திருச்செந்தூர் - 0060. சேமக் கோமள பாத


அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

சேமக் கோமள (திருச்செந்தூர்)

உலகத்தார், உறுதிப் பொருள்களைப் பற்றாது அவமே திரிந்து கெடுவது என்னோ?


தானத் தானன தானத் தானன
     தானத் தானன ...... தந்ததான


சேமக் கோமள பாதத் தாமரை
     சேர்தற் கோதும ......   நந்தவேதா

தீதத் தேயவி ரோதத் தேகுண
     சீலத் தேமிக ......      அன்புறாதே

காமக் ரோதவு லோபப் பூதவி
     காரத் தேயழி ...... கின்றமாயா

காயத் தேபசு பாசத் தேசிலர்
     காமுற் றேயும ......    தென்கொலோதான்

நேமிச் சூரொடு மேருத் தூளெழ
     நீளக் காளபு ......       யங்ககால

நீலக் ரீபக லாபத் தேர்விடு
     நீபச் சேவக ......       செந்தில்வாழ்வே

ஓமத் தீவழு வார்கட் கூர்சிவ
     லோகத் தேதரு ......    மங்கைபாலா

யோகத் தாறுப தேசத் தேசிக
     வூமைத் தேவர்கள் ...... தம்பிரானே.


பதம் பிரித்தல்


சேமக் கோமள பாதத் தாமரை
     சேர்தற்கு ஓதும் ......   அநந்த வேத

அதீதத்தே, அவிரோதத்தே, குண
     சீலத்தே, மிக ......       அன்பு உறாதே,

காம க்ரோத உலோபப் பூத,
     விகாரத்தே அழி- ......   கின்ற, மாயா

காயத்தே, பசு பாசத்தே, சிலர்
     காமுற்று ஏயும்அது ...... என்கொலோ தான்?

நேமிச் சூரொடு மேருத் தூள் எழ
     நீளக் காள பு- ......      யங்ககால

நீல க்ரீப கலாபத் தேர் விடு
     நீபச் சேவக! ......       செந்தில்வாழ்வே!

ஓமத் தீ வழுவார்கட்கு ஊர் சிவ-
     லோகத்தே தரு ......    மங்கைபாலா!

யோகத்து ஆறு உபதேசத் தேசிக!
     ஊமைத் தேவர்கள் ...... தம்பிரானே.

பதவுரை

         நேமி சூரொடு மேரு தூள் எழ --- கடலும், சூரபன்மனும்,  மேரு மலையும் தூளாகுமாறு,

     நீள காள புயங்க கால --- விஷமுள்ள நீண்ட பாம்பைக் காலில் இடுக்கிக் கொண்டுள்ள,

     நீல க்ரீப கலாப தேர் விடு நீப சேவக --- நீல நிறமுள்ள கழுத்தையுடைய மயிலாகிய பறவையைத் தேர்போல் செலுத்துகின்ற, கடப்ப மலரையணிந்த வீரரே!

         செந்தில் வாழ்வே --- திருச்செந்தூரில் வாழ்கின்றவரே?

         ஓம தீ வழுவார்கட்கு ஊர் சிவலோகத்தே தரும் மங்கை பாலா --- ஓம அக்கினியை தவறாமல் வளர்ப்பவர் கட்கு உறைவிடத்தை சிவலோகத்தில் தந்தருளுகின்ற உமையம்மையாருடைய திருக்குமாரரே!

         யோகத்து ஆறு உபதேச தேசிக --- யோக வழிகளை உபதேசிக்கின்ற குருநாதரே!

         ஊமை தேவர்கள் தம்பிரானே --- ஊமைபோல் வாயில்லாதவர்களாகிய தேவர்கட்குத் தலைவரே!

         சேம கோமள பாதத் தாமரை சேர்தற்கு ஓதும் --- இன்பந்தருகின்ற இளமையான திருவடிக் கமலத்தில் சேர்வதற்குரிய நெறியை ஓதுகின்ற,

     அநந்த வேத அதீதத்தே --- எண்ணில்லாத வேதங்களைக் கடந்த நிலையிலும்,

     அவிரோதத்தே --- பகை என்பதே யில்லாத சாந்தநிலை மீதும்,

     குணசீலத்தே --- நற்குண நல்லொழுக்கத்திலும்,

     மிக அன்பு உறாதே --- மிகுந்த அன்பைக் கொள்ளாமல்,

     காம க்ரோத உலோப பூத விகாரத்தே --- காமத்தாலும்,  க்ரோதத்தாலும், உலோப குணத்தாலும், ஐம்பெரும் பூதங்களின் கலகத்தாலும்,

     அழிகின்ற மாயா காயத்தே --- அழிந்துபடுகின்ற மாயமான இந்த உடம்பின் மீதும்,

     பசு பாசத்தே --- சீவாத்துமாவாகிய உயிர் இச்சைப்படும் உலகப் பற்றுக்களின் மீதும்,

     சிலர் காமுற்று ஏயும் அது என் கொலோ தான் --- சிலர் ஆசை வைத்துள்ள நிலை என்னோ? தெரியவில்லையே?


பொழிப்புரை

         கடலும் சூரனும் மேருமலையும் பொடிபடுமாறு, நஞ்சுடைய நெடிய பாம்பைக் கடலில் கொண்டுள்ளதும், நீல நிறம் பொருந்திய கழுத்தையுடையதும் ஆகிய மயிலைச் செலுத்தியவரே!

         வேள்வித் தீயைத் தவறாது வளர்க்கும் சான்றோர்க்குச் சிவலோகத்தில் இடந்தருகின்ற உமையம்மையாரது திருக்குமாரரே! 

         யோக வழிகளை உபதேசிக்கின்ற குருமூர்த்தியே!

         ஊமைகள்போல் வாயற்ற தேவர்களது தலைவரே!

         இன்பந்தருவதும், இளமையானதுமாகிய பாதார விந்தங்களைச் சேர்தற்கு உரிய வழிகளை ஓதுகின்ற எண்ணற்ற வேதங்களின் முடிவு நிலையிலும், பகையில்லாத சமாதான நிலையிலும், நற்குண நல்லொழுக்கத்திலும், மிகுந்த அன்பு கொள்ளாமல்,

     காமத்திலும், குரோதத்திலும், லோபத்திலும் ஐம்பெரும் பூத வேறுபாட்டிலும், அழிகின்ற மாயமாகிய உடம்பிலும், உயிர்கள் விரும்புகின்ற உலகப் பொருள்களிலும் ஆசைவைத்துச் சிலர் அலைவது என்ன காரணமோ?


விரிவுரை

சேமக் கோமள பாதத் தாமரை ---

சேமம்-இன்பம், கோமளம், இன்ப ஊற்று இறைவன் திருவடியில் இருக்கின்றது.

அது நினைக்குந் தோறும் காணுந் தோறும் பேசுந்தோறும் தித்திக்குந் திறனுடையது. இன்பத்தேன் சொரிகிறது.

தினைத்தனை உள்ளதுஓர், பூவினில்தேன் உண்ணாதே,
நினைத்தொறும் காண்தொறும் பேசுந்தொறும் எப்போதும்
அனைத்துஎலும்பு உள்நெக ஆனந்தத் தேன்சொரியும்
குனிப்புஉடை யானுக்கே சென்றுஊதாய் கோத்தும்பீ.    --- மணிவாசகம்.

சேமம் என்பதற்குக் காவல் எனவும் பொருளுண்டு. அடியார்களுக்குக் காவல் புரிவது. அத்திருவடி இளமை மாறாதது.

சேர்தற்கு ஓதும் அநந்த வேதர் தீதத்தே ---

இறைவன் திருவடியைச் சேரும் நெறியை இனிது எடுத்துக் கூறும் வேதத்தின்மீது பற்றுவைக்க வேண்டும். வேதம் எல்லா நூல்களுக்கும் ஆதியானது.  இறைவன் அருளிச்செய்தது.

அவிரோதத்தே ---

யாரையும் பகைக்கக் கூடாது. பகையே உலகில் இருக்கக் கூடாது. எவரும் யாதும் யானாக நோக்கும் பெருஞான நிலையைப் பெற்று விட்டால் உறவு யார்? பகைவர் யார்? எல்லாம் தானே யாகிவிடும். அங்கே சாந்த நிலையன்றி வேறு இல்லை. அந்நிலை மீது பற்று வைக்க வேணும்.

தண்டாயுதமும் திரிசூலமும் விழத் தாக்கி உன்னைத்
திண்டாட வெட்டி விழவிடுவேன் செந்தில் வேலனுக்குத்
தொண்டாகிய என் 'அவிரோத ஞானச்சுடர் வடிவாள்'
கண்டாய்அடா அந்தகா! வந்துபார் சற்று என் கைக்கு எட்டவே! ---  கந்தர்அலங்காரம்.

குணசீலத்தே:-

நற்குணத்தால் வருவது சீலம்; சீலம் என்பது பண்பின் சிகரம். ஒழுக்கத்தின் உயிர். சிவபெருமானைச் ’சீலமே’ என்று அழைக்கின்றனர் திருஞானசம்பந்தரும், அப்பரும்.

ஆலமே அமுதமாக உண்டுவா னவர்க்கு அளித்துக்
காலனை மார்க்கண் டர்க்காகக் காய்ந்தனை, அடியேற்குஇன்று
ஞாலம்நின் புகழேயாக வேண்டும் நான் மறைகள் ஏத்தும்
சீலமே ஆலவாயிற் சிவபெருமானே என்றார்.
                                                                             ---  பெரியபுராணம்.
ஞாலமே, விசும்பே, நலம், தீமையே,
காலமே, கருத்தே, கருத்தால் தொழும்
சீலமே, திருவீழி மிழலையுள்
கோலமே, அடியேனைக் குறிக்கொளே     ---  அப்பர்

சீலம் உள்ள இடத்தில் தருமம் இருக்கும்; தருமம் இருக்குமிடத்தில் சத்தியம் இருக்கும்; சத்தியம் இருக்குமிடத்தில் ஒழுக்கம் இருக்கும்; ஒழுக்கம் இருக்குமிடத்தில் பலம் இருக்கும்; பலமுள்ள இடத்தில் லட்சுமியிருப்பாள். சீலம் இல்லையானால் இத்தனையும் இருக்கமாட்டா. ஆகவே சீலத்தை யாவரும் கடைப்பிடிக்க வேண்டும்.

சீலத்தின் சிறப்பு

இந்திரன் சீலத்தை பெற விரும்பினான். பிரமதேவரிடம் சென்று சீலத்தை அருள வேண்டும் என்று கேட்டான். பிரமதேவர் “இந்திரனே! சீலம் மிகவும் உயர்ந்தது. அது பிரகலாதரிடம் தங்கியிருக்கின்றது. அவரிடம் சென்று பெறக்கடவாய்” என்றார்.

இந்திரன் பிரகலாதரிடம் வந்து, பலகாலம் பணிவிடை புரிந்தான். அவன் பணிவிடையால் மனம் மகிழ்ந்த பிரகலாதர், ”இந்திரனே! உனக்கு என்ன வேண்டும் கேள். தருகிறேன்” என்றார். இந்திரன் அவரைப் பணிந்து “ஞானசீலரே! தங்களிடம் சீலம் என்ற ஒன்றை யாசிக்கிறேன்” என்றான்.

பிரகலாதர் உடனே “நல்லது, சீலத்தைத் தந்தேன்” என்றார். பிரகலாதரிடம் இருந்து ஓர் ஒளி உருவம் புறப்பட்டு இந்திரன் மேனியில் அடங்கியது. அந்த ஒளியுருவத்தைப் பிரகலாதர் பார்த்து, “நீ யார்?” என்று கேட்டார், “நான் சீலம்” என்று கூறியது அது. பின்னர் பிரகலாதர் உடம்பிலிருந்து மற்றொரு உருவம் புறப்பட்டது. “நீ யார்?” என்றார். நான் தருமத்தின் அதி தேவதை; சீலமில்லாத இடத்தில் இருக்கமாட்டேன்” என்று கூறி, அவ்வொளியுருவம் இந்திரன்பால் சென்று மறைந்தது.

அடுத்து ஒரு ஒளியுருவம் அவர் மேனியிலிருந்து புறப்பட்டது. “நீ யார்?” என்று வினவினார். “நான் சத்தியம் தருமம் இல்லாத இடத்தில் என்னால் இருக்கமுடியாது’ என்று கூறி இந்திரன் மேனியில் அடங்கியது. அதற்குப்பின் பிரகலாதரிடமிருந்து மற்றோர் ஒளியுருவம் புறப்பட்டது. “நீ யார்?” என்று அவர் கேட்டார். “நான் ஒழுக்கம்; சத்தியத்தைவிட்டு நான் பிரிந்திருக்க மாட்டேன்” என்று கூறி மறைந்தது.

அடுத்து ஒரு ஒளியுருவம் புறப்பட்டது. கண் கூசும் படியான அதனைப் பார்த்து பிரகலாதர், “நீ யார்?” என்றார். “நான் பலம்; ஒழுக்கமில்லாத இடத்தில் பலமாகிய நான் இருக்க மாட்டேன்” என்றது.

பின்னர், ஓர் அழகிய பெண் உருவம் ஒளிமயமாகப் புறப்பட்டது. “அம்மா! நீயார்?” என்று கேட்டார் “நான் மகாலட்சுமி; பலமில்லாத இடத்தில் நான் இருப்பதில்லை” என்று கூறி மறைந்தது.

ஆகவே, லட்சுமியுள்ள இடத்தில் வலிமையும், வலிமையுள்ள இடத்தில் ஒழுக்கமும், ஒழுக்கமுள்ள இடத்தில் சத்தியமும், சத்தியமுள்ள இடத்தில் தருமமும், தருமமுள்ள இடத்தில் சீலமும் இருக்கும். இத்தனைக்கும் சீலமே ஆணிவேர்.

மிக அன்புறாதே ---

மேலே கூறிய வேதமுடிவிலும், அவிரோத ஞானத்திலும், குணசீலத்திலும் மிகுந்த அன்பு வைக்கவேணும்.

காமக்ரோத உலோபப் பூத விகாரத்தே ---

மேலேகூறிய நலன்களில் அன்பு வைக்காமல், காமத்தின் மீதும், குரோதத்தின் மீதும், ஐம்பூத பரிணாமங்களின் மீதும், மிக்க ஆசை வைக்கின் றனர். காமம்-ஆசை, குரோதம்-ஒருவர்மீது தீராத வெறுப்பும் பகையும் கொள்ளுதல்.

அழிகின்ற மாயா காயத்தே ---

ஒரு கணத்தில் அழிகின்ற இந்த உடம்பின்மீது ஆசை வைக்கின்றனர். உடம்பு இருப்பதுபோல் மாயமாய் மறைந்துவிடும் இயல்புடையது.

நேற்றுஉளார் இன்று மாளா நின்றனர், அதனைக் கண்டும்
போற்றிலேன் நின்னை, அந்தோ, போக்கினேன் வீணே காலம்,
ஆற்றிலேன், அகண்டானந்த அண்ணலே, அளவில் மாயைச்
சேற்றிலே இன்னம் வீழ்ந்து திளைக்கவோ சிறிய னேனே.    --- தாயுமானவர்

பசுபாசத்தே ---

பசுக்களாகிய உயிர்கள் உலகப் பொருள்கள் மீது சதா மனதைச் செலுத்துகின்றன.

    உலக பசுபாச தொந்தம் அதுவான
       உறவுகிளை தாயர் தந்தை      மனைபாலர்
    மலசல சுவாச சஞ்ச    லம்அதால் என்
       மதிநிலை கெடாமல் உன்றன்  அருள்தாராய்”.   ---  திருப்புகழ்.

உலகத்தார் உயிருக்கு உறுதி தரும் நலங்களை நாடாமல் இறுதி தரும் இன்னல்களை விரும்பி உழல்வது குறித்து சுவாமிகள் இரங்குகின்றனர். வேறு ஒரு திருப்புகழிலும் இவ்வாறு சுவாமிகள் இரங்கிக் கூறுகின்றனர்.

                        “..............சிலர் தாமே
    உளநெகிழ்ந்த சத்தான உரைமறந்து சத்தான
       உனை யுணர்ந்து கத்தூரி       மணநாறும்
    உபய பங்க யத்தாளில் அபயமென் றுனைப்பாடி
       உருகி நெஞ்சு சற்றோதில்    இழிவாமோ?” ---  (களவுகொண்டு) திருப்புகழ்.

நேமிச் சூரோடு மேருத் தூளெழ ---

நேமி-கடல்.   

முருகவேள் கடலையும், சூரனையும் மேருமலையையும் பொடி படுத்தினார். எம்பெருமான் சரவணப் பூந்தொட்டிலில் சிறிது அழுதருளலும், இனி நமக்கு வாழ்வில்லை என்று கருதி, கடலும், சூரும், குன்றும் அழுதன என்று கந்தரலங்காரத்திலும் கூறுகின்றார்.

    கடலழக் குன்றழச் சூரழ விம்மியழும் குருந்து"   --- கந்தர் அலங்காரம்.
 

நீல க்ரீப ---

க்ரீவம் - க்ரீபம் - கழுத்து. மயிலுக்குக் கழுத்து நீலமாக இருக்கும். அதனால் அதற்கு நீலகண்டம் என்றும் ஒரு பேருண்டு.

ஓமத் தீ வழுவார்கட்கு ஊர்சிவ லோகத்தே தரு மங்கை ---

அந்தணர்கள், சிவ பூசையில் சிவாக்கினி வளர்க்க வேண்டும். அதனால் கலியின் கொடுமை நலியும். அவ்வாறு அப்பூதி நாயனார் நித்தியாக்கினி வளர்த்தார். “அஞ்சிப் போய் கலிநலியத் அழலோம்பும் அப்பூதி” என்கிறார் அப்பரடிகள். "கற்றாங்கு எரி ஓம்பி, கலியை வாராமே செற்றார் வாழ் தில்லை" என்கிறார் திருஞானசம்பந்தப் பெருமான்.

அவ்வண்ணமே அழல் ஓம்பும் அந்தணர்கட்கு அரக்கர் இடர் விளைவிப்பர். அவ்வேளையில் முருகன் அரக்கரையழித்து வேள்விக் காவல் புரிவார்.

       மந்திர விதியின் மரபுளி வழாஅ
    அந்தணர் வேள்வி ஓர்க்கும்மே ஒருமுகம்”    ---  திருமுருகாற்றுப்படை.

       அந்தண் மறைவேள்வி காவற்கார”           ---  (முந்துதமிழ்) திருப்புகழ்.

இத்தகைய சிவாக்கினி வளர்த்தவர்கட்கு, அம்பிகை சிவலோகத்தில் இடம் தந்து அருள்புரிவார்.

யோகத்து ஆறு உபதேசத் தேசிக ---

சிவயோகத்தின் நெறியை முருகவேள் தமது அடியவர்க்கு உபதேசிப்பர். அருணகிரியார்க்கு அதனை உபதேசித்தருளினார். அருணகிரியார் சிவயோக நிலையைப் பல இடங்களில் விளக்கிக் கூறுகின்றார்.

                           “.............மலமாயை
செனித்த காரியோபாதி ஒழித்து ஞான ஆசார
    சிரத்தையாகி யான்வேறெ      னுடல்வேறு
செகத்தியாவும் வேறாக நிகழ்ச்சியாமனோதீத
    சிவச்சொரூப மாயோகி    என ஆள்வாய்”    ---  (அனித்தமான) திருப்புகழ்.

ஊமைத் தேவர்கள் ---

தேவர்கள் சிறந்த வேதாகம பண்டிதர்கள். அங்ஙனம் இருந்தும், முருகன் திருமுன் ஊமைகளைப்போல், தமது கலையாற்றல் குன்றி வாய்பேசாது நிற்கின்றனர். இரவில் நட்சத்திரங்கள் மின்னும். பகலில் சூரியன் முன் உருத் தெரியாமல் மறைந்து போம். அதுபோல், ஏனைய இடங்களில் வாசாம கோசரமாகப் பேசும் தேவர்கள், முருகவேள் திருமுன் வாயடங்கி மூகர்போல் நிற்கின்றனர்.

கருத்துரை

         மயில் வாகனரே! செந்திற் கந்தவேளே! உமை பாலரே! தேவதேவரே! உலகத்தார், உறுதிப் பொருள்களைப் பற்றாது அவமே திரிந்து கெடுவது என்னோ?





                                    

No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...