திரு இடைச்சுரம்
திரு இடைச்சுரம்
(தற்போது திருவடிசூலம் என்று வழங்குகிறது)

     தொண்டை நன்னாட்டுத் திருத்தலம்.

         செங்கல்பட்டில் இருந்து திருப்போரூர் போகும் சாலை மார்க்கத்தில், செங்கல்பட்டில் இருந்து கிழக்கே சுமார் 9 கி.மீ. தொலைவில் இத் திருத்தலம் அமைந்துள்ளது. திருவடிசூலம் பேருந்து நிறுத்தத்திலிருந்து 1 கி.மீ. தூரத்தில் ஆலயம் உள்ளது.

     செங்கற்பட்டு - திருக்கழுக்குன்றம் சாலையில் சென்றால், இடப்புறமாக, திருப்போரூர் செல்லும் சாலையில் மூன்று கி.மீ. சென்றால் திருவடி சூலம் நிறுத்தத்தில் இறங்கினால், சாலை ஓரத்தில் திருக்கோயில் பெயர்ப் பலகையைக் காணலாம்.  ஊர்க் கோடியில் திருக் கோயில் உள்ளது.  திருக்கோயில் வரை கார், தனிப் பேருந்து செல்லலாம்.

     வயல்களை ஒட்டி, மலைகளால் சூழப்பட்டுள்ள அழகான திருக் கோயில்.

இறைவர்              : ஞானபுரீசுவரர், இடைச்சுரநாதர்.

இறைவியார்           : கோபரத்னாம்பிகை, இமயமடக்கொடி.

தல மரம்         : வில்வம்

தேவாரப் பாடல்கள்         : சம்பந்தர் - வரிவள ரவிரொளி.

     திருஇடைச்சுரம் (திருவடிசூலம்) பல குன்றுகளுக்கு நடுவில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் திருவடிசூலம் கிராமத்தில் அமைந்துள்ளது. கோயிலுக்கு இராஜகோபுரம் இல்லை. தெற்கு நோக்கிய ஒரு நுழைவாயில் மட்டுமே உள்ளது. கோயிலுக்கு வெளியே இடதுபுறம் வரசித்தி விநாயகர் சந்நிதி உள்ளது. நுழைவாயில் வழியாக உள்ளே சென்றால் விசாலமான தெற்கு வெளிப் பிரகாரத்தில் நேரே வலம்புரி விநாயகர் சந்நிதியைக் காணலாம். வெளிப் பிரகாரம் வலம் வரும் போது கிழக்குப் பிரகாரத்தில் பலிபீடமும், நந்தியும் உள்ளன. இப்பிரகாரத்தில் பிரம்மாண்டேசுவரர் சந்நிதியும் உள்ளது. அருகில் வேப்பம், அரசு, வில்வம் ஆகிய மூன்று மரங்களும் இணைந்து வளர்ந்திருப்பதைக் காணலாம். மேலும் இந்த கிழக்குப் பிரகாரத்தில் தெற்கு நோக்கிய சுப்பிரமணியர் வள்ளி தெய்வானையுடன் உள்ள சந்நிதியும் உள்ளது. பிரகார வலம் முடிந்து மீண்டும் தெற்குப் பிரகாரம் வந்தால் தல விருட்சம் வில்வமரம் உள்ளது. இந்த வில்வ மரத்திற்கு அருகில் ஒரு பாம்புப் புற்று உள்ளது. இது விநாயகர் வடிவில் காட்சி தருகிறது.

         தெற்குப் பிரகாரத்திலுள்ள மற்றொரு நுழைவாயில் வழியே உள்ளே சென்றால் அநேக தூண்களுடன் ஒரு பெரிய மண்டபம் உள்ளது. மண்டபத்தை அடுத்து நேரே தெற்கு நோக்கிய இறைவி கோவர்த்தனாம்பிகை சந்நிதியைக் காணலாம். சந்நிதிக்குள் நுழைந்தால் இடதுபுறம் கிழக்கு நோக்கிய இறைவன் ஞானபுரீசுவரர் சந்நிதி உள்ளது. ஒரே இடத்தில் நின்றபடி இறைவன், இறைவி இருவரையும் தரிசிக்கலாம். மூலவர் சந்நிதிக்கு இருபுறமும் விநாயகரும் முருகப்பெருமானும் காட்சியளிக்கின்றனர்.

         கருவறை அகழி அமைப்புடன் காணப்படுகிறது. வலமாகச் சுற்றி வந்தால் நால்வர் பிரதிஷ்டை உள்ளது. விநாயகர், சந்நிதியும், வள்ளி தெய்வயானை உடனாகிய சுப்பிரமணியர் சந்நிதியும் அடுத்து உள்ளன. அடுத்த தரிசனம் பைரவர். இத்தலத்தின் சிறப்பு மூலவர் லிங்கத் திருமேனி. இந்த சுயம்பு லிங்கம் ஒரு மரகதலிங்கம். சதுரபீட ஆவுடையார். சிவலிங்கத் திருமேனியில் தீபாராதனை செய்யும்போது அவ்வொளி பிரகாசமாக லிங்க பாணத்தில் தெரிகின்றது. கோஷ்ட மூர்த்தங்களாக தட்சினாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர்.

         அம்பாள், பசு வடிவில் வந்து பால் சொரிந்து இறைவனை வழிபட்ட தலம். ஆதலால் இறைவி கோவர்த்தனாம்பிகை என்று அழைக்கப்படுகிறாள்.

         செவி வழிச் செய்தியாக வழங்கி வருவது. திருஞானசம்பந்தர் தனது சிவத்தல யாத்திரையின் போது இவ்வழியே வந்து கொண்டிருந்தார். நீண்ட தூரம் நடந்து வந்ததாலும், வெயில் ஏறியதாலும் அவர் மிகவும் களைப்படைந்தார். அதோடு பசியும் அவரை வாட்ட ஒரு மரத்தடியில் அமர்ந்தார். அப்போது ஒரு இடையன் அங்கு வந்தான். பசியோடு உள்ள திருஞானசம்பந்தரைப் பார்த்த அவன் தன்னிடமிருந்த தயிரைப் பருகக் கொடுத்தான். தயிரைப் பருகி களைப்பு நீங்கிய திருஞானசம்பந்தரை பார்த்து இடையன் அவர் யார் என்று வினவினான். தனது சிவத்தல யாத்திரைப் பற்றிக் கூறிய திருஞானசம்பந்தரிடம், இடையன் அருகிலுள்ள வனத்தில் ஒரு சிவன் இருப்பதைப் பற்றிக் கூறினான். இடையன் மூலமாக பசியாறிய திருஞானசம்பந்தர், அவனது அழைப்பைத் தட்ட முடியாமல் அவனைப் பின் தொடர்ந்து சென்றார். வழியில் ஒரு குளக்கரையில் நின்ற இடையன் திருஞானசம்பந்தரைப் பார்த்து புன்னகைத்து விட்டு மறைந்து விட்டான். திகைப்படைந்த திருஞானசம்பந்தர் சிவபெருமானை வேண்ட, சிவன் அவருக்கு காட்சியளித்து தானே இடையன் வடிவில் வந்து அருள் புரிந்ததைக் கூறினார். இடையனாக வந்து, இடையிலேயே விட்டுவிட்டுச் சென்றதால் இறைவனை இடைச்சுரநாதர் என்று அழைத்து பதிகம் பாடினார் திருஞானசம்பந்தர். சிவன் மறைந்த குளக்கரை "காட்சிகுளம்" என்ற பெயரில் தற்போதும் இருக்கிறது.

         திருக்கழுக்குன்றம் அருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இவ்வாலயம் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும் மாலையில் 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.

     வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில்,  "ஈடு இல்லை என்னும் திருத் தொண்டர் ஏத்தும் இடைச்சுரத்தின் மன்னும் சிவானந்த வண்ணமே" என்று போற்றி உள்ளார்.

 
திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 1128
இருந்த"இடைச் சுரம்மேவும்
         இவர்வண்ணம் என்னே"என்று
அருந்தமிழின் திருப்பதிகத்து
         அலர்மாலை கொடுபரவி,
திருந்துமனம் கரைந்து உருகத்
         திருக்கடைக்காப் புச்சாத்தி,
பெருந்தனிவாழ் வினைப்பெற்றார்
         பேர்உலகின் பேறுஆனார்.

         பொழிப்புரை : உலகத்தவரின் பெரும்பேறாகத் தோன்றிய ஞானசம்பந்தர், சாரல் விளங்க இருந்த அத் திருவிடைச்சுரத்தில் வீற்றிருக்கும், `பெருமானின் வண்ணம்தான் என்ன அதிசயம்' என்று அரிய தமிழால் ஆன இனிய திருப்பதிக மலர் மாலையால் போற்றி, உள்ளம் கரைந்து உருகத் திருக்கடைக்காப்புப் பாடியருளி, பெரிய ஒப்பில்லாத சிவானந்தப் பெருவாழ்வினில் திளைத்து நின்றார்.

         குறிப்புரை : இதுபொழுது அருளிய பதிகம் `வரிவளர் அவிரொளி '(தி.1 ப.78) எனத் தொடங்கும் குறிஞ்சிப் பண்ணில் அமைந்த பதிகமாகும். பாடல் தொறும் `இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே' எனவருவதையே ஆசிரியர் இங்குக் குறித்துக் காட்டுகின்றார்.


பெ. பு. பாடல் எண் : 1129
நிறைந்து ஆரா வேட்கையினால்
         நின்றுஇறைஞ்சி, புறம்போந்து, அங்கு
உறைந்து அருளிப் பணிகின்றார்,
         உமைபாகர் அருள்பெற்றுச்
சிறந்ததிருத் தொண்டருடன்
         எழுந்தருளி, செந்துருத்தி
அறைந்துஅளிகள் பயில்சாரல்
         திருக்கழுக்குன் றினைஅணைந்தார்.

         பொழிப்புரை : சிவானந்தப் பெருவாழ்வில் நிறைவுற்று ஆராத வேட்கையினால் நீண்ட நேரம் நின்று வணங்கி, வெளியே வந்து, அப்பதியில் தங்கியிருந்து பணிந்து வரும் பிள்ளையார், அவ்விறைவரின் அருள்விடை பெற்றுக் கொண்டு, சிறந்த திருத்தொண்டர்களுடன் எழுந்தருளிச் சென்று, செந்துருத்தி என்ற பண்ணைப் பாடி, வண்டுகள் மொய்க்கின்ற சாரலையுடைய திருக்கழுக்குன்றத்தை அடைந்தருளினார்.

         குறிப்புரை : செந்துருத்திப் பண்ணில் அமைந்த பதிகத்தைப் பாடியவாறு, திருக்கழுக்குன்றத்தினை அடைந்துள்ளார். இப்பதிகம் கிடைத்திலது. செந்துருத்திப் பண்ணில் அமைந்த `மீளா அடிமை\' (தி.7 ப.95) எனத் தொடங்கும் சுந்தரரின் திருப்பதிகம் ஒன்றே இதுபொழுது கிடைத்துள்ளது.


திருஞானசம்பந்தர் திருப்பதிகம்

1.078     திருஇடைச்சுரம்                     பண் - குறிஞ்சி
                                             திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
வரி வளர் அவிரொளி அரவு அரை தாழ,
         வார் சடைமுடி மிசை வளர் மதி சூடி,
கரி வளர் தருகழல் கால் வலன் ஏந்தி,
         கனல் எரி ஆடுவர் காடு அரங்காக,
விரி வளர் தருபொழில் இளமயில் ஆல
         வெண்ணிறத்து அருவிகள் திண் என வீழும்
எரிவளர் இனமணி புனம் அணி சாரல்
         இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே.

         பொழிப்புரை :மரங்கள் வளர்ந்த விரிந்த பொழில்களில் இள மயில்கள் ஆடுவதும், வெண்மையான நிறத்துடன் அருவிகள் திண்ணென்ற ஒலிக் குறிப்போடு வீழ்வதும், எரிபோன்று ஒளிரும் ஓரினமான மணிகள் காடுகளில் அழகுற விளங்குவதுமாய மலைச்சாரலை உடைய திருஇடைச்சுரத்தில், வரிகளையும் ஒளியையும் உடைய பாம்பை இடையிலே கட்டி, நீண்ட சடைமுடிமீது வளரும் பிறைமதியைச் சூடி யானை உருவம் பொறித்த வீரக்கழலைக் காலின்கண் வெற்றி பெறச்சூடிச் சுடுகாட்டைத் தமது அரங்காகக் கொண்டு ஆடும் இவ்விறைவரது இயல்பு யாதோ?


பாடல் எண் : 2
ஆற்றையும் ஏற்றது ஓர் அவிர் சடை உடையர்,
         அழகினை அருளுவர், குழகு அலது அறியார்,
கூற்று உயிர் செகுப்பது ஓர் கொடுமையை உடையர்,  
       நடு இருள் ஆடுவர், கொன்றை அம் தாரார்,
சேற்று அயல் மிளிர்வன கயல் இளவாளை
         செருச்செய ஓர்ப்பன செம்முக மந்தி
ஏற்றையொடு உழிதரும் எழில் திகழ் சாரல்
         இடைச்சுரம் மேவிய இவர்வணம் என்னே.

         பொழிப்புரை :வயல்களில் உள்ள சேற்றில் விளங்கும் கயல் மீன்களும் வாளைமீன்களும் தம்மோடு சண்டையிடுவதைக் கூர்ந்து நோக்கும் சிவந்த முகத்தையுடைய பெண்குரங்கோடு ஆண்குரங்கு கூடித் திரியும் அழகிய மலைச்சாரலை உடைய திருஇடைச்சுரத்தில், கங்கை நதியையும் ஏற்றருளிய விரிந்த சடையை உடையவராய், அழகும் இளமையும் உடையவராய், கூற்றுவன் உயிரை மாய்க்கும் பெருவிரல் உடையவராய், நள்ளிருளில் திருநடம்புரிபவராய், கொன்றை மலர்மாலை சூடியவராய் விளங்கும் இவ்விறைவர்தம் இயல்பு யாதோ?


பாடல் எண் : 3
கானமும், சுடலையும், கற்படு நிலனும்,
         காதலர், தீதுஇலர், கனல்மழுவாளர்,
வானமும் நிலமையும் இருமையும் ஆனார்,
         வணங்கவும்இணங்கவும் வாழ்த்தவும் படுவார்,
நானமும் புகை ஒளி விரையொடு கமழ,       
       நளிர்பொழில் இளமஞ்ஞை மன்னிய பாங்கர்,
ஏனமும் பிணையலும்  எழில் திகழ் சாரல்
         இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே.

         பொழிப்புரை :தூவி எரிக்கும் புழுகு, சந்தனம், அகில் முதலிய வற்றின் புகையும் அவை எரிதலால் விளங்கும் ஒளியும் மணம் வீசச்செறிந்த பொழில்களிடையே இளமயில்கள் நிறைந்துள்ளதும், அருகில் பன்றிகளும் மானினங்களும் வாழ்வதுமான அழகிய மலைச் சாரலை அடுத்துள்ள திருஇடைச்சுரத்தில் காட்டையும், சுடலையையும், கற்கள் நிரம்பிய மலையிடங்களையும் விரும்புபவரும், தீமை யில்லாதவரும், அழல் போன்ற வெம்மையான மழுவாயுதத்தை ஏந்தியவரும், தீமை யில்லாதவரும், மறுமை இம்மை ஆகிய இருமை இன்பங்களையும் தருபவரும் வணங்குதற்கும் பழகுதற்கும் வாழ்த்துதற்கும் உரிமையானவருமாகிய இவ்விறைவரின் இயல்புயாதோ?


பாடல் எண் : 4
கட மணி மார்பினர், கடல் தனில் உறைவார் ,
         காதலர் ,தீது இலர், கனல் மழுவாளர்,
விடம் அணி மிடறினர், மிளிர்வது ஓர் அரவர் ,
         வேறும் ஓர் சரிதையர், வேடமு ம்உடையர்,
வடமுலை அயலன கருங் குருந்து ஏறி
         வாழையின் தீங்கனி வார்ந்து தேன் அட்டும்,
இடை முலை அரிவையர் எழில் திகழ் சாரல்
         இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே.

         பொழிப்புரை :அசையும் ஆலமரத்தினருகே விளங்கும் கரிய குருந்த மரங்களில் ஏறி வாழைக் கனிகளின்மீது ஒழுகுமாறு தேன் அடைகளை எடுத்துப் பிழியும், இடங்கொண்டு வளர்ந்த முலைகளை உடைய பெண்கள் வாழும் அழகிய மலைச்சாரலை உடைய திரு இடைச்சுரத்தில், மலைச்சாரல்களில் விளைந்த மணிகளை அணிந்த மார்பினரும் கடலில் உறைபவரும், அன்புடையவரும் தீமையில்லாத வரும், கனலும் மழுவை ஏந்தியவரும் விடத்தை அடக்கிய மணிமிடற்றினரும், பாம்பை அணிகலனாகப் பூண்டவரும் வேறுவேறான ஒழுக்க நெறிகளை உடையவரும் பல்வேறு தோற்றங்களையுடைய வருமாய் எழுந்தருளிய இவ்விறைவரின் இயல்புயாதோ?


பாடல் எண் : 5
கார் கொண்ட கடிகமழ் விரிமலர்க் கொன்றைக்      
     கண்ணியர், வளர்மதி கதிர் விட,கங்கை
நீர் கொண்ட சடையினர், விடை உயர் கொடியர்,  
     நிழல் திகழ் மழுவினர், அழல் திகழ் நிறத்தர்,
சீர் கொண்ட மென்சிறை வண்டு பண் செய்யும்  
     செழும் புனல் அனையன செங்குலை வாழை
ஏர் கொண்ட பலவினொடு எழில் திகழ் சாரல்
         இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே.

         பொழிப்புரை :கார்காலத்தே உண்டான மணம் கமழும் விரிந்த கொன்றை மலர்களால் தொடுக்கப்பட்ட மாலையை அணிந்தவரும், வளரும் பிறைமதி ஒளிவிடக் கங்கைநீரை ஏற்ற சடையினரும், விடை எழுதிய உயர்ந்த கொடியை உடையவரும், ஒளி விளங்கும் மழுப் படையை ஏந்தியவரும், அழல்போலும் சிவந்த நிறத்தினரும் ஆய், சிறப்புமிக்க மெல்லிய இறகுகளை உடைய வண்டுகள் இசை பாடுவதும் வளவிய புனல் போலும் தண்ணிய செவ்வாழைக் குலைகள் அழகுமிக்க பலாக்கனிகளோடு விளங்கி அழகு செய்வதும் ஆகிய சாரலை உடைய இடைச்சுரத்தில் எழுந்தருளியிருக்கும் இவரது தன்மை யாதோ?


பாடல் எண் : 6
தோடு அணி குழையினர், சுண்ண வெண்ணீற்றர்,        
       சுடலையின் ஆடுவர் தோல் உடையாக,
பீடு உயர் செய்தது ஓர் பெருமையை உடையர் ,
         பேயுடன் ஆடுவர், பெரியவர் பெருமான்,
கோடல்கள் ஒழுகுவ முழுகுவ தும்பி
         குரவமும் மரவமு மன்னிய பாங்கர்
ஏடு அவிழ் புது மலர் கடி கமழ் சாரல்
         இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே.

         பொழிப்புரை :தோடணிந்த காதினராய்த் திருவெண்ணீறாகிய சுண்ணப்பொடி பூசியவரும், தோலை உடுத்திச் சுடுகாட்டில் நடனம் ஆடுபவரும், பீடு என்னும் சொல் பெருமை உறுமாறு மிக்க பெருமையை உடையவரும் பேய்க்கணங்களோடு ஆடுபவரும், பெரியவர் எனப் போற்றத் தக்கவர்கட்குத் தலைவருமாய்ச் செங் காந்தட் பூக்கள் தேனைச் சொரிய அவற்றின்கண் முழுகும் வண்டுகளை உடையதும் குரவம் கடம்ப மரம் ஆகியன நிறைந்துள்ள சோலைகளில் பூத்த புதுமலர்களின் மணம் வீசப்பெறுவதுமாகிய சாரலை உடைய இடைச்சுரத்தில் எழுந்தருளியுள்ள சிவபிரானது இயல்பு யாதோ?


பாடல் எண் : 7
கழல் மல்கு காலினர், வேலினர்,நூலர்,
         கவர் தலை அரவொடு கண்டியும் பூண்பர்,
அழல் மல்கும் எரியொடு மணி மழு ஏந்தி
         ஆடுவர், பாடுவர், ஆரணங்கு உடையர்,
பொழில் மல்கு நீடிய மரவமும் அரவம்
         மன்னிய கவட்டிடைப் புணர் குயில் ஆலும்
எழில் மல்கு சோலையில் வண்டு இசைபாடும்
         இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே.

         பொழிப்புரை :வீரக்கழல் அணிந்த திருவடியினரும், கையில் வேலை ஏந்தியவரும், முப்புரிநூல் அணிந்தவரும் ஐந்தாகக்கிளைத்த தலைகளை உடைய பாம்போடு உருத்திராக்க மாலை அணிந்துள்ளவரும், சுவாலைவிட்ட எரியோடு அழகிய மழுவை ஏந்தி ஆடுபவரும், பாடுபவரும், பிறரை வருத்தும் அழகுடையவருமாய்ப் பொழில்களில் நிறைந்து உயர்ந்துள்ள மராமரங்களில் பொருந்திய கிளைகளில் ஆண்பெண் குயில்கள் இணைந்து பாடுவதும் அழகிய சோலைகளில் வண்டுகள் இசைபாடுவதும் ஆகிய சாரலை உடைய இடைச்சுரத்தில் விளங்கும் சிவபிரானது இயல்பு யாதோ?


பாடல் எண் : 8
தேங்கமழ் கொன்றை அம் திருமலர் புனைவார்,        
        திகழ் தரு சடைமிசைத் திங்களும் சூடி,
வீந்தவர் சுடலை வெண் நீறு மெய் பூசி ,
         வேறும் ஓர் சரிதையர், வேடமும் உடையர்,
சாந்தமும் அகிலொடு முகில் பொதிந்து அலம்பித்    
       தவழ் கன மணியொடு மிகு பளிங்கு இடறி
ஏந்து வெள் அருவிகள் எழில் திகழ் சாரல்
         இடைச்சுரம் மேவிய இவ ர்வணம் என்னே.

         பொழிப்புரை :தேன் மணம் கமழும் அழகிய கொன்றை மலர் மாலையைச் சூடுபவரும், விளங்கும் சடைமுடியில் பிறை மதியைச்சூடி இறந்தவர்களை எரிக்கும் சுடுகாட்டுச் சாம்பலைத் தம் திருமேனி மீது பூசி, வேறுபடும் புராணவரலாறுகளை உடையவரும் அவ்வாறே வேறுபடும் பல வேடங்களுடன் காட்சி தருபவருமாய், சந்தனம் அகில் ஆகியவற்றின் மணம் பொதிந்து இடித்துப் பொழியும் மழையாள் உருண்டுவரும் பெரிய மணிகளையும் பளிங்குகளையும் அடித்து வருவனவாகிய உயர்ந்த வெண்மையான அருவிகள் விளங்கும் மலைச் சாரலை உடைய இடைச்சுரத்தில் விளங்கும் பெருமானது இயல்பு யாதோ?


பாடல் எண் : 9
பல இலம் இடுபலி கையில் ஒன்று ஏற்பர்,
         பல புகழ் அல்லது பழி இலர் தாமும்,
தலை இலங்கு அவிர் ஒளி நெடு முடி அரக்கன்
         தடக்கைகள் அடர்த்தது ஓர் தன்மையை உடையர்,
மலை இலங்கு அருவிகள் மணமுழவு அதிர,
         மழை தவழ் இளமஞ்ஞை மல்கிய சாரல்
இலை இலவங்கமும் ஏலமும் கமழும்
         இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே.

         பொழிப்புரை :பலர் இல்லங்களுக்கும் சென்று மகளிர் இடும் உணவைக் கைகளில் ஏற்பவரும், பலவாய் விரிந்த புகழ் அல்லது பழி எதுவும் இல்லாதவரும், விட்டு விளங்கும் ஒளியை உடைய நீண்ட மகுடங்களைத் தரித்த பத்துத் தலைகளையுடைய இராவணனின் நீண்ட கைகளை நெரித்த வலிமையை உடையவருமாய், மலையில் விளங்கும் அருவிகள் மணமுழாப் போல் ஒலியோடு இழிவதும், இள மயில்கள் நிறைந்ததும், மேகங்கள் தவழும் சாரலை உடையதும், இலைகளை உடைய இலவங்கம் ஏலம் கமழ்வதுமான திருஇடைச்சுரத்தில் எழுந்தருளிய இப்பெருமானது இயல்பு யாதோ?


பாடல் எண் : 10
பெருமைகள் தருக்கி ஓர் பேது உறுகின்ற  
        பெருங்கடல் வண்ணனும் பிரமனும் ஓரா
அருமையர், அடி நிழல் பரவி நின்று ஏத்தும்
         அன்பு உடை அடிய வர்க்கு அணியரும்ஆவர்,
கருமை கொள் வடிவொடு சுனை வளர் குவளைக்    
        கயல் இனம் வயல்இள வாளைகள் இரிய
எருமைகள் படி தர இள அனம் ஆலும்
         இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே.

         பொழிப்புரை :பெருமைகளால் செருக்குற்றுப் பேதைமை உறுகின்ற கடல் நிறவண்ணனாகிய திருமாலும் பிரமனும் அறிய முடியாத அருமையை உடையவரும், தம் திருவடி நிழலை நின்று பரவிப்போற்றும் அன்புடைய அடியவர்கட்கு அணிமையானவருமாய், சுனைகளில் கரிய நிறவடிவோடு பூத்து வளர்ந்த குவளை மலர்களையும் கயலினங்களையும் உடையதும் வயல்களில் வாளை மீன்களும் கயல் மீன்களும் அஞ்சித் துள்ளுமாறு எருமைகள் படிய அதனைக் கண்டு இளைய அன்னங்கள் ஆரவாரிப்பதுமாகிய திருஇடைச்சுரத்தில் எழுந்தருளிய சிவபிரானாராகிய இவர்தம் இயல்பு யாதோ?


பாடல் எண் : 11
மடைச் சுரம் மறிவன வாளையும் கயலும்
         மருவிய வயல் தனில் வரு புனல் காழிச்
சடைச் சுரத்து உறைவது ஓர் பிறை உடை அண்ணல்,  
       சரிதைகள் பரவி நின்று உருகு சம்பந்தன்
புடைச் சுரத்து அருவரைப் பூக் கமழ் சாரல்
         புணர் மட நடையவர் புடை இடை ஆர்ந்த
இடைச்சுரம் ஏத்திய இசையொடு பாடல்
         இவை சொல வல்லவர் பிணி இலர் தாமே.

         பொழிப்புரை :நீர் மடைகளில் துள்ளுவனவாகிய வாளை மீன்களும் கயல் மீன்களும் வயல்களிடத்து வரும் நீர் வளம் மிக்க காழி நகரில், சடைக்காட்டில் உறையும் பிறை மதியை உடைய சிவபிரானின் வரலாறுகளைப் பரவி உருகும் ஞானசம்பந்தன், அருகருகே வெற்றிடங் களை உடைய மலையின் பூக்கமழ் சாரலில் அழகிய மட நடையினை உடைய மகளிர் பல இடங்களில் தங்கி அழகு செய்வதாகிய இடைச்சுரத்தைப் போற்றிப் பாடிய இப்பதிகப் பாடலை இசையோடு சொல்ல வல்லவர், பிணிகள் இன்றி வாழ்வர்.

                                             திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment

முயலை விட்டுக் காக்கையின் பின் போதல் கூடாது

  முயல் விட்டு ,  காக்கைப் பின் போவது கூடாது. -----        இருப்பதை விட்டுப் பறப்பதைப் பிடிப்பது கூடாது என்பார்கள்.  எளிமையாகச் செய்யக்கூடிய...