மாலைஇவை வல்லார்
பாரார்
அவர்ஏத்தப் பதிவான் உறைவாரே.
பொழிப்புரை :அழகிய
எருக்கத்தம்புலியூரில் விளங்கும் இறைவனை, சீர்மிகு
காழிப்பதியில் தோன்றிய திருவார் சம்பந்தன் அருளிய சுவை குன்றாத அருந்தமிழ்
மாலையாகிய இத்திருப்பதிகப் பாடல்களை ஓதுபவர்கள் உலகவர் ஏத்த வானகம் எய்துவர்.
திருச்சிற்றம்பலம்
No comments:
Post a Comment