திருச்செந்தூர் - 0057. சங்கைதான்


அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

சங்கைதான் ஒன்று (திருச்செந்தூர்)

முருகா!
விலைமகளிர் வயப்பட்டு அழியாமல்,
உனது அருட்கோலம் காட்டி ஆட்கொண்டு அருள்


தந்தனா தந்தனா தந்தனா தந்தனா
     தந்தனா ...... தந்ததான


சங்கைதா னொன்றுதா னின்றியே நெஞ்சிலே
     சஞ்சலா ...... ரம்பமாயன்

சந்தொடே குங்குமா லங்க்ருதா டம்பரா
     சம்ப்ரமா ...... நந்தமாயன்

மங்கைமார் கொங்கைசே ரங்கமோ கங்களால்
     வம்பிலே ...... துன்புறாமே

வண்குகா நின்சொரூ பம்ப்ரகா சங்கொடே
     வந்துநீ ...... யன்பிலாள்வாய்

கங்கைசூ டும்பிரான் மைந்தனே அந்தனே
     கந்தனே ...... விஞ்சையூரா

கம்பியா திந்த்ரலோ கங்கள்கா வென்றவா
     கண்டலே ...... சன்சொல்வீரா

செங்கைவேல் வென்றிவேல் கொண்டுசூர் பொன்றவே
     சென்றுமோ ...... தும்ப்ரதாபா

செங்கண்மால் பங்கஜா னன்தொழா நந்தவேள்
     செந்தில்வாழ் ...... தம்பிரானே.


பதம் பிரித்தல்


சங்கைதான் ஒன்றுதான் இன்றியே நெஞ்சிலே
     சஞ்சல ...... ஆரம்ப மாயன்,

சந்தொடே குங்கும அலங்க்ருத ஆடம்பரா
     சம்ப்ரம ...... ஆநந்தமாயன்,

மங்கைமார் கொங்கைசேர் அங்க மோகங்களால்
     வம்பிலே ...... துன்பு உறாமே,

வண்குகா! நின்சொரூபம் ப்ரகாசம் கொடே
     வந்து, நீ ...... அன்பில் ஆள்வாய்.

கங்கை சூடும் பிரான் மைந்தனே! அந்தனே!
     கந்தனே! ...... விஞ்சையூரா!

கம்பியாது இந்த்ர லோகங்கள் கா வென்ற
     ஆகண்டல ...... ஈசன் சொல் வீரா!

செங்கைவேல், வென்றிவேல், கொண்டு,சூர் பொன்றவே
     சென்று, மோ- ...... தும் ப்ரதாபா!

செங்கண்மால் பங்கஜ ஆனன் தொழு ஆநந்தவேள்!
     செந்தில்வாழ் ...... தம்பிரானே!


பதவுரை

         கங்கை சூடும் பிரான் மைந்தனே --- கங்கை நதியைச் சடையில் தரித்தருளிய சிவபெருமானுடைய திருக்குமாரரே!

         அந்தனே --- அழகின் மிக்கவரே!

         கந்தனே --- கந்தப்பெருமானே!

         விஞ்சை ஊரா --- ஞான நூல்களையே உறைவிடமாகக் கொண்டவரே!

         கம்பியாது இந்த்ர லோகங்கள் கா என்ற ஆகண்டல ஈசன் சொல் வீரா --- (சூராதி யவுணர்களது கொடுமையால்) நடுங்காவண்ணம் தேவர்கோமான் உலகமாகிய அமராவதி முதலிய தேவலோகங்களை காப்பாற்ற வேண்டுமென்று முறையிட்ட, அமரர் கோமானாகிய இந்திரன் புகழ்கின்ற வீரரே!

         செம் கை வேல், வென்றி வேல் கொண்டு சூர் பொன்ற சென்று மோதும் ப்ரதாபா --- சிவந்த கரத்தில் வீற்றிருப்பதும், வெற்றியை உடையதுமாகிய வேலாயுதத்தைக் கொண்டு சூரபன்மன் அழிய (ஏ-அசை), போர்களத்திற் சென்று தாக்கி அமர்புரிந்த கீர்த்தியின் மிக்கவரே!

         செங்கண்மால் பங்கஜானன் தொழு ஆனந்த வேள் --- (தாமரை மலரையொத்த) சிவந்த கண்களையுடைய திருமாலும், தாமரையில் வீற்றிருக்கும் பிரமதேவனும், (பக்தியுடன் பரவி) வணங்கும் ஆனந்த சொரூபியாகிய முருகவேளே!

         செந்தில் வாழ் தம்பிரானே --- திருச்செந்திலில் வாழுகின்ற  தனிப்பெரும் தலைவரே!

         சங்கைதான் ஒன்றுதான் இன்றியே நெஞ்சிலே --- எண்ணல் அளவை ஒன்றுமின்றி அளவில்லாமலே மனத்திலே,

     சஞ்சல ஆரம்ப மாயன் --- விலைமகளிரை யடையவேண்டுமென்ற கவலை ஆரம்பமாகி மாயை உடையவனும்,

     சந்தொடு (ஏ-பிரிநிலை) குங்கும அலங்க்ருத ஆடம்பர சம்ப்ரம ஆனந்த மாயன் --- சந்தனம் குங்குமப்பூ முதலிய வாசனைப் பொருள்களையணிந்து (இரத்தினாபரணங்களாலும், ஆடைகளாலும்) அலங்கரித்துக் கொண்டு இடம்பமாகவும் சம்ப்ரமமாகவும் உலாவி இன்புறும் மாயையில் மூழ்கியவனுமாகிய அடியேன்,

     மங்கைமார் கொங்கை சேர் அங்க மோகங்களால் --- மகளிரது தனபாரங்ளையுடைய சரீரத்தின் மீதுள்ள ஆசைப் பெருக்கம், அதனிடத்துள்ள மயக்க முதலியவைகளால்,

     வம்பிலே துன்புறாமே --- வீணாக துன்பத்தையடையாமல்,

     வண் குகா --- வள்ளல் தன்மையுடைய குகப் பெருமானே!

     நின் சொரூபம் ப்ரகாசங்கொடு --- (ஏ-அசை) தேவரீரது அருட் பெருஞ்சோதி வீசும் திருக்கோலத்துடன்,

     வந்து நீ அன்பில் ஆள்வாய் --- தாங்கள் அடியேனிடம் வந்து அன்பினால் ஆட்கொண்டருள வேண்டும்.



பொழிப்புரை

         உலகங்கள் அழிந்துபோகா வண்ணம் மிகப் பெருகி வந்த கங்கா நதியைத் தமது சடாமுடியில் சூடிக்கொண்ட கருணைக் கடலாம் கண்ணுதற்பெருமானது திருக்குமாரரே!

         அழகில் சிறந்தவரே!

         கந்தப் பெருமானே!

         ஞான நூற்களை உறைவிடமாகக் கொண்டவரே!

         இந்திரலோகங்கள் (சூரபன்மனால்) நடுங்கா வண்ணம் தந்தருள வேண்டுமென்று முறையிட்ட தேவர்க்கோமானால் புகழப் பட்டவரே!

         சிவந்த (தாமரையனைய) கரத்தில் வீற்றிருக்கும் வெற்றியையுடைய வேலாயுதத்தைக் கொண்டு போர்க்களஞ் சென்று சூரபன்மன் அழியுமாறு தாக்கிய கீர்த்தியின் மிக்கவரே!

         தாமரை மலரையொத்த கண்களையுடைய நாராயணமூர்த்தியும், தாமரையில் வசிக்கும் நான்முகனும் பக்தியுடன் வழிபட்டு வணங்கும் ஆனந்த சொரூபியாகிய அறுமுகவேளே!

         செந்திமா நகரத்தில் எழுந்தருளியுள்ள தலைவரே!

         (விலைமகளிரது மோகத்தால் உண்டாகிய) அளவில்லாத பலவகையாகிய சஞ்சலமானது மனத்திலே முளைக்க ஆரம்பித்த மாயைக்கு உட்பட்டவனும், சந்தனம் குங்குமப்பூ முதலிய வாசனைகளை அணிந்து, (ஆடை ஆபரணங்களால்) அலங்கரித்துக் கொண்டு ஆடம்பரமாகவும் சம்பிரமமாகவும் திரிகின்ற மாயையின் மிக்கவனுமாகிய அடியேன், மாதர்களது தனபாரங்களோடு கூடிய சரீரத்தின் மீதுள்ள ஆசைப் பெருக்கத்தால் வீணே துன்புற்று அழியா வண்ணம், வள்ளல் தன்மையுடைய குகமூர்த்தியே! தேவரீரது அருட்பிரகாசத்தோடு கூடிய திருவுருவத்துடன் வந்து அடியேனை அன்பினால் தடுத்தாட் கொண்டருள வேண்டும்.

விரிவுரை

கங்கை சூடும் பிரான் ---

கங்கையைத் தரித்த வரலாறு

முன்னொரு காலத்தில் உமாதேவியார், திருக்கயிலாய மலையிலுள்ள சோலையிலே ஒரு விளையாட்டாக ஒன்றும் பேசாதவராய்ச் சிவபெருமானுக்குப் பின்புறத்தில் வந்து அவருடைய இரு கண்களையும்  தமது திருக்கரங்களாற் பொத்தினார். அதனால் எல்லா உயிர்களும் வருத்தமடையும்படி புவனங்கள் எங்கும் இருள் பரந்தது. சிவபெருமானுடைய திருக்கண்களினாலேயே எல்லாச் சோதியும் தழைத்த தன்மையினால், சூரியன் சந்திரன் அக்கினி ஆகிய இவர்களின் சுடர்களும் மற்றைத்தேவர்களின் ஒளிகளும் அழிந்து எல்லாம் இருள்மயமாயின. அம்மையார் அரனாரது திருக்கண்களைப் பொத்திய அக் கணமொன்றில் உயிர்கட்கெல்லாம் எல்லையில்லாத ஊழிக்காலங்களாயின. அதனை நீலகண்டப்பெருமான் நோக்கி, ஆன்மாக்களுக்குத் திருவருள் செய்யத் திருவுளங்கொண்டு, தம்முடைய நெற்றியிலே ஒரு திருக்கண்ணை உண்டாக்கி, அதனால் அருளொடு நோக்கி, எங்கும் வியாபித்த பேரிருளை மாற்றி, சூரியன் முதலாயினோர்க்கும் சிறந்த பேரொளியை யீந்தார். புவனங்களிலுள்ள பேரிருள் முழுதும் நீங்கினமையால் ஆன்மகோடிகள் உவகை மேற்கொண்டு சிறப்புற்றன. சிவபெருமானுடைய செய்கையை உமாதேவியார் நோக்கி அச்சமெய்தி அவருடைய திருக்கண்மலர்களை மூடிய இருகர மலர்களையும் துண்ணென்று எடுத்தார், எடுக்கும் பொழுது தமது பத்துத் திருவிரல்களிலும் அச்சத்தினாலே வியர்வைத் தோன்ற, அதனை உமாதேவியார் நோக்கி திருக்கரங்களை யுதறினார். அவ்வியர்வைப் பத்துக் கங்கைகளாய் ஆயிர நூறுகோடி முகங்களைப் பொருந்திச் சமுத்திரங்கள்போல் எங்கும் பரந்தன. அவற்றை அரியரி பிரமாதி தேவர்களும் பிறருங் கண்டு திருக்கயிலையில் எழுந்தருளிய தேவதேவன்பால் சென்று, வணங்கித் துதித்து, “எம்பொருமானே! இஃதோர் நீர்ப்பெருக்கு எங்கும் கல்லென்று ஒலித்து யாவரும் அழியும்படி அண்டங்கள் முழுவதையும் கவர்ந்தது; முன்னாளில் விடத்தையுண்டு அடியேங்களைக் காத்தருளியதுபோல் இதனையுந் தாங்கி எங்களைக் காத்தருளுவீர்” என்று வேண்டினார்கள். மறைகளுங் காணாக் கறைமிடற்றண்ணல் அந்நதியின் வரலாற்றை அவர்களுக்குச் சொல்லி, அதனை அங்கே அழைத்து, தமது திருச் சடையிலுள்ள ஓர் உரோமத்தின் மீது விடுத்தார்.

அதனைக் கண்டு மகிழ்ந்து நான்முகனும் நாராயணனும் இந்திரனும் “எம்மை ஆட்கொண்ட எந்தையே! இவ்வண்டங்களை யெல்லாம் விழுங்கிய கங்கை உமது அருட்சத்தியாகிய அம்பிகையாரது திருக்கரத்தில் தோன்றினமையாலும், உமது திருச்சடையில் சேர்ந்தமையாலும் நிருமலமுடையதாகும். அதில் எமது நகரந்தோறும் இருக்கும்படி சிறிது தந்தருளல் வேண்டும்” என்று வேண்டினார்கள். சிவபெருமான் திருச்சடையிற் புகுந்திருந்த கங்கையிற் சிறிதை அள்ளி அம்மூவர்களுடைய கைகளிலுங் கொடுத்தார். அவர்கள் வாங்கி மெய்யன்போடு வணங்கி, விடைபெற்றுக் கொண்டு தத்தம் நகர்களை யடைந்து அங்கே அவற்றை விடுத்தார்கள். அந்த மூன்று நதிகளுள் பிரமலோகத்தை யடைந்த கங்கை பகீரத மன்னனுடைய தவத்தினாற் பூமியில் மீண்டும் வர, சிவபெருமான் பின்னும் அதனைத் திருமுடிமேல் தாங்கி, பின் இந்த நிலவுலகிற் செல்லும்படி விடுத்தார். அந்நதி சகரர்கள் அனைவரும் மேற்கதி பெற்றுய்யும்படி அவர்கள் எலும்பிற் பாய்ந்து சமுத்திரத்திற் பெருகியது. இதனையொழிந்த மற்றை இரு நதிகளும் தாம்புகுந்த இடங்களில் இருந்தன. தமது அருட் சத்தியாகிய உமையம்மையாருடைய திருக்கரத்திற்றோன்றிய கங்கா நதி உலகங்களை அழிக்காவண்ணம் திருவருண் மேலீட்டால் சிவபெருமான் அதனைத் திருமுடியில் தரித்த வரலாறு இதுவேயாம்.

மலைமகளை ஒருபாகம் வைத்தலுமே, மற்றுஒருத்தி
சலமுகத்தால் அவன்சடையில் பாயும்அது என்னேடீ,
சலமுகத்தால் அவன்சடையில் பாய்ந்திலளேல் தரணியெல்லாம்
பிலமுகத்தே புகப்பாய்ந்து பெருங்கேடாம் சாழலோ.         --- திருவாசகம்.

                                                                                     
பங்கஜானன் --- பங்கஜாசனன்; சகரங்குறைந்து                                                இடைக்குறையாயிற்று.

ஆனந்தவேள் ---

முருகப்பெருமான் ஆனந்தமூர்த்தி. இதனை

ஆனந்த வத்துவின் கழல் வாழ்த்தி வணங்குவாம்”

என்ற ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் திருவாக்கையும் உய்த்துணர்க. இதனால் அன்றோ முருகப்பெருமானது திருவருள் பெறாதாற்கு ஆனந்தமில்லை என்பது ஆன்றோர் கொள்கை.

கருத்துரை
         கங்கையைத் தரித்த கண்ணுதற் கடவுளது திருக்குமாரரே! கந்தமூர்த்தியே! கலை விநோதரே! இந்திரனால் துதிக்கப் பெற்றவரே! வெற்றிவேலைக் கொண்டு சூரனை யழித்த பெருங் கீர்த்தியையுடையவரே! அரியயனால் தொழப்பட்ட ஆனந்த மூர்த்தியே! செந்திலதிப! சஞ்சலமுடையவனாகி வாசனைப் பொருள்களை யணிந்து ஆடம்பரமாகத் திரிகின்ற மாயையுடையவனாகிய அடியேன், விலைமகளிர் வலைப்பட்டு அழியாவண்ணம் தேவரீர் தமது திருவருட் பிரகாசத் திருமேனியுடன் வந்து காத்தருள்வீர்.


No comments:

Post a Comment

பொது --- 1081. இசைந்த ஏறும்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் இசைந்த ஏறும் (பொது) முருகா!  அடியேன் அயர்ந்தபோது வந்து அருள வேண்டும். தனந்த தானந் தனதன தானன ...... தனதான...