திருச்செந்தூர் - 0086. மஞ்செனும் குழலும்


அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

மஞ்செனும் குழலும் (திருச்செந்தூர்)

மாதர் மயக்கில் விழாமல் காத்து அருள

தந்த தந்தன தந்தன தந்தன
     தந்த தந்தன தந்தன தந்தன
          தந்த தந்தன தந்தன தந்தன ...... தந்ததான


மஞ்செ னுங்குழ லும்பிறை யம்புரு
     வங்க ளென்சிலை யுங்கணை யங்கயல்
          வண்டு புண்டரி கங்களை யும்பழி ......சிந்துபார்வை

மண்ட லஞ்சுழ லுஞ்செவி யங்குழை
     தங்க வெண்டர ளம்பதி யும்பலு
          மண்ட லந்திக ழுங்கமு கஞ்சிறு ...... கண்டமாதர்

கஞ்சு கங்குர லுங்கழை யம்புய
     கொங்கை செங்கிரி யும்பவ ளம்பொறி
          கந்த சந்தன மும்பொலி யுந்துகில் ...... வஞ்சிசேருங்

கஞ்ச மண்டுளி னின்றிர சம்புகு
     கண்ப டர்ந்திட ரம்பையெ னுந்தொடை
          கண்கை யஞ்சர ணஞ்செயல் வஞ்சரை .....நம்புவேனோ

சஞ்ச சஞ்சக ணஞ்சக டுண்டுடு
     டுண்டு டிண்டிமி டண்டம டுண்டுடு
          தந்த னந்தன திந்திமி சங்குகள் ...... பொங்குதாரை
  
சம்பு வின்கும ரன்புல வன்பொரு
     கந்த னென்றிடு துந்துமி யுந்துவ
          சங்க ளங்கொளி ருங்குடை யுந்திசை ......விஞ்சவேகண்

டஞ்ச வஞ்சசு ரன்திர ளுங்குவ
     டன்ற டங்கலும் வெந்துபொ ரிந்திட
          அண்ட ரிந்திர னுஞ்சர ணம்புக ...... வென்றவேளே

அம்பு யந்தண ரம்பைகு றிஞ்சியின்
     மங்கை யங்குடில் மங்கையொ டன்புடன்
          அண்ட ருந்தொழு செந்திலி லின்புறு ...... தம்பிரானே.


பதம் பிரித்தல்


மஞ்சு எனும் குழலும், பிறை அம் புரு-
     வங்கள் என் சிலையும், கணை அம் கயல்
          வண்டு புண்டரிகங்களையும் பழி ......சிந்துபார்வை,

மண் தலம் சுழலும் செவி அம் குழை
     தங்க, வெண் தரளம் பதியும் பலும்,
          மண்டலம் திகழும்  கமுகம் சிறு ...... கண்டமாதர்

கஞ்சுகம் குரலும், கழை அம் புய,
     கொங்கை செங்கிரியும், பவளம் பொறி
          கந்த சந்தனமும் பொலியும் துகில், ...... வஞ்சி சேரும்

கஞ்சம் மண்டு உள் இன்றி இரசம் புகு
     கண் படர்ந்திட, ரம்பை எனும் தொடை,
          கண்கை அம் சரணம் செயல் வஞ்சரை .....  நம்புவேனோ?

சஞ்ச சஞ்ச கணஞ்ச கடுண்டுடு
     டுண்டு டிண்டிமி டண்டம டுண்டுடு
          தந்த னந்தன திந்திமி சங்குகள் ...... பொங்குதாரை

சம்புவின் குமரன் புலவன் பொரு
     கந்தன் என்றிடு துந்துமியும், துவ
          சங்கள், ங்கு ஒளிரும் குடையும் திசை ...... விஞ்சவேகண்டு,

அஞ்ச, வஞ்ச சுரன் திரளும் குவடு
     அன்று அடங்கலும் வெந்து பொரிந்திட,
          அண்டர் இந்திரனும் சரணம் புக ...... வென்ற வேளே!

அம்புயம் தண் அரம்பை, குறிஞ்சியின்
     மங்கை, அம் குடில் மங்கையொடு அன்புடன்
          அண்டரும் தொழு செந்திலில் இன்புறு ....தம்பிரானே.


பதவுரை

         சஞ்ச சஞ்சகணம் சகடுண்டுடு டுண்டு டிண்டிமி டண்டம டுண்டுடு தந்த னந்தன திந்திமி சங்குகள் - சஞ்ச சஞ்சகணம் சகடுண்டுடு டுண்டு டிண்டிமி டண்டம டுண்டுடு தந்தனந்தன திந்திமி என்ற ஒலியை உண்டாக்கி சங்குகளும்,

     பொங்கு தாரை --- ஒலிக்கின்ற ஊது குழல்களும்,

     சம்புவின் குமரன் --- சுக காரணராகிய சிவபெருமானுடைய குமாரன் என்றும்,

     புலவன் --- அறிவினன் என்றும்,

     பொரு கந்தன் என்றிடு துந்துமியும் --- போர் வல்ல கந்தக் கடவுள் என்றும், ஒலிக்கின்ற பேரிகையும்,

     துவசங்கள் --- கொடிகளும்,

     அங்கு ஒளிரும் குடையும் --- அவ்விடத்தில் ஒளி செய்கின்ற வெண் கொற்றக் குடையும்,

     திசை விஞ்சவே கண்டு அஞ்ச --- திசைகளில் மிகுந்து விளங்க, அக்காட்சியைப் பார்த்து அஞ்சுமாறு,

     வஞ்ச அசுரன் திரளும் --- வஞ்சனையைச் செய்யும் சூரபன்மனுடைய சேனையும்,

     குவடு --- கிரவுஞ்ச மலையும்,

     அன்று அடங்கலும் வெந்து பொரிந்திட --- அந்நாளில் எல்லாம் வெந்து சாம்பராகுமாறும்,

     அண்டர் இந்திரனும் சரணம் புக --- தேவர்களும், தேவர் கோமானும், தஞ்சம் புகுமாறும்,

     வென்ற வேளே --- வெற்றிப் பெற்ற செவ்வேட் பரமனே!

         அம்புயம் தண் அரம்பை --- தாமரையும், குளிர்ந்த வாழையும் உடைய,

     குறிஞ்சியின் மங்கை --- வள்ளியம்மையுடனும்,

     அம்குடில் மங்கையொடு --- அழகிய விண்ணுலக மாதாகிய தெய்வயானையுடனும்,

     அன்புடன் அண்டரும் தொழு --- அன்போடு தேவர்களும் வணங்குகின்ற,

     செந்திலில் இன்புறும் தம்பிரானே --- திருச்செந்தூரில் மகிழ்கின்ற தனிப்பெருந்தலைவரே!

         மஞ்சு எ(ன்)னும் குழலும் --- மேகத்தை ஒத்த கூந்தலும்,

     பிறை அம் புருவங்கள் என் சிலையும் - பிறைச் சந்திரனைப் போன்ற அழகிய புருவங்களாகிய வில்லும்,

     கணை, அம் கயல், வண்டு, புண்டரிகங்களையும் பழி --- அம்பு, அழகிய மீன், வண்டு, தாமரை என்ற இவைகளைப் பழித்து,

     சிந்து பார்வை --- கடல் போன்ற அகன்ற கண்களும்,

     மண்தலஞ் சுழலும் செவி அம்குழை --- மண்ணுலகத்தவர் கலங்கும்படியான காதில் உள்ள அழகிய குழைகளும்,

     தங்கு அ வெண்தரளம் பதியும் பலும் --- தங்கியுள்ள அந்த வெளுத்த முத்துக்கள் பதித்தாற் போன்ற பற்களும்,

     மண்டு அலம் திகழும் கமுகு --- நெருங்கிய கலப்பையால் உழுது வளர்த்த பாக்கு போன்ற,

     அம்சிறு கண்டம் --- அழகிய கழுத்தும்,

     மாதர் கம் சுகம் குரலும் --- அழகிய நீர்போன்ற குளிர்ச்சியும் கிளிபோன்ற மழலையும் உடைய குரலும்,

     கழை அம்புய --- மூங்கில் போன்ற அழகிய தோளும்,

     கொங்கை செம்கிரி --- செவ்விய மலைப்போன்ற தனங்களும்,

     பவளம் --- பவள மாலையும்,

     பொறி --- தேமலும்,

     கந்த சந்தனமும் --- நறுமணச் சந்தனமும்,

     பொலியும் துகில் --- விளங்குகின்ற ஆடையும்,

     வஞ்சி --- கொடி போன்ற இடையும்,

     சேரும் கஞ்சம் மண்டு உளின் இரசம் புகுகண் --- பொருந்திய தாமரையின் நிறைந்த உள்ளில் வெளிப்பட்ட இரசம் தகுந்த இடமும்,

     படர்ந்த அரம்பை எனும் தொடை --- பரந்துள்ள வாழைப் போன்ற தொடையும்,

     கண் கை அம் சரணம் செயல் --- கண்கள் கரங்கள் அழகிய கால்கள் இவைகளையுங் கொண்டு மயக்கச் செயல் புரிகின்ற,

     வஞ்சரை நம்புவேனோ --- பொது மகளிரை அடியேன் நம்பி அலையக் கடவேனோ?

பொழிப்புரை

     சஞ்ச சஞ்சக ணஞ்சக டுண்டுடு டுண்டு டிண்டிமி டண்டம டுண்டுடு தந்தனந்தன திந்திமி என்ற சத்தத்துடன் சங்குகளும் தாரைகளும் “சிவகுமாரன்”, புலவர் கோமான், போரில் வந்த கந்தப்பெருமான்” என்று கூவி யொலிக்கும் பேரிகைகளும், கொடிகளும், ஒளி செய்கின்ற குடைகளும் திசைகளில் மிகுதியாக விளங்க, அவைகளைக் கண்டு அஞ்சிய வஞ்சனை மிக்க சூரனுடைய சேனைக் கூட்டங்களும், கிரஞ்வுசமலையும் மற்றயாவும் அந்நாளில் வெந்து பொடியாகுமாறு தேவர்களும் இந்திரனும் அபயம் புக வென்று அருளிய செவ்வேட் பரமரே!

     தாமரையும் குளிர்ந்த வாழையும் உள்ள மலையில் வாழ்கின்ற வள்ளியம்மையுடனும், விண்ணுலக மங்கையாகிய தெய்வயானை யம்மையாருடனும், திருச்செந்தூரில் தேவர்களும் வணங்கும்படி, இன்புற்று எழுந்தருளியுள்ள தனிப்பெருந் தலைவரே!

         மேகம் போன்ற கூந்தலும், பிறைமதி போன்ற அழகிய புருவங்களும், அம்பு, அழகிய மீன், வண்டு, தாமரை இவைகளை அழகினால் இகழ்கின்ற கடல் போன்ற கண்களும், உலகிலுள்ளோர் கண்டு மனம் சுழலுமாறு செய்கின்ற காதிலுள்ள அழகிய குழைகளும், பொருந்திய அந்த வெண்முத்துக்கள் போன்ற பற்களும், நெருங்கிய கலப்பையால் உழுது பயிர் செய்த பாக்கு போன்ற அழகிய கழுத்தும், அழகிய நீர் போன்ற குளிர்ச்சியும், கிளிப் போன்ற மழலையும் உடைய குரலும், மூங்கில் போன்ற தோளும், மலைப்போன்ற தனங்களும், பவளமாலை, தேமல், மணம் பொருந்திய சந்தனம், அழகிய ஆடை இவைகளும், கொடிப் போன்ற இடையும் பொருந்திய தாமரையின் உட்புறத்திலிருந்து வெளிப்பட்ட இரசம் புகுந்துள்ள இடமும், அகன்ற வாழைப் போன்ற தொடையும், கண், கை, பாதம் இவைகளும் கொண்டு செயல் புரிகின்ற வஞ்சனை நிறைந்த பொதுமாதரை அடியேன் நம்பி உழலல் ஆமோ?

விரிவுரை

இத் திருப்புகழில் விலைமகளிருடைய முடி முதல் அடி வரையுள்ள அங்கங்களின் வர்ணனைகளை நான்கு அடிகளில் அடிகளார் கூறி, அவைகளைக் கண்டு மயங்குதல் கூடாது என்று அறிவுறுத்துகின்றனர்.

வஞ்சரை நம்புவேனோ?  ---

நம்புதல்-விரும்புதல். வஞ்சனை புரிகின்ற பொது மகளிரை விரும்புதல் கூடாது. அதுபிறப் பிறப்பை யுண்டு பண்ணும்.

சம்புவின் குமாரன் ---

சம்பு-சுககாரணன். இது சிவபெருமானுடைய நாமங்களில் சிறந்தது. ஆன்மாக்கள் எல்லாம் விரும்புவது துக்க நீக்கமும் சுகப்பேறுந்தானே. அவ்வாறு துன்பத்தை நீக்கி இன்பத்தை அருளவல்லான் சிவபெருமான்.

புலவன் ---

முருகப்பெருமான் புலவர்களுடைய தலைவன், “அருமறை தமிழ் நூல் அடைவே தெரிந்து உரைக்கும் புலவோனே” என்று கூறுகின்றார் அருணகிரிநாதர். “அருங்கலா விநோதன்”, நக்கீரர், ஒளவையார், பொய்யாமொழி முதலிய புலவர்கட்கு அருள் புரிந்து அவர்களுடன் ஆடல் புரிந்த அண்ணல் புலமையில் தலைமைபெற விரும்புவோர் அப் பரமனை வழிபட்டால் அவன் திருவருளால் புலமை நிறையும். வரருசி என்ற ஒருவர் முருகனை வழிபட்டு வடமொழிப் புலமை பெற்றார் என்று அவருடைய வரலாறு கூறுகின்றது.

கந்தன் என்றிடு துந்துமி ---

பேரிகையின் ஒலி, “சிவகுமாரா! புலவரேறே! கந்தவேளே!” என்று எழுகின்றது.

அடங்கலும் வெந்து பொரிந்திட ---

சூரபன்மனுடைய சேனைகள் கணக்கில் அடங்காதவை. "அலகில் அவுணரைக் கொன்ற தோள்” என்கின்றார் மதுரை திருப்புகழிலே. அவை ஆயிரத்தெட்டு அண்டங்களிலும் நிறைந்து வந்தன. முருகவேள் அச் சேனைகள் சிலவற்றைக் கணைகளால் கொன்றார். உதிர வெள்ளம் ஆறு போல் ஓடியது; பிணமலைகள் குவிந்தன. மேலுள்ள அண்டங்களிலிருந்து சேனைகள் வந்துகொண்டே இருந்தன. அவ்வாறு வருகின்ற அசுர சேனைகளையும் பிணமலைகளையும் முருகப்பெருமான் கண்டு புன்னகைப் புரிந்தார். அந்தச் சிரிப்பிலே தோன்றிய ஒரு சிறிய நெருப்புப் பொறிபட்டு அத்தனையும் வெந்து சாம்பராயின.

சினத்தையு முடற்சங் கரித்த மலைமுற்றும்
 சிரித்தெரி கொளுத்தும் கதிர்வேலா”       ---  (சினத்தவர் முடிக்கும்) திருப்புகழ்.

அம்புயம் தண் அரம்பை குறிஞ்சியின் மங்கை ---

அம்புயம் தண் அரம்பை என்ற பதம் பிரித்துக் கொள்க. அம்புயம்-தாமரை, தண் அரம்பை-குளிர்ந்த  வாழை. இவைகள் நிறைந்துள்ள மலையின் கண் வாழ்கின்ற வள்ளிநாயகியின் கணவன்.

குடில் மங்கை ---

குடில்-ஆகாயம். விண்ணுலக மங்கை தெய்வயானை. முருகவேள் மண்மகளையும் விண்மகளையும் ஒன்று போல் கருதி இருவரையும் மணந்து வாழ்கின்றார்.

வள்ளிதேவி - இச்சா சக்தி;
தெய்வயானை - கிரியா சக்தி;
வேல் - ஞான சக்தி.

இம்மூன்றையும் இறைவன் கொண்டிருக்கின்றான். கண்ணாடியில் உள்ள நிழல் அசையும் பொருட்டுத் தான் அசைவதுபோல், அறிவு இச்சை செயல் என்ற மூன்றும் ஆன்மாக்களுக்குப் பொருந்துமாறு இறைவன் அவற்றோடு பொருந்தியுள்ளான் என உணர்க.

கருத்துரை

         அசுரகுல காலரே! திருச்செந்தூர் முருகா! மகளிரது மாயையில் விழாது காத்தருள்வீர்.

No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...