திருச்செந்தூர் --- 0041. கமலமாதுடன்




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

கமல மாதுடன் (திருச்செந்தூர்)

முருகா!
இனியநாத சிலம்பு புலம்பிடும்
திருவடித் தாமரையைத் தந்தருள்வீர்.


தனன தானன தந்தன தந்தன
     தனன தானன தந்தன தந்தன
     தனன தானன தந்தன தந்தன ...... தனதான


கமல மாதுடன் இந்திரை யுஞ்சரி
     சொலவொ ணாதம டந்தையர் சந்த
      களப சீதள கொங்கையில் அங்கையில் ......இருபோதேய்

களவு நூல்தெரி வஞ்சனை அஞ்சன
     விழியின் மோகித கந்தசு கந்தரு
     கரிய ஓதியில் இந்துமு கந்தனில் ...... மருளாதே

அமல மாகிய சிந்தைய டைந்தகல்
     தொலைவி லாதஅ றம்பொருள் இன்பமும்
     அடைய ஓதியு ணர்ந்துத ணந்தபின் ...... அருள்தானே

அறியு மாறுபெ றும்படி அன்பினின்
     இனிய நாதசி லம்புபு லம்பிடும்
     அருண ஆடக கிண்கிணி தங்கிய ...... அடிதாராய்

குமரி காளிப யங்கரி சங்கரி
     கவுரி நீலிப ரம்பரை அம்பிகை
     குடிலை யோகினி சண்டினி குண்டலி ...... எமதாயி

குறைவி லாள்உமை மந்தரி அந்தரி
     வெகுவி தாகம சுந்தரி தந்தருள்
     குமர மூஷிக முந்திய ஐங்கர ...... கணராயன்

மமவி நாயகன் நஞ்சுமிழ் கஞ்சுகி
     அணிக ஜானன விம்பனொர் அம்புலி
     மவுலி யானுறு சிந்தையு கந்தருள் ...... இளையோனே

வளரும் வாழையு மஞ்சளும் இஞ்சியும்
     இடைவி டாதுநெ ருங்கிய மங்கல
     மகிமை மாநகர் செந்திலில் வந்துறை ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


கமல மாதுடன் இந்திரையும், சரி
     சொல ஒணாத மடந்தையர், சந்த
      களப சீதள கொங்கையில் அங்கையில் ....இருபோதுஏய்,

களவு நூல் தெரி வஞ்சனை அஞ்சன
     விழியின், மோகித கந்த சுகந்தரு
     கரிய ஓதியில், இந்துமு கந்தனில் ...... மருளாதே,

அமலம் ஆகிய சிந்தை அடைந்து, கல்
     தொலைவு இலாத அறம்பொருள் இன்பமும்
     அடைய ஓதி உணர்ந்து தணந்த பின், ...... அருள்தானே

அறியுமாறு பெறும்படி அன்பினின்
     இனிய நாத சிலம்பு புலம்பிடும்
      அருண ஆடக கிண்கிணி தங்கிய ...... அடிதாராய்.

குமரி, காளி, பயங்கரி, சங்கரி,
     கவுரி, நீலி, பரம்பரை, அம்பிகை,
     குடிலை, யோகினி, சண்டினி, குண்டலி, ...... எமதுஆயி

குறைவு இலாள், உமை, மந்தரி, அந்தரி,
     வெகுவித ஆகம சுந்தரி தந்து அருள்
     குமர! மூஷிகம் உந்திய ஐங்கர ...... கணராயன்,

மம விநாயகன், நஞ்சு உமிழ் கஞ்சுகி
     அணி கஜானன விம்பன், ஒர் அம்புலி
     மவுலியான் உறு சிந்தை உகந்து அருள் ......இளையோனே!

வளரும் வாழையும் மஞ்சளும் இஞ்சியும்
     இடை விடாது நெருங்கிய மங்கல
     மகிமை மாநகர் செந்திலில் வந்துஉறை..... பெருமாளே.


பதவுரை

      குமரி --- என்றும் அகலாத இளம் பருவத்தையுடைய கன்னிப்பெண்ணும்,

     காளி --- கரிய நிறத்தை உடையவளும்,

     பயங்கரி --- (பயம் - அரி_அடியவர் பயத்தை நீக்குபவளும்,

     சங்கரி --- ஆன்மாக்களுக்குச் சுகத்தைச் செய்பவரும்,

     கவுரி --- பொன் நிறத்தை உடையவளும்,

     நீலி --- நீல நிறத்தை உடையவளும்,

     பரம்பரை --- பெரிய பொருள்களுக்கெல்லாம் பெரிய பொருளாக வீற்றிருப்பவளும்,

     அம்பிகை --- உலக மாதாவும்,

     குடிலை --- சுத்தமாயையும்,

     யோகினி --- யோகினி என்னும் தெய்வமாக இருப்பவளும்,

     சண்டினி ---- பாவிகளுக்குக் கொடியவளாகத் திகழ்பவளும்,

     குண்டலி --- குண்டலி சத்தியும்,

     எமது ஆயி --- எங்கள் தாயும்,

     குறைவு இலாள் --- குறைவில்லாதவளும்,

     உமை --- உமாதேவியும்;

     மந்தரி --- சுவர்க்கலோகத்தை அருள்பவரும்

     அந்தரி --- முடிவில்லாதவளும்,

     வெகுவித ஆகம சுந்தரி --- பலவகைப்பட்ட சிவாகமங்களால் துதிக்கப்படும் கட்டழகு உடையவளும் ஆகிய பார்வதி தேவியார்,

     தந்து அருள் குமர --- பெற்றருளிய புதல்வரும்,

     மூஷிகம் உந்திய ஐங்கர --- பெருச்சாளியின் மீது எழுந்தருளியவரும், ஐந்து கரங்களை உடையவரும்,

     கணராயன் --- கணங்களுக்கெல்லாம் தலைவரும்,

     மம விநாயகன் --- எமது விநாயகக் கடவுளும்,

     நஞ்சு உமிழ் கஞ்சுகி --- விஷத்தைக் கக்கும் சர்ப்பத்தை,

     அணி கஜ ஆனன --- ஆபரணமாகத் தரித்துக்கொண்டுள்ள யானை முகத்தையுடையவரும்,

     விம்பன் --- ஒளியை உடையவரும்,

     ஒரு அம்புலி மவுலியான் --- ஒப்பற்ற பிறைச்சந்திரனைச் சடைமுடியில் தரித்துக் கொண்டுள்ளவருமான விநாயமூர்த்தி,

     உறு சிந்தை உகந்து அருள் இளையோனே --- மிகவும் மனமகிழ்ந்து அருளத் தக்க  இளைய பிள்ளையாரே!

      வளரும் வாழையும் மஞ்சளும் இஞ்சியும் --- (நீர் வளத்தால்) செழித்து வளர்ந்துள்ள வாழையும் மஞ்சளும் இஞ்சியும்,

     இடைவிடாது நெருங்கிய --- இடைவெளியின்றி நெருங்கியுள்ளதும்,

     மங்கல - மங்கலத்தை உடையதும்,

     மகிமை --- மகிமையுடையதும்,

     மா நகர் --- பெரிய நகரமும் ஆகிய,

     செந்திலில் வந்து உறை பெருமாளே --- செந்திலம்பதியில் (அடியார்பொருட்டு) வந்து எழுந்தருளியுள்ள பெருமையின் மிக்கவரே!

      கமல மாதுடன் --- தாமரைமீது வாழுகின்ற வாணி தேவியுடன்,

     இந்திரையும் --- இலக்குமியையும்

     சரி சொல ஒணாத மடந்தையர் --- அழகில்  நிகர் என்று சொல்லுதற்கு ஒணாத பேரழகுடைய மாதர்களுடைய

     சந்தன களப சீதள கொங்கையில் --- சந்தனத்தையும் கலவைச் சாந்தையும் பூசிக்கொண்டுள்ள குளிர்ந்த தனங்களின் மீதும்,

     அம் கையில் --- அழகிய கரங்களிலும்,

     இரு போது ஏய் --- இரவு பகலாகிய இரு வேளைகளிலும் பொருந்தியிருந்து,

     களவு நூல் தெரி வஞ்சனை அஞ்சன விழியில் --- மதன நூல்களைத் தெரிந்ததும், வஞ்சனையைச் செய்வதுமாகிய மை தீட்டிய கண்களிலும்,

     மோகித கந்த சுகந்தரு கரிய ஓதியில் --- மோகத்தை உண்டுபண்ணுவதும் வாசனை உடையதும் சுகத்தைத் தருவதுமாகிய கரிய நிறத்தையுடைய கூந்தலிலும்,

     இந்து முகந்தனில் --- சந்திரனைப் போன்ற முகத்திலும்,

     மருளாதே --- அவைகளைக் கண்டு மயக்கத்தை அடையாமல்,

     அமலம் ஆகிய சிந்தை அடைந்து --- மலம் நீங்கிய பரிசுத்தமாகிய சிந்தையை அடைந்து,

     அகல் தொலைவு இலாத அறம் பொருள் இன்பமும் --- விசாலமானதும் அழிவில்லாததுமாகிய அறம் பொருள் இன்பம் என்கின்ற புருஷார்த்தங்களும்,

     அடைய ஓதி உணர்ந்து --- என்னை வந்து அடையும்படி அறிவு நூல்களை ஓதியுணர்ந்து,

     தணந்த பின் --- ஆசைகளின் கட்டு நீங்கியபின்,

     அருள் தானே அறியுமாறு பெறும்படி --- தேவரீரது திருவருளின் எளிமையைத் தானாகவே அறியும் வழியை அடியேன் அடையுமாறு.

     இனிய நாத சிலம்பு புலம்பிடு --- இனிமையான ஓசையையுடைய சிலம்பு ஒலிக்கின்றதும்,

     அருண ஆடக் கிண்கிணி தங்கிய அடி அன்பினில் தாராய் --- சிவந்த நிறத்தை உடையதும் பொன்னாலாகிய சதங்கைகள் அணியப்பெற்றதும் ஆகிய திருவடியை அன்போடு தந்தருளுவீர்.


பொழிப்புரை

         என்றும் இளமையாக இருக்கும் கன்னிப் பெண்ணும் துர்க்கையும், அடியவர்களது பயத்தை அகற்றுபவளும், ஆன்மாக்களுக்கு இன்பத்தை வழங்குபவளும், பொன்னிறத்தை உடையவளும், நீல நிறத்தை உடையவளும், பராத்பரியும், உலக மாதாவும், சுத்தமாயையும், யோகினி என்னும் தேவதையாக இருப்பவளும், பாவிகளுக்குப் பயத்தை உண்டு பண்ணுபவளும், குண்டலி சத்தியும், ஆன்மாக்களாகிய எங்களுடைய அன்னையும், குறைவு இல்லாதவளும், உமாதேவியும், சொர்க்கலோகத்தை நல்குபவளும், முடிவு இல்லாதவளும், பலவகைப்பட்ட சிவாகமங்களால் துதிக்கப்படுகின்ற கட்டழகு உடையவளுமாகிய பார்வதி அம்மையார் பெற்றருளிய குமாரரும், பெருச்சாளியின் மீது எழுந்தருளி வருபவரும், ஐந்து திருக்கரங்களை உடையவரும், கணங்களுக்குத் தலைவரும், எமது விநாயக மூர்த்தியும், விஷத்தைக் கக்கும் பாம்பை ஆபரணமாகத் தரித்துக் கொண்டவரும், யானை முகத்தையுடையவரும், ஒப்பற்ற பிறைச் சந்திரனைத் தரித்த சடா மவுலியை யுடையவருமாகிய மகா கணபதி மிகவும் மகிழ்ந்தருளுகின்ற இளைய பிள்ளையாரே!

         நீர்வளத்தால் வாழையும், மஞ்சளும், இஞ்சியும் இடைவிடாது நெருங்கி யுள்ளதும், மகிமையும் இலக்குமிகரமும் உடையதுமாகிய திருச்செந்தூர் என்னும் பெரிய தலத்தில் அடியார் பொருட்டு வந்து எழுந்தருளியுள்ள பெருமையின்
மிக்கவரே!

         கலைமகளும் மலைமகளும் நிகரென்று சொல்லுதற்கு ஒண்ணாத பேரழகு உடைய மகளிரது சந்தனக் கலவைச் சாந்துகளை அணிந்துள்ள குளிர்ந்த தனபாரங்களிலும், அழகிய கரங்களிலும், இரவு பகலாய்ப் பொருந்தியிருந்து மதன நூல்களை உணர்ந்து, வஞ்சனையைச் செய்யும் மைதீட்டிய கண்களிலும், மோகத்தைத் தருவதும், பரிமளத்தை உடையதும், சுகத்தை தருவதுமாகிய கரிய கூந்தலிலும், சந்திரனை ஒத்த முகாரவிந்தத்திலும் மயக்கத்தை அடையாமல், மலம் நீங்கிய பரிசுத்தமான சிந்தையை அடைந்து, பரந்து உள்ளதும் அழிவு அற்றதுமாகிய அறம் பொருள் இன்பம் என்ற புருஷார்த்தங்களை அடைய அறிவு நூல்களை ஓதியுணர்ந்து (ஆசைக் கட்டுகளினின்றும்) நீங்கிய பின், தேவரீர் திருவருளைத் தானாகவே அறியும் வழியை அடையுமாறு இனிய நாதங்களோடு கூடிய சிலம்புகள் ஒலிப்பதும், சிவந்த நிறத்தோடு கூடியதும், பொன்னாலாகிய கிண்கிணிகளை அணிந்து உள்ளதும் ஆகிய திருவடிகளை அடியேனுக்கு அன்புடன் தந்தருள்வீர்.

விரிவுரை

அமலமாகிய சிந்தை ---

     ஆணவ அழுக்கு நீங்கப் பெற்ற படிகம் போன்ற தூய மனத்தை அடைந்தவர்க்கே இறைவன் திருவடிப்பேறு உண்டாகும். அத்தகைய அமலமாகிய சிந்தை அடைந்தவர்க்கு அறம் பொருள் இன்பமாகிய புருஷார்த்தங்கள் உண்டாகும்.

இனிய நாத சிலம்பு ---

     முருகப்பெருமான் ஒருவராலும் எதிர்க்க வொண்ணாத சூராதி அவுணர்களை அழித்த வீரமூர்த்தியாதலால் அவருடைய திருவடிகளில் வீரச் சிலம்புகள் இனிமையாக ஒலித்துக் கொண்டிருக்கின்றன.

குமரி ---

     உமாதேவியார் எல்லா உலகங்களையும் ஈன்றும், என்றும் குமரியாகவே விளங்குகின்றனர்.

அகிலாண்ட கோடி ஈன்ற அன்னையே!
பின்னையும் கன்னி என மறைபேசும்
     ஆனந்த ரூ பமயிலே”                --- தாயுமானார்.

பயங்கரி ---

அடியாரது பயத்தை அகற்றுபவர்.

இறுகிய சிறுபிறை எயிறு உடை யமபடர்
     எனதுயிர் கொளவரின்
 யான் ஏங்குதல் கண்டு எதிர்
     தான் ஏன்று கொளும் குயில்" --- தேவேந்திர சங்க வகுப்பு.

எமது ஆயி ---

ஆன்மாக்களை எல்லாம் ஒருங்கே ஈன்ற உலகமாதா. ஆதலால் எங்கள் தாய் என்றனர்.

உதர கமலத்தினிடை முதிய புவன த்ரயமும்
 உகமுடிவில் வைக்கும் உமையாள் பெற்ற பாலகனும்” --- வேடிச்சி காவலன் வகுப்பு

வெகு விதாகம சுந்தரி ---

     சகல வேதாகம மந்திர வடிவாய் அம்பிகை விளங்குகின்றார்.

தமருக பரிபுர ஒலிகொடு நடம் நவில்
     சரணிய சதுர்மறை
தாதாம்புய மந்திர வேதாந்த பரம்பரை”    --- தேவேந்திர சங்க வகுப்பு.

அக்ஷர லக்ஷ ஜபத்தர் க்ரமத்திடு
     சக்ர தலத்தி த்ரியக்ஷி சடக்ஷிரி”     --- பூதவேதாள வகுப்பு.

சிந்தை உகந்து அருள் ---

     விநாயகப் பெருமான் தமது தம்பியாகிய குமாரக் கடவுளை மனமகிழ்ந்து தழுவி இன்புறுவர் என்பதனைத் திருப்போரூர்ச் சந்நிதி முறையில் சிதம்பர சுவாமிகள் கூறுமாறு காண்க.

ஆதரவாய் அடியவருக்கு அருள்சுரக்கும்
         ஐங்கரத்தோன் அன்பு கூர்ந்து
மாதவமே எனஅழைத்து, புயத்துஅணைக்கத்
         திருவுளத்து மகிழும் கோவே,
ஏதம்உறாது அடியேனைக் காத்துஅளிப்பது
         உன்கடனாய் இசைப்பது என்னே,
போதமலர் கற்பகமே, போரூர்வாழ்
         ஆறுமுகப் புனித வேளே. 

கருத்துரை

முருகா!
இனியநாத சிலம்பு புலம்பிடும் திருவடித் தாமரையைத் தந்தருள்வீர்.






No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...