அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
கொடியனைய இடை
(திருச்செந்தூர்)
முருகா!
பொதுமாதர் வலையில்
சிக்கி அழியாமல்,
திருவடிக் கமலம் பெற அருள்வாய்
தனதனன
தனதனன தந்தனந் தந்தனம்
தனதனன தனதனன தந்தனந் தந்தனம்
தனதனன தனதனன தந்தனந் தந்தனம் ......
தந்ததானா
கொடியனைய
இடைதுவள அங்கமும் பொங்கஅங்
குமுதஅமு திதழ்பருகி யின்புறுஞ் சங்கையன்
குலவியணை முகிலளக முஞ்சரிந் தன்பினின்
.....பண்புலாவக்
கொடியவிரல்
நகநுதியில் புண்படுஞ் சஞ்சலன்
குனகியவ ருடனினிது சம்ப்ரமங் கொண்டுளங்
குரலழிய அவசமுறு குங்குணன் கொங்கவிழ்ந்து
......ஒன்றுபாய்மேல்
விடமனைய
விழிமகளிர் கொங்கையின் பன்புறும்
வினையனியல் பரவுமுயிர் வெந்தழிந் தங்கமும்
மிதமொழிய அறிவில்நெறி பண்பிலண் டுஞ்சகன்
...... செஞ்செநீடும்
வெகுகனக
வொளிகுலவும் அந்தமன் செந்திலென்
றவிழவுள முருகிவரும் அன்பிலன் தந்திலன்
விரவுமிரு சிறுகமல பங்கயந் தந்துகந்து ....அன்புறாதோ
படமிலகும்
அரவினுடல் அங்கமும் பங்கிடந்
துதறுமொரு கலபிமிசை வந்தெழுந் தண்டர்தம்
பகையசுர ரனைவருடல் சந்துசந் துங்கதஞ்
....சிந்தும்வேலா
படியவரும்
இமையவரும் நின்றிறைஞ் செண்குணன்
பழையஇறை யுருவமிலி அன்பர்பங் கன்பெரும்
பருவரல்செய் புரமெரிய விண்டிடுஞ் செங்கணண்
...... கங்கைமான்வாழ்
சடிலமிசை
அழகுபுனை கொன்றையும் பண்புறுந்
தருணமதி யினகுறைசெய் துண்டமுஞ் செங்கையொண்
சகலபுவ னமுமொழிக தங்குறங் கங்கியும் ......பொங்கிநீடும்
சடமருவு
விடையரவர் துங்கஅம் பங்கினின்
றுலகுதரு கவுரியுமை கொங்கைதந் தன்புறுந்
தமிழ்விரக உயர்பரம சங்கரன் கும்பிடுந் .....தம்பிரானே.
பதம் பிரித்தல்
கொடி
அனைய இடை துவள, அங்கமும் பொங்க, அம்
குமுத அமுத இதழ் பருகி இன்புறும் சங்கையன்,
குலவிஅணை முகில்அளகமும் சரிந்து அன்பினின்
...... பண்பு உலாவக்
கொடிய
விரல் நக நுதியில் புண்படும் சஞ்சலன்,
குனகி அவருடன் இனிது சம்ப்ரமம் கொண்டு, உளம்
குரல்அழிய அவசம்உறு குங்குணன், கொங்கு அவிழ்ந்து...... ஒன்றுபாய்மேல்
விடம்
அனைய விழிமகளிர் கொங்கை இன்ப அன்புஉறும்
வினையன்,இயல் பரவும்உயிர் வெந்து, அழிந்துஅங்கமும்
மிதம்ஒழிய அறிவில் நெறி பண்பில்அண்டும் சகன்
......செஞ்செநீடும்
வெகு
கனக வஒளிகுலவும் அந்தம் மன் செந்தில்என்று,
அவிழ உளம் உருகிவரும் அன்பிலன், தந்து இலன்,
விரவும்இரு சிறுகமல பங்கயம் தந்து, உகந்து ....அன்புஉறாதோ?
படம்
இலகும் அரவின்உடல் அங்கமும் பங்குஇடந்து
உதறும் ஒரு கலபி மிசை வந்து எழுந்து, அண்டர்தம்
பகை அசுரர் அனைவர் உடல் சந்து சந்தும் கதம்
.....சிந்தும்வேலா!
படியவரும்
இமையவரும் நின்று இறைஞ்சு எண்குணன்,
பழையஇறை, உருவம்இலி, அன்பர் பங்கன், பெரும்
பருவரல் செய் புரம்எரிய விண்டிடும் செங்கணண், ...... கங்கை, மான்வாழ்
சடிலம்
மிசை அழகு புனை கொன்றையும், பண்பு உறும்
தருண மதியின் குறைசெய் துண்டமும், செங்கைஒண்
சகல புவனமும் ஒழிகத அம் குறங்கு அங்கியும்
......பொங்கிநீடும்
சடமருவு
விடையர் அவர் துங்க அம் பங்கில்நின்று
உலகு தரு கவுரி,உமை கொங்கை தந்து அன்புறும்
தமிழ்விரக! உயர்பரம சங்கரன் கும்பிடும்
.....தம்பிரானே.
பதவுரை
படம் இலகும் அரவின்
உடல் அங்கம் பங்கு இடந்து --- படம் விளங்கப் பெற்ற பாம்பினது
உடலின் அவயவங்கள் கூறுபடுமாறு பிளந்து,
உதறும் ஒரு கலபி மிசை வந்து எழுந்து ---
காலாலும் மூக்காலும் எடுத்து உதறுகின்ற, ஒப்பற்ற
மயிலின் மீது எழுந்தருளி வந்து,
அண்டர் தம் பகை --- தேவர்களது
பகைவர்களாகிய,
அசுரர் அனைவர் உடல் --- இராக்கதர்கள்
எல்லோருடைய உடல்களும்,
சந்து சந்தும் கதம் --- கை கால் இடை
முதலிய ஒவ்வொரு சந்துகளும் வேறுபட்டழிய,
சிந்தும்
வேலா --- சிதறச்செய்த வேற்படையை உடையவரே!
படியவரும் இமையவரும் நின்று
இறைஞ்சும் எண்குணன் --- மண்ணுலகத்தார்களும், தேவர்களும் தமது சந்நிதியில் பக்தியுடன் நின்று
வணங்குகின்ற எட்டு அருட்குணங்களை
உடையவரும்,
பழைய இறை --- முன்னைப் பழம்பொருட்கும்
முன்னைப்பழம் பொருளாக விளங்குந் தனிப்பெருந்தலைவரும்,
உருவம் இலி --- தனக்கென ஓர் உருவமும்
இல்லாதவரும்,
அன்பர் பங்கன் --- தம்முடைய
மெய்யன்பர்களுக்கு அருந்துணையாய் இருப்பவரும்,
பெரும் பருவரல் செய் புரம் எரிய விண்டிடும்
செம் கணன் --- உலகங்களுக்கு மிகவுந் துன்பத்தைச் செய்த முப்புரங்களும் வெந்து நீறாகுமாறு அக்கினியை வெளியாக்கிய சிவந்த அக்கினி
நேத்திரத்தை உடையவரும்,
கங்கை மான் வாழ் சடிலமிசை --- மானுக்கு
நிகரான கங்காதேவி வாழுகின்ற சடை முடியின் மீது
அழகு புனை கொன்றையும் --- அழகு
பொருந்திய கொன்றை மலரும்,
பண்பு உறும் தருண மதியின் குறைசெய்
துண்டமும் --- சிறப்பு பொருந்திய
இளஞ்
சந்திரனது குறைவு பெற்ற துண்டமாகிய பிறையும்,
ஒண் செங்கை சகல புவனமும் ஒழிகத அங்கு
உறங்கு அங்கியும் --- ஒளிபெற்ற சிவந்த கரத்தில் எல்லா உலகங்களையும் நீறாக்கும் வலியுடன் அக் கரமலரில் தனது வலியடங்கி இருக்கும்
அக்கினியும்,
பொங்கி நீடும் சடம் மருவு விடையர் அவர்
--- பொலிவு பெற நிலைத்துள்ள திருமேனியையுடைய இடப
வாகனத்தையும் உடையவருமாகிய சிவபெருமானது,
துங்க அம் பங்கில் நின்று --- தூய்மை
பொருந்திய அழகிய இடது பாகத்தில் நிலைபெற்று இருந்து,
உலகு தரு கவுரி உமை ---
உலகங்களையெல்லாம் ஈன்றருளியவரும்,
பொன்
நிறத்தையுடையவரும், உமாதேவியும் ஆகிய மலைமங்கை,
கொங்கை தந்து அன்பு உறும் தமிழ் விரக ---
திருமுலைப்பால் தந்து அன்புகொள்ளும்
செந்தமிழிற்
சமர்த்தரே,
உயர் பரம --- உயர்ந்த பெரிய
பொருளே!
சங்கரன் கும்பிடும் தம்பிரானே --- சிவபெருமான்
(பிரணவோபதேசம் பெறும்பொருட்டு) வணங்குகின்ற எப்பொருட்கும் இறைவரே!
கொடி அனைய இடை துவள --- கொடியைப்போல்
மெலிந்துள்ள இடையானது அசைந்து வாடவும்,
அங்கமும் பொங்க --- உயிர் இன்புறுவதுடன்
சரீரமும் புளகம் அடையவும்,
அம் குமுத இதழ் அமுது பருகி --- அழகிய
குமுத மலரையொத்த இதழிற் பெருகும் அமிர்தத்தைப் பருகி,
இன்பு உறும் சங்கையன் --- இன்பமடையும்
வழக்கமுடையவன்,
முகில் அளகமுஞ் சரிந்து --- மேகத்தை ஒத்த
கருங்கூந்தலும் (துகிலும்) சரிந்து,
குலவி அணை அன்பினின் பண்பு உலாவ --- கொண்டாடி
மருவுதலால் உண்டாகின்ற அன்பின் குணம்
மிகுதியாக,
கொடிய விரல் நகநுதியில் புண்படும் சஞ்சலன்
--- கொடுந் தொழிலையுடைய விலைமகளிரது நகநுனியினால், புண்படுகின்ற துன்பத்தை உடையவன்,
குனகி அவருடன் இனிது சம்ப்ரமம் கொண்டு ---
சிணுங்கிப் பேசும் அம்மாதருடன் இனிமையாக சந்தோஷத்தை அடைந்து,
உளம்குரல் அழிய அவசம் உறு குங்குணன் ---
உள்ளம் மயக்கத்தையும் குரல் தழுதழுத்தலையும் அடைந்து அழிய, மயக்கத்தையடையும் குறுகிய குணத்தை உடையவன்,
கொங்கு அவிழ்ந்து --- மலர்களின்
மகரந்தப் பொடி சிந்தி,
ஒன்று பாய்மேல் விடம் அனைய விழிமகளிர்
--- பொருந்தியுள்ள பாய்மீது கொடிய ஆலகால விடத்திற்கு நிகரான
கண்களையுடைய பொதுமகளிரது,
கொங்கை இன்பு அன்பு உறும் வினையன் ---
தனங்களின் இன்பத்தையுடைய அன்பு கொள்ளும் தீவினையை உடையவன்,
இயல்பாகவும் உயிர் அங்கமும் வெந்து
அழிந்து --- நற்குணம் மிகுதற்குத் தகுதியுடைய உயிரும் உடலும் காமாக்கினியால்
வெந்து தன்நிலையினின்றும் அழிந்து,
மிதம் ஒழிய அறிவு இல் நெறி பண்பில் அண்டும்
சகன் --- அளவு கெட அறிவு இல்லாத
தீயவழியின் விதத்தில் பொருந்தியுள்ள உலக
மாயை உடையவன்,
செம் செய்நீடும் வெகு கனக ஒளிகுலவும்
அந்தமன் --- செம்மையான வயல்கள் நிலைத்துள்ளதும் மிகுந்த பொற்பிரகாசம்
வீசும் அழகு நிலைபெற்றதுமான,
செந்தில் என்று --- திருச்செந்தில்
என்று கூறி,
அவிழ உளம் உருகி வரும் அன்பு இலன் ---
கல்போன்ற தன்மை நீங்கி நெகிழ்ந்து
உள்ளம் உருகி அச் செந்திமா நகரத்தைத் தெரிசிக்க வருகின்ற அன்பில்லாதவன்,
தந்து இலன் --- பிறருக்குக்
கொடுக்கும் இயல்பில்லாதவன் (இத்தகைய அடியேனுக்கு)
விரவும் இரு சிறு கமல பங்கயம் ---
சிவஞானங் கலந்துள்ள தாமரையை ஒத்த இரண்டு சிறிய திருவடிகளையும்,
உகந்து தந்து அன்பு உறாதோ ---
அடியேனுக்கு விரும்பிக்கொடுத்து தேவரீரது திருவுள்ளம் அன்பு செய்யாதோ?
பொழிப்புரை
பணாமகுடத்துடன் விளங்கும் பாம்பினது
உடலின் அங்கங்கள் கூறுபட்டுப் பிளக்குமாறு (பாதத்தாலும் மூக்காலும் எடுத்து)
உதறுகின்ற ஒப்பற்ற மயிலின் மிசை எழுந்தருளி வந்து, தேவர்களது பகைவர்களாகிய அசுரர்கள்
அனைவருடைய உடல்களும் கை கால் கழுத்து முதலிய சந்துகளும் பூட்டுவிட்டுச்
சிந்தும்படிச் சிதறச் செய்த வேற்படையை உடையவரே!
மண்ணுலகத்தவர்களும் விண்ணுலகத்தவர்களும்
சந்நிதியில் நின்று வணங்கும் எப்பொருட்கு மிறைவரும், தனக்கென ஓர் உருவமில்லாதவரும், அன்பர்களிடம் துணையாகப்
பொருந்தியுள்ளவரும், எட்டு அருட்குணங்களை உடையவரும், அநாதி பரம்பொருளும், உலகிற்குப் பெருந்துன்பத்தைச் செய்த
முப்புரங்களும் எரியுமாறு தீப்பொறியைச் சிந்திய சிவந்த அக்கினி நேத்திரத்தை உடையவரும், மான்போன்ற பார்வையுடைய கங்காதேவி
வாழுகின்ற சடாமுடியின் மீது, அழகு பொருந்திய
கொன்றை மலரும், குணத்தாலுயர்ந்த
இளம்பிறைச் சந்திரனும், ஒளிபெற்ற சிவந்த
கரத்திலே சகல லோகங்களையும் நீறாக்கும் வலியுடன் அமைதியோடிருக்கின்ற அக்கினியும், பொலிவுடன் நிலைபெற்றுள்ள மேனியை உடைய
இடபதேவரும் உடைய சிவபெருமானது பரிசுத்தம் பொருந்திய அழகிய வாமபாகத்தில்
இருந்துகொண்டு, எல்லா உலகங்களையும்
ஈன்றருளியவரும், பொன்னிறத்தை உடையவருமாகிய
உமாதேவியார் திருமுலைப்பால் தந்து அன்பு கொள்ளும் தமிழறிவுடையவரே!
உயர்ந்த பரம்பொருளே!
பிரணவோபதேசம் பெறும்பொருட்டு
சிவபெருமான் வணங்குகின்ற தனிப்பெருந் தலைவரே!
கொடியை யொத்த இடை யசைந்து வாடவும், இன்புறுவதுடன் உடல் புளகிக்கவும், அழகிய குமுத மலரை யொத்த இதழிற் பெருகும்
அமிர்தத்தைப் பருகி இன்பத்தை அடையும் வழக்கத்தையுடையவனும், மேகத்தை ஒத்த கூந்தலும், துகிலும் சரியக் குலாவி அணைகின்றதால், அன்பின் குணம் மிகுதியாக விலைமகளிரது
கொடிய விரல் நக நுனியில் புண்படுகின்ற துன்பத்தை யுடையவனும், சிணுங்கிப் பேசுகின்ற
அம்மகளிருடன் இனிமையாக மகிழ்ந்துகொண்டு உள்ளமும் குரலும் மாறுபட்டழிய
மயக்கத்தையடையும் குறுகிய குணத்தையுடையவனும், மலர்களின்
மகரந்தப்பொடி சிந்திப் பொருந்தியுள்ள பாயலின் மிசை, கொடிய விடத்திற்கு நிகரான விழிகளையுடைய
மாதர்களின் தனபாரங்களின் இன்பத்தில் அன்புறும் தீவினையை உடையவனும், நற்குணமடைதற்கு
யோக்கியமான உயிரும் உடலும் வெந்தழிந்து, தத்தம்
நிலைகெட அறிவற்றவழியிற் சேர்ந்துள்ள உலக மாயையுடையவனும், செம்மையான வயல்கள் நிலைத்துள்ளதும், மிகுந்த பொன்னொளியை வீசுவதும், அழகு நிலைப்பெற்றதுமாகிய திருச்செந்தூர்
என்று கூறி நெஞ்சம் நெகிழ்ந்து உருகி, அத்திருத்தலத்தைத்
தரிசிக்கவரும் அன்பில்லாதவனும்,
தருமஞ்
செய்யாதவனுமாகிய அடியேனுக்கு, சிவஞானமயமாகிய தேவரீரது இளமையாகிய பாத
தாமரைகள் இரண்டையும் விரும்பிக் கொடுத்துத் தேவரீரது திருவுளம் அன்பு செய்யாதோ?
விரிவுரை
“கொடியனை..................பண்பில்
அண்டுஞ்சகன்
---
இம்மூன்றடிகளும் மதன நூலின் செயல்களை உரைக்கின்றன.
செஞ்செய்ய என்பது கடை குறைந்து செஞ்செயென்றாயிற்று.
செந்திலென்-றவிழவுள
முருகிவரு மன்பிலன் ---
ஆறுமுகப் பெருமான் அடியார் பொருட்டு
திருக்கோயில் கொண்டு எழுந்தருளிய திருத்தலங்களுள் திருச்செந்தூர் தலையாக
விளங்குவது. கடற்கரையின் காட்சிக்கு இனியதாய்க் காண்பார் கண்களையும் கருத்தையும்
ஒருங்கே கவருங் கவின் உடையது. குமாரக் கடவுள் சூராதி அவுணரைக் கொன்றருள வேண்டி, இலக்கத்து ஒன்பான் வீரர்களுடன் வந்து
தங்கி, வீரவாகு தேவரைத் தூது
அனுப்பி, தேவர் குழாம் சூழ
வீற்றிருந்தருளிய மேன்மை உடையது. பாண்டியன் மகளாகிய அங்க சுந்தரிக்குக் குதிரை
முகத்தை மாற்றி மனித முகத்தை நல்கிய மகிமை உடையது. குமரகுருபரருடைய ஊமைத் தன்மையைத் தவிர்த்து
தெய்வ வாக்கை வழங்கி அவரால் கந்தர் கலிவெண்பாவால் துதிக்கப் பெற்றது.
இத்தகைய பற்பல அற்புதங்களையுடைய
இத்திருத்தலத்தின் திருநாமத்தைக் கூறியவுடனே, அத்தலத்தின் பெருமைகளும், அத் தலத்தில் எழுந்தருளியுள்ள ஆண்டவனது
அருட்குணங்களும் நினைவுக்கு வர,
அதனால்
மனங்குழைந்து உருக வேண்டும். நெஞ்சக் கனகல்லும் நெகிழ்ந்து உருகி வழிபடுவோர்க்கே
பிறவி நோய் நீங்கி என்றும் அழியா இன்பம் எளிதில் கிடைக்கும்.
“உருகுமடியவர் இருவினை
இருள்பொரும்
உதய தினகர இமகரன் வலம்வரும்
உலகு முழுதொரு நொடியினில் வலம்வரு பெருமானே”
--- (பகிர நினைவொரு) திருப்புகழ்.
மகரசலி
லங்கடைந்து இந்த்ராதி யர்க்குஅமுது
பகிர்தரு முகுந்தன்,மன் பஞ்சாயு தக்கடவுள்
மருகன்,மறவாதவர் நினைப்பவை முடிக்கும்அவன்,
உருகும் அடியார் இருவினைத்தொகை அறுக்கும்அவன், ... --- பூதவேதாள
வகுப்பு.
தந்திலன் ---
சாத்திர ஆராய்ச்சி இல்லாதவன் என்று பொருள்
கூறுவாருமுளர்.
தந்திலன் தந்து --- நூல்.
அறிவை விசாலப்படுத்தி அஞ்ஞானத்தை நீக்குவது
அறிவு நூல்களேயாம். அவ்வறிவு நூல்களாவன: சிவஞானபோதம், சிவஞான சித்தியார் முதலிய பதினான்கு
சித்தாந்த சாத்திரங்களும், தேவார திருவாசக
திருப்புகழாதி பனிரண்டு திருமுறைகளேயாம். மனிதனாகத் தோன்றிய ஒவ்வொருவரும் இவற்றை
வாங்கி பூசைப்பேடகத்தில் வைத்து,
தினமும்
மலரிட்டுப் பூசித்து அன்புடன் ஓதுதல் வேண்டும்.
படமுலகு
மரவினுடல்.............உதறுமொரு கலபிமிசை ---
மயில் பாம்பை எடுத்து இரண்டாகக் கிழித்து
உதறுகிறது என்பது தத்துவம். பாம்பு என்பது வினை. மயில் என்பது விந்து; பாம்பு எவ்வாறு ஒருவனை ஓடிவந்து
தீண்டுமோ அவ்வாறு வினை அதனைச் செய்தானை எத்தேயத்தும் எக்காலத்தும் எந்நிலையிலும்
தொடர்ந்து வந்து தீண்டும். ஆயிரம் பசுக்களின் நடுவில் ஓர் இளங்கன்றை
விட்டுவிட்டால் தாய்ப்பசுவை அக் கன்று எவ்வாறு தேடி அடையுமோ, அவ்வாறு தொல்லைப் பழவினையும் தன்னைச்
செய்த ஒருவனை இறைவன் ஆணையால் வந்து அடையும். மற்றொன்று, சூழினும் தான் முந்துறும்
பெருவலியுடையது ஊழ்வினை. அது இரு கூறாயுளது; நல்வினை தீவினை எனப்படும். அதனை அடக்கியாளும்
பெருவலியுடையது விந்து தத்துவம்.
பகையசுரர்................சிந்தும்
வேலா
---
வேல் என்பது சிவஞானம். அசுரர் என்பதில், சூரன் --- ஆணவம், சிங்கமுகன் --- கன்மம், தாரகன் --- மாயை; இம்மூவசுரர்களே மும்மலங்கள்; ஏனைய அசுரர்கள் காமம்
குரோதம் முதலியவைகளாம். இவைகளை அழிக்கவல்லது சிவஞானம் ஒன்றேயாம். அச்சிவஞானமாகிய
வேற்படையை உடையவர் முருகக் கடவுள் ஒருவரே. அதனாலன்றோ அப்பெருமானை “ஞானபண்டித
ஸ்வாமீ நமோ நம” என்றார் நம் பரமாசிரியர்.
எண்குணன் ---
சிவபெருமானுக்கு எட்டு அருட்குணங்களுள, அவையாவன: தன்வயத்தவனாதல், தூயவுடம்பினனாதல், இயற்கை யுணர்வினனாதல், முற்று முணர்தல், இயல்பாகவே பாசங்களினீங்குதல், பேரருளுடைமை, முடிவிலாற்ற லுடைமை, வரம்பிலின்பமுடைமை.
“தன் வயத்தவன்
தூயவுடம்பினன்
தானியற்கை யுணர்வின னாகுதல்
பன்னுமுற்ற வுணர்த லியல்பினன்
பாச நீக்குதல் பேரருளாகுதல்
மன்னுமீறில வாற்றலுடைமையும்
வரம்பி லின்பமுமாகிய வெண்குணம்”
பழைய
இறை
---
சிவபெருமான் ஆதியில்லாத அநாதி பரம்பொருள்.
இதனைத்
தமிழ் வேதம்” ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்சோதி” என விளக்குகிறது. “முன்னைப்
பழம்பொருட்கு முன்னைப் பழம்பொருள்” என்றதையும் “அநாதியாய் ஐந்தொழிற்கும் அப்புறமாய்
அன்றே மநாதிகளுக்கு எட்டா வடிவாய்” என்ற கந்தர் கலிவெண்பா வரிகளையும் உய்த்துணர்க.
உருவமிலி ---
தனக்கென ஓர் உருவமில்லாதவர். ஆன்மாக்களுக்காக
உருவத்தை அடைகின்றனர். உருவமில்லாத முழுமுதற்கடவுள் ஆன்மகோடிகளை உய்விக்கும்
பேரருட் பெருக்கால் ஆன்மாக்கள் எந்த எந்த வகையாகச் சிந்திக்கிறார்களோ அந்த அந்த
உருவத்தை அடைகின்றனர். “சிந்தாமணிக்கு ஒரு நிறமுமில்லை, அதனருகில் எந்த எந்த நிறப்பொருளுளவோ
அந்த அந்த நிறத்தையடைகிறது. அதுபோல் எந்த எந்த ரூபமாகச் சாதகன் நினைக்கின் றானோ
அந்த அந்த சமயம் அவனுக்கு அந்த அந்த ரூபத்தைச் சிந்தாமணியைப்போல் சிவபெருமான்
அடைகிறார்” என்னும் பிரமாணத்தைக் காண்க.
“ஒருநாமம் ஓருருவம்
ஒன்றுமில்லாற்கு ஆயிரம்
திருநாமம் பாடிநாம் தெள்ளேணம் கொட்டாமோ” --- மணிவாசகம்.
“ஆர்ஒருவர் உள்குவார்
உள்ளத்துஉள்ளே
அவ்வுருவாய் நிற்கின்ற அருளும் தோன்றும்” --- அப்பர் தேவாரம்.
இக்கருத்தை
நம் காரைக்காலம்மையார் விளக்குவதைக் காண்க.
நூல்அறிவு
பேசி நுழைவு இலாதார் திரிக,
நீல
மணிமிடற்றான் நீர்மையே --- மேல்உலந்தது,
எக்கோலத்து
எவ்வுருவாய் எத்தவங்கள் செய்வார்க்கும்
அக்கோலத்து
அவ்வுருவே ஆம்.
அன்பர்
பங்கன்
---
சிவமூர்த்தி தமது திருவடியை வழிபடும்
அன்பர்கட்குத் துணையாக இருந்து அருள்புரிகின்றார் என்பதனை, வள்ளல்பெருமான் விளக்குமாறு காண்க.
பாண்டியன்முன்
சொல்லிவந்த பாணன் பொருட்டுஅடிமை
வேண்டி
விறகு எடுத்து விற்றனையே - ஆண்டுஒருநாள்
வாய்முடியாத்
துன்பு கொண்ட வந்திக்குஓர் ஆளாகித்
தூய்முடிமேல்
மண்ணும் சுமந்தனையே........ஆய்துயர
மாவகஞ்சேர்
மாணிக்க வாசகருக்காய் குதிரைச்
சேவகன்போல்
வீதிதனில் சென்றனையே-மாவிசையன்
வில்அடிக்கு
நெஞ்சம் விரும்பியதுஅல்லால்ஒருவன்
கல்அடிக்கும்
உள்ளம் களித்தனையே-மல்லலுறும்
வில்வக்கிளை
உதிர்த்த வெய்ய முசுக்கலையைச்
செல்வத்
துரைமகனாய்ச் செய்தனையே-சொல்அகலின்
நீளுகின்ற
நெய்அருந்த நேர்எலியை மூவுலகம்
ஆளுகின்ற
மன்னவனாய் ஆக்கினையே-கோள்அகல
வாய்ச்சங்கு
நூல்இழைத்த வாய்ச்சிலம்பி தன்னைஉயர்
கோச்செங்கட்
சோழன்எனக் கொண்டனையே-ஏச்சுறுநல்
ஆறுஅடுத்த
வாகீசர்க்கு ஆம்பசியைக் கண்டு,கட்டுச்
சோறுஎடுத்துப்
பின்னே தொடர்ந்தனையே-கூறுகின்ற
தொன்மைபெறுஞ்
சுந்தரர்க்குத் தோழன்என்று பெண்பரவை
நன்மனைக்குந்
தூது நடந்தனையே.... ---
திருவருட்பா.
தமிழ்
விரக
---
முருகப்பெருமான் ஏனைய மொழிகளுக்குப் பொதுக்
கடவுளாகவும், தமிழ்மொழிக்குச்
சிறப்புக் கடவுளாகவும் விளங்குகின்றனர். மதுரையில் நாற்பத்தொன்பது புலவர்களுடன்
தாமும் ஒருவராயிருந்து தமிழ் ஆராய்ந்ததும், அகத்தியருக்குத் தமிழைப் போதித்ததும், நக்கீரருக்கும் அருணகிரிநாதருக்கும்
தமிழால் அடியெடுத்துக் கொடுத்ததும்,
இதனை
விளக்கும். “செந்தில்வாழ் செந்தமிழ்ப் பெருமாளே” என்ற திருப்புகழாலுந் தெளிக.
திருப்புகழாகிய தமிழ் வேதத்தை முருகப்பெருமான் மனமகிழ்ந்து
தரித்துக்கொள்ளுகின்றார்.
“விரித்துஅருண கிரிநாதன்
உரைத்த தமிழ்எனுமாலை
மிகுத்தபல முடன்ஓத மகிழ்வோனே!’ ---
(வரிக்கலை)
திருப்புகழ்.
தெய்வயானை அம்மையாரது இனிய கலவியின்பத்தினும்
நக்கீரதேவர் பாடிய திருமுருகாற்றுப்படை என்னும் செந்தமிழ்ப் பிரபந்தத்தில் மிகவும்
பிரியம் உடையவாராய் இருக்கின்றனர் என அருணகிரியார் கந்தரந்தாதியில் உரைக்குமாறு
காண்க.
கைமா
மயில் செவ்வி நக்கீரர் சொற் றித்தித்ததே”
முருகவேள் செந்தமிழ்ப் பிரியர் என்பதை
“முத்தமிழால் வைதாரையும் அங்கு வாழவைப்பேன்” என்ற கந்தரலங்காரத் திருவிருத்தம்
உணர்த்துவதையுங் காண்க.
“தண்தரள மணிமார்ப, செம்பொன் எழில் செறிரூப,
தண்தமிழின் மிகுநேய முருகேசா” --- (அண்டர்பதி)
திருப்புகழ்.
கருத்துரை
முருகா! பொது மகளிரது மாயா வலையிற் சிக்கி, அவரது இன்பத்தையே பரம சுகமெனக் கருதி, அறிவில்லாத நெறியில் செல்பவனும், திருச்செந்தூர் என்று உருகாதவனும் ஆகிய
அடியேனுக்குத் தேவரீரது சீரடிக் கமலத்தைத் தந்தருளத் தமது திருவுளம் சிந்திக்க
வேண்டும்.
No comments:
Post a Comment