திரு அச்சிறுபாக்கம்


திரு அச்சிறுபாக்கம்


     தொண்டை நன்னாட்டுத் திருத்தலம்

     அச்சரப்பாக்கம் என்று வழங்கப்படுகின்றது.

         அச்சிறுபாக்கம் இரயில் நிலையம் சென்னை எழும்பூர் - விழுப்புரம் இரயில் வழியில் இருக்கிறது. அச்சிறுபாக்கம் சிறிய இரயில் நிலையம் ஆனதால் அநேக இரயில்கள் இங்கு நிற்பதில்லை. ஆகையால், அச்சிறுபாக்கத்திறகு முந்தைய இரயில் நிலையமான மேல்மருவத்தூரில் இறங்கி, அங்கிருந்து ஆட்டோவில் சுமார் 4 கி.மி. பயணம் செய்தால் அச்சிறுபாக்கம் கோயிலை அடையலாம்.

     சென்னையில் இருந்து செங்கல்பட்டு, மதுராந்தகம், மேல்மருவத்தூர் வழியாக திண்டிவனம் செல்லும் சாலையில் மேல்மருவத்தூரை அடுத்து வரும் நிறுத்தம் அச்சிறுபாக்கம். அங்கு இறங்கி இடப்பக்கம் பிரியும் ஊருக்குள் செல்லும் சாலையில் சுமார் அரை கி.மி. சென்றால் கோயிலை அடையலாம். சென்னையில் இருந்து சுமார் 96 கி.மி. தொலைவில் இத் திருத்தலம் உள்ளது.


இறைவர்         : பார்க்கபுரீசுவரர், ஆட்சீசுவரர், ஆட்சிகொண்டநாதர்,                                                                                        முல்லைக்கானமுடையார்.

இறைவியார்       ;    இளங்கிளியம்மை, சுந்தரநாயகிபாலசுகாம்பிகை               
                
தல மரம்          : சரக்கொன்றை.

தீர்த்தம்               : சங்கு தீர்த்தம், சிம்ம தீர்த்தம்.

தேவாரப் பாடல்கள்    : சம்பந்தர் - பொன்திரண்டன்ன புரிசடை

        
     வித்யுன்மாலி, தாருகாட்சன், கமலாட்சன் என்ற மூன்று அசுரர்கள் முறையே பொன், வெள்ளி, இரும்பு ஆகியவற்றால் மூன்று கோட்டைகளைக் கட்டி வாழ்ந்து வந்தனர். இந்த கோட்டைகளுக்கு விமானம் போல் நினைத்த இடங்களுக்குச் செல்ல வசதியாக சிறகுகளும் இருந்தன. இந்த முப்புரங்களையும் வைத்துக் கொண்டு இந்த அசுரர்கள் தேவர்களை மிகவும் துன்புறுத்தி வந்தனர். தேவர்கள் அசுரர்கள் தொல்லை பொறுக்க முடியாமல் சிவபெருமானிடம் முறையிட்டனர். மூன்று அசுரர்களையும் அழிக்க சிவபெருமான் பூமியைத் தேராக்கி, நான்கு வேதங்களையும் குதிரைகளாக்கி, பிரம்மாவை சாரதியாக்கி, சூரிய சந்திரர்களை சக்கரங்களாக்கி மற்ற எல்லா உலகப் படைப்புகளையும் போர் புரிவதற்கான ஒவ்வொரு உறுப்பாகி புறப்பட்டார். ஆனால் அவ்வாறு புறப்படுவதற்கு முன்பு முழுமுதற் கடவுளான விநாயகரை வணங்க தேவர்கள் மறந்தனர். அதனால் தேரின் அச்சை விநாயகர் முறித்து விட்டார். தேர் அச்சு முறிந்ததற்குக் காரணம் விநாயகர் தான் என்பதை உணர்ந்த சிவன் அவரை வேண்டினார். தந்தை சொல் கேட்ட விநாயகர் தேரின் அச்சை சரியாக்கினார். அதன் பின் சிவபெருமான் திரிபுர அசுரர்களை அழித்தார். தேர் அச்சு இற்று (முறிந்து) நின்ற இடமாதலால் இத்தலம் "அச்சு இறு பாக்கம்" என்று அழைக்கப்பட்டு நாளடைவில் மருவி தற்போது அச்சரப்பாக்கம் என்று அழைக்கப்படுகிறது.

         ஐந்து நிலைகள் கொண்ட கிழக்கு நோக்கிய இராஜகோபுரத்துடன் அமைந்துள்ளது. கோபுர வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் நேரே உள் வாயில் உள்ளது. கோபுர வாயிலைக் கடந்தவுடன் நேராக இல்லாமல் கொடிமரம், பலிபீடம், நந்தி மண்டபம் ஆகியவை சற்று இடதுபுறம் வடக்கே அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் சிறப்பம்சம் இங்குள்ள இரண்டு மூலவர்கள் சந்நிதியாகும். கோபுர வாயிலுக்கு நேரே உள்ள உள் வாயில் வழியாகச் சென்றால் நேர் எதிரே உமையாட்சீசுவரர் சந்நிதி உள்ளது. உள் வாயில் நுழைந்தவடன் சற்று வலதுபுறத்தில் கொடிமரம், பலிபீடம், நந்தி மண்டபம் ஆகியவற்றிற்கு எதிரே உள்ளபடி அமைந்திருக்கும் ஆட்சீசுவரர் சந்நிதி உள்ளது. இந்த ஆட்சீசுவரர் தான் இவ்வாலயத்தின் பிரதான மூலவர். சுயம்பு மூர்த்தியான இவர் லிங்க வடிவில் குட்டையான பாணத்துடன் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். இவர் குடியிருக்கும் கருவறை வாயிலில் இருபுறமும் துவாரபாலகர்களாக சிவனால் வதம் செய்யப்பட்ட தாரகனும், வித்யுன்மாலியும் காணப்படுகின்றனர். தாரகனுக்கு அருகில் விநாயகரும், வித்யுன்மாலிக்கு அருகில் வள்ளி தெய்வானையுன் முருகரும் உள்ளனர். கோஷ்ட மூர்த்தங்களாக தட்சினாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். ஆட்சீஸ்வரர் சந்நிதியை சுற்றி வலம் வர வசதி உள்ளது.

         உள் வாயிலைக் கடந்தவுடன் வலதுபுறம் உள்ள ஆட்சீசுவரரை தரிசித்து விட்டு சற்று நேரே மேலும் சென்றால் நாம் உமையாட்சீசுவரர் சந்நிதியை அடையலாம். உமையாட்சீசுவரர் கருவறை வாயிலில் இருபுறமும் அலமேலுமங்கை, ஸ்ரீனிவாச பெருமாள், பழனிஆண்டவர், உற்சவ மூர்த்திகள், லட்சுமி துர்க்கை சரசுவதி, ஆறுமுகசாமி ஆகியோரின் சந்நிதிகள் அழகுற அமைந்துள்ளன. கருவறைக்குள் உமையாட்சீசுவரர் கிழக்கு நோக்கி இலிங்க உருவில் காட்சி தருகிறார். அலிங்க உருவின் பின்புறம் பார்வதியுடன் சிவபெருமான் திருமணக் கோலத்தில் காட்சி தருகிறார். அகத்தியருக்கு தனது கயிலாய திருமணக் காட்சியை காட்டியருளிய தலங்களில் இத்தலமும் ஒன்று. அருகில் தெற்கு நோக்கிய உமையாம்பிகை திருஉருவச் சிலையும் உள்ளது.

         ஆலயத்தின் வடக்கு வெளிப் பிரகாரத்தில் தலமரமான சரக்கொன்றை மரம் உள்ளது. சரக்கொன்றை மரத்தின் அடியில் கொன்றையடி ஈசுவரர் சந்நிதி உள்ளது. அருகில் நந்திகேசுவரரும், சிவனை வணங்கியபடி திரிநேத்ரதாரி முனிவரும் உள்ளனர்.

     பாண்டிய மன்னன் ஒருவனுக்கு இத்தலத்தில் சரக்கோன்றை மரத்தடியில் காட்சியளித்த சிவபெருமான், தனக்கு இவ்விடத்தில் ஒரு ஆலயம் எழுப்பச் சொல்ல, மன்னன் அப்போது அங்கு வந்த திரிநேத்ரதாரி முனிவரிடம் ஆலயம் கட்டும் பொறுப்பை ஒப்படைத்தான். திரிநேத்ரதாரி முனிவரும், தன்னையும், மன்னனையும் ஆட்கொண்ட இறைவனுக்கு, இரு கருவறைகள் கொண்ட இக்கோயிலைக் கட்டினார். கோயிலைக் கண்ட மன்னன் இரு சந்நிதிகள் அமைந்திருப்பது கண்டு முனிவரை விபரம் கேட்டான். முனிவரும் "அரசரை ஆட்கொண்ட இறைவனுக்காக உமையாட்சீசுவரர் சந்நிதியும், தன்னை ஆட்கொண்ட இறைவனுக்கு ஆட்சீசுவரர் சந்நிதியும் அமைத்தேன்" என்று மறுமொழி தந்ததாக வரலாறு கூறுகின்றது.

         வடக்கு வெளிப் பிரகாரத்தின் வடகிழக்கு மூலையில் இத்தலத்தின் பிரதான அம்பாள் இளங்கிளி அம்மை தனி சந்நிதியில் தெற்கு நோக்கி நின்ற கோலத்தில் தரிசனம் தருகிறாள்.

         அச்சுமுறி விநாயகர்: சிவபெருமானின் தேர் அச்சை முறித்த விநாயகர் "அச்சுமுறி விநாயகர்" என்ற பெயருடன் கோயிலுக்கு வெளியே தனி சந்நிதியில் மேற்கு நோக்கி அமர்ந்து காட்சி தருகிறார். புதிய செயல்கள் தொடங்குவதற்கு முன் இவ்விநாயகரிடம் வேண்டிக் கொண்டால் அச்செயல் தடையின்றி நடைபெறும் என்பது நம்பிக்கை. அருணகிரிநாதர் விநாயகர் துதியில் "முப்புரம் எரி செய்த அச்சிவன் உறைரதம் அச்சது பொடி செய்த" என்று தலவரலாற்றைக் குறிப்பிடுகிறார்.

     காலை 6-30 மணி முதல் 11-30 மணி வரையிலும் மாலையில் 4-30 மணி முதல் 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

     வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "துன்னு பொழில் அம் மதுரத் தேன் பொழியும் அச்சிறுபாக்கத்து, உலகர் தம் மதம் நீக்கும் ஞான சம்மதமே" என்று போற்றி உள்ளார்.


திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 1132
இன்புற்றுஅங்கு அமர்ந்துஅருளி
         ஈறுஇல்பெருந் தொண்டருடன்
மின்பெற்ற வேணியினார்
         அருள்பெற்றுப் போந்துஅருளி
என்புஉற்ற மணிமார்பர்
         எல்லைஇலா ஆட்சிபுரிந்து
அன்புற்று மகிழ்ந்ததிரு
         அச்சிறுபாக் கத்து அணைந்தார்.

         பொழிப்புரை : இன்புற்ற நிலையில் அப்பதியில் விரும்பி எழுந்தருளியிருந்து, எல்லை இல்லாத பெருந்தொண்டர்களுடனே, மின்போன்ற சடையையுடைய சிவபெருமானின் திருவருள் பெற்று, அங்கிருந்து நீங்கி, எலும்பு மாலைகளை அணிந்த அழகான மார்பை யுடைய இறைவர் எல்லையில்லாத வண்ணம் ஆட்சி செய்து அன்பு பொருந்தி மகிழ்ந்து எழுந்து அருளியுள்ள அச்சிறுபாக்கத்தைச் சேர்ந்தார்.


பெ. பு. பாடல் எண் : 1133
ஆதிமுதல் வரைவணங்கி
         "ஆட்சிகொண்டார்" எனமொழியும்
கோதுஇல்திருப் பதிகஇசை
         குலவியபா டலில்போற்றி,
மாதவத்து முனிவருடன்
         வணங்கிமகிழ்ந்து இன்புற்றுத்
தீதுஅகற்றுஞ் செய்கையினார்
         சின்னாள்அங்கு அமர்ந்துஅருளி.

         பொழிப்புரை : பழமையுடைய சிவபெருமானை வணங்கி `ஆட்சி கொண்டார்\' எனக் கூறும் நிறைவையுடைய குற்றம் இல்லாத திருப்பதிகத்தைப் பண்பொருந்தி விளங்கும் திருப்பாடல்களால் போற்றி, மாதவமுடைய முனிவர்களுடன் வணங்கி, மகிழ்ந்து, இன்பம் அடைந்து, தீமையை நீக்குவதே தம் செய்கையாகக் கொண்டருளிய ஞானசம்பந்தர், சில நாள்கள் அங்கே தங்கியிருந்து,

         குறிப்புரை : இப்பதியில் அருளிய பதிகம் `பொன் திரண்டன்ன\' (தி.1 ப.77) எனும் தொடக்கம் உடைய குறிஞ்சிப் பண்ணிலமைந்த பதிகமாகும். பதிகப் பாடல் தொறும், `அச்சிறுபாக்கமது ஆட்சிகொண் டாரே\' எனவருதலை ஆசிரியர் கொண்டெடுத்து மொழிந்துள்ளார்.

திருஞானசம்பந்தர் திருப்பதிகம்


1.077   திருஅச்சிறுபாக்கம்           பண் - குறிஞ்சி
                                    திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
பொன்திரண்டுஅன்ன புரிசடைபுரள,
         பொருகடல்பவளமொடு அழல்நிறம்புரைய,
குன்றுஇரண்டுஅன்ன தோள்உடைஅகலம்
         குலாயவெண்ணூலொடு கொழும்பொடி அணிவர்,
மின்திரண்டுஅன்ன நுண்ணிடைஅரிவை
         மெல்லியலாளையோர் பாகமாப்பேணி
அன்றுஇரண்டுஉருவம் ஆயஎம்அடிகள்
         அச்சிறுபாக்கம் அதுஆட்சிகொண்டாரே.

         பொழிப்புரை :அச்சிறுபாக்கத்தைத் தான் ஆட்சிபுரியும் இடமாகக் கொண்டுள்ள இறைவர், தமது, முறுக்கேறிய பொன் திரண்டாற் போன்ற சடை, அலைகள் பெருங்கடலில் தோன்றும் பவளக் கொடியையும், தீ வண்ணத்தையும் ஒத்துப் புரள, குன்றுகள் போன்ற இரண்டு தோள்களோடு கூடிய மார்பகத்தில் விளங்கும் வெண்மையான முப்புரிநூலோடு வளமையான திருநீற்றையும் அணிந்து, மின்னல் போன்ற நுண்ணிய இடையினையுடைய மென்மைத்தன்மை வாய்ந்த அரிவையாகிய பார்வதிதேவியை ஒரு பாகமாக விரும்பி ஏற்று, ஓருருவில் ஈருருவாய்த் தோன்றும் அடிகளாவார்.


பாடல் எண் : 2
தேனினும் இனியர், பால்அன நீற்றர்
         தீங்கரும்புஅனையர், தம் திருவடிதொழுவார்
ஊன்நயந்துஉருக உவகைகள் தருவார்,
         உச்சிமேல்உறைபவர், ஒன்றுஅலாது ஊரார்,
வானகம்இறந்து வையகம்வணங்க
         வயங்கொளநிற்பதுஓர் வடிவினை உடையார்,
ஆனையின்உரிவை போர்த்த எம்அடிகள்
         அச்சிறுபாக்கம் அதுஆட்சிகொண்டாரே.

         பொழிப்புரை :அச்சிறுபாக்கத்தை, தான் ஆட்சிபுரியும் இடமாகக் கொண்டுள்ள இறைவர், தேனினும் இனியவர். பால் போன்ற நீறணிந்தவர். இனிய கரும்பு போன்றவர். தம் திருவடிகளை மெய்யுருகி வணங்கும் அன்பர்கட்கு உவகைகள் தருபவர். அவர்களின் தலைமேல் விளங்குபவர். இடபவாகனமாகிய ஓர் ஊர்தியிலேயே வருபவர். வானுலகைக் கடந்து மண்ணுலகை அடைந்து அங்குத் தம்மை வழிபடும் அன்பர்கள் நினைக்கும் செயலை வெற்றிபெறச் செய்து நிற்கும் வடிவினை உடையவர். யானையின் தோலைப் போர்த்தியவர். அவர் எம் தலைவராவர்.


பாடல் எண் : 3
கார்இருள்உருவம் மால்வரைபுரையக்
         களிற்றினது உருவுகொண்டு, அரிவைமேல்ஓடி
நீர்உருமகளை நிமிர்சடைத்தாங்கி,
         நீறுஅணிந்து ஏறுகஉந்து ஏறியநிமலர்,
பேரருளாளர், பிறவியில் சேரார்,
         பிணிஇலர், கேடுஇலர், பேய்க்கணம்சூழ
ஆர்இருள்மாலை ஆடும் எம்அடிகள்
         அச்சிறுபாக்கம் அதுஆட்சிகொண்டாரே.

         பொழிப்புரை :அச்சிறுபாக்கத்தைத் தாம் ஆட்சிபுரியும் இடமாகக் கொண்டுள்ள இறைவர், உமையம்மை பெண் யானை வடிவு கொள்ளத்தாம் காரிருளும், பெரிய மலையும் போன்ற களிற்றுயானை வடிவம் தாங்கிச் சென்று அவளோடு கூடியவர். நீர்வடிவமான கங்கையை மேல்நோக்கிய சடைமிசைத் தாங்கியவர். நீறுபூசி விடையேற்றில் மகிழ்ந்து ஏறிவரும் புனிதர். பேரருளாளர். பிறப்பிறப்பிற் சேராதவர். பிணி, கேடு இல்லாதவர். பேய்க்கணங்கள் சூழச் சுடுகாட்டில் முன்மாலை யாமத்தில் நடனம் புரியும் எம் அடிகளாவார்.


பாடல் எண் : 4
மைம்மலர்க்கோதை மார்பினர்எனவும்,
         மலைமகள்அவளொடு மருவினர்எனவும்,
செம்மலர்ப்பிறையும் சிறைஅணிபுனலும்,        
         சென்னிமேல் உடையர், எம் சென்னிமேல் உறைவார்,
தம்மலர் அடிஒன்று அடியவர்பரவ,
         தமிழ்ச்சொலும்வடசொலும் தாள்நிழல்சேர,
அம்மலர்க்கொன்றை அணிந்த எம்அடிகள்
         அச்சிறுபாக்கம் அதுஆட்சிகொண்டாரே.

         பொழிப்புரை :அச்சிறுபாக்கத்தில் ஆட்சி கொண்டுள்ள இறைவர் குவளை மலர்களால் இயன்ற மாலையைச் சூடிய மார்பினர் எனவும், மலைமகளாகிய பார்வதி தேவியை இடப்பாகமாகக் கொண்டுள்ளவர் எனவும், சிவந்த மலர் போலும் பிறையையும், தேங்கியுள்ள கங்கை நீரையும் தம் சடைமுடி மீது உடையவர் எனவும், எம் சென்னி மேல் உறைபவர் எனவும், தம் மலர் போன்ற திருவடிகளை மனத்தால் ஒன்றி நின்று அடியவர்கள் பரவவும் தமிழ்ச் சொல், வடசொற்களால் இயன்ற தோத்திரங்கள் அவர்தம் திருவடிகளைச் சாரவும் அழகிய கொன்றை மலர் மாலையை அணிந்தவராய் விளங்கும் அடிகள் ஆவார்.


பாடல் எண் : 5
விண்உலாமதியம் சூடினர் எனவும்,
         விரிசடை உள்ளது வெள்ளநீர் எனவும்,
பண்உலா மறைகள் பாடினர் எனவும்,
         பலபுகழ்அல்லது பழிஇலர் எனவும்,
எண்ணல் ஆகாத இமையவர் நாளும்
         ஏத்துஅரவங்களோடு எழில்பெறநின்ற
அண்ணல் ஆன்ஊர்தி ஏறும்எம்அடிகள்
         அச்சிறுபாக்கம் அதுஆட்சிகொண்டாரே.

         பொழிப்புரை :அச்சிறுபாக்கத்தில் ஆட்சி கொண்டுள்ள இறைவர் வானிலே உலாவும் திங்களைச் சூடியவர் எனவும், அவர்தம் விரிந்த சடைமுடியில் கங்கை நீர் வெள்ளம் தங்கி உள்ளது எனவும், இசை அமைதியோடு கூடிய நான்கு வேதங்களைப் பாடியவர் எனவும், பலவகையான புகழையே உடையவர் எனவும், பழியே இல்லாதவர் எனவும் எண்ணற்ற தேவர்கள் நாள்தோறும் தம்மை ஏத்த அரவாபரணங்களோடு, மிக்க அழகும் தலைமையும் உடையவராய் ஆனேறு ஏறிவரும் எம் அடிகள் ஆவார்.


பாடல் எண் : 6
நீடுஇரும்சடைமேல் இளம்பிறைதுலங்க,
         நிழல்திகழ்மழுவொடு நீறுமெய்பூசி,
தோடுஒருகாதினில் பெய்து, வெய்துஆய
         சுடலையில்ஆடுவர், தோல் உடையாக,
காடுஅரங்காகக் கங்குலும்பகலும்
         கழுதொடுபாரிடம் கைதொழுதுஏத்த
ஆடுஅரவுஆட ஆடும் எம்அடிகள்
         அச்சிறுபாக்கம் அதுஆட்சிகொண்டாரே.

         பொழிப்புரை :அச்சிறுபாக்கதில் ஆட்சி கொண்டுள்ள இறைவர் தமது நீண்ட பெரிய சடைமேல் இளம்பிறை விளங்க, ஒளிபொருந்திய மழுவோடு, திருநீற்றை மேனிமேல் பூசி, ஒரு காதில் தோடணிந்து கொடிய சுடலைக் காட்டில் ஆடுபவர். புலித்தோலை உடையாக அணிந்து இரவும், பகலும் பேய்க்கணங்களும், பூதகணங்களும் கைகளால் தொழுதேத்தப் படமெடுத்தாடும் பாம்புகள் தம் மேனிமேல் பொருந்தி ஆடச் சுடுகாட்டைத் தமது அரங்கமாகக் கொண்டு ஆடும் எம் அடிகள் ஆவார்.


பாடல் எண் : 7
ஏறும் ஒன்றுஏறி, நீறுமெய்பூசி ,
         இளங்கிளை அரிவையொடு ஒருங்கு உடன்ஆகி,
கூறும்ஒன்றுஅருளி, கொன்றை அம் தாரும்,
         குளிர்இளமதியமும், கூவிளமலரும்,
நாறுமல்லிகையும், எருக்கொடுமுருக்கும்,
         மகிழ்இளவன்னியும் இவைநலம்பகர
ஆறும்ஓர்சடைமேல் அணிந்த எம்அடிகள்
         அச்சிறுபாக்கம் அதுஆட்சிகொண்டாரே.

         பொழிப்புரை :அச்சிறுபாக்கத்தில் ஆட்சிகொண்டுள்ள இறைவர், ஆனேறு ஒன்றில் ஏறித்தம் திருமேனிமேல் நீறுபூசி இளையகிளி போன்ற அழகிய பார்வதிதேவியாருக்குத் தம் உடலில் ஒரு கூறு அருளி இருவரும் ஒருவராய் இணைந்து திருமுடிமேல் கொன்றை மாலை, குளிர்ந்த இளமதி, வில்வம், பிற நறுமலர்கள் மணங்கமழும் மல்லிகை, எருக்கு, முருக்கு, மகிழ், இளவன்னி இலை ஆகியஇவை மணம் பரப்ப, கங்கையாற்றைச் சடைமேல் அணிந்துள்ள எம் அடிகள் ஆவார்.


பாடல் எண் : 8
கச்சும்ஒள் வாளும் கட்டிய உடையர்
         கதிர்முடி சுடர்விடக் கவரியும் குடையும்,
பிச்சமும் பிறவும் பெண்அணங்குஆய
         பிறைநுதலவர்,தமைப் பெரியவர்பேண,
பச்சமும் வலியும் கருதிய அரக்கன்
         பருவரை எடுத்ததிண் தொள்களை அடர்வித்து
அச்சமும் அருளும் கொடுத்த எம்அடிகள்
         அச்சிறுபாக்கம் அதுஆட்சிகொண்டாரே.

         பொழிப்புரை :அச்சிறுபாக்கத்தில் ஆட்சி கொண்டுள்ள இறைவர் ஒளி பொருந்திய வாளைக் கச்சிலே பொருத்தி இடையில் ஆடையாகக் கட்டியுள்ளவர். ஒளி பொருந்திய முடி சுடர்விடக்கவரி, குடை, பீலிக்குஞ்சம் முதலியவற்றோடு பெண்களைக் கவரும் பிறை மதியை முடியிற்சூடி விளங்குபவர். பெருமை உடைய அடியவர் தம்மை விரும்பி வழிபடுமாறு, தம் அன்பு வலிமை ஆகியவற்றைக் கருதித்தன்னைப் பெரியவனாக எண்ணிப் பெரிய கயிலை மலையைப் பெயர்த்தெடுத்த இராவணனின் தோள்களை அடர்த்து அவனுக்குத் தம்பால் அன்பையும் அருளையும் கொடுத்த எம் அடிகள் ஆவார்.


பாடல் எண் : 9
நோற்றலார்ஏனும், வேட்டலார்ஏனும்,
         நுகர்புகர்சாந்தமொடு ஏந்தியமாலைக்
கூற்றலார்ஏனும் இன்னவாறுஎன்றும்
         எய்தல்ஆகாததொர் இயல்பினைஉடையார்
தோற்றல்ஆர்மாலும் நான்முகம் உடைய
         தோன்றலும் அடியொடு முடிஉறத்தங்கள்
ஆற்றலாறல் காணார் ஆய எம்அடிகள்
         அச்சிறுபாக்கம் அதுஆட்சிகொண்டாரே.

         பொழிப்புரை :அச்சிறுபாக்கத்தில் ஆட்சிகொண்டுள்ள இறைவர் தவம் செய்யாராயினும், அன்பு செய்யாராயினும் நுகரத்தக்க உணவு, சந்தனம், கையில் ஏந்திய மாலை இவற்றின் கூறுகளோடு வழிபாடு செய்யாராயினும் இத்தகையவர் என்று அறியமுடியாத தன்மையும் அடைய முடியாத அருமையும் உடைய இயல்பினராய் மாலும் நான்முகனும் பன்றியும் அன்னமுமாய்த் தோன்றி அடியையும் முடியையும் தங்கள் ஆற்றலால் காண இயலாதவாறு உயர்ந்து நின்ற எம்அடிகள் ஆவார். எனவே நோற்பவருக்கும் அன்பு செய்பவருக்கும் வழிபடுவோருக்கும் அவர் எளியர் என்பது கருத்து.


பாடல் எண் : 10
வாதுசெய்சமணும் சாக்கியப்பேய்கள்
         நல்வினைநீக்கிய வல்வினையாளர்,
ஓதியும்கேட்டும் உணர்வினை இலாதார்
         உள்கல் ஆகாததுஓர் இயல்பினை உடையார்
வேதமும்வேத நெறிகளும் ஆகி
         விமலவேடத்தொடு கமலமாமதிபோல்
ஆதியும்ஈறும் ஆய எம்அடிகள்
         அச்சிறுபாக்கம் அதுஆட்சிகொண்டாரே.

         பொழிப்புரை :அச்சிறுபாக்கத்தில் ஆட்சி கொண்டுள்ள எம் அடிகள் நல்வினைகளைச் செய்யாது வல்வினைகள் புரிபவரும் ஓதியும் கேட்டும் திருந்தாத உணர்வோடு தர்க்கவாதம் புரிபவருமாகிய சமணர்களும் சாக்கியப் பேய்களும் நினைத்தும் அறிய முடியாத இயல்பினை உடையவர். வேதமும் வேதநெறிகளும் ஆகியவர். தம்மை வழிபடுவார் மலங்களை நீக்கும் வேடம் உடையவர். தாமரை மலரும் திங்களும் போன்ற அழகும், தண்மையும் உடையவர். உலகின் முதலும் முடிவும் ஆனவர்.


பாடல் எண் : 11
மைச்செறி குவளை தவளைவாய் நிறைய   
         மதுமலர்ப் பொய்கையில் புதுமலர் கிழியப்
பச்சிற வெறிவயல் வெறிகமழ் காழிப்
         பதியவர் அதிபதி கவுணியர் பெருமான்,
கைச்சிறு மறியவன் கழல்அலால் பேணாக்
         கருத்துஉடை ஞானசம் பந்தன தமிழ்கொண்டு
அச்சிறு பாக்கத்து அடிகளை ஏத்தும்
         அன்புடை அடியவர் அருவினை இலரே.

         பொழிப்புரை :கருநிறம் பொருந்திய குவளை மலர்கள் தவளைகளின் வாய் நிறையுமாறு தேனைப் பொழியும் மலர்கள் நிறைந்த பொய்கைகளும், புதுமலர்களின் இதழ்கள் கிழியுமாறு பசிய இறால் மீன்கள் துள்ளி விழும் பொய்கைகளை அடுத்துள்ள வயல்களும் மணம் கமழும் சீகாழிப்பதியினர்க்கு அதிபதியாய் விளங்கும் கவுணியர் குலத்தலைவனும், கையின்கண் சிறிய மானை ஏந்திய சிவன் திருவடிகளையன்றிப் பிறவற்றைக் கருதாதகருத்தினை உடையவனும் ஆகிய ஞானசம்பந்தன் பாடிய இப்பதிகத்தைக் கொண்டு அச்சிறுபாக்கத்து அடிகளை ஏத்தும் அன்புடை அடியவர் நீக்குதற்கரிய வினைகள் இலராவர்.


                                             திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...