திருச்செந்தூர் - 0087. மனத்தின் பங்கு


அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

மனத்தின் பங்கு (திருச்செந்தூர்)

முருகா!
உன்னையே முத்தமிழால் பாடி உய்ய அருள்


தனத்தந்தந் தனத்தந்தந்
     தனத்தந்தந் தனத்தந்தந்
          தனத்தந்தந் தனத்தந்தந் ...... தனதானா


மனத்தின்பங் கெனத்தங்கைம்
     புலத்தென்றன் குணத்தஞ்சிந்
          த்ரியத்தம்பந் தனைச்சிந்தும் ...... படிகாலன்

மலர்ச்செங்கண் கனற்பொங்குந்
     திறத்தின்தண் டெடுத்தண்டங்
          கிழித்தின்றிங் குறத்தங்கும் ...... பலவோரும்

எனக்கென்றிங் குனக்கென்றங்
     கினத்தின்கண் கணக்கென்றென்
          றிளைத்தன்புங் கெடுத்தங்கங் ...... கழிவாமுன்

இசைக்குஞ்செந் தமிழ்க்கொண்டங்
     கிரக்கும்புன் றொழிற்பங்கங்
          கெடத்துன்பங் கழித்தின்பந் ...... தருவாயே

கனைக்குந்தண் கடற்சங்கங்
     கரத்தின்கண் தரித்தெங்குங்
          கலக்கஞ்சிந் திடக்கண்துஞ் ...... சிடுமாலும்

கதித்தொண்பங் கயத்தன்பண்
     பனைத்துங்குன் றிடச்சந்தங்
          களிக்குஞ்சம் புவுக்குஞ்செம் ...... பொருளீவாய்

தினைக்குன்றந் தனிற்றங்குஞ்
     சிறுப்பெண்குங் குமக்கும்பந்
          திருச்செம்பொன் புயத்தென்றும் ...... புனைவோனே

செழிக்குங்குண் டகழ்ச்சங்கங்
     கொழிக்குஞ்சந் தனத்தின்பைம்
          பொழிற்றண்செந் திலிற்றங்கும் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


மனத்தின் பங்கு எனத் தங்கு ஐம்-
     புலத்து என்தன் குணத்து, ஞ்சு இந்-
          த்ரியத் தம்பம் தனைச் சிந்தும் ...... படி, காலன்

மலர்ச் செங்கண் கனல் பொங்குந்
     திறத்தின் தண்டு எடுத்து, ண்டம்
          கிழித்து, ன்று, ங்கு உறத் தங்கும் ...... பலவோரும்

எனக்கு என்று, இங்கு உனக்கு என்று, ங்கு
     இனத்தின்கண் கணக்கு என்றுஎன்று
          இளைத்து அன்பும் கெடுத்து, அங்கம் ......கழிவுஆம் முன்,

இசைக்கும் செந்தமிழ்க் கொண்டு, ங்கு
     இரக்கும் புன்தொழில் பங்கம்
          கெட, துன்பம் கழித்து, ன்பம் ...... தருவாயே.

கனைக்கும் தண் கடல் சங்கம்
     கரத்தின் கண் தரித்து, ங்கும்
          கலக்கம் சிந்திட, கண் துஞ்- ...... சிடுமாலும்

கதித்த ஒண் பங்கயத்தன், பண்பு
     அனைத்தும் குன்றிட, சந்தம்
          களிக்கும் சம்புவுக்கும் செம் ...... பொருள் ஈவாய்!

தினைக் குன்றம் தனில் தங்கும்
     சிறுப்பெண் குங்குமக் கும்பம்
          திருச்செம்பொன் புயத்து என்றும் ...... புனைவோனே!

செழிக்கும் குண்டு அகழ்ச் சங்கம்
     கொழிக்கும் சந்தனத்தின் பைம்
          பொழில் தண் செந்திலில் தங்கும் ...... பெருமாளே.


பதவுரை

      கனைக்கும் தண் கடல் சங்கம் --- ஒலி செய்கின்ற, குளிர்ந்த கடலிற் பிறந்த பாஞ்சஜன்யம் என்ற சங்கத்தை,

     கரத்தின்கண் தரித்து --- திருக்கரத்திலே தரித்துக்கொண்டு,

     எங்கும் கலக்கம் சிந்திட --- உலகமெங்கும் ஆன்மாக்களின் துயரம் நீங்கும் பொருட்டு,

     கண் துஞ்சிடு மாலும் --- அறிதுயில் கொள்ளுகின்ற திருமாலும்,

     கதித்த ஒண் பங்கயத்தன் --- (அத்திருமாலின் உந்திக் கமலத்தில்) தோன்றி ஒளியுடைய பிரமனும்,

     பண்பு அனைத்தும் குன்றிட --- அவர்களுடைய பெருமையாவும் குறைவுபடுமாறு,

     சந்தங்களிக்கும் சம்புவுக்கும் --- சந்தப்பாடலைக் கேட்டு மகிழும் சிவபெருமானுக்கு,

     செம்பொருள் ஈவாய் --- செம்மைப் பொருளாகிய ஓம் என்னும் பிரணவத்தின் உட்பொருளை உபதேசித்தவரே!

      தினை குன்றம் தனில் தங்கும் --- தினைப் பயிர் விளையும் மலையிலே வசிக்கின்ற,

     சிறு பெண் குங்கும கும்பம் --- இளமையான வள்ளியம்மையின் குங்குமம் பூசியுள்ள குடம்போன்ற தனங்களை,

     திருசெம்பொன் புயத்து என்றும் புனைவோனே --- அழகிய சிவந்த பொன் போன்ற புயாசலங்களில் எக்காலத்தும் தரிப்பவரே!

      செழிக்கும் குண்டு அகழ் --- செழித்து ஆழ்ந்துள்ள கடல்,

     சங்கம் கொழிக்கும் --- சங்கங்களைக் கொழிக்கின்றதும்,

     சந்தனத்தின் பைம்பொழில் தண் --- சந்தன மரங்களாகிய பசுஞ் சோலைகளால் குளிர்ச்சியை உடையதும் ஆகிய,

     செந்திலில் தங்கும் பெருமாளே - திருச்செந்தூரில் எழுந்தருளியுள்ள பெருமையின் மிக்கவரே!

         மனத்தின் பங்கு என தங்கு --- மனமானது செல்வதற்கு வேறு வேறு வாயிலாகத் தங்கியுள்ள,

     ஐம்புலத்து என்தன் குணம் --- ஐம்புலன் தொடர்பு கொண்டுள்ள அடியேனுடைய குணமும்,

     அஞ்சு இந்த்ரிய தம்பம் தனை --- ஐந்து இந்திரியங்களைக் கட்டியுள்ள தூணாகிய இவ்வுடம்பும்,

     சிந்தும் படி --- சிதறிப் போகுமாறு,

     காலன் --- இயமனுடைய அமைச்சன்,

     மலர் செங்கண் கனல் பொங்கும் திறத்தின் --- மலர்ப் போன்ற கண்களில் நெருப்புப் பொறி பொங்கி எழு வலிமையுடன்,

     தண்டு எடுத்து --- தண்டாயுதத்தை எடுத்துக்கொண்டு,

     அண்டம் கிழித்து இன்று இங்கு உற --- அண்டத்தைக் கிழித்துக்கொண்டு, இந்நாள் இங்கு வர,

     தங்கும் பலவோரும் --- குடும்பத்தில் தங்கியுள்ள சுற்றத்தார் பலரும்,

     இங்கு எனக்கு என்று --- இது எனக்கு என்றும்,

     அங்கு உனக்கு என்றும் --- அந்த இடத்தில் உள்ளது உனக்கு என்றும்,

     இனத்தின் கண் கணக்கு என்று என்று இளைத்து --- அந்த இனத்தவர்களுக்குள் கணக்கு என்று பலமுறைக் கூறி இளைத்தும்,

     அன்பும் கெடுத்தும் --- அவர்களுடைய அன்பைக் கெடுத்தும்,

     அங்கம் கழிவு ஆம்முன் --- எனது உடம்பு அழிந்து போகா முன்,

     இசைக்கும் செந்தமிழ் கொண்டு --- புகழ் நிறைந்த செந்தமிழ் மொழியைக்கொண்டு,

     அங்கு இரக்கும் புன் தொழில் --- பொருள் உள்ள இடந்தோறும்போய் யாசிக்கும் இழிந்த தொழிலானது,

     பங்கம் கெட --- மிகவும் கேவலமானது; அது நீங்க,

     துன்பம் கழித்து --- துன்பத்தை நீக்கி,

     இன்பம் தருவாயே --- பேரின்பத்தைத் தந்து அருள்புரிவீர்.


பொழிப்புரை

         ஒலி செய்கின்ற கடலிற் பிறந்த சங்கத்தைத் திருக்கரத்தில் தரித்து உலகமெல்லாம் உயிர்கள் இடர் நீங்கி உய்யும் பொருட்டு அறிதுயில் புரியும் நாராயணரும், அவருடைய நாபிக்கமலத்தில் பிறந்த பிரமனும் பெருமை யாவும் குறையுமாறு, சந்தப் பாடலைக் கேட்டு மகிழ்கின்ற சிவபெருமானுடைய செவியில் செம்பொருளை உபதேசித்தவரே!

         தினைப்பயிர் விளையும் மலையில் வாழ்ந்த இளமை உடைய  வள்ளிநாயகியின் குங்குமம் அணிந்த தனங்களைச் சிவந்த பொன் போன்ற திருத்தோள்களில் எந்நாளும் தரித்துக்கொள்பவரே!

     செழிப்புள்ள ஆழ்ந்த கடற் சங்குகளைக் கடல் கொழிக்கவும், சந்தனப் பசுஞ்சோலை குளிர்ச்சி செய்யவும் விளங்குகின்ற திருச்செந்தூரில் எழுந்தருளியுள்ள பெருமிதம் உடையவரே!

         மனம் செல்வதற்கு வேறுவேறு வழிகளாகவுள்ள ஐம்புலன்களுடன் சேர்ந்துள்ள என்னுடைய குணமும், ஐம்பொறிகள் உள்ள உடம்பாகிய தூணும் அழியுமாறு, காலன் என்பவன், மலர்ப்போன்ற கண்களில் நெருப்புப் பொறி சிதற, தண்டாயுதத்தை எடுத்துக்கொண்டு அண்டம் கிழியும்படி இந்நாள் இவ்விடத்தில் வந்தவுடன், என் குடும்பத்தில் தங்கும் உறவினர் பலரும் இது எனக்கு, அது உனக்கு என்று என் சொத்துக்களைப் பங்கு வைத்து அதில் தகராறுப்பட்டு கணக்கு வழக்குகளைப் பார்த்து உடம்பு இளைத்து அன்பையும் கெடுத்து இடர்ப்பட்டு என் உடம்பு அழிவு அடையாமுன், புகழ் மிக்க செந்தமிழைக் கொண்டு, பொருளாளர் பால் சென்று யாசிக்கும் இழி தொழிலாகிய துன்பம் தொலைய, இன்பத்தைத் தந்து அருள் புரிவீர்.


விரிவுரை

மனத்தின் பங்கு எனத் தங்கு ஐம்புலம் ---

ஐம்புலன்களின் வழியே மனம் சென்று சென்று அலைந்து அழியும். ஐம்புலன்களால் வரும் அல்லலுக்கு அளவில்லை. “ஐம்புல வேடரின் அயர்ந்தனை” என்பது சிவஞானபோதம். இப்படியும் அப்படியுமாக புலன்கள் ஆன்மாவை அலைக்கழிக்கின்றன. மனம் புலன்வழிச் சென்று நினைப்பு மறப்புடன் கூடிப் பிறப்பிறப்பை உண்டு பண்ணுகின்றது.

ஐங்கரனை வத்தமனம் ஐம்புலம் அகற்றி,வளர்
 அந்திபகல் அற்றநினைவு அருள்வாயே”       -திருப்புகழ்.

அதனால் குணம் மாறுபடுகின்றது. “ஐம்புலன்கள்: சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம்.”

அஞ்சு இந்த்ரியத் தம்பம் ---

தம்பம் --- தூண். ஐந்து இந்திரியம்: மெய், வாய், கண், நாசி, செவி இவைகளுடன் கூடிய தூண் போன்றது இவ்வுடம்பு. ஞானம் என்னும் அங்குசத்தால் ஐம்புலன்களாகிய யானைகளை அடக்கினவன் முத்தி வீட்டினைப் பெறுவான்.

உரன்என்னும் தோட்டியான் ஓர்ஐந்தும் காப்பான்
வரன்என்னும் வைப்புக்கு ஓர் வித்து        --- திருக்குறள்.


காலன் மலர்ச் செங்கண் கனற் பொங்குந் திறத்தின் ---

காலன் என்பவன் இயமனுடைய அமைச்சன். காலத்தின் நுணுக்கத்தை உணர்ந்தபடியால் அவன் இப்பேர் பெற்றனன். ஆன்மாக்கள் சிறந்த மானுட உடம்பைப் பெற்று, அதன் பயனைப் பெறாது, அவத் தொழில் மேற்கொண்டு மறம் பல புரிவதால் காலன் சினத்துடன் கதையை ஏந்தி வருகின்றான்.

பலவோரும் எனக் கென்றிங் குனக்கென்றங்கு அன்புங் கெடுத்து ---

உயிர்ப் பிரியும்போது உறவினர் பலரும் சேர்ந்து மாள்கின்றவனைக் குறித்து வருந்தாமல், பொன் பொருள் வீடு நிலம் இவைகளைத் தத்தமக்கு என்று பங்கு வைத்துப் பிரிக்க முயல்வர். அதில் கூடுதல் குறைவு என்று மனம் வேற்றுமைப் பட்டு, கலகம் புரிவர். கணக்கு என்ன? என்று வாதித்துப் போதித்து இடர்ப்படுவர். அதனால் கலகம் செய்து உடல் இளைப்பர். ஒருவர் மீது ஒருவர் வைத்திருந்த அன்பையும் விடுவர்.

இசைக்குஞ் செந்தமிழ்க் கொண்டங் கிரக்கும் புன்றொழில் ---

சிறந்த புகழுடைய தமிழ்மொழியைக் கொண்டு இறைவனைப் பாடி நலன் உற வேண்டும். அங்ஙனம் உய்வு பெறாது, பொருளை நாடி மனிதர் மீது செஞ்சொல் கொண்டு கடி பாடி காமதேனுவின் பாலைக் கமரில் சொரிவதுபோல் தமிழை வறிதே கெடுக்கின்றனர். அதனை அடிகளார் வெறுத்து அகற்றுதல் வேண்டும் என வேண்டுகின்றனர்.

எங்குங் கலக்கஞ் சிந்திடக் கண் துஞ்சிடு மால் ---

திருமால் அரவணை மீது அறிதுயில் புரிகின்றனர். அந்த யோக நித்திரையால் உலகமெல்லாம் உயிர்கள் இன்புறுகின்றன. ஆகவே, அது மற்றவர் உறங்கும் உறக்கம் அன்று. அவருடைய உலக உபகாரமான துயிலைக் குறித்துச் சுவாமிகள் இந்த அடியில் அழகாக விளக்கம் புரிகின்றார்.

சந்தங் களிக்கும் ---

சந்தப் பாடல்களைக் கேட்பதில் சிவபெருமான் விருப்பமு் உடையவர். அதனால் அன்றோ சுந்தரரைப் ’நமக்கும் அன்பில் பெருகிய சிறப்பின் மிக்க அர்ச்சனை பாடே ஆகும். ஆதலால், மண்மேல் நம்மைச் சொல் தமழ் பாடுக" என்று தமது தூமறை மொழிந்த திருவாயால் பணித்தார்.

செம்பொருள் ---

சிவபெருமானுக்கு முருகவேள் பிரணவமாகிய செம்பொருளை உபதேசித்தனர். அப்பொருளை தாம் அறியவில்லையே என மாலும் அயனும் நாணிப் பெருமிதம் குன்றினர்.

பிறப்பு என்னும் கேதைமை நீங்க, சிறப்பு என்னும்
செம்பொருள் காண்பது அறிவு”            ---  திருக்குறள்

குங்குமக் கும்பம்.............புனைவோனே ---

ஞானாம்பாளாகிய வள்ளியின் பரஞானம், அபரஞானம் என்ற தனங்களை (கும்பங்களை) ஞானபண்டிதன் புனைகின்றான்.
  
கருத்துரை

         சிவகுருவே! வள்ளிநாயகரே! செந்திற்குமாரரே! வீணே இறக்காமலும், தமிழால் பிறரைப் புகழ்ந்து பாடாமலும் உம்மைப் பாடி உய்ய அருள்புரிவீர்.No comments:

Post a Comment

முயலை விட்டுக் காக்கையின் பின் போதல் கூடாது

  முயல் விட்டு ,  காக்கைப் பின் போவது கூடாது. -----        இருப்பதை விட்டுப் பறப்பதைப் பிடிப்பது கூடாது என்பார்கள்.  எளிமையாகச் செய்யக்கூடிய...