திருச் சோபுரம்


திருச் சோபுரம்
(தியாகவல்லி)

     நடு நாட்டுத் திருத்தலம்.

         கடலூர் - சிதம்பரம் சாலை வழியில் கடலூரில் இருந்து 18 கி.மி. தொலைவிலுள்ள ஆலப்பாக்கம் என்ற கிராமத்தை அடைந்து அங்கிருந்து பிரிந்து ஆலப்பாக்கம் இரயில் நிலையம் செல்லும் சாலையில் சென்று இரயில் பாதையைக் கடந்து சுமார் 1.5 கி.மீ. சென்றால் இத்திருத்தலத்தை அடையலாம். திருசோபுரம் கிராமத்தில் சாலை ஓரத்திலேயே கோயில் உள்ளது.

இறைவர்              : மங்களபுரீசுவரர், திருச்சோபுரநாதர்.

இறைவியார்           : தியாகவல்லியம்மை, சத்யதாக்ஷி, வேல்நெடுங்கண்ணி.

தல மரம்                : கொன்றை.

தீர்த்தம்                  : கோயிலுள் உள்ள கிணறும்,கோயிலுக்குப் பின்னால் உள்ள                                      குளமுமே.

தேவாரப் பாடல்கள்    : சம்பந்தர் - வெங்கண்ஆனை யீருரிவை.


     மணற்பாங்கான பகுதியில் கோயில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. விசாலமான இடப்பரப்பு. ஓரு முகப்பு வாயில் மட்டும் உள்ளது. உள்ளே கவசமிட்ட கொடிமரம், பலிபீடம் ஆகியவற்றைக் காணலாம். வெளிப் பிரகாரத்தில் சந்நிதிகள் ஏதுமில்லை. இரண்டாவது வாயில் வழியே உள்ளே நுழைந்து உட்பிரகார வலம் வரும் போது சுப்பிரமணியர், கஜலட்சுமி, வீரட்டேஸ்வரலிங்கம், கண்ணப்பர், திரிபுவன சக்கரவர்த்தி அவர் மனைவி வழிபட்ட லிங்கங்கள், பைரவர், சூரியன், நவக்கிரகங்கள் முதலிய சந்நிதிகள் உள்ளன. விநாயகரைத் தொடர்ந்து அறுபத்துமூவர் சந்நிதியும், சோமாஸ்கந்தர் சந்நிதியும் உள்ளன. கருவறை முன் மண்டபம் கடந்து செல்லும் போது நேரே மூலவர் தரிசனம் தருகிறார். முன் மண்டபத்தின் இடதுபுறம் அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கி உள்ளது. இரு சந்நிதிகளையும் ஒரே இடத்திலிருந்து தரிசிக்கக் கூடிய அமைப்புடன் அமைந்துள்ளன. இத்தலத்து மூலவர் சிவலிங்கத் திருமேனி அகத்தியரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. சதுர ஆவுடையார் மீது பாணம் சுற்றளவு சற்று குறைவாக நீட்டுவாக்கில் உள்ள இலிங்கத் திருமேனி. சுவாமி மேற்கு நோக்கி காட்சியளிக்கிறார். இலிங்கத்தை அகத்தியர் பிரதிஷ்டை செய்த போது ஏற்பட்ட கைத்தடமும் இருக்கிறது. அம்பாள் நின்ற திருக்கோலத்தில் அருட்காட்சி தருகிறாள். கோஷ்ட மூர்த்தத்தில் இலிங்கோத்பவருக்கு இருபுறங்களிலும் திருமாலும் பிரம்மாவும் நின்று தரிசிக்கும் கோலத்தில் உள்ளனர். மும்மூர்த்திகளின் இந்த தரிசனம் விசேஷமானது

         கோயில் உள்ள பகுதி திருச்சோபுரம் என்றும், பக்கத்தில் உள்ள பகுதி தியாகவல்லி என்றும் சொல்லப்படுகிறது. திரிபுவனச் சக்கரவர்த்தியின் முதல் மனைவியான தியாகவல்லி அம்மையார் இக்கோவிலுக்கு திருப்பணி செய்த காரணத்தால் தியாகவல்லி என்று பெயர் பெற்றதாகக் கூறுவர்.

         இக்கோயில் பல்லாண்டுகளுக்கு முன்பு கடல் சீற்றத்தால் மணலால் மூடப்பட்டு விட்டது. பிற்காலத்தில் சிவபக்தர் ஒருவர் இத்தலத்தை பற்றி அறிந்து சுவாமியை தரிசனம் செய்ய வந்தார். ஆனால் இங்கு கோயில் இல்லை. ஓரிடத்தில் கோபுர கலசத்தின் நுனி மட்டும் தெரிந்தது. அதன்பின், ஊர்மக்கள் மணலை அகற்றி இக் கோயிலை வெளிக்கொண்டு வந்தனர்.

         பல்லாண்டுகளுக்கு முன்னர் வரை அருகில் உள்ள ஆற்றை, பரிசல் மூலம் கடந்து சென்றுதான் திருக்கோயிலை வழிபட முடிந்தது. பின்னர் பாலம் அமைக்கப்பட்டு விட்டதால், சிரமம் இன்றி வாகனங்கள் மூலம் சென்று வரலாம்.

         காலை 8-30 மணி முதல் 11 மணி வரையிலும் மாலை 5-30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

     வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "தீங்கு உறும் ஒன்னார் புரத்தை, விண் நகைத் தீயால் அழித்தாய் என்று தொழ சேர்புரத்தின் வாழ் ஞான தீவகமே" என்று போற்றி உள்ளார்.


திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 1135
அரசிலியில் அமர்ந்தருளும்
         அங்கண்அர சைப்பணிந்து,
பரசிஎழு திருப்புறவார்
         பனங்காட்டூர் முதலாய
விரைசெய்மலர்க் கொன்றையினார்
         மேவுபதி பலவணங்கி,
திரைசெய்நெடுங் கடல்உடுத்த
         திருத்தில்லை நகரணைந்தார்.

         பொழிப்புரை : திருஅரசிலியில் விரும்பி வீற்றிருக்கும் இறைவரைப் பணிந்து போற்றி, திருப்புறவார் பனங்காட்டூர் முதலான, மணம் கமழ்கின்ற கொன்றை மலரைச் சூடிய இறைவர் எழுந்தருளி யிருக்கின்ற பல பதிகளையும் வணங்கிச் சென்று, அலைகளையுடைய நீண்ட கடல் அணிமையாய்ச் சூழ்ந்த திருத்தில்லை நகரை அடைந்தார்.

         குறிப்புரை : திருஅரசிலியில் அருளியது, `பாடல் வண்டறை\' (தி.2 ப.95) எனும் முதற்குறிப்புடைய பியந்தைக் காந்தாரப் பண்ணில் அமைந்த பதிகமாகும். திருஅரசிலி மற்றும் திருப்புறவார்பனங் காட்டூரில் இதுபோது அருளியது, `விண் அமர்ந்தன' (தி.2 ப.53) எனும் முதற்குறிப்புடைய சீகாமரப் பண்ணிலமைந்த பதிகமாகும். பதிபலவும் என்பன திருவக்கரை, திருவடுகூர், திருஇரும்பைமாகாளம், திருவாமாத்தூர், திருவதிகை, திருச்சோபுரம் முதலாயினவாகலாம் என்பர் சிவக்கவிமணியார். இவற்றுள் திருச்சோபுரத்திற்கு அமைந்தது, `வெங்கண் ஆனை' (தி.1 ப.51) எனும் முதற்குறிப்புடைய பழந்தக்கராகப் பண்ணிலமைந்த பதிகமாகும். பிறபதிகளுக்குரிய பதிகங்கள் எவையும் கிடைத்தில.


1.051   திருச்சோபுரம்                    பண் - பழந்தக்கராகம்
                                             திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
வெங்கண்ஆனை ஈர்உரிவை போர்த்து,விளங் கும்மொழி
மங்கைபாகம் வைத்துஉகந்த மாண்புஅதுஎன்னை கொலாம்
கங்கையோடு திங்கள்சூடிக் கடிகமழும் கொன்றைத்
தொங்கலானே, தூயநீற்றாய், சோபுர மேயவனே.

         பொழிப்புரை :கங்கை திங்கள் ஆகியவற்றை முடிமிசைச்சூடி மணம் கமழும் கொன்றை மலர் மாலையை அணிந்து தூய திருநீறு பூசித் திருச்சோபுரத்தில் விளங்கும் இறைவனே! கொடிய யானையை உரித்து அதன் தோலைப் போர்த்திய, விளக்கமான மொழிகளைப் பேசும் மலைமங்கையை இடப்பாகத்தே கொண்டு மகிழும் உனது செயலின் மாண்பு எத்தகையதோ?.


பாடல் எண் : 2
விடைஅமர்ந்து, வெண்மழுஒன்று ஏந்தி,விரிந்து இலங்கு
சடைஒடுங்கத் தண்புனலைத் தாங்கியதுஎன் னைகொலாம்
கடைஉயர்ந்த மும்மதிலும் காய்ந்துஅனலுள் அழுந்தத்
தொடைநெகிழ்ந்த வெஞ்சிலையாய் சோபுரமே யவனே.

         பொழிப்புரை :வாயில்களாற் சிறந்த முப்புரங்களும் அனலுள் அழுந்துமாறு சினத்தோடு அம்பு செலுத்திய கொடிய மலை வில்லை உடையவனே! திருச்சோபுரம் மேவிய இறைவனே! விடைமீது அமர்ந்து வெண்மையான மழு ஒன்றைக் கையில் ஏந்தி விரிந்து விளங்கும் சடையின்கண் ஒடுங்குமாறு குளிர்ந்த நீரைத் தடுத்துத் தாங்கி இருத்தற்குக் காரணம் என்னையோ?.


பாடல் எண் : 3
தீயர்ஆய வல்அரக்கர் செந்தழல்உள் அழுந்தச்
சாயஎய்து, வானவரைத் தாங்கியதுஎன் னைகொலாம்,
பாயும்வெள்ளை ஏற்றைஏறிப் பாய்புலித்தோல்உடுத்த
தூயவெள்ளை நீற்றினானே, சோபுரமே யவனே.

         பொழிப்புரை :பாய்ந்து செல்லும் வெண்ணிறமான விடையேற்றின் மீது ஏறி, பாயும் புலியினது தோலை உடுத்துத்தூய வெண்ணீற்றை அணிந்துள்ளவனே! திருச்சோபுரம் மேவிய இறைவனே! கொடியவர்களாகிய வலிய அரக்கர் சிவந்த அழலுள் அழுந்துமாறு கணை எய்து தேவர்களை வாழ்வித்தது என்ன காரணம் பற்றியோ?


பாடல் எண் : 4
பல்இல்ஓடு கையில்ஏந்திப் பல்கடையும் பலிதேர்ந்து
அல்லல்வாழ்க்கை மேலதுஆன ஆதரவுஎன் னைகொலாம்,
வில்லைவென்ற நுண்புருவ வேல்நெடுங்கண் ணியொடும்
தொல்லைஊழி ஆகிநின்றாய் சோபுரமே யவனே.

         பொழிப்புரை :வில்லை வென்ற வளைந்த நுண்புருவத்தையும், வேல் போன்ற நீண்ட கண்ணையும் உடைய உமையம்மையோடும், பழமையான பல ஊழிக்காலங்களாக நிற்பவனே! திருச்சோபுரம் மேவிய இறைவனே! பல் இல்லாத மண்டையோட்டைக் கையிலேந்திப் பலர்இல்லங்களுக்கும் சென்று பலி ஏற்கும் அல்லல் பொருந்திய வாழ்க்கையின்மேல் நீ ஆதரவு காட்டுதற்குக் காரணம் என்னவோ?


பாடல் எண் : 5
நாற்றமிக்க கொன்றைதுன்று செஞ்சடைமேல் மதியம்
ஏற்றமாக வைத்துஉகந்த காரணம்என் னைகொலாம்,
ஊற்றமிக்க காலன் தன்னை ஒல்கஉதைத்து அருளி
தோற்றம்ஈறும் ஆகிநின்றாய் சோபுரமே யவனே.

         பொழிப்புரை :வலிமை பொருந்திய காலனை அழியுமாறு உதைத் தருளி, எல்லாப் பொருள்கட்கும் தோற்றமும் ஈறுமாகி நிற்பவனே! திருச்சோபுரம் மேவிய இறைவனே! மணம் மிக்க கொன்றை மலர்கள் நிறைந்த செஞ்சடையின்மேல் பிறைமதியை அழகு பெறவைத்து மகிழ்தற்குக் காரணம் என்னையோ?


பாடல் எண் : 6
கொல்நவின்ற மூவிலைவேல் கூர்மழுவாள் படையன்,
பொன்னைவென்ற கொன்றைமாலை சூடும்பொற்பு என்னைகொலாம்,
அன்னம்அன்ன மெல்நடையாள் பாகம்அமர்ந்து, அரைசேர்
துன்னவண்ண ஆடையினாய் சோபுரமே யவனே.

         பொழிப்புரை :அன்னம் போன்ற மெல்லிய நடையினையுடைய உமையம்மையை ஒரு பாகமாகப் பொருந்தி, இடையில் அழகிய கோவண ஆடையை அணிந்தவனே! திருச்சோபுரம் மேவிய இறைவனே! கொல்லும் தொழில் பொருந்திய மூவிலை வேலையும் தூய மழுவாட்படையையும் உடையவனே! நிறத்தால் பொன்னை வென்ற கொன்றை மாலையை நீ விரும்பிச் சூடுதற்குரிய காரணம் என்னையோ?


பாடல் எண் : 7
குற்றம்இன்மை உண்மைநீ என்று உன்அடியார் பணிவார்,
கற்றகேள்வி ஞானம்ஆன காரணம்என் னைகொலாம்
வற்றல்ஆமை வாள்அரவம் பூண்டுஅயன்வெண் தலையில்
துற்றல்ஆன கொள்கையானே சோபுரமே யவனே.

         பொழிப்புரை :ஊன் வற்றிய ஆமை ஓட்டையும், ஒளி பொருந்திய பாம்பையும் அணிகலனாகப்பூண்டு, பிரமனின் வெண்மையான தலையோட்டில் பலியேற்று உண்ணும் கொள்கையனே! திருச்சோபுரம் மேவிய இறைவனே! குணமும் குற்றமும் நீயே என்று பணியும் உன் அடியவர்கட்குத் தாங்கள் கற்ற கல்வியும், கேள்வியும் அதனால் விளையும் ஞானமுமாக நீயே விளங்குதற்குக் காரணம் என்னவோ?

பாடல் எண் : 8
விலங்கல்ஒன்று வெஞ்சிலையாக் கொண்டு,விறல் அரக்கர்
குலங்கள்வாழும் ஊர்எரித்த கொள்கைஇது என்னைகொலாம்
இலங்கைமன்னு வாள்அவுணர் கோனைஎழில் விரலால்
துலங்கஊன்றி வைத்துஉகந்தாய் சோபுரமே யவனே.

         பொழிப்புரை :இலங்கையில் நிலைபெற்று வாழும், வாட்போரில் வல்ல அவுணர் தலைவனாகிய இராவணனைத் தனது அழகிய கால் விரலால் நடுங்குமாறு ஊன்றிப் பின் அவன் வேண்ட மகிழ்ந்து அருள்புரிந்தவனே! திருச்சோபுரம் மேவிய இறைவனே! மேரு மலையைக் கொடியதொரு வில்லாகக் கொண்டு வலிமை பொருந்திய அரக்கர் குலங்கள் வாழ்கின்ற திரிபுரங்களாகிய ஊர்களை எரித்து அழித்தற்குக் காரணம் என்னவோ?.


பாடல் எண் : 9
விடங்கொள்நாக மால்வரையைச் சுற்றி,விரி திரைநீர்
கடைந்தநஞ்சை ஊண்டுஉகந்த காரணம்என் னைகொலாம்,
இடந்துமண்ணை உண்டமாலும் இன்மலர்மேல் அயனும்
தொடர்ந்துமுன்னம் காணமாட்டாச் சோபுரமே யவனே.

         பொழிப்புரை :மண்ணுலகை அகழ்ந்து உண்ட திருமாலும், இனிய தாமரை மலர்மேல் விளங்கும் பிரமனும், முற்காலத்தே உன்னைத் தொடர்ந்து அடிமுடி காணமாட்டாராய் நின்றொழியத் திருச்சோபுரத்தில் மேவி விளங்கும் இறைவனே! தேவர்கள் விடத்தையுடைய வாசுகி என்னும் பாம்பை மந்தரம் என்னும் பெரிய மலையைச் சுற்றிக் கட்டி, விரிந்த அலைகளையுடைய கடல்நீரைக் கடைந்தபோது, அத னிடை எழுந்த நஞ்சை உண்டு மகிழ்தற்குக் காரணம் என்னையோ?


பாடல் எண் : 10
புத்தரோடு புன்சமணர் பொய்உரையே உரைத்துப்
பித்தராகக் கண்டுஉகந்த பெற்றிமைஎன் னைகொலாம்,
மத்தயானை ஈர்உரிவை போர்த்து,வளர் சடைமேல்
துத்திநாகம் சூடினானே சோபுரமே யவனே

         பொழிப்புரை :மதம் பொருந்திய யானையை உரித்து அதன் தோலைப் போர்த்து , நீண்ட சடையின் மேல் புள்ளிகளையுடைய நாகப் பாம்பைச்சூடியவனே ! திருச்சோபுரம் மேவிய இறைவனே ! புத்தர் களும் , சமணர்களும் பொய்யுரைகளையே பேசிப் பித்தராகத் திரி தலைக் கண்டு நீ மகிழ்தற்குக் காரணம் என்னையோ ?.


பாடல் எண் : 11
சோலைமிக்க தண்வயல் சூழ் சோபுரமே யவனைச்
சீலமிக்க தொல்புகழார் சிரபுரக்கோன், நலத்தான்,
ஞாலமிக்க தண்தமிழான், ஞானசம்பந்தன் சொன்ன
கோலமிக்க மாலைவல்லார் கூடுவர்வான் உலகே.

         பொழிப்புரை :சோலைகள் மிகுந்ததும், குளிர்ந்தவயல்களால் சூழப்பட்டதுமான திருச்சோபுரம் மேவிய இறைவனைச் சீலத்தால் மிக்க, பழமையான புகழை உடைய அந்தணர்கள் வாழும் சிரபுரம் என்னும் சீகாழிப்பதியின் தலைவனும், நன்மைகளையே கருதுபவனும், உலகில் மேம்பட்ட தண் தமிழ் பாடியவனுமாகிய ஞானசம்பந்தன் பாடிய அழகுமிக்க இத்தமிழ் மாலையை ஓதவல்லவர் வானுலகை அடைவர்.
                                             திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...