திருச்செந்தூர் - 0064. தந்த பசி


அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

தந்த பசிதனை (திருச்செந்தூர்)

எமன் வருகின்ற நேரத்தில், “இவன் நமது அன்பன்” என்று சொல்ல மயில்மிசை வரவேணும்
  
தந்த தனதனன தந்த தனதனன
     தந்த தனதனன ...... தனதானா
  
தந்த பசிதனைய றிந்து முலையமுது
     தந்து முதுகுதட ...... வியதாயார்

தம்பி பணிவிடைசெய் தொண்டர் பிரியமுள
     தங்கை மருகருயி ...... ரெனவேசார்

மைந்தர் மனைவியர்க டும்பு கடனுதவு
     மந்த வரிசைமொழி ...... பகர்கேடா

வந்து தலைநவிர விழ்ந்து தரைபுகம
     யங்க வொருமகிட ...... மிசையேறி

அந்த கனுமெனைய டர்ந்து வருகையினி
     லஞ்ச லெனவலிய ...... மயில்மேல்நீ

அந்த மறலியொடு கந்த மனிதனம
     தன்ப னெனமொழிய ...... வருவாயே

சிந்தை மகிழமலை மங்கை நகிலிணைகள்
     சிந்து பயமயிலு ...... மயில்வீரா

திங்க ளரவுநதி துன்று சடிலரருள்
     செந்தி னகரிலுறை ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


தந்த பசி தனை அறிந்து, முலை அமுது
     தந்து, முதுகு தட- ...... விய தாயார்,

தம்பி, பணிவிடைசெய் தொண்டர், பிரியம்உள
     தங்கை, மருகர்,யிர் ......   எனவே சார்

மைந்தர், மனைவியர், கடும்பு கடன்உதவும்
     அந்த வரிசைமொழி ......    பகர்கேடா

வந்து, தலைநவிர் அவிழ்ந்து, தரை புக,
     மயங்க, ஒரு மகிட ......     மிசை ஏறி,

அந்தகனும் எனை அடர்ந்து வருகையினில்,
     அஞ்சல் என, வலிய ......   மயில்மேல்நீ

அந்த மறலியொடு, "உகந்த மனிதன், மது
     அன்பன்" எனமொழிய ......   வருவாயே.

சிந்தை மகிழ, மலை மங்கை நகில்இணைகள்
     சிந்து பயம் அயிலும் ......   அயில்வீரா!

திங்கள் அரவு நதி துன்று சடிலர் அருள்
     செந்தி நகரில் உறை ......   பெருமாளே.

 பதவுரை

         மலை மங்கை சிந்தை மகிழ --- மலையரசனது புதல்வியாகிய பார்வதி அம்மையாரது உள்ளங்களிக்க,

     நகில் இணைகள் சிந்து பயம் அயிலும் அயில் வீரா --- இரு தனங்களினின்றும் பொழியும் பாலமுதத்தை உண்டருளிய வேலாயுதத்தைத் தாங்கிய வீரரே!

         திங்கள் அரவு நதி துன்று சடிலர் அருள் --- சந்திரனும், சர்ப்பமும், கங்காநதியும் நெருங்கியுள்ள சடாபாரத்தையுடைய சிவபெருமான் அருளிய,

     செந்தில் நகரில் உறை பெருமாளே --- திருச்செந்தூர் என்னும் புனிதத் திருத்தலத்தில் வசிக்கின்ற பெருமையில் சிறந்தவரே!

         தந்த பசிதனை அறிந்து --- வருத்தத்தைத் தந்த பசியைக் குறிப்பால் உணர்ந்து,

     முலை அமுது தந்து --- தனங்களினின்றும் பெருகும் பாலமுதத்தை ஊட்டி,

     முதுகு தடவிய தாயார் --- மகவின் மீது வைத்த அளவுகடந்த அன்பால் முதுகைத் தடவிய தாயார்,

     தம்பி, பணிவிடை செய் தொண்டர் --- தம்பி, குற்றேவல்களைச் செய்யும் வேலைக்காரர்கள்,

     பிரியம் உள தங்கை மருகர் - அன்புடைய தங்கை, மருகர்கள்,

     உயிர் எனவே சார் மைந்தர் மனைவியர் கடும்பு --- உயிரேபோல் மிகவும் அன்புடன் சார்ந்துள்ள பிள்ளைகள், பத்தினிகள், உறவினர் முதலியோர்,

     கடன் உதவும் --- உடலுக்கு வேண்டிய கடன்களை அவரவர்கள் தமக்குத் தக்கவாறு செய்வர்.

     அந்த வரிசை மொழி பகர் கேடா வந்து --- அழகிய உபசார வார்த்தைகளைக் கூறுவதெல்லாம் அழியும்படியாக வந்து,

     தலை நவிர் அழிந்து தரைபுக மயங்க --- தலைமயிர் அவிழ்ந்து, தரையில் வீழ்ந்து புரள, மயங்கும் வண்ணம்,

     ஒரு மகிட மிசை ஏறி --- ஒப்பற்ற எருமைக்கிடாவின் மீதூர்ந்து,

     அந்தகன் (உம்-அசை) எனை அடர்ந்து வருகையினில் --- கூற்றுவன், அடியேனை நெருங்கி உயிரைப் பற்ற வருங்காலத்தில்,

     அஞ்சல் என --- பயப்படாதே என்று சொல்லி அடியேனுக்கு அபயங்கொடுக்க,

     அந்த மறலியொடு --- அடியேனுடைய உயிரைப் பற்றவருகிற அந்தக் கூற்றுவனோடு,

     உகந்த மனிதன் --- சம்பந்தப்பட்ட இவன்,

     நமது அன்பன் என மொழிய --- நமது அன்பிற் சிறந்தவன் என்று கூறியருளுவதற்கு,

     (அடியேன் ஆன்மா பிரியுங்கால் அழைக்க வலியற்று அறிவு மயங்கி விழுந்திருந்தாலும் இப்போது தந்த மனுவை நினைந்து)

     வலிய மயில்மேல் நீ வருவாயே --- வலிய, - தேவரீர் மயில் மிசை ஊர்ந்து வந்து அருளவேணும்.


பொழிப்புரை


         மலையரசனாகிய இமவானது புதல்வியாரென அவதரித்த பார்வதிதேவியின் சிந்தை மகிழ, இரு தனங்களினின்றும் பெருகும் ஞானப் பாலை உண்டருளிய வேல்வீரரே!

         சந்திரன், அரவு, கங்காநதி இவைகள் நெருங்கியுள்ள சடை முடியுடைய சிவபெருமானது திருக்குமாரரே!

         திருச்செந்தூரில் வாழ்கின்ற பெருமையிற் சிறந்தவரே!

         வருத்தத்தைத் தந்த பசியினது குறிப்பைக் குறிப்பாலுணர்ந்து முலைப்பாலைத் தந்து, மகவின்மீதுள்ள முடிவில்லாத அன்பின் பெருக்கால் பலகாலும் முதுகைத் தடவிய தாயார், தம்பி, ஏவல்செய்யும் பணியாளர், அன்புடைய தங்கை, மருகர், உயிரையொத்த மைந்தர்,  மனைவியர், சுற்றத்தார், முதலியோர் அவரவர்கள் உடலுக்கு வேண்டிய கடமைகளைச் செய்வர். அவர்கள் அழகிய உபசார வார்த்தைகளைக் கூறுவதெல்லாம் ஒழியுமாறு வந்து, தலைமயிர் அவிழ்ந்து தரையிற் புரளுமாறு மயங்க, ஒரு எருமைக் கிடாவின்மீது ஏறி, அந்தகன் என்னை நெருங்கி வருகின்ற காலத்தில் ’பயப்படாதே’ என்று சொல்லி எனக்கு அபயங்கொடுக்க அந்தக் கூற்றுவனிடத்தில்”இவன் நமது அன்பன்” என மொழிவதற்காக (யான் மயங்கியுள்ளதால் அழைக்காதிருக்கினும்) வலிய மயில்வானத்தின்மீது வந்தருள வேண்டும்.

விரிவுரை


தந்த பசி........வருவாயே ---

அந்தகன் வருகின்ற சமயத்தில், தாய், தம்பி, மனைவி, மைந்தர் முதலியோர் அனைவரும் உடலைக் காப்பாற்றுங்கடன்களைத் தருவாரே யன்றி. உயிரைக் காப்பாற்ற ஒருவராலும் முடியாது. கூற்றுவனை ஒருவரும் தடுக்க வலியற்று, வாளா வருந்துவர்.

என்பெற்ற தாயாரும் என்னைப் பிணம்என்று இகழ்ந்துவிட்டார்,
பொன்பெற்ற மாதரும் 'போ'என்று சொல்லிப் புலம்பிவிட்டார்,
கொன்பெற்ற மைந்தரும் பின்வலம் வந்து குடம்உடைத்தார்,
உன்பற்று ஒழிய ஒருபற்றும் இல்லை உடையவனே.   --- பட்டினத்தார்

நின் அடியே வழிபடுவான், நிமலா! நினைக் கருத,
"என் அடியான் உயிரை வவ்வேல்" என்று அடல் கூற்று உதைத்த
பொன் அடியே பரவி,நாளும் பூவொடுநீர் சுமக்கும்
நின் அடியார் இடர்களையாய் நெடுங்களம்  மேயவனே. --- திர்ஞானசம்பந்தர்.


மரணம் நேருகையில் பொறிகலங்கி, புலனழிந்து, மயங்கியிருப்பாராதலால், அறிவுடைய காலத்திலேயே அழைத்து விண்ணப்பம் கொடுக்கின்றனர். அம் மரண பக்குவகாலத்தில் வலியமயில் மிசைவரவேணும் என்றனர். முருகனடியார் என்று தெரிந்தவுடன் கூற்றுவன் பயந்தோடுவன்; ஆதலால் அந்தக் கூற்றுவனிடத்தில், “இவன் நமது நண்பன்” என்று கூறுமாறு வரவேணும் என்றனர்.


திங்கள் அரவு .............குமர! ---

மார்க்கண்டேயரைப் பற்றவந்த மறலியை உதைத்து என்றும் மாளாத வரத்தை நல்கிய மகாதேவரது மகவானபடியால், முருகனும் அந்த இயமபயத்தை நீக்கி இன்னருள்புரிவார் எனக் குறிக்கப்படுகின்றனர். அருள் சக்தியாகிய உமாதேவியாரது முலைப்பாலையுண்டவரும், ஞான சக்தியைத் தாங்கிய வீரருமானபடியால், அப்பெருமான் அடியார்க்கு நிச்சயமாக மரணபயம் நீக்கி, தமது கந்தவுலகத்தைத் தருவார்.


கருத்துரை

         உமாதேவியாரது ஞானப்பாலையுண்ட வேல் வீரரே! சந்திர மௌலீசரது திருக்குமாரரே! செந்திலம்பதியில் வாழும் பெருமாளே! அந்தகன் வருகின்ற சமயத்தில், “இவன் நமது அன்பன்” என்று சொல்லுவதற்காக மயில்மிசை வரவேணும்.

No comments:

Post a Comment

பொது --- 1081. இசைந்த ஏறும்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் இசைந்த ஏறும் (பொது) முருகா!  அடியேன் அயர்ந்தபோது வந்து அருள வேண்டும். தனந்த தானந் தனதன தானன ...... தனதான...