திருச்செந்தூர் - 0062. தண்டை அணி


அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

தண்டை அணி (திருச்செந்தூர்)

முருகா!
தேவரீரைக்கண் குளிரக் கண்டு வணங்க அருள்


தந்ததன தந்தனந் தந்ததன தந்தனந்
     தந்ததன தந்தனந் ...... தந்ததானா


தண்டையணி வெண்டையங் கிண்கிணிச தங்கையுந்
     தண்கழல்சி லம்புடன் ......       கொஞ்சவேநின்

தந்தையினை முன்பரிந் தின்பவுரி கொண்டுநன்
     சந்தொடம ணைந்துநின் ......     றன்புபோலக்

கண்டுறக டம்புடன் சந்தமகு டங்களுங்
     கஞ்சமலர் செங்கையுஞ் ......     சிந்துவேலும்

கண்களுமு கங்களுஞ் சந்திரநி றங்களுங்
     கண்குளிர என்றன்முன் ......     சந்தியாவோ

புண்டரிகர் அண்டமுங் கொண்டபகி ரண்டமும்
     பொங்கியெழ வெங்களங் ......    கொண்டபோது

பொன்கிரியெ னஞ்சிறந் தெங்கினும்வ ளர்ந்துமுன்
     புண்டரிகர் தந்தையுஞ் ......      சிந்தைகூரக்

கொண்டநட னம்பதஞ் செந்திலிலும் என்றன்முன்
     கொஞ்சிநட னங்கொளுங் ......    கந்தவேளே

கொங்கைகுற மங்கையின் சந்தமணம் உண்டிடுங்
     கும்பமுனி கும்பிடுந் ......        தம்பிரானே.


பதம் பிரித்தல்


தண்டை அணி வெண்டையம் கிண்கிணி சதங்கையும்
     தண்கழல் சிலம்புடன் ......       கொஞ்சவே, நின்

தந்தையினை முன்பரிந்து இன்பவுரி கொண்டு நன்
     சந்தொடம் அணைந்து நின்று ...... அன்புபோலக்

கண்டுஉற கடம்புடன், சந்த மகுடங்களும்,
     கஞ்சமலர் செங்கையும், ......     சிந்துவேலும்,

கண்களும், முகங்களும், சந்திர நிறங்களும்
     கண்குளிர என்தன் முன் ......    சந்தியாவோ?

புண்டரிகர் அண்டமும் கொண்ட பகிர் அண்டமும்
     பொங்கி எழ வெம் களம் ......    கொண்டபோது,

பொன்கிரி என அம் சிறந்து, எங்கினும் வளர்ந்து முன்,
     புண்டரிகர் தந்தையும் ......       சிந்தைகூரக்

கொண்ட நடனம் பதம் செந்திலிலும் என்தன் முன்
     கொஞ்சி நடனம் கொளும் ......   கந்தவேளே!

கொங்கை குற மங்கையின் சந்தமணம் உண்டிடும்
     கும்பமுனி கும்பிடும் ......        தம்பிரானே.


பதவுரை

      புண்டரிகர் அண்டமும் --- தாமரை மலர்மேல் வீற்றிருக்கும் பிரமதேவருடைய அண்டமும்,  (புண்டரிகம் - தாமரை)

     கொண்ட பகிர் அண்டமும் --- அப் பிரமாண்டத்தைத் தன்னகத்தே அடக்கிக் கொண்டுள்ள வெளியண்டமும்,

     பொங்கி எழ --- கொதிப்புற்று எழுமாறு,

     வெம் களம் கொண்டபோது --- வெம்மையான போர்க்களத்தை அடைந்தபொழுது,

     பொன்கிரி என அம் சிறந்து --- பொன்மலை போல் மிகவும் அழகில் சிறந்து,

     எங்கினும் வளர்ந்து --- அகிலாண்டங்களுந் திருமேனியில் அடங்குமாறு விசுவரூபம் எடுத்துக்கொண்டு,

     புண்டரிகர் தந்தையும் --- (மூவுலகங்களை ஈரடியாலளக்கும் பொருட்டு விசுவரூபமெடுத்து) பிரம்மதேவரது தந்தையாகிய திருமாலும்,

     சிந்தை கூர --- உள்ளம் உவகையுறுமாறு,

     முன் கொண்ட நடனம் பதம் --- முன்னாளில் தேவரீர் திருநடனம் புரிந்து அருளிய திருவடிகளினால்,

     செந்திலிலும் --- திருச்செந்தூரிலும்,

     என்றன் முன் கொஞ்சி நடனம் கொளும் கந்தவேளே --- அடியேன் முன் கொஞ்சிப் பேசி நடனஞ் செய்து அருள்புரிந்த கந்தப் பெருமாளே!

       கொங்கை குறமங்கையின் சந்த மணம் உண்டிடும் --- ஞானமாகிய தனங்களையுடைய வள்ளியம்மையாரது திரு மேனியில் திகழும் சந்தனத்தின் வாசனையை முகப்பவரும்,

     கும்பமுனி கும்பிடும் தம்பிரானே --- அகத்திய முனிவரால் வணங்கப்படுபவருமாகிய தனிப்பெருந் தலைவரே!

      தண்டை --- தண்டையும்,

     அணி வெண்டையம் --- அழகிய வீரவெண்டையமும்,

     கிண்கிணி --- கிண்கிணியும்,

      சதங்கையும் --- சதங்கையும்,

      தண்கழல் சிலம்புடன் கொஞ்சவே --- குளிர்ந்த ஒளியையுடைய வீரக்கழலும், சிலம்பும், இனிது ஒலிக்கவும்,

     நின் தந்தையினை முன் பரிந்து --- தேவரீரது தந்தையாராகிய சிவபெருமானது திருமுன்பாக அன்புகொண்டு,

     இன் பவுரி கொண்டு --- இனிய பவுரிக்கூத்தாடலையாடி,

     நன் சந்தொடம் அணைந்து நின்ற அன்பு போல --- நல்ல மகிழ்ச்சியடைந்து நின்ற, அந்த சிறந்த அன்பினைப் போலே,

     கண்டு உற --- அடியேனும் கண்டு மகிழ்ச்சி அடையுமாறு,

     கடம்புடன், சந்த மகுடங்களும், கஞ்சமலர் செம் கையும், சிந்துவேலும் --- கடப்ப மலர்மாலையும், அழகிய மணிமுடிகளும், தாமரை மலர்ப் போன்ற சிவந்த திருக்கரங்களும், ஒளிவீசும் வேலாயுதமும்,

     கண்களும் --- கருணைபொழியும் திருக் கண்களும்,

     முகங்களும் --- ஆறு திருமுகங்களும்,

     சந்திர நிறங்களும் --- சந்திரனை ஒத்த ஒளிகளும்,

     கண் குளிர --- அடியேனுடைய கண்கள் குளிருமாறு,

     என்றன் முன் சந்தியாவோ --- அடியேன்முன் தோன்றி அருள் புரியாவோ?

பொழிப்புரை

         தாமரை மலர்மீது வாழும் பிரமதேவரது அண்டமும் அதனைச் சூழ்ந்துள்ள வெளியண்டமும் கொதிப்புற்று விலக வெம்மையான போர்க்களத்தை அடைந்தபோது, பொன் மேருகிரிபோல் மிகவும் அழகாக எல்லா அண்டங்களுந் திருமேனியில் அடங்குமாறு விசுவரூபங்கொண்டு, பிரமதேவருடைய தந்தையாகியத் திருமால், தாம் முன் மூவுலகங்களை ஈரடியால் அளக்கும் பொருட்டு எடுத்த திருவிக்ரம வடிவம் இதற்கு இணையாகாது என்று எண்ணி மகிழ்ச்சியடைய, முன்னாளில் தேவரீர் நடித்தருளிய திருவடிகளினால், திருச்செந்தூரிலும் அடியேன் முன் கொஞ்சிப் பேசி திருநடனஞ் செய்தருளிய கந்தக் கடவுளே!

         ஞானமாகிய தனங்களையுடைய வள்ளியம்மையாருடைய திருமேனியி லணிந்துள்ள சந்தன மணத்தை முகர்பவரே!

         அகத்திய முனிவர் வணங்கும் தனிப் பெருந்தலைவரே!

         தண்டையும், அழகிய வெண்டையமும், கிண்கிணியும், சதங்கையும், இனிய ஒலியுடைய வீரக்கழலும், சிலம்பும் இனிது ஒலிக்க, தேவரீரது பிதாவாகிய சிவபெருமானது திருமுன் அன்பாக இனிய நடனம் புரிந்து மிக்க மகிழ்சியடைந்து நின்ற அன்புபோலே, அடியேனும் அத் திருநடனத்தைக் கண்டு மகிழ்ச்சி அடையுமாறு, கடப்பமலர் மாலையும், அழகிய மணி மகுடங்களும், தாமரை மலர்ப் போன்ற சிவந்த திருக்கரங்களும், ஒளி வீசும் வேலாயுதமும், கருணை பொழிகின்ற திருக்கண்களும், ஆறு திருமுகங்களும், சந்திர கிரணம் போன்ற குளிர்ந்த ஒளியும் அடியேனுடைய கண்கள் குளிரத் தோன்றி அருள்புரியாவோ?

விரிவுரை

தண்டை ---

     தண்டை என்பது வீரர்கள் அணியும் ஓர் ஆபரணம். முருகப் பெருமானுடையத் திருவடியில் சிறந்த இரத்தினத் தண்டை விளங்கும். அது மிக்க அழகாகத் திகழும். அத் தண்டை இனிய ஒலியை உண்டாக்கும். அத் தண்டையார்க்குந் திருவடியைத் தாரகன் அளப்பருந் தவம் புரிந்தோனாதலின் கண்டான்.

முழுமதி அன்ன ஆறு முகங்களும், முந்நான்கு ஆகும்
விழிகளின் அருளும், வேலும், வேறுஉள படையின் சீரும்,
அழகிய கரம்ஈராறும், அணிமணித் தண்டை ஆர்க்கும்
செழுமலர் அடியும் கண்டான், அவன்தவம் செப்பற்பாற்றோ. ---  கந்தபுராணம்.

                                                                                     
சிந்திக்கிலேன் நின்று சேவிக்கிலேன் தண்டைச்
 சிற்றடியை வந்திக்கிலேன்”              --- கந்தரலங்காரம்.


வெண்டையம் ---

     வெண்டையம் என்பது, திருவடியில் அணியும் ஓர் ஆபரணம். அது இனிது ஒலிக்கும். பெருமான் திருநடனஞ் செய்யும்போது அத் திருவாபரணம் நன்கு முழங்கும்.

காலின்கழ லோசையு நூபுர
   வார்வெண்டைய வோசையு மேயுக
  காலங்களி னோசைய தாநட        மிடுவோனே”    --- (மூலங்கிள) திருப்புகழ்.

                                                                             
கிண்கிணி ---

     கிண்கிணி என்பது இடையில் கட்டும் திருவாபரணம். அது முருகப்பெருமானுடையத் திருவரையில் திகழ்ந்து மிகவும் இனிய நாதத்தை உண்டாக்கும்; அவ்வோசை பதினாலு உலகமும் கேட்கும்.

மண்கமழ் உந்தித் திருமால் வலம்புரி ஓசை அந்த 
விண்கமழ் சோலையும் வாவியும் கேட்டது, வேல்எடுத்துத்
திண்கிரி சிந்த விளையாடும் பிள்ளைத் திருஅரையில்
கிண்கிணி ஓசை பதினாலு உலகமும் கேட்டதுவே. --- கந்தரலங்காரம்

                                                                       
குன்றிடிய அம்பொனின் திருவரைக்
  கிண்கிணி கிணின்கிணின் கிணினெனக்
  குண்டல மசைந்திளங் குழைகளிற் ப்ரபைவீச”  --- (அந்தகன்) திருப்புகழ்.

                                                                           
செஞ்சர ணாதகீத கிண்கிணி நீபமாலை
  திண்டிறல் வேல்மயூர          முகமாறும்”    --- (வஞ்சக) திருப்புகழ்.

                                                                            

சதங்கை ---                               

     சதங்கை திருவடியிலும், இடையிலும் அணியும் பொன்னும் மணியும் சேர்ந்த ஆபரணம். முருகவேள் அணிந்திருக்கும் சதங்கை நான்கு வேதங்களின் கீதங்களை ஒலிக்கும்.

மறைசதுர் விதந்தெரிந்து வகைசிறு சதங்கை கொஞ்ச
 மலரடி வணங்க என்று பெறுவேனோ”       --- (அனைவரு) திருப்புகழ்.

                                           
தண் கழல் ---

     கழல் என்பது வீரர்கள் பாதத்தில் அணியும் சிறந்த அணிகலமாகும். எந்தைக் கந்தவேளுடையத் திருவடியில் விளங்கும் வீரக்கழலின் இனிய ஒலியைக் கேட்க இனிய யாழில் வல்லவளாகிய வாணிதேவி வந்து பொருந்துவர்.

மதுரவாணி உற்ற கழலோனே”       --- (எதிரிலாத) திருப்புகழ்.

சிலம்பு ---

     வீரர்களும், கற்புடைய மாதர்களும் அணியும் ஒரு நல்ல கலன். கண்ணகியின் காற்சிலம்பு காரணமாக விளைந்த விளைவு உலகறிந்தது. கற்புடைய மாதர் பாதத்தில் தண்டை சிலம்பு முதலிய ஆபரணங்களை அணிவதன் காரணம் யாதெனின் அவ்வாபரணங்களின் ஒலியைக் கேட்டு ஆடவர் விலகி நிற்கும் பொருட்டாகும்.

     இங்கே முருகவேள் திருவடியில் விளங்கும் சிலம்பு ஞானமயமானது. அது பரவிந்து எனப்படும். எப்போதும் அடியார் அல்லல்கள் அகல இது இனிய நாதத்தைத் தரும்.

இனியநாத சிலம்பு புலம்பிடும்
 அருண ஆடக கிண்கிணி தங்கிய அடிதாராய். --- (கமலமாதுட) திருப்புகழ்.

தந்தையினை முன்பரிந் தின்பவுரி கொண்டு நன் சந்தொட மணைந்து நின்றன்பு போல ---

     முருகவேள் தன் தந்தையாராகிய சிவபிரானது திருமுன் மிக்க அன்புடன் திருநடனம் புரிவர். அக்குழந்தையின் நடனத்தைக் கண்டு பிறைசூடிய பெருமான் பெரிதும் மகிழ்வர். “அதுபோன்ற நடனத்தை அடியேனுக்கும் காட்டியருள்வாய்.” என்று வேலவனை வேண்டுகின்றனர்.

     உலகங்களெல்லாம் அசைந்து உய்வுபெறும் பொருட்டு ஞானப் பெருவெளியில் அநவரதத் தாண்டவஞ் செய்யும் நடனசபாபதி களிக்க அவர்முன் குழந்தைக் குமரவேள் திருநடனம் புரிவர். “பாம்புக்கால் பாம்பறியும்” என்றபடி நடனத்தின் நுட்பதிட்பங்களை நடராஜர்தானே அறிவர்.

சிந்து வேலும் ---

     வேல் --- வெல் என்ற முதனிலை நீண்ட தொழிற்பெயர். எல்லாவற்றையும் வெல்லுவது அறிவேயாகும். அறிவு ஒளிமயமானது ஆதலின் ஒளியை வீசும் வேலாயுதம் என்றனர்.

கண்குளிர என்றன்முன் சந்தியாவோ ---

     இறைவனே! தேவரீரது திருத் தந்தையார் திருமுன் நடித்தருளியது போல் அடியேனது கண்கள் குளிர உமது திருநடன கோலந் தோன்றியருள வேண்டும்” என்று அடிகள் அறுமுக வள்ளலை வேண்டுகின்றனர்.

புண்டரிக ரண்டமும் கொண்டபகிரண்டமும் பொங்கியெழ ---

     சூரபன்மனது போர்க்களத்தின் வெம்மையால் பிரமாண்டமும் அதைச் சூழ்ந்துள்ள பகிரண்டமும் கொதிப்புற்று இடருற்றன.

எங்கினும் வளர்ந்து ---

     சூரபன்மனுக்கு வேற்பெருமான் விசுவரூபம் காட்டி யருளியபோது எல்லாம் தன்னுள் அடங்க எங்குமாய் நின்றனர்.

                             முருகவேள் திருப்பெருவடிவம் (விஸ்வரூபம்)

     சூரபன்மனது துணைவர்களும் சேனைகளும் அழிந்தனர். சூரபன்மன் மலையாகவும், கடலாகவும், நெருப்பாகவும், காற்றாகவும், இருளாகவும், தானவராகவும், வானவராகவும் இவ்வண்ணம் பல்வேறு வடிவங்களைத் தாங்கிப் பெரும்போர் புரிந்தனன். கந்தவேள் அவ்வடிவங்களை எல்லாம் கணைகளினா லழித்தனர். தன் மாய வடிவங்கள் மாய, சூரபன்மன் சிறிது தளர்வெய்தினன். தளர்வுற்ற பொழுது ஞானத்தைப் போதிக்கவேண்டும். தனஞ்சயன் தளர்ந்தபோது கண்ணன் கீதையை உபதேசித்தனரன்றோ? அளவற்ற தவஞ்செய்த சூரபன்மனுக்குத் தனது திருப்பெரு வடிவத்தைக் காட்டியருள எம்பெருமான் திருவுளங் கொண்டனர்.

கூறிமற்று இனைய தன்மை
     குரைகடல் உலகம் திக்கு
மாறுஇலாப் புவனம் அண்டம்
     வானவர் உயிர்கள் யாவும்
ஆறுமா முகத்து வள்ளல்
     மேனியில் அமைந்தது, அன்றி 
வேறுஇலை என்ன, ஆங்கோர்
     வியன்பெரு வடிவம் கொண்டான்.

திருப் பெருவடிவில் எல்லாம் அடங்கின

     உள்ளடியில் எல்லா மலைகளும், திருவடியின் முற்பாகத்தில் கடல்கள் யாவும், திருவடியின் விரல்களில் இடியும், நட்சத்திரங்களும், கிரகங்களும்; அழகிய பரடுகளில்

     வருணனும் குபேரனும் நிருதியும் இராக்கதரும் அடங்கினார்கள்.

     கணைக்காலில் முனிவர்களும், தெய்வமணிகளும்; முழந்தாளில் வித்யாதரர் முதலியோரும்; தொடையில் இந்திரனும், இந்திரகுமாரன் சயந்தனும்; தொடை மூலத்தில் இயமனும், காலனும்; அரையின் முற்பக்கத்தில் அசுரர்களும்; விலாப்பக்கத்தில் தேவர்கள் யாவரும் அடங்கினார்கள்.

     மூலாதாரத்தில்நாகர்களும்; கோசத்தின் நுனியில் அமிர்தமும்; உந்தியில் உயிர்களும்; மார்பில் எல்லாக் கலைகளும்; முப்புரி நூலில் ஞானமும்; நுனி மயிரில் அண்டங்களும், உள்ளங்கையில் சகல போகப் பொருள்களும்; தோள்களில் திருமாலும் பிரமனும் அடங்கினார்கள்.

கைவிரல்களில் தெய்வப் பெண்களும்; கண்டத்தில் நாதமும் அக்கினியும், வாயில் வேதங்களும்; பல்லில் எழுத்துக்களும்; நாவில் ஆகமங்களும்; இதழில் ஏழுகோடி மந்திரங்களும்; நாசியில் வாயுவும் அடங்கினார்கள்.

     திருக்கண்களில் சந்திரனும் சூரியனும்; செவியில் திசைகளில் உள்ள நூறு உருத்திரர்களும்; நெற்றியில் குடிலையும் (ஓங்காரம்); சென்னியில் சிவபெருமானும் அடங்கினார்கள்.

இறுதியும் முதலும்இல்லா
     இப்பெரு வடிவந் தன்னைக்
கறைவிடம் உறழுஞ் சூரன்
     கண்டு,விம் மிதத்தின் நிற்ப,
அறிவரும் உணர்தல் தேற்றா
     ஆறுமா முகத்து வள்ளல்
சிறிதுநல் லுணர்ச்சி நல்க
     இனையென செப்ப லுற்றான்.

கோலமா மஞ்ஞை தன்னில்
     குலவிய குமரன் தன்னைப்
பாலன்என்று இருந்தேன் அந்நாள்,
     பரிசுஇவை உணர்ந்திலேன் யான்,
மால்அயன் தனக்கும்ஏனை
     வானவர் தமக்கும் யார்க்கும்
மூலகாரணமாய் நின்ற
     மூர்த்தி,ம் மூர்த்தி அன்றோ?

அண்டர்கள் முனிவர் ஏனோர்
     அகிலமும் காட்டி அண்ணல்
கொண்டிடு படிவம் முற்றும்
     குறித்து,யார் தெரிதற் பாலார்,
எண்தரு விழிகள் யாக்கை
     எங்கணும் படைத்தோர்க் கேனும்
கண்டிட அநந்த கோடி
     கற்பமும் கடக்கும் அன்றே.

சீர்க்கும ரேசன் கொண்ட
     திருப்பெரு வடிவந் தன்னில்
ஏர்க்குறும் ஒளியும் சீரும்
     இளமையும் எழிலும் எல்லாம்
ஆர்க்குஉள உலகில் அம்மா!
     அற்புதத் தோடும் பல்கால்
பார்க்கினும் தெவிட்டிற்று இல்லை
     இன்னும்என் பார்வை தானும்.

எனவரும் கந்தபுராணப் பாடல்களைக் காண்க.

புண்டரிகர் தந்தையுஞ் சிந்தைகூர ---

     மாவலிபால் மூவடி கேட்டு, திருவிக்ர மவடிவங் கொண்டு ஈரடியால் மூவுலகங்களையும் திருமால் அளந்தனர். அவர் இத் திருப்பெரு வடிவத்தை நோக்கி, தான் கொண்ட பெருவடிவம் முருகவேள் திருப்பெருவடிவத்தில் ஒரு சிறு அணுபோல் அடங்கியிருப்பதைக் கண்டு அற்புதமும் அன்புங் கொண்டனர்.

கொண்ட நடனம் பதம் ---

    திருமுருகன் அத்திருப்பெருவடிவங் கொண்டு நடித்தருளினர்.

செந்திலிலும் என்றன்முன் கொஞ்சி நடனங்கொளும் கந்தவேளே ---

     அருணகிரிநாத சுவாமிகள் திருச்செந்தூரைத் தெரிசிக்க விரும்பிச் சென்றனர். அவர் சென்ற சமயம் மாசி மாதம், திருச்செந்தூரில் பிரம்மோத்சவம், ஏழாந்திருநாள். ஆறுமுக சுவாமி சிறந்த அணிகலன்களுடன் மலர் மாலைகள் புனைந்து நீலக்கடலில் சிவந்த ஞாயிறு உதயமாகும் போது, அருட் கடலிலிருந்து எழுந்து வருவது போல் விலாமிச்சம்வேர் விமானத்தில் எழுந்தருளி வருகின்றனர். கண்கொள்ளாக்காட்சி. பல்லாயிரம் அன்பர்கள் திரண்டு, விண்ணருவி யென்னக் கண்ணருவிப் பெய்து சேவிக்கின்றனர். “ஹரஹர சுப்ரமண்யோம்” “முருகா! முருகா! வேல்! வேல்!” என்ற ஒலிகள் விண்ணைப் பிளக்கின்றன. கள்ளமில்லாத அடியார் உள்ளம் உருகி வள்ளல் பெருமானது புகழை கனியமுதமன்ன பாடல்களால் இனிய இசையுடன் பாடுகின்றனர், ஆடுகின்றனர். அன்று மாலையில் தங்கச் சப்பரத்தில் பெருமான் எழுந்தருளி பவனி வருகின்றனர்.

     இந்த அற்புதக் காட்சிகளை அருணையடிகள் கண்டு தேனுண்ட வண்டுபோல் மகிழ்ந்தனர். “முருகா! என்னே உன் திருவோலக்கச் சிறப்பு? இரு கண்கள் போதுமா? எண்ணில்லாத கண்கள் இல்லையே! எந்தாய்! இத்துணைத் திருவாபரணங்களைப் புனைந்து காணக்காணத் தெவிட்டாத காட்சியுடன் விளங்குகின்றனையே. இப்படியே சிறிது நடித்தருளும். உமது திருநடனங் காண விழைகின்றேன். கருணைபுரியும்” என்று வேண்டினர். ஆறுமுகக் கடவுள் அருணகிரிநாதரைப் பின்புறம் வரச்செய்து, பின்புறத்தில் நடனம் புரிந்து நடனக் காட்சியைத் தந்து அருள்புரிந்தனர். பெருமானின் நடன அலங்காரத்தை ஏழாம் திருவிழா மாலையில் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளும்போது பின்புறத்தில் இன்றும் தெரிசிக்கலாம்.

     முன்னே சூரபன்மனுக்குத் திருப்பெருவடிவங்காட்டி நடித்த திருவடிகள் இப்போது திருச்செந்தூரிலும் நடித்தருளியது. “செந்திலிலும்” என்ற எச்சவும்மையால் சிதம்பரத்திலும், கொடுங்குன்றத்திலும் தனக்குக்காட்டி திருநடனத்தைக் குறித்தனர்.

சந்தமணம் உண்டிடும் ---    

     குறமகளாகிய வள்ளிபிராட்டியின் திருமேனியில் அணிந்துள்ள சந்தனத்தின் நறுமணத்தை முருகவேள் முகன்றனர். சந்தனம் பிறப்பது பொதிய மலையில் எனவே, சந்தனத்தில் தமிழின் இனிய குளிர்ந்த மணம் உண்டு. தமிழ்க்கடவுளாகிய முருகன் அத்தமிழ்ச் சந்தனத்தின் நறுமணத்தை நுகர்கின்றனர்.

கும்பமுனி கும்பிடும் தம்பிரானே ---

     தமிழ் முனியாகிய அகத்தியர் வணங்குந் தனிப்பெருந் தலைவர் முருகர்.

கருத்துரை

         திருப் பெருவடிவங்கொண்டு நடித்த திருவடிகளின் நடனத்தைச் செந்திலிலும் காட்டியருளிய கந்தவேளே! தேவரீரது அழகிய திருவுருவம் எனது கண்குளிரத் தோன்ற வேண்டும்.

No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...