கோயில் - சிதம்பரம் - 3


சுந்தரர் திருப்பதிக வரலாறு
ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்

            சுவாமிகள், திருமுதுகுன்றம் பணிந்து, "மெய்யை முற்றப் பொடிப் பூசி" என்னும் திருப்பதிகம் பாடிப் பன்னிரண்டாயிரம் பொன் பெற்று, 'இப் பொன் எல்லாம் ஆரூரில் உள்ளார் எல்லோரும் வியக்குமாறு பெற அருள்செய்ய வேண்டும்' என்று விண்ணப்பித்தார். பெருமானும், 'மணிமுத்தாற்றில் இட்டு ஆரூர்க் குளத்தில் கொள்க' என்று அருளினார். நம்பியாரூரரும் அப் பொன்னில் மாற்று அறிவதற்காகச் சிறிது மச்சம் வெட்டி எடுத்துக்கொண்டு ஆற்று நீரில் பொன்திரளைப் போட்டு, 'அன்று என்னை வலிந்து ஆட்கொண்ட அருளை இதில் அறிவேன்' என்று சொல்லித் தில்லையை வணங்கும் விருப்பினராய்ப் பல பதிகளையும் வணங்கிக்கொண்டு, அத் தலத்தையடைந்து, கூத்தப்பெருமானைக் கண்டு, ஆடிய திருவடிகளை வணங்கிப் பாடியருளியது இத்திருப்பதிகம். (தி. 12 ஏயர்கோன். புரா. 115) இதில், மேலைச் சிதம்பரம் ஆகிய பேரூரை நினைந்து பாடியிருத்தல் குறிப்பிடத் தக்கது.

பெரிய புராணப் பாடல் எண் : 111
மாடுஉள பதிகள் சென்று
            வணங்கிப்போய் மங்கை பாகர்
நீடிய கடம்பூர் போற்றி
            நிறைந்தஆ னந்தக் கூத்தர்
ஆடிய தில்லை மூதூர்
            அணைந்துஅணி வாயில் புக்குச்
சேடுஉயர் மாடம் மன்னும்
            செழுந்திரு வீதி சார்ந்தார்.

            பொழிப்புரை : செல்லும் வழியில் இடைப்பட்ட பதிகள் பலவும் வணங்கிச் சென்று, உமையொரு கூறராய சிவபெருமான் வீற்றிருக்கும் திருக்கடம்பூரை அடைந்து, பெருமானைப் போற்றி, உள்ளம் நிறைந்த பெருமகிழ்வை வழங்கி அருளும் கூத்துடைய பெருமான் ஆடி அருளும் தில்லை என்னும் மூதூரை (பழைய நகரை) அணைந்து, அழகிய திருவாயிலின் ஊடாக உட்புகுந்து, மிகவும் உயர்ந்த மாடங்கள் விளங்கும் செழுமையான திருவீதியைச் சேர்ந்தார்.


பெ. பு. பாடல் எண் : 112
பொன்திரு வீதி தாழ்ந்து
            புண்ணிய விளைவாய் ஓங்கும்
நல்திரு வாயில் நண்ணி
            நறைமலி அலங்கல் மார்பர்
மற்றுஅதன் முன்பு மண்மேல்
            வணங்கிஉள் புகுந்து பைம்பொன்
சுற்றுமா ளிகைழ் வந்து
            தொழுதுகை தலைமேல் கொள்வார்.

            பொழிப்புரை : பொலிவு மிக்க அவ்வீதியைத் தாழ்ந்து வணங்கி, புண்ணியத்தின் விளைவாய் ஓங்கிய நல்ல திருவுடைய கோயிலின் வாயிலை அடைந்து, மணம் நிறைந்த மாலையைச் சூடும் மார்புடைய நம்பிகள், மற்று அத்திருவாயிலின் முன்பாக மண்மேல் விழுந்து வணங்கி, உட்புகுந்து, பசிய பொன்னால் அமைந்த திருச்சுற்றுத் திரு மாளிகைகளையும் வலமாகச் சூழ்ந்து, உச்சிக் கூப்பிய கையினராய்,


பெ. பு. பாடல் எண் : 113
ஆடிய திருமுன்பு ஆன அம்பொனின் கோபு ரத்தின்
ஊடுபுக்கு இறைஞ்சி ஓங்கும் ஒளிவளர் கனக மன்றில்
நாடகச் செய்ய தாளை நண்ணுற உள்  நிறைந்து
நீடும்ஆ னந்த வெள்ளக் கண்கள்நீர் நிரந்து பாய.

            பொழிப்புரை : தில்லைக் கூத்தியற்றும் பெருமானின் திருமுன்பாக விளங்கும் அழகிய பொற்கோபுரத்தின் ஊடாக உள்புகுந்து வணங்கி, ஒளி ஓங்கி வளரும் பொற்பொதுவில் நடனமாடும் பெருமானுடைய செவ்விய திருவடிகளை அணுக வந்தடைய, உள்ளத்து நிறைந்து நீடஓங்கும் ஆனந்த வெள்ளமாக, கண்கள் நீரினை இடையறாது வெளிப்படுத்த,


பெ. பு. பாடல் எண் : 114
பரவுவாய் குளறிக் காதல்
            படிதிருப் படியைத் தாழ்ந்து
விரவுமெய் அங்கம் ஐந்தும்
            எட்டினும் வணங்கி வேட்கை
உரன்உறு திருக்கூத்து உள்ளம்
            ஆர்தரப் பெருகி நெஞ்சில்
கரவுஇலா தவரைக் கண்ட
            நிறைவுதம் கருத்தில் கொள்ள.

            பொழிப்புரை : போற்ற எடுத்திடும் வாய் குளறிப், பெருமான் இடத்துக் காதல் பெருக உள்ள திருக்களிற்றுப்படியைத் தாழ்ந்து, பொருந்திய வகையால் உடலின் ஐந்து உறுப்புகளும் எட்டு உறுப்புக ளுமாக நிலமிசைப் பொருந்த வணங்கி, உயிர்கள் எல்லாம் உய்தற்குரிய வலிமை மிகுந்த திருக்கூத்து, உள்ளத்துப் பெருகிய இன்பத்தை விடாத தமது உள்ளத்தே, வஞ்சியாது நீள நிறைந்து நிற்கும் பேரொளியைக் கண்டு கொண்ட நிறைவு தம் மனத்தில் பெருக்கெடுப்ப,


பெ. பு. பாடல் எண் : 115
"மடித்தாடும் அடிமைக்கண்" என்றுஎடுத்து
            மன்உயிர்கட்கு அருளும் ஆற்றால்
அடுத்துஆற்றும் நல்நெறிக்கண் நின்றார்கள்
            வழுவிநரகு அணையா வண்ணம்
தடுப்பானைப் பேரூரில் கண்டநிலை
            சிறப்பித்துத் தனிக்கூத்து என்றும்
நடிப்பானை நாம்மனமே பெற்றவாறு
            எனும் களிப்பால் நயந்து பாடி.

            பொழிப்புரை : `மடித்தாடும் அடிமைக் கண்\' எனத் தொடங்கி, நிலைபெற்ற உயிர்கட்கு அருள் புரிந்திடும் அத்தகவால், அடுத்துச் செய்திடும் நல்ல நெறியில் ஒழுகி நிற்பார்கள், தவறியும் இயமன் கைப்பட்டு நரகத்துச் சேராதவாறு தடுக்கின்ற பெருமானைத் திருக் காஞ்சிவாய்ப் பேரூரில் கண்ட திருக்கூத்தைச் சிறப்பித்து, ஒப்பற்ற அத் திருக்கூத்தை என்றும் செய்தருள்பவனை, `மனமே! நான் பெற்ற பேறு தான் என்னே!\' என்று மிக நயப்புடன் பாடியருளி,

பெ. பு. பாடல் எண் : 116
மீளாத அருள்பெற்றுப் புறம்போந்து
            திருவீதி மேவித் தாழ்ந்தே
ஆள்ஆன வன்தொண்டர் அந்தணர்கள்
            தாம்போற்ற அமர்ந்து வைகி
மாளாத பேர்அன்பால் பொற்பதியை
            வணங்கிப்போய் மறலி வீழத்
தாள்ஆண்மை கொண்டவர்தம் கருப்பறிய
            லூர்வணங்கிச் சென்று சார்ந்தார்.

            பொழிப்புரை : பிரியாத அருள் பெற்று, வெளியே சென்று, கோயிலின் திருவீதியை அணைந்து தாழ்ந்து வணங்கி, பெருமானுக்கு ஆளான நம்பிகள், தில்லையில் வாழும் அந்தணர்கள் தம்மைப் போற்ற, அவர்களுடன் அங்கு அமர்ந்து இருந்து, பின்பும் நீங்காத பேரன்பினால் பொற்பதியாம் தில்லையை வணங்கி, அப்பால் சென்று, இயமன் வீழ்ந்திடத் திருவடியை ஓச்சி அருளிய பெருமானது திருக்கருப்பறியலூரை வணங்கி அப்பால் சென்று சேர்ந்தார்.

சுந்தரர் திருப்பதிகம்

7. 090    கோயில்                               பண் - குறிஞ்சி
                                                திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
மடித்தாடும் அடிமைக்கண் அன்றியே
            மனனே,நீ வாழு நாளும்
தடுத்துஆட்டித் தருமனார் தமர்செக்கில்
            இடும்போது தடுத்துஆட் கொள்வான்,
கடுத்தாடும் கரதலத்தில் தமருகமும்
            எரிஅகலும் கரிய பாம்பும்
பிடித்துஆடிப் புலியூர்ச்சிற் றம்பலத்துஎம்
            பெருமானைப் பெற்றாம் அன்றே.

            பொழிப்புரை :குஞ்சித்து ஆடுகின்ற தனது திருவடிக்குச் செய்யும் தொண்டு நெறியில் நீ வாழாமல், உடம்பு பெருக்கவே உண்டு,  உடம்பைக் காக்கவே உடுத்து வாழும் நாள்களிலும், உன்னை அவ்வாறே சென்று கெடாதவாறு தடுத்து , தனது அருள் வழி நடத்தி , பின்பு நீ முன்செய்த பாவத்தின்பொருட்டு உன்னைக் கூற்றுவனது ஏவலர்கள் ஒறுக்க முயலும்போது அதனையும் தடுத்து ஆட்கொள்பவனாகிய பெருமான்.  கையில் தமருகத்தையும் , நெருப்பு எரிகின்ற தகழியையும், சினந்து ஆடுகின்ற கரிய பாம்பையும் பிடித்துக்கொண்டு ஆடுகின்றவன்.  பெரும்பற்றப் புலியூரில் திருச்சிற்றம் பலத்தில் விளங்குகின்ற அப் பெருமானை அடைந்து விட்டோம் அல்லவா, மனமே.


பாடல் எண் : 2
பேராது காமத்தில் சென்றார்போல்
            அன்றியே பிரியாது உள்கிச்
சீர்ஆர்ந்த அன்பராய்ச் சென்றுமுன்
            அடிவீழும் திருவி னாரை,
ஓராது தருமனார் தமர்செக்கில்
            இடும்போது தடுத்துஆட் கொள்வான்
பேராளர் புலியூர்ச்சிற் றம்பலத்துஎம்
            பெருமானைப் பெற்றாம் அன்றே

            பொழிப்புரை : மனமே, சாகும் வரையிலும் உலக இன்பத்திலேயே உழன்றவர்கள் போல் அல்லாது,  உயிருக்குப் பெருமை நிறைந்த அன்பினை உடையவர்களாய் , தன்னை இடைவிடாது  மனதால் நினைத்து, சந்நிதியில் சென்று தனது திருவடியில் வீழ்ந்து வணங்கும் திருவுடையவரை, அவரது நிலையை அறியாமல், கூற்றுவனது ஏவலர்கள் ஒறுக்க முயலும்போது அதனைத் தடுத்து ஆட்கொள்பவன் இறைவன். பெருமையுடையவர்கள் ஆகிய தில்லைவாழ் அந்தணர்கள் வாழுகின்ற பெரும்பற்றப் புலியூரில் உள்ள திருச்சிற்றம்பலத்தில் விளங்குகின்ற நம் பெருமானை அடைந்து விட்டோமே.


பாடல் எண் : 3
நரியார்தம் கள்ளத்தால் பக்குஆன
            பரிசுஒழிந்து, நாளும் உள்கி,
திரியாத அன்பராய்ச் சென்றுமுன்
            அடிவீழும் சிந்தை யாரைத்
தரியாது தருமனார் தமர்செக்கில்
            இடும்போது தடுத்துஆட் கொள்வான்
பெரியோர்கள் புலியூர்ச்சிற் றம்பலத்துஎம்
            பெருமானைப் பெற்றாம் அன்றே

            பொழிப்புரை : மனமே, பயன் கருதியே எதனையும் செய்யக்கூடிய நரியினது குணம் போலும் வஞ்சனை மிக்க தன்மையில் இருந்து நீங்கி, நாள்தோறும் தன்னையே நினைத்து, என்றும் மாறாத அன்பை உடையவர்களாய், தனது திருவடியில் வீழ்ந்து வணங்கும் மனமுடையவரை, கூற்றுவனது ஏவலர்கள் ஒறுக்க முயலும்போது சிறிதும் தாழாது அதனைத் தடுத்து ஆட்கொள்பவனாகிய  பெருமான் , பெரியோர்களாகிய, எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகும் அந்தணர்கள் வாழுகின்ற பெரும்பற்றப் புலியூரில் உள்ள திருச்சிற்றம்பலத்தில் விளங்குகின்ற நம் பெருமானை அடைந்து விட்டோம் அல்லவா.


பாடல் எண் : 4
கருமைஆர் தருமனார் தமர்நம்மைக்
            கட்டியகட்டு அறுப்பிப் பானை,
அருமையாம் தன்உலகம் தருவானை ,
            மண்ணுலகம் காவல் பூண்ட
உரிமையால் பல்லவர்க்குத் திறைகொடா
            மன்னவரை மறுக்கஞ் செய்யும்
பெருமையார் புலியூர்ச்சிற் றம்பலத்துஎம்
            பெருமானைப் பெற்றாம் அன்றே

            பொழிப்புரை : மனமே, கருமை நிறம் பொருந்திய கூற்றுவனது ஏவலர்கள் நம்மைக் கட்டுவராயின், அக் கட்டினை அறுத்து எறிபவனும், பிறர் பெறுதற்கரிய தனது உலகத்தைத் தருபவனும், பல்லவ மன்னன் இந்நிலவுலகத்தை நன்நெறியில் வைத்துக் காத்தலை மேற்கொண்டதால் , அவனுக்குத் திறைகொடாது மாறுபடும் பிற மன்னர்களை வருத்துதல் செய்கின்றவனும் ஆகிய, பெருமை உடையவர்களாகிய தில்லைவாழ் அந்தணர்கள் வாழும் பெரும்பற்றப்புலியூரில் உள்ள திருச்சிற்றம்பலத்தில் விளங்குகின்ற நம் பெருமானை அடைந்துவிட்டோமே.


பாடல் எண் : 5
கருமானின் உரிஆடை, செஞ்சடைமேல்
            வெண்மதியக் கண்ணி யானை,
உரும்அன்ன கூற்றத்தை உருண்டுஓட
            உதைத்து, உகந்து உலவா இன்பம்
தருவானை, தருமனார் தமர்செக்கில்
            இடும்போது தடுத்துஆட் கொள்வான்
பெருமானார் புலியூர்ச்சிற் றம்பலத்துஎம்
            பெருமானைப் பெற்றாம் அன்றே

            பொழிப்புரை : மனமே, கரிய நிறம் பொருந்திய யானையினது தோலே போர்வையாகக் கொண்டவனும், சிவந்த சடைமேல் வெள்ளிய பிறையாகிய கண்ணியைச் சூடினவனும், இடிபோல முழங்கும் கூற்றுவனை நிலத்தில் உருண்டு ஒழியும்படி உதைத்துப் பின் அருள் செய்து, அவனால் வெருட்டப் பட்ட சிறுவனாகிய மார்க்கண்டேயருக்கு அழியாத இன்பத்தைத் தந்தவனும், கூற்றுவனது ஏவலர்கள் நம்மை ஒறுக்க முயலும்போது அதனைத் தடுத்து ஆட்கொள்பவனும் ஆகிய , பெருமை நீங்காதவர்களாகிய தில்லைவாழ் அந்தணர்கள் பெரும்பற்றப்புலியூரில் உள்ள திருச்சிற்றம்பலத்தில் விளங்குகின்ற நம் பெருமானை அடைந்துவிட்டோம்.


பாடல் எண் : 6
உய்த்துஆடித் திரியாதே, உள்ளமே,
            ஒழிகண்டாய் ஊன்க ணோட்டம்,
எத்தாலும் குறைவுஇல்லை என்பர்காண்
            நெஞ்சமே நம்மை நாளும்,
பைத்துஆடும் அரவினன், படர்சடையன்
            பரஞ்சோதி, பாவம் தீர்க்கும்
பித்துஆடி, புலியூர்ச்சிற் றம்பலத்துஎம்
            பெருமானைப் பெற்றாம் அன்றே

            பொழிப்புரை :மனமே, படம் எடுத்து ஆடும் பாம்பையும் , விரிந்த சடையையும் உடையவனும் , மேலான ஒளியாய் உள்ளவனும் , அடைந்தவரது பாவங்களை நீக்குகின்றவனும் , பித்துக்கொண்டு ஆடுகின்றவனும் ஆகிய , பெரும்பற்றப் புலியூரில் உள்ள திருச்சிற்றம்பலத்தின்கண் விளங்குகின்ற நம் பெருமானை அடைந்துவிட்டோ மன்றே.  இதனால் , நமக்கு எதனாலும் குறைவில்லாத வாழ்வு உளதாயிற்று என்று நம்மை நாள்தோறும் பலரும் புகழ்கின்றனர்; ஆதலின் , மனமே , இனி நீ , உடம்பின் மேற் கண்ணோட்டம் செலுத்தி அலைந்து திரியாது , அதனை முற்றிலும் ஒழி.


பாடல் எண் : 7
முட்டாத முச்சந்தி மூவா
            யிரவர்க்கும் மூர்த்தி என்னப்
பட்டானை, பத்தராய்ப் பாவிப்பார்
            பாவமும் வினையும் போக
விட்டானை, மலைஎடுத்த இராவணனைத்
            தலைபத்தும் நெரியக் காலால்
தொட்டானை, புலியூர்ச்சிற் றம்பலத்துஎம்
            பெருமானைப் பெற்றாம் அன்றே

            பொழிப்புரை : மனமே, தப்பாமல், முப்போதும் செய்யும் வழி பாட்டினையுடைய மூவாயிரவர் ஆகிய தில்லைவாழ் அந்தணர்களுக்கு ஒரு மூர்த்தியே என்று அனைவராலும் சொல்லப்படுபவனும், அடியவராய் நின்று தன்னை நினைப்போருடைய பாவமும் புண்ணியமும் ஆகிய இரு வினைகளும் விலகுமாறு அருள்கின்றவனும், தனது இருப்பிடமாக உள்ள திருக்கயிலாய மலையை எடுத்த இராவணனை, அவனது பத்துத் தலைகளும் நெரியும்படி காலால் ஊன்றினவனும் ஆகிய பெரும்பற்றப்புலியூரில் உள்ள திருச்சிற்றம்பலத்திலே ஆடல் புரிகின்ற பெருமானை நாம் அடைந்து விட்டோம்.


பாடல் எண் : 8
கல்தானும் குழையுமாறு அன்றியே
            கருதுமா கருத கிற்றார்க்கு
எற்றாலும் குறைவுஇல்லை என்பர்காண்
            உள்ளமே, நம்மை நாளும்
செற்றுஆட்டித் தருமனார் தமர்செக்கில்
            இடும்போது தடுத்துஆட் கொள்வான்
பெற்றுஏறி, புலியூர்ச்சிற் றம்பலத்துஎம்
            பெருமானைப் பெற்றாம் அன்றே

            பொழிப்புரை : மனமே, கல்லும் தன் தன்மை மாறி உருகும்படி, நெஞ்சக் கனகல்லாகிய மனதைக் கொண்டு தன்னை நினைக்கும் முறையில் நினைந்து மனம் உருகவல்லவருக்கு, யாதொரு குறைவும்இல்லை என்று பெரியோர் சொல்லுவர். அவ்வகையில் நாம், கூற்றுவனது ஏவலர்கள் பலகாலும் ஆட்டக்கருதிச் நம்மைச் செக்கில் இட முயலும்போது , அதனைத் தடுத்து ஆட்கொள்ளுகின்ற, விடையேறுபவனாகிய , பெரும்பற்றப் புலியூரில் உள்ள திருச்சிற்றம்பலத்தின்கண் விளங்கும் நம்பெரு மானை அடைந்துவிட்டோம்.


பாடல் எண் : 9
நாடுஉடைய நாதன்பால் நன்றுஎன்றும்
            செய்மனமே, நம்மை நாளும்
தாடுஉடைய தருமனார் தமர்செக்கில்
            இடும்போது தடுத்துஆட் கொள்வான்,
மோடுஉடைய சமணர்க்கும் முடைஉடைய
            சாக்கியர்க்கும் மூடம் வைத்த
பீடுஉடைய புலியூர்ச்சிற் றம்பலத்துஎம்
            பெருமானைப் பெற்றாம் அன்றே

            பொழிப்புரை : மனமே , நம்மை , தலைமையையுடைய கூற்றுவனது ஏவலர் பலநாளும் செக்கிலிட்டு ஆட்ட முயலும்போது , அதனைத் தடுத்து ஆட்கொள்பவனும் , பெருத்த வயிற்றினை உடைய சமணர்களுக்கும், முடைநாற்றத்தையுடைய சாக்கியர்களுக்கும் அறியாமையை வைத்த பெருமையை உடையவனும் ஆகிய , பெரும்பற்றப்புலியூரில் உள்ள திருச்சிற்றம்பலத்தின்கண் விளங்குகின்ற நம் பெருமானை அடைந்து விட்டோம். அதனால், உயர்ந்தோரால் விரும்பப்படுதலையுடைய அவ்விறைவனிடத்தில் என்றும் நன்றாய தொண்டினைச் செய்.


பாடல் எண் : 10
பார்ஊரும் அரவுஅல்குல் உமைநங்கை
            அவள்பங்கன், பைங்கண் ஏற்றன்,
ஊர்ஊரன், தருமனார் தமர்செக்கில்
            இடும்போது தடுத்துஆட் கொள்வான்,
ஆரூரன் தம்பிரான் ஆரூரன்
            மீகொங்கில் அணிகாஞ் சிவாய்ப்
பேரூரர் பெருமானைப் புலியூர்ச்சிற்
            றம்பலத்தே பெற்றாம் அன்றே

            பொழிப்புரை : மனமே, நிலத்தில் ஊர்ந்து செல்கின்ற பாம்பினது படம்போலும் அல்குலையுடைய ` உமை ` என்னும் நங்கையது பாகத்தையுடையவனும் , பசிய கண்களையுடைய இடபத்தை உடையவனும் , ஊர் தோறும் எழுந்தருளியிருப்பவனும் நம்மை , கூற்றுவனது ஏவலர்கள் ஒறுக்க முயலும் போது அதனைத் தடுத்து ஆட்கொள்பவனும் , நம்பியாரூரனுக்குத் தலைவனும் , திருவாரூரை உடையவனும் , மேற்றிசையில் உள்ள கொங்கு நாட்டில், அழகிய காஞ்சிநதியின் கரையில் விளங்கும் பேரூரில் உள்ளவரது கடவுளும் ஆகிய இறைவனை , பெரும்பற்றப் புலியூரில் உள்ள திருச்சிற்றம்பலத்தில் அடைந்து விட்டோம்.
திருச்சிற்றம்பலம்


திருவிசைப்பா - ஒன்பதாம் திருமுறை


திருமாளிகைத் தேவர் அருளிச் செய்தது
9. 01 கோயில் - `ஒளிவளர் விளக்கே        பண் - பஞ்சமம்
திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
ஒளிவளர் விளக்கே, உலப்பிலா ஒன்றே,
            உணர்வுசூழ் கடந்ததுஓர் உணர்வே,
தெளிவளர் பளிங்கின் திரள்மணிக் குன்றே,
            சித்தத்துள் தித்திக்கும் தேனே,
அளிவளர் உள்ளத்து ஆனந்தக் கனியே,
            அம்பலம் ஆடரங்கு ஆக,
வெளிவளர் தெய்வக் கூத்துஉகந் தாயைத்
            தொண்டனேன் விளம்புமா விளம்பே.

            பொழிப்புரை : ஒளி மிகுகின்ற விளக்கே. என்றும் அழிவில்லாத ஒப்பற்ற பொருளே. சென்று பற்றுகின்ற சுட்டறிவின் எல்லையைக் கடந்து நின்று, மேலான பதிஞானத்தால் மட்டுமே அறியப்படக்கூடிய மேலான பேரறிவினனே.  ஒளி பொருந்திய பளிங்குமலைபோலத் தோற்றத்தினை உடைய திரட்சியான மாணிக்கமலையே.  மெய்யன்பர்களின் உள்ளத்தில் இனிமை மிகுந்த தேனாக விளங்குபவனே.  அன்பு பெருகும் மெய்யடியார் உள்ளத்தில் மேலான ஆனந்தத்தினை விளைவிக்கும் பழமே. தில்லைத் திருச்சிற்றம்பலத்தையே தனக்கு இடமாகக் கொண்டு ஆடல் புரியும் உன்னை, அடியவனாகிய நான் புகழ்ந்து பேசுமாறு எனக்கு உரைத்து அருள்வாயாக.


பாடல் எண் : 2
இடர்கெடுத்து என்னை ஆண்டுகொண்டு, என்உள்
            இருட்பிழம்பு எறஎறிந்து எழுந்த
சுடர்மணி விளக்கி னுள்ஒளி விளங்கும்
            தூயநல் சோதியுட் சோதீ,
அடல்விடைப் பாகா, அம்பலக் கூத்தா,
            அயனொடு மால்அறி யாமைப்
படரொளி பரப்பிப் பரந்துநின் றாயைத்
            தொண்டனேன் பணியுமா பணியே.

            பொழிப்புரை : என்னுடைய பாசப்பிணிப்பையும் அஞ்ஞானக் காட்டையும் அறவே ஒழித்து என்னைத் தடுத்து ஆட்கொம்டு அருளி, என் மனத்தில் இருந்த இருளை வேர் அறக் களைந்து சுடர்விட்டு எழுந்த ஒளி மிகுந்த மாணிக்கத் தீபத்தின் உள்ளே ஒளி வீசுகின்ற தூய்மையான அழகிய ஒளியினுள் ஒளி வடிவாய் விளங்குபவனே.  வலிமை பொருந்தி காளையை வாகனமாகக் கொண்டவனே. பொன்னம்பலத்தில் நடம் புரிபவனே. பிரமனும் திருமாளும் அறிய முடியாதபடி, மிக்க ஒளியை வீசிப் பரவி நின்றவனாக்ய உன்னை, அடியவனாகிய நான் வணங்கும் வண்ணம், நீ திருவருள் புரிவாயாக.


பாடல் எண் : 3
தற்பரம் பொருளே, சசிகண்ட சிகண்டா,
            சாமகண் டா,அண்ட வாணா,
நற்பெரும் பொருளாய் உரைகலந்து உன்னை
            என்னுடை நாவினால் நவில்வான்
அற்பன்என் உள்ளத்து அளவுஇலா உன்னைத்
            தந்தபொன் னம்பலத்து அரசே,
கற்பமாய் உலகாய் அல்லைஆ னாயைத்
            தொண்டனேன் கருதுமா கருதே.

            பொழிப்புரை : `தத்` என்ற சொல்லால் குறிக்கப்படும் மேம்பட்ட பொருளே! சந்திரனைச் சூடிய முடியினை உடையவனே! கருத்த கண்டத்தை உடையவனே! அறிவு வெளியில் விலங்குபவனே! அங்கு மேம்பட்ட பரம்பொருளாய் இருப்பவனே! எனக்குத் தெரிந்த சொற்களைக்கொண்டு உன்னை என் நாவினால் புகழும்படி என் சிறிய உள்ளத்தில் எல்லை காணமுடியாத உன்னைத் தங்கச் செய்துள்ள பொன்னம்பலத்துக் கூத்தாடும் அரசே! ஊழிக் காலங்களாகவும், அந்தக் கால எல்லைக்குள் தோன்றி மறையும் பொருள்களாகவும், அவற்றின் வேறுபட்டவனாகவும் உள்ள உன்னைத் தொண்ட னாகிய நான் தியானிக்குமாறு என்திறத்து நீ அருள்புரிவாயாக.


பாடல் எண் : 4
பெருமையில் சிறுமை பெண்ணொடு ஆணாய்,என்
            பிறப்புஇறப்பு அறுத்தபேர் ஒளியே,
கருமையின் வெளியே, கயற்கணாள் இமவான்
            மகள்உமை யவள்களை கண்ணே,
அருமையின் மறைநான்கு ஓலம்இட்டு அரற்றும்
            அப்பனே, அம்பலத்து அமுதே,
ஒருமையில் பலபுக்கு உருவிநின் றாயைத்
            தொண்டனேன் உரைக்குமாறு உரையே.

            பொழிப்புரை : பெருமையாய் உள்ள நிலையிலேயே சிறுமையாகவும் நின்று, பெண்ணாய் இருக்கும் நிலையிலேயே ஆணாகவும் நின்று,  என்னுடைய பிறப்பு இறப்பு என்னும் துன்பங்களைப் போக்கிய பெருஞ்சோதியே! கருமை நிறத்துடன் வெம்மையான ஒளி பொருந்தியவனாய் இருப்பவனே! கயல்மீன் போன்ற கண்களையுடையவளாய், இமயமலை அரசன் மகளான உமாதேவிக்குப் பற்றுக்கோடாக உள்ளவனே! அருமையான நான்கு வேதங்களும் உன்னை உள்ளவாறு அறியமுடியாமல் பேரொலி செய்து புகழும் தலைவனே! பொன்னம்பலத்தில் ஆடல் புரியும் அமுதே! நீ ஒருவனாகவே இருந்து எல்லாப் பொருள்களிலும் உள்ளுறை பொருளாக ஊடுருவி நிற்கும் உன்னைத் தொன்டனாகிய யான் புகழ்ந்து சொல்லும் வண்ணம் நீ என்னுள் இருந்து உணர்த்தியருள்வாயாக.


பாடல் எண் : 5
கோலமே, மேலை வானவர் கோவே,
            குணங்குறி இறந்ததுஓர் குணமே,
காலமே, கங்கை நாயகா, எங்கள்
            காலகாலா, காம நாசா,
ஆலமே அமுதுஉண்டு அம்பலம் செம்பொன் 
            கோயில்கொண்டு ஆடவல் லானே,
ஞாலமே, தமியேன் நல்தவத் தாயைத்
            தொண்டனேன் நணுகுமா நணுகே.

            பொழிப்புரை : அடியவர்களுக்காக அவர்கள் விரும்பிய அழகிய வடிவத்தைக் கொள்பவனே! மேம்பட்ட பதங்களில் உள்ள தேவர்கள் அனைவர்க்கும் அரசனே. குணம் குறிகளைக் கடந்து நின்ற ஒப்பற்ற பண்பனே! காலத்தின் வடிவமாக இருப்பவனே! கங்கையின் நாயகனே! காலனுக்குக் காலனாக இருப்பவனே! மன்மதனை அழித்தவனே! விடத்தையே அமுதம் போல உண்டு, கூத்தாடும் இடத்தைப் பொன்மயமான கோயிலாகக் கொண்டு ஆன்ந்தக் கூத்தினை ஆடுதலில் வல்லவனே! உலகமே வடிவானவனே! நல்ல யோகியாகிய உன்னை உறுதுணை இல்லாத தனியவன் ஆகிய நான் நெருங்கும் வண்ணம் நீ நெருங்கி அருள்வாயாக.


பாடல் எண் : 6
நீறுஅணி பவளக் குன்றமே, நின்ற
            நெற்றிக்கண் உடையதுஓர் நெருப்பே,
வேறுஅணி புவன போகமே, யோக
            வெள்ளமே, மேருவில் வீரா,
ஆறுஅணி சடைஎம் அற்புதக் கூத்தா,
            அம்பொன்செய் அம்பலத்து அரசே,
ஏறுஅணி கொடிஎம் ஈசனே, உன்னைத்
            தொண்டனேன் இசையுமாறு இசையே.

            பொழிப்புரை : திருநீற்றை அணிந்த செந்நிறமான பவளமலை போன்றவனே! நிமிரந்து நின்ற நெற்றிக்கண்ணை உடையதான ஒப்பற்ற நெருப்பின் வடிவானவனே! பல்வேறுவகைப்பட்டனவாய அழகிய உலகங்களும், போகப் பொருள்களுமாய் இருப்பவனே! யோக முதிர்ச்சியினால் விளையும் முத்தி இன்பம் தரும் வெள்ளம் போல்பவனே! மேருமலையை வில்லாக ஏந்திய வீரனே! கங்கையை அணிந்த சடையை உடைய, எங்களுடைய அற்புதமான ஆனந்தக் கூத்தை நிகழ்த்துபவனே! அழகிய பொன்னால் வேயப்பட்ட அம்பலத்தில் உள்ள அரசே! காளையின் வடிவம் எழுதப்பட்ட கொடியை உடையவனே.  உன்னை, அடியவனாகிய நான் பொருந்தும் வண்ணம் நீ மனம் இசைந்து திருவுள்ளம் பற்றுவாயாக.


பாடல் எண் : 7
தனதன்நல் தோழா, சங்கரா, சூல
            பாணியே, தாணுவே, சிவனே,
கனகநல் தூணே, கற்பகக் கொழுந்தே,
            கண்கள்மூன்று உடையதுஓர் கரும்பே,
அனகனே, குமர விநாயக சனக,
            அம்பலத்து அமரர்சே கரனே,
நுனகழல் இணைஎன் நெஞ்சின்உள் இனிதாத்
            தொண்டனேன் நுகருமா நுகரே.

            பொழிப்புரை : மிக்க செல்வம் உடையவனாகிய குபேரனுடைய நண்பனே! எல்லா உயிர்களுக்கும் இன்பத்தைச் செய்பவனே! சூலப்டையைக் கையில் ஏந்தியவனே! அழிவில்லாமல் என்றும் நிலை பெற்றிருப்பவனே! மங்களமான வடிவினனே! பொன்மயமான பெரிய தூண் போல்பவனே! கற்பகத் தளிர் போலும் அழகனே! மூன்று கண்களை உடைய கரும்பு போன்ற இனியவனே! பாவம் இல்லாதவனே! முருகனுக்கும் விநாயகனுக்கும் தந்தையே! பொன்னம்பலத்தில் வந்து வணங்க நிற்கும் இந்திராதி தேவர்களுக்கும் தலைவனாக உள்ளவனே! உன் தொண்டனாகிய நான் உன் திருவடிகளை என் உள்ளத்தில் இனிமையாக அநுபவிக்குமாறு நீ திருவருள் புரிவாயாக.


பாடல் எண் : 8
திறம்பிய பிறவிச் சிலதெய்வ நெறிக்கே
            திகைக்கின்றேன் தனைத்திகை யாமே,
நிறம்பொன்னும் மின்னும் நிறைந்தசே வடிக்கீழ்
            நிகழ்வித்த நிகர்இலா மணியே,
அறம்பல திறங்கண்ட அருந்தவர்க்கு அரசாய்
            ஆலின்கீழ் இருந்தஅம் பலவா,
புறஞ்சமண் புத்தர் பொய்கள்கண் டாயைத்
            தொண்டனேன் புணருமா புணரே

            பொழிப்புரை : மாறி வருகின்ற பிறவிகளில் அகப்படும் சிறு தெய்வங்களைப் நிலையான பரம்பொருளாகக் கருதி அச் சிறு தெய்வங்களை அடைவதற்குரிய வழிகளிலே உள்ளம் திகைத்து நிற்கின்ற அடியேனைத் திகைக்காதவாறு நல்ல பொன் நிறத்தையும் மின் நிறத்தையும் உடைய ஒளி நிறைந்த உனது திருவடிகளின் கீழே ஈடுபடச்செய்த ஒப்பில்லாத மாணிக்கம் போன்றவனே! அறத்தன் பலபட்ட கூறுபாடுகளையும் சனகர் முதலிய மேம்பட்ட தவத்தோர்கள் தெளியும்படிக்கு கல்லால மரத்தின் கீழ்க் குருமூர்த்தியாய் எழுந்தருளிய  பொன்னம்பலவனே! புறச் சமயத்தினரான சமணர், புத்தர்களின் பொய்ச் சமயஙகளையும் உண்டாக்கிய உன்னை அடியவனாகிய நான் வந்து சேருமாறு அடையுமாறு நீ திருவுள்ளம் பற்றுவாயாக.


பாடல் எண் : 9
தக்கன்நல் தலையும், எச்சன்வன் தலையும்,
            தாமரை நான்முகன் தலையும்,
ஒக்கவிண்டு உருள ஒண்திருப் புருவம்
            நெறித்துஅரு ளியஉருத் திரனே,
அக்குஅணி புலித்தோல் ஆடைமேல் ஆட,
            ஆட, பொன் அம்பலத்து ஆடும்
சொக்கனே, எவர்க்கும் தொடர்வுஅரி யாயைத்
            தொண்டனேன் தொடருமா தொடரே.

            பொழிப்புரை : தக்கன் சிவநிந்தையோடு செய்த வேள்வியில் அவனது நல்ல தலையும், எச்சன் என்பவனின் வலிய தலையும், தாமரை மலரில் வீற்றிருக்கும் நான்கு முகங்களை உடையவனாகிய பிரமதேவனின் தலையும் ஒருமிக்க அறுபட்டுத் தரையில் உருளும்படி ஒளிமிக்க தமது திருப்புருவத்தை நெரித்துச் சினந்து அருளிய உருத்திரமூர்த்தியே. எலும்பு மாலையானது அழகிய புலித்தோல் ஆடையின் மீது ஆடிக்கொண்டு இருக்கு, பொற்சபையில் ஆனந்தத் திருக்கூத்தினை இயற்றும் அழகனே.  திருமால் பிரமன் முதலாய தேவர்கள் யாரும் தொடர்ந்து பற்றி அறிதற்கு அரியவனாகிய உன்னை, உன் தொண்டனாகிய நான் தொடரும் வண்ணம் நீ என்னைத் தொடர்ந்து அருள்வாயாக.


பாடல் எண் : 10
மடங்கலாய்க் கனகன் மார்புகீண் டானுக்கு
            அருள்புரி வள்ளலே, மருளார்
இடங்கொள்முப் புரம்வெந்து அவிய வைதிகத்தேர்
            ஏறிய ஏறுசே வகனே,
அடங்கவல் அரக்கன் அருள்திரு வரைக்கீழ்
            அடர்த்தபொன் னம்பலத்து அரசே,
விடங்கொள்கண் டத்துஎம் விடங்கனே, உன்னைத்
            தொண்டனேன் விரும்புமா விரும்பே.?

            பொழிப்புரை : நரசிங்க வடிவாய்த் தூணில் இருந்து வெளிப்பட்டு, இரணியகசிபுவினுடைய மார்பை நகத்தால் பிளந்த அருள் வள்ளன்மையை உடையவனாகிய சரபமூர்த்தியே! சிவநெறியை மறந்து பௌத்த நெறியில் மயங்கி நின்ற சுசீலன், சுபுத்தி, சதன்மன் என்ற அசுரர்கள் வசிக்கும் இடமான மூன்று புரங்களும் எரிந்து அழியும்படி, நான்கு வேதங்களாகிய குதிரைகள் பூட்டப்பட்ட தேரின்மேல் ஏறிய ஆண்சிங்கம் போன்றவனே.  வலிமை பொருந்திய அரக்கனாகிய இராவணனின் அகங்காரம் ஒடுங்குமாறு அவனைத் திருக்கயிலாய மலையின் கீழ் நசுக்கி அருளிய பொன்னம்பலத்து அரசே.  விடத்தைக் கண்டத்தில் தேக்கிய அழகனே. உன்னைத் தொண்டனாகிய நான் விரும்பும் வண்ணம், நீ விரும்பி அருள்வாயாக.


பாடல் எண் : 11
மறைகளும் அமரர் கூட்டமும் மாட்டாது
            அயன்திரு மாலொடு மயங்கி
முறைமுறை முறையிட்டு ஓர்வுஅரி யாயை
            மூர்க்கனேன் மொழிந்தபுன் மொழிகள்
அறைகழல் அரன்சீர் அறிவுஇலா வெறுமைச்
            சிறுமையில் பொறுக்கும்அம் பலத்துள்
நிறைதரு கருணா நிலயமே, உன்னைத்
            தொண்டனேன் நினையுமா நினையே.?

            பொழிப்புரை : வேதங்களும், தேவர்கள் கூட்டமும், பிரமனும், திருமாலோடு உள்ளம் மயங்கித் தம் முயற்சியால் உன்னை அறிய இயலாமல் மயங்கி நின்று பல முறை ஓயமிட்டும் அறிய முடியாத உன்னை அறிவிலியாகிய நான், துதித்த அற்புதமான சொற்களை, அறிவில்லாத பயன் அற்ற சிறியோரின் செயலைப் பொறுத்துக் கொள்வது போலப் பொறுத்துக் கொள்கின்ற, அம்பலத்துள் எழுந்தருளி விளங்குகின்ற நிறைந்த கருணைக்கு இருப்பிடமாக உள்ளவனே.  உன்னைத் தொண்டனாகிய நான் நினைக்கும் வண்ணம், நீ நினைத்து அருள் புரிவாயாக.
                                                            திருச்சிற்றம்பலம்


                        திருமாளிகைத் தேவர் அருளிச் செய்தது
9. 02  கோயில் - `உயர்கொடி யாடை`              பண் - பஞ்சமம்
1.     திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
உயர்கொடி ஆடை மிடைபட லத்தின்
            ஓமதூ மப்பட லத்தின்
பியர்நெடு மாடத்து அகில்புகைப் படலம்
            பெருகிய பெரும்பற்றப் புலியூர்
சியர்ஒளி மணிகள் நிரந்துசேர் கனகம்
            நிறைந்தசிற் றம்பலக் கூத்தா
மயர்அறும் அமரர் மகுடந்தோய் மலர்ச்சே
            வடிகள் என் மனத்துவைத்து அருளே.

            பொழிப்புரை : உயர்ந்த கொடிச் சீலைகள் நிறைந்திருக்கும் தொகுதிகளின்மேல், ஓமப் புகையின் கூட்டத்தோடும், புகழ் பெற்ற நெடிய மாளிகைகளில் இருந்து எழுகின்ற அகில் புகைக் கூட்டமும் கலந்து பெருகி மூடியிட்டது போன்ற தோற்றத்தினை உடைய பெரும்பற்றப் புலியூரில், சிறந்த ஒளி பொருந்திய நவமணிகள் வரிசையாகப் பதித்து இருக்கின்ற பொன்னால் வேயப்பட்ட அம்பலத்திலே உள்ள சிற்சபையில் ஆனந்த தாண்டவம் புரியும் பெருமானே. அஞ்ஞானத்தை நீக்குவதற்குக் காரணமானதும், பணிந்து வணங்கும் தேவர்களின் முடிகள் தோயப் பெற்றதுமான, தாமரை மலர் போன்ற திருவடிகள் எனது உள்ளத்திலே விளங்கத் திருவருள் புரிவாயாக.


பாடல் எண் : 2
கருவளர் மேகத் தகடுதோய் மகுடக்
            கனகமா ளிகைகலந்து எங்கும்
பெருவள முத்தீ நான்மறைத் தொழிலால்
            எழில்மிகு பெரும்பற்றப் புலியூர்த்
திருவளர் தெய்வப் பதிவிதி நிதியம்
            திரண்டசிற் றம்பலக் கூத்தா,
உருவளர் இன்பச் சிலம்பொலி அலம்பும்
            உன்அடிக் கீழதுஎன் உயிரே.

            பொழிப்புரை : நீரை மிகுதியாக முகந்த கருநிறமுடைய மேகத்தின் நடுவில் சென்று பொருந்திய சிகரங்களை உடைய பொன் மயமான மாளிகைகள் எங்கும் நிறைந்து பெருகி வளர்கின்ற,  மூன்று அக்கினிகளை ஓம்புவதோடு, நான்கு வேதங்களையும், ஓதுவதும், ஓதுவிப்பதும் ஆகிய தொழில்கள் மிகுந்த பொலிவுடன் விளங்கும் பெரும்பற்றப் புலியூர் ஆகிய செல்வம் மிகுந்த தெய்வத் தன்மை கொண்ட திருத்தலத்தில் முறைப்படி என்றும் நீங்காது பொருந்தும் சிவஞானச் செல்வம் திரண்டு கிடக்கின்ற திருச்சிற்றம்பலத்தில் ஆனந்த தாண்டவம் புரியும் பெருமானே.  என்னுடைய உயிரானது, இன்பத்தைத் தருகின்ற பொன்னிறம் மிகுந்த திருச்சலம்புகள் ஒலிக்கும் உனது திருவடிகளின் கீழ் இருக்கின்றது.


பாடல் எண் : 3
வரம்புஇரி வாளை மிளிர்மடுக் கமலம்
            கரும்பொடு மாந்திடு மேதி
பிரம்புஇரி செந்நெல் கழனிச்செங் கழுநீர்ப்
            பழனஞ்சூழ் பெரும்பற்றப் புலியூர்ச்
சிரம்புரை முடிவா னவர்அடி முறையால்
            இறைஞ்சுசிற் றம்பலக் கூத்தா,
நிரந்தரம் முனிவர் நினைதிருக் கணைக்கால்
            நினைந்துநின்று ஒழிந்ததுஎன் நெஞ்சே.

            பொழிப்புரை : கரையைக் கடந்து கீழ் மேலாகத் துள்ளிப் பாய்கின்ற வாளைகள் விளங்குகின்ற குளங்களில் மலர்ந்துள்ள தாமரை மலர்களைக் கரும்புகளோடு ஆவலாய் வயிறார உண்ட எருமைகளை உடைய, பரம்பு அடித்த செந்நெல் விளைகின்ற வயல்களாலும்,  செங்கழுநீர் மலர்கள் களையாகக் காணப்படும் நிலத்தால் சூழப்பட்ட பெரும்பற்றப் புலியூரிலே தலையின் கண் உயர்ந்த முடியினை அணிந்த இந்திராதி தேவர்கள் தங்களுக்கு உரிய முறைப்படி வந்து திருவடிகளை வணங்குகின்ற, திருச்சிற்றம்பலத்தில் ஆனந்தத் தாண்டவம் புரியும் பெருமானே! முனிவர்கள் எப்பொழுதும் விருப்புற்று, இடைவிடாமல் தியானம் செய்யும் உன் அழகிய கணைக்கால்களை, என் நெஞ்சமானது நினையும் தொழிலில் நிலைத்து நின்று, வேறு ஒன்றையும் நினைத்தலை விட்டு நீங்கி நின்றது.


பாடல் எண் : 4
தேர்மலி விழவில் குழலொலி, தெருவில்
            கூத்தொலி, ஏத்தொலி, ஓத்தின்
பேர்ஒலி பரந்து கடல்ஒலி மலியப்
            பொலிதரு பெரும்பற்றப் புலியூர்ச்
சீர்நில விலயத் திருநடத்து இயல்பில்
            திகழ்ந்தசிற் றம்பலக் கூத்தா
வார்மலி முலையாள் வருடிய திரள்மா
            மணிக்குறங்கு அடைந்ததுஎன் மதியே.

            பொழிப்புரை : தேர்கள் மிகுதியாக உலவும் திருவிழாக்காலங்களில் புள்ளாங்குழல் ஓசையும், தெருவில் கூத்துக்கள் நிகழ்த்துதலால் ஏற்பட்ட பலவிதமான ஓசையும், அடியார்கள் இறைவனைத் துதிக்கின்ற துதிகளின் ஒலியும், வேதங்களை ஓதுவதால் உண்டாகிய பெரிய ஒலியும் பரவி நின்று கடல் ஒலியினும் மிகுந்து ஒலிக்கின்ற  பெரும்பற்றப் புலியூரில், சிறப்புடைய தாளத்திற்கு இசைய ஆடும் தெய்வத் திருக்கூத்தின் இயல்பிலே சிறப்புற்று விளங்குகின்ற திருச்சிற்றம்பலத்தில் ஆனந்தத் தாண்டவம் புரியும் பெருமானே! கச்சு அணிந்த தனங்களை உடைய உமாதேவியாரால் மென்மையாக வருடப்பட்ட திருண்ட பெரிய அழகிய உனது தொடைகளை எனது அறிவு போய்ப் பொருந்தியது.


பாடல் எண் : 5
நிறைதழை வாழை நிழற்கொடி நெடுந்தெங்கு
            இளங்கமுகு உளங்கொள்நீள் பலமாப்
பிறைதவழ் பொழில்சூழ் கிடங்கிடைப் பதண
            முதுமதில் பெரும்பற்றப் புலியூர்ச்
சிறைகொள்நீர்த் தரளத் திரள்கொள்நித் திலத்த
            செம்பொற்சிற் றம்பலக் கூத்தா,
பொறையணி நிதம்பப் புலியதள் ஆடைக்
            கச்சுநூல் புகுந்ததுஎன் புகலே.

            பொழிப்புரை : தழைத்த வாழை மரங்களும், நிழலைச் செய்கின்ற பூங்கொடிகளும், நீண்டு உயர்ந்த தென்னை மரங்களும், இளமையான பாக்கு மரங்களும், மனத்தைக் கவருகின்ற பெரிய பலா மரங்களும், மா மரங்களும், பிறைச் சந்திரன் தவழும் சோலைகளும் நெருங்கிய அகழியினிடத்தே உல் மேடைகளைக் கொம்டுள்ள பழைய மதில்களால் சூழப்பட்ட பெரும்பற்றப் புலியூரிலே உள்ள, கரைகள் கட்டித் தடுக்கப்பெற்ற நீரினிடத்தே சிப்பியில் தோன்றிய திரண்ட முத்துவகைகள் பதிக்கப்பெற்ற செம்பொன்னினால் வேயப்பட்ட சிற்சபையில் ஆனந்தத் தாண்டவம் புரியும் பெருமானே.  உனது அரையில் கட்டிய பாரத்தை உடைய அவகிய புலித்தோல் ஆடைமேல் கட்டி உல்ள நூல் கச்சையில் எனது விருப்பம் புகுந்துகொண்டது.


பாடல் எண் : 6
அதுமதி இதுஎன்று அலந்தலை நூல்கற்று
            அழைப்புஒழிந்து அருமறை அறிந்து
பிதுமதி வழிநின்று ஒழிவுஇலா வேள்விப்
            பெரியவர் பெரும்பற்றப் புலியூர்ச்
செதுமதிச் சமணும் தேரரும் சேராச்
            செல்வச்சிற் றம்பலக் கூத்தா
மதுமதி வெள்ளத் திருவயிற்று உந்தி
            வளைப்புண்டுஎன் உளம்மகிழ்ந் ததுவே.

            பொழிப்புரை : `அதுதான் அறிவு, இதுதான் அறிவு` என ஒரு வழிப்படாது வருந்தி மனத்தை அலையச்செய்யக் காரணமாகிய பலநூல்களையும் கற்றுப் பலவாறு பிறரை வாதுக்கு அழைத்து, தம் கொள்கைகளைப் பேசும் செயலை விடுத்து, அரிய வேதங்களைப் பொருள் தெரிந்து ஓதி நீங்குதல் இல்லாத வேள்விகளைச் செய்கின்ற அந்தணர்கள் வாழ்கின்ற பெரும்பற்றப் புலியூரிலே, அற்ப அரிவினை உடைய சமணர்களும் பௌத்தர்களும் அணுகாத திருவருட்செல்வம் நிறைந்த திருச்சபையில் ஆனந்தத் தாண்டவம் புரியும் பெருமானே.  தேன்போலும் இன்ய அறிவுப் பெருக்கத்தில் அழுந்தி, அழகிய உனது திருவயிற்றில் உள்ள கொப்பூழின் அழகிலே கவரப்பட்டு, அதைக் கண்டு அநுபவித்து என் உள்ளம் மகிழ்ச்சி அடைந்தது.


பாடல் எண் : 7
பொருவரைப் புயத்தின் மீமிசைப் புலித்தோல்
            பொடியணி பூணநூல் அகலம்
பெருவரை புரைதிண் தோளுடன் காணப்
            பெற்றவர் பெரும்பற்றப் புலியூர்த்
திருமரு வுதரத் தார்திசை அடைப்ப
            நடஞ்செய்சிற் றம்பலக் கூத்தா!
உருமரு வுதரத் தனிவடம் தொடர்ந்து
            கிடந்ததுஎன் உணர்வுஉணர்ந்து உணர்ந்தே.

            பொழிப்புரை : போர் செய்ய வல்ல மலையைப் போன்ற புயங்களின் மீது பொருந்திய புலித்தோலையும், திருநீற்றை அணிந்து பூணூலைத் தாங்கிய திருமார்பினையும், பெரிய மலையை ஒத்த உறுதியான தோள்களையும் கண்டு மகிழும் பேறு பெற்றவராகிய பெரும்பற்றப் புலியூரில் வாழும் செல்வம் பொருந்திய தகுதியை உடைய தில்லை மூவாயிரவர் நான்கு திசைகளிலும் நெருங்கி நின்று வணங்க ஆனந்தத் தாண்டவம் புரியும் பெருமானே! அழகுடன் விளங்கும் உன் வயிறுவரை பொருந்திய ஒப்பற்ற உருத்திராக்க மாலையில் என் அறிவு நிலைத்து நின்று அறிந்து அறிந்து அனுபவித்து, வேறு தொழில் அற்றுக் கிடந்தது.


பாடல் எண் : 8
கணிஎரி விசிறுகரம் துடி விடவாய்க்
            கங்கணம் செங்கைமற்று அபயம்
பிணிகெட இவைகண்டு உன்பெரு நடத்தில்
            பிரிவிலார் பெரும்பற்றப் புலியூர்த்
திணிமணி நீல கண்டத்துஎன் அமுதே,
            சீர்கொள்சிற் றம்பலக் கூத்தா.
அணிமணி முறுவற் பவளவாய்ச் செய்ய
            சோதியுள் அடங்கிற்றுஎன் அறிவே.

            பொழிப்புரை : சிறப்பாக எண்ணத்தக்க மழுவாயுதமும், வீசுகின்ற திருக்கையும், உடுக்கையும், விடத்தை வாயிலே உடைய பாம்பாகிய கங்கணமும், அபயம் அளிக்கின்ற செங்கையும் ஆகிய இவற்றைத் தம் பிறவிப்பிணி ஒழியுமாறு தரிசித்து, உன்னுடைய பெரிய திருநடனத்தினைக் காணுதலில் இருந்து நீங்காதவர்களாகிய பெரியோர்கள் வாழும் பெரும்பற்றப் புலியூரில் எழுந்தருளி உள்ள மிகுந்த நீலநிறம் பொருந்திய மணி போல விளங்கும் கண்டத்தை உடைய எனது அமுதம் போன்றவனே! சிறப்புப் பொருந்திய திருச்சிற்றம்பலத்தில் ஆனந்தத் தாண்டவம் புரியும் பெருமானே! உனது அழகிய முத்துப் போன்ற பற்களை உடைய, உன் பவளம் போன்ற சிவந்த வாயின் செம்மையான ஒளியினுள் எனது அறிவானது ஒடுங்கிக் கிடக்கின்றது.


பாடல் எண் : 9
திருநெடு மால்இந் திரன்அயன் வானோர்
            திருக்கடைக் காவலில் நெருக்கிப்
பெருமுடி மோதி உகுமணி முன்றில்
            பிறங்கிய பெரும்பற்றப் புலியூர்ச்
செருநெடு மேரு வில்லின்முப் புரந்தீ
            விரித்தசிற் றம்பலக் கூத்தா,
கருவடி குழைக்காது அமலச்செங் கமல
            மலர்முகம் கலந்ததுஎன் கருத்தே.

            பொழிப்புரை : திருமகளோடு கூடிய நீண்ட வடிவு கொண்டு உலகளந்தவனாகிய திருமாலும், இந்திரனும்,பிரமனும் முதலான ஏனைய தேவர்கள் யாவரும் உன்னைத் தரிசிக்க வரும் போது, திருநந்தி தேவரின் காவல் பொருந்திய திருக்கோயில் வாயிற்படியினிடத்து நின்று உள்ளே புக முடியாமல் ஒருவரோடு ஒருவர் நெருக்கப்பட்டு, பெரிய மணிமுடிகள் ஒன்றோடொன்று மோதி, அதனால் நவமணிகள் கீழே சிந்தி ஒளிவிடும் முற்றம் விளங்கிய பெரும்பற்றப் புலியூரிலே உள்ள திருச்சிற்றம்பலத்தில், போரிலே மீண்ட மேருமலையாகிய வில்லை ஏந்திக் கொண்டு திரிபுரத்தையும் தீக்கு இரையாக்கிய ஆனந்தக் கூத்தனே! அடியேனுடைய பிறவிக் கடலை வற்றச் செய்யும் குண்டலம் அணிந்த திருச்செவியினிடத்தும், ஆணவ மலத்தைப் போக்கும் செந்தாமரை மலர் போன்ர திருமுகத்தினிடத்தும் என்னுடைய கருத்தானது கலந்து பொருந்தியது.


பாடல் எண் : 10
ஏர்கொள்கற் பகம்ஒத்து இருசிலைப் புருவம்,
            பெருந்தடங் கண்கள் மூன்று உடைஉன்
பேர்கள்ஆ யிரம்நூ றாயிரம் பிதற்றும்
            பெற்றியோர் பெரும்பற்றப் புலியூர்ச்
சீர்கொள்கொக்கு இறகும் கொன்றையும் துன்று
            சென்னிச்சிற் றம்பலக் கூத்தா
நீர்கொள் செஞ் சடைவாழ் புதுமதி மத்தம்
            நிகழ்ந்தஎன் சிந்தையுள் நிறைந்தே.

            பொழிப்புரை : அழகு பொருந்திய கற்பக மரத்தை ஒத்தவனாகிய அழகிய வில் போன்ற புருவங்களும், பெரிய நீண்ட கண்கள் மூன்றும் உடைய உன்னுடைய ஆயிர இலட்சம் திருப் பெயர்களை பத்தி மேலீட்டினால் பிதற்றுகின்ற இயல்பினை உடைய சான்றோர்கள் வாழும் பெரும்பற்றப் புலியூரில் சிறப்புப் பொருந்திய கொக்கு மந்தாரை மலரும், கொன்றை மலரும் பொருந்திய திருமுடியினை உடையவனாய்த் திருச்சிற்றம்பலத்தில் ஆனந்தத் தாண்டவம் புரியும் பெருமானே! கங்கையைத் தரித்த உனது சிவந்த சடையில் வாழுகின்ற பிறைச் சந்திரனும் அன்று அலர்ந்த ஊமத்தமலரும் என் உள்ளத்தில் நிறைந்து உலவுகின்றன.


பாடல் எண் : 11
காமன்அக் காலன் தக்கன்மிக்க எச்சன்
            படக்கடைக் கணித்தவன் அல்லாப்
பேய்மனம் பிறிந்த தவப்பெருந் தொண்டர்
            தொண்டனேன் பெரும்பற்றப் புலியூர்ச்
சேமநல் தில்லை வட்டங்கொண்டு ஆண்ட
            செல்வச்சிற் றம்பலக் கூத்தா,
பூமலர் அடிக்கீழ்ப் புராணபூ தங்கள்
            பொறுப்பர்என் புன்சொலின் பொருளே.

            பொழிப்புரை : மன்மதனும், இயமனும், தக்கனும், தவவிலமை மிக்க வேள்வித்தலைவனாகிய எச்சனும் அழியுமாறு செய்து பின்பு அவர்களுக்குத் திருவருள் புரிந்த உன்னை அல்லாத பேய்த்தன்மை உடைய பிற தெய்வங்களை மனத்தினாலும் நினைக்காமல் நீங்கி நின்ற தவத்தினால் மேம்பட்ட திருத்தொண்டர்களுக்குத் தொண்டனாகிய என்னை, பெரும்பற்றப் புலியூராகிய பாதுகாவல் பொருந்திய தில்லையம்பதியை த் தனது இருப்பிடமாகக் கொண்டு, திருவருட் செல்வம் நிறைந்த திருச்சிற்றம்பலத்தில் ஆனந்தத் தாண்டவம் புரியும் பெருமானே! உன்னுடைய தாமரை மலர் போன்ற திருவடியின் கீழ் உள்ள பழைய பூதகணத்தார்கள் அடியேனுடைய அற்பமான துதிச்சொற்களின் பொருளைப் பொறுத்தருளுவார்கள்.
திருச்சிற்றம்பலம்


                        திருமாளிகைத் தேவர் அருளிச் செய்தது
9. 03  கோயில் - ``உறவாகிய யோகம்``          பண் - பஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
உறவா கியயோ கமும்போ கமுமாய்
            உயிராளீ என்னும்,என் பொன்ஒருநாள்,
சிறவா தவர்புரம் செற்ற கொற்றச்
            சிலைகொண்டு பன்றிப்பின் சென்றுநின்ற
மறவா என்னும், மணி நீரருவி
            மகேந்திர மாமலை மேல்உறையும்
குறவா என்னும், குணக் குன்றே என்னும்,
            குலாத்தில்லை அம்பலக் கூத்தனையே.

            பொழிப்புரை : திருமகள் போன்ற பேரழகுடைய எனது மகள், விளங்கும் திருத்தில்லையிலே திருச்சிற்றம்பலத்தில் ஆனந்தக் கூத்தாடும் எம்பெருமானைக் குறித்து, ``உயிர்களுக்குத் தொடர்பான வீடுபேறாகவும், அவ்வீடுபேற்று இன்பமாகவும் இருந்து உயிர்களை ஆட்கொள்பவனே! முன்னொரு காலத்து உயிர்ப்பண்பினால் மேன்மை பெறாதவர்களாகிய அசுரர்களின் மும்மதில்களை அழித்த வெற்றி பொருந்திய வில்லைக் கையில் ஏந்தி, மூகாசுரன் என்னும் பன்றியின் பின்னே அதனைக் கொல்வதற்காகத் துரத்திச் சென்று நின்ற வீரனே! இரத்தினங்களைக் கொழித்துக் கொண்டு ஓடிவரும் தெளிந்த நீரை உடைய அருவிகள் வீழும் பெரிய மகேந்திர மலைமீது விரும்பித் தங்கியிருக்கும் குறிஞ்சி நிலத் தலைவனே! நற்குணங்களுக்கு இருப்பிடமாகிய மலை போல்பவனே!`` என்று பலவாறு அவனது பண்புகளைக் குறிப்பிட்டு அவனை அழைத்துப் புலம்புகிறாள்.

  
பாடல் எண் : 2
காடுஆடு பல்கணம் சூழக் கேழற்
            கடும்பின் நெடும்பகல் கான்நடந்த
வேடா, மகேந்திர வெற்பா, என்னும்,
            வினையேன் மடந்தைவிம் மாவெருவும்,
சேடா என் னும், செல்வர்மூவாயிரர்
            செழுஞ்சோதிஅந்தணர் செங்கைதொழும்
கோடா என்னும், குணக் குன்றே என்னும்,
            குலாத்தில்லை யம்பலக் கூத்தனையே.

            பொழிப்புரை : தீவினையேன் பெற்றமகள் அழுகையை அடக்கிக் கொண்டு தேம்பி அஞ்சுதலோடு, விளங்குகின்ற தில்லையம்பதியில் திருச்சிற்றம்பலத்தில் ஆனந்தத் தாண்டவம் புரியும் பெருமானைக் குறித்து ``சுடுகாட்டிலே ஆடும் பல்வகையான பூதகணகளும் வேடுவர்களாகி உருமாறிச் சூழ்ந்து வரக் கொடிய பன்றியின் பின் நெடிய பகற் பொழுதில் காட்டில் நடந்த வேடுவனே! மகேந்திர மலைக்குத் தலைவனே! எல்லா உலகங்களும் அழிந்த பின்னும் எஞ்சி நிற்கும் பெருமையை உடையவனே! உன் திருவடிகளை ஏத்தும் செல்வத்தால் சிறந்த  மூவாயிர தில்லைவாழ் அந்தணர்கள் தமது சிவந்த கைகளைக் கூப்பித் தொழும் கூத்தனே! குணக்குன்றே!`` என்று பலவாறாகச் சொல்லுவாள்.


பாடல் எண் : 3
கானே வருமுரண் ஏனம் எய்த
            களிஆர் புளினநற் காளாய் என்னும்,
வானே தடவு நெடுங் குடுமி
            மகேந்திர மாமலைமேல் இருந்த
தேனே என்னும், தெய்வ வாய்மொழியார்
            திருவாளர் மூவா யிரவர் தெய்வக்
கோனே என் னும், குணக் குன்றே என்னும்,
            குலாத்தில்லை அம்பலக் கூத்தனையே.

            பொழிப்புரை : என்மகள் விளங்குகின்ற தில்லையம்பதியில் திருச்சிற்றம்பலத்தில் ஆனந்தத் தாண்டவம் புரியும் பெருமானைக் குறித்து, `காட்டில் உலவிய வலிய பன்றி மீது அம்பைச் செலுத்திய செருக்கு மிகுந்த வேடர் குலத்துச் சிறந்த காளைப் பருவத்தனே! ஆகாயத்தை அளாவுகின்ற நீண்ட சிகரங்களை உடைய பெரிய மகேந்திரமலைமீது இருந்த தேன் போன்ற இனியவனே! தெய்வத்தன்மை பொருந்திய வேதத்தை ஓதுகின்றவர்களும், திருவருட் செல்வத்தை உடையவர்களும் ஆகிய தில்லை மூவாயிரவருக்குத் தெய்வத்தலைவனே! குணக்குன்றே!` என்று பலவாறு சொல்லுவாள்.


பாடல் எண் : 4
வெறிஏறு பன்றிப்பின் சென்றுஒருநாள்
            விசயற்கு அருள்செய்த வேந்தே என்னும்,
மறிஏறு சாரல் மகேந்திரமா
            மலைமேல் இருந்த மருந்தே என்னும்,
நெறியே என்னும், நெறிநின்றவர்கள்
            நினைக்கின்ற நீதிவே தாந்தநிலைக்
குறியே என்னும், குணக் குன்றே என்னும்,
            குலாத்தில்லை அம்பலக் கூத்தனையே.

            பொழிப்புரை : என் மகள் விளங்குகின்ற தில்லையம்பதியில் திருச்சிற்றம்பலத்தில் ஆனந்தத் தாண்டவம் புரியும் பெருமானைக் குறித்து, ` முன் ஒருநாள் கோபம் மிகுந்து ஓடும்  பன்றியைத் துரத்திக் கொண்டு அதன் பின்னே சென்று அருச்சுனனுக்கு அருள் செய்த அரசே! மான்கள் உலாவும் சரிவுகளை உடைய பெரிய மகேந்திர மலைமேல் வீற்றிருந்த பிறவிப்பிணிக்கு மருந்து போன்றவனே! அடியார்கள் தன்னை அடையத் தானே வழியாகவும் இருக்கின்றவனே! உன்னை அடைவதற்கு உன்னையே கதியாகக் கருதி வாழ்கின்ற அடியார்கள் பேறாக நினைக்கின்ற நீதியோடு கூடிய வேதாந்தங்கலில் கூறப்பெற்றுள்ள நிலைத்த இலக்காக இருப்பவனே! நற்குணக் குன்றே!` என்று பலவாறாகச் சொல்லுவாள்.


பாடல் எண் : 5
செழுந் தென்றல் அன்றில்இத் திங்கள் கங்குல்
            திரைவீரை தீங்குழல் சேவின்மணி
எழுந்துஇன்றுஎன் மேல்பகை ஆடவாடும்
            எனைநீ நலிவதுஎன் என்னே என்னும்,
அழுந்தா மகேந்திரத் தந்தரப்புட்கு
            அரசுக்கு அரசே, அமரர்தனிக்
கொழுந்தே என்னும், குணக் குன்றே என்னும்,
            குலாத்தில்லை அம்பலக் கூத்தனையே.

            பொழிப்புரை : என்மகள் விளங்குகின்ற தில்லையம்பதியில் திருச்சிற்றம்பலத்தில் ஆனந்தத் தாண்டவம் புரியும் பெருமானைக் குறித்து,   `செழுமையான தென்றல் காற்று, அன்றில் என்னும் பறவை, ஒளிவீசும் இந்தச் சந்திரன், இராப் பொழுது, கடலின் அலையோசை, இனிய இசையை இசைக்கும் குழலின் ஓசை, எருதின் கழுத்தில் கட்டப்பட்ட மணியின் ஓசை ஆகிய இவைகள் (இவையெல்லாம் மாலைக் கால நிகழ்வுகள். பிரிந்தாரை வருத்துவன) தம்முழு ஆற்றலோடும் புறப்பட்டு என்மீது பகை கொண்டு துன்புறுத்தவும் அதனால் வாடிக் கொண்டிருக்கும் அடியேனை நீயும் வருத்துவது ஏன்? அழிவில்லாத மகேந்திர மலையில் தங்கி வானத்தில் உலவும் பறவைகளுக்கு அரசனான கருடனுக்கு அருள் செய்த தலைவனே! தேவர்களுக்கு ஒப்பற்ற இளம் தளிர் போன்றவனே! குணக்குன்றே!` என்று பலவாறாகச் சொல்லுவாள்.


பாடல் எண் : 6
வண்டுஆர் குழல்உமை நங்கை முன்னே
            மகேந்திரச் சாரல் வராகத் தின்பின்
கண்டார் கவலவில் லாடி வேடர்
            கடிநா யுடன்கை வளைந்தாய் என்னும்,
பண்டாய மலர்அயன் தக்கன் எச்சன்
            பகலோன் தலை பல்ப சுங்கண்
கொண்டாய் என்னும், குணக் குன்றே என்னும்,
            குலாத்தில்லை அம்பலக் கூத்தனையே.

            பொழிப்புரை : என் மகள் விளங்குகின்ற தில்லையம்பதியில் திருச்சிற்றம்பலத்தில் ஆனந்தத் தாண்டவம் புரியும் பெருமானைக் குறித்து, `வண்டுகள் மொய்க்கின்ற கூந்தலை உடைய உமாதேவியாருக்கு முன்னே, மகேந்திரமலைச் சாரலில் பன்றியின் பின்னே, கண்ட தேவர்கள் கவலைப்படும்படி வில்லை ஏந்தி வேடர் களோடு, விரைந்து செல்லும் வேட்டைநாய்களும் உடன்வரப் பன்றி இருந்த பக்கத்தை வளைத்துக் கொண்டு அம்பு எய்தவனே! பழமையாகிய பிரமன், தக்கன், எச்சன், சூரியன் இவர்களுடைய தலைகளையும், பற்களையும், பசியகம்களையும் தக்கயாகத்தில் பறித்துக் கொண்டவனே, குணக்குன்றே என்று சொல்லுவாள்.

   
பாடல் எண் : 7
கடுப்பாய்ப் பறைகறங்க, கடுவெம்
            சிலையும் கணையும் கவணும் கைக்கொண்டு
உடுப்புஆய தோல் செருப் புச்சுரிகை
            வராகம்முன் ஓடு விளிஉளைப்ப
நடப்பாய் மகேந்திர நாத, நாதாந்தத்து
            அரையாஎன் பார்க்கு,நா தாந்தபதம்
கொடுப்பாய் என்னும், குணக் குன்றே என்னும்,
            குலாத்தில்லை அம்பலக் கூத்தனையே.

            பொழிப்புரை : என் மகள் விளங்குகின்ற தில்லையம்பதியில் திருச்சிற்றம்பலத்தில் ஆனந்தத் தாண்டவம் புரியும் பெருமானைக் குறித்து, `மிகக் கடுமையாகப் பறைகள் ஒலிக்க, விரைந்து அம்பைச் செலுத்தும் கொடிய வில், அம்பு, கவண் என்னும் கல்லைச் செலுத்தும் கருவி இவற்றைக் கைகளில் ஏந்தி, புலித்தோலை உடுத்துச் செருப்பினை அணிந்து சிறுகத்தியையும் தரித்தவனாய், பன்றியின் முன்னே கூக்குரலிட்டுக் கொண்டு விரைந்து நடப்பவனே! மகேந்திர மலைத் தலைவனே! நாததத்துவத்தின் முடிவாய் இருக்கின்ற தலைவனே! என்று வழிபட்டு வேண்டும் அடியவர்களுக்கு நாததத்துவத்தையும் கடந்த சிவலோகப் பதவியை வழங்குபவனே! குணக்குன்றே!` என்று சொல்லுவாள்.


பாடல் எண் : 8
சேஏந்து வெல்கொடி யானே என்னும்,
            சிவனே என்சேமத் துணையே என்னும்,
மாஏந்து சாரல் மகேந்தி ரத்தின்
            வளர்நாயகா, இங்கே வாராய் என்னும்,
பூஏந்தி மூவா யிரவர் தொழப்
            புகழ்ஏந்து மன்று பொலிய நின்ற
கோவே என்னும், குணக் குன்றே என்னும்,
            குலாத்தில்லை அம்பலக் கூத்தனையே.

            பொழிப்புரை : என் மகள் விளங்குகின்ற தில்லையம்பதியில் திருச்சிற்றம்பலத்தில் ஆனந்தத் தாண்டவம் புரியும் பெருமானைக் குறித்து, `இடபத்தின் வடிவம் எழுதப் பெற்றுள்ள வெற்றி பொருந்திய கொடியை உடையவனே, சிவபெருமானே, எநது உயிரின் பாதுகாவலாக உள்ளவனே, பன்றி முதலிய விலங்குளைத் தன்னிடத்தே கொண்டு உள்ள மலைச்சாரலை உடைய மகேந்திர மலையினிடத்து எழுந்தருளிய தலைவனே, நீ இங்கே வருவாயாக, தில்லை மூவாயிரவராகிய அந்தணர்கள் மலர்களைக் கையில் ஏந்தி நின்று வணங்கப் புகழ்மிக்க பொன்னம்பலத்திலே சிறப்புடன் வீற்றிருக்கும் அரசே, குணக்குன்றே' என்று சொல்லுவாள்.


பாடல் எண் : 9
தரவார் புனம்,சுனைத் தாழ் அருவி,
            தடங்கல் உறையும் மடங்கல்அமர்
மரவார் பொழில் எழில் வேங்கை எங்கும்
            மழைசூழ் மகேந்திர மாமலைமேல்
சுரவாஎன்னும், சுடர்நீள் முடிமால்
            அயன்இந் திரன்முதல் தேவர்க்குஎல்லாம்
குரவா என்னும், குணக் குன்றே என்னும்,
            குலாத்தில்லை அம்பலக் கூத்தனையே.

            பொழிப்புரை : என் மகள் விளங்குகின்ற தில்லையம்பதியில் திருச்சிற்றம்பலத்தில் ஆனந்தத் தாண்டவம் புரியும் பெருமானைக் குறித்து, `மிக்க பயன் தரும்படியான தினைப்புனங்களையும், மலைச்சுனைகளிலிருந்து கீழ் நோக்கி இறங்கி ஓடும் அருவிகளையும் உடைய பெரிய கல் பாறைகளின் கீழ் உள்ள குகைகளில் வசிக்கும் போர் புரியும் சிங்கங்கள், குங்கும மரங்கள் பொருலந்திய சோலைகள், அழகிய வேங்கை மரங்கள் ஆகிய இவை நிறைந்ததும்,  எங்கும் சூழ்ந்த மேகங்கள் இவற்றை உடைய பெரிய மகேந்திரமலைமேல் எழுந்தருளியிருக்கும் தேவனே! ஒளிபொருந்திய நீண்ட கிரீடங்களைத் தரித்த திருமால், பிரமன், இந்திரன் முதலிய தேவர்களுக்கெல்லாம் குருவாக விளங்குபவனே! குணக்குன்றே!` என்று சொல்லுவாள்.


பாடல் எண் : 10
திருநீறு இடாஉருத் தீண்டேன் என்னும்,
            திருநீறு மெய்திரு முண்டம் தீட்டிப்
பெருநீல கண்டன் திறங்கொண்டுஇவள்
            பிதற்றிப் பெருந்தெரு வேதிரியும்,
வருநீர் அருவி மகேந்திரப்பொன்
            மலையில் மலைமக ளுக்குஅருளும்
குருநீ என்னும், குணக் குன்றே என்னும்,
            குலாத்தில்லை அம்பலக் கூத்தனையே.

            பொழிப்புரை : என் மகள் விளங்குகின்ற தில்லையம்பதியில் திருச்சிற்றம்பலத்தில் ஆனந்தத் தாண்டவம் புரியும் பெருமானைக் குறித்து, திருநீறு அணியாத உருவத்தைத் தொடமாட்டேன் என்று சொல்லுவாள்.  திருநீற்றைத் தனது உடம்பின் மேலும், அழகிய நெற்றியின் மேலும் அணிந்து, பெருமை பொருந்திய திருநீலகண்டத்தை உடைய சிவபெருமானுடைய பொருள்சேர் புகழைத் தன் வசம் இழந்து சொல்லிக்கொண்டு, பெரிய தெருக்களின் வழியே திரிந்து கொண்டு இருப்பாள்.
பருவமழையால் பெருகி இறங்கி ஓடி வருகின்ற நீர் அருவிகளை உடைய மகேந்திரமாகிய அழகிய மலையில் ஆகமப்பொருளை உமாதேவியாருக்கு உபதேசிக்கும் குருமூர்த்தியே! குணக்குன்றே!` என்று சொல்லுவாள்.


பாடல் எண் : 11
உற்றாய் என்னும், உன்னை அன்றி மற்றுஒன்று
            உணரேன் என்னும், உணர் வுள்கலக்கப்
பெற்றாய ஐந்தெழுத் தும்பிதற்றிப்
            பிணிதீர் வெண்ணீறுஇடப் பெற்றேன் என்னும்,
சுற்றாய சோதி மகேந்திரம் சூழ
            மனத்துஇருள் வாங்கி,சூ ழாத நெஞ்சில்
குற்றாய் என்னும், குணக் குன்றே என்னும்,
            குலாத்தில்லை அம்பலக் கூத்தனையே.

            பொழிப்புரை : என்மகள் விளங்குகின்ற தில்லையம்பதியில் திருச்சிற்றம்பலத்தில் ஆனந்தத் தாண்டவம் புரியும் பெருமானைக் குறித்து, எனக்கு மிக நெருங்கிய உறவினனே என்று சொல்லுவாள். உன்னை அல்லாமல் வேறு ஒன்றையும் அறியேன் என்று சொல்லுவாள். உணர்ச்சிகள் பதிஞானத்துடன் கலந்து, சிவமயமே ஆகிப் பல நன்மைகளைத் தரவல்லதாகிய திருவஞ்செழுத்தை இடைவிடாமல் செபித்து, உடல் பிணியும் உயிர்ப் பிணியும் நீங்கும் பொருட்டு, திருவெண்ணீற்றை அணியும் பேறு பெற்றேன் என்று சொல்லுவாள்.  சுற்றிலும் பொருந்திய ஒளி மயமான மகேந்திர மலையை வலம் வந்து, மனத்தில் உள்ள அஞ்ஞான இருளைப் போக்கிக் கொண்டு சிவத்தியானம் செய்யாதவர் நெஞ்சில் பொருந்தாதவனே, குணக்குன்றே என்று சொல்லுவாள்.  


பாடல் எண் : 12
வேறுஆக உள்ளத்து உவகைவிளைத்து
            அவனிச் சிவலோக வேத வென்றி
மாறாத மூவா யிரவரையும்
            எனையும் மகிழ்ந்துஆள வல்லாய் என்னும்,
ஆறுஆர் சிகர மகேந்திரத்துஉன்
            அடியார் பிழைபொறுப்பாய், அமுதுஓர்
கூறாய் என்னும், குணக் குன்றே என்னும்,
            குலாத்தில்லை அம்பலக் கூத்தனையே.

            பொழிப்புரை : என் மகள் விளங்குகின்ற தில்லையம்பதியில் திருச்சிற்றம்பலத்தில் ஆனந்தத் தாண்டவம் புரியும் பெருமானைக் குறித்து,  மற்றவர்களில் இருந்து வேறுபட்ட வகையில் சிறப்பாக என் உள்ளத்திலே மகிழ்ச்சியை உண்டாக்கி, பூலோகத்தில் சிவலோகம் என்று பொற்றப் பெறும் தில்லையம்பதியில் வேதம் ஓதுதலால் எய்தும் சிறப்பு மாறாத மூவாயிரவராகிய அந்தணர்களோடு அடியேனையும் ஒரே விதமாகத் திருவுள்ளம் மகிழ்ந்து ஆட்கொள்ள வல்லவனே! அருவிகள் நிறைந்த சிகரங்களைக் கொண்டுள்ள மகேந்திர மலையில் இருந்து, உன் மெய்யடியவர்களின் பிழைகளை எல்லாம் பொறுத்து அருளுகின்றவனே! உமாதேவியாரைத் தனது திருமேனியின் ஒரு பாகமாக உடையவனே! குணக்குன்றே!` என்று சொல்லுவாள்.
                                               
                                                            திருச்சிற்றம்பலம்


                        திருமாளிகைத் தேவர் அருளிச் செய்தது
9. 04  கோயில் - `` இணங்கிலா ஈசன்``           பண் - காந்தாரம்
                                                திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
இணங்குஇலா ஈசன் நேசத்து
            இருந்தசித் தத்தி னேற்கு
மணங்கொள்சீர்த் தில்லை வாணன்
            மணஅடி யார்கள் வண்மைக்
குணங்களைக் கூறா வீறுஇல்
            கோறைவாய்ப் பீறல் பிண்டப்
பிணங்களைக் காணா கண், வாய்
            பேசாதுஅப் பேய்க ளோடே.

            பொழிப்புரை : தனக்கு ஒப்பார் இல்லாதவனாகிய சிவபெருமானிடத்தில் அன்பில் பொருந்தி இருந்த மனத்தை உடைய அடியேனைப் பொறுத்த வகையில், எப்போதும் மகிழ்ச்சியோடு கூடிய சிறப்பு நிறைந்த பல திருவிழாக்களைக் கொண்ட சிறப்பினை உடைய தில்லைப்பதியில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானுடைய அடியார்களுடைய வள்ளன்மைக் குணங்களைப் புகழ்ந்து கூறாத, பெருமை இல்லாத கொடிய வாயை உடைய, ஒன்பது ஓட்டைகளை உடைய உடம்பைச் சுமக்கும், செத்தாரில் வைத்து எண்ணப் படுபவர்களை அடியேனுடைய கண்கள் காணமாட்டா. எனது வாயும் பயனற்று அலையும் அந்தப் பேய்களோடு பேசாது.


பாடல் எண் : 2
எட்டுஉரு விரவி, என்னை
            ஆண்டவன், ஈண்டு சோதி
விட்டுஇலங்கு அலங்கல் தில்லை
            வேந்தனைச் சேர்ந்தி லாத
துட்டரைத் தூர்த்த வார்த்தைத்
            தொழும்பரைப் பிழம்பு பேசும்
பிட்டரைக் காணா கண், வாய்
            பேசாது,அப் பேய்க ளோடே.

            பொழிப்புரை : நிலம், நீர், தீ, காற்று, வானம், சூரியன், சந்திரன், ஆன்மா என்னும் எட்டு உருவங்களோடு கலந்து நின்று என்னை ஆட்கொண்டவனும், திரண்ட சோதி வடிவினனும் ஆகிய, வளரும் ஒளி பிரகாசிக்கின்ற மாலையை அணிந்த தில்லையம்பதிக்குத் தலைவனாகிய எம்பெருமானை, அடியவராக வந்து அடையாத தீயவர்களையும், இழிந்த வார்த்தைகளைப் பேசிக்கொண்டு திரியும் குற்றேவல் செய்பவர்களையும், கொடி வார்த்தைகளைப் பேசும் சைவநெறிக்குப் புறம்பானவர்களையும் எனது கண்கள் காணமாட்டா.  எனது வாயும் பயனற்று அலையும் அந்தப் பேய்களோடு பேசாது.


பாடல் எண் : 3
அருள்திரள் செம்பொற் சோதி,
            அம்பலத் தாடு கின்ற
இருள்திரள் கண்டத்து எம்மான்,
            இன்பருக்கு அன்பு செய்யா
அரட்டரை, அரட்டுப் பேசும்
            அழுக்கரை, கழுக்க ளாய
பிரட்டரைக் காணா கண்,வாய்
            பேசாது,அப் பேய்க ளோடே.

            பொழிப்புரை : அருள் திரண்டு வடிவெடுத்தால் போன்ற செம்பொற் சோதியனும், பொன்னம்பலத்தில் ஆனந்தத் தாண்டவம் செய்கின்ற கருநிறம் பொருந்திய கண்டத்தை உடைய எமது தலைவனும் ஆகிய சிவபெருமானிடத்து அன்பு செலுத்தி, அதனால் இன்பம் அடையும் அடியவர்களுக்கு அன்பைக் காட்டாத குறும்பு செய்பவர்களையும், கூச்சலிட்டுப் பயனற்ற வார்த்தைகளைப் பேசுகின்ற பொறாமைக் குணம் உடையவர்களையும், கழுகுகள் போல் பறித்து உண்ணும் நெறிதவறியவர்களையும் எனது கண்கள் காணமாட்டா.  எனது வாயும் பயனற்று அலையும் அந்தப் பேய்களோடு பேசாது.


பாடல் எண் : 4
துணுக்குஎன அயனும் மாலும்
            தொடர்வுஅரும் சுடராய், இப்பால்
அணுக்கருக்கு அணிய செம்பொன்
            அம்பலத்து ஆடிக்கு அல்லாச்
சிணுக்கரை, செத்தற் கொத்தைச்
            சிதம்பரை, சீத்தை ஊத்தைப்
பிணுக்கரைக் காணா கண்,வாய்
            பேசாது,அப் பேய்க ளோடே.

            பொழிப்புரை : திடுக்கிட்டு அஞ்சும்படி பிரமனும் திருமாலும் தொடர்ந்து அறிதற்கு அரிய சோதி வடிவினனாகி,  இவ்வுலகில் தன்னை அணுகியிருக்கும் அடியவர்களுக்குத் தானும் அணியனாய் வந்து அருள் செய்யும் செம்பொன்மயமான அம்பலத்தில் ஆடுகின்ற நடராசப் பெருமானுக்கு அன்பர் அல்லாத அழுகை உடையவரையும், பிறரைத் துன்புறுத்தும் குருட்டுத் தன்மையை உடைய அறிவிலிகளையும், கீழ்மக்களாகிய வாய் அழுக்கை உடைய மாறுபடப் பேசுபவர்களையும் என்கண்கள் காண மாட்டா. எனது வாயும் பயனற்று அலையும் அந்தப் பேய்களோடு பேசாது.

பாடல் எண் : 5
திசைக்குமிக்கு உலவு கீர்த்தித்
            தில்லைக்கூத்து உகந்து, தீய
நசிக்கவெண் ணீறு அதுஆடும்
            நமர்களை, நணுகா நாய்கள்,
அசிக்கஆ ரியங்கள் ஓதும்
            ஆதரை, பேத வாதப்
பிசுக்கரைக் காணா கண்,வாய்
            பேசாது,அப் பேய்க ளோடே.

            பொழிப்புரை : எண்திசைகளையும் கடந்து பரவும் புகழினை உடைய தில்லையம்பதியில் இறைவன் நிகழ்த்தும்ஆனந்தக் கூத்தை விரும்பி, தீமைகள் (பாவங்கள்) அழியுமாறு திருவெண்ணீற்றை அணியும் சிவனடியவர்களைச் சேராத நாய்போன்ற இழிந்தவர்களையும், கண்டவர் எள்ளி நகையாடுமாறு பொருள் தெரியாமல் வடமொழிச் செய்திகளை ஓதும் அறிவிலிகளையும், உயர்ந்தவரோடு மாறுபட்டுத் தர்க்கமிடும் பேச்சினை உடைய அற்பர்களையும் எனது கண்கள் காணமாட்டா. எனது வாயும் பயனற்று அலையும் அந்தப் பேய்களோடு பேசாது.


பாடல் எண் : 6
ஆடுஅரவு ஆட ஆடும்
            அம்பலத்து அமுதே என்னும்
சேடர்சே வடிகள் சூடாத்
            திருவிலா உருவி னாரைச்
சாடரைச் சாட்கை மோடச்
            சழக்கரைப் பிழைக்கப் பிட்கப்
பேடரைக் காணா கண்,வாய்
            பேசாது,அப் பேய்க ளோடே.

            பொழிப்புரை : `படம் எடுத்து ஆடும் பாம்புகளாகிய உனது அணிகலன்கள் ஆட பொன்னம்பலத்திலே நடனமாடுகின்ற அமுதம் போன்றவனே` என்று சிவபெருமானைப் போற்றும் பெருமையை உடைய அடியவர்களுடைய திருவடிகளைத் தம் தலையில் சூடி வழிபட நல்லூழ் இல்லாத உயிரற்ற உடம்புபோல இருப்பவர்களையும், பத்தியில் நிலைத்து நில்லாதவர்களையும், கோள் பேசித் திரியும் வம்பர்களையும், உறுதியற்ற பொய்ப் பேச்சா உடைய பேடியர்களையும், எனது கண்கள் காணமாட்டா.   எனது வாயும் பயனற்று அலையும் அந்தப் பேய்களோடு பேசாது.


பாடல் எண் : 7
உருக்கிஎன் உள்ளத்து உள்ளே
            ஊறல்அம் தேறல் மாறாத்
திருக்குறிப்பு அருளுந் தில்லைச்
            செல்வன்பால் செல்லும் செல்வில்
அருக்கரை, அள்ளல் வாய
            கள்ளரை, அவியாப் பாவப்
பெருக்கரைக் காணா கண்,வாய்
            பேசாது,அப் பேய்க ளோடே.

            பொழிப்புரை : அடியேனுடைய உள்ளத்தை உருகச் செய்து, அதன் உள்ளே ஊறுகின்ற ஆனந்தமாகிய தேனின் பெருக்குப் போன்ற பேரின்ப உணர்ச்சி நீங்காது இருக்கின்ற திருவருட் குறிப்பினை அருளுகின்ற தில்லைப் பதியில் திருச்சிற்றம்பலத்தில் எழுந்தருளிய செல்வனாகிய கூத்தப் பெருமானிடம் சென்று அடையும் மனப்பக்குவம் இல்லாத குறைந்த அறிவினை உடையவர்களையும், நரகத்தில் அழுந்துதற்குரிய வஞ்சகர் களையும், கெடாத தீவினைகளை நாளும் மிகுதியாகச் செய்து கொள்பவர்களையும், என் கண்கள் காண மாட்டா. எனது வாயும் பயனற்று அலையும் அந்தப் பேய்களோடு பேசாது.


பாடல் எண் : 8
செக்கர்ஒத்து இரவி நூறுஆ
            யிரத்திரள் ஒப்பாம் தில்லைச்
சொக்கர்அம் பலவர் என்னும்
            சுருதியைக் கருத மாட்டா
எக்கரை, குண்டாம் மிண்ட
            எத்தரை, புத்தர் ஆதிப்
பொக்கரைக் காணா கண்,வாய்
            பேசாது,அப் பேய்க ளோடே.

            பொழிப்புரை : செவ்வானம் போன்று, சூரியர் நூறாயிரவர் ஒரு சேரத் திரண்டதற்கு ஒப்பான ஒளியை உடைய தில்லையம்பதியில் எழுந்தருளியுள்ள அழகராகிய பொன்னம்பலக் கூத்தரே பரம்பொருளாவார் என்ற வேதக் கருத்தை நினைத்துப் பார்க்காத இறுமாப்பு உடையவர்களையும், கீழோர்களையும், கரவம் கொண்ட வஞ்சகர்களையும், புத்தர், சமணர் முதலிய பொய்யர்களையும் எனது கண்கள் காணமாட்டா.  எனது வாயும் பயனற்று அலையும் அந்தப் பேய்களோடு பேசாது.


பாடல் எண் : 9
எச்சனைத் தலையைக் கொண்டு
            செண்டடித்து இடபம் ஏறி
அச்சங்கொண்டு அமரர் ஓட
            நின்றஅம் பலவற்கு அல்லாக்
கச்சரை, கல்லாப் பொல்லாக்
            கயவரை, பசுநூல் கற்கும்
பிச்சரைக் காணா கண்,வாய்
            பேசாது,அப் பேய்க ளோடே.

            பொழிப்புரை : காளைவாகனத்தில் ஏறிவந்து எச்சனுடைய தலையைப் பூச்செண்டினை உருட்டுவது போல எளிதில் துண்டாக்கி, அஞ்சித் தேவர்கள் ஓடுமாறு வேள்விக் கூடத்தில் நின்ற சிவபெருமானை வழிபடாத வெறுக்கத்தக்கவர்களையும், ஞான நூல்களைக் கல்லாத தீக்குணம் பொருந்திய கீழ்மக்களையும், சிறுதெய்வங்களைப் பரம்பொருளாகக் கூறும் நூல்களைக் கற்கும் பித்தர்களையும் எனது கண்கள் காணமாட்டா. எனது வாயும் பயனற்று அலையும் அந்தப் பேய்களோடு பேசாது.


பாடல் எண் : 10
விண்ணவர் மகுட கோடி
            மிடைந்துஒளி மணிகள் வீசும்
அண்ணல்அம் பலவன் கொற்ற
            வாசலுக்கு ஆசை இல்லாத்
தெண்ணரை, தெருளா உள்ளத்து
            இருளரை, திட்டை முட்டைப்
பெண்ணரைக் காணா கண்,வாய்
            பேசாது,அப் பேய்க ளோடே.

            பொழிப்புரை : சிவபெருமானை வழிபடவரும் தேவர்களின் கோடி கிரீடங்களும் ஒருசேரக் காணப்பட,  ஒன்றோடு ஒன்று நெருங்கிப் பிரகாசிக்கின்ற நவமணிகள் இடைவிடாது ஒளியை வீசுகின்ற பெருமை பொருந்திய திருச்சிற்றம்பலத்தில் எழுந்தருளிய வெற்றி வேந்தனாகிய அம்பலவாணனிடத்து அன்பு இல்லாத அறிவிலிகளையும்,  தெளிவு அடையாத மனத்தினை உடைய அஞ்ஞானிகளையும், வம்புச் சொற்கள் பேசும் பெண் தன்மை உடையவர்களையும் எனது கண்கள் காணமாட்டா.  எனது வாயும் பயனற்று அலையும் அந்தப் பேய்களோடு பேசாது.


பாடல் எண் : 11
சிறப்புஉடை அடியார் தில்லைச்
            செம்பொன்அம் பலவற்கு ஆளாம்
உறைப்புஉடை அடியார் கீழ்க்கீழ்
            உறைப்பர்சே வடிநீறு ஆடார்,
இறப்பொடு பிறப்பி னுக்கே
            இனியராய் மீண்டும் மீண்டும்
பிறப்பரைக் காணா கண்,வாய்
            பேசாது,அப் பேய்க ளோடே.

            பொழிப்புரை : மேன்மை பொருந்திய அடியவர்கள் வாழுகின்ற தில்லையம்பதியிலே உள்ள செம்பொன்னால் ஆகிய சிற்சபையில் நடனமாடும் பெருமானிடத்து அடிமை பூண்டு ஒழுகும் அடியவராக இருக்கும் உறுதிப்பாட்டை உடைய அடியவர்களுக்கு அடியவராக இருக்கும் உறுதிப்பாட்டினையும், சிவபெருமானின் திருவடி என்று சொல்லப்படும் திருவருட் பேற்றிற்கு அறிகுறியாகிய திருவெண்ணீற்றை உடல் முழுதும் அணியாதவர்களையும், இறப்பிற்கும் பிறப்பிற்குமே விருப்பம் உடையவர்களாய் மீண்டும் மீண்டும் உரகில் வந்து பிறக்கின்ற கீழோர்களையும் எனது கண்கள் காணமாட்டா.  எனது வாயும் பயனற்று அலையும் அந்தப் பேய்களோடு பேசாது.

                                                            திருச்சிற்றம்பலம்

----------------------------------------------------------------------------------------------------------(தொடரும்)------------

No comments:

Post a Comment

பொது --- 1081. இசைந்த ஏறும்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் இசைந்த ஏறும் (பொது) முருகா!  அடியேன் அயர்ந்தபோது வந்து அருள வேண்டும். தனந்த தானந் தனதன தானன ...... தனதான...