திருச்செந்தூர் - 0046. கன்றில் உறுமானை


அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

கன்றில்உறு மானை (திருச்செந்தூர்)

முருகா!
விலைமகளிர் வலைப்பட்டு நலியாமல்,
அருள் நோக்கால் ஆண்டு அருள்.


தந்ததன தான தந்ததன தான
     தந்ததன தான ...... தனதான


கன்றிலுறு மானை வென்றவிழி யாலே
     கஞ்சமுகை மேவு ...... முலையாலே

கங்குல்செறி கேச மங்குல்குலை யாமை
     கந்தமலர் சூடு ......         மதனாலே

நன்றுபொருள் தீர வென்றுவிலை பேசி
     நம்பவிடு மாத ......         ருடனாடி

நஞ்சுபுசி தேரை யங்கமது வாக
     நைந்துவிடு வேனை ......    யருள்பாராய்

குன்றிமணி போல்வ செங்கண்வரி போகி
     கொண்டபடம் வீசு ...... மணிகூர்வாய்

கொண்டமயி லேறி அன்றசுரர் சேனை
     கொன்றகும ரேச ......       குருநாதா

மன்றல்கமழ் பூக தெங்குதிரள் சோலை
     வண்டுபடு வாவி ......       புடைசூழ

மந்திநட மாடு செந்தினகர் மேவு
     மைந்தஅம ரேசர் ......       பெருமாளே.


பதம் பிரித்தல்


கன்றில் உறு மானை வென்ற விழியாலே,
     கஞ்சமுகை மேவும் ......    முலையாலே,

கங்குல்செறி கேசம் மங்குல் குலையாமை
     கந்தமலர் சூடும் ......        அதனாலே,

நன்றுபொருள் தீர வென்று, விலை பேசி
     நம்பவிடு மாத ......         ருடன் ஆடி,

நஞ்சு புசி தேரை அங்கம் அது ஆக
     நைந்து விடுவேனை ......    அருள்பாராய்.

குன்றிமணி போல்வ செங்கண்வரி போகி
     கொண்ட படம் வீசு ......     மணி கூர்வாய்,

கொண்டமயில் ஏறி அன்று, சுரர் சேனை
     கொன்ற குமரேச! ......       குருநாதா!

மன்றல்கமழ் பூக தெங்குதிரள் சோலை
     வண்டுபடு வாவி ......       புடைசூழ

மந்திநட மாடு செந்தி நகர் மேவு
     மைந்த! அமர ஈசர் ......     பெருமாளே.

        
     வேறொரு பழைய நூலிலிருந்த இதே பாடலின் சற்று மாறுபட்ட அமைப்பு.

தந்ததன தான தந்ததன தான
     தந்ததன தான ...... தனதான

கன்றிவரு நீல, குங்கும, படீர
     கஞ்சமலர் மேவு ......            முலைகாட்டி,

கங்குல்செறி கேசம் நின்று குலையாமை
     கண்கள்கடை காட்டி, ......        விலைகாட்டி,

நன்றுபொருள் தீது, வென்றுவிலை பேசி,
     நம்பிவிடு மாத ......             ருடன்ஆட்ட

நஞ்சுபுரி தேரை அங்கம் அது ஆக
     நைந்துவிடும் எற்குஒன்று ......   அருள்வாயே

குன்றிமணி போலச் செங்கண்வரி நாகம்
     கொண்டபடம் வீசு ......      மணிகூர்வாய்

கொண்டமயில் ஏறிக் குன்றுஇடிய மோதிச்
     சென்ற வடிவேலைக் ......        கொடு போர்செய்

மன்றல்கமழ் பூகம் தெங்குதிரள் சோலை
     வண்டுபடு வாவி ......            புடைசூழ

மந்திநடம் ஆடும் செந்தில்நகர் மேவும்
     அந்த! சுர காலப் ......            பெருமாளே.



பதவுரை

       குன்றி மணி போல்வ செம் கண் வரி போகி --– குண்டுமணி போன்ற சிவந்த கண்களையும் கோடுகளையும் உடைய பாம்பு,

     கொண்ட படம் வீசும் --- தனது அழகிய படத்தை வீசுமாறு,

     அணி கூர்வாய் கொண்ட மயில் ஏறி --- அழகியதும் கூர்மையுள்ளதுமான வாயில் அப்பாம்பினைக் கொண்ட மயிலின்மீது ஏறி,

     அன்று அசுரர் சேனை கொன்ற குமர ஈச --- அந்நாளில் அசுரர்களுடைய சேனைகளைக் கொன்றருளிய குமாரக் கடவுளே!

       குருநாதா --- குருநாதரே!

       மன்றல் கமழ் பூக --- வாசனை வீசும் பாக்கு,

     தெங்கு திரள் சோலை --- தென்னை முதலியவைகள் நெருங்கியுள்ள சோலைகளும்,

     வண்டு படு வாவி --- வண்டுகள் ஒலிக்கும் குளங்களும்,

     புடைசூழ மந்தி நடமாடும் --- அருகில் சூழ்ந்திருக்க, குரங்குகள் நடனம் புரிகின்ற,

     செந்தில் நகர் மேவு மைந்த --- திருச்செந்தூரில் வீற்றிருக்கின்ற வீரரே!

       அமர ஈசர் பெருமாளே --- தேவர்த் தலைவர்களுக்கும் பெருமையில் மிகுந்தவரே!

      கன்றில் உறுமானை வென்ற விழியாலே --- மான் கன்றை வெற்றி பெற்ற அழகிய கண்களாலும்,

     கஞ்ச முகை மேவு முலையாலே --- தாமரை மொட்டு போன்ற தனங்களாலும்,

     கங்குல் செறி கேசம் மங்குல் குலையாமை --- இருள் நிறைந்த கூந்தல் மேகம் போன்று விளங்கி, அது குலையாத வண்ணம்,

     கந்த மலர் சூடும் அதனாலே --- மணங்கமழும் மலரை முடிக்கும் வகையாலும்,

     நன்று பொருள் தீர --- நல்லபடியே பொருள் முழுவதும் வரும்படி,

     வென்று விலை பேசி --- வெற்றியுடன் விலை பேசிக்கொண்டு,

     நம்ப விடு மாதர் உடன் ஆடி --- தம்மை நம்புமாறு புரியும் விலைமகளிருடன் விளையாடி,

     நஞ்சு புசி தேரை அங்கம் அது ஆக --- நஞ்சையுடைய பாம்பு உண்ணும் தேரையின் உடல்போல்,

     நைந்து விடுவேனை அருள் பாராய் --- நலிந்து போகின்ற அடியேனை அருட்கண்ணால் பார்த்தருளுவீர்.


பொழிப்புரை

         குண்டுமணி போன்ற சிவந்த கண்களும் கோடுகளும் உடையதும், படம் வீசுவதும் ஆகிய பாம்பைக் கூர்மையும் அழகும் உடைய வாயில் கவ்விக் கொண்டுள்ள மயிலின்மீது ஆரோகணித்து, அந்நாளில் அசுரருடைய சேனைகளை யழித்த குமாரக் கடவுளே!

         குருமூர்த்தியே!

         நறுமணங் கமழும் பாக்கு தென்னை முதலியன நெருங்கியுள்ள சோலைகளும், வண்டுகள் நிறைந்துள்ள குளங்களும் அருகில் சூழ, குரங்குகள் நடனம் புரிகின்ற திருச்செந்தூரில் எழுந்தருளியுள்ள வீரரே!

         தேவேந்திரர் கட்கும் பெருமை மிகுந்தவரே!

         மான் கன்றை வென்ற கண்களாலும், தாமரை அரும்பு போன்ற தனங்களாலும், மேகம் போல் இருண்ட கூந்தலில் அது கலையாவண்ணம் மலர் சூடியிருக்கின்ற வகையாலும், நல்ல படியே பொருள் முழுவதும் வரும்படி வெற்றியுடன் விலை பேசித் தம்மை நம்புமாறு புரிகின்ற விலை மகளிருடன் விளையாடி, விடம் கொண்ட பாம்பின் வாய்த் தேரையைப்போல் மெலிந்து உடல் நலிகின்ற சிறியேனைத் தேவரீர் அருள் திருக்கண்களால் நோக்கி அருள்புரிவீர்.

விரிவுரை

நம்பவிடு மாதர் உடனாடி ---

தங்கள்பால் வரும் ஆடவர்களைத் தங்களை உண்மை அன்பு உள்ளவர்களாகவே நினைந்து நம்புமாறு செய்வர். இத்தகைய வஞ்சனை நிறைந்த பொதுமகளிருடன் விளையாடி விழலுக்கிறைத்த வீணர்போல் கெடுவர்.

நஞ்சு புசி தேரை ---

நஞ்சையுடைய பாம்பு தேரையைப் பிடித்து விழுங்கும். “பாம்பின் வாயில் உள்ள தேரை எத்துணைப் பெரிய இடரில் ஏங்குமோ அத்தணை இடரை அடைந்தேன்” என்று கூறுகிறார்.

"பாம்பின் வாய்த் தேரை போலப் பலப்பல நினைக்கின்றேனை, ஓம்பி நீ உய்யக் கொள்ளாய் ஒற்றியூர் உடைய கோவே" என்று அப்பர் பெருமான் பாடினார்.

நைந்து விடுவேனை அருள்பாராய் ---

தேரைபோல் மெலிந்து நலிந்து கெடுகின்ற அடியேனை ஆண்டவனே! உனது அருள் பார்வையால் நோக்கிக் காத்தருள்வாய்” என்று சுவாமிகள் வேண்டுகிறார்.
ஆண்டவனுடைய அருட்பார்வை விழுமாயின் எல்லாத் தீமைகளும் நீங்கி, எல்லா நன்மைகளும் உண்டாகும்.

அருணகிரிநாதரை முருகப் பெருமான் தமது அருள் கண்ணால் நோக்கி யாட்கொண்டருளினார்.

கனகத்தினு நோக்கு இனிதாய், டி
யவர் முத்தமிழால் புகவே, பர
கதி பெற்றிட நோக்கிய பார்வையும் மறவேனே”    ---  (சதுரத்த) திருப்புகழ்

                                                                              
ஆணவ அழுக்கு அடையும் ஆவியை விளக்கி, அநு
 பூதி அடைவித்தது ஒரு பார்வைக் காரனும்”    --- திருவேளைக்காரன் வகுப்பு

                                                              

குன்றிமணி போல்வ செங்கண் வரி போகி ---

பாம்புகளின் கண்கள் குண்டுமணிபோல் சிவந்திருக்கும். காரணம்? கோபம் உள்ள கண்கள் சிவந்திருக்கும். கண்களின் சிவப்பு சினத்தைக் குறிக்கும். அதன் உடம்புகளில் வரிகள் இருக்கும்.

கொண்ட படம் வீசு பணிகூர்வாய் கொண்ட மயில் ---

நல்ல நாகம் படம் விரித்து ஆடும். அத்தகைய நாகத்தை மயில் தனது வாயில் எடுத்துக்கொண்டு ஆடும். இங்கே பாம்பு என்பது குண்டலினி சக்தி, மயில் என்பது ஓங்காரம். குண்டலினியை எழுப்பப் பிரணவம் மேல் எழுந்து விளங்கும். இந்தக் குறிப்பை இது உணர்த்துகின்றது.
கருத்துரை

         மயில் வாகனரே! அசுரகுல காலரே! செந்திலாண்டவரே! விலைமகளிர் வலைப்பட்டு நலியாமல் அடியேனை அருள் நோக்கால் நோக்கி அருள்வீர்.

No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...