திருஅதிகை வீரட்டானம்
(திருவதிகை)
நடு நாட்டுத் திருத்தலம்.
கடலூர் மாவட்டத்தில் பண்ணுருட்டியில் இருந்து
இரண்டு கி. மீ. தொலைவில் உள்ளது. சிதம்பரம், கடலூர், சென்னை, விழுப்புரம்,
விருத்தாசலம் முதலிய நகரங்களில் இருந்து பண்ணுருட்டிக்குப் பேருந்து வசத்கள் உண்டு.
பண்ணுருட்டி இரயில் நிலையமும் உண்டு.
இறைவர்
: வீரட்டேசுவரர், வீரட்டநாதர், அதிகைநாதர்.
இறைவியார்
: திரிபுரசுந்தரி
தல
மரம் : சரக்கொன்றை.
தீர்த்தம் : கெடிலநதி (தென்கங்கை)
தேவாரப்
பாடல்கள்: 1. சம்பந்தர் - 1. குண்டைக்
குறட்பூதம்,
2. அப்பர் - 1. கூற்றாயின வாறு,
2.
சுண்ணவெண் சந்தனச்,
3.
முளைக்கதிர் இளம்பிறை,
4.
இரும்புகொப் பளித்த,
5.
வெண்ணிலா மதியம்,
6.
நம்பனே எங்கள்,
7.
மடக்கினார் புலியின்,
8.
முன்பெலாம் இளைய,
9.
மாசிலொள் வாள்போல்,
10.
கோணன் மாமதி,
11. எட்டு நாண்மலர்,
12. வெறிவிரவு கூவிளநற்,
13. சந்திரனை மாகங்கைத்,
14. எல்லாம் சிவனென்ன,
15. அரவணையான் சிந்தித்து,
16. செல்வப் புனற்கெடில.
3. சுந்தரர் - 1. தம்மானை அறியாத.
அட்ட வீரட்டத் தலங்களுள் ஒன்று. திரிபுரத்தை எரித்த வீரச்
செயல் நிகழ்ந்தத் தலம்.
ஞானசம்பந்தருக்கு இறைவன் திருநடனம் காட்டிய தலம்.
அப்பரின் தமக்கையார் திலகவதியார் தங்கியிருந்து திருத்தொண்டு
செய்து வந்த திருத்தலம்.
திலகவதியார் தன் தம்பியாகிய (அப்பர்) மருள்நீக்கியாரை
நல்வழிப்படுத்துமாறு இறைவனை வேண்ட, இறைவன் "சூலை தந்து
ஆட்கொள்வோம்" என்று பதிலுறைத்த பதி.
சூலை நோயின் துன்பம் தாளப்பெறாத அப்பர் பெருமான், யாருமறியாமல்
பாடலிபுத்திரத்தை (திருப்பாதிரிப்புலியூர்) விட்டு நீங்கி,
இங்கு வந்து, தமக்கையாரைக்
கண்டு, தொழுது, திருவாளன்
திருநீறு தரப் பெருவாழ்வு வந்ததென்று பணிந்து ஏற்று, உருவார அணிந்து,
அவர்பின் சென்று, அதிகைப்
பிரான் அடிமலர் வீழ்ந்து வணங்கி, "ஆற்றேன் அடியேன்" என்று
"கூற்றாயினவாறு" பதிகம் பாடிச் சூலை நீங்கப்பெற்ற அற்புதத்தலம்.
சைவத்துக்குத், திருத்தொண்டுக்கு உறைப்பான
திருநாவுக்கரசரை வழங்கியருளிய பெருமைமிகு தலம்.
சைவசித்தாந்த
சாத்திரங்களுள் ஒன்றான 'உண்மை விளக்கம்'
நூலை அருளியவரும், மெய்கண்டாரின்
மாணவருமான 'மனவாசகங்கடந்தாரின்' அவதாரத் தலம்.
இத்தலத்தை மிதிக்க அஞ்சி சுந்தரர் அருகிலிருந்த
சித்தவடமடத்தில் தங்கி - திருவடி தீட்சை பெற்றார்.
பல்லவ மன்னனான மகேந்திரவர்மனின் மனத்தை மாற்றிச் சமண் பள்ளிகளை
இடித்துக் குணபரவீச்சரம் எழுப்பச் செய்ததும் இத்தலத்தின் பெருமையை பறைசாற்றும்
நிகழ்ச்சியாகும்.
அதிரையமங்கலம், அதிராஜமங்கலம்,
அதிராஜமங்கலியாபுரம்
என்னும் பெயர்கள் இத்தலத்திற்குரியனவாகக் கல்வெட்டுக்களில் காணப்படுகின்றன.
மணவிற் கூத்தனான காலிங்கராயன் என்பவன் இக்கோயிலுக்குப்
பொன்வேய்ந்து நூற்றுக்கால் மண்டபம், மடைப்பள்ளி, யாகசாலை ஆகியவற்றை அமைத்து, அம்பாள்
கோயிலையும் கட்டுவித்தான் என்பது கல்வெட்டுச் செய்தி.
தென்திசையில் கங்கை எனப்படும் கெடிலநதி (தல தீர்த்தம்)
பக்கத்தில் ஓடுகிறது.
மிகப்பெரிய கோயில், சுவாமி கர்ப்பக்கிருகம் தேர்போலப்
பதுமைகளால் அலங்கரிக்கப்பட்டு, நிழல் பூமியில் சாயாதபடிக்
கட்டப்பட்டுள்ளது.
கோபுர வாயிலில் இருபுறங்களிலும் அளவற்ற சிற்பங்கள் உள்ளன; வலப்பக்கத்தில்
சற்று உயரத்தில் திரிபுரமெரித்த கோலம் மிக அழகாக வடிக்கப்பட்டுள்ளது.
வாயிலின் இருபுறங்களிலும் நடனக்கலைச் சிற்பங்கள் (பரத
சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ள 108 கரணங்களை விளக்கும் சிற்பங்கள்)
அளவிறந்துள்ளன.
கோயிலின் உட்புறத்திலுள்ள மற்றொரு பதினாறுகால் மண்டபத்தின் இரு
தூண்களில் ஒன்றில் சுப்பிரமணியத் தம்பிரான் (அமர்ந்த நிலை) சிற்பமும், இதற்கு
நேர் எதிர்த்தூணில் சிவஞானத் தம்பிரான் (நின்று கைகூப்பிய நிலை) சிற்பமும் உள்ளது.
சுப்பிரமணியத் தம்பிரான் என்பவர்தான் இக்கோயிலைத் திருத்திச் செப்பம் செய்தவர்
என்றும்; இவர்
சீடரான சிவஞானத் தம்பிரான்தான் முதன்முதலில் இத்திருக்கோயிலில் அப்பர்
பெருமானுக்குப் பத்து நாள்கள் விழா எடுத்துச் சிறப்பித்தார் என்பர்.
இக்கோயிலில் திகவதியாருக்கு சந்நிதி உள்ளது.
அப்பர் சந்நிதி - மூலமூர்த்தம் உள்ளது;
அமர்ந்த திருக்கோலம்
- சிரித்த முகம், தலை மாலை, கையில் உழவாரப்படை தாங்கிய பேரழகு.
பிரகாரத்தில் பஞ்சமுக சிவலிங்கமும் (பசுபதிநாதர்), வரிசையாகப்
பல சிவலிங்கத் திருமேனிகளும் உள்ளன.
மூலவர் பெரிய சிவலிங்கத் திருமேனி - பெரிய ஆவுடையார்; சிவலிங்கத்
திருமேனி பதினாறு பட்டைகளுடன் கம்பீரமாகக் காட்சியளிக்கின்றது.
கருவறை சுதையாலான பணி; இதன் முன் பகுதி வளர்த்துக் கற்றளியாகக்
கட்டப்பட்டுள்ளது. கருவறையைச் சுற்றிலும் குடவரைச்சிங்கள்.
தினமும் ஆறுகால பூஜைகள் முறையாக நடக்கின்றன.
இத்தலத்திலிருந்து 1 கி.மீ. தொலைவு சென்றால் ஸ்ரீ
சிதம்பரேசுவரர் கோயில் உள்ளது; இதுவே சித்த வட மடம் ஆகும். இப்பகுதி
புதுப்பேட்டை என்று வழங்குகிறது. (சித்தவடமடத்தைப் பிற்காலத்தில் சித்தாண்டிமடம், சித்தாத்த
மடம் என்றெல்லாம் வழங்கினர். இப்போது இப்பகுதி கோடாலம்பாக்கம் என்றும்
அழைக்கப்படுகிறது.)
மகேந்திரவர்ம பல்லவன் கட்டிய குணபரவீச்சரம் - "ஆதிமூல
குணபரேச்சுரன் கோயில்" என்றழைக்கப்படுகிறது. இது கோயிலுக்குப் பக்கத்தில்
மேற்கே பெரிய ரோடு கரையில் உள்ளது. சிறு கட்டிடமாக இடிந்த நிலையில், உடைந்துபோன
படிமங்களுடன் காணப்படுகிறது. தற்போதுள்ள கோயில் பிற்காலத்தில் பாண்டியர்களால்
எழுப்பப்பட்டது. இக்கோயில் மராட்டிய, ஆங்கிலேயர் காலத்தில்
போர்க்கோட்டையாகவும் மாறி மாறிப் பயன்படுத்தப்பட்டதாக வரலாற்றில் அறிகிறோம்.
வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக்
கலிவெண்பாவில், "வார் கெடிலச் சென்னதிகை ஓங்கி, திலகவதியார் பரவு மன் அதிகை
வீரட்ட மாதவமே" என்று போற்றி உள்ளார்.
திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு
திருவக்கரை முதலிய தலங்களை வணங்கிய
திருஞானசம்பந்தப் பெருமானார், அடியார் திருக்கூட்டத்துடன்
திருவதிகைக்கு எழுந்தருளுகின்ற காலத்து, சிவபெருமான் தம் திருநடனத்தைப்
புலப்படும்படி காட்டி அருள, குண்டைக் குறள்பூதம் என்னும்
திருப்பதிகத்தைப் பாடி அருளினார்....
பெரிய
புராணப் பாடல் எண் : 964
வக்க
ரைப்பெரு மான்தனை
வணங்கிஅங்கு அமரும்நாள், அருளாலே
செக்கர்
வேணியார் இரும்பைமா
காளமும் சென்றுதாழ்ந்து, உடன்மீண்டு,
மிக்க
சீர்வளர் அதிகைவீ
ரட்டமும் மேவுவார் தம்முன்பு
தொக்க
மெய்த்திருத் தொண்டர்வந்து
எதிர்கொளத் தொழுதுஎழுந்து அணைவுற்றார்.
பொழிப்புரை : அத் திருவக்கரையில் ஞானசம்பந்தர் இறைவ
னைத் தொழுது வணங்கித் தங்கியிருந்த நாள்களில், திருவருட் குறிப் பினால் சிவந்த வானம்
போன்ற சடையையுடைய இறைவரின் `திரு விரும்பைமாகாளத்தை'யும்
சென்று வணங்கி, உடனே திரும்பி, மிக்க சிறப்புகள் வளர்கின்ற `திருவதிகைவீரட்டானத்தைச்' சென்று
சேர்பவரான அவர், தமக்கு, முன்கூடிய உண்மைத் தொண்டர்கள் வந்து
எதிர் கொள்ளத் தொழுது அங்கு அணைந்தார்.
பெ.
பு. பாடல் எண் : 965
ஆதி
தேவர்அங்கு அமர்ந்தவீ
ரட்டானம் சென்றுஅணை பவர்முன்னே,
பூதம்
பாடநின்று ஆடுவார்
திருநடம் புலப்படும் படிகாட்ட,
வேத
பாரகர் பணிந்துமெய்
உணர்வுடன் உருகிய விருப்போடும்
கோதி
லாஇசை குலவுகுண்
டைக்குறட் பூதம்என்று எடுத்துஏத்தி.
பொழிப்புரை : முதன்மையுடைய தேவராய சிவபெருமான்
விரும்பி வீற்றிருந்தருளும் திருவீரட்டானத்தைச் சென்று அடைபவரான சம்பந்தர் முன்பு, பூத
கணங்கள் பாட நின்றாடும் இறைவர், தம் திருக்கூத்தைக் கண்ணுக்குப்
புலனாகும்படி காட்டவே, மறைகளில் வல்லுநரான அவர் வணங்கி, மெய்யுணர்வுடன்
உள்ளம் உருகி விருப்பத்துடன் குற்றம் அற்ற இசையுடன் கூடிய `குண்டைக்
குறட் பூதம்\' என்று தொடங்கிப் போற்றி,
குறிப்புரை : வேதபாரகர்: பாரம் - கரை, கர்
- கண்டவர். மறைகளின் கரையைக் கண்டவர். `குண்டைக் குறட் பூதம்' எனத்
தொடங்கும் பதிகம் குறிஞ்சிப் பண்ணிலமைந்ததாகும் (தி.1 ப 46). இப்பதிகப் பாடல் தொறும், வீரட்டானத்தில்
பெருமான் கூத்தியற்றும் சிறப்பைக் குறித்துப் போற்றும் பிள்ளையார், `ஆடும்வீரட்டானத்தே' என
நிறைவுபடவும் அருளுகின்றார். ஆதலின் ஆசிரியர் சேக்கிழார் `பூதப் படை நின்றாடுவார் திருநடம்
புலப்படும்படி காட்ட' என அதனை வரலாற்று இயைபுபடுத்திக்
காட்டுவாராயினர்.
பெ.
பு. பாடல் எண் : 966
பரவி
ஏத்திய திருப்பதி கத்துஇசை
பாடினார், பணிந்து, அங்கு
விரவும்
அன்பொடு மகிழ்ந்து,இனிது உறைபவர்,
விமலரை வணங்கிப்போய்,
அரவம்
நீர்ச்சடை அங்கணர் தாம்மகிழ்ந்து
உறைதிரு ஆமாத்தூர்
சிரபு
ரத்துவந்து அருளிய திருமறைச்
சிறுவர்சென்று அணைவுற்றார்.
பொழிப்புரை : போற்றி வழிபட்ட அப்பதிகத்தின் இசையினை
நிறைவுறப் பாடிப் பணிந்து, அத் திருப்பதியில், அன்புடன்
மகிழ்ந்து இனிதாகத் தங்கியவரான சீகாழியில் தோன்றிய அந்தணர் குலத்துப் பிள்ளையார், பாம்பும்
கங்கையும் தங்கிய சடையையுடைய இறைவர் மிக்க மகிழ்ச்சியுடன் எழுந்தருளிய
திருஆமாத்தூரினைச் சென்று சேர்ந்தார்.
திருஞானசம்பந்தர் திருப்பதிகம்
1.046
திருவதிகைவீரட்டானம் பண் - தக்கராகம்
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
குண்டைக்
குறள்பூதம் குழும, அனல்ஏந்திக்
கெண்டைப்
பிறழ்தெண்ணீர்க் கெடில வடபக்கம்
வண்டு
மருள்பாட வளர்பொன் விரிகொன்றை
விண்ட
தொடையலான் ஆடும்வீரட் டானத்தே.
பொழிப்புரை :பருத்த குள்ளமான பூதகணங்கள் தன்னைச்
சூழ்ந்து நிற்கக் கையில் அனலை ஏந்தியவனாய், வண்டுகள் மருளிந்தளப்பண்பாட, பொன்போன்று
விரிந்து மலர்ந்த கொன்றை மலர் மாலை அணிந்தவனாய்ச் சிவபிரான் கெண்டை மீன்கள்
பிறழ்ந்து விளையாடும் தெளிந்த நீரை உடைய கெடில நதியின் வடகரையில் உள்ள திருவதிகை
வீரட்டானத்து ஆடுவான்.
பாடல்
எண் : 2
அரும்பும்
குரும்பையும் அலைத்த மென்கொங்கைக்
கரும்பின்
மொழியாளோடு உடன்கை அனல்வீசிச்
சுரும்புஉண்
விரிகொன்றைச் சுடர்பொன் சடைதாழ
விரும்பும்
அதிகையுள் ஆடும்வீரட் டானத்தே.
பொழிப்புரை :சிவபிரான் தாமரை அரும்பு, குரும்பை
ஆகிய வற்றை அழகால் வென்ற மென்மையான தனங்களையும், கரும்பு போன்ற இனிய மொழிகளையும் உடைய
உமையம்மையோடு கூடிக் கையில் அனல் ஏந்தி வீசிக் கொண்டு, வண்டுகள் தேனுண்ணும் இதழ் விரிந்த
கொன்றை மாலை அணிந்த ஒளிமயமான பொன் போன்ற சடைகள் தாழத் தன்னால் பெரிதும்
விரும்பப்படும் அதிகை வீரட்டானத்து ஆடுவான்.
பாடல்
எண் : 3
ஆடஅல்ழல்நாகம்
அரைக்குஇட்டு அசைத்துஆடப்
பாடன்
மறைவல்லான், படுதம் பலிபெயர்வான்,
மாட
முகட்டின்மேல் மதிதோய் அதிகையுள்
வேடம்
பலவல்லான் ஆடும்வீரட் டானத்தே.
பொழிப்புரை :வென்றியையும் அழல் போலும் கொடிய தன்மை
யையும் கொண்ட நாகத்தை இடையில் பொருந்தக் கட்டி ஆடுமாறு செய்து, பாடப்படும்
வேதங்களில் வல்லவனாய், `படுதம்` என்னும் கூத்தினை ஆடிக்கொண்டு, பலி
தேடித் திரிபவனாய சிவபிரான் மதி தோய்ந்து செல்லுமாறு உயர்ந்த மாடவீடுகளை உடைய
திருவதிகையிலுள்ள வீரட்டானத்தில் பல்வேறு கோலங்களைக் கொள்ளுதலில் வல்லவனாய்
ஆடுவான்.
பாடல்
எண் : 4
எண்ணார்
எயில்எய்தான், இறைவன், அனல்ஏந்தி,
மண்ஆர்
முழவதிர, முதிரா மதிசூடிப்
பண்ஆர்
மறைபாட, பரமன், அதிகையுள்
விண்ணோர்
பரவநின்று ஆடும்வீரட் டானத்தே.
பொழிப்புரை :பகைவரது திரிபுரங்களை எய்து அழித்த
இறைவன் அனலைக் கையில் ஏந்தி மார்ச்சனை இடப்பட்ட முழவு முழங்க இளம் பிறையை முடியில்
சூடிப் பண்ணமைப்புடைய வேதங்களை அந்தணர் ஓதத் திருவதிகை வீரட்டானத்தே தேவர்கள்
போற்ற நின்று ஆடுவான்.
பாடல்
எண் : 5
கரிபுன்
புறம்ஆய கழிந்தார் இடுகாட்டில்
திருநின்று
ஒருகையால் திருஆம் அதிகையுள்
எரிஏந்
தியபெருமான், எரிபுன் சடைதாழ
விரியும்
புனல்சூடி ஆடும்வீரட் டானத்தே.
பொழிப்புரை :கரிந்த புல்லிய ஊர்ப்புறமாய இறந்தவர்களை
எரிக்கும் சுடுகாட்டில், ஒரு திருக்கரத்தில் எரி ஏந்தி ஆடும்
பெருமான் திருமகள் நிலைபெற்ற திருவதிகையில் உள்ள வீரட்டானத்தில் எரிபோன்று சிவந்த
தன் சடைகள் தாழ்ந்து விரிய தலையில் கங்கை சூடி ஆடுவான்.
பாடல்
எண் : 6
துளங்கும்
சுடர்அங்கைத் துதைய விளையாடி,
இளங்கொம்பு
அனசாயல் உமையோடு இசைபாடி,
வளங்கொள்
புனல்சூழ்ந்த வயல்ஆர் அதிகையுள்
விளங்கும்
பிறைசூடி ஆடும்வீரட் டானத்தே.
பொழிப்புரை :அசைந்து எரியும் அனலை அழகிய கையில்
பொருந்த ஏந்தி விளையாடி, இளங்கொம்பு போன்ற உமையம்மையோடு இசைபாடி, வளமை
உள்ள புனல் சூழ்ந்த வயல்களை உடைய திருவதிகையில் வீரட்டானத்தே முடிமிசை விளங்கும்
பிறைசூடி ஆடுவான்.
பாடல்
எண் : 7
பாதம்
பலர்ஏத்தப் பரமன், பரமேட்டி,
பூதம்
புடைசூழ, புலித்தோல் உடையாக,
கீதம்
உமைபாட, கெடில வடபக்கம்
வேத
முதல்வன்நின்று ஆடும்வீரட் டானத்தே.
பொழிப்புரை :பரம்பொருளாகிய பரமன் தன் திருவடிகளைப்
பலரும் பரவி ஏத்தி வணங்கவும், பூதகணங்கள் புடை சூழவும், புலித்தோலை
உடுத்து, உமையம்மை
கீதம் பாடக் கெடிலநதியின் வடகரையில் வேதமுதல்வனாய் வீரட்டானத்தே ஆடுவான்.
பாடல்
எண் : 8
கல்ஆர்
வரைஅரக்கன் தடந்தோள் கவின்வாட
ஒல்லை
அடர்த்து, அவனுக்கு அருள்செய்து, அதிகையுள்
பல்ஆர்
பகுவாய நகுவெண் தலைசூடி,
வில்லால்
எயில்எய்தான் ஆடும்வீரட் டானத்தே.
பொழிப்புரை :கற்கள் பொருந்திய கயிலை மலையை எடுத்த
இராவணனின் பெரிய தோள்களின் அழகு வாடுமாறு அடர்த்துப் பின் அவனுக்கு அருள் பல
செய்தும், முப்புரங்களை
வில்லால் எய்து, அழித்தும், தனது பெருவீரத்தைப் புலப்படுத்திய
இறைவன் பற்கள் பொருந்திய பிளந்தவாயை உடைய வெள்ளிய தலைமாலையைச் சூடித்திருவதிகை
வீரட்டானத்தே ஆடுவான்.
பாடல்
எண் : 9
நெடியான்
நான்முகனும் நிமிர்ந்தானைக் காண்கிலார்
பொடிஆடு
மார்பானைப் புரிநூல் உடையானைக்
கடியார்
கழுநீலம் மலரும் அதிகையுள்
வெடிஆர்
தலைஏந்தி ஆடும்வீரட் டானத்தே.
பொழிப்புரை :பேருருக் கொண்ட திருமாலும், நான்முகனும்
அழலுருவாய் ஓங்கி நிமிர்ந்தவனை, திருநீறணிந்த மார்பினனை, முப்புரிநூல்
அணிந்தவனைக் காண்கிலார்: அப்பெருமான் மணம் கமழும் நீலப்பூக்கள் மலரும்
திருவதிகையிலுள்ள வீரட்டானத்தே முடைநாற்றமுடைய தலை ஓட்டைக் கையில் ஏந்தி
ஆடுகின்றான்.
பாடல்
எண் : 10
அரையோடு
அலர்பிண்டி மருவிக் குண்டிகை
சுரையோடு
உடன்ஏந்தி, உடைவிட்டு உழல்வார்கள்
உரையோடு
உரைஒவ்வாது, உமையோடு உடன்ஆகி
விரைதோய்
அலர்தாரான் ஆடும்வீரட் டானத்தே.
பொழிப்புரை :அரச மரத்தையும் தழைத்த அசோக மரத்தையும்
புனித மரங்களாகக் கொண்டு குண்டிகையாகச் சுரைக்குடுக்கையை ஏந்தித்திரியும்
புத்தர்கள், ஆடையற்றுத் திரியும் சமணர்கள் ஆகியவர்களின் பொருந்தாத
வார்த்தைகளைக் கேளாதீர். மணம் கமழும் மாலை அணிந்த சிவபிரான் உமையம்மையோடு உடனாய்
அதிகை வீரட்டானத்தே ஆடுவான். அவனை வணங்குங்கள்.
பாடல்
எண் : 11
ஞாழல்
கமழ்காழி யுள்ஞான சம்பந்தன்
வேழம்
பொருதெண்ணீர் அதிகைவீரட் டானத்துச்
சூழுங்
கழலானைச் சொன்ன தமிழ்மாலை
வாழும்
துணையாக நினைவார் வினைஇலரே.
பொழிப்புரை :ஞாழற் செடிகளின் மலர்கள் மணம் கமழும்
சீகாழியுள் தோன்றிய ஞானசம்பந்தன், நாணல்களால் கரைகள் அரிக்கப்படாமல்
காக்கப்படும் தெளிந்த நீர்வளம் உடைய திருவதிகை வீரட்டானத்தில், ஆடும்
கழல் அணிந்த அடிகளை உடைய சிவபிரானைப் போற்றிப் பாடிய இத்தமிழ் மாலையை, வாழ்வுத்
துணையாக நினைபவர் வினையிலராவர்.
திருச்சிற்றம்பலம்
-----------------------------------------------------------------------------------------------------------
திருநாவுக்கரசர் திருப்பதிக வரலாறு
நீர்ஆர் கெடிலவட நீள் கரையின்
நீடுபெரும் சீர்ஆர் திருவதிகை வீரட்டானம் சேர்ந்து பெருமானுடைய திருத்தாள் நண்ணுவாராக, தூய சிவநன்னெறியே சென்று, பேராத
பாசப் பிணிப்பு ஒழிய, ஆராத அன்பு பெற்று விளங்கிய திலகவதியார், அந்தச்
செம்பவளக் குன்றைச், சுடராளியைத் தொழுது, "என்னை
ஆண்டு ஆருளும் நீர் ஆகில், அடியேன் பின் பிறந்தவனை, ஈண்டு
வீனைப் பரசமயக் குழிநின்றும் எடுத்து ஆண்டு அருளவேண்டும்" என்று பலமுறையும்
விண்ணப்பம் செய்து வந்தார். பவ வினை
தீர்ப்பவராகிய பெருமான், அவ் விண்ணப்பத்தைத் திருவுள்ளம் பற்றி, தபோதனியாராகிய
திலகவதியார் கனவில் எழுந்தருளி, "உன்னுடைய மனக்கவலை ஒழி நீ, உன் உடன் பிறந்தான் முன்னமே முனியாகி
எமை அடையத் தவம் முயன்றான், அன்னவனை இனிச் சூலை மடுத்து ஆள்வம்"
என்று அருளிச் செய்தார். முற்பிறவியில் இயற்றிய தவத்தில் உண்டான சிறுபிழையானது, இப்போது
சூலைநோயாக மருள்நீக்கியார் வயிற்றிடை, பெருமானுடைய திருவருளால் புக்கது. சமணர்களால் தீர்க்க முடியாத சூலை நோயுடன், தமது
தமக்கையார் இருப்பிடம் வந்து சேர்ந்தார் மருள்நீக்கியார். தமக்கையாரின் திருவடிகளில் வீழ்ந்து
இறைஞ்சினார். "இது திருவதிகைப்
பிரான் அருளே, பற்று அறுத்த பரமன் அடி பணிந்து பணிசெய்வீர்" எனப்
பணித்தார். திலகவதியார், திருவாளன்
திருநீற்றை அஞ்செழுத்து ஓதிக் கொடுத்தார். பெருவாழ்வு வந்தது என மருள்நீக்கியார்
அத் திருநீற்றைப் பெற்று, மேனி முழுதும் அணிந்து, தமக்கையாரைப்
பின்தொடர்ந்து திருவீரட்டம் சேர்ந்தார்.
அது திருப்பள்ளி எழுச்சி வேளை. உலகைச் சூழ்ந்துள்ள புறஇருள் நீங்குவது திருப்பள்ளி
எழுச்சிக் காலம். அதுபோல், திருநீற்றை அணிந்தவருடைய அகத்து இருள்
நீங்குவதும் திருப்பள்ளி எழுச்சியே. உலக
இருள் நீங்கியது போல், மருள்நீக்கியார் மனத்து இருளும்
நீங்கியது.
பெருமானுடைய திருவருளால்
மருள்நீக்கியார் தமிழ்மாலைகள் சாத்தும் உணர்வு வரப் பெற்றார். "கூற்றாயினவாறு விலக்ககிலீர்"
என்னும் முதல் திருப்பதிகம் அருளிச் செய்தார்....
பெரியபுராணம்
காட்டுவதைக் காண்போம், வழிபடுவோம்......
பெரிய
புராணப் பாடல் எண் : 41
அந்நெறியின்
மிக்கார் அவர்ஒழுக, ஆன்றதவச்
செந்நெறியின்
வைகும் திலகவதி யார்தாமும்,
தொல்
நெறியின் சுற்றத் தொடர்பு ஒழியத் தூயசிவ
நல்நெறியே
சேர்வதற்கு நாதன்தாள் நண்ணுவார்.
பொழிப்புரை : அவர் அவ்வாறு அந்நெறியில் மேம்பட்டவராய்
ஒழுக, பொருந்திய
தவமாய செந்நெறியில் நின்ற திலகவதி அம்மையாரும், பழமையான சுற்றத் தொடர்பு நீங்கத், தூய்மை
தரும் சிவ நன்னெறியையே சேர்வதற்குச் சிவபெருமானின் திருவடிகளை வணங்குவாராகி,
பெ.
பு. பாடல் எண் : 42
பேராத
பாசப் பிணிப்பு ஒழியப் பிஞ்ஞகன்பால்
ஆராத
அன்புபெற ஆதரித்த அம்மடவார்,
நீர்ஆரும்
கெடிலவட நீள்கரையில் நீடுபெரும்
சீர்ஆரும்
திருவதிகை வீரட்டானம் சேர்ந்தார்.
பொழிப்புரை : நீங்காத பாசக் கட்டு நீங்குமாறு, சிவபெருமானிடத்தே
மீதூர்ந்த அன்பு கொண்ட அவ்வம்மையார், புண்ணியத் தன்மை வாய்ந்த, `திருக்கெடிலம்` என்ற
ஆற்றின் நீண்ட வடகரையில் அமைந்திருக்கும் நீடும் பெருஞ்சிறப்பு மிக்க திருவதிகை
வீரட்டானத்தை அடைந்தார்.
பெ.
பு. பாடல் எண் : 43
சென்றுதிரு
வீரட்டா னத்து இருந்த செம்பவளக்
குன்றை
அடிபணிந்து, கோதில் சிவசின்னம்
அன்று
முதல்தாங்கி, ஆர்வம் உறத் தம்கையால்
துன்று
திருப்பணிகள் செய்யத் தொடங்கினார்.
பொழிப்புரை : திலகவதியார் அங்குச் சென்று
வீரட்டானத்தில் எழுந்தருளியிருக்கும் செம்பவள மலை என விளங்கும் வீரட்டானேசுவரரை
அடிபணிந்து, குற்றம் இல்லாத சிவசின்னங்களை அன்று முதல் அணிந்து கொண்டு, அன்பு
பொருந்தத் தம் கையால் பொருந்திய திருப்பணிகளைச் செய்யத் தொடங்கினார்.
பெ.
பு. பாடல் எண் : 44
புலர்வதன்முன்
திருஅலகு பணிமாறி, புனிறுஅகன்ற
நலமலிஆன்
சாணத்தால் நன்குதிரு மெழுக்கிட்டு,
மலர்கொய்து
கொடுவந்து, மாலைகளும் தொடுத்துஅமைத்து,
பலர்புகழும்
பண்பினால் திருப்பணிகள் பலசெய்தார்.
பொழிப்புரை : பொழுது விடிவதற்கு முன், அக்கோயில்
திரு முற்றத்தில் திருவலகு இடுதல் முதலான திருப்பணியைச் செய்தும், ஈன்றணியதல்லாத
நல்ல பசுவின் சாணத்தால் நன்கு திருமெழுக்கிட்டும், மலர்களைக் கொய்து கொண்டு வந்து, மாலைகள்
தொடுத்து அமைத்துக் கொடுத்தும், அன்பர் பலரும் பாராட்டுகின்ற பண்பினால்
இவ்வாறு பல திருப்பணிகளையும் செய்து வந்தார்.
குறிப்புரை : திருவலகு பணிமாறுதல் - திருக்கோயிலின்
திரு முற்றத்தைப் பெருக்கித் தூய்மைப் படுத்துதல். திருமெழுக்கிடுதல் - பசுவின்
சாணத்தால் எவ்வுயிர்க்கும் ஊறுபாடு நேராதவாறு மெழுகுதல். புனிறு அகன்ற - கன்று
ஈன்ற அண்மைக் காலம் அல்லாத; அஃதாவது கன்று ஈன்று 10
நாள்கள் வரை அப்பசுவின் பாலையோ சாணத்தையோ பயன்படுத்தலாகாது ஆதலின், கன்று
ஈன்ற 10 நாள்கள் ஈன்ற அணிமைக் காலம் ஆகும். நலம் மலி ஆன் - நன்மை
அமைந்த பசு. அஃதாவது மலட்டுப் பசு, சினைப்பசு, மலந்தின்னும் பசு அல்லாத பசுக்களாம். இப்பாடற்கண் கூறப்பெறும் நெறி சரியை
நெறியாகும். `நிலைபெறுமாறு எண்ணுதியேல்` (தி.6 ப.31 பா.3) எனத் தொடங்கும் அப்பர் திருவாக்கில் இச்
சரியைநெறி நன்கு விளக்கப்பட்டுள்ளது. எனவே இப்பணியைத் தம்பியாருக்கு முன் செய்து
காட்டியவர் திலகவதியார் ஆவர்.
பெ.
பு. பாடல் எண் : 45
நாளும்மிகும்
பணிசெய்து குறைந்து அடையும் நல்நாளில்,
கேள்உறும்அன்பு
உற ஒழுகும் கேண்மையினார் பின்பிறந்தார்
கோள்உறுதீ
வினைஉந்தப் பரசமயம் குறித்த அதற்கு,
மூளும்
மனக் கவலையினால் முற்றவரும் துயர்உழந்து.
பொழிப்புரை : சிவனடியார்களான சுற்றத்தார்களிடம் அன்பு
மீதூர்ந்து ஒழுகும் கேண்மையுடைய திலகவதியார், நாள்தோறும் இவ்வாறாய பணிகளைச் செய்து, தாழ்வெனும்
தன்மையுடன் ஒழுகி வரும் நாள்களில், தமக்குப் பின் பிறந்தவரான மருணீக்கியார்
தம்மைப் பற்றிய தீவினையின் விளைவால் சமண் சமயம் புகுந்ததால் உண்டான மனக் கவலையால்
மிக்க பெருந்துன்பத்தை அடைந்து.
பெ.
பு. பாடல் எண் : 46
தூண்டுதவ
விளக்குஅனையார் சுடரொளியைத் தொழுது, "என்னை
ஆண்டு
அருளும் நீர்ஆகில், அடியேன்பின் வந்தவனை
ஈண்டுவினைப்
பரசமயக் குழிநின்றும் எடுத்து, அருள
வேண்டும்"
எனப் பலமுறையும் விண்ணப்பஞ் செய்தனரால்.
பொழிப்புரை : திருவருள் சார்பிலேயே திளைக்குமாறு
தூண்டப்படும் தவவிளக்கைப் போன்ற அவ்வம்மையார், வீரட்டானத்து எழுந்தருளி இருக்கும்
இறைவரை வணங்கித், தொழுது, `பெருமானே! என்னை ஆண்டருளுவீராகில், எனக்குப்
பின் தோன்றியவனைச், சேர்கின்ற தீவினையையுடைய சமண் சமயமான
படுகுழியினின்றும் எடுத்தருளி அடிமை கொள்ள வேண்டும்` என்று பல முறையும் விண்ணப்பம் செய்தார்.
பெ.
பு. பாடல் எண் : 47
"தவம்என்று பாய்இடுக்கித் தலைபறித்து
நின்று உண்ணும்
அவம்ஒன்று
நெறிவீழ்வான் வீழாமே அருளும்" எனச்
சிவம்
ஒன்று நெறிநின்ற திலகவதி யார்பரவப்
பவம்
ஒன்றும் வினைதீர்ப்பார் திருவுள்ளம் பற்றுவார்.
பொழிப்புரை : `தவத்தை
மேற்கொண்டதாக எண்ணிக் கொண்டு, பாயை உடுத்தியும், தலைமயிரைப்
பறித்தும், நின்றவாறே உணவு உண்டும் வருந்துகின்ற அவநெறியாய சமண நெறியில்
விழுந்த என் தம்பியை, அவ்வாறு விழாமல் அருள் செய்ய வேண்டும்` என்று
சிவத்தையே சார்ந்து நிற்கும் திருநெறியில் வாழும் திலகவதியார் வேண்ட, பிறவி
வயப்பட்டு உழலும் வினைகளைத் தீர்ப்பவரான சிவபெருமானும் அதனைத் திருவுள்ளம்
பற்றுவாராய்,
பெ.
பு. பாடல் எண் : 48
மன்னுதபோ
தனியார்க்குக் கனவின்கண் மழவிடையார்,
"உன்னுடைய மனக்கவலை ஒழிநீஉன்
உடன்பிறந்தான்
முன்னமே
முனியாகி எமை அடையத் தவம்முயன்றான்
அன்னவனை
இனிச்சூலை மடுத்துஆள்வம்" எனஅருளி.
பொழிப்புரை : நிலைபெற்ற தவமுடைய அப்பெருமாட்டியார்தம்
கனவில், இளமையான
ஆனேற்றை உடைய சிவபெருமான் எழுந்தருளி, `நீ உன்னுடைய மனக் கவலையை ஒழிவாயாக, உன்
தம்பி முன்னமே ஒரு முனிவனாக இருந்து எம்மை அடைவதற்குத் தவம் செய்தனன், இனி
அவனுக்குச் சூலை நோய் தந்து ஆட்கொள்வோம்` என அருளிச் செய்து,
பெ.
பு. பாடல் எண் : 49
பண்டுபுரி
நல்தவத்துப் பழுதின்அளவு இறைவழுவும்
தொண்டரை
ஆளத்தொடங்கும் சூலை வேதனைதன்னைக்
கண்தரு
நெற்றியர் அருள, கடுங்கனல்போல் அடுங்கொடிய
மண்டுபெருஞ்
சூலை, அவர் வயிற்றின் இடைப் புக்கதால்.
பொழிப்புரை : முற்பிறவியில் செய்த நற்றவத்தில்
சிறிதளவு பிழை செய்த தொண்டரான மருணீக்கியாரை, ஆட்கொள்ளத் தொடங்கும் சூலை நோயை, நெற்றிக்
கண்ணராகிய சிவபெருமான் அருள் செய்ய, கொடிய தீயைப் போல் சுடுகின்ற அம்மிகப்
பெருஞ் சூலைநோய் அவருடைய வயிற்றுள் புகுந்தது.
குறிப்புரை : இவ்விரு பாடல்களாலும், நாவரசர்
முற்பிறவியில் ஒரு முனிவராய்த் தவம் இயற்றி இருந்தமையும்,
அதில் நேர்ந்த ஒரு
சிறு பிழையால் இப்பிறவி பெற நேர்ந்தமையும் புலனாகின்றன. இறை வழு - சிறிதளவிலான
குற்றம். இது, சுதபா முனிவராக இருந்த பொழுது, கயிலையைப் பெயர்த்த இராவணனுக்கு உய்யும்
வழி காட்டியமை என்பர் ஒரு சாரார். உண்மையுணர வந்த சாந்தர் எனும் முனிவருக்குச்
சமணமே பெரிது என்று அறிவுறுத்தியமை என்பர் ஒருசாரார்.
பெ.
பு. பாடல் எண் : 50
அடைவில்அமண்
புரிதரும சேனர்வயிற்று அடையும்அது,
வடஅனலும்
கொடுவிடமும் வச்சிரமும் பிறவுமாம்
கொடிய
எலாம் ஒன்றுஆகும் எனக்குடரின் அகம் குடையப்
படர்உழந்து
நடுங்கிஅமண் பாழிஅறை இடைவீழ்ந்தார்.
பொழிப்புரை : சேரத் தகாத சமண சமயத்தை விரும்பி ஒழுகிய
தருமசேனரின் வயிற்றுள் புக்க அச்சூலை நோய், வடவைத் தீயும்,
கொடிய நஞ்சும், வயிரமும்
ஆகிய இவை போன்ற கொடுமை செய்யும் மற்றவை எல்லாமும் ஒன்றுகூடி வந்தனவோ என எண்ணுமாறு
குடரின் உள்ளே குடைய, அவர் துன்புற்று வருந்திச் சமணர்
பாழியில் உள்ள அறையில் விழுந்தார்.
பெ.
பு. பாடல் எண் : 51
அச்சமயத்
திடைத்தாம்முன் அதிகரித்து வாய்த்துவரும்
விச்சைகளால்
தடுத்திடவும், மேன்மேலும் மிகமுடுகி,
உச்சம்உற, வேதனைநோய்
ஓங்கிஎழ, ஆங்குஅவர்தாம்
நச்சுஅரவின்
விடம் தலைக்கொண்டு என, மயங்கி நவை உற்றார்.
பொழிப்புரை : அச்சமண் சமயத்தில், தாம்
முன்பு பழகிப்பயன் தந்துள்ள மந்திரம் முதலான வித்தைகளால் தடுக்கவும், அந்நோய்
குறையாது மேன்மேலும் மிகவும் வளர்ந்து பெருகித் துன்பம் தரும்படி மிக்கு
எழுந்ததால், ஆண்டிருந்த தருமசேனரும், பாம்பினிடமுள்ள நஞ்சு தலைக்கொண்டாற் போல
மயங்கிச் சோர்ந்தார்.
பெ.
பு. பாடல் எண் : 52
அவர்நிலைமை
கண்டதற்பின் அமண்கையர் பலர்ஈண்டிக்
"கவர்கின்ற விடம்போல்முன் கண்டு அறியாக்
கொடுஞ்சூலை
இவர்தமக்கு
வந்தது இனி யாதுசெயல்" என்று அழிந்தார்
தவம்என்று
வினைபெருக்கிச் சார்பு அல்லா நெறிசார்வார்.
பொழிப்புரை : தருமசேனரின் நிலையைக் கண்ட அளவில், தவம்
என்று கூறிக் கொண்டு, தீவினையையே பெருக்கி, நல்ல
பற்றுக்கோடற்ற, சமண நெறியினைச் சார்ந்த கீழ்மக்கள் பலரும் கூடி, `உயிரைக்
கவரும் நஞ்சைப் போல், முன் எங்கும், எவரும் கண்டறியாத இக் கொடிய சூலை நோய்
இவருக்கு வந்ததே; இனி என் செய்வோம்` என்று மனம் வருந்தினர்.
பெ.
பு. பாடல் எண் : 53
புண்தலை
வன்முருட்டு அமணர் புலர்ந்துசெயல் அறியாது,
குண்டிகை
நீர் மந்திரித்துக் குடிப்பித்தும் தணியாமை
கண்டு,
மிகப் பீலிகொடு கால்அளவும்
தடவிடவும்,
பண்டையினும்
நோவுமிக, பரிபவத்தால் இடர் உழந்தார்.
பொழிப்புரை : புண்ணுடைய தலையையும், வலிய
முரட்டுத் தன்மையையும் உடைய சமணர் மனம் அழிந்து, செய்வதறியாது, தம் குண்டிகையில் இருந்த நீரை
மந்திரித்துக் குடிக்கச் செய்தும், நோய் தணியாததைக் கண்டு, மேலும்
மயிற்பீலிகொண்டு உடல் முழுதும் தடவிவிடவும், முன்னை விட நோய் மிகுதியானது. அதனால்
அவர்கள் மனம் வருந்தினர். பரிபவம் -
அவமானம்.
பெ.
பு. பாடல் எண் : 54
தாவாத
புகழ்த்தரும சேனருக்கு வந்தபிணி
ஓவாது
நின்றிடலும் ஒழியாமை உணர்ந்தாராய்,
"ஆஆநாம் என்செய்கோம்" என்று அழிந்த
மனத்தினராய்ப்
போவார்கள்
"இதுநம்மால் போக்க அரிதுஆம்" எனப்புகன்று.
பொழிப்புரை : கெடுதல் இல்லாத புகழையுடைய
தருமசேனருக்கு வந்தநோய் நீங்காதாகவே, அத்தன்மையை உணர்ந்து, `ஆ!
ஆ! நாம் இனி என் செய்வோம்?` என்று வருந்திய மனத்துடன், `இது
நம்மால் நீக்குதல் அரிதாகும்` என்று அகன்று செல்வாராய்,
பெ.
பு. பாடல் எண் : 55
குண்டர்களும்
கைவிட்டார், கொடுஞ்சூலை கைக்கொண்டு
மண்டிமிக
மேன்மேலும் முடுகுதலால், மதிமயங்கி,
பண்டைஉறவு
உணர்ந்தார்க்குத் திலகவதி யார்உளராக்
கொண்டு,அவர்பால்
ஊட்டுவான் தனைவிட்டார் குறிப்பு உணர்த்த.
பொழிப்புரை : சமணர்களும் கைவிட்டனர். கொடிய சூலை நோய்
தம்மைப் பற்றிக் கொண்டு மேன்மேலும் வருத்துவதால், செய்வது அறியாது, அறிவு
மயங்கிய நிலையில், முன்னைய உறவினரை நினைத்து. உணரப்புகுந்த
அவருக்குத் திலகவதியாராய தமக்கையார் இருக்கிறார் எனும் நினைவு வர, அவரிடம்
தம் எண்ணத்தை உணர்த்தும் பொருட்டுத் தம்மை ஊட்டுவிக்கும் ஏவலாளனை அனுப்பி
வைத்தார்.
பெ.
பு. பாடல் எண் : 56
ஆங்குஅவன்போய்த்
திருஅதிகை தனைஅடைய, அருந்தவத்தார்
பூங்கமழ்நந்
தனவனத்தின் புறத்துஅணையக் கண்டுஇறைஞ்சி,
"ஈங்குயான் உமக்கு இளையார் ஏவலினால்
வந்தது" என,
"தீங்குஉளவோ" எனவினவ, மற்றுஅவனும்
செப்புவான்.
பொழிப்புரை : அனுப்பப்பட்ட அவனும் சென்று
திருவதிகையினைச் சேர, அதுபொழுது அரிய தவத்தவரான திலகவதியார், நறுமணம்
வீசும் மலர்களையுடைய நந்தனவனத்தின் புறத்தே வர, அவரைக் கண்டு `நான் உம் இளையாரின் (தம்பியார்) ஏவலால்
இங்கு வந்தேன்` எனக் கூற, அது கேட்ட திலகவதியார், `தீங்கு
உளவோ?` என
வினவ, அவனும்
கூறுபவனாய்.
பெ.
பு. பாடல் எண் : 57
"கொல்லாது சூலைநோய் குடர்முடக்கித்
தீராமை
எல்லாரும்
கைவிட்டார், இதுசெயல்என் முன்பிறந்த
நல்லாள்பால்
சென்று இயம்பி நான்உய்யும் படிகேட்டுஇங்கு
அல்ஆகும்
பொழுது அணைவாய் என்றார்" என்று அறிவித்தான்.
பொழிப்புரை : `சூலை
நோயானது கொல்வது மட்டும் செய்யாது, குடலை முடக்கித் தீராத நோயாக அவருக்கு
வந்துள்ளது. அதனைத் தீர்க்க முயன்ற அனைவரும் கைவிட்டனர். இச்செய்தியை என் முன்
பிறந்த நல்லாரிடம் போய்ச் சொல்லி, நான் உய்யும் வகையை அவரிடம் கேட்டு, இங்கு
இரவுப் போதில் வருவாயாக! என்றார்` எனத் தெரிவித்தான்.
பெ.
பு. பாடல் எண் : 58
என்றுஅவன்முன்
கூறுதலும், "யான்அங்கு உன்னுடன் போந்து
நன்றுஅறியார்
அமண்பாழி நண்ணுகிலேன் எனும்மாற்றம்
சென்றுஅவனுக்கு
உரை"என்று திலகவதி யார்மொழிய
அன்றுஅவனும்
மீண்டுபோய்ப் புகுந்தபடி அவர்க்கு உரைத்தான்.
பொழிப்புரை : இவ்வாறு அவன் தம் முன்னின்று உரைக்கவும், `நான்
அங்கு உன்னுடன் வந்து, நன்மை நெறி அறியாத சமணர் பாழியை அடைய
மாட்டேன் என்று, என் சொல்லை நீ சென்று அவனிடம் கூறுவாய்` எனத்
திலகவதியார் உரைக்க, அன்று அவனும் திரும்பிப் போய், நிகழ்ந்ததை
நிகழ்ந்தவாறே அவருக்குச் சொன்னான்.
பெ.
பு. பாடல் எண் : 59
அவ்வார்த்தை
கேட்டலுமே அயர்வுஎய்தி "இதற்கு இனியான்
எவ்வாறு
செய்வன்"என, "ஈசர் அருள் கூடுதலால்
ஒவ்வாஇப்
புன்சமயத்து ஒழியா இத் துயர் ஒழியச்
செவ்ஆறு
சேர்திலக வதியார்தாள் சேர்வன்" என.
பொழிப்புரை : அப்பணியாளன் திலகவதியார் உரைத்ததைத்
தெரிவிக்க, அதைக் கேட்டதும், தருமசேனர் தளர்ச்சி அடைந்து, இதற்கு
யான் என் செய்வேன்! என்று மயங்கிய போது, சிவபெருமான் திருவருள் கூட்டப், `பொருந்தாத
இப்புன்மைச் சமயத்தில் ஒழியாத இத்துன்பம், ஒழியுமாறு செந்நெறியில் சேர்ந்த
திலகவதியார் சேவடிகளைச் சேர்வேன்` என்று மனத்தில் நினைத்து,
பெ.
பு. பாடல் எண் : 60
எடுத்தமனக்
கருத்து உய்ய எழுதலால், எழுமுயற்சி
அடுத்தலுமே, அயர்வுஒதுங்க,
திருஅதிகை
அணைவதனுக்கு
உடுத்து
உழலும் பாய்ஒழிய, உறிஉறு குண்டிகை ஒழிய,
தொடுத்தபீ
லியும்ஒழிய, போவதற்குத் துணிந்து எழுந்தார்.
பொழிப்புரை : மனத்தில் எழுந்த கருத்துத் தாம்
பிழைத்தற்குரியதாய் இருக்க, மனத்து எழும் முயற்சியும் கூட, தளர்ச்சி
நீங்கிய அளவில், திருவதிகையினை அடைவதற்கு, உடுத்தி உழன்ற பாய் ஒழியவும், உறியில்
தூக்கிய குண்டிகை ஒழியவும், கொண்ட மயிற்பீலி ஒழியவும் போவதற்குத்
துணிந்து எழுந்தாராகி.
பெ.
பு. பாடல் எண் : 61
பொய்தருமால்
உள்ளத்துப் புன்சமணர் இடம்கழிந்து,
மெய்தருவான்
நெறிஅடைவார், வெண்புடைவை மெய்சூழ்ந்து,
கைதருவார்
தமைஊன்றிக் காணாமே இரவின்கண்
செய்தவமா
தவர்வாழும் திருஅதிகை சென்று அடைவார்.
பொழிப்புரை : பொய்யைத் தரும் மயக்கமுடைய உள்ளத்தராகிய
இழிந்த சமணர்கடளித்தினின்றும் நீங்கி, மெய்யுணர்வை வழங்கி அதனால் வீடுபேற்றைத்
தருபவனாகிய சிவபெருமானின் நன்னெறியை அடைபவராய், அதற்கேற்றவாறு வெண்மையான ஆடையை உடலில்
உடுத்திக் கொண்டு, கைகொடுத்துத் தம்மைத் தாங்கி
வருவார்மீது ஊன்றியவாறு, சமணர் காணாத வண்ணம், தவம்
செய்யும் மாதவர் வாழ்கின்ற திருவதிகையை இரவில் சென்று அடைவாராய்,
பெ.
பு. பாடல் எண் : 62
சுலவி
வயிற்று அகம் கனலும் சூலைநோய் உடன்தொடர,
குலவிஎழும்
பெருவிருப்புக் கொண்டு அணைய, குலவரைபோன்று
இலகுமணி
மதில்சோதி எதிர்கொள்திரு அதிகையினில்
திலகவதி
யார்இருந்த திருமடத்தைச் சென்று அணைந்தார்.
பொழிப்புரை : சுழற்றிச் சுழற்றி வயிற்றுள் பற்றி
எரியும் சூலை நோய் தம்முடனே தொடர, பொருந்தி எழும் விருப்பம் தம்மைக்
கொண்டு செலுத்த, பெரிய மலை போன்று விளங்கும் மதிலின் ஒளி எதிர்தோன்றத், திருவதிகையில்
திலகவதியார் இருந்த திருமடத்தைச் சென்று அடைந்தார்.
பெ.
பு. பாடல் எண் : 63
வந்து
அணைந்து, திலகவதியார்அடிமேல் உறவணங்கி,
"நந்தமது குலம் செய்த நல்தவத்தின்
பயன்அனையீர்
இந்தவுடல்
கொடுஞ்சூலைக்கு இடைந்து அடைந்தேன், இனிமயங்காது
உய்ந்துகரை
ஏறும் நெறி உரைத்து அருளும்" எனவுரைத்து.
பொழிப்புரை : வந்து அடைந்து திலகவதியாரின்
திருவடிகளில் பொருந்த விழுந்து வணங்கி, `நம் குலம் செய்த நற்றவத்தின் பயன்
போன்றவரே! இவ்வுடலில் பற்றிய கொடிய சூலை நோய்க்கு மிகவும் வருந்தி, உம்மை
வந்து சேர்ந்தேன். இனி மயங்காமல் உய்ந்து கரைசேரும் வழியைத் தாங்கள்
கட்டளையிட்டருளல் வேண்டும்` எனக் கூறி
பெ.
பு. பாடல் எண் : 64
தாள்இணைமேல்
விழுந்து அயருந் தம்பியார் தமைநோக்கி,
ஆள்உடைய
தம்பெருமான் அருள்நினைந்து, கைதொழுது,
"கோள்இல் பரசமய நெறிக் குழியில் விழுந்து
அறியாது
மூளும்அருந்
துயர்உழந்தீர் எழுந்திரீர்" எனமொழிந்தார்.
பொழிப்புரை : தம் அடிகளில் விழுந்து வருந்தும்
தம்பியாரைப் பார்த்துத், தம்மை அடிமையாக உடைய சிவபெருமானின்
திருவருளை எண்ணித் தொழுது, `நல்ல குறிக்கோள் இல்லாத பிறசமயக்
குழியில் விழுந்து பெருகிய கொடிய துன்பத்தில் வருந்தினீர்! இனி எழுந்திருப்பீராக!` எனக்
கூறியருளினார்.
பெ.
பு. பாடல் எண் : 65
மற்றுஅவ்உரை
கேட்டலுமே, மருணீக்கி யார்தாமும்
உற்றபிணி
உடல்நடுங்கி எழுந்துதொழ, உயர்தவத்தோர்,
"கற்றை வேணியர் அருளே காணும்இது, கழல்அடைந்தோர்
பற்றுஅறுப்பார்
தமைப்பணிந்து பணிசெய்வீர்" எனப்பணித்தார்.
பொழிப்புரை : அவர் உரைத்த அவ்வுரையைக் கேட்டதும், மருணீக்கியார்
பொருந்திய நோயுடனே நிலத்தில் விழுந்த நிலையினின்றும் எழுந்து தொழவே, உயர்
தவத்தவரான திலகவதியார், `இது தொகுதியான சடையையுடைய சிவபெருமானின்
திருவருளாகும், தம் திருவடிச்சார்பை அடைந்தவரின் பற்றுக்களை அறுப்பவரான
அப்பெருமானைப் பணிந்து பணி செய்வீராக!` என்று பணித்தார்.
பெ.
பு. பாடல் எண் : 66
என்றபொழுது
அவர்அருளை எதிர்ஏற்றுக் கொண்டு இறைஞ்ச
நின்றதபோ
தனியாரும் நின்மலன்பேர் அருள்நினைந்து,
சென்று,திரு
வீரட்டம் புகுவதற்கு, திருக்கயிலைக்
குன்று
உடையார் திருநீற்றை அஞ்செழுத்து ஓதிக்கொடுத்தார்.
பொழிப்புரை : எனத் திலகவதியார் அருள, அவர்தம்
அருளை ஏற்றுக்கொண்டு மருணீக்கியார் வணங்க, அவர் போய்த் திருவீரட்டம் புகுவதற்குத்
தகுதியுடையவராக ஆக்குவதற்குத் திலகவதியார் திருக்கயிலை மலையினுடைய இறைவரின்
ஐந்தெழுத்தை ஓதித் திருநீற்றை வழங்கினார்.
பெ.
பு. பாடல் எண் : 67
திருவாளன்
திருநீறு திலகவதி யார்அளிப்ப,
பெருவாழ்வு
வந்தது எனப் பெருந்தகையார் பணிந்து, ஏற்று, அங்கு
உரு
ஆர அணிந்து, தமக்கு உற்ற இடத்து உய்யும் நெறி
தருவாராய், தம்முன்பு
வந்தார்பின் தாம்வந்தார்.
பொழிப்புரை : சிவபெருமானின் திருநீற்றைத் திலகவதியார்
அளிக்க, `எனக்குப்
பெருவாழ்வு வந்தது` என எண்ணிப் பெருந்தகையாரான
மருணீக்கியார் பணிந்து ஏற்றுக் கொண்டார். அதைத் தம் திருமேனி முழுதும் பொருந்த
நிறைய அணிந்து கொண்டு, தமக்குத் தீங்குற்ற இடத்தில் உய்யும்
வழிதருபவராகித் தம்முன்வந்த அத் திலகவதியாரின் பின்பு, அவரும் வந்தார்.
பெ.
பு. பாடல் எண் : 68
நீறுஅணிந்தார்
அகத்துஇருளும், நிறைகங்குல் புறத்துஇருளும்
மாறவரும், திருப்பள்ளி
எழுச்சியினில், மாதவஞ்செய்
சீறடியார்
திருஅலகும் திருமெழுக்கும் தோண்டியும் கொண்டு
ஆறு
அணிந்தார் கோயிலினுள் அடைந்தவரைக் கொடுபுக்கார்.
பொழிப்புரை : அவ்வாறு திருநீற்றை அணிந்தவரின்
உள்ளத்தில் உள்ள அக இருளும், வெளியே சூழ்ந்திருந்த இரவின் புற
இருளும் மாறும்படி வரும் திருப்பள்ளி எழுச்சிக் காலத்தில்,
`மாதவம் செய்யும்
திலகவதியம்மையார், திருவலகும், திருமெழுக்கிற்குரிய ஆவின் சாணமும், தோண்டியும்
ஆகிய இவற்றை எடுத்துக் கொண்டு, கங்கையாற்றை அணிந்த இறைவரின் கோயிலுள்
தம்மை வந்தடைந்த நாயனாரையும் அழைத்துக் கொண்டு சென்றார்.
பெ.
பு. பாடல் எண் : 69
திரைக்கெடில
வீரட்டானத்திருந்த செங்கனக
வரைச்சிலையார்
பெருங்கோயில் தொழுது,வலம் கொண்டு, இறைஞ்சி,
தரைத்தலத்தின்
மிசைவீழ்ந்து, தம்பிரான் திருவருளால்
உரைத்தமிழ்மா
லைகள்சாத்தும் உணர்வுபெற, உணர்ந்து உரைப்பார்.
பொழிப்புரை : அலைகளையுடைய `கெடிலம்` என்ற ஆற்றின் கரையில் உள்ள
வீரட்டானத்தில் இருந்த, சிவந்த பொன்மலையை வில்லாகக் கொண்ட
சிவபெருமானின் பெருங்கோயிலைத் தொழுது வலமாக வந்து வணங்கி,
நிலத்தில் விழுந்து
வணக்கம் செய்து, தம் பெருமானின் திருவருளால் அவர் புகழைக் கூறும் தமிழ்
மாலையைச் சாத்தும் உணர்வு வர உள் உணர்ந்து உரைப்பவராகி.
பெ.
பு. பாடல் எண் : 70
நீற்றால்நிறைவு
ஆகிய மேனியுடன்,
நிறைஅன்புஉறு சிந்தையில் நேசம் மிக,
மாற்றார்புரம்
மாற்றிய வேதியரை
மருளும்பிணி மாயை அறுத்திடுவான்,
"கூற்றுஆயின வாறு விலக்ககிலீர்"
எனநீடிய கோதுஇல் திருப்பதிகம்
போற்றால்உலகு
ஏழின் வரும் துயரும்
போமாறு எதிர் நின்று புகன்றனரால்.
பொழிப்புரை : திருநீற்றினால் நிறைந்த மேனியுடன், மிகுந்த
அன்பு பொருந்திய மனத்தில் விருப்பம் மிகப், பகைவரின் முப்புரங்களை எரித்த வேதியரான
வீரட்டானத்து இறைவரை, மயக்கத்தையும் சூலையையும், மாயையும்
அறுக்கும் பொருட்டுக் `கூற்றாயினவாறு விலக்ககலீர்` எனத்
தொடங்கும் பெருமையுடைய குற்றம் இல்லாத திருப்பதிகத்தைப் போற்றுவதால், உலகத்தில்
ஏழு பிறப்புக்களிலும் வரும் துன்பமும் நீங்குமாறு திருமுன்பு நின்று பாடினார்.
பெ.
பு. பாடல் எண் : 71
மன்னும்பதி
கம்அது பாடியபின்
வயிறு உற்று அடு சூலை மறப்பிணிதான்
அந்நின்ற
நிலைக்கண் அகன்றிடலும்,
"அடியேன்உயி ரோடு அருள் தந்தது"
எனாச்
செந்நின்ற
பரம்பொருள் ஆனவர்தம்
திருஆர் அருள் பெற்ற சிறப்பு உடையோர்
முன்னின்ற
தெருட்சி மருட்சியினால்
முதல்வன்கரு ணைக்கடல் மூழ்கினரே.
பொழிப்புரை : நிலைபெறும் அப்பதிகத்தை அவர் அருளிய
பின்பு, அவரது
வயிற்றில் தங்கி வருத்திய கொடிய சூலை நோயும் அக்கணமே நீங்கிடவும், சிறப்பென்னும்
செம்பொருளான சிவ பெருமானின் திருநிறைந்த அருளைப் பெறுதற்கான சிறப்புடைய நாயனார், பொருந்தி
நின்ற ஞான மயக்கத்தால் இறைவரின் அருள் ஆகிய கடலுள் மூழ்கி நின்றார்.
பெ.
பு. பாடல் எண் : 72
அங்கங்கள்
அடங்க உரோமம்எலாம்
அடையப்புள கங்கள் முகிழ்த்து அலரப்
பொங்கும்புனல்
கண்கள் பொழிந்து இழியப்
புவிமீது விழுந்து புரண்டு அயர்வார்,
"இங்குஎன்செயல் உற்ற பிழைப்பு அதனால்
ஏறாத பெருந்திடர் ஏறிடநின்
தங்கும்
கருணைப் பெரு வெள்ளம்இடத்
தகுமோ"என இன்னன தாம் மொழிவார்.
பொழிப்புரை : மகிழ்ச்சியினால் திருமேனி முழுதும்
மயிர் சிலிர்த்து நிற்க, கண்களினின்று இடையறாது பொங்கும் ஆனந்தக்
கண்ணீர் வழிந்து பெருக, தரையின் மீது விழுந்து புரண்டு
மகிழ்ச்சியில் திளைத்த நாயனார், `இவ்விடத்து என் செய்கையால் உண்டான பிழை
பெரிதும் இருந்தும், ஏறாத பெரிய மேட்டிலும் ஏறுமாறு உம் நிலை
பெற்ற அருளான பெருவெள்ளத்தைப் பெருக்குதலும் தகுதி யாகுமோ?`
என இத்தகைய சொற்களைத்
தாமே கூறுபவராய்,
பெ.
பு. பாடல் எண் : 73
"பொய்வாய்மை பெருக்கிய புன்சமயப்
பொறியில்சமண் நீசர் புறத்து உறையாம்
அவ்ஆழ்குழி
யின்கண் விழுந்து எழுமாறு
அறியாது மயங்கி அவம்புரிவேன்,
மைவாச
நறும்குழல் மாமலையாள்
மணவாளன் மலர்க்கழல் வந்து அடையும்
இவ்வாழ்வு
பெறத்தரு சூலையினுக்கு
எதிர்செய்குறை என்கொல்"
எனத்தொழுதார்.
பொழிப்புரை : பொய்யை மெய் என்று பெருக்கிய இழிந்த
சமயமாய், நல்வினையற்ற
இழிந்த சமணர் சார்ந்து நிற்கும் புறச் சமயமான ஆழமான படுகுழியில் விழுந்து, மேலே
எழுகின்ற வழியறியாது, மயங்கிப் பயனற்ற தொழிலைச் செய்து வந்த
யான், மயிர்ச்
சாந்தினால் மணம் கமழும் நறிய கூந்தலையுடைய உமையம்மையாரின் கணவரான சிவபெருமானின்
மலர்போன்ற அடிகளை வந்து அடையும் இப்பெருவாழ்வினைப் பெறத்தந்த இச்சூலை நோய்க்குக்
கைம்மாறாகச் செய்யக்கூடிய உதவி என்ன இருக்கின்றது? என அச்சூலை நோயை நினைந்து வணங்கினார்.
பெ.
பு. பாடல் எண் : 74
மேவுற்றஇவ்
வேலையில் நீடியசீர்
வீரட்டம் அமர்ந்த பிரான் அருளால்,
"பாஉற்று அலர் செந்தமிழின் சொல்வளப்
பதிகத்தொடை பாடிய பான்மையினால்
நாவுக்கரசு
என்றுஉலகு ஏழினும்நின்
நல்நாமம் நயப்புஉற மன்னுக"என்று
யாவர்க்கும்
வியப்புஉற மஞ்சுஉறைவான்
இடையேஒரு வாய்மை எழுந்ததுவே.
பொழிப்புரை : பொருந்திய அவ்வமையத்தில், சிறப்பால்
மிக்க திருவீரட்டானத்து அமர்ந்திருக்கும் இறைவரின் திருவருளால், பாடற்கு
இயைந்து அலர்ந்த செந்தமிழின் இனிய சொல்வளம் கொண்ட திருப்பதிக மாலையைப் பாடியருளிய
முறையினால், `திருநாவுக்கரசு` என்று உனது பெயர் பலரும் விரும்புமாறு
ஏழு உலகங்களிலும் நிலைபெறுவதாகுக! என எல்லார்க்கும் வியப்பு உண்டாகுமாறு மேகம்
தவழும் வானில் ஓர் ஒலி எழுந்தது.
பெ.
பு. பாடல் எண் : 75
இத்தன்மை
நிகழ்ந்துஉழி, நாவின்மொழிக்கு
இறை ஆகிய அன்பரும், "இந்நெடுநாள்
சித்தம்
திகழ் தீவினை யேன்அடையும்
திருவோஇது" என்று தெருண்டு, அறியா
அத்தன்மையன்
ஆய இராவணனுக்கு
அருளும் கருணைத் திறம் ஆன,அதன்
மெய்த்தன்மை
அறிந்து துதிப்பதுவே
மேல்கொண்டு வணங்கினர் மெய்உறவே.
பொழிப்புரை : இவ்வருட் செயல் நிகழ்ந்தவாற்றால் நாவின்
மொழிக்கு அரசரான அன்பரும், `இத்தனை நீண்ட காலமும் சித்தத்தினுள்
விளங்கிய தீவினையை உடைய நான், அடையத்தக்க பெரும்பேறு இதுவோ!` என்று
நினைந்தவராய், தெளிந்தறியாத அவ்வியல்பையுடைய இராவணனுக்கும் அருளும் அருளின்
பெருமையான அதன் மெய்த்தன்மையை அறிந்து, அத்திறத்தை நினைந்து வணங்குதலையே
மேற்கொண்டு மெய்யுற வீழ்ந்து வணங்கினார்.
பெ.
பு. பாடல் எண் : 76
"பரசும்கரு ணைப்பெரி யோன்அருளப்
பறிபுன்தலை யோர்நெறி பாழ்படவந்து
அரசுஇங்கு
அருள் பெற்று உலகு உய்ந்தது" எனா
அடியார்புடை சூழ்அதி கைப்பதிதான்
முரசம்
படகம் துடி தண்ணுமை யாழ்
முழவம் கிளை துந்துபி கண்டையுடன்
நிரைசங்கு
ஒலி எங்கும் முழங்குதலால்
நெடுமாகடல் என்ன நிறைந்து உளதே.
பொழிப்புரை : `வணங்கத்தக்க
பேரருளையுடைய பெரியவரான சிவபெருமான் அங்ஙனம் அருள் செய்ய,
மயிர்பறித்த இழிந்த
தலையையுடைய சமணர்களின் சமயநெறி பாழ்பட்டு அழியத், திருநாவுக்கரசர் இங்குவந்து அருள்பெற்ற
அதனால் உலகம் உய்ந்தது` என்று, சிவனடியார்கள் எம்மருங்கும் சூழ்ந்த
திருவதிகை நகரமானது, முரசும், தம்பட்டமும், உடுக்கையும், மத்தளமும், யாழும், முழவும், கிளையும், துந்துபியும், மணியும் என்ற இவற்றின் முழக்கத்துடனே
நிரல்பட ஒலிக்கும் சங்கங்களும் எங்கும் ஒலித்தலால், நீண்ட பெருங்கடல் போல் நிறைந்து
விளங்கியது.
பெ.
பு. பாடல் எண் : 77
மையல்
துறை ஏறி மகிழ்ந்து அலர்சீர்
வாகீசர் மனத்தொடு வாய்மையுடன்
மெய்உற்ற
திருப்பணி செய்பவராய்,
விரவும்சிவ சின்னம் விளங்கிடவே,
எய்துஉற்ற
தியானம் அறா உணர்வும்,
ஈறு இன்றி எழுந்திரு வாசகமும்,
கையில்திக
ழும்உழ வாரமுடன்
கைத்தொண்டு கலந்து கசிந்தனரே.
பொழிப்புரை : மயக்கத்தைத் தரும் சமண் சமயத்
துறையினின்றும் மேல் ஏறி மகிழும் சிறப்புடைய திருநாவுக்கரசர், உள்ளத்தாலும்
சொல்லாலும் உடலாலும் பொருந்திய சிவப்பணியைச் செய்பவராய், அதற்கு ஏற்றவாறு பொருந்தும் சிவச்
சின்னங்களான திருநீற்றையும் கண்டிகையையும் விளங்கப் பூண்டு, இடையீடில்லாது
உள்ளத்தில் தோய்ந்து நிற்கும் திருவருள் உணர்வையும், தடைப்படாது மேன் மேலும் எழும்
திருப்பதிகங்கள் பொருந்திய திருவாக்கையும், கையில் விளங்கும் உழவாரப் படையினையும்
கொண்டவராய்த் தம் கைத்தொண்டை மனம்கலந்து கசிந்து செய்து வந்தார்.
பெ.
பு. பாடல் எண் : 78
மெய்ம்மைப்பணி
செய்த விருப்பு அதனால்
விண்ணோர்தனி நாயக னார்கழலில்
தம்இச்சை
நிரம்ப வரம்பெறும்அத்
தன்மைப்பதி மேவிய தாபதியார்
பொய்ம்மைச்
சமயப்பிணி விட்டுஅவர்முன்
போதும்பிணி விட்டுஅரு ளிப்பொருளா
எம்மைப்பணி
கொள்கரு ணைத்திறம்இங்கு
யார்பெற்றனர் என்ன இறைஞ்சினரே.
பொழிப்புரை : தேவர்கட்கெல்லாம் ஒப்பற்ற தலைவரான
வீரட்டானத்தமர்ந்திருக்கும் இறைவரின் திருவடிகளில் உள்ளம் வைத்து விரும்பி, மெய்ம்மை
குன்றாத திருப்பணிகளைச் செய்து, விண்ணப்பம் செய்ததால், தம்
இச்சை நிரம்புமாறு வரம்பெற்ற அத்தெய்வத் தன்மை வாய்ந்த, திருவதிகையில் வாழும் தவத்தவரான
திலகவதியார், `பொய்ம்மையான சமண் சமயத் தொடக்கை விட்டு, அவர்
(தம்பியார்), இறைவர் திருமுன்பு வந்து புகுதற்கு ஏதுவான சூலை நோயைத் தந்து, மிகச்
சிறிய எம்மையும் ஒருபொருளாக ஆட்கொண்ட பெருங்கருணைத் திறத்தைப் போல் இங்கு வேறு
எவர் பெற்றார்?` என்று எண்ணிப் போற்றி வணங்கினார்.
திருநாவுக்கரசர் திருப்பதிகம்
4.001 திருவதிகை வீரட்டானம் பண்
- கொல்லி
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
கூற்றாயின
வாறு விலக்ககிலீர்,
கொடுமைபல செய்தன நான்அறியேன்,
ஏற்றாய்அடிக்
கேஇர வும்பகலும்
பிரியாது வணங்குவன் எப்பொழுதும்,
தோற்றாதுஎன்
வயிற்றின் அகம்படியே
குடரோடு துடக்கி முடக்கியிட
ஆற்றேன்அடி
யேன்,அதி கைக்கெடில
வீரட்டா னத்துஉறை அம்மானே.
பொழிப்புரை :கெடில ஆற்றின் வடகரையில் விளங்கும்
திருவதிகை என்னும் வீரட்டானத் திருப்பதியில் உகந்தெழுந்தருளியிருக்கும் தலைவனே!
யான் இப்பிறப்பில் என் அறிவு அறியப் பல கொடுஞ் செயல்களைச் செய்தேனாக எனக்குத்
தோன்றவில்லை. அவ்வாறாகச் சூலைநோய், யாருக்கும் நோய்முதல் புலப்படாத வகையில்
என் வயிற்றினுள் குடலோடு ஏனைய உள் உறுப்புக்களைக் கட்டிச் செயற்படாமல் மடக்குதலால்
அடியேன் அவ்வலியைப் பொறுக்க இயலாதேனாக உள்ளேன். கூற்றுவனைப் போல அந்நோய் அடியேனைத்
துன்புறுத்தும் செயலை நீக்கும் ஆற்றலுடையீர். அந்நோயை விலக்கினால் எப்பொழுதும்
காளை மீது ஊரும் உம் அடிக்கண் நீங்காமல் மனத்தால் துணிவும் தலையால் தணிவும்
மொழியால் பணிவும் தோன்ற வணங்குவேன்.
பாடல்
எண் : 2
நெஞ்சம்உமக்
கேஇடம் ஆகவைத்தேன்,
நினையாதுஒரு போதும் இருந்துஅறியேன்,
வஞ்சம்இது
ஒப்பது கண்டுஅறியேன்,
வயிற்றோடு துடக்கி முடக்கியிட,
நஞ்சாகிவந்து
என்னை நலிவதனை
நணுகாமல் துரந்து கரந்தும்இடீர்,
அஞ்சேலும்என்
னீர்அதி கைக்கெடில
வீரட்டா னத்துஉறை அம்மானே.
பொழிப்புரை :அதிகைக் கெடில வீரட்டானத்துறை அம்மானே!
என் நெஞ்சத்தை உம்மிடத்திலேயே உறைவிடம் பெறுமாறு பண் படுத்திவிட்டேன். இனி ஒரு
பொழுதும் உம்மை நினையாமல் இருக்க மாட்டேன். இச்சூலைநோயைப் போலக் காரணத்தைப்
புலப்படுத்தாமல் காரியத்தில் செயற்படும் கொடுநோயை அடியேன் இதுகாறும்
அனுபவித்தறியேன். வயிற்றினோடு ஏனைய உள்ளுறுப்புக்களைக் கட்டி அவை செயற்படாமல்
மடக்கியிடுவதற்கு விடம் போல வந்து என்னைத் துன்புறுத்தும் நோயை விரட்டியோ
செயற்பாடு இல்லாமல் மறைத்தோ என்னைக் காப்பீராக. அஞ்சேல் என்று எனக்கு அருளுவீராக.
பாடல்
எண் : 3
பணிந்தார்அன
பாவங்கள் பாற்றவல்லீர்,
படுவெண்தலை யில்பலி கொண்டுஉழல்வீர்,
துணிந்தேஉமக்கு
ஆட்செய்து வாழல்உற்றால்,
சுடுகின்றது சூலை, தவிர்த்துஅருளீர்,
பிணிந்தார்பொடி
கொண்டுமெய் பூசவல்லீர்,
பெற்றம்ஏற்றுஉகந் தீர்,சுற்றும்
வெண்தலைகொண்டு
அணிந்தீர்,அடி
கேள்,அதி கைக்கெடில
வீரட்டா னத்துஉறை அம்மானே.
பொழிப்புரை :அதிகை ... அம்மானே! உலகப்பற்றுக்களோடு
இணைந்து இறந்தவர்களை எரித்த சாம்பலை உடலில் பூசிக் கொள்ள வல்ல பெருமானே! காளையை
இவர்தலை விரும்புகின்றவரே! வெண்தலைமாலை அணிகின்றவரே! உம்மை வழிபடுபவர்களுடைய
பாவங்களைப்போக்க வல்லீரே! இறந்துபட்டவருடைய மண்டை யோட்டில் பிச்சை
ஏற்றுத்திரிபவரே! உம்மையே பரம்பொருளாகத் துணிந்து உமக்கு அடிமை செய்து அடியேன்
வாழக்கருதுதலின், துன்புறுத்தும் சூலைநோயைப் போக்கி அருளுவீராக.
பாடல்
எண் : 4
முன்னம்அடி
யேன்அறி யாமையினால்,
முனிந்து,என்னை நலிந்து,
முடக்கியிட,
பின்னைஅடி
யேன்உமக்கு ஆளும்பட்டேன்,
சுடுகின்றது சூலை, தவிர்த்துஅருளீர்,
தன்னைஅடைந்
தார்வினை தீர்ப்பதுஅன்றோ
தலைஆயவர் தம்கடன் ஆவதுதான்,
அன்னநடை
யார்அதி கைக்கெடில
வீரட்டா னத்துஉறை அம்மானே.
பொழிப்புரை :அன்னம் போன்ற நடை அழகை உடைய இளமகளிர்
நிறைந்த அதிகை ... எம்மானே! இதற்குமுன் அடியேன் உம்மைப் பரம்பொருளாக அறிந்து உம்
தொண்டில் ஈடுபடாமையால் தேவரீர் அடியேனை வெகுண்டமையால், சூலைநோய் என்னை வருத்திச் செயற்பட
முடியாமல் செய்யவே, அதன் நலிவுக்கு ஆளாகிய பின்னர் அடியேன்
உமக்கு அடிமையாகி விட்டேன். அடியேனை வருத்தும் சூலை நோயைத் தவிர்த்து
அருளவேண்டும். மேம்பட்டவர்களது கடமை தம்மைச் சரணமாக அடைந்தவர்களுடைய வினையைப்
போக்குவது அன்றோ!
பாடல்
எண் : 5
காத்துஆள்பவர்
காவல் இகழ்ந்தமையால்,
கரைநின்றவர் கண்டுகொள் என்றுசொல்லி,
நீத்துஆய
கயம்புக நூக்கியிட,
நிலைக்கொள்ளும் வழித்துறை ஒன்றுஅறியேன்,
வார்த்தைஇது
ஒப்பது கேட்டுஅறியேன்,
வயிற்றோடு துடக்கி முடக்கியிட,
ஆர்த்தார்புனல்
ஆர்அதி கைக்கெடில
வீரட்டா னத்துஉறை அம்மானே.
பொழிப்புரை :ஆரவாரித்துப் பெருகும் கெடிலக்
கரையிலமைந்த அதிகை வீரட்டானப் பெருமானே! குளத்தில் பிறர் இறங்காமல் பாதுகாத்துச்
செயற்படுபவர் தம் காவலில் சோர்வு பட்டமையால், கரையில் நின்றவர்கள் இக்குளத்தின்
ஆழத்தைக் கண்டு அனுபவிப்பாயாக என்று ஆழமான குளத்தில் விழுமாறு தள்ளிவிட, அக்குளத்தில்
ஆழத்தில் நிலையாக நீந்திக் கொண்டிருக்கும் வழிமுறை ஒன்றும் அறியாதேனாகிய அடியேன், சூலைநோய்
வயிற்றோடு ஏனைய உள் உறுப்புக்களைக் கட்டி என்னைச் செயற்படமுடியேனாகச் செய்ய, பெருமானாகிய
நீயே எல்லாவினைகளையும் போக்கி அருளுவாய் என்றவார்த்தையை இதற்குமுன் கேட்டு
அறியாதேனாய் நாளை வீணாக்கினேன்.
பாடல்
எண் : 6
சலம்பூவொடு
தூபம் மறந்துஅறியேன்,
தமிழோடுஇசை பாடல் மறந்துஅறியேன்,
நலம்தீங்கிலும்
உன்னை மறந்துஅறியேன்,
உன்நாமம்என் நாவில் மறந்துஅறியேன்,
உலந்தார்தலை
யில்பலி கொண்டுஉழல்வாய்,
உடல்உள்உறு சூலை தவிர்த்துஅருளாய்,
அலந்தேன்அடி
யேன், அதி கைக்கெடில
வீரட்டா னத்துஉறை அம்மானே.
பொழிப்புரை :அதிகை ... அம்மானே! இறந்தவர் மண்டை
யோட்டில் பிச்சை எடுத்துத் திரியும் பெருமானே! என் உடலின் உள்ளாய் வருத்தும்
சூலைநோயைப் போக்கி அருளுவாயாக. இனி அபிடேகத்தீர்த்தத்தையும் பூவையும் உனக்கு
சமர்ப்பிப்பதனை மறவேன். தமிழோடு இசைப்பாடலை மறவேன். இன்புறும் பொழு திலும்
துன்புறும் பொழுதிலும் உன்னை மறவேன். உன் திருநாமத்தை என் நாவினால் ஒலிப்பதனை
மறவேனாய் இனி இருக்கிறேன். சலம் பூவொடு தூவ - பாடம்.
பாடல்
எண் : 7
உயர்ந்தேன்மனை
வாழ்க்கையும் ஒண்பொருளும்
ஒருவர்தலை காவல் இலாமையினால்,
வயந்தேஉமக்கு
ஆட்செய்து வாழல்உற்றால் ,
வலிக்கின்றது சூலை தவிர்த்தருளீர்,
பயந்தேஎன்
வயிற்றின் அகம்படியே
பறித்துப்புரட் டி,அறுத்து, ஈர்த்திடநான்
அயர்ந்தேன்,அடி
யேன், அதி கைக்கெடில
வீரட்டா னத்துஉறை அம்மானே.
பொழிப்புரை :அதிகை ... அம்மானே! அடியேனுக்குத்
தலைவராக இருந்து அடியேனை நெறி பிறழாமல் காப்பவர் ஒருவரும் நும்மை யல்லாது இல்லாத
காரணத்தினால் மனையிலிருந்து வாழும் இல்லற வாழ்க்கையிலும் அதற்கு வேண்டியதாய்
நன்னெறியில் ஈட்டப்படும் பொருள் தேடும் செயலிலும் நீங்கினேன். என் வயிற்றினுள்ளே
யான் அஞ்சுமாறு குடலைப் பறித்தெடுத்துப் புரட்டி அறுத்துச் சூலை நோய் உள்
உறுப்புக்களை இழுக்க, அடியேன் தாங்க முடியாதவனாகி விட்டேன்.
இனி, உமக்குத்
தொண்டனாகி நான் வாழக்கருதினால், அதற்கு ஏற்ப என்னைத் துன்புறுத்தும்
சூலைநோயைப் போக்கி அருளுவீராக.
பாடல்
எண் : 8
வலித்தேன்மனை
வாழ்க்கை மகிழ்ந்துஅடியேன்,
வஞ்சம்மனம் ஒன்றும் இலாமையினால்,
சலித்தால்ஒரு
வர்துணை யாரும்இல்லை,
சங்கவெண்குழைக் காதுஉடை எம்பெருமான்,
கலித்தேஎன்
வயிற்றின் அகம்படியே
கலக்கி,மலக்கு இட்டுக் கவர்ந்துதின்ன
அலுத்தேன்,அடி
யேன்,அதி கைக்கெடில
வீரட்டா னத்துஉறை அம்மானே.
பொழிப்புரை :அதிகை ... அம்மானே! வெண்ணிறச் சங்கினால்
ஆகிய குழை என்னும் காதணியை அணிந்துள்ள பெருமானே! அடியேன் மனத்தில் வஞ்சனை ஒன்றும்
இல்லாமையினால் மனையின்கண் மகிழ்ந்து வாழும் வாழ்க்கையைக் காய்ந்தேன். சூலை நோய்
அடியேன் வயிற்றகத்தே செருக்கிக் கலக்கி வயிற்றின் பகுதிகளை மயக்கிக் கைக்கொண்டு
துன்புறுத்துதலால் அடியேன் உயிர் வாழ்தலை வெறுத்து விட்டேன். வருந்தும்போது
அடியேனுக்குத் துணையாவார் உன்னைத் தவிர வேறு யாரும் இல்லை. அடியேனை நோயினின்றும்
காத்தருள்க.
பாடல்
எண் : 9
பொன்போல
மிளிர்வதுஒர் மேனியினீர்,
புரிபுன்சடை யீர்,மெலி
யும்பிறையீர்,
துன்பே,கவ
லை,பிணி
என்றுஇவற்றை
நணுகாமல் துரந்து கரந்தும்இடீர்,
என்போலிகள்
உம்மை இனித்தெளியார் ,
அடியார்படு வதுஇது வேஆகில்,
அன்பேஅமை
யும்,அதி கைக்கெடில
வீரட்டா னத்துஉறை அம்மானே.
பொழிப்புரை :அதிகை ... அம்மானே! பொன்னார்
மேனியினீர்! முறுக்குண்ட செஞ்சடையீர்! கலைகுறைந்த பிறையை உடையீர்! துன்பம் கவலை
பிணி என்னும் இவை அடியேனை அணுகாமல் அவற்றை விரட்டுதலையும் மறைத்தலையும்
செய்யீராயின் அடியேனைப் போன்றவர்கள் இப்பொழுது உங்களைத் துன்பம் துடைக்கும்
பெருமானாராகத் தெளியமாட்டார்கள். எனினும், உங்கள் அன்பே எங்கள் துயர்துடைத்து
எங்களை அமைவுறச்செய்யும்.
பாடல்
எண் : 10
போர்த்தாய்அங்கு
ஓர்ஆனையின் ஈர்உரிதோல்,
புறங்காடுஅரங் காநடம் ஆடவல்லாய்,
ஆர்த்தான்அரக்
கன்தனை மால்வரைக்கீழ்
அடர்த்திட்டு, அருள்செய்த அதுகருதாய்,
வேர்த்தும்,புரண்
டும்,விழுந் தும்எழுந்தால்
என்வேதனை யான விலக்கிஇடாய்,
ஆர்த்தார்புனல்
சூழ்அதி கைக்கெடில
வீரட்டா னத்துஉறை அம்மானே.
பொழிப்புரை :ஆரவாரித்து நிரம்பும் நீரைஉடைய கெடிலக்
கரையிலமைந்த திருவதிகை வீரத்தானத்து உகந்தருளி உறையும் அம்மானே! பண்டு ஓர்
யானையின் உதிரப் பசுமை கெடாத தோலைப் போர்த்தவனே! சுடு காட்டையே கூத்தாடும்
அரங்காகக் கொண்டு கூத்து நிகழ்த்துதலில் வல்லவனே! ஆரவாரித்துக் கயிலைமலையைப்
பெயர்க்க முற்பட்ட இராவணனை அப்பெரியமலையின் கீழ் நசுக்கிப்பின் அருள் செய்த அதனை
நினைத்துப்பார்த்து, வியர்த்தும் புரண்டும் விழுந்தும்
எழுந்தும் அடியேன் சூலை நோயினால் அநுபவிக்கும் துன்பங்களை நீக்கி அருளுவாயாக.
திருச்சிற்றம்பலம்
-----------------------------------------------------------------------------------------------------------
திருநாவுக்கரசர் பதிக வரலாறு
சமணர்கள் திருநாவுக்கரசர் பெருமானுக்கு
நஞ்சு கலந்த பால்சோற்றை ஊட்டினர். பசுபதியார் அடியாராகிய அவருக்கு நஞ்சமும் அமுது
ஆயிற்று. இந்த அற்புதம் கண்ட சமணர்கள், அஞ்சி, ஓடி, தமது
காவலனாகிய பல்லவனிடம் நாடினர். "நஞ்சு கலந்து ஊட்டிடவும் துஞ்சுதல் இலன், நமது
சமயத்து நஞ்சிதீர் மந்திர வலியே அதற்குத் துணை ஆனது, அவன் துஞ்சிலனேல், எம்
உயிரும், நின்
முறையும் துஞ்சுவது திடம்" என்று மன்னனுக்கு அறிவுறுத்தினர். மதிகெட்ட மன்னவனும், அந்தக் கதி கெட்டவர்கள் பேச்சைக்
கேட்டான். "அவனைக் கடியும் திறம்
யாது" எனக் கேட்டான். "இனிச்
செய்யத்தக்கது நின் கொற்ற வயக் களிற்றை அவன் மேல் விடுவது தான்" என்றனர்
பாதகர்கள்.
காபாலி அடியவராம் வாகீசத் திருவடிமேல்
கோப அதிசயமான கொலைக் களிற்றை விடச் சொன்னான் கொற்றவனும். அவன் பூபாலர் செயலை மேற்கொண்ட புலைத்
தொழிலோன். கூற்றினும் மிக்கதாய்க்
காற்றினும் கடியதாய் வந்தது வேழம். அப்பர்
பெருமான் அஞ்சினாரில்லை. நஞ்சையே
அமுதாக்கிய, நம்பன் திருவடியைத் தமது உள்ளத்திலே தரித்தவராகிய அவரா
அஞ்சுவார்.
"பெருமானுடைய அடியோம் நாம். அஞ்சுவது யாது ஒன்றும் இல்லை. அஞ்ச வருவதும் இல்லை" என்று எடுத்தார்
திருப்பதிகத்தை. வேழம் அஞ்சி ஓடிற்று.... பதிக வரலாற்றை, பெரியபுராணம் வழியே கண்டு
அனுபவிப்போம்....
பெ.
பு. பாடல் எண் : 107
நஞ்சுகலந்து
ஊட்டிடவும், "நம் சமயத்தினில் விடம் தீர்
தஞ்சம்
உடை மந்திரத்தால் சாதியா வகைதடுத்தான்,
எஞ்சும்வகை
அவற்குஇலதேல், எம்உயிரும் நின்முறையும்
துஞ்சுவது
திடம்" என்றார் சூழ்வினையின் துறைநின்றார்.
பொழிப்புரை : `நஞ்சு
கலந்த பாற்சோற்றை உண்ணச்செய்தும், நம் சமயத்தில் கொண்ட நஞ்சு நீக்கும்
மந்திரத்தால், அதன்பயன் விளையாதவாறு தடுத்து விட்டான். அவன் இறக்கும் வகை
இலதேல் எங்கள் உயிர்களும் உனது ஆட்சியும் அழியும்` எனத் தீமையை விளைவிக்கும் வஞ்சகத்
தொழிலின் வழியில் நின்ற அச்சமணர்கள் உரைத்தனர்.
பெ.
பு. பாடல் எண் : 108
மற்று
அவர்தம் மொழிகேட்டு, மதிகெட்ட மன்னவனும்,
"செற்றவனை இனிக்கடியும் திறம்
எவ்வாறு" எனச்செப்ப
"உற்றவரு மந்திர சாதகம் நாங்கள் ஒழித்திட, நின்
கொற்றவயக்
களிறு எதிரே விடுவது" எனக் கூறினார்.
பொழிப்புரை : அவர்களின் சொல்லைக் கேட்ட அறிவுகெட்ட
அரசனும், `நம்
நெறியை அழித்த அவனை இனி ஒறுக்கும் வகை யாது?` என வினவ, அச்சமணர்களும் `
மந்திர சாதகங்களை
நாங்கள் நீக்க, உன் வெற்றி பொருந்திய வலிய யானையை அவன் முன்னே விட்டு இடறச்
செய்வதே தகுந்த வழியாகும்` என்று உரைத்தனர்.
பெ.
பு. பாடல் எண் : 109
மாபாவிக்
கடைஅமணர் வாகீசத் திருவடியாம்
காபாலி
அடியவர்பால், "கடக்களிற்றை விடுக" என்னப்
பூபாலர்
செயல்மேற்கொள் புலைத்தொழிலோன் அவர் தம்மேற்
கோபாதி
சயமான கொலைக் களிற்றை விடச்சொன்னான்.
பொழிப்புரை : பெரும் பாவிகளுள்ளும் கீழானவர்களான அச்சமணர்கள், வாகீசத்
திருவடிகளான சிவபெருமானின் அடியவர் மீது, `மதயானையை ஏவி விடுக` என்று
சொல்ல, உலகைக்
காவல் கொண்டும் புலைத்தொழில் செய்வோனான அவ்வரசன், வியக்கத்தக்க சினம் கொண்ட கொலைத்
தொழிலைச் செய்யும் யானையை அவர் மீது விடுமாறு ஏவினான்.
பெ.
பு. பாடல் எண் : 110
கூடத்தைக்
குத்தி,ஒரு குன்றம் எனப் புறப்பட்டு,
மாடத்தை
மறித்திட்டு, மண்டபங்கள் எடுத்து எற்றி,
தாடத்தில்
பரிக்காரர் தலைஇடறி, கடக்களிற்றின்
வேடத்தால்
வரும்கூற்றின் மிக்கதுஒரு விறல்வேழம்.
பொழிப்புரை : ஒப்பற்ற வன்மையுடைய அவ்யானையானது, யானை
கட்டும் தறிகளைப் பிடுங்கிக்கொண்டு மலையெனப் புறப்பட்டு, மாடங்களை இடித்து, மண்டபங்களைப்
பெயர்த்து, அழித்துக், குத்துக்கோற்காரரின் தலைகளைக் காலால்
இடறி, மதயானையின்
வடிவத்துடன் வருகின்ற ஓர் இயமனைப் போலக் கொடிதாயிருந்தது.
பெ.
பு. பாடல் எண் : 111
பாசத்தொடை
நிகளத்தொடர் பறியத்தறி முறியா
மீசுற்றிய
பறவைக்குலம் வெருவத்துணி விலகா
ஊசற்கரம்
எதிர்சுற்றிட உரறிப்பரி உழறா
வாசக்கட
மழைமுற்பட மதவெற்பு எதிர் வருமால்.
பொழிப்புரை : கழுத்தில் கட்டிய கயிறும், சங்கிலித்
தொடரும் அறுமாறு கட்டுத் தறியை முறித்து, மேலே வட்டம் இடும் பறவைக் கூட்டங்களும்
அஞ்சுமாறு, எதிர்க்கும் தடைகளுக்குச் சற்றும் விலகாது, ஊசல்
என அசையும் துதிக்கையானது முன்னே சுற்றப், பெருமுழக்குடன் ஓடிக் கலக்கி, மணம்
கமழும் மதநீரான மழை முன்னே பெருக, மலை போன்ற யானை எதிரில் வந்தது.
பெ.
பு. பாடல் எண் : 112
இடி
உற்றுஎழும் ஒலியில்திசை இபம் உட்கிட அடியில்
படிபுக்கு
உற நெளியப்படர் பவனக்கதி விசையில்
கடிது
உற்றுஅடு செயலில்கிளர் கடலிற்படு கடையின்
முடிவில்கனல்
எனமுற்சினம் முடுகிக்கடு கியதே.
பொழிப்புரை : இடி போன்று எழுகின்ற ஓசையால் திக்கு
யானைகள் அஞ்சக், காலால் மிதித்த சுவடு நிலத்தில் பொருந்த, அது, நெளியவும், ஓடும்
காற்றைப் போன்று மிக விரைவாய்ப் போய், அழிக்கும் செயலில், பொங்கும்
கடலுள் ஊழி முடிவில் தோன்றும் வடவைத் தீயைப் போல், மிக்க சினம் கொண்டு வேகத்துடன் அவ் யானை
வந்தது.
பெ.
பு. பாடல் எண் : 113
மாடு
உற்று அணை இவுளிக்குலம் மறியச்செறி வயிரக்
கோடு
உற்றுஇரு பிளவுஇட்டு அறு குறைகைக்கொடு முறியச்
சாடுஉற்றிடு
மதில்தெற்றிகள் சரியப்புடை அணிசெற்று
ஆடுற்றுஅகல்
வெளி உற்றது அவ் அடர்கைக்குல வரையே.
பொழிப்புரை : கொலை செய்யும் கையையுடைய மலை போன்ற
அவ்யானை, அருகில்
வருகின்ற குதிரைக் கூட்டங்கள் அழியவும், திண்ணிய வயிரம் வாய்ந்த மரக்கொம்பினை
இரண்டு பிரிவாகக் கூறுபடுத்தி அவ்வாறு ஒடிந்த துண்டைக் கையில் எடுத்துப் பின் அது
முறியும்படியாக அழிவு செய்தும், மதிலும் திண்ணைகளும் சரியுமாறு அழகுடைய
அவற்றின் உறுப்புக்களை அழித்தும், இத்தகைய அழிவுச் செயலைச் செய்து பரந்த
வெளியிடத்தைச் சேர்ந்தது.
பெ.
பு. பாடல் எண் : 114
பாவக்கொடு
வினைமுற்றிய படிறு உற்று அடு கொடியோர்
நாவுக்கரசு
எதிர் முன்கொடு நணுகிக்கரு வரைபோல்
ஏவிச்செறு
பொருகைக் கரியினை உய்த்திட வெருள்ஆர்
சேவில்
திகழ்பவர் பொன்கழல் தெளிவுற்றனர் பெரியோர்.
பொழிப்புரை : பாவம் பொருந்திய கொடுஞ் செயல் முதிரும்
பொருட்டு வஞ்சனையை மேற்கொண்டு, கொலை செய்ய நினைத்த கொடிய சமணர்கள், திருநாவுக்கரசர்
எதிரே முற்பட அணுகி வந்து, பகைவரைப் போரிட்டுக் கொல்கின்ற
துதிக்கையையுடைய யானையைக் கரிய மலை ஒன்றை ஏவுவது போல, ஏவிச் செலுத்தவும், திருநாவுக்கரசர்
சற்றும் அஞ்சாமல், ஆனேற்றின் மேல் விளங்கும் சிவபெருமானின்
பொன் போன்ற திருவடிகளையே தெளிந்த உள்ளத்தில் நினைத்திருந்தார்.
பெ.
பு. பாடல் எண் : 115
அண்ணல்
அருந்தவ வேந்தர் ஆனைதம் மேல்வரக் கண்டு
விண்ணவர்
தம்பெரு மானை விடைஉகந்து ஏறும் பிரானைச்
"சுண்ணவெண் சந்தனச் சாந்து" தொடுத்த
திருப்பதி கத்தை
மண்உலகு
உய்ய எடுத்து மகிழ்வுடனே பாடுகின்றார்.
பொழிப்புரை : பெருமை பொருந்திய அரிய தவவேந்தர், அவ்யானை
தம்மீது வருவதைப் பார்த்துத் தேவர்களின் தலைவரும் ஆனேற்றில் இவர்ந்து
மகிழ்ந்தருளுபவருமான சிவபெருமானைப் போற்றி, `சுண்ணவெண் சந்தனச் சாந்து` (தி.4
ப.2) எனத்
தொடங்கும் பதிகத்தை இவ்வுலகவர் உய்யும்படி எடுத்து மிக்க மகிழ்வுடன் பாடுவாராகி.
பெ.
பு. பாடல் எண் : 116
வஞ்சகர்
விட்ட சினப்போர் மதவெம் களிற்றினை நோக்கிச்
செஞ்சடை
நீள்முடிக் கூத்தர் தேவர்க்குந் தேவர் பிரானார்
வெஞ்சுடர்
மூவிலைச் சூல வீரட்டர் தம்அடி யோம்நாம்
அஞ்சுவது
இல்லைஎன்று என்றே அருந்தமிழ் பாடி அறைந்தார்.
பொழிப்புரை : வஞ்சனையுடைய சமணர்கள் விடுத்த, மதமும்
சினமும் உடைய யானையை நோக்கிச், `சிவந்த சடை பொருந்திய நீண்ட முடியையுடைய
கூத்தரும், தேவர்க்கெல்லாம் தேவரும், வெண்மையான ஒளிபொருந்திய மூவிலைகளையுடைய
சூலத்தை ஏந்தியவருமான திருவீரட்டானத்தில் எழுந்தருளியிருக்கும் பெருமானின் அடியவர்
யாம்! அதனால் அஞ்ச வருவது ஏதும் இல்லை.` என்று அரிய தமிழ்ப் பதிகத்தைப்
பாடினார்.
குறிப்புரை : இங்கு அருளிய பதிகம் `சுண்ணவெண்` (தி.4
ப.2) எனத்
தொடங்கும் பதிகம் ஆகும். இப்பதிகத்தின் முதற் குறிப்பினை இதற்கு முன்னுள்ள பாடலால்
குறித்த ஆசிரியர், இப்பதிகப் பாடல்தொறும் வரும் நிறைவுக்
குறிப்பினை இப்பாடலில் விளக்குகிறார். இப்பதிகம் பாடலிபுத்திரத்தில் அருளப்
பெற்றதாயினும், திருவதிகைப் பெருமானின் அடியவன் ஆதலின் அஞ்சுவது யாதொன்றும்
இல்லை, அஞ்ச
வருவதுமில்லை எனப் பாடல்தொறும் அருளப் பெற்றிருத்தலின் திருவதிகைப் பதிகம் என
வழங்கப் பெறுவதாயிற்று. இது போன்றே `மாசில்
வீணை` (தி.5
ப.90) எனத்
தொடங்கும் பதிகமும் பாடலிபுத்திரத்தில் பாடப்பெற்றதாயினும், திருவதிகை
இறைவனை நோக்கிய குறிப்பில் அமையாமையின் இதனையும், கடலிலிருந்து பாடிய `சொற்றுணை
வேதியன்` (தி.4
ப.11) எனும்
பதிகம், `நாமார்க்கும்
குடியல்லோம்` (தி.6 ப.98) எனத் தொடங்கும் பதிகம் ஆகிய இரண்டோடும்
கூட்டிப் பொதுப் பதிகங்கள் எனும் பெயரில் குறித்தனர்.
பெ.
பு. பாடல் எண் : 117
தண்தமிழ்
மாலைகள் பாடித் தம்பெரு மான்சரண் ஆக,
கொண்ட
கருத்தில் இருந்து, குலாவிய அன்புஉறு கொள்கைத்
தொண்டரை
முன்வலமாகச் சூழ்ந்து,எதிர் தாழ்ந்து,
நிலத்தில்
எண்திசையோர்களும்
காண இறைஞ்சி எழுந்தது வேழம்.
பொழிப்புரை : குளிர்ந்த தமிழ் மாலைகளைப் பாடித் தம்
இறை வரையே சரணாகக் கொண்ட கருத்துடன் இருந்து விளங்கிய அன்பு பொருந்திய கொள்கையுடைய
திருத்தொண்டரை, அவர் முன்பு வலமாகச் சுற்றி வந்து, எதிரில் தாழ்ந்து, எல்லாத்
திக்குகளில் உள்ளவரும் காணும்படி அவ்யானை நிலத்தில் விழுந்து வணங்கி எழுந்து
நின்றது.
பெ.
பு. பாடல் எண் : 118
ஆண்ட
அரசை வணங்கி அஞ்சி,அவ் வேழம் பெயர,
தூண்டிய
மேல்மறப் பாகர் தொடக்கி அடர்த்துத் திரித்து,
மீண்டும்
அதனை அவர்மேல் மிறைசெய்து காட்டிட வீசி,
ஈண்டுஅவர்
தங்களையே கொன்று, அமணர்மேல் ஓடிற்று எதிர்ந்தே.
பொழிப்புரை : ஆளுடைய அரசரை வணங்கி, அவ்யானை
அஞ்சி அங்கிருந்து பெயர்ந்து போக, அதனை அவர்மீது ஏவுதலை மேற் கொண்டிருந்த
கொடிய பாகர்கள் வளைத்தும், அடர்த்தும், திரும்பவும் அதனை அவர்மீது போகுமாறு
செய்து காட்டிட, அவ்வாறு செய்யாது, நெருங்கிய அவர்களையே கொன்று, சமணர்களையும்
அழிக்க எதிர்ந்து வந்தது.
பெ.
பு. பாடல் எண் : 119
ஓடி
அருகர்கள் தம்மை உழறி, மிதித்து, பிளந்து,
நாடிப்
பலரையும் கொன்று, நகரம் கலங்கி மறுக,
நீடிய
வேலை கலக்கும் நெடுமந் தரகிரி போல,
ஆடுஇயல்
யானை அம்மன்னற்கு ஆகுலம் ஆக்கியது அன்றே.
பொழிப்புரை :ஓடிச், சமணர்களைப் பற்றி உழறி அழித்தும், மிதித்தும், பிளந்தும், தேடிச்
சென்று பலரையும் கொன்றும், அந்நகர் கலக்கம் அடைந்து வருந்த, நீண்ட
கடலைக் கலக்கும் கொடிய மந்தர மலையைப் போல அழிக்கும் தன்மை பூண்ட அவ்யானை, அந்த
அரசனுக்குத் துன்பத்தை உண்டாக்கியது
திருநாவுக்கரசர் திருப்பதிகம்
4.
002 திருவதிகை வீரட்டானம் பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
சுண்ணவெண்
சந்தனச் சாந்தும், சுடர்த்திங்கள் சூளா மணியும்,
வண்ண
உரிவை உடையும், வளரும் பவள நிறமும்,
அண்ண
லரண்முரண் ஏறும் அகலம் வளாய அரவும்,
திண்ணன்
கெடிலப் புனலும், உடையார் ஒருவர் தமர்நாம்
அஞ்சுவது யாதுஒன்றும் இல்லை அஞ்ச வருவதும்
இல்லை.
பொழிப்புரை :பொடியாக அமைந்த திருநீறாகிய வெள்ளிய
சந்தனச் சேறும் முடிமணியாகிய ஒளி வீசும் பிறையும் , அழகிய புலித்தோல் ஆடையும் , வளர்கின்ற
பவளக்கொடி போன்ற நிறமும் , தலைமை பொருந்திய பாதுகாவலாக அமைந்த , பகைவரோடு
மாறுபடும் காளையும் , மார்பில் பரவியிருக்கின்ற பாம்புகளும் , திண்ணிய
கரையைக் கொண்ட பெரிய நீர்ப்பரப்பினதாகிய கெடிலயாற்று அபிடேகத்திற்குரிய
தீர்த்தமும் உடைய ஒப்பற்ற அதிகை வீரட்டருடைய அடியேம் யாம் . ஆதலின் எங்களுக்கு
அஞ்சுதற்குரிய பொருள் யாதும் இப்பொழுது இல்லை . இனித் தோன்றப்போவதும் இல்லை .
பாடல்
எண் : 2
பூண்டதுஒர்
கேழல் எயிறும், பொன்திகழ் ஆமை புரள,
நீண்டதிண்
தோள்வலம் சூழ்ந்து நிலாக்கதிர் போல வெண்ணூலும்,
காண்தகு
புள்ளின் சிறகும், கலந்த கட்டங்கக் கொடியும்,
ஈண்டு
கெடிலப் புனலும் உடையார் ஒருவர் தமர்நாம்
அஞ்சுவது யாதுஒன்றும் இல்லை அஞ்ச
வருவதும் இல்லை.
பொழிப்புரை :அணிகலனாக அணிந்த மகாவராகத்தின் கொம்பும்
, நீண்ட
திண்ணிய இடத்தோள் மீது வலப்புறமாகச் சுற்றி , பொன்போல் விளங்கும் , ஆமை
ஓட்டின் மீது புரண்டவாறு , நிலாப் போல் ஒளிவீசும் வெள்ளிய பூணூலும்
, காண்டற்கினிய
கொக்கின் இறகும் , தம்மோடு பொருந்திய மழுவின் வடிவம்
எழுதப் பெற்ற கொடியும் , பெருகிவரும் கெடிலயாற்றுத் தீர்த்தமும்
உடைய அதிகை வீரட்டரின் அடியேம்யாங்கள் ஆதலின் அஞ்சுவது யாதொன்றுமில்லை . அஞ்ச
வருவதும் இல்லை
பாடல்
எண் : 3
ஒத்த
வடத்துஇள நாகம், உருத்திர பட்டம் இரண்டும்,
முத்து
வடக்கண் டிகையும், முளைத்துஎழு மூஇலை வேலும்,
சித்த
வடமும், அதிகைச் சேண்உயர் வீரட்டம் சூழ்ந்து
தத்தும்
கெடிலப் புனலும், உடையார் ஒருவர் தமர்நாம்
அஞ்சுவது யாதுஒன்றும் இல்லை அஞ்ச
வருவதும் இல்லை.
பொழிப்புரை :தோளில் மாலையாக அணிந்த இளைய பாம்பும் , இரண்டாகிய
தோள் பட்டிகையும் , பலவடங்களாக அமைந்த முத்து மாலையினை
இணைந்த உருத்திராக்கக் கண்டிகையும் , மூன்று இலைவடிவாக அமைந்த முத்தலைச்
சூலமும் , சித்தவடம்
என்ற பெயரிய சைவமடம் ஒன்றுடைய திருத்தலமும் , மதில்கள் உயரமாக உடைய அதிகை நகரை
ஒருபுறம் சூழ்ந்து இயங்கும் விரைந்து செல்லும் கெடில நதித் தீர்த்தமும் உடைய
பெருமானுடைய அடியேம் யாங்கள் ஆதலின் அஞ்சுவது யாதொன்றுமில்லை . அஞ்ச வருவதுமில்லை
.
பாடல்
எண் : 4
மடமான்
மறிபொன் கலையும், மழுப்பாம்பு ஒருகையில் வீணை,
குடமால்
வரையதிண் தோளும், குனிசிலைக் கூத்தின் பயில்வும்,
இடம்மால்
தழுவிய பாகம் இருநிலன் ஏற்ற சுவடும்,
தடம்ஆர்
கெடிலப் புனலும் உடையார் ஒருவர் தமர்நாம்
அஞ்சுவது யாதுஒன்றும் இல்லை அஞ்ச
வருவதும் இல்லை.
பொழிப்புரை :ஒருகையில் மான்குட்டி , ஒருகையில்
மான் தோல் ஆடை , ஒருகையில் மழுப்படை , மற்றொரு கையில் பாம்பு , மற்றொருகையில்
வீணை இவற்றை உடையவராய் , மேற்றிசைப் பெருமலையை ஒத்த திண்ணிய
தோள்களும் , வில்போல் வளைந்து ஆடுகின்ற கூத்தின் பயிற்சியும் , பெரிய
உலகங்களைத் தானமாக ஏற்ற சுவடுடைய திருமால் தழுவிப் பொருந்தியிருக்கும் , இடப்பாகமும்
, நீர்த்துறைகள்
அமைந்த கெடில நதித் தீர்த்தமும் உடைய அதிகை வீரட்டரின் அடியேம் யாங்கள் . ஆதலால்
அஞ்சுவது யாதொன்றும் இல்லை . அஞ்ச வருவதும் இல்லை .
பாடல்
எண் : 5
பலபல
காமத்தர் ஆகிப் பதைத்துஎழு வார்மனத்து உள்ளே
கலமலக்கு
இட்டுத் திரியும் கணபதி என்னும் களிறும்,
வலம்ஏந்து
இரண்டு சுடரும், வான்கயி லாய மலையும்,
நலம்ஆர்
கெடிலப் புனலும் உடையார் ஒருவர் தமர்நாம்
அஞ்சுவது யாதுஒன்றும் இல்லை அஞ்ச
வருவதும் இல்லை.
பொழிப்புரை :பலப்பல விருப்பங்களை உடையவராய் அவற்றைச்
செயற்படுத்தத்துடித்து விரையும் மக்களின் உள்ளத்தில் கலந்து பிறழச் செய்யும்
கணபதியாகிய ஆண்யானையையும் , இருளைப்போக்கும் வலிமை மிக்க சூரியன்
சந்திரன் ஆகிய இரண்டு ஒளிகளையும் , மேம்பட்ட கயிலை மலையையும் , நன்மைகள்
நிறைந்த கெடில நதித் தீர்த்தத்தையும் உடைய அதிகை வீரட்டரின் அடியேம் யாங்கள்
ஆதலின் அஞ்சுவது யாதொன்றும் இல்லை . அஞ்ச வருவதும் இல்லை .
பாடல்
எண் : 6
கரந்தன
கொள்ளி விளக்கும், கறங்கு துடியின் முழக்கும்,
பரந்த
பதினெண் கணமும் பயின்றுஅறி யாதன பாட்டும்,
அரங்குஇடை
நூல்அறி வாளர் அறியப் படாததொர் கூத்தும்,
நிரந்த
கெடிலப் புனலும் உடையார் ஒருவர் தமர்நாம்
அஞ்சுவது யாதுஒன்றும் இல்லை அஞ்ச
வருவதும் இல்லை.
பொழிப்புரை :உயிர்கள் அறியாதவாறு மறைந்து நின்று
அடியார்களுக்கு ஒளி வீசும் திருவருளாகிய விளக்கின் ஒளியும் , சுழலுகின்ற
துடி என்ற இசைக் கருவியின் ஓசையும் , எங்கும் பரவிய தேவ கணத்தர் பதினெண்மரும்
வேற்றிடங்களில் பழகி அறியாதனவாகிய பாட்டின் ஒலியும் , கூத்துவல்லார் கூத்தாடும் அரங்கங்களில்
கண்டு அறியப்படாததாகிய கூத்து நிகழ்ச்சியும் , முறையாக ஓடிவரும் கெடில நதித்
தீர்த்தத்தின் புனிதமும் உடைய அதிகை வீரட்டரின் அடியேம் யாங்கள் ஆதலின் அஞ்சுவது
யாதொன்றும் இல்லை . அஞ்ச வருவதும் இல்லை.
பாடல் எண் : 7
கொலைவரி
வேங்கை அதளும், குவவோடு இலங்குபொன் தோடும்,
விலைபெறு
சங்கக் குழையும், விலைஇல் கபாலக் கலனும்,
மலைமகள்
கைக்கொண்ட மார்பும், மணிஆர்ந்து இலங்கு மிடறும்,
உலவு
கெடிலப் புனலும் உடையார் ஒருவர் தமர்நாம்
அஞ்சுவது யாதுஒன்றும் இல்லை அஞ்ச
வருவதும் இல்லை.
பொழிப்புரை :தம்மால் கொல்லப்பட்ட கோடுகளை உடைய
புலித்தோலும் , திரட்சியோடு விளங்கும் பொலிவுடைய தோடும் , பெருவிலையுடைய
சங்கினாலாகிய காதணியும் , விலையே இல்லாத மண்டையோடாகிய உண்கலனும் , பார்வதி
தங்குமிடமாகக்கொண்ட மார்பும் , நீலமணியின் நிறங்கொண்டு விளங்கும்
கழுத்தும் , ஒழுகுகின்ற கெடில நதித் தீர்த்தமும் உடைய அதிகை வீரட்டரின்
அடியேம் யாங்கள் . ஆதலால் அஞ்சுவது யாதொன்றும் இல்லை . அஞ்ச வருவதும் இல்லை.
பாடல்
எண் : 8
ஆடல்
புரிந்த நிலையும், அரையி லசைத்த அரவும்,
பாடல்
பயின்றபல் பூதம் பல்லா யிரங்கொள் கருவி
நாடற்கு
அரியதொர் கூத்தும், நன்குயர் வீரட்டம் சூழ்ந்து
ஓடுங்
கெடிலப் புனலும், உடையார் ஒருவர் தமர்நாம்
அஞ்சுவது யாதுஒன்றும் இல்லை அஞ்ச
வருவதும் இல்லை.
பொழிப்புரை :கூத்தாடுதலை விரும்பிச் செய்த நிலையும் , இடுப்பில்
இறுக்கிக் கட்டிய பாம்பும் , இசைக் கருவிகளைக் கைகளில் கொண்டு , பல
ஆயிரக்கணக்கில் சூழ்ந்த பாடல்களில் பழகிய பூதங்கள் பலவும் , ஆராய்ந்து
, அறியமுடியாத
கூத்தும் , மிக உயர்ந்த வீரட்டக் கோயிலை ஒரு பக்கத்தில் சுற்றி ஓடும்
கெடில நதித் தீர்த்தமும் உடைய அதிகை வீரட்டரின் அடியேம் யாங்கள் . ஆதலில் அஞ்சுவது
யாதொன்றும் இல்லை . அஞ்ச வருவதும் இல்லை .
பாடல்
எண் : 9
சூழும்
அரவத் துகிலும், துகில்கிழி கோவணக் கீளூம்,
யாழின்
மொழியவள் அஞ்ச அஞ்சாது அருவரை போன்ற
வேழம்
உரித்த நிலையும், விரிபொழில் வீரட்டம் சூழ்ந்து
தாழும்
கெடிலப் புனலும், உடையார் ஒருவர் தமர்நாம்
அஞ்சுவது யாதுஒன்றும் இல்லை அஞ்ச
வருவதும் இல்லை.
பொழிப்புரை :பாம்பினால் சுற்றப்பட்ட ஆடையும் , துணியிலிருந்து
கிழித்தெடுக்கப்பட்ட அரைஞாணோடு கூடிய கோவணமும் , யாழ் ஒலி போன்ற இனிய குரலை உடைய பார்வதி
அஞ்சுமாறு அச்சமின்றிப் பெரிய மலை போன்று வந்த வேழத்தின் தோலை உரித்த காட்சியும் , சோலைகள்
மிகுந்த வீரட்டத்தை ஒருபுறம் சுற்றிப் பள்ளத்தில் பாயும் கெடில நதித் தீர்த்தமும்
உடைய அதிகை வீரட்டரின் அடியேம் யாங்கள் . ஆதலின் எங்களுக்கு அஞ்சுதற்குரிய பொருள்
யாதும் இப்பொழுது இல்லை . இனித் தோன்றப் போவதும் இல்லை .
பாடல்
எண் : 10
நரம்புஎழு
கைகள் பிடித்து, நங்கை நடுங்க, மலையை
உரங்கள்எல்
லாம்கொண்டு எடுத்தான் ஒன்பதும் ஒன்றும் அலற,
வரங்கள்
கொடுத்து,அருள் செய்வான், வளர்பொழில் வீரட்டம் சூழ்ந்து
நிரம்பு
கெடிலப் புனலும் உடையார் ஒருவர் தமர்நாம்
அஞ்சுவது யாதுஒன்றும் இல்லை அஞ்ச
வருவதும் இல்லை.
பொழிப்புரை :பார்வதி நடுங்கும்படியாக நரம்புகளால்
செயற்படும் கைகளைக் கோத்து தன் வலிமையை எல்லாம் ஒன்று சேர்த்துக் கயிலை மலையைப்
பெயர்த்த இராவணனுடைய பத்துத் தலைகளும் கதறும்படியாக முதலில் அழுத்திப் பின் அவன்
பாடிய சாமகானம் கேட்டு அவனுக்கு வரங்கள் கொடுத்து அருள் செய்த பெருமானாய் , வளருகின்ற
சோலைகளை உடைய வீரட்டக் கோயிலை ஒரு புறம் சுற்றி நீர் நிரம்பியுள்ள கெடில நதித்
தீர்த்தத்தை உடைய அதிகை வீரட்டரின் அடியேம் யாங்கள் . அஞ்சுவது யாதொன்றும் இல்லை.
அஞ்ச வருவதும் இல்லை .
திருச்சிற்றம்பலம்
-------------------------------------------------------------
திருநாவுக்கரசர் திருப்பதிக வரலாறு
யானைக்குத் தப்பிப் பிழைத்த சமணர்கள், மானம்
அழிந்து மயங்கி வருந்திய சிந்தையராய் மன்னனிடம் தஞ்சம் புகுந்து, அவன்
தாளில் தனித்னியே வீழ்ந்து புலம்பி, "நமது மந்திரவலி" என்னும்
பழம்பாடத்தையே படித்தார்கள். மதிகெட்ட
மன்னனும் சீறி, "இனிச் செய்வது என்ன" என்று
அவர்களையே கேட்டான். தீமைக்குச் சிறிதும்
அஞ்சாத சமணர்கள், "தருமசேனைரைக் கல்லுடன் பிணித்துக்
கடலில் எறிக" என்றார்கள். அரசன், அங்கிருந்த
ஏவலாளர்களை "அப்படியே செய்க" என்றான்.
அவர்களும் அப்படியே செய்தார்கள்.
அப்பர் பெருமான், "எப்பரிசு
ஆயினும் ஆக, எந்தையை ஏத்துவன்" என்று, "சொல்துணை வேதியன்" என்னும்
நமச்சிவாயத் திருப்பதிகத்தைப் பாடியருளினார். " பொன் துணைத் திருந்தடி
பொருந்தக் கைதொழ, கல்துணைப் பூட்டி ஓர் கடலில் பாய்ச்சினும் நல்துணை ஆவது
நமச்சிவாயவே" என்றார். இறைவன் திருவடி மனத்திலே பொருந்துமாறு வழிபட்டோமானால், கல்லுடன்
கட்டிக் கடலில் போட்டாலும் காப்பது திருவைந்தெழுத்தே.. கடல்மீது கல்லானது
மிதந்தது. பிணித்த பாசமும் அறுந்தது.
கருங்கல்லே சிவிகை ஆக, அதை வருணன் தாங்கி, அப்பர்
பெருமானை திருப்பாதிரிபுலியூர் அருகே விடுத்தனன்.
திருக்கோயிலுக்குச் சென்று இறைவரை
வணங்கி, அருகக்
கடல் கடந்து ஏறிய அப்பர் பெருமான், இறைவன் திருவருள் திறத்தை எண்ணி
மகிழ்ந்து, "ஈன்றாளுமாய்" என்னும் தமிழ்மாலையைச் சாத்தி அருளினார்.
அருகக்கடல் கடந்து ஏறிய அப்பர்
பெருமானுக்கு, திருவதிகையின் மீது காதல் முறுகி எழுந்தது. அவர், திருப்பாதிரிபுலியூரை விடுத்து, திருமாணிக்குழியையும், திருத்தினை
நகரையும் கண்டு தொழுது, திருவதிகை அடைந்தார். அப்பதியில் உள்ள அடியவர்கள், நகரை
அலங்கரித்துப் பெரியவரை எதிர்கொண்டு பணிந்தார்கள். பெரியவர் அவர்களுடன் திருக்கோயிலுள் புகுந்து, பெருமானை
வணங்கி, வெறிவிரவு
கூவிளம் என்னும் ஏழைத் திருத்தாண்டகம் முதலான பல திருப்பதிகங்களை பாடித்
திருத்தொண்டு செய்து வந்தார்..
பெரிய
புராணப் பாடல் எண் : 134
ஈன்றாளு
மாய்எனக்கு எந்தையும் ஆகி என எடுத்துத்
தோன்றாத்
துணையாய் இருந்தனன் தன்அடி யோங்கட்கு என்று
வான்தாழ்
புனல்கங்கை வாழ்சடை யானை மற்று எவ்வுயிர்க்கும்
சான்றுஆம்
ஒருவனைத் தண்தமிழ் மாலைகள் சாத்தினரே.
பொழிப்புரை : `ஈன்றாளுமாய்
எனக்கு எந்தையுமாய்` எனத் தொடங்கித் `தோன்றாத்
துணையாய் இருந்தனன் தன்னடியோங் கட்கே` என்று நிறைவுறும் அக்கருத்துக் கொண்ட
பாடல் முதலாக, வானினின்று உலகில் தாழும் நீரையுடைய கங்கை வாழ்கின்ற சடையை
உடைய இறைவரை, எவ்வுயிர்களுக்கும் சான்றாய் இருக்கும் ஒருவரை, குளிர்ந்த
தமிழால் ஆன மாலைகளைக் கொண்டு சாத்தினார்.
பெ.
பு. பாடல் எண் : 135
மற்றும்
இனையன வண்தமிழ் மாலைகள் பாடிவைகி
வெற்றி
மழவிடை வீரட்டர் பாதம்மிக நினைவில்
உற்றதொர்
காதலின் அங்குநின்று ஏகிஒன் னார்புரங்கள்
செற்றவர்
வாழும் திருஅதிகைப்பதி சென்று அடைவார்.
பொழிப்புரை : மேலும், இவை போன்ற செழுமையான தமிழ்ப்
பதிகங்களைப் பாடி, அப்பதியில் தங்கிப் பின், வெற்றியும்
இளமையும் மிக்க ஆனேற்றினையுடைய திருவதிகை வீரட்டானத்தில் வீற்றிருக்கும் இறைவரின், திருவடிகளில்
தம் நினைவில் மிகவும் பொருந்தியதோர் காதல் எழுந்ததால், அங்கு நின்றும் சென்று, பகைவரின்
முப்புரங்களையும் எரித்த வீரட்டானத்து இறைவர் வீற்றிருந்தருளும் திருவதிகைப்
பதியினைச் சென்று அடைபவராய்,
குறிப்புரை : `மற்றும்
இனையன வண்டமிழ் மாலைபாடி` என்பதால் மேலும் பல பதிகங்கள், இத்திருப்பதியின்கண்
அருளப்பெற்றிருக்கலாம் எனத் தெரிகின்றது. எனினும் அவை கிடைத்தில.
பாடல்
எண் : 136
தேவர்
பிரான்திரு மாணி குழியும் தினைநகரும்
மேவினர்
சென்று விரும்பிய சொன்மலர் கொண்டுஇறைஞ்சிப்
பூஅலர்
சோலை மணம்அடி புல்லப் பொருள்மொழியின்
காவலர்
செல்வத் திருக்கெடி லத்தைக் கடந்து அணைந்தார்.
பொழிப்புரை : மெய்ப்பொருள் மொழிதலில் வேந்தராய
நாவரசர், தேவரின்
தலைவரான இறைவரின் திருமாணிகுழி, திருத்தினைநகர் ஆகிய திருப்பதிகளுக்கும்
விரும்பிச் சென்று, எவ்வுயிர்களும் விரும்புதற்குரிய
சொல்மாலைகளால் போற்றி செய்து, மலர்கள் மலர்கின்ற சோலைகளின் மணமானது
தம் திருவடியில் பொருந்தும்படி நடந்து சென்று, திருக்கெடிலத்தைக் கடந்து வந்து
சேர்ந்தார்.
பெ.
பு. பாடல் எண் : 137
வெஞ்சமண்
குண்டர்கள் செய்வித்த தீய மிறைகள்எல்லாம்
எஞ்சவென்று
ஏறிய இன்தமிழ் ஈசர் எழுந்து அருள
மஞ்சுஇவர்
மாடத் திருஅதி கைப்பதி வாணர்எல்லாம்
தம்செயல்
பொங்கத் தழங்குஒலி மங்கலஞ் சாற்றல்உற்றார்.
பொழிப்புரை : கொடிய சமணர்கள் செய்வித்த தீய
துன்பங்கள் எல்லாம் அழிய, வெற்றி பெற்று மேலேறி வந்த இனிய
தமிழரசர் இங்ஙனம் எழுந்தருள, மேகம் தவழுமாறு உயர்ந்த மாடங்களையுடைய
திருவதிகை நகரில் வாழ்பவர்கள் எல்லாரும், தாங்கள் எதிர் கொண்டு இன்னுரை வழங்கும்
செயல்கள் சிறக்க, ஒலிக்கும் முரசு முதலிய இயங்களை இசைத்து, இச்செய்தியை
ஊரவர் அறிய எடுத்துக் கூறினர்.
பெ.
பு. பாடல் எண் : 138
மணிநெடுந்
தோரணம் வண்குலைப் பூகம் மடல்கதலி
இணைஉற
நாட்டி எழுநிலைக் கோபுரம் தெற்றி எங்கும்
தணிவுஇல்
பெருகுஒளித் தாமங்கள் நாற்றிச்செஞ் சாந்துநீவி
அணிநகர்
முன்னை அணிமேல் அணிசெய்து அலங்கரித்தார்.
பொழிப்புரை : அழகிய நீண்ட தோரணங்களையும், வளமிக்க
பாக்குக் குலைகளையும், மடலையுடைய வாழைகளையும் பொருந்த
நாட்டியும், ஏழு நிலைகளையுடைய கோபுரத்தும் திண்ணையிலும் பெருகிய ஒளியையுடைய
மாலைகளைத் தொங்கவிட்டும், சிவந்த சாந்து பூசியும், அழகிய
அந்நகரத்தை முன்னைய அழகை விட மேலும் அழகுபடுத்தினர்.
பெ.
பு. பாடல் எண் : 139
மன்னிய
அன்பின் வளநகர் மாந்தர் வயங்குஇழையார்
இன்னிய
நாதமும் ஏழிசை ஓசையும் எங்கும்விம்மப்
பொன்இயல்
சுண்ணமும் பூவும் பொரிகளும் தூவி எங்கும்
தொல்நகரின்
புறஞ் சூழ்ந்துஎதிர் கொண்டனர் தொண்டரையே.
பொழிப்புரை : நிலைபெற்ற அன்புடைய அவ்வளமான நகரத்து
மக்களும், ஒளிபொருந்திய
அணிகளை அணிந்த பெண்களும், இனிய ஒலியை உண்டாக்கும் இயங்களின்
ஓசையையும், ஏழிசைப் பாடலின் ஒலியையும், எங்கும் பெருகச் செய்து, பொன்னிறமான
பொடிகளையும், மலர்களையும் பொரிகளையும் கலந்து எங்கும் தூவிப், பழமையான
அந்நகரின் எல்லையில் வந்து சூழ்ந்து, திருத்தொண்டரான திருநாவுக்கரசு நாயனாரை
எதிர்கொண்டனர்.
பெ.
பு. பாடல் எண் : 140
தூயவெண்
நீறு துதைந்தபொன் மேனியும் தாழ்வடமும்
நாயகன்
சேவடி தைவரும் சிந்தையும் நைந்து உருகிப்
பாய்வதுபோல்
அன்புநீர் பொழிகண்ணும் பதிகச் செஞ்சொல்
மேயசெவ்
வாயும் உடையார் புகுந்தனர் வீதியுள்ளே.
பொழிப்புரை : தூயதும் வெண்மையதுமான திருநீற்றை நிறைய
அணியப் பெற்ற பொன்போன்ற மேனியையும், உருத்திராக்க மாலையணிந்த
திருவடிவத்தையும், தம் உயிர்த் தலைவரான சிவபெருமானின்
சேவடிகளைச் சிந்திக்கும் மனத்தையும், உள்ளம் நைந்து உருகுவது போன்ற அன்பு
நீரை இடைவிடாது பொழிகின்ற திருக்கண் களையும், தேவாரத் திருப்பதிகமான செவ்விய சொற்களை
இடைவிடாது இசைத்து வரும் சிவந்த வாயையும் உடைய திருநாவுக்கரசு நாயனார்
திருவீதியுள் புகுந்தார்.
பெ.
பு. பாடல் எண் : 141
கண்டார்கள்
கைதலை மேற்குவித்து
இந்தக் கருணைகண்டால்
மிண்டுஆய
செய்கை அமண்கையர்
தீங்கு விளைக்கச் செற்றம்
உண்டா
யினவண்ணம் எவ்வண்ணம்
என்று உரைப் பார்கள்பின்னும்
தொண்டுஆண்டு
கொண்ட பிரானைத்
தொழுது துதித்தனரே.
பொழிப்புரை : பார்த்தவர்கள் கைகளைத் தலைமீது
குவித்துக் கொண்டு `கருணையே உருவமாக விளங்கும் நாவரசரைக்
கண்களால் கண்ட பின்பும், கொடுஞ் செயலர்களாகிய சமணர்கள்
இவருக்குத் தீங்கு விளைக்கும்படி சினம் கொண்டதுதான் எவ்வாறு` என்று
உரைப்பார்களாய், மேலும் தொண்டரை ஆட்கொண்டு அடிமையாக ஏற்றுக் கொண்ட பெருமானையும்
வணங்கிப் போற்றினர்.
பெ.
பு. பாடல் எண் : 142
இவ்வண்ணம்
போல எனைப்பல மாக்கள் இயம்பிஏத்த
மெய்வண்ண
நீற்றுஒளி மேவும் குழாங்கள் விரவிச்செல்ல
அவ்வண்ணம்
நண்ணிய அன்பரும் வந்துஎய்தி அம்பவளச்
செவ்வண்ணர்
கோயில் திருவீரட் டானத்தைச் சேர்ந்தனரே.
பொழிப்புரை : இவ்வாறு அளவற்ற மக்கள் சொல்லிப் போற்ற, என்றும்
அழிதல் இல்லாத அழகிய திருநீற்றின் ஒளி உடலில் மிளிர்ந்துள்ள அடியார் கூட்டங்கள்
உடன் செல்லவும், அங்ஙனம் அடைந்த அன்பரான திருநாவுக்கரசு நாயனாரும் வந்து
சேர்ந்து அழகான பவளம் போன்ற சிவந்த நிறத்தினரான சிவபெருமான் எழுந்தருளியுள்ள
கோயிலான திருவீரட்டானத்தை அடைந்தார்.
பெ.
பு. பாடல் எண் : 143
உம்பர்தம்
கோனை உடைய பிரானைஉள் புக்கு இறைஞ்சி
நம்புறும்
அன்பின் நயப்புஉறு காதலி னால்திளைத்தே
எம்பெரு
மான்தனை ஏழையேன் நான்பண்டு இகழ்ந்ததென்று
தம்பரி
வால்திருத் தாண்டகச் செந்தமிழ் சாற்றிவாழ்ந்தார்.
பொழிப்புரை : தேவர்களின் தலைவரும், தம்மை
அடிமையாக உடையவருமான இறைவரைத் திருக்கோயிலுக்குள் புகுந்து வணங்கி, விரும்புதற்குரிய
அன்பும் விருப்பம் மிக்க காதலும் பெருகச், சிவானந்தத்தினுள் இடையறாது மூழ்கிநின்று, `எம்பெருமானை
ஏழையேன் பண்டு இகழ்ந்தவாறே` என்ற கருத்துடன் தம் பரிவினால்
திருத்தாண்டகத் தமிழ்த் திருப்பதிகத்தைப் பாடிப் பெருவாழ்வு அடைந்தனர்.
குறிப்புரை : இவ்விடத்து அரசு அருளியது `வெறிவிரவு` (தி.6
ப.3) எனத்
தொடங்கும் பதிகமாகும். இப்பதிகப் பாடல்கள் அனைத்தும் `ஏழையேன் நான் பண்டு இகழ்ந்தவாறே` என
முடிவுறுகின்றன. அவ்வரிய தொடரையே ஆசிரியர் சேக்கிழார் நினைவு கூர்கின்றார்.
திருநாவுக்கரசர் திருப்பதிகம்
6.
003 திருஅதிகை வீரட்டானம்
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
வெறிவிரவு
கூவிளநல் தொங்க லானை
வீரட்டத் தானைவெள் ஏற்றி னானைப்
பொறிஅரவி
னானைப்புள் ஊர்தி யானைப்
பொன்னிறத்தி னானைப் புகழ்தக் கானை
அறிதற்கு அரியசீர் அம்மான் தன்னை
அதியரைய மங்கை அமர்ந்தான் தன்னை
எறிகெடிலத்
தானை இறைவன் தன்னை
ஏழையேன் நான்பண்டு இகழ்ந்த வாறே.
பொழிப்புரை :அலைகள் வீசும் கெடில நதிக்கரையிலுள்ள
எம் பெருமான் நறுமணம் கமழும் வில்வ மாலை அணிந்தவன் . அதிகை வீரட்டத்தில்
உகந்தருளியிருப்பவன் . இடபவாகனன் . ஆதிசேடனாகவும் , கருடவாகனத் திருமாலாகவும் பொன் நிறமுடைய
பிரமனாகவும் அவருள் உடனாய் இருந்து அவரைச் செயற்படுப்பவன் . பொருள்சேர்
புகழுக்குத் தக்கவன் . உணர்ந்தார்க்கும் உணர்வரிய சிறப்பினை உடைய தலைவன் . அதியரைய
மங்கை என்ற திருத்தலத்தை உகந்தருளியிருப்பவன். அத்தகைய பெருமானை அறிவிலியாகிய யான்
என் வாழ்க்கையின் முற்பகுதியில் வழிபடாது பழித்துக் கூறிய செயல் இரங்கத்தக்கது .
பாடல்
எண் : 2
வெள்ளிக்
குன்றுஅன்ன விடையான் தன்னை
வில்வலான் வில்வட்டங் காய்ந்தான்
தன்னைப்
புள்ளி
வரிநாகம் பூண்டான் தன்னைப்
பொன்பிதிர்ந்து அன்ன சடையான் தன்னை
வள்ளி
வளைத்தோள் முதல்வன் தன்னை
வாரா உலகுஅருள வல்லான் தன்னை
எள்கவிடு
பிச்சை ஏற்பான் தன்னை
ஏழையேன் நான்பண்டு இகழ்ந்த வாறே.
பொழிப்புரை :மீண்டும் பிறப்பெடுக்க வேண்டிய
நிலையில்லாத வீட்டுலகை அருளவல்ல எம்பெருமான் வெள்ளி மலை போன்ற காளையை வாகனமாக
உடையவன் . வில்லைப் பயன் கோடலில் வல்ல மன்மதனுடைய வில்லைக் கையாண்ட செயலைக்
கோபித்தவன் . படப்புள்ளிகளையும் கோடுகளையும் உடைய நாகத்தை அணிகலனாக அணிபவன் . பொன்
துகள் போல ஒளிவீசும் செஞ்சடையினன் . சந்திரனைப் போல ஒளிவீசும் தோள்வளை அணிந்த
முதல்வன் . பிறர் தன்னை இகழுமாறு பல வீட்டிலுள்ளவர்களும் வழங்கும் பிச்சையை
ஏற்பவன் . அத்தகைய பெருமானை ஏழையேன் பண்டு இகழ்ந்த திறம் இரங்கத்தக்கது .
பாடல்
எண் : 3
முந்தி
உலகம் படைத்தான் தன்னை
மூவா முதலாய மூர்த்தி தன்னைச்
சந்தவெண்
திங்கள் அணிந்தான் தன்னைத்
தவநெறிகள் சாதிக்க வல்லான் தன்னைச்
சிந்தையில்
தீர்வினையைத் தேனைப் பாலைச்
செழுங்கெடில வீரட்டம் மேவி னானை
எந்தை
பெருமானை யீசன் தன்னை
ஏழையேன் நான்பண்டு இகழ்ந்த வாறே.
பொழிப்புரை :செழிப்புடைய கெடிலநதி பாயும் அதிகை
வீரட்டானத்தை உகந்தருளியிருக்கும் எந்தையாய்ப் பெருமானாய்,
எல்லோரையும்
ஆள்பவனாய் உள்ள எம்பெருமான் தான் , என்றைக்கும் கெடுதலில்லாத முதற்பொருள்.
அவனே முற்பட்ட காலத்தில் உலகங்களைப் படைத்தவன். அழகிய வெள்ளியபிறை சூடி
அடியார்களின் தவமாகிய நெறியை முற்றுவிப்பவன். சித்தம் முதலிய கருவிகளால்
செய்யப்படும் செயல்களின் பயனாய்த் தேனும் பாலும் போன்று இனியவன். அத்தகைய பெருமானை
ஏழையேன் பண்டு இகழ்ந்தது இரங்கத்தக்கது.
பாடல்
எண் : 4
மந்திரமும்
மறைப்பொருளும் ஆனான் தன்னை
மதியமும் ஞாயிறும் காற்றும் தீயும்
அந்தரமும்
அலைகடலும் ஆனான் தன்னை
அதியரைய மங்கை அமர்ந்தான் தன்னைக்
கந்தருவஞ்
செய்துஇருவர் கழல்கை கூப்பிக்
கடிமலர்கள் பலதூவிக் காலை மாலை
இந்திரனும்
வானவரும் தொழச்செல் வானை
ஏழையேன் நான்பண்டு இகழ்ந்த வாறே.
பொழிப்புரை :ஆகா , ஊகூ என்ற கந்தருவர் இருவரும் பாடித்
திருவடிகளில் நறுமலர்களைத் தூவிக் கைகளைக் குவித்துக் காலையும் மாலையும்
இந்திரனும் மற்ற தேவர்களும் வழிபடுமாறு எளிமையில் காட்சி வழங்கும் சிவபெருமான்
வேதமந்திரமும் அவற்றின் பொருளும் ஆயவன் . மதியம் , வெங்கதிர் , காற்று , தீ , வான் , அலைகளை உடைய கடல் ஆகியவற்றின் உடனாய்
நின்று அவற்றைச் செயற்படுப்பவன் . அதியரையமங்கை என்ற திருத்தலத்தில்
உகந்தருளியிருப்பவன் . அத்தகைய பெருமானை ஏழையேன் பண்டு இகழ்ந்தது இரங்கத்தக்கது .
பாடல்
எண் : 5
ஒருபிறப்பு
இலான்அடியை உணர்ந்தும் காணார்
உயர்கதிக்கு வழிதேடிப் போக மாட்டார்
வருபிறப்பு
ஒன்று உணராது மாசு பூசி
வழிகாணா தவர்போல்வார் மனத்த னாகி
அருபிறப்பை
அறுப்பிக்கும் அதிகை யூரன்
அம்மான்தன் அடிஇணையே அணைந்து வாழாது
இருபிறப்பும்
வெறுவியராய் இருந்தார் சொல்கேட்டு
ஏழையேன் நான்பண்டு இகழ்ந்த வாறே.
பொழிப்புரை :பிறவாயாக்கைப் பெரியோன் திருவடிகளை
நினைத்துப் பார்ப்பது கூடச் செய்யாராய் உயர்கதியை அடைவதற்குரிய வழியைத்தேடி
அவ்வழியே வாழ்க்கையை நடத்தாதவராய் , இடையறாது வருகின்ற பிறப்பின் காரணத்தை
உணராராய் , உடம்பில் அழுக்கினைத் தாமே பூசிக்கொண்டு அகக்கண் குருடராய சமண
முனிவருடைய மனம்போல் நடப்பேனாகி , இம்மைக்கும் மறுமைக்கும் பயன்படாத
செயல்களைச் செய்யும் அவர்களுடைய சொற்களை உபதேசமாகக் கொண்டு , கொடிய
பிறவியை அடியோடு போக்குவிக்கும் அதிகை வீரட்டானத்து எம்பெருமான் திருவடிகளைச் சரண்
புக்கு வாழாமல் ஏழையேன் பண்டு அப்பெருமானை இகழ்ந்த செயல் இரங்கத்தக்கது .
பாடல்
எண் : 6
ஆறுஏற்க
வல்ல சடையான் தன்னை
அஞ்சனம் போலும் மிடற்றான் தன்னைக்
கூறுஏற்கக்
கூறுஅமர வல்லான் தன்னைக்
கோல்வளைக்கை மாதராள் பாகன் தன்னை
நீறுஏற்கப்
பூசும் அகலத் தானை
நின்மலன் தன்னை நிமலன் தன்னை
ஏறுஏற்க
ஏறுமா வல்லான் தன்னை
ஏழையேன் நான்பண்டு இகழ்ந்த வாறே.
பொழிப்புரை :கங்கையைத் தன்னுள் அடங்குமாறு ஏற்றுக்
கொள்ள வல்ல சடையான், மைபோலக் கரிய முன் கழுத்தினன். எல்லாப்
பொருள்களின் நுண்ணிலையையும் ஏற்று அவற்றுக்குப் பற்றுக் கோடாக நிற்கவும்
பருநிலையில் அவற்றுக்கு உள்ளும் புறம்பும் அறிவாய் நிறைந்து நிற்கவும் வல்லவன் .
திரண்ட வளையல்களைக் கையில் அணிந்த பார்வதி பாகன் . நீறு ,
தன்னையே சார்பாக ஏற்க
அதனைப் பூசிய மார்பினன் . தானும் களங்கம் இல்லாதவனாய்ப் பிறர் களங்கத்தையும்
போக்குவிப்பவன் . காளை வாகனத்தில் தக்கபடி ஏறி அதனைச் செலுத்துவதில் வல்லவன் .
அத்தகைய பெருமானை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த செயல் இரங்கத்தக்கது .
பாடல்
எண் : 7
குண்டாக்க
னாய்உழன்று கையில் உண்டு
குவிமுலையார் தம்முன்னே நாண மின்றி
உண்டி
உகந்துஅமணே நின்றார் சொற்கேட்டு
உடனாகி யுழிதந்தேன் உணர்வுஒன்று இன்றி
வண்டுஉலவு
கொன்றையங் கண்ணி யானை
வானவர்கள் ஏத்தப் படுவான் தன்னை
எண்திசைக்கும்
மூர்த்தியாய் நின்றான் தன்னை
ஏழையேன் நான்பண்டு இகழ்ந்த வாறே.
பொழிப்புரை :மூர்க்கர்களாய் தடுமாறி இளைய பெண்கள்
முன்னிலையில் நாணமின்றி உடையில்லாமல் நின்று உணவைக் கையில் பெற்று நின்றவாறே உண்ணும்
சமணத்துறவியரின் சொற்களை மனங்கொண்டு அவர்கள் இனத்தவனாகி நல்லுணர்வில்லாமல் திரிந்த
நான் , வண்டுகள்
சூழ்ந்து திரியும் கொன்றைப் பூ மாலையை அணிந்து வானவர்களால் புகழப்பட்டு , எண்திசையிலுள்ளார்க்கும்
தலைவனாய் நிலைபெற்ற எம்பெருமானை ஏழையேனாகிய யான் பண்டு இகழ்ந்தவாறு இரங்கத்தக்கது
.
பாடல்
எண் : 8
உறிமுடித்த
குண்டிகைதம் கையில் தூக்கி
ஊத்தைவாய்ச் சமணர்க்குஓர் குண்டாக்
கனாய்க்
கறிவிரவு
நெய்சோறு கையில் உண்டு
கண்டார்க்குப் பொல்லாத காட்சி ஆனேன்
மறிதிரைநீர்ப்
பவ்வநஞ்டு உண்டான் தன்னை
மறித்துஒருகால் வல்வினையேன் நினைக்க
மாட்டேன்
எறிகெடில
நாடர் பெருமான் தன்னை
ஏழையேன் நான்பண்டு இகழ்ந்த வாறே.
பொழிப்புரை :உறியில் சுருக்கிட்டு வைத்த
கஞ்சிக்கரகத்தைக் கையில் தொங்கவிட்டுக்கொண்டு ஊத்தை வாயினை உடைய சமணர்களிடையே
யானும் ஒரு மூர்க்கனாகி , கறியோடு நெய் ஊட்டப் பட்ட சோற்றினைக்
கையில் வாங்கி உண்டு காண்பவருக்கு வெறுக்கத் தக்க காட்சிப் பொருளாக இருந்த யான் , அலைமோதும்
கெடில நதி பாயும் நாட்டிற்குத் தலைவனாய்க் கடலில் தோன்றிய நஞ்சினை உண்ட பெருமானைத்
தீவினை உடையேனாய் , பரம்பரையாக வழிபட்டுவரும் குடும்பப்
பழக்கம் பற்றியும் நினைக்க இயலாதேனாய் ஏழையேனாய்ப் பண்டு இகழ்ந்த செயல்
இரங்கத்தக்கது .
பாடல்
எண் : 9
நிறைவார்ந்த
நீர்மையாய் நின்றான் தன்னை
நெற்றிமேல் கண்ஒன்று உடையான் தன்னை
மறையானை
மாசுஒன்று இலாதான் தன்னை
வானவர்மேல் மலர்அடியை வைத்தான் தன்னைக்
கறையானைக்
காதார் குழையான் தன்னைக்
கட்டங்கம் ஏந்திய கையி னானை
இறையானை
எந்தை பெருமான் தன்னை
ஏழையேன் நான்பண்டு இகழ்ந்த வாறே.
பொழிப்புரை :எல்லார் உள்ளத்திலும்
தங்கியிருப்பவனாகிய எந்தை பெருமான் குறைவிலா நிறைவினனாய் நிலைபெற்றவன்.
நெற்றிக்கண்ணன். வேத வடிவினன். களங்கம் ஏதும் இல்லாதான். தேவர்கள் தலையில் தன் திருவடிகளை
வைத்து அருளியவன். கழுத்தில் விடக்கறை உடையவன். குழைக்காதன். கையில் கட்டங்கம்
என்ற படைக்கலன் ஏந்தியவன். அத்தகைய பெருமானை ஏழையேன் பண்டு இகழ்ந்த செயல்
இரங்கத்தக்கது.
பாடல்
எண் : 10
தொல்லைவான்
சூழ்வினைகள் சூழப் போந்து
தூற்றியேன் நாற்றியேன் சுடராய் நின்று
வல்லையே
இடர்தீர்த்துஇங்கு அடிமை கொண்ட
வானவர்க்குந் தானவர்க்கும் பெருமான்
தன்னைக்
கொல்லைவாய்க்
குருந்துஒசித்துக் குழலும் ஊதுங்
கோவலனும் நான்முகனுங் கூடி எங்கும்
எல்லைகாண்பு
அரியானை எம்மான் தன்னை
ஏழையேன் நான்பண்டு இகழ்ந்த வாறே.
பொழிப்புரை :முல்லை நிலத்திலிருந்த குருந்த மரத்தை, அதன்
கண் பிணைத்திருந்த இடைக்குலச் சிறுமியர் ஆடைகளை அவர்கள் மீண்டும் எடுத்துக்
கொள்வதற்காக வளைத்துக் கொடுத்து, வேய்ங் குழல் ஊதி அவர்களை வசப்படுத்திய
இடையனாய் அவதரித்த திருமாலும், பிரமனும் ஆகிய இருவரும் முயன்றும்
அடிமுடிகளின் எல்லையைக் காண இயலாதவாறு அனற்பிழம்பாய் நின்றவனாய்த் தேவர்களுக்கும்
அசுரர்களுக்கும் தலைவனாய், எனக்கும் தலைவனாய், பண்டைத்
தீவினைகள் என்னைச் சூழ்ந்தமையாலே அவற்றின் வழியே சென்று அவனைப் பலவாறு இழித்துப்
பேசியும் பின் ஒருவாறு தெளிந்தும் நின்ற அடியேனுடைய அறிவுக்கு அறிவாய் நின்று
விரைவில் என் சூலை நோயைத் தீர்த்து என்னை ஆட்கொண்ட பெருமானை ஏழையேன் பண்டு
இகழ்ந்தவாறு இரங்கத்தக்கது .
பாடல்
எண் : 11
முலைமறைக்கப்
பட்டுநீ ராடாப் பெண்கள்
முறைமுறையால் நம்தெய்வம் என்று தீண்டித்
தலைபறிக்குந்
தன்மையர்கள் ஆகி நின்று
தவமேஎன்று அவம்செய்து தக்கது ஓரார்
மலைமறிக்கச்
சென்ற இலங்கைக் கோனை
மதன்அழியச் செற்றசே வடியி னானை
இலைமறித்த
கொன்றையந் தாரான் தன்னை
ஏழையேன் நான்பண்டு இகழ்ந்த வாறே.
பொழிப்புரை :மாசுதீரப்புனல் ஆடும் வழக்கத்தை
விடுத்து அற்றம் மறைத்தலுக்கு உடைமாத்திரம் அணிந்த சமணசமயப் பெண் துறவியர் தங்கள்
தெய்வம் என்று பெரிதும் மதித்துத் தம் கைகளால் தலைமயிரைப் பறிக்கும்
பண்புடையவர்களாகித் தங்கள் கொள்கைகளிலேயே நிலைநின்று தக்க செயல் இன்னது என்று
ஆராய்ந்தறிய இயலாதவர்களாகித் தவம் என்ற பெயரால் பொருத்த மற்ற செயல்களைச் செய்பவர்
சமணத் துறவியர் . அவர் வழி நின்றேனாகிய யான் . புட்பகவிமானம் சென்ற வழியைக் கயிலை
மலை தடுத்ததனால் அதனைப் பெயர்க்கச் சென்ற இராவணனுடைய வலிமை கெடத்துன்புறுத்திய
சிவந்த திருவடிகளை உடையவனாய் இலைகளுக்கு இடையே தோன்றிய கொன்றைப் பூவாலாகிய மாலையை
அணிந்த எம்பெருமானைப் பண்டு அறியாமை உடையேனாய் இகழ்ந்த திறம் இரங்கத்தக்கது .
திருச்சிற்றம்பலம்
-------------------------------------------------------------------
No comments:
Post a Comment