திருச்செந்தூர் - 0058. சத்தம் மிகும்ஏழு


அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

சத்தம் மிகு ஏழு (திருச்செந்தூர்)

மாதர் மயக்கத்தை விட்டு, பக்தி செய்யுமாறு மயிலின் மீது வந்து ஆட்கொள்ள வேண்டல்

தத்ததன தானதன தத்தான
     தத்ததன தானதன தத்தான
          தத்ததன தானதன தத்தான ...... தனதான


சத்தமிகு மேழுகட லைத்தேனை
     யுற்றமது தோடுகணை யைப்போர்கொள்
          சத்திதனை மாவின்வடு வைக்காவி ...... தனைமீறு

தக்கமணம் வீசுகம லப்பூவை
     மிக்கவிளை வானகடு வைச்சீறு
          தத்துகளும் வாளையடு மைப்பாவு ...... விழிமாதர்

மத்தகிரி போலுமொளிர் வித்தார
     முத்துவட மேவுமெழில் மிக்கான
          வச்சிரகி ரீடநிகர் செப்பான ......      தனமீதே

வைத்தகொடி தானமயல் விட்டான
     பத்திசெய ஏழையடி மைக்காக
          வஜ்ரமயில் மீதிலினி யெப்போது ...... வருவாயே

சித்ரவடி வேல்பனிரு கைக்கார
     பத்திபுரி வோர்கள்பனு வற்கார
          திக்கினுந டாவுபுர விக்கார ......      குறமாது

சித்தஅநு ராககல விக்கார
     துட்டஅசு ரேசர்கல கக்கார
          சிட்டர்பரி பாலலளி தக்கார ......          அடியார்கள்

முத்திபெற வேசொல்வச னக்கார
     தத்தைநிகர் தூயவநி தைக்கார
          முச்சகர்ப ராவுசர ணக்கார ......      இனிதான

முத்தமிழை யாயும்வரி சைக்கார
     பச்சைமுகில் தாவுபுரி சைக்கார
          முத்துலவு வேலைநகர் முத்தேவர் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


சத்த மிகும் ஏழு கடலை, தேனை,
     உற்ற மது தோடு, கணையை, போர்கொள்
          சத்தி தனை, மாவின் வடுவை, காவி ...... தனை மீறு,

தக்க மணம் வீசு கமலப் பூவை
     மிக்க விளைவான கடுவை, சீறு
          தத்து உகளும் வாளை, அடு மைப்பாவு ...... விழிமாதர்,

மத்தகிரி போலும் ஒளிர், வித்தார
     முத்துவடம் மேவும் எழில் மிக்கான
          வச்சிர கிரீட நிகர் செப்பான ......         தனமீதே,

வைத்த கொடிதான மயல் விட்டு,
     பத்தி செய, ஏழை அடிமைக்காக
          வஜ்ரமயில் மீதில் இனி எப்போது ...... வருவாயே.

சித்ர வடிவேல் பனிரு கைக்கார!
     பத்தி புரிவோர்கள் பனுவல்கார!
          திக்கினும் நடாவு புரவிக்கார! ......        குறமாது

சித்த அநுராக கலவிக்கார!
     துட்ட அசுரேசர் கலகக்கார!
          சிட்டர் பரிபால லளிதக்கார! ......          அடியார்கள்

முத்தி பெறவே சொல் வசனக்கார!
     தத்தை நிகர் தூய வநிதைக்கார!
          முச்சகர் பராவு சரணக்கார! ......      இனிதான

முத்தமிழை ஆயும் வரிசைக்கார!
     பச்சைமுகில் தாவு புரிசைக்கார!
          முத்துஉலவு வேலைநகர் முத்தேவர் ...... பெருமாளே.


பதவுரை

         சித்ர வடிவேல் பன் இரு கைக் கார --- அழகிய கூர்மையான வேலாயுதத்தை ஏந்தியப் பன்னிரண்டு திருக்கரங்களை உடையவரே!

         பக்தி புரிவோர்கள் பனுவல் கார --- அன்பு செய்வோர்களுடைய நூலில் விளங்குபவரே!

         திக்கினு நடாவு புரவிக் கார --- திசைகள் தோறும் நடாத்துகின்ற (மயிலாகிய) குதிரையையுடையவரே!

         குறமாது சித்த அநுராக கலவிக் கார --- வள்ளியம்மையார் உள்ளன்போடு மருவுகின்ற மணவாளரே!

         துட்ட அசுர ஈசர் கலகக் கார --- கொடிய அசுரர் தலைவர்களுடன் போர் புரிந்தவரே!

         சிட்டர் பரிபால லளிதக் கார --- உத்தமர்களைக் காத்தலையே திருவிளையாட்டாகக் கொண்டவரே!

         அடியார்கள் முத்தி பெறவே சொல் வசனக் கார --- திருத்தொண்டர்கள் முக்திப்பெறுமாறு உபதேசிக்கின்ற சொற்களை உடையவரே!

         தந்தை நிகர் தூய வநிதைக் கார --- கிளியைப் போன்ற தூய்மைப் பொருந்திய தெய்வயானையின் கணவரே!

         முச்சகர் பராவு சரணக் கார --- மூன்று உலகங்களும் துதிக்கின்ற திருவடியை யுடையவரே!

         இனிது ஆன முத்தமிழை ஆயும் வரிசைக் கார --- இனிமை மயமான மூன்று தமிழையும் ஆராய்கின்ற சிறப்புடையவரே!

         பச்சை முகில் தாவு புரிசைக் கார --- பச்சை நிறமான மேகங்கள் தழுவுகின்ற உயர்ந்த திருமதிலைக் கொண்ட திருக்கோயில்களை யுடையவரே!

         முத்துலவு வேலை நகர் மு தேவர் பெருமாளே --- முத்துக்கள் கரையில் உருளுகின்ற கடற்கரையில் உள்ள செந்திமாநகரில் எழுந்தருளியுள்ள மூன்று மூர்த்திகளும் தொழுகின்ற பெருமையிற் சிறந்தவரே!

         சத்தமிகும் ஏழு கடலை தேனை --- ஓசை மிகுந்த ஏழு சமுத்திரங்களையும், வண்டையும்,

     மது உற்ற தோடு --- தேன் நிறைந்த மலரையும்,

     கணையை போர் கொள் சக்தி தனை --- அம்பையும், போர் புரிகின்ற வேலையும்,

     மாவின் வடுவை --- மாவடுவையும்,

     காவி தனை --- கருங்குவளையையும்,

     மீறு தக்க மணம் வீசு கமலப்பூவை --- மிகுந்த இனிய வாசனையை வீசும் தாமரை மலரையும்,

     மிக்க விளைவான கடுவை --- நன்கு முதிர்ந்த நஞ்சையும்,

     சீறு உதத்து உகளும் வாளை --- சினத்துடன் நீரில்பாய்ந்து விளையாடும் வாளை மீனையும் நிகர்த்து,

     அடு --- கொல்லுந் தொழிலைக் கொண்டு,

     மை பாவும் விழி மாதர் --- மைதீட்டிய கண்களையுடைய பொதுமகளிரினது,

     மத்தகிரி போலும் --- மதம் பொழிகின்ற (யானை) மலை போல பருத்து,

     ஒளிர் வித்தார --- ஆபரணங்களுடன் கூடிய ஒளி செய்து விசாலமுள்ளதாய்,

     முத்து வடமேவும் --- முத்துமாலை உடையதாய்,

     எழில் மிக்கான வக்கிர கிரீட நிகர் --- அழகு மிகுந்த வஜ்ரமணி மகுடத்திற்குச் சமான முள்ளதாய்,

     செப்பு ஆன தன மீதே --- சிமிழ் போன்றதாய் விளங்கும் தனங்களின் மீது,

     வைத்த கொடிது ஆன மயல் விட்டு --- மனம் வைத்துள்ள தீய மயக்கத்தை விடுத்து,

     ஆன பக்தி செய --- ஆன்மாவுக்கே உரியதான அன்பு செய்யுமாறு,

     ஏழை அடிமைக்காக --- அறிவில்லாத இந்த அடியேன் பொருட்டு,

     இனி வஜ்ர மயில் மீதில் --- இனியாவது வஜ்ரம் போல்ஒளி செய்கின்ற மயிலின் மீது,

     எப்போது வருவாயோ --- எந்தக்காலம் வந்து ஆட்கொள்வீர்?


பொழிப்புரை

         அழகிய கூரிய வேலையேந்திய பன்னிருகைப் பரமனே;

         அன்பு புரிவோர்கள் பாடிய நூல்களை யுடையவரே!

         திசைகள் தோறும் நடாத்துகின்ற மயிலாகிய குதிரையை உடையவரே!

         வள்ளிநாயகி உள்ளம் உவந்து மருவும் மணவாளரே!

         தீய அசுர வேந்தருடன் போர் புரிந்தவரே!

         நல்லவர்களைக் காத்து அவர்களுடன் ஆடல் புரிபவரே!

         அடியவர்கள் முத்திப்பெறுமாறு உபதேசிக்கின்ற சொற்களை யுடையவரே!

         கிளிபோன்ற தூய தெய்வயானையம்மையின் கணவரே!

         மூன்று உலகங்களும் துதிசெய்கின்ற திருவடியை யுடையவரே!

         இனிமை நிறைந்த முத்தமிழை ஆராய்கின்ற மேன்மையானவரே!

         பசிய மேகம் தவழ்கின்ற மதிலையுடைய கோயிலில் விளங்குபவரே!

         முத்துக்கள் உலாவுகின்ற கடற்கரையுடன் கூடிய செந்திலம்பதியில் எழுந்தருளியுள்ள மும்மூர்த்திகள் போற்றும் பெருமித முடையவரே!

         ஓசை மிகுந்த ஏழுகடல், வண்டு, தேன் மிகுந்த மலர்க்கணை, போர் புரிகின்ற வாள், மாவடு, கருங்குவளை, சிறந்த மணம் வீசுகின்ற தாமரை மலர், நன்கு முதிர்ந்த நஞ்சு, சீறி நீரில் விளையாடுகின்ற வாளைமீன் இவைகளை நிகர்த்து, கொல்லுந் தன்மையுடன் மை தீட்டிய கண்களையுடைய பொது மகளிரது மதம் பொழிகின்ற மலைபோல் பருத்து ஆபரணங்களுடன் கூடி ஒளி செய்து, விரிந்து முத்துமாலை புனைந்து, அழகிய வஜ்ரமுடி போலவும் சிமிழ் போலவும் திகழ்கின்ற தனபாரங்களின் மீது மனம்வைத்து, அதனால் வந்த கொடிய மயக்கத்தை விடுத்து, உமது திருவடியில் அன்பு செய்யுமாறு, அடியேன் பொருட்டு, வஜ்ரம்போல் ஒளி செய்யும் மயில் வாகனத்தின் மீது வந்து எந்நாள் காட்சித் தருவீரே?
  
விரிவுரை

சத்த மிகும் ஏழுகடலை ---

மகளிரது கண்களுக்கு உவமை பல உள. அவற்றில் சில இந்தப் பாடலில் வருகின்றன. கடல் அகலமும் ஆழமும் கருமையும் உள்ளது. அதுபோல் மகளிரது கண்களும் அகலமும் ஆழமும் கருமையும் பொருந்தியவை.

தேனை ---

தேன்-வண்டு; தேனை உண்பதனால் வண்டு இப்பேர் பெற்றது. இது உயர்ந்த வண்டு; இது பசித்தாலும் தேனை அன்றி வேறு ஒன்றை உண்ணாது. அதுபோல் ஆன்றோர் என்ன இடர் நேர்ந்தாலும் அறத்தை அன்றி மறத்தைச் செய்யார். தூய கேள்வி அன்றி தீய சொற்களைக் கேளார். நற்சிந்தனை அன்றி துர்ச்சிந்தனை எண்ணார்.

மற்றொரு கருவண்டு உளது. அது மலத்தை அன்றி வேறு ஒன்றையும் உண்ணாது. அதனையே உருட்டி உழலும். அது போல் சில கீழ்மக்கள் தீமையே நினைத்து தீமையே பேசித் தீமையே செய்வர். இவர்களாலும் உலகிற்கு அதிக ஆபத்திராது.

இனி அதிகக் கேடு செய்கிற பிராணி மற்றொன்றுண்டு. அதுதான் ஈ. அது சந்தனத்திலும் அமரும்; சாணத்திலும் மற்றொன்றிலும் அமரும்; அதுதான் கேடு விளைவிக்கும் பிராணி; அது போல் சிலர் நல்ல திருக்கூட்டங்களிலும் கலந்து கொள்வர். தெய்வசிந்தனை, குருநிந்தனை புரிகின்ற தெருக் கூட்டத்திலும் கலந்து கொள்வர். அவரால் உலகுக்குத் தீமை விளையும். அவர்கள் மிக்க கேடு புரிகின்றவர் அவார்கள்.

ஆகவே, தேனை உண்ணுகின்ற வண்டு உயர்ந்தது, அதில் அரச வண்டும் உண்டு. “கோத்தும்பீ!” என்பர் மணிவாசகர். அந்த வண்டுக்கு நிகரானது மகளிரது கண்கள்.

உற்ற மது தோடு ---

தோடு-மலர். தேன் துளிக்கின்ற மலர். அம்மலர்போல் விரிந்த கண்கள்.

கணையை ---

கணை உடம்பைப் பிளக்கும் ஆற்றல் படைத்தது. அதுபோல் மகளிரது கண்களும் உயிரைப் பிளக்கும் ஆற்றல் படைத்தவை.

போர்கொள் சத்தி ---

போருக்குரிய வேலைப் போலவும் அக்கண்கள் கூர்மையும், கொடுமையும் படைத்தவை.

மாவின் வடுவை ---

மாம்பிஞ்சைப் பிளந்தால் அதன் இடையில் உள்ள விதையின் பிளப்பு கருமணிப் போலவும், சூழ்ந்துள்ள பகுதி வெண்மையான விழிப்போலவும், காட்சி தரும். ஆகவே மாதர் விழிக்கு மாவடுவை உவமை கூறுவது மரபு.

காவி ---

காவி-குவளை. பெண்களின் கண்கள் குவளை மலர்போல் அழகாக இருக்கும். 

மீறு தக்க மணம் வீசு கமலப் பூவை ---

மலர்களில் தலைமையாவது தாமரைப்பூ. அதுவே இலக்குமியின் கோயில். வாணியும், தேவனும் எழுந்தருளியிருப்பதும் தாமரையே; வள்ளியம்மையாரது திருக்கரத்திலும் தாமரைப்பூ விளங்கும்; கண்கள் தாமரைப் பூவைப்போல் திகழும்.

மிக்க விளைவான கடுவை ---

விலைமகளிரது கண்கள், நஞ்சுபோல், தன்னை விரும்பினவர்க்கு அச்சத்தையும் செய்யும். அந் நஞ்சும் நன்றாக முதிர்ந்தது என்கின்றார்.

சீறு உதத்து உகளும் வாளை ---

சீறு - சினங்கொண்டு; உதத்து உகளும் - தண்ணீரில் புரளுகின்ற; வாளை - வாளைமீன் போன்றது. சினந்து ஓடுகின்ற தண்ணீரில் எதிர்த்துப் போகும் தன்மை உடையது வாளை மீன்.
உதத்து - என்பதற்கு, யுத்தத்துக்கு என்று பொருள் செய்தால், சீறுகின்ற போரில், புரளுகின்ற வாளாயுதம் போன்ற கண் எனினும் பொருந்தும்.

அடு மைப்பாவு விழி மாதர் ---

அடுதல்-கொல்லுதல்; கொல்லும் தன்மையும், மைப் படிந்தும் இருப்பவை மகளிர் விழிகள். கண்களைப் பற்றி இப்படி இத்தனை வர்ணனைகள் செய்கின்றார் அடிகளார்.

மத்தகிரி போலும் ---

இனி அவர்களது தனபாரங்களின் தன்மையைக் கூறுகின்றார். மத்தகிரி-மதம் பொழிகின்ற மலை. மலையில் ஒருவிதமான சத்து வெளிப்படும். அதற்குச் சிலாசத்து என்றுபேர். அன்றியும், “மதம் பொழிகின்ற யானை” என்றும் கூறலாம். (உவம ஆகுபெயர்).

வைத்த கொடிதான மயல் விட்டு ---

விலைமகளிரது புலால் உடம்பின் மீதுவைத்த மயக்கம் மிகவும் கொடியது. அது சகல பாவங்களையும் செய்யத் தூண்டும். அறிவை மயக்குவது கள். அந்தக் கள்ளினும் கொடியது காமம். ஏன்? கள்ளை நினைத்தாலும், கரத்தால் தொட்டாலும், கண்ணால் கண்டாலும் மயக்கம் தராது: உண்டால்தான் அறிவை மயக்கும்; காமம் உள்ளத்தால் நினைத்தாலும் அறிவை மயக்கும்; கண்ணால் கண்டாலும், கைகளால் தொட்டாலும் அறிவை மயக்கும்.

உள்ளக் களித்தலும் காண உவத்தலும்
கள்ளுக்குஇல் காமத்துக்கு உண்டு.             ---  திருக்குறள்.

இத்தகைய கொடிய காம மயக்கத்தை, காமனை எரித்த கனற் கண்ணினின்று,அருட்பெருஞ் சோதியாய் வந்த ஆறுமுகப் பரமன் அருளால் அகற்றுதல் எளிது; பிறர்க்கு அரிது.

ஆன பத்தி செய ---

பக்தி-அன்பு. முருகனுடைய அன்பினால் எல்லா நலன்களும் உண்டாகும். முருகன் திருவடியில் பக்தி ஏற்பட்டு விட்டால் அதுவே முக்தியாகும்.

ஆன பயபக்தி வழிபாடு பெறுமுத்தி அதுவாகநிகழ்
 பக்த ஜன வாரக் காரனும்”       --- திருவேளைக்காரன் வகுப்பு
  
ஏழை அடிமைக்காக வஜ்ரமயில் மீதிலினில் எப்போது வருவாயே ---

ஏழை-அறிவில்லாதவன். “அறிவிலியாகிய அடியேன் பொருட்டு தேவரீர் வஜ்ரமயில் மீதிலே வந்து ஆட்கொள்ள வேண்டும்” என்று சுவாமிகள் வேண்டுகின்றனர். வஜ்ரம் போன்ற வலிமையுடையது மயில்.

சித்ர வடிவேல் பனிரு கைக்கார ---

சித்ர-அழகு; வடி-கூர்மை, அடியார்கட்கு எம்பெருமான் பன்னிரு கரங்களாலும் வாரி வழங்குவான். மேகம் போன்ற கொடையுடைய கரங்கள் என்று திருவகுப்பில் கூறுகின்றார்.

எழிலியை யனையப னிருகையி லயின்முதல்
 இலங்கு படையே துலக ஒருபால்”         --- கொலு வகுப்பு

எழிலி-மேகம்.

பக்தி புரிவோர்கள் பனுவற் கார ---

பனுவல்-நூல். கல்வி கற்று, அக்கல்வி யறிவால் செய்த நூல்களை, முருகன் ஏற்கமாட்டான். அன்பு நெறி நின்ற பக்தர்கள், அருள் வேட்கையுடன் பாடிய பனுவல்களைப் பரமன் ஏற்று மகிழ்வான். பகழிக் கூத்தர், சிதம்பர சுவாமிகள், குமரகுருபரர் முதலியோர் இந்த பக்த வரிசையில் நிற்பவர்கள்.

திக்கினு நடாவு புரவிக்கார ---

புரவி-குதிரை. வாகனத்தில் சிறந்தது குதிரை. அதனால், அருணகிரிநாதர் பல இடங்களில், மயிலை, குதிரையென்றே உருவகம் புரிகின்றார்.

குறமாது சித்த அநுராக கலவிக்கார ---

இச்சா சக்தியை இறைவன் மருவுவதால், உலகில் உயிர்கள் உய்வு பெறுகின்றன.

துட்ட அசுரேசர் கலகக்கார ---

தீமைக்கு மூல காரணமாகிய ஆணவமலம் முதலிய அசுரர் தலைவர்களை இறைவன் ஞான வேலால் அழித்தனர்.

சிட்ட பரிபால லளிதக்கார ---

சிட்டர்-நல்லவர்கள். அடியார்களைக் காப்பாற்றுவதையே திருவிளையாடலாகக் கொண்டவர் முருகர். முருகவேள் அடியார்களிடம் பல ஆடல்கள் புரிந்து ஆட்கொள்வர்.

அடியார்கள் முக்தி பெறவே சொல் வசனக்கார ---

முருகன், அடியார்கட்குக் குருவாகத் தோன்றி உபதேசம் புரிவர். அருணகிரிநாதருக்கு முருகன் தோன்றி உபதேசித்தனர்.

செம்மான் மகளைத் திருடும் திருடன்
பெம்மான் முருகன் பிறவானிறவான்
சும்மாவிரு சொல்லற என்றலுமே
அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலேனே.      ---  கந்தர் அநுபூதி

ஒரு பூதரும் அறியாத் தனிவீட்டில் உரை உணர்வுஅற்று
இரு, பூத வீட்டில் இராமல் என்றான், இருகோட்டு ஒருகைப்
பொரு பூதரம் உரித்து ஏகாசம் இட்ட புராந்தகற்குக்
குரு, பூத வேலவன், நிட்டூர சூர குலாந்தகனே     --- கந்தர் அலங்காரம்

தத்தை நிகர் தூய வனிதைக்கார ---

தத்தை-கிளி. தூய வனிதை-தெய்வயானை.

முச்சகர் பராவு சரணக்கார ---

மூன்று உலகங்களும், முருகனுடைய திருவடியைத் துதி செய்கின்றன. அப்பரமனே பரம்பொருள்; வேதாகமங்களால் வியந்து ஓதப்பெற்ற விமலன்.

இனிதான முத்தமிழை ஆயும் வரிசைக்கார ---

தமிழ் மிகவும் இனிய மொழி. இயல், இசை, நாடகம் என மூன்று பிரிவுகள் உடைய மொழித் தமிழ் ஒன்றேயாகும். இயல்-சத்து; இசை-சித்து; நாடகம்- ஆனந்தம். சத்து சித்து ஆனந்தம்-சச்சிதானந்தம்-தமிழ்.

பச்சைமுகில் தாவு புரிசைக்கார ---

இறைவன் எழுந்தருளியுள்ள திருக்கோயில்களின் திருமதில்கள் உயர்ந்தவை.அதனால், அதன்மீது மேகந் தவழ்கின்றது.

முத்துஉலவு வேலைநகர் ---

திருச்செந்தூர் தென் கீழ்க்கடற்கரையில் விளங்குகின்றது. தென்கடல்தான் முத்தங்கொழிப்பது; திருச்செந்தூர் அருகிலுள்ள தூத்துக்குடி கடலில் தான் இன்றும் முத்துக்களை எடுக்கின்றனர்.

கொள்ளித் தலையில் எறும்பு அதுபோலக் குலையும், என்தன்
உள்ளத் துயரை ஒழித்து அருளாய், ஒருகோடி முத்தம்
தெள்ளிக் கொழிக்கும் கடல் செந்தில் மேவிய சேவகனே!
வள்ளிக்கு வாய்த்தவனே! மயில் ஏறிய மாணிக்கமே!          ---  கந்தர் அலங்காரம்.

முத்தேவர் பெருமாளே ---

ஆக்கல், அளித்தல், அழித்தல் என்ற முத்தொழில்களைப் புரியும் அயன், அரி, அரன் என்ற மும்மூர்த்திகட்கும் தலைவன் முருகன்.


கருத்துரை

         செந்தில் மேவிய கந்த நாயகனே! மாதர் மயக்கத்தை விட்டு, பக்தி செய்யுமாறு மயிலின் மீதுவந்து அடியேனை ஆட்கொள்ள வேண்டும்.
No comments:

Post a Comment

முயலை விட்டுக் காக்கையின் பின் போதல் கூடாது

  முயல் விட்டு ,  காக்கைப் பின் போவது கூடாது. -----        இருப்பதை விட்டுப் பறப்பதைப் பிடிப்பது கூடாது என்பார்கள்.  எளிமையாகச் செய்யக்கூடிய...