கோயில் - சிதம்பரம் - 2திருநாவுக்கரசர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 156
ஆனாத சீர்த்தில்லை அம்பலத்தே ஆடுகின்ற
வான்ஆறு புடைபரக்கும் மலர்ச்சடையார் அடிவணங்கி
ஊனாலும் உயிராலும் உள்ளபயன் கொளநினைந்து
தேன்ஆரும் மலர்ச்சோலைத் திருப்புலியூர் மருங்கு அணைந்தார்.

            பொழிப்புரை : அமையாத சிறப்பையுடைய தில்லை அம்பலத்தில் திருக்கூத்தியற்றும், கங்கையாறும், மலர்களும் பொருந்திய சடையை உடையவரான பெருமானின் திருவடிகளை வணங்கி, ஊனாலும் உயிராலும் கொளத்தக்க பயனைப் பெற எண்ணியவராய்த் தேன் பொருந்திய சோலைகள் சூழ்ந்த, (புலிக்கால் முனிவர் வழிபட்டதால்) திருப்புலியூர் என்று வழங்கப்படுகின்ற திருத்தலத்தை அணுக அடைந்தார்.


பெ. பு. பாடல் எண் : 157
நாவுக் கரசரும் இருவர்க்கு அரியவர்
            நடமா டியதிரு எல்லைப்பால்
மேவித் தலம்உற மெய்யில் தொழுதபின்
            மேன்மேல் எழுதரும் விழைவோடும்
காவில் களிமயில் மகிழ்வுற்று எதிர் எதிர்
            ஆடக் கடிகமழ் கமலம்சூழ்
வாவித் தடமலர் வதனம் பொலிவுறு
            மருதத் தண்பணை வழிவந்தார்.

            பொழிப்புரை : திருநாவுக்கரசரும், நான்முகன், திருமால் ஆகியோரால் அறிய இயலாத சிவபெருமான் அருட்கூத்தாடுகின்ற தில்லையின் எல்லையைச் சேர்ந்து, நிலம் பொருந்த மெய்யால் தொழுதபின், மேன்மேலும் பொங்கி எழுகின்றவிருப்பத்துடனே சோலைகளில் களிப்புடைய மயில்கள், மகிழ்ந்து எதிர் எதிராக ஆட, மணம் கமழும் தாமரைகள் நிரம்பிய பொய்கைகளில் இருக்கும் மலர்களாகிய முகங்கள் விளங்கும் மருத நிலத்தைச் சார்ந்த குளிர்ந்த வயல்களின் அருகிருக்கும் வழியே வந்தார்.


பெ. பு. பாடல் எண் : 158
முருகில் செறிஇதழ் முளரிப் படுகரில்
            முதுமே திகள்புது மலர்மேயும்
அருகில் செறிவனம் எனமிக்கு உயர்கழை
            அளவில் பெருகிட வளர் இக்குப்
பெருகிப் புடைமுதிர் தரளம் சொரிவன
            பெரியோர் அவர்திரு வடிவைக்கண்டு
உருகிப் பரிவுறு புனல்கண் பொழிவன
            எனமுன்பு உளவள வயல்எங்கும்.

            பொழிப்புரை : மணம் செறிந்த நெருங்கிய இதழ்களையுடைய தாமரை மலர்கள் உள்ள பள்ளங்களில், முதிய எருமைகள் புதிய பூக்களை மேய்கின்ற இடங்களின் அருகில், நெருங்கிக் காடுபோல மிக உயர்ந்த மூங்கிலின் அளவு உயர்ந்து பெருகி வளரும் கரும்புகள், பெருத்து முதிர்ந்த கணுக்களில் முத்துக்களைச் சொரிந்தவையாய்ப் பெரியவரான திருநாவுக்கரசு நாயனாரின் திருவேடத்தைக் கண்டு உள் உருகி, அன்பு மிகுதியால் கண்ணீர் பொழிவது போல் வளம் நிறைந்த வயல்கள் எங்கும் விளங்கும்.


பெ. பு. பாடல் எண் : 159
அறிவில் பெரியவர் அயல்நெற் பணைவயல்
            அவைபிற் படும் வகை அணைகின்றார்
பிறவிப் பகைநெறி விடுவீர் இருவினை
            பெருகித் தொடர்பிணி உறுபாசம்
பறிவுற் றிடஅணை யுமின்என்று இருபுடை
            பயில்சூழ் சினைமிசை குயில்கூவும்
செறிவில் பலதரு நிலையில் பொலிவுறு
            திருநந் தனவனம் எதிர்கண்டார்.

            பொழிப்புரை : அறிவில் பெரியவரான திருநாவுக்கரசு நாயனார் அருகில் உள்ள நெல்வயல்கள் பிற்படுமாறு கடந்து முன் சென்று அணைகின்றார். ஆதலின் பகையாய பிறவியை அடைவிக்கும் நெறிகளைக் கைவிடும் கருத்துடையவர்களே! இருவினைகளும் பெருகி, அதனால் தொடர்ந்து பிணிக்கும் பாசம் நீங்குமாறு அங்கு அணையுங்கள் எனச் சூழ்ந்த மரக்கிளைகளின் மேலே பயின்ற குயில்கள் கூவுவதற்கு இடமான பலமரங்கள் நெருங்கி, நிலைத்து, அழகாக விளங்கும் திரு நந்தனவனங்களை எதிரில் கண்டார்.

            குறிப்புரை : அரசரின் வருகை கண்ட குயில்கள் `பிறவியை நீங்கும் கருத்துடையவர்களே! நாவரசர் இங்கு அணைகின்றார். நம்பாவம் நீங்க வேண்டின் இங்கு அவரைக் கண்டு உய்ய அணையுங்கள்` எனக்கூவி அழைப்பனவாகக் கூறுகின்றார். `நேயம் மிகுந்தவர் வேடமும் ஆலயம் தானும் அரன் எனத் தொழுமே` (சிவஞானபோதம், சூத். 12) எனவரும் ஞானநூல் கருத்தும் நினைக. இறைவற்கு அணியத்தகும் நால்வகை மலர்களில், கோட்டுப்பூவும் ஒன்றாதலின் அப்பூக்கள் நிறைந்த மரங்களை உடைய சோலையைத் திருநந்தனவனம் என்றார்.


பெ. பு. பாடல் எண் : 160
அவர்முன் பணிவொடு தொழுதுஅங்கு அணைவுற
            அணிகொம் பரின்மிசை அருகுஎங்கும்
தவமுன் புரிதலில் வருதொண்டு எனும்நிலை
            தலைநின்று உயர்தமிழ் இறையோராம்
இவர்தம் திருவடிவு அதுகண்டு அதிசயம்
            எனவந்து எதிர் அரகர என்றே
சிவமுன் பயில்மொழி பகர்கின் றனவளர்
            சிறைமென் கிளியொடு சிறுபூவை.

            பொழிப்புரை : அந்நந்தன வனங்களை முன் பணிவுடன் தொழுது நாயனார் அங்குச் சேர, அழகான மரக்கொம்புகளின் மேல் பக்கங்களில் எங்கும், முன் நாளில் தவம் செய்தலால் வரும் திருத்தொண்டில் தலை சிறந்து நிற்கும் உயர்ந்த தமிழ் அரசரான இவரது வடிவைக் கண்டு, `இஃது அதிசயம்` எனக் கூறி, சிறைகளையுடைய மென்மையான கிளிகளும், சிறிய நாகணவாய்ப் பறவைகளும் அவர் எதிரே வந்து, `அரகர` என்று முன்பயின்ற மொழிகளை உரைக்கும்.

            குறிப்புரை : கிளிகளும் நாகணவாய்ப் பறவைகளும், அரசரது வடிவைக் கண்டதும், முன் தாம் பயின்றிருந்த `அரகர` என்னும் ஒலியைச் செய்யுமாம். அடியவரைக் கண்டு போற்றவும் வரவேற்கவும், அங்குள்ள பறவையினங்களும் தெரிந்திருந்தன என்பது இதனால் போதரும். அரசரின் வடிவு பறவைகளையும் ஈர்த்தாட்கொள்ளுமாற்றை இதனால் அறியலாம்.


பெ. பு. பாடல் எண் : 161
அஞ்சொல் திருமறை யவர்முன் பகர்தலும்
            அவரும் தொழுதுமுன் அருள்கூரும்
நெஞ்சில் பெருகிய மகிழ்வும் காதலும்
            நிறைஅன் பொடும்உரை தடுமாறச்
செஞ்சொல் திருமறை மொழிஅந் தணர்பயில்
            தில்லைத் திருநகர் எல்லைப்பால்
மஞ்சில் பொலிநெடு மதில்சூழ் குடதிசை
            மணிவா யில்புறம் வந்து உற்றார்.

            பொழிப்புரை : அழகிய சொற்களையுடைய, அரகர என்னும் திருமறைகளை அவர் முன் அக்கிளிகள் சொல்லவும், அவரும் வணங்கி, முன்னமே அருள் நிறைந்த தம் உள்ளத்தில் மேலும் பெருகிய மகிழ்ச்சியும், காதலும், நிறைந்த அன்புமாகிய இவற்றால் சொற்கள் தடுமாறச், செம்மையான சொற்களையுடைய மறைகளை ஓதும் அந்தணர்கள் பயில்கின்ற நகரின் எல்லைப் புறத்தில், மேகங்களால் விளங்கும் நீண்ட மதிலால் சூழ்ந்த மேற்குத் திசையில் அமைந்த மணிவாயிலின் புறத்தே வந்து சேர்ந்தார்.


பெ. பு. பாடல் எண் : 162
அல்லல் பவம்அற அருளும் தவமுதல்
            அடியார்எதிர்கொள அவரோடும்
மல்லல் புனல்கமழ் மாடே வாயிலின்
            வழிபுக்கு எதிர்தொழுது அணைவுற்றார்
கல்வித் துறைபல வருமா மறைமுதல்
            கரைகண்டு உடையவர் கழல்பேணும்
செல்வக் குடிநிறை நல்வைப் பிடைவளர்
            சிவமே நிலவிய திருவீதி.

            பொழிப்புரை : தீங்குதரும் பிறவிப்பிணி நீங்குமாறு தம்மை வழிபடுவாருக்கு அருள்செய்யும் தவத்தையே தம் செல்வமாகக் கொண்ட அடியவர், நாவரசரை எதிர்கொண்டழைக்க, வளமான நீரில் பூக்கள் மணம் கமழும் பக்கங்களை உடைய மேல்திசை வாயில் வழியே அவர்களோடு புகுந்து, கல்வித்துறைகள் பலவற்றையும், அவற்றோடு அடிப்படையாக இருக்கும் சிறப்பு வளரும் மறைகளையும் கரைகண்டு சிவபிரானுடைய திருவடிகளை விரும்பி வணங்கும் அருட்செல்வம் வாய்ந்த இல்லங்கள் நிறைந்த நல்ல இருப்பிடங்களில் மங்கலங்கள் வளர்கின்ற மேம்பட்ட வீதிகளை எதிரே தொழுது அடைந்தார்.

            குறிப்புரை :  சுந்தரர் வடதிசை வாயில் வழியாகவும், நாவரசர் மேல்திசை வாயில் வழியாகவும், ஞானசம்பந்தர் தென்திசை வாயில் வழியாகவும் தில்லையை அடைந்தனர் எனப் பெரியபுராண வாயிலாக அறியப்படுவதால், மாணிக்க வாசகர் கீழ்த்திசை வாயில் வழியாகச் சென்றனர் என்று கருதலாம்.


பெ. பு. பாடல் எண் : 163
நவமின் சுடர்மணி நெடுமா லையும்நறு
            மலர்மா லையும்நிறை திருவீதிப்
புவனங் களின்முதல் இமையோர் தடமுடி
            பொருது உந்தியமணி போகட்டிப்
பவனன் பணிசெய வருணன் புனல்கொடு
            பணிமா றவும் அவை பழுதாம் என்று
எவருந் தொழுதெழும் அடியார் திருவலகு
            இடுவார் குளிர்புனல் விடுவார்கள்.

            பொழிப்புரை : தத்தம் உலகங்களுக்குத் தலைவரான தேவர்களின் பெரிய முடிகள் ஒன்றுடன் ஒன்று மோதுவதால் சிந்திய மணிகளும், ஒளிவீசும் நவமணிகளால் ஆய மாலைகளும், நல்ல மணம் வீசும் மலர் மாலைகளும் நிறைந்த திருவீதியினின்றும், காற்றின் கடவுள், அவற்றை வாரி எறிந்து திருவலகுப் பணி செய்யவும், அதனையடுத்து வருணன் நீர் கொண்டு திருமெழுக்குப் பணி செய்யவும், அத்திருப்பணிகள் முழுமையும் செம்மை பெறாமையும் கண்டு, அனைவரும் தொழுது எழும் தன்மை வாய்ந்த அடியார்கள், அவற்றின்மேல் தாம் திருவலகு இடுவார்களும், குளிர்ந்த நீரை விடுபவருமாய் இருந்தனர்.

            குறிப்புரை : திருவீதிகளில் காற்றின் கடவுளும் வருணனும் செய்த பணிகள் செம்மை பெறாமை கண்டு, அவற்றை அடியவர் நீக்கி நிறைவும் அழகும் பெறுமாறு செய்தனர். தேவர்களின் மணிமுடிகள் சிதறிக் கிடக்க, அவற்றை முதற்கண் அகற்றினர். அதன்பின்பு அலகு இடவும் மெழுக்கிடவும் செய்தனர். போக அட்டு - அகற்றும் பணியைச் செய்து.


பெ. பு. பாடல் எண் : 164
மேல்அம் பரதலம் நிரையும் கொடிகளில்
            விரிவெம் கதிர்நுழைவு அரிதுஆகும்
கோலம் பெருகிய திருவீ தியைமுறை
            குலவும் பெருமையர் பணிவுற்றே
ஞாலம் திகழ்திரு மறையின் பெருகுஒலி
            நலமார் முனிவர்கள் துதியோடும்
ஓலம் பெருகிய நிலைஏழ் கோபுரம்
            உறமெய் கொடுதொழுது உள்புக்கார்.

            பொழிப்புரை : பொருந்திய பெருமையுடைய நாவரசர், மேலே வானவெளியிடம் எங்கும் நிறையும் கொடிகளூடே, பரவும் வெம்மையான கதிரவனின் கதிர்கள் நுழைவதற்கு அரிதான அழகு பெருகிய திருவீதியை முறையாகப் பணிந்து, உலகில் விளங்கும் திருமறைகளின் பெருகிய ஒலியானது நன்மையுடைய முனிவர் செய்யும் போற்றியுரைகளுடன் பெருகிய எழுநிலை மேலைக்கோபுரத்தையும், நிலம் உற வணங்கித் தொழுது உள்ளே புகுந்தனர்.


பெ. பு. பாடல் எண் : 165
வளர்பொன் கனமணி திருமா ளிகையினை
            வலம்வந்து அலமரும் வரைநில்லா
அளவில் பெருகிய ஆர்வத் திடைஎழும்
            அன்பின் கடல்நிறை உடல்எங்கும்
புளகச் செறிநிரை விரவத் திருமலி
            பொற்கோ புரம்அது புகுவார்முன்
களனில் பொலிவிடம் உடையார் நடம்நவில்
            கனகப் பொதுஎதிர் கண்ணுற்றார்.

            பொழிப்புரை : அழகு வளர்கின்ற பொன்மாளிகையை வலமாக வந்து, வருத்தம் தருவதும் ஓரெல்லைக்குட்படாது பெருகியதுமான ஆர்வத்திடை எழுகின்ற அன்பான கடல் நிறைந்த மேனி முழுதும் மயிர்ப்புளகம் மிகுந்து கலக்க, திருமிகுந்த பொன் வயத்ததாய கோபுரத்தில் உள்ளே புகும் நாயனார், கழுத்தில் விளங்கும் நஞ்சையுடைய கூத்தப் பெருமான் நடமாடுகின்ற பொன்னம்பலத்தை எதிரே கண்டார்.


பெ. பு. பாடல் எண் : 166
நீடும் திருவுடன் நிகழும் பெருகுஒளி
            நிறைஅம் பலம்நினை வுறநேரே
கூடும் படிவரும் அன்பால் இன்புறு
            குணமுன் பெறவரு நிலைகூடத்
தேடும் பிரமனும் மாலும் தேவரும்
            முதலாம் யோனிகள் தெளிவுஒன்றா
ஆடும் கழல்புரி அமுதத் திருநடம்
            ஆரா வகைதொழுது ஆர்கின்றார்.

            பொழிப்புரை : நிலைபெறும் வீடுபேறான திருவுடன் பொருந்தியுள்ள மேன்மேலும் வளர்கின்ற ஞானஒளி நிறையும் அம்பலமானது, முன்னம் தம் மனத்தில் பொருந்தியிருந்தவாறே எதிரிலும் கூடுமாறு வரும் அன்பால் இன்பம் பொருந்தும் குணச்சிறப்பு மிகும் நிலை கைகூடியதால், தேடுகின்ற அயனும் மாலும் முதலிய தேவர்களும், பிறவிகள் இடனாக வரும் ஏனைய உயிர்களும் தெளிய இயலாத, ஆடும் திருவடியால் நிகழ்த்தும் அமுதமான கூத்தை ஆசை நிறைவு பெறாத வகையில், தொழுது துய்க்கலாயினர்.


பெ. பு. பாடல் எண் : 167
கையும் தலைமிசை புனைஅஞ் சலியன
            கண்ணும் பொழிமழை ஒழியாதே
பெய்யும் தகையன கரணங் களும் உடன்
            உருகும் பரிவின பேறுஎய்தும்
மெய்யும் தரைமிசை விழும் முன்பு எழுதரும்
            மின்தாழ் சடையொடு நின்றுஆடும்
ஐயன் திருநடம் எதிர்கும் பிடும் அவர்
            ஆர்வம் பெருகுதல் அளவுஇன்றால்.

            பொழிப்புரை : அவருடைய கைகளும் தலையின்மீது அஞ்சலியாகக் குவிந்தன. கண்களும் இடைவிடாமல் பொழியும் மழைபோல் நீரைப் பொழிவனவாயின. மனம் முதலிய அகக் கருவிகளும் உடன் உருகும் அன்பினையுடையவாயின. பேறுபெறும் திருமேனியும் நிலத்தின் மீது விழுமுன்னரே எழுதரும். மின்போல் தாழ்ந்து விளங்கும் சடையுடன், நின்று ஆடுகின்ற இறைவரின் திருக்கூத்தை அவர் கும்பிடும் ஆர்வம் இவ்வாறு பெருகும் நிலையில் அளவிடற் கரிதாயது.


பெ. பு. பாடல் எண் : 168
இத்தன் மையர்பல முறையும் தொழுதுஎழ
            என்றுஎய் தினை என மன்றுஆடும்
அத்தன் திருவருள் பொழியும் கருணையின்
            அருள்பெற் றிடவரும் ஆனந்தம்
மெய்த்தன் மையினில் விருத்தத் திருமொழி
            பாடிப் பின்னையும் மேன்மேலும்
சித்தம் பெருகிய பரிவால் இன்புறு
            திருநே ரிசைமொழி பகர்கின்றார்.

            பொழிப்புரை : இத்தகைய தன்மையுடையவராய, நாவரசர், பலமுறையும் தொழுது எழலும், `என்று வந்தாய்?` எனும் குறிப்புடன் பேரவையில் நடமாடும் அத்தனாரின் திருவருள் பொழிகின்ற கருணையால் அருளைப் பெறுமாறு வரும் ஆனந்தமான உண்மைப் பாட்டினால் திருவிருத்தத் திருமொழியைப் பாடி, பின்னரும் மேன்மேலும் சித்தத்தினுள்ளே பெருகி வளரும் அன்பு மிகுதியால் இன்பம் அடையும் திருநேரிசைத் திருப்பதிகத்தையும் அருளிச் செய்வராய்.

            குறிப்புரை : இதுபொழுது அருளிய திருவிருத்தப் பதிகம் `கருநட்ட கண்டனை` எனத் தொடங்கும் திருப்பதிகமாகும். (தி.4 ப.81) இப்பதிகத்தில் வரும் இரண்டாவது பாடல், `என்று வந்தாய் என்னும் எம்பெருமான் தன் திருக்குறிப்பே` என நிறைவு பெறுகிறது. இதுவே ஆசிரியர் திருவுள்ளத்தில் `என்றெய்தினை` எனும் குறிப்புப்படக் கூற ஏதுவாயிற்று;


திருநாவுக்கரசர் திருப்பதிகம்

4. 081   கோயில்                         திருவிருத்தம்
                                                திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
கருநட்ட கண்டனை, அண்டத் தலைவனை, கற்பகத்தை,
செருநட்ட மும்மதில் எய்யவல் லானை,செந் தீமுழங்கத்
திருநட்டம் ஆடியைத் தில்லைக்கு இறையை,சிற் றம்பலத்துப்
பெருநட்டம் ஆடியை வானவர் கோன்என்று வாழ்த்துவனே.

            பொழிப்புரை : கருமை நிலைபெற்ற நீலகண்டனாய் , உலகங்களுக்குத் தலைவனாய் , கற்பகம் போல அடியவர் வேண்டியன வழங்குபவனாய், போரில் ஈடுபட்ட மும்மதில்களையும் அழிக்க வல்லவனாய், அங்கையில் வைத்த செந்தீ ஒலிக்க அழகிய திருக்கூத்தாடுபவனாய் , தில்லை நகர்த்தலைவனாய்ச் சிற்றம்பலத்துப் பெருந்தாண்டவம் ஆடிய பெருமானைத் ` தேவர்கள் தலைவன் ` என்று வாழ்த்துவேன் .


பாடல் எண் : 2
ஒன்றி இருந்து நினைமின்கள் உம்தமக்கு ஊனம்இல்லை,
கன்றிய காலனைக் காலால் கடிந்தான் அடியவற்கா,
சென்று தொழுமின்கள் தில்லையுள் சிற்றம் பலத்துநட்டம்
என்றுவந் தாய்என்னும் எம்பெரு மான்தன் திருக்குறிப்பே.

            பொழிப்புரை : வெகுண்டு வந்த கூற்றுவனைத் தனது அடியவன் பொருட்டுக் காலால் ஒறுத்தவனாய்த் தில்லை நகரில் திருச்சிற்றம்பலத்தில் என்று வந்தாய் என்னும் குறிப்புத் தோன்றும்படி கவித்த திருக்கையுடன் எம்பெருமான் நிகழ்த்தும் கூத்தினைச் சென்று தொழுங்கள். அத் திருக்கூத்தினையே எப்போதும் மறவாத மனத்தோடு பொருந்தி நினையுங்கள். உங்களுக்கு ஊனம் என்று சொல்லப்படும் பிறப்பு இறப்பு அகலாமையாகிய குறைபாடு இனி இராது .


பாடல் எண் : 3
கல்மன வீர்,கழி யும்கருத் தேசொல்லிக் காண்பதுஎன்னே,
நன்மன வர்நவில் தில்லையுள் சிற்றம் பலத்துநட்டம்
பொன்மலை யில்வெள்ளிக் குன்றுஅது போலப் பொலிந்துஇலங்கி
என்மனமே ஒன்றிப் புக்கனன், போந்த சுவடு இல்லையே.

            பொழிப்புரை : கல்போன்ற திண்ணிய மனமுடைய உலகமக்களே ! உங்கள் மனத்தில் அவ்வப்போது தோன்றும் விருப்பங்களை வெளியிட்டு அவற்றை நிறைவேற்றித் தருதல் வேண்டும் என்று வேண்டி நல்ல உள்ளம் படைத்த சான்றோர்கள் வாழும் தில்லை நகர்த் திருச்சிற்றம்பலத்தில் எம்பெருமான் நிகழ்த்தும் கூத்தினைத் தரிசிப்பதனால்,  பெறவேண்டிய ஆன்ம லாபமாகிய பிறவாப் பெருவாழ்வை விடுத்து, இம்மையில் கிட்டும் அற்பப் பயன்களால் என்ன நன்மை? தில்லைச் சிற்றம்பலத்திலே பொன்மலையாகிய பொன்னம்பலத்திலே, வெள்ளிமலை இருப்பது போல கூத்தப்பிரான் காட்சி வழங்கித் தான் புகுந்த சுவடு புலப்படாமல் அடியேனுடைய மனத்திலே உறுதியாக நிலைபெற்றவனாக வந்து பொருந்தி விட்டான். அவன் போன சுவடு ஏதும் இல்லை.


பாடல் எண் : 4
குனித்த புருவமும், கொவ்வைச்செவ்
            வாயில்   குமிண்சிரிப்பும்,
பனித்த சடையும், பவளம்போன்
            மேனியில் பால்வெண்ணீறும்,
இனித்தம் உடைய எடுத்தபொற்
            பாதமும் காணப்பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவ
            தே,இந்த மாநிலத்தே.

            பொழிப்புரை : வளைந்த புருவங்களையும் , கொவ்வைக்கனி போன்ற சிவந்த வாயிலே முகிழ்க்கும் புன்னகையையும் , கங்கையால் ஈரமான சடைமுடியையும் , பவளம் போன்ற சிவந்த திருமேனியில் அணிந்த பால் போன்று வெண்மையான திருவெண்ணீற்றுப் பூச்சினையும், பேரின்பம் நல்கும் தூக்கிய திருவடிகளையும் காணும் வாய்ப்பினைப் பெறுகின்ற பட்சத்தில் இவ்வுலகில் மனிதராய்ப் பிறப்பெடுத்தலும் விரும்பத்தக்க செயலாகும் .


பாடல் எண் : 5
வாய்த்தது நம்தமக்கு ஈதுஒர் பிறவி மதித்திடுமின்,
பார்த்தற்குப் பாசு பதம்அருள் செய்தவன் பத்தர்உள்ளீர்,
கோத்துஅன்று முப்புரம் தீவளைத் தான்,தில்லை அம்பலத்துக்
கூத்தனுக்கு ஆட்பட்டு இருப்பதுஅன் றோ,நம்தம் கூழைமையே.

            பொழிப்புரை : அருச்சுனனுக்குப் பாசுபத அத்திரம் அருளிச் செய்த சிவபெருமானுக்குப் பத்தி செய்யும் அடியவர்களே!  முப்புரங்களையும் தீயில் வெந்து போகுமாறு வில்லை வளைத்தவனாகிய அப் பெருமான் தில்லைத் திருச்சிற்றம்பலத்துள் திருக்கூத்தின் நிகழ்த்துகின்றான். அவனை வணங்கி உய்யவே இந்த மானிடப் பிறவியானது நாம் முற்பிறவிகளில் இயற்றிய நல்வினைப் பயனாக நமக்கு வாய்த்துள்ளது.   பெருமானுக்கு அடியவராக வாழ்வுது தான் நமது அடிமைப் பண்பாகும் என்பதனை மதித்துச் செயல்படுங்கள்.

பாடல் எண் : 6
பூத்துஅன பொற்சடை பொன்போன் மிளிர, புரிகணங்கள்
ஆர்த்தன, கொட்டி அரித்தன பல்குறள் பூதகணம்,
தேத்தென என்றுஇசை வண்டுகள் பாடுசிற் றம்பலத்துக்
கூத்தனில் கூத்துவல் லார்உள ரோ,என்தன் கோல்வளைக்கே.

            பொழிப்புரை : பூத்துக் குலுங்குவது போன்ற பொலிவை உடைய செஞ்சடையானது பொன்போன்று ஒளிவீடும் கொன்றை மலரை அணிந்து விளங்க, அடியார் கூட்டங்கள் மகிழ்ச்சியால் ஆரவாரம் செய்ய, பூதகணங்கள் வாத்தியங்களை ஒலிக்க, `தெத்தே` என்று வண்டுகள் ஒலிக்கும் தில்லை நகரிலுள்ள திருச்சிற்றம்பலத்தில் திருக்கூத்தினை நிகழ்த்தும் சிவ பெருமானைப் போல, திரண்ட வளையல்களை அணிந்த என் மகளுடைய மனத்தைத் தம் நாட்டியத்தால் கவரவல்லவர் பிறர் யார் உள்ளார்.


பாடல் எண் : 7
முடிகொண்ட மத்தமும், முக்கண்ணின்
            நோக்கும், முறுவலிப்பும்,
துடிகொண்ட கையும், துதைந்த
            வெண்ணீறும், சுரிகுழலாள்
படிகொண்ட பாகமும், பாய்புலித்
            தோலும்,என் பாவிநெஞ்சில்
குடிகொண்ட வா,தில்லை அம்பலக்
            கூத்தன் குரைகழலே.

            பொழிப்புரை : தில்லை நகரில் திருச்சிற்றம்பலத்திற் கூத்து நிகழ்த்தும் பெருமானுடைய ஒலிக்கின்ற கழல்களை அணிந்த திருவடிகளைக் கண்டு மகிழும்போது, அவன் திருவடிகள் மட்டுமல்லாது, அவன் தனது திருமுடியில் அணிந்த ஊமத்தை மலரும், மூன்று கண்களின் பார்வையும், புன்சிரிப்பும், ஒலிக்கின்ற உடுக்கையை ஏந்தியுள்ள திருக்கரமும், உடல் முழுதும் பூசிய திருவெண்நீறும், சுரிந்த கூந்தலை உடைய உமாதேவியை இடப்பாகமாகக் கொண்ட தனக்குரிய வலப்பாகமும் , இடுப்பிலே உடுத்துள்ள புலித்தோலும், பாவியாகிய அடியேனுடைய உள்ளத்தில் இப்பொழுது நிலையாகக் குடிகொண்டு விட்டன .


பாடல் எண் : 8
படைக்கல மாகஉன் நாமத் து
            எழுத்துஅஞ்சுஎன் நாவில்கொண்டேன்,
இடைக்கலம் அல்லேன், எழுபிறப்
            பும்உனக்கு ஆட்செய்கின்றேன்,
துடைக்கினும் போகேன், தொழுது
            வணங்கித் தூநீறுஅணிந்து,உன்
அடைக்கலம் கண்டாய், அணிதில்லைச்
            சிற்றம் பலத்துஅரனே.

            பொழிப்புரை :அழகிய தில்லை நகரிலுள்ள திருச்சிற்றம்பலத்தில் திருக்கூத்து இயற்றும் பெருமானே ! என்னை ஏழையர் செய்யக் கூடிய தீங்குகளிலிருந்து பாதுகாக்கும் படைக்கருவியாக உன் திருநாமமாகிய திருவைந் தெழுத்தினையும் அடியேன் நாவினில் நீங்காது கொண்டுள்ளேன் . இடையில் ஒருபோதும் உனக்கு அடிமைத் தொண்டு செய்தலை மறக்கவும் மாட்டேன். எழுவகைப் பிறவிகளில் எப்பிறவி எய்துகினும், எடுத்த பிறவிக்கு ஏற்ப உனக்கு அடிமைத் தொண்டு செய்கிறேன். அடியேனை நீ விலக்கினாலும் அடியேன் உன்னை விட்டுப் போகமாட்டேன் . எப்பொழுதும் உன்னை மனத்தால் தொழுது, உடலால் வணங்கி, திருநீறு அணிந்து உன்னால் காக்கப்படவேண்டிய அடைக்கலப்பொருளாக அடியேன் என்னை ஒப்புவித்து விட்டேன்.


பாடல் எண் : 9
பொன்ஒத்த மேனிமேல் வெண்ணீறு 
            அணிந்து, புரிசடைகள்
மின்ஒத்து இலங்கப் பலிதேர்ந்து
            உழலும் விடங்கர்வேடச்
சின்னத்தி னான்மலி தில்லையுள்
            சிற்றம் பலத்துநட்டம்
என்அத்தன் ஆடல்கண்டு இன்புற்ற
            தால்இவ் இருநிலமே.

            பொழிப்புரை :பொன்னை ஒத்த செந்நிறமான உடம்பில் வெண்மையான திருநீற்றை அணிந்து, முறுக்குண்ட செஞ்சடைகள் மின்னலைப் போல ஒளிவீச, பிச்சை எடுத்துத் திரியும் , உளியால் செதுக்கப்படாது இயல்பான சிவவேட அடையாளத்தை உடையவனாய், வளம்மிக்க தில்லை நகரின் திருச்சிற்றம்பலத்தான் ஆகிய என் தலைவனுடைய திருக்கூத்தினைக் கண்டு இவ்வுலகிலே உள்ளோர் இன்புறுகின்றனர் .


பாடல் எண் : 10
சாட எடுத்தது தக்கன்தன் வேள்வியில் சந்திரனை,
வீட எடுத்தது காலனை, நாரணன் நான்முகனும்
தேட எடுத்தது தில்லையுள் சிற்றம் பலத்துநட்டம்
ஆட எடுத்திட்ட பாதம்அன் றோநம்மை ஆட்கொண்டதே.

            பொழிப்புரை : தக்கன் நிகழ்த்திய வேள்வியில் தனக்கு உரிய அவியைப் பெறுவதற்காக வந்து கலந்து கொண்ட சந்திரனைத் கொல்வதற்காகத் தூக்கப்பட்டதும், கூற்றுவன் சாவதற்கு உயர்த்தப்பட்டதும், திருமாலும் பிரமனும் காணமுடியாது தேடுமாறு பாதலத்துக்குக் கீழும் வளர்ந்ததும், தில்லைச் சிற்றம்பலத்தில் கூத்தாடுவதற்காக உயர்த்தப்பட்டதும் ஆகிய சிவபெருமானுடைய குஞ்சித பாதமாகிய, இடது திருவடியன்றோ நம்மை அடிமையாகக் கொண்டதாகும்.

                                                            திருச்சிற்றம்பலம்

-------------------------------------------------------------------------------------------------------------

திருநாவுக்கரசர் திருப்பதிக வரலாறு


பெ. பு. பாடல் எண் : 169
'பத்தனாய்ப் பாடமாட்டேன்' என்றுமுன் எடுத்துப் பண்ணால்
'அத்தாஉன் ஆடல் காண்பான் அடியனேன் வந்தவாறு' என்று
இத்திறம் போற்றி நின்றே இன்தமிழ் மாலை பாடிக்
கைத்திருத் தொண்டு செய்யும் காதலில் பணிந்து போந்தார்.

            பொழிப்புரை : `பத்தனாய்ப்பாட மாட்டேன்` என முன்னம் தொடங்கிப் பண்ணிசை பொருந்த `அத்தா உன்ஆடல் காண்பான் அடியனேன் வந்தவாறு` என்று முடியும் ஈற்றினை உடையதான பதிகம் முதலானவற்றை இத்திறத்தில் போற்றி நின்றே இனிய தமிழ் மாலையைப் பாடிக் கைத்தொண்டு செய்கின்ற ஆசையால் வெளியே வந்தார்.


திருநாவுக்கரசர் திருப்பதிகம்

4. 023   கோயில்      திருநேரிசை      பண் - கொல்லி
                                                            திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
பத்தனாய்ப் பாட மாட்டேன், பரமனே, பரம யோகீ,
எத்தினால் பத்தி செய்கேன், என்னைநீ இகழ வேண்டா,
முத்தனே, முதல்வா, தில்லை அம்பலத்து ஆடு கின்ற
அத்தா,உன் ஆடல் காண்பான் அடியனேன் வந்த வாறே.

            பொழிப்புரை : அநாதியான வினையின் நீங்கியவனே ! எல்லாருக்கும் முற்பட்டவனே ! தில்லை அம்பலத்தே ஆடுகின்ற தலைவனே ! மேம்பட்டவனே ! மேம்பட்ட யோகியே ! அடியேன் பத்தனாய்ப் பாடும் ஆற்றல் இல்லேன். யாதனால் அடியேன் பத்தி செய்வேன் ? அடியேனை நீ இகழவேண்டா . அடியேன் உன் ஆடலைக் காணத் தில்லை வந்துள்ளேன் .


பாடல் எண் : 2
கருத்தனாய்ப் பாட மாட்டேன், காம்புஅன தோளி பங்கா,
ஒருத்தரால் அறிய ஒண்ணாத் திருவுரு உடைய சோதீ,
திருத்தமாம் தில்லை தன்னுள் திகழ்ந்தசிற் றம்ப லத்தே
நிருத்தம்நான் காண வேண்டி நேர்பட வந்த வாறே.

            பொழிப்புரை : மூங்கில் போன்ற தோள்களை உடைய பார்வதி பாகனே ! ஒருவராலும் அறியமுடியாத அழகிய ஒளிவடிவு உடையவனே ! பரிசுத்தமாயுள்ள தில்லையிலே விளங்குகின்ற சிற்றம்பலத்தில் உன் திருக்கூத்தைக் காணவேண்டி உன்னை உள்ளத்தில் இருத்தி கருத்து ஒன்றிப் பாடமாட்டாதவன் ஆகிய அடியேன் வந்துள்ளேன் .


பாடல் எண் : 3
கேட்டுஇலேன், கிளை பிரியேன், கேட்குமா கேட்டி ஆகில்
நாட்டினேன் நின்தன் பாதம் நடுப்பட நெஞ்சின் உள்ளே,
மாட்டின்நீர் வாளை பாயும் மல்குசிற் றம்ப லத்தே
கூட்டமாம் குவி முலையாள் கூட நீ ஆடு மாறே.

            பொழிப்புரை : அடியேன் இதற்குமுன் உன் பெருமையை உள்ளவாறு கேட்டறியேன் . இப்பொழுது உன் அடியார்குழாத்தைப் பிரியாமல் உன் பெருமையைக் கேட்குமாறு கேட்பித்தருளி உதவுவாயானால் , வாளை மீன்கள் பாய்வதால் உண்டாகும் பொன்னொளி போல்வதாகிய வளம் மிகுந்த நீர் நிலைகளோடு விளங்கும் தில்லையிலே, அழகிய திருச்சிற்றம்பலத்திலே உன்னோடு கூடியிருக்கும் குவிந்த தனங்களை உடைய பார்வதியோடு கூட ஆடும் உன் திருவடிகளை நெஞ்சின் நடுவிலே உறுதியாக நிலை நிறுத்தினேன்.


பாடல் எண் : 4
சிந்தையைத் திகைப்பி யாதே செறிவுஉடை அடிமை செய்ய,
எந்தை, நீ அருளிச் செய்யாய், யாதுநான் செய்வது என்னே,
செந்தியார் வேள்வி ஓவாத் தில்லைச்சிற் றம்ப லத்தே
அந்தியும் பகலும் ஆட அடியிணை அலசும் கொல்லோ.

            பொழிப்புரை : சிவந்த தீயை ஓம்பும் அந்தணர்களுடைய வேள்விச் செயல்கள் நீங்காத தில்லைத் திருச்சிற்றம்பலத்தே அந்தியும் பகலும் நீ கூத்து நிகழ்த்துதலால் உன் திருவடிகள் சோர்வு அடையும்போலும். அடியேன் உள்ளத்தை உலகப் பொருள் நுகர்ச்சியிலிருந்து மாறுபடும் படியாகச் செய்யாமலும் உன்னை அணுகிச் செய்யும் அடிமைத் திறத்தை அடியேனுக்கு அருள் செய்யாமலும் உள்ளாய் . இனி அடியேன் செய்யேவேண்டுவது என்ன.

  
பாடல் எண் : 5
கண்டவா திரிந்து, நாளும் கருத்தினால் நின்தன் பாதம்
கொண்டு இருந்து, ஆடிப் பாடிக் கூடுவன் குறிப்பி னாலே,
வண்டுபண் பாடும் சோலை மல்குசிற் றம்ப லத்தே
எண்திசை யோரும் ஏத்த இறைவநீ ஆடு மாறே.

            பொழிப்புரை : அடியேன் அனுபவத்தில் கண்டவாறு ஞான நிலைக்குப் பொருந்தியவண்ணம், உலகியலுக்கு மாறுபட்டு உள்ளத்தில் நின் திருவடிகளை நிலையாகக் கொண்டு ஆடிப்பாடி உன் திருவருட் குறிப்பினாலேயே , வண்டுகள் பண்களைப்பாடும் சோலைகள் மிகுந்த திருச்சிற்றம்பலத்திலே எட்டுத் திசைகளில் உள்ளவர்களும் துதிக்குமாறு இறைவனாகிய நீ ஆடும் கூத்தினைக் காண்பதற்கு வந்து சேருவேன் .


பாடல் எண் : 6
பார்த்து இருந்து அடியனேன் நான் பரவுவன் பாடி ஆடி,
மூர்த்தியே என்பன் உன்னை, மூவரின் முதல்வன் என்பன்,
ஏத்துவார் இடர்கள் தீர்ப்பாய், தில்லைச்சிற் றம்ப லத்துக்
கூத்தா, உன் கூத்துக் காண்பான் கூடநான் வந்த வாறே.

            பொழிப்புரை : வழிபடும் அடியவர்களுடைய துயரங்களைத் தீர்ப்பவனே ! தில்லைச் சிற்றம்பலத்தில் உள்ள கூத்தனே ! உன் கூத்தினைப் பார்த்து இருந்து உன்னை முன்னின்று துதிப்பேன் . ஆடிக் கொண்டும் பாடிக்கொண்டும் உன்னை மூவரினும் முதல்வனாகிய மூர்த்தியே என்று அழைப்பேன் . உன் கூத்தினைக் காண்பதற்கு அடியவருடன் நான் வந்தது இந்த இன்பத்திற்காகவே.


பாடல் எண் : 7
பொய்யினைத் தவிர விட்டு, புறம்அலா அடிமை செய்ய,
ஐய, நீ அருளிச் செய்யாய் , ஆதியே, ஆதி மூர்த்தீ,
வையகம் தன்னில் மிக்க மல்குசிற் றம்ப லத்தே
பைய, நுன் ஆடல் காண்பான் பரமநான் வந்த வாறே.

            பொழிப்புரை : அழியும் பொருள்களிலுள்ள பற்றினை நீங்குமாறு விடுத்து, அகத்தடிமையாகிய மெய்யடிமையைச் செய்ய, என் தலைவனே ! எல்லோர்க்கும் ஆதியாய முதல் தெய்வமே ! நீ அருள் செய்வாயாக. இவ்வுலகிலே புகழால் மிகுந்த திருச்சிற்றம்பலத்திலே உன் கூத்தினை சற்றே காண அடியேன் வந்தது இந்த இன்பத்தினைப் பெறுவதற்காகவே .


பாடல் எண் : 8
மனத்தினார் திகைத்து, நாளும் மாண்புஅலா நெறிகள் மேலே
கனைப்பரால், என்செய் கேனோ, கறைஅணி கண்டத் தானே,
தினைத்தனை வேதம் குன்றாத் தில்லைச்சிற் றம்ப லத்தே
அனைத் துநின் நிலயம் காண்பான் அடியனேன் வந்தவாறே.

            பொழிப்புரை : விடக்கறையை அணிந்த திருநீலகண்டனே ! அடியேனுடைய மனம் நிலைகொள்ளாமல் தடுமாறி, நாள்தோறும் பெருமை தாராத வழிகளிலே செருக்கித் திரிகின்றது . அடியேன் என்ன செய்வேன் . வேதங்களை ஓதும் திறமானது தினை அளவுகூடக் குறைவுபடாத தில்லைச் சிற்றம்பலத்தினை உன் இருப்பிடமாகக் கொண்டு நீ ஆடும் திருக்குகூத்தைத் தரிசிப்பதற்கு அடியேன் வந்தது.


பாடல் எண் : 9
நெஞ்சினைத் தூய்மை செய்து, நினைக்குமா நினைப்பி யாதே
வஞ்சமே செய்தி யாலோ, வானவர் தலைவ னே,நீ
மஞ்சுஅடை சோலைத் தில்லை மல்குசிற் றம்ப லத்தே
அம்சொலாள் காண நின்று அழகநீ ஆடு மாறே.

            பொழிப்புரை : தேவர்கள் தலைவனே ! அடியேனுடைய நெஞ்சினைத் தூய்மை செய்து உன்னை எப்பொழுதும் அடியேன் நினைக்குமாறு திருவுள்ளம் பற்றாமல் வஞ்சனை செய்கின்றாயே. மேகங்கள் வந்து சேரும் உயர்ந்து விளங்கும் சோலைகளையுடைய தில்லையில் திருச்சிற்றம்பலத்திலே அழகிய மொழியைப் பேசும் சிவகாமவல்லி அம்மையார் காணுமாறு, நீ அழகாக ஆடுகின்றாயே!


பாடல் எண் : 10
மண்உண்ட மால் அவனும், மலர்மிசை மன்னி னானும்,
விண்உண்ட திருவு ருவம் விரும்பினார், காண மாட்டார்,
திண்உண்ட திருவே, மிக்க தில்லைச்சிற் றம்ப லத்தே
பண்உண்ட பாட லோடும் பரமநீ ஆடு மாறே.

            பொழிப்புரை : பூமியை உண்ட திருமாலும் , மலர்மேல் உறையும் பிரமனும் விண்ணளவும் ஒளிநிறைந்த உன் திருவுருவைக் காணும் வேட்கை மிகுந்து இருந்தும் தம்முடைய ஆற்றலால் அவர்களால் காணமுடியாதவை உனது திருவடிகள். திணிந்திருக்கும் சிவஞானம் மேம்பட்ட தில்லையில் திருச்சிற்றம்பலத்திலே பண்ணுக்கு ஏற்ப அமைந்த பாடல் ஒலிகளின் இடையே நீ ஆடுகின்றாய்.

                                                            திருச்சிற்றம்பலம்

-----------------------------------------------------------------------------
        

திருநாவுக்கரசர் திருப்பதிக வரலாறு

பெ. பு. பாடல் எண் : 170
நீடிய மணியின் சோதி நிறைதிரு முன்றின் மாடும்
ஆடுஉயர் கொடிசூழ் பொன்தேர் அணிதிரு வீதி உள்ளும்
கூடிய பணிகள் செய்து கும்பிடும் தொழிலர் ஆகிப்
பாடிய புனித வாக்கின் பணிகளும் பயிலச் செய்வார்.

            பொழிப்புரை : மணிகளின் ஒளி நிறைந்த திருமுன்றிலின் பக்கத்திலும், ஆடுகின்ற உயர்ந்த கொடிகள் சூழ்ந்த அழகிய தேர் ஓடும் அழகிய வீதிகளினுள்ளும், பொருந்திய திருப்பணிகள் செய்து, கும்பிடும் தொழிலை உடையவராகிப் பாடும் தூய திருவாக்காகிய பணிகளும் செய்வாராயினார்.


பெ. பு. பாடல் எண் : 171
அருட்பெரு மகிழ்ச்சி பொங்க
            'அன்னம்பா லிக்கும்' என்னும்
திருக்குறுந் தொகைகள் பாடித்
            திருஉழவாரம் கொண்டு
பெருத்துஎழு காத லோடும்
            பெருந்திருத் தொண்டு செய்து
விருப்புஉறு மேனிகண்ணீர்
            வெண்ணீற்று வண்டல் ஆட.

            பொழிப்புரை : கூத்தப் பெருமானின் அருளைப் பெற்றதால் உண்டான பெருமகிழ்ச்சி மேன்மேலும் பெருக, `அன்னம் பாலிக்கும்` எனத் தொடங்குகின்ற திருக்குறுந்தொகைப் பதிகத்தைப் பாடிப், பெருகி எழுகின்ற அன்போடு பெரிய தொண்டைச் செய்து, விருப்பமுடைய மேனியில் வடியும் கண்ணீரால் கரைந்த திருவெண்ணீற்றாலாகிய வண்டல் பொருந்த,

            குறிப்புரை : இங்குக் குறிக்கப்பெற்ற `அன்னம் பாலிக்கும்` எனத் தொடங்கும் திருக்குறுந்தொகைப்பதிகம் திரு உழவாரப் பணி செய்து கொண்டிருந்த பொழுது பாடியதாகும். இன்று மாகேசுவர வழிபாட்டில் பாடப் பெற்றுவருகின்றது. அன்னம் அல்லது சோறு என்பது வீடுபேற்றையே குறிக்கும்.  `பாதகமே சோறு பற்றினவா தோள் நோக்கம்`எனவரும் திருவாசகப் பாடல் வரியைக் காண்க.

            `திருக்குறுந்தொகைகள் பாடி` என்ற பன்மையால், பல திருக்குறுந்தொகைப் பதிகங்கள் பாடியிருக்க வேண்டும் எனத் தெரிகிறது, எனினும் இப்பொழுது பாடிய இக்குறுந்தொகைப் பதிகமும், பின்னர்ப் பாடவுள்ள (தி.5 ப.2) திருக்குறுந்தொகைப் பதிகம் ஒன்றும் ஆக, இரு பதிகங்களுமே இதுபொழுது கிடைத்துள்ளன.

திருநாவுக்கரசர் திருப்பதிகம்


5.001   கோயில்                          திருக்குறுந்தொகை
                                                            திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
அன்னம் பாலிக்கும் தில்லைச்சிற் றம்பலம்
பொன்னம் பாலிக்கு மேலும்இப் பூமிசை
என்னம்பு ஆலிக்கும் ஆறுகண்டு இன்புற
இன்னம் பாலிக்கு மோஇப் பிறவியே.

            பொழிப்புரை :பேரின்பவீட்டு இன்பத்தைத் தரும்  தில்லைத் திருச்சிற்றம்பலம் பொன்னுலக வாழ்வையும் தரும். இத்தகைய திருச்சிற்றம்பலத்தை, மேலும் இந்நிலவுலகில் என் அன்பு பெருகும் வகையில் கண்டு, மேலான முத்திப் பேரின்ப நிலையை எளிதில் எய்துதற்கு இந்த நல்ல மனிதப் பிறவியை இன்னும் அப் பெருமான் இன்னமும் கொடுப்பானோ ?


பாடல் எண் : 2
அரும்புஅற் றப்பட ஆய்மலர் கொண்டு,நீர்
சுரும்புஅற் றப்படத் தூவித் தொழுமினோ,
கரும்புஅற் றச்சிலைக் காமனைக் காய்ந்தவன்
பெரும்பற் றப்புலி யூர்எம் பிரானையே.

            பொழிப்புரை :அரும்புகள் நீக்கப்பட்டு ஆராய்ந்த போதுகளைக் கொண்டு வண்டுகள் நீக்கமுறத்தூவி, கரும்பாகிய வில்லை ஏந்திய காமனை எரித்தவனாகிய பெரும்பற்றப்புலியூர் என்னும் தில்லைத் திருச்சிற்றம்பலத்திலே விளங்கும் எம்பிரானை நீர் வழிபாடு செய்வீர்.


பாடல் எண் : 3
அரிச்சுஉற் றவினை யால்அடர்ப்பு உண்டு,நீர்
எரிச்சுற் றக்கிடந் தார்என்று அயலவர்
சிரிச்சுற் று,பல பேசப்ப டாமுனம்
திருச்சிற் றம்பலம் சென்றுஅடைந்து உய்ம்மினே.

            பொழிப்புரை :அரித்தல் என்னும் துன்பத்தைத் தருகின்ற மிக்க இருவினையால் தாக்குண்டு எரிசூழ (இடுகாட்டில்) கிடந்தார் என்று அயலோர் சிரித்துப் பலபல பேசுதலை அடையுமுன்னரே, அதாவது, உடம்பை ஒழிக்கு முன்னரே,  நீங்கள்  திருச்சிற்றம்பலத்தைச் சென்று அடைந்து, வழிப்ட்டு உய்வீர்களாக.


பாடல் எண் : 4
அல்லல் என்செயும், அருவினை என்செயும்,
தொல்லை வல்வினைத் தொந்தந்தான் என்செயும்,
தில்லை மாநகர்ச் சிற்றம் பலவனார்க்கு
எல்லை இல்லதுஒர் அடிமைபூண் டேனுக்கே.

            பொழிப்புரை :  உயிர்கட்குப் பிறவியாகிய அல்லலைத் தருகின்ற ஆகாமியம் என்னும் மேல்வினையும், வினையும் தீர்தற்கரிய நுகர்வினையும், மேலை வல்வினையாகிய, நல்வினை, தீவினை எனப்படும் துவந்துவங்களும் எனக்கு என்ன துன்பத்தைச் செய்ய முடியும்? நான்தான், தில்லை மாநகரிலே உயிர்கள் உய்யும் பொருட்டுத் திருக்கூத்தை இயற்றுகின்ற அம்பலவாணப் பெருமானுக்கு அளவில்லாத அடிமையைப் பூண்டவனாயிற்றே.  எனக்கு அவ்வினைகள் ஒரு துன்பமும் செய்யவல்லன அல்ல.


பாடல் எண் : 5
ஊனில் ஆவி உயிர்க்கும் பொழுதுஎலாம்
நான்நி லாவி இருப்பன்என் நாதனை,
தேன்நி லாவிய சிற்றம் பலவனார்
வான்நி லாவி இருக்கவும் வைப்பரே.

            பொழிப்புரை :உடம்பில் உயிர் உயிர்த்துக்கொண்டிருக்கும் காலமெல்லாம் நான் என்னை ஆளாக உடைய திருச்சிற்றம்பலவனாரை விளக்கமுறப்பெற்றிருப்பேன் . இன்பத்தேன் விளங்கிய அத் திருச்சிற்றம்பலவனார் அடியேனைப் பேரின்பவீட்டில் நிலைபெற்றிருக்கவும் வைப்பர் .


பாடல் எண் : 6
சிட்டர் வானவர் சென்று வரங்கொளும்
சிட்டர் வாழ்தில்லைச் சிற்றம் பலத்துஉறை
சிட்டன் சேவடி கைதொழச் செல்லும்அச்
சிட்டர் பால்அணு கான்செறு காலனே.

            பொழிப்புரை :ஞானிகளும் தேவர்களும் போய் வழிபட்டு வேண்டும் வரங்களைப் பெற்றுக்கொள்ளும் சிறப்புடையது தில்லைச் சிற்றம்பலம் ; சிட்டர்களாகிய அந்தணர்கள் வாழ்தற்கு இடமாவது அது. அத்தில்லைச் சிற்றம்பலத்தில் திருக்கூத்தாடியருளும் ஞான மூர்த்தியின் திருவடிகளைக் கைகூப்பித் தொழப்போகும் அச்சிட்டர்களாகிய மெய்ஞ்ஞானியரை, ஏனையோர் உயிரைக் கவரவல்ல காலன் அணுக மாட்டான் .


பாடல் எண் : 7
ஒருத்த னார்,உல கங்கட்கு ஒருசுடர்,
திருத்த னார்,தில்லைச் சிற்றம் பலவனார்
விருத்த னார்,இளை யார்,விடம் உண்டஎம்
அருத்த னார்அடி யாரை அறிவரே.

            பொழிப்புரை :தனிமுதற்பொருளாய் உலகங்களுக்கெல்லாம் ஒரே விளக்காய் உள்ளவர் ; செம்மையார் ; தில்லைச் சிற்றம்பலத்தில் திருக்கூத்தாடுபவர் ; முதியார் ; இளையார் ; நஞ்சுண்ட எம்செல்வர் ; அடியாரை அறிவார் .


பாடல் எண் : 8
விண்நி றைந்ததுஓர் வெவ்அழ லின்உரு
எண்நி றைந்த இருவர்க்து அறிவொணாக்
கண்நி றைந்த கடிபொழி ல்அம்பலத்து
உள்நி றைந்துநின்று ஆடும் ஒருவனே.

            பொழிப்புரை :யான் என்னும் செருக்கு மிகுந்த திருமாலும் பிரமனும் தம்முடைய ஆற்றலால் காணமுடியாதவனாய் , வானளாவி எழுந்த சோதிப்பிழம்பானது,  ஒப்பற்ற பெருமானாக, தேன் நிறைந்த மணம் பொருந்திய சோலைகள் சூழ்ந்த தில்லையில் திருச்சிற்றம்பலத்தில் அம்பலவாண வடிவாய் நிறைந்து ஐந்தொழில் நடனத்தைச் செய்கின்றான். (தொழுவார்க்கே அருளுவது சிவபெருமான்.  ஆதலால், தன்னைத் தொழுகின்ற அடியவர்கள் காணத் திருச்சிற்றம்பலத்தில் எப்பொழுதும் ஆனந்தத் திருக்கூத்தினை இயற்றியருளுகின்றான்.  தொழாதவர்களாகிய திருமாலுக்கும் பிரமனுக்கும் காணமுடியாத சோதிப்பிழம்பானான்.)


பாடல் எண் : 9
வில்லை வட்டப் படவாங்கி அவுணர்தம்
வல்லைவட் டம்மதில் மூன்றுஉடன் மாய்த்தவன்,
தில்லைவட் டம்திசை கைதொழு வார்வினை
ஒல்லைவட் டங்கடந்து ஓடுதல் உண்மையே.

            பொழிப்புரை :மேருமலையை அரைவட்டமான வில்லாக வளைத்து அவுணர்களின் மூன்று மதில்களை அழித்தவன் எழுந்தருளியிருக்கின்ற தில்லை நகரின் திசையை நோக்கிக் கைகூப்புவார் செய்த வினைகள் விரைந்து அவர்களை விட்டு ஓடுவது உண்மை.


பாடல் எண் : 10
நாடி நாரணன் நான்முகன் என்றுஇவர்
தேடி யும்,திரிந் தும்,காண வல்லரோ
மாட மாளிகை சூழ்தில்லை அம்பலத்து
ஆடி பாதம்என் நெஞ்சுள் இருக்கவே.

            பொழிப்புரை : மாடமாளிகைகள் சூழ்ந்த திருத் தில்லையில் திருச்சிற்றம்பலத்தில் நின்று ஆடுகின்ற பெருமானது திருவடிகள் அன்பால் நினையும் என் நெஞ்சத்து விளங்கி இருக்கும். அவ்வாறு இருக்க, திருமாலும் பிரமனும் தமது ஆற்றாலால் முதல்வனைக் காண்போம் என எண்ணி நிலத்தை அகழ்ந்து தேடினாலும் வானில் பறந்து திரிந்தாலும் எப்படிக் காணமுடியும். 

            காலையும் மாலையும் கைதொழுவார் மனம் ஆலயம் ஆரூர் இறைவர்க்கு என்றபடி.  மறவாதே தன்திறமே வாழ்த்தும் தொண்டர் மனத்தகத்தே அனவரதம் மன்னி நின்ற திறலான் என்றபடி.


பாடல் எண் : 11
மதுர வாய்மொழி மங்கைஓர் பங்கினன்,
சதுரன், சிற்றம்பலவன், திருமலை
அதிர ஆர்த்துஎடுத் தான்முடி பத்துஇற
மிதிகொள் சேவடி சென்றுஅடைந்து உய்ம்மினே.

            பொழிப்புரை :இனிய மொழிபேசும் சிவகாமவல்லி அம்மையை இடப்பாகத்தே வைத்தவன்; உலகங்கள் அனைத்தையும் படைத்துக் காத்து அழிக்கவல்லவன் ; திருச்சிற்றம்பலத்தில் எழுந்தருளியுள்ளவன்.  அப்பேர்க்கொத்த பெருமான் எழுந்தருளியுள்ள திருமலை எனப்படும் திருக்கயிலாய மலை அதிர்ந்து அசையும்படி, தனது செருக்கினால் ஆரவாரம் செய்து எடுத்த இராவணனுடைய பத்து முடிகளும் இற்றுப்போகும்படி மெள்ள ஊன்றிய திருவடியைச் சென்று கை தொழுது ஈடேறுவீர்களாக.
                                                திருச்சிற்றம்பலம்திருநாவுக்கரசர் திருப்பதிக வரலாறு

பெ. பு. பாடல் எண் : 172
மேவிய பணிகள் செய்து
            விளங்குநாள், வேட்க ளத்துச்
சேஉயர் கொடியார் தம்மைச்
            சென்றுமுன் வணங்கிப் பாடி,
காவிஅம் கண்டர் மன்னும்
            திருக்கழிப் பாலை தன்னில்
நாவினுக்கு அரசர் சென்று
            நண்ணினார் மண்ணோர் வாழ.

            பொழிப்புரை : திருநாவுக்கரசர் இவ்வாறு தமக்குப் பொருத்தமான பணிகளைச் செய்து வந்த நாள்களில், `திருவேட்களத்தில்` எழுந்தருளியிருப்பவரும், உயரிய ஆனேற்றுக் கொடியை உடையவருமான இறைவரைத் திருமுன் சென்று வணங்கிப்பாடி, நீலமலர் போன்ற நிறமுடைய, அழகிய கழுத்தினையுடைய பெருமான் எழுந்தருளியிருக்கும் திருக்கழிப்பாலைக்கு, மண்ணுலகத்தவர் வாழும் பொருட்டுச் சென்று அடைந்தார்.


பெ. பு. பாடல் எண் : 173
சினவிடைஏ றுஉகைத்துஏறும் மணவாள
            நம்பிகழல் சென்று தாழ்ந்து
'வனபவள வாய்திறந்து வானவர்க்குந்
            தானவனே என்கின் றாள்'என்று
அனையதிருப் பதிகமுடன் அன்புஉறுவண்
            தமிழ்பாடி அங்கு வைகி
நினைவுஅரியார் தமைப்போற்றி நீடுதிருப்
            புலியூரை நினைந்து மீள்வார்.

            பொழிப்புரை : சினத்தையுடைய ஆனேற்றை ஊர்கின்ற மணக்கோலத்துடன் வீற்றிருக்கும் இறைவரின் திருவடிகளை வணங்கி, அழகிய பவளம் போன்ற வாயைத் திறந்து வானவர்களுக்கும் தானவன் ஆகியவரே என்று கூறுகின்றார்` என்று அத்தன்மையுடைய திருப்பதிகத்துடனே, அன்பு பொருந்திய வளம்மிக்க தமிழ் மாலைகளைப் பாடி அப்பதியில் தங்கி, நினைதற்கரிய சிவபெருமானைப் போற்றிச் செல்வம் நிலைபெறும் புலியூரை நினைந்து திரும்புவராகி.


பெ. பு. பாடல் எண் : 174
மனைப்படப்பில் கடல்கொழுந்து வளைசொரியும்
            கழிப்பாலை மருங்கு நீங்கி
நனைச்சினைமென் குளிர்ஞாழல் பொழில்ஊடு
            வழிக்கொண்டு நண்ணும் போதில்
'நினைப்பவர்தம் மனம்கோயில்' கொண்டுஅருளும்
            அம்பலத்து நிருத்த னாரைத்
'தினைத்தனைஆம் பொழுதுமறந் துஉய்வனோ'
            எனப்பாடித் தில்லை சார்ந்தார்.

            பொழிப்புரை : இல்லங்களின் முற்றங்களில் எல்லாம் கடலின் அலைகள் சங்குகளைக் கொணர்ந்து சேர்க்கின்ற திருக்கழிப்பாலையினை நீங்கி, அரும்புகளையுடைய கொம்புகளுடன் கூடிய குளிர்ந்த புன்னைமரங்கள் அடர்ந்த சோலைகளின் வழியாய்ச் சென்று சேர்கின்ற போதில், நினைப்பவர் தம் மனத்தையே கோயிலாகக் கொண்ட கூத்தப் பெருமானைச் சிறுபொழுதும் மறந்தால் நான் உய்வனோ (தி.5 ப.2 பா.1) எனும் கருத்தையுடைய திருப்பதிகத்தைப் பாடியவாறே திருத்தில்லையை அடைந்தார்.

            குறிப்புரை : திருக்கழிப்பாலையிலிருந்து தில்லைக்கு வரும்
இடைவெளியில் பாடப் பெற்ற திருப்பதிகம்,

பனைக்கை மும்மத வேழம் உரித்தவன்
நினைப்ப வர்மனம் கோயிலாக் கொண்டவன்
அனைத்தும் வேடமாம் அம்பலக் கூத்தனைத்
தினைத்த னைப்பொழு தும்மறந் துய்வனோ. (தி.5 ப.2 பா.1)


திருநாவுக்கரசர் திருப்பதிகம்


5. 002     கோயில்              திருக்குறுந்தொகை
                                                திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
பனைக்கை மும்மத வேழம் உரித்தவன்,
நினைப்ப வர்மனம் கோயிலாக் கொண்டவன்,
அனைத்தும் வேடமாம் அம்பலக் கூத்தனைத்
தினைத்த னைப்பொழு தும்மறந்து உய்வனோ.

            பொழிப்புரை :பனைபோன்று கருத்து நீண்ட துதிக்கையையும், மும்மதங்களையும் உடைய யானையின் தோலை உரித்துப் போர்த்தவன்; அகவழிபாட்டில் நின்று தன்னையே எப்போதும் நினைப்பவர் மனத்தையே கோயிலாக் கொண்டவன்; எல்லா வடிவங்களையும் தனதாகக் கொன்ட அம்பலவாணப் பெருமானைத் தினை அளவு நேரம் கூட நான் மறந்திருப்பேனாகில், நான் உய்தியைப் பெறுவேனா.


பாடல் எண் : 2
தீர்த்த னைச்சிவ னைச்சிவ லோகனை
மூர்த்தி யைமுத லாய ஒருவனைப்
பார்த்த னுக்குஅருள் செய்தசிற் றம்பலக்
கூத்த னைக்கொடி யேன்மறந்து உய்வனோ.

            பொழிப்புரை :அநாதியே பாசங்களின் நீங்கி நின்று தன்னை அடைந்தார்க்கு அவற்றை நீக்கியருளும் தூய வடிவினனை, அன்பு வடிவினனை, சிவலோக நாயகனை, ஞான உருவினனை, உலகத்தோற்றத்திற்கு மூலமாய் நின்ற ஒருவனை , அருச்சுனனுக்கு அருள் புரிந்திய வேடனாய்த் திரிந்து, அவனுக்குப்  பாசுபதம் கொடுத்து அருளியவனை, திருச்சிற்றம்பலத்து ஆடல் புரியும்அம்பலவாணப் பெருமானைக் கொடியவனாகிய நான் மறந்தால் உய்தி பெறுவேனா.


பாடல் எண் : 3
கட்டும் பாம்பும் கபாலம்கை மான்மறி
இட்ட மாய்இடு காட்டுஎரி ஆடுவான்
சிட்டர் வாழ்தில்லை அம்பலக் கூத்தனை
எள்தனைப்பொழு தும்மறந்து உய்வனோ.

            பொழிப்புரை :தன்னைச் சுற்றிக் கட்டிக்கொண்டிருக்கும் பாம்பை உடையவன், கையிலே பிரமகபாலத்தை ஏந்தி இருப்பவன், மான்கன்றையும் உடையவன் , சர்வசங்கார காலத்தில் இடுகாட்டினைத் தனது இடமாக விரும்பி அனல் கையேந்தி ஆடுபவன், ஞானிகள் வாழும் தில்லையில் திருச்சிற்றம்பலத்தில் அருட்கூத்தை இயற்றுபவன். அப் பெருமானை எள் அளவுப் பொழுதேனும் மறந்து நான் உய்ய முடியுமா?


பாடல் எண் : 4
மாணி பால்கறந்து ஆட்டி வழிபட
நீணு லகுஎலாம் ஆளக் கொடுத்த,என்
ஆணியை, செம்பொன் அம்பலத் துள்நின்ற
தாணு வை,தமி யேன்மறந்து உய்வனோ.

            பொழிப்புரை :பிரமசாரியாகிய சண்டேச நாயனார் பசுக்களின் பாலைக் கறந்து முழுக்காட்டி வழிபட, நீண்ட உலகம் பலவற்றையும் ஆளும் அதிகாரத்தைக் கொடுத்தவன் ; பொன் உரையாணி போன்றவன் ; செம்பொன் அம்பலத்துள் நின்று ஆடும் நிலையான பரம்பொருள். அவனைத் தனியனாகிய நான் மறந்து இருந்தால் உய்தி பெறுவேனோ .


பாடல் எண் : 5
பித்த னை,பெரும் காடுஅரங் காஉடை
முத்த னை,முளை வெண்மதி சூடியை,
சித்தனை, செம்பொன் அம்பலத் துள்நின்ற
அத்த னை,அடி யேன்மறந்து உய்வனோ.

            பொழிப்புரை : பித்தன் என்றே பெயர் படைத்தவன்,  இடு காட்டையே தனக்கு ஆடும் இடமாகக்கொண்ட , இயல்பாகவே பாசங்களின் நீங்கியவன். இளம்பிறையைத் திருமுடியிலே சூடியவன். எல்லாம் செய்யவல்ல அறிவு வடிவானவன். செம்பொன் அம்பலத்திலே நின்று ஆடுகின்ற தலைவன். அவனை அடியவனாகிய மறவேன். காரணம், மறந்தால் உய்தி இல்லை.


பாடல் எண் : 6
நீதியை, நிறைவை, மறை நான்குடன்
ஓதியை, ஒருவர்க்கும் அறிவுஒணாச்
சோதியை, சுடர்ச் செம்பொனின் அம்பலத்து 
ஆதியை, அடியேன் மறந்து உய்வனோ.

            பொழிப்புரை : நீதியின் வடிவாக இருப்பவன். நிறைவாகவும் இருப்பவன். அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு உறுதிப் பொருள்களை அறிவுறுத்தியவன். ஒருவராலும் அறிய ஒண்ணாத அருட்பெருஞ்சோதியாக உள்ளவன். அவன் ஒளி வீசும் செம்பொன்னம்பலத்திலே ஆடல் புரிந்தருளுகின்ற முதற்பொருள் அவன். அப் பெருமானை அடியேன் மறந்து உய்தி பெறுதல் கூடாது.


பாடல் எண் : 7
மைகொள் கண்டன்,எண் தோளன்,முக் கண்ணினன்,
பைகொள் பாம்புஅரை ஆர்த்த பரமனார்,
செய்ய மாதுஉறை சிற்றம்ப லத்துஎங்கள்
ஐய னை,அடி யேன்மறந்து உய்வனோ.

            பொழிப்புரை : கருமை பொருந்திய கண்டத்தை உடையதால் திருநீலகண்டன். எட்டுத்தோள்களை உடையதால் எண்தோளினன்.  மூன்று கண்களை உடையதால் முக்கண்ணன்.  படம் கொண்ட பாம்பை அரையில் கட்டிய பாம்பாபரணன் எனப்படும் மேலான பரம்பொருள். திருமகள் உறையும் திருச்சிற்றம்பலத்தில் எமது ஐயனுமாகிய பெருமானை அடியேன் மறந்து உய்திபெறல் ஆகாது.


பாடல் எண் : 8
முழுதும் வான்உல கத்துஉள தேவர்கள்
தொழுதும், போற்றியும், தூயசெம் பொன்னினால்
எழுதி மேய்ந்தசிற் றம்பலக் கூத்தனை
இழுதை யேன்மறந்து எங்ஙனம் உய்வனோ.

            பொழிப்புரை : வானுலகத்தில் உள்ள தேவர்கள் வந்து வழிபட்டுப் போற்றித் தூய செம்பொன்னினால் முழுதும் வேயப்பட்டதான திருச்சசிற்றம்பலத்துக் கூத்தப் பெருமானைக் குற்றமுடையவன் ஆகிய நான் மறந்து எவ்வாறு உய்தி பெறுவேன் ?


பாடல் எண் : 9
கார் உலாமலர்க் கொன்றைஅம் தாரனை,
வார் உலாமுலை மங்கைம ணாளனை,
தேர் உலாவிய தில்லையுள் கூத்தனை,
ஆர்கி லாஅமு தை,மறந்து உய்வனோ.

            பொழிப்புரை : கார்காலத்துப் பூக்கும் கொன்றையை மாலையாக அணிந்தவன். கச்சணிந்த தனங்களை உடைய மலைமகள் மணவாளன்.  தேர் உலாவும் தில்லையுள் விளங்குகின்ற கூத்தப்பெருமான்.  அவன் உண்ண உண்ணத்தெவிட்டாத அமுது போல்பவன். அவனை அடியேன் மறந்து உய்திபெறல் ஆகாது.


பாடல் எண் : 10
ஓங்கு மால்வரை ஏந்தல்உற் றான்சிரம்
வீங்கி விம்முற ஊன்றிய தாளினான்,
தேங்கு நீர்வயல் சூழ்தில்லைக் கூத்தனைப்
பாங்கு இலாத்தொண்ட னேன்மறந்து உய்வனோ.

            பொழிப்புரை :உயர்ந்த திருக்கயிலாயத் திருமலையை எடுக்கலுற்ற இராவணன் தலைகள் பத்தும் பருத்து விம்முதல் அடையுமாறு ஊன்றிய திருவடியை உடையவன். நீர்வளம் சான்ற தில்லைத் திருச்சிற்றம்பலகூத்தன். அவனை, நல்ல சார்பில்லாத தொண்டனாகிய நான் மறந்து உய்தி பெறல் ஆகாது.

                                                            திருச்சிற்றம்பலம்

------------------------------------------------------------------------------------

திருநாவுக்கரசர் திருப்பதிக வரலாறு


பெ. பு. பாடல் எண் : 175
'அரியானை' என்றுஎடுத்தே அடியவருக்கு
            எளியானை, அவர்தஞ் சிந்தை
பிரியாத பெரியதிருத் தாண்டகச்செந்
            தமிழ்பாடிப் பிறங்கு சோதி
விரியாநின்று எவ்வுலகும் விளங்கியபொன்
            அம்பலத்து மேவி, ஆடல்
புரியாநின் றவர்தம்மைப் பணிந்துதமி
            ழால் பின்னும் போற்றல் செய்வார்.

            பொழிப்புரை : `அரியானை` எனத் தொடங்கி, அடியவர்க்கு எளியவரான சிவபெருமானை, அவ்வடியவர் உள்ளத்தினின்றும் பிரியாத பெருமானை எனும் கருத்தமைந்த பெரிய திருத்தாண்டகமான செந்தமிழ்ப் பதிகத்தைப் பாடி, விளங்கும் ஒளி மிகுதியால் எவ்வுலகங்களிலும் நிறைவாக விளங்கும் பொன்னம்பலத்தில் பொருந்திக் கூத்தாடுகின்ற இறைவரை வணங்கித் தமிழ்ப் பதிகங்களினால் மேலும் போற்றுவாராய்,

            குறிப்புரை : `அரியானை அந்தணர்தம் சிந்தையானை` எனத் தொடங்கும் இப்பதிகம் பெரியதிருத்தாண்டகம் (தி.6 ப.1) ஆகும். அந்தணர் என்பார் அழகிய தட்பத்தையுடைய அடியவரே யாதலின், `அடியவருக்கு எளியானை அவர்தம் சிந்தை பிரியாத` எனக் கருத்தமைதி கண்டார். அந்தணர் என்பதோடு ஈரநெஞ்சினர் (தி.12 சரு.1-4 பா.9) எனும் தொடரை இயைபுபடுத்திக் காண்க.


திருநாவுக்கரசர் திருப்பதிம்


6.001   கோயில்                                திருத்தாண்டகம்
                                                திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
அரியானை, அந்தணர்தம் சிந்தை யானை,
            அருமறையின் அகத்தானை, அணுவை, யார்க்கும்
தெரியாத தத்துவனை, தேனை, பாலை,
            திகழ்ஒளியை, தேவர்கள்தம் கோனை, மற்றைக்
கரியானை நான்முகனைக் கனலைக் காற்றைக்
            கனைகடலைக் குலவரையைக் கலந்து நின்ற
பெரியானை, பெரும்பற்றப் புலியூ ரானைப்
            பேசாத நாள்எல்லாம் பிறவா நாளே.

            பொழிப்புரை :பாசஞானமும், பசுஞானமும் உடைய யாரும் தம் முயற்சியால் அணுகுதற்கு அரியவன். எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகும் அந்தணர்களின் சிந்தாயில் உறைபவன். ஓதி உணர்தற்கு அரிய வேதங்களின் உட்பொருளாக விளங்குபவன், சிறியதிலும் சிறியவனாக உள்ளவன். யாராலும் தம் முயற்சியால் உணரப்படாத மெய்ப்பொருள். தேனும் பாலும் போன்று இனியவன். நிலைபெற்ற ஒளிவடிவினன். தேவர்களுக்குத் தலைவன். திருமாலையும் பிரமனையும், தீயையும், காற்றையும், ஒலிக்கின்ற கடலையும், மேம்பட்ட மலைகளையும் உடனாய் இருந்து செயற்படுத்துகின்ற மேம்பட்டவன். புலிக்கால் முனிவனுக்கு உறைவிடமாகிய தில்லையைத் தனக்கு இடமாகக் கொண்டு எழுந்தருளும் அப்பெருமானுடைய பொருள்சேர் புகழைப் பேசாத நாள்கள் எல்லாம் பயன் அற்ற நாள்களே.


பாடல் எண் : 2
கற்றானை, கங்கைவார் சடையான் தன்னை,
            காவிரிசூழ் வலஞ்சுழியும் கருதி னானை,
அற்றார்க்கும் அலந்தார்க்கும் அருள்செய் வானை.
            ஆரூரும் புகுவானை, அறிந்தோம் அன்றே,
மற்றுஆரும் தன்ஒப்பார் இல்லா தானை,
            வானவர்கள் எப்பொழுதும் வணங்கி ஏத்தப்
பெற்றானை, பெரும்பற்றப் புலியூ ரானைப்
            பேசாத நாள்எல்லாம் பிறவா நாளே.

            பொழிப்புரை :எல்லாம் முன் அறிய வல்லவன். கங்கையைத் தாங்கிய நீண்ட சடையினை உடையவன். ஒரு பக்கத்தில் காவிரியால் சூழப்பட்ட திருவலஞ்சுழி என்ற திருத்தலத்தை விரும்பிக் கோயில் கொண்டு எழுந்தருளியிருப்பவன். பொருள் அற்றோருக்கும், தன்னைத் தாங்குவார் இல்லாது வருந்துபவருக்கும் அருள் புரிபவன். திருவாரூரையும் விரும்பிக் கோயில் கொண்டு எழுந்தருளி இருப்பவன். தன்னைத் தவிர வேறு எவரும் தனக்கு ஒப்பாக இல்லாதவன். தேவர்களால் எப்பொழுதும் வணங்கி வழிபடப்படுபவன். எம்பெருமானாகிய அவனே நம் எல்லாருக்கும் மேலானவன் என்று அறிவோமாக.  பெரும்பற்றப் புலியூரைத் தனக்கு இடமாகக்கொண்ட அப்பெருமானுடைய பொருள்சேர் புகழைப் பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே .

  
பாடல் எண் : 3
கருமானின் உரியதளே உடையா வீக்கி,
            கனைகழல்கள் கலந்தொலிப்ப அனல்கை ஏந்தி,
வருமானத் திரள்தோள்கள் மட்டித்து ஆட,
            வளர்மதியம் சடைக்குஅணிந்து, மான்நேர் நோக்கி
அருமான வாள்முகத்தாள் அமர்ந்து காண,
            அமரர்கணம் முடிவணங்க ஆடு கின்ற
பெருமானை, பெரும்பற்றப் புலியூ ரானைப்
            பேசாத நாள்எல்லாம் பிறவா நாளே.

            பொழிப்புரை : கரிய நிறமுடைய யானைத் தோலை மேலாடையாக இறுக்கி உடுத்து, தன் திருவடிகளில் அணிந்துள்ள கழல்களின் ஒலி ஏனைய வாத்தியங்களின் ஒலியோடு கலந்து ஒலிக்க, கையிலே அனலை ஏந்தி, பெருமைபொருந்திய தனது பருத்த தோள்களை மடித்து அவைகள் அசையுமாறு, பிறைச் சந்திரனைச் சடையில் அணிந்து, மானின் பார்வை போன்ற பார்வையை உடையவளாகிய மேம்பட்ட சிறந்த ஒளியை உடைய முகத்தவளாகிய உமையம்மையார் விரும்பிக்காணுமாறு, தேவர் கூட்டம் தலை தாழ்த்தி வணங்குமாறு திருக்கூத்தாடுகின்ற மேம்பட்டவனாகிய பெரும்பற்றப் புலியூரானின் பொருள்சேர்
புகழைப் பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே.


பாடல் எண் : 4
அருந்தவர்கள் தொழுதுஏத்தும் அப்பன் தன்னை,
            அமரர்கள்தம் பெருமானை, அரனை, மூவா
மருந்துஅமரர்க்கு அருள்புரிந்த மைந்தன் தன்னை,
            மறிகடலும் குலவரையும் மண்ணும் விண்ணும்
திருந்துஒளிய தாரகையும் திசைகள் எட்டும்
            திரிசுடர்கள் ஓர்இரண்டும் பிறவும் ஆய
பெருந்தகையை, பெரும்பற்றப் புலியூ ரானைப்
            பேசாத நாள்எல்லாம் பிறவா நாளே.

            பொழிப்புரை : அருமையான தவத்தைப் புரிபவர்கள் தொழுது போற்றும் தலைவன். தேவர்களுக்கெல்லாம் தலைவன்,. தீமைகளை அழிப்பவன். மூப்பு எய்தாமற் செய்யும் அமுதத்தைத் தேவர்களுக்கு உதவிய வலிமையுடையவன். அலைகள் மடங்கி வீழும் கடல், மேம்பட்ட மலை, நிலம், வானம், திருத்தமான ஒளியை உடைய விண்மீன்கள், எண்திசைகள், வானத்தில் உலவுகின்ற கதிரவன், மதியம், பிறவும், ஆகிய பொருள்களில் உடனாய் இருந்து அவற்றைத் தொழிற்படுத்தும் மேன்மையை உடையவன் ஆகிய பெரும்பற்றப் புலியூரானின் பொருள்சேர்
புகழைப் பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே.


பாடல் எண் : 5
அருந்துணையை, அடியார்தம் அல்லல் தீர்க்கும்
            அருமருந்தை, அகல்ஞாலத்து அகத்துள் தோன்றி
வருந்துணையும் சுற்றமும் பற்றும் விட்டு,
            வான்புலன்கள் அகத்துஅடக்கி, மடவா ரோடும்
பொருந்துஅணைமேல் வரும்பயனைப் போக மாற்றி,
            பொதுநீக்கி, தனைநினைய வல்லோர்க்கு என்றும்
பெருந்துணையை, பெரும்பற்றப் புலியூ ரானைப்
            பேசாத நாள்எல்லாம் பிறவா நாளே.

            பொழிப்புரை :ஒப்பற்ற துணைவன். அடியவர்களின் துயரைப் போக்கும் அமுதம் போன்றவன். பரந்த இவ்வுலகில் பிறப்பெடுத்த பின்னர் உடன்தோன்றும் துணைவர் , ஏனைய சுற்றத்தார் , செல்வம் இவற்றிலுள்ள பாசத்தை நீத்து, பெரிய புலன்களின்மேல் செல்லும் மனத்தை அடக்கி, மகளிரோடும் படுக்கையில் நுகரும் சிற்றின்பப் பயனை அடியோடு நீக்கி, ஏனைய தெய்வங்களோடு பொதுவாக நினைப்பதனை விடுத்துத் தன்னையே விருப்புற்று நினைத்தலில் வல்ல அடியவர்களுக்கு எக்காலத்தும் உடனாய் நின்று உதவும் துணைவன் ஆகிய பெரும்பற்றப்புலியூரானைப் பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே .


பாடல் எண் : 6
கரும்புஅமரும் மொழிமடவாள் பங்கன் தன்னை,
            கனவயிரக் குன்றுஅனைய காட்சி யானை,
அரும்புஅமரும் பூங்கொன்றைத் தாரான் தன்னை,
            அருமறையோடு ஆறுஅங்கம் ஆயி னானை,
சுரும்புஅமருங் கடிபொழில்கள் சூழ்தென் ஆரூர்ச்
            சுடர்க்கொழுந்தை, துளக்குஇல்லா விளக்கை, மிக்க
பெரும்பொருளை, பெரும்பற்றப் புலியூ ரானைப்
            பேசாத நாள்எல்லாம் பிறவா நாளே.

           
பொழிப்புரை :கரும்பு போன்ற இனிய சொற்களை உடைய பார்வதியைத் தன் திருமேனியின் இடப்பகுதியாகக் கொண்டவன். பெருமைக்கு உரிய வயிரமலை போன்ற வடிவினன். அலரும் பருவத்து அரும்பாய்க் கட்டிய கொன்றைப் பூமாலையை அணிந்தவன். நால்வேதமும் ஆறங்கமும் ஆயினான். வண்டுகள் பொருந்தி இருக்கின்ற நறுமணம் மிகுந்த சோலைகளால் சூழப்பட்ட அழகிய திருவாரூரில் எழுந்தருளி இருக்கும் சுடர்க்கொழுந்து. அணையாத விளக்குப் போன்றவன். வீடுபேற்று இன்பமாக இருப்பவன் ஆகிய பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே.
  

பாடல் எண் : 7
வரும்பயனை, எழுநரம்பின் ஓசை யானை,
            வரைசிலையா வானவர்கள் முயன்ற வாளி
அரும்பயஞ்செய் அவுணர்புரம் எரியக் கோத்த
            அம்மானை, அலைகடல்நஞ்சு அயின்றான் தன்னை,
சுரும்புஅமருங் குழல்மடவார் கடைக்கண் நோக்கில்
            துளங்காத சிந்தையராய்த் துறந்தோர் உள்ளப்
பெரும்பயனை, பெரும்பற்றப் புலியூ ரானைப்
            பேசாத நாள்எல்லாம் பிறவா நாளே.

            பொழிப்புரை :ஏழிசையாய் இசைப் பயனாய் உள்ளவன். மேருவை வில்லாகக் கொண்டு,  திருமால் அம்பாயும், காற்றுக் கடவுள் சிறகாயும், தீக்கடவுள் முனையாயும் அமைந்த அம்பைக் கொண்டு கொடிய அச்சத்தை விளைத்த அசுரர்களின் மூன்று கோட்டைகளும் எரியுமாறு செய்த தலைவன். அலைகடலில் தோன்றிய ஆலகால விடத்தை உண்டவன். வண்டுகள் தங்கும் பூக்களை அணிந்த கூந்தலை உடைய இளைய மகளிரின் கடைக்கண் பார்வையால் கலங்காத உள்ளத்தை உடையவராய்ச் சிற்றின்பத்தை அறநீத்த உள்ளத்தார் அடையும் முடிந்த பயனாக இருப்பவன் ஆகிய பெரும்பற்றப்புலியூரானைப் பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே.


பாடல் எண் : 8
கார்ஆனை ஈர்உரிவைப் போர்வை யானை,
            காமருபூங் கச்சி எகம்பன் தன்னை,
ஆரேனும் அடியவர்கட்கு அணியான் தன்னை,
            அமரர்களுக்கு அறிவுஅரிய அளவுஇ லானை,
பாரோரும் விண்ணோரும் பணிய நட்டம்
            பயில்கின்ற பரஞ்சுடரை, பரனை, எண்ணில்
பேரானை, பெரும்பற்றப் புலியூ ரானைப்
            பேசாத நாள்எல்லாம் பிறவா நாளே.

            பொழிப்புரை :கரிய யானையின் தோலை உரித்துப் போர்த்தியவன். விருப்பம் மருவிய அழகுமிகும் காஞ்சியம்பதியில் ஏகம்பம் என்ற திருக்கோயிலை உகந்து எழுந்தருள்பவன். யாராயிருந்தாலும் அடியவர்களானால் அவர்களுக்கு அணிமையில் இருப்பவன்.  அடியவர்கள் அல்லாத தேவர்களுக்கு அவர்களது முயற்சியால் தேடி அளவிட முடியாதவன். பூலோகத்தவரும் வானுலகத்தவரும் தன்னை வணங்குமாறு கூத்தினைப் பயில்கின்ற ஒளி உருவன்.  மேலான பரம்பொருளாக உள்ளவன். எண்ணற்ற திருநாமங்களை உடையவன். அப்படிப்பட்ட பெரும்பற்றப் புலியூரானை பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே.


பாடல் எண் : 9
முற்றாத பால்மதியம் சூடி னானை,
            மூவுலகும் தான்ஆய முதல்வன் தன்னை,
செற்றார்கள் புரமூன்றும் செற்றான் தன்னை,
            திகழ்ஒளியை, மரகதத்தை, தேனை, பாலை,
குற்றாலத்து அமர்ந்துஉறையும் குழகன் தன்னை,
            கூத்துஆட வல்லானை, கோனை, ஞானம்
பெற்றானை, பெரும்பற்றப் புலியூ ரானைப்
            பேசாத நாள்எல்லாம் பிறவா நாளே.

            பொழிப்புரை :வெள்ளிய இளம் பிறைமதியைச் சூடியவன் . மூவுலகும் தானேயாய் இருக்கும் தலைவன். பகைவருடைய மும்மதில்களையும் அழித்தவன். விளங்கும் ஒளிவடிவினன். இடப்பாகத்ததுப் பச்சை நிறத்தால் மரகதத்தைப் போன்றவன் . தேனும் பாலும் போல இன்பம் தருபவன். குற்றாலம் என்ற திருத்தலத்தை விரும்பிக் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் இளையவன். கூத்தாடுதலில் வல்லவன். யாவருக்கும் தலைவன். ஞானத்தால் தொழுபவர்களால் அறியப் பெறுபவன் ஆகிய பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே.


பாடல் எண் : 10
கார்ஒளிய திருமேனிச் செங்கண் மாலும்
            கடிக்கமலத்து இருந்தவனும்காணா வண்ணம்
சீர்ஒளிய தழல்பிழம்பாய் நின்ற தொல்லைத்
            திகழ்ஒளியை, சிந்தைதனை மயக்கந் தீர்க்கும்
ஏர்ஒளியை, இருநிலனும் விசும்பும் விண்ணும்
            ஏழ்உலகும் கடந்துஅண்டத்து அப்பால் நின்ற
பேர்ஒளியை, பெரும்பற்றப் புலியூ ரானைப்
            பேசாத நாள்எல்லாம் பிறவா நாளே.

            பொழிப்புரை :கரிய திருமேனி ஒளியை உடையவனும் சிவந்த கண்களை உடையவனும் ஆகிய திருமாலும், நறுமணம் கமழும் செந்தாமரையில் வீற்றிருக்கும் பிரமனும், தன் அடியையும் முடியையும் காணமுடியாதபடி சீரிய ஒளியை உடைய தீப்பிழம்பாய் நின்ற ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதியாக உள்ளவன். சிந்திப்பார் சிந்தையிலே உள்ள மயக்கத்தைப் போக்கும் ஞான ஒளியானவன். பெரிய இந்நில உலகையும், வானத்தையும், தேவர் உலகையும் உள்ளிட்ட ஏழு உலகங்களையும் கடந்து அவற்றிற்கு அப்பாலும் பரவும் எல்லையற்ற பேரொளிப் பிழம்பாய் இருப்பவன் ஆகிய பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே.

திருச்சிற்றம்பலம்


திருநாவுக்கரசர் திருப்பதிக வரலாறு


பெ. பு. பாடல் எண் : 176
'செஞ்சடைக் கற்றை முற்றத்து இளநிலா
            எறிக்கும்'எனும் சிறந்த வாய்மை
அஞ்சொல்வளத் தமிழ்மாலை அதிசயமாம்
            படிபாடி அன்பு சூழ்ந்த
நெஞ்சுஉருகப் பொழிபுனல்வார் கண்இணையும்
            பரவியசொல் நிறைந்த வாயும்
தம்செயல்இயல் ஒழியாத திருப்பணியும்
            மாறாது சாரும் நாளில்.

            பொழிப்புரை : `செஞ்சடைக்கற்றை முற்றத்திள நிலாஎறிக்கும்` எனத் தொடங்கும் சிறப்புடைய வாய்மைச் சொற்களால் ஆய தமிழ்ப்பதிகத்தை வியப்புறுமாறு பாடி, அன்பு கெழுமிய மனம் கரைந்து உருகப்பெய்யும் மழை போன்ற நீர் பொழிகின்ற இரண்டு திருக்கண்களும், சிவபெருமானை வணங்கும் பதிகச்சொல் நிறைந்த திருவாயும், தம் செயலில் நீங்காத திரு உழவாரத் திருப்பணியும் கொண்டு மாறாமல் செய்துவரும் நாள்களில்.

            குறிப்புரை : `செஞ்சடைக் கற்றை` எனத் தொடங்கும் திருநேரிசைத் திருப்பதிகத்தில், பாடல் தொறும் பெருமானின் ஆடற் சிறப்பை வியந்து பாடிய அப்பர் பெருமான் திருக்கடைக்காப்பில்,

``மதியந்தோய் தில்லை தன்னுள் மல்குசிற் றம்பலத்தே
அதிசயம் போல நின்று வனலெரி யாடு மாறே.``
                                                                                                            (தி.4 ப.22 பா.11)
எனக் கூறி நிறைவு செய்கின்றார். இதனையுளங் கொண்டே ஆசிரியர் சேக்கிழார், `அஞ்சொல் வளத் தமிழ்மாலை அதிசயமாம்படி பாடி` என்றருளிச் செய்கின்றார். இப்பதியில் இருந்தருளிய பொழுது பாடிய பதிகங்கள் மேலும் இரண்டுள்ளன. 1) `பாளையுடை` (தி.4 ப.80 பா.1) எனத் தொடங்கும் திருவிருத்தம், 2) `மங்குல் மதிதவழும்` (தி.6 ப.2 பா.1) எனத் தொடங்கும் புக்க திருத்தாண்டகம்.


திருநாவுக்கரசர் திருப்பதிகம்

4. 022   கோயில்        திருநேரிசை      பண் - கொல்லி
திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
செஞ்சடைக் கற்றை முற்றத்து
            இளநிலா எறிக்கும் சென்னி,
நஞ்சுஅடை கண்ட னாரைக்
            காணலாம், நறவம் நாறும்
மஞ்சுஅடை சோலைத் தில்லை
            மல்குசிற் றம்ப லத்தே,
துஞ்சுஅடை இருள் கிழியத்
            துளங்குஎரி ஆடுமாறே.

            பொழிப்புரை : சிவந்த சடைக்கற்றையின் முன்னிடத்தில் பிறை ஒளிவீசும் திருமுடியை உடைய, விடம் பொருந்திய கழுத்தினராகிய சிவபெருமானை, மேகமண்டலம் வரை வளர்ந்த தேன் மணம் கமழும் சோலைகளை உடைய தில்லைப் பதியிலே விளங்குகின்ற சிற்றம்பலத்திலே, செறிந்து பரவியுள்ள இருள் நீங்குமாறு கையில் அசைகின்ற தீயோடு கூத்து நிகழ்த்தும் நிலையில் காணலாம்.  (இருள் என்பது இங்கே ஆணவமலத்தைக் குறித்தது.  மலபரிபாகம் நிகழ்த்தும் திருக்குறிப்போடு பெருமானுடைய திருக்கூத்து நிகழ்கின்றது. )


பாடல் எண் : 2
ஏறனார் ஏறு தம்பால்
            இளநிலா எறிக்கும் சென்னி
ஆறனார் ஆறு சூடி
            ஆயிழை யாள்ஓர் பாகம்
நாறுபூஞ் சோலைத் தில்லை
            நவின்றசிற் றம்ப லத்தே
நீறுமெய் பூசி நின்று
            நீண்டுஎரி ஆடு மாறே.

            பொழிப்புரை : காளையை வாகனமாகவுடையவராய், பிறை ஒளிவீசும் தலையிலே கங்கையாற்றை உடையவராய், கங்கையைச் சூடிக்கொண்டு, பார்வதி ஒருபாகமாக, நறுமணம் கமழும் சோலைகளை உடைய தில்லை நகரிலே தாம் பலகாலும் பழகிய சிற்றம்பலத்திலே உடலில் திருநீறு பூசிக்கொண்டு பலகாலம் ஞானத்தீயிடைக் கூத்தாடுவதைக் காணலாம்.


பாடல் எண் : 3
சடையனார் சாந்த நீற்றர்
            தனிநிலா எறிக்கும் சென்னி
உடையனார் உடை தலையில்
            உண்பதும் பிச்சை ஏற்றுக்
கடிகொள்பூந் தில்லை தன்னுள்
            கருதுசிற் றம்ப லத்தே
அடிகழல் ஆர்க்க நின்று
            அனல்எரி ஆடு மாறே.

            பொழிப்புரை : சடையை உடையவராய்த் திருநீற்றையே சந்தனமாகப் பூசியவராய், ஒரே பிறை ஒளிவீசும் தலையை உடையவராய், மண்டையோட்டில் பிச்சை ஏற்று உண்பதனை உடையவராய், நறுமணம் கமழும் பூக்கள் நிறைந்த தில்லை நகரில் சிறப்பாகக் கருதப்படும் சிற்றம்பலத்திலே, திருவடிகளிலே வீரக்கழல் ஆரவாரம் செய்ய நின்று, ஒளிவீசும் ஞானத் தீயிடையே கூத்து நிகழ்த்துவதைக் காணலாம்.


பாடல் எண் : 4
பைஅரவு அசைத்த அல்குல்
            பனிநிலா எறிக்கும் சென்னி
மைஅரிக் கண்ணி யாளும்
            மாலும்ஓர் பாகம் ஆகிச்
செய்அரி தில்லை தன்னுள்
            திகழ்ந்தசிற் றம்ப லத்தே
கைஎரி வீசி நின்று
            கனல்எரி ஆடு மாறே.

            பொழிப்புரை : குளிர்ந்த பிறை ஒளி வீசும் தலையிலே படம் எடுக்கும் பாம்பை வருத்தும் வனப்புடைய அல்குலை உடைய, செவ்வரி கருவரி பரந்த மை தீட்டிய கண்களை உடைய கங்கையோடு, திருமால் ஒருபாகமாக அமைய, வயலிலே தானியங்கள் அறுவடை செய்யப்படுகின்ற தில்லையம்பதியிலே விளங்கும் திருச்சிற்றம்பலத்திலே சிவபெருமான் கையில் ஏந்திய நெருப்பினை வீசிக்கொண்டு நின்றவராய், ஒளிவீசும் ஞானத் தீயிடையே கூத்து நிகழ்த்துவதைக் காணலாம்.


பாடல் எண் : 5
ஓதினார் வேதம் வாயால்
            ஒளிநிலா எறிக்கும் சென்னி
பூதனார் பூதஞ் சூழப்
            புலிஉரி அதள னார்தாம்
நாதனார் தில்லை தன்னுள்
            நவின்றசிற் றம்ப லத்தே
காதில்வெண் குழைகள் தாழக்
            கனல்எரி ஆடு மாறே.

            பொழிப்புரை : ஐம்பூதங்களாக இருக்கும் பெருமான், தம் வாயால் வேதம் ஓதினராய், பிறை ஒளிவீசும் சென்னியராய்ப் புலித்தோலை அணிந்தவராய்த் தாம் எல்லோருக்கும் தலைவராய்ப் பூதங்கள் சூழத் தில்லையம்பதியில் பலகாலும் பழகிய திருச்சிற்றம்பலத்திலே காதிலணிந்த வெண்குழைகள் தொங்குமாறு ஒளிவீசும் ஞானத் தீயிடையே கூத்து நிகழ்த்துவதைக் காணலாம்.


பாடல் எண் : 6
ஓர்உடம்பு இருவர் ஆகி
            ஒளிநிலா எறிக்கும் சென்னிப்
பாரிடம் பாணி செய்யப்
            பயின்றஎம் பரம மூர்த்தி
கார்இடம் தில்லை தன்னுள்
            கருதுசிற் றம்ப லத்தே
பேரிடம் பெருக நின்று
            பிறங்குஎரி ஆடு மாறே.

            பொழிப்புரை : ஒரே உடம்பில் தாமும் அம்மையுமாக இருவராகி, ஒளிவீசும் பிறையின் ஒளி பரவிய சென்னியராய், பூதக்கூட்டங்கள் தாளம் போட, கூத்தாடுதலில் பழகிய எம் மேம்பட்ட பெருமான், மேகங்கள் தங்கும் தில்லையிலே சிறப்பாகக் கருதப்படும் திருச்சிற்றம்பலத்திலே அகண்டமாய் வளருமாறு நின்று, விளங்குகின்ற ஞானத் தீயிடையே கூத்து நிகழ்த்துவதைக் காணலாம்.


பாடல் எண் : 7
முதல்தனிச் சடையை மூழ்க
            முகிழ்நிலா எறிக்கும் சென்னி
மதக்களிற் றுஉரிவை போர்த்த
            மைந்தரைக் காணல் ஆகும்
மதர்த்துவண்டு அறையும் சோலை
            மல்குசிற் றம்ப லத்தே
கதத்தது ஓர்அரவம் ஆடக்
            கனல்எரி ஆடு மாறே.

            பொழிப்புரை : முதன்மையும் ஒப்பற்ற தன்மையும் உடைய சடைமுழுதும் பிறை தன் ஒளியைப் பரப்பும் சென்னியை உடையவராய், மதம் பொருந்திய யானையை கொன்று அதன் தோலைப் போர்த்திய வலிமை உடையவராய், தேன் உண்டு களித்து வண்டுகள் ஒலிக்கும் சோலைகள் நிறைந்த திருச்சிற்றம்பலத்தில் கோபம் கொண்ட பாம்பு படமெடுத்து ஆடச் சிவபெருமான் ஒளிவீசும் ஞானத் தீயிடையே கூத்து நிகழ்த்துவதைக் காணலாம்.

   
பாடல் எண் : 8
மறையனார் மழுஒன்று ஏந்தி
            மணிநிலா எறிக்குஞ்சென்னி
இறைவனார் எம்பி ரானார்
            ஏத்துவார் இடர்கள் தீர்ப்பார்
சிறைகொள் நீர்த்தில்லை தன்னுள்
            திகழ்ந்தசிற் றம்ப லத்தே
அறைகழல் ஆர்க்க நின்று
            அனல்எரி ஆடு மாறே.

            பொழிப்புரை : வேதம் ஓதுபவராய், மழுப்படை ஒன்றை ஏந்தியவராய், அழகிய பிறை நிலவொளி வீசும் சென்னியராய், எல்லோர் உள்ளத்தும் தங்கியிருப்பவராய், எங்கள் தலைவராய், தம்மைத் துதிப்பவர்களுடைய துயரங்களை நீக்குபவராய், நீர்ப் பாசனத்துக்காகத் தேக்கி வைக்கப்பட்டுள்ள தில்லையம்பதியிலே விளங்குகின்ற திருச்சிற்றம்பலத்திலே, சிவபெருமான் தம் கழல் ஒலி செய்ய நின்று ஞானத் தீயிடையே கூத்து நிகழ்த்துவதைக் காணலாம்.


பாடல் எண் : 9
விருத்தன்ஆய்ப் பாலன்ஆகி
            விரிநிலா எறிக்கும் சென்னி
நிருத்தனார் நிருத்தம் செய்ய
            நீண்டபுன் சடைகள் தாழக்
கருத்தனார் தில்லை தன்னுள்
            கருதுசிற் றம்ப லத்தே
அருத்தமா மேனி தன்னோடு
            அனல்எரி ஆடு மாறே.

            பொழிப்புரை : ஆண்டில் மூத்தவராகவும், மிக இளையராகவும் காட்சி வழங்குபவராய், பிறை விரிந்த ஒளியைப் பரப்பும் சென்னியராய்க் கூத்து நிகழ்த்துபவராய், நீண்ட சிவந்த சடைகள் தொங்கக் கூத்தாடுதலால் அடியவர் உள்ளத்தில் என்றும் தங்கியிருப்பவராய், தில்லையம்பதியிலே சிறப்பாகக் கருதப்படுகின்ற திருச்சிற்றம்பலத்திலே பார்வதிபாகமான திருமேனியோடு ஒளிவீசும் ஞானத்தீயிடைச் சிவபெருமான் கூத்தாடும் காட்சியைக் காணலாம்.


பாடல் எண் : 10
பாலன்ஆய் விருத்தன்ஆகிப்
            பனிநிலா எறிக்கும் சென்னிக்
காலனைக் காலால் காய்ந்த
            கடவுளார் விடைஒன்று ஏறி
ஞாலமாம் தில்லை தன்னுள்
            நவின்றசிற் றம்ப லத்தே
நீலம்சேர் கண்ட னார்தாம்
            நீண்டுஎரி ஆடு மாறே.

            பொழிப்புரை : பாலனாகவும் மூத்தோனாகவும் காட்சி வழங்கிக் குளிர்ந்த பிறை ஒளிவீசும் சென்னியராய்க் காலனை காலால் வெகுண்ட பெருமானார் காளையை இவர்ந்து உலகவர் கூடி வணங்கும் தில்லையம்பதியில் சிறப்பாகப் போற்றப்படும் திருச்சிற்றம்பலத்திலே நீலகண்டராய் விரிவாக ஞானத் தீயிடைக் கூத்து நிகழ்த்தும் காட்சியைக் காணலாம்.


பாடல் எண் : 11
மதியிலா அரக்கன் ஓடி
            மாமலை எடுக்க நோக்கி
நெதியன்தோள் நெரியஊன்றி
            நீடுஇரும் பொழில்கள்சூழ்ந்த
மதியம்தோய் தில்லை தன்னுள்
            மல்குசிற் றம்ப லத்தே
அதிசயம் போல நின்று
            அனல்எரி ஆடு மாறே.

            பொழிப்புரை : அறிவற்ற அரக்கனாகிய இராவணன் விரைந்து சென்று பெரிய கயிலைமலையைப் பெயர்க்க, அதனை மனத்தால் நோக்கிச் செல்வனான அவனுடைய தோள்கள் நெரியுமாறு கால்விரல் ஒன்றனை ஊன்றி, நீண்ட பொழில்கள் சூழ்ந்த தில்லையுள் விளங்கும் திருச்சிற்றம்பலத்திலே சிவபெருமான் எல்லோரும் வியக்குமாறு குறுகிய இடத்தில் நின்று ஒளிவீசும் ஞானத் தீயிடைக் கூத்து நிகழ்த்தும் காட்சியைக் காணலாம்.
           
                                                            திருச்சிற்றம்பலம்

திருநாவுக்கரசர் திருப்பதிகம்

4. 080  கோயில்                    திருவிருத்தம்
                                                            திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
பாளை உடைக்கமுகு ஓங்கிப்
            பன் மாடம் நெருங்கி,எங்கும்
வாளை உடைப்புனல் வந்துஎறி
            வாழ்வயல் தில்லைதன்னுள்,
ஆள உடைக்கழல் சிற்றம்
            பலத்துஅரன் ஆடல்கண்டால்,
பீளை உடைக்கண்க ளால்பின்னைப்
            பேய்த்தொண்டர் காண்பதுஎன்னே.

            பொழிப்புரை : பாளைகளை உடைய பாக்கு மரங்கள் உயர்ந்து வளர்ந்த மாடவீடுகள் நெருக்கமாக அமைந்திருக்க, வாளை மீன் குதிக்கும் நீரின் அலைகள் வீசும் வயல்களையுடைய தில்லையில் விளஹ்கும் திருச்சிற்றம்பலத்திலே, உயிர்களை ஆட்கொள்ளுதலுக்காக அமைந்த திருவடிகளை உடைய திருச்சிற்றம்பலத்திலே பெருமான் ஆடுகின்ற திருக்கூத்தினைக் காணும் வாய்ப்பினைப் பெற்றால், அதன்பின் பீளை ஒழுகும் கண்களால், பிடித்ததனை விடாத பேய்போன்ற இயல்பை உடைய அடியார்கள், தம் கண்களால் காணத்தக்க மேம்பட்ட பொருள் வேறு ஏதும் இல்லை. திருக்கூத்தைக் கண்ட கண்கள் வேறு எவற்றையும் காண விரும்பா!

            குறிப்பு---- இறைவனைப் பாடும்போது பாதாதிகேசமாகவும், மனிதர்களைப் பாடும்போது கேசாதிபாதமாகவும் அமைந்திருக்க வேண்டும்.  இத் திருப்பதிகத்தில், தில்லையம்பலக் கூத்தன் ஆடல், அவன் திருவடி,  அவன் உடுத்துள்ள ஆடை, உதரபந்தனம், எனப் பாதாதிகேசமாக இறைவனின் அங்கங்களைக் கண்டு பாடியதாக அமைந்துள்ளது.


பாடல் எண் : 2
பொருவிடை ஒன்றுஉடைப்
            புண்ணிய மூர்த்தி, புலியதளன்,
உருவுடை யம்மலை மங்கை
            மணாளன், உலகுக்கு எல்லாம்
திருவுடை அந்தணர் வாழ்கின்ற
            தில்லைச்சிற் றம்பலவன்
திருவடி யைக்கண்ட கண்கொண்டு
            மற்றுஇனிக் காண்பதுஎன்னே.

            பொழிப்புரை : போரிடும் காளை ஒன்றினைத் தனது வாகனமாகவுடையவராய புண்ணிய வடிவினனாய் , புலித்தோலை ஆடையாகக் கொண்டவனாய் , அழகிய மலைமகளின் மணாளனாய், அந்தணர்கள் வாழ்கின்ற பதியாய் உலகத்தவருக்கெல்லாம் பேரின்பச் செல்வத்தை நல்கும் தில்லையிலுள்ள சிற்றம்பலத்துக் கூத்து நிகழ்த்தும் பெருமானுடைய திருவடிகளைக் கண்ட கண்களால் , காண்பதற்கு வேறுஒரு பொருள் எதுவும் இல்லை.


பாடல் எண் : 3
தொடுத்த மலரொடு தூபமும்
            சாந்தும்கொண்டு எப்பொழுதும்
அடுத்து வணங்கும் அயனொடு
            மாலுக்கும் காண்பரியான்,
பொடிக்கொண்டு அணிந்துபொன் ஆகிய
            தில்லைச்சிற் றம்பலவன்
உடுத்த துகில்கண்ட கண்கொண்டு
            மற்றுஇனிக் காண்பதுஎன்னே.

            பொழிப்புரை : மாலையாகத் தொடுக்கப்பட்ட மலரொடு புகைக்கு உரியனவும் சந்தனமும் கைகளில் கொண்டு , எப்பொழுதும் அணுகி வந்து வணங்கும் பிரமனுக்கும் திருமாலுக்கும் தமது முயற்சியினால் காண்பதற்கு அரியவனாய்த் திகழ்கின்ற பெருமான், தனது திருமேனியிலே திருநீற்றினை அணிந்து பொன் மயமாகத் திகழும் தில்லைச் சிற்றம்பலத்திலே ஆடல் புரிகின்றான்.  அவன் அணிந்துள்ள புலித்தோலாடையைக் கண்ட கண்கள் வேறு எவற்றையும் காணமாட்டா.


பாடல் எண் : 4
வைச்ச பொருள்நமக்கு ஆகும்என்று எண்ணி நமச்சிவாய
அச்சம் ஒழிந்தேன், அணிதில்லை அம்பலத்து ஆடுகின்ற
பிச்சன், பிறப்புஇலி, பேர்நந்தி உந்தியின் மேல்அசைத்த
கச்சின் அழகுகண் டால்,பின்னைக் கண்கொண்டு                                                                            காண்பதுஎன்னே.

            பொழிப்புரை : நமக்குச் சேமவைப்பாக இருக்கின்ற பொருள் திருவைந்தெழுத்தே. அச்செல்வமானது கிடைக்கப் பெற்றால் பேரின்ப வாழ்வானது குறைவில்லாமல் நடக்கும் என்று எண்ணி, எனது அச்சத்தினை நான் ஒழித்தேன். அழகான தில்லை நகரிலே உள்ள திருச்சிற்றம்பலத்தில் கூத்து நிகழ்த்துகின்றவனாய், அடியவர் திறத்துப் பித்தனாய், பிறப்பு அற்றவனாய், நந்தி என்ற பெயரினனாய் உள்ள பெருமானுடைய உந்தியின் மேல் இடுப்பைச் சுற்றிலும் கட்டப்பட்ட உதரபந்தனமாகிய கச்சின் அழகைக் காணப் பெற்றால் பின்னைக் காணவேண்டிய உயர்ந்த பொருள் ஏதுமில்லை!


பாடல் எண் : 5
செய்ஞ்ஞின்ற நீலம் மலர்கின்ற
            தில்லைச்சிற் றம்பலவன்
மைஞ்ஞின்ற ஒண்கண் மலைமகள்
            கண்டு மகிழ்ந்துநிற்க
நெய்ஞ்ஞின்று எரியும் விளக்குஒத்த
            நீல மணிமிடற்றான்
கைஞ்ஞின்ற ஆடல்கண் டால்,பின்னைக்
            கண்கொண்டு காண்பதுஎன்னே.

            பொழிப்புரை : வயலிலே காண்கின்ற பூங்கொடிகளில் நீலோற்பல மலர்கள் மலர்கின்றன.  அத்தகு வளம் நிறைந்துள்ள தில்லைப்பதியில் விளங்கும் திருச்சிற்றம்பலத்தைத் தனது ஆடலுக்கான இடமாகக் கொண்டு, நெய்யில் நின்றெரியும் தீபச்சுடர் போன்று ஒளிவிடும் நீலமணி போன்ற கண்டத்தை உடைய  பெருமான் , கருமை நிலைபெற்ற, ஒளிமிக்க கண்களை உடைய சிவகாமவல்லி கண்டு மகிழ்ந்து நிற்க, திருக்கூத்து நிகழ்த்துவதும், என்று வந்தாய் எனும் திருக்குறிப்புப் புலப்பட நின்று இயற்றுவதுமான ஆடலைக் காணும் பேறு பெற்ற பின்னர் காண வேண்டியது வேறு ஒன்றும் இல்லை.


பாடல் எண் : 6
ஊனத்தை நீக்கி உலகுஅறி யஎன்னை
            ஆட்கொண்டவன்,
தேன்ஒத்து எனக்குஇனி யான்,தில்லைச்
            சிற்றம் பலவன்,எம்கோன்
வானத் தவர்உய்ய வன்நஞ்சை
            உண்டகண்டத்து இலங்கும்
ஏனத்து எயிறுகண் டால்பின்னைக்
            கண்கொண்டு காண்பதுஎன்னே.

            பொழிப்புரை : பரசமயத்தைச் சாரந்தேன். அகச்சமயத்தைத் துறந்தேன்.  ஆதலால், உயிருக்கு உள்ள ஊனமானது ஒழியவில்லை.  தனது திருவருட் கருணையால், எனக்குச் சூலைநோயைக் கொடுத்து, உலகம் அறியும்படியாக எனது ஊனத்தை நீக்கிய பெருமான். அடியேனுக்குத் தேனை ஒத்து இனியவனாக உள்ளவன். அவன் தில்லையிலே திருச்சிற்றம்பலத்தைத் தனது இடமாகக் கொண்டு இனிய திருக்கூத்தினை இயற்றுகின்றான்.  அவன், தேவர்கள் பிழைத்திருக்கக் கருணை செய்து, பாற்கடலிலே தோன்றிய கொடிய விடத்தைத் தான் உண்டு, தனது கண்டத்திலே தேக்கியவன்.  அவன் தனது திருக்கழுத்தில் அணிந்து இருக்கும் பன்றியின் கொம்பினுடைய அழகைக் கண்ட கண்களைக் கொண்டு வேறு எதைக் காண்பது.

பாடல் எண் : 7
தெரித்த கணையால் திரிபுரம்
            மூன்றும்செந் தீயின்மூழ்க
எரித்த இறைவன், இமையவர்
            கோமான் இணைஅடிகள்
தரித்த மனத்தவர் வாழ்கின்ற
            தில்லைச்சிற் றம்பலவன்
சிரித்த முகம்கண்ட கண்கொண்டு
            மற்றுஇனிக் காண்பதுஎன்னே.

            பொழிப்புரை : ஆராய்ந்து எடுத்த அம்பாலே வானத்தில் உலவிய மதில்கள் மூன்றும் வெந்துபோகுமாறு தீக்கு இரையாக்கிய தலைவன்,  தேவர்களுக்கு எல்லாம் தேவனாக விளங்குபவன். அப்படிப்பட்டவன், தனது திருவடிகளை எப்போதும் மறவாமல் நினைப்பதன் வழி தமது உள்ளத்திலே தரித்துக் கொண்டுள்ள மனத்தை உடைய அடியவர்கள் வாழுகின்ற தில்லை என்னும் திருத்தலத்திலே, திருச்சிற்றம்பலத்தைத் தனது இருப்பிடமாகக் கொண்டு திருநடனம் புரிகின்றான்.  அவனுடைய சிரித்த முகத்தைக் கண்ட கண்கள் வேறு எவற்றையும் காணமாட்டா.


பாடல் எண் : 8
சுற்றும் அமரர் சுரபதி
            நின்திருப் பாதம்அல்லால்
பற்றுஒன்று இலோம்என்று அழைப்பப்
            பரவையுள் நஞ்சைஉண்டான்,
செற்றுஅங்கு அநங்கனைத் தீவிழித்
            தான்தில்லை அம்பலவன்
நெற்றியில் கண்கண்ட கண்கொண்டு
            மற்றுஇனிக் காண்பதுஎன்னே.

            பொழிப்புரை : சூழ்ந்திருந்த தேவர்களும், அவர்கள் தலைவனாகிய இந்திரனும், ஒன்று கூடி, பெருமானே உன் திருவடிகளைத் தவிர எங்களுக்குப் பற்றுக்கோடாக ஏதும் இல்லை` என்று அவனை அழைத்து, வேண்டியபோது ஆலகால விடத்தை, அவர்களின் வேண்டுகோளுக்கு இரங்கி,  உண்டு தனது கண்டத்திலே அடக்கியவனாகிய பெருமான்.   மன்மதனைத் தனது நெற்றிக் கண்ணினால் எரித்துச் சாம்பலாக்கியவன்.  தில்லையில் திருச்சிற்றம்பலத்தின் கண்ணை ஆடல் புரிகின்ற அப் பெருமானுடைய திருநெற்றியிலே விளங்கும் கண்ணைக் கண்டு விட்டால்,  காண்பதற்கு வேறு பொருள் ஏதும் இல்லை.


பாடல் எண் : 9
சித்தத்து எழுந்த செழுங்கம
            லத்துஅன்ன சேவடிகள்
வைத்த மனத்தவர் வாழ்கின்ற
            தில்லைச்சிற் றம்பலவன்
முத்தும் வயிரமும் மாணிக்கம்
            தன்னுள் விளங்கியதூ
மத்த மலர்கண்ட கண்கொண்டு
            மற்றுஇனிக் காண்பதுஎன்னே.

            பொழிப்புரை : உள்ளத்திலே முளைத்துச் செழித்து மலர்ந்த செழுந்தாமரை மலர்களை ஒத்த திருவடிகளை நிலையாகத் தமது உள்ளத் தாமரையிலே இறுத்திய சான்றோர்கள் வாழும் தில்லையம்பதியில் உள்ள திருச்சிற்றம்பலத்தானுடைய முத்தும் வயிரமும் மாணிக்கமும் தூயமலர்களும் அணிந்த திருச்சென்னியில் விளங்குகின்ற தூய்மையான ஊமத்த மலரின் அழகினைக் கண்ட கண்களால், வேறு எந்த பொருளைக் காண்பது.


பாடல் எண் : 10
தருக்கு மிகுத்துத்தன் தோள்வலி
            உன்னி, தடவரையை
வரைக்கைக ளால்எடுத்து ஆர்ப்ப,
            மலைமகள் கோன்சிரித்து
அரக்கன் மணிமுடி பத்தும்
            அணிதில்லை அம்பலவன்
நெருக்கி மிதித்த விரல்கண்ட
            கண்கொண்டு காண்பதுஎன்னே.

            பொழிப்புரை : இராவணன் செருக்கு மிகுந்துத் தன் தோள் வலிமையை மிகுதியாகக் கருதிப் பெரிய கயிலைமலையைத் தன் மலைபோன்ற கைகளால் எடுத்து ஆரவாரம் செய்ய அதனைக் கண்டு மலைமகள் மணவாளனாகிய பெருமான், இராவணனுடைய மணிமுடிகள் பத்தும் இற்றுப் போகுமாறு தனது திருவடியின் திருவிரலால் மிதித்தான். அத் திருவடிகளைக் கொண்டு அவன் தில்லைத் திருச்சிற்றம்பலத்திலே ஆடல் புரிகின்றான். இராவணனுடைய தலைகள் பத்தினையும் நெருக்கி மிதித்த அந்தத் திருக்கால் விரலைக் கண்ட கண்களால் காண்பதற்கு வேறு ஏதும் இல்லை.

திருநாவுக்கரசர் திருப்பதிகம்


6.002     கோயில்                        திருத்தாண்டகம்
                                                திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
மங்குல் மதிதவழும் மாட வீதி
            மயிலாப்பில் உள்ளார், மருகல் உள்ளார்,
கொங்கில் கொடுமுடியார், குற்றா லத்தார்,
            குடமூக்கில் உள்ளார்,போய்க் கொள்ளம் பூதூர்த்
தங்குமிடம் அறியார், சால நாளார்,
            தருமபுரத்து உள்ளார், தக்க ளூரார்,
பொங்குவெண் ணீறுஅணிந்து பூதம் சூழப்
            புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே.

            பொழிப்புரை :பொலிவு மிக்க திருவெண்ணீற்றை அணிந்து, பூதங்கள் தம்மைச் சூழ்ந்து வர, இறைவரானவர், வானத்தில் உள்ள சந்திரன் தவழ்ந்து செல்லும் அளவு உயர்ந்த மாளிகைகளை உடைய பெரு வீதிகளை உடைய திருமயிலாப்பூர், திருமருகல், கொங்குநாட்டுத் திருப்பாண்டிக்கொடுமுடி, திருக்குற்றாலம், திருக்குடமூக்கு ஆகிய திருத்தலங்களில் கோயில் கொண்டு எழுந்தருளி உள்ளவர்.  பின்னும் தமக்குத் தங்கவதற்கு ஏற்ற இடத்தைத் தேடுவாராய், திருக்கொள்ளம்பூதூர், திருத்தருமபுரம், திருத்தக்களூர் ஆகிய திருத்தலங்களில் பல நாள் தங்கி, தாம் உறுதியாகத் தங்கும் இடமாகப் பிறவற்றை அறியாராய், தில்லைச் சிற்றம்பலத்திலே புகுந்து தங்கி விட்டார்.


பாடல் எண் : 2
நாகம் அரைக்குஅசைத்த நம்பர் இந்நாள்
            நனிபள்ளி உள்ளார்,போய் நல்லூர்த் தங்கி,
பாகப் பொழுதெுஎலாம் பாசூர்த் தங்கி,
            பரிதி நியமத்தார், பன்னி ருநாள்
வேதமும் வேள்விப் புகையும் ஓவா
            விரிநீர் மிழலை எழுநாள் தங்கி,
போகமும் பொய்யாப் பொருளும் ஆனார்
            புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே.

            பொழிப்புரை :ஐம்புல இன்பப் பொருள்களும் மெய்ப்பொருளும் ஆகியவரும், பாம்பினை இடையிலே கட்டியவரும், நம்மால் விரும்பப்படுபவரும் ஆகிய இறைவர் திருநனிபள்ளி என்னும் தலத்திலே எழுந்தருளி உள்ளார். திருநல்லூரிலே தங்கி,  ஓர் இரவுப்பொழுது முழுதும் திருப்பாசூரில் தங்கி, பன்னிருநாள் திருப்பரிதிநியமம் என்கின்ற திருத்தலதிலேயும் தங்கி, ஏழு நாள் வேதமும் வேள்விப் புகையும் நீங்காத நீர்வளம் மிக்க திருவீழிமிழலையிலும் விரும்பி இருந்து, இந்நாளில் தில்லைச் சிற்றம்பலத்திலே புகுந்து தங்கிவிட்டார்.


பாடல் எண் : 3
துறங்காட்டி எல்லாம் விரித்தார் போலும்,
            தூமதியும் பாம்பும் உடையார் போலும்,
மறம்காட்டி மும்மதிலும் எய்தார் போலும்,
            மந்திரமும் தந்திரமும் தாமே போலும்,
அறம்காட்டி அந்தணர்க்கு அன்று ஆல நீழல்
            அறம்அருளிச் செய்த அரனார், இந்நாள்
புறங்காட்டு எரிஆடி, பூதஞ் சூழப்
            புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே.

            பொழிப்புரை :ஆலமர நிழலில் இருந்து ஐம்புலனும் அழிந்த சிந்தை அந்தணாளர்களாகிய நால்வருக்கு அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நான்கு புருஷார்த்தங்களையும் அறிவுறுத்திய பெருமான்,   பொருள் அல்லாப் பொருள்களில் உயிர்களுக்கு உண்டாகும் பற்றினை அறுத்தற்கு ஏதுவாகிய ஞானத்தை அருளுகின்ற துறவு நெறியைக் காட்டினார். மெய்ந்நூல் பொருள்கள் அனைத்தையும் விரித்து அருளினார். களங்கமற்ற பிறைச்சந்திரனையும் பாம்பினையும் திருமுடியில்அணிகலனாக உடையவர். தம் வீரத்தை வெளிப்படுத்தி மூன்று மதில்களையும் வெந்து போகுமாறு அழித்தவர். மந்திரங்களும் அவற்றை முறையாகப் பயன்படுத்தும் செயல்களும் தாமேயாக உள்ளவர். ஊர்ப்புறத்திலே உள்ள சுடுகாட்டில், பூதகணங்கள் சூழ அனல் ஏந்தி ஆடுகின்ற அப்பெருமான், இந்நாள் தாமே உகந்து தில்லைச் சிற்றம்பலமே புகுந்தார்.


பாடல் எண் : 4
வார்ஏறு வனமுலையாள் பாகம் ஆக,
            மழுவாள்கை ஏந்தி மயானத்து ஆடி,
சீர்ஏறு தண்வயல்சூழ் ஓத வேலித்
            திருவாஞ்சி யத்தார், திருநள் ளாற்றார்,
கார்ஏறு கண்டத்தார், காமற் காய்ந்த
            கண்விளங்கு நெற்றியார், கடல்நஞ்சு உண்டார்,
போர்ஏறு தாம்ஏறி, பூதஞ் சூழப்
            புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே.

            பொழிப்புரை :கச்சணிந்த அழகிய திருத்தனங்களை உடைய உமையவள் தமது திருமேனியில் ஒரு பாகமாக அமையப் பெற்றவர். மழுவாயுதத்தைக் கையில் தாங்கிச் சுடுகாட்டில் கூத்து ஆடுகின்றவர்.  விடக்கறை தங்கிய கழுத்தினை உடையவர். மன்மதனை எரித்த திருக்கண் விளங்கும் நெற்றியினர்.  கடலில் தோன்றிய விடத்தைத்தாம் உண்டவர். சிறப்பு மிக்க குளிர்ந்த வயல்களால் சூழப்பட்டதும், நீர் நிலைகளை எல்லையாக உடையதுமாகிய திருவாஞ்சியம், திருநள்ளாறு என்னும் திருத்தலங்களை விரும்பி அற்கே கோயில் கொண்டு எழுந்தருளி இருக்கின்ற அப் பெருமான், பகைவரோடு போரிடுவதில் வல்ல காளையைத் தமது வாகனமாகக் கொண்டு பூதகணங்கள் தம்மைச் சூழ்ந்து வரத் தில்லைச் சிற்றம்பலத்திலே புகுந்தார்.


பாடல் எண் : 5
கார்ஆர் கமழ்கொன்றைக் கண்ணி சூடி,
            கபாலம்கை ஏந்திக் கணங்கள் பாட,
ஊரார் இடுபிச்சை கொண்டு உழல்லும்
            உத்தமராய் நின்ற ஒருவ னார்தாம்,
சீர்ஆர் கழல்வணங்கும் தேவ தேவர்,
            திருவாரூர்த் திருமூலட் டானம் மேயார்,
போர்ஆர் விடைஏறிப் பூதம் சூழப்
            புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே.

            பொழிப்புரை :தமது சிறப்புப் பொருந்திய திருவடிகளை வணங்கும் தேவர்களுக்கும் தேவனாகிய சிவபெருமான் கார்காலத்தில் மணம் வீசும் கொன்றை மலர்களால் ஆகிய கண்ணியைத் தமது திருமுடியிலே சூடி, பிரமகபாலத்தைக் கையில் ஏந்தி, பூதகணங்கள் பாட, ஊரிலுள்ளார் வழங்கும் பிச்சையை உணவாகக் கொண்டு திரிகின்ற மேம்பட்டவராய்க் காட்சி வழங்கும் ஒப்பற்றவராய், திருவாரூர்த் திருமூலத்தானத்தில் விரும்பித் தங்கியிருந்தவர், பின் போர் செய்யும் காளை மீது ஏறி, பூதங்கள் தம்மைச் சூழ்ந்து வரத் தில்லைச்சிற்றம்பலத்திலே புகுந்தார்.


பாடல் எண் : 6
காதுஆர் குழையினர், கட்டங் கத்தர்,
            கயிலாய மாமலையார், காரோ ணத்தார்,
மூதாயர், மூதாதை இல்லார் போலும்,
            முதலும் இறுதியும் தாமே போலும்,
மாதுஆய மாதர் மகிழ அன்று
            வன்மதவேள் தன்உடலம் காய்ந்தார், இந்நாள்
போதுஆர் சடைதாழ, பூதஞ் சூழப்
            புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே.

            பொழிப்புரை : ஒரு காதில் குழையை அணிந்தவர்.  கட்டங்கம் என்னும் படையை ஏந்தியவர். கயிலாய மாமலையைத் தமது இருப்பிடமாகக் கொண்டவர்.  காரோணம் என்று வழங்கப்படும் திருத்தலங்களிலே கோயில் கொண்டு எழுந்தருளி இருப்பவர். வயதில் மூத்த பாராட்டும் தாய், ஊட்டும் தாய், முலைத்தாய், கைத்தாய், செவிலித்தாய் என்று சொல்லப்படும் ஐவகைத் தாயர்களையும்,  தன்னை ஈன்றதொரு நல்லதாயும் தந்தையும் இல்லாதவர். உலகிற்கு முதலாயும் முடிவாயும் உள்ளவர். தமது தலைவனைப் பிரிந்த பெண் இனத்தார் எல்லாரும் வருந்துமாறு அவர்கள் மீது மலரம்புகளைத் தொடுத்து, அவர்களைக் காமக்கடலில் மூழ்கி வருந்துமாறு செய்வதால், மன்மதன் மீது பெண் இனம் வருத்தத்தில் இருந்தது.  அழகிய அந்தப் பெண் இனமானது மகிழுமாறு, மன்மதனுடைய உடம்பு சாம்பலாகுமாறு நெற்றிக் கண்ணை விழித்து அழித்தவர்.  அந்தப் பெருமான் இந்நாளிலே மலர்கள் நிறைந்த தமது சடைகள் தாழ்ந்து இருக்கவும், பூதகணங்கள் சூழ்ந்து வரவும், பெரும்பற்றப் புலியூரிலே திருச்சிற்றம்பலத்தில் புகுந்தார்.


பாடல் எண் : 7
இறந்தார்க்கும் என்றும் இறவா தார்க்கும்
            இமையவர்க்கும் ஏகமாய் நின்று, சென்று
பிறந்தார்க்கும் என்றும் பிறவா தார்க்கும்
            பெரியார்தம் பெருமையே பேச நின்று,
மறந்தார் மனத்துஎன்றும் மருவார் போலும்,
            மறைக்காட்டு உறையும் மழுவாட் செல்வர்,
புறம்தாழ் சடைதாழப் பூதஞ் சூழப்
            புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே.

            பொழிப்புரை :தம்மை மறந்தவர் மனத்தில் என்றும் விரும்பித் தங்காதவராய்த் திருமறைக்காடு என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி மழுவாயுதத்தை ஏந்தி உள்ள பெருமான், பின்புறத்திலே நீண்ட சடையானது தாழ்ந்திருக்க, பூதகணங்கள் சூழ்ந்து வர பெரும்பற்றப் பூலியூரிலே திருச்சிற்றம்பலத்திலே புகுந்தவர்.  உலகில் பிறப்பு எடுத்து வாழ்நாள் முடிவு வந்து இறந்தவர்கள், மரணமிலாப் பெருவாழ்வைப் பெற்றவர்கள், தேவர்கள் ஆகிய எல்லோருக்கும் தனித்துணையாக இருப்பவர்.  உலகில் பிறந்தவர்களும், பிறப்பு இறப்பினைக் கடந்தவர்களும் எல்லோரும் தமது பெருமையையே பேசுமாறு நின்றவர். தம்மை மறந்தவர்களுடைய மனத்தில் எப்போதும் விரும்பி இராதவர்.


பாடல் எண் : 8
குலாவெண் தலைமாலை என்பு பூண்டு,
            குளிர்கொன்றைத் தார்அணிந்து, கொல்ஏறு ஏறிக்
கலாவெம் களிற்றுஉரிவைப் போர்வை மூடி,
            கையோடு அனல்ஏந்திக் காடு உறைவார்,
நிலாவெண் மதியுரிஞ்ச நீண்ட மாடம்
            நிறைவயல்சூழ் நெய்த்தானம் மேய செல்வர்,
புலால்வெண் தலைஏந்திப் பூதஞ் சூழப்
            புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே.

            பொழிப்புரை :   வளைந்து எலும்புகளால் ஆன மண்டை ஓட்டை தலைமாலையாக அணிந்தவர்.  குளிர்ந்த கொன்றை மலர்களால் ஆன மாலையைத் திருமார்பில் அணிந்தவர். கொல்லும் தன்மையை உடைய காளையைத் தனது வாகனமாகக் கொண்டவர்.  கொடிய யானையின் தோலைப் போர்வாயாக அணிந்தவர்.  சுடுகாட்டைத் தமது ஆடு இடமாகக் கொண்டு அனலைத் திருக்கையிலே ஏந்தியவர்.  ஒளி விளங்கும் வெண்திங்களைத் தீண்டுமாறு உயர்ந்த மாடங்களை உடையதாய்,  நிறைந்த வயல்களால் சூழப்பட்ட திருநெய்த்தானத்தை விரும்பிக் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் பெருமான்
புலால் நாறுகின்ற வெண்மையான மண்டை ஓட்டினைக் கையில் ஏந்திப் பூதகணங்கள் சூழப் பெரும்பற்றப்புலியூரிலே உள்ள திருச்சிற்றம்பலத்திலே புகுந்தார்.


பாடல் எண் : 9
சந்தித்த கோவணத்தர், வெண்ணூல் மார்பர்,
            சங்கரரைக் கண்டீரோ, கண்டோம் இந்நாள்,
பந்தித்த வெள்விடையைப் பாய ஏறி,
            படுதலையில் என்கொலோ ஏந்திக் கொண்டு,
வந்துஇங்குஎன் வெள்வளையும் தாமும் எல்லாம்
            அணியாரூர் நின்றுஅந்தி கொள்ளக் கொள்ளப்
பொன்தீ மணிவிளக்குப் பூதம் பற்றப்
            புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே.

            பொழிப்புரை :கோவணம் அணிந்து வெண்மையா பூணூலைத் தரித்தவராய், எல்லோருக்கும் இன்பம் செய்யும் சங்கரன் என வழங்கும் பெருமானைக் கண்டீரோ? (இது, பெருமான் பால் காதல் கொண்ட தலைவியானவள் கேள்வி. அதாவது, பக்குவான்மாவின் கேள்வி.)

            கட்டியிருந்த வெண்ணிறக் காளையானது பாய்ந்து செல்லுமாறு அதன் மீது தாவி ஏறி, ஏனோ மண்டை ஏந்திக்கொண்டு, அழகிய திருவாரூரிலே அந்தி நேரத்தில் எங்கள் வெண்மையான வளையல்களை முழுமையாய்க் கைக்கொள்வதற்காக நின்றவர், இந்நாளில் அழகிய ஒளி விளக்குக்களைப் பூதகணங்கள் ஏந்தி வரத் தில்லைச் சிற்றம்பலத்தில் தாம் விரும்பியவாறு புகுந்தார். அவரைக் கண்டோம் இந்நாளில். (இது அடியார்களின் பதில். )


பாடல் எண் : 10
பாதங்கள் நல்லார் பரவி ஏத்தப்
            பத்திமையால் பணிசெய்யும் தொண்டர் தங்கள்
ஏதங்கள் தீர இருந்தார் போலும்,
            எழுபிறப்பும் ஆள்உடைய ஈசனார் தாம்,
வேதங்கள் ஓதி,ஓர் வீணை ஏந்தி,
            விடைஒன்று தாம்ஏறி, வேத கீதர்,
பூதங்கள் சூழப் புலித்தோல் வீக்கிப்
            புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே.

            பொழிப்புரை :வினையின் பயனாகத் தொடர்ந்து வருகின்ற  எழுவகைப் பிறப்புக்களிலும் நம்மை அடியவராகக் கொள்ளும் சிவபெருமான் தம் திருவடிகளை நல்லவர்கள் முன்னின்று வழிபட்டுத் துதிக்க, பக்தியால், தொண்டு செய்யும் அடியார்களுடைய துன்பங்கள் நீங்குமாறு திருத்தலங்களில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி உள்ளார். வீணையைக் கையில் ஏந்தி, வேதங்களை ஓதிக் கொண்டு, காளை மீது ஏறி, புலித்தோலை இடுப்பில் கட்டி,  அந்த வேத கீதர் பூதகணங்கள் தம்மைச் சூழ்ந்து வரப் பெரும்பற்றப் புலியூரிலே திருச்சிற்றம்பலத்தைத் தாமே விரும்பிச் சேர்ந்தார்.


பாடுல் எண் : 11
பட்டுஉடுத்து, தோல்போர்த்து, பாம்புஒன்று ஆர்த்து,
            பகவனார் பாரிடங்கள் சூழ நட்டம்
சிட்டராய்த் தீஏந்திச் செல்வார், தம்மைத்
            தில்லைச்சிற் றம்பலத்தே கண்டோம் இந்நாள்,
விட்டிலங்கு சூலமே, வெண்ணூல் உண்டே,
            ஓதுவதும் வேதமே, வீணை உண்டே,
கட்டங்கம் கையதே, சென்று காணீர்
            கறைசேர் மிடற்றுஎம் கபாலி யார்க்கே.

            பொழிப்புரை :இடையில் பட்டை உடுத்தி, அதனைப் பாம்பு ஒன்றினால் உதரபந்தனமாக இறுக்கிக் கட்டிக்கொண்டு, மேலே யானைத் தோலைப் போர்த்து, ஐசுவரியம், வீரம், புகழ், திரு, ஞானம், வைராக்கியம் என்னும் ஆறு குணங்களையுடையதால் பகவன் என்று போற்றப் பெறுகின்ற அந்தப் பெருமான், பூதகணங்கள் சூழ்ந்து வரத் தீயைக் கையில் ஏந்தி ஆடல் கலையில் வல்லவராய் உள்ளார். அவரை இந்நாள் தில்லைத் திருச்சிற்றம்பலத்திலே கண்டோம். ஒளிவீசும் சூலப்படை ஏந்தியிருப்பார். பூணூல் தரித்து இருப்பார்.  வீணையைத் திருக்கையிலே ஏந்தி இருப்பார்.   கட்டங்கம் என்கிற படையை ஒரு திருக்கையிலே தாங்கி இருப்பார்.  விடக்கறை பொருந்திய கழுத்தினராய் மண்டை ஓட்டினை ஏந்தியவராய் அவர் உள்ள திருக்காட்சியை எல்லோரும் சென்று காணுங்கள்.
திருச்சிற்றம்பலம்

திருநாவுக்கரசர்  வரலாறு

பெ. பு. பாடல் எண் : 177
கடையுகத்தில் ஆழியின்மேல் மிதந்ததிருக்
            கழுமலத்தின் இருந்த செங்கண்
விடைஉகைத்தார் திருவருளால் வெற்புஅரையன்
            பாவைதிரு முலைப்பா லோடும்
அடையநிறை சிவம்பெருக வளர்ஞானம்
            குழைத்து ஊட்ட அமுது செய்த
உடையமறைப் பிள்ளையார் திருவார்த்தை
            அடியார்கள் உரைப்பக் கேட்டார்.

            பொழிப்புரை : ஊழி முடிவில் பொங்கி எழும் கடல் வெள்ளத்தில் மிதந்த திருக்கழுமலத்தில் (சீகாழியில்) வீற்றிருக்கின்ற ஆனேற்றை ஊர்தியாய்க் கொண்ட தோணியப்பரின் திருவருளால், மலையரசனின் மகளாரான உமையம்மையார், திருமுலைப்பாலுடனே நிறைகின்ற சிவம் பெருகுமாறு வளர்கின்ற ஞானத்தையும் குழைத்து ஊட்ட, அதை உண்டருளிய ஆளுடைய பிள்ளையாரின் வரலாற்றை அடியவர் உரைப்பக் கேட்டார்.


பெ. பு. பாடல் எண் : 178
ஆழிவிடம் உண்டவரை அம்மைதிரு
            முலைஅமுதம் உண்ட போதே,
ஏழிசைவண் தமிழ்மாலை இவன்எம்மான்
            எனக்காட்டி இயம்ப வல்ல
காழிவரும் பெருந்தகைசீர் கேட்டலுமே,
            அதிசயமாம் காதல் கூர,
வாழிஅவர் மலர்க்கழல்கள் வணங்குதற்கு
            மனத்துஎழுந்த விருப்பு வாய்ப்ப.

            பொழிப்புரை : திருநிலைநாயகி அம்மையாரின் திருமுலைப் பாலமுதத்தை ஞானத்துடன் உண்ட அப்பொழுதே, ஏழிசை பொருந்தும் வளமான தமிழ் மாலையால் கடலில் தோன்றிய நஞ்சை உண்டருளிய சிவபெருமானை `எமது பெம்மான் இவன்` எனச் சுட்டிக்காட்டிப் பாடியருள வல்ல, சீகாழியில் தோன்றியருளிய பெருந்தகையாளரான ஞானசம்பந்தப் பெருமானின் சிறப்புகளைக் கேட்டவுடனே, வியத்தகு உணர்வுடன் கூடிய காதலால், வாழ்வு அளிக்கும் அவருடைய மலர் போன்ற திருவடிகளை வணங்குதற்குத் தம் உள்ளத்தில் எழுந்த விருப்பம் பொருந்த,


பெ. பு. பாடல் எண் : 179
அப்பொழுதே அம்பலத்துள் ஆடுகின்ற
            கழல்வணங்கி அருள்முன் பெற்று,
பொய்ப்பிறவிப் பிணிஓட்டுந் திருவீதி
            புரண்டு,வலம் கொண்டு போந்தே,
எப்புவனங் களும்நிறைந்த திருப்பதியின்
            எல்லையினை இறைஞ்சி ஏத்தி,
செப்பரிய பெருமையினார் திருநாரை
            யூர்பணிந்து பாடிச் செல்வார்.

            பொழிப்புரை : அதுபொழுதே பொன்னம்பலத்தில் கூத்தாடும் இறைவரின் திருவடியை வணங்கி அருளைப் பெற்றுக் கொண்டு, பொய்யான இப்பிறவி நோயைப் போக்கும் இயல்பு கொண்ட தில்லையின் வீதியை நிலம் பொருந்தப் புரண்டு வலமாக வந்து, பின் எவ்வுலகங்களிலும் நிறைவுடைய அப்பதியினது எல்லையை வணங்கிப் போற்றிச், சொல்வதற்கரிய பெருமையுடைய சிவபெருமானின் திருநாரையூரைப் போய்ப் பணிந்து பாடி மேலே செல்வராய்.

-----------------------------------------------------------------------------(தொடரும்)----------------

No comments:

Post a Comment

தொடர்ந்து வருவது அருளே - பொருள் அல்ல

தொடர்ந்து வருவது அருளே - பொருள் அல்ல. -----        உலகத்தில் வாழத் தெரியாதவர்கள் யார் ?  வாழத் தெரிந்தவர்கள் யார் ?  என்று கேட்டால் ,  பணத்த...