அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
குகர மேவுமெய்
(திருச்செந்தூர்)
மாதர் மயல் கடல் விட்டு, முத்திக் கரை சேர, திருவடிப் புணை வேண்டல்.
தனன
தானனத் தனதன தனனாத்
தந்தத் தந்தத் ...... தனதான
குகர
மேவுமெய்த் துறவினின் மறவாக்
கும்பிட் டுந்தித் ...... தடமூழ்கிக்
குமுத
வாயின்முற் றமுதினை நுகராக்
கொண்டற் கொண்டைக் ...... குழலாரோ
டகரு
தூளிகர்ப் புரதன இருகோட்
டன்புற் றின்பக் ...... கடலூடே
அமிழு
வேனைமெத் தெனவொரு கரைசேர்த்
தம்பொற் றண்டைக் ...... கழல்தாராய்
ககன கோளகைக் கணவிரு மளவாக்
கங்கைத் துங்கப் ...... புனலாடும்
கமல
வாதனற் களவிட முடியாக்
கம்பர்க் கொன்றைப் ...... புகல்வோனே
சிகர கோபுரத் தினுமதி ளினுமேற்
செம்போற் கம்பத் ...... தளமீதும்
தெருவி
லேயுநித் திலமெறி யலைவாய்ச்
செந்திற் கந்தப் ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
குகரம்
மேவு மெய்த் துறவினின் மறவாக்
கும்பிட்டு, உந்தித் ...... தடம் மூழ்கி,
குமுத
வாயின் முற்று அமுதினை நுகரா,
கொண்டல் கொண்டைக் ...... குழலாரோடு,
அகரு
தூளி கர்ப்புர தன இருகோட்டு
அன்பு உற்று இன்பக் ...... கடல்ஊடே
அமிழுவேனை, மெத்தென ஒரு கரைசேர்த்து,
அம்பொன் தண்டைக் ...... கழல்தாராய்.
ககன கோளகைக்கு அணவு இரும் அளவாக்
கங்கைத் துங்கப் ...... புனலாடும்
கமல
ஆதனற்கு அளவிட முடியாக்
கம்பர்க்கு ஒன்றைப் ...... புகல்வோனே!
சிகர கோபுரத்தினும் மதிளினும் மேல்
செம்போன் கம்பத் ...... தள மீதும்,
தெருவிலேயும்
நித்திலம் எறி அலைவாய்ச்
செந்திற் கந்தப் ...... பெருமாளே.
பதவுரை
ககன கோளகைக்கு அணவு இரும் அளவா --- ஆகாய
முகட்டின் பொருந்திய பெரிய
அளவுக்கு அடங்காத,
கங்கை துங்கப் புனல் ஆடும் --- தூய்மையான
கங்கை நீர் சடையில் அசைந்து ஆடும்படி விளங்குபவரும்,
கமல ஆதனற்கு அளவிட முடியா --- தாமரை மலரில்
இருக்கும் பிரமதேவனால் அளக்க முடியாதவரும்
ஆகிய,
கம்பர்க்கு --- தாணுவாகிய சிவபெருமானுக்கு,
ஒன்றை புகல்வோனே --- ஒப்பற்ற மொழியாகிய
பிரணவப் பொருளை உபதேசித்தவரே!
சிகர கோபுரத்தினும் மதிளினும் ---
கலசங்களையுடைய கோபுரத்தின் மீதும் மதில் மீதும்,
மேல் செம்பொன் கம்ப தள மீதும் --- மேலான
சிவந்த பொன்னாலாகிய தூண்கள் மீதுள்ள தளங்களின் மாடிவீடு மீதும்,
தெருவிலேயும் --- வீடுகளிலும்,
நித்திலம் எறி அலைவாய் --- முத்துக்களை எறிகின்ற
கடல் அலைகளின் கரையில் உள்ள,
செந்தில் கந்த --- திருச்செந்தூரில்
எழுந்தருளியுள்ள கந்தக் கடவுளே!
பெருமாளே --- பெருமையில் சிறந்தவரே!
குகர மேவு மெய் துறவினின் மறவா - மலைக்
குகையில் இருக்கும் உண்மையான துறவிகள் பரம்பொருளை மறவாதிருப்பது போல், நானும் விலைமகளிரை மறவாத மனத்துடன்,
கும்பிட்டு --- அம் மாதர்களை வணங்கி,
உந்தி தடம் மூழ்கி --- கொப்பூழ் என்ற
குளத்தில் மூழ்கி,
குமுத வாயின் முற்று அமுதினை நுகரா --- குமுத
மலர்போன்ற வாயில் பெருகும் அமுதினைப் பருகி,
கொண்டல் கொண்டை குழலாரோடு --- மேகம் போன்ற
கூந்தலில் கொண்டையிட்ட மகளிருடன்,
அகரு தூளி --- அகிற்பொடி,
கர்ப்புர --- பச்சைக் கற்பூரம் இவைகளை அணிந்த
தன இரு கோட்டு அன்பு உற்று --- தனங்களாகிய
இரு மலைகளில் அன்பு மேலிட்டு,
இன்ப கடல் ஊடே அமிழுவேனை --- இன்ப
சமுத்திரத்தினிடையே அழுந்தி விடுகின்ற அடியேனை,
மெத்தென ஒரு கரை சேர்த்து --- பக்குவமாக ஒப்பற்ற முத்திக் கரையில் சேர்த்து,
அம்பொன் தண்டைக் கழல் தாராய் --- அழகிய
பொன்னாலாகிய தண்டையணிந்த திருவடியைத் தந்து அருள்புரிவீர்.
பொழிப்புரை
ஆகாய வெளியின் பெரிய அளவுக்கும் அடங்காத
தூய கங்கை நீர் சடையில் அசைந்து ஆடுமாறு செய்தவரும், தாமரை மலரில் வாழுகின்ற பிரமதேவனால்
அளக்க முடியாதவரும் ஆகிய சிவபெருமானுக்கு, ஒப்பற்ற மொழியாகிய பிரணவப்பொருளை
உபதேசித்தவரே!
கலசங்களை உடைய கோபுரத்தின் மீதும், திருமதில்கள் மீதும் மேலான செம்பொன்
மயமான தூண்களின் மீதுள்ள மாடிகளின் மீதும், வீதிகளிலும், முத்துக்களை எறிகின்ற, அலைகளின் கரையில்
விளங்கும் திருச்செந்தூர் என்ற திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள கந்தப்பெருமானே!
பெருமிதம் உடையவரே!
மலைக்குகைகளில் வாழுகின்ற உண்மைத்
துறவிகள் பரம் பொருளை மறவாது நாடுவது போல், நானும் விலை மகளிரை மறவாது நாடி, அவர்களைத் தொழுது, உந்தியென்கின்ற கடலில் மூழ்கி குமுத
மலர்ப் போன்ற அதரத்தில் பெருகும் அமுதைக் குடித்து, மேகம் போன்ற கரிய கூந்தலைக் கொண்டையாக
முடிக்கும் அம் மகளிரொடு அகில் பொடி பச்சைக் கற்ப்பூரம் முதலிய வாசனைகளை அணிந்துள்ள
இரு மலைகளைப் போன்ற தனங்களில் அன்புற்று, இன்பமயமாகிய
கடலில் முழுகி அழுந்துகின்றேன்.
அடியேனைப்
பக்குவமாக ஒப்பற்ற முத்தியாகிய கரையில் சேர்த்து, அழகிய பொன்னாலாகிய தண்டைச் சூழ்ந்த
திருவடியைத் தந்து அருள்புரிவீர்.
விரிவுரை
குகர
மேவுமெய்த் துறவினின் மறவா கும்பிட்டு.....மூழ்கி ---
குகரம்
- மலைக் குகை. மலைக் குகைகளில் முனிவர்கள் நாடு நகரம் வீடு வாசல் மனைவி மக்கள்
செல்வம் உற்றார் பெற்றார் சுகம் ஆகிய அனைத்தையும் துறந்து இறைவனையே நினைந்து
அசைவற்று இருப்பார்கள். அதுபோல் நானும் விலைமகளிரை நினைந்து ஏனைய எனது உறவு மனைவி
மக்கள் முதலிய எல்லாவற்றையும் துறந்து அவர்கள் பற்றில் உறுதியுடன் இருக்கின்றேன்
என்று அடிகளார் துறவிகளை உவமை கூறினார்.
ஒரு
தூர்த்தன், பக்தி ஞானம் ஒழுக்கம்
சீலம் உறுதி தவம் ஆகிய நற்குணங்களில் ஒன்றும் இல்லாதவன், தன் காமக் கிழத்தியுடன் ஆடியும்
பாடியும் கூடியும் ஒரு சோலை வழியே சென்று கொண்டிருந்தான். அங்கே ஒரு மரத்தடியில்
ஒரு சிறந்த மாதவ முனிவர் பெருமான் அமர்ந்திருந்தார். அவருக்கு அவன் மீது இரக்கம்
உண்டாயிற்று. “அந்தோ! அருமையாகக் கிடைத்த இந்த மானுடப் பிறப்பை இவன் வறிதே
கழிக்கின்றானே. காமதேனுவின் பாலைக் களரில் விடுவது போல் விலைமதிக்க ஒண்ணாத ஆயுள்
நாளை காமச் செருக்கில் கழிக்கின்றானே. இவனுக்கு இதம் சொன்னால் ஏறாதே. ஓட்டைக்
குடத்தில் தண்ணீரை நிரப்ப முடியாதே. இவனை எப்படித் திருத்தலாம்? இவனுக்கு உய்வு தேடவேணும். அதற்கு என்ன
வழி?” என்று சிந்தித்தனர். எழுந்தார்.
அந்தக்
காமுகன் முன் சென்றார். அவனை வலம் வந்தார். அடியற்ற மரம் போல் அப் பாதகன் பாதத்தின்
மீது விழுந்து வணங்கினார். பெரிய மகானுடைய சடைமுடி அவன் அடியில் தீண்டியது. வெள்ளை
வெளேர் என்று வெள்ளிக் கம்பிபோல் நீண்ட தாடியும், சிவந்த சடையும், கருணைப் பொழியும் முகமும், அருள் வழியும் விழிகளும், அறிவின் சிகரம் போன்ற திருமேனியும் உடைய
அத்துறவி, ஒழுக்கங்கெட்ட தன்னை
வணங்கியதைக் கண்டு அவன் நாணினான்;
நடுங்கினான்.
“சுவாமீ! நான் ஈனத்
தொழில் புரிபவன். பக்தி ஞானம் அணுவளவும் இல்லாதவன். பாவியாகிய நாயேனை தேவரீர்
வணங்கலாமா? இது என்ன அநியாயம்? என்றான்”.
துறவி, “அன்பனே! வருந்தற்க. நீ தான் என்னைக்
காட்டிலும் பெரிய துறவி. கடுகளவு இன்பம் சிற்றின்பம்; மலையளவு இன்பம் பேரின்பம். பேரின்பம்
தெவிட்டாதது; பரிசுத்தமானது; ஒளிமயமானது; ஞானத்தில் விளைவது. சிற்றின்பம் நோய்
செய்வது அசுத்தமானது; இருள் நிறைந்தது; அஞ்ஞானத்தால் விளைவது.
நான்
மலைபோன்ற பேரின்பத்தை நாடி மனைவி மக்களையும் நாடு நகரங்களையும் வீடு வாசல்களையும்
துறந்தேன். நீ அணுவளவான சிற்றின்பத்தை நாடி மலையளவான பேரின்பத்தையும் அதனை அளிக்கும்
ஆண்டவனையும் அவனை அடையும் சாதனைகளாகிய பக்தி ஞான பல விரதங்களையும் துறந்தனை.
பெரியதை விரும்பிச் சிறியதை துறந்தவன் நான், சிறியதை விரும்பிப் பெரியதை துறந்தவன்
நீ.
சிற்றின்பம்
வேப்பெண்ணெய் போன்றது. பேரின்பம் அமுதம் போன்றது. நான் அமுதத்தை நாடி
வேப்பெண்ணெயைத் துறந்தேன். நீ வேப்பெண்ணையை விரும்பி அமுதத்தை துறந்தவன். ஆகவே, என் துறவைக் காட்டிலும் உன்னுடைய துறவே
பெரியது. நீயே பெரிய துறவி. நான் இந்த மண்ணுலகத்தைத் துறந்தவன். நீ முக்தி உலகையே
துறந்தவனாயிற்றே. ஆதலால் என்னிலும் நீ பெரிய துறவி என்பதில் அணுவளவும் ஐயமுண்டோ?” என்று கூறி, மீண்டும் ஒருமுறை அவன் கால்மீது
வீழ்ந்தார்.
இந்தப்
பொருள் பொதிந்த திருமொழிகளைக் காமுகன் கேட்டான். அவன் மனதில் பசுமரத்தின் ஆணிபோல்
அவ்வறவுரை பதிந்தது. அருகில் நின்ற தன் காமக்கிழத்தியை மறந்தான். தனது அறியாமையை
நினைந்து வருந்தினான். அக் கணமே அத் தீயவன் தூயவனானான். அம் மகானுடைய பாதமலர் மீது
பணிந்தான்.
“ஐயனே! என்னை ஆட்கொள்ள
வேண்டும். அந்தோ! என் மதியிருந்தவாறு என்னே! நான் மூடரில் மூடன். உய்வு நெறியை
உபதேசிக்க வேண்டும்” என்று வேண்டினான். அவன் கண்களில் நீர்ப் பெருகியது. உள்ளம்
உருகியது; வினை கருகியது.
துறவரசர்
அவனுக்கு சட்சு தீட்டையும், மானச தீட்டையும், பரிச தீட்டையும் வழங்கியருளினார்.
“விட்டேன் உலகம், விரும்பேன் இருவினை, வீணருடன்
கிட்டேன், அவர்உரை கேட்டும் இரேன், மெய் கெடாதநிலை
தொட்டேன், சுகதுக்கம் அற்றுவிட்டேன், தொல்லை நான்மறைக்கும்
எட்டேன்
எனும்பரம் என்னிடத்தே வந்துஇங்கு எய்தியதே.”
என்ற
பட்டினத்து சுவாமிகள் பாடலுக்கு இலக்கியமானான்.
கருணை
நிறைந்த மகான் அவனை அடி வணங்கி இவ்வாறு அருளால் ஆட்கொண்டார்.
இத்திருப்புகழின்
முதலடியைப் படிக்கின்றபோது, இந்த வரலாறு
நினைவுக்கு வருகின்றது. “துறவிகள் பரத்தை மறவாதது போல், நானும் பரத்தையரை மறவாது அவரைக்
கும்பிட்டு உந்தித் தடாகத்தில் முழுகினேன்” என்று கூறி அருணை முனிவர் நயமாக
நம்மைத் திருத்துகின்றார்.
“உந்தி யென்கின்ற மடு
விழுவேனை” --- (மன்றலங்) திருப்புகழ்.
குமுத
வாயின்முற்று அமுதினை நுகரா ---
குமுத
மலர்போன்ற வாயில் அமுதம் ஊறுகின்றதென்று பெண்மயல் கொண்ட பித்தர்கள் எண்ணி, அதர பானத்தை விரும்பி கானல் நீரை
நாடியலையும் மான்போல் திரிந்து கெடுவார்கள்.
இன்பக்
கடலூடே அமிழுவேனை ---
“இன்பம்போல் தோன்றி
துன்பத்தைத் தரும் மையல் கடலில் வீழ்ந்து மடிகின்ற அடியேனை, அதில் மடியாவண்ணம் உமது அடிமலராகிய
புணையினால் காப்பாற்றி யருளும்” என்று வேண்டுகின்றனர்.
மெத்தென
ஒருகரை சேர்த்து ---
“கவலைப்பட்டு
நோய்வாய்ப்பட்ட பலவீனமான சிறுமகவை அதன் மெத்தென எடுத்து ஆதரிப்பதுபோல், சிறியேன் பலநோயால் துடித்து அறிவீன
முற்றேன்.என்னை மெல்ல எடுத்து உமது பாதமாகிய தொட்டிலில் இட்டு ஆதரிக்கவேணும்”
என்று உள்ளம் குழைந்து உருகித் துதிக்கின்றனர்.
கமல ஆதனற்கு அளவிட முடியா ---
பிரமதேவன்
தேடியும் காணாத தகைமையுடையவர் சிவபெருமான். கலைமகள் நாயகன் பிரமன். கல்வியறிவால்
காண முடியாதவன் ஆண்டவன். கலையறிவு அபரஞானம் எனப்படும். அபர ஞானத்தால்
அறியவொண்ணாதவன்.
“வாசித்துக் காணொணாதது” ---
திருப்புகழ்
கம்பர்க்கு ---
சிவபெருமானுக்குக்
கம்பர் என்று ஒரு பேருண்டு. வீட்டையும் மண்டபத்தையும் தாங்குவது கம்பம். அதுபோல்
அகில உலகங்களையும் கம்பத்தைப் போல் நின்று சிவமூர்த்தி தாங்குவதனால் கம்பர் என்ற
பேர் பெற்றார். வடமொழியில் தாணு என்ற பேரும் இதே பொருளில் வழங்கப் பெறுகின்றது.
தாணு - துண் போன்றவர்.
சிறந்த
தமிழ்ப் புலவராகிய ஒருவர், கம்பர் என்ற
பேருடையவராக இருந்தார் என்பதையும் இங்கு நினைவு கூறவும். கம்பர் என்பது
சிவபெருமானுடைய பேர். கம்பர் தமது மகனுக்கும் அம்பிகாபதி என்று சிவ நாமத்தை இட்டார்.
“சயில அங்கனைக்கு உருகி
இடப்பக்கங்
கொடுத்த கம்பர்” ---
திருப்புகழ்
கம்பராகிய
கண்ணுதற் கடவுளுக்கு நம்பர் என்றும் ஒரு பேருண்டு. கம்பத்தைப் பற்றிப் பிள்ளைகள்
சுற்றிச் சுற்றி யாடுவதுபோல், கம்பனாகிய இறைவனை
நம்பி உலகில் சுற்றி யுலாவவேண்டும். பற்றுதற்குரியவன் கம்பன்; நம்புதற்கு உரியவன் நம்பன்.
“சதிதாண்டவத்தர்
சடையிடத்துக் கங்கை
வைத்த நம்பர்”
--- (சயிலாங்கனைக்கு)
திருப்புகழ்.
ஒன்றைப்
புகல்வோனே
---
ஒன்று-ஒருமொழி.
பிரணவம், ப்ர-விசேடம், நவம்-புதிய ஆற்றலையளிப்பது; நினைப்பார்க்குப் புதிய புதிய சிறந்த ஆற்றலையளிப்பது
பிரணவம். அது ஓரெழுத்து ஒருமறை. இதன் உட்பொருளை உம்பரறியாக் கம்பருக்கு
எம்பெருமான் உபதேசித்தார்.
“கொன்றைச் சடையர்க்கு ஒன்றைத் தெரியக்
கொஞ்சித் தமிழைப் பகர்வோனே” --- (அம்பொத்தவிழி) திருப்புகழ்
சிகர
கோபுரத்திலும்........தெருவிலும் நித்திலம் எறி
அலைவாய்
---
தென்கடல்
முத்து விளைவது. இன்றும் முத்தெடுக்கின்றார்கள் தூத்துக்குடிக் கடலில்.
திருச்செந்தூர், கடற்கரையில்
விளங்குகின்ற அருமையான திருத்தலம்.
கொள்ளித்
தலையில் எறும்பு அதுபோலக் குலையும் என்றன்
உள்ளத்
துயரை ஒழித்து அருளாய் ஒருகோடி முத்தம்
தெள்ளிக்
கொழிக்கும் கடல் செந்தில் மேவிய சேவகனே
வள்ளிக்கு வாய்த்தவனே மயில் ஏறிய மாணிக்கமே! --- கந்தர் அலங்காரம்
“கடற்கரையில்
வளர்ந்திருக்கின்ற தென்னை மரங்களில் தங்கும்படிக் கடல் அலைகள் முத்துக்களை
வீசுகின்றன” என்பதை,
“திரளுமணி தரளம் உயர்
தெங்கில் தங்கிப்
புரள எறி, திரை மகர சங்கத் துங்கத்
திமிரசல நிதிதழுவு செந்திற் கந்தப் பெருமாளே” --- (அமுதுததி)
திருப்புகழ்.
இப்பாடலில், கோபுரத்தின்மீதும், திருமதில்களின் மீதும், மாடிகளின் மீதும், வீதிகளிலும், முத்துக்களைக் கடல் அலைகள் வீசி
எறிகின்றன என்று அழகாக சுவாமிகள் கூறுகின்றனர்.
கருத்துரை
சிவகுருவே! செந்தில் கந்தவேளே! மாதர்
மயல் கடலினின்றும் முத்திக் கரை சேர உமது திருவடியாகியத் தோணியைத் தந்தருளும்.
No comments:
Post a Comment