திரு மாணிகுழி


திரு மாணிகுழி

நடு நாட்டுத் திருத்தலம்.
  
கடலூர் நகரில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் திருமாணிகுழி உள்ளது.

1) கடலூரில் இருந்து குமணங்குளம் செல்லும் நகரப் பேருந்து திருமாணிகுழி வழியாகச் செல்கிறது. இதில் வந்தால் கோயிலின் வாயிலிலேயே இறங்கலாம்.

2) கடலூரில் இருந்து திருவஹீந்திபுரம் வழியாக நடுவீரப்பட்டி செல்லும் பேருந்தில் சென்று திருமாணிகுழி நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்து ஊருக்குள் செல்லும் சாலையில் சுமார் 1 கி.மீ. சென்றால் சாலை ஓரத்திலுள்ள கோவில் அடையலாம்.

3) கடலூரில் இருந்து திருவஹீந்திபுரம், பாலூர் வழியாக பண்ருட்டி செல்லும் பேருந்தில் சென்று திருமாணிகுழி நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்து ஊருக்குள் செல்லும் சாலையில் சுமார் 1 கி.மீ. சென்றால் சாலை ஓரத்திலுள்ள கோயிலை அடையலாம்.


இறைவர்                  : வாமனபுரீசுவரர், உதவிநாயகர்மாணிக்கவரதர்.

இறைவியார்              : அம்புஜாட்சி, உதவிநாயகி, மாணிக்கவல்லி.

தல மரம்                   : கொன்றை.

தீர்த்தம்                    : சுவேத தீர்த்தம், கெடிலநதி.


தேவாரப் பாடல்கள்    : சம்பந்தர் - பொன்னியல் பொருப்பரையன்.


          இத்தலம் தேவாரப் பாடல்களில் "உதவி மாணிக்குழி" என்று குறிக்கப்படுகிறது. இதனால் 'உதவி ' என்பது ஊர்ப் பெயராக இருந்து, காலப்போக்கில் 'மாணிகுழி' என்னும் கோயில் பெயரே ஊருக்குப் பெயராகியிருக்கலாம் என்று தோன்றுகின்றது. (இதற்கேற்ப தலபுராணத்தில் வரும் செய்தி வருமாறு:-)

          வடநாட்டு வணிகன் அத்ரி என்பவன் இப்பகுதியில் வந்து கொண்டிருந்த போது திருடர்கள் கொள்ளையடிக்க முற்பட, இறைவன் அவ்வணிகனைத் திருடர்களிடமிருந்து காத்து உதவி புரிந்தார்; இதனால் இத்தலம் 'உதவி ' என்றும் இறைவன் 'உதவி நாயகர் ' இறைவி 'உதவி நாயகி ' என்றும் அழைக்கப்படுகிறார்கள்.

          கல்வெட்டிலும் சான்றாக, இத்தலம் 'உதவி ' என்றே குறிக்கப்பெறுகின்றது.

          திருமால் பிரம்மசாரியாக வந்து மாவலிபால் மூன்றடிமண் கேட்டு அவனையழித்த பழிதீர இங்கு வந்து வழிபட்டாராதலின் இக்கோயில் 'மாணிகுழி ' என்று பெயர் பெற்றது. (மாணி - பிரம்மசாரி)

          பெரிய புராணத்தில், சுந்தரர் கெடில நதியில் நீராடித் திருமாணிகுழியைத் தரிசித்ததாக குறிப்பிருந்தும் அப்பெருமான் பாடிய பதிகம் எதுவும் கிடைக்கவில்லை.

          நடராச சபையிலுள்ள நடராசர் திருமேனியில் பஞ்சாட்சரம் பொறிக்கப்பட்டுள்ளது என்கின்றனர்; அதைப் பார்க்கும்போது அவ்வடிவமாகத் தெரியவில்லை; குறுக்கும் நெடுக்குமாகச் சிறுகோடுகளாக ஏதோ ஒருவித அமைப்புள்ளது.

          சுவாமி எப்போதும் இறைவியுடன் இருப்பதாக மரபாதலின், மூலவர் சந்நிதியில் எப்போதும் திரைப்போடப்பட்டுள்ளது. (இத்திரையின் மேற்புறத்தில் ஏகாதச ருத்திரர்களில் ஒருவராகிய பீமருத்திரர் உருவம் எழுதப்பட்டுள்ளது.)

          மகாவிஷ்ணு மாணியாக - பிரம்மசாரியாக வழிபடுவதற்குக் காவலாக பீமருத்திரர் உள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.

          சோழர்காலக் கட்டமைப்புடையது இக்கோயில்.

          இத்தலத்திற்கு வாமனபுரி, இந்திரலோகம், பீமசங்கரக்ஷேத்திரம் என்பன வேறு பெயர்கள்.

          மூலவர் தரிசனத்திற்கு செல்லும் வாயிலில் வாமனாவதார வரலாறு சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன.

          ஆலய வழிபாட்டில் அர்ச்சனை, தீபாராதனை, பூசை முதலியன முதலில் பீமருத்திரருக்கே நடைபெற்று, பின்னர் சுவாமிக்கு நடைபெறுகிறது.

          இறைவன் எப்போதும் இறைவியுடன் இருப்பதாகச் சொல்லப்படுவதால், இத்தலத்தில் அர்த்தசாம பள்ளியறை வழிபாடு என்பது தனியே கிடையாது.

          இத்தலத்தில் கார்த்திகையில் (பரணியில் அல்லாமல்) திருவண்ணாமலையில் நடைபெறுவது போல ரோகிணியில் தீபதரிசனம் நடைபெறுகின்றது.

          அருணகிரிநாதரின் திருப்புகழ் இத்தலத்திற்கு உள்ளது.

          சோழ, பாண்டிய, விஜயநகர மன்னர்கள் காலத்திய கல்வெட்டுக்களில் இறைவன் பெயர், 'உதவிநாயகர் ', 'உதவி மாணிகுழி மகாதேவர் ' என்று குறிக்கப்படுகிறது.

         காலை 7 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4-30 முதல் இரவு 8-30 வரையிலும் திறந்திருக்கும்.

     வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "ஆற்ற மயல் காணிக்குழி வீழ் கடையர்க்குக் காண்பரிய மாணிக்குழி வாழ் மகத்துவமே" என்று போற்றி உள்ளார்.


திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 962
செல்வம் மல்கிய தில்லைமூ
         தூரினில் திருநடம் பணிந்துஏத்தி,
பல்பெ ருந்தொண்டர் எதிர்கொளப்
         பரமர்தம் திருத்தினை நகர்பாடி,
அல்கு தொண்டர்கள் தம்முடன்
         திருமாணி குழியினை அணைந்துஏத்தி,
மல்கு வார்சடை யார்திருப்
         பாதிரிப் புலியூரை வந்துஉற்றார்.

         பொழிப்புரை : செல்வம் நிறைந்த `தில்லை' என்ற பழம்பெரும் பதியில் இறைவரின் திருக்கூத்தை வணங்கிப் போற்றிப் பெருந் தொண்டர்கள் பலரும் வரவேற்கச் சென்று, இறைவரின் `திருத்தினை' நகரை அடைந்து பாடிச்சென்று, அத்தொண்டர்களுடன் `திருமாணி குழியினை' அடைந்து போற்றி, செறிந்து பொருந்திய நீண்ட சடையை உடைய இறைவரின் `திருப்பாதிரிப்புலியூரை' வந்து அடைந்தார்.

         குறிப்புரை : இத்திருப்பதிகளில் திருமாணிகுழிக்கு அமைந்த பதிகம் மட்டுமே கிடைத்துளது. அப்பதிகம் `பொன்னியல்' (தி.3 ப.77): பண்:சாதாரி.


3. 077   திருமாணிகுழி      திருவிராகம்      பண் - சாதாரி
                                    திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
         பொன்இயல் பொருப்புஅரையன் மங்கைஒரு
                  பங்கர்,புனல் தங்குசடைமேல்
         வன்னியொடு மத்தமலர் வைத்தவிறல்
                  வித்தகர் மகிழ்ந்துஉறைவிடம்,
         கன்னிஇள வாளைகுதி கொள்ள,இள
                  வள்ளைபடர் அள்ளல்வயல்வாய்
         மன்னிஇள மேதிகள் படிந்துமனை
                  சேர்உதவி மாணிகுழியே.

         பொழிப்புரை : சிவபெருமான் பொன்மயமான இமயமலை அரசனின் மகளான உமாதேவியைத் தன்திருமேனியில் ஒருபாகமாகக் கொண்டவர். கங்கைநீர் தங்கிய சடையில் வன்னிப் பத்திரத்துடன் பொன்னூமத்தம் பூவை அணிந்த வலிய அறிவுருவான அச்சிவ பெருமான் வீற்றிருந்தருளும் தலமாவது, வரப்பின்மேல் இள வள்ளைக் கொடிகள் படர்ந்த சேற்றையுடைய வயலில், இள வாளை மீன்கள் துள்ளிப்பாய, இள எருமைகள் அதில் படிந்து வீடுசேரும், நீர்வளமும் நிலவளமுமிக்க திருமாணிகுழி ஆகும்.


பாடல் எண் : 2
         சோதிமிகு நீறுஅதுமெய் பூசிஒரு
                  தோல்உடை புனைந்துதெருவே
         மாதர்மனை தோறும்இசை பாடிவசி
                  பேசும்அர னார்மகிழ்விடம்,
         தாதுமலி தாமரை மணங்கமழ
                  வண்டுமுரல் தண்பழனமிக்கு
         ஓதமலி வேலைபுடை சூழ்உலகில்
                  நீடுஉதவி மாணிகுழியே.
        
         பொழிப்புரை : ஒளிமிகுந்த திருவெண்ணீற்றினைத் திருமேனியில் உத்தூளணமாகப் பூசி, தோலை ஆடையாக அணிந்து, தெருக்களில் பெண்கள் உள்ள ஒவ்வொரு இல்லமும் சென்று இசைப்பாடல்களைப் பாடி வயப்படுத்தும் பேச்சுக்களைப் பேசும் சிவபெருமான் மகிழ்ந்து வீற்றிருந்தருளும் தலம் மகரந்தப்பொடிகள் மிக்க தாமரை மலர்கள் மணம் வீசுவதும், வண்டுகள் ஒலிக்கின்ற குளிர்ச்சி பொருந்திய வயல்களையுடையதும், கடலலைகளின் ஓசை மிகுந்ததும் ஆகி விளங்குகின்ற திருமாணிகுழி என்பதாம்.


பாடல் எண் : 3
         அம்புஅனைய கண்உமை மடந்தையவள்
                  அஞ்சிவெரு வச்சினம் உடைக்
         கம்பமத யானைஉரி செய்தஅர
                  னார்கருதி மேயஇடமாம்,
         வம்புமலி சோலைபுடை சூழமணி
                  மாடம்அது நீடி அழகார்
         உம்பர்அவர் கோன்நகரம் என்னமிக
                  மன்உதவி மாணிகுழியே.

         பொழிப்புரை : அம்பு போன்ற கூரிய கண்களையுடைய உமாதேவி அஞ்ச, கோபமுடைய, தூணிலே கட்டக்கூடிய மதயானையின் தோலை உரித்த சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலம், நறுமணமிக்க சோலை களையுடையதும், இரத்தினங்கள் பதிக்கப் பெற்ற மாடமாளிகைகள் நிறைந்த அழகிய தேவலோகத்து நகரமாகிய அமராவதியைப் போன்று நிலைபெற்று விளங்குவதும் ஆகிய திருமாணிகுழியாகும்.


பாடல் எண் : 4
         நித்தநிய மத்தொழிலன் ஆகிநெடு
                  மால்குறளன் ஆகிமிகவும்
         சித்தம்அது ஒருக்கிவழி பாடுசெய
                  நின்றசிவ லோகன்இடமாம்,
         கொத்துஅலர் மலர்ப்பொழிலில் நீடுகுல
                  மஞ்ஞைநடம் ஆடல்அதுகண்டு
         ஒத்தவரி வண்டுகள் உலாவிஇசை
                  பாடுஉதவி மாணிகுழியே.

         பொழிப்புரை : நாள்தோறும் அநுட்டானம் முதலிய நியமம் பூண்டவனாய்த் திருமால் வாமனவடிவங் கொண்டு மனத்தை ஒருமுகப்படுத்தி வழிபாடு செய்யச் சிவலோக நாயகனாகிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலம், கொத்தாக மலர்ந்துள்ள பூக்களையுடைய சோலைகளில் சிறந்த மயில்கள் நடனமாட அதைப்பார்த்த வரிகளையுடைய வண்டுகள் நடனத்துக்கு ஒத்தவாறு இசைபாடுகின்ற திருமாணிகுழி ஆகும்.


பாடல் எண் : 5
         மாசுஇல்மதி சூடுசடை மாமுடியர்,
                  வல்அசுரர் தொல் நகரம் முன்
         நாசமது செய்துநல வானவர்க
                  ளுக்கு அருள்செய் நம்பன்இடமாம்,
         வாசம்மலி மென்குழல் மடந்தையர்கள்
                  மாளிகையின் மன்னிஅழகார்
         ஊசல்மிசை ஏறிஇனி தாகஇசை
                  பாடுஉதவி மாணிகுழியே.

         பொழிப்புரை : சிவபெருமான் குற்றமில்லாத சந்திரனைச் சடையில் சூடியவர். வல்லசுரர்களின் பழமைவாய்ந்த திரிபுரங்களை அழித்து நற்குண நற்செய்கையுடைய தேவர்கட்கு அருள்புரிந்தவர். அப் பெருமான் வீற்றிருந்தருளும் தலம், நறுமணமிக்க மெல்லிய கூந்தலையுடைய பெண்கள், மாளிகைகளில் தங்கி அழகிய ஊஞ்சலில் ஏறியமர்ந்து இனிமையாக ஊசற்பாட்டுப்பாடி ஆடுகின்ற திருமாணி குழி ஆகும்.


பாடல் எண் : 6
         மந்தமலர் கொண்டுவழி பாடுசெயு
                  மாணிஉயிர் வவ்வமனமாய்
         வந்த,ஒரு காலன்உயிர் மாளஉதை
                  செய்தமணி கண்டன் இடமாம்,
         சந்தினொடு கார்அகில் சுமந்துதட
                  மாமலர்கள் கொண்டுகெடிலம்
         உந்துபுனல் வந்துவயல் பாயும்மணம்
                  ஆர்உதவி மாணிகுழியே.

         பொழிப்புரை : மலரும் நிலையிலுள்ள மலர்களைக் கொண்டு சிவவழிபாடு செய்த பிரமசாரியான மார்க்கண்டேயனின் உயிரைக் கவரும் மனத்தோடு வந்த காலனின் உயிர் நீங்குமாறு காலால் உதைத்த நீலகண்டனான சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலம், சந்தன மரங்கள், கரிய அகிற் கட்டைகள் இவற்றைச் சுமந்து மலையிலிருந்து விழுந்து, குளங்களில் பூத்துள்ள சிறந்த மலர்களையும் தள்ளிக் கொண்டு வரும் கெடிலநதியின் நீர் வயல்களில் பாய நறுமணம் கமழும் திருமாணிகுழி ஆகும்.


பாடல் எண் : 7
         எண் பெரிய வானவர்கள் நின்றுதுதி
                  செய்ய,இறை யேகருணையாய்,
         உண்புஅரிய நஞ்சுதனை உண்டுஉலகம்
                  உய்யஅருள் உத்தமன்இடம்,
         பண்பயிலும் வண்டுபல கெண்டிமது
                  உண்டுநிறை பைம் பொழிலின்வாய்
         ஒண்பலவின் இன்கனி சொரிந்துமணம்
                  நாறுஉதவி மாணிகுழியே.

         பொழிப்புரை : எண்ணற்ற தேவர்கள் வணங்கிநின்று துதிசெய்யப் பேரருளுடையவனாய் எவரும் உண்ணுதற்கரிய நஞ்சை உண்டு உலகம் உய்யும்படி அருள்செய்த உத்தமனான சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலமாவது, பண்ணிசை பாடுகின்ற வண்டுகள், பல மலர்களையும் கிளறி, தேனருந்த, வளம்மிக்க பசுமை வாய்ந்த சோலைகளிடத்துச் சிறந்த பலாமரங்களின் இனிய கனிகளிலிருந்து தேனைச் சொரிந்து நறுமணம் கமழ்கின்ற திருமாணிகுழி என்பதாகும்.


பாடல் எண் : 8
         எண்ணம்அது இன்றிஎழி லார் கைலை
                  மாமலை எடுத்த திறலார்
         திண்ணிய அரக்கனை நெரித்து,அருள்
                  புரிந்தசிவ லோகன்இடமாம்,
         பண்அமரும் மென்மொழியி னார்பணை
                  முலைப்பவள வாய்அழகுஅதுஆர்
         ஒள்நுதல் மடந்தையர் குடைந்துபுனல்
                  ஆடுஉதவி மாணிகுழியே.

         பொழிப்புரை : கயிலைமலையின் பெருமையையும், சிவ பெருமானின் அளவற்ற ஆற்றலையும் சிந்தியாது, கயிலைமலையைப் பெயர்த்தெடுத்த வலிய அரக்கனான இராவணனை அம்மலையின்கீழ் நெரித்து, பின் அவன் சாமகானம் பாட அருள்புரிந்த சிவலோக நாயகனாகிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலமாவது, பண்போன்று மென்மொழி பேசுபவர்களாய்ப் பருத்த கொங்கைகளையும், பவளம் போன்ற வாயையும், அழகிய ஒளிபொருந்திய நெற்றியையுமுடைய பெண்கள் கையாற் குடைந்து நீராடும் திருமாணி குழி ஆகும்.


பாடல் எண் : 9
         நேடும் அய னோடுதிரு மாலும்உண
                  ராவகை நிமிர்ந்து,முடிமேல்
         ஏடுஉலவு திங்கள்மத மத்தம்இத
                  ழிச்சடைஎம் ஈசன்இடமாம்,
         மாடுஉலவு மல்லிகை குருந்துகொடி
                  மாதவி செருந்திகுரவின்
         ஊடுஉலவு புன்னைவிரை தாதுமலி
                  சேர்உதவி மாணிகுழியே.

         பொழிப்புரை : பிரமனும், திருமாலும் இறைவனின் அடிமுடி தேடியும் உணராவகை நெருப்புப்பிழம்பாய் ஓங்கி நின்றவர் சிவபெருமான். அவர் தம் சடைமுடியில் வெண்தாமரை இதழ் போன்ற பிறைச்சந்திரனையும், ஊமத்தை, கொன்றை ஆகியவற்றையும் அணிந்து விளங்குபவர். எம் இறைவரான சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலமாவது, மகரந்தப்பொடி நிறைந்த மல்லிகை, குருந்து, மாதவி, செருந்தி, குரவம், புன்னை என்ற மணம் கமழும் மலர்கள் நிறைந்த திருமாணிகுழி என்பதாம்.


பாடல் எண் : 10
         மொட்டைஅமண் ஆதர்,முது தேரர்,மதி
                  இல்லிகள்  முயன்றனபடும்
         முட்டைகள் மொழிந்தமொழி கொண்டுஅருள்செய்
                  யாதமுதல் வன்தன் இடமாம்,
         மட்டைமலி தாழைஇள நீர்முதிய
                  வாழையில் விழுந்தஅதரில்
         ஒட்டமலி பூகம்நிரை தாறுஉதிர
                  வேறுஉதவி மாணிகுழியே.

         பொழிப்புரை : மொட்டைத் தலையுடைய சமணர்களும், பேதைமை முதிர்ந்த புத்தர்களும் இறையுண்மையை உணராதவர்கள். முயன்று செய்த வினைகளே பயன்தரும். அதற்குக் கர்த்தா வேண்டா என்று சொல்பவர்கள் அவர்கள். உருட்டிய வழி உருளும் முட்டைபோல் தமக்கென ஓர் உறுதி இல்லாத, அவர்கள் சொன்ன சொற்களால் அவர்கட்கு அருள்புரியாத சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது, மட்டைகளையுடைய தென்னைகளின் இளநீர்கள் வாழையிலும், பாக்கு மரங்களிலும் விழுந்து குலைகள் சிதற விளங்கும் திருமாணிகுழி ஆகும்.


பாடல் எண் : 11
         உந்திவரு தண்கெடிலம் ஓடுபுனல்
                  சூழ்உதவி மாணிகுழிமேல்,
         அந்திமதி சூடியஎம் மானைஅடி
                  சேரும்அணி காழிநகரான்,
         சந்தநிறை தண்தமிழ் தெரிந்துஉணரும்
                  ஞானசம் பந்தனதுசொல்,
         முந்திஇசை செய்துமொழி வார்கள்உடை
                  யார்கள் நெடு வானநிலனே.

         பொழிப்புரை : பலபொருள்களை நீர்ப்பெருக்குடன் அடித்து வரும் கெடிலநதி சூழ்ந்த உதவி மாணிகுழியின் மீது, மாலைக்காலப் பிறைச்சந்திரனைச் சூடிய எம் தலைவனான சிவபெருமானின் திரு வடிகளை இடைவிடாது தியானிக்கும் அழகிய சீகாழியில் அவதரித்த ஞானசம்பந்தன் சந்தம் நிறைந்த இன்தமிழில் அறிந்துணர்ந்து அருளிய இத்திருப்பதிகத்தை இசையுடன் பாட முற்படுபவர்கள் உயர்ந்த முத்திப் பேற்றைப் பெறுவர்.
திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment

சும்மா இரு மனமே

  சும்மா இருப்பாய் மனமே -----   "வேதாகம சித்ர வேலாயுதன் ,  வெட்சி பூத்த தண்டைப் பாதார விந்தம் அரணாக ,    அல்லும் பகலும் இல்லாச்  சூதானத...