திருக் கழுக்குன்றம்



திருக் கழுக்குன்றம்

     தொண்டை நன்னாட்டுத் திருத்தலம்.

         செங்கற்பட்டு - மாமல்லபுரம் சாலை வழியில் செங்கற்பட்டில் இருந்து 14 கி.மி. தொலைவிலும், கடற்கரை சுற்றுலாத் தலமான மாமல்லபுரத்தில் இருந்து சுமார் 10 கி.மி. தொலைவிலும் இத் திருத்தலம் இருக்கிறது.

     செங்கற்பட்டிலிருந்து மாமல்லபுரம், கல்பாக்கம் முதலிய ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் இத்தலத்தின் வழியே செல்கின்றன. மலைக்கோயில் அடிவாரத்திலேயே இறங்கிக் கொள்ளலாம்.

இறைவர்              : வேதகிரீசுவரர் (மலைமேல்).
                                                       பக்தவசலேசுவரர் (தாழக்கோயிலில்)

இறைவியார்           : சொக்கநாயகி (மலைமேல்).
                                                        திரிபுரசுந்தரி (தாழக்கோயிலில்)

தல மரம்              : வாழை

தீர்த்தம்               : சங்குத் தீர்த்தம்.

தேவாரப் பாடல்கள்    : 1. சம்பந்தர் - தோடுடையானொரு காதில்.
                                               2. அப்பர்   -  மூவிலைவேற் கையானை.
                                               3. சுந்தரர்  -  கொன்று செய்த கொடுமை.


         வேதமே மலையாய் இருப்பதால் இத்திருத்தலம் "வேதகிரி" எனப் பெயர் பெற்றது. வேதாசலம், கதலிவனம், கழுக்குன்றம் என்பன இத்தலத்திற்குரிய வேறு பெயர்கள். மலைமேல் ஒரு கோயிலும், ஊருக்குள் ஒரு கோயிலும் உள்ளது. இவை முறையே திருமலைக் கோயில், தாழக்கோயில் என்றழைக்கப்பபடுகின்றன.

     மலைக்கோயிலில் இறைவன் வேதபுரீசுவரர் என்ற பெயரிலும், தாழக்கோயிலில் இறைவன் பக்தவத்சலேசுவரர் என்ற பெயரிலும் குடி கொண்டுள்ளனர். ரிக், யஜுர், சாமம், அதர்வணம் என்ற நான்கு வேதங்களும் 4 பெரிய பாறைகளாக இருப்பதாகவும், அவற்றுள் அதர்வணவேத பாறை உச்சியில் சிவபெருமான் கோவில் கொண்டுள்ளார் என்று தலபுராணம் விவரிக்கிறது.

     மலை சுமார் 4 கி.மி. சுற்றளவு கொண்டது. 500 அடி உயரம் கொண்டு மலைமேல் இராஜகோபுரம், ஒரு பிராகாரத்துடன் அமைந்துள்ளது. மலைமீது ஏறிச்செல்ல நல்ல முறையில் அமைக்கப்பட்ட படிகள் உள்ளன. மூலவர் வாழைப் பூக்குருத்துப் போன்று சுயம்புலிங்க மூர்த்தியாக வேதகிரீசுவரர் என்ற பெயருடனும், அம்மன் சொக்கநாயகி என்கிற பெண்ணினல்லாளம்மை என்ற பெயரிலும் எழுந்தருளி இருக்கின்றனர்.

     கழுகுகள் பூசித்துப் பேறு பெற்ற காரணத்தால் கழுக்குன்றம் என்று பெயர் ஏற்பட்டது. முதல் யுகத்த்தில் சாபம் பெற்ற சண்டன், பிரசண்டன் என்னும் கழுகுகளும், இரண்டாம் யுகத்தில் சம்பாதி, ஜடாயு என்னும் கழுகுகளும், மூன்றாம் யுகத்தில் சம்புகுத்தன், மாகுத்தன் என்னும் கழுகுகளும், நான்காம் யுகத்தில் சம்பு, ஆதி என்னும் கழுகுகளும் முறையே வழிபட்டுப் பேறு பெற்றன. மலையில் நாள்தோறும் உச்சிப் பொழுதில் இரண்டு கழுகுகள் வந்து சில ஆண்டுகள் முன்பு வரை உணவு பெற்றுச் சென்றுள்ளன. இப்போது அவைகள் வருவதில்லை.

         தாழக்கோயில் சுமார் 12 ஏக்கர் நிலப்பரளவில் நான்கு புறமும் கோபுரங்களுடன் அமைந்துள்ளது. இவற்றில் ஏழு நிலையுள்ள கிழக்கிலுள்ள கோபுரமே இராஜகோபுரம். ஆலயம் மூன்று பிராகாரங்களுடன் அமைந்துள்ளது. இக்கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தால் நேர் எதிரே ஒரு நான்கு கால் மண்டபம் உள்ளது, வலதுபுறம் உள்ள மண்டபத்தில் கோவில் அலுவலகம் உள்ளது. அலுவலக மண்டபக் கற்சுவரில் அழகான அஷ்டபுஜ துர்க்கையின் சிற்பம் உள்ளது. இடதுபுறம் 16 கால் மண்டபம். இதிலுள்ள தூண்களில் அழகிய சிற்பங்கள் உள்ளன. நான்கு கால் மண்டபத்தையடுத்து இரண்டாவது கோபுரம். கோபுரத்தின் இருபுறமும் விநாயகரும் சுப்பிரமணியரும் உள்ளனர். வெளிப் பிராகாரம் வலம் வரும்போது வடக்குச் சுற்றில் நந்தி தீர்த்தமும், கரையில் நந்தியும் உள்ளது.

         இரண்டாவது கோபுர வாயிலில் நுழைந்து பிராகாரம் வலம் வரும்போது சோமாஸ்கந்தர் சந்நிதி உள்ளது. இப்பிராகாரத்தில் பீடம் மட்டுமே கொண்டஆத்மநாதர் சந்நிதி உள்ளது. பாணப்பகுதி இல்லை. இதன் எதிரில் மாணிக்கவாசகர் சந்நிதி, ஏகாம்பரநாதர், தலவிநாயகரான வண்டுவன விநாயகர், ஜம்புகேசுவரர், அருணாசலேசுவரர் முதலிய சந்நிதிகள் தனித் தனிக் கோயில்களாக அமைந்துள்ளன. ஆறுமுகப் பெருமான் சந்நிதியும் இப்பிராகாரத்திலுள்ளது. அழகான முன் மண்டபத்துடன் உள்ள அம்பாள் சந்நிதியும் இப்பிராகாரத்தில் அமைந்துள்ளது. அம்பாள் சந்நிதி சுற்றி வலம்வர வசதி உள்ளது. உள்ளே கருவறையில் நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கி அம்மன் திரிபுரசுந்தரி அருட்காட்சி தருகிறாள். அம்பிகைக்கு தினமும் பாதத்தில் தான் அபிஷேகம் நடைபெறுகிறது. ஓராண்டில் மூன்று நாட்கள் மட்டுமே (ஆடிப்பூரம் 11ம் நாள், நவராத்திரி 9ம் நாள், பங்குனி உத்திரம் இரவு) திருவுருவம் முழுவதும் அபிஷேகம் செய்யப்படுகிறது.

         அம்பாளுக்கு எதிரில் பிரத்யட்ச வேதகிரீசுவரர் சந்நிதி. அதையடுத்து நடராச சபை. பிராகாரம் வலம் வந்து மரத்தாலான கொடிமரத்தின் முன்பு நின்று வலதுபுறம் உள்ள அகோர வீரபத்திரரைத் தொழுது, துவார பாலகர்களை வணங்கி உள் சென்று, உள் சுற்றில் வலம் வரும்போது சூரியன் சந்நிதியும் அதையடுத்து விநாயகர், 63 மூவர் மூலத் திருமேனிகளும், அடுத்து ஏழு சிவலிங்கங்களும், அதனையடுத்து நாயன்மார்களின் உற்சவத் திருமேனிகளும் உள்ளன. பைரவர் வாகனமின்றி உள்ளார். மூலவர் சதுரபீட ஆவுடையாரில் பக்தவத்சலேசுவரர் என்ற பெயருடன் கிழக்கு நோக்கி எழுந்தரிளியுள்ளார். கருவறை கஜப்பிரஷ்ட அமைப்புடையது. கோஷ்டமூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, இலிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். சண்டேஸ்வரர் தனி சந்நிதியில் உள்ளார். உட்பிராகாரத்திலுள்ள சுமார் ஏழு அடி உயரமுள்ள அகோரவீரபத்திரர் திருவுருவம் பார்த்து மகிழ வேண்டியதாகும்.

         சங்கு தீர்த்தம்: கிழக்கிலுள்ள இராஜகோபுரத்திற்கு நேரே உள்ள தெருவின் மறு கோடியில் மிக்க புகழுடைய "சங்கு தீர்த்தம்" உள்ளது. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இக்குளத்தில் சங்கு பிறக்கின்றது. இவ்வாறு கிடைத்த சங்குகள் தாழக் கோயிலில் வைக்கப்பட்டுள்ளன. மார்க்கண்டேயர் இறைவனை வழிபடப் பாத்திரமின்றித் தவித்த போது இறைவன் சங்கை உற்பத்தி செய்து தந்ததாகவும், அதுமுதற்கொண்டு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை இக்குளத்தில் சங்கு பிறப்பதாகவும் சொல்லப்படுகிறது. இரண்டுநீராழி மண்டபங்களும், நீராடுவதற்குரிய படித்துறை மண்டபமும் உள்ளன. சங்கு தீர்த்தத்தில் விடியற்காலையில் நீராடி, மலையை கிரிவலம் வருபவர்களின் நோய்கள் யாவும் நீங்கும் என்பது நம்பிக்கை.

     தாழக்கோயில் தினந்தோறும் காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரையிலும் மாலையில் 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.

         மலைக்கோயில் தினந்தோறும் காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரையிலும் மாலையில் 4-30 மணி முதல் 6-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "நல்நெறியோர் துன்னு நெறிக்கு ஓர் துணை ஆம், தூய கழுக்குன்றின் இடை முன்னும் அறிவு ஆனந்த மூர்த்தமே" என்று போற்றி உள்ளார்.



திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 1128
இருந்த"இடைச் சுரம்மேவும்
         இவர்வண்ணம் என்னே"என்று,
அருந்தமிழின் திருப்பதிகத்து
         அலர்மாலை கொடுபரவி,
திருந்துமனம் கரைந்து உருகத்
         திருக்கடைக்காப் புச்சாத்தி,
பெருந்தனிவாழ் வினைப்பெற்றார்
         பேர்உலகின் பேறுஆனார்.

         பொழிப்புரை : உலகத்தவரின் பெரும்பேறாகத் தோன்றிய ஞானசம்பந்தர், சாரல் விளங்க இருந்த அத் திருவிடைச்சுரத்தில் வீற்றிருக்கும், `பெருமானின் வண்ணம்தான் என்ன அதிசயம்\' என்று அரிய தமிழால் ஆன இனிய திருப்பதிக மலர் மாலையால் போற்றி, உள்ளம் கரைந்து உருகத் திருக்கடைக்காப்புப் பாடியருளி, பெரிய ஒப்பில்லாத சிவானந்தப் பெருவாழ்வினில் திளைத்து நின்றார்.


பாடல் எண் : 1129
நிறைந்து ஆரா வேட்கையினால்
         நின்றுஇறைஞ்சி, புறம்போந்து, அங்கு
உறைந்து அருளிப் பணிகின்றார்,
         உமைபாகர் அருள்பெற்றுச்
சிறந்ததிருத் தொண்டருடன்
         எழுந்துஅருளிச் செந்துருத்தி
அறைந்துஅளிகள் பயில்சாரல்
         திருக்கழுக்குன் றினைஅணைந்தார்.

         பொழிப்புரை : சிவானந்தப் பெருவாழ்வில் நிறைவுற்று ஆராத வேட்கையினால் நீண்ட நேரம் நின்று வணங்கி, வெளியே வந்து, அப்பதியில் தங்கியிருந்து பணிந்து வரும் பிள்ளையார், அவ்விறைவரின் அருள்விடை பெற்றுக் கொண்டு, சிறந்த திருத்தொண்டர்களுடன் எழுந்தருளிச் சென்று, செந்துருத்தி என்ற பண்ணைப் பாடி, வண்டுகள் மொய்க்கின்ற சாரலையுடைய திருக்கழுக்குன்றத்தை அடைந்தருளினார்.

         குறிப்புரை : செந்துருத்திப் பண்ணில் அமைந்த பதிகத்தைப் பாடியவாறு, திருக்கழுக்குன்றத்தினை அடைந்துள்ளார். இப்பதிகம் கிடைத்திலது. செந்துருத்திப் பண்ணில் அமைந்த `மீளா அடிமை' (தி.7 ப.95) எனத் தொடங்கும் சுந்தரரின் திருப்பதிகம் ஒன்றே இதுபொழுது கிடைத்துள்ளது.


பெ. பு. பாடல் எண் : 1130
சென்றுஅணையும் பொழுதின்கண்
         திருத்தொண்டர் எதிர்கொள்ள,
பொன்திகழும் மணிச்சிவிகை
         இழிந்துஅருளி, உடன்போந்து,
மன்றல்விரி நறும்சோலைத்
         திருமலையை வலங்கொண்டு,
மின்தயங்கும் சடையாரை
         விருப்பினுடன் பணிகின்றார்.

         பொழிப்புரை : திருக்கழுக்குன்றத்தில் சென்று அடையும் போதில், அப்பகுதியில் வாழ்கின்ற தொண்டர்கள் வந்து வரவேற்க, பொன் விளங்கும் முத்துச் சிவிகையினின்றும் கீழே இறங்கி, அவர்களுடன் சேர்ந்து, மணம் விரிந்து கமழும் நல்ல மலர்களையுடைய சோலைகள் சூழ்ந்த அம்மலையை வலமாக வந்து, மின்போல் விளங்கும் சடையையுடைய இறைவரை விருப்பத்தோடு பணிபவராய்,


பெ. பு. பாடல் எண் : 1131
திருக்கழுக்குன் றத்துஅமர்ந்த
         செங்கனகத் தனிக்குன்றைப்
பெருக்கவளர் காதலினால்
         பணிந்துஎழுந்து, பேராத
கருத்தினுடன், "காதல்செயும்
         கோயில்கழுக் குன்று" என்று
திருப்பதிகம் புனைந்துஅருளிச்
         சிந்தைநிறை மகிழ்வுற்றார்.

         பொழிப்புரை : அத் திருக்கழுக்குன்றத்தின் மீது விரும்பி வீற்றிருந்தருளும் ஒப்பில்லாத செம்பொன்குன்றம் போன்ற மறைகளின் தலைவரான சிவபெருமானை, வளரும் விருப்பத்தினால் வணங்கி, எழுந்து, ஒன்றிய கருத்துடன் காதல் செய்யும் கோயில் கழுக்குன்று என்ற நிறைவுடைய திருப்பதிகத்தைப் பாடி, உளம் நிறைந்த மகிழ்வை அடைந்தார்.

         குறிப்புரை : : இதுபொழுது அருளிய பதிகம், `தோடுடையான்' (தி.1 ப.103) எனத் தொடங்கும் குறிஞ்சிப் பண்ணிலமைந்த பதிகமாகும். இப்பதிகப் பாடல் பத்தும் `காதல்செய் கோயில் கழுக்குன்றே' என நிறைவு பெறுதலை உளங்கொண்டு ஆசிரியர் இங்ஙனம் கூறுவார் ஆயினர். திருக்கடைக்காப்பிலும் இத்தொடர் எடுத்து மொழியப்பட்டுள்ளது.


1.103 திருக்கழுக்குன்றம்                  பண் - குறிஞ்சி
                                             திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
தோடு உடையான் ஒரு காதில் தூய குழைதாழ,
ஏடு உடையான் தலைகலனாக இரந்து உண்ணும்
நாடு உடையான், நள்இருள் ஏமம் நடமாடும்
காடுஉடையான் காதல் செய் கோயில் கழுக்குன்றே.

         பொழிப்புரை :ஒரு காதில் தோடும் பிறிதொரு காதில் தூய குழையும் தாழ்ந்து தொங்கத், தாமரை மலரில் தங்கும் பிரமனின் தலையோட்டை உண் கலனாகக் கொண்டு இரந்துண்ணும் நாடுகளை உடையவன். நள்ளிருள் யாமத்தில் மகிழ்வோடு சுடுகாட்டில் நடனம் ஆடுபவன். அத்தகையோன் விரும்பி உறையும் கோயில் திருக்கழுக்குன்றமாகும்.


பாடல் எண் : 2
கேணவல்லான் கேழல் வெண்கொம்பு, குறள்ஆமை
பூணவல்லான், புரிசடை மேலொர் புனல்கொன்றை
பேணவல்லான், பெண்மகள் தன்னை ஒருபாகம்
காணவல்லான், காதல் செய்கோயில் கழுக்குன்றே.

         பொழிப்புரை :திருமாலாகிய பன்றியினது வெண்மையான கொம்பை அகழ்ந்து அணியவல்லவன். வாமனனாக அவதரித்த திருமாலின் கூர்மாவதார ஆமையோட்டினை அணிகலனாகக் கோத்துப் பூணவல்லவன். முறுக்கிய சடைமுடிமேல் ஒப்பற்ற கங்கை, கொன்றை மாலை ஆகியவற்றை விரும்பி அணிபவன். பெண்ணின் நல்லவளான உமையம்மையைத் தன் திருமேனியின் ஒரு பாகமாகக் காணுமாறு செய்தருளியவன். அத்தகையோன் காதல் செய்யும் கோயில் திருக்கழுக்குன்றமாகும்.


பாடல் எண் : 3
தேன் அகத்து ஆர் வண்டு அதுவுண்ட திகழ்கொன்றை
தான் நகத்தார் தண் மதி சூடித் தலைமேல் ஓர்,
வானகத்தார் வையகத்தார்கள் தொழுது ஏத்தும்
கான் அகத்தான் காதல் செய் கோயில் கழுக்குன்றே.

         பொழிப்புரை :தேனை அகத்தே இருந்து வண்டுகள் உண்ட, விளங்கிய கொன்றை மாலையைச் சூடிய தலையில் மதியைச் சூடி, வானகத்தவரும், வையகத்தவரும் தொழுதேத்தும் வண்ணம் சுடுகாட்டைத் தனக்கு இடமாகக் கொண்ட இறைவன் விரும்பி உறையும் கோயில் திருக்கழுக்குன்றம்.


பாடல் எண் : 4
துணையல் செய்தான் தூய வண்டு யாழ்செய் சுடர்க்கொன்றை,
பிணையல் செய்தான், பெண்ணின் நல்லாளை ஒருபாகம்,
இணையல் செய்யா இலங்கு எயில் மூன்றும் எரிஉண்ணக்
கணையல் செய்தான் காதல் செய் கோயில் கழுக்குன்றே.

         பொழிப்புரை :வண்டுகள் யாழ்போல் ஒலித்து மொய்க்கும் தூய ஒளி நிறைந்த கொன்றை மாலையை அணிந்தவனும், பெண்ணின் நல்லவளான உமையம்மையைக்கூடி அவளைத்தன் உடலில் ஒரு பாகமாகப் பிணைத்திருப்பவனும், தன்னோடு இணைந்து வாராத புரங்கள் மூன்றையும் எரி உண்ணுமாறு கணையை விடுத்தவனுமாகிய சிவபிரான் காதல் செய்யும் கோயில், கழுக்குன்றம் ஆகும்.


பாடல் எண் : 5
பைஉடைய பாம்பொடு நீறு பயில்கின்ற
மெய் உடையான், வெண்பிறை சூடி விரிகொன்றை,
மை உடைய மாமிடற்று அண்ணல், மறிசேர்ந்த
கை உடையான் காதல் செய் கோயில் கழுக்குன்றே.

         பொழிப்புரை :நச்சுப் பையையுடைய பாம்போடு திருநீறு அணிந்த திருமேனியை உடையவனும், வெண்பிறையையும், விரிந்த கொன்றையையும் முடியில் சூடியவனும், விடம் பொருந்தியமிடற்றினை உடைய தலைமையாளனும், மானேந்திய கையை உடையவனுமாகிய சிவபிரான் விரும்பி உறையும் கோயில் கழுக்குன்றம் ஆகும்.

பாடல் எண் : 6
வெள்ளம் எல்லாம் விரிசடை மேல், ஓர் விரிகொன்றை
கொள்ள வல்லான், குரைகழல் ஏத்தும் சிறுத்தொண்டர்
உள்ளம் எல்லாம் உள்கி நின்று ஆங்கே உடன்ஆடும்
கள்ளம் வல்லான், காதல் செய் கோயில் கழுக்குன்றே.

         பொழிப்புரை :விரிந்த சடைமுடியின்மேல் வெள்ளமாகப் பெருகி வந்த கங்கையின் அனைத்து நீரையும் விரிந்த கொன்றை மாலையோடு சூடியிருப்பவனும், தனது ஒலிக்கின்ற கழல் அணிந்த திருவடிகளை ஏத்தித் துதிக்கும் சிறிய தொண்டர்களின் உள்ளமெல்லாம் நிறைந்து, அவர்கள் தியானித்து நின்று ஆடத்தானும் உடன் ஆடும் கள்ளம் வல்லவனுமாகிய, சிவபிரான் காதல் செய்யும் கோயில் கழுக்குன்றம் ஆகும்.


பாடல் எண் : 7
* * * * * * * * * *
பாடல் எண் : 8
ஆதல் செய்தான் அரக்கர் தம் கோனை அருவரையின்
நோதல் செய்தான் நொடி வரையின் கண் விரல் ஊன்றிப்
பேர்தல் செய்தான், பெண்மகள் தன்னோடு ஒருபாகம்
காதல் செய்தான், காதல் செய் கோயில் கழுக்குன்றே.

         பொழிப்புரை :அரக்கர் கோனை அரிய கயிலை மலையின்கீழ் அகப்படுத்தி, நொடிப்பொழுதில் கால் விரலை ஊன்றி, அவனை நோதல் செய்தவனும், பிறகு அவனுக்கு ஆக்கம் வழங்கியவனும், பெண்மகளாகிய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு காதல் செய்தவனுமாகிய சிவபிரான் காதல் செய்யும் கோயில் கழுக்குன்றம் ஆகும்.

பாடல் எண் : 9
இடந்த பெம்மான் ஏனம் அது ஆயும், அனமாயும்
தொடர்ந்த பெம்மான், தூமதிசூடி வரையார் தம்
மடந்தை பெம்மான், வார்கழல் ஓச்சிக் காலனைக்
கடந்த பெம்மான், காதல் செய் கோயில் கழுக்குன்றே.

         பொழிப்புரை :அடிமுடி காணப் பன்றி உருவோடு நிலத்தை அகழ்ந்து சென்ற திருமாலும், அன்னமாய்ப் பறந்து சென்ற நான்முகனும், தொடர்ந்த பெருமானாய், தூய மதியை முடியிற் சூடியவன், மலைமகளின் தலைவன், வார்கழலணிந்த திருவடியை உயர்த்திக் காலனைக் காய்ந்தவன் ஆகிய சிவபிரான் காதல் செய்யும் கோயில் கழுக்குன்றம் ஆகும்.


பாடல் எண் : 10
தேய நின்றான் திரிபுரம், கங்கை சடைமேலே
பாய நின்றான், பலர் புகழ்ந்து ஏத்த உலகு எல்லாம்
சாய நின்றான், வன்சமண் குண்டர் சாக்கீயர்
காய நின்றான், காதல் செய் கோயில் கழுக்குன்றே.

         பொழிப்புரை :முப்புரங்களை அழியுமாறு செய்தவனும், பெருகிவந்த கங்கை தன் சடை மேல் பாய நின்றவனும், பலரும் புகழ்ந்து போற்ற உலகனைத்தும் ஊழி இறுதியில் அழியுமாறு நின்றவனும், வலிய சமண் குண்டர்களும், புத்தர்களும் கெடுமாறு நின்றவனும் ஆகிய சிவபிரான் காதல் செய்யும் கோயில் கழுக்குன்றமாகும்.


பாடல் எண் : 11
கண்ணுதலான் காதல் செய்கோயில் கழுக்குன்றை
நண்ணிய சீர் ஞானசம்பந்தன் தமிழ்மாலை
பண் இயல்பால் பாடிய பத்தும் இவைவல்லார்
புண்ணியராய் விண்ணவரோடும் புகுவாரே.

         பொழிப்புரை :நெற்றியில் கண்ணுடையவனாகிய சிவபிரான் காதல் செய்யும் கோயிலாகிய திருக்கழுக்குன்றத்தைப் புகழ் பொருந்திய ஞானசம்பந்தன் பண் அமைதியோடு பாடிய தமிழ் மாலையாகிய பத்துப் பாடல்களையும் பாடிப் போற்றுபவர் புண்ணியராய்த் தேவர்களோடு வானுலகம் புகுவர்.

                                             திருச்சிற்றம்பலம்

----------------------------------------------------------------------------------------------------------

திருநாவுக்கரசர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 330
நீடுதிருக் கழுக்குன்றில் நிருத்தனார் கழல்வணங்கி,
பாடுதமிழ்த் தொடைபுனைந்து, பாங்குபல பதிகளிலும்
சூடும்இளம் பிறைமுடியார் தமைத்தொழுது, போற்றிப்போய்
மாடுபெரும் கடல்உடுத்த வான்மியூர் வந்துஅணைந்தார்.

         பொழிப்புரை : நாவரசர் நிலைத்த செல்வம் உடைய கழுக் குன்றத்தில் வீற்றிருக்கும் கூத்தப் பெருமானின் திருவடிகளை வணங்கி, அருந்தமிழ் மாலையைப் பாடி, அருகிலுள்ள பல திருப்பதிகளுக்கும் சென்று, பிறையைச் சூடும் திருமுடியினையுடைய இறைவரை வணங்கிப் போற்றி, மேலும் சென்று, கடலால் சூழப்பட்ட திருவான்மியூர் என்னும் திருப்பதியைச் சேர்ந்தார்.

         குறிப்புரை : திருக்கழுக்குன்றத்தில் அருளிய பதிகம் `மூவிலை வேல்` (தி.6 ப.92) எனத் தொடங்கும் திருத்தாண்டகம் ஆகும். பாங்கு பலபதிகள் என்பன, திருவன்பார்த்தான் பனங்காட்டூர், திருமாகறல், திருவிடைச்சுரம், திருக்கச்சூர் ஆலக்கோயில் முதலாயினவாகலாம் என்பர் சிவக்கவிமணியார் (பெரிய.பு.உரை). பதிகங்கள் எவையும் கிடைத்தில.

                                    6. 092    திருக்கழுக்குன்றம்
                                             திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
மூவிலைவேல் கையானை, மூர்த்தி தன்னை,
         முதுபிணக்காடு உடையானை, முதல் ஆனானை,
ஆவினில்ஐந்து உகந்தானை, அமரர் கோனை,
         ஆலாலம் உண்டுஉகந்த ஐயன் தன்னை,
பூவினின்மேல் நான்முகனும் மாலும் போற்றப்
         புணர்வுஅரிய பெருமானை, புனிதன் தன்னை,
காவலனை, கழுக்குன்றம் அமர்ந்தான் தன்னை,
         கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.

         பொழிப்புரை :மூவிலை வேலாகிய சூலத்தைப் பிடித்த கையினனும் , அழகிய கடவுளும் , பிணமுதுகாட்டை உடையவனும் , எல்லாவற்றிற்கும் அடியானவனும் , தேவர்களுடைய அரசனும் , ஆல கால விடத்தை மகிழ்ந்துண்ட தலைவனும் , தாமரைமேல் வீற்றிருக்கும் நான்முகனும் திருமாலும் வணங்குதற்கு நெருங்க முடியாத பெருமானும் , புனிதனும் , எல்லாவற்றையும் காப்பவனும் , கழுக்குன்றில் அமர்ந்தவனும் ஆகிய கற்பகத்தை நான் கண்ணாரக்கண்டேன் .


பாடல் எண் : 2
பல்லாடு தலைசடைமேல் உடையான் தன்னை,
         பாய்புலித்தோல் உடையானை, பகவன் தன்னை,
சொல்லோடு பொருள்அனைத்தும் ஆனான் தன்னை,
         சுடர்உருவில் என்புஅறாக் கோலத் தானை,
அல்லாத காலனைமுன் அடர்த்தான் தன்னை,
         ஆலின்கீழ் இருந்தானை, அமுது ஆனானை,
கல்லாடை புனைந்துஅருளுங் காபா லியை,
         கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.

         பொழிப்புரை :பற்கள் வெளியே தோன்றுகின்ற வெண் தலையைச் சடைமேல் தரித்தவனும் , பாயும் புலியை உரித்துக்கொண்ட தோலாகிய உடையினனும் , சிறந்த ஆறு குணங்களை உடையவனும் , சொற்களும் பொருள்கள் எல்லாமும் ஆனவனும் , என்புஅணி நீங்கப்பெறாத தோற்றத்துடன் ஒளிவிட்டுத் திகழ்பவனும் , முறை யல்லாத செயலை மேற்கொண்ட காலனை முன் ஒறுத்தவனும் , ஆலின் கீழ் இருந்தவனும், அமுதமானவனும், கல்லாடை புனைந்தருளும் காபாலியும் ஆகிய கற்பகத்தை நான் கண்ணாரக் கண்டேன் .


 * * * * * * 3 - 10  * * * * * * * * * * *
        
                                             திருச்சிற்றம்பலம்

----------------------------------------------------------------------------------------------------------


சுந்தரர் திருப்பதிக வரலாறு
ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்.

பெரிய புராணப் பாடல் எண் : 172
தண்டகமாம் திருநாட்டுத்
         தனிவிடையார் மகிழ்விடங்கள்
தொண்டர்எதிர் கொண்டுஅணையத்
         தொழுதுபோய், தூயநதி
வண்டுஅறைபூம் புறவுமலை
         வளமருதம் பலகடந்தே
எண்திசையோர் பரவுதிருக்
         கழுக்குன்றை எய்தினார்.

         பொழிப்புரை : குளிர்ந்த நீர்வளமுடைய திருநாட்டில் ஒப்பற்ற ஆனேற்று ஊர்தியையுடைய பெருமான் மகிழ்ந்தருளும் இடங்களில் அடியவர்கள் அங்கங்கும் எதிர்கொண்டு வணங்கிடத் தொழுது சென்று, தூய ஆறுகளும், வண்டுகள் பாடும் சோலைகள் சூழ்ந்த முல்லை நிலங்களும், மலைவளம் தரும் குறிஞ்சி நிலங்களும், மருத நிலங்களுமாய பல இடங்களைக் கடந்து, எண்திசையினில் உள்ளாகியவரும் வணங்கிடும் திருக்கழுக்குன்றத்தை அடைந்தார்.

         குறிப்புரை : மகிழ்விடங்கள் தொழுது என்பன, திருப்புறவார்பனங்காட்டூர், திண்டீச்சுரம், திருஅச்சிறுபாக்கம், உருத்திரகோடி முதலாயின வாகலாம் என்பர் சிவக்கவிமணியார். நதிகள் - வராக நதி, பாலாறு, பெண்ணையாறு முதலியன. புறவு - இடைப்பட்ட காடுகள். திண்டிவ னம், அச்சிறுபாக்கம், செஞ்சி முதலாயின என்பர் சிவக்கவிமணியார்.


பெ. பு. பாடல் எண் : 173
தேன்ஆர்ந்த மலர்ச்சோலை
         திருக்கழுக்குன் றத்துஅடியார்,
ஆனாத விருப்பினொடும்
         எதிர்கொள்ள, அடைந்துஅருளி,
தூநாள்வெண் மதிஅணிந்த
         சுடர்க்கொழுந்தைத் தொழுது, இறைஞ்சி,
பாநாடும் இன்னிசையின்
         திருப்பதிகம் பாடினார்.

         குறிப்புரை : இங்கு அருளிய பதிகம் `கொன்று செய்த' (தி.7 ப.8) என்னும் தொடக்கமுடைய நட்டபாடைப் பண்ணில் அமைந்த பதிகமாகும்.



7. 081   திருக்கழுக்குன்றம்                பண் - நட்டபாடை
                                    திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
கொன்று செய்த கொடுமை யால்பல சொல்லவே,
நின்ற பாவ வினைகள் தாம்பல நீங்கவே,
சென்று சென்று தொழுமின் தேவர் பிரானிடம்
கன்றி னோடு பிடிசூழ் தண்கழுக் குன்றமே.

         பொழிப்புரை : உலகீர் , தேவர்களுக்குத் தலைவனாகிய சிவபெரு மானது இடம் , பிடியானைகள் தங்கள் கன்றுகளோடு சூழ்ந்திருக்கும் தண்ணிய திருக்கழுக்குன்றமே ; அதனை , பிற உயிர்களை வருத்து மாற்றாற் செய்த கொடுஞ்செயல்களால் , பலரும் பல இகழுரைகளைச் சொல்லுமாறு இழிவெய்த நின்ற பாவமாகிய வினைகள் பலவும் நீங்குதற்பொருட்டுப் பலகாலும் சென்று வணங்குமின்கள் .


பாடல் எண் : 2
இறங்கிச் சென்று தொழுமின் இன்னிசை பாடியே
பிறங்கு கொன்றைச் சடையன் எங்கள் பிரானிடம்,
நிறங்கள் செய்த மணிகள் நித்திலம் கொண்டுஇழி
கறங்கு வெள்ளை அருவித் தண்கழுக் குன்றமே

         பொழிப்புரை : உலகீர் , விளங்குகின்ற , கொன்றை மாலையை அணிந்த சடையையுடைய எங்கள் பெருமானது இடம் , பல நிறங்களையும் காட்டுகின்ற மணிகளோடு , முத்தினையும் தள்ளிக் கொண்டு பாய்கின்ற , ஒலிக்கும் வெண்மையான அருவிகளையுடைய , குளிர்ந்த திருக்கழுக்குன்றமே ; அதனை , தலைவணங்கிச் சென்று , இனிய இசைகளைப் பாடி வழிபடுமின்கள் .


பாடல் எண் : 3
நீள நின்று தொழுமின் நித்தலும் நீதியால்,
ஆளும் நம்ம வினைகள் அல்கி அழிந்திட,
தோளும் எட்டும் உடைய மாமணிச் சோதியான்,
காள கண்டன் உறையும் தண்கழுக் குன்றமே

         பொழிப்புரை : உலகீர் , நம்மை ஆளுகின்ற நம் வினைகள் குறைந்து , முழுதும் ஒழிதற்பொருட்டு , தோள்கள் எட்டினையும் உடைய , சிறந்த மாணிக்கம்போலும் ஒளியை யுடையவனாகிய , நஞ்சணிந்த கண்டத்தை உடையவன் எழுந்தருளியிருக்கின்ற , குளிர்ந்த திருக்கழுக்குன்றத்தை , நாள்தோறும் , முறைப்படி , நெடிது நின்று வழிபடுமின்கள் .


பாடல் எண் : 4
வெளிறு தீரத் தொழுமின் வெண்பொடி ஆடியை,
முளிறு இலங்கு மழுவா ளன்முந்தி உறைவிடம்,
பிளிறு தீரப் பெருங்கைப் பெய்மதம் மூன்றுஉடைக்
களிறி னோடு பிடிசூழ் தண்கழுக் குன்றமே

         பொழிப்புரை : உலகீர் , வெம்மை பொருந்திய மழுப்படையை உடைய சிவபெருமான் முற்பட்டு எழுந்தருளியிருக்கின்ற இடம் , பிளிறுகின்ற , மனவலியையும் , பெரிய தும்பிக்கையையும் , பொழி கின்ற மதங்கள் மூன்றையும் உடைய களிற்றி யானைகளோடு , பிடி யானைகள் சூழ்ந்துள்ள , குளிர்ந்த திருக்கழுக்குன்றமே ; ஆதலின் , உங்கள் அறியாமை நீங்குதற்பொருட்டு , அங்குச்சென்று , திருநீற்றில் மூழ்குகின்றவனாகிய அப்பெருமானை வழிபடுமின்கள் .


பாடல் எண் : 5
புலைகள் தீரத் தொழுமின் புன்சடைப் புண்ணியன்,
இலைகொள் சூலப் படையன், எந்தை பிரானிடம்,
முலைகள் உண்டு தழுவுக் குட்டி யொடுமுசுக்
கலைகள் பாயும் புறவில் தண்கழுக் குன்றமே.

         பொழிப்புரை : உலகீர் , புல்லிய சடையை உடைய அற வடிவின னும் , இலை வடிவத்தைக்கொண்ட சூலப் படையை உடைய எம் தந்தை யும் , எங்கள் தலைவனும் ஆகிய இறைவனது இடம் , பாலை உண்டு தழுவுதலை உடைய குட்டியோடு பெண் முசுவும் , அதனோடு ஆண் முசுவும் மரக்கிளைகளில் தாவுகின்ற காட்டினையுடைய , குளிர்ந்த திருக்கழுக்குன்றமே ; அதனை உங்கள் கீழ்மைகள் எல்லாம் நீங்கும் பொருட்டுச் சென்று வழிபடுமின்கள் .


பாடல் எண் : 6
மடம் உடைய அடியார் தம்மனத் தேயுற
விடம் உடைய மிடறன், விண்ணவர் மேலவன்,
படம் உடைய அரவன் தான்பயி லும்இடம்
கடம் உடைய புறவில் தண்கழுக் குன்றமே

         பொழிப்புரை : நஞ்சினை உண்ட கண்டத்தையுடையவனும், தேவர்கட்கு மேலானவனும் , படமுடைய பாம்பை யுடையவனும் ஆகிய சிவபெருமான் , தன்னையன்றி வேறொன்றையும் அறியாத அடியவரது மனத்தில் பொருந்தும் வண்ணம் நீங்காது எழுந்தருளி யிருக்கின்ற இடம் , காட்டையுடைய , முல்லை நிலத்தோடு கூடிய குளிர்ந்த திருக்கழுக்குன்றமே .


பாடல் எண் : 7
ஊனம் இல்லா அடியார் தம்மனத் தேஉற
ஞான மூர்த்தி நட்டம் ஆடிநவி லும்இடம்
தேனும் வண்டும் மதுவுண்டு இன்னிசை பாடவே
கான மஞ்ஞை உறையும் தண்கழுக் குன்றமே

         பொழிப்புரை : ஞான வடிவினனும் , நடனம் ஆடுபவனும் ஆகிய சிவபெருமான், குறைபாடு இல்லாத தன் அடியார்களது மனத்திற் பொருந்தும் வண்ணம் , நீங்காது எழுந்தருளியிருக்கின்ற இடம் , தேனும் , வண்டும் தேனை உண்டு இனிய இசையைப்பாட , காட்டில் மயில்கள் அதனைக் கேட்டு இன்புற்றிருக்கின்ற திருக்கழுக்குன்றமே .


பாடல் எண் : 8
அந்தம் இல்லா அடியார் தம்மனத் தேஉற
வந்து நாளும் வணங்கி மாலொடு நான்முகன்
சிந்தை செய்த மலர்கள் நித்தலும் சேரவே
சந்தம் நாறும் புறவில் தண்கழுக் குன்றமே

         பொழிப்புரை : அளவற்ற அடியார்களது மனத்திற் பொருந்தும் வண்ணமும் , திருமாலும் நான்முகனும் நாள்தோறும் வந்து வணங்கி வழிபட்ட , மலர்கள் நாள்தோறும் குவிந்து கிடக்கும் வண்ணமும் , நடனமாடுகின்ற சிவபெருமான் எழுந்தருளியிருக்கின்ற இடம் , சந்தன மரம் மணம் வீசுகின்ற , முல்லை நிலத்தோடு கூடிய , குளிர்ந்த திருக் கழுக்குன்றமே .


பாடல் எண் : 9
பிழைகள் தீரத் தொழுமின் பின்சடைப் பிஞ்ஞகன்
குழைகொள் காதன் குழகன் தான்உறை யும்மிடம்
மழைகள் சாலக் கலித்து நீடுயர் வேய்அவை
கழைகொள் முத்தம் சொரியும் தண்கழுக் குன்றமே

         பொழிப்புரை : உலகீர் , பின்னிய சடையின்கண் தலைக் கோலங் களையுடையவனும் , ` குழை ` என்னும் அணியை அணிந்த காதினை உடையவனும் ஆகிய சிவபெருமான் எழுந்தருளியிருக்கின்ற இடம் , மேகங்கள் மிக முழங்க , மிக உயர்ந்த வேயும் , கழையுமாகிய மூங்கில்கள் முத்துக்களைச் சொரிகின்ற , குளிர்ந்த திருக்கழுக்குன்றமே ; அதனை , உங்கள் குற்றங்களெல்லாம் நீங்குதற் பொருட்டு வழிபடு மின்கள் .


பாடல் எண் : 10
பல்லின் வெள்ளைத் தலையன் தான்பயி லும்மிடம்
கல்லின் வெள்ளை அருவித் தண்கழுக் குன்றினை
மல்லின் மல்கு திரள்தோள் ஊரன் வனப்பினால்
சொல்லல் சொல்லித் தொழுவா ரைத்தொழுமின்களே

         பொழிப்புரை : உலகீர் , பற்களையுடைய வெண்மையான தலையை உடையவன் நீங்காது எழுந்தருளியிருக்கின்ற இடம் , பாறைகளின்மேல் வீழ்கின்ற வெண்மையான அருவிகளையுடைய , குளிர்ந்த திருக்கழுக்குன்றமே ; அதனை , வலிமை மிக்க, திரண்ட தோள் களையுடையவனாகிய நம்பியாரூரனது வனப்புடைய பாடல்களால் துதித்து வழிபடுவோரை வழிபடுமின்கள் .

                                             திருச்சிற்றம்பலம்




மணிவாசகப் பெருமான்
அருளிய
திருவாசகம்

திருக்கழுக்குன்றப் பதிகம்

திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
பிணக்கு இலாத பெருந்துறைப் பெரு
     மான்! உன் நாமங்கள் பேசுவார்க்கு,
இணக்கு இலாததோர் இன்பமே வரும்,
     துன்பம் ஏது உடைத்து, எம்பிரான்!
உணக்கு இலாததோர் வித்து மேல் விளை
     யாமல் என்வினை ஒத்தபின்,
கணக்கு இலாத் திருக் கோலம் நீ வந்து
     காட்டினாய் கழுக் குன்றிலே.

பொழிப்புரை : பெருந்துறைப் பெருமானே! உன் திருப் பெயர்களைப் புகழ்ந்து பேசுவோர்க்கு ஒப்பற்ற ஆனந்தமே! என் இருவினை ஒத்தபிறகு, என் பிறவி வித்து இனிமேல் முளையாதபடி, நீ திருக்கழுக் குன்றிலே எழுந்தருளி உன் திருக்கோலத்தைக் காட்டி அருளினாய். உன் பெருங்கருணை இருந்தவாறு என்னே?.


பாடல் எண் : 2
பிட்டு நேர்பட மண் சுமந்த
     பெருந்துறைப் பெரும் பித்தனே!
சட்ட நேர்பட வந்திலாத
     சழக்கனேன் உனைச் சார்ந்திலேன்
சிட்டனே! சிவலோகனே! சிறு
     நாயினும் கடை ஆய வெம்
கட்டனேனையும் ஆட்கொள்வான் வந்து
     காட்டினாய் கழுக்குன்றிலே.

பொழிப்புரை : பிட்டுக்கு மண் சுமந்த பெருந்துறைப் பெருமானே! உன் கட்டளைக்கு இணங்கி வாராத குற்றத்தை உடைய நான் உன்னை அடைந்திலேன்; ஆயினும், நாயினும் கடைப்பட்ட என்னையும் ஆட்கொள்ளும் பொருட்டுத் திருக்கழுக்குன்றில் எழுந்தருளி உன் திருக்கோலத்தைக் காட்டி அருளினாய்; உன் பெருங்கருணை இருந்தவாறு என்னே?.


பாடல் எண் : 3
மலங்கினேன் கண்ணின் நீரை மாற்றி,
     மலம் கெடுத்த பெருந்துறை!
விலங்கினேன், வினைக் கேடனேன், இனி
     மேல் விளைவது அறிந்திலேன்,
இலங்குகின்ற நின் சேவடிகள்
     இரண்டும் வைப்பிடம் இன்றியே
கலங்கினேன், கலங்காமலே வந்து
     காட்டினாய் கழுக்குன்றிலே.

பொழிப்புரை : என் கண்ணீர் துடைத்து என் மலத்தை அழித்து ஆட்கொண்ட திருப்பெருந்துறைப் பெருமானே! நான் உன்னை விட்டு நீங்கினேன்; மேல் விளையும் காரியத்தை அறிந்திலேன்; உன் திருவடி இரண்டையும் வைக்கத் தூய்மையான இடம் இல்லாமல் கலங்கினேன்; நான் கலங்காதபடி நீ திருக்கழுக்குன்றிலே எழுந்தருளி, உன் திருக் கோலத்தைக் காட்டி அருளினாய்; உன் பெருங்கருணை இருந்தவாறு என்னே?.


பாடல் எண் : 4
பூண ஒணாததொர் அன்பு பூண்டு,
     பொருந்தி நாள்தொறும் போற்றவும்,
நாண ஒணாததொர் நாணம் எய்தி,
     நடுக்கடல் உள் அழுந்தி நான்
பேண ஒணாத பெருந்துறைப் பெரும்
     தோணி பற்றி உகைத்தலும்,
காண ஒணாத் திருக் கோலம் நீ வந்து
     காட்டினாய்க் கழுக்குன்றிலே.

பொழிப்புரை : உன் அன்பர் உன்னிடத்தில் பேரன்பு பூண்டு வணங்கக் கண்டு, நான் மிக்க நாணம் அடைந்து, துன்பக் கடலில் அழுந்தி, திருப்பெருந்துறையாகிய பெருந்தெப்பத்தைப் பற்றிச் செலுத்தலும், நீ திருக்கழுக்குன்றிலே எழுந்தருளி, காணமுடியாத உன் திருக்கோலத்தைக் காட்டி அருளினாய். உன் பெருங்கருணை இருந்தவாறு என்னே?.


பாடல் எண் : 5
கோல மேனி வராகமே! குணம்
     ஆம் பெருந்துறைக் கொண்டலே!
சீலம் ஏதும் அறிந்திலாத என்
     சிந்தை வைத்த சிகாமணி!
ஞாலமே கரி ஆக நான் உனை
     நச்சி நச்சிட வந்திடும்
காலமே! உனை ஓத, நீ வந்து
     காட்டினாய் கழுக்குன்றிலே.

பொழிப்புரை : அழகிய திருவுருவம் உடையவனே! திருப்பெருந் துறைக் கொண்டலே! சற்றும் நல்லொழுக்கத்தை அறியாத என் மனத் தில் வைக்கப் பட்டிருக்கிற சிகாமணியே! உலகமே சாட்சியாக நான் உன்னைப் புகழும்படி திருக்கழுக்குன்றிலே எழுந்தருளி எனக்குத் திருக்கோலத்தைக் காட்டி அருளினாய். உன் பெருங்கருணை இருந்தவாறு என்னே?.


பாடல் எண் : 6
பேதம் இல்லது ஒர் கற்பு அளித்த
     பெருந்துறைப் பெரு வெள்ளமே!
ஏத மே பல பேச, நீ எனை
     ஏதிலார் முனம் என் செய்தாய்?
சாதல் சாதல் பொல்லாமை அற்ற
     தனிச் சரண் சரணாம் எனக்
காதலால் உனை ஓத, நீ வந்து
     காட்டினாய் கழுக்குன்றிலே.

பொழிப்புரை : வேறுபடுதல் இல்லாத ஒப்பற்ற கல்வியாகிய ஞானத்தை அருள்செய்த திருப்பெருந்துறை இன்பப் பெருக்கே! பல தீமைகள் பேசும்படி என்னை அயலார் முன்னே நீ என்ன காரியம் செய்து வைத்தாய்?. முடிவற்றனவும், தீங்கற்றனவுமாகின உன் திருவடிகளே எனக்குப் புகலிடம் எனக் கருதி ஆசையோடு உன்னைப் புகழும் வண்ணம் நீ திருக்கழுக்குன்றிலே எழுந்தருளி, உன் திருக்கோலத்தைக் காட்டி அருளினாய். உன் பெருங்கருணை இருந்தவாறு என்னே?.

பாடல் எண் : 7
இயக்கிமார் அறுபத்து நால்வரை
     எண்குணம் செய்த ஈசனே!
மயக்கம் ஆயதோர் மும்மலப் பழ
     வல்வினைக்குள் அழுந்தவும்,
துயக்கு அறுத்து எனை ஆண்டு கொண்டு,நின்
     தூய் மலர்க்கழல் தந்து, னைக்
கயக்க வைத்து, டியார் முனே வந்து
     காட்டினாய் கழுக்குன்றிலே.

பொழிப்புரை : இயக்கிமார் அறுபத்து நால்வரைத் தன் ஞானோபதேசத்தால் எண்குணமும் அடையச் செய்த ஈசனே! மயக்கத்துக்கு ஏதுவாகிய மும்மல சம்பந்தமாகிய வல்வினைக் கடலில் அடியேன் அழுந்தி நிற்கவும் என் தளர்ச்சியை நீக்கி, என்னை ஆண்டருளி, உன் திருவடிகளைத் தந்து அடியார்களுக்கு எதிரில் திருக்கழுக்குன்றிலே எழுந்தருளி, உன் திருக்கோலத்தைக் காட்டி அருளினாய். உன் பெருங்கருணை இருந்தவாறு என்னே?.

திருச்சிற்றம்பலம்












No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...