திரு ஆமாத்தூர்
நடு நாட்டுத் திருத்தலம்.
விழுப்புரம் - திருவண்ணாமலை - செஞ்சி
பேருந்துச் சாலையில், 2. கி.மீ. சென்றால்
"திருவாமாத்தூர்" கைகாட்டியில் இடப்புறமாகப் பிரிந்து செல்லும் பாதையில்
6 கி.மீ. சென்றால்
இத்தலத்தை அடையலாம். விழுப்புரம் - சூரப்பட்டு நகரப் பேருந்து திருவாமாத்தூர்
வழியாகச் செல்கிறது. விழுப்புரம் சென்னையில் இருந்து 160 கி.மி. தொலைவில் உள்ளது.
இறைவர்
: அழகிய நாதர், அபிராமேசுவரர்
இறைவியார்
: முத்தாம்பிகை
தல
மரம் : வன்னி மரம்
தீர்த்தம் : பம்பை ஆறு, ஆம்பலப்பொய்கை
தேவாரப்
பாடல்கள்: 1. சம்பந்தர் - 1. துன்னம்பெய் கோவணமும்.
2. குன்ற வார்சிலை.
2. அப்பர் - 1. மாமாத் தாகிய மாலயன்,
2.
வண்ணங்கள்
தாம் பாடி.
3. சுந்தரர் - 1. காண்டனன் காண்டனன்.
ஆதி காலத்தில் பசுக்கள் கொம்பில்லாமல்
படைக்கப்பட்டிருந்தன. தெய்வப் பசுவாகிய காமதேனுவும் மற்ற ஆனிரைகளும் தங்களை அழிக்க
வரும் சிங்கம், புலி முதலிய
மிருகங்களிடம் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள கொம்புகள் வேண்டும் என்று
நந்திதேவரிடம் முறையிட்டன. நந்திதேவரும் அவைகள் வேண்டுவது சரியே என்று கூறி பம்பை
நதிக்கரையிலுள்ள வன்னி வனத்தில் சுயம்பு மூர்த்தியாக இருக்கும் அபிராமேசுவரர் என்ற
பெயருடன் விளங்கும் சிவபெருமானை வணங்கி வழிபடும்படி கூறினார். அவ்வாறே பசுக்களும்
பல நாள் தவம் செய்து கொம்புகள் பெற்றன. ஆக்கள் (பசுக்கள்) பூஜித்த காரணத்தால்
இத்தலம் ஆமாத்தூர் என்று பெயர் பெற்றது. இந்த திரு ஆமாத்தூர் தலத்தை யார்
புகழ்ந்து பேசினாலும் அல்லது மற்றவர்கள் புகழக் கேட்டாலும் அவர்களுக்கு நன்மை
கிடைக்கும் என்று தல புராண வரலாறு கூறுகிறது. இத்தலத்தில் உள்ள சிவாலயம் தலம், மூர்த்தி, தீர்த்தம் ஆகிய மூன்றினாலும் சிறப்புடையது.
இறைவன் கோயிலும், இறைவி கோயிலும் தனித்தனியே சாலையின்
இருபுறமும் எதிரெதிரே கோபுரங்களுடன் அமைந்துள்ளன. இறைவன் கோயில் கோபுரம் 7 நிலைகளுடன் கிழக்கு நோக்கி நல்ல சுற்று
மதிலுடன் விளங்குகின்றது. அம்பாள் கோவில் கோபுரம் 5 நிலைகளுடன் மேற்கு நோக்கி உள்ளது.
சுவாமி கோவில் இராஜகோபுரம் வழியே உள்ளே நுழைந்தால் எதிரே பெரிய சுதை நந்தி நம்மை
வரவேற்கிறது. இறைவன் குடியிருக்கும் ஆலயம் இரண்டு பிரகாரங்கள் கொண்டது.
அச்சுதராயர் என்றவர் இந்த ஆலயத் திருப்பணி செய்தவர்களில் முதன்மையானவர். அவரின்
சிலை வெளிப் பிரகாரத்தில் வடகிழக்கு மூலையில் அமைந்திருக்கிறது. மேலும் வெளிப்
பிராகாரத்தில் உள்ள சித்தி விநாயகர் சந்நிதியும், தனிக் கோயிலாகவுள்ள சண்முகர்
சந்நிதியும், ஈசான்ய லிங்கேஸ்வரர்
சந்நிதியும் தரிசிக்கத்தக்கது. வெளிப் பிரகார வலம் முடித்து சித்தி விநாயகர்
சந்நிதி அருகே உள்ள படிகளேறி உள்பிரகாரத்தை அடையலாம். நேரே தெற்கு நோக்கிய நடராச
சபை உள்ளது. உள்பிரகார சுற்றில் 63 மூவர், காலபைரவர், தேவ கோஷ்டத்தில் சனகாதி முனிவர்களுடன்
தட்சிணாமூர்த்தி, சப்த மாதர்கள், சிவபூஜை விநாயகர் ஆகியோரைக் காணலாம்.
கருவறை அகழி அமைப்புடன் உள்ளது. மூலவர் வாயிலில் இருபுறங்களிலும் துவார பாலகர்
வண்ணச் சுதையில் உள்ளனர். அபிராமேஸ்வரர் என்றும், அழகிய நாதர் என்றும் வழங்கும் இத்தலத்து
இறைவன் ஒரு சுயம்பு மூர்த்தியாவார். பசுக்கள் பூஜை செய்ததின் அடையாளமாக சுயம்பு
லிங்கத்தின் மேல் சந்திரனின் பிறை போல் வளைந்து பசுவின் கால் குளம்பின் சுவடு
தென்படுகிறது. இறைவன் சற்று இடப்புறம் சாய்ந்து காணப்படுகிறார். இரண்டாம்
பிரகாரத்தில் இராமர், முருகன், திருமகள் ஆகியோர் சந்நிதிகள்
இருக்கின்றன. மதங்க முனிவரால் உருவாக்கப் பெற்ற தீர்த்தம் ஆலயத்தின் உள்ளே
அமைந்துள்ளது. இதில் நீராடாமல்,
நீரை
எடுத்து தலையில் தெளித்துக் கொண்டாலே சிவபுண்ணியம் கிட்டும் என்பது ஐதீகம்.
சாலையில் எதிரே உள்ள அம்பாள் கோபுர
வாயில் வழியாக உள்ள நுழைந்தால் கொடிமரம், பலிபீடம், சிம்மம் ஆகியவற்றைக் காணலாம். வெளிப்
பிரகாரத்தில் சந்நிதிகள் ஏதுமில்லை. உள் வாயிலின் இருபுறமும் வண்ணச் சுதையால்
அமைந்த துவாரபாலகியர் உருவங்கள் உள்ளன. அம்பாள் முத்தாம்பிகை மேற்கு நோக்கி
அருட்காட்சி தருகிறாள். இந்த அம்பாள் ஒரு வரப்பிரசாதி. அம்பாள் சந்நிதிக்கு
நுழையும் போதே வலதுபுறம் மூலையில் வட்டப்பாறை அம்மன் சந்நிதி (அம்பாளின்
சாந்நித்யரூபம்) உள்ளது. தற்போது இச் சந்நிதியில் சிவலிங்கமே உள்ளது.
வட்டப் பாறை: அம்பிகை சந்நிதியின்
பிரகாரச் சுற்றில் தென் புறம் ஒரு வட்டப் பாறையும், அருகில் ஒரு சிவலிங்கமும் உள்ளது.
இராமாயணத்தில் வாலியைக் கொல்வதற்கு முன் இராமபிரானும், சுக்ரீவனும் அனுமன் சான்றாக நட்பு
கொண்டபோது இந்த வட்டப் பாறை முன் உடன்பாடு செய்துகொண்டதாக புராண வரலாறு கூறுகிறது.
ஊரில் உள்ள எல்லோரும் வட்டப் பாறையின் மீது கை வைத்து சத்தியம் செய்து தங்கள்
வழக்குகளை தீர்த்துக் கொள்ளும் வழக்கம் நடைமுறையில் இருக்கிறது. இந்த வட்டப் பாறை
ஒரு சிறிய சந்நிதி. இதன் முன் பொய் சொல்வோர் மீளாத துன்பத்திற்கு ஆளாவார்கள் என்று
ஐதீகமுண்டு.
வட்டப்பாறை அம்மன்
சந்நிதி தொடர்பாக ஒரு வரலாறு சொல்லப்படுகிறது.
அண்ணன் ஒருவன் இளையவனான தன் தம்பியை
ஏமாற்றிச் சொத்தினைத் தனக்குச் சேர்த்துக் கொண்டான். வயது வந்து உண்மையறிந்த தம்பி
அண்ணனிடம் சென்று தனக்குரிய சொத்தைத் தருமாறு கேட்டான். அண்ணன் மறுக்க, தம்பி பஞ்சாயத்தைக் கூட்டினான்.
பஞ்சாயத்தார் வட்டப்பாறை அம்பாள் சந்நிதியில் அண்ணனை சத்தியம் செய்து தருமாறு
கூறினர். அண்ணன் இதற்கென ஒரு சூழ்ச்சி செய்தான். தம்பியின் சொத்தால் பெற்ற
மதிப்பைத் திரட்டிப் பொன் வாங்கி அதைத் தன் கைத்தடியில் பூணுக்குள் மறைத்துக்
கொண்டான். அத்தடியுடன் பஞ்சாயத்து நடக்கும் அவைக்கு வந்து, தம்பியிடம் தடியைத் தந்துவிட்டு, அம்பாள் சந்நிதியில் இருகைகளாலும்
"‘தன்னிடம் தம்பியின் சொத்து ஏதுமில்லை, எல்லாம் அவனிடமே உள்ளது" என்று
சத்தியம் செய்து கொடுத்தான். சூழ்ச்சியறியாத அனைவரும் வேறுவழியின்றி அவனைத்
தம்பியுடன் அனுப்பி விட்டனர். தம்பியிடமிருந்து திரும்பப் பெற்றுக் கொண்ட
கைத்தடியுடன் சென்ற அண்ணன், இத்தலத்தில் இருந்து 9 கி.மீ. தொலைவிலுள்ள தும்பூர் நாகம்மன்
கோயிலை அடைந்தபோது அம்பாளின் தெய்வ சக்தி தன்னை ஒன்றும் செய்யவில்லை என்று
இறுமாப்புக் கொண்டு அம்பாளையும் சேர்த்துத் திட்டினானாம். அப்போது கரும்பாம்பு
ஒன்று தோன்றி அவனைக் கடித்துச் சாகடித்தது என்று வரலாறு சொல்லப்படுகிறது. அவ்வாறு
கடித்துச் சாகடித்த இடத்தில் இன்றும் பெரிய நாகச்சிலை ஒன்றுள்ளது. இந்நிகழ்ச்சியை
மெய்ப்பிக்கும் வகையில் இன்றும் முத்தாம்பிகை அம்பாளின் மார்பில் பாம்பின் வால்
சிற்பம் உள்ளது. தரிசிப்போர் சிவாச்சாரியாரிடம் கேட்டு நேரில் காணலாம்.
அம்பாளுக்குச் செய்த அலங்காரம் செய்யப்பட்ட வெள்ளிக் கவசத்திலும் சர்ப்பத்தின்
வால் செதுக்கப்பட்டுள்ளது.
வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக்
கலிவெண்பாவில், "சூர்ப் புடைத்தது
ஆம் மா தூர் விழத் தடிந்தோன் கணேசனோடும் ஆமாத்தூர் வாழ் மெய் அருட் பிழம்பே" என்று
போற்றி உள்ளார்.
திருஞானசம்பந்தர்
திருப்பதிக வரலாறு
திருஅதிகை வீரட்டானத்துப் பெருமானை
வழிபட்டு, திருஆமாத்தூர்
என்னும் இத்திருத்தலத்தை அடைந்து திருஞானசம்பந்தப் பெருமான் பாடிய அருளிய இரண்டு
திருப்பதிகங்களுள் இதுவும் ஒன்று.
பெரிய
புராணப் பாடல் எண் : 964
வக்க
ரைப்பெரு மான்தனை
வணங்கிஅங்கு அமருநாள், அருளாலே
செக்கர்
வேணியார் இரும்பைமா
காளமும்
சென்றுதாழ்ந்து, உடன்மீண்டு
மிக்க
சீர்வளர் அதிகைவீ
ரட்டமும் மேவுவார்
தம்முன்பு,
தொக்க
மெய்த்திருத் தொண்டர்வந்து
எதிர்கொளத்
தொழுதுஎழுந்து அணைவுற்றார்.
பொழிப்புரை : அத் திருவக்கரையில்
ஞானசம்பந்தர் இறைவ னைத் தொழுது வணங்கித் தங்கியிருந்த நாள்களில், திருவருட் குறிப் பினால் சிவந்த வானம்
போன்ற சடையையுடைய இறைவரின் `திரு
விரும்பைமாகாளத்தை\'யும் சென்று வணங்கி, உடனே திரும்பி, மிக்க சிறப்புகள் வளர்கின்ற `திருவதிகைவீரட்டானத்தைச்\' சென்று சேர்பவரான அவர், தமக்கு, முன்கூடிய உண்மைத் தொண்டர்கள் வந்து
எதிர் கொள்ளத் தொழுது அங்கு அணைந்தார்.
குறிப்புரை : இரும்பைமாகாளமும்
என்ற உம்மையால் திருஅரசிலி யையும் கொள்ளத்தக்கதாம் என்பர் சிவக்கவிமணியார்.
இப்பதிகளில் அருளிய பதிகங்கள்:
1. திருவக்கரை: `கறையணி' (தி.3 ப.60) - பஞ்சமம்.
2. திரு இரும்பைமாகாளம்:
`மண்டுகங்கை' (தி.2 ப.117) -செவ்வழி.
3. திருஅரசிலி: `வண்டறை' (தி. 2 ப.95) - பியந்தைக் காந்தாரம்.
பெ.
பு. பாடல் எண் : 965
ஆதி
தேவர்அங் கமர்ந்தவீ
ரட்டானம் சென்று அணை
பவர்முன்னே
பூதம்
பாடநின்று ஆடுவார்
திருநடம் புலப்படும்
படிகாட்ட
வேத
பாரகர் பணிந்துமெய்
உணர்வுடன் உருகிய
விருப்போடும்
கோது
இலாஇசை குலவுகுண்
டைக்குறட் பூதம்என்று
எடுத்துஏத்தி.
பொழிப்புரை : முதன்மையுடைய தேவராய
சிவபெருமான் விரும்பி வீற்றிருந்தருளும் திருவீரட்டானத்தைச் சென்று அடைபவ ரான
சம்பந்தர் முன்பு, பூத கணங்கள் பாட
நின்றாடும் இறைவர், தம் திருக்கூத்தைக்
கண்ணுக்குப் புலனாகும்படி காட்டவே,
மறைகளில்
வல்லுநரான அவர் வணங்கி, மெய்யுணர்வுடன்
உள்ளம் உருகி விருப்பத்துடன் குற்றம் அற்ற இசையுடன் கூடிய `குண்டைக் குறட் பூதம்\' என்று தொடங்கிப் போற்றி,
பெ.
பு. பாடல் எண் : 966
பரவி
ஏத்திய திருப்பதி
கத்துஇசை பாடினார், பணிந்துஅங்கு
விரவும்
அன்பொடு மகிழ்ந்து,இனிது
உறைபவர், விமலரை வணங்கிப்போய்
அரவ
நீர்ச்சடை அங்கணர்
தாம்மகிழ்ந்து உறை
திருவாமாத்தூர்
சிரபுரத்து
வந்து அருளிய
திருமறைச்
சிறுவர்சென்று அணைவுற்றார்.
பொழிப்புரை : போற்றி வழிபட்ட
அப்பதிகத்தின் இசையினை நிறைவுறப் பாடிப் பணிந்து, அத் திருப்பதியில், அன்புடன் மகிழ்ந்து இனிதாகத் தங்கியவரான
சீகாழியில் தோன்றிய அந்தணர் குலத்துப் பிள்ளையார், பாம்பும் கங்கையும் தங்கிய சடையையுடைய
இறைவர் மிக்க மகிழ்ச்சியுடன் எழுந்தருளிய திருஆமாத்தூரினைச் சென்று சேர்ந்தார்.
பெ.
பு. பாடல் எண் : 967
சென்று
அணைந்துசிந் தையின்மகிழ்
விருப்பொடு திகழ்திரு
வாமாத்தூர்ப்
பொன்
தயங்கு பூங் கொன்றையும்
வன்னியும் புனைந்தவர்
அடிபோற்றி,
"குன்ற வார்சிலை"
எனுந்திருப்
பதிகம், மெய் குலவிய இசைபாடி
நன்றும்
இன்புறப் பணிந்துசெல்வார்,
திருக் கோவலூர்
நகர்சேர்ந்தார்.
பொழிப்புரை : சென்றடைந்து, உள்ளத்தில் மகிழ்ச்சி மீதூரக் கொண்ட
விருப்பத்துடனே, விளங்கும்
திருஆமாத்தூரில் பொன் போல் விளங்கும் கொன்றையையும் வன்னியையும் அணிந்து
வீற்றிருக்கும் இறைவரின் திருவடிகளைப் போற்றிக் `குன்றவார் சிலை' எனத் தொடங்கும் திருப்பதிகத்தை, மெய்ம்மை விளங்கும் இசை யுடன் பாடி, இன்பம் மிகப் பொருந்த வணங்கிச்
செல்பவரான ஞான சம்பந்தர், திருக்கோவலூரை
அடைந்தார்.
குறிப்புரை : இத்திருப்பதிக்கு இத்
தொடக்கமுடையதொரு பதிகம் அன்றிப் பிறிதொரு பதிகமும் உளது.
முன்னர்ப்
பாடியது: `குன்றவார் சிலை' (தி.2 ப.50) - சீகாமரம்.
பின்னர்ப்
பாடியது: `துன்னம்பெய்' - (தி.2 ப.44) - சீகாமரம்.
திருஞானசம்பந்தர்
திருப்பதிகங்கள்
2.050 திருவாமாத்தூர் பண் - சீகாமரம்
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
குன்ற
வார்சிலை நாண் அராஅரி
வாளி கூர்எரி
காற்றின் மும்மதில்
வென்றவாறு
எங்ஙனே, விடைஏறும் வேதியனே,
தென்ற
லார்மணி மாட மாளிகை
சூளி கைக்குஎதிர்
நீண்ட பெண்ணைமேல்
அன்றில்
வந்துஅணையும் ஆமாத்தூர் அம்மானே.
பொழிப்புரை :தென்றல் ஆர்கின்ற
அழகிய மாடமாளிகைகளின் சூளிகைக்கு மேலாக நீண்டுயர்ந்த பனைமரத்தில் அன்றில் பறவை
வந்து தங்கி மகிழும் ஆமாத்தூர் இறைவனே! விடைமீது ஏறிவரும் வேதியனே! மேருமலையை
நீண்ட வில்லாகவும் வரிகளைஉடைய பாம்பை நாணாகவும், மிக்க எரியை அம்பாகவும், காற்றை ஈர்க்காகவும் கொண்டு
முப்புரங்களை வென்றது எவ்வாறு?.
பாடல்
எண் : 2
பரவி
வானவர் தான வர்பல
ருங்க லங்கிட வந்த
கார்விடம்
வெருவ
உண்டுஉகந்த அருளெ்என்கொல் விண்ணவனே,
கரவின்
மாமணி பொன்கொ ழித்துஇழி
சந்து காரகில் தந்து
பம்பைநீர்
அருவி
வந்துஅலைக்கும் ஆமாத்தூர் அம்மானே.
பொழிப்புரை :மறைவில்லாமல் சிறந்த
மணிகளையும் பொன்னையும் கொழித்துக் கொண்டு, தன்பால் வீழ்ந்த சந்தனம் கரிய அகில்
ஆகியவற்றை அடித்துக்கொண்டு வரும் பம்பையாற்று நீர் ஒழுக்கு வந்து அலைக்கும்
ஆமாத்தூர் அம்மானே! விண்ணவனே! தேவர்களும் அசுரர்களும் கலங்கும்படித் தோன்றிய
கரியவிடத்தைக் கண்டு வெருவிப்பரவ அவ்விடத்தை நீர் உண்டு மகிழ்ந்த கருணைக்குக்
காரணம் யாதோ?
பாடல்
எண் : 3
நீண்ட
வார்சடை தாழ நேர்இழை
பாட, நீறுமெய் பூசி
மால்அயன்
மாண்ட
வார்சுடலை நடமாடு மாண்பதுஎன்,
பூண்ட
கேழல் மருப்பு அராவிரி
கொன்றை வாள்வரி ஆமை
பூண்என
ஆண்ட
நாயகனே ஆமாத்தூர் அம்மானே.
பொழிப்புரை :பன்றிக் கொம்பு, பாம்பு, விரிந்த கொன்றை மலர் மாலை, ஒளியும் வரியும் பொருந்திய ஆமை ஓடு
ஆகியவற்றை அணிகலனாகப் பூண்டு ஆட்கொள்ளும் தலைவனே! ஆமாத்தூர் இறைவனே! நீண்ட சடை
அவிழ்ந்து தொங்க, உமையம்மை பாட, திருநீற்றை மெய்யில்பூசித் திருமால்
பிரமன் முதலானோர் மாண்ட கடைஊழியில் நீண்ட சுடலையில் நடமாடும் மாட்சிக்குக் காரணம்
யாதோ?
பாடல்
எண் : 4
சேலின்
நேர்அன கண்ணி வெண்ணகை
மான்வி ழித்திரு
மாதைப் பாகம்வைத்து
ஏல
மாதவ நீமுயல்கின்ற வேடம்இதுஎன்,
பாலின்
நேர் மொழி மங்கை மார்நடம்
ஆடி இன்னிசை பாட
நீள்பதி
ஆலை
சூழ்கழனி ஆமாத்தூர் அம்மானே.
பொழிப்புரை :பாலையொத்த இனிய
மொழிபேசும் மங்கையர் நடனம் ஆடி இன்னிசைபாட, கரும்பு ஆலைகள் சூழ்ந்த வயல் வளம் உடைய
நீண்ட பதியான ஆமாத்தூர் அம்மானே! சேல்போன்ற கண்ணையும் வெண்ணகையையும் மான்போன்ற
விழியையும் உடைய அழகிய உமையவளைப் பாகமாக வைத்துக் கொண்டு இயன்ற பெரியதவத்தை
மேற்கொண்டுள்ள உன் வேடம் பொருந்துமாறு எங்ஙனம்?
பாடல்
எண் : 5
தொண்டர்
வந்து வணங்கி மாமலர்
தூவி நின்கழல் ஏத்து
வார்அவர்
உண்டியால்
வருந்த இரங்காதது என்னைகொலாம்,
வண்டல்
ஆர்கழ னிக்க லந்தும
லர்ந்த தாமரை மாதர்
வாள்முகம்
அண்டவாணர்
தொழும் ஆமாத்தூர் அம்மானே.
பொழிப்புரை :வண்டல்மண் பொருந்திய
வயல்களில் நெற்பயிரோடு கலந்து மலர்ந்துள்ள தாமரைகள் மாதர்களின் ஒளிபொருந்திய
முகத்தைப்போலப் பூக்கும் ஆமாத்தூரில் அண்டங்களில் வாழும் தேவர் முதலியோரால்
வணங்கப்பெறும் இறைவனே! மாமலர்தூவி நின் திருவடிகளை வணங்கிப் போற்றும் தொண்டர்கள்
உணவின்மையால் வருந்தவும், அதற்கு
இரங்காததற்குக் காரணம் யாதோ?
பாடல்
எண் : 6
ஓதி
ஆரணம் ஆயநுண் பொருள்
அன்று நால்வர்முன்
கேட்க நன்னெறி
நீதி
ஆலநீழல் உரைக்கின்ற நீர்மையதுஎன்,
சோதி
யேசுட ரேசு ரும்புஅமர்
கொன்றை யாய்திரு
நின்றி யூர்உறை
ஆதியே
ஆரனே ஆமாத்தூர் அம்மானே.
பொழிப்புரை :சோதியே! சுடரே!
வண்டுகள் மொய்க்கும் கொன்றை மாலையை அணிந்தவனே! திருநின்றியூரில் விளங்கும்
முதல்வனே! அரனே! ஆமாத்தூர் இறைவனே! வேதங்களை ஓதி அவற்றின் நுண் பொருள் அறியாது
மயங்கிய சனகாதியர் அன்று ஐயம் கேட்க அவர்கட்கு ஞானமார்க்கத்தை முறையோடு ஆல்
நிழலிலிருந்து உரைத்தருளிய உன் தகைமைக்குக் காரணம்யாதோ?
பாடல்
எண் : 7
மங்கை
வாள்நுதன் மான்ம னத்திடை
வாடி ஊடம ணங்க
மழ்சடைக்
கங்கையாள்
இருந்த கருத்தாவது என்னைகொலாம்,
பங்க
யம் மது வுண்டு வண்டுஇசை
பாட மாமயில் ஆட
விண்முழவு
அம்கையால்
அதிர்க்கும் ஆமாத்தூர் அம்மானே.
பொழிப்புரை :தாமரை மலரிலுள்ள தேனை
உண்டு வண்டுகள் இசைபாடப் பெரிய மயில்கள் நடனம் ஆட, விண் மேகங்களாகிய முழவை அழகிய கையால்
ஒலிக்கும் இயற்கை அழகுடைய ஆமாத்தூர் அம்மானே! மங்கையாகிய ஒளிநுதலை உடைய மான்போன்ற
பார்வதிதேவி வாடி ஊட மணம் கமழும் சடையில் கங்கையாளை வைத்துள்ளதன் காரணம் யாதோ?
பாடல்
எண் : 8
நின்றுஅ
டர்த்திடும் ஐம்பு லன்நிலை
யாத வண்ண நினைந்து
உளத்திடை
வென்றுடர்த்து
ஒருபால் மடமாதை விரும்புதல்என்,
குன்றுஎ
டுத்தநி சாச ரன்திரள்
தோள்இ ருபது தான்நெ
ரிதர
அன்றுஅடர்த்
துஉகந்தார் ஆமாத்தூர் அம்மானே.
பொழிப்புரை :அன்று கயிலையைப்
பெயர்த்தெடுத்த இராவணனின் திரண்ட இருபதுதோள்களும் நெரியுமாறு அடர்த்துப் பின்
அவன்பால் கருணை காட்டியவனே! ஆமாத்தூர் இறைவனே! மாறிநின்று மயக்கும் ஐம்புலன்களை
மனத்தால் வென்று அவித்தும் ஒருபாகத்தே இளம்பெண்ணை விரும்பி ஏற்றுள்ளதுயாது
காரணத்தாலோ?
பாடல்
எண் : 9
செய்ய
தாமரை மேல் இருந்தவ
னோடு மால்அடி தேட
நீண்முடி
வெய்ய
ஆரழலாய் நிமிர்கின்ற வெற்றிமைஎன்,
தைய
லாளொடு பிச்சைக்கு இச்சை
தயங்கு தோல்அரை ஆர்த்த
வேடங்கொண்டு
ஐயம்
ஏற்றுஉகந்தார் ஆமாத்தூர் அம்மானே.
பொழிப்புரை :உமையம்மையோடு
பிச்சையேற்பதற்கு இச்சையுடையராய் விளங்கும், தோலாடையை இடையில் கட்டிய வேடம்
மேற்கொண்டு மாதரார் இல்லங்களில் ஐயம் ஏற்று உகந்தவனே! ஆமாத்தூர் இறைவனே!
செந்தாமரைமலர்மேல் வீற்றிருக்கும் நான்முகன், திருமால் ஆகியோர் முடியையும் அடியையும்
தேட அவர்கட்கு ஒளிக்கும் வகையில் கொடிய அழலுருவாய் நிமிர்ந்த வெற்றிக்குக் காரணம்
யாதோ?
பாடல்
எண் : 10
புத்தர்
புன்சம ண்ஆதர் பொய்ம்மொழி
நூல்பி டித்துஅலர்
தூற்ற நின்னடி
பத்தர்
பேணநின்ற பரமாய பான்மையதுஎன்,
முத்தை
வென்ற முறுவ லாள்உமை
பங்கன் என்றஇமை யோர்ப
ரவிடும்
அத்தனே
அரியாய் ஆமாத்தூர் அம்மானே.
பொழிப்புரை :முத்தைவென்ற முறுவலை
உடைய உமையம்மை பங்கனே! என்று தேவர்கள் பரவிப் போற்றும் தலைவனே! காண்டற்கு அரியவனே!
ஆமாத்தூர் இறைவனே! புத்தர்களும் புல்லிய சமணர்களாகிய அறிவிலிகளும் பொய்ம் மொழியும்
நூல்களைப் பிடித்துக் கொண்டு பழிக்கவும், அவற்றைப்
பொருட்படுத்தாது பத்தர்களால் விரும்பப்படும் மேலாந்தன்மை உடையன் ஆதற்குக் காரணம்
யாதோ?
பாடல்
எண் : 11
வாடல்
வெண்தலை மாலை யார்த்தும
யங்குஇ ருள்எரி ஏந்தி
மாநடம்
ஆடல்
மேயது என்என்று ஆமாத்தூர் அம்மானைக்
கோடல்
நாகம் அரும்பு பைம்பொழில்
கொச்சை யார்இறை ஞான
சம்பந்தன்
பாடல்
பத்தும்வல்லார் பரலோகம் சேர்வாரே.
பொழிப்புரை :தசைவாடிய வெண்டலை
மாலையைக் கட்டிக் கொண்டு நள்ளிருளில் எரிஏந்தி ஆடுவதன் காரணம் யாதோ என்று
ஆமாத்தூர் இறைவனைக் காந்தள் நாகம் போல அலரும் பசிய பொழில் சூழ்ந்த கொச்சை
வயத்தலைவனாகிய ஞானசம்பந்தன் போற்றிப் பாடிய இப்பதிகப் பாடல்கள் பத்தையும்
ஓதவல்லவர் மேலான வீட்டுலகம் அடைவர்.
திருச்சிற்றம்பலம்
2.044 திருவாமாத்தூர் பண் - சீகாமரம்
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
துன்னம்பெய்
கோவணமும் தோலும் உடைஆடை
பின்னஞ்
சடைமேல்ஓர் பிள்ளை மதிசூடி
அன்னம்சேர்
தண்கானல் ஆமாத்தூர் அம்மானதன்
பொன்னங்
கழல்பரவாப் பொக்கமும் பொக்கமே.
பொழிப்புரை :தைத்தல் அமைந்த
கோவணத்தை உடையாகவும், யானைத் தோலைமேல்
ஆடையாகவும் கொண்டு பின்னிய சடைமீது இளம்பிறையைச் சூடி, அன்னங்கள் வாழும் குளிர்ந்த சோலைகளைக்
கொண்டுள்ள திருஆமாத்தூரில் விளங்கும் இறைவனின் பொன் போன்ற அழகிய திருவடிகளைப்
பரவாதவர் பொலிவு பொலிவாகுமா?
பாடல்
எண் : 2
கைம்மாவின்
தோல்போர்த்த காபாலி வான்உலகில்
மும்மா
மதில்எய்தான் முக்கணான் பேர்பாடி
அம்மா
மலர்ச்சோலை ஆமாத்தூர் அம்மான்எம்
பெம்மான்என்று
ஏத்தாதார் பேயரில் பேயரே.
பொழிப்புரை :யானைத் தோலைப்
போர்த்துள்ள காபாலியும், வானுலகில் திரிந்து
இடர் விளைத்த முப்புரங்களை எய்தழித்தவனும், முக்கண்ணனும் ஆகிய சிவபிரானின்
புகழைப்பாடி அழகிய பெரிய மலர்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த ஆமாத்தூர் அம்மானே எம்
தலைவன் என்று ஏத்தாதார் பேயர்களினும் பேயராவர்.
பாடல்
எண் : 3
பாம்புஅரைச்
சாத்திர் பண்டரங்கன், விண்டதுஓர்
தேம்பல்
இளமதியம் சூடிய சென்னியான்,
ஆம்பல்அம்பூம்
பொய்கை ஆமாத்தூர் அம்மான்தன்
சாம்பல்
அகலத்தார் சார்பு அல்லால் சார்புஇலமே.
பொழிப்புரை :பாம்பை இடையில்
கட்டியவன். ஒப்பற்ற பாண்டரங்கம் என்னும் திருக்கூத்தை ஆடியவன். வாய்பிளந்து
மெலிந்ததோர் இளமதியைச் சூடிய சென்னியன். ஆம்பல் பூக்கள் மலர்ந்த பொய்கைகளை உடைய
ஆமாத்தூரில் எழுந்தருளியவன். சாம்பல் பூசிய மார்பினனாய அப்பெருமானின் அடியவர்களின்
சார்பு அல்லால் பிறிதொரு சார்பு நமக்கு இல்லை.
பாடல்
எண் : 4
கோள்
நாகப் பேர்அல்குல் கோல்வளைக்கை மாதராள்
பூண்ஆகம்
பாகமாப் புல்கி, அவளோடும்
ஆண்ஆகங்
காதல்செய் ஆமாத்தூர் அம்மானைக்
காணாத
கண்எல்லாம் காணாத கண்களே.
பொழிப்புரை :வலிய நாகத்தின் படம் போன்ற
பெரிய அல்குலையும், திரண்ட வளையல்கள்
அணிந்த கைகளையும் உடைய பார்வதிதேவியின் அணிகலன்கள் அணிந்த திருமேனியைத் தனது
இடப்பாகமாகக் கொண்டு அவ்வம்மையோடு ஆண் உடலோடு விளங்கும் தான் காதல் செய்து மகிழும்
ஆமாத்தூர் அம்மானைக் காணாத கண்கள் எல்லாம் குருட்டுக் கண்களேயாகும்.
பாடல்
எண் : 5
பாடல்
நெறிநின்றான் பைங்கொன்றைத் தண்தாரே
சூடல்
நெறிநின்றான் சூலம்சேர் கையினான்
ஆடல்
நெறிநின்றான் ஆமாத்தூர் அம்மான்தன்
வேட
நெறிநில்லா வேடமும் வேடமே.
பொழிப்புரை :பாடும் நெறி
நிற்பவனும், பசிய தண்மையான கொன்றை
மாலையைச் சூடும் இயல்பினனும், சூலம் பொருந்திய
கையினனும் ஆடும் நெறி நிற்போனும் ஆகிய ஆமாத்தூர் அம்மான் கொண்டருளிய
மெய்வேடங்களாகிய மார்க்கங்களைப் பின்பற்றாதார் மேற்கொள்ளும் வேடங்கள் பொய்யாகும்.
பாடல்
எண் : 6
சாமவரை
வில்லாகச் சந்தித்த வெங்கணையால்
காவல்
மதில்எய்தான், கண்ணுடை நெற்றியான்,
யாவரும்
சென்றுஏத்தும் ஆமாத்துர் அம்மான்அத்
தேவர்
தலைவணங்கும் தேவர்க்கும் தேவனே.
பொழிப்புரை :பொன்மயமான மேருமலையை
வில்லாகக் கொண்டு அதன்கண் பொருந்திய கொடியகணையால் காவலை உடைய மும்மதில்களை எய்து
அழித்தவனும், நெற்றிக்கண்ணனும்
எல்லோரும் சென்று வணங்கிப் போற்றும் ஆமாத்தூர் அம்மானும் ஆகிய சிவபிரான் தேவர்கள்
தலைவணங்கும் இந்திரனுக்கும் தேவன் ஆவன்.
பாடல்
எண் : 7
மாறாத
வெம்கூற்றை மாற்றி, மலைமகளை
வேறாக
நில்லாத வேடமே காட்டினான்,
ஆறாத
தீயாடி, ஆமாத்தூர் அம்மானைக்
கூறாத
நாஎல்லாங் கூறாத நாக்களே.
பொழிப்புரை :யாவராலும் ஒழிக்கப்படாத
கூற்றுவனை ஒழித்து, மலைமகளைத் தனித்து
வேறாக நில்லாது தன் திருமேனியிலேயே ஒரு பாதியை அளித்து மாதொருபாகன் என்ற
வடிவத்தைக் காட்டியவனும், ஆறாத தீயில் நின்று
ஆடுபவனும் ஆகிய ஆமாத்தூர் இறைவன் புகழைக் கூறாத நாக்குடையவர் நாவிருந்தும் ஊமையர் எனக்கருதப்படுவர்.
பாடல்
எண் : 8
தாளால்
அரக்கன்தோள் சாய்த்த தலைமகன்தன்
நாள்ஆ
திரைஎன்றே நம்பன்தன் நாமத்தால்
ஆள்ஆனார்
சென்றுஏத்தும் ஆமாத்தூர் அம்மானைக்
கேளாச்
செவிஎல்லாங் கேளாச் செவிகளே.
பொழிப்புரை :தோல்வி உறாத
இராவணனின் தோள் வலிமையை அழித்த தலைவனாகிய சிவபெருமானுக்கு உகந்தநாள்
திருவாதிரையாகும் எனக்கருதித் தங்கள் விருப்புக்கு உரியவனாகிய, அடியவர் சென்று வழிபடும் ஆமாத்தூர்
அம்மான் புகழைக் கேளாச்செவிகள் எல்லாம் செவிட்டுச் செவிகள் ஆகும்.
பாடல்
எண் : 9
புள்ளும்
கமலமும் கைக்கொண்டார் தாம்இருவர்
உள்ளும்
அவன்பெருமை ஒப்புஅளக்குந் தன்மையதே
அள்ளல்
விளைகழனி ஆமாத்தூர் அம்மான்எம்
வள்ளல்
கழல்பரவா வாழ்க்கையும் வாழ்க்கையே.
பொழிப்புரை :கருடப்பறவை தாமரை
ஆகியவற்றை இடமாகக் கொண்ட திருமால் பிரமன் ஆகிய இருவரால் தியானிக்கப்படும்
சிவபிரானது பெருமை அளவிடற்கு உரியதோ? சேறாக
இருந்து நெற்பயிர் விளைக்கும் கழனிகள் சூழ்ந்த ஆமாத்தூர் அம்மானாகிய எம் வள்ளலின்
திருவடிகளை வணங்காத வாழ்க்கையும் வாழ்க்கையாமோ?
பாடல்
எண் : 10
பிச்சை
பிறர்பெய்யப் பின்சாரக் கோசாரக்
கொச்சை
புலால்நாற ஈர்உரிவை போர்த்துஉகந்தான்
அச்ச்தன்
மாதேவிக்கு ஈந்தான்தன் ஆமாத்தூர்
நிச்சல்
நினையாதார் நெஞ்சமும் நெஞ்சமே.
பொழிப்புரை :மகளிர்
பிச்சையிட்டுப் பின்னே வர, தன் தலைமைத்தன்மை
கெடாதபடி, உமையம்மை அஞ்ச இழிவான
புலால் மணம் வீசும் யானைத்தோலைப் போர்த்து அழியாது மகிழ்ந்தவனாகிய சிவபிரானது
ஆமாத்தூரை நாள்தோறும் நினையாதார் நெஞ்சம் நெஞ்சாகுமா?.
பாடல்
எண் : 11
ஆடல்
அரவுஅசைத்த ஆமாத்தூர் அம்மானைக்
கோடல்
இரும்புறவில் கொச்சை வயத்தலைவன்
நாடல்
அரியசீர் ஞானசம் பந்தன்தன்
பாடல்
இவைவல்லார்க்கு இல்லையாம் பாவமே.
பொழிப்புரை :படம் விரித்து ஆடும்
பாம்பை இடையில் கட்டிய ஆமாத்தூர் அம்மானைக் காந்தள் மலரும் கரிய காடுகளைக் கொண்ட
கொச்சைவயம் என்னும் சீகாழிப்பதிக்குத் தலைவனாகிய நாடற்கு அரிய புகழை உடைய
ஞானசம்பந்தன் பாடியருளிய இப்பாடல்களை வல்லவர்க்குப் பாவம் இல்லை.
திருச்சிற்றம்பலம்
திருநாவுக்கரசர்
திருப்பதிக வரலாறு
திருஅதிகை வீரட்டானத்து அமுதை
திருநாவுக்கரசு நாயனார், பரிவுறு செந்தமிழ்ப் பாட்டுப் பலபாடிப்
பணிசெயும் நாளில், புல் அறிவின் சமணர்க்காகப் பொல்லாங்கு
புரிந்து ஒழுகிய பல்லவன், தன்னுடைய பழவினைப்
பாசம் பறிய, அல்லல் ஒழிந்து அங்கு
எய்தி, ஆண்ட அரசினைப்
பணிந்து, வல் அமணர் தமை நீத்து, மழவிடையோன் தாள் அடைந்ததோடு அல்லாமல், வீடு அறியாச் சமணர் மொழி பொய் என்று
மெய் உணர்ந்த அவன், பாடலிபுத்திரத்தில் இருந்த அமண்
பள்ளியொடு பாழிகளையும் இடித்துக் கொணர்ந்து, திருவதிகை நகரின்கண் குணபர ஈச்சரம்
என்னும் திருக்கோயிலை எடுத்தான். இந்
நாளில் திருப்பணிகள் செய்கின்ற இந்தமிழ்க்கு மன்ஆன வாகீசத் திருமுனியும், மதிச்சடைமேல் பல்நாகம் அணிந்தவர்தம் பதி
பலவும் சென்று இறைஞ்சி, சொல் நாமத் தமிழ்
புனைந்து தொண்டு செய்யத் தொடர்ந்து எழுவாராய், திருவெண்ணெய் நல்லூர் வணங்கி, திருஆமாத்தூர் இறைவருக்குச்
சாத்தியருளிய திருக்குறுந்தொகைத் திருப்பதிகம் இது.
பெரிய
புராணப் பாடல் எண் : 148
திருஅதிகைப்
பதிமருங்கு, திருவெண்ணெய்
நல்லூரும்,
அருளுதிரு
ஆமாத்தூர், திருக்கோவ லூர்முதலா
மருவுதிருப்
பதிபிறவும் வணங்கிவளத் தமிழ்பாடிப்
பெருகுவிருப்
புடன்விடையார் மகிழ்பெண்ணாகடம் அணைந்தார்.
பொழிப்புரை : திருவதிகையின்
அருகிலுள்ள திருவெண்ணெய் நல்லூரும்,
அருள்
தருகின்ற திருவாமாத்தூரும், திருக்கோவலூரும்
முதலாகப் பொருந்திய பதிகள் பலவற்றையும் வணங்கி, செழுமையுடைய தமிழ்ப்பதிகங்களைப் பாடி, ஆனேற்றை ஊர்தியாக உடைய சிவபெருமான்
விரும்பி வீற்றிருக்கும் திருப்பெண்ணாகடத்தைப் பெருவிருப்புடன் அடைந்தார்.
குறிப்புரை :திருவெண்ணெய்
நல்லூரில் அருளிய பதிகம் கிடைத்திலது.
திருஆமாத்தூரில்
அருளிய பதிகங்கள் இரண்டாம், அவை:
1. திருக்குறுந்தொகை: `மாமாத்தாகிய ஈசனை` (தி.5 ப.44) எனத் தொடங்குவது.
2. திருத்தாண்டகம்: `வண்ணங்கள் தாம்பாடி` (தி.6 ப.9) எனத் தொடங்குவது.
2. திருக்கோவலூரில்
அருளிய பதிகம், `செத்தையேன்` (தி.4 ப.69) எனத் தொடங்கும் திருநேரிசைப்
பதிகமாகும். `முதலாமருவு
திருப்பதிகள்` எனக் குறிப்பன, திருவிடையாறு, திருநெல்வெண்ணெய் முதலாயினவாம்.
பதிகங்கள் எவையும் கிடைத்தில.
3. திருமுண்டீச்சரம் என்ற
பதியை இவ்விடத்துக் குறிப்பிட்டு,
அப்பதியில்
அருளியது, `ஆர்த்தான்` (தி.6 ப.85) எனத் தொடங்கும் பதிகமாகும் என
வெள்ளைவாரணனார் கூறுவர்.
திருநாவுக்கரசர்
திருப்பதிகங்கள்
5. 044 திருஆமாத்தூர்
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
மாமாத்
துஆகிய மால்அயன் மால்கொடு
தாமாத்
தேடியும் காண்கிலர் தாள்முடி
ஆமாத்
தூர்அர னேஅரு ளாய்என்றுஎன்று
எமாப்
புஎய்திக்கண் டார்இறை யானையே.
பொழிப்புரை : தமக்குள்ளே பெரும்
பூசல் கொண்டவராகிய திருமாலும் பிரமனும் ஆணவ மயக்கம் கொண்டு தாமாகத் தேடியும் , பெருமானின் திருவடியடையும்
திருமுடியையும் காண்கிலர் ; ` ஆமாத்தூர் அரனே !
அருள்வாயாக ` என்று பலமுறை
இன்பமுறக் கூவியே இறையானைக் கண்டார் .
பாடல்
எண் : 2
சந்தி
யானைச் சமாதிசெய் வார்தங்கள்
புந்தி
யானைப்புத் தேளிர் தொழப்படும்
அந்தி
யானை ஆமாத்தூர் அழகனைச்
சிந்தி
யாதவர் தீவினை யாளரே.
பொழிப்புரை : காலை மாலை ஆகிய
சந்திகளில் வணங்கப்படுவானும் , யோகநெறி
தலைப்படுவாருடைய புந்தியில் உறைபவனும் , தேவர்களால்
தொழப்படும் அந்திவானத்தைப்போன்ற செம் மேனியானும் ஆகிய ஆமாத்தூர் அழகனைச்
சிந்திக்காதவர்கள் தீவினையாளரே ஆவர் .
பாடல்
எண் : 3
காமாத்
தம்எனும் கார்வலைப் பட்டுநான்
போமாத்
தைஅறி யாது புலம்புவேன்
ஆமாத்
தூர்அர னேஎன்று அழைத்தலும்
தேமாத்
தீங்கனி போலத்தித் திக்குமே.
பொழிப்புரை : காமமும் பொருளுமாகிய
கார்வலையிலே பட்டுப்போகும் நெறியை அறியாமற் புலம்புகின்ற அடியேன் ` ஆமாத்தூர் அரனே !` என்று அழைத்தலும் , தேமாவின் இனிய கனி போலப் பெருமான்
தித்தித்தனன் .
பாடல்
எண் : 4
பஞ்ச
பூத வலையில் படுவதற்கு
அஞ்சி
நானும் ஆமாத்தூர் அழகனை
நெஞ்சி
னால்நினைந் தேன்நினைவு எய்தலும்
வஞ்ச
ஆறுகள் வற்றின காண்மினே.
பொழிப்புரை : ஐம்பெரும்
பூதங்களாலாகிய வலையிற்படுவதற்கு அஞ்சி அடியேனும் ஆமாத்தூர் அழகனை நெஞ்சின் கண்
நினைந்தேன் ; அந்நினைப்பு என்னை
எய்துதலும் வஞ்சனையாகிய ஆறுகள் வற்றிவிட்டன ; காண்பீராக .
பாடல்
எண் : 5
குராமன்
னும்குழ லாள்ஒரு கூறனார்
அராமன்
னும்சடை யான்திரு ஆமாத்தூர்
இராம
னும்வழி பாடுசெய் ஈசனை
நிராம
யன்தனை நாளும் நினைமினே.
பொழிப்புரை : குரவமலர்கள்
நிலைபெற்ற கூந்தலை உடைய உமா தேவியை ஒரு கூற்றில் உடையவனும் , பாம்பு நிலைபெற்ற சடையனும் , திருவாமாத்தூரில் இராமனால் வழிபாடு
செய்யப் பெற்ற ஈசனும் , நிராமயனும் ஆகிய
பெருமானை நாள்தோறும் நினைப்பீர்களாக .
பாடல்
எண் : 6
பித்த
னைப்பெருந் தேவர் தொழப்படும்
அத்த
னைஅணி ஆமாத்தூர் மேவிய
முத்தி
னைஅடி யேனுள் முயறலும்
பத்தி
வெள்ளம் பரந்தது காண்மினே.
பொழிப்புரை : பித்தேறியவனும் , பெரிய தேவர்களால் தொழப்படும் தலைவனும் , அழகு பொருந்திய ஆமாத்தூரை விரும்பிப்
பொருந்திய முத்துப் போல்வானும் ஆகிய பெருமானை அடியேன் உள்ளத்தே முயன்று உள்குதலும்
, அன்பு என்னும்
வெள்ளம் பரவி எழுவதாயிற்று ; காண்பீர்களாக .
பாடல்
எண் : 7
நீற்றி
னார்திரு மேனியன் நேரிழை
கூற்றி
னான்குழல் கோலச் சடையில்ஓர்
ஆற்றி
னான்அணி ஆமாத்தூர் மேவிய
ஏற்றி
னான்எமை ஆள்உடை ஈசனே.
பொழிப்புரை : எம்மை ஆளுடைய இறைவன் , திருநீற்றினால் நிறைந்த திருமேனி
உடையவனும் , நேரிழையை ஒரு
கூற்றில் உடையவனும் , அழகு நிறைந்த
குழலாகிய சடையில் ஓர் ஆறாம் கங்கையை உடையவனும் ஆகிய அழகு நிறைந்த ஆமாத்தூரில்
விரும்பியெழுந்தருளிய இடப வாகனத்தை உடையவன் ஆவன் .
பாடல்
எண் : 8
பண்ணில்
பாடல்கள் பத்திசெய் வித்தகர்க்கு
அண்ணித்து
ஆகும் அமுதினை ஆமாத்தூர்
சண்ணிப்
பானைத் தமர்க்குஅணித்து ஆயதுஓர்
கண்ணில்
பாவைஅன் னான்அவன் காண்மினே.
பொழிப்புரை : பண்ணினை உடைய
பாடல்களைப் பாடித் தன்னை அன்புசெய்யும் திறம் உடையவர்களுக்கு இனிக்கும் அமுது
போல்வானும் , ஆமாத்தூரில்
பொருந்தியவனும் , தன்னைச் சார்ந்த
அடியார்களுக்கு மிகநெருங்கிக் கண்ணினுள்ள கருமணிப் பாவை போன்றவனுமானவனைக்
காண்பீர்களாக !.
பாடல்
எண் : 9
குண்டர்
பீலிகள் கொள்ளும் குணம்இலா
மிண்ட
ரோடுஎனை வேறு படுத்துஉய்யக்
கொண்ட
நாதன் குளிர்புனல் வீரட்டத்து
அண்டனார்இடம்
ஆமாத்தூர் காண்மினே.
பொழிப்புரை : குண்டர்களும் , மயிற்பீலிகளைக் கொள்ளும் குணமில்லாத
மிண்டர்களுமாகிய சமணர்களோடு என்னை வேறுபடுத்தி உய்யுமாறு கொண்ட நாதனாகிய
குளிர்புனல்சூழ்ந்த வீரட்டத்துத் தேவதேவர் உறையும் இடம் ஆமாத்தூரேயாகும் .
காண்பீர்களாக !
பாடல்
எண் : 10
வானம்
சாடு மதிஅர வத்தொடு
தான்அஞ்
சாதுஉடன் வைத்த சடைஇடைத்
தேன்அஞ்சு
ஆடிய தெங்குஇள நீரொடும்
ஆன்அஞ்சு
ஆடிய ஆமாத்தூர் ஐயனே.
பொழிப்புரை : ஆகாயத்தே
இருளைச்சிதைக்கும் மதியை அரவொடும் அஞ்சாதபடி நட்புக் கொள்ள வைத்தவர் . தேன் முதலிய
பஞ்சாமிர்தத்தொடும் இளநீர் பஞ்சகவ்வியம் முதலியவற்றை அபிடேகம் கொண்டவர்
ஆமாத்தூர்ப்பெருமான் .
பாடல்
எண் : 11
விடலை
யாய்விலங் கல்எடுத் தான்முடி
அடர
ஓர்விரல் ஊன்றிய ஆமாத்தூர்
இடம்
அதாக்கொண்ட ஈசனுக்கு என்உளம்
இடம்
அதாகக்கொண்டு இன்புற்று இருப்பனே.
பொழிப்புரை : அடங்காத விடலையாக
வந்த இராவணன் திருக்கயிலாயத்தை எடுக்கலுற்றபோது அவன் முடிகள் அடரும்படியாக ஒரு
விரல் ஊன்றியவனும் , ஆமாத்தூரை இடமாகக்
கொண்ட ஈசனுமாகிய பெருமானுக்கு என்னுள்ளத்தை இடமாக வைத்து இன்புற்று இருப்பன் அடியேன்
.
திருச்சிற்றம்பலம்
திருஅதிகை வீரட்டானத்து அமுதை
திருநாவுக்கரசு நாயனார், பரிவுறு செந்தமிழ்ப் பாட்டுப் பலபாடிப்
பணிசெயும் நாளில், புல் அறிவின் சமணர்க்காகப் பொல்லாங்கு
புரிந்து ஒழுகிய பல்லவன், தன்னுடைய பழவினைப்
பாசம் பறிய, அல்லல் ஒழிந்து அங்கு
எய்தி, ஆண்ட அரசினைப்
பணிந்து, வல் அமணர் தமை நீத்து, மழவிடையோன் தாள் அடைந்ததோடு அல்லாமல், வீடு அறியாச் சமணர் மொழி பொய் என்று
மெய் உணர்ந்த அவன், பாடலிபுத்திரத்தில் இருந்த அமண்
பள்ளியொடு பாழிகளையும் இடித்துக் கொணர்ந்து, திருவதிகை நகரின்கண் குணபர ஈச்சரம் என்னும்
திருக்கோயிலை எடுத்தான். இந் நாளில்
திருப்பணிகள் செய்கின்ற இந்தமிழ்க்கு மன்ஆன வாகீசத் திருமுனியும், மதிச்சடைமேல் பல்நாகம் அணிந்தவர்தம் பதி
பலவும் சென்று இறைஞ்சி, சொல் நாமத் தமிழ்
புனைந்து தொண்டு செய்யத் தொடர்ந்து எழுவாராய், திருவெண்ணெய் நல்லூர் வணங்கி, திருஆமாத்தூர் இறைவருக்குச்
சாத்தியருளிய திருத்தாண்டகத் திருப்பதிகம் இது.
ஆமாத்தூர் இறைவர் பிச்சைக்கு வர, பிச்சை இடச் சென்ற ஒருத்தி, அவரை நோக்கித் தெளிந்து, அவர் நீங்கியபோது, முறையிட்டுப் பாடியது.
பொருள் அல்லவற்றைப் பொருள் என்று
உணர்ந்து, மருள் காரணமாகப்
பிறப்பு எய்தி, தவம் காரணமாக, யான் எனது என்னும் செருக்கு நீங்கப்
பெற்றபோது, இறைவன் வெளிப்பட்டு
அருள, அவன் அருளே கண்ணாகத்
தம்மையும் நோக்கிக் கண்டு, தகவு என்னும்
வேலியிட்டு செம்மையுள் நின்று, தனது உடல் பொருள் ஆவி அனைத்தையும்
இறைவனுக்கு ஆக்கி, அஞ்ஞான கன்மப் பிரவேசம் நேர்ந்த போது
வருந்தி, தாம் அருளுக்குப்
பாத்திரமாகா நிலைக்கு வருந்தி, இறையருளைப் பெற
அடியவர்களை வேண்டுதல் பெறப்படும்.
தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியம் வாய்க்கவேண்டும். எந்தை இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ
கேளீர் என்று அடியவர்கட்கு விண்ணப்பிப்பதையும் அறிக.
6. 009 திருஆமாத்தூர்
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
வண்ணங்கள்
தாம்பாடி வந்து நின்று
வலிசெய்து
வளைகவர்ந்தார், வகையால் நம்மைக்
கண்அம்பால்
நின்றுஎய்து, கனலப் பேசிக்
கடியதுஓர் விடைஏறிக்
காபா லியார்
சுண்ணங்கள்
தாம்கொண்டு துதையப் பூசித்
தோல்உடுத்து
நூல்பூண்டு தோன்றத் தோன்ற
அண்ணலார்
போகின்றார் வந்து காணீர்
அழகியரே ஆமாத்தூர் ஐய
னாரே.
பொழிப்புரை :காபாலக் கூத்தாடும்
தலைமையை உடைய பெருமான் தாளத்தொடு பொருந்தப்பாடும் இசைகள் பாடிக் கொண்டு வந்து
நின்று வற்புறுத்தி நம்வளைகளைக் கவர்ந்தவராய், நாம் மனம் நெகிழும் வகையாலே நம்மைத் தம்
கண்களாகிய அம்புகளாலே துன்புறுத்திக் காமத்தீ மூண்டெழுமாறு பேசி, விரைந்து செல்லும் விடையை இவர்ந்து, பலவகை நறுமணப் பொடிகளையும் செறிவாகப்
பூசிக்கொண்டு, விலங்குகளின் தோலை
உடுத்துப் பூணூல் அணிந்து, தம் பேரழகு தோன்றச்
செல்கின்றார். ஆமாத்தூர்த் தலைவராகிய அவர் அழகினை வந்து காணுங்கள்.
பாடல்
எண் : 2
வெந்தார்வெண்
பொடிப்பூசி, வெள்ளை மாலை
விரிசடைமேல் தாம்சூடி, வீணை ஏந்திக்
கந்தாரந்
தாம்முரலாப் போகா நிற்கக்
கறைசேர் மணிமிடற்றீர்
ஊர்ஏது என்றேன்,
நொந்தார்போல்
வந்துஎனது இல்லே புக்கு,
நுடங்குஏர் இடைமடவாய், நம்ஊர் கேட்கில்,
அந்தா
மரைமலர்மேல் அளிவண்டு யாழ்செய்
ஆமாத்தூர்
என்றுஅடிகள் போயி னாரே.
பொழிப்புரை :தீயிலிடப்பட்டு
வெந்து போனவர் தம் வெள்ளிய சாம்பலைப் பூசி, வெண்ணிற மாலையைப் பரந்த சடையில் சூடி, வீணை ஏந்திக் காந்தாரப் பண்ணைப்
பாடிக்கொண்டு எம்பெருமான் சென்று கொண்டிருக்க, அவரை நோக்கி `விடக்கறை வெளிப்பட்ட நீலகண்டரே! நும்ஊர்
யாது?` என்று வினவினேன்.
பசியினால் வருந்தியவரைப் போல வந்து என் வீட்டினுள் புகுந்து `அசைகின்ற அழகிய இடையினை உடைய இளையவளே!
அழகிய தாமரை மலர்மேல் வண்டுகள் யாழ் போல் ஒலிக்கும் ஆமாத்தூரே நம்மூர்` என்று சொல்லிப் பெருமான் போய்விட்டார்.
பாடல்
எண் : 3
கட்டங்கந்
தாம் ஒன்று கையில் ஏந்திக்
கடிய விடைஏறிக் காபா
லியார்,
இட்டங்கள்
தாம்பேசி இல்லே புக்கு,
இடும்பலியும்
இடக்கொள்ளார், போவார் அல்லர்,
பட்டிமையும்
படிறுமே பேசா நின்றார்,
பார்ப்பாரைப்
பரிசுஅழிப்பார் போல்கின் றார்தாம்,
அட்டிய
சில்பலியும் கொள்ளார், விள்ளார்,
அழகியரே ஆமாத்தூர் ஐய
னாரே.
பொழிப்புரை :கையில் கட்டங்கம்
என்ற படையை ஏந்தி, விரைந்து செல்லும்
விடையை இவர்ந்து, காபாலக்கூத்தாடும்
பெருமான் வேட்கையொடு பொருந்திய சொற்களைப் பேசியவாறே வீட்டிற்குள் புகுந்து வழங்கிய
உணவையும் ஏற்றுக்கொள்ளாது, வீட்டை விடுத்துப்
போதலையும் செய்யாது நெறிப்படாதனவும் வஞ்சனையை உடையனவுமாகிய செய்திகளையே
பேசிக்கொண்டு தம்மை நோக்கும் மகளிரின் நிறை என்ற பண்பினை அழிப்பவர் போலக்
காணப்படுகின்றார். வழங்கிய சிலவாகிய உணவுகளையும் ஏலாதவராய்த் தம் மனக்கருத்து
இன்னது என்று வெளிப்படையாகக் கூறாதவராய் விளங்கும் ஆமாத்தூர்த் தலைவர் அழகியர்.
பாடல்
எண் : 4
பசைந்தபல
பூதத்தர் பாடல் ஆடல்
படநாகக் கச்சையர், பிச்சைக்கு
என்றுஅங்கு
இசைந்ததுஓர்
இயல்பினர், எரியின் மேனி,
இமையாமுக் கண்ணினர், நால்வே தத்தர்,
பிசைந்ததிரு
நீற்றினர், பெண்ஓர் பாகம்
பிரிவுஅறியாப்
பிஞ்ஞகனார், தெண்ணீர்க் கங்கை
அசைந்த
திருமுடியர், அங்கைத் தீயர்,
அழகியரே ஆமாத்தூர் ஐய
னாரே.
பொழிப்புரை :பாடுதலையும்
கூத்தாடுதலையும் விரும்பிய பல பூதங்களை உடைய ஆமாத்தூர்த் தலைவர் படம் எடுக்கும்
பாம்பைக் கச்சையாக உடுத்தித் தீப்போன்ற சிவந்த மேனியராய், இமைக்காத முக்கண்களை உடையவராய் நான்கு
வேதங்களையும் ஓதுபவராய்த் திருநீற்றை நீரில் குழைத்து அணிந்தவராய்த் தம் உடம்பின்
ஒரு பாகத்தை உமாதேவி நீங்காத தலைக்கோலத்தை உடையவராய், தெளிந்த நீரை உடைய கங்கை தங்கும்
திருமுடியினராய்த் தீ ஏந்திய கையினராய், அழகியராய்க்
காட்சி வழங்குகின்றார்.
பாடல்
எண் : 5
உருள்உடைய
தேர்புரவி யோடும், யானை
ஒன்றாலும்
குறைவுஇல்லை ஊர்தி வெள்ஏறு,
இருள்உடைய கண்டத்தர், செந்தீ வண்ணர்,
இருள்உடைய கண்டத்தர், செந்தீ வண்ணர்,
இமையவர்கள்
தொழுதுஏத்தும் இறைவ னார்தாம்,
பொருள்உடையர்
அல்லர், இலரும் அல்லர்,
புலித்தோல் உடையாகப்
பூதஞ் சூழ
அருள்உடைய
அங்கோதை மாலை மார்பர்,
அழகியரே ஆமாத்தூர் ஐய
னாரே.
பொழிப்புரை :சக்கரங்களை உடைய தேர், குதிரை, யானை, என்பவற்றைக் குறைவறப் பெற்றிருப்பினும்
வெள்ளிய காளையையே ஊர்தியாகக் கொண்டு, இருண்ட
கழுத்தினராய், சிவந்த தீயின்
நிறத்தினராய், பொருள் உடையவர்
அல்லர் என்றோ பொருள் இல்லாதவர் அல்லர் என்றோ கூற முடியாத நிலையினராய்ப் புலித்தோலை
உடையாக அணிந்து, பூதங்கள் தம்மைச்
சுற்றி இருக்குமாறு, மாலை சூடிய
மார்பினராய், அருளுடையவராய் உள்ள
இமையவர்கள் வழிபட்டுத் துதிக்கும் இறைவராகிய ஆமாத்தூர்த் தலைவர் அழகியவர்.
பாடல்
எண் : 6
வீறுஉடைய
ஏறுஏறி, நீறு பூசி,
வெண்தோடு
பெய்திடுஅங்கை வீணை ஏந்திக்
கூறுஉடைய
மடவாள்ஓர் பாகம் கொண்டு,
குழைஆடக் கொடுகொட்டி
கொட்டா வந்து,
பாறுஉடைய
படுதலைஓர் கையில் ஏந்திப்
பலிகொள்வார் அல்லர், படிறே பேசி,
ஆறுஉடைய
சடைமுடிஎம்அடிகள் போலும்
அழகியரே ஆமாத்தூர் ஐய
னாரே.
பொழிப்புரை :கங்கையைச்
சடைமுடியில் கொண்ட எம் தலைவராகிய ஆமாத்தூர் ஐயர் நீற்றினைப் பூசிக் காதில் வெள்ளிய
தோட்டினை அணிந்து இடக்கையில் வீணையை ஏந்தி இடப் பாகமாக உமாதேவியைக் கொண்டு
காதுகளில் அணிந்த குழை அசையக் கொடுகொட்டிப் பறையை ஒலித்துக் கொண்டு பருந்துகள்
புலால் நாற்றம் உணர்ந்து அணுகும் மண்டை ஓட்டினை ஒரு கையில் ஏந்தி, ஆற்றல் மிக்க காளையை இவர்ந்து வந்து, பிச்சைபெறாமல் வஞ்சனையாகிய சொற்களையே
பேசும் அழகர் போலும்.
பாடல்
எண் : 7
கைஓர்
கபாலத்தர், மானின் தோலர்,
கருத்துஉடையர்
நிருத்தராய்க் காண்பார் முன்னே
செய்ய
திருமேனி வெண்ணீறு ஆடி,
திகழ்புன்
சடைமுடிமேல் திங்கள் சூடி,
மெய்ஒரு
பாகத்து உமையை வைத்து,
மேவார் திரிபுரங்கள்
வேவச் செய்து,
ஐயனார்
போகின்றார் வந்து காணீர்,
அழகியரே ஆமாத்தூர் ஐய
னாரே.
பொழிப்புரை :கையில் மண்டை யோட்டை
ஏந்தி, மான் தோல் உடுத்து, பகைவருடைய மும்மதில்களையும் தீயில்
வேவச் செய்து, காண்பார் முன்
கூத்தாடும் கருத்துடையவராய், தலைவராகிய பெருமான்
செய்ய திருமேனியிலே வெள்ளிய நீற்றினைப் பூசித் திகழும் சிவந்த சடைமேல் திங்களைச்
சூடி, உடம்பின் ஒரு பாகமாக
உமாதேவியைக் கொண்டு, அழகிய தோற்றத்தோடு
போகின்றார். அந்த ஆமாத்தூர்த் தலைவரை வந்து காணுங்கள்.
பாடல்
எண் : 8
ஒன்றாலும்
குறைவுஇல்லை ஊர்தி வெள்ளேறு,
ஒற்றியூர் உம்ஊரே
உணரக் கூறீர்,
நின்றுதான்
என்செய்வீர் போவீர் ஆகில்,
நெற்றிமேல் கண்காட்டி
நிறையும் கொண்டீர்,
என்றும்தான்
இவ்வகையே இடர்செய் கின்றீர்,
இருக்கும்ஊர்
இனிஅறிந்தோம், ஏகம்பமோ,
அன்றித்தான்
போகின்றீர், அடிகள், எம்மோடு
அழகியரே ஆமாத்தூர் ஐய
னாரே.
பொழிப்புரை :உமக்குக் குறை
ஒன்றும் இல்லாதாகவும் காளையை வாகனமாகக் கொண்டு ஒற்றியூரை உம் ஊராகக் கொண்ட
காரணத்தைக் கூறுகின்றீர் அல்லீர். ஒரு செயலும் செய்யாமல் நின்று
கொண்டிருக்கின்றீர். நீர் எம்மை விடுத்துப் போகும் போது நும் நெற்றிக் கண்ணைக்
காட்டி எங்கள் அடக்க குணத்தைக் கைப்பற்றிச் செல்கின்றீர். எல்லா நாள்களும்
இப்படியே எங்களுக்குத் துன்பம் செய்கின்றீர். நீர் இருக்கும் ஊரை இப்போது அறிந்து
விட்டோம். தலைவராகிய தாங்கள் எம்மை அழைத்துச் செல்லாமல் போகின்ற இடம் ஏகம்பமோ? ஆமாத்தூர்த் தலைவராகிய தாங்கள் எல்லா
நிலையிலும் அழகியவரே.
பாடல்
எண் : 9
கல்அலகு
தாம்கொண்டு காளத் தியார்,
கடிய விடைஏறிக் காணக்
காண,
இல்லமே
தாம்புகுதா, இடுமின் பிச்சை,
என்றாருக்கு
எதிர்எழுந்தேன், எங்கும் காணேன்,
சொல்லாதே
போகின்றீர், உம்ஊர் ஏது,
துருத்தி, பழனமோ, நெய்த்தா னமோ,
அல்லலே
செய்துஅடிகள் போகின் றார்தாம்
அழகியரே ஆமாத்தூர் ஐய
னாரே.
பொழிப்புரை :காளத்திப் பெருமான்
கல்லலகு என்ற வாச்சியத்தைக் கையில் கொண்டு, விரைந்து செல்லும் காளையை இவர்ந்து, எல்லோரும் காணும் வண்ணம் எம்
வீட்டிற்குள் தாமே புகுந்து, `பிச்சை இடுமின்` என்று கூறினாராகப் பிச்சை கொண்டு வந்து
பார்க்கும் போது, அவரை வீட்டினுள்
எங்கும் காணேனாக, `ஒன்றும் சொல்லாதே
வீட்டை விடுத்துப் போகின்றவரே! உம் ஊர் துருத்தியோ, பழனமோ, நெய்த்தானமோ யாது? என்று யான் வினவவும் கூறாது, என்னை வருத்தி, அவ்வடிகள் போகின்றார், அத்தகைய ஆமாத்தூர்த் தலைவர்
எந்நிலையிலும் அழகியவர்.
பாடல்
எண் : 10
மழுங்கலா
நீறுஆடும் மார்பர் போலும்,
மணிமிழலை மேய மணாளர்
போலும்,
கொழுங்குவளைக்
கோதைக்கு இறைவர் போலும்,
கொடுகொட்டி தாளம்
உடையார் போலும்,
செழுங்கயி
லாயத்து எம் செல்வர் போலும்,
தென்அதிகை வீரட்டம்
சேர்ந்தார் போலும்,
அழுங்கினார்
ஐயுறவு தீர்ப்பார் போலும்,
அழகியரே ஆமாத்தூர் ஐய
னாரே.
பொழிப்புரை :ஒளி குறையாத
திருநீற்றைப் பூசிய மார்பினர், அழகிய திருவீழி
மிழலையிலே உகந்தருளியிருக்கும் திருமணக் கோலத்தினர். குவளை மலர் மாலையை அணிந்த
உமையம்மைக்குத் தலைவர். கொடு கொட்டி ஆடலுக்கு ஏற்ற தாளம் உடையவர். கயிலாயத்தில்
உள்ள எம் செல்வர். தெற்கில் உள்ள அதிகை வீரட்டத்தை உகந்து சேர்ந்தவர்.
வருந்துபவர்களைக் காப்பாற்ற மாட்டாரோ என்ற ஐயம் தீர்த்து ஆட்கொள்ளும் ஆமாத்தூர்த்
தலைவர் எல்லா வகையிலும் அழகியரே.
திருச்சிற்றம்பலம்
---------------------------------------------------------------------
சுந்தரர் திருப்பதிக
வரலாறு
திருக்கச்சி ஏகம்பர் திருவருளால், மறைந்த இடக்கண் பெற்ற நம்பியாரூரர்
பெருமான், திருவாரூர் மேல் செல்லும் ஆசையினால்
உந்தப்பட்டு, அந்தியும் நண்பலும்
என எடுத்து ஆரவத்துடன் நசையால், எந்தை பிரான் திருஆரூர் என்றுகொல்
எய்துவது என்று சந்த இசை பாடி, திருப்பதிகள் தொறும்
வன்னியொடு கூவிளமும் சென்னிமிசை வைத்து உவந்த பெருமானை வழிபட்டு, பன்னு தமிழ்த்தொடை சாத்தி, அன்னம் மலி வயல்
தடங்கள் சூழ்ந்த திருஆமாத்தூர் அழகர் தமை அடி வணங்கி, தங்கும் இசைத்
திருப்பதிகம் பாடி, தாரணிக்கு மங்கலமாம்
பெருந் தொண்டை வளநாடு கடந்து அணைந்தார், செங்கண்
வளவன் பிறந்த சீர் நாடாகிய நீர் நாட்டினை.
திருஆமாத்தூர் அழகரைப் போற்றிய திருப்பதிகம் இதோ.
பெரியபுராணம் -
ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்
பாடல்
எண் : 292
மன்னுதிருப்
பதிகள்தொறும் வன்னியொடு கூவிளமும்
சென்னிமிசை
வைத்து உவந்தார் கோயிலின்முன் சென்றுஇறைஞ்சிப்
பன்னுதமிழ்த்
தொடைசாத்திப் பரவியே போந்துஅணைந்தார்
அன்னமலி
வயல் தடங்கள் சூழ்ந்த திரு வாமாத்தூர்.
பொழிப்புரை: வழியிடையில்
பொருந்திய திருப்பதிகள் தோறும் வன்னியொடு வில்வத்தினையும் தலையின்மேற் சூடி
மகிழ்ந்தாராகிய இறைவரது திருக்கோயில்களின்முன் சென்று வணங்கி; பன்னிய தமிழ் மாலைகளைச் சாத்தித்
துதித்துச் சென்று; அன்னங்கள் மலிந்த
வயல்களும் தடாகங்களும் சூழ்ந்த திருஆமாத்தூரினைச் சேர்ந்தருளினர்.
பெ.
பு. பாடல் எண் : 293
அங்கணரை
ஆமாத்தூர் அழகர்தமை அடிவணங்கித்
தங்கும்இசைத்
திருப்பதிகம் பாடிப்போய்த் தாரணிக்கு
மங்கலமாம்
பெருந்தொண்டை வளநாடு கடந்துஅணைந்தார்
செங்கண்வள
வன்பிறந்த சீர்நாடு நீர்நாடு.
பொழிப்புரை : உயிர்களுக்கு அருள்
வழங்கியருளும் அழகிய பெருமானாரைத் திருஆமாத்தூரில் எழுந்தருளியிருக்கும் அழகரை
வணங்கி, இசை பொருந்திய
திருப்பதிகம் பாடி, அப்பாற்சென்று, இந்நிலவுலகிற்கு மங்கலமாக விளங்கும்
தொண்டைநாடு என்னும் வளமுடைய நாட்டினைக் கடந்து, கோச்செங்கட் சோழன் தோன்றிய
சீர்மைமிகுந்த நாடாய நீர்வளமுடைய சோழ நாட்டினை அடைந்தார்.
குறிப்புரை : திருஆமாத்தூரில்
அருளிய பதிகம் `காண்டனன்\' (தி.7 ப.45) எனத் தொடங்கும் கொல்லிக்கௌவாணப் பண்ணில்
அமைந்த பதிகம் ஆகும். இப்பதிகத்தில் வரும் நான்காவது பாடலும், ஒன்பதாவது பாடலும் நம்பிகள் யோகநெறியில்
தலைநின்றவராதலை விளக்கி நிற்கின்றன. தொண்டை நாட்டின் சிறப்பினைத் திருக்குறிப்புத்
தொண்டர் புராணத்து ஆசிரியர் விளங்கக் கூறியுள்ளார். அத்தகைய சிறப்புகளை உடைமையின் `மங்கலமாம் பெருந் தொண்டை வளநாடு' என்றார். செங்கண் வளவன் - கோச்செங்கட்
சோழர்.
சுந்தரர்
திருப்பதிகம்
7. 045 திருவாமாத்தூர் பண் - கொல்லிக்
கௌவாணம்
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
காண்டனன்
காண்டனன் காரிகை யாள்தன் கருத்தனாய்
ஆண்டனன்
ஆண்டனன் ஆமாத் தூர்எம் அடிகட்கு ஆள்
பூண்டனன்
பூண்டனன் பொய்அன்று சொல்லுவன் கேண்மின்கள்
மீண்டனன்
மீண்டனன் வேதவித்து அல்லா தவர்கட்கே.
பொழிப்புரை : அடியேன் , திருவாமாத்தூரில் எழுந்தருளியுள்ள எம்
தலைவனை , உமையம்மைக்குக்
கணவனாகக் கண்டேன் ; அவனுக்கு அடிமை
பூண்டேன் ; அடிமையைப் பலகாலும்
செய்தேன் ; இவை பொய்யல்ல ; இன்னும் சொல்லுவேன் ; கேண்மின் ; வேத நெறியைப் போற்றுவோரல்லாதவர்களை
நீங்கினேன் .
பாடல்
எண் : 2
பாடுவன்
பாடுவன் பார்ப் பதி தன்அடி பற்றிநான்
தேடுவன்
தேடுவன் திண்எனப் பற்றிச் செறிதர
ஆடுவன்
ஆடுவன் ஆமாத் தூர்எம் அடிகளைக்
கூடுவன்
கூடுவன் குற்றம் அது அற்றுஎன் குறிப்பொடே.
பொழிப்புரை : யான் , இவ்வுலகிற்குத் தலைவனாகிய , திரு வாமாத்தூரில் எழுந்தருளியுள்ள எம்
இறைவனை , அவனது திரு வடியைக்
கருதிப் பாடுவேன் ; உறுதியாகப் பற்றி
அணைத்தற்குத் தேடுவேன்; தேடிக்கண்டு , என் கருத்தின் வண்ணம் குற்றம் நீங்கிக்
கூடுவேன் ; கூடிய களிப்பினால்
ஆடுவேன் .
பாடல்
எண் : 3
காய்ந்தவன்
காய்ந்தவன் கண்அழலால் அன்று காமனைப்
பாய்ந்தவன்
பாய்ந்தவன் பாதத்தி னால் அன்று கூற்றத்தை
ஆய்ந்தவன்
ஆய்ந்தவன் ஆமாத் தூர்எம் அடிகளார்
ஏய்ந்தவன்
ஏய்ந்தவன் எம்பி ராட்டியைப் பாகமே.
பொழிப்புரை : திருவாமாத்தூரில்
எழுந்தருளியிருக்கின்ற எம் தலைவன் ,
அன்று
காமனைத் தனது நெற்றிக்கண்ணில் உள்ள நெருப்பால் எரித்தவன் ; அன்று , கூற்றுவன்மேற் காலாற் பாய்ந்து அவனை
அழித்தவன் ; எல்லாவற்றையும்
நன்குணர்ந்தவன் ; எம்பெரு மாட்டியை
ஒருபாகத்தில் ஆரப்பொருந்தியவன் .
பாடல்
எண் : 4
ஓர்ந்தனன்
ஓர்ந்தனன் உள்ளத்து உள்ளேநின்ற ஒண்பொருள்
சேர்ந்தனன்
சேர்ந்தனன் சென்று திருவொற்றி யூர்புக்குச்
சார்ந்தனன்
சார்ந்தனன் சங்கிலி மென்தோள் தடமுலை
ஆர்ந்தனன்
ஆர்ந்தனன் ஆமாத் தூர்ஐயன் அருளதே.
பொழிப்புரை : யான் , என் உள்ளத்துள்ளே நிலை பெற்றுள்ள ஒளி
யுடைய பொருளை ஆராய்ந்தறிந்தேன் ;
அவ்வறிவின்
வழியே சென்று அதனைத் தலைப்பட்டேன் ;
இனி
, வெளியே , திருவொற்றியூரிற் புகுந்து , ` சங்கிலி ` என்பாளது மெல்லிய தோளையும் , பெரிய தனங் களையும் பொருந்தினேன் ; இவ்விருவாற்றானும் , இருவகை இன்பத்தையும் நிரம்ப நுகர்ந்தேன்
; இது , திருவாமாத்தூரில் எழுந்தருளி
யிருக்கின்ற தலைவனது திருவருள் .
பாடல்
எண் : 5
வென்றவன்
வென்றவன் வேள்வியில் விண்ணவர் தங்களைச்
சென்றவன்
சென்றவன் சில்பலிக்கு என்று தெருஇடை
நின்றவன்
நின்றவன் நீதி நிறைந்தவர் தங்கள்பால்
அன்றவன்
அன்றவன் செய்அருள் ஆமாத்தூர் ஐயனே.
பொழிப்புரை : திருவாமாத்தூரில்
எழுந்தருளியிருக்கின்ற தலைவன் ,
தக்கன்
வேள்வியில் எல்லாத் தேவர்களையும் வென்றவன் ; சிலவாகிய பிச்சைக்கென்று தெருவிற்
சென்றவன் ; நீதியிற் சிறிதும்
குறையாதவரிடத்தில் நிலைபெற்று நின்றவன் ; தன்னை
அடைந்தார்க்கு அருள்செய்தல் , அடைந்த
அன்றேயாகின்றவன் .
பாடல்
எண் : 6
காண்டவன்
காண்டவன் காண்டற்கு அரிய கடவுளாய்
நீண்டவன்
நீண்டவன் நாரணன் நான்முகன் நேடவே
ஆண்டவன்
ஆண்டவன் ஆமாத் தூரையும் எனையும் ஆள்
பூண்டவன்
பூண்டவன் மார்பில் புரிநூல் புரளவே.
பொழிப்புரை : திருவாமாத்தூரில்
எழுந்தருளியுள்ள தலைவன் , தன் அடியவர்கட்கு
எளிதில் காணப்பட்டவன் ; திருமாலும் பிரமனும்
தேட , அவர்களால்
காணுதற்கரிய கடவுளாய் நீண்டவன் ;
ஆமாத்தூரையும்
ஆண்டவன் ; என்னையும் ஆளாக
வைத்து ஆண்டவன் ; மார்பில் முப்புரி
நூலைப் புரளப் பூண்டவன் .
பாடல்
எண் : 7
எண்ணவன்
எண்ணவன் ஏழ்உலகத்து உயிர் தங்கட்குக்
கண்ணவன்
கண்ணவன் காண்டும்என் பார்அவர் தங்கட்குப்
பெண்ணவன்
பெண்ணவன் மேனிஒர் பாகமாம் பிஞ்ஞகன்
அண்ணவன்
அண்ணவன் ஆமாத் தூர்எம் மடிகளே.
பொழிப்புரை : திருவாமாத்தூரில்
எழுந்தருளியிருக்கின்ற எம் தலைவன் ,
ஏழுலகத்திலும்
உள்ள உயிர்கட்குக் கருத்தாய் உள்ளவன் ; தன்னை
, ` காண்போம் ` என்று அன்பால் முயல்கின்றவர்கட்குக்
கண்ணாய் உள்ளவன் ; திருமேனி ஒரு பாகம்
பெண்ணாகியவன் ; பொருந்திய
தலைக்கோலத்தை உடையவன் ; அடையத் தக்கவன் .
பாடல்
எண் : 8
பொன்னவன்
பொன்னவன் பொன்னைத் தந்து என்னைப் போக விடா
மின்னவன்
மின்னவன் வேதத்தின் உட்பொருள் ஆகிய
அன்னவன்
அன்னவன் ஆமாத்தூர் ஐயனை ஆர்வத்தால்
என்னவன்
என்னவன் என்மனத்து இன்புற்று இருப்பனே.
பொழிப்புரை : திருவாமாத்தூரில்
எழுந்தருளியுள்ள தலைவன் , அடியார்களுக்குப்
பொன்போல்பவனாய் உள்ளவன் ; பொன்னைக் கொடுத்து
என்னைத் தன்னினின்றும் நீங்கவொட்டாது பிணித்துக் கொண்ட ஒளிவடிவினன் ; வேதத்தின் உட்பொருளாய் உள்ள அத் தன்மையை
உடையவன் ; எனக்கு உரிமையுடையவன்
; அவனை , யான் என்மனத்தில் அன்பால் நினைந்து
இன்பமுற்றிருப்பேன் ;
பாடல்
எண் : 9
தேடுவன்
தேடுவன் செம்மலர்ப் பாதங்கள் நாள்தொறும்
நாடுவன்
நாடுவன் நாபிக்கு மேலேஒர் நால்விரல்
மாடுவன்
மாடுவன் வன்கை பிடித்து மகிழ்ந்துளே
ஆடுவன்
ஆடுவன் ஆமாத் தூர்எம் மடிகளே.
பொழிப்புரை : யான் , திருவாமாத்தூரில் எழுந்தருளியுள்ள எம்
தலைவனது திருவடிகளை நாள்தோறும் தேடுவேன் ; அவனை , உந்திக்குமேல் நால்விரல் அளவில் உள்ள
இருதயத்தில் நினைப்பேன் ; வெளியில் சென்றால்
வலிய கையால் பிடித்து மகிழ்ந்து உள்ளே சேர்ப்பேன் ; அவனுக்கு ஏற்புடையன ஆகும்படி
கூத்துக்களை ஆடுவேன் .
பாடல்
எண் : 10
உற்றனன்
உற்றவர் தம்மை ஒழிந்து உள்ளத்து உள்பொருள்
பற்றினன்
பற்றினன் பங்கயச் சேவடிக் கேசெல்ல
அற்றனன்
அற்றனன் ஆமாத்தூர் மேயான் அடி யார்கட்குஆள்
பெற்றனன்
பெற்றனன் பெயர்த்தும் பெயர்த்தும் பிறவாமைக்கே.
பொழிப்புரை : யான் , மீட்டும் மீட்டும் பிறவாமைப் பொருட்டு , உற்றாரை நீங்கி , உள்ளத்தில் உள்ள பொருளை அடைந்தேன் ; திரு வாமாத்தூரில்
எழுந்தருளியிருக்கின்ற இறைவனது ,
தாமரை
மலர் போலும் செவ்விய திருவடியிடத்தே செல்ல அவற்றைத் துணையாகப் பற்றினேன் ; அதனால் துன்பங்கள் நீங்கப்பெற்றேன் ; அதன்பின் , அவன் அடியவர்க்கு அடியனாகும் பேற்றையும்
பெற்றேன் .
பாடல்
எண் : 11
ஐயனை
அத்தனை ஆள்உடை ஆமாத்தூர் அண்ணலை
மெய்யனை
மெய்யர்க்கு மெய்ப்பொரு ளான விமலனை
மையனை
மைஅணி கண்டனை வன்தொண்டன் ஊரன்சொல்
பொய்ஒன்றும்
இன்றிப் புலம்புவார் பொன்கழல் சேர்வரே.
பொழிப்புரை : யாவர்க்கும் தலைவனும்
, தந்தையும் , என்றும் உள்ளவனும் , மெய்ம்மையான உள்ளம் உடையவர்க்கு அநுபவப்
பொருளாய் விளங்குகின்ற தூயவனும் ,
திருவருள்
மேகமானவனும், மைபோலும் அழகிய
கண்டத்தை உடையவனும் ஆகிய திருவாமாத் தூரை ஆளுதலுடைய இறைவனை , வன்றொண்டனாகிய நம்பி யாரூரன் பாடிய
பாடல்களை , வஞ்சனை சிறிதும்
இன்றிப் பாடு கின்றவர் , அப்பெருமானது
பொன்போலும் திருவடிகளை அடைவர் .
திருச்சிற்றம்பலம்
சிறப்பான பதிகம்.
ReplyDeleteமிகவும் நன்றி.
வாழ்க வளமுடன்.