திரு அதிகை வீரட்டம் - 2

திருநாவுக்கரசர் திருப்பதிக வரலாறு

பெ. பு. பாடல் எண் : 144
அரிஅயனுக்கு அரியானை அடியவருக்கு எளியானை
விரிபுனல்சூழ் திருவதிகை வீரட்டா னத்து அமுதைத்
தெரிவுஅரிய பெருந்தன்மைத் திருநாவுக் கரசுமனம்
பரிவுறுசெந் தமிழ்ப்பாட்டுப் பலபாடிப் பணிசெயும் நாள்.

            பொழிப்புரை : அறிதற்கு அரிய பெருந்தகையாரான திருநாவுக்கரசு நாயனார், திருமாலுக்கும், நான்முகனுக்கும் அரியவராயினும் அடியவர்க்கு எளியவரான, பரந்த புனலால் சூழப்பட்ட திருவீரட்டானத்துள் எழுந்தருளியிருக்கும் அமுதமானவரை, உள்ளத்தில் மீதூர்ந்த அன்பைப் பெருக்கும் செந்தமிழ்ப் பாடல்கள் பலவற்றையும் பாடித் திருப்பணி செய்து வரும் அந்நாள்களில்.

            குறிப்புரை : திருவதிகையில் மனம் பரிவுறுபாட்டாகப் பாடியருளியன:

1.               இரும்பு:             திருநேரிசை.
2.         வெண்ணிலா:        திருநேரிசை.
3.        நம்பனே:             திருநேரிசை.
4.        மடக்கினார்:          திருநேரிசை.
5.        முன்பெலாம்:        திருநேரிசை.
6.        மாசில்ஒண்:        திருவிருத்தம்.
7.        முளைக்கதிர்:        காந்தார பஞ்சமம்.
8.        கோணல்:            திருக்குறுந்தொகை.
9.        எட்டுநாள்:           திருக்குறுந்தொகை.
10.      சந்திரனை:           அடையாளத் திருத்தாண்டகம்.
11.      எல்லாம்சிவன்:      போற்றித் திருத்தாண்டகம்.
12.      அரவணையான்:      திருவடித் திருத்தாண்டகம்.
13.       செல்வப்புனல்:      காப்புத் திருத்தாண்டகம்.
           
            இவற்றுள் முன்னைய ஆறும் நான்காம் திருமுறையில் வருவன. (தி.4 ப.24, 25, 26, 27, 28, 104, 110) ஏழும் எட்டும் ஒன்பதும் ஐந்தாம் திருமுறையில் வருவன (தி.5 ப.50, 51). பத்து முதல் பதின்மூன்று வரையில் உள்ளன ஆறாம் திருமுறையில் வருவன (தி.6 ப.4, 5, 6, 7).

            இப்பதின்மூன்று பதிகங்களும் முன்னைய பாட்டில் குறித்த `வெறிவிரவு` (தி.6 ப.3) எனத் தொடங்கும் பதிகம் ஒன்றுமாகப் பதினான்கு பதிகங்களும் இதுபொழுது பாடியனவாகும். `கூற்றாயினவாறு` (தி.4 ப.1) எனத் தொடங்கும் பதிகம் தமக்கையாருடன் முதன் முறையாகச் சென்று வழிபட்ட பொழுது பாடியதாகும். `சுண்ணவெண் சந்தனச் சாந்தும்` (தி.4 ப.2) என்ற பதிகம் பாடலிபுரத்தில் கெடில வாணரை நினைந்து பாடியதாகும். `நாமார்க்கும் குடியல்லோம்` (தி.6 ப.98) என்பது திருவதிகை இறைவன்முன் பாடியதன்று. பல்லவனின் அமைச்சர்கள் முன் பாடியதாகும்.

திருநாவுக்கரசர் திருப்பதிகங்கள்


4. 024  திருவதிகைவீரட்டானம்        கொப்பளித்த திருநேரிசை
                                                            திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
இரும்புகொப் பளித்த யானை ஈர்உரி போர்த்த ஈசன்
கரும்புகொப் பளித்த இன்சொல் காரிகை பாகம் ஆகச்
சுரும்புகொப் பளித்த கங்கைத் துவலைநீர் சடையில் ஏற்ற
அரும்புகொப் பளித்த சென்னி அதிகைவீ ரட்ட னாரே.

            பொழிப்புரை : கரும்பின் இனிமை மிகும் சொற்களை உடைய பார்வதியின் பாகராய் , வண்டுகள் தேனை மிகுதியாக உண்டு கொப்பளிக்கும் பூவினை அணிந்த கங்கையாளாகிய நீர் வடிவைச் சடையில் ஏற்றவராய் , அரும்புகள் தேனை மிகுதியாக வெளிப்படுத்தும் சென்னியை உடைய அதிகை வீரட்டனார் , இரும்பின் நிறத்தை கொப்பளித்து விட்டாற்போன்ற செறிவான கருமையுள்ள யானையின் ஈரப்பசுமை கெடாத தோலைப் போர்த்த ஈசனாவார் .


பாடல் எண் : 2
கொம்புகொப் பளித்த திங்கள் கோணல்வெண் பிறையும் சூடி
வம்புகொப் பளித்த கொன்றை வளர்சடை மேலும் வைத்துச்
செம்புகொப் பளித்த மூன்று மதிலுடன் சுருங்க வாங்கி
அம்புகொப் பளிக்க எய்தார் அதிகைவீ ரட்ட னாரே.

            பொழிப்புரை : கொம்பின் கூர்மை அதிகரித்த கூரிய வளைந்த வெண் பிறையைச் சூடி , அதன்மேலும் நறுமணம் அதிகரித்த கொன்றை மலரை வளரும் சடையில் அணிந்து , செம்பு மயமான உறுதியான மும்மதில்களும் அழியுமாறு வில்லை வளைத்து அம்பின் விறல் அதிகரிக்குமாறு புரங்களை எய்தவர் அதிகை வீரட்டனாரே .

பாடல் எண் : 3
விடையும்கொப் பளித்த பாதம் விண்ணவர் பரவி ஏத்தச்
சடையும்கொப் பளித்த திங்கள் சாந்தம் வெண் ணீறுபூசி
உடையும்கொப் பளித்த நாகம் உள்குவார் உள்ளத்து என்றும்
அடையும்கொப் பளித்த சீர்ஆர் அதிகைவீ ரட்ட னாரே.

            பொழிப்புரை : இடபத்தில் தழும்பேற்றும் தம் திருவடிகளைத் தேவர்கள் பாடித் துதிக்க சடைக்கு ஒளித் ததும்ப வைக்கும் சந்திரனின் நிலவு போன்ற வெண்ணீற்றைச் சாந்தமாகப் பூசி உடைமேல் பல்கித் தோன்றும் நாகங்களின கட்டியிருக்கும் திருவடிவை தியானிப்பவரது உள்ளத்தில் நீங்காது சேர்ந்திருந்திருப்பவர் அதிகை வீரட்டனாரே .


பாடல் எண் : 4
கறையும்கொப் பளித்த கண்டர், காமவேள் உருவம் மங்க
இறையும்கொப் பளித்த கண்ணார், ஏத்துவார் இடர்கள் தீர்ப்பார்,
மறையும்கொப் பளித்த நாவர் வண்டுஉண்டு பாடும் கொன்றை
அறையும்கொப் பளித்த சென்னி அதிகைவீ ரட்ட னாரே.

            பொழிப்புரை : விடக்கறை துலக்கமாக விளங்கும் கழுத்தினராய் , மன்மதன் வடிவம் அழியுமாறு தீயைச் சிறிது வீசிய நெற்றிக் கண்ணினை உடையவராய் , தம்மைத் துதிக்கும் அடியவர் துயர்களைத் தீர்ப்பவராய் , வேதம் மிக்குத் தொனிக்கும் நாவினராய் , வண்டுகள் தேன் உண்டு பாடப்படுவதும் , எல்லோராலும் புகழப்படுவதுமான கொன்றை மலரைச் சூடிய சென்னியராய்க் காட்சி வழங்குகிறார் அதிகை வீரட்டனார் .


பாடல் எண் : 5
நீறுகொப் பளித்த மார்பர் நிழல்திகழ் மழுஒன்று ஏந்திக்
கூறுகொப் பளித்த கோதைக் கோல்வளை மாதுஓர் பாகம்
ஏறுகொப் பளித்த பாதம் இமையவர் பரவி ஏத்த
ஆறுகொப் பளித்த சென்னி அதிகைவீ ரட்ட னாரே.

            பொழிப்புரை : திருநீறு பரந்து விளங்கும் மார்பினராய் , ஒளி விளங்கும் மழுப்படையைக் கையில் ஏந்தி , எல்லோரும் புகழும் மாலையும் திரண்டவளைகளும் அணிந்து ஒரு பாகத்தை விளக்கும் பார்வதி சமேதராய் , காளையைத் தழும்பேற வைத்த தம் திருவடிகளைத் தேவர்கள் துதிக்குமாறு கங்கை நதி பெருகித்தங்கியிருக்கும் செஞ்சடையை உடையவராய் காட்சி வழங்குகிறார் அதிகை வீரட்டனார் .


பாடல் எண் : 6
வணங்குகொப் பளித்த பாதம் வானவர் பரவி ஏத்தப்
பிணங்குகொப் பளித்த சென்னிச் சடைஉடைப் பெருமை அண்ணல்
சுணங்குகொப் பளித்த கொங்கைச் சுரிகுழல் பாகம் ஆக
அணங்குகொப் பளித்த மேனி அதிகைவீ ரட்ட னாரே.

            பொழிப்புரை : வேத மந்திரங்களைச் சொல்லி வணங்குதலை மிகவும் பொருந்திய திருவடிகளைத் தேவர்கள் முன் நின்று போற்றிப் புகழ , ஒன்றோடொன்றுணங்காதவை அதிகம் விளங்கும் சடையினை உடைய பெருமை மிக்க தலைமையாளராய் , தேமல் மிகவும் பரவிய கொங்கைகளை உடையவளாய்ச் சுருண்ட கூந்தலை உடைய பார்வதியின் பாகராய் , தெய்வத் தன்மையை வெளிப்படுத்தும் திருமேனியை உடையவராய்க் காட்சி வழங்குகிறார் அதிகை வீரட்டனார் .


பாடல் எண் : 7
சூலங்கொப் பளித்த கையர் சுடர்விடு மழுவாள் வீசி
நூலும்கொப் பளித்த மார்பில் நுண்பொறி அரவம் சேர்த்தி
மாலும்கொப் பளித்த பாகர் வண்டுபண் பாடும் கொன்றை
ஆலம்கொப் பளித்த கண்டத்து அதிகைவீ ரட்ட னாரே.

            பொழிப்புரை : சூலம் ஒளிமிகுந்து வீசும் கையினராய் , ஒளிவீசும் மழுப்படையை சுழற்றிக் கொண்டு , முப்புரிநூல் ஒளிவீசும் மார்பில் நுண்ணிய புள்ளிகளை உடைய பாம்பினை அணிந்து வண்டுகள் பண்பாடும் கொன்றை மலர்களைச் சூடித் திருமால் மகிழ்ந்திருக்கும் பாகத்தை உடையவராய் , விடத்தின் சுவட்டினை வெளிப்படுத்தும் நீலகண்டராய்க் காட்சி வழங்குகிறார் அதிகை வீரட்டனார் .


பாடல் எண் : 8
நாகம்கொப் பளித்த கையர், நான்மறை ஆய பாடி,
மேகம்கொப் பளித்த திங்கள் விரிசடை மேலும் வைத்துப்
பாகம்கொப் பளித்த மாதர் பண்ணுடன் பாடி ஆட
ஆகம்கொப் பளித்த தோளார் அதிகைவீ ரட்ட னாரே.

            பொழிப்புரை : பாம்பு மகிழ்வோடு விளங்கும் கையினராய் , நான்கு வேதங்களையும் பாடிக்கொண்டு , மேகம் மிக்குச் செறிந்த வானில் மிளிரும் பிறையை விரிந்த சடைமேலே சூடி , ஒருபாகமாக விளங்கும் உமாதேவி பண்ணோடு பாடக் கூத்தாடுவதற்குத் திருமேனிக்கண் பூரிப்படைந்து விம்முந் தோள்களை உடையவர் அதிகை வீரட்டனார் ஆவர் .


பாடல் எண் : 9
பரவுகொப் பளித்த பாடல் பண்ணுடன் பத்தர் ஏத்த
விரவுகொப் பளித்த கங்கை விரிசடை மேவ வைத்து
இரவுகொப் பளித்த கண்டர் ஏத்துவார் இடர்கள் தீர்ப்பார்
அரவுகொப் பளித்த கையர் அதிகைவீ ரட்ட னாரே.

            பொழிப்புரை : துதித்தற்கு ஏற்ற வாழ்த்துக்களைத் துலங்க வெளிப்படுத்தும் பாடல்களைப் பண்ணுடன் பாடி அடியவர்கள் போற்ற , சடைமுடியில் கலந்து தங்குதற்கு மகிழும் கங்கையைத் தம் விரிந்த சடையில் மகிழுமாறு வைத்து , இருள் கம்மிக் கறுத்த நீலகண்டராய் , தம்மை வழிபட்டுப் புகழ்பவர்களின் துயரங்களைத் தீர்ப்பவராய் , பாம்பு மகிழ்ந்து ஆடும் கையினராய்க் காட்சி வழங்குகிறார் அதிகை வீரட்டனார் .


பாடல் எண் : 10
தொண்டைகொப் பளித்த செவ்வாய்த் துடிஇடைப் பரவை அல்குல்
கொண்டைகொப் பளித்த கோதைக் கோல்வளை பாகம் ஆக
வண்டுகொப் பளித்த தீந்தேன் வரிக்கயல் பருகி மாந்தக்
கெண்டைகொப் பளித்த தெண்ணீர்க் கெடிலவீ ரட்ட னாரே.

            பொழிப்புரை : தொண்டைக்கனி அழகுவீசும் சிவந்தவாய் , துடி போன்ற இடை , கடல்போன்ற பரந்த அல்குல் , மயிர் முடிக்கும் விதங்களில் ஒன்றான கொண்டை பிராகாசிக்கும் கூந்தல் , திரண்ட வளையல்கள் எனும் இவற்றை உடைய பார்வதிபாகராய் , வண்டுகள் உண்டு மிகுதி என்று வெளிப்படுத்திய தேனைக் கோடுகளை உடைய கயல் மீன்கள் பருகத் தாம் பருகுவற்குக் கெண்டை மீன்கள் தாவிவரும் தெளிந்த நீரை உடைய கெடில ஆற்றின் கரையிலுள்ள அதிகை வீரட்டத்தை உகந்தருளியிருக்கும் பெருமானாகக் காட்சி வழங்குகிறார் .
                                                திருச்சிற்றம்பலம்


4. 025   திருவதிகை வீரட்டானம்                 திருநேரிசை
                                                திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
வெண்ணிலா மதியம் தன்னை விரிசடை மேவ வைத்து,
உண்ணிலாப் புகுந்து நின்றுஅங்கு உணர்வினுக்கு உணரக் கூறி,
விண்ணிலார் மீயச் சூரார், வேண்டுவார் வேண்டி லார்க்கே
அண்ணியார் பெரிதும் சேயார், அதிகைவீ ரட்ட னாரே.

            பொழிப்புரை : தேவருலகிலும் இருப்பதோடு , நிலவுலகில் மீயச்சூர் முதலிய திருத்தலங்களில் உறைபவராய் , தம்மை விரும்புபவருக்கு அண்மையில் உள்ளவராய் , வேண்டாதவருக்குப் பெரிதும் தொலைவில் உள்ளவராய் விளங்கும் பெருமானார் , வெள்ளிய ஒளிவீசும் பிறையை அது விரும்புமாறு விரிசடையிற் சூடி , அடியேன் உள்ளத்திலே ஞானஒளி நிலவப்புகுந்து நின்று , அவ் விடத்தில் உணர்விற்குப் பொருந்துமாறு உணர்த்த வேண்டியவற்றை உணர்த்தி , அதிகை வீரட்டத்தில் உள்ளார் .


பாடல் எண் : 2
பாடினார் மறைகள் நான்கும், பாய்இருள் புகுந்துஎன் உள்ளம்
கூடினார், கூடல் ஆல வாயிலார், நல்ல கொன்றை
சூடினார், சூடல் மேவிச் சூழ்சுடர் சுடலை வெண்ணீறு
ஆடினார், ஆடல் மேவி அதிகைவீ ரட்ட னாரே.

            பொழிப்புரை : கூடல் நகர ஆலவாய்க் கோயிலிலுள்ள பெருமான் நான்கு வேதங்களையும் பாடிக்கொண்டு நறிய கொன்றை மாலையை விரும்பிச் சூடி , சுடுகாட்டின் ஒளிவீசும் சாம்பல் பூசி , திரிபுரத்தை அழிக்குந் திருவிளையாடலை விரும்பி அதிகை வீரட்டத்தில் தங்கியவராய் , பரந்த ஆன்மிக இருளிலே நுழைந்து வந்து , அடியேனுடைய உள்ளத்தை அடைந்தார்

பாடல் எண் : 3
ஊனையே கழிக்க வேண்டில், உணர்மின்கள் உள்ளத்து உள்ளே,
தேனைய மலர்கள் கொண்டு சிந்தையுள் சிந்திக் கின்ற
ஏனைய பலவும் ஆகி, இமையவர் ஏத்த நின்று
ஆனையின் உரிவை போர்த்தார் அதிகைவீ ரட்ட னாரே.

            பொழிப்புரை : உடம்பு எடுத்தலாகிய பிறவித்துயரை அடியோடு போக்க விரும்பினால் , உள்ளத்துள்ளே நினைக்கும் எல்லா எண்ணங்களிலும் உறைபவராய் , வண்டுகள் வருந்துமாறு மலர்களைக் கைகளில் கொண்டு தேவர்கள் துதிக்குமாறு , யானைத் தோலைப் போர்த்தி நின்று , அதிகை வீரட்டத்தில் காட்சி வழங்கும் பெருமானாரை உள்ளத்துள்ளே தியானித்து உணருங்கள்.


பாடல் எண் : 4
துருத்தியாம் குரம்பை தன்னில் தொண்ணூற்றுஅங்கு அறுவர் நின்று
விருத்திதான் தருக என்று, வேதனை பலவும் செய்ய,
வருத்தியால் வல்ல வாறு வந்துவந்து அடைய நின்ற
அருத்தியார்க்கு அன்பர் போலும், அதிகைவீ ரட்ட னாரே.

            பொழிப்புரை : தோல்துருத்தி போன்ற உடம்பிலே தொண்ணுற்றாறு தத்துவங்களும் தாத்துவிகங்களும் உறைவிடங்கொண்டு தங்கள் வாழ்வுக்கு உரிய பொருள்களை அளிக்க வேண்டுமென்று பல துயரம் செய்யுமாறு உயிரினங்களை வருத்துவதனாலே , தம்மால் இயன்றளவு பெருமானாகிய தம்மை நாடி வந்து அடைந்த விருப்பினை உடைய அடியவர்பால் அதிகை வீரட்டனார் தாமும் அன்பராய் உதவுகிறார் .


பாடல் எண் : 5
பத்தியால் ஏத்தி நின்று பணிபவர் நெஞ்சத்து உள்ளார்,
துத்திஐந் தலைய நாகம் சூழ்சடை முடிமேல் வைத்து
உத்தர மலையர், பாவை உமையவள் நடுங்க அன்று
அத்தியின் உரிவை போர்த்தார், அதிகைவீ ரட்ட னாரே.

            பொழிப்புரை : பத்தியோடு வணங்கும் மெய்யன்பர் சித்தத்தில் நிலையாக உள்ளவரும் , படப்பொறிகளை உடைய ஐந்தலை நாகத்தைப் பரந்த சடைமுடியின்மேல் சூடி , வடக்கிலுள்ள இமய மலையரசன் மகளான உமாதேவி நடுங்குமாறு யானைத் தோலைப் போர்த்தியவரும் அதிகை வீரட்டனாரே .


பாடல் எண் : 6
வரிமுரி பாடி என்றும் வல்லவாறு அடைந்தும், நெஞ்சே,
கரிஉரி மூட வல்ல கடவுளை, காலத் தாலே
சுரிபுரி விரிகு ழ(ல்)லாள் துடியிடைப் பரவை அல்குல்
அரிவைஓர் பாகர் போலும் அதிகைவீ ரட்ட னாரே.

            பொழிப்புரை : நெஞ்சே ! சுருண்ட கடைகுழன்ற விரிந்த கூந்தலினளாய்த் துடிபோன்ற இடையினளாய்க் கடல்போன்ற அல்குலை உடைய பார்வதி பாகராய் அதிகை வீரட்டராய் யானைத் தோலைப் போர்த்திய கடவுளாய் விளங்குகிறார் அதிகை வீரட்டனார் . அவரை என்றும் வரிப்பாடல்களையும் முரிப்பாடல்களையும் பாடிக் கொண்டு நம்மால் இயன்றவாறு அடையக் கடவோம் .


பாடல் எண் : 7
நீதியால் நினைசெய், நெஞ்சே, நிமலனை நித்தம் ஆக,
பாதியாம் உமைதன் னோடும் பாகமாய் நின்ற எந்தை,
சோதியாய்ச் சுடர்வி ளக்காய்ச் சுண்ணவெண் ணீறுஅதுஆடி
ஆதியும் ஈறும் ஆனார் அதிகைவீ ரட்ட னாரே.

            பொழிப்புரை : நெஞ்சே ! பார்வதி பாகராய்ச் சோதியாய் , ஒளி விடும் ஞானதீபமாய் நின்ற எம் பிதாவும் , திருநீறு பூசி உலகுக்கெல்லாம் ஆதியும் அந்தமுமாக உள்ளவரும் அதிகை வீரட்டனாவார் . அத்தூயோரை நாடோறும் முறைப்படி தியானம் செய்வாயாக .


பாடல் எண் : 8
எல்லியும் பகலும் எல்லாம் துஞ்சுவேற்கு, ஒருவர் வந்து
புல்லிய மனத்துக் கோயில் புக்கனர், காமன் என்னும்
வில்லிஅம் கணையி னானை வெந்துஉக நோக்கி இட்டார்,
அல்லியம் பழன வேலி அதிகைவீ ரட்ட னாரே.

            பொழிப்புரை : வில்லையும் அம்புகளையும் உடைய மன்மதன் வெந்து விழும்படி நோக்கியவர் , அல்லிச் செடிகள் களையாக நிறைந்த வயல்களை உடைய அதிகை வீரட்டனார் . ஒப்பற்றவரான அப்பெருமான் செயற்பாடு ஏதும் இன்றி இரவும் பகலும் கழிக்கும் அடியேன் பக்கல்வந்து அடியேனுடைய அற்பமான மனமாகிய கோயிலிலே புகுந்து விட்டார் .


பாடல் எண் : 9
ஒன்றவே உணர்திர் ஆகில்,  ஓங்காரத்து ஒருவன் ஆகும்,
வென்றஐம் புலன்கள் தம்மை விலக்குதற்கு உரியீர் எல்லாம்
நன்றவன், நார ண(ன்)னும் நான்முகன் நாடிக் காண்குற்ற
அன்றுஅவர்க்கு அரியர் போலும் அதிகைவீ ரட்ட னாரே.

            பொழிப்புரை : பெரியோனாகிய திருமாலும் , பிரமனும் தேடிக் காண முயன்ற அன்று அவர்களுக்குக் காண்டற்கு அரியவரான அதிகை வீரட்டனார் , ஐம்புலன்களையும் வென்று விலக்குதற்குரிய நீங்கள் எல்லீரும் மனம் பொருந்தித் தியானிப்பீராயின் ஓங்காரத்தில் உள்ளே உள்ள மெய்ப்பொருளாக உங்களுக்குக் காட்சி வழங்குவார் .


பாடல் எண் : 10
தடக்கையால் எடுத்து வைத்துத் தடவரை குலுங்க ஆர்த்துக்
கிடக்கையால் இடர்கள் ஓங்கக் கிளர்மணி முடிகள் சாய
முடக்கினார் திருவி ரல்தான் முருகுஅமர் கோதை பாகத்து
அடக்கினார் என்னை ஆளும்   அதிகைவீ ரட்ட னாரே.

            பொழிப்புரை : என்னை அடியவனாக்கிக் கொண்ட அதிகை வீரட்டனார் , பெரிய கயிலை மலை நடுங்குமாறு ஆரவாரித்து நீண்ட கைகளால் பெயர்க்க முயன்ற இராவணன் அதன் கீழகப்பட்டுத் துன்பங்கள் மிகுந்து விளக்கமானமண மணிமுடிகள் நசுங்கி அவலமுறுமாறு தம் திருவடிப் பெருவிரலைச் சற்றே வளைத்து ஊன்றினார் . அவரே நறுமணம் கமழும் மாலையை அணிந்த பார்வதியை இடப்பாகமாக அடக்கியவரும் ஆவார் .

                                                            திருச்சிற்றம்பலம்


4.     026  திருவதிகைவீரட்டானம்              திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
நம்பனே, எங்கள் கோவே, நாதனே, ஆதி மூர்த்தி,
பங்கனே, பரம யோகீ, என்றுஎன்றே பரவி நாளும்,
செம்பொனே, பவளக் குன்றே, திகழ்மலர்ப் பாதம் காண்பான்
அன்பனே அலந்து போனேன் அதிகைவீ ரட்ட னீரே.

            பொழிப்புரை : `திருவதிகை வீரத்தானத்தில் உகந்தருளியிருக்கும் பெருமானீரே ! எல்லாராலும் விரும்பப்படுகிறவரே ! எங்கள் அரசரே ! ஆதிமூர்த்தியாகிய பார்வதிபாகரே ! மேம்பட்டயோகீசுவரே ! பொன்னையும் பவளமலையையும் ஒத்தவரே ! அன்பரே !` என்று உம்மைப் பலகாலும் வாய்விட்டழைத்து உமது தாமரை மலர் போன்ற பாதங்களைத் காணத் துயருற்று அடியேன் வருந்துகின்றேன் .


பாடல் எண் : 2
பொய்யினால் மிடைந்த போர்வை புரைபுரை அழுகி வீழ,
மெய்யனாய் வாழ மாட்டேன் வேண்டிற்றுஒன்று ஐவர் வேண்டார்
செய்யதா மரைகள் அன்ன சேவடி இரண்டும் காண்பான்
ஐயநான் அலந்து போனேன் அதிகைவீ ரட்ட னீரே.

            பொழிப்புரை : அழியக்கூடிய பொய்ப்பொருள்களால் இணைத்துச் செய்யப்பட்ட உடம்பில் ஒவ்வொரு துவாரமும் செயற்பாடின்றி அழுகிக்கெட , உண்மையான வாழ்வு வாழ இயலாதேனாய் , யான் விரும்பிய ஒப்பற்ற பரஞானத்தை என் ஐம்பொறிகளும் தாமும் விரும்பாமல் இடர்ப்படுதலால் , அதிகை வீரட்டனாராகிய உமது சிவந்த தாமரையை ஒத்த திருவடிகள் இரண்டையும் காண்பதற்கு இயலாமல்அடியேன் வருந்தி நிற்கின்றேன் .

  
பாடல் எண் : 3
நீதியால் வாழ மாட்டேன், நித்தலும் தூயேன் அல்லேன்,
ஓதியும் உணர மாட்டேன், உன்னைஉள் வைக்க மாட்டேன்,
சோதியே, சுடரே, உன்தன் தூமலர்ப் பாதம் காண்பான்,
ஆதியே, அலந்து போனேன், அதிகைவீ ரட்ட னீரே.

            பொழிப்புரை : ஒளியே ! ஞானவிளக்கே ! அதிகைப்பெருமானே ! தூயேன் அல்லேனாகிய அடியேன் நாடோறும் நெறிப்படி வாழமாட்டாமல் , கற்றும் கற்றவாறு உணர இயலாதேனாய் , உன்னை உள்ளத்துள் நிலையாக வைத்துத் தியானிக்க இயலாதேனாய் முதற்கடவுளாகிய உன்னுடைய தூயமலர்களைப் போன்ற திருவடிகளைக் காண இயலாதேனாய் வருந்தி நிற்கிறேன் .

  
பாடல் எண் : 4
தெருளுமா தெருள மாட்டேன், தீவினைச் சுற்றம் என்னும்
பொருள்உளே அழுந்தி நாளும் போவதுஓர் நெறியும் காணேன்,
இருளுமா மணிகண் டா,நின் இணையடி இரண்டும் காண்பான்
அருளுமாறு அருள வேண்டும், அதிகைவீ ரட்ட னீரே.

            பொழிப்புரை : இருண்ட நீலமணி போன்ற கழுத்தை உடைய அதிகைப் பெருமானே ! தெளிவடையும் வழியை அடைந்து மனந் தெளிவடைதலை இல்லேனாய் , தீயவினைகளுக்கு உதவும் தேக பந்துக்கள் என்னும் பொருள்களோடு இயைந்து நாளும் செல்லத்தக்க மேம்பட்ட வழியை அறியேனாய் உள்ள அடியேன் உன் ஒன்றற்கு ஒன்று ஒப்பான உன் திருவடிகள் இரண்டனையும் தரிசிக்குமாறு அருளும் வகையால் அருளவேண்டும் .


பாடல் எண் : 5
அஞ்சினால் இயற்றப் பட்ட ஆக்கைபெற்று, அதனுள் வாழும்
அஞ்சினால் அடர்க்கப் பட்டுஇங்கு, உழிதரும் ஆத னேனை
அஞ்சினால் உய்க்கும் வண்ணம் காட்டினாய்க்கு அச்சம் தீர்ந்தேன்
அஞ்சினாற் பொலிந்த சென்னி அதிகைவீ ரட்ட னீரே.

            பொழிப்புரை : பஞ்சகவ்வியத்தால் அபிடேகிக்கப்படுதலால் விளங்குகின்ற சென்னியை உடைய அதிகை வீரட்டப் பெருமானே ! ஐம்பூதங்களால் இயற்றப்பட்ட இவ்வுடலைப் பெற்று அதன்கண் வாழும் ஐம்பொறிகளால் வருத்தப்பட்டு இவ்வுலகில் திரியும் அறிவற்ற அடியேனைத் திருவைந்தெழுத்தால் நல்வழியில் செல்லுமாறு வழிகாட்டினாயாக , அதனால் அச்சம் நீங்கப்பெற்றேன் .


பாடல் எண் : 6
உறுகயிறு ஊசல் போல ஒன்றுவிட்டு ஒன்று பற்றி,
மறுகயிறு ஊசல் போல வந்துவந்து உலவு நெஞ்சம்,
பெறுகயிறு ஊசல் போலப் பிறைபுல்கு சடையாய், பாதத்து
அறுகயிறு ஊசல் ஆனேன் அதிகைவீ ரட்ட னீரே.

            பொழிப்புரை : கயிறாகிய ஊஞ்சல் போலப் பிறைச் சந்திரன் அசைந்துகொண்டு தங்கியிருக்கும் சடையினைஉடைய அதிகைப் பெருமானே ! தன் நிலையை விட்டுச் சென்று பிறிதோர் இடத்தைப் பற்றி மீண்டும் தொங்கிய நிலைப்பக்கம் வந்துசேரும் ஊசற்கயிறு போல ஓர் இடத்தை விடுத்து அலைந்து மீண்டும் அவ்விடத்திற்கே வரும் நெஞ்சம் , கயிறற்ற ஊஞ்சலுக்குத் தாய் தரையேயாதல் போல , இப்பொழுது நின் பாதமே இடமாக தங்கி நிற்கும் இயல்பைப்பெற்றுள்ளேன் ஆயினேன் .


பாடல் எண் : 7
கழித்திலேன் காம வெந்நோய், காதன்மை என்னும் பாசம்,
ஒழித்திலேன் ஊன்கண் நோக்கி உணர்வுஎனும் இமைதி றந்து
விழித்திலேன் வெளிறு தோன்ற வினைஎனும் சரக்குக் கொண்டேன்
அழித்திலேன் அயர்த்துப் போனேன் அதிகைவீ ரட்ட னீரே.

            பொழிப்புரை : அதிகைப் பெருமானே ! என்னிடத்துள்ள ஆசாபாசம் , காமம் என்ற கொடியநோய் நீங்கப்பெற்றிலேனாய் ஆசை என்னும் பற்றினை விடுத்திலேனாய் , உடலுயிர் வாழ்கையையே நோக்குபவனாய் இருத்தலால் , அதற்குக் காரணமாகிய ஆணவ மறைப்பு விலக , விழிக்கும் மெய்யுணர்வாகிய விழி விழிக்கும் நிலையைப் பெற்றிலேன் . அதற்குத் தடையாகிய வினை என்னும் பண்டத்தையும் நிரம்பக் கொண்டுள்ளேன் . அதே வேளை , இவற்றின் விருத்திக்கு ஊக்கும் இழிதகவுடையோர் சார்பை விலக்கிக் கொள்ளவும் மறந்து போனேன் . நான் என்ன செய்வேன் என்பது குறிப்பு .


பாடல் எண் : 8
மன்றத்துப் புன்னை போல மரம்படு துயம் எய்தி
ஒன்றினால் உணர மாட்டேன் உன்னைஉள் வைக்க மாட்டேன்
கன்றிய காலன் வந்து கருக்குழி விழுப்ப தற்கே
அன்றினான், அலமந் திட்டேன் அதிகைவீ ரட்ட னீரே.

            பொழிப்புரை : ஊர்ப் பொதுமன்றத்தில் நிற்கும் புன்னை பலராலும் கல்லெறியப்பட்டும் ஏறி அலைக்கப்பட்டும் சதா வருந்துவதுபோல ஐம்பொறிகளால் சதா அலைக்கப்பட்டும் வருந்துவதன்றி ஒருவகையிலும் உண்மையை உணரமாட்டேன் . அதை உணர்விக்கவல்ல உன்னையும் உளத்தில் நிலையாக வைக்கமாட்டேன் . இந்நிலையில் , சினம்மிக்க எமன் வந்து என்னை மீளவும் பிறப்பில் தள்ளுதற்கு அணுகிக் கொண்டுள்ளான் . அது கண்டு நான் சுழன்று போனேன் அதிகை வீரட்டத்துப் பெருமானே .


பாடல் எண் : 9
பிணிவிடா ஆக்கை பெற்றேன், பெற்றம்ஒன்று ஏறு வானே,
பணிவிடா இடும்பை என்னும் பாசனத்து அழுந்து கின்றேன்
துணிவுஇலேன் தூயன் அல்னேன், தூமலர்ப் பாதம் காண்பான்
அணியன்ஆய் அறிய மாட்டேன், அதிகைவீ ரட்ட னீரே.

            பொழிப்புரை : காளையை ஊர்பவனே ! அதிகைப்பெருமானே! நோய்கள் விடுத்து நீங்காத இம்மனித உடலைப் பெற்றிருக்கும் அடியேன் , செயற்படாதொழியாத துன்பம் நல்கும் நல்வினை தீவினையாகிய சுற்றத் தொடர்பை நெருக்கமாகக் கொண்டு , அவற்றை அடியோடு நீக்குவதற்குத் தேவையான தூய்மையும் மனஉறுதியும் இல்லாதேனாய் , அத்தூய்மை துணிவு என்பனவற்றை நல்கும் உன்னுடைய தூய மலர் போன்ற திருவடிகளைக் காணும் வகையில் உன்னை அறியமாட்டாதவனாய் உள்ளேன் .


பாடல் எண் : 10
திருவினாள் கொழுந னாரும் திசைமுகம் உடைய கோவும்
இருவரும் எழுந்தும் வீழ்ந்தும் இணைஅடி காண மாட்டா
ஒருவனே எம்பி ரானே உன்திருப் பாதம் காண்பான்
அருவனே அருள வேண்டும் அதிகைவீ ரட்ட னீரே.

            பொழிப்புரை : அதிகை வீரட்டனே ! வடிவம் புலப்படாது இருப்பவனே ! திருமகள் கேள்வனாய திருமாலும் , நான்கு திசைகளிலும் நான்கு முகங்களை உடைய பிரமனும் ஆகிய இருவரும் கீழ் நோக்கித் தோண்டியும் மேல்நோக்கிப் பறந்தும் , திருவடிகளையோ உன் உச்சியையோ காண இயலாத ஒப்பற்ற பெருமானாகிய உன் திருப்பாதங்களை அடியேன் காணுமாறு அருள் செய்யவேண்டும் .

                                                            திருச்சிற்றம்பலம்
           

4. 027   திருவதிகைவீரட்டானம்       திருநேரிசை
                                                திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
மடக்கினார் புலியின் தோலை, மாமணி நாகம் கச்சா
முடக்கினார், முகிழ்வெண் திங்கள் மொய்சடைக் கற்றை தன்மேல்,
தொடக்கினார் தொண்டைச் செவ்வாய்த் துடியிடைப் பரவை அல்குல்,
அடக்கினார் கெடில வேலி அதிகை வீரட்ட னாரே.

            பொழிப்புரை : கெடில நதியை ஒருபுறம் எல்லையாக உடைய அதிகை வீரட்டனார் புலியின்தோலை உடையாக உடம்பைச்சுற்றி இடையில் உடுத்துப் பெரிய முடிமணியை உடைய பாம்பினை அதன் மீது கச்சாக இறுக்கிக் கட்டிப் பிறையைச் செறிந்த சடைமீது செருகித் தொண்டைக்கனி போன்ற சிவந்த வாயையும் துடி போன்ற இடையையும் கடல் போன்ற அல்குலையும் உடைய பார்வதியைத் தம் உடம்பின் ஒருபாகமாக அடக்கியவர் ஆவர் .


பாடல் எண் : 2
சூடினார் கங்கை யாளை, சூடிய துழனி கேட்டுஅங்கு
ஊடினாள் நங்கை யாளும், ஊடலை ஒழிக்க வேண்டிப்
பாடினார் சாம வேதம், பாடிய பாணி யாலே
ஆடினார் கெடில வேலி அதிகைவீ ரட்ட னாரே

            பொழிப்புரை : கங்கையாளை எம் பெருமான் சடையில் சூடினாராக அவ்வோசை கேட்டுப் பார்வதி ஊடினாளாக அவ்வூடலைப் போக்க வேண்டிக் கெடிலவேலி அதிகை வீரட்டனாராகிய பெருமானார் சாமவேதம் பாடியவராய் அப்பாடலின் தாளத்திற்கு ஏற்ப ஆடியவராவர் .


பாடல் எண் : 3
கொம்பினார் குழைத்த வேனல் கோமகன் கோல நீர்மை
நம்பினார் காணல் ஆகா வகையதுஓர் நடலை செய்தார்,
வெம்பினார் மதில்கள் மூன்றும் வில்லிடை எரித்து வீழ்த்த
அம்பினார், கெடில வேலி அதிகைவீ ரட்ட னாரே.

            பொழிப்புரை : மரக்கிளைகள் தளிர்த்த வேனிற் காலத்திற்கு உரிய அரசனாகிய மன்மதனை விடுத்த மால் , அயன் , இந்திரன் முதலோர் அவன் உருவினை மீண்டும் காண முடியாத வகையில் அவன் உடலைத் தீவிழித்து எரித்து வருத்தினார் . அச்செயல் செய்த கெடில வேலி அதிகை வீரட்டனார் பகைவர்களுடைய மும்மதில்களையும் வில்லிடைக்கோத்து எரித்து அழித்த அம்பினை உடையவராவர் .


பாடல் எண் : 4
மறிபடக் கிடந்த கையர், வளர்இள மங்கை பாகம்
செறிபடக் கிடந்த செக்கர்ச் செழுமதிக் கொழுந்து சூடி,
பொறிபடக் கிடந்த நாகம் புகைஉமிழ்ந்து அழல வீக்கிக்
கிறிபட நடப்பர் போலும் கெடிலவீ ரட்ட னாரே.

            பொழிப்புரை : கெடில வீரட்டனார் கையில் மான் குட்டியை ஏந்தி , அழகு வளரும் இளையளாகிய பார்வதி பாகராய்ச் செறிந்த செஞ்சடையில் பிறையைச் சூடி , புள்ளிகளை உடைய பாம்பு புகையைக் கக்கி வெகுளுமாறு அதனை இடையில் இறுகக்கட்டி, அடியார்களுடைய உள்ளத்திலே பொய் உணர்வு அழியும்படியாக உலவி வருகிறார் .


பாடல் எண் : 5
நரிவரால் கவ்வச் சென்று நல்தசை இழந்தது ஒத்த,
தெரிவரால் மால்கொள் சிந்தை தீர்ப்பதுஓர் சிந்தை செய்வார்,
வரிவரால் உகளும் தெண்ணீர்க் கழனிசூழ் பழன வேலி
அரிவரால் வயல்கள் சூழ்ந்த அதிகைவீ ரட்ட னாரே.

            பொழிப்புரை : கோடுகளை உடைய வரால் மீன்கள் தாவும் தெளிந்த நீரை உடைய வயல்கள் சூழ்ந்த மருத நிலத்தை நாற்புறமும் எல்லையாகக் கொண்டு நெல்லரியும் உழவரால் சூழப்பட்ட வயல்களை உடைத்தாய அதிகையின் வீரட்டனார் , நரி வரால் மீனைக் கவரச் சென்று தன் வாயில் முன்பு பற்றி இருந்த தசைத் துண்டத்தையும் இழந்தது போல் , கிட்டாத ஒன்றை நினைத்துக் கிட்டியதனையும் இழக்கும் இயல்பினதாகிய மனித வாழ்க்கையை ஆராயும் சான்றோர்களுடைய உள்ளத்தில் ஏற்படும் மயக்கத்தை நீக்கும் உபாயத்தைத் திருவுளம் கொண்டு அருளுவார் .


பாடல் எண் : 6
புள்அலைத்து உண்ட ஓட்டில் உண்டுபோய், பலாசம் கொம்பின்
சுள்ளலைச் சுடலை வெண்ணீறு அணிந்தவர், மணிவெள் ஏற்றுத்
துள்ளலைப் பாகன் தன்னைத் தொடர்ந்துஇங்கே கிடக்கின் றேனை,
அள்ளலைக் கடப்பித்து ஆளும் அதிகைவீ ரட்ட னாரே.

            பொழிப்புரை : புலால் நாற்றத்தால் நெருங்கிவரும் பருந்துகளை விரட்டி மண்டையோட்டிற் பிச்சை எடுத்து உண்டு சென்று , வெப்பத்தாற் பலாசமரங்களின் சிறுகிளைகள் பட்டுப் போகும் சுடுகாட்டின் வெள்ளிய சாம்பலைப் பூசியவராய் , அழகிய வெள்ளிய காளைமீது துள்ளி ஏறி அதனைச் செலுத்துபவராய தம்மை , இவ் வுலகிலே பல காலமாகத் தொடர்ந்து பற்றிக் கிடக்கும் அடியேனைப் பிறவிப் பிணியாகிய சேற்றைத் தாண்டச்செய்து அடிமை கொள்பவராய் உள்ளவர் அதிகை வீரட்டனாரே


பாடல் எண் : 7
நீறுஇட்ட நுதலர், வேலை நீலஞ்சேர் கண்டர், மாதர்
கூறுஇட்ட மெய்யர் ஆகி, கூறினார் ஆறு நான்கும்
கீறிட்ட திங்கள் சூடிக் கிளர்தரு சடையின் உள்ளால்
ஆறுஇட்டு முடிப்பர் போலும் அதிகைவீ ரட்ட னாரே.

            பொழிப்புரை : அதிகை வீரட்டனார் நெற்றியில் நீறுபூசி , நீல கண்டராய் , பார்வதிபாகராய் , நான்குவேதங்களும் ஆறு சாத்திரங்களும் உரைப்பவராய் , பிறையைச்சூடி , மேல்நோக்கி உயரும் சடையிலே கங்கையை அடக்கிச் சடையை முடிப்பவர் ஆவார் .


பாடல் எண் : 8
காண்இலார் கருத்தில் வாரார் திருத்தலார் பொருத்தல் ஆகார்
ஏண்இலார் இறப்பும் இல்லார் பிறப்புஇலார் துறக்கல் ஆகார்
நாண்இலார் ஐவ ரோடும் இட்டுஎனை விரவி வைத்தார்
ஆண்அலார் பெண்ணும் அல்லார் அதிகைவீ ரட்ட னாரே.

            பொழிப்புரை : ஆணும் பெண்ணும் அல்லாதாராகிய அதிகை வீரட்டனார் பிறர் காட்சிக்கு அரியராய் , கருத்திற்கும் எட்டாதவராய் ; திருத்துவதற்கு இயலாதவராய் , தம்மோடு பொருந்தச் செய்வதற்கும் இயலாதவராய் , இந்நிலை என்று குறிப்பிடத்தக்க எந்த நிலையும் இல்லாதவராய் , இறப்பும் பிறப்பும் அற்றவராய் , இவர் நமக்கு உற்றவர் அல்லர் என்று துறக்க முடியாதவராய் , உலகியலுக்கு மாறுபட்ட தம் நிலைகளைக் குறித்துச் சிறிதும் நாணுதல் இல்லாதவராய் , ஐம்பொறிகளோடு கலந்து தடுமாறுமாறு அடியேனை இவ்வுலகில் தங்க வைத்துள்ளார் .


பாடல் எண் : 9
தீர்த்தமா மலையை நோக்கிச் செருவலி அரக்கன் சென்று
பேர்த்தலும் பேதை அஞ்சப் பெருவிரல் அதனை ஊன்றிச்
சீர்த்தமா முடிகள் பத்தும் சிதறுவித்து அவனை அன்று
ஆர்த்தவாய் அலற வைத்தார் அதிகைவீ ரட்ட னாரே.

            பொழிப்புரை : அதிகை வீரட்டனார் , தூயதான கயிலைமலையை நோக்கி வந்து போரிடும் வலிமையை உடைய இராவணன் அதனைப் பெயர்த்த அளவில் பார்வதி அஞ்சத் தம் கால்விரலை அழுத்தி ஊன்றிச் சிறப்புடைய அவனுடைய தலைகள் பத்தும் சிதறச் செய்து , ஒரு கணத்தில் , மகிழ்ச்சியால் ஆரவாரம் செய்த அவன் வாய்கள் துயரத்தால் கதறுமாறு செய்தவராவர் .
                                                            திருச்சிற்றம்பலம்
4. 028   திருவதிகை வீரட்டானம்                திருநேரிசை
                                                திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
முன்புஎலாம் இளைய காலம் மூர்த்தியை நினையாது ஓடிக்
கண்கண இருமி, நாளும் கருத்துஅழிந்து அருத்தம் இன்றிப்
பின்பகல் உணங்கல் அட்டும் பேதைமார் போன்றேன், உள்ளம்
அன்பனாய் வாழ மாட்டேன், அதிகைவீ ரட்ட னீரே.

            பொழிப்புரை : அதிகைப் பெருமானாரே , உள்ளத்திலே உமக்கு அன்பனாய் வாழமாட்டேனாய் , அடியேனுடைய இளமைக்காலமான அம்முற்பட்ட காலமெல்லாம் உம் திருவடிவைத் தியானம் செய்யாமல் அலைந்து , மூப்பு நிலையில் கணீர் என்ற ஓசை உண்டாகுமாறு இருமிக் கருதற்பாலதாகிய சிவ சிந்தனையே இல்லாது , பயனுடைய செயல்கள் செய்யாமல் , உணவு வேளைக்கு உதவுமாறு முற்பகலில் சோறு வடிக்காமல் காலம் கடத்தி அகாலமான பிற்பகலில் உண்டற்கிதமில்லாதவற்றை உலையிலிட்டு சமைக்கவும் இல்லக் கிளத்தியர் போலாகின்றேன் . உளமார்ந்த மெய்யன்பினால் வாழ இயலாதவனாகின்றேன் .


பாடல் எண் : 2
கறைப்பெரும் கண்டத் தானே, காய்கதிர் நமனை அஞ்சி
நிறைப்பெரும் கடலும் கண்டேன், நீள்வரை உச்சி கண்டேன்,
பிறைப்பெரும் சென்னி யானே, பிஞ்ஞகா, இவை அனைத்தும்
அறுப்பது ஓர்உபாயம் காணேன், அதிகைவீ ரட்ட னீரே.

            பொழிப்புரை : அதிகைப் பெருமானாரே ! பெரிய நீலகண்டரே!  பிறைசூடீ , தலைக்கோலம் அணிந்தவரே ! உயிர்களைக் கோபித்துக் கவரும் காலனுக்குப் பயந்து கடல்நீரில் தீர்த்தமாடியும் நீண்ட மலை உச்சியை அடைந்து அங்குத் தவம் செய்தும் பிறப்பு, பிறப்பச்சம் என்ற இவற்றை நீக்கிக் கொள்வதற்குரிய வழியினை அறிந்தேன் அல்லேன் .


பாடல் எண் : 3
நாதனார் என்ன நாளும் நடுங்கினர் ஆகித் தங்கள்
ஏதங்கள் அறிய மாட்டார், இணையடி தொழுதோம் என்பார்
ஆதன்நான் அவன்என்று எள்கி, அதிகைவீ ரட்ட னே,நின்
பாதநான் பரவாது உய்க்கும் பழவினைப் பரிசு இலேனே.

            பொழிப்புரை : சான்றோர்கள் யாரேனும் தம்மைத் தலைவர் என்று குறிப்பிட்டால் அதைக் கேட்டு எம்பெருமானாருடைய அடியவராகிய தமக்கு அடியார் என்ற பெயரைத் தவிரத் தலைவர் என்ற பெயர் ஏலாது என்று நடுங்கித் தம்மைத் தலைவராகக் கருதும் தவறுகளைச் செய்ய அறியாதவராய் யாங்கள் அடியவர்க்கு அடியராய் உங்கள் திருவடிகளை வழிபடுகிறோம் என்று பதில் கூறுவர் . ஆனால் அறிவிலியான யானோ என்னைத் தலைவன் என்று நினைத்து உம்மை இகழ்ந்து அதிகை வீரட்டராகிய உம்முடைய திருவடிகளை வழிபடாது உலகியல் தீமைகளிலேயே அடியேனைக் செலுத்தும் பழந் தீவினையாகிய பரிசிலை உடையேன் .


பாடல் எண் : 4
சுடலைசேர் சுண்ண மெய்யர் சுரும்புஉண விரிந்த கொன்றைப்
படலைசேர் அலங்கல் மார்பர் பழனஞ்சேர் கழனித் தெங்கின்
மடலைநீர் கிழிய ஓடி அதன்இடை மணிகள் சிந்தும்
கெடிலவீ ரட்டம் மேய கிளர்சடை முடிய னாரே.

            பொழிப்புரை : மருத நிலத்தைச் சார்ந்த வயல்களுக்கு அருகே வளர்ந்த தென்னை மட்டைகள் பிளக்குமாறு மோதிப் பரவி அவற்றின் மேல் இரத்தினங்களைச் சிதறுகின்ற கெடில நதிக் கரையிலமைந்த அதிகை வீரட்டத்தில் விரும்பி உறையும் உயர் சடைமுடிப்பெருமான் சுடுகாட்டுச் சாம்பலைப் பூசிய உடம்பினராய் , வண்டுகள் மொய்க்குமாறு இதழ்கள் விரிந்த கொன்றைப்பூ மாலை சேர்ந்த மார்பினராய் உள்ளார் .


பாடல் எண் : 5
மந்திரம் உள்ளது ஆக மறிகடல் எழு நெய்யாக,
இந்திரன் வேள்வித் தீயில் எழுந்ததுஓர் கொழுந்தின் வண்ணம்
சிந்திர மாகநோக்கித் தெருட்டுவார் தெருட்டவந்து
கந்திரம் முரலும்சோலைக் கானல்அம் கெடிலத்தாரே.

            பொழிப்புரை : மந்தர மலையாகிய மந்திரத்தை உள்ளமைத்துக் கொண்டு கடலையே நெய்யாகக்கொண்டு இந்திரன் செய்த பாற்கடல் கடையும் வேள்வித் தீயின் கொழுந்தாக வெளிப்பட்ட விடத்தின் நீலநிறத்தைத் தம்மை நீலகண்டர் ஆக்கும் சித்திரத்திற்கு உரிய பொருளாகக் கருதித் தம்மால் அறிவுறுத்தப்படும் அடியவர்களுக்கு அறிவிப்பதற்காகப் பெருமான் இந்நிலவுலகிற்கு வந்து மேகங்கள் ஒலிக்கும் சோலைகளை உடைய நறுமணங் கமழும் கெடில நதிக்கரையினதாக அதிகை வீரட்டத்து உள்ளார் .


பாடல் எண் : 6
மைஞ்ஞலம் அனைய கண்ணாள் பங்கன்,மா மலையை ஓடி
மெய்ஞ்ஞரம்பு உதிரம் பில்க விசைதணிந்து அரக்கன் வீழ்ந்து
கைஞ்ஞரம்பு எழுவிக் கொண்டு காதலால் இனிது சொன்ன
கிஞ்ஞரம் கேட்டு உகந்தார், கெடிலவீ ரட்ட னாரே.

            பொழிப்புரை : அதிகை வீரட்டனார் மைக்கு அழகு தரும் , தமக்குத் தாமே நிகரான கண்களை உடைய பார்வதிபாகராகிய தமது கயிலைமலையை நோக்கி ஓடி அதனைப் பெயர்க்க முற்பட்டு உடம்பிலுள்ள நரம்புகளும் குருதியும் சிந்த , விழுந்து நசுங்கி வேகம் தணிந்து இராவணன் கை நரம்புகளையே வீணையின் நரம்புகளாக அமைத்து அவற்றை ஒலித்துக்கொண்டு அன்பூர இனிமையாகப் பாடிய பாடலைக் கேட்டு உகந்து அவனுக்கு அருளியவர் ஆவார் .

                                                            திருச்சிற்றம்பலம்4. 104   திருவதிகைவீரட்டானம்                திருவிருத்தம்
                                                திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
மாசுஇல்ஒள் வாள்போல் மறியும் மணிநீர்த் திரைத்தொகுதி
ஊசலை ஆடிஅங்கு ஒண்சிறை அன்னம் உறங்கல்உற்றால்
பாசறை நீலம் பருகிய வண்டுபண் பாடல்கண்டு
வீசுங் கெடில வடகரைத்தே, எந்தை வீரட்டமே.

            பொழிப்புரை : குற்றமற்ற ஒளிபொருந்திய வாள்போல ஏறி மடங்கும் , பளிங்கு போன்ற நீர் அலைகளின் தொகுதியாகிய ஊசலை ஆடி அங்கு ஒளி பொருந்திய சிறகுகளை உடைய அன்னம் உறங்கத் தொடங்கினால் பசிய இலைகளை உடைய கொடிகளில் உள்ள நீலமலர்களில் தேனைப் பருகி வண்டுகள் பண்ணினைப் பாடுதலைக் கேட்டுக் கெடிலநதி பரிசுப்பொருளாக மணி முதலியவற்றை அவற்றை நோக்கி வீசும் வடகரைக்கண் எம்பிரானுடைய அதிக வீரட்டம் உள்ளது .


பாடல் எண் : 2
பைங்கால் தவளை பறைகொட்டப் பாசிலை நீர்ப்படுகர்
அம்கால் குவளைமேல் ஆவி உயிர்ப்ப வருகுலவும்
செங்கால் குருகுஇவை சேரும் செறிகெடி லக்கரைத்தே
வெங்கால் குருசிலை வீரன் அருள்வைத்த வீரட்டமே.

            பொழிப்புரை : விரும்பத்தக்க அடிப்பகுதியை உடைய பொன்நிறமான மேருமலையாகிய வில்லினை உடைய வீரனாகிய சிவபெருமான் திரிபுரத்தை அழித்துத் தன் அருளை நிலைநாட்டிய அதிகை வீரட்டம் , பசிய கால்களை உடைய தவளைகள் பறை போல ஒலி செய்யப் பசிய இலைகளை உடைய நீர்தங்கும் பள்ளத்தில் அழகிய தண்டினை உடைய குவளை மலர்கள் மணம் வீச , அருகில் உலவும் சிவந்த கால்களை உடைய குருகுகள் குவளைமலர்களை அடையும் நீர் செறிந்த கெடிலநதியின் வடகரையில் உள்ளது .


பாடல் எண் : 3
அம்மலர்க் கண்ணியர் அஞ்சனம் செந்துவர் வாய்இளையார்
வெம்முலைச் சாந்தம் விலைபெறு மாலை எடுத்தவர்கள்
தம்மருங் குற்குஇரங் கார்தடந் தோள்மெலி யக்குடைவார்
விம்மு புனற்கெடி லக்கரைத் தேஎந்தை வீரட்டமே.

            பொழிப்புரை : அழகிய மலர் போன்ற மை எழுதிய கண்ணினராய்ச் சிவந்த பவளம் போன்ற வாயினை உடைய மகளிர் விரும்பத்தக்க முலைகளுக்குச் சந்தனமும் விலை மதிப்புடைய மாலைகளும் அணிந்தவராய் , தம் இடைக்கு இவை பாரமாகுமே என்ற இரக்கம் இல்லாதவராய்த் தம் பெரிய தோள்கள் நீந்துதலால் மெலிவு அடையும்படி நீராடுதலால் ஒலிக்கும் நீரை உடைய கெடிலநதியின் வடகரையில் உள்ளது எம்பிரானுடைய அதிகை வீரட்டம் .


பாடல் எண் : 4
மீன்உடைத் தண்புனல் வீரட்டரே, நும்மை வேண்டுகின்றது,
யான்உடைச் சில்குறை ஒன்றுஉளதால் நறும் தண்எருக்கின்
தேன்உடைக் கொன்றைச் சடைஉடைக் கங்கைத் திரைதவழும்
கூன்உடைத் திங்கள் குழவி எப்போதும் குறிக்கொண்மினே.

            பொழிப்புரை : மீன்களை உடைய குளிர்ந்த புனல் பாயும் அதிகையிலுள்ள வீரட்டரே ! உம்மை அடியேன் வேண்டுகின்ற சிறிய தேவை ஒன்று உள்ளது . குளிர்ந்த எருக்கம் பூ வொடு தேனை உடைய கொன்றைப் பூவை அணிந்த சடைக்கண் தேக்கி வைத்துள்ள கங்கையின் அலைகளில் தவழும் பிறைச் சந்திரனை எப்பொழுதும் கருத்தில் கொள்ளவேண்டும் . அப்பிறை கங்கைவெள்ளத்தில் முழுகிப் போகாதபடி கவனிக்கவேண்டும் .


பாடல் எண் : 5
ஆர்அட்டது ஏனும் இரந்துஉண்டு அகம்அக வன்திரிந்து
வேர்அட்ட நிற்பித் திடுகின்ற தால்,விரி நீர்பரவைச்
சூர்அட்ட வேலவன் தாதையைச் சூழ்வயல் ஆர்அதிகை
வீரட்டத் தானை விரும்பா அரும்பாவ வேதனையே.

            பொழிப்புரை : விரிந்த நீரை உடைய கடலில் சூரபதுமனை அழித்த வேலை ஏந்திய முருகனுடைய தந்தையாய் வயலால் சூழப்பட்ட அதிகை வீரட்டப் பெருமானைப் பண்டைப் பிறப்பில் வழிபட்டு உய்ய விரும்பாத கொடிய தீவினைப் பயனாகிய வேதனை இப்பிறப்பில் , வியர்வை சொட்டச் சொட்ட வீடு வீடாகத் திரிந்து யாவர் சமைத்த பொருளாயிருப்பினும் அதனைப் பிச்சை யேற்று உண்ணுமாறு செய்துள்ளது .


பாடல் எண் : 6
படர்பொன் சடையும், பகுவாய் அரவும், பனிமதியும்,
சுடலைப் பொடியும்எல் லாம்உள வே,அவர் தூயதெண்ணீர்க்
கெடிலக் கரைத்திரு வீரட்டர் ஆவர்கெட் டேன்அடைந்தார்
நடலைக்கு நல்துணை ஆகும்கண் டீர்அவர் நாமங்களே.

            பொழிப்புரை : அவர் தூய தெளிந்த நீரை உடைய கெடில நதியின் வடகரையில் அமைந்த அதிகைப் பதியின் வீரட்டராவர் . பரவின பொன் போன்ற ஒலியுடைய சடையும் , பிளந்த வாயை உடைய பாம்பும் , குளிர்ந்த பிறையும் சுடுகாட்டுச் சாம்பலும் எல்லாம் அவருக்கு அடையாளங்களாக உள்ளன . அவருடைய திருநாமங்கள் அவரை அடைக்கலமாக அடைந்தவர்களுடைய துன்பத்தைத் தீர்க்கும் பெரிய துணையாகும் . அவ்வாறாகவும் அறிவுகெட்ட அடியேன் அவரைத் தொடர்ந்து பற்றிக் கொள்ள முயலாமல் விட்டு ஒழிந்தேனே .


பாடல் எண் : 7
காளம் கடந்ததொர் கண்டத்தர் ஆகிக்கண் ணார்கெடில
நாளங் கடிக்கொர் நகரமும், மாதிற்கு நன்குஇசைந்த
தாளங்கள் கொண்டும், குழல்கொண்டும், யாழ்கொண்டும் தாம்அங்ஙனே
வேளங்கள் கொண்டும் விசும்புசெல் வார்அவர் வீரட்டரே.

            பொழிப்புரை : பார்வதியின் பொருட்டு விடத்தை இருத்திய நீலகண்டராகி , வானத்திலே உலவிச் செல்லும் திரிபுர அசுரரைத் திரிபுரத்தோடு அழித்த வீரத்தானத்தை உடைய பெருமானார் , நன்கு பொருந்திய தாளங்கள் , குழல் , யாழ் இவற்றைக் கொண்டு பாம்புகளைச் சூடி , காலையிலே விளக்கமாக உறைவதற்கு அதிகையாகிய ஒரு நகரமும் உடையராய் அவ்வாறே பாய்கால்களை உடைய கெடிலநதிக்கும் உரியவராவர் .

                                                            திருச்சிற்றம்பலம்

4. 010   திருவதிகை வீரட்டானம்    பண் - காந்தார பஞ்சமம்
திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
முளைக்கதிர் இளம்பிறை மூழ்க வெள்ளநீர்
வளைத்துஎழு சடையினர், மழலை வீணையர்,
திளைத்ததுஓர் மான்மறிக் கையர், செய்யபொன்
கிளைத்துஉழித் தோன்றிடும் கெடில வாணரே.

            பொழிப்புரை : மண்ணைத் தோண்டிய அளவிலே சிவந்த பொன் வெளிப்படும் கெடில நதிக்கரையில் உகந்தருளியிருக்கும் பெருமான் கிரணங்களை உடைய பிறை முழுகுமாறு கங்கை வெள்ளத்தைத் தேக்கிய நிமிர்ந்த சடையினராய் , இனிய வீணையை ஒலிப்பவராய் , மான்குட்டி மகிழ்ந்திருக்கும் கையினை உடையவராய் , அடியவர் கண்ணுக்குக் காட்சி வழங்குகிறார் .


பாடல் எண் : 2
ஏறினர் ஏறினை, ஏழை தன்ஒரு
கூறினர், கூறினர் வேதம் அங்கமும்
ஆறினர், ஆறுஇடு சடையர், பக்கமும்
கீறின உடையினர் கெடில வாணரே.

            பொழிப்புரை : கெடிலவாணர் காளைவாகனம் உடையவர் . பார்வதி பாகர் . நான்கு வேதமும் ஆறு அங்கங்களும் அடியார்களுக்கு உபதேசித்தவர் . கங்கை தங்கும் சடையினர் . பக்கத்திலும் கிழிந்த உடையைக் கொண்டவர் .


பாடல் எண் : 3
விடம்திகழ் கெழுதரு மிடற்றர், வெள்ளைநீறு
உடம்புஅழகு எழுதுவர், முழுதும் வெண்ணிலாப்
படர்ந்து,அழகு எழுதரு சடையில் பாய்புனல்
கிடந்துஅழகு எழுதிய கெடில வாணரே.

            பொழிப்புரை : முழுவதும் பிறையின் வெள்ளிய ஒளி பரவி , அழகாக நிமிர்ந்த சடையில் பாய்ந்த கங்கைப் புனல் தங்கி அழகுறுத்தும் கெடிலவாணர் , விடக்கறை தங்கி விளங்கும் நீலகண்டர் . வெண்ணீற்றை உடம்பில் அழகாக அணிந்தவர் .


பாடல் எண் : 4
விழுமணி அயில்எயிற்று அம்பு வெய்யதுஓர்
கொழுமணி நெடுவரை கொளுவிக் கோட்டினார்,
செழுமணி மிடற்றினர், செய்ய வெய்யதுஓர்
கெழுமணி அரவினர் கெடில வாணரே.

            பொழிப்புரை : கெடிலவாணர் விரும்பத்தக்க சிறந்த இரத்தினங்களை உடைய மேருமலையை , நாகரத்தினங்களையுடைய பாம்பினை நாணாக இணைத்துக் கூரிய பற்களை உடைய அம்புகளைச் செலுத்துவதற்காக வளைத்தார் . அவர் நீலகண்டர் . நிறத்தால் சிவந்த இரத்தினத்தை உடைய கொடிய நாகபாம்பை அணிகலனாக உடையவர் .


பாடல் எண் : 5
குழுவினர் தொழுதுஎழும் அடியர் மேல்வினை
தழுவின கழுவுவர், பவள மேனியர்,
மழுவினர், மான்மறிக் கையர், மங்கையைக்
கெழுவின யோகினர், கெடில வாணரே.

            பொழிப்புரை : கெடில வாணர் கூட்டமாய்த் தம்பக்கல் வந்து தம்மைத் தொழுது எழும் அடியவர்களுக்கு மேல்வரக்கடவ வினைகளைப் போக்குபவர் . பவளம் போன்ற செந்நிற மேனியை உடையவர் . மழுவையும் மான்குட்டியையும் ஏந்திய கையினர் . பார்வதி பாகராய் இருந்தே யோகத்தில் இருப்பவர் .

  
பாடல் எண் : 6
அங்கையில் அனல்எரி ஏந்தி, ஆறுஎனும்
மங்கையைச் சடைஇடை மணப்பர், மால்வரை
நங்கையைப் பாகமும் நயப்பர், தென்திசைக்
கெங்கைஅது எனப்படும் கெடில வாணரே.

            பொழிப்புரை : தென் திசையின் கங்கை என்று போற்றப்படும் கெடிலநதிக் கரையின் வீரட்டத்தில் உறையும் பெருமானார் உள்ளங்கையில் நெருப்பினை ஏந்தி , கங்கை என்னும் மங்கையைச் சடையில் சேர்த்தியவர் . பார்வதியைத் தம் திருமேனியின் ஒருபாகமாக விரும்புபவர் .


பாடல் எண் : 7
கழிந்தவர் தலைகலன் ஏந்தி, காடுஉறைந்து,
இழிந்தவர் ஒருவர்என்று எள்க வாழ்பவர்,
வழிந்துஇழி மதுகரம் மிழற்ற, மந்திகள்
கிழிந்ததேன் நுகர்தரும் கெடில வாணரே.

            பொழிப்புரை : தேன் கூடு கிழிந்ததால் வழிந்த தேனோடு கீழே இறங்கும் வண்டுகள் ஒலிக்க ஒழுகும் தேனைப் பெண் குரங்குகள் நுகரும் கெடிலவாணர் இறந்தவர்களின் மண்டை ஓட்டினை உண்கலனாக ஏந்திச் சுடுகாட்டில் தங்கிக் கீழ் நிலையில் உள்ளவர் என்று அறிவிலிகள் பரிகசிக்குமாறு வாழ்பவர் .


பாடல் எண் : 8
கிடந்தபாம்பு அருகுகண்டு அரிவை பேதுஉற,
கிடந்தபாம்பு அவளைஓர் மயில்என்று ஐயுற,
கிடந்தநீர்ச் சடைமிசைப் பிறையும் ஏங்கவே
கிடந்துதான் நகுதலைக் கெடில வாணரே.

            பொழிப்புரை : பெருமான் திருமார்பில் கிடந்த பாம்பினைத் தன் அருகில் கண்டு பார்வதி மயங்க , அப்பாம்பு அவளை மயிலோ என்று ஐயப்பட , கங்கை தங்கிய சடைமேல் உள்ள பிறையும் பாம்பினைக் கண்டு மனம் வருந்த , இவற்றை எல்லாம் கண்டு சிரிக்கும் மண்டை ஓட்டினைக் கையில் கொண்டவர் கெடில வாணராவர் .


பாடல் எண் : 9
வெறிஉறு விரிசடை புரள வீசி,ஓர்
பொறிஉறு புலிஉரி அரையது ஆகவும்,
நெறிஉறு குழல்உமை பாகம் ஆகவும்
கிறிபட உழிதர்வர் கெடில வாணரே.

            பொழிப்புரை : கெடில வாணர் நறுமணம் கமழ்கின்ற விரிந்த சடை புரளுமாறு தலையை அசைத்து , புள்ளிகளை உடைய புலித்தோலை இடையில் அணிந்து , சுருண்ட கூந்தலை உடைய உமாதேவி தம்திருமேனியில் ஒருபாகமாக இருக்கத் தந்திரமாக மாயக் கூத்தாடுவர் .


பாடல் எண் : 10
பூண்டதேர் அரக்கனைப் பொருவின் மால்வரைத்
தூண்டுதோள் அவைபட அடர்த்த தாளினார்,
ஈண்டுநீர்க் கமலவாய் மேதி பாய்தரக்
கீண்டுதேன் சொரிதரும் கெடில வாணரே.

            பொழிப்புரை : பெருக்கெடுத்தோடும் நீர்நிலையில் மலர்ந்திருக்கும் தாமரைப் பூவின் பக்கம் எருமை பாய்தலால் தாமரை இதழ் கிழியத் தேன் வெளிப்படுகின்ற கெடிலவாணர் புட்பக விமானத்தைச் செலுத்தி வந்த இராவணனை ஒப்பற்ற மேம்பட்ட கயிலைமலையைப் பெயர்க்கமுற்பட்ட தோள்கள் நசுங்குமாறு வருத்திய திருவடியை உடையவர் .

                                                            திருச்சிற்றம்பலம்5.053    திருஅதிகைவீரட்டம்           திருக்குறுந்தொகை
                                                திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
கோணல் மாமதி சூடிஓர் கோவணம்
நாண்இல் வாழ்க்கை நயந்தும் பயன்இலை,
பாணில் வீணை பயின்றவன் வீரட்டம்
காணில் அல்லதுஎன் கண்துயில் கொள்ளுமே.

            பொழிப்புரை : வளைந்த பிறைமதி சூடி , கோவணம் அணிந்து விரும்பியும் பயனற்ற நாணமில்லாத வாழ்க்கை உடையவரேனும் , வீணையிற் பாடல் பயின்ற சிவபெருமான் உறையும் திருவதிகை வீரட்டத்தைக் கண்டு தொழுதபின்னல்லது என் கண்கள் உறக்கம் கொள்ளுமோ ?


பாடல் எண் : 2
பண்ணி னை,பவ ளத்திரள் மாமணி,
அண்ண லை,அம ரர்தொழும் ஆதியை,
சுண்ண வெண்பொடி யான்திரு வீரட்டம்
நண்ணில் அல்லதுஎன் கண்துயில் கொள்ளுமே.

            பொழிப்புரை : பண்வடிவானவரும் , பவளத்தொகுதி போன்ற மாமணி மேனியுடைய அண்ணலும், தேவர்கள் தொழும் முதல்வரும் , திருநீற்றுப்பொடியணிந்தவரும் ஆகிய பெருமான் உறையும் திருவதிகைவீரட்டத்தை நண்ணினாலல்லது என் கண்கள் உறக்கம் கொள்ளுமோ ?


பாடல் எண் : 3
உற்ற வர்தம் உறுநோய் களைபவர்,
பெற்றம் ஏறும் பிறங்கு சடையினர்,
சுற்றும் பாய்புனல் சூழ்திரு வீரட்டம்
கற்கில் அல்லதுஎன் கண்துயில் கொள்ளுமே.

            பொழிப்புரை : தம்மைப் பற்றுக்கோடாக அடைந்தவரது மிக்க துயரங்களைக் களைபவரும் , இடபம் ஏறுபவரும் , விளங்கும் சடையுடையவரும் ஆகிய பெருமான் உறைகின்ற பாயும் கெடில நீர்சுற்றிச் சூழ்கின்ற திருவதிகைவீரட்டத்தைக் கற்ற பின்னல்லது என் கண்கள் உறக்கம் கொள்ளுமோ?


பாடல் எண் : 4
முற்றா வெண்மதி சூடும் முதல்வனார்,
செற்றார் வாழும் திரிபுரம் தீஎழ,
வில்தான் கொண்டுஎயில் எய்தவர் வீரட்டம்
கற்றால் அல்லதுஎன் கண்துயில் கொள்ளுமே.

            பொழிப்புரை : முதிராத வெள்ளிய பிறையினைச் சூடும் முதல்வரும் , சினக்கப்பட்டார் வாழும் மூன்று புரங்கள் தீயெழுமாறு மேருமலையாகிய வில்லைத் தாம் கொண்டு எய்தவரும் ஆகிய பெருமான் உறையும் திருவதிகைவீரட்டத்தைக் கற்றால் அல்லது என் கண்கள் உறக்கம் கொள்ளுமோ ?


பாடல் எண் : 5
பல்லா ரும்பல தேவர் பணிபவர்
நல்லா ருந்நயந்து ஏத்தப் படுபவன்
வில்லால் மூஎயில் எய்தவன் வீரட்டம்
கல்லேன் ஆகில்என் கண்துயில் கொள்ளுமே.

            பொழிப்புரை : பலவகைப்பட்ட தேவர்களாலும் பணியப்படுபவரும் , நல்லார்களாலும் விரும்பிப் பரவப்படுபவரும், வில்லால் மூவெயில்களை எய்தவரும் ஆகிய பெருமான் உறையும் திருவதிகை வீரட்டத்தைக் கல்லேனாகில் என் கண்கள் உறக்கம் கொள்ளுமோ ?


பாடல் எண் : 6
வண்டுஆர் கொன்றையும், மத்தம் வளர்சடைக்
கொண்டான், கோல மதியோடு அரவமும்,
விண்டார் மும்மதில் எய்தவன் வீரட்டம்
கண்டால் அல்லதுஎன் கண்துயில் கொள்ளுமே.

            பொழிப்புரை : வண்டுகள் பொருந்திய கொன்றையும் , ஊமத்த மலரும் , பிறையும் , அரவமும் அழகு வளரும் தம் சடையிற் கொண்டவரும் , பகைவரது மும்மதில்களை எய்தவரும் ஆகிய பெருமான் உறையும் திருவதிகைவீரட்டத்தைக் கண்டபின்னல்லது என் கண்கள் உறக்கம் கொள்ளுமோ ?


பாடல் எண் : 7
அரைஆர் கோவண ஆடையன் ஆறுஎலாம்
திரைஆர் ஒண்புனல் பாய்கெடி லக்கரை
விரைஆர் நீற்றன் விளங்குவீ ரட்டன்பால்
கரையேன் ஆகில்என் கண்துயில் கொள்ளுமே.

            பொழிப்புரை : இடுப்பிற் பொருந்திய கோவண ஆடையரும் , வழியெல்லாம் அலையெறியும் ஒள்ளிய நீர் பாய்கின்ற கெடிலக் கரையில் விளங்கும் நறுமணமுடைய திருநீற்றுப்பூச்சினரும் ஆகிய பெருமான் உறையும் திருவதிகைவீரட்டத்தைப் பாடேனாயின் என் கண்கள் உறக்கம் கொள்ளுமோ ?


பாடல் எண் : 8
நீறு உடைத்தடம் தோள்உடை நின்மலன்
ஆறு உடைப்புனல் பாய்கெடி லக்கரை
ஏறு உடைக்கொடி யான்திரு வீரட்டம்
கூறில் அல்லதுஎன் கண்துயில் கொள்ளுமே.

            பொழிப்புரை : திருநீறு அணிந்த பெருந்தோளராகிய மலமற்ற வரும் , இடபக்கொடியுடையாரும் ஆகிய பெருமான் உறைவதும் புனல் பாய்கின்ற கெடில ஆற்றினுடைய கரையில் உள்ளதுமாகிய திருவதிகைவீரட்டத்தைக் கூறினாலல்லது என் கண்கள் உறக்கம் கொள்ளுமோ ?


பாடல் எண் : 9
செங்கண் மால்விடை ஏறிய செல்வனார்,
பைங்கண் ஆனையின் ஈர்உரி போர்த்தவர்,
அங்கண் ஞாலம் அதுஆகிய வீரட்டம்
கங்குல் ஆகஎன் கண்துயில் கொள்ளுமே.

            பொழிப்புரை : சிவந்த கண்ணை உடைய திருமாலாகிய விடையேறிய திருவருட்செல்வரும் , பசிய கண்ணை உடைய ஆனையின் பச்சைத் தோலை உரித்துப் போர்த்தருளியவரும் , அழகிய இடமகன்ற உலகமுழுதானவருமாகிய பெருமான் உறையும் திருவதிகை வீரட்டத்தைக் ( காணேனாயின் ) என் கண்கள் இரவாயினும் ஆக , உறக்கம் கொள்ளுமோ ?

பாடல் எண் : 10
பூண்நாண் ஆரம் பொருந்த உடையவர்,
நாணா கவ்வரை வில்லிடை அம்பினால்
பேணார் மும்மதில் எய்தவன் வீரட்டம்
காணேன் ஆகில்என் கண்துயில் கொள்ளுமே.

            பொழிப்புரை : பூண் , நாண் , மாலை முதலியவற்றைப் பொருந்த உடையவரும் , அழகிய மேருமலையாகிய வில்லிடை நாணுடன் கூடிய அம்பினால் , பகைவர் மும்மதில்களை எய்தவர் உறையும் திருவதிகை வீரட்டத்தைக் காணேனாகில் என் கண்கள் உறக்கம் கொள்ளுமோ ?


பாடல் எண் : 11
வரைஆர்ந் தவயி ரத்திரள் மாணிக்கம்,
திரைஆர்ந் தபுனல் பாய்கெடி லக்கரை
விரைஆர் நீற்றன் விளங்கிய வீரட்டம்
உரையேன் ஆகில்என் கண்துயில் கொள்ளுமே.

            பொழிப்புரை : மலைகளில் நிறைந்த வயிரத்தின் தொகுதியும் , மாணிக்கமும் ஆகியவற்றைக்கொண்டு அலையார்ந்த புனல் பாய்கின்ற கெடிலக்கரையில் உள்ளதும் , நறுமணமிக்க திருநீற்றினையணிந்த இறைவன் விளங்குவதுமாகிய திருவதிகை வீரட்டத்தை உரையேனாகில் என் கண்கள் உறக்கம் கொள்ளுமோ?


பாடல் எண் : 12
உலந்தார் வெண்தலை உண்கலன் ஆகவே
வலந்தான் மிக்கஅவ் வாளரக் கன்தனைச்
சிலம்புஆர் சேவடி ஊன்றினான் வீரட்டம்
புலம்பேன் ஆகில்என் கண்துயில் கொள்ளுமே.

            பொழிப்புரை : இறந்தவர்களது ( வாழ்நாள் உலந்தார் ) வெள்ளிய தலைகளை உண்கலனாகக்கொண்டு , வெற்றிமிக்க அவ்வாளரக் கனாகிய இராவணனைச் சிலம்பணிந்த திருவடி விரலால் ஊன்றிய பெருமான் உறையும் திருவதிகைவீரட்டத்தைப் புலம்பிப் பாடேனாயின் என் கண்கள் உறக்கம் கொள்ளுமோ ?

                                                            திருச்சிற்றம்பலம்


5. 054  திருஅதிகை வீரட்டம்   திருக்குறுந்தொகை
                                    திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
எட்டு நாண்மலர் கொண்டுஅவன் சேவடி
மட்டுஅலர் இடு வார்வினை மாயுமால்
கட்டித் தேன்கலந்து அன்ன கெடிலவீ
ரட்ட னார்அடி சேரும் அவருக்கே.

            பொழிப்புரை : கன்னற்கட்டியும் தேனும் கலந்ததைப் போன்று இனிக்கும் கெடிலவீரட்டனார் சேவடி சேர்பவராய் , எட்டுவகைப்பட்ட நாண்மலர்களாகிய தேனவிழும் மலர்களை இட்டு வழிபடுவார் வினைகள் மாயும் .

            குறிப்புரை : எட்டு நாண்மலர் - அஷ்ட புஷ்பங்கள் எனப்படும் எண் வகைப் புதிய மலர்கள். அவையாவன :- புன்னை , வெள்ளெருக்கு , சண்பகம் , நந்தியாவர்த்தம் , பாதிரி , குவளை , அலரி, செந்தாமரை ஆகிய பூக்கள் போல விரும்பத்தக்க எண்குணங்கள் எனலுமாம்.  அகப்பூசைக்குரிய அட்டபுட்பங்கள் - கொல்லாமை, ஐம்பொறியடக்கம், பொறை, அருள், அறிவு, வாய்மை, தவம், அன்பு என்னும் நலஞ் சிறந்தார் மனத் தகத்து மலர்கள் எட்டும். இதனைத் தண்டகம் என்பர்.


பாடல் எண் : 2
நீள மாநினைந்து எண்மலர் இட்டவர்
கோள வல்வினை யும்குறை விப்பரால்
வாளம் மால்இழி யுங்கெடி லக்கரை
வேளி சூழ்ந்த அழ காயவீ ரட்டரே.

            பொழிப்புரை : வட்டமாகவும் , பெரிதாகவும் ஓடுகின்ற கெடில நதிக்கரை வேலிபோல் சூழ்ந்த வீரட்டத்திறைவர் , தம்மை இடை விடாது நினைந்து எண்வகை மலர்களால் வழிபடுபவர்களின் கொடிய வல்வினையை நீக்குவர் .


பாடல் எண் : 3
கள்ளின் நாண்மலர் ஓர்இரு நான்குகொண்டு
உள்கு வார்அவர் வல்வினை ஓட்டுவார்
தெள்ளு நீர்வயல் பாய்கெடி லக்கரை
வெள்ளை நீறுஅணி மேனிவீ ரட்டரே.

            பொழிப்புரை : தெள்ளிய நீர்வயலிற் பாய்கின்ற கெடிலக்கரையில் உள்ள திருவதிகை வீரட்டத்தில் எழுந்தருளியிருப்பவராகிய வெண்ணீறணிந்த திருமேனி உடைய பெருமான் , தேன் ஒழுகுகின்ற புதிய எட்டு மலர்களைக் கொண்டு அருச்சித்துத் தம்மை உள்குவார்களுடைய வல்வினைகளை ஓட்டுவார் .


பாடல் எண் : 4
பூங்கொத்து ஆயின மூன்றொடு ஓர்ஐந்துஇட்டு
வாங்கி நின்றவர் வல்வினை ஓட்டுவார்,
வீங்கு தண்புனல் பாய்கெடி லக்கரை
வேங்கைத் தோல்உடை ஆடைவீ ரட்டரே.

            பொழிப்புரை : செறிந்த குளிர்நீர் பாய்கின்ற கெடிலக்கரையில் உள்ள திருவதிகைவீரட்டத்தில் எழுந்தருளியிருப்பவராகிய புலித்தோலை ஆடையாக உடுத்த பெருமானே , எட்டுவகைப்பட்ட பூங்கொத்துக்களை இட்டு வணங்கிநிற்கும் அடியார்களுடைய வல் வினைகளை ஓட்டுவார்.


பாடல் எண் : 5
தேன்அப் போதுகள் மூன்றொடு ஓர்ஐந்துஉடன்
தான்அப் போதுஇடு வார்வினை தீர்ப்பவர்,
மீனத் தண்புனல் பாய்கெடி லக்கரை
வேனல் ஆனை உரித்தவீ ரட்டரே.

            பொழிப்புரை : மீன்களை உடைய குளிர்புனல் பாய்கின்ற கெடிலக் கரையில் உள்ள திருவதிகைவீரட்டத்தில் எழுந்தருளியிருப்பவரும் , ஆனை உரித்தவருமாகிய பெருமான் , தேன் உடைய அழகிய போதுகளாகிய எட்டுவகைப்பட்ட மணமலர்களை இட்டு வணங்குவார் வினைகளைத் தீர்ப்பவர் ஆவர் .


பாடல் எண் : 6
ஏழித் தொன்மலர் கொண்டு பணிந்தவர்
ஊழித் தொல்வினை ஓட அகற்றுவார்,
பாழித் தண்புனல் பாய்கெடி லக்கரை
வேழத் தின்உரி போர்த்தவீ ரட்டரே.

            பொழிப்புரை : வன்மை உடையதாகிய குளிர்புனல் பாய்கின்ற கெடிலக்கரையில் உள்ள திருவதிகைவீரட்டத்தில் எழுந்தருளியிருப்பவரும் , வேழத்தின் உரியைப் போர்த்தவருமாகிய பெருமானே , இதழி ( ஏழி ) யாகிய கொன்றை மலர்களைக் கொண்டு பணிந்த அடியார்களுடைய ஊழியாகத் தொடர்ந்துவரும் பழைய வினைகள் ஓடும்படி நீக்குவார் .


பாடல் எண் : 7
உரைசெய் நூல்வழி ஒண்மலர் எட்டுஇடத்
திரைகள் போல்வரு வல்வினை தீர்ப்பரால்
வரைகள் வந்துஇழி யுங்கெடி லக்கரை
விரைகள் சூழ்ந்தஅழ காயவீ ரட்டரே.

            பொழிப்புரை : மலைகளினின்று வந்து இழிவதாகிய கெடில நதியின் கரையில் உள்ளதும் , நறுமணஞ் சூழ்ந்து எழில் பெற்றதுமாகிய திருவதிகைவீரட்டத்தில் எழுந்தருளியிருக்கும் பெருமானே , ஆகம நூல்கள் உரைக்கின்ற நெறியின்படி எட்டு வகைப்பட்ட ஒளியுடைய மலர்களை இட்டு வணங்கும் அடியார்களின் அலைகள்போல் வருகின்ற வல்வினைகளைத் தீர்ப்பவர் ஆவர் .


பாடல் எண் : 8
ஓலி வண்டுஅறை ஒண்மலர் எட்டினால்
காலை ஏத்த வினையைக் கழிப்பரால்,
ஆலி வந்துஇழி யும்கெடி லக்கரை
வேலி சூழ்ந்தஅழ காயவீ ரட்டரே.

            பொழிப்புரை : மழைநீர் வந்து இழிகின்ற கெடில நதியின் கரையில் உள்ளதும் , வேலிகள் சூழ்ந்து எழில் உடையதுமாகிய திருவதிகை வீரட்டத்தில் எழுந்தருளியிருக்கும் பெருமானே , ஓலமிடும் வண்டுகள் ஒலிக்கும் எட்டுவகைப்பட்ட மலர்களால் தம்மைக் காலத்தேவந்து வழிபடுவார்களின் வினையைத் தீர்ப்பவர் .


பாடல் எண் : 9
தாரித்து உள்ளித் தடமலர் எட்டினால்
பாரித்து ஏத்தவல் லார்வினை பாற்றுவார்
மூரித் தெண்திரை பாய்கெடி லக்கரை
வேரிச் செஞ்சடை வேய்ந்தவீ ரட்டரே.

            பொழிப்புரை : வலிமை உடையதாய்த் தெளிந்துவரும் அலைகளை உடையதாய்ப் பாய்கின்ற கெடிலநதியின் கரையின்கண் உள்ள வீரட்டத்தில் எழுந்தருளியுள்ள மணம் வீசும் செஞ்சடையை நன்கு கட்டிய பெருமான் , மனத்தே இறைவன் திருவுருவைத்தாங்கிச் சிந்தித்து எட்டு வகைப்பட்ட மலர்களால் ஏத்தும் வல்லமை உடைய அடியார்களின் வினைகளைக் கெடுப்பார் .


பாடல் எண் : 10
அட்ட புட்பம் அவைகொளு மாறுகொண்டு
அட்ட மூர்த்தி அனாதிதன் பால்அணைந்து
அட்டு மாறுசெய் கிற்ப, அதிகைவீ
ரட்ட னார்அடி சேரும் அவர்களே.

            பொழிப்புரை : திருவதிகை வீரட்டனார் திருவடி சேரும் அடியார்கள் , அட்டபுட்பங்களை விதி முறைப்படி கொண்டு அட்ட மூர்த்தியும் , ஆதியற்றவரும் ஆகிய பெருமானின்பால் அணைந்து பொருந்துமாறு வழிபாடு செய்யும் திறம் உடையவர் ஆவர் .

            குறிப்புரை : அட்டபுஷ்பம் - எட்டுமலர்கள். அவைகொளுமாறு - பூக்களை எடுக்கும் விதிமுறைப்படி எடுத்து. அட்டமூர்த்தி - எட்டு வடிவினனாகிய இறைவன். அனாதி - ஆதியற்றவன். அட்டுமாறு செய்கிற்ப - இறைவனைச் சூடுமாறு செய்வார்கள். அடிச்சேருமவர்கள் செய்கிற்ப என்க.
           
                                                திருச்சிற்றம்பலம்


6.004     திரு அதிகை வீரட்டானம்  திருத்தாண்டகம்
                                                திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
சந்திரனை மாகங்கை திரையால் மோதச்
            சடாமகுடத்து இருத்துமே, சாம வேதம்
கந்தருவம் விரும்புமே, கபால மேந்து
            கையனே, மெய்யனே, கனக மேனிப்
பந்தணவு மெல்விரலாள் பாகன் ஆமே,
            பசுஏறு மே,பரம யோகி ஆமே,
ஐந்தலைய மாசுணம்கொண்டு அரைஆர்க் கும்மே,
            அவன்ஆகில் அதிகைவீ ரட்டன் ஆமே.

            பொழிப்புரை :சந்திரனைப் பெரிய கங்கை தன் அலைகளால் மோதுமாறு சடை முடியில் வைத்துள்ளான் . சாமவேதமாகிய இசையை விரும்புபவன் . மண்டையோட்டை ஏந்திய கையினன் . பொன்னார் மேனியில் , மெல்லிய விரலில் பந்தினை ஏந்திய பார்வதி பாகன் . காளையை வாகனமாக உடையவன் . மேம்பட்டயோகி . ஐந்தலைப் பாம்பினை இடையில் இறுக்கிக் கட்டியவன் ஆகிய இத்தகைய செயல்களையும் பண்புகளையும் உடைய பெருமான் திருவதிகை வீரட்டானத்தை உகந்தருளியிருப்பவனே .


பாடல் எண் : 2
ஏறுஏறி ஏழ்உலகும் உழிதர் வானே,
            இமையவர்கள் தொழுதுஏத்த இருக்கின் றானே,
பாறுஏறு படுதலையில் பலிகொள் வானே,
            படஅரவம் தடமார்பில் பயில்வித் தானே,
நீறுஏறு செழும்பவளக் குன்றுஒப் பானே,
            நெற்றிமேல் ஒற்றைக்கண் நிறைவித் தானே,
ஆறுஏறு சடைமுடிமேல் பிறைவைத் தானே,
            அவன்ஆகில் அதிகைவீ ரட்ட ன்ஆமே.

            பொழிப்புரை :காளை மீது ஏறி ஏழுலகமும் சுற்றி வருபவன். தேவர்கள் தொழுது துதிக்குமாறு இருக்கின்றவன். பருந்துகள் படியும் , மண்டையோட்டில் பிச்சை எடுப்பவன். தன் பெரிய மார்பில் படமெடுக்கும் பாம்பு ஊரப்பெற்றவன். நீறு படிந்த செழுமையான பவள மலையை ஒத்த வடிவினன். நெற்றியில் அமைந்த கண் ஒன்று உடையவன். கங்கை தங்கிய சடைமுடிமேல் பிறையைச் சூடியவன். இத்தகைய பெருமான் அதிகை வீரட்டனாவான்.


பாடல் எண் : 3
முண்டத்தில் பொலிந்துஇலங்கு மேனி யானே,
            முதல்ஆகி நடுஆகி முடிவா ஆனானே,
கண்டத்தில் வெண்மருப்பின் காறை யானே,
            கதநாகம் கொண்டுஆடும் காட்சி யானே,
பிண்டத்தின் இயற்கைக்குஓர் பெற்றி யானே,
            பெருநிலநீர் தீவளிஆ காசம் ஆகி
அண்டத்துக்கு அப்பாலாய் இப்பா லானே,
            அவன்ஆகில் அதிகைவீ ரட்டண் ஆமே.

            பொழிப்புரை :இறந்த பிரமர்களின் தலைமாலையால் பொலிவு பெற்று விளங்கும் திருமேனியினன் . உலகில்தோற்றம் நிலை இறுதிகளைச் செய்பவன் . கழுத்தில் மகா வராகத்தின் கொம்பினை அணிகலனாக அணிந்தவன் . கோபத்தை உடைய பாம்பினைக் கையில் கொண்டு கூத்தாடிக் காட்சி வழங்குபவன் . இவ்வுடம்பின் காரணங்களாய் உள்ள தத்துவங்களுக்குச் சார்பாய் உள்ளவன் . ஐம்பெரும் பூதங்களாய் அண்டங்களின் புறமும் உள்ளும் இருப்பவன் . அத்தகைய பெருமான் அதிகை வீரட்டனாவான் .


பாடல் எண் : 4
செய்யனே, கரியனே கண்டம், பைங்கண்
            வெள்எயிற்று ஆடுஅரவனே, வினைகள் போக
வெய்யனே, தண்கொன்றை மிலைத்த சென்னிச்
            சடையனே, விளங்குமழுச் சூலம் ஏந்தும்
கையனே, காலங்கள் மூன்று ஆனானே,
            கருப்புவில் தனிக்கொடும்பூண் காமன் காய்ந்த
ஐயனே, பருத்துஉயர்ந்த ஆன்ஏற் றானே,
            அவன்ஆகில் அதிகைவீ ரட்டன் ஆமே.

            பொழிப்புரை :நிறத்தால் செய்யவன் . கண்டம் கறுத்தவன் . பசிய கண்களையும் வெளிய பற்களையும் உடையவாய்ப் படமெடுத்தாடும் பாம்புகளை அணிந்தவன் . அடியார்களுடைய வினைகள் நீங்குமாறு அவற்றிற்குப் பகைவனாக உள்ளவன் . குளிர்ந்த கொன்றை சூடிய சடையினன் . சூலத்தைத் தாங்கும் கையினன் . முக்காலங்களாகவும் உள்ளவன் . கரும்பு வில்லினை ஒப்பற்ற வளைந்த அணிகலன் போலக் கைக்கொண்ட மன்மதனைக் கோபித்த தலைவன் . உயரமும் பருமையும் உடைய காளைவாகனன் . இத்தகைய சிறப்பினை உடையவன் அதிகை வீரட்டானத்துப் பெருமானே .


பாடல் எண் : 5
பாடுமே ஒழியாமே நால்வே தம்மும்,
            படர்சடைமேல் ஒளிதிகழப் பனிவெண் திங்கள்
சூடுமே, அரைதிகழத் தோலும் பாம்பும்
            சுற்றுமே, தொண்டைவாய் உமைஓர் பாகம்
கூடுமே, குடமுழவம் வீணை தாளம்
            குறுநடைய சிறுபூதம் முழக்க மாக்கூத்து
ஆடுமே, அம்தடக்கை அனல்ஏந் தும்மே,
            அவன்ஆகில் அதிகைவீ ரட்டன் ஆமே.

            பொழிப்புரை :இடைவிடாமல் நால்வேதமும் பாடும் இயல்பினன் . பரவிய உடையின் மீது ஒளி சிறக்குமாறு குளிர்ந்த வெள்ளிய பிறையைச் சூடியவன் . தன் இடையில் விளங்குமாறு புலித்தோலையும் பாம்பினையும் சுற்றியிருப்பவன் . கொவ்வைக் கனி போன்ற சிவந்த வாயினை உடைய உமாதேவியைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டவன் . குறுக அடியிடும் நடையினை உடைய பூதங்கள் குடமுழா , வீணை , தாளம் இவற்றை ஒலிக்குமாறு , ஐந்தொழில்களையும் செய்யும் மேம்பட்ட கூத்தினை ஆடுபவன் . அழகிய நீண்ட கையொன்றில் தீயை ஏந்துபவன். அத்தகைய பெருமான் திருவதிகை வீரட்டனே.

  
பாடல் எண் : 6
ஒழித்திடுமே உள்குவார் உள்ளத்து உள்ள
            உறுபிணியும், செறுபகையும், ஒற்றைக் கண்ணால்
விழித்திடுமே காமனையும் பொடியாய் வீழ,
            வெள்ளப் புனல்கங்கை செஞ்ச டைமேல்
இழித்திடுமே, ஏழ்உலகும் தான் ஆகும்மே
            இயங்கும் திரிபுரங்கள் ஓர்அம் பினால்
அழித்திடுமே, ஆதிமா தவத்து உளானே,
            அவன்ஆகில் அதிகைவீ ரட்டன் ஆமே.

            பொழிப்புரை :தன்னையே தியானிப்பவருடைய உள்ளத்தில் மிக்க நோயையும் அவர்களைத் தாக்கும் உட்பகைகளாகிய காமம் முதலிய ஆறனையும் அடியோடு நீக்குபவன் . தனித்திருக்கும் நெற்றிக் கண்ணால் மன்மதன் சாம்பலாகி விழுமாறு நோக்கியவன் . நீர் வெண்மையாகிய கங்கையைத் தன் செந்நிறச் சடையில் இறங்கித் தங்குமாறு செய்தவன் . ஏழுலக இயக்கத்திற்கும் தானே காரணமாகியவன் . வானில் உலாவிய முப்புரங்களையும் ஓர் அம்பினால் அழித்தவன் . பண்டு தொட்டு மேம்பட்ட தவத்தைச் செய்பவனாய்த் தன் அடியவர்களுக்குத் தவம் செய்ய வழிகாட்டி ஆகியவன் அத்தகைய பெருமான் அதிகை வீரட்டத்தானே .


பாடல் எண் : 7
குழலோடு கொக்கரைகைத் தாளம் மொந்தை
            குறள்பூதம் முன்பாடத் தான்ஆ டும்மே,
கழல்ஆடு திருவிரலால் கரணஞ் செய்து,
            கனவின்கண் திருவுருவம் தான்காட் டும்மே,
எழில்ஆரும் தோள்வீசி நடம் ஆடும்மே,
            ஈமப்பு றங்காட்டில் ஏமம் தோறும்
அழல்ஆடு மே,அட்ட மூர்த்தி ஆமே,
            அவன்ஆகில் அதிகைவீ ரட்டன் ஆமே.

            பொழிப்புரை :குழல் , கொக்கரை , மொந்தை முதலிய இயங்களை இயக்கிக் கைத்தாளமிட்டுக் குட்டையான பூதங்கள் பாட அப் பாடலுக்கு ஏற்பத் தான் ஆடுபவன் . திருவடிகளிலே அசைகின்ற திரு விரல்களால் உயிர்களின் நுண்ணுடம்புகளை அசைத்துச் செயற்படுத்தி , அடியார்களுடைய கனவிலே தன் திருவுருவை அவர்களுக்குக் காட்டுபவன் . அழகு நிரம்பிய தோள்களை விரைவாக அசைத்துக் கூத்தாடுபவன் . ஊருக்குப் புறத்தே உள்ள சுடுகாட்டில் இரவு தோறும் நெருப்பின்கண் நின்று ஆடுபவன் . எட்டு உரு உடையவன் . அத்தகைய பெருமான் அதிகை வீரட்டனே .


பாடல் எண் : 8
மால்ஆகி மதம்மிக்க களிறு தன்னை
            வதைசெய்து, மற்றுஅதனின் உரிவை கொண்டு
மேலாலும் கீழாலும் தோன்றா வண்ணம்
            வெம்புலால் கைகலக்க மெய்போர்த் தானே,
கோலாலம் படவரைநட்டு அரவு சுற்றிக்
            குரைகடலைத் திரைஅலறக் கடைந்து கொண்ட
ஆலாலம் உண்டுஇருண்ட கண்டத் தானே,
            அவன்ஆகில் அதிகைவீ ரட்டன் ஆமே.

            பொழிப்புரை :மதம் மிகுதலானே மயக்கம் கொண்ட ஆண் யானையைக் கொன்று அதன் தோலினைத் தனியே உரித்துத் தன் திருமேனியை முழுதுமாக அது மறைக்குமாறு உதிரப் பசுமை கெடாது உடம்பில் போர்த்தவன் . ஆரவாரம் ஏற்பட மந்தரமலையை மத்தாக நட்டு வாசுகியைக் கடைகயிறாகச் சுற்றி ஒலிக்கின்ற கடலை அதன் அலைகள் ஒலிக்குமாறு கடைந்ததனால் ஏற்பட்ட பெரிய விடத்தை உட்கொண்டு இருண்ட கழுத்தினன். அத்தகைய பெருமான் அதிகை வீரட்டனே.


பாடல் எண் : 9
செம்பொனால் செய்துஅழகு பெய்தால் போலும்
            செஞ்சடைஎம் பெருமானே, தெய்வம் நாறும்
வம்பின்நாள் மலர்க்கூந்தல் உமையாள் காதல்
            மணவாள னே,வலங்கை மழுவா ளனே,
நம்பனே, நான்மறைகள் தொழநின் றானே,
            நடுங்காதார் புரம்மூன்றும் நடுங்கச் செற்ற
அம்பனே, அண்டகோ சரத்து உளானே
            அவன்ஆகில் அதிகைவீ ரட்டன் ஆமே.

            பொழிப்புரை :செம்பொன்னாற் செய்து அதன் கண் அழகினை ஊட்டினாற்போல இயற்கையாக அமைத்த செஞ்சடைப் பெருமான், இயற்கையான தெய்வ மணம் கமழும் தன்மையோடு மலர்களையும் அணியும் கூந்தலை உடைய உமாதேவியினுடைய காதலுக்கு இருப்பிடமான கணவன். வலக்கையில் மழுப்படையை உடையவன். நம்மால் விரும்பப்படுபவன். நான்கு வேதங்களும் வழிபடுமாறு இருப்பவன். அச்சமில்லாத அசுரர்களின் மும்மதில்களும் நடுங்குமாறு அவற்றை அழித்த அம்பினன். எல்லா உலகங்களிலும் நீக்கமற நிறைந்து நிற்பவன். அத்தகைய பெருமான் அதிகை வீரட்டனே.


பாடல் எண் : 10
எழுந்ததிரை நதித்திவலை நனைந்த திங்கள்
            இளநிலாத் திகழ்கின்ற வளர்சடையனே,
கொழும்பவளச் செங்கனிவாய்க் காமக் கோட்டி
            கொங்கையிணை அமர்பொருது கோலம் கொண்ட
தழும்புஉளவே வரைமார்பில் வெண்ணூல் ஊண்டே,
            சாந்தமொடு சந்தனத்தின் அளறு தங்கி
அழுந்தியசெந் திருவுருவில் வெண்ணீற் றானே,
            அவன்ஆகில் அதிகைவீ ரட்டன் ஆமே.

            பொழிப்புரை :கங்கையிலிருந்து வெளிப்பட்ட அலைகளின் துளிகளால் நனைக்கப்பட்ட பிறைச் சந்திரன் மெல்லிய ஒளியோடு விளங்குகின்ற நீண்ட சடையினன் . கச்சியில் காமக்கோட்டத்திலுள்ள பவளம் போலச் சிவந்த , கனிபோன்று மென்மையை உடைய வாயினள் ஆகிய உமாதேவியின் இரு தனங்களும் எம்பெருமான் மார்பில் போரிட்டதனால் ஏற்பட்ட அழகிய தழும்புகள் தங்கிய மலைபோன்ற அவன் மார்பில் பூணூல் உள்ளது . சந்தனமும் , நறுமணக்கூட்டுக்களும் சேறுபோலப் பொருந்திய தன் செம்மேனியில் வெண்ணீறு அணிந் துள்ளான் . அத்தகைய பெருமான் அதிகை வீரட்டனே .


பாடல் எண் : 11
நெடியானும் நான்முகனும் நேடிக் காணா
            நீண்டானே, நேர்ஒருவர் இல்லா தானே,
கொடிஏறு கோலமா மணிகண் டன்னே,
            கொல்வேங்கை அதளனே, கோவ ணவனே,
பொடிஏறு மேனியனே, ஐயம் வேண்டிப்
            புவலோகம் திரியுமே, புரிநூ லானே,
அடியாரை அமர்உலகம் ஆள்விக் கும்மே,
            அவன்ஆகில் அதிகைவீ ரட்டன் ஆமே.

            பொழிப்புரை :தனக்கு ஒப்பார் பிறர் இல்லாத சிவபெருமான் திருமாலும் பிரமனும் தம்முயற்சியால் தேடியும் காண இயலாதவாறு நீண்ட வடிவு கொண்டவன். தன் சிறப்புத் தோன்றக் கொடியை உயர்த்துமாறு அமைந்த நீலகண்டன். கொலைத் தொழிலை உடைய வேங்கையின் தோலைக் கோவணத்தின் மீது ஆடையாக உடுத்தவன். திருநீறு பூசிய திருமேனியினன். பூணூலை அணிந்த அப்பெருமான் பிச்சை ஏற்றலைக் கருதி மேலுலகங்களிலும் திரிபவன். தன் அடியவர்களைத் தேவர் உலகத்தை ஆளுமாறு செய்பவன். அத்தகைய பெருமான் அதிகை வீரட்டனே.

                                                திருச்சிற்றம்பலம்


6. 005  திருஅதிகை வீரட்டானம்    திருத்தாண்டகம்
                                                திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
எல்லாம் சிவன்என்ன நின்றாய் போற்றி
            எரிசுடராய் நின்ற இறைவா போற்றி
கொல்ஆர் மழுவாள் படையாய் போற்றி
            கொல்லுங்கூற்று ஒன்றை உதைத்தாய் போற்றி
கல்லாதார் காட்சிக்கு அரியாய் போற்றி
            கற்றார் இடும்பை களைவாய் போற்றி
வில்லால் வியன்அரணம் எய்தாய் போற்றி
            வீரட்டம் காதல் விமலா போற்றி.

            பொழிப்புரை :எல்லாப் பொருள்களும் சிவனுடைய தொடர்புடையன என்று கூறுமாறு எல்லாப் பொருள்களிலும் கலந்திருப்பவனே! தீ கதிர் மதியம் ஆகி நிற்பவனே! கொலைத் தொழிலைச் செய்யும் மழு என்ற படைக்கலம் ஏந்தியவனே! உயிர்களை உடல்களிலிருந்து பிரிக்கும் கூற்றுவனை உதைத்தவனே! அனுபவப் பொருளை ஞானதேசிகர்பால் கேட்டு அறியாதவருடைய மானதக் காட்சிக்கு அரியவனே! முறையாகக் குருவிடம் உபதேசம் பெற்றவர்களுடைய துயரை நீக்குபவனே! வில்லினைக் கொண்டு பெரிய மதில் களை அழித்தவனே! அதிகை வீரட்டத்தினை உகந்தருளி யிருக்கும் களங்கமற்றவனே! உன்னை வணங்குகிறேன்.


பாடல் எண் : 2
பாட்டுக்கும் ஆட்டுக்கும் பண்பா போற்றி
            பல்ஊழி ஆய படைத்தாய் போற்றி
ஓட்டுஅகத்தே ஊணா உகந்தாய் போற்றி
            உள்குவார் உள்ளத்து உறைவாய் போற்றி
காட்டுஅகத்தே ஆடல் மகிழ்ந்தாய் போற்றி
            கார்மேகம் அன்ன மிடற்றாய் போற்றி
ஆட்டுவதுஓர் நாகம் அசைத்தாய் போற்றி
            அலைகெடில வீரட்டத்து ஆள்வாய் போற்றி.

            பொழிப்புரை :பாடுதலையும், கூத்து நிகழ்த்துதலையும் பண்புகளாக உடையவனே! பல ஊழிக்காலங்களையும் படைத்தவனே! மண்டையோட்டில் இரந்து பெறுவனவற்றையே உணவாக விரும்பி ஏற்றவனே! உன்னைத் தியானிப்பார் உள்ளத்தைத் தங்குமிடமாக உடையவனே! சுடுகாட்டில் கூத்தாடுதலை உகப்பவனே! கார்மேகம் போன்ற கறுத்த கழுத்தை உடையவனே! ஒதுங்கியிருந்து படமெடுத்து ஆடச்செய்ய வேண்டிய பாம்பினை இடையில் இறுக்கிக் கட்டிக் கொள்பவனே! அலைகள் வீசும் கெடில நதியை அடுத்த அதிகை வீரட்டானத்திலிருந்து உயிர்களை ஆள்பவனே -- உன்னை வணங்குகிறேன்

பாடல் எண் : 3
முல்லைஅம் கண்ணி முடியாய் போற்றி
            முழுநீறு பூசிய மூர்த்தீ போற்றி
எல்லை நிறைந்த குணத்தாய் போற்றி
            ஏழ்நரம்பின் ஓசை படைத்தாய் போற்றி
சில்லைச் சிரைத்தலையில் ஊணா போற்றி
            சென்றுஅடைந்தார் தீவினைகள் தீர்ப்பாய் போற்றி
தில்லைச்சிற் றம்பலம் மேயாய் போற்றி
            திருவீரட் டானத்துஎம் செல்வா போற்றி.

            பொழிப்புரை :முடியில் முல்லை மாலை சூடியவனே! உடல் முழுவதும் திருநீறு பூசியவனே! எல்லையற்ற நற்பண்புகளை உடையவனே! யாழின் ஏழு நரம்புகளிலும் ஏழுவகை ஓசையைப் படைத்தவனே! உருண்டை வடிவினதாகிய மயிர் நீங்கிய, மண்டை ஓட்டில் உணவு பெறுபவனே! உன்னை வந்து வழிபடுபவர்களின் தீவினைகளை நீக்குபவனே! தில்லைச் சிற்றம்பலத்தை உகந்தருளி யிருக்கிறவனே! அதிகை வீரட்டானத்தில் உகந்தருளியிருக்கும் எம் செல்வனே! உன்னை வணங்குகிறேன் .


பாடல் எண் : 4
சாம்பர் அகலத்து அணிந்தாய் போற்றி
            தவநெறிகள் சாதித்து நின்றாய் போற்றி
கூம்பித் தொழுவார்தம் குற்றே வலைக்
            குறிக்கொண்டு இருக்கும் குழகா போற்றி
பாம்பும் மதியும் புனலும் தம்மில்
            பகைதீர்த்து உடன்வைத்த பண்பா போற்றி
ஆம்பல் மலர்கொண்டு அணிந்தாய் போற்றி
            அலைகெடில வீரட்டத்து ஆள்வாய் போற்றி.

            பொழிப்புரை :மார்பில் திருநீறு பூசியவனே ! அடியார்கள் மேற் கொள்ளும் தவநெறிகள் அவற்றிற்கு உரிய பயன்களைத் தரும்படி செய்து நிற்பவனே ! ஐம் பொறிகளையும் மனத்தால் அடக்கி உன்னை வழிபடுபவர்கள் செய்யும் சிறிய தொண்டுகளை உள்ளத்துக்கொண்டு அவர்களுக்கு அருள் செய்ய இருக்கும் இளையோனே ! பாம்பும் , பிறையும் , கங்கையும் தம்மிடையே பகை இன்றி ஒருசேர இருக்குமாறு அவற்றைச் சடையில் அணிந்த பண்பனே ! ஆம்பற் பூக்களையும் அணிந்தவனே ! அலைகளை உடைய கெடில நதிக் கரையிலமைந்த அதிகை வீரட்டானத்திருந்து எல்லோரையும் ஆள்பவனே ! உன்னை வணங்குகிறேன் .


பாடல் எண் : 5
நீறுஏறு நீல மிடற்றாய் போற்றி
            நிழல்திகழும் வெண்மழுவாள் வைத்தாய் போற்றி
கூறுஏறு உமைஒருபால் கொண்டாய் போற்றி
            கோள்அரவம் ஆட்டும் குழகா போற்றி
ஆறுஏறு சென்னி உடையாய் போற்றி
            அடியார்கட்கு ஆர்அமுதம் ஆனாய் போற்றி
ஏறுஏற என்றும் உகப்பாய் போற்றி
            இரும்கெடில வீரட்டத்து எந்தாய் போற்றி.

            பொழிப்புரை :திருநீறு பூசிய நீலகண்டனே ! ஒளி விளங்கும் வெள்ளிய மழுப்படையை ஏந்தியவனே ! தன் உடலில் ஒரு கூறாகப் பொருந்துமாறு உமாதேவியை இடப்பாகமாகக் கொண்டவனே! கொடிய பாம்புகளை ஆடச்செய்யும் இளையவனே! கங்கை தங்கிய தலையினனே! அடியவர்களுக்குக் கிட்டுதற்கு அரிய அமுதம் ஆயினவனே! காளையை வாகனமாக ஏறிச்செலுத்துதலை என்றும் விரும்புபவனே! கெடில நதிக் கரையிலுள்ள பெரிய அதிகை வீரட்டானத்தை உகந்தருளியிருக்கும் எந்தையே! உன்னை வணங்குகிறேன் .


பாடல் எண் : 6
பாடுவார் பாடல் உகப்பாய் போற்றி
            பழையாற்றுப் பட்டீச் சுரத்தாய் போற்றி
வீடுவார் வீடுஅருள வல்லாய் போற்றி
            வேழத்து உரிவெருவப் போர்த்தாய் போற்றி
நாடுவார் நாடற்கு அரியாய் போற்றி
            நாகம் அரைக்குஅசைத்த நம்பா போற்றி
ஆடும்ஆன் ஐந்தும் உகப்பாய் போற்றி
            அலைகெடில வீரட்டத்து ஆள்வாய் போற்றி.

            பொழிப்புரை :உன்னையே விரும்பிப் பாடும் அடியார்களுடைய பாடல்களை விரும்பிச் செவிமடுக்கின்றவனே! பழையாற்றைச் சார்ந்த பட்டீச்சுரத்தை உகந்தருளியிருப்பவனே ! உலகப் பற்றறுத்த அடியார்களுக்கு வீடுபேற்றினை அருள வல்லவனே ! உமாதேவி அஞ்சுமாறு யானைத் தோலைப் போர்த்திக் கொண்டவனே ! தம் முயற்சியாலே உன்னை அடைய விரும்புபவர்கள் ஆராய்ந்து அறிதற்கு அரியவனே ! இடையிலே பாம்பினை இறுகக் கட்டியிருப்பவனே ! பஞ்சகவ்விய அபிடேகத்தை விரும்புபவனே ! அலைகெடில வீரட்டானத்தை உகந்து உலகை ஆள்பவனே ! உன்னை வணங்குகின்றேன் .


பாடல் எண் : 7
மண்துளங்க ஆடல் மகிழ்ந்தாய் போற்றி
            மால்கடலும் மால்விசும்பும் ஆனாய் போற்றி
விண்துளங்க மும்மதிலும் எய்தாய் போற்றி
            வேழத்து உரிமூடும் விகிர்தா போற்றி
பண்துளங்கப் பாடல் பயின்றாய் போற்றி
            பார்முழுதும் ஆய பரமா போற்றி
கண்துளங்கக் காமனைமுன் காய்ந்தாய் போற்றி
            கார்க்கெடிலம் கொண்ட கபாலி போற்றி.

            பொழிப்புரை :நில உலகம் அசையுமாறு கூத்தாடுதலை மகிழ்ந்தவனே ! பெரிய கடலும் வானமும் ஆனவனே ! வானுலகம் நடுங்கும் படி மூன்று கோட்டைகளையும் அம்பு எய்து அழித்தவனே ! யானைத் தோலினால் உடம்பை மூடிக்கொள்ளும் , உலகியலுக்கு வேறுபட்டவனே ! பண்கள் பொருந்தப் பாடுதலில் பழகியவனே ! உலகம் முழுதுமாய் பரவியிருக்கும் மேம்பட்டவனே ! கண் அசைத்துத் திறந்த அளவில் முற்காலத்தில் மன்மதனை அழித்தவனே ! நீரின் ஆழத்தால் கருநிறம் கொண்ட கெடிலக்கரை வீரட்டானத்தை உகந்து கொண்ட , மண்டைஓட்டை ஏந்தியவனே ! உன்னை வணங்குகின்றேன் .


பாடல் எண் : 8
வெஞ்சினவெள் ஏறுஊர்தி உடையாய் போற்றி
            விரிசடைமேல் வெள்ளம் படைத்தாய் போற்றி
துஞ்சாப் பலிதேரும் தோன்றால் போற்றி
            தொழுதகை துன்பம் துடைப்பாய் போற்றி
நஞ்சுஒடுங்கும் கண்டத்து நாதா போற்றி
            நான்மறையோடு ஆறுஅங்கம் ஆனாய் போற்றி
அஞ்சொலாள் பாகம் அமர்ந்தாய் போற்றி
            அலைகெடில வீரட்டத்து ஆள்வாய் போற்றி.

            பொழிப்புரை :மிக்க சினத்தையுடைய வெண்ணிறக் காளையை வாகனமாக உடையவனே ! விரிந்த சடையின் மேல் கங்கை வெள்ளத்தைத் தங்கச் செய்தவனே ! உறங்காது பிச்சை எடுக்கும் மேம்பட்டவனே ! உன்னை வழிபடும் ஒழுக்கத்தை உடைய அடியார்களின் துயரைத் துடைப்பவனே ! விடம் தங்கிய கழுத்தை உடைய தலைவனே ! நான்கு வேதங்களும் ஆறு அங்கங்களும் ஆகியவனே ! இனிய சொல்லை உடைய பார்வதி பாகனே ! அலைகெடில வீரட்டத்து ஆள்வாய் ! உன்னை வணங்குகின்றேன் .


பாடல் எண் : 9
சிந்தையாய் நின்ற சிவனே போற்றி
            சீபர்ப் பதம்சிந்தை செய்தாய் போற்றி
புந்தியாய்ப் புண்டரிகத்து உள்ளாய் போற்றி
            புண்ணியனே போற்றி புனிதா போற்றி
சந்தியாய் நின்ற சதுரா போற்றி
            தத்துவனே போற்றிஎன் தாதாய் போற்றி
அந்தியாய் நின்ற அரனே போற்றி
            அலைகெடில வீரட்டத்து ஆள்வாய் போற்றி.

            பொழிப்புரை :அடியார் உள்ளத்தை இருப்பிடமாய்க் கொண்டு நிலைபெற்ற சிவபெருமானே ! இதயத்தாமரையில் ஞானவடிவாகத் தங்கியிருப்பவனே ! புண்ணியமே வடிவானவனே ! தூயனே ! காலை , நண்பகல் , மாலை என்ற மூன்று சந்திகளாகவும் இருக்கும் மேம்பட்டவனே ! உண்மைப்பொருளே ! என் தந்தையே ! நேரங்களில் சிறந்த அந்திப்பொழுதாக இருக்கும் அரனே ! வீரட்டத்திலிருந்து உலகை ஆள்பவனே ! உன்னை வணங்குகின்றேன் .


பாடல் எண் : 10
முக்கணா போற்றி முதல்வா போற்றி
            முருகவேள் தன்னைப் பயந்தாய் போற்றி
தக்கணா போற்றி தருமா போற்றி
            தத்துவனே போற்றிஎன் தாதாய் போற்றி
தொக்குஅணா என்றுஇருவர் தோள்கை கூப்பத்
            துளங்காது எரிசுடராய் நின்றாய் போற்றி
எக்கண்ணும் கண்இலேன் எந்தாய் போற்றி
            எறிகெடில வீரட்டத்து ஈசா போற்றி.

            பொழிப்புரை :முக்கண்ணனே ! முதல்வனே ! முருகனுடைய தந்தையே ! தென்திசைக் கடவுளே ! அறவடிவினனே ! மெய்ப் பொருளே ! என் தந்தையே ! திருமாலும் , பிரமனும் ஒன்று சேர்ந்து அண்ணலே என்று அழைத்துக் கை கூப்புமாறு அசையாது ஒளிப்பிழம்பாய் நின்றவனே ! வீரட்டானத்து இறைவனே ! வேறு எங்கும் பற்றுக் கோடில்லாத அடியேன் தந்தையாகிய உன்னை வணங்குகிறேன் .

                                                            திருச்சிற்றம்பலம்


6.006     திருஅதிகை வீரட்டானம்   திருத்தாண்டகம்
                                                            திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
அரவணையான் சிந்தித்து அரற்றும் அடி
            அருமறையான் சென்னிக்கு அணிஆம் அடி
சரவணத்தான் கைதொழுது சாரும் அடி
            சார்ந்தார்கட்கு எல்லாம் சரண்ஆம் அடி
பரவுவார் பாவம் பறைக்கும் அடி
            பதின்எண் கணங்களும் பாடும் அடி
திரைவிரவு தென்கெடில நாடன் அடி
            திருவீரட் டானத்துஎம் செல்வன் அடி.

            பொழிப்புரை :அலைகள் ஒன்றொடொன்று மோதுகின்ற கெடில நதி பாயும் நாடனாய்த் திருவதிகை வீரட்டானத்தை உகந்தருளியுள்ள எம் செல்வனுடைய திருவடிகள் திருமாலால் தியானித்துப் போற்றப்படும் . பிரமனுடைய தலைகளுக்கு அணிகளாகும் , முருகனால் தொழப்பட்டு அணுகப்பெறும் . பற்றுக் கோடாகக் கொண்ட அடியவர்களுக்கெல்லாம் அடைக்கலம் நல்கும் , தம்மை வழிபடுபவர்களுடைய பாவத்தைப் போக்கும் , பதினெண் தேவ கணத்தவராலும் பாடப் பெறும் .


பாடல் எண் : 2
கொடுவினையார் என்றும் குறுகா அடி
            குறைந்துஅடைந்தார் ஆழாமைக் காக்கும் அடி
படுமுழவம் பாணி பயிற்றும் அடி
            பதைத்துஎழுந்த வெங்கூற்றைப் பாய்ந்த அடி
கடுமுரண் எறுஊர்ந்தான் கழல்சேவடி
            கடல்வையம் காப்பான் கருதும் அடி
நெடுமதிஅம் கண்ணி அணிந்தான் அடி
            நிறைகெடில வீரட்டம் நீங்கா அடி.

            பொழிப்புரை :விரைந்து செல்வதாய் ஏனைய காளைகளினின்றும் மாறுபட்ட காளையை ஊர்பவனும் , நீண்ட பிறையை முடிமாலையாக அணிந்தவனும், கெடில நதிக் கரையிலுள்ள அதிகை வீரட்டானத்தை நீங்காது உகந்தருளி யிருப்பவனும் ஆகிய எம்பெருமானுடைய திருவடிகள் தீவினை உடையவரால் ஒரு காலும் அணுகப்பெறாதன. நலிவுற்றுச் சரணாக அடைந்தவரை அழியாமல் காப்பன. முழவு ஒலித்தலையும் தாளம் இடுதலையும் பயிற்றுவிப்பன. வெகுண்டெழுந்த கொடிய கூற்றுவன் மீது பாய்ந்தன. கடலால் சூழப்பட்ட இவ்வுலகைக் காக்கும் திருமாலால் விரும்பிப் போற்றப்படுவன .


பாடல் எண் : 3
வைதுஎழுவார் காமம்பொய் போகா அடி
            வஞ்ச வலைப்பாடுஒன்று இல்லா அடி
கைதொழுது நாம்ஏத்திக் காணும் அடி
            கணக்கு வழக்கைக் கடந்த அடி
நெய்தொழுது நாம்ஏத்தி ஆட்டும் அடி
            நீள்விசும்பை ஊடுஅறுத்து நின்ற அடி
தெய்வப் புனல்கெடில நாடன் அடி
            திருவீரட் டானத்து எம் செல்வன் அடி.

            பொழிப்புரை :கெடில நாடனாய் அதிகை வீரட்டத்தை உகந்தருளிய செல்வனாகிய எம்பெருமானுடைய திருவடிகள் எம் பெருமானைத் தூற்றிக் கொண்டே துயிலெழுபவருடைய தீய விருப்பங்களே நிறைவேறச் செய்வன ; வஞ்சனையாகிய வலையிலே அகப்படாதன . கையால் தொழுது நாவினால் துதித்து நாம் அகக் கண்ணால் காண வாய்ப்பு அளிப்பன . உலகத்தார் கணக்கிடும் எல்லையைக் கடந்து நிற்பன . அடியவராகிய நாம் உடலால் தொழுது நாவால் துதித்துக் கையால் நெய் அபிடேகம் செய்யப் பொருந்துவன . நீண்ட வானுலகையும் கடந்து எங்கும் நீக்கமற நிறைந்து நிற்பன .


பாடல் எண் : 4
அரும்பித்த செஞ்ஞாயிறு ஏய்க்கும் அடி
            அழகுஎழுதல் ஆகா அருட்சேவடி
சுரும்பித்த வண்டுஇனங்கள் சூழ்ந்த அடி
            சோமனையும் காலனையும் காய்ந்த அடி
பெரும்பித்தர் கூடிப் பிதற்றும் அடி
            பிழைத்தார் பிழைப்புஅறிய வல்ல அடி
திருந்துநீர்த் தென்கெடில நாடன் அடி
            திருவீரட் டானத்துஎம் செல்வன் அடி.

            பொழிப்புரை :தெளிவான நீரை உடைய கெடில நதி பாயும் நாட்டினனாய் , திருவீரட்டானத்தில் உகந்தருளியிருக்கும் எம் செல்வனாகிய எம்பெருமானுடைய திருவடிகள் தாமரையை அரும்பச் செய்யும் காலையில் தோன்றும் செந்நிறக் கதிரவனை நிறத்தாலும் ஒளியாலும் ஒப்பன. தம் அழகை ஓவியத்து எழுதலாகாத வனப்பினவாய் அடியார்களுக்கு அருளை வழங்குவன. சுரும்புகளும் வண்டுகளும் சுற்றித் திரியும் வாய்ப்பினை அளிப்பன. சந்திரனையும் கூற்றுவனையும் வெகுண்டன. பெருவிருப்புடைய அடியவரால் குழாமாகப் போற்றப்படுவன. தவறு செய்தவர்களுடைய தவறுகளை அறியும் ஆற்றல் உடையன.


பாடல் எண் : 5
ஒருகாலத்து ஒன்றுஆகி நின்ற அடி
            ஊழிதோறு ஊழி உயர்ந்த அடி
பொருகழலும் பல்சிலம்பும் ஆர்க்கும் அடி
            புகழ்வார் புகழ்தகைய வல்ல அடி
இருநிலத்தார் இன்புற்றுஅங்கு ஏத்தும் அடி
            இன்புற்றார் இட்டபூ ஏறும் அடி
திருவதிகைத் தென்கெடில நாடன் அடி
            திருவீரட் டானத்துஎம் செல்வன் அடி.

            பொழிப்புரை :கெடில நாட்டுத் திருவதிகை வீரட்டானத்து எம் செல்வனுடைய திருவடிகள் படைப்புக் காலத்து ஒன்றாகி நின்று முற்றழிப்புக் காலத்தில் மாயையைத் தொழிற்படுத்தாது தம் நிலையிலேயே நிற்பன . ஒன்றில் கழலும் மற்றொன்றில் சிலம்பும் ஒலிக்குமாறு அமைந்தன . புகழ்வாருடைய புகழ் உரைகளுக்கு முடிவு காண இயலாதபடி தடுக்கும் ஆற்றல் உடையன . இப்பெரிய நில உலகிலுள்ளார் மகிழ்ந்து துதிக்கும் வாய்ப்பினை அளிப்பன . அவ்வாறு இன்புற்று அடியவர்கள் அருச்சித்த பூக்களைத் தம்பால் தாங்கி நிற்பன .


பாடல் எண் : 6
திருமகட்குச் செந்தா மரையாம் ஆடி
            சிறந்தவர்க்குத் தேனாய் விளைக்கும் அடி
பொருளவர்க்குப் பொன்உரையாய் நின்ற அடி
            புகழ்வார் புகழ்தகைய வல்ல அடி
உருஇரண்டும் ஒன்றோடுஒன்று ஒவ்வா அடி
            உருஎன்று உணரப் படாத அடி
திருவதிகைத் தென்கெடில நாடன் அடி
            திருவீரட் டானத்துஎம் செல்வன் அடி.

            பொழிப்புரை :அழகிய கெடிலநாடனாய திருவதிகை வீரட்டானத்து எம்செல்வன் சேவடிகள் திருமகளுக்குச் செந்தாமரை போல்வன . சிறந்த அடியார்களுக்குத் தேன் போல இனிப்பன . செல்வர்களுக்கு அவர்கள் செல்வத்தைச் செலவிடும் திறத்தை ஓர்ந்து அறிய உரைகல்லாய் இருப்பன . புகழ்பவர் புகழ் எல்லையைத் தடுக்க வல்லன . வலம் இடம் இருபுறத்து அடிகளும் ஆண் அடியும் பெண் அடியுமாய் ஒன்றொடொன்று ஒவ்வாது அமைந்திருப்பன . தமக்கு உருவம் உடைமையே இயல்பு என்று உணரப்படமுடியாமல் உருவம் அருவம் என்ற நிலைகளைக் கடந்திருப்பன .


பாடல் எண் : 7
உரைமாலை எல்லாம் உடைய அடி
            உரையால் உணரப் படாத அடி
வரைமாதை வாடாமை வைக்கும் அடி
            வானவர்கள் தாம்வணங்கி வாழ்த்தும் அடி
அரைமாத் திரையில் அடங்கும் அடி
            அகலம் அளக்கிற்பார் இல்லா அடி
கரைமாங் கலிக்கெடில நாடன் அடி
            கமழ்வீரட்டானக் கபாலி அடி.

            பொழிப்புரை :கரைகளிலே மக்களின் ஆரவாரத்தை மிகுதியாக உடைய கெடில நதி பாயும் நாட்டில் நறுமணம் கமழும் வீரட்டானத்தை உகந்தருளியிருக்கும், மண்டையோட்டை ஏந்திய சிவபெருமானுடைய திருவடிகள் பாட்டும் உரையுமாகிய சொற்கோவைகளை உடையன. சொற்களால் முழுமையாக உணரப்படாதன. உமா தேவியை மனம் வாடாமல் மகிழ்வாக வைப்பன. வானவர்களால் வணங்கி வாழ்த்தப்படுவன . அரைமாத்திரை ஒலியற்றாகிய பிரணவக் கலையில் அடங்குவன. தம் பரப்பினை யாரும் அளக்கவியலாதபடி எங்கும் பரவி இருப்பன .


பாடல் எண் : 8
நறுமலராய் நாறும் மலர்ச்சேவடி
            நடுவாய் உலகநாடு ஆய அடி
செறிகதிரும் திங்களுமாய் நின்ற அடி
            தீத்திரளாய் உள்ளே திகழ்ந்த அடி
மறுமதியை மாசு கழுவும் அடி
            மந்திரமுந் தந்திரமும் ஆயஅடி
செறிகெடில நாடர் பெருமான்அடி
            திருவீரட் டானத்துஎம் செல்வன் அடி.

            பொழிப்புரை :கெடிலநாடர் பெருமானாம் திருவீரட்டானத்து எம் செல்வனுடைய திருவடிகள் இயற்கையிலேயே மலர் மணம் உடையனவாய் மலர்களாலும் அருச்சிக்கப் படுவன . அறமும் நீதியும் தம் வடிவமாக உலகியலையும் நாட்டியலையும் நிகழச்செய்வன . உலகிலே கதிரவனும் மதியமுமாய்ப் புறத்து ஒளிகளைத் தருவன . யோகியர் உள்ளத்தே ஒளிப்பிழம்பாய் உள்ளொளி பெருக்குவன . சந்திரனுக்கு ஏற்பட்ட மாசினைக் கழுவியன . மந்திரங்களும் அவற்றைச் செயற்படுத்தும் செயல்களுமாய் உள்ளன .


பாடல் எண் : 9
அணியனவும் சேயனவும் அல்லா அடி
            அடியார்கட்கு ஆர்அமுதம் ஆய அடி
பணிபவர்க்குப் பாங்குஆக வல்ல அடி
            பற்றுஅற்றார் பற்றும் பவள அடி
மணிஅடி பொன்அடி மாண்பாம் அடி
            மருந்தாய்ப் பிணிதீர்க்க வல்ல அடி
தணிபாடு தண்கெடில நாடன் அடி
            தகைசார்வீ ரட்டத் தலைவன் அடி.

            பொழிப்புரை :இனிய இசை பாடப்படும் குளிர்ந்த கெடிலநதி பாயும் நாட்டில் பெருமைபொருந்திய அதிகைவீரட்டானத் தலைவனுடைய திருவடிகள் அடியார்களுக்குப் பக்கத்தில் உள்ளனவாயும் , அடியார் அல்லார்க்கு தூரத்தில் உள்ளவாயும் அமைந்திருப்பன . அடியவர்களுக்குக் கிட்டுதற்கு அரிய அமுதம் போன்று உள்ளன . வழிபடுபவர்களுக்குத் துணையாகும் ஆற்றல் உடையன . உலகப் பற்றற்ற சான்றோர்கள் பற்றும் தகையவாய்ப் பவள நிறத்தை உடையன . மணிகள் போலவும் பொன் போலவும் மதிப்பிடற்கரிய பெருமை உடையன . மருந்தாய்ப் பிறவிப் பிணியை அடியோடு நீக்கும் ஆற்றல் உடையன .


பாடல் எண் : 10
அந்தா மரைப்போது அலர்ந்த அடி
            அரக்கனையும் ஆற்றல் அழித்த அடி
முந்துஆகி முன்னே முளைத்த அடி
            முழங்குஅழலாய் நீண்டஎம் மூர்த்தி அடி
பந்துஆடும் மெல்விரலாள் பாகன் அடி
            பவளத் தடவரையே போல்வான் அடி
வெந்தார் சுடலைநீறு ஆடும் அடி
            வீரட்டம் காதல் விமலன் அடி.

            பொழிப்புரை :ஒலிக்கும் தழற்பிழம்பாய் வளர்ந்த வடிவினனும் பந்தினை விளையாடும் மெல்லிய விரல்களை உடைய பார்வதி பாகனும் , பெரிய பவள மலை போல்வானும் , அதிகை வீரட்டத்தை உகந்தருளியிருக்கும் தூயோனும் ஆகிய எம் பெருமானுடைய திருவடிகள் தாமரைப் பூக்கள் போல மலர்ந்துள்ளன. இராவணனுடைய ஆற்றலையும் போக்கியன, ஏனைய பொருள்களின் தோற்றங்களுக்கு முன்னே தோன்றியன . சுடுகாட்டில் எரிக்கப்பட்டவருடைய சாம்பலில் தோய்வனவாம் .
                                                            திருச்சிற்றம்பலம்6. 007    திருஅதிகை வீரட்டானம்  திருத்தாண்டகம்
                                    திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
செல்வப் புனற்கெடில வீரட்டமும்,
            சிற்றேமமும், பெருந்தண் குற்றாலமும்,
தில்லைச்சிற் றம்பலமும், தென்கூடலும்,
            தென்ஆனைக் காவும், சிராப்பள்ளியும்,
நல்லூரும், தேவன் குடி,மருகலும்,
            நல்லவர்கள் தொழுதுஏத்து நாரை யூரும்,
கல்அலகு நெடும்புருவக் கபாலம் ஏந்திக்
            கட்டங்கத் தோடுஉறைவார் காப்புக் களே.

            பொழிப்புரை :நீர் மிக்க கெடிலநதியால் செல்வவளம் பெற்ற அதிகை வீரட்டம் , சிற்றேமம் , மிக்க பரப்பினை உடைய குளிர்ந்த குற்றாலம் , தில்லைச் சிற்றம்பலம் , தெற்கில் உள்ள மதுரை , அழகிய ஆனைக்கா , சிராப்பள்ளி , நல்லூர் , தேவன்குடி , மருகல் , சான்றோர்கள் வழிபட்டுத் துதிக்கும் நாரையூர் ஆகியன - கல்லலகு என்ற வாச்சியத்தையும் , நீண்ட புருவச் சுவடுடைய மண்டையோட்டினையும் கட்டங்கம் என்ற படைக்கலத்தையும் ஏந்திய சிவபெருமான் உகந்தருளியுள்ள திருத்தலங்களாம் .


பாடல் எண் : 2
தீர்த்தப் புனற்கெடில வீரட்டமும்,
            திருக்கோவல் வீரட்டம், வெண்ணெய் நல்லூர்,
ஆர்த்துஅருவி வீழ்சுனைநீர் அண்ணா மலை,
            அறையணிநல் லூரும், அரநெ றியும்,
ஏத்துமின்கள், நீர்ஏத்த நின்ற ஈசன்
            இடைமருது, இன்னம்பர், ஏகம்பமும்,
கார்த்தயங்கு சோலைக் கயிலாயமும்,
            கண்ணுதலான் தன்னுடைய காப்புக் களே.

            பொழிப்புரை :அதிகை வீரட்டம் , கோவலூர் வீரட்டம் , வெண்ணெய்நல்லூர் , அருவிகள் ஆரவாரித்து விழும் சுனைநீரை உடைய அண்ணாமலை , அறையணி நல்லூர் , அரநெறி , இடைமருது , இன்னம்பர் , ஏகம்பம் , மேகத்தொடு விளங்கும் சோலைகளை உடைய கயிலாயம் என்பன - நாம் துதிக்குமாறு நெற்றிக்கண்ணனாகிய எம் பெருமான் உகந்தருளியிருக்கும் திருத்தலங்களாம் . அத் தலங்களில் எம்பெருமானைப் போற்றுங்கள் .


பாடல் எண் : 3
சிறைஆர் புனற்கெடில வீரட்டமும்,
            திருப்பா திரிப்புலியூர், திருவா மாத்தூர்,
துறைஆர் வனமுனிகள் ஏத்த நின்ற
            சோற்றுத் துறை,துருத்தி, நெய்த் தானமும்,
அறைஆர் புனல்ஒழுகு காவி ரிசூழ்
            ஐயாற்று அமுதர், பழனம், நல்ல
கறைஆர் பொழில்புடைசூழ் கானப் பேரும்,
            கழுக்குன்றும், தம்முடைய காப்புக் களே.

            பொழிப்புரை :பாறைகளில் மோதிப் பெருகிவருகின்ற நீரை உடைய காவிரியால் தென்புறம் சூழப்பட்ட திருவையாற்றில் அமுதமாக உகந்தருளியிருக்கும் பெருமான் தடுக்கப்படுகின்ற நீரை உடைய கெடில நதிக் கரையிலுள்ள அதிகை வீரட்டம் , பாதிரிப்புலியூர் , ஆமாத்தூர் , நீர்த்துறைகளை அடுத்த சோலைகளில் வாழும் முனிவர்கள் துதிக்க இருக்கும் சோற்றுத்துறை , துருத்தி , நெய்த்தானம் , இருண்ட சோலைகளால் சூழப்பட்ட கானப்பேரூர் , கழுக்குன்றம் ஆகிய திருத்தலங்களில் கோயில் கொண்டுள்ளான் .


பாடல் எண் : 4
திரைஆர் புனற்கெடில வீரட்டமும்,
            திருவாரூர், தேவூர், திருநெல் லிக்கா,
உரையார் தொழநின்ற ஒற்றி யூரும்,
            ஓத்தூரும், மாற்பேறும், மாந்து றையும்,
வரைஆர் அருவிசூழ் மாந தியும்,
            மாகாளம், கேதாரம், மாமேருவும்,
கரைஆர் புனல்ஒழுகு காவி ரிசூழ்
            கடம்பந் துறைஉறைவார் காப்புக் களே.

            பொழிப்புரை :கெடிலக்கரை வீரட்டம், திருவாரூர், தேவூர், நெல்லிக்கா, புகழை உடைய சான்றோர் வழிபடும் ஒற்றியூர், ஓத்தூர், மாற்பேறு, மாந்துறை, மலை அருவிகள் சூழ்ந்த மாநதி, மாகாளம், கேதாரம், மாமேரு என்பன காவிரி சூழ் கடப்பந்துறையில் உகந்தருளியிருக்கும் பெருமானுடைய திருத்தலங்களாம் .


பாடல் எண் : 5
செழுநீர்ப் புனற்கெடில வீரட்ட மும்,
            திரிபுராந் தகம்,தென்னார் தேவீச்சரம்,
கொழுநீர் புடைசுழிக்கும் கோட்டுக் காவும்,
            குடமூக்கும், கோகரணம், கோலக் காவும்,
பழிநீர்மை இல்லாப் பனங்காட் டூரும்,
            பனையூர், பயற்றூர், பராய்த்து றையும்,
கழுநீர் மதுவிரியும் காளிங்க மும்,
            கணபதீச் சரத்தார்தம் காப்புக் களே.

            பொழிப்புரை :கெடிலக்கரை அதிகை வீரட்டம் , திரிபுராந்தகம் , அழகிய தேவீச்சரம் , வெள்ளம் சூழும் கோட்டுக்கா , குடமூக்கு , கோகரணம் , கோலக்கா , இழித்துரைக்கும் தன்மை இல்லாத பனங் காட்டூர் , பனையூர் , பயற்றூர் , பராய்த்துறை , கழுநீர்ப் பூக்களிலிருந்து தேன் வெளிப்படும் காளிங்கம் என்பன கணபதீச்சரத்தை உகந்தருளியிருக்கும் சிவபெருமானுடைய திருத்தலங்களாம் .


பாடல் எண் : 6
தெய்வப் புனற்கெடில வீரட்டமும்,
            செழுந்தண் பிடவூரும், சென்று நின்று
பவ்வம் திரியும் பருப்ப தமும்,
            பறியலூர் வீரட்டம், பாவ நாசம்,
மவ்வம் திரையும் மணிமுத்த மும்,
            மறைக்காடும், வாய்மூர், வலஞ்சு ழியும்,
கவ்வை வரிவண்டு பண்ணே பாடும்
            கழிப்பாலை, தம்முடைய காப்புக் களே.

            பொழிப்புரை :கெடிலக் கரையிலுள்ள அதிகை வீரட்டம் , செழிப்பை உடைய குளிர்ந்த பிடவூர் , கடல் வெள்ளம் அணுகும் சீசைலம் , பறியலூர் வீரட்டம் , பாவநாசம் , இன்னிசை முழங்கும் மணிமுத்தம் , மறைக்காடு , வாய்மூர் , வலஞ்சுழி , ஆரவாரத்தை உடைய வண்டுகள் பண்பாடும் கழிப்பாலை என்பன சிவபெருமான் உகந்தருளியிருக்கும் திருத்தலங்களாம் .


பாடல் எண் : 7
தெண்ணீர்ப் புனற்கெடில வீரட்டமும்,
            சீர்காழி, வல்லம், திருவேட்டியும்,
உள்நீர்ஆர் ஏடகமும், ஊறல், அம்பர்,
            உறையூர், நறையூர், அரண நல்லூர்,
விண்ணார் விடையார் விளமர், வெண்ணி,
            மீயச்சூர், வீழி மிழலை, மிக்க
கண்ணார் நுதலார் கரபு ரமும்,
            காபாலி யார்அவர்தம் காப்புக் களே.

            பொழிப்புரை :அதிகை வீரட்டம், சீர்காழி, வல்லம், திருவேட்டி, நீர்வளம் மிக்க ஏடகம், ஊறல், அம்பர், உறையூர், நறையூர், அரண நல்லூர், வானத்திலும் உலவும் காளை வாகனம் உடைய சிவ பெருமான் உகக்கும் விளமர், வெண்ணி, மீயச்சூர், வீழிமிழலை, நெற்றிக்கண்ணனாம் சிவபெருமான் விரும்பும் கரபுரம் ஆகியவை மண்டை ஓட்டினை ஏந்தும் அப்பெருமான் உகந்தருளியுள்ள திருத்தலங்களாம் .


பாடல் எண் : 8
தெள்ளும் புனற்கெடில வீரட்டமும்,
            திண்டீச் சரமும், திருப்பு கலூர்,
எள்ளும் படையான் இடைத்தா னமும்,
            ஏயீச் சுரமும்,நல் ஏமம், கூடல்,
கொள்ளும் இலயத்தார் கோடி காவும்,
            குரங்கணின் முட்டமும், குறும்ப லாவும்,
கள்அருந்தத் தெள்ளியார் உள்கி ஏத்தும்
            காரோணம் தம்முடைய காப்புக் களே.

            பொழிப்புரை :பூதப்படையை உடையவரும், கூத்தினை நிகழ்த்துபவரும், ஆகிய பெருமானார் உகந்தருளியிருக்கும் திருத்தலங்கள், அதிகை வீரட்டம், திண்டீச்சரம், புகலூர், இடைத்தானம், ஏயீச்சுரம், ஏமம், கூடல், கோடிகா, குரங்கணில் முட்டம், குறும்பலா, திருவடி ஞானம் பெறச் சத்திநிபாதம் பெற்றவர் தியானித்துத் துதிக்கும் நாகை குடந்தைக் காரோணங்கள், என்பனவாகும் .


பாடல் எண் : 9
சீர்ஆர் புனற்கெடில வீரட்டமும்,
            திருக்காட்டுப் பள்ளி, திருவெண் காடும்,
பாரார் பரவுஞ்சீர்ப் பைஞ்ஞீலியும்,
            பந்தணை நல்லூரும், பாசூர், நல்லம்,
நீர்ஆர் நிறைவயல்சூழ் நின்றி யூரும்,
            நெடுங்களமும், நெல்வெண்ணெய், நெல்வா யிலும்,
கார்ஆர் கமழ் கொன்றைத் தாரார்க்கு என்றும்
            கடவூரில் வீரட்டம் காப்புக் களே.

            பொழிப்புரை :அதிகை வீரட்டம், காட்டுப்பள்ளி, வெண்காடு, உலகு புகழும் சிறப்பினை உடைய பைஞ்ஞீலி, பந்தணைநல்லூர், பாசூர், நல்லம், வயல்சூழ்ந்த நின்றியூர், நெடுங்களம், நெல்வெண்ணெய், நெல்வாயில், கடவூர் வீரட்டம் என்பன கார் காலத்தில் மலரும் கொன்றை மலர் மாலையை அணிந்த சிவபெருமானுடைய திருத்தலங்களாம் .


பாடல் எண் : 10
சிந்தும் புனற்கெடில வீரட்டமும்,
            திருவாஞ் சியமும், திருநள் ளாறும்,
அந்தண் பொழில்புடைசூழ் அயோகந்தியும்,
            ஆக்கூரும், ஆவூரும், ஆன்பட்டியும்,
எந்தம் பெருமாற்கு இடம்ஆவதுஆம்
            இடைச்சுரமும், எந்தை தலைச்சங் காடும்,
கந்தங் கமழும் கரவீரமும்,
            கடம்பூர்க் கரக்கோயில், காப்புக் களே.

            பொழிப்புரை :அதிகை வீரட்டம் , வாஞ்சியம் , நள்ளாறு , தண்பொழில் சூழ் அயோகந்தி , ஆக்கூர் , ஆவூர் , ஆன்பட்டி , இடைச்சுரம் , தலைச்சங்காடு , நறுமணம் கமழும்கரவீரம் , சக்கரக் கோயிலை உடைய கடம்பூர் ஆகியன எங்கள் பெருமானுக்குத் திருத்தலங்களாம் .


பாடல் எண் : 11
தேன்ஆர் புனற்கெடில வீரட்டமும்,
            திருச்செம்பொன் பள்ளி, திருப்பூவணம்,
வானோர் வணங்கும் மணஞ்சேரியும்,
            மதில்உஞ்சை மாகாளம், வார ணாசி,
ஏனோர்கள் ஏத்தும் வெகுளீச்சரம்,
            இலங்கார் பருப்பதத்தோடு ஏண்ஆர் சோலைக்
கான்ஆர் மயில்ஆர் கருமாரியும்,
            கறைமிடற்றார் தம்முடைய காப்புக் களே.

            பொழிப்புரை :அதிகை வீரட்டம், செம்பொன்பள்ளி, பூவணம், தேவரும் வணங்கும் மணஞ்சேரி , மதில்களை உடைய உஞ்சை மாகாளம் , வாரணாசி மற்றவர்களும் வழிபடும் வெகுளீச்சரம் , விளங்கும் சீசைலம் , பெருமையையுடைய சோலைகளிலே காட்டில் தங்கக் கூடிய மயில்கள் பொருந்தியிருக்கும் கருமாரி என்பன நீலகண்டப் பெருமானுடைய திருத்தலங்களாம் .


பாடல் எண் : 12
திருநீர்ப் புனற்கெடில வீரட்டமும்,
            திருவளப்பூர், தெற்குஏறு சித்தவடம்,
வருநீர் வளம்பெருகு மாநிருபமும்,
            மயிலாப்பில் மன்னினார், மன்னிஏத்தும்
பெருநீர் வளர்சடையான் பேணிநின்ற
            பிரம புரம்,சுழியல், பெண்ணாகடம்,
கருநீல வண்டுஅரற்றும் காளத்தியும்,
            கயிலாயம் தம்முடைய காப்புக் களே.

            பொழிப்புரை :அதிகை வீரட்டம் , அளப்பூர் , அதிகைக்குத் தெற்கில் உள்ள சித்தவடம் , நீர் வளம் மிக்க மாநிருபம் , மயிலாப்பூர் , பிரமபுரம் , சுழியல் , பெண்ணாகடம் , நல்ல நீலநிறமான வண்டுகள் ஒலிக்கும் காளத்தி , கயிலாயம் என்பன அடியவர்களால் நிலையாகப் போற்றப்படும் கங்கை தங்கும் சடையை உடைய சிவபெருமான் உகந்தருளியிருக்கும் திருத்தலங்களாம் .

            குறிப்புரை :அளப்பூர், சித்தவடம், மாநிருபம் இவை வைப்புத் தலங்கள். சில தலங்ளைப் பின்னும் வேறு பெயராற் கூறியது` அப்பெயரால் அறியப்படும் சிறப்புப்பற்றி. சீகாழி - பிரமபுரம் . தெற்கு ஏறு - தென்றிசையில் பொருந்திய .
                                                            திருச்சிற்றம்பலம்
-----------------------------------------------------------------------------------------------------------

சுந்தரர் திருப்பதிக வரலாறு

            பெருமானால் தடுத்தாட்கொள்ளப்பெற்ற நம்பியாரூரர், திருநாவலூரிலிருந்து திருத்துறையூர் முதலான தலங்களைத் தரிசித்துக்கொண்டு தில்லைக்கூத்தப் பெருமானை வணங்கச் செல்லும் பொழுதில், திருவதிகை வீரட்டானத்திற்கு வந்து, அப்பர் பெருமான் திருத்தொண்டு புரிந்திருந்த தலம் என அதனை மிதிக்க அஞ்சி, அதன்புறத்தேயுள்ள சித்தவடமடத்தில் தங்கித் துயின்றார். அப்போது பெருமான், அந்தணர் உருக்கொண்டு வந்து, சுந்தரர் தலைமீது கால்களை வைத்துப் படுத்திருந்தார். தம்பிரான் தோழர், 'என் தலை மீது கால் வைத்துள்ளீரே' என்று கேட்க, ''திசையறியா வகைசெய்தது என்னுடைய மூப்புக்காண்'' என்று சொல்லக்கேட்டு, வேறு திசையில் தலை வைத்துத் துயின்றார். மீண்டும் திருத்தாளைத் தலைமீது நீட்டியதைக் கண்ட சுந்தரர், 'பல முறையும் என் தலைமீது கால்களை வைக்கும் நீர் யார்?' என்று வினவியவுடன், ''நம்மை அறிந்திலையோ'' எனக் கூறி அந்தணர் வடிவில் வந்த பெருமான் மறைந்தருளினான். பெருமான் திருவருளையறியாது செம்மாந்திருந்தேன் என இரங்கிப் பாடியருளிய திருப்பதிகம்.

பெரியபுராணம் - தடுத்தாட்கொண்ட புராணம்

பாடல் எண் : 227/81
திருத்துறையூர் தனைப்பணிந்து, சிவபெருமான் அமர்ந்து அருளும்
பொருத்தமாம் இடம்பலவும் புக்குஇறைஞ்சி, பொன்புலியூர்
நிருத்தனார் திருக்கூத்துத் தொழுவதற்கு நினைவுற்று
வருத்தம்மிகு காதலினால் வழிக்கொள்வான் மனம்கொண்டார்.

            பொழிப்புரை : திருத்துறையூரை வணங்கி மகிழ்ந்த ஆரூரர், அவ்விடத்தினின்றும் புறப்பட்டுச் சிவபெருமானை வழிபடுதற்கு ஏற்ற திருப்பதிகள் பலவற்றையும் சென்று வணங்கி, அழகிய தில்லைப்பதியின்கண் ஆடும் கூத்தப்பெருமானைத் தொழ நினைந்து அதற்குரிய முயற்சியும், பேரன்பும் மீதூர்ந்தவாறு வழிச் செல்ல மனம் கொண்டார்.


பெ. பு. பாடல் எண் : 228/82
மலைவளர்சந்து அகில்பீலி மலர்பரப்பி மணிகொழிக்கும்
அலைதரு தண் புனல்பெண்ணை ஆறுகடந்து ஏறியபின்
இலகுபசும் புரவி நெடுந் தேர் இரவி மேல்கடலில்
செலஅணையும் பொழுதுஅணையத் திருஅதிகைப் புறத்து அணைந்தார்.

            பொழிப்புரை : மலையின்கண் தோன்றிய சந்தன மரங்களும், அகில் மரங்களும், மயிற்பீலிகளும், மலர்களும் ஆகிய இவைகளைத் தன்மீது பரவச் செய்து, முத்துக்களைக் கரையில் தந்து நிற்கும் அலைகளை உடைத்தாகிய குளிர்ந்த நீரையுடைய பெண்ணை ஆற்றினைக் கடந்து, கரையேறிய பின்பு, விளங்குகின்ற பசிய நிறம் பொருந்திய குதிரை பூட்டிய நீண்ட தேரினையுடைய கதிரவன் மேல்திசைக் கடலில் சென்று அணைதற்குரிய மாலைக்காலம் வர, திருவதிகையின் புறத்து வந்தருளினார்.


பெ. பு. பாடல் எண் : 229/83
உடையஅரசு உலகு ஏத்தும் உழவாரப் படையாளி
விடையவர்க்குக் கைத்தொண்டு விரும்புபெரும் பதியைமிதித்து
அடையும் அதற்கு அஞ்சுவன் என்று அந்நகரில் புகுதாதே
மடைவளர்தண் புறம்பணையில் சித்தவட மடம்புகுந்தார்.

            பொழிப்புரை : ஆளுடைய அரசு என உலகவர் போற்றுகின்ற உழவாரப் படையினையுடைய திருநாவுக்கரசர், இறைவனுக்குக் கைத்தொண்டுகளை விரும்பிச் செய்த பெரும் திருப்பதியாகிய இத்திருவதிகையினுள், காலால் நடந்து செல்வதற்கு நான் அஞ்சுகின்றேன் எனும் நினைவுடையராய், அந்நகரினுள் புகாமல் அதன் புறத்தேயுள்ள சித்தவட மடத்திற்குச் செல்வாராயினர்.


பெ. பு. பாடல் எண் : 230/84
வரிவளர்பூஞ் சோலைசூழ் மடத்தின்கண் வன்தொண்டர்
விரிதிரைநீர்க் கெடிலவட வீரட்டா னத்து இறைதாள்
புரிவு உடைய மனத்தினராய்ப் புடைஎங்கும் மிடைகின்ற
பரிசனமும் துயில்கொள்ளப் பள்ளிஅமர்ந்து அருளினார்.

            பொழிப்புரை : வரிப் பாடல்களை இனிது ஒலிக்கும் வண்டுகளின் கூட்டம் மிக்க சோலைகள் சூழ்ந்த அத்திருமடத்தில், ஆரூரர் விரிந்த அலைகளையுடைய நீர்மிக்க கெடில நதிக்கு வடக்கே இருக்கும் திருவீரட்டானத்தில் வதிந்தருளும் இறைவனின் திருவடிகளை இடையறாது உளங்கொண்ட பண்பினராய், தம்மைச் சூழப் பொருந்திய, அடியவர்கள் துயிலத் தாமும் துயின்றார்.


பெ. பு. பாடல் எண் : 231/85
அதுகண்டு வீரட்டத்து அமர்ந்து அருளும் அங்கணரும்
முதுவடிவின் மறையவராய் முன் ஒருவர் அறியாமே
பொதுமடத்தி னுள் புகுந்து பூந்தாரான் திருமுடிமேல்
பதுமமலர்த் தாள்வைத்துப் பள்ளிகொள்வார் போல்பயின்றார்.

            பொழிப்புரை : ஆரூரர் அவ்வாறு துயில் கொண்டிருப்பதைக் கண்ட இறைவனும், முதிய வடிவு கொண்ட மறையவராய், முன்பு ஒருவரும் அறியாதபடி அப்பொது மடத்தின் உள்ளே புகுந்து, ஆரூரரின் திருமுடியின் மேலே தம் தாமரை மலர் போன்ற திருவடிகளை வைத்துத், தாமும் துயில்கொள்வாரைப் போன்று இருந்தார்.

  
பெ. பு. பாடல் எண் : 232/86
அந்நிலைஆ ரூரன் உணர்ந்து, "அருமறையோய் உன்அடிஎன்
சென்னியில்வைத் தனை" என்னத் "திசை அறியா வகைசெய்தது
என்னுடைய மூப்புக்காண்" என்றுஅருள அதற்கு இசைந்து
தன்முடி அப் பால்வைத்தே துயில் அமர்ந்தான் தமிழ்நாதன்.

            பொழிப்புரை : அவ்வாறு தம்முடிமேல் அடிவைத்திருப்பதை அறிந்த ஆரூரர், அரிய மறைகளை உணர்ந்த பெரியீர்! உம் அடிகளை என்முடிமேல் வைத்தது ஏன்? என வினவ, அதற்கு அவரும், என்னுடைய மூப்பு என்னைத் தெரியாமல் செய்துவிட்டது என்று கூற, தமிழ்த் தலைவராய ஆரூரரும், அதனை ஏற்றுக் கொண்டு, தம் முடியைப் பிறிதோரிடத்திலே வைத்துத் துயில் கொள்வாராயினர்.


பெ. பு. பாடல் எண் : 233/87
அங்கும் அவன் திருமுடிமேல் மீண்டும் அவர் தாள்நீட்டச்
செங்கயல்பாய் தடம்புடைசூழ் திருநாவ லூர் ஆளி
"இங்குஎன்னைப் பலகாலும் மிதித்தனைநீ யார்" என்னக்
கங்கைசடைக் கரந்தபிரான் "அறிந்திலையோ" எனக்கரந்தான்.

            பொழிப்புரை : அவ்வாறு துயில் கொண்ட பிறிதோரிடத்தும், முதியவர் எனக்கூறிய அவர்தம் திருவடிகளை அவர் முடிமேல் மீண்டும் நீட்டவே, செழுமையவாகிய மீன்கள் பாய்ந்து விளையாடுகின்ற பொய்கைகள் சூழ்ந்த திருநாவலூரில் தோன்றிய ஆருரர், இவ்விடத்தே என்னைப் பலகாலும் மிதித்தாய், நீ யார் என்று வினவ, கங்கையைத் தம் திருச்சடையின்கண் ஒருமருங்கே மறைத்து நிற்கச் செய்த பெருமானாகிய மறையவரும், `என்னை நீ அறியாயோ` எனக் கூறி மறைந்தனர்.


பெ. பு. பாடல் எண் : 234/88
"செம்மாந்துஇங்கு யான்அறியாது என்செய்தேன்" எனத்தெளிந்து
"தம்மானை அறியாத சாதியார் உளரே" என்று
அம்மானைத் திருஅதிகை வீரட்டா னத்துஅமர்ந்த
கைம்மாவின் உரியானைக் கழல்பணிந்து பாடினார்.

            பொழிப்புரை : இவ்விடத்து இறுமாப்படைந்து யான் அறியாமல் என்ன செயலைச் செய்துவிட்டேன்! எனக் கலங்கித், தெளிவடைந்து, தந்தையாராயும், திருவதிகை வீரட்டானத்து எழுந்தருளி இருப்பவராயும், யானைத் தோலைப் போர்வையாகக் கொண்டவராயும் உள்ள பெருமானின் திருவடிகளை வணங்கித் `தம்மானை யறியாத சாதியா ருளரே` (தி.7 ப.38 பா.1) எனும் முதற்குறிப்புடைய திருப்பதிகத்தைப் பாடியருளினார்.


பெ. பு. பாடல் எண் : 235/89
பொன்திரளும் மணித்திரளும் பொருகரிவெண் கோடுகளும்
மின்திரண்ட வெண்முத்தும் விரைமலரும் நறுங்குறடும்
வன்திரைக ளால்கொணர்ந்து திருஅதிகை வழிபடலால்
தென்திசையில் கங்கைஎனும் திருக்கெடிலம் திளைத்துஆடி.

            பொழிப்புரை : பொற்பொடிகளின் தொகுதியையும், மணிகளின் தொகுதியையும், போர் செய்தற்குரிய யானைகளின் வெண்மையான தந்தங்களையும், ஒளி மிகுந்த வெண்மையான முத்துக்களையும், நறுமணம் உடைய மலர்களையும், சந்தனக் கட்டைகளையும் வலிய அலை என்னும் கைகளால் கொண்டுவந்து திருவதிகை என்னும் திருப்பதியை வழிபாடு செய்தலால், தென்திசையில் கங்கை என்று அறிஞர்கள் கூறும் திருக்கெடிலப் பேராற்றில் படிந்து முழுகி.


பெ. பு. பாடல் எண் : 236/90
அங்கணரை அடிபோற்றி அங்கு அகன்று மற்று அந்தப்
பொங்குநதித் தென்கரைபோய்ப் போர்வலித்தோள்  மாவலிதன்
மங்கல வேள்வியில் பண்டு வாமனன்ஆய் மண்இரந்த
செங்கண்அவன் வழிபட்ட திருமாணி குழிஅணைந்தார்.

            பொழிப்புரை : அழகிய திருக்கண்களையுடைய பெருமான் திருவடிகளை வணங்கி, அவ்விடத்தினின்றும் நீங்கிப் பொங்குகின்ற நீரையுடைய அப்பேராற்றின் தென்கரை வழியே சென்று, போர் செய்தலில் வலிமை உடைய தோளையுடைய மாவலி என்னும் பேரரசனின் மங்கலமான வேள்வியில் முன்னாளில் மிகக்குறுகிய வடிவாய்ச் சென்று, மூவடி மண் இரந்த திருமால் வழிபாடு செய்த திருமாணிகுழி என்னும் திருப்பதியை அடைந்தருளினார்.

சுந்தரர் திருப்பதிகம்

7. 038  திருவதிகை வீரட்டானம்  பண் - கொல்லிக் கௌவாணம்
                                                திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
தம்மானை அறியாத சாதியார் உளரே,
            சடைமேற்கொள் பிறையானை, விடைமேற்கொள் விகிர்தன்,
கைம்மாவின் உரியானைக் கரிகாட்டில் ஆடல்
            உடையானை விடையானைக் கறைகொண்ட கண்டத்து
அம்மான்தன் அடிக்கொண்டுஎன் முடிமேல்வைத் திடும் என்னும்
            ஆசையால் வாழ்கின்ற அறிவுஇலா நாயேன்
எம்மானை எறிகெடில வடவீரட் டானத்து
            உறைவானை இறைபோதும் இகழ்வன்போல் யானே.

            பொழிப்புரை : உலகில் , தம் தலைவனை உருவறியாத இயல்புடையவரும் உளரோ ! இல்லை ; அங்ஙனமாக , கருமை நிறத்தைக் கொண்ட கண்டத்தையுடைய அப்பெருமான் , தனது திருவடியை எடுத்து என் தலைமேல் வைத்தேவிடுவான் என்னும் விருப்பத்தினாலே உயிர்வாழ்ந்து கொண்டிருக்கிற அறிவில்லாத , நாய்போலும் சிறுமையுடையேனாகிய யான் , சடைமேற் சூடிக்கொண்ட பிறையை உடையவனும் , விடைமேல் ஏறுகின்ற வேறுபாட்டினனும் , யானையின் தோலைப் போர்ப்பவனும் , கரிந்த காட்டில் ஆடுதல் உடையவனும் , விடையைக் கொடியாக உடையவனும் , எம் தலைவனும் ஆகிய அலையெறியும் கெடில நதியின் வடகரைக்கண் உள்ள திரு வீரட்டானத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானை , அவன் அதனைச்செய்ய வந்த சிறிது பொழுதினும் அறியாது இகழ்வேனாயினேன் போலும் ; என்னே என் மடமை இருந்தவாறு! இனியொரு காலும் அது வாயாது போலும் !


பாடல் எண் : 2
முன்னேஎம் பெருமானை மறந்துஎன்கொல், மறவாது
            ஒழிந்துஎன்கொல், மறவாத சிந்தையால் வாழ்வேன்,
பொன்னே,நன் மணியே,வெண் முத்தே,செம் பவளக்
            குன்றமே, ஈசன்என்று உன்னியே புகழ்வேன்,
அன்னே,என் அத்தா,என்று அமரரால் அமரப்
            படுவானை, அதிகைமா நகருள்வாழ் பவனை,
என்னேஎன் எறிகெடில வடவீரட் டானத்து
            உறைவானை இறைபோதும் இகழ்வன்போல் யானே.

            பொழிப்புரை : எம்பெருமான் என்னை ஆட்கொள்வதற்கு முன்னே அவனை யான் மறந்து இழந்ததென் ! மறவாதிருந்து பெற்றதென் ! ஆட்கொண்ட பின்பு மறவாத மனத்தொடு வாழ்வேனாயினேன் . அன்றியும் , ` பொன்னே ! நல்ல மாணிக்கமே ! வெண்மையான முத்தே ! செம்மையான பவள மலையே ! முதல்வனே !` என்று , அவனை நினைத்துப் பாடுவேன் . அங்ஙனமாக , ` எங்கள் தாய்போல்பவனே , தந்தை போல்பவனே ` என்று தேவர்களால் விரும்பி வழிபடப்படுபவனும், திருவதிகை மாநகரில் வாழ்பவனும் , அலையெறிகின்ற கெடில நதியின் வடகரைக்கண் உள்ள திருவீரட்டானத்தில் எழுந்தருளி யிருக்கின்றவனும் ஆகிய என் இறைவனை , அவன் தனது திருவடியை என் தலைமேற் சூட்டவந்த சிறிதுபொழுதினும் யான், அறியாது இகழ் வேனாயினேன் போலும் ; என்னே என் மடமை இருந்தவாறு ! இனி யொருகாலும் அது வாயாது போலும் !


பாடல் எண் : 3
விரும்பினேற்கு எனதுஉள்ளம் விடகிலா விதியே,
            விண்ணவர்தம் பெருமானே, மண்ணவர்நின்று ஏத்தும்
கரும்பே,என் கட்டி,என்று உள்ளத்தால் உள்கி,
            காதல்சேர் மாதராள் கங்கையாள் நங்கை
வரும்புனலும் சடைக்குஅணிந்து, வளராத பிறையும்,
            வரிஅரவும் உடன்துயில வைத்துஅருளும் எந்தை,
இரும்புனல்வந்து எறிகெடில வடவீரட் டானத்து
            உறைவானை இறைபோதும் இகழ்வன்போல் யானே.

            பொழிப்புரை : காதல் பொருந்திய உமையவள் , உடம்பில் ஒரு கூறாய் இருத்தலின் , கங்கையாளாகிய நங்கை உருமாறி வந்த நீரையும் சடையில் அணிந்து , அதனோடு இளைய பிறையையும் , கீற்றுக்கள் பொருந்திய பாம்பையும் ஒன்றாய் உறங்கும்படி வைத்தருளிய எம் தந்தையாகிய , மிக்க நீர் வந்து மோதுகின்ற கெடில நதியின் வடகரைக் கண் உள்ள திருவீரட்டானத்தில் எழுந்தருளியிருக்கின்ற இறைவனை , ` விண்ணுலகத்தார்க்குத் தலைவனே , மண்ணுலகத்தவர் எதிர் நின்று துதிக்கும் கரும்பே , என் கட்டியே ` என்று மனத்தால் நினைந்து விரும்பிய எனக்கு , வினை என் உள்ளத்தை விட்டு நீங்காமையால் , அவன் தனது திருவடியை என் தலைமேற் சூட்ட வந்த சிறுபொழுதினும் யான் அறியாது அவனை இகழ்வேனாயினேன் போலும் ; என்னே என் மடமை இருந்தவாறு! இனியொருகாலும் அது வாயாது போலும் !


பாடல் எண் : 4
நால்தானத்து ஒருவனை, நான்ஆய பரனை,
            நள்ளாற்று நம்பியை, வெள்ளாற்று விதியை,
காற்றானை, தீயானை, கடலானை, மலையின்
            தலையானை, கடுங்கலுழிக் கங்கைநீர் வெள்ள
ஆற்றானை, பிறையானை, அம்மானை, எம்மான்
            தம்மானை, யாவர்க்கும் அறிவுஅரிய செங்கண்
ஏற்றானை, எறிகெடில வடவீரட் டானத்து
            உறைவானை இறைபோதும் இகழ்வன்போல் யானே.

            பொழிப்புரை : மும்மூர்த்திகட்கு மேலே உள்ள ஒப்பற்றவனும் , என்னில் வேறறக் கலந்து நிற்கும் முதல்வனும், திருநள்ளாற்றில் உள்ள சிறந்தவனும் , வெள்ளாற்றில் உள்ள அறநெறியாகியவனும் , ` காற்று , தீ , கடல் ` என்னும் பொருள்களாய் உள்ளவனும் , கயிலாயத்தின் உச்சியில் இருப்பவனும் , வேகமான ` கங்கையாறு ` என்னும் வெள்ள நீரைத் தாங்கியவனும் , பிறையைச் சூடினவனும் , பெரியோனும் , என் தந்தைக்கும் தலைவனும் , யாவராலும் அறிதற்கு அரிய , சிவந்த கண்களையுடைய இடபவாகனனும் , அலையெறிகின்ற கெடிலநதியின் வடகரைக்கண் உள்ள திருவீரட்டானத்தில் எழுந்தருளியிருக்கின்றவனும் ஆகிய இறைவனை , அவன் தனது திருவடியை என் தலைமேல் சூட்ட வந்த சிறிதுபோதினும் , யான் அறியாது இகழ்வேனாயினேன் போலும் ; என்னே என் மடமை இருந்தவாறு ! இனியொருகாலும் அது வாயாதுபோலும் !


பாடல் எண் : 5
சேந்தர்தாய் மலைமங்கை திருநிறமும் பரிவும்
            உடையானை அதிகைமா நகருள்வாழ் பவனை,
கூந்தல்தாழ் புனல்மங்கை குயில்அன்ன மொழியாள்
            சடையிடையில் கயல்இனங்கள் குதிகொள்ளக் குலாவி
வாய்ந்தநீர் வரஉந்தி மராமரங்கள் வணக்கி
            மறிகடலை இடங்கொள்வான் மலைஆரம் வாரி
ஏந்துநீர் எறிகெடில வடவீரட் டானத்து
            உறைவானை இறைபோதும் இகழ்வன்போல் யானே.

            பொழிப்புரை : ` முருகப்பிரானார் , அவர்க்குத் தாயாகிய மலை மகள் ` என்னும் இவர்களது அழகிய நிறத்தையும் , அன்பையும் ஏற்றுடையவனும் , திருவதிகைமாநகரில் வாழ்கின்றவனும் , தாழ்ந்த கூந்தலையும் , குயில் போலும் மொழியினையும் உடைய நீர்மகளைச் சடையிடத்திற் கொண்ட , கயல் மீனினது கூட்டங்கள் குதிகொள்ளுதலால் விளக்கமுற்றுப் பொருந்திய நீர் பெருகி வர , அதனிடத்து உயர்ந்தெழுகின்ற அலைகள் மராமரங்களை முரித்துத் தள்ளிக்கொண்டு , அலை மறிகின்ற கடலை இடமாகக் கொள்ளும்படி , மலையிடத்துள்ள சந்தன மரங்களை வாரிக் கொணர்ந்து வீசுகின்ற கெடில நதியின் வடகரைக்கண் உள்ள திருவீரட்டானத்தில் எழுந்தருளி யிருக்கின்றவனும் ஆகிய இறைவனை , அவன் தனது திருவடியை என் தலைமேல் சூட்டவந்த சிறிது பொழுதினும் யான் , அறியாது இகழ்வேனாயினேன் போலும் ; என்னே என் மடமை இருந்தவாறு ! இனியொருகாலும் அது வாயாது போலும்!

பாடல் எண் : 6
மைம்மான மணிநீல கண்டத்துஎம் பெருமான்,
            வல்ஏனக் கொம்புஅணிந்த மாதவனை, வானோர்
தம்மானை, தலைமகனை, தண்மதியும் பாம்பும்
            தடுமாறும் சடையானை, தாழ்வரைக்கை வென்ற
வெம்மான மதகரியின் உரியானை, வேத
            விதியானை, வெண்ணீறு சண்ணித்த மேனி
எம்மானை, எறிகெடில வடவீரட் டானத்து
            உறைவானை இறைபோதும் இகழ்வன்போல் யானே.

            பொழிப்புரை : மேகம்போலும் , பெருமையையுடைய கண்டத்தை யுடைய எம்பெருமானும் , வலிய பன்றியின் கொம்பை அணிந்த பெரிய தவக்கோலத்தை யுடையவனும் , தேவர்கள் தலைவனும் , யாவர்க்குந் தலைவனும் , குளிர்ந்த சந்திரனும் பாம்பும் ஒன்றை யொன்று அஞ்சி உழல்கின்ற சடையை யுடையவனும் , தாழ்வரைக்கண் திரியும் துதிக்கையை யுடைய , வெற்றி பொருந்திய , கொடிய . பெரிய , மதங்கொண்ட யானையின் தோலை உடையவனும் , வேதத்தில் சொல்லப்பட்ட நெறிமுறைகளாய் உள்ளவனும் , வெள்ளிய நீறு பூசப் பட்ட திருமேனியை உடைய எம் தலைவனும் , அலையெறிகின்ற கெடில நதியின் வடபால் உள்ள திருவீரட்டானத்தில் எழுந்தருளி யுள்ளவனும் ஆகிய இறைவனை , அவன் தனது திருவடியை என் தலை மேல் சூட்டவந்த சிறிது போதினும் , யான் , அறியாது இகழ் வேனாயினேன் போலும் ; என்னே என் மடமை இருந்தவாறு ! இனி யொருகாலும் அது வாயாது போலும்!


பாடல் எண் : 7
வெய்துஆய வினைக்கடலில் தடுமாறும் உயிர்க்கு
            மிகஇரங்கி அருள்புரிந்து, வீடுபேறு ஆக்கம்
பெய்தானை, பிஞ்ஞகனை, மைஞ்ஞவிலும் கண்டத்து
            எண்தோள்எம் பெருமானை, பெண்பாகம் ஒருபால்
செய்தானை, செக்கர்வான் ஒளியானை, தீவாய்
            அரவுஆடு சடையானை, திரிபுரங்கள் வேவ
எய்தானை, எறிகெடில வடவீரட் டானத்து
            உறைவானை இறைபோதும் இகழ்வன்போல் யானே.

            பொழிப்புரை : கொடிதாகிய , ` வினை ` என்னுங் கடலில் வீழ்ந்து தடுமாறும் எத்துணையோ உயிர்கட்குப் பெரிதும் இரங்கித் தனது திரு வருளைக் கொடுத்து வீடுபேறாகிய நலத்தை வழங்கினவனும் , தலைக் கோலங்களை உடையவனும் , மைபோலுங் கண்டத்தையும் , எட்டுத் தோள்களையும் உடைய எம்பெருமானும் , தனது திருமேனியின் ஒரு கூற்றைப் பெண் கூறாகச் செய்தவனும் , செவ்வானத்தின் ஒளி போல் பவனும் , தீதாகிய வாயினையுடைய பாம்பு படமெடுத்து ஆடுகின்ற சடையையுடையவனும் , மூன்று ஊர்கள் வெந்தொழியுமாறு அம்பை எய்தவனும் , அலையெறியும் கெடில நதியின் வடபால் உள்ள திரு வீரட்டானத்தில் எழுந்தருளியிருக்கின்றவனும் ஆகிய இறைவனை , அவன் தனது திருவடியை என் தலைமேற் சூட்டவந்த சிறிது போதினும் , யான் , அறியாது இகழ்வேனாயினேன் போலும் ; என்னே என் மடமை இருந்தவாறு! இனியொருகாலும் அது வாயாது போலும் !


பாடல் எண் : 8
பொன்ஆனை, மயிலூர்தி முருகவேள் தாதை,
            பொடிஆடு திருமேனி நெடுமாறன் முடிமேல்
தென்ஆனைக் குடபாலின் வடபாலின் குணபால்
            சேராத சிந்தையான், செக்கர்வான் அந்தி
அன்னானை, அமரர்கள்தம் பெருமானை, கருமான்
            உரியானை, அதிகைமா நகருள்வாழ் பவனை,
என்ஆனை, எறிகெடில வடவீரட் டானத்து
            உறைவானை இறைபோதும் இகழ்வன்போல் யானே.

            பொழிப்புரை : ` அழகிய யானை முகத்தையுடைய விநாயகனும் , மயிலூர்தியை உடைய முருக வேளும் ` என்னும் இவர்க்குத் தந்தையும் , ஞானசம்பந்தரால் திருநீற்றில் மூழ்கிய திருமேனியையும் , ` மேற்கு , வடக்கு , கிழக்கு ` என்னும் திசைகளில் உள்ள பிற நாடுகளின் மேற் செல்லும் மண்ணாசை யற்ற மனத்தையும் உடையவனாய்ச் சிறப் பெய்திய நெடுமாறனது முடியின்மேல் நின்ற தென்னாட்டவனும் , அந்திச் செவ்வானம் போலும் நிறத்தை உடையவனும் , தேவர் களுக்குத் தலைவனும் , யானைத் தோலைப் போர்த்தவனும் , திரு வதிகை மாநகரில் வாழ்பவனும் , எனக்கு உரியவனும் , அலையெறியும் கெடில நதியின் வடபால் உள்ள திருவீரட்டானத்தில் எழுந்தருளி யிருப்பவனும் ஆகிய இறைவனை , அவன் தனது திருவடியை என் தலைமேற் சூட்ட வந்த சிறிது பொழுதினும் யான் , அறியாது இகழ் வேனாயினேன் போலும் ; என்னே என் மடமை இருந்தவாறு ! இனி யொருகாலும் அது வாயாது போலும் !


பாடல் எண் : 9
திருந்தாத வாள்அவுணர் புரமூன்றும் வேவச்
            சிலைவளைவித்து ஒருகணையால் தொழில்பூண்ட சிவனை,
கருந்தாள மதக்களிற்றின் உரியானை, பெரிய
            கண்மூன்றும் உடையானை, கருதாத அரக்கன்
பெருந்தோள்கள் நால்ஐந்தும் ஈர்ஐந்து முடியும்
            உடையானைப் பேய்உருவம் மூன்றும்உற மலைமேல்
இருந்தானை, எறிகெடில வடவீரட் டானத்து
            உறைவானை இறைபோதும் இகழ்வன்போல் யானே.

            பொழிப்புரை : வில்லை வளைத்து எய்த ஓர் அம்பினாலே , பகைமை கொண்ட கொடிய அசுரர்களது ஊர்கள் மூன்றும் வெந்தொழி யுமாறு போர்த்தொழிலை மேற்கொண்ட சிவபெருமானும் , பெரிய கால்களையுடைய மதம் பொருந்திய யானையின் தோலைப் போர்த்தவனும் , பெரிய மூன்று கண்களையும் உடையவனும் , தன்னை மதியாத அரக்கனாகிய , இருபது பெரிய தோள்களையும் , பத்துத் தலைகளையும் உடைய இராவணனது அச்சந்தரும் உருவத்தை ஊன்றிய , கயிலாய மலையின்மேல் நீங்காது இருப்பவனும் , அலை யெறியும் கெடில நதியின் வடபால் உள்ள திருவீரட்டானத்தில் எழுந்தருளி யிருக்கின்றவனும் ஆகிய இறைவனை அவன் தனது திருவடியை என் முடிமேல் சூட்டவந்த சிறிதுபொழுதினும் , யான், அறியாது, இகழ்வேனாயினேன் போலும்; என்னே என் மடமை இருந்தவாறு! இனியொருகாலும் அது வாயாது போலும்!


பாடல் எண் : 10
என்பினையே கலனாக அணிந்தானை, எங்கள்
            எருதுஏறும் பெருமானை, இசைஞானி சிறுவன்,
வன்பனைய வளர்பொழில்சூழ் வயல்நாவ லூர்க்கோன்,
            வன்தொண்டன், ஆரூரன், மதியாது சொன்ன
அன்பனை, யாவர்க்கும் அறிவுஅரிய அத்தர்
            பெருமானை, அதிகைமா நகருள்வாழ் பவனை,
என்பொன்னை, எறிகெடில வடவீரட் டானத்து
            உறைவானை இறைபோதும் இகழ்வன்போல் யானே.

            பொழிப்புரை : எலும்பையே அணிகலங்களாக அணிபவனும், விடையை ஏறுகின்ற எங்கள் பெருமானும் , இசைஞானிக்கு மகனும் , வளர்ந்த வலிய பனைகளையுடைய சோலைகள் சூழ்ந்த , வயல்கள் நிறைந்த திருநாவலூர்க்குத் தலைவனும் , வன்றொண்டனுமான நம்பியாரூரனாகிய என்னால் , மதியாது சில சொல்லப்பட்ட அன்புருவினனும் , யாவருக்கும் அறிதற்கு அரிய தேவர் பெருமானும் , திருவதிகை மாநகரில் வாழ்பவனும், எனக்குரிய பொன்போன்றவனும் , அலையெறியும் கெடில நதியின் வடபால் உள்ள திரு வீரட்டானத்தில் எழுந்தருளியிருப்பவனும் ஆகிய இறைவனை , அவன் தனது திருவடியை என் தலைமேல் சூட்டவந்த சிறிதுபொழுதினும் , யான் , அறியாது இகழ்வேனாயினேன் போலும் ; என்னே என் மடமை இருந்தவாறு ! இனியொருகாலும் அது வாயாது போலும்!

                                                            திருச்சிற்றம்பலம்No comments:

Post a Comment

முயலை விட்டுக் காக்கையின் பின் போதல் கூடாது

  முயல் விட்டு ,  காக்கைப் பின் போவது கூடாது. -----        இருப்பதை விட்டுப் பறப்பதைப் பிடிப்பது கூடாது என்பார்கள்.  எளிமையாகச் செய்யக்கூடிய...