திருப்
பாதிரிப்புலியூர்
(திருப்பாப்புலியூர் / கடலூர்)
நடு நாட்டுத் திருத்தலம்.
திருப்பாதிரிபுலியூர் கடலூர் நகரின் ஒரு
பகுதி. திருப்பாதிரிபுலியூர் இரயில் நிலையத்தில் இருந்து சுமார் அரை கி.மீ.
தொலைவிலும், கடலூர் பேருந்து
நிலையத்தில் இருந்து அரை கி.மீ. தூரத்திலும் கோயில் உள்ளது. நகரப் பேருந்து
வசதிகள் உண்டு.
இறைவர்
: தோன்றாத் துணைநாதர், பாடலீசுரர்
இறைவியார்
: பெரியநாயகி அம்மை, கோதைநாயகி
தல
மரம் : பாதிரி (வடமொழி-பாடலம்)
தீர்த்தம் : கெடில நதி, சிவகர தீர்த்தம், பிரமதீர்த்தம் (கடல்)
தேவாரப்
பாடல்கள்: 1. சம்பந்தர் - முன்னம்நின்ற
முடக்கால்.
2. அப்பர் - ஈன்றாளு
மாயெனக்கு.
ஒரு முறை
கயிலாயத்தில் பரமனும், பார்வதியும்
சொக்கட்டான் ஆடினார். பலமுறை ஆடியும் தோல்வி பெருமானுக்கே. ஆனால் வெற்றி தனக்கே
எனக் கூறிய பெருமானின் திருக்கண்களை பார்வதி தன் திருக்கரங்களால் மூடினாள். இதனால்
உலகம் இருண்டு அனைத்து செயல்களும் நின்று போயின. இதனைக் கண்ட இறைவி தன் செயலால்
ஏற்பட்ட இன்னல்கள் கண்டு மனம் வருந்தி தனக்கு மன்னிப்பு வேண்டினாள். அதற்கு இறைவன்
சிவபெருமான் இறைவியை பூலோகம் சென்று அங்குள்ள சிவ தலங்களை பூசிக்கும்படியும்
அவ்வாறு பூசிக்கும் போது எந்த தலத்தில் இடது கண்ணும் இடது தோளும் துடிக்கின்றதோ
அந்தத் தலத்தில் ஆட்கொள்வதாக கூறினார். அதுபோல் இறைவியும் பல தலங்களைத்
தரிசித்துவிட்டு பாதிரி வனமாகத் திகழ்ந்த இத்தலத்திற்கு வந்தபோது இடது கண்ணும், இடது தோளும் துடித்ததால் இத்தலத்திலேயே
தங்கி அரூபமாக (உருவமில்லாமல்) இறைவனை பூசித்து பேறு பெற்றாள்.
ஆலயத்தில் இறைவன் கருவறை சுற்றி
வரும்போது கஜலட்சுமி சந்நிதியை அடுத்து, துர்க்கை
கோஷ்ட மூர்த்தமுள்ள இடத்தில் அம்பிகை அருவ வடிவில் தவம் செய்த இடம் அருந்தவநாயகி
சந்நிதியாகப் போற்றப்பட்டு வருகின்றது. சந்நிதியில் உருவம் ஏதும் இருக்காது. பீடம்
மட்டுமே உள்ளது.
கிழக்கு நோக்கி
அமைந்துள்ளது. இராஜகோபுரத்திற்கு பக்கத்தில் சிவகரதீர்த்தம் நல்ல படித்துறைகளுடன்
உள்ளது. முன மண்டபமும் அதையடுத்து 5 நிலை இராஜகோபுரமும்
உள்ளது. கோபுரத்தில் ஏராளமான சுதை சிற்பங்கள் உள்ளன. வாயிலைக் கடந்து உட்சென்றால்
உயரத்தில் பலிபீடம், செப்புக்கவசமிட்ட
கொடிமரம், முன்னால் நந்தி
முதலியவைகளைத் தரிசிக்கலாம். வெளிப்பிராகாரத்தில் சந்நிதிகள் ஏதுமில்லை.
வெளிப்பிராகார வலம் முடித்து துவார விநாயகர், துவார சுப்பிரமணியர் தொழுது 2வது வாயிலைக் கடந்து இடப்புறமாகத்
திரும்பினால் உள்சுற்றில் சந்திரனும் அதையடுத்து திருநாவுக்கரசர் உற்சவமூர்த்தமும், அடுத்து மூலமூர்த்தமும் தனித்தனி
சந்நிதிகளாக உள்ளன. அமர்ந்த கோலத்துடன் அப்பர் கைகூப்பி உழவாரத்துடன் காட்சி
தருகின்றார். திருநாவுக்கரசரை உட்கார்ந்த நிலையில் இருப்பது இந்தத் தலத்தில் மட்டுமே
காண முடியும். உட்பிரகாரம் சுற்றி வரும்போது 63 மூவர் சந்நிதியை அடுத்து தலவிநாயகர்
கன்னி விநாயகர் என்ற பெயருடன் காட்சி தருகிறார். அம்பிகை இறைவனை வழிபட்டபோது உதவி
செய்தமையால் கையில் பாதிரி மலருடன் காட்சி தருகிறார். உள் சுற்றில் உற்சவத்
திருமேனிகளின் சந்நிதி, வியாக்ரபாதர், அகத்தியர் முதலியோர் பூசித்த லிங்கங்கள், மீனாட்சி சுந்தரேசர் சந்நிதி, வள்ளி தெய்வயானை சமேத ஆறுமுகர்
சந்நிதிகள் ஆகியவையும் உள்ளன. தலமரமான ஆதிபாதிரி மரம் கவசமிட்டுக் காக்கப்பட்டு
வருகின்றது. துவாரபாலகரைத் தொழுது உட்சென்றால் பாடலேஸ்வரரைத் தரிசிக்கலாம். இங்கு
சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
புலிக்கால் முனிவர் தவம் செய்து பேறு
பெற்ற இத்தலம் இதுவாகும். இதன் காரணமாகவே பாதிரி மரத்தை தலவிருட்சமாக உள்ள இவ்வூர்
பாதிரிப்புலியூர் எனப் பெயர் பெற்றது. பஞ்ச புலியூர் தலங்களில் இத்தலமும் ஒன்று.
இத்தலத்தில் ஆறுமுகப் பெருமான் வடக்கு நோக்கிய மயிலின் மீது ஒரு காலை மடித்து
அமர்ந்து கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். வள்ளி தெய்வானை இருவரும் அருகே நின்ற
கோலத்தில் காட்சிதருகின்றனர். அருணகிரிநாதர் இத்தல முருகப்பெருமானை வழிபட்டு பாடல்
அருளிச் செய்துள்ளார். திருப்புகழில் ஒரு பாடல் இத்தலத்திற்குரியது.
எல்லா சிவன் கோயில்களிலும் பள்ளியறை
இறைவியின் சந்நிதியின் அருகில் தான் இருக்கும். பள்ளியறை இல்லாத கோயில்களும்
உண்டு. (எடுத்துக் காட்டாக திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் ஆலயத்தைக் கூறலாம்). ஆனால் பள்ளியறை
இறைவன் திருக்கோயிலில் அமைந்து, நாள்
தோறும் இறைவியே பள்ளியறைக்கு எழுந்தருள்வது இத்தலத்தின் தனிச்சிறப்பு.
திருநாவுக்கரசரை பல்லவ மன்னன்
மகேந்திரவர்மன்(கி.பி 600 -630)
சமணர்கள்
பேச்சைக் கேட்டு கல்லுடன் சேர்த்துக் கட்டி கடலில் தள்ளியபோது அப்பர் சுவாமிகள்
"கல்துணைப்பூட்டி ஓர் கடலில் பாய்ச்சினும் நல் துணையாவது நமச்சிவாயவே"
என நமசிவாயப் பதிகம் பாடித்துதிக்க அக்கல்லே தெப்பமாக மாறி கடலில் மிதந்து வந்து
கறையேறிட நகர மக்களெல்லாம் அதிசயப்பட்டு அன்பு கொண்டு மகிழ்ந்து வரவேற்கச்
சென்றார்கள். இன்றும் அப்பர் கடலிலிருந்து கரையேறிய இடம் "கரையேறவிட்ட
குப்பம்" என்னும் பெயரால் சிறந்து விளங்குகிறது.
கரையேறிய அப்பர் திருப்பாதிரிப்புலியூர்
பாடலீசுரர்திருக்கோயிலுக்குச் சென்று "ஈன்றாளு மாயெனக் கெந்தையு மாயுடன்
தோன்றினராய் " எனத் தொடங்கும் பதிகம் பாடி இறைவனைத் தொழுதார். அத் திருப்பதிகத்தில்
"தோன்றாத் துணையாய் இருந்தனன் தன் அடியோர்களுக்கே" என்று
குறிப்பிடுவதால் இத்தல இறைவன் "தோன்றாத்துணை நாதர்" என்னும் பெயரும்
பெற்றார்.
காலை 6.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல், இரவு 9.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.
வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக்
கலிவெண்பாவில், "மாண் உற்ற பூப் பாதிரி, கொன்றை, புன்னை முதல் சூழ்ந்து
இலங்கும் ஏர்ப் பாதிரிப்புலியூர் ஏந்தலே" என்று போற்றி உள்ளார்.
திருஞானசம்பந்தர்
திருப்பதிக வரலாறு
பெரிய
புராணப் பாடல் எண் : 962
செல்வம்
மல்கிய தில்லைமூ
தூரினில் திருநடம்
பணிந்துஏத்தி,
பல்பெ
ருந்தொண்டர் எதிர்கொளப்
பரமர்தம் திருத்தினை
நகர்பாடி,
அல்கு
தொண்டர்கள் தம்முடன்
திருமாணி குழியினை
அணைந்துஏத்தி,
மல்கு
வார்சடை யார்திருப்
பாதிரிப் புலியூரை
வந்து உற்றார்.
பொழிப்புரை : செல்வம் நிறைந்த `தில்லை\' என்ற பழம் பெரும் பதியில் இறைவரின் திருக்கூத்தை
வணங்கிப் போற்றிப் பெருந் தொண்டர்கள் பலரும் வரவேற்கச் சென்று, இறைவரின் திருத்தினை நகரை அடைந்து பாடிச்சென்று, அத்தொண்டர்களுடன் `திருமாணி குழியினை' அடைந்து போற்றி, செறிந்து பொருந்திய நீண்ட சடையை உடைய
இறைவரின் `திருப்பாதிரிப்புலியூரை' வந்து அடைந்தார்.
பெ.
பு. பாடல் எண் : 963
கன்னி
மாவனம் காப்புஎன
இருந்தவர் கழலிணை
பணிந்து,அங்கு
முன்ன
மாமுடக் கால்முயற்கு
அருள்செய்த வண்ணமும்
மொழிந்துஏத்தி,
மன்னு
வார்பொழில் திருவடு
கூரினை வந்துஎய்தி
வணங்கிப்போய்,
பின்னு
வார்சடை யார்திரு
வக்கரை பிள்ளையார் அணைவுற்றார்.
பொழிப்புரை : ஞானசம்பந்தர் பெரிய `கன்னிவனத்தைத்' தம் காவலிடமாகக் கொண்டு எழுந்தருளிய
சிவபெருமானின் இரண்டு திருவடிகளையும் பணிந்து, அப்பதியில் முன் நாளில் முடங்கிய
காலுடன் முயலாய் ஒறுக்கப்பட்ட மங்கண முனிவர் சாபநீக்கம் பெற அருள் செய்த
தன்மையையும் பதிகத்தில் மொழிந்து போற்றிச் சென்று, நீண்ட சோலைகள் சூழ்ந்த திருவடுகூரினை
அடைந்து, நீண்ட சடையுடைய
இறைவரின் `திருவக்கரை' என்ற பதியை அடைந்தார்.
குறிப்புரை : உமையம்மையார் தவம்
செய்து அருள்பெற்ற இடம் ஆதலின்,
இவ்வூர்
கன்னியாவனம் என்றும் அழைக்கப்பெற்றது. திருப்பாதிரிப்புலியூரில் அருளிய பதிகம் `முன்னம் நின்ற' (தி.2 ப.121) எனத் தொடங்கும் செவ்வழிப் பண்ணிலமைந்த
பதிகமாகும். இப்பதிகத்தின் முதற் பாடலில், `முன்னம் நின்ற முடக்கால் முயற்கருள்
செய்து, நீள் புன்னை நின்று
கமழ்பாதிரிப் புலியூருளான்' எனவருவது கொண்டு, ஆசிரியர் இவ்வரலாற்றை எடுத்து
மொழிகின்றார்.
திருவடுகூரில் அருளிய பதிகம் `சுடுகூர்எரிமாலை' (தி.1 ப.86) எனத் தொடங்கும் குறிஞ்சிப் பண்ணிலமைந்த
பதிகமாகும்.
2.121 திருப்பாதிரிப்புலியூர் பண் - செவ்வழி
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
முன்னம்நின்ற
முடக்கால் முயற்குஅருள் செய்து,நீள்
புன்னைநின்று
கமழ்பா திரிப்புலி யூர்உளான்,
தன்னைநின்று
வணங்கும் தனைத்தவம் இல்லிகள்
பின்னைநின்ற
பிணியாக் கையைப்பெறு வார்களே.
பொழிப்புரை :முடங்கிய கால்களை
உடைய முயலுருவத்தைப் பெற்றுத் தன்னை வணங்கி முன்னே நின்ற மங்கண முனிவருடைய
சாபத்தைப் போக்கி அவருக்கு அருள் செய்து , நீண்ட புன்னைமரங்கள் மணம் கமழும்
திருப்பாதிரிப் புலியூரில் எழுந்தருளி இருக்கும் இறைவனை வணங்கும் மேலான தவம்
இல்லாதவர்கள் நோயால் நலியும் யாக்கையைப் பெறுவார்கள் .
பாடல்
எண் : 2
கொள்ளிநக்க
பகுவாய பேய்கள் குழைந்துஆடவே,
முள்இலவவம்
முதுகாட்டு உறையும் முதல்வன்இடம்,
புள்இனங்கள்
பயிலும் பாதிரிப் புலியூர்தனை
உள்ள, நம்மேல் வினைஆயின
ஒழியுங்களே.
பொழிப்புரை :நகும் போது தீயை
உமிழும் திறந்த வாயை உடைய பேய்கள் குழைந்தாட முள்ளிலவ மரங்கள் நிறைந்த சுடு
காட்டில் உறையும் இறைவன் இடமாகிய ,
அன்னம்
, மயில் முதலிய
பறவையினங்கள் வாழும் திருப்பாதிரிப்புலியூரை நினைந்து வழிபட்டு நம்மேலுள்ளன ஆகிய
வினைகளை ஒழியுங்கள் .
பாடல்
எண் : 3
மருள்இல்நல்லார்
வழிபாடு செய்யும் மழுவாளர்,மேல்
பொருள்இல்
நல்லார் பயில் பாதிரிப் புலியூர் உளான்,
வெருளின்மானின்
பிணை நோக்கல்செய்து வெறிசெய்தபின்
அருளிஆகத்து
இடைவைத் ததுவும் அழகாகவே.
பொழிப்புரை :மெய்ப்பொருளை
அறிந்தவரும் மயக்கமற்ற ஞானி யரும் வழிபாடு செய்து வாழும் திருப்பாதிரிப்புலியூரில்
வாழும் மழுவாளரைக்கண்டு மருளும் பெண்மான் போன்ற பார்வையை உடைய பார்வதியை நோக்கி , அவளைத் தம்மீது காதல் கொள்ளச் செய்து , தம் ஆகத்திடை வைத்து அருள்பவராய் உள்ள
அப் பெருமான் செயல் மிக்க அழகானதாகும் .
பாடல்
எண் : 4
போதினாலும்
புகையாலும் உய்த்தே, அடியார்கள்தாம்
போதினாலே
வழிபாடு செய்யப் புலியூர் தனுள்
ஆதிநாலும்
அவலம் இலாதஅடி கள்,மறை
ஓதிநாளும்
இடும்பிச்சை ஏற்றுஉண் டுஉணப்பாலதே.
பொழிப்புரை :மலர்கள் தூவியும்
தசாங்கம் முதலிய மணமுடைய பொருள்களைப் புகைத்தும் அடியவர்கள் காலந்தவறாமல் வழிபாடு
செய்யப் பாதிரிப்புலியூரில் உறையும் அவலம் இலாத அடிகள் நாள் தோறும் வேதங்களை ஓதிக்
கொண்டு சென்று அன்பர்கள் இடும் பிச்சையை ஏற்று உண்ணும் இயல்பினர் .
பாடல்
எண் : 5
ஆகம்நல்லார்
அமுதுஆக்க உண்டான், அழல்ஐந்தலை
நாகம்
நல்லார் பரவந்நயந்து அங்குஅரை ஆர்த்தவன்,
போகம்நல்லார்
பயிலும் பாதிரிப் புலியூர் தனுள்
பாகம்
நல்லா ளொடுநின்ற எம்பர மேட்டியே.
பொழிப்புரை :நுகர்ச்சிக்குரிய
இளமகளிர் பயிலும் பாதிரிப்புலியூரில் பெரிய நாயகியாரை இடப்பாகமாகக் கொண்டுள்ள
பரமேட்டி உடலின் இடப் பாதியிலே உறையும் உமையம்மை அமுது ஆக்கிக் கொடுக்க நஞ்சை
உண்டவன் . நல்லோர் பரவ நச்சு வெப்பத்தை உடைய ஐந்தலைப் பாம்பை விரும்பி அரையில்
கட்டியவன் .
பாடல்
எண் : 6
மதியம்
மொய்த்த கதிர்போல் ஒளிம் மணல் கானல்வாய்ப்
புதிய
முத்தம் திகழ் பாதிரிப் புலியூர் எனும்
பதியில்வைக்கப்
படும்எந்தை தன்பழம் தொண்டர்கள்,
குதியும்
கொள்வர், விதியும் செய்வர், குழகாகவே.
பொழிப்புரை :பழ அடியார்கள் அழகாக
ஆகம விதிகளின்படி வழிபாடு செய்யவும் ஆனந்தக் கூத்தாடவும் நிலவொளி போன்று வெண்மணல்
பரவிய கடற்கரைச் சோலை இடத்தே புதிய முத்துக்கள் திகழும் திருப்பாதிரிப்புலியூரில்
எழுந்தருளி உள்ளார் இறைவர் .
பாடல்
எண் : 7
கொங்கு
அரவப் படுவண்டு அறைகுளிர் கானல்வாய்ச்
சங்குஅரவப்
பறையின் ஒலி அவை சார்ந்துஎழப்
பொங்குஅரவம்
உயர் பாதிரிப் புலியூர்தனுள்
அங்குஅரவம்
அரையில் அசைத்தானை அடைமினே.
பொழிப்புரை :பூந்தாதுகளின்
வண்டுகள் செய்யும் ஒலி கடற்கரைச் சோலைகளில் சங்குகளின் ஒலி , பறைமுழவு ஆகிய ஒலிகள் கூடி ஆரவாரம்
மிகுந்து தோன்றும் திருப்பாதிரிப் புலியூரில் இடையிலே பாம்பைக் கச்சாக அணிந்து
எழுந்தருளிய பரமனை அடையுங்கள் .
பாடல்
எண் : 8
வீக்கம்
எழும் இலங்கைக்கு இறை விலங்கல் இடை
ஊக்கம்
ஒழிந்து, அலறவ் விரலால் இறை
ஊன்றினான்,
பூக்கமழும்
புனல் பாதிரிப் புலியூர்தனை
நோக்க,மெலிந்து அணுகா
வினைநுணு குங்களே.
பொழிப்புரை :பெருமை மிக்க
இலங்கைக்கு அரசனாகிய இரா வணன் கயிலை மலையிடைத்தனது செருக்கழிந்து அலறுமாறு கால்
விரலை ஊன்றிய இறைவன் எழுந்தருளிய மலர் மணம் கமழும் நீர் வளம் சான்ற பாதிரிப்புலியூரை
நோக்க வினைகள் மெலிந்து நுணுகி ஒழியும் .
பாடல்
எண் : 9
அன்னம்
தாவும் அணிஆர் பொழில் மணிஆர் புன்னை
பொன்அம்
தாதுசொரி பாதிரிப் புலியூர்தனுள்
முன்னம்
தாவி அடிமூன்று அளந்தவன் நான்முகன்
தன்னம்
தாள் உற்று உணராதது ஓர்தவ நீதியே.
பொழிப்புரை :அன்னங்கள் விளையாடும்
அழகிய சோலைகளில் முத்துமணி போன்ற புன்னை மலர்கள் பொன்போலும் தாதுக்களைச் சொரியும்
திருப்பாதிரிப்புலியூரில் , முற்காலத்தே எல்லா
உலகங் களையும் தாவி மூன்றடியால் அளந்த திருமாலும் , நான்முகனும் , சிறி தேனும் திருத்தாளையும்
திருமுடியையும் அறிய முடியதவராய்த் தவத் தின் நேரிய நீதி வடிவினராய்ப் பெருமான்
விளங்குகிறார் .
பாடல்
எண் : 10
உரிந்தகூறை
உருவத் தொடு தெருவத்துஇடைத்
திரிந்து
தின்னும் சிறுநோன்பரும் பெரும் தேரரும்
எரிந்துசொன்னவ்
உரைகொள்ளாதே, எடுத்து ஏத்துமின்,
புரிந்தவெண்
ணீற்று அண்ணல் பாதிரிப்புலி யூரையே.
பொழிப்புரை :ஆடையின்றித் தெருவில்
திரிந்து தின்னும் அற்பவிரதத்தை உடைய சமணரும் , புத்தரும் எரிவினால் சொல் லும் உரைகளைக்
கொள்ளாது , திருவெண்ணீறு அணிந்த
திருப்பாதிரிப் புலியூர் அண்ணலைப் புகழ்ந்து போற்றுங்கள் .
பாடல்
எண் : 11
அம்தண்
நல்லார் அகன் காழியுள் ஞானசம்
பந்தன்,நல் லார்பயில்
பாதிரிப் புலியூர்தனுள்
சந்தமாலைத்
தமிழ்பத்து இவைதரித் தார்கள்மேல்
வந்துதீயவ்
அடையாமை யால் வினை மாயுமே.
பொழிப்புரை :அந்தணர்கள்
நிறைந்துவாழும் அகன்ற சீகாழிப் பதியில் திருஞானசம்பந்தன் , நல்லவர் வாழும் திருப்பாதிரிப் புலியூரில்
எழுந்தருளிய இறைவர் மீது பாடிய இசை மாலை ஆகிய இததிருப்பதிகத்தை ஓதி வழிபடுவாரைத்
தீமைகள் அணுகா. அவர்தம் வினைகள் மாயும்.
திருச்சிற்றம்பலம்
திருநாவுக்கர்
திருப்பதிக வரலாறு.
யானைக்குத் தப்பிப் பிழைத்த சமணர்கள், மானம் அழிந்து மயங்கி வருந்திய சிந்தையராய்
மன்னனிடம் தஞ்சம் புகுந்து, அவன் தாளில்
தனித்தனியே வீழ்ந்து புலம்பி,
"நமது
மந்திர வலி" என்னும் பழம்பாடத்தையே படித்தார்கள். மதிகெட்ட மன்னனும் சீறி, "இனிச் செய்வது
என்ன" என்று அவர்களையே கேட்டான்.
தீமைக்குச் சிறிதும் அஞ்சாத சமணர்கள், "தருமசேனைரைக் கல்லுடன் பிணித்துக்
கடலில் எறிக" என்றார்கள். அரசன், அங்கிருந்த ஏவலாளர்களை "அப்படியே
செய்க" என்றான். அவர்களும் அப்படியே
செய்தார்கள்.
அப்பர் பெருமான், "எப்பரிசு ஆயினும் ஆக, எந்தையை ஏத்துவன்" என்று, "சொல்துணை
வேதியன்" என்னும் நமச்சிவாயத் திருப்பதிகத்தைப் பாடியருளினார். " பொன்
துணைத் திருந்தடி பொருந்தக் கைதொழ,
கல்துணைப்
பூட்டி ஓர் கடலில் பாய்ச்சினும் நல்துணை ஆவது நமச்சிவாயவே" என்றார். இறைவன்
திருவடி மனத்திலே பொருந்துமாறு வழிபட்டோமானால், கல்லுடன் கட்டிக் கடலில் போட்டாலும்
காப்பது திருவைந்தெழுத்தே. கடல்மீது கல்லானது மிதந்தது. பிணித்த பாசமும் அறுந்தது. கருங்கல்லே சிவிகை
ஆக, அதை வருணன் தாங்கி, அப்பர் பெருமானை திருப்பாதிரிபுலியூர்
அருகே விடுத்தனன்.
திருக்கோயிலுக்குச் சென்று இறைவரை
வணங்கி, அருகக் கடல் கடந்து
ஏறிய அப்பர் பெருமான், இறைவன் திருவருள்
திறத்தை எண்ணி மகிழ்ந்து,
"ஈன்றாளுமாய்"
என்னும் தமிழ்மாலையைச் சாத்தி அருளினார்.
பெரியபுராணத்தின் வாயிலாக இதை அறிந்து
துதிப்போம்....
பெரிய
புராணப் பாடல் எண் : 121
"நங்கள் சமயத்தின்
நின்றே நாடிய முட்டி
நிலையால்
எங்கள்
எதிர் ஏறு அழிய யானையால் இவ்வண்ணம்
நின்சீர்
பங்கப்
படுத்தவன் போகப் பரிபவம் தீரும்
உனக்குப்
பொங்கு அழல்
போக அதன்பின் புகை அகன்றால் என"
என்றார்.
பொழிப்புரை : `நம் சமயத்தினின்றும் தெரிந்து கொண்ட
மந்திர சாதனையால் ஏவுதல் கெடுமாறு,
இங்ஙனம்
யானையால், உன்புகழை அழித்தவன்
இறக்க, பொங்கும் தீ போகவே
அதன்பின் புகை நீங்குவதைப் போல,
உனக்கு
வந்த இழிநிலையும் நீங்கும்` என்றனர்.
பெ.
பு. பாடல் எண் : 122
அல்இருள்
அன்னவர் கூற அரும்பெரும் பாவத்
தவன்பின்
"தொல்லைச் சமயம்
அழித்துத் துயரம் விளைத்தவன்
தன்னைச்
சொல்லும்
இனிச்செய்வது" என்ன, சூழ்ச்சி முடிக்கும்
தொழிலோர்,
"கல்லுடன் பாசம்
பிணித்துக் கடல்இடைப்
பாய்ச்சுவது" என்றார்.
பொழிப்புரை : இரவில் காணும்
இருளைப் போன்ற சமணர்கள் இங்ஙனம் கூற, அரும்பெரும்
பாவச்செயலையுடைய அரசன், அதன் பின் `பழமையான நம் சமயத்தை அழிவு செய்து
துன்பம் விளைத்த தருமசேனனை இனிச் செய்வதென்?` என வினவ, தாங்கள் கருதிய வஞ்சனையையே முடிக்கும்
செயலையுடைய அவ்வமணர்கள் கல்லுடன் சேர்த்துக் கயிற்றால் கட்டிக் கடலில் வீசியெறிதல்
இனிச் செய்யத்தக்கது எனக் கூறினர்.
பெ.
பு. பாடல் எண் : 123
ஆங்குஅது
கேட்ட அரசன் அவ்வினை மாக்களை
நோக்கித்
"தீங்கு புரிந்தவன்
தன்னைச் சேமம் உறக்கொடு போகி,
பாங்குஒரு
கல்லில் அணைத்து, பாசம் பிணித்து, ஓர் படகில்
வீங்கு ஒலி
வேலையில் எற்றி வீழ்த்துமின்"
என்று விடுத்தான்.
பொழிப்புரை : அதனைக் கேட்ட மன்னன், அத்தகைய தொழிலைச் செய்யும் மக்களைப்
பார்த்து, `தீமைசெய்த
தருமசேனனைத் தப்ப விடாது கொண்டு போய், பக்கத்தில்
ஒரு கல்லுடன் சேர்த்துக் கயிற்றால் கட்டி, ஒரு படகில் ஏற்றி, மிகவும் ஒலிக்கின்ற கடலில் வீசி
வீழ்த்தி விடுங்கள்` என அனுப்பினான்.
பெ.
பு. பாடல் எண் : 124
அவ்வினை
செய்திடப் போகும் அவருடன் போய், அருகந்த
வெவ்வினை
யாளரும் சென்று மேவிட, நாவுக் கரசர்
செவ்விய
தம்திரு உள்ளம் சிறப்ப அவருடன்
சென்றார்,
பவ்வத்தின்
மன்னவன் சொன்னபடி முடித்தார் அப்
பதகர்.
பொழிப்புரை : அச்செயலைச்
செய்யப்போகும் அவர்களோடு, கொடுவினை செய்யும்
மற்ற அமணர்களும் செல்ல, நாவுக்கரசரும்
செம்மையான தம் திருவுள்ளம் சிறப்படைய அவர்களுடன் சென்றார். அரசன் ஆணையிட்டவாறே
அவ்விழிந்தோர் தம் செயலைச் செய்து முடித்தனர்.
பெ.
பு. பாடல் எண் : 125
அப்பரிசு
அவ்வினை முற்றி அவர்அகன்று ஏகிய
பின்னர்,
ஒப்புஅரும்
ஆழ்கடல் புக்க உறைப்புஉடை
மெய்த்தொண்டர் தாமும்,
"எப்பரிசு ஆயினும் ஆக, ஏத்துவன்
எந்தையை" என்று
செப்பிய
வண்தமிழ் தன்னால் சிவன்அஞ்செழுத்தும்
துதிப்பார்.
பொழிப்புரை : அவர்கள் அத்தகைய
செயலைச் செய்து நீங்கிய பின்பு,
ஒப்பற்ற
ஆழமுடைய கடலுள் வீழ்ந்த உண்மைத் தொண்டின் உறைப்பு உடையவரான திருநாவுக்கரசரும், `எத்தகைய நிலையிலும் நான் என் தலைவனாகிய
சிவபெருமானை வணங்குவன்` எனத் துணிவு பூண்டு, சொல்லிய வளப்பமுடைய தமிழ்ப் பாக்களினால்
அப் பெருமானின் ஐந்தெழுத்தைப் போற்றுபவராய்.
பெ.
பு. பாடல் எண் : 126
"சொல்துணை
வேதியன்" என்னுந் தூமொழி
நல்தமிழ்
மாலையா "நமச்சி வாய" என்று
அற்றமுன்
காக்கும்அஞ் செழுத்தை அன்பொடு
பற்றிய
உணர்வினால் பதிகம் பாடினார்.
பொழிப்புரை : `சொற்றுணை வேதியன்` எனத் தொடங்கும் தூய திருமொழிகளை முதலில்
வைத்துத் தொடங்கிய நல்ல தமிழ் மாலையாக, `நமச்சிவாய` எனத் துன்பக் காலத்தில் உடனிருந்து
காக்கும் திருவைந்தெழுத்தை, நிரம்பிய அன்புடன்
விடாது பற்றிய நிலையில் திருப்பதிகத்தைப் பாடினார்.
குறிப்புரை : அற்றம் - குற்றம்:
தீவினை. `பாவத்தை நண்ணி நின்று
அறுப்பது நமச்சிவாயவே` (தி.4 ப.11 பா.4) எனவரும் திருவாக்கும் காண்க. இப்பதிகம், `நமச்சிவாயப் பதிகம்` என அழைக்கப் பெறும். தூமொழி -
தூய்மையைத் தரும் மொழி. நற்றமிழ் மாலை - நன்மையைத் தரும் பதிகம். தூய்மை
பாசநீக்கமும், நன்மை சிவப்பேறுமாம்.
`கற்றுணைப் பூட்டியோர்
கடலிற் பாய்ச்சினும்` (தி.4 ப.11 பா.1) என்பது இவ்வரலாற்றிற்கு அகச்
சான்றாகும். பாய்ச்சினும் என்னும் உம்மை தீமை மிகுதி குறித்தது.
பெ.
பு. பாடல் எண் : 127
பெருகிய
அன்பினர் பிடித்த பெற்றியால்
அருமல
ரோன்முதல் அமரர் வாழ்த்துதற்கு
அரியஅஞ்
செழுத்தையும் அரசு போற்றிட,
கருநெடும்
கடலினுள் கல்மி தந்ததே.
பொழிப்புரை : பெருகிய அன்பின்
திறத்தவராகிப் பெருமானையே பற்றி நிற்கும் தன்மையினால், அரிய நான்முகன் முதலான அமரர்களாலும்
போற்றற்கு அரிய திருவைந்தெழுத்தைத் திருநாவுக்கரசர் போற்ற, கரிய நெடிய கடலுள் அக்கல்லானது
மிதக்கலாயிற்று.
குறிப்புரை : முன்னைய பாடலில் `அஞ்செழுத்தை அன்பொடு பற்றிய உணர்வினால்` என்றார். இப்பாடலில் பிடித்த பெற்றியால்
என்று அருள்கின்றார். ஐந்தெழுத்தின் மீது நாவரசர்க்குள்ள உறைப்பு இவற்றால்
அறியலாம். `இம்மையே உன்னைச்
சிக்கெனப் பிடித்தேன்` (தி.8 ப.37 பா.3) எனவரும் திருவாக்கும் காண்க. கடலில்
கல் மிதத்தல் உலகியல் நிலையில் அரிதெனினும் அருளியல் நிலையில் எளிதினும் எளிதாம்.
பெ.
பு. பாடல் எண் : 128
அப்பெரும்
கல்லும்அங்கு அரசு மேல்கொளத்
தெப்பமாய்
மிதத்தலில் செறித்த பாசமும்
தப்பியது
அதன்மிசை இருந்த தாஇல்சீர்
மெய்ப்பெருந்
தொண்டனார் விளங்கித் தோன்றினார்.
பொழிப்புரை : அப்பெரிய கல்லும், அங்குத் திருநாவுக்கரசர் அதன்மீது
வீற்றிருக்கத் தெப்பமாக மிதக்க,
அவரது
திருமேனியைப் பிணித்திருந்த கயிறும் அறுபட்டது. அக்கல்லாகிய தெப்பத்தின் மேல்
வீற்றிருந்த கெடுதல் இல்லாத சிறப்பினையுடைய மெய்ப்பெரும் தொண்டரான நாவரசரும்
விளங்கித் தோன்றினார்.
பெ.
பு. பாடல் எண் : 129
இருவினைப்
பாசம் மும் மலக்கல் ஆர்த்தலின்
வருபவக்
கடலில்வீழ் மாக்கள் ஏறிட
அருளும்
மெய் அஞ்செழுத்து அரசை இக்கடல்
ஒருகல்மேல்
ஏற்றிடல் உரைக்க வேண்டுமோ.
பொழிப்புரை : நல்வினை, தீவினை என்ற கயிறு, ஆணவம் என்ற கல்லுடன் இறுகப் பிணித்தலால்
உளவாகும் பிறவிக் கடலுள் விழும் மாக்கள், அதனுள்
அழுந்திவிடாது மேலே ஏறுமாறு துணை நிற்கும் திருவைந்தெழுத்து, திருநாவுக்கரசரை இச்சிறு கடலுள் ஆழாது
ஒரு சிறிய கல்மீது ஏற்றுவதும் ஒருவியப்பாக உரைக்கப்படுமோ? படாது என்பதாம்.
குறிப்புரை :
`வல்வினையேன் தன்னை,
மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அருங்கயிற்றால் கட்டி
புறந்தோல் போர்த் தெங்கும் புழுவழுக்கு
மூடி
மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை`
(தி.8 சிவபுரா. வரி 51-54)
எனத்
திருவாசகம் உருவகித்துக் காட்டுவதும் ஈண்டு நினைவு கூரத் தகும். இனி `மும்மலக் கல்` எனக் கொண்டு, ஆணவம் முதலாய மும்மலக் கற்கள் எனக்
கூறலும் அமைவுடைத்தாம். நல்வினையும் பிறத்தற்கு ஏதுவாகலின் இருவினைகளையும் கயிறு
என்றார். `ஐந்தெழுத்தின் புணை
பிடித்துக் கிடக்கின்றேனை` (தி.8 ப.5 பா.27) என வரும் திருவாக்கும் நினைவு
கூர்தற்குரியது.
கல்லினொடு எனைப் பூட்டி அமண்கையர்
ஒல்லை நீர்புக நூக்க என்வாக்கினால்
நெல்லுநீள் வயல் நீலக்குடியரன்
நல்ல நாமம் நவிற்றி உய்ந்தேன் அன்றே.
(தி.5 ப.72 பா.7)
எனவரும்
நாவரசர் திருவாக்கு இதற்கு அகச்சான்றாய்
விளங்கும்.
பெ.
பு. பாடல் எண் : 130
அருள்நயந்து
அஞ்செழுத்து ஏத்தப் பெற்றஅக்
கருணைநா
வரசினை, திரைக்க ரங்களால்
தெருள்நெறி
நீர்மையின் சிரத்தில் தாங்கிட
வருணனும்
செய்தனன் முன்பு மாதவம்.
பொழிப்புரை : திருவருள் கூட்ட, திருவைந்தெழுத்தினால் தாங்கப் பெற்ற
அக்கருணையே உருவான நாவுக்கரசரை,
தன்
அலைகளாகிய கைகளால் ஏந்தி, அவர் தம் பெருமையை
அறிந்த முறையால், தன் தலைமீது தாங்கிக்
கொள்ள, முன் காலத்தில்
வருணனும் பெருந்தவத்தைச் செய்திருந்தனன்.
குறிப்புரை : கருணை நாவரசு என்றார், தன்னுயிர் நீங்க நேரும் செயல்கள்
எதிர்வரினும், தான்பிறிது இன்னுயிர்
நீக்கும் செயலையோ, அன்றிச் சொல்லையோ, அன்றி நினைவையோ கூடச் செய்திலர் என்பது
பற்றியாம்.
பெ.
பு. பாடல் எண் : 131
வாய்ந்தசீர்
வருணனே வாக்கின் மன்னரைச்
சேர்ந்துஅடை
கருங்கலே சிவிகை ஆயிட
ஏந்தியே
கொண்டுஎழுந் தருளு வித்தனன்
பூந்திருப்
பாதிரிப் புலியூர்ப் பாங்கரில்.
பொழிப்புரை : திருவருள் பெற்ற
வருணனே, நாவுக்கரசரைச் சேர்ந்து
அடைந்த கருங்கல்லே சிவிகையாய் ஆகிடத், தன்கைகளால்
ஏந்தியவாறே கொண்டுவந்து, அழகிய
திருப்பாதிரிப்புலியூர் எனும் திருப்பதியின் அருகே, கரையேறச் செய்தான்.
குறிப்புரை : நாவரசர் கரையேறிய
இடம், கரையேற விட்ட குப்பம்
என்ற பெயரில் அழைக்கப்பெற்று வருகிறது. இது திருப்பாதிரிப்புலியூருக்கு அருகில்
தென்திசையில் உள்ளது.
பெ.
பு. பாடல் எண் : 132
அத்திருப்
பதியினில் அணைந்த அன்பரை
மெய்த்தவக்
குழாம்எலாம் மேவி ஆர்த்துஎழ
எத்திசை
யினும்அர என்னும் ஓசைபோல்
தத்துநீர்ப்
பெருங்கடல் தானும் ஆர்த்ததே.
பொழிப்புரை : அத்திருப்பதியில்
அங்ஙனம் வந்து சேர்ந்த அன்பரான திருநாவுக்கரசரை, உண்மையான தவத்தைச் செய்த அடியவர்
கூட்டம் எல்லாம் கூடி, மகிழ்ச்சியால் பேரொலி
செய்து எதிர்கொள்ளுதலால், எல்லாத் திசைகளிலும் `அரகர` என்று ஒலிக்கும் பேரொலி போல அலைகளையுடைய
கடலும் ஒலித்தது.
பெ.
பு. பாடல் எண் : 133
தொழுந்தகை
நாவினுக்கு அரசும், தொண்டர்முன்
செழுந்திருப்
பாதிரிப் புலியூர்த் திங்கள்வெண்
கொழுந்து
அணி சடையரைக் கும்பிட்டு,
அன்புஉற
விழுந்துஎழுந்து, அருள்நெறி விளங்கப்
பாடுவார்.
பொழிப்புரை : யாவராலும் தொழத்தக்க
திருநாவுக்கரசரும், அடியவர்களின் முன்னே, செழுமையான திருப்பாதிரிப்புலியூரில்
வீற்றிருக்கும் வெண்மையான பிறைச்சந்திரனைச் சூடிய சடையையுடைய சிவபெருமானை வணங்கி, அன்பு கூர்ந்து கீழே வீழ்ந்து வணங்கிப்
பின் எழுந்து நின்று, திருவருள் நெறி
உலகில் விளங்குமாறு பாடுவாராய்,
பெ.
பு. பாடல் எண் : 134
"ஈன்றாளு மாய்எனக்கு
எந்தையும் ஆகி" என
எடுத்துத்
"தோன்றாத் துணையாய்
இருந்தனன் தன்அடி
யோங்கட்கு" என்று
வான்தாழ்
புனல்கங்கை வாழ்சடை யானை, மற்று
எவ்வுயிர்க்கும்
சான்றுஆம்
ஒருவனை, தண்தமிழ் மாலைகள் சாத்தினரே.
பொழிப்புரை : `ஈன்றாளுமாய் எனக்கு எந்தையுமாய்` எனத் தொடங்கித் `தோன்றாத் துணையாய் இருந்தனன் தன்னடியோங்
கட்கே` என்று நிறைவுறும்
அக்கருத்துக் கொண்ட பாடல் முதலாக,
வானினின்று
உலகில் தாழும் நீரையுடைய கங்கை வாழ்கின்ற சடையை உடைய இறைவரை, எவ்வுயிர்களுக்கும் சான்றாய் இருக்கும்
ஒருவரை, குளிர்ந்த தமிழால் ஆன
மாலைகளைக் கொண்டு சாத்தினார்.
குறிப்புரை : நாவரசர் இதுபொழுது
அருளியது `ஈன்றாளுமாய்` எனத் தொடங்கும் பதிகமாகும் (தி.4 ப.94). இப்பதிகத்துவரும் முதல்பாடலின்
முதலடியையும் நான்காம் அடியையும் இயைத்துக் கூறினார், அப்பாடல் பொருண்மை அவ்வாறாக அமைதலின்.
உரைசேரும் எண்பத்து நான்கு நூறாயிரமாம் யோனி பேதங்களையும் படைத்து அவற்றின்
உயிர்க்குயிராய் இறைவன் நிற்றலின் `எவ்வுயிர்க்கும்
சான்றாம் ஒருவன்` என்றார். `எங்கும் உளன் ஒருவன் காணுங் கொல் என்று
அஞ்சி அங்கம் குலைவது அறிவு` (குமர-நீதிநெறி.94) என்பர் குமரகுருபர அடிகளும். ஈண்டும்
தண் தமிழ் மாலைகள் என்றது, பாடற் பன்மை
நோக்கியாம்.
4. 094 திருப்பாதிரிப்புலியூர் திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
ஈன்றாளும்ஆய், எனக்கு எந்தையும் ஆய்,உடன் தோன்றினராய்,
மூன்றாய்
உலகம் படைத்து உகந்தான் மனத்துள் இருக்க
ஏன்றான், இமையவர்க்கு அன்பன், திருப்பா
திரிப்புலியூர்த்
தோன்றாத்
துணையாய் இருந்தனன், தன்அடியோங்களுக்கே.
பொழிப்புரை : திருப்பாதிரிப்புலியூரில்
தன் அடியவர்களாகிய எங்களுக்கு ஊனக்கண்களுக்குத் தோன்றாத் துணைவனாய் இருந்த
பெருமான் , அடியேனுக்குத் தாயாய்
தந்தையாய் உடன்பிறந்த , சகோதர சகோதரியாராய்
அமைந்து , மூன்று உலகங்களையும்
படைத்து மகிழ்ந்தவனாய் , அடியேன் மனத்துள்
இருக்க இசைந்தவனாய்த் தேவர்களுக்கும் அன்பனாகிய சிவபெருமான் ஆவான் .
பாடல்
எண் : 2
பற்றாய்
நினைந்திடப் போதுநெஞ்சே,
இந்தப்
பாரைமுற்றும்
சுற்றாய்
அலைகடல் மூடினும், கண்டேன் புகல் நமக்கு
உற்றான், உமையவட்கு அன்பன், திருப்பா
திரிப்புலியூர்
முற்றா
முளைமதிக் கண்ணியி னான்தன மொய்கழலே.
பொழிப்புரை : நெஞ்சே ! இவ்வுலகை
முழுதும் சுற்றிக்கொண்டு அலையை உடைய கடல் மூடிக் கொண்டாலும் நமக்கு உறுதுணையாய்
உமாதேவிக்கு அன்பனாய்த் திருப்பாதிரிப்புலியூரில் பிறையைக் கண்ணியாகச் சூடிய
சிவபெருமானுடைய எல்லா நலன்களும் செறிந்த திருவடிகளே நமக்கு அடைக்கலம் நல்குவன
என்பதனை அறிந்துவிட்டேன் . ஆதலின் ,
அவற்றையே
நமக்குப் பற்றுக்கோடாக எப்பொழுதும் நினைப்பாயாக . நினைந்திடு எப்போதும் - பாடம் .
பாடல்
எண் : 3
விடையான்
விரும்பி என் உள்ளத்து இருந்தான், இனி நமக்கு இங்கு
அடையா
அவலம், அருவினை சாரா, நமனை அஞ்சோம்,
புடைஆர்
கமலத்து அயன்போல்பவர் பாதிரிப்புலியூர்
உடையான்
அடியர் அடிஅடியோங்கட்கு அரியது உண்டே.
பொழிப்புரை : காளை வாகனனாகிய
பெருமான் விரும்பி அடியேன் உள்ளத்தில் இருக்கின்றான் . இனி நம்பக்கம் துயரங்கள்
அடையா . தீவினைகள் நெருங்கா . கூற்றுவனுக்கு யாங்கள் அஞ்ச மாட்டோம் . பிரமனைப் போன்ற
அந்தணர்கள் வாழ்வதும் நாற்பக்கங்களும் தாமரைகள் மலர்ந்திருப்பதுமாகிய
திருப்பாதிரிப்புலியூர்ப் பெருமானுடைய அடியவர்களுக்கு அடித்தொண்டர்களாகிய
எங்களுக்குச் செய்ய இயலாத அரிய செயல் என்பது ஒன்று உண்டோ ?
பாடல்
எண் : 4
மாயம்
எல்லாம் முற்ற விட்டுஇருள் நீங்க, மலைமகட்கே
நேயநிலாவ
இருந்தான், அவன்தன் திருவடிக்கே
தேயம்
எல்லாம் நின்று இறைஞ்சும் திருப்பாதிரிப்புலியூர்
மேயநல்
லான்மலர்ப் பாதம், என் சிந்தையுள்
நின்றனவே.
பொழிப்புரை : மலைமகளாகிய
பார்வதியிடத்தில் அன்பு நிலைபெற்றிருக்க உள்ளவனாகிய பெருமானுடைய திருவடிக்கண் உலகமெல்லாம்
வந்து வழிபடுமாறு திருப்பாதிரிப்புலியூரில் விரும்பித் தங்கியிருக்கும்
அப்பெரியவனுடைய தாமரை போன்ற திருவடிகள் மாயை எல்லாம் முழுதும் அகன்று ஆணவம்
அகலுமாறு அடியேன் உடைய சிந்தையில் நிலையாக உள்ளன .
பாடல்
எண் : 5
வைத்த
பொருள் நமக்குஆம் என்று சொல்லி, மனத்து அடைத்துச்
சித்தம்
ஒருக்கி, சிவாயநம என்று
இருக்கின் அல்லால்,
மொய்த்த
கதிர்மதி போல்வார் அவர்பா திரிப்புலியூர்
அத்தன்
அருள்பெறல் ஆமோ, அறிவு இலாப்
பேதைநெஞ்சே.
பொழிப்புரை : மெய்யுணர்தல் இல்லாத
அறியாமையை உடைய மனமே ! நமக்கு என்று சேமவைப்பாக உள்ள பொருள் சிவபெருமானே என்று
சொல்லி அவனை மனத்தில் தியானித்து மனத்தை ஒருவழிப்படுத்திச் சிவாய நம என்று
திருவைந்தெழுத்தை எப்பொழுதும் ஓதிக் கொண்டிருந்தால் அல்லது , செறிந்த கிரணங்களையுடைய சந்திரனைப்போன்று
பல கலைகளில்வல்ல சான்றோர்கள் வாழும் திருப்பாதிரிப்புலியூரிலுள்ள தலைவனுடைய
அருளைப் பெறுதல் இயலுமோ ?
பாடல்
எண் : 6
கருவாய்க்
கிடந்துஉன் கழலே நினையும் கருத்து உடையேன்,
உருவாய்த்
தெரிந்து உன்தன் நாமம் பயின்றேன், உனதருளால்
திருவாய்ப்
பொலியச் சிவாய நமஎன்று நீறு அணிந்தேன்,
தருவாய்
சிவகதி நீ, பாதிரிப்புலி
யூர்அரனே.
பொழிப்புரை : திருப்பாதிரிப்புலியூர்ப்
பெருமானே ! தாயின் கருவிலே கிடந்த போது உன் திருவடிகளையே தியானிக்கும் கருத்து
உடையேனாய் இருந்தேன் . கருவின் நீங்கி வெளிப்பட்ட உருவம் கிட்டிய பிறகு உன் அருளினால்
இப்பொழுது ஆராய்ந்து உன் திருநாமங்களைப் பலகாலும் சொல்லப் பழகியுள்ளேன் .
வாய்க்குச் செல்வம் விளங்குமாறு திருவைந்தெழுத்தை ஓதித் திருநீறு இப் பொழுது
அணியப் பெற்றேன் ஆதலின் அடியேனுக்கு மங்கலமான மார்க்கத்தைத் தருவாயாக .
பாடல்
எண் : 7
எண்ணாத
அமரர் இரக்கப் பரவையுள் நஞ்சை உண்டாய்,
திண்அர்
அசுரர் திரிபுரம் தீஎழச் செற்றவனே,
பண்ஆர்ந்து
அமைந்த பொருள்கள் பயில்பா திரிப்புலியூர்க்
கண்ஆர்
நுதலாய், கழல்நம் கருத்தில்
உடையனவே.
பொழிப்புரை : முதலில் உன்னைத்
தியானிக்காமல் , கடலில் விடம் தோன்றிய
பின் அமரர்கள் உன்னை வேண்டக்கடலில் தோன்றிய நஞ்சினை உண்டாய் . வலிமை நிறைந்த
அசுரர்களுடைய மும்மதில்களையும் அழித்தவனே ! பண்ணின் பயனாம் நல்லிசைப் பாடல்கள்
ஒலிக்கின்ற பாதிரிப் புலியூரில் உறையும் நெற்றிக்கண்ணனே ! உன் திருவடிகள் எங்கள்
உள்ளத்தில் உள்ளன .
பாடல்
எண் : 8
புழுவாய்ப்
பிறக்கினும், புண்ணியா, உன்அடி என்மனத்தே
வழுவாது
இருக்க வரந்தர வேண்டும்,
இவ்
வையகத்தே
தொழுவார்க்கு
இரங்கி இருந்துஅருள் செய்,
பாதிரிப்புலியூர்ச்
செழுநீர்ப்புனல்
கங்கை செஞ்சடைமேல்வைத்த தீவண்ணனே.
பொழிப்புரை : இவ்வுலகிலே
அடியவர்களுக்கு இரக்கப்பட்டு அருள் செய்கின்ற, திருப்பாதிரிப் புலியூரில் உறையும், செழுமையான கங்கைநீரைச் செஞ்சடையில்
தேக்கி வைத்திருக்கும் தீப்போன்ற செந்நிறத்துப் பெருமானே ! அடியேன் மறுபிறவியில்
புழுவாகப் பிறந்தாலும் புண்ணியமே வடிவெடுத்த உன் திருவடிகள் அடியேன் மனத்தை விட்டு
நீங்காதிருக்குமாறு அடியேனுக்கு அருள் செய்ய வேண்டும் .
பாடல்
எண் : 9
மண்பாத
லம்புக்கு மால்கடல் மூடி,மற்று ஏழுலகும்
விண்பால்
திசைகெட்டு, இருசுடர் வீழினும், அஞ்சல் நெஞ்சே,
திண்பால்
நமக்குஒன்று கண்டோம், திருப்பா
திரிப்புலியூர்க்
கண்பாவு
நெற்றிக் கடவுள் சுடரான் கழல்இணையே.
பொழிப்புரை : நெஞ்சே ! இவ்வுலகம்
பாதல உலகுக்குப் போய் அழியுமாறு நிலநடுக்கம் உற்று உலகைக் கடல் வெள்ளம் மூட மற்ற
ஏழுலகங்களும் வானத்திலே இருப்புக் குலைந்து சிதறச் சூரிய சந்திரர் தம் நிலையான
இருப்பிடத்தைவிட்டுக் கீழே விழுந்தாலும் எதனைப் பற்றியும் அச்சம் கொள்ளாதே .
திருப்பாதிரிப்புலியூரில் உறையும் நெற்றிக்கண்ணனாய் ஞான ஒளியை உடைய பெருமானுடைய
திருவடிகளாகிய திண்ணிய பகுதி நமக்குப் பாதுகாவலுக்கு உளது என்பதை நாம் அறிவோம் .
பாடல்
எண் : 10
திருந்தா
அமணர் தம் தீநெறிப் பட்டு,
திகைத்து, முத்தி
தரும்தாள்
இணைக்கே சரணம் புகுந்தேன்,
வரைஎடுத்த
பொருந்தா
அரக்கன் உடல் நெரித்தாய்,
பாதிரிப்புலியூர்
இருந்தாய், அடியேன் இனிப்பிற
வாமல்வந்து ஏன்றுகொள்ளே.
பொழிப்புரை : மலையைப் பெயர்க்க
முற்பட்ட , நல்லறிவு பொருந்தாத
இராவணனுடைய உடலை நெரித்தவனே ! திருப்பாதிரிப் புலியூரில் உறைபவனே ! மனம் திருந்துதல்
இல்லாத சமணருடைய தீயவழியிலே ஈடுபட்டு மனம் மயங்கி , இப்பொழுது முத்தியைத் தரும்
திருவடிகளில் சரணமாகப் புகுந்து விட்டேன் . இனி , அடியேன் பிறவி எடுக்காத வகையில் அடியேனை
ஏற்றுக் கொள்வாயாக .
திருச்சிற்றம்பலம்
No comments:
Post a Comment