திருச்செந்தூர் - 0071. நாலும் ஐந்து வாசல்


அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

நாலு மைந்து (திருச்செந்தூர்)

இந்த உடம்புடன் துன்புறாமல், ஞான நூல்களை ஓதி உய்ய

தான தந்த தான தான தான தந்த தான தான
     தான தந்த தான தான ...... தனதான

நாலு மைந்து வாசல் கீறு தூறு டம்பு கால்கை யாகி
     நாரி யென்பி லாகு மாக ...... மதனூடே

நாத மொன்ற ஆதி வாயில் நாட கங்க ளான ஆடி
     நாட றிந்தி டாம லேக ...... வளராமுன்

நூல நந்த கோடி தேடி மால்மி குந்து பாரு ளோரை
     நூறு செஞ்சொல் கூறி மாறி ...... விளைதீமை

நோய்க லந்த வாழ்வு றாமல் நீக லந்து ளாகு ஞான
     நூல டங்க வோத வாழ்வு ...... தருவாயே

காலன் வந்து பால னாவி காய வென்று பாசம் வீசு
     காலம் வந்து வோல மோல ...... மெனுமாதி

காம னைந்து பாண மோடு வேமி னென்று காணு மோனர்
     காள கண்ட ரோடு வேத ...... மொழிவோனே

ஆல மொன்று வேலை யாகி யானை யஞ்சல் தீரு மூல
     ஆழி யங்கை ஆயன் மாயன் ...... மருகோனே

ஆர ணங்கள் தாளை நாட வார ணங்கை மேவு மாதி
     யான செந்தில் வாழ்வ தான ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


நாலும் ஐந்து வாசல் கீறு தூறு உடம்பு கால் கை ஆகி
     நாரி என்பில் ஆகும் ஆகம் ...... அதன்ஊடே

நாதம் ஒன்ற ஆதி வாயில் நாடகங்கள் ஆன ஆடி
     நாடு அறிந்திடாமல் ஏக ...... வளராமுன்,

நூல் அநந்த கோடி தேடி, மால் மிகுந்து, பார் உளோரை
     நூறு செஞ்சொல் கூறி, மாறி ...... விளைதீமை,

நோய் கலந்த வாழ்வு உறாமல், நீ கலந்து உள்ஆகு, ஞான
     நூல் அடங்க ஓத வாழ்வு ...... தருவாயே.

காலன் வந்து, பாலன் ஆவி காய என்று, பாசம் வீசு
     காலம் வந்து, ஓலம் ஓலம் ...... எனும்ஆதி

காமன் ஐந்து பாணமோடு வேமின் என்று காணும் மோனர்
     காள கண்டரோடு வேதம் ...... மொழிவோனே!

ஆலம் ஒன்று வேலை ஆகி, ஆனை அஞ்சல் தீரும் மூல
     ஆழி அங்கை ஆயன், மாயன் ...... மருகோனே!

ஆரணங்கள் தாளை நாட, வாரணம் கை மேவும், தி
     ஆன செந்தில் வாழ்வு அதுஆன ...... பெருமாளே.


பதவுரை

         காலன் வந்து பாலன் ஆவி காய என்று --- இயமன் வந்து இளைஞராகிய மார்க்கண்டேயருடைய உயிரை வருத்தவேண்டும் என்று,

     பாசம் வீசு காலம் வந்து --- பாசக் கயிற்றை வீசிய சமயத்தில் வெளிப்பட்டு,

     ஓலம் ஓலம் எனும் ஆதி --- “அஞ்சேல் அஞ்சேல்” என்ற ஆதி முதல்வரும்,

     காமன் ஐந்து பாணமோடு வேமின் என்று --- மன்மதன், அவனது ஐந்து கணைகளுடன் வெந்து விழ என்று,

     காணும் மோனர் --- நெற்றிக் கண்ணால் பார்த்த மோனமூர்த்தியும்,

     காள கண்டரோடு --- திருநீலகண்டரும் ஆகிய சிவபெருமானுடன்,

     வேதம் மொழிவோனே --- வேதமுதலாகிய பிரணவத்தின் உட்பொருளைக் கூறியருளியவரே!

         ஆலம் ஒன்று வேலை ஆகி --- ஆலகாலம் தோன்றிய கடலில் பள்ளிகொண்டு,

     ஆனை அஞ்சல் தீரும் மூல --- கஜேந்திரனுடைய அச்சத்தைத் தீர்த்த ஆதிமூலப் பொருளும்,

     ஆழி கங்கை --- சக்ராயுதத்தைத் தாங்கிய அழகிய கரமுடையவரும்,

     ஆயன் --- ஆயர் குலத்தில் அவதரித்தவரும்,

     மாயன் மருகோனே --- மாயையில் வல்லவருமாகிய திருமாலின் திருமருகரே!

         ஆரணங்கள் தாளை நாட --- வேதங்கள் திருவடியைத் துதிக்க,

     வாரணம் கை மேவும் --- சேவற்கொடியைத் திருக்கரத்தில் ஏந்தும்,

     ஆதியான - ஆதி பரம்பெருளாகியும்,

     செந்தில் வாழ்வு அது ஆன பெருமாளே --- திருச்செந்தூரில் வாழ்கின்றவரும் ஆகிய பெருமையின் மிக்கவரே!

         நாலும் ஐந்து வாசல் கீறு --- ஒன்பது வாயில்களைப் பிளந்து வைத்த,

     தூறு உடம்பு --- அவதூறுக்கு இடமான இவ்வுடம்பு,

     கால் கையாகி --- கால்களும் கரங்களுங்கொண்டு,

     நாரி என்பில் ஆகும் ஆகம் - நாணி போன்ற நரம்பு எலும்பு இவைகளால் ஆகிய சரீரம்,

     அதனூடே --- அந்த உடம்பினுள்,

     நாதம் ஒன்ற --- ஒலி(இந்திரியம் - பொருந்த),

     ஆதிவாயில் - தொழில்களுக்கு மூலமாகிய ஐம்பொறிகளினால்,

     நாடகங்களான ஆடி --- பல வகையான கூத்துக்களையாடி,

     நாடு அறிந்திடாமல் ஏக --- இவ்வாறு உயிர் போயிற்று என்று உலகம் அறியாவகையின் செல்ல,

     வளராமுன் --- இவ்வுடம்பு வளர்வதற்குமுன்,

     நூல் அநந்த கோடி தேடி --- கருவி நூல்களை பலகோடி தேடிப் படித்து,

     மால் மிகுந்து --- மயக்கத்தை அடைந்து,

     பாருளோரை --- உலகில் உள்ள செல்வரை,

     நூறு செஞ்சொல் கூறி --- நூற்றுக்கணக்கான செவ்வையான சொற்களால் துதித்துப்பாடி,

     மாறி --- புத்தித் தடுமாறி,

     விளை தீமை --- அதனால் தீமை விளைந்து,

     நோய் கலந்த வாழ்வு உறாமல் --- பலவகையான பிணிகளுடன் சேர்ந்து துன்ப வாழ்வை அடையாமல்,

     நீ கலந்து --- தேவரீர் அடியேனுடைய அறிவில் கலந்து,

     உள் ஆகு ஞானநூல் அடங்க ஓத --- உள்ளுக்குள் பொருந்தும் ஞான சாத்திரங்கள் முழுவதும் ஓதியுணரும்,

     வாழ்வு தருவாயே --- பேரின்ப வாழ்வைத் தந்து அருள்புரிவீர்.


பொழிப்புரை

         பாலராகிய மார்க்கண்டேயருடைய உயிரை வருத்த வேண்டும் என்று இயமன் வந்து பாசக்கயிற்றை வீசும் சமயம் வெளிப்பட்டு, “அஞ்சேல் அஞ்சேல்” என்று அருள் புரிந்த ஆதிமுதல்வரும், மன்மதன் ஐந்து கணைகளுடன் வெந்து அழிய நெற்றிக் கண்ணைத் திறந்து பார்த்த மோன தேசிகரும், திருநீலகண்டரும் ஆகிய சிவமூர்த்தியுடன், வேதமுதலாகிய பிரணவத்தின் பொருளைப் பேசியவரே!

         ஆலகால விடம் தோன்றிய திருப்பாற் கடலில் பள்ளி கொண்டிருந்து, கஜேந்திரன் ஆதிமூலம் என்று அழைக்க, அதன் அச்சத்தைத் தீர்த்த சக்கராயுதபாணியும், ஆயர்குலக் கொழுந்தும், மாயா விநோதருமாகிய நாராயண மூர்த்தியின் திருமருகரே!

         வேதங்கள் திருவடியைத் துதிக்க, சேவற்கொடியைத் திருக்கரத்தில் ஏந்தி, திருச்செந்தூரில் வாழுகின்ற அநாதி மூலமாகிய பெருமையின் மிக்கவரே!

         ஒன்பது வாசல்களைப் பிளந்து வைத்த பழிப்புக்கு இடமாகிய இவ்வுடம்பு கால்களைக் கொண்டு, நரம்பு எலும்புகளால் ஆகும் சரீரம்.  இவ்வுடம்புக்குள் நாதம் பொருந்தி, தொழில்களுக்கு மூலமாகிய மெய், வாய், கண், நாசி செவி யென்ற ஐம்பொறிகளினால் பலப்பல கூத்துக்களை ஆடி; உயிர் எப்படிப் போயிற்று என்று உலகம் அறியாத வகையில் இவ்வுடம்பு வீணில் வளர்ச்சி அடையா முன்னும், பலகோடி நூல்களைப் படித்து மயக்கமுற்று, செல்வர்களை நூற்றுக்கணக்கான செம்மையான சொற்களைக் கொண்டு துதித்துப்பாடி, புத்தித் தடுமாறி, அதனால் தீமையுற்று, நோய்களுடன் கூடிய வாழ்வை அடையாமுன்னம், தேவரீர் என் உணர்வில் கலந்து, ஞானசாத்திரங்கள் யாவும் ஓதி உணரும் பேரின்ப வாழ்வைத் தந்து அருள்புரிவீர்.


விரிவுரை

நாலும் ஐந்து வாசல் கீறு ---

ஒன்பது வாசல்களோடு கூடியது இந்த உடம்பு.

நவ தொளையுடைய குரம்பை”  --- (நிணமொடு) திருப்புகழ்.

தூறு உடம்பு ---

தூறு - அவதூறு; பழி. ஆன்றோர்கள் பழிப்பதற்கு இடமான சரீரம்.

நாறும்உடலை, நரிப்பொதி சோற்றினை, நான் தினமும்
சோறும் கறியும் நிரம்பிய பாண்டத்தை, தோகையர்தம்
கூறும் மலமும் இரத்தமுஞ் சோரும் குழியில் விழாது
ஏறும் படி அருள்வாய், இறைவா கச்சி யேகம்பனே.

ஊற்றைச் சரீரத்தை, ஆபாசக் கொட்டிலை, ஊன் பொதிந்த
பீற்றல் துருத்தியை, சோறிடுந் தோற்பையை, பேசரிய
காற்றல் பொதிந்த நிலையற்ற பாண்டத்தைக் காதல் செய்தே
ஏற்றுத் திரிந்து விட்டேன், இறைவா கச்சி யேகம்பனே
                                                                               --- பட்டினத்தடிகள்.

நாரி என்பிலாகும் ஆகம் ---

நாரி - நாண், நரம்பாலாகியது. நாரி - நார் போன்ற நரம்பு. இனி, நாரி - பெண், பெண்பாலாகிய தாயாருடைய உடம்பிலிருந்து உண்டாகிய உடம்பு எனினும் அமையும். இந்த உடம்பு தாய் தந்தையர்களால் உண்டாகியது.

நாடியும் நாளமும் நவில் இள எலும்பும்
வெள்ளை நீரும் வெள்ளிய பற்களும்
தலைமயிர் நகமும் தந்தையின் கூறாம்.

சிறிய குடலும் சிவப்பு நீரும்
மருவிய கொழுப்பும் மன்னும் ஈரலும்
நுவல் நுரை ஈரலும் நோக்கு மிதயமும்
தசையும் நிணமும் தாயின் கூறாம்.        --- உடல் நூல்.

நாதம் ஒன்ற ---

நாதம் - ஒலி. ஒலிக்கு வாயிலாக வாக்குகள் பொருந்த அன்றியும் நாதம் - இந்திரியம் எனவும் பொருள்படும்.
  
ஆதி வாயில் ---

வாயில் - பொறி; தொழில்கள் நிகழ்வதற்கு முதன்மையான ஐம்பொறிகள்; கண், காது, மூக்கு, வாய், மெய்.

நாடகங்களான ஆடி ---

பலவகையான கூத்துக்களை இந்த உயிர் நடிக்கின்றது.

நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி - மெத்தக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுஉடைத்தாண்டி.

நல்ல வழிதனை நாடு - எந்த
நாளும் பரமனை நத்தியே தேடு,
வல்லவர் கூட்டத்தில் கூடு - அந்த
வள்ளலை நெஞ்சினில் வாழ்த்திக் கொண்டாடு.     --- கடுவெளிச் சித்தர்

நாடு அறிந்திடாமல் ஏக வளராமுன் ---

இந்த உயிர் எவ்வாறு பிரிகின்றது என்று உலகம் அறியாத வகையில் இது பிரிகின்றது. அப்படி உயிர் பிரிவதற்கு ஏதுவான இவ்வுடம்பு வறிதே வளர்ந்து என்ன பயன்?

நூல் அநந்த கோடி தேடி............பார் உளோரை நூறு செஞ்சொல் கூறி ---

பலப்பல இலக்கண இலக்கியங்களைப் படித்து செல்பவர்களைப் பலவாறு புகழ்ந்து பாடி, அக்காலத்துப் புலவர்கள் வீணில் கல்வியறிவைப் பாழ்படுத்தினர். கல்வியையும் இறைவனுக்கே உரியனவாக்குதல் வேண்டும்

யாம்ஓதிய கல்வியும் எம்அறிவும்
தாமே பெற வேலவர் தந்ததனால்,
பூமேன் மயல்போய்அற மெய்ப் புணர்வீர்
நாமேல் நடவீர் நடவீர் இனியே.               ---  கந்தர் அநுபூதி.

நோய் கலந்த வாழ்வு ---

இந்த உடம்புடன் கூடி வாழும் வாழ்வு பல்வேறு நோய்களுக்கு இடனாயது. சில்லாண்டும் பல்வியாதியும் உடைய இந்த உடம்புடன் கூடி வாழும்போதே, இனி இந்த உடம்பு வரா வகையைத் தேடிக் கொள்ளுதல் வேண்டும்.

நீ கலந்து ---

இறைவன் உயிரில் கலந்து இருக்கின்றான். ஆனால் பாலில் படுநெய் போல் மறைந்துள்ளான். அப் பரம்பொருளை இடையறாத தியானத்தினால் உணர்வில் கலக்குமாறு புரிந்தவர்க்கு, தயிரில் நெய்போல் விளங்கத் தோன்றுவான்.

ஞான நூல் அடங்க ஒத வாழ்வு தருவாயே ---

ஞான சாத்திரங்கள் எல்லாவற்றையும் ஓதுதல் வேண்டும். எதனை உணர்ந்தால் எல்லாவற்றையும் உணர்ந்ததாக ஆகுமோ அதனை உணருதல் வேண்டும்.

ஞான நூல் என்பவை அறிவுநூல் எனப்படும்; அவையாவன; சிவஞானபோதம் முதலிய சாத்திரங்களாகும். சாத்திரங்கள் 14. தோத்திரங்கள் 12. திருமுறைகள், திருப்புகழ் முதலியவை. இவைகளை நாடோறும் ஓதி உய்வுபெறுதல் வேண்டும். “கற்பவை கற்க” என்பார் திருவள்ளுவர். “ஈடேற அறிவு நூல் கலாமூடர்” என்பார் வேறு திருப்புகழில்.

காலன் வந்து பாலன் ஆவி காய..........ஓலம் ஓலம் எனும் ஆதி ---

கடகம் என்ற இடத்தில் வாழ்ந்த குச்சக முனிவருடையப் புதல்வர் கௌசிகர்; அவருடையப் புதல்வர் மிருகண்டு முனிவர். அவருடையப் புதல்வர் மார்க்கண்டேயர். இவருக்கு இறைவர் தந்தது பதினாறு ஆண்டு. ஆயுள் இறுதியில் இயமன் வந்து உயிரைப் பற்றும் பொருட்டு பாசக்கயிற்றை வீச, மார்க்கண்டேயர் ’அபயம் அபயம்’ என்று இறைவரைத் தஞ்சம் புக, இறைவர் சிவலிங்கத்தினின்றும் வெளிப்பட்டு, மறலியை யுதைத்து, என்றும் பதினாறாக இருக்குமாறு மார்க்கண்டேயருக்குத் திருவருள் புரிந்தனர்.

காமனைந்து பாணமோடு வேமினென்று காணுமோனர் ---

கல்லாலின் புடை அமர்ந்து, கண்ணுதற் கடவுள் சனகாதி நால்வருக்கும், எல்லாமாய் அல்லவுமாய், இருந்த தன்னை இருந்தபடி இருந்து காட்டி மோன நிலையில் அமர்ந்தனர். அதனால் உலகில் உள்ள உயிர்கள் யாவும் இணை விழைச்சு இன்றியும், உயிர்கள் உற்பத்தி இன்றியும் வாளா கிடந்தன. அதனாலும், குமர உற்பத்தி குறித்தும், மாலயனாதி வானவர், இறைவருடைய மோன நிலையை மாற்றும் பொருட்டு மன்மதனை ஏவினார்கள். நெருப்பு மலையிடம் ஒரு சிறு ஈ சென்றது போல் பரஞ்சுடர் முன்னே மதனன் சென்று, கரும்பு வில்லை வளைத்து, கரும்பு நாண் மாட்டி, மலர்க்கணைகளைப் பொழிந்தான். தென்முகப் பரமாசிரியர் சிறிதே நெற்றிக் கண்ணைத் திறந்தனர். அதினின்றும் தோன்றிய சிறு நெருப்புப் பொறியால் மதனன் சாம்பல் குவியலாக ஆனான். மாரனை எரித்த அக்கண்ணினின்றும் குமாரன் தோன்றினார். நிக்கிரகம் அநுக்கிரகம் இரண்டையும் அத் திருவிழியே புரிந்தது. சிவபெருமானை வழிபடுவோருக்குக் காலபயம் இல்லை என்பதும் ஒருதலை.

காலன் தனைஉதைத்தான், காமன் தனைஎரித்தான்,
பாலன் பசிக்குஇரங்கி பாற்கடலை - ஞாலம் மெச்சப்
பின்னே நடக்கவிட்டான், பேரருளை நாடாதார்க்கு
என்னே நடக்கை இனி                     ---  தாயுமானார்.

பிறவிக்குக் காரணமான அவாவை யுண்டுபண்ணுபவன் மன்மதன். இறப்பை யுண்டுபண்ணுபவன் மறலி. இந்த இருவரையும் இறைவர் உதைத்தும் எரித்துந் தண்டித்தனர். ஆதலின் இறை வழிபாடு அன்புடன் புரிபவர்க்கு இறப்பு பிறப்பு என்ற இடர் எய்தாது.

மரணப்ரமாதம் நமக்கில்லையாம்”        ---  கந்தர் அலங்காரம்

நமனை அஞ்சோம்”                       --- அப்பர்.

என்ற திருவாக்குகளை யெல்லாம் உன்னி உறுதி பெறுக.

ஆனை அஞ்சல் தீரும்..................மருகோனே ---

ஆதிமூலம் என்று அழைத்த ஆணைக்கு அருள்சுரந்த அரிமுகுந்தனுடைய மருகர் முருகர். இவர் அநாதிமூலம்.

கருத்துரை

         சிவகுருவே! திருமால் மருகரே! செந்திலாண்டவரே! இந்த உடம்புடன் கூடித் துன்புறாமல் ஞான வாழ்வை அருள்வீர்.

                 


                 

No comments:

Post a Comment

ஆவிக்கு மோசம் வருமே

  ஆவிக்கு மோசம் வருமே -----            பத்தியைப் பற்றிச் சொல்லும்போது பயபத்தி என்று சொல்வது உண்டு. ஆனால் ,  அதன் சரியான பொருள் இன்னது என்று ...