திருச்செந்தூர் - 0073. நிலையாப் பொருளை


அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

நிலையாப் பொருளை (திருச்செந்தூர்)

திருவடியைப் பெற

தனனாத் தனன தனனாத் தனன
     தனனாத் தனன ...... தனதான


நிலையாப் பொருளை யுடலாக் கருதி
     நெடுநாட் பொழுது ...... மவமேபோய்

நிறைபோய்ச் செவிடு குருடாய்ப் பிணிகள்
     நிறைவாய்ப் பொறிகள் ...... தடுமாறி

மலநீர்ச் சயன மிசையாப் பெருகி
     மடிவேற் குரிய ...... நெறியாக

மறைபோற் றரிய வோளியாய்ப் பரவு
     மலர்தாட் கமல ...... மருள்வாயே

கொலைகாட் டவுணர் கெடமாச் சலதி
     குளமாய்ச் சுவற ...... முதுசூதம்

குறிபோய்ப் பிளவு படமேற் கதுவு
     கொதிவேற் படையை ...... விடுவோனே

அலைவாய்க் கரையின் மகிழ்சீர்க் குமர
     அழியாப் புநித ...... வடிவாகும்

அரனார்க் கதித பொருள்காட் டதிப
     அடியார்க் கெளிய ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


நிலையாப் பொருளை உடலாக் கருதி,
     நெடுநாள் பொழுதும் ...... அவமே போய்,

நிறை போய், செவிடு குருடாய், பிணிகள்
     நிறைவாய், பொறிகள் ...... தடுமாறி,

மலம் நீர் சயனம் மிசையாப் பெருகி,
     மடிவேற்கு உரிய ...... நெறியாக,

மறைபோற்ற அரிய ஒளியாய்ப் பரவு
     மலர்தாள் கமலம் ...... அருள்வாயே.

கொலைகாட்டு அவுணர் கெட, மாச் சலதி
     குளமாய்ச் சுவற, ...... முதுசூதம்

குறிபோய்ப் பிளவு பட,மேல் கதுவு
     கொதிவேல் படையை ...... விடுவோனே!

அலைவாய்க் கரையின் மகிழ்சீர்க் குமர!
     அழியாப் புனித ...... வடிவாகும்

அரனார்க்கு அதிகப் பொருள்காட்டு அதிப!
     அடியார்க்கு எளிய ...... பெருமாளே.

பதவுரை


      கொலை காட்டு அவுணர் கெட --- கொலையே புரிகின்ற அசுரர்கள் அழியவும்

     மா சலதி குளமாய் சுவற --- பெருங்கடல் குளம்போல் வற்றிப் போகவும்,

     முது சூதம் குறிபோய் பிளவுபட --- முதிர்ந்த மாமரமானது குறியின்படி பட்டு பிளந்து அழியவும்,

     மேல் கதுவு கொதி வேல் படையை விடுவோனே --- மேலே பற்றும்படியாக எரிவீசும் வேலாயுதத்தை விடுத்தவரே!

         அலைவாய் கரையின் மகிழ் சீர் குமர --- கடல் அலைக்கரையில் (திருச்செந்தூரில்) மகிழ்ச்சியுடன் வீற்றிருக்கின்ற சிறப்பு வாய்ந்த குமாரக் கடவுளே!

         அழியாத புனித வடிவு ஆகும் அரனார்க்கு --- அழியாத பரிசுத்த வடிவுடைய சிவபெருமானுக்கு,

     அதித பொருள்காட்டு அதிப --- எல்லாங் கடந்த பொருளை விளக்கிக் காட்டி உபதேசித்த தலைவரே!

         அடியார்க்கு எளிய பெருமாளே --- அடியவர்க்கு எளியராய் இருந்து அருள்புரியும் பெருமையின் மிகுந்தவரே!

         நிலையா பொருளை உடலா கருதி --- நிலையில்லாத பொருள்களைப் பொன்போல் நினைத்து,

     நெடுநாள் பொழுதும் --- அந்த அழிகின்ற பொருளை ஈட்டும் பொருட்டு நெடுங்காலமாகவும்,

     அவமே போய் --- வீணாகக் காலத்தைத் தொலைத்து,

     நிறைபோய் --- மனத்திண்மை நீங்கி,

     செவிடு குருடாய் --- செவிடாகியும், குருடாகியும்,

     பிணிகள் நிறைவாய் --- நோய்கள் நிறைந்தும்,

     பொறிகள் தடுமாறி --- ஐம்பொறிகளும் தடுமாற்றத்தை அடைந்தும்,

     மலம் நீர் சயன மிசையாய் பெருகி --- மலமும் நீரும் படுக்கை மீதிலேயே பெருகி,

     மடிவேற்கு --- இறந்துபடுகின்ற அடியேனுக்கு,

     உரிய நெறியாக --- உரிய முத்தி நெறியாக,

     மறைபோற்ற அரிய --- வேதங்களால் போற்றுதற்கு அரிதான,

     ஒளியாய் பரவு --- ஞான ஒளிவீசி விரிந்துள்ள,

     மலர் தாள் கமலம் அருள்வாயே --- உலகத்தை மலர்தலைப் புரியும் உமது திருவடியை அருள்புரிவீர்.

பொழிப்புரை

         கொலையே புரிகின்ற அவுணர்கள் அழியவும், பெரிய சமுத்திரம் குளம்போல் வற்றிவிடவும், முதிர்ந்த மாமரமானது குறிதவறாது பிளந்து போகவும், கொதிக்கின்ற வேலாயுதத்தை விடுத்தவரே!

         கடற்கரையில் மகிழ்ச்சியுடன் எழுந்தருளியிருக்கும் சிறந்த குமாரக் கடவுளே!

         அழிவில்லாத பரிசுத்தமான வடிவுடைய சிவபெருமானுக்கு உயர்ந்த பிரணவ மந்திரப் பொருளை உபதேசித்த தலைவரே!

         அடியவர்க் கெளியவரே! பெருமிதம் உடையவரே!

         நிலையில்லாத பொருள்களைப் பொன்போல் கருதி, நெடுங்காலமாக வீண்காலம் போக்கி, மனத்தில் நிறைவும் அற்று, செவிடாகியும், குருடாகியும், நோய்கள் பல நிறைந்தும், ஐம்பொறிகள் தடுமாற்றத்தை யடைந்தும், படுக்கை மீது மலமும் நீரும் பெருகி மாள்கின்ற அடியேனுக்கு, முத்திநெறி உரியதாகுமாறு, வேதங்கள் போற்றுதற்கு அரிய, எங்கும் ஒளிமயமாய் விரிந்துள்ள, உலகத்தை மலர்தலைப் புரியும் தாமரைப் போன்ற திருவடிகளை அருள் புரிவீர்.

விரிவுரை

நிலையாப் பொருளை உடலாக் கருதி ---

நில்லாது அழிகின்ற பொருளை நிலையானது என்று அறிகின்ற அறிவே மிகவும் தாழ்மையானது.

நில்லா தவற்றை நிலையின என்றுஉணரும்
புல்லறி வாண்மை கடை.               ---  திருக்குறள்.

உடல் - பொன். அழிகின்ற அற்பமான பொருள்களையெல்லாம் பொன்னே போல் உயர்வாகக் கருதி மாந்தர் மலைந்து மயங்கித் திரிகின்றனர்.

அரச செல்வமெல்லாம், ஓடுகின்ற நீரில் எழுதிய எழுத்துக்கு நிகராகும்.

தேரில் கரியில் பரியில் திரிபவர் செல்வ மெல்லாம்
 நீரில் பொறியென் றறியாத பாவி நெடுநெஞ்சமே”   ---  கந்தர் அலங்காரம்

நெடுநாட்பொழுதும் அவமே போய் ---

ஆன்ம யீடேற்றத்துக்கு உரிய வழி யாது என்று அறிந்து அதன்படி நின்று உய்யாமல், இறைவன் தந்த விலைமதிக்க முடியாத வாழ்நாளை அவமே கழித்து மடிகின்றனர் பலர்.

நிறைபோய் ---

மனத்தில் உள்ள திட்பம் கழிந்து மனவலிமை இன்றி நிற்றல்.

செவிடு குருடாய் ---

வயது முதிர்வால் செவி கேட்குஞ் செயல் அற்றும், கண் காணும் ஆற்றலற்றும் பெருந்துன்பம் எய்தும். அந்நிலை வருமுன் நன்னிலை பெறவேணும்.

பிணிகள் நிறைவாய் ---

அப்பொழுது பல்வேறு நோய்கள் வந்து உறவாடும். ஒரு நோய்க்கு மருந்து கொடுத்துத் தணித்தால், மற்றொரு நோய் தலை நீட்டும். சேர்ந்தாற்போல் பல பிணிகள் சூழ்ந்து வாட்டும். “பல நோயும் நிலுவை கொண்டது” என்கின்றார் பிறிதொரு திருப்புகழில்.

பொறிகள் தடுமாறி ---

மெய் வாய் கண் மூக்கு செவி என்ற ஐம்பொறிகளும் தமது நிலையினின்றும் தடுமாற்றத்தை யடையும்.

புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி அறிவழிந்திட்டு’

என்பது திருஞானசம்பந்தர் திருவாக்கு.

மடிவேற்கு உரிய நெறியாக ---

சலமலங்களின் நாற்ற மிகுந்து, வீணே அழிகின்ற அடியேனுக்கு, முத்தி நெறி உரிமையாக அருள்புரிவீர்” என்று அடிகளார் முருகனை வேண்டுகின்றார்.

மறை போற்றரிய ஒளியாய்ப் பரவு ---

இறைவனுடையத் திருவடியின் பெருமையை வேதங்களாலும் போற்றுதற்கு ஒண்ணாது.

ஆரணங்கள் ஆகமங்கள் புகழ்தாளும்”     --- (தோலெலும்பு) திருப்புகழ்.

திருவடியின் ஒளி நூறுகோடி சூரியப் பிரகாசம் போன்றது.

உததியிடை கடவு மரகத வருண குலதுரக
 உபலளித கனகரத சத்கோடி சூரியர்கள்
 உதயமென”                                      ---  சீர்பாத வகுப்பு.

மலர் தாட் கமலம் ---

மலர் தாள் என்பதற்கு மலரைப்போன்ற தாள் என்று பொருள் செய்தல் பொருந்தாது. ஏன்? மலர் போன்ற தாள் என்பது உவமைத் தொகையாகும். அங்ஙனமானால் வல்லின மெய் சேர்ந்து ’மலர்த்தாள்’ என்று வரவேண்டும். ஆதலின் உலகத்தை மலர்விக்கும் பாதம் எனப் பொருள் செய்யப் பெற்றது. ’மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்’ என்ற சேக்கிழார் திருவாக்கினாலும் அறிக.

போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்”    ---  திருவாசகம்.

சூதம் ---

சூதம் - மாமரம். சூரபன்மன் இறுதியில் உறுதியிழந்து, கடல் நடுவில் இரும்பு மயமான மாமரமாகித் தலை கீழாக நின்றான். முருகனுடைய வேற்படை அம் மாமரத்தைப் பிளந்தழித்தது.

               ..... கவிழ் இணர்      ........................................................
மாமுதல் தடிந்த மறுவில் கொற்றத்து
எய்யா நல்இசைச் செவ்வேல் சேஎய்”       ---  திருமுருகாற்றுப்படை

அலைவாய்க் கரையில் மகிழ்சீர்க் குமர ---

அலைவாய் என்பது திருச்செந்தூர். இது திருச்சீரலைவாய் எனப்பெறும் அருமை பெருமை நிறைந்த திருத்தலம். இயற்கைவளம் செறிந்தது. சகல கவலைகளையும் தீர்க்க வல்லது. ஒரு காலத்தில் இத்தலத்தில் சங்கப் புலவர்கள் இருந்து தமிழ் ஆராய்ந்தார்கள். புலவர்கட்கு உறைவிடமான செந்தமிழ்ப்பதி செந்திலம்பதி.

 செஞ்சொற்புலவர்கள் சங்கத் தமிழ்தெரி
 செந்திற் பதிநகர் உறைவோனே”         --- (வஞ்சத்து)திருப்புகழ்

அழியாப் புநித வடிவாகும் அரனார் ---

சிவபெருமானுடைய திருவுருவம் திருவருளே ஆகும். அது தூய வடிவம். ஏனோர்க்கு உள்ளது மாய வடிவம். இறைவனுடைய அருள் வடிவம் என்றும் அழியாதது.

அதித பொருள் காட்டதிப ---

முருகவேள் முக்கட் பெருமானுக்கு மொழிந்த பொருளே எல்லா வேதாகமங்களுக்கும் மேலானது. கந்தக் கடவுள் எல்லாத் தேவர்கட்கும், மூவர்கட்கும் தலைவர்.

அகரனுமாகி அதிபனுமாகி அதிகமுமாகி அகமாகி”    ---  திருப்புகழ்.


கருத்துரை

         சூரனைத் தடிந்த வீரமூர்த்தியே! சிவமூர்த்திக்கு உபதேசித்த தவமூர்த்தியே! செந்திலம்பதியுறைச் செவ்வேளே! உமது திருவடியைத் தந்தருள்வீர்.


1 comment:

  1. எவ்வளவு அருமையான சிவப்பணி. முருகப்பெருமான் சகல நலங்களையும் அருள்வானாக.

    ReplyDelete

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...