திரு நல்லூர்ப் பெருமணம்


திரு நல்லூர்ப் பெருமணம்
(ஆச்சாள்புரம்)

     சோழ நாட்டு, காவிரி வடகரைத் திருத்தலம்.

         சிதம்பரத்தில் இருந்து சீர்காழி செல்லும் சாலையில் கொள்ளிடம் பாலம் கடந்து சென்றால் கொள்ளிடம் ஊர் வரும். அங்கிருந்து ஆச்சாள்புரம் செல்லும் கிளைச் சாலையில் சுமார் 8 கி. மீ. சென்று இத் திருத்தலத்தை அடையலாம். இதற்கு மேலும் 3 கி.மீ. செல்ல மயேந்திரப்பள்ளி என்ற மற்றொரு பாடல் பெற்ற திருத்தலம் உள்ளது. சிதம்பரம், சீர்காழியில் இருந்து மயேந்திரப்பள்ளி செல்லும் நகரப் பேருந்துகள் ஆச்சாள்புரம் வழியாகச் செல்கின்றன.

இறைவர்         : சிவலோகத் தியாகேசர், பெருமணமுடைய மகாதேவர்.

இறைவியார்      : வெண்ணீற்று உமை நங்கை, சுவேதவிபூதி நாயகி, விபூதிகல்யாணி.

தல மரம்          : மா.

தீர்த்தம்           : பஞ்சாட்சரதீர்த்தம் முதலான 11 தீர்த்தங்கள்.

தேவாரப் பாடல்கள்         : சம்பந்தர் - கல்லூர்ப் பெருமணம்


     கிழக்கு நோக்கி ஐந்து நிலைகளை உடைய இராஜ கோபுரத்துடன் காட்சி அளிக்கிறது. ஆலயத்தின் 11 தீர்த்தங்களில் ஒன்றான பஞ்சாட்சர தீர்த்தம் கோவிலுக்கு எதிரில் உள்ளது. இராஜ கோபுரத்தின் வாயிலாக உள்ளே நுழைந்தவுடன் கவசமிட்ட கொடி மரம் மற்றும் நந்தி மண்டபமும் அடுத்து நூற்றுக்கால் மண்டபமும் அமைந்துள்ளன. நூற்றுக்கால் மண்டபத்தில் திருஞானசம்பந்தர் அவர் மனைவி ஸ்தோத்திர பூராணாம்பிகையுடன் மணக்கோலத்தில் தனி சந்நிதியில் காட்சியளிக்கிறார். அதை அடுத்து கிழக்கு நோக்கிய சிவலோக தியாகேசர் சந்நிதி உள்ளது. சுவாமி கருவறை கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், வேலைப்பாடமைந்த தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை உள்ளனர். சுவாமி சந்நிதி வாயிலில் மேற்புறம் வண்ணச் சுதையில் சம்பந்தர் ஐக்கியமான காட்சி உள்ளது. ஸ்ரீரிணவிமோசனர் சந்நிதியும், அதையடுத்து ஸ்ரீமகாலட்சுமி சந்நிதியும் கருவறை மேற்கு சுற்றுப் பிரகாரத்தில் உள்ளன. இறைவி திருவெண்ணீற்று உமையம்மை சந்நிதி தனிக்கோவிலாக மேற்கு வெளிப் பிரகாரத்தில் மதில் சூழ்ந்த தனி வாயிலுடன் ஒரு சுற்றுப் பிரகாரத்துடன் அமைந்துள்ளது.

         திருநீலகண்ட யாழ்ப்பாணர், முருக நாயனார், திருநீலக்க நாயனார் ஆகியோர் இத்தலத்து இறைவனை வழிபட்டுள்ளனர். திருஞானசம்பந்தர் திருமணத்திற்கு வந்தவர்களுக்கு உமையம்மையே நேரில் வந்து திருநீறு அளித்ததால் அம்பிகைக்கு திருவெண்ணீற்று உமையம்மை என்ற பெயர் ஏற்பட்டதாகக் கூறுவர். இறைவியின் சந்நிதியில் குங்குமத்திற்கு பதிலாக திருநீறு தான் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதைப் பூசிகொண்டால் பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியம் நீடித்திருக்கும் என்பது நம்பிக்கை. வருடம் தோறும் வைகாசி மாதம் மூலம் நட்சத்திரத்தில் சம்பந்தரின் திருமண திருவிழா நடக்கிறது.

         திருஞானசம்பந்தர் சீர்காழியிலே இருந்த காலத்தில் அவருக்குத் திருமணம் செய்வித்தல் வேண்டும் என்னும் விருப்பம் சிவபாதஇருதயருக்கு உண்டாயிற்று. சுற்றத்தார் எல்லோரும் கூடிப் பிள்ளையாருக்கு அக் கருத்தைத் தெரிவித்தனர். பிள்ளையார் இணங்கவில்லை. அவர்கள் பிள்ளையாரைத் தொழுது, உலகு உய்யத் தோன்றிய பெருமானே! உலகு உய்ய மணம் செய்து காட்டுதல் வேண்டும்" என்று வேண்டினார்கள். பிள்ளையார் திருவருளை நினைந்து, அவருகளி வேண்டுதலுக்கு இணங்கினார். சிவபாத இருதயரும் மற்றவரும் மகிழுவு எய்தினர். அவர்கள் எல்லோரும் ஒருங்கே சிந்தித்து, "திருநல்லூரில் உள்ள நம்பாண்டார் நம்பியின் திருமகளே பிள்ளையாருக்கு உரியவள்" என்னும் முடிவிற்கு வந்தனர். திருநல்லூருக்குப் போய்த் தங்கள் விருப்பத்தை நம்பாண்டார் நம்பிக்குத் தெரிவித்தனர்.  அவரும், "நான் உய்ந்தேன்.  என் குலமும் உய்ந்தது. பிள்ளையாருக்கு என் மகளைக் கொடுக்க என்ன தவம் செய்தேன்" என்று ஆனந்தக் கூத்தாடினார்.  உடன்பட்டார். சிவபாத இருதயரும் மற்றோரும் சீர்காழிக்குத் திரும்பி, பெருமானிடத்தில் நம்பாண்டார் நம்பியின் விருப்பத்தைத் தெரிவித்தனர். திருமண நாள் குறிக்கப்பட்டது.

         குறிப்பிட்ட நாளில் பிள்ளையார் திருமணம் நிகழவிருக்கும் திருநல்லூருக்கு எழுந்தருளினார். நம்பாண்டார் நம்பி, பிள்ளையாரைச் சிவமாகவே கருதி பாலும் நீரும் கொண்டு பிள்ளையாரின் திருவடிகளை விளக்கி, தாமும் தெளித்து, உள்ளும் பருகி, மற்றவர் மீதும் தெளித்தார். பிள்ளையாரின் திருக்கரத்திலே நீரைச் சொரிந்து, "என் மகளை உமக்கு அளித்தேன்" என்றார்.

         பெண்மணிகள் மணமகளை அழைத்து வந்து பிள்ளையாரின் வலப்பக்கத்திலே அமர்த்தினார்கள். திருநீலநக்க நாயனார் திருமணச் சடங்குகளைச் செய்தார். எரியிலே பொரி இடப்பட்டது.  எரியை வலம் வரவேண்டி, பிள்ளையார் அம்மையாரின் திருக்கரத்தைப் பற்றலானார். அவ் வேளையில், பிள்ளையார், "விருப்புறும் அங்கி ஆவார் விடை உயர்த்தவரே அன்றோ" என்று நினைந்தார். "இந்த இல் ஒழுக்கம் வந்து சூழ்ந்ததே, இவள் தன்னோடும் அந்தம் இல் சிவன் தாள் சேர்வன்" என்று திருப்பெருமணக் கோயிலுக்குச் சென்றார். எல்லோரும் தொடர்ந்து சென்றனர். பிள்ளையார் இறைவனை வேண்டி, "நாதனே, நல்லூர் மேவும் பெருமண நம்பனே, உன் பாத மெய் நீழல் சேரும் பருவம் இது" என்று, "கல்லூர்ப் பெருமணம்" என்று தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடியருளினார்.

         இறைவன் திருவருள் புரிந்து, "நீயும் பூவை அன்னாளும், இங்கு உன் புண்ணிய மணத்தின் வந்தார் யாவரும் எம்பால் சோதி இதன் உள் வந்து எய்தும்" என்றார்.  திருக்கோயில் ஒளிப்பிழம்பாக மாறியது. அதன்கண் ஒரு வாயிலையும் வகுத்துக் காட்டியது. அது கண்ட பிள்ளையார், "காதலாகிக் கசிந்து" என்று தொடங்கும் பஞ்சாக்கரத் திருப்பதிகத்தைப் பாடி அருளினார். "இம் மணத்தில் வந்தோர் ஈனம் ஆம் பிறவி தீர யாவரும் புகுக" என்று பிள்ளையார் அருள் புரிந்தார். அவ்வாறே சோதியில் எல்லாரும் புகுந்தனர். திருநீலநக்க நாயனார், திருமுருக நாயனார், சிவபாத இருதயர், நம்பாண்டார் நம்பி, திருநாலகண்ட யாழ்ப்பாணர், முதலிய திருத்தொண்டர்கள் தங்கள் தங்கள் மனைவிமார்களுடனும், சுற்றத்தவர்களுடனும் புகுந்தார்கள். முத்துச் சிவிகை முதலியவற்றைத் தாங்கி வந்தவர்களும், மற்ற அடியவர்களும், அறுவகைச் சமயத்தவர்களும், முனிவர்களும் புகுந்தார்கள். எல்லாரும் புகுந்த பின், திருஞானசம்பந்தப் பெருமான் தம் காதலியைக் கைப்பற்றிச் சிவசோதியை வலம் வந்து அதனுள் நுழைந்து இரண்டறக் கலந்தார். சோதி மறைந்தது.  திருக்கோயில் பழையபடி ஆனது.  சோதியுள் கலக்கப் பெறாதவர்கள் கலங்கி நின்றார்கள்.  தேவர்கள் போற்றி நின்றார்கள்.

         ஆச்சாள்புரத்தில் இருந்து மிக அருகில் உள்ளது நல்லூர் என்ற கிராமம். இந்த நல்லூர் கிராமத்திலிருந்து தான் திருஞானசம்பந்தர் திருமணத்திறகு பெண் அழைப்பு நடைபெற்றது. இந்த நல்லூர் கிராமத்திலுள்ள சுந்தர கோதண்டராமர் கோவிலும் பார்க்க வேண்டிய இடமாகும். இக்கோவில் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது. ஜாதக தோஷங்களால் திருமணத் தடை ஏற்படுவர்களுக்கு இந்த சுந்தர கோதண்டராமர் சந்நிதியில் நெய்தீபம் ஏற்றி புனர்வசு நட்சத்திரத்தில் திருமஞ்சனம் செய்வித்தால் தடைகள் நீங்கி நல்லவரன் அமைந்து நல்வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை.

     வள்ளல் பெருமான் தாம் பாடி அருளியவிண்ணப்பக் கலிவெண்பாவில், "விழிப்பாலன் கல்லூர்ப் பெருமணத்தைக் கட்டுரைக்க, சோதி தரு நல்லூர்ப் பெருமணம் வாழ் நல் நிலையே" என்று போற்றி உள்ளார்.

         காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

  
திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 1238
புனிதமெய்க் கோல நீடு
         புகலியார் வேந்தர் தம்மை,
குனிசிலைப் புருவ மென்பூங்
         கொம்புஅனார் உடனே கூட,
நனிமிகக் கண்ட போதில்,
         நல்லமங் கலங்கள் கூறி,
மனிதரும் தேவர் ஆனார்
         கண்இமை யாது வாழ்த்தி.

         பொழிப்புரை : தூய்மையான மெய்க்கோலத்துடன் நீடிய சீகாழித் தலைவரான பிள்ளையாரை, வளைந்த வில்போன்ற புருவங்களையுடைய மென்மையான பூங்கொம்பைப் போன்ற தேவியாருடன் ஒருங்கு கண்ட போது, நல்ல மங்கலங்களைக் கூறி, கண்இமையாது பார்த்து வாழ்த்திய வகையால், மக்களும் தேவர்கள் ஆயினர்.


பெ. பு. பாடல் எண் : 1239
பத்தியில் குயிற்றும் பைம்பொன்
         பவளக்கால் பந்தர் நாப்பண்,
சித்திர விதானத் தின்கீழ்ச்
         செழுந்திரு நீல நக்கர்,
முத்தமிழ் விரகர் முன்பு
         முதன்மறை முறையி னோடு
மெய்த்தநம் பெருமான் பாதம்
         மேவும்உள் ளத்தால் செய்ய.

         பொழிப்புரை : வரிசை பெற அழகு படுத்தப்பட்ட பசும் பொன்னால் ஆன பவளக் கால்களையுடைய பந்தரின் நடுவில், ஓவியம் அமைந்த மேற்கட்டியின் கீழ், செழுமையுடைய நீலநக்க நாயனார் ஆசிரியராய் இருந்து, முத்தமிழ் வல்லுநரான பிள்ளையாரின் முன், முதன்மையான மறைவழிச் செய்யும் மணவினையை அம்முறைப்படியே மெய்ப்பொருளான நம் பெருமானின் திருவடிகளைப் பொருந்தும் உள்ளத்துடன் செய்ய,


பெ. பு. பாடல் எண் : 1240
மறைஒலி பொங்கி ஓங்க,
         மங்கல வாழ்த்து மல்க,
நிறைவளைச் செங்கை பற்ற,
         நேரிழை யவர்முன் அந்தப்
பொறைஅணி முந்நூல் மார்பர்
         புகரில்வெண் பொரிகை அட்டி
இறைவரை ஏத்தும் வேலை,
         எரிவலம் கொள்ள வேண்டி.

         பொழிப்புரை : மறையொலிகள் மேன்மேலும் பெருகி ஓங்கவும், மங்கல வாழ்த்தொலிகள் மிகவும், நிறைந்த வளையல்களை அணிந்த மணப் பெண்ணின் சிவந்த கையைப் பிள்ளையார், பற்றும் பொருட்டு நேரிய அணிகளை அணிந்த அக் கன்னியாரின் முன், பொறுமையை அணியாகக் கொண்ட முந்நூல் அணிந்த மார்பினரான திருநீலநக்க நாயனார், குற்றம் அற்ற நெல் பொரியைக் கையிலே எடுத்து வேள்வித் தீயில் ஆகுதியாகப் பெய்து, சிவபெருமானை வணங்கும்போது, எரியை வலமாக வருவதற்கு எண்ணி,


பெ. பு. பாடல் எண் : 1241
அருப்புமென் முலையி னார்தம்
         அணிமலர்க் கைப்பி டித்து,அங்கு
ஒருப்படும் உடைய பிள்ளை
         யார்திரு உள்ளம் தன்னில்,
'விருப்புறும் அங்கி ஆவார்
         விடை உயர்த் தவரே' என்று
திருப்பெரு மணத்தை மேவும்
         சிந்தையில் தெளிந்து செல்வார்.

         பொழிப்புரை : அரும்பைப் போன்ற மென்மையான கொங்கைகளை உடைய அம்மங்கையின்அழகான மலர் போன்ற கையைப் பிடித்துக் கொண்டு, அங்கு மணவினை செய்தற்கு ஒருப்பட்ட பிள்ளையார், `மனத்தில் விருப்பம் பொருந்தும் வேள்வித் தீயாயானவர் விடைக் கொடியை உயர்த்திய சிவபெருமானே ஆவார்' எனத் திருநல்லூர்ப் பெருமணத்தைப் பொருந்திய உள்ளத்திலே தெளிந்து செல்பவராய்,


பெ. பு. பாடல் எண் : 1242
மந்திர முறையால் உய்த்த
         எரிவலம் ஆக, மாதர்
தம்திருக் கையைப் பற்றும்
         தாமரைச் செங்கை யாளர்
'இந்தஇல் ஒழுக்கம் வந்து
         சூழ்ந்ததே இவள்தன் னோடும்
அந்தம்இல் சிவன்தாள் சேர்வன்'
         என்னும்ஆ தரவு பொங்க.

         பொழிப்புரை : மந்திர முறையால் வளர்க்கப்பட்ட எரியை வலம் வரும் பொருட்டு அம்மையாரின் கையைப் பிடிக்கும் தாமரை மலர் போன்ற சிவந்த கைகளையுடைய பிள்ளையார், `இந்த இல்வாழ்வான ஒழுக்க நிலை வந்து வாய்த்ததே! இவளுடன் அழிவில்லாத சிவபெருமானின் திருவடிகளை அடைவேன்' என்ற ஆசை உள்ளத்தில் பெருக,


பெ. பு. பாடல் எண் : 1243
மலர்பெருங் கிளையும் தொண்டர்
         கூட்டமும் மல்கிச் சூழ,
அலகுஇல் மெய்ஞ்ஞானத்து ஒல்லை
         அடைவுறும் குறிப்பால், அங்கண்
உலகில்எம் மருங்கும் நீங்க
         உடன்அணைந்து அருள வேண்டிக்
குலமணம் புரிவித் தார்தம்
         கோயிலை நோக்கி வந்தார்.

         பொழிப்புரை : மலர்ச்சியுடைய பெரிய உறவினரும், திருத்தொண்டர் கூட்டமும் ஆகிய இவர்களுடனே கூட, அளவில்லாத மெய்ஞ்ஞானத்தினது எல்லையை அடைய வேண்டும் என்ற உள்ளக் குறிப்பினால், அங்கு உலகப்பற்றுத் தம்மைச் சாராது நீங்க, இறைவருடன் சேர விரும்பி, அந்தணர் குலத்துக்குரிய மணத்தைச் செய்வித்த இறைவ ரின் திருப்பெருமணம் எனும் திருக்கோயிலை நோக்கி எழுந்தருளி வந்தார்.


பெ. பு. பாடல் எண் : 1244
சிவன்அமர்ந்து அருளுஞ் செல்வத்
         திருப்பெரு மணத்துள் எய்தி,
தவநெறி வளர்க்க வந்தார்
         தலைப்படும் சார்பு நோக்கி,
'பவம்அற என்னை முன்னாள்
         ஆண்டஅப் பண்பு கூட
நவமலர்ப் பாதங் கூட்டும்'
         என்னும்நல் உணர்வு நல்க.

         பொழிப்புரை : சிவபெருமான் விரும்பி வீற்றிருந்து, உயிர்களுக்கு அருட்செல்வத்தை வழங்கியருளிவரும் திருப்பெருமணக் கோயிலுக்குள் சென்று, தவநெறியை வளர்ப்பதற்கென்றே தோன்றியவரான ஞானசம்பந்தர், உலகக் காட்சியினின்றும் நீங்கி, வீடுபேற்று நிலையில் சார்வதற்குக் காரணமான அருட்குறிப்பைக் கண்டு, பிறப்பற என்னை முற்பிறவியில் ஆளாகக் கொண்ட அத்தன்மைக்கு ஏற்ப, புதிதாக மலர்ந்த தாமரை மலர் போன்ற திருவடிகளை இதுபொழுது அடைவிக்கும் என்ற மெய் உணர்வானது உள்ளத்தில் பொருந்த,


பெ. பு. பாடல் எண் : 1245
காதல்மெய்ப் பதிகம் "கல்லூர்ப் 
         பெருமணம்" எடுத்துக் கண்டோர்
தீதுஉறு பிறவிப் பாசம்
         தீர்த்தல்செம் பொருளாக் கொண்டு,
"நாதனே, நல்லூர் மேவும்
         பெருமண நம்பனே, உன்
பாதமெய்ந் நீழல் சேரும்
         பருவம் ஈது"என்று பாட.

         பொழிப்புரை : பெருவிருப்பைப் புலப்படுத்தும் உண்மை உடைய திருப்பதிகத்தைக் `கல்லூர்ப்பெருமணம்' எனத் தொடங்கி, அங்கு அத்திருமணத்தைக் கண்டோர் அனைவரும் தீய பிறவிக்குக் காரணமான வினை நீக்கம் பெற்று வீடடைவர் என்பதைச் செம்பொருளாகக் கொண்டு, `இறைவரே! திருநல்லூரில் பொருந்திய திருப்பெரு மணக்கோயிலில் எழுந்தருளிய நம்பரே! உம் திருவடிகளாகிய மெய்ம்மை பொருந்திய நிழலை அடையும் பருவம் இதுவாகும்' என்று பாடியருள,

         குறிப்புரை : `கல்லூர்ப்பெருமணம்' எனத் தொடங்கும் திருப்பதிகம் அந்தாளிக் குறிஞ்சி என்னும் பண்ணிலமைந்ததாகும் (தி.3 ப.125). இப்பதிகப் பொருளைச் சேக்கிழார் இருவகையால் சுருங்க விளக்குகின்றார். 1 வினைநீக்கம் பெறுவது. 2. இறையடி அடைவது. பிறவிதீயது. அதுபாசத்தால் வருவது. பாசம் உலகியற் சார்பால் வருவது. எனவே `கல்லூர்ப் பெருமணம் வேண்டா' என்றார். 8ஆவது பாடலில் `நல்லூர்ப் பெருமணம் புக்கிருந்தீர் எமைப் போக்கு அருளீரே' என்றும், திருக்கடைக்காப்பில் `நல்லூர்ப் பெருமணத் தானை உறும் பொருளாற் சொன்ன ஒண்தமிழ்' என்றும் அருளுகின்றார். எட்டாவது பாடலில் `எனை' என்னாது `எமை' எனப் பன்மை ஆகக் கூறுகின்றார். இவ்வருங் குறிப்புக்களே, `கண்டோர் தீதுறு பிறவிப் பாசம் தீர்த்தல் செம்பொருளாக் கொண்டு `... நம்பனே! உன்பாத மெய்ந்நீழல் சேரும் பருவம் ஈதென்று பாட' எனச் சேக்கிழார் அருளக் காரணமாயிற்று.


திருஞானசம்பந்தர் திருப்பதிகம்


3. 215   திருநல்லூர்ப் பெருமணம்   பண் - அந்தாளிக் குறிஞ்சி
                                             திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
கல்லூர்ப் பெருமணம் வேண்டா கழுமலம்,
பல்லூர்ப் பெருமணம் பாட்டுமெய் யாய்த்தில,
சொல்லூர்ப் பெருமணம் சூடல ரேதொண்டர்,
நல்லூர்ப் பெருமணம் மேயநம் பானே.

         பொழிப்புரை : அடியார்கள் சூழ, திருநல்லூர் என்னும் திருத்தலத்தில் பெருமணம் என்னும் கோயிலில் வீற்றிருந்தருளும் சிவபெருமானே! மிக்க மணமாகிய பொருள்கள் பொருந்திய பாடல்களாகிய மலர்களைச் சூடுதலை உடையீர். அம்மிக்கல் மிதித்துச் செய்யும் சடங்குகள் பலவுடைய திருமணம் எனக்கு வேண்டா. கழுமலம் முதலாகிய பல திருத்தலங்களிலும் சென்று நான் பாடிய திருப்பதிகங்கள் வாயிலாக என்னுடைய விருப்பம் மெய்யாகத் தெரியவில்லையா? என இறைவனிடம் வினவுகின்றார்.


பாடல் எண் : 2
தருமணல் ஓதஞ்சேர் தண்கடல் நித்திலம்
பருமண லாக்கொண்டு பாவைநல் லார்கள்,
வருமணம் கூட்டி மணஞ்செயும் நல்லூர்ப்
பெருமணத் தான்பெண்ஓர் பாகம் கொண்டானே.

         பொழிப்புரை : கடலலைகள் அழித்துவிடாமல் வைத்துள்ள இயற்கைக் கரையிலுள்ள மணலோடு, பதுமை போன்ற சிறுமியர் அலைகள் வீசிக்குவித்த, குளிர்ச்சி பொருந்திய கடலில் விளைந்த முத்துக்களையே, பருத்த மணலாகக் கொண்டு சிற்றில் இழைத்து, சிறுசோறிட்டு, நறுமணம் கமழும் மலர்களை வைத்துக் கொண்டு, பாவைகட்கு மணம் செய்து விளையாடுகின்ற சிறப்பினையுடையது நல்லூர்ப் பெருமணம். அப்பெருமணத் திருக்கோயிலின்கண் வீற்றிருந்தருளும் சிவபெருமான் தன்னிற் பிரிவில்லா உமாதேவியை இடப்பாகமாகக் கொண்டருளினன்.


பாடல் எண் : 3
அன்புஉறு சிந்தையர் ஆகி அடியவர்
நன்புறு நல்லூர்ப் பெருமணம் மேவிநின்று,
இன்புறும் எந்தை இணைஅடி ஏத்துவார்
துன்புறு வார்அல்லர் தொண்டுசெய் வாரே.

         பொழிப்புரை : மெய்யடியார்கள் சிவபெருமானிடம் கொண்ட பத்தி காரணமாக, அனைத்துயிர்களிடத்தும் நீங்காத அன்பு நிறைந்த சிந்தையராவர். அவர்கள் சிவத்தை வழிபடுகின்ற நற்றவத்தைச் செய்வர். அவர்கள் திருநல்லூர் என்னும் திருத்தலத்தில், பெருமணம் என்னும் கோயிலில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற, அனைத்துயிர்கட்கும் இன்பம் தருகின்ற எம் தந்தையாகிய சிவபெருமானின் திருவடிகளைப் போற்றி வணங்குவார்கள். அத்தகைய வழிபாடு செய்பவர்கட்கு எக்காலத்திலும் துன்பம் இல்லை. அவர்கள் நாளும் நல்லின்பத்தை மிகுவிக்கும் சிவத்தொண்டு செய்வர்.


பாடல் எண் : 4
வல்லியம் தோல்உடை ஆர்ப்பது, போர்ப்பது
கொல்இயல் வேழத் துஉரி,விரி கோவணம்,
நல்இய லார்தொழு நல்லூர்ப் பெருமணம்
புல்கிய வாழ்க்கைஎம் புண்ணிய னார்க்கே.

         பொழிப்புரை : சிவபெருமான் வலிமையான புலியின் தோலை ஆடையாக உடுத்துள்ளவர். கொல்லும் தன்மையுடைய யானையின் தோலைப் போர்வையாகப் போர்த்தவர். விரிந்த கோவணத்தை அணிந்தவர். அப்பெருமான் சிவநெறி ஒழுகும் நற்பண்பாளர்களால் தொழப்படும் வண்ணம் திருநல்லூர் என்னும் திருத்தலத்தில் பெருமணம் என்னும் திருக்கோயிலில் விரும்பி வீற்றிருந்தருளும் வாழ்க்கையையுடையவர். இதுவே புண்ணியரான சிவபெருமானின் இயல்பாகும்.

  
பாடல் எண் : 5
ஏறுஉகந் தீர்இடு காட்டுஎரி ஆடி,வெண்
நீறுஉகந் தீர்,நிரை யார்விரி தேன்கொன்றை
நாறுஉகந் தீர்,திரு நல்லூர்ப் பெருமணம்
வேறுஉகந் தீர்,உமை கூறுஉகந் தீரே.

         பொழிப்புரை : இறைவனே! நீவிர் இடபத்தை விரும்பி வாகனமாகக் கொண்டுள்ளீர். நெருப்பேந்திச் சுடுகாட்டில் ஆடுகின்றீர். திருவெண்ணீற்றினை விரும்பிப் பூசியுள்ளீர். வரிசையாக அழகுடன் விளங்கும் தேன் துளித்து நறுமணம் கமழும் கொன்றை மாலையை அணிந்துள்ளீர். செல்வம் பெருகும் திருநல்லூர் என்னும் திருத்தலத்தில், பெருமணம் என்னும் திருக்கோயிலில் விரும்பி வீற்றிருந்தருளும் நீர் உமாதேவியை ஒரு கூறாகக் கொண்டு உகந்துள்ளீர்.


பாடல் எண் : 6
சிட்டப்பட் டார்க்குஎளி யான்செங்கண் வேட்டுவப்
பட்டங்கட் டும்சென்னி யான்பதி ஆவது,
நட்டக்கொட்டு ஆட்டுஅறா நல்லூர்ப் பெருமணத்து
இட்டப்பட் டால்ஒத்தி ரால்எம் பிரானிரே.

         பொழிப்புரை : சிவபெருமான் நியமம் தவறாது வழிபடுபவர்கட்கு எளியர். வேடுவக் கோலத்தில் நெற்றிப்பட்டம் கட்டிய தலையினை உடையவர். அவர் விரும்பி வீற்றிருந்தருளும் இடமாவது நாட்டியங்களின் கொட்டு வாத்திய ஓசையும், திருவிழா முதலிய கொண்டாட்டங்களின் ஓசையும் ஒழியாத, திருநல்லூர் என்னும் திருத்தலத்தில் பெருமணம் என்னும் கோயிலாகும். எம் தலைவராகிய நீர் ஏனைய தலங்களிலும் விரும்பி வீற்றிருக்கின்றீர்.

பாடல் எண் : 7
மேகத்த கண்டன்,எண் தோளன்,வெண் நீற்று,உமை
பாகத்தன் பாய்புலித் தோலொடு, பந்தித்த
நாகத்தன், நல்லூர்ப் பெருமணத் தான்,நல்ல
போகத்தன், யோகத்தை யேபுரிந் தானே.

         பொழிப்புரை : இறைவன் மழைமேகம் போன்ற இருண்ட திருநீல கண்டத்தன். எட்டுத் திருத்தோள்களை உடையவன். வெண்ணீற்று உமையாள் என்னும் திருநாமம் தாங்கிய அம்பிகையை ஒரு பாகமாகக் கொண்டவன். பதுங்கியிருந்து பாயும் தன்மையுடைய புலியினை உரித்து அதன் தோலினை ஆடையாக உடுத்தவன். அதன்மேல் பாம்பைக் கச்சாக இறுகக் கட்டியவன். அப்பெருமான் திருநல்லூர் என்னும் திருத் தலத்தில் பெருமணம் என்னும் திருக்கோயிலில், உயிர்கள் போகம் துய்க்கும் பொருட்டுப் போகவடிவில் விளங்குகின்றான். மேலும் மன்னுயிர்கள் நற்றவம் புரிந்து திருவடிப் பேறெய்தும் பொருட்டு யோகத்தையே புரிந்தருள்வன்.


பாடல் எண் : 8
தக்குஇருந் தீர்அன்று தாளால் அரக்கனை
உக்குஇருந்து ஒல்க உயர்வரைக் கீழ்இட்டு
நக்குஇருந் தீர்,இன்று நல்லூர்ப் பெருமணம்
புக்குஇருந் தீர்,எமைப் போக்குஅரு ளீரே.

         பொழிப்புரை : இறைவனே! யாண்டும் உம்முடைய சிறந்த முழுமுதல் தன்மைக்கேற்ப வீற்றிருந்தருளுகின்றீர். முன்னாளில் இலங்கையை ஆண்ட அசுரனான இராவணன் கயிலையைப் பெயர்த்தெடுக்க முயன்றபோது, உயர்ந்த அம்மலையின்கீழ் அவன் உடல் குழைந்து நொறுங்கும்படி சிரித்துக் கொண்டிருந்தீர். இந்நாளில் திருமணநல்லூர் என்னும் திருத்தலத்தில் பெருமணம் என்னும் திருக்கோயிலில் வீற்றிருந்து அருள்புரிகின்றீர். அடியார்களாகிய நாங்கள் உம் திருவடிகளைச் சேர்வதற்கு அருள்புரிவீராக!.


பாடல் எண் : 9
ஏலும்தண் தாமரை யானும் இயல்புடை
மாலும்தம் மாண்புஅறி கின்றிலர், மாமறை
நாலுந்தம் பாட்டுஎன்பர், நல்லூர்ப் பெருமணம்
போலும்,தம் கோயில் புரிசடை யார்க்கே.

         பொழிப்புரை : குளிர்ச்சி பொருந்திய செந்தாமரையில் வீற்றிருக்கும் பிரமனும், திருமாலும் சிவபெருமானுடைய மாண்பை ஒரு சிறிதும் அறிந்திலர். இறைவனின் அடிமுடியைத் தேட முயன்றும் காண்கிலர். நால்வேதங்களை அருளிச் செய்த சிவபெருமானே அவ்வேதங்களின் உட்பொருளாய் விளங்குகின்றார் என நல்லோர் நுவல்வர். அப்பெருமான் திருநல்லூர் என்னும் திருத்தலத்தில், பெருமணம் என்னும் திருக்கோயிலில் நிலையாக வீற்றிருந் தருளுகின்றார்.


பாடல் எண் : 10
ஆதர் அமணொடு சாக்கியர் தாம்சொல்லும்
பேதைமை கேட்டு, பிணக்குறு வீர்வம்மின்,
நாதனை, நல்லூர்ப் பெருமணம் மேவிய
வேதன தாள்தொழ, வீடுஎளிது ஆமே.

         பொழிப்புரை : இறைவனை உணரும் அறிவில்லாத சமணர்கள், பௌத்தர்கள் ஆகியோர்கள் கூறும் புன்னெறியைக் கேட்டு, நன்னெறியாம் சித்தாந்தச் சிவநெறிக்கண் இணங்காது பிணங்கி நிற்கும் பெற்றியீர்! வாருங்கள். அனைத்துயிர்க்கும் தலைவன் சிவபெருமான். திருநல்லூர் என்னும் திருத்தலத்தில் பெருமணம் என்னும் திருக் கோயிலில் வீற்றிருந்தருளுகின்ற வேதங்களின் பொருளான சிவபெருமானின் திருவடிகளை வழிபடுங்கள். அவ்வாறு வழிபட்டால் வீடுபேறு எளிதில் கிட்டும்.


பாடல் எண் : 11
நறும்பொழில் காழியுள் ஞானசம் பந்தன்
பெறும்பத நல்லூர்ப் பெருமணத் தானை
உறும்பொரு ளால்சொன்ன ஒண்தமிழ் வல்லார்க்கு
அறும்பழி பாவம் அவலம் இலரே.

         பொழிப்புரை : நறுமணம் கமழும் சோலைகள் சூழ்ந்த சீகாழியில் அவதரித்த திருஞானசம்பந்தன், பெறுதற்கரிய முத்திப்பேற்றை அருளும், திருமணநல்லூர் என்னும் திருத்தலத்தில், பெருமணம் என்னும் திருக்கோயிலில் வீற்றிருந்தருளும் சிவபெருமானை, அவர் திருவடியில் இரண்டறக் கலக்கும் கருத்தோடு பாடிய சிறந்த பயனைத் தரவல்ல இத்தமிழ்த் திருப்பதிகத்தைப் பக்தியுடன் ஓதவல்லவர்கட்குப் பழியும், பாவமும் அற்றொழியும். பிறப்பு இறப்புக்களாகிய துன்பம் நீங்கப் பேரின்பம் வாய்க்கும்.

                                    திருச்சிற்றம்பலம்

     
திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு


பெ. பு. பாடல் எண் : 1246
தேவர்கள் தேவர் தாமும்
         திருவருள் புரிந்து, "நீயும்
பூவைஅன் னாளும் இங்குஉன்
         புண்ணிய மணத்தின் வந்தார்
யாவரும் எம்பால் சோதி
         இதனுள்வந்து எய்தும்" என்று
மூவுலகு ஒளியால் விம்ம
         முழுச்சுடர்த் தாணு ஆகி.

         பொழிப்புரை : தேவர்களுக்கெல்லாம் தலைவரான சிவபெருமானும், திருவருள் செய்து `நீயும் நாகணவாய்ப் பறவை அனைய நின் மனைவியும், இங்கு உன் புண்ணியத் திருமணத்தில் வந்தவர்கள் யாவரும் எம்மிடத்தில் இந்தச் சோதியுள் வந்து அடையுங்கள்\' என்று அருளாணையிட்டு, மூன்று உலகங்களும் தம் ஒளியினால் மேலிட்டு விளங்கும்படி, முழுமையான சுடர்விட்டெழும் சோதிலிங்கமாய் நிமிர்ந்து எழுந்து,

  
பெ. பு. பாடல் எண் : 1247
கோயில்உட் படமேல் ஓங்கும்
         கொள்கையால் பெருகும் சோதி
வாயிலை வகுத்துக் காட்ட,
         மன்னுசீர்ப் புகலி மன்னர்
பாயின ஒளியால் நீடு
         பரஞ்சுடர்த் தொழுது போற்றி,
மாஇரு ஞாலம் உய்ய
         வழியினை அருளிச் செய்வார்.

         பொழிப்புரை : திருக்கோயில் தன்னகத்துட்பட, மேலே பரந்து பெருகி எழுகின்ற அச்சோதியுள், ஒரு வாயிலையும் அமைத்துக் காட்ட, நிலைபெற்ற புகழையுடைய சீகாழித் தலைவரான ஞானசம்பந்தர், பரந்த பேரொளியால் நீண்டு விளங்கும் பரஞ்சுடரான இறைவரை வணங்கிப் போற்றி, மிகப் பெரிய உலகில் உள்ள உயிர்கள் எல்லாம் உய்யும் வழியை அருள் செய்வாராய்,


பெ. பு. பாடல் எண் : 1248
"ஞானமெய்ந் நெறிதான் யார்க்கும்
         நமச்சிவா யச்சொ லாம்"என்று
ஆனசீர் நமச்சி வாயத்
         திருப்பதி கத்தை அங்கண்
வானமும் நிலனும் கேட்க
         அருள்செய்து "இம்மணத்தில் வந்தோர்
ஈனமாம் பிறவி தீர
         யாவரும் புகுக" என்ன.

         பொழிப்புரை : மெய்ம்மை பொருந்திய ஞான நெறிதான் யாவர்க்கும், `நமச்சிவாய' என்னும் ஐந்தெழுத்தாலாய சொல்லே ஆகும் என்று, ஆக்கம் பொருந்திய சிறப்புக் கொண்ட நமச்சிவாயத் திருப்பதிகத்தை, அங்கு விண்ணோரும் மண்ணோரும் கேட்குமாறு அருள் செய்து, `இம் மணத்தில் வந்தவர் எல்லோரும் இழிவான பிறவி நீங்க யாவரும் இவ்வொளியில் புகுக' என்று ஆணையிட்டருள,

         குறிப்புரை : இதுபொழுது அருளிய பதிகம் `காதலாகி' (தி.3 ப.49) எனத் தொடங்கும் கௌசிகப் பண்ணில் அமைந்த பதிகம் ஆகும். இப்பதிகப் பாடல் தொறும் `நமச்சிவாய' எனும் திருவைந்தெழுத்து அருளப் பெற்றிருத்தலின், இதனை நமச்சிவாயத் திருப்பதிகம் என்றழைத்தனர். ஞானத்தைப் பெறவும் அதன்வழி வீடு பேற்றை அடையவும் தக்கதொரு நெறி(வழி) திருவைந்தெழுத்தை குருவருளால் பெற்று ஓதி வருதலேயாகும். இவ்வருளுரை தானும் யாவர்க்கும் பொருந்தும் என முன்னர்த் தொகுத்துக் கூறிய ஆசிரியர், பின்னர் `வானமும் நிலமும் கேட்க' என வகுத்தும் கூறினார்.


திருஞானசம்பந்தர் திருப்பதிகம்


3. 049  பொது - பஞ்சாக்கரத் திருப்பதிகம் பண் - கௌசிகம்
                                    திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
காதல் ஆகிக் கசிந்துகண் ணீர்மல்கி
ஓது வார்தமை நன்னெறிக்கு உய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது
நாதன் நாமம் நமச்சி வாயவே.

         பொழிப்புரை : உள்ளன்பு கொண்டு மனம் கசிந்து கண்ணீர் பெருகி தன்னை ஓதுபவர்களை முத்திநெறியாகிய நன்னெறிக்குக் கூட்டுவிப்பதும் , நான்கு வேதங்களின் உண்மைப் பொருளாக விளங்குபவனும் , அனைவருக்கும் தலைவனான சிவபெருமானின் திருநாமம் ` நமச்சிவாய ` என்ற திருவைந்தெழுத்தாகும் .


பாடல் எண் : 2
நம்பு வார்அவர் நாவில் நவிற்றினால்
வம்பு நாள்மலர் வார்மது ஒப்பது
செம்பொ னார்தில கம்உல குக்குஎலாம்
நம்பன் நாமம் நமச்சி வாயவே.

         பொழிப்புரை : சிவபெருமானின் திருவடிகளையே பற்றுக் கோடாக நம்பும் பக்தர்கள் திருவைந்தெழுத்தைத் தங்கள் நாவினால் உச்சரித்தால் , நறுமணம் கமழும் நாள்மலர்களில் உள்ள தேன்போல இனிமை பயப்பது , எல்லா உலகங்கட்கும் செம்பொன் திலகம் போன்றது நம்முடைய சிவபெருமானின் திருநாமமான `நமச்சிவாய` என்னும் திருவைந்தெழுத்தே ஆகும்.


பாடல் எண் : 3
நெக்குஉள் ஆர்வம் மிகப்பெரு கிந்நினைந்து
அக்கு மாலைகொடு அங்கையில் எண்ணுவார்
தக்க வானவ ராத்தகு விப்பது
நக்கன் நாமம் நமச்சி வாயவே.

         பொழிப்புரை : உள்ளம் நெகிழ்ந்து அன்புமிகப் பெருக சிவபெருமானைச் சிந்தித்து , தமது அழகிய கையில் உருத்திராக்க மாலையைக் கொண்டு திருவைந்தெழுத்தை விதிப்படிச் செபிப்பவர்களைத் தேவர்களாக்கும் தகுதியைப் பெறும்படிச் செய்வது ஆடையில்லாத சிவபெருமானின் திருநாமமாகிய ` நமச்சிவாய ` என்னும் திருவைந்தெழுத்தேயாகும் .


பாடல் எண் : 4
இயமன் தூதரும் அஞ்சுவர், இன்சொலால்
நயம்வந்து ஓதவல் லார்தமை நண்ணினால்,
நியமந் தான்நினை வார்க்குஇனி யான்,நெற்றி
நயனன் நாமம் நமச்சி வாயவே.

         பொழிப்புரை : தன்னை நாடோறும் தியானித்து வழிபடும் அடியவர்கட்கு என்றும் நன்மை செய்பவனும் , நெற்றிக்கண்ணை உடையவனுமான சிவபெருமானின் திருநாமம் ` நமச்சிவாய ` என்ற திருவைந்தெழுத்தாகும் . இனிமையான சொற்களால் திருவைந்தெழுத்தை நயம்பட ஓதவல்லவர்களை எவரேனும் அண்டினால், அங்ஙனம் அண்டியவர்களையும் அணுக இயமன் தூதன் பயப்படுவான் .


பாடல் எண் : 5
கொல்வா ரேனும், குணம்பல நன்மைகள்
இல்லா ரேனும், இயம்புவர் ஆயிடின்,
எல்லாத் தீங்கையும் நீங்குவர் என்பரால்,
நல்லார் நாமம் நமச்சி வாயவே.

         பொழிப்புரை : கொலைத்தொழிலில் ஈடுபட்டவர்களாக இருப்பினும் , நற்குணமும் , பல நல்லொழுக்கங்களும் இல்லாதவர் ஆயினும் ஏதேனும் சிறு பூர்வ புண்ணியத்தால் திருவைந்தெழுத்தை உச்சரிப்பார்களேயானால் எல்லாவிதமான தீங்குகளினின்றும் நீங்குவர் என்று பெரியோர்கள் கூறுவர் . அத்தகைய சிறப்புடையது எல்லோருக்கும் நன்மையே செய்பவனாகிய சிவபெருமானின் திருப்பெயரான ` நமச்சிவாய ` என்னும் திருவைந்தெழுத்தேயாகும் .


பாடல் எண் : 6
மந்த ரம்அன பாவங்கள் மேவிய
பந்த னையவர் தாமும் பகர்வரேல்,
சிந்தும் வல்வினை, செல்வமும் மல்குமால்,
நந்தி நாமம் நமச்சி வாயவே.

         பொழிப்புரை : மந்தர மலை போன்ற பாவங்களைச் செய்து பாசங்களால் கட்டுண்டவர்களும் , திருவைந்தெழுத்தை உச்சரிப்பார்களேயானால் அவர்களது கொடியவினைகள் தீர்ந்து போகும் . அவர்கட்குச் செல்வமும் பெருகும் . அத்தகைய சிறப்புடையது நந்தி என்னும் பெயருடைய சிவபெருமானின் திருநாமமான ` நமச்சிவாய ` என்பதாகும் .


பாடல் எண் : 7
நரகம் ஏழ்புக நாடினர் ஆயினும்,
உரைசெய் வாயினர் ஆயின், உருத்திரர்
விரவி யேபுகு வித்திடும் என்பரால்,
வரதன் நாமம் நமச்சி வாயவே.

         பொழிப்புரை : ஏழ் நரகங்கட்குச் செல்லக் கூடிய பாவிகளானாலும் திருவைந்தெழுத்தைப் பக்தியோடு உச்சரிப்பார்களேயானால் , உருத்திர கணத்தாரோடு சேர்ந்து வசிக்கும் பேற்றினைப் பெறுவர் . அடியவர்கள் கேட்ட வரமெல்லாம் தரும் சிவபெருமானின் திருநாமமும் திருவைந்தெழுத்தே ஆகும் .


பாடல் எண் : 8
இலங்கை மன்னன் எடுத்த அடுக்கல்மேல்
தலம்கொள் கால்விரல் சங்கரன் ஊன்றலும்,
மலங்கி வாய்மொழி செய்த,அவன் உய்வகை
நலம்கொள் நாமம் நமச்சி வாயவே.

         பொழிப்புரை : இலங்கை மன்னனான இராவணன் திருக்கயிலையைப் பெயர்த்து எடுக்க முயல , சங்கரன் தன் காற்பெருவிரலை ஊன்றவும் , கயிலையின் கீழ் நெருக்குண்டு அவன் வாய்விட்டு அலற அவனுக்கு உய்யும்நெறி அருளி , நன்மை செய்வதையே தன் இயல்பாக உடைய சிவபெருமானின் திருநாமமாகிய ` நமச்சிவாய ` என்ற திருவைந்தெழுத்தாகும் .


பாடல் எண் : 9
போதன் போதுஅன கண்ணனும் அண்ணல்தன்
பாதம் தான்முடி நேடிய பண்பராய்,
யாதும் காண்பரிது ஆகி, அலந்தஅவர்
ஓதும் நாமம் நமச்சி வாயவே.

         பொழிப்புரை : தாமரை மலரில் வீற்றிருக்கின்ற பிரமனும் , தாமரை மலர் போன்ற கண்களையுடைய திருமாலும் , எல்லோருக்கும் தலைவரான சிவபெருமானின் திருமுடியையும் , திருவடியையும் தேட முயற்சித்து காண இயலாதவராகித் தம் செயலுக்கு வருந்திப் பின்னர் அவர்கள் நல்லறிவு பெற்று ஓதி உய்ந்தது ` நமச்சிவாய ` என்ற திருவைந்தெழுத்தேயாகும் .


பாடல் எண் : 10
கஞ்சி மண்டையர் கையில்உண் கையர்கள்
வெஞ்சொல் மிண்டர், விரவிலர் என்பரால்,
விஞ்சை அண்டர்கள் வேண்ட அமுதுசெய்
நஞ்சுஉண் கண்டன் நமச்சி வாயவே.

         பொழிப்புரை : தேவர்கள் வேண்ட நஞ்சினை உண்டு அதை கழுத்தில் தேக்கிய நீலகண்டனான சிவபெருமானின் திருநாமமாகிய ` நமச்சிவாய ` என்னும் திருவைந்தெழுத்து மந்திரத்தை , மண்டை என்னும் ஒருவித பாத்திரத்தில் கஞ்சியைக் குடிக்கும் வழக்கமுடைய பௌத்தர்களும் , கைகளையே பாத்திரமாகக் கொண்டு அதில் உணவு ஏற்றுப் புசிக்கும் வழக்கமுடைய சமணர்களும் ஓதும் பேறு பெற்றிலர் .


பாடல் எண் : 11
நந்தி நாமம் நமச்சிவா யஎனும்
சந்தை யால்தமிழ் ஞானசம் பந்தன்சொல்
சிந்தை யால்மகிழ்ந்து ஏத்தவல் லார்எலாம்
பந்த பாசம் அறுக்கவல் லார்களே.

         பொழிப்புரை : நந்தி என்னும் பெயருடைய சிவபெருமானின் திருநாமமாகிய ` நமச்சிவாய ` என்னும் திருவைந்தெழுத்தைச் சந்தம் மிகுந்த தமிழ் கொண்டு ஞானசம்பந்தன் அருளிச் செய்த இத்திருப் பதிகத்தைச் சிந்தை மகிழ ஓத வல்லவர்கள் பந்தபாசம் அறுக்க வல்லவர் ஆவர் .

                                             திருச்சிற்றம்பலம்



பெ. பு. பாடல் எண் : 1249
வருமுறைப் பிறவி வெள்ளம்
         வரம்புகா ணாது அழுந்தி
உருஎனுந் துயரக் கூட்டில்
         உணர்வுஇன்றி மயங்கு வார்கள்
திருமணத் துடன்சே வித்து
         முன்செலும் சிறப்பி னாலே
மருவிய பிறவி நீங்க
         மன்னுசோ தியின்உள் புக்கார்.

         பொழிப்புரை : முறையாய் இடையறாது வரும் பிறவி என்னும் பெருவெள்ளத்தின் எல்லை காணாது அழுந்தி `உடல்\' என்ற துன்பம் நிறைந்த கூட்டினுள் இருந்து உணர்வில்லாது மயங்குபவர்களாகிய அம்மக்கள் தாமும், பிள்ளையாரின் திருமணக்கோலத்தை வணங்கி முன்னால் செல்லப் பெற்ற சிறப்பால், பொருந்திய பிறவி நீங்குமாறு நிலையான அப் பேரொளியில் புகுந்தார்கள்.


பெ. பு. பாடல் எண் : 1250
சீர்பெருகு நீலநக்கர் திருமுருகர் முதல்தொண்டர்
ஏர்கெழுவு சிவபாத இருதயர்நம் பாண்டார்சீர்
ஆர்திருமெய்ப் பெரும்பாணர் மற்றுஏனையோர்                                                           அணைந்து உளோர்
பார்நிலவு கிளைசூழப் பன்னிகளோடு உடன்புக்கார்.

         பொழிப்புரை : சிறப்பு மிகும் திருநீலநக்க நாயனார், திருமுருக நாயனார், முதலிய தொண்டர்களும், தவ ஒழுக்கத்தின் பொலிவு மிக்க சிவபாத இருதயரும், நம்பாண்டார் நம்பிகளும், சிறப்பு நிறைந்த உண்மை ஒழுக்கத்தையுடைய திருநீலகண்ட யாழ்ப்பாணரும், மற்றும் அங்கு வந்தவர்களும், உலகில் நிலவிய சுற்றத்தார்களும் சூழ்ந்து வரத் தத்தம் மனைவியர்களுடன் புகுந்தனர்.


பெ. பு. பாடல் எண் : 1251
அணிமுத்தின் சிவிகைமுதல்
         அணிதாங்கிச் சென்றோர்கள்
மணிமுத்த மாலைபுனை
         மடவார்மங் கலம்பெருகும்
பணிமுற்றும் எடுத்தார்கள்
         பரிசனங்கள் வினைப்பாசந்
துணிவித்த உணர்வினராய்த்
         தொழுதுஉடன்புக்கு ஒடுங்கினார்.

         பொழிப்புரை : அழகிய முத்துச் சிவிகையைத் தாங்கிச் சென்றவரும், மணிமுத்து மாலைகளைத் தக்கவாறு அழகுசெய்த மங்கையரும், மங்கலம் பெருக வரும் மணிகளை எல்லாம் எடுத்து வந்தவர்களும், மற்றும் பணி செய்தவர்களும், வினையால் வரும் பிறவிக்குக் காரணமான பாசங்களையெல்லாம் அறுத்து, உணர்வு உடையவராய்ப் பிள்ளையாரை வணங்கியவாறே உடன்புகுந்து அப்பேரொளியுள் ஒடுங்கினர்.


பெ. பு. பாடல் எண் : 1252
ஆறுவகைச் சமயத்தின் அருந்தவரும் அடியவரும்
கூறுமறை முனிவர்களும் கும்பிடவந்து அணைந்தாரும்
வேறுதிரு வருளினால் வீடுபெற வந்தாரும்
ஈறுஇல்பெரும் சோதியினுள் எல்லாரும் புக்கதற்பின்.

         பொழிப்புரை : சைவ சமயத்தில் உட்பிரிவான அறுவகைச் சமய நெறியிலும் நின்ற தவத்தவர்களும், சைவத் தொண்டர்களும், மறை வழி ஒழுகும் முனிவர்களும், கும்பிடும் கரத்துடன் வந்து சேர்ந்தவர்களும், முன்சொன்னவாறன்றி எக்காரணமும் அறிய இயலாது திருவருள் வயத்தால் வந்தவர்களும், எல்லை இல்லாத பெரிய சிவப்பேரொளியுள் எல்லாருமாகப் புகுந்தபின்,


பெ. பு. பாடல் எண் : 1253
காதலியைக் கைப்பற்றிக் கொண்டுவலம் செய்துஅருளித்
தீதுஅகற்ற வந்தருளும் திருஞான சம்பந்தர்
நாதன்எழில் வளர்சோதி நண்ணிஅதன் உட்புகுவார்
போதநிலை முடிந்தவழிப் புக்குஒன்றி உடன்ஆனார்.

         பொழிப்புரை : மனைவியாரைக் கைப்பிடித்தவாறே அச் சோதியை வலம் வந்து, உலகில் உள்ள தீமைகளைப் போக்கிச் சைவநெறி தழைத்தற்கென்றே தோன்றியருளிய திருஞானசம்பந்தர், சிவ பெருமானின் அழகினதாய் வளர்ந்து எழுகின்ற பேரொளியை அடைந்து, அதனுள் புகுபவராய், ஓரொருகால் உலகியலைத் தழுவி நிற்கும் ஒருப்பாடு நீங்கியதால், உள்ளே புகுந்து, ஒன்றாய்ச் சேர்ந்து சிவானந்த நிறைவாம் தன்மையில் வீடுபேற்றை எய்தினார்.


பெ. பு. பாடல் எண் : 1254
பிள்ளையார் எழுந்துஅருளிப் புக்கதற்பின் பெருங்கூத்தர்
கொள்ளநீ டியசோதிக் குறிநிலைஅவ் வழிகரப்ப
வள்ளலார் தம்பழய மணக்கோயில் தோன்றுதலும்
தெள்ளுநீர் உலகத்துப் பேறுஇல்லார் தெருமந்தார்.

         பொழிப்புரை : ஞானசம்பந்தர் உட்புகுந்து உடனாகிய பின்னர்ப் பேரானந்தக் கூத்தரான இறைவர், இவ்வாறு மணத்தில் வந்தோரையும் பிள்ளையாரையும் வீடுபேற்றில் உடனாகக் கொள்ளும் அளவும் நீடியிருந்த பேரொளிப் பெருவடிவையும், அதன் உட்புகக் காட்டிய வாயிலையும் மறையுமாறு செய்ய, சிவலோகத் தியாகரின் பழைய பெருமணக் கோயில் தோன்றவும், தெளிந்த நீருடைய உலகத்தில் இவ்வரிய பேற்றைப் பெறாதவர் பலரும் மயங்கி வருந்தினர்.


பெ. பு. பாடல் எண் : 1255
கண்ணுதலார் திருமேனி உடன்கூடக் கவுணியனார்
நண்ணியது தூரத்தே கண்டுநணு கப்பெறா
விண்ணவரும் முனிவர்களும் விரிஞ்சனே முதலானார்
எண்ணில்அவர் ஏசறவு தீரஎடுத்து ஏத்தினார்.

         பொழிப்புரை : நெற்றியில் விழியையுடைய சிவபெருமானின் திருமேனியுடன் கூடத் திருஞானசம்பந்தர் சென்று சேர்ந்ததைத் தாம் தாமும் தொலைவான இடத்தில் இருந்தவாறே கண்டும், வந்து அடைகின்ற பேறு பெறாத தேவர்களும் முனிவர்களும் நான்முகன் முதலான பெருந்தேவர்களும் ஆகிய எண்ணில்லாதவர்கள் தம் வருத்தம் நீங்கப் பெருமானைப் போற்றினர்.

திருச்சிற்றம்பலம்










No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...