திருச்செந்தூர் - 0076. பஞ்சபாதகம் உறு


அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

பஞ்ச பாதகம் (திருச்செந்தூர்)

எமன் வரும்போது மயில் மீது வந்து அருள

தந்த தானன தனதன தனதன
     தந்த தானன தனதன தனதன
          தந்த தானன தனதன தனதன ...... தனதான


பஞ்ச பாதக முறுபிறை யெயிறெரி
     குஞ்சி கூர்விட மதர்விழி பிலவக
          பங்க வாண்முக முடுகிய நெடுகிய ...... திரிசூலம்

பந்த பாசமு மருவிய கரதல
     மிஞ்சி நீடிய கருமுகி லுருவொடு
          பண்பி லாதொரு பகடது முதுகினில் ...... யமராஜன்

அஞ்ச வேவரு மவதர மதிலொரு
     தஞ்ச மாகிய வழிவழி யருள்பெறும்
          அன்பி னாலுன தடிபுக ழடிமையெ ...... னெதிரேநீ

அண்ட கோளகை வெடிபட இடிபட
     எண்டி சாமுக மடமட நடமிடும்
          அந்த மோகர மயிலினி லியலுடன் ...... வரவேணும்

மஞ்சு போல்வள ரளகமு மிளகிய
     ரஞ்சி தாம்ருத வசனமு நிலவென
          வந்த தூயவெண் முறுவலு மிருகுழை .....யளவோடும்

மன்றல் வாரிச நயனமு மழகிய
     குன்ற வாணர்த மடமகள் தடமுலை
          மந்த ராசல மிசைதுயி லழகிய ...... மணவாளா

செஞ்சொல் மாதிசை வடதிசை குடதிசை
     விஞ்சு கீழ்திசை சகலமு மிகல்செய்து
          திங்கள் வேணியர் பலதளி தொழுதுயர் ...... மகமேரு

செண்டு மோதின ரரசரு ளதிபதி
     தொண்ட ராதியும் வழிவழி நெறிபெறு
          செந்தில் மாநக ரினிதுறை யமரர்கள் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


பஞ்ச பாதகம் உறு பிறை எயிறு, எரி
     குஞ்சி, கூர்விட மதர்விழி, பிலவக
          பங்க வாள்முகம் முடுகிய நெடுகிய ...... திரிசூலம்

பந்த பாசமும் மருவிய கரதல,
     மிஞ்சி நீடிய கருமுகில் உருவொடு
          பண்பு இலாத ஒரு பகடு, அது முதுகினில் ...... யமராஜன்

அஞ்சவே வரும் அவதரம் அதில், ஒரு
     தஞ்சம் ஆகிய வழிவழி அருள்பெறும்
          அன்பினால் உனது அடிபுகழ் அடிமைஎன் ...... எதிரே நீ

அண்ட கோளகை வெடிபட, இடிபட,
     எண்  திசாமுகம் மடமட நடமிடும்
          அந்த மோகர மயிலினில் இயலுடன் ...... வரவேணும்.

மஞ்சு போல்வளர் அளகமும், இளகிய
     ரஞ்சித அம்ருத வசனமும், நிலவுஎன
          வந்த தூயவெண் முறுவலும், இருகுழை.....அளவுஓடும்

மன்றல் வாரிச நயனமும், அழகிய
     குன்ற வாணர் தம் மடமகள் தடமுலை
          மந்தர அசல மிசை துயில் அழகிய ...... மணவாளா!

செஞ்சொல் மாதிசை வடதிசை குடதிசை
     விஞ்சு கீழ்திசை சகலமும் இகல்செய்து
          திங்கள் வேணியர் பலதளி தொழுது,உயர் ...... மகமேரு

செண்டு மோதினர், அரசருள் அதிபதி
     தொண்டர் ஆதியும் வழிவழி நெறிபெறு
          செந்தில் மாநகர் இனிதுஉறை அமரர்கள்... பெருமாளே.

பதவுரை

         மஞ்சு போல் வளர் அளகமும் --- மேகத்தைப்போல் கரிய நிறத்துடன் வளர்ந்துள்ள கூந்தலும்,

     இளகிய --- மனதை இளகச் செய்யும் மேன்மையானதும்,

     ரஞ்சித --- இனிமையுடையதும்,

     அம்ருத  வசனமும் --- (கேட்டவுடனே) அமிர்தத்தை ஒத்ததுமாகிய இன்மொழியும்,

     நிலவு என வந்த --- சந்திரனது ஒளியைப்போல் விளங்கியதும்,

     தூய வெண் முறுவலும் --- பரிசுத்தம் பொருந்தியதும் வெண்ணிறத்தோடு அழகு செய்வதுமாகிய இளநகையும்,

     இருகுழை அளவு ஓடும் --- (காதுகளில் அணிந்துள்ள) இரண்டு தோடுகள் வரை நீண்டுள்ளதும்,

     மன்றல் வாரிச நயனமும் --- வாசனைத் தங்கிய தாமரை மலரை ஒத்ததுமாகிய கண்களும்,

     அழகிய --- (மேற்கூறிய அவயவங்கள் முழுவதும்) அழகுடைய,

     குன்றவாணர் தம் --- குன்றுகளில் வாழும் வேடர்களது,

     மடமகள் --- மடமைத்தன்மை பொருந்திய குமாரியாகிய வள்ளிநாயகியாரது,

     தடமுலை மந்தர அசல மிசை துயில் ---
பெருத்த தனங்களாகிய, மந்தர கிரிகளின் மீது நித்திரை செய்கின்ற

     அழகிய மணவாளா  --- கட்டழகில் சிறந்த நாயகரே!

         செஞ்சொல் மாதிசை, வடதிசை, குடதிசை, விஞ்சு கீழ்திசை --- செம்மையுடையத் தமிழ் மொழியால் சிறந்து விளங்கும் தென்திசை, வடதிசை, மேல்திசை, பெருமை மிகுந்த கீழ்திசை,

     சகலமும் இகல் செய்து --- (அக்கினி, நிருதி, வாயு, ஈசானன், மேல், கீழ் என்னும்) ஏனைய திசைகளிலும் போர் புரிந்து (வெற்றி புனைந்து),

     திங்கள் வேணியர் --- சந்திரனைச் சூடிய சடைமுடியராகிய சிவபெருமானது,

     பல தளி தொழுது --- ஆலயம் பலவுஞ்சென்று வழிபாடு செய்து,

     உயர் மகமேரு --- உயர்ந்துள்ள மகா மேருகிரியை,

     செண்டு மோதின --- செண்டால் எறிந்த,

     அரசருள் அதிபதி --- அரசர்களுக்கெல்லாம் தலைவரே!

         தொண்டர் ஆதியும் --- அடியார் முதலானவர்களும்,

     வழிவழி நெறிபெறு --- வழி வழியாக என்றும் அழியா இன்ப நெறியைப் பெறும்படியான,

     செந்தில் மாநகர் --- பெருமை பொருந்திய செந்திலம்பதியில்,

     இனிது உறை --- இனிமையாக வாழுகின்ற,

     அமரர்கள் பெருமாளே --- தேவர்களுக்குத் தலைவராக விளங்கும் பெருமையுடையவரே!

         பஞ்ச பாதகம் உறு --- கொலை களவு கள் காமம் சூது என்னும் ஐந்து பாதகங்களையும் தாக்கும், (இயமன்)

     பிறை எயிறு --- பிறைத் திங்களையொத்த பற்களும்,

     எரி குஞ்சி --- கொழுந்துவிட்டெரியும் அக்கினிபோன்ற சிவந்த மயிரும்,

     கூர் விட மதர் விழி --- கூர்மையாலும் விடத்தைப்போல் வெப்பத்தைச் செய்ததும் செருக்குள்ளதுமான கண்களும்,

     பிலவக --- குரங்கு போன்ற,

     பங்கவாள் முக --- பங்கமுடைய ஒளிவீசும் முகமும்,

     முடுகிய நெடுகிய திரிசூலம் --- வல்லபத்துடன் நீண்டுள்ள திரிசூலமும்,

     பந்த பாசமும் --- கட்டும்படியான பாசக்கயிறும்,

     மருவிய கரதல --- பொருந்தியுள்ள கைகளும்,

     மிஞ்சி நீடிய --- வலிமிகுந்து நீண்டுள்ளதும்,

     கருமுகில் உருவொடு --- கரியமேகத்தை ஒத்ததுமாகிய பெரிய ரூபத்துடன்,

     பண்பு இலாது ஒரு பகடு, அது முதுகினில் --- குணமில்லாத ஓர் எருமைக்கிடா வாகனத்தின் பிடரிமேல்,

     யமராஜன் - இயமன்,

     அஞ்சவே வரும் அவதரமதில் --- அடியேன் பயப்படுமாறு கோர ரூபத்துடன் வருகிற சமயத்தில்,

     ஒரு தஞ்சம் ஆகியெ --- ஒப்பற்ற துணையாகி,

     வழிவழி அருள்பெறும் --- வழிவழியாக அருள்பெறுகின்ற,

     அன்பினால் உனது அடிபுகழ் --- பக்தியினால் தேவரீரது திருவடிகளைப் புகழ்ந்து துதிக்கும்,

     அடிமை என் எதிரே --- அடிமையாகிய நாயேனது எதிராக,

     அண்ட கோளகை --- வட்ட வடிவான அண்டகடாகங்கள் எல்லாம்,

     வெடிபட --- அதிர்ச்சியால் பிளந்து போகவும்,

     எண் திசாமுகம் இடிபட --- எட்டுத் திக்குகளும் இடிந்து தூள்படவும், 

     மட மட நடமிடும் --- மடமட என்னும் ஒலியுண்டாகுமாறு நடனம் புரியும்,

     அந்த மோகர மயிலினில் --- அந்த உக்கிரமான மயில் வாகனத்தின் மீது ஊர்ந்து,

     இயலுடன் நீ வரவேணும் --- அருட்குணத்துடன் தேவரீர் வந்து அருள்புரிய வேண்டும்.

பொழிப்புரை


         காருண்ட மேகம்போல் கரியநிறத்துடன் வளர்ந்த கூந்தலும், மெல்லிய தன்மையும் இனிமையும் உடையதும் அமிர்தத்தை யொத்துமாகிய இனிய மொழியும், சந்திர ஒளிபோல் குளிர்ச்சியும் பரிசுத்தமும் பொருந்தியதும் வெண்ணிறம் உடையதுமாகிய இள நகையும், இரு காதுகளிலும் அணிந்துள்ள தோடுகள் வரை நீண்டு உள்ளதும் வாசனை பொருந்திய தாமரை மலரை நிகர்த்ததும் ஆகிய விழிகளும், அழகில் சிறந்து விளங்கும் வேடர் மகளாகிய வள்ளிநாயகியாரது மந்தர மலைபோல் பருத்துள்ள தனங்களின்மேல் துயில் புரியும் அழகிய மணவாளரே!

         கனத்த செந்தமிழ் மொழியால் சிறப்புறும் தென்திசை வடதிசை மேல்திசை பெருமைமிகுந்த கீழ்த்திசை முதலிய எல்லாத் திசைகளிலும் போர் செய்து வெற்றி அடைந்து, சந்திரசேகரராகிய சிவபெருமானது திருவாலயங்கள் தோறும் வழிபாடு செய்து, உயர்ந்த மகா மேருகிரியைச் செண்டாலெறிந்த அரசர்க்கு அரசரே!

         தொண்டர் முதலியோர்களும் வழிவழியாக இன்பநெறியைப் பெறும் புனித க்ஷேத்திரமாக விளங்கும் திருச்செந்தூரில் இனிமையாக வாழும் அமரர் போற்றும் பெருமை உடையவரே!

         பஞ்ச பாதகங்களைத் தாக்கி அழிக்கும் கூற்றுவன் பிறைச் சந்திரனை ஒத்த வக்கிர தந்தங்களுடனும், அக்கினிபோல் சிவந்து விரித்த தலைமயிருடனும், கூர்மையான விடங்களைப் பொழியும் செருக்குடைய கண்களுடனும், குரங்கு போன்ற பங்கமுடைய ஒளிவீசும் முகமுடனும், வலி மிகுந்த நீண்ட திரிசூலத்தையும், கட்டுகின்ற பாசக் கயிற்றையும் தாங்கிய கரதலங்களுடனும், மிக உயர்ந்து கருமேகம் போல் பயங்கரத்தைத் தருவதாகிய சரீரத்துடனும் (இத்தகைய கோர வடிவத்துடன்) குணமில்லாத எருமை வாகனத்தில் மேல் அடியேன் அஞ்சுமாறு வருகின்ற சமயத்தில், வழிவழியாக அருள்பெறும் அன்பினால் தேவரீரது திருவடிகளைப் புகழும் அடிமையாகிய நாயேனது எதிராக, அண்ட கடாகங்கள் அதிர்ச்சியால் பிளந்து போகவும், எட்டுத் திசைகளும் இடிபடவும், மடமட என்ற ஒலியுடன் நடனம் புரியும் உக்கிரம் பொருந்திய அந்த மயில் வாகனத்தின் மீது தேவரீர் எழுந்தருளி வரவேண்டும்.


விரிவுரை

பஞ்ச பாதக ---

கொலை, சூது, கள்ளுண்ணல், களவு, குருநிந்தை என்பாரும் உண்டு, இம் மகா பாதகங்களை அறவே ஒழிக்க வேண்டும். பஞ்ச பாதகரை எமன் மிகக் கோபத்துடன் வருத்துவன்.

பிலவக ---

பிலம்-குகை, அகம்-உட்புறம், குகையின் உட்புறம் போன்ற முகம் எனினும் பொருந்தும்.


கருமுகில் உரு ---

பாவஞ் செய்தார் முன் கூற்றுவன் பெரிய கருமேகம் போல் பயங்கரமான கோர ரூபத்துடன் எதிர்ப்படுவன். புண்ணியஞ் செய்தார் முன் சுந்தர வடிவுடன் தோன்றுவன்.

தஞ்சமாகி ---

கூற்றுவன் சூலத்தையும், பாசத்தையும் ஏந்தி உயிரைப் பற்றுவதற்கு வரும் அந்த பயங்கரமான சமயத்தில், முருகப் பெருமான் திருவடிதான் நற்றுணையாயிருந்து நல்லருள் புரியும்.

படிக்கும் திருப்புகழ் போற்றுவன், கூற்றுவன் பாசத்தினால்
 பிடிக்கும் பொழுதுவந்து அஞ்சலென்பாய்”   --- கந்தர்அலங்காரம்

அண்ட கோளகை ...............நடமிடும் ---

மயிலின் நடனச் சிறப்பை விளக்குகிறார். மயில் நடனம் புரியுங்கால் அண்ட கோளங்கள் பிளந்து உதிரவும், எண்டிசைகள் வெடிபடவும் உலகங்கள் நடுங்கும். அத்தகைய உக்ரமான மயில். மயில் வாகனத்தின் நடனப் பெருமையை மயில் விருத்தத்திலும் காண்க.

சக்ரப்ர சண்டகிரி முட்டக் கிழிந்துவெளி
    பட்டு க்ரவுஞ்ச சயிலம்
 தகரப் பெருங்கனக சிகரச் சிலம்பும்எழு
    தனிவெற்பும் அம்புவியும் எண்
 திக்குத் தடங்குவடும் ஒக்கக் குலுங்கவரு
    சித்ரப் பதம் பெயரவே
 சேடன்முடி திண்டாட ஆடல்புரி வெஞ்சூரர்
    திடுக்கிட நடிக்கு மயிலாம்”           --- மயில் விருத்தம்.

மயிலினது சிரத்திலுள்ள பீலி சிறிது அசைந்தது. அந்த அசைவினால் ஏற்பட்ட காற்றினால் மேருகிரி இடம் விட்டசைந்தது. மயில் சிறிது அடியெடுத்து வைத்த உடனே எட்டுக் குலகிரிகளும் தூள் பட்டன. அத்தூளால் சமுத்திரம் மேடு்பட்டது.

குசைநெகிழா வெற்றிவேலோன் அவுணர் குடர்குழம்பக்
கசையிடு வாசி விசைகொண்ட வாகனப் பீலியின்கொத்து
அசைபடு கால்பட்டு அசைந்தது மேரு, அடியிடஎண்
திசைவரை தூள்பட்ட, அத்தூளின் வாரி திடர் பட்டதே.  --- கந்தரலங்காரம்.

இயலுடன் வரவேணும் ---

இறைவனுக்கே இயல்பான கருணையுடன் வரவேணும்.

மறைகள் முழங்க, தேவதுந்துபிகள் முழங்க, அடியார் குழாங்கள் சூழ, பலகோடி வெண்மதிபோல் ஆறுமுகப் பரஞ்சுடர் தோன்றியவுடனே, மறலிபடை பயந்து பிறகிட்டு ஓடுமாதலால், கூற்றுவன் வரும்போது எமபயம் நீங்க இளம்பூரணனாம் எம்பெருமானை வரவேண்டுமெனத் துதிக்கின்றனர்.

ஆவி துறக்குங்கால் ஆறுமுக வள்ளலின் அடிமலரே சிறந்த துணையாகும். அவன் இருதாளன்றி வேறு துணை இல்லை.

தோலால் சுவர்வைத்து, நால் ஆறுகாலில் சுமத்தி, ரு
காலால் எழுப்பி, வளை முதுகு ஓட்டி, கைந் நாற்றி,நரம்
பால் ஆர்க்கை இட்டுத் தசைகொண்டு வேய்ந்த அகம்பிரிந்தால்
வேலால் கிரி தொளைத்தோன் இருதாள் அன்றி வேறில்லையே. ---  கந்தரலங்காரம்.

இளகிய ரஞ்சிதாம்ருத வசனமும் ---

வள்ளிநாயகியாரது இனிய குரல் அமிர்தத்தினும் மதுர முடையது என்பது இதனால் விளங்குகிறது. “தேமொழிபாளித கோமள இன்பக் கிரி” என்றார் பிறிதோரிடத்திலும் செம்மான் மகளது குரலுக்கு உவமையாக தேனையும் பாகையும் கூறவொண்ணாது என்றார்.

தேன்என்று பாகுஎன்று உவமிக்க ஒணாமொழித்
 தெய்வ வள்ளிக் கோன்”              --- கந்தர்அலங்காரம்.

மடமகள் தடமுலை ..........துயில் ---

குறமகளாகிய வள்ளிப்பிராட்டியாரது இரு தனங்களின் மிசை முருகன் துயில்புரிகிறார் என்பதன் தத்துவம், வள்ளிப்பிராட்டியார் ஞானாம்பிகை, ஞான சொரூபி, அந்த அம்மையின் ஆதனமும் ஞானமே.

ஞான குற மாதைதினை காவில்மண மேவு புகழ் மயில் வீரா”
                                                                     --- (வாலவய) திருப்புகழ்.

சுந்தர ஞான மென்குற மாது தன்திருமார்பில் அணைவோனே”
                                                                      --- (விந்ததி) திருப்புகழ்.

திருமால் அளித்தருளும் ஒருஞான பத்தினி”     --- (இருநோய்)-திருப்புகழ்.

எனல் மங்கை சுசிஞான ரம்பை”     --- (தேனிருந்த) திருப்புகழ்.

மூலஞான மங்கை அமுதஞ் சொரூபி”  --- (மார்புரம்) திருப்புகழ்.

எனவே, ஞானமங்கையாகிய வள்ளியம்மையாரது இரு தனங்களும் பரஞானம் அபரஞானம் என்பவைகளாம். அந்த இரு ஞானங்களின் மேல் முருகர் ஆனந்த நித்திரை புரிகிறார் என்பது கருத்து.

கொத்து அலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா...           ---  திருப்பாவை.

தென்நாவ லூர்மன்னன் தேவர்பிரான் திருவருளால்
மின்ஆருங் கொடிமருங்குல் பரவைஎனும் மெல்லியல்தன்
பொன்ஆரும் முலைஓங்கல் புணர்குவடே சார்வுஆகப்
பல்நாளும் பயில்யோக பரம்பரையின் விரும்பினார்.     --- பெரியபுராணம்.

யோகம் - கூடுவது. மனத்தை இறைவன்பால் கூட்டவும் பின் அதனை விட்டு நீங்காது காக்கவும் கொள்ளும் பயிற்சியே யோகமாகும். இதனைச் செய்தற்கு உலகியல் சூழலினின்றும் நீங்கி மலைச் சிகரங்களைச் சார்ந்து பயில்வர். அப்பொழுது தான் அது விரைவாகவும் நிறைவாகவும் கைகூடும். இவ்வாறே நம் ஆரூரரும் பரவையாரை மணந்திருந்தும், உலகியலில் காணும் இன்பவழியன்றி, அருளியல்வழிக் காணும் இன்பமாம் இவ் யோகப் பயிற்சியைச் செய்தார் என்பார்.

அழகிய மணவாளா ---

முருகு என்றால் அழகு என்பது ஒரு பொருள். அழகே வடிவாகக் கொண்டது நமது குமாரதெய்வமாதலால் அவரை அழகிய மணவாளன் என்றனர். அவருடைய அழகிலிருந்து சிறிது பாகந்தான் மன்மதன் அடைந்தனன். உலகிலுள்ள அழகிய பொருளெல்லாம் முருகவேளது சொரூபமே. அப் பெருமானது முழுவடிவத்தையும் ஞானவிழியால் தெரிசித்த சூரபன்மன், “ஆயிரங்கோடி மன்மதர்கள் ஒருங்குகூடினும் குமாரக் கடவுளது திருவடி அழகுக்கு இணையாகாது என்றால், அவரது வடிவிற்கெல்லாம் யாரே உவமை கூறவல்லார்” என்று வியந்துரைக்குமாறு காண்க.

ஆயிர கோடிகாமர் அழகுஎலாம் திரண்டுஒன் றாகி
மேயின எனினும், செவ்வேள் விமலமாம் சரணந் தன்னில்      
தூயநல் எழிலுக்கு ஆற்றாது என்றிடில், னைய தொல்லோன்
மாஇரு வடிவிற்கு எல்லாம் உவமை,யார் வகுக்க வல்லார்.    --- கந்தபுராணம்.

செஞ்சொல் மாதிசை ---

தீந்தமிழ் மொழியின் தெய்வ மணம் வீசும் சிறப்பு தென்திசைக்கே உரியதாதலின் செஞ்சொல் மாதிசை என்று வாயார வாழ்த்தினர்.

செம்மையான சொற்கள் தமிழிலேயே நிறைந்திருப்பதால் தமிழ் என்று கூறாமல் செஞ்சொல் என்றனர். இந்திரன் முதலிய இமயவரும் தமக்கு இடையூறு நேர்ந்தபோது இத்தமிழ் நாட்டில் வந்தன்றோ இடர்த்தீரப் பெற்றனர்.

வில்லிப் புத்தூராரும் அருச்சுனன் தீ்ாத்தயாத்திரை புரிந்துகொண்டு தென்னாட்டினை யணுகுங்கால்,

சித்திக்கொரு விதையாகிய தென்னாட்டினை அணுகி”

என்று விதந்தோதினர்.

சிவபெருமான் அறுபத்து நான்கு திருவிளையாடல்களை அயர்ந்ததும், சமயாசாரியார் நால்வரும், அறுபான்மும்மை நாயன்மார்களும் அவதரித்ததும், உமாதேவியார் இடப்பாகம் பெற்றதும், இத்தமிழ் நாட்டிலன்றோ? என்னே தமிழ்நாட்டின் பெருமை? முழுமுதற் கடவுளாம் முக்கட்பெருமான் எந்நாட்டிற்கும் பொதுவாக இறைவனாக இருப்பினும், சிறப்பாகத் தென்னாட்டிற்கே உடையவனாக விளங்குகின்றனன்.

தென்னாடுடைய சிவனே போற்றி
 எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி”       --- மணிவாசகர்.

காணுமிடந்தோறும் சிவாலயமும், பேசுமிடந்தோறும் தமிழ் வேதமும் விளங்குவது நந்தமிழ் நாட்டிலன்றோ? இத்தமிழ் நாட்டிற் பிறத்தற்கு என்ன மாதவஞ் செய்தோமோ? தமிழன்பர்களே? சிந்தித்துப் பாருங்கள்.

தமிழ் நாட்டின் பெருமையை விளக்கும் மற்றொரு செய்தியையும் உற்று நோக்குங்கள்:

சுக்ரீவன் கிட்கிந்தையில் இருந்து அனுமாரை இலங்கைக்குச் சீதாபிராட்டியாரைத் தேடுமாறு அனுப்புகிறான். அக்கால் அனுமாரை நோக்கி, “மாருதி! நீ சீதையைத் தேடிச் செல்லுங்கால் பொதியமலைக்கு அருகில் செல்லவேண்டாம். அங்ஙனம் சென்றால் அங்கு தமிழ்ச் சங்கம் பேசும், பாடும், படிக்கும், பயிலுந் தீந் தமிழ்ச்சுவை உன் செவி வழியே சென்று, நீ அத் தமிழின் சுவையில் இலயமாகி, அவ்விடத்தை விட்டு நீங்க மனமின்றி அவ்விடத்திலேயே தங்குமாறு நேரும்; சீதையைத் தேடும் வேலையை மறந்து விடுவாய். ஆதலால் அத் தமிழோசை நின் செவியிற் படாத தொலைவிற் செல்லுதி" என்று தமிழின் இனிமையையும், அவ்வினியத் தமிழைக் கேட்டவுடனே அதன் மயமாக ஆவார் என்பதையும், அத்தமிழ் மொழியைப் பயிலும் பெரும் புண்ணியம் படைத்த தமிழ் நாட்டின் சிறப்பையும் நன்கு எடுத்துக் கூறினர்.

தென்றமிழ்நாட்டு அகன்பொதியில் திருமுனிவன்
 தமிழ்சங்கஞ் சேர்கிற்றீரேல்
 என்றும்அவண் உறைவிடமாம் ஆதலான்
 அம்மலையை இடத்திட்டேகி”       --- கம்பராமாயணம்.

செண்டு மோதினர் ---

மேருவை உக்கிர குமாரர் செண்டாலெறிந்த வரலாறு.

மேருவைச் செண்டாலெறிந்த வரலாறு

         அறுபத்து நான்கு சக்திபீடங்களிற் சிறந்ததும் துவாத சாந்த க்ஷேத்திரமுமாகிய மதுரையம்பதியில் சோமசுந்தரக்கடவுள் திருவருளால் தடாதகைப் பிராட்டியாரது திருவுதரத்தின் கலவுறாது அயோநிஜராக முருகவேளது திருவருட்சத்தியுடன் சேர்ந்து முருக சாரூபம் பெற்ற அபர சுப்ரமண்ய மூர்த்திகளில் ஒருவர் உக்கிரகுமார பாண்டியராகத் தோன்றி, அறனெறி பரப்பி அரசாண்டு கொண்டிருந்த ஞான்று, கோள்கள் திரிந்ததால் மழை பொழியாதாயிற்று. அதனால் நதிகள், குளங்கள், கிணறுகள், முதலிய நீர் நிலகள் வற்றி, விளைபொருள் குன்றி, கொடிய பஞ்சம் ஏற்பட்டது. மாந்தர்கள் பசியால் வாடி வருந்தினார்கள். உக்கிர குமார பாண்டியர் “மழை வளம் வறந்தது யாது காரணம்” என்று வினவ, கால அளவுகளை நன்குணர்ந்த புலவர்கள் சோதிட நூலை யாராய்ந்து “மன்னரேறே! அழியாத பிரமகற்ப மட்டும் ஏனைய கிரகங்கள் கதிரவனை யடைந்து பார்த்து நிற்றலால் ஓராண்டு வரை வானத்தினின்றும் மழை பொழியாது” என்றனர்கள்.

         அதுகேட்ட உக்கிரகுமாரர் குழந்தையின் நோயைக் கண்டு வருந்தும் நற்றாய்போல் குடிகளிடத்து மனமிரங்கி அத்துன்பத்தை நீக்கும் உபாயத்தை உன்னி, ஆலயஞ் சென்று மதிநதி யணிந்த சோமசுந்தரக் கடவுளைக் கண்டு பணிந்து, “தேவதேவ மகாதேவ! தென்னாடுடைய சிவபரஞ்சுடரே! எந்நாட்டவர்க்கும் இறைவ! மழையின்றி மாந்தர்கள் பசியால் வாடி மெலிகின்றனர். தேவரீர் திருவருள் புரியவேண்டும்” என்று குறையிரந்தனர். முறையே மும்முறை வலம் வந்து வணங்கி தம் இருக்கை புக்கு கங்குல் வந்ததும் துயில் புரிவாராயினர். வெள்ளியம்பலத்தில் மறியாடிய வித்தகர் உக்கிரப்பெருவழுதியார் கனவில் வந்து தோன்றி, “சீருடைச் செல்வ! இக்காலத்து மழை பெய்தல் அரிது. அதனைக் குறித்து வருந்தாதே. மலைகட்கரசாயிருக்கிற மேருமலையின் கண் ஒருகுகையில் அளவுகடந்த ஒரு வைப்புநிதி சேமஞ் செய்துள்ளது; ஆங்கு நீ சென்று அம்மலையின் செருக்கழிய செண்டாலெறிந்து நின் ஆணைவழிப்படுத்தி சேமநிதியில் வேண்டியவற்றை எடுத்து அந்த அறையை மூடி நின் அடையளமிட்டு மீளுதி” என்று அருளிச் செய்தனர்.

         உக்கிரகுமாரர் கண்விழித்தெழுந்து மகிழ்ந்து காலைக் கடனாற்றி அங்கையற் கண்ணம்மையுடன் எழுந்தருளியுள்ள ஆலவாயானை வழிபட்டு விடைபெற்று நால்வகைப் படைகள் சூழ சங்குகள் முழங்கவும், ஆலவட்டங்கள் வீசவும் வந்தியர்கள் பாடவும் இரதத்தின் மீதூர்ந்து வடதிசையை நோக்கிச் செல்வாராயினர். தென் கடலானது வடதிசையை நோக்கி செல்வது போலிருந்தது அக்காட்சி. எதிர்ப்பட்ட மன்னர்களால் வணங்கப்பெற்று இமவரையைக் கடந்து பொன்மயமாய்த் திகழும் மகாமேருகிரியின் பாங்கர் அடைந்து அம்மேருமலையை நோக்கி “எந்தையாகிய சிவபெருமானது அரிய சிலையே! உலகிற்கோர் பற்றுக்கோடே! கதிரும் மதியும் உடுக்களும் சூழ்ந்து வலம்வரும் தெய்வத வரையே! தேவராலயமே!’ என்று அழைத்தனர். வழுதியர்கோன் அழைத்தபோது மேருமலையரசன் வெளிப்பட்டுவரத் தாமதித்ததால், இந்திரனை வென்ற இளங்காவலன் சினந்து மேருமலையின் தருக்ககலுமாறு வானளாவிய அம்மகா மேருவின் சிகரத்தை செண்டாயுதத்தால் ஓங்கி அடித்தனர். மேருமலை அவ்வடி பட்டவுடனே பொன்னாற் செய்த பந்துபோல் துடித்தது. எக்காலத்தும் அசையாத அம்மலை அசைந்து நடுங்கியது. சிகரங்கள் சிதறின; இரத்தினங்களைச் சொரிந்தது.

அடித்தலும் அசையா மேரு அசைந்துபொன் பந்துபோலத்
துடித்தது, சிகரப்பந்தி சுரர்பயில் மாடப்பந்தி
வெடித்தன, தருணபானு மண்டலம் விண்டு தூளாய்ப்
படித்தலை தெறித்தால், ன்னப் பன்மணி உதிர்ந்த அன்றே.

மேருமலையின் அதிதேவதை உடனே அட்டகுல பருவதங்கள் போன்ற எட்டுப் புயங்களையும் நான்கு சிகரங்களையும் கொண்டு நாணத்துடன் வெளிப்பட்டு உக்கிர குமார பாண்டியரை வணங்கியது. பாண்டிய நாட்டிறைவன் சினந்தணிந்து “இதுகாறும் நின் வரவு தாமதித்த காரணம் யாது?” என்று வினவ, மேருமலையின் அதிதேவதை “ஐயனே! அங்கயற் கண்ணம்மையுடன் எழுந்தருளியுள்ள சோமசுந்தரேசுவரரை இவ்வடிவத்துடன் ஒவ்வொருநாளும் சென்று வழிபடும் நியமம் பூண்டிருந்தேன். இன்று அறிவிலியாகிய அடியேன் ஒரு மடவரலைக் கண்டு மனமருண்டு வெங்காம சமுத்திரத்தில் மூழ்கி ஆலவாய்க் கடவுளை வழிபடும் நியமத்தை மறந்து வாளாயிருந்தேன். எம்பெருமானது திருவடிக்குப் பிழைசெய்த இத்தீங்கின் காரணத்தால் தேவரீரது செண்டாயுதத்தால் அடியும் பட்டேன். புனிதனாயினேன். சிவ வழிபாட்டினின்றுந் தவறிய எனது அஞ்ஞானத்தை நீக்கி யுதவி செய்தனை. அண்ணலே! இதைக் காட்டிலுஞ் சிறந்த உதவி யாது உளது? இதற்குக் கைம்மாறு அடியேன் யாது செய்ய வல்லேன். பற்றலர் பணியுங் கொற்றவ? இங்கு வந்த காரணம் என்கொல்? திருவாய் மலர்ந்தருளவேண்டும்” என்று வினவ, உக்கிர குமாரர் “வரையரசே! பொன்னை விரும்பி நின்பால் வந்தனன்” என்றனர். மலையரசன் “ஐயனே! பொன் போன்ற தளிரையுடைய மாமர நிழலில் ஓரறையில் ஒரு பாறையில் மூடப்பட்டுக் கிடக்கிறது. அச்சேம நிதியில் நினக்கு வேண்டியவற்றைக் கொண்டு நின் குடிமக்களுக்கீந்து வறுமைப் பிணியை மாற்றுதி” என்று கூற, வருணனை வென்ற மாபெருந் தலைவராகிய உக்கிரப் பெருவழுதி அவ்வறைக்குட் சென்று பாறையை எடுத்து அளவற்ற பொன்களை எடுத்துக் கொண்டு மீண்டும் அப்பாறையை மூடி மிகுந்த பொருளையுந் தம்முடையதாகத் தமது கயல் முத்திரையை அப்பாறை மேல் எழுதி, ஆங்கிருந்து புறப்பட்டு, மதுரையம்பதியை யணுகி, தேரை விட்டிழிந்து முக்கட் பரமனுடைய திருவாலயம் புகுந்து மூவர் முதல்வனை மும்முறை வணங்கி அந்நிதிகளை யெல்லாம் மாந்தர்களுக்கீந்து பசி நோயை நீக்கி இன்பந் தந்து இனிது அரசாண்டனர்.

செந்தில் மாநகர் ---

இத்திருத்தலம் இரண்டாவது படை வீடாகும். சுவாதிஷ்டான க்ஷேத்திரம், திருச்சீரலைவாய், ஜயந்திபுரம், திருச்செந்தூர், செந்தில் எனப் பல பெயர்களுள்ளன. திருநெல்வேலியிருந்து கிழக்கே 35 மைல் தூரம். கடற்கரையில் உள்ள கண்ணுங்கருத்துங் கவரும் கட்டழகுடைய திருத்தலம். முருகப் பெருமானது தலங்களுக்கெல்லாம் தலையாயது.

அலைகள் சுவாமி கோயிலின் திருமதிலில் மோதும்படி விளங்குகிறது. இத்திருத்தலஞ்சென்றோர் திரும்ப மனமெழாது பலநாள் தங்குமாறு செய்யும்; அத்துணை மகிமையுடையது. அதனாலன்றோ நம் அருணகிரியார் இச்செந்திலம்பதியை,

பரமபதமாய செந்தில் முருகன் எனவே உகந்து”    --- (அவனிதனி) திருப்புகழ்.

கயிலைமலை அனைய செந்திற் பதிவாழ்வே”      --- (இயலிசை) திருப்புகழ்

ஒருகோடி முத்தந் தெள்ளிக் கொழிக்குங்கடற்
செந்தில் மேவி சேவகனே”                   --- கந்தர்அலங்காரம்.

என்று துதித்தனர். மகா புனிதந் தங்கும் செந்திலம்பதியின் பெருமையைச் சங்கரர் திருவாக்காலுமுணர்க.

யதா ஸந்நிதானம் கதாமானவாமே
பவாம் போதிபாரம் கதாஸ்தே ததைவ
இதிவ்யஞ்ஜயன் ஸிந்துதீரே ஆஸ்தே
தமீடே பவித்ரம் பராசக்தி புத்ரம்.

இதன் பொருள் ---

மக்கள் எனது சந்நிதியை அடைந்த மாத்திரத்திலேயே அபாரமாகிய சம்சார சாகரத்தின் மறுகரையை யடைந்து முத்தியின்பத்தை நுகர்கின்றனர். என்னும் உண்மையை உணர்த்தும் பொருட்டு, கருணைக் கடலாகிய யாதொரு கடவுள் கடற் கரையில் (செந்திலில்) வசிக்கின்றாரோ, பரிசுத்தனும் பராசக்தியின் புத்திரனுமான அவரைத் துதிக்கின்றனன்.

கருத்துரை

         வள்ளிநாயகியாரது மணாளரே! திசைமுழுதும் வென்று மேருவைச் செண்டாலெறிந்த பாண்டியர் தலைவரே! செந்திலம் பதியில் வாழும் பெருமையிற் சிறந்தவரே! இயமன் கோர ரூபத்துடன் பாசத்தையும் திரிசூலத்தையும் தாங்கி அடியேனைப் பற்றி வருங்கால், தேவரீர் அழகிய சித்திர மயிலின் மிசை வந்து திருவருள் புரியவேண்டும்.





        

                 
        
        


No comments:

Post a Comment

பொது --- 1081. இசைந்த ஏறும்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் இசைந்த ஏறும் (பொது) முருகா!  அடியேன் அயர்ந்தபோது வந்து அருள வேண்டும். தனந்த தானந் தனதன தானன ...... தனதான...