அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
பருத்தந்த
(திருச்செந்தூர்)
சிறந்த தமிழால் முருகனைப்
பாடி உய்ய
தனத்தந்தத்
தனத்தந்தத்
தனத்தந்தத் தனத்தந்தத்
தனத்தந்தத் தனத்தந்தத் ...... தனதான
பருத்தந்தத்
தினைத்தந்திட்
டிருக்குங்கச் சடர்த்துந்திப்
பருக்கும்பொற் ப்ரபைக்குன்றத் ......
தனமானார்
பரிக்குந்துற்
சரக்கொன்றத்
திளைத்தங்குற் பலப்பண்பைப்
பரக்குஞ்சக் கரத்தின்சத் ......
தியைநேரும்
துரைச்செங்கட்
கடைக்கொன்றிப்
பெருத்தன்புற் றிளைத்தங்குத்
துணிக்கும்புத் தியைச்சங்கித் ......
தறியேனைத்
துணைச்செம்பொற்
பதத்தின்புற்
றெனக்கென்றப் பொருட்டங்கத்
தொடுக்குஞ்சொற் றமிழ்த்தந்திப்
...... படியாள்வாய்
தருத்தங்கப் பொலத்தண்டத்
தினைக்கொண்டச் சுரர்க்கஞ்சத்
தடத்துன்பத் தினைத்தந்திட் ......
டெதிர்சூரன்
சமர்க்கெஞ்சிப்
படித்துஞ்சக்
கதிர்த்துங்கத் தயிற்கொண்டத்
தலத்தும்பர்ப் பதிக்கன்புற் ......
றருள்வோனே
திருக்கஞ்சத்
தனைக்கண்டித்
துறக்கங்குட் டிவிட்டுஞ்சற்
சிவக்கன்றப் பொருட்கொஞ்சிப் ......
பகர்வோனே
செயத்துங்கக் கொடைத்துங்கத்
திருத்தங்கித் தரிக்கும்பொற்
றிருச்செந்திற் பதிக்கந்தப் ......
பெருமாளே.
பதம் பிரித்தல்
பருத்
தந்தத்தினைத் தந்திட்டு,
இருக்கும் கச்சு அடர்த்து, உந்திப்
பருக்கும் பொன் ப்ரபைக் குன்றத்
...... தன மானார்,
பரிக்கும்
துற்சரக்கு ஒன்றத்
திளைத்து, அங்கு உற்பலப் பண்பைப்
பரக்கும் சக்கரத்தின் சத் ...... தியை நேரும்
துரைச்
செங்கண் கடைக்கு ஒன்றி,
பெருத்த அன்பு உற்று, இளைத்து அங்குத்
துணிக்கும் புத்தியைச் சங்கித்து
...... அறியேனை,
துணைச்
செம்பொன் பதத்து இன்புற்று,
எனக்கு என்று அப் பொருள் தங்கத்
தொடுக்கும் சொல் தமிழ்த் தந்து, இப்
...... படி ஆள்வாய்.
தருத்
தங்கு அப் பொலத்து அண்டத்-
தினைக் கொண்டு, அச் சுரர்க்கு அஞ்சத்
தடத் துன்பத்தினைத் தந்திட்டு ...... எதிர்சூரன்
சமர்க்கு
எஞ்சிப் படித் துஞ்ச,
கதிர்த் துங்கத்து அயிற் கொண்டு, அத்
தலத்து உம்பர்ப் பதிக்கு அன்புற்று
...... அருள்வோனே
திருக்
கஞ்சத்தனைக் கண்டித்து,
உறக்கம் குட்டி விட்டும், சற்
சிவக்கு, அன்று அப் பொருள் கொஞ்சிப் ...... பகர்வோனே!
செயத்
துங்க, கொடைத் துங்க,
திருத் தங்கித் தரிக்கும், பொன்
திருச்செந்தில் பதிக் கந்தப் ......
பெருமாளே.
பதவுரை
தரு தங்கு அ பொலத்து அண்டத்தினை கொண்டு ---
கற்பக மரந்தங்கியுள்ள அந்த அழகிய பொன்னுலகத்தைக் கவர்ந்துகொண்டு,
அசுரர்க்கு அஞ்ச --- அத்தேவர்கட்கு அஞ்சுமாறு,
தட துன்பத்தினை தந்திட்டு எதிர் --- பெரிய
துன்பத்தைத் தந்து எதிர்த்துப்போர் செய்த,
சூரன் சமர்க்கு எஞ்சி --- சூரபன்மன் போரில் வலிமைக் குன்றி,
படி துஞ்ச --- இப்பூமியில் மடியுமாறு,
கதிர் துங்கத்து அயில் கொண்டு --- ஒளியும்
தூய்மையும் உடைய வேலாயுதத்தைக் கொண்டு போர் புரிந்து,
அ தலத்து உம்பர் பதிக்கு அன்பு உற்று
அருள்வோனே --- அந்த மேலுலகத்தில் தேவர் கோமானுக்கு அன்பு செய்து அருள் செய்தவரே!
திரு கஞ்சத்தனை கண்டித்து --- அழகிய
தாமரையில் வாழ்கின்ற பிரம்ம தேவனைக் கண்டனஞ் செய்து,
உற --- நன்மை உறுமாறு,
கம் குட்டி விட்டும் --- தலையில் குட்டிச்
சிறையில் விடுத்து,
சத் சிவர்க்கு அன்று அப் பொருள் கொஞ்சி பகர்வோனே
--- உத்தமமான சிவமூர்த்திக்கு அந்நாள் அந்தப் பிரணவத்தின் பொருளை மழலைமொழியுடன்
கொஞ்சி உபதேசித்தவரே!
செய துங்க --- வெற்றித் தூய்மையும்,
கொடை துங்க --- கொடைத் தூய்மையும்,
திரு --- தெய்வீகமும்,
தங்கி தரிக்கும் பொன் --- நிலைப்பெற்று
விளங்கும் அழகிய,
திருச்செந்தில் பதி கந்த ---
திருச்செந்தூரில் எழுந்தருளியுள்ள கந்தக் கடவுளே!
பெருமாளே --- பெருமையின் மிக்கவரே!
பரு தந்தத்தினை தந்திட்டு --- பெரிய
யானைக் கொம்புபோல் இருந்து கொண்டு,
இருக்கும் கச்சு அடர்த்து ---
தரித்துக்கொண்டுள்ள கச்சைக் கிழித்து,
உந்திப் பருக்கும் பொன் ப்ரபை குன்ற தனமானார்
--- உயர்ந்து பருத்துள்ள பொன்மயமான மலைப்போன்ற தனங்களை யுடைய விலைமகளிர்,
பரிக்கும் துற்சரக்கு ஒன்ற திளைத்து ---
கொடுமையைத் தாங்கும் கணைக்கு நிகராக விளங்கி,
அங்கு உற்பல பண்பை பரக்கும் --- அங்கே நீலோற்பலத்
தன்மையையும் தோற்கவைத்து,
சக்கரத்தின் சக்தியை நேரும் --- சக்ராயுதம்
வேலாயுதம் என்ற இரு ஆயுதங்களை யொத்து,
துரை செங்கண் கடைக்கு ஒன்றி --- வேகமாகப்
பாயுந் தன்மையுள்ள சிவந்த கடைக்கண்களுக்கு இலக்காகி மயங்கி,
பெருத்த அன்பு உற்று --- பெரிய ஆசை வைத்து,
இளைத்து --- அதனால் இளைப்புண்டு,
அங்கு துணிக்கும் புத்தியை சங்கித்து அறியேனை
--- அவ்விடத்தில் துண்டிக்கப்பட்ட புத்தியைப் பெற்று பலரையும் ஐயங்கொண்டு
அறியாமையால் மூடிய நாயேனை,
துணை செம்பொன் பதத்து இன்புற்று ---
தேவரீருடைய சிவந்த பொன்போன்ற இரண்டு திருவடிகளில் இன்பமெய்தி,
எனக்கு என்று அ பொருள் தங்க --- அடியேனுக்கு
என்று தனிப்பட்ட முறையில் உண்மைப் பொருள் தங்க,
தொடுக்கும் சொல் தமிழ் தந்து --- நல்ல
பதங்களை வைத்துத் தொடுக்குத் தமிழ்த் தனி மொழியை எனக்கு வழங்கி,
இப்படி ஆள்வாய் --- இப்பொழுதே ஆட்கொள்வீர்.
பொழிப்புரை
கற்பகத்தரு தங்கியுள்ள அந்தப்
பொன்னுலகத்தைக் கவர்ந்துகொண்டு தேவர்களுக்கு அச்சத்தை விளைவித்து, பெரிய துன்பத்தைத் தந்து எதிர்ந்த
சூரபன்மன், போரில் வலிமைக்குன்றி
பொழியுமாறு, ஒளியும், தூய்மையும் உடைய வேற்படையைக் கொண்டு
போர்புரிந்து, அந்த
சுவர்க்கலோகத்தில் இந்திரனிடம் அன்புவைத்து அவனுக்கு அருள் புரிந்தவரே!
அழகிய தாமரையில் வீற்றிருக்கின்ற
பிரமதேவனைக் கண்டித்து அவன் நன்மையடையும் பொருட்டு தலையில் குட்டிச் சிறையில்
விடுத்து, என்று முள்ள
பொருளாகிய சிவமூர்த்திக்கு அன்று அத் தனிமொழிப் பொருளை மழலை மொழியுடன் கொஞ்சி
உபதேசித்தவரே!
வெற்றித் தூய்மையும் தொடைத் தூய்மையும்
தெய்வீகமும் பொருந்தி அழகு நிறைந்த திருச்செந்தூரில் எழுந்தருளியிருக்கும்
கந்தப்பெருமானே!
பெருமையின் மிக்கவரே!
பெரிய யானைக் கொம்புபோல் விளங்கி, தரித்துள்ள கச்சினைக் கிழித்துக்கொண்டு
உயர்ந்து பருத்து பொன் மலைப்போல் உள்ள தனபாரங்களை யுடைய விலைமாதர்களின், கொடுமையைத் தாங்கியுள்ள கணைக்கு
நிகராகநின்று, நீலோற்பலமலரை வென்று, சக்கரத்தையும் வேலையும்போல் வேகமாகச்
சென்று வாட்டுகின்ற கடைக்கண் பார்வையால் மருட்சிகொண்டு பெரிய அவாவுற்று அதனால் இளைத்து
பிளவுபட்ட புத்தியையுடையவனாய்ப் பலரையும் சந்தேகங் கொண்டு, அறியாமையோடு கூடிய சிறியேனை தேவரீருடைய
சிவந்த பொன் போன்ற இரு திருவடிக் கமலங்களில் இன்புறச் செய்து, எவருக்கும் இல்லாத ஒரு சிறப்புடன், எனக்கென்றே அமைந்துள்ள உயர்பொருள்
அமைத்துத் தொடுக்கும் இன்சொற்களுடன் கூடிய செந்தமிழை ஈந்து இக்கணத்திலேயே
ஆட்கொள்வீர்.
விரிவுரை
பருத்
தந்தத்தினை............தனமானார் ---
யானைத்
தந்தம்போல் உயர்ந்து பருத்துக் கச்சினைக் கிழித்துச் சிறந்துள்ள தனங்களையுடைய
விலைமகளிர் தம்மை இச்சிப்பவருக்கு அத்தனங்களைத் தந்து பொருள் பெறுவர். மலைப்போன்ற
தனத்தால் மலைப்போன்ற தனத்தை யீட்டுவர்.
பரிக்குந்
துற்சரக்கு ஒன்ற ---
துன்பத்தைத்
தாங்கியுள்ள கணைக்கு நிகரானது அவர் கண்கள். “சரத்துக்கு ஒன்றே” என்ற சொல், அத்துச்சாரியைக் கெட்டு “சரக்கொன்ற” என
வந்தது.
உற்பலப்
பண்பைப் பரக்கும் ---
உற்பலம்-நீலோற்பலம்.
கண்கள் நீலோற்பல மலரினும் அழகாக இருப்பதனால் அதன் பண்பைப் பரந்து போமாறு செய்தது
என்றனர்.
சக்கரத்தின்
சக்தியை நேரும் ---
மேலும்
அக்கண்கள் சக்ராயுதம் போல் வட்டமாகவும் வேலாயுதம் போல் கூர்மையாகவும் இருக்கின்றன.
ஆடவர் உள்ளத்தை வெட்டிப் பிளந்து புண்படுத்த வல்லது அக்கண்கள்.
துரை
செங்கட் கடை
---
துரை-விரைவு.
வேகமாகச் சென்று பாயும் இயல்புடையது அவ்விழி. துரை என்ற சொல் விரைவு என்ற பொருளில்
வரும் திருவாசகத்தையும் காண்க.
உரைமாண்ட
உள்ஒளி உத்தமன்வந்து உளம்புகலும்,
கரைமாண்ட
காமப் பெருங்கடலைக் கடத்தலுமே,
இரைமாண்ட
இந்திரியப் பறவை இரிந்து ஓடத்
துரைமாண்ட
வாபாடித் தோள்நோக்கம் ஆடாமோ.
துரை
என்ற சொல்லுக்குப் பகுதி “துரு” என்பதாகும். துரு துரு என்று என்னைத் தொளைக்கிறான்
என்பது பழமொழி. துருவுதல் தேடுதல். விலைமகளிர் இளைஞரைக் கடைக்கண்ணால் மயக்கி
வருத்துவர்.
துணிக்கும்
புத்தியை சங்கித்து அறியேனை ---
துணிக்கும்
புத்தி-வெட்டுப்பட்டுப் பிளப்புண்ட அறிவு. அதாவது பகுப்புண்ட பகுத்தறிவு. அறிவின்
முழு உருவம் போய்த் துணிப்புண்டு அதன் தன்னிலைக் கெட்டு மயக்கமுறும். அதனால்
எல்லாவற்றையும் சந்தேகிப்பான். தொட்டதற்கெல்லாம் சந்தேகம். பெரியவர்கள் தேர்ந்து
தெளிந்து முடிவுகட்டி நிச்சயம் செய்யப்பட்ட பொருளிலேயே சந்தேகம். அப்படிச்
சந்தேகிப்பதன் காரணம் அறிவு பகுக்கப் பெற்றதுவே; அதனால் அங்ஙனம் அல்லல் உறுகின்றனர்.
பாவம் அந்தோ! இத்தகைய அறிவீனரைக் கண்டு, நெஞ்சம்
இரக்கமுற்று ஏங்குகின்றது. இவர்கட்கு உயர்வு எந்தக் காலமோ? என்று உள்ளம் உருகுகின்றது. பல
பிறவிகளில் செய்த தவத்தினால் மெய்யுணர்வுப் பெற்ற திருவள்ளுவர், சமய குரவர் முதலிய ஆன்றோர்கள்
கூறியருளிய அறிவுரைகளில் ஐயுறுவாருக்கு நற்கதி உண்டோ? இத்தகைய ஆன்றோரைக் காட்டிலும் நான்
அறிவுடையோன் என்று எண்ணுவோரும் உளர்? அவர்
’என் தாயினும் எனக்கு வயது அதிகம்’ என்னும் அறிஞர் திலகத்திற்கு நிகராவர்.
துணைச்
செம்பொற் பதத்து இன்புற்று ---
துன்பங்களுக்கெல்லாம்
மூல காரணம் பற்று விடாமையே என வுணர்க. அப்பற்று, எனது, யான் என்ற இரு வகைத்து. புறப்பற்று
அகப்பற்று என்ற இந்த இரண்டும் அற்ற இடமே இறைவனுடைய திருவடிகளாகும். ஆகவே அப்பத
மலர்களைப் பற்றிப் பற்றற்றுப் பரம சுகத்தைப் பெறவேண்டும்.
எனக்கென்று........சொற்றமிழன்.........தந்திப்
படியாள்வாய்
---
“தமிழ்க் கடவுளே!
இதுவரை யாரும் பெறாத அளவில் எனக்குத் தமிழ்த் திருவினைத் தந்து, உயர்ந்த பொருளை இனிய தனி நடையிலே
தேனிகர் செஞ்சொற்களை அடுக்கித் தொடுத்துத் தமிழ்பாட அருள்புரிவீர்.” என்று
அருணகிரிநாதர் இப்பாடலில் வேண்டுகின்றார். வேண்டுவார் வேண்டுவதே வழங்குகின்ற
வேலாயுதப் பெருமான், அருணகிரியார்க்கு
அப்பெற்றியை அவ்வாறே அருளினார். தமிழ்த் தோன்றிய காலந்தொட்டு அருணகிரியார் பாடிய
திருப்புகழ், திருவகுப்பு போன்ற
உயர்ந்த தமிழ்ச் சந்த ஞானப் பாடல்கள் தோன்றவில்லை. அவ்வளவும் வேதாகம சாரமாக
அமைந்தவை. அதில் சொல்லழகு, பொருளழகு, நடையழகு, தொடையழகு, கருத்தழகு, முதலிய எல்லா நலன்களையும் ஒருங்கே
காணலாம். அதனால் தமிழ்த் தெய்வமாகிய முருகன் தனது புயமலையில் அருணகிரியாருடைய சொல்
மலரையே புனைந்தான்.
“மல்லேபுரி பன்னிரு
வாகுவில்என்
சொல்லே புனையும் சுடர்வேலவனே” --- கந்தர்அநுபூதி
தருத்தங்கு
அப் பொலத்து அண்டத்தினை ---
தரு
தங்கு அ பொலத்து அண்டம் எனப் பிரிவு செய்க. கற்பகம், பாரிசாதம், அரிசந்தனம், மந்தாரம், சந்தனம் என்ற ஐந்து மரங்களுடன் கூடியது
பொன்னுலகம். இவைகள் பாற்கடலில் அமுதத்துடன் தோன்றினவை. இத்தகைய சிறந்த மரங்களும், ஐராவதமும், உச்சைஸ்ரவமும், சிந்தாமணியும், காமதேனுவும் பொருந்திய உயர்ந்த உலகம்
தேவலோகம். அதனால் அமரரை வாட்டிச் சிறையில் வைத்து அமரவுலகைச் சூரபன்மன் கவர்ந்து
கொண்டனன்.
சிறையில்
கிடந்து வாடிய இந்திரன் மகன் சயந்தன் கூறுகின்றான்: “சாமானியமான ஒரு மரத்தின் கீழ்
நான் வாழ்ந்திருந்தால் இத்துன்பம் நேர்ந்திராது. கற்பக மரத்தின்கீழ் வாழ்கின்ற
பெருவாழ்வை விரும்பியபடியால் கவல்கின்றேன்.” என்கின்றான்.
தண்தேன்
துளிக்கும் தருநிழல்கீழ் வாழ்க்கை வெஃகிக்
கொண்டேன்
பெருந்துயரம், வான்பதமுங் கோது என்றே
கண்டேன்,
பிறர்தம் பதத்தொலைவும் கண்டனனால்,
தொண்டேன்,
சிவனே! நின் தொல்பதமே வேண்டுவனே. --- கந்தபுராணம்.
திருக்
கஞ்சத்தனைக் கண்டித்து உற கம் குட்டி ---
அழகிய
தாமரைக் கோயிலில் வாழும் பிரமதேவனைத் தண்டித்து அவன் ஆணவமகன்று நல்லறிவுப் பெற்று, உய்யும் பொருட்டே முருகவேள்
சிறையிலிருத்தினார்.
அயனைக் குட்டிய வரலாறு
குமாரக்கடவுள் திருவிளையாடல் பல
புரிந்து வெள்ளி மலையின் கண் வீற்றிருந்தருளினர். ஒரு நாள் பிரமதேவர் இந்திராதி
தேவர்களுடனும், கின்னரர், கிம்புருடர், சித்தர், வித்யாதரர் முதலிய கணர்களொடும்
சிவபெருமானைச் சேவிக்கும் பொருட்டு திருக்கைலாய மலையை நண்ணினர். பிரமனை யொழிந்த
எல்லாக் கணர்களும் யான் எனது என்னும் செருக்கின்றி சிவபெருமானை வணங்கி வழிபட்டுத்
திரும்பினார்கள். ஆங்கு கோபுரவாயிலின் வடபால் இலக்கத்து ஒன்பான் வீரர்களும்
புடைசூழ நவரத்தின சிங்காசனத்தில் குமரநாயகன் நூறு கோடி சூரியர்கள் திரண்டாலென்ன
எழுந்தருளி வந்து அடிமலர் தொழுது தோத்திரம் புரிந்து சென்றனர்.
பிரமதேவர்
குமரக் கடவுளைக் கண்டு வணங்காது,
“இவன்
ஓர் இளைஞன் தானே” என்று நினைத்து இறுமாந்து சென்றனர். இதனைக் கண்ட முருகப்
பெருமான், சிவன் வேறு தான்
வேறன்று, மணியும் ஒளியும்போல், சிவனும் தானும் ஒன்றே என்பதையும், முருகனாகிய தன்னை ஒழித்து சிவபெருமானை
வழிபடுவோர்க்குத் திருவருள் உண்டாகாது என்பதையும் உலகினர்க்கு உணர்த்தவும், பிரமனுடைய செருக்கை நீக்கித் திருவருள்
புரியவும் திருவுளம் கொண்டார்.
தருக்குடன்
செல்லுஞ் சதுர்முகனை அழைத்தனர். பிரமன் கந்தவேளை அணுகி அகங்காரத்துடன் சிறிது
கைகுவித்து வணங்கிடாத பாவனையாக வணங்கினன்.
கந்தப்பெருமான்
“நீ யாவன்” என்றனர்.
பிரமதேவர்
அச்சங்கொண்டு “படைத்தல் தொழில் உடைய பிரமன்” என்றனன்.
முருகப்பெருமான், "அங்ஙனமாயின் உனக்கு
வேதம் வருமோ?” என்று வினவினர்.
பிரமன்
“உணர்ந்திருக்கிறேன்” என்றனன்.
“நன்று!
வேத உணர்ச்சி உனக்கு இருக்குமாயின் முதல் வேதமாகிய இருக் வேத்தைக் கூறு,” என்று குகமூர்த்தி கூறினர்.
சதுர்முகன்
இருக்கு வேதத்தை ஓம் என்ற குடிலை மந்திரத்தைக் கூறி ஆரம்பித்தனன்.
உடனே
இளம் பூரணணாகிய எம்பெருமான் நகைத்து திருக்கரம் அமைத்து, “பிரமனே நிற்றி! நிற்றி! முதலாவதாகக்
கூறிய `ஓம்’ என்ற பிரணவ
மந்திரத்தின் பொருளை விளக்குதி என்றனர்.
தாமரைத்தலை
இருந்தவன் குடிலைமுன் சாற்றி
மாமறைத்தலை
எடுத்தனன் பகர்தலும், வரம்பில்
காமர்பெற்று உடைக்
குமரவேள், "நிற்றி, முன் கழறும்
ஓம்
எனப்படு மொழிப்பொருள் இயம்புக",என்று உரைத்தான். ---கந்தபுராணம்.
ஆறு
திருமுகங்களில் ஒரு முகம் பிரணவ மந்திரமாய் அமைந்துள்ள அறுமுகத்து அமலன்
வினவுதலும், பிரமன் அக்குடிலை
மந்திரத்திற்குப் பொருள் தெரியாது விழித்தனன். கண்கள் சுழன்றன; சிருட்டி கர்த்தா நாம் என்று எண்ணிய
ஆணவம் அகன்றது; வெட்கத்தால் தலை குனிந்தனன்.
நாம் சிவபெருமானிடத்து வேதங்களை உணர்ந்து கொண்ட காலையில், இதன் பொருளை உணராமல் போனோமே? என்று ஏங்கினன்; சிவபெருமானுக்குப் பீடமாகியும், ஏனைய தேவர்களுக்குப் பிறப்பிடமாகியும், காசியில் இறந்தார்களுக்கு சிவபெருமான்
கூறுவதாகியுமுள்ள தாரகமாகிய பிரணவ மந்திரத்தின் பொருளை உணராது மருண்டு நின்றனன்.
குமரக்கடவுள், “ஏ சதுர்முகா! யாதும் பகராது நிற்பதென்? விரைவில் விளம்புதி” என்றனர்.
பிரமன்
“ஐயனே! இவ்வொரு மொழியின் பொருளை உணரேன்” என்றனன்.
அது
கேட்ட குருமூர்த்தி சினந்து, இம்முதல் எழுத்திற்குப்
பொருள் தெரியாத நீ சிருட்டித் தொழில் எவ்வாறு புரிய வல்லாய்? இப்படித்தான் சிருட்டியும்
புரிகின்றனையோ? பேதாய்!” என்று
நான்கு தலைகளும் குலுங்கும்படிக் குட்டினார்.
“சிட்டி செய்வதுஇத்
தன்மை யதோ?எனச் செவ்வேள்
குட்டினான் அயன் நான்குமா முடிகளுங்
குலுங்க” ---கந்தபுராணம்.
பிரமதேவனது
அகங்காரம் முழுதும் தொலைந்து
புனிதனாகும்படி குமாரமூர்த்தி தமது திருவடியால் ஓர் உதை கொடுத்தனர். பிரமன்
பூமியில் வீழ்ந்து அவசமாயினன். உடனே பகவான் தனது பரிசனங்களைக் கொண்டு பிரமனைக்
கந்தகிரியில் சிறை இடுவித்தனர்.
“வேதநான்முக மறையோ னொடும்
விளை
யாடியே குடுமியிலே கரமொடு
வீரமோதின மறவா” ---
(காணொணா) திருப்புகழ்.
“அயனைக் குட்டிய
பெருமாளே” --- (பரவை) திருப்புகழ்.
“ஆர ணன்றனை வாதாடி ஓருரை
ஓது கின்றென வாராது எனாஅவன்
ஆண வங்கெட வேகாவலாம்அதில் இடும்வேலா
--- (வாரணந்) திருப்புகழ்.
“.......................................படைப்போன்
அகந்தை
உரைப்ப,மறை ஆதி எழுத்துஎன்று
உகந்த பிரணவத்தின்உண்மை -- புகன்றிலையால்
சிட்டித்
தொழில்அதனைச் செய்வதுஎங்ஙன் என்றுமுனம்
குட்டிச் சிறைஇருத்தும் கோமானே” --- கந்தர் கலிவெண்பா.
செயத்
துங்கம்
---
பகைவரை
வெற்றிப் பெறுவதும் நியாயமான முறையில் அமையவேண்டும். அப்படி அமையுமாயின் அது தூய வெற்றியாகும். அபிமன்யுவை துரியோதனாதியர்
வென்றது அநியாயமான முறையிலாகும். ஒருவனைப் பலர் சூழ்ந்து போர் செய்வதும், ஆயுதம் இல்லாதவனை ஆயுதம் உடையவன்
எதிர்த்துப் போர் செய்வதும் இளைத்த ஒருவனை வளைத்து நின்று போரிடுவதும்
குற்றமாகும்.
அதனால்
அன்றோ வலிமைக் குன்றி நின்ற இராவணனை இராமர் கருணையுடன் நோக்கி “இன்று போய்
போருக்கு நாளை வா” என்று உயிர்ப்பிச்சை நல்கி அனுப்பினார்.
கொடைத்
துங்கம்
---
பயன்
கருதாமல் தருவதும், வறியார்க்கு
வழங்குவதும்; கடமை உணர்ச்சியுடன்
தருவதும், அன்போடும் அருளோடும்
உதவுவதும் தூய கொடையாகும். அல்லாத கொடை விழுமியதாகாது.
கருத்துரை
சூரசங்கார மூர்த்தியே! சிவகுருவே!
செந்திற்கந்தவேளே! அவாவுற்று அடியேன் அவலமுறாது, சிறந்த தமிழால் நின்னைப்பாடி உய்ய
அருள்புரிவீர்
No comments:
Post a Comment