திரு அறையணி நல்லூர்


                                    திரு அறையணிநல்லூர்
                                        (அறகண்டநல்லூர்)

     நடு நாட்டுத் திருத்தலம்.

         திருக்கோயிலூருக்கு எதிர்க்கரையில் பெண்ணையாற்றின் வடகரையில் உள்ள ஒரு சிறு குன்றின் மீது திருக்கோயில் அமைந்துள்ளது. திருக்கோயிலூரில் இருந்து 2 கி.மீ. தொலைவிலுள்ள இத்தலத்திற்கு வர, நகரப் பேருந்து வசதி உண்டு. விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலையில் இருந்து திருக்கோயிலூர் வர, பேருந்து வசதிகள் இருக்கின்றன. பஞ்சபூதத் தலங்களில் ஒன்றான திருவண்ணாமலை இங்கிருந்து 35 கி.மி. தொலைவில் இருக்கிறது. விழுப்புரத்தில் இருந்து சுமார் 37 கி.மீ. தொலைவு.

இறைவர்              : அறையணிநாதேசுவரர் அதுல்யநாதேசுவரர், ஒப்பிலாமணி

இறைவியார்           : அருள்நாயகி, அழகிய பொன்னம்மை

தீர்த்தம்               : பெண்ணையாறு

தேவாரப் பாடல்கள்    : சம்பந்தர் - பீடினாற்பெரி யோர்களும்.


         ஏழுநிலைகளை உடைய இராஜகோபுரம் ஒரு பெரிய பாறையின் மீது கட்டப்பட்டுள்ளது. கோபுர வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் பிரகாரத்தில் வலம்புரி விநாயகர் உள்ளார். இவரே இத்தலத்தின் தல விநாயகர். விநாயகருக்கு முன்பு இடதுபுறம் கையில் தாளமேந்திய நிலையில் திருஞானசம்பந்தர் திருமேனி உள்ளது. விநாயகரின் பக்கத்தில் விசுவநாத லிங்கம் உள்ளது. அடுத்த வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் மூலவர் கருவறையை அடையலாம். கருவறையைச் சுற்றிலும் அகழி போன்ற அமைப்பு உள்ளது. கருவறைச் சுற்றில் நவக்கிரக சந்நிதி, பைரவர், கல்லில் வடித்துள்ள நாராயணர், நர்த்தன கணபதி, சக்கரதாரியாக நின்ற நிலையில் மகாவிஷ்ணு ஆகியோரின் சந்நிதிகள் உள்ளன. சப்தமாதாக்கள் வரிசையாகக் கல்லில் வடிக்கப்பட்டுள்ளனர். மூலவர் அதுல்யநாதேஸ்வரர் மேற்கு நோக்கி காட்சி தருகிறார். கருவறைச் சுற்றில் நடராஜர் சபையும் உள்ளது. வெளிச் சுற்றில் அண்ணாமலையார் சந்நிதி உள்ளது. அம்பாள் தனிக்கோயிலில் தெற்கு நோக்கி நான்கு திருக்கரங்களுடன் கூடிய நின்ற திருக்கோலத்தில் அருட்காட்சி தருகிறாள்.

         இத்தலத்திலுள்ள முருகன் திருமேனி ஒருமுகத்துடனும், ஆறு திருக் கரங்களுடனும் வள்ளிதெய்வயானை சமேதராக வடக்கு நோக்கிக் காட்சியளிக்கிறார். கைகளில் ஆயுதங்கள் உள்ளன.

         கோயிலுக்கு வெளியில் பாறைகளுக்கு இடையில் உள்ளது பீமன் குளம். பாஞ்சாலி நீராடுவதற்காக இக்குளத்தை பீமன் வெட்டியதாக புரணாச் செய்திகள் மூலம் தெரிய வருகிறது.. ராஜகோபுரத்தின் அடிவாயிலில் குடைவரைக் கோயில்களாக ஐந்து அறைகள் உள்ளன. பஞ்ச பாண்டவர் வனவாசத்தின் போது இங்கு தங்கி இருந்ததாகக் கூறுவர். இப்போது உள்ளே ஏதுமில்லை. வனவாசம் முடிந்து, 18 நாட்கள் போருக்குப் பின் நாட்டைத் திரும்பப் பெற்ற பாண்டவர்கள், பட்டாபிஷேகம் முடிந்ததும் குடும்பத்தினரோடு மீண்டும் இங்கு வந்து வழிபட்டுச் சென்றனராம்.

         பாண்டவர்கள் இவ்விறைவனை வழிபட்டுச் சென்று இழந்த நாட்டை மீண்டும் பெற்றதுபோல, பதவி இழந்தவர்கள், சொத்து சுகங்களை இழந்தவர்கள் இங்கு வந்து வழிபட்டால் இறைவன் அருளால் மீண்டும் அவற்றைப் பெறலாம்.

     வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "ஆவலர், மாதேவா! இறைவா! சிவனே! எனும் முழக்கம் ஓவா அறையணிநல்லூர் உயர்வே" என்று போற்றி உள்ளார்.

திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 968
கோவல் நீடிய வீரட்டம் அமர்ந்தவர்
         குரைகழல் பணிந்துஏத்தி,
ஆவின் ஐந்துஉகந்து ஆடுவார்அறையணி
         நல்லூரை அணைந்துஏத்தி,
பாஅலர்ந்த செந்தமிழ் கொடு பரவுவார்
         பரவுசீர் அடியார்கள்
மேவும் அன்புஉறு மேன்மையாம் தன்மையை
         விளங்கிட அருள்செய்தார்.

         பொழிப்புரை : திருக்கோவலூரில் திருவீரட்டக் கோயிலில் விரும்பி எழுந்தருளியிருக்கும் இறைவரின், ஒலிக்கும் கழல் அணிந்த திருவடிகளை வணங்கிப் போற்றி, ஆனினிடமாகத் தோன்றும் ஐந்து பொருள்களையும் விரும்பியாடுபவரான இறைவரின் திருஅறையணிநல்லூரைச் சென்றடைந்து போற்றிப் பாவாக மலர்ந்த தமிழ்ப் பதிகத்தினால் போற்றுபவரான பிள்ளையார், இறைவரின் பொருள்சேர் புகழ்களையே போற்றி வாழும் தொண்டர்களுக்கு, அன்பினால் உளவாகும் மேம்பாடான தன்மைகளை உலகம் அறிந்து உய்யுமாறு அருளிச் செய்தார்.

         குறிப்புரை : இத்திருப்பதிகளில் அருளிய பதிகங்கள்:

1.    திருக்கோவலூர்: `படைகொள்\' (தி.2 ப.100) - நட்டராகம்.

     2. திருஅறையணிநல்லூர்: `பீடினால்\' (தி.2 ப.77) - காந்தாரம்.

         திருஅறையணிநல்லூரில் வீற்றிருந்தருளும் பெருமானை வணங்குவோர்க்கு உளவாகும் நலன்களை இப்பதிகப் பாடல் தொறும் பிள்ளையார் அருளுவதை உளங்கொண்டு ஆசிரியர் இங்ஙனம் அருளுவாராயினர்.


பெ. பு. பாடல் எண் : 969
சீரின் மன்னிய பதிகம்முன்
         பாடிஅத் திருஅறை அணிநல்லூர்
வாரின் மல்கிய கொங்கையாள்
         பங்கர்தம் மலைமிசை வலம்கொள்வார்,
பாரின் மல்கிய தொண்டர்கள்
         இமையவர் நாடொறும் பணிந்துஏத்தும்
காரின் மல்கிய சோலைஅண்
         ணாமலை அன்பர்காட் டிடக்கண்டார்.

திருஞானசம்பந்தர் திருப்பதிகம்

2.077 திருஅறையணிநல்லூர்                   பண் - காந்தாரம்
                                    திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
பீடினால் பெரியோர்களும் பேதைமை கெடத் தீது இலா
வீடினால் உயர்ந் தார்களும் வீடுஇலார் இள வெண்மதி
சூடினார்,மறை பாடினார், சுடலை நீறு அணிந்து ஆர்அழல்
ஆடினார் அறையணிநல்லூர் அங்கையால் தொழுவார்களே.

         பொழிப்புரை :அழிவற்றவரும், இளவெண்பிறையைச் சூடியவரும், வேதங்களை அருளியவரும், சுடலைப்பொடி பூசியவரும், அழலின் கண் நின்று ஆடுபவரும் ஆகிய அறையணிநல்லூர் இறைவரைத் தம் அம் கையால் தொழுபவர் பீடினால் பெரியோர் ஆவர். பாசங்கள் கெடப் பற்றற்றவராய் உயர்ந்தவர்கள் ஆவர்.


பாடல் எண் : 2
இலையின் ஆர் சூலம் ஏறு உகந்து ஏறியே, இமையோர் தொழ
நிலையினால் ஒரு கால் உறச் சிலையினால் மதில் எய்தவன்,
அலையின் ஆர் புனல் சூடிய அண்ணலார் அறையணிநல்லூர்
தலையினால் தொழுது ஓங்குவார் நீங்குவார் தடுமாற்றமே.

         பொழிப்புரை :இலைவடிவமான முத்தலைச் சூலத்தை ஏந்தி, ஆன் ஏற்றில் விரும்பி ஏறி வருபவன். இமையவர் வேண்ட நிலைத்த ஒரு திருவடியால் வில்லை ஊன்றித் திரிபுரங்களை எய்தவன். அலைகளோடு கூடிய கங்கையை முடிமிசைச் சூடிய தலைவன். அப்பெருமான் எழுந்தருளிய அறையணிநல்லூர் சென்று அவனைத் தலையினால் தொழும் பெருமை மிக்கவர் தடுமாற்றம் நீங்குவர்.


பாடல் எண் : 3
என்பின் ஆர் கனல் சூலத்தார் இலங்கு மாமதி உச்சியான்
பின் பினால் பிறங்கும் சடைப் பிஞ்ஞகன், பிறப்பு இலி என்று
முன் பினார் மூவர் தாம் தொழு முக்கண் மூர்த்தி தன் தாள்களுக்கு
அன்பினார் அறையணிநல்லூர் அங்கையால் தொழு வார்களே.

         பொழிப்புரை :என்பு மாலை அணிந்தவர். கனலும் சூலத்தை ஏந்தியவர். விளங்கும் சிறந்த பிறைமதியை உச்சியில் சூடியவர். பின்னே தாழ்ந்து தொங்கும் சடையினர். தலைக்கோலம் உடையவர். பிறப்பற்றவர் என்று அறையணிநல்லூர் இறைவரைக் கைகூப்பித் தொழுபவரே வலிமைமிக்க மும்மூர்த்திகளும் தொழுது வணங்கும் முக்கண் மூர்த்திதன் திருவடிகளில் அன்புடையவர் ஆவர்.


பாடல் எண் : 4
விரவு நீறு பொன் மார்பினில் விளங்கப் பூசிய வேதியன்
உரவு நஞ்சு அமுதாக உண்டு உறுதி பேணுவது அன்றியும்
அரவு நீள் சடைக் கண்ணியார் அண்ணலார் அறையணிநல்லூர்
பரவுவார் பழி நீங்கிடப் பறையும் தாம் செய்த பாவமே.

         பொழிப்புரை :அழகிய மார்பில் திருநீற்றை விரவப்பூசிய வேதியனும், வலிய நஞ்சினை அமுதாக உண்டு உலகிற்கு அழியாமை தந்தவனும், பாம்பை நீண்ட சடைக்கு முடிக்கண்ணியாகக் கொண்டவனும் ஆகிய அண்ணல் உறையும் அறையணிநல்லூரைப் பரவுவார் பழிபாவங்கள் நீங்கப் பெறுவர்.

  
பாடல் எண் : 5
தீயினார் திகழ் மேனியாய் தேவர் தாம் தொழு தேவன் நீ
ஆயினாய்,கொன்றையாய், அனல் அங்கையாய், அறையணிநல்லூர்
மேயினார் தம தொல்வினை வீட்டினாய், வெய்ய காலனைப்
பாயினாய், அதிர் கழலினாய், பரமனே, அடி பணிவனே.

         பொழிப்புரை :தீப்போல விளங்கும் செம்மேனியனே! தேவர்களால் தொழப்பெறும் தேவனாக நீயே ஆனவனே! கொன்றை மலர் அணிந்தவனே! அனலைக்கையில் ஏந்தியவனே! அறையணிநல்லூரை அடைந்து வழிபடுபவரின் பழவினைகளைத் தீர்ப்பவனே! கொடிய காலனைக் காய்ந்தவனே! ஒலிக்கும் கழலணிந்தவனே! பரமனே உன் திருவடிகளைப் பணிகின்றேன்.


பாடல் எண் : 6
விரையின் ஆர் கொன்றை சூடியும், வேக நாகமும் வீக்கிய
அரையினார், அறையணிநல்லூர் அண்ணலார், அழகு ஆயதோர்
நரையின் ஆர் விடை ஊர்தியார், நக்கனார் நறும் போதுசேர்
உரையினால் உயர்ந்தார்களும் உரையினால் உயர்ந்தார்களே.

         பொழிப்புரை :மணம் கமழும் கொன்றை மாலையைச் சூடியவர். சினம் மிக்க பாம்பினை அரையில் கட்டியவர். அறையணிநல்லூரில் விளங்கும் தலைமையாளர். அழகிய வெண்ணிறமான விடையை ஊர்தியாக உடையவர். திகம்பரர். அப்பெருமானை மலர்தூவி உரையினால் போற்றுபவர் புகழாளர் ஆவர்.

  
பாடல் எண் : 7
வீரம் ஆகிய வேதியர், வேக மாகளி யானையின்
ஈரம் ஆகிய உரிவை போர்த்து, அரிவை மேல் சென்ற எம்இறை,
ஆரம் ஆகிய பாம்பினார், அண்ணலார் அறையணிநல்லூர்
வாரமாய் நினைப்பார்கள் தம் வல்வினை அவை மாயுமே.

         பொழிப்புரை :ஞானமே வடிவான வேதியர். சினந்து வந்த பெரிய களிற்று யானையின் ஈரம் உடைய தோலைப் போர்த்து உமையம்மையார்பாற் சென்றவர். பாம்பினை ஆரமாகக் கொண்டவர். அறையணி நல்லூரில் விளங்கும் தலைமையாளர். அவரை அன்போடு நினைப்பவர்களின் வலிய வினைகள் மாயும்.


பாடல் எண் : 8
தக்கனா ர்பெரு வேள்வியைத் தகர்த்து உகந்தவன், தாழ்சடை
முக்கணான், மறை பாடிய முறைமையான், முனிவர் தொழ
அக்கினோடு எழில் ஆமை பூண் அண்ணலார் அறை அணிநல்லூர்
நக்கனார், அவர் சார்வு அலால், நல்கு சார்வு இலோம் நாங்களே.

         பொழிப்புரை :தக்கனது பெருவேள்வியைத் தகர்த்துகந்தவர். தாழ்ந்து தொங்கும் சடைகளையும் மூன்று கண்களையும் உடையவர். முனிவர்கள் தொழ வேதங்களை முறையோடு அருளியவர். என்பு மாலைகளையும் அழகிய ஆமை ஓட்டினையும் அணிந்த தலைமையாளர். அறையணிநல்லூரில் விளங்கும் திகம்பரர். நாங்கள் அவரது சார்பன்றி நலம் செய்யும் வேறு சார்பிலோம்.


பாடல் எண் : 9
வெய்ய நோய்இலர், தீது இலர், வெறியராய்ப் பிறர் பின்செலார்,
செய்வதே அலங்காரமாம், இவை இவை தேறி இன்புறில்
ஐயம் ஏற்று உணும் தொழிலராம், அண்ணலார் அறைஅணிநல்லூர்ச்
சைவனார், அவர் சார்வு அலால் யாதும் சார்வு இலோம்  நாங்களே.

         பொழிப்புரை :வெம்மையான நோய்கள் எவையும் இல்லாதவர். வெறிபிடித்தவர் போலப் பிறர் பின் செல்லாதவர். அவர் செய்வதே அலங்காரம் ஆகும். இவற்றை முறையே தெளிந்து இன்புற வேண்டின் ஐயம் ஏற்று உண்ணும் தொழிலரும் தலைமையாளரும் ஆகிய அறையணி நல்லூர்ச் சைவராகிய சிவபெருமானே நமக்குச் சார்வு ஆவார்: வேறு எதனையும் நாம் சாரோம் என்று எண்ணுக.


பாடல் எண் : 10
வாக்கியம் சொல்லி யாரொடும் வகை அலாவகை செய்யன்மின்,
சாக்கியம் சமண் என்று இவை சாரேலும், அரணம் பொடி
ஆக்கி, அம் மழுவாட் படை அண்ணலார், அறை யணிநல்லூர்ப்
பாக்கியம் குறை உடையீரேல் பறையுமாம் செய்த பாவமே.

         பொழிப்புரை :நீண்ட தொடர்களைப் பேசி யாரோடும் வகையல்லாதவற்றைச் செய்யாதீர். சாக்கியர் சமணர் நெறிகளைச் சாராதீர். திரிபுரங்களைப் பொடியாகச் செய்த மழுவாட்படை அண்ணலார் உறைகின்ற அறையணிநல்லூரை அடைந்து பாக்கியமாகிய தேவையை நிறைவு செய்துகொள்ள விரும்புவீராயின் அதனை அடைதலே அன்றிப் பாவங்களும் கழியப்பெறுவீர்.


பாடல் எண் : 11
கழி உலாம் கடல் கான ல்சூழ் கழுமலம் அமர் தொல்பதிப்
பழி இலா மறை ஞானசம்பந்தன் நல்லது ஓர் பண்பினார்
மொழியினால் அறையணிநல்லூர் முக்கண் மூர்த்தி தன் தாள்தொழக்
கெழுவினார் அவர் தம்மொடும் கேடு இல்வாழ்பதி பெறுவரே.

         பொழிப்புரை :உப்பங்கழிகள் உலாவும் கடற்சோலைகள் சூழ்ந்த தொல்பதியாகிய கழுமலத்தில் தோன்றிய குற்றமற்ற மறைவல்ல ஞானசம்பந்தன் அருளிய பதிகத்தை ஓதும் நற்பண்பினராய் அறையணி நல்லூரை அடைந்து முக்கண் மூர்த்தியாகிய சிவபிரான் திருவடிகளைத் தொழுது போற்றப் பொருந்தியவர்கள் குற்றமற்றவர் வாழும் சிவலோகத்தை அடைவர்.

                                             திருச்சிற்றம்பலம்

1 comment:

  1. திருத்தல விளக்கம் மிகவும் நன்று.திருமுறைகள் குறிப்பிட்டிருப்பது சிறப்பாக உள்ளது.

    ReplyDelete

பெரியோரை அவமதித்தல் கொலைக்குச் சமம்

                                         பெரியோரை அவமதித்தல் கொலைக்குச் சமம். -----        பாரதப் போரின் தளபதியாக துரியோதனனால் நியமனம் செய்ய...