திரு வேற்காடு
தொண்டை நன்னாட்டுத் திருத்தலம்.
சென்னை - பூவிருந்தவல்லி சாலையில்
சுமார் 17 கி.மீ. பயணம் செய்து
வேலப்பன்சாவடி என்ற இடம் அடைந்து,
பிறகு
வலதுபுறம் பிரியும் ஒரு கிளைச்சாலை வழியாக சுமார் 3 கி.மீ. சென்றால் இத் திருத்தலத்தை
அடையலாம்.
சென்னை நகரின் பல பகுதிகளிலிருந்தும்
திருவேற்காடு செல்வதற்கு பேருந்து வசதிகள் உள்ளன. திருவேற்காடு பேருந்து
நிலையத்திலிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில்
ஆலயம் உள்ளது.
இறைவர்
: வேதபுரீசுவரர், வேற்காட்டுநாதர்.
இறைவியார்
: பாலாம்பிகை, வேற்கண்ணி.
தல
மரம் : வேலமரம் (வெளிச் சுற்றில்
உள்ளது)
தீர்த்தம் : வேலாயுத தீர்த்தம்.
தேவாரப்
பாடல்கள் : சம்பந்தர் - ஒள்ளி துள்ளக்
கதிக்கா.
திருவேற்காடு என்றதும் அநேகருக்கு அங்குள்ள
தேவி கருமாரி அம்மன் ஆலயம் தான் நினைவிற்கு வரும். ஆனால் அதே திருவேற்காட்டில்
பாடல் பெற்ற திருத்தலமான வேதபுரீசுவரர் ஆலயம் இருப்பது பலருக்கு தெரிந்திருக்காது.
தேவி கருமாரி அம்மன் ஆலயத்திலிருந்து சுமார் 1 கி.மி தொலவில் உள்ள சிவாலயத்திற்குச்
செல்ல நல்ல சாலை வசதி உள்ளது. நான்கு வேதங்களும் வேல மரங்களாய் நின்று இறைவனை இஙகு
வழிபட்டதால் இத்தலம் வேற்காடு என்று பெயர் பெற்றது.
கிழக்கு நோக்கி உள்ள ஆலய முகப்பு
கோபுரம் ஐந்து நிலைகளை உடையதாகும். கிழக்கு கோபுர வாயில் வழியாக உள்ளே
துழைந்தவுடன் உள்ள விசாலமான வெளிப் பிரகாரத்தில் கொடிமரம், பலிபீடம், நந்தி மண்டபம் ஆகியவற்றைக் காணலாம்.
அவற்றின் பின் உள்ள 2-வது வாயில் மூலமாக உள்ளே சென்றவுடன்
நேர் எதிரே மூலவர் வேதபுரீசுவரர் இலிங்க உருவில் கிழக்கு நோக்கி அருட்காட்சி
தருகிறார். இலிங்க உருவின் பின்புறம் சுவற்றில் சிவன் பார்வதி திருமணக் காட்சி
புடைப்பு சிற்பமாக காணபாடுகிறது. அகத்திய முனிவருக்கு சிவபெருமான் திருமணக் கோல
காட்சி கொடுத்த தலங்களில் திருவேற்காடும் ஒன்று. ஆலய உட்பிரகாரத்தின் இடது புறம்
அகத்தியர் மற்றும் சூரியன் திருமேனிகள் காட்சி தருகின்றன. தெற்கு உட்பிரகாரத்தில்
நால்வர் சந்நிதி மற்றும் 63 நாயன்மார்களின்
உருவச் சிலைகளைக் காணலாம். மேற்கு உட்பிரகாரத்தில் காசி விஸ்வநாதர், விசாலாட்சி, அநபாயச் சோழன் ஆகியோரின் உருவச்
சிலைகளைக் காணலாம். வடக்குப் பிரகாரத்தில் தெற்கு நோக்கிய இறைவி பாலாம்பிகை
சந்நிதி உள்ளது. மேலும் உட்பிரகாரத்தில் சண்டிகேஸ்வரர், கணபதி, தட்சினாமூர்த்தி, பிரம்மா மற்றும் துர்க்கை ஆகியோர் கோஷ்ட
தெய்வங்களாக காணப்படுகின்றனர். கிழக்கு வெளிப் பிரகாரத்தில் வலதுபுறம் மேற்கு
நோக்கிய சனீஸ்வர பகவான் தனி சந்நிதி இருக்கிறது. ஆலய கோபுர வாயில் வழியாக உள்ளே
நுழைந்தவுடன் வலதுபுறத்தில் இந்த சனீஸ்வரன் சந்நிதி உள்ளது. அதன் அருகில் மூர்க்க
நாயனாரும் தனி சந்நிதியில் காட்சி தருகிறார். இத்தலத்திலுள்ள முருகன் தன் கையில்
வேல் இல்லாமல் வில்லும் அம்பும் ஏந்தியவாறு ஒரு காலை மயிலின் மீது வைத்துக்கொண்டு
நின்றபடி பக்தர்களுக்கு காட்சி தருகிறார். இந்த ஆலயத்தின் தல விருட்சம் வெள் வேல
மரம்.
இத்தலம் முருகப்
பெருமானின் வாழ்க்கையோடு சம்பந்தம் உடையதாகும். பிரணவத்திற்கு பொருள் கூற முடியாத
பிரம்மாவை முருகப் பெருமான் கைது செய்துவிட்டார். அதனால் படைப்புத் தொழில்
தடைபட்டது. சிவபெருமான் நந்தியை முருகனிடம் அனுப்பி பிரம்மாவை விடுதலை செய்யும்படி
கூறச் செய்தார். ஆனால் முருகன் அதற்கு சம்மதிக்கவில்லை. இதைத் தெரிந்து கொண்ட
சிவபெருமான் தானே நேரில் வந்து முருகனிடம் பிரம்மாவின் படைப்புத் தொழில்
தடைபடுவதால் ஏற்படும் சிக்கல்களை விளக்கி பிரம்மாவை சிறையிலிருந்து விடுதலை
செய்தார். நந்தி மூலம் சொல்லி அனுப்பியும் தன் சொல்லிறகு கட்டுப் படாத முருகனை
தண்டிக்கும் பொருட்டு திருவேற்காட்டிற்குச் சென்று அங்கு தன்னை வழிபட்டு வரும்படி
ஆணையிட்டார். அதன்படி முருகனும் திருவேற்காடு வந்து ஒரு தீர்த்தம் ஏற்படுத்தி
சிவனை வழிபட்டார். கருவறை மேற்குப் பிரகாரத்தில் உள்ள முருகன் சந்நிதியில் முருகனுக்கு
முன்னால் ஒரு சிவலிங்கம் இருப்பதைக் காணலாம். இத்தகைய அமைப்பை வேறு எங்கும் காண
முடியாது. முருகன் ஏற்படுத்திய தீர்த்தம் வேலாயுத தீர்த்தம் என்ற பெயரில்
ஆலயத்தின் உள்ளே இருக்கிறது. இத்தலத்திலுள்ள முருகப்பெருமான் அருணகிரிநாதரால்
திருப்புகழில் பாடப் பெற்றுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது 2 பாடல்கள் உள்ளன.
காலை 6-30 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக்
கலிவெண்பாவில், "மல்லல் பெறு வேற்காட்டர்
ஏத்து திருவேற்காட்டின் மேவிய முன் நூல் காட்டு உயர் வேத நுட்பமே" என்று போற்றி
உள்ளார்.
மூர்க்க நாயனார்
வரலாறு
தொண்டைவள நாட்டின் பாலியாற்றின்
வடக்கில் உள்ளது திருவேற்காடு என்னும் திருத்தலம். அதில் சிவனடிமைத் திறத்தில்
சிறந்து, வழிவழி வந்த வேளாண்
மரபில் அவதரித்த ஒரு பெரியவர் இருந்தார். அவர் திருநீற்றின் அடைவே பொருள் என்று
அறிந்து அடியார்க்கு அமுது முன் ஊட்டி மகிழ்ந்து, பின் தாம் அமுது செய்யும் நியதியினை
இடைவிடாமல் கடைப்பிடித்து வந்தார்.
இவ்வாறு ஒழுகும் நாளில் அடியவர்கள்
நாளும் நாளும் மிகவும் பெருகி வந்தமையாலே தமது உடமை முழுவதும் மாள விற்றும் அப்பணி
செய்தனர். மேலும் செய்து வருவதற்கு அவ்வூரில் ஒருவழியும் இல்லாமையால் தாம் முன்பு
கற்ற நல்ல சூதாட்டத்தினால் பொருளாக்க முயன்றனர். தம் ஊரில் தம்முடன் சூது பொருவார்
இல்லாமையால் அங்கு நின்று வேற்றூர்க்குப் போவாராயினர்.
பல பதிகளிலும் சென்று சிவனை உள்ளுருகிப்
பணிந்து அங்கங்கும் சூதாடுதலினால் வந்த பொருளைக் கொண்டு தமது நியமமாகிய அடியார்
பணியினைச் செய்து வந்தார். கும்பகோணத்தைச் சேர்ந்து அங்கு தாம்வல்ல சூதினால் வந்த
பொருளைத் தாம் தீண்டாது, நாள்தோறும்
அடியார்க்கு அமுதூட்டி இருந்தனர். சூதினில் வல்ல இவர், முதற்சூது தாம் தோற்றுப் பிற்சூது
பலமுறையும் தம் வென்று பெரும்பொருள் ஆக்கினார். சூதினால் மறுத்தாரைச் சுரிகை
உருவிக் குத்துதலினால் இவர் நற்சூதர் – மூர்க்கர் என்னும் பெயர்களைப் பெற்று
உலகில் விளங்கினார்.
இவ்வாறு பணி செய்து அருளாலே குற்றங்கள் போய்
அகல இவ்வுலகை விட்டதற்பின், இறைவரது சிவபுரம்
அடைந்தார்.
திருஞானசம்பந்தர்
திருப்பதிக வரலாறு
பெரிய
புராணப் பாடல் எண் : 1029
மன்னுபுகழ்த்
திருத்தொண்டர் குழாத்தி னோடும்,
மறைவாழ வந்தவர்தாம்
மலையும் கானும்
முன்அணைந்த
பதிபிறவும் கடந்து போந்து,
முதல்வனார் உறைபதிகள்
பலவும் போற்றி,
பன்மணிகள்
பொன்வரன்றி அகிலும் சாந்தும்
பொருதலைக்கும் பாலிவட
கரையில் நீடு
சென்னிமதி
அணிவார்தந் திருவேற் காடு
சென்றுஅணைந்தார், திருஞானம் உண்ட
செல்வர்.
பொழிப்புரை : நிலைபெற்ற புகழையுடைய
தொண்டர் கூட்டத்துடன் மறைகள் வாழும் படியாய்த் தோன்றிய திருஞானசம்பந்தர், திருக்காளத்தியினின்றும் புறப்பட்டு, திருவொற்றியூர் தொழுவான் மனத்துட்கொண்டு, மலைகளையும், காடுகளையும் சேர்ந்த பதிகள் பலவற்றையும்
கடந்து வந்து, முழுமுதல்வராகிய
சிவபெருமான் வீற்றிருக்கும் திருப்பதிகள் பலவற்றையும் போற்றிச் சென்று, பலமணிகளையும் பொன்னையும் இழுத்துக்
கொண்டும், அகில், சந்தனம் முதலான மரங்களை மோதி அடித்துக்
கொண்டும் ஓடும் பாலியாற்றின் வடக்குக் கரையில் நிலைபெற்ற திருச்சடையில்
பிறைச்சந்திரனைச் சூடிய இறைவரின் திருவேற்காட்டினைச் சிவஞான அமுது உண்ட செல்வரான
பிள்ளையார் சென்று அடைந்தார்.
பெ.
பு. பாடல் எண் : 1030
திருவேற்காடு
அமர்ந்தசெழுஞ் சுடர்பொன் கோயில்
சென்றுஅணைந்து, பணிந்து, திருப் பதிகம்பாடி
வருவேற்று
மனத்துஅவுணர் புரங்கள் செற்றார்
வலிதாயம் வந்துஎய்தி
வணங்கிப் போற்றி,
உருஏற்றார்
அமர்ந்து உறையும் ஓத வேலை
ஒற்றியூர் கைதொழச்சென்று
உற்றபோது,
பொருவேட்கை
தருவாழ்வு பெற்ற தொண்டர்
பெரும்பதியோர்
எதிர்கொள்ளப் பேணி வந்தார்.
பொழிப்புரை : ஞானசம்பந்தர்
திருவேற்காட்டில் விரும்பி வீற்றிருக்கும் செழுஞ்சுடரான இறைவரின் அழகான கோயிலில்
சென்று சேர்ந்து, வணங்கித்
திருப்பதிகம் பாடியருளி, செந்நெறிகளை
எதிர்த்துவரும் வேறுபட்ட உள்ளமுடைய பகைவரான அவுணரின் முப்புரங்களையும் எரித்த
இறைவரின் `திருவலிதாயத்தில்' வந்து போற்றி, அழகான விடையூர்தியையுடைய இறைவர்
விரும்பி வீற்றிருக்கும் குளிர்ந்த கடற்கரையில் உள்ள திருவொற்றியூரை
வணங்குவதற்குச் சென்ற போது, பெருவிருப்பம் கொண்டு
வாழ்வு பெற்ற தொண்டர்களும் அப்பதியில் உள்ளவர்களும் அவரை எதிர்கொண்டு வரவேற்க
அன்புடன் வந்தனர்.
குறிப்புரை : இப்பதிகளில் அருளிய
பதிகங்கள்:
1. திருவேற்காடு:
ஒள்ளிதுள்ள (தி.1 ப.57) - பழந்தக்கராகம்.
2. திருவலிதாயம்: பத்தரொடு (தி.1 ப.3) - நட்டபாடை.
1.0 57 திருவேற்காடு பண் - பழந்தக்கராகம்
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
ஒள்ளிது
உள்ளக் கதிக்குஆம் இவன்ஒளி
வெள்ளி
யான்உறை வேற்காடு
உள்ளி
யார்உயர்ந் தார்இவ் வுலகினில்
தெள்ளி
யார்அவர் தேவரே.
பொழிப்புரை :மிகவும் சிறந்த
மெய்ப்பொருளை அன்போடு எண்ணினால் அவ்வெண்ணம் நற்கதிக்கு வாயிலாம். அத்தகைய
மெய்ப்பொருளாய் வெண்மையான ஒளி வடிவினனாய் திருவேற்காட்டில் எழுந்தருளியுள்ள
இவ்விறைவனை நினைந்தவர்கள் இவ்வுலகினில் உயர்ந்தவர் ஆவர். அவனைக் கண்டு தெளிந்த
அவர்கள் தேவர்களாவர்.
பாடல்
எண் : 2
ஆடல்
நாகம் அசைத்து,அளவு இல்லதுஓர்
வேடம்
கொண்டவன் வேற்காடு
பாடி
யும்பணிந் தார்இவ் வுலகினில்
சேடர்
ஆகிய செல்வரே.
பொழிப்புரை :ஆடுதற்குரிய பாம்பினை
இடையிற்கட்டிய, அளவற்ற பல்வேறு
வடிவங்களைக் கொண்டருளிய திருவேற்காட்டு இறைவனைப்பாடிப் பணிந்தவர்கள், இவ்வுலகினில் பெருமை பொருந்திய
செல்வர்கள் ஆவர்.
பாடல்
எண் : 3
பூதம்
பாடப் புறங்காட்டு இடைஆடி
வேத
வித்தகன் வேற்காடு
போதும்
சாந்தும் புகையும் கொடுத்தவர்க்கு
ஏதம்
எய்துதல் இல்லையே.
பொழிப்புரை :பூதகணங்கள் பாட, சுடுகாட்டின்கண் நடனம் ஆடி, வேதங்களை அருளிய வித்தகனாக விளங்கும்
திருவேற்காட்டு இறைவற்கு மலர்களும்,
சந்தனமும், நறும்புகை தரும் பொருள்களும்
கொடுத்தவர்களுக்குத் துன்பங்கள் வருதல் இல்லையாம்.
பாடல்
எண் : 4
ஆழ்க
டல்எனக் கங்கைக ரந்தவன்
வீழ்ச
டையினன் வேற்காடு
தாழ்வு
டைமனத் தால்பணிந்து ஏத்திடப்
பாழ்
படும்அவர் பாவமே.
பொழிப்புரை :ஆழமான கடல் என்று
சொல்லத்தக்க கங்கை நதியை மறைத்துக்கொண்ட, விழுது
போன்ற சடைமுடியினை உடைய திருவேற்காட்டு இறைவனைப் பணிவான மனத்தோடு வணங்கித்
துதிப்பவர்களின் பாவங்கள் அழிந்தொழியும்.
பாடல்
எண் : 5
காட்டி
னாலும் அயர்த்திடக் காலனை
வீட்டி
னான்உறை வேற்காடு
பாட்டி
னால்பணிந்து ஏத்திட வல்லவர்
ஓட்டி
னார்வினை ஒல்லையே.
பொழிப்புரை :மார்க்கண்டேயர், சிவனே முழுமுதல்வன் எனக் காட்டினாலும், அதனை உணராது மயங்கி அவர் உயிரைக்
கவரவந்த அக்காலனை அழித்த சிவபிரான் உறையும் திருவேற்காட்டைப் பாடல்கள்
பாடிப்பணிந்து வழிபடவல்லவர் தம் வினைகளை விரைவில் ஓட்டியவர் ஆவர்.
பாடல்
எண் : 6
தோலி
னால்உடை மேவவல் லான், சுடர்
வேலி
னான்உறை வேற்காடு
நூலி
னால்பணிந்து ஏத்திட வல்லவர்
மாலின்
ஆர்வினை மாயுமே.
பொழிப்புரை :தான் கட்டியும்
போர்த்தும் உள்ள ஆடைகளைத் தோலினால் அமைந்தனவாகக் கொண்டுள்ள இறைவன் ஒளிபொருந்திய
வேலோடு உறையும் திருவேற்காட்டை,
ஆகம
நூல்களில் விதித்தவாறு வழிபட்டுத் துதிக்க வல்லவர்களாகிய ஆன்மாக்களைப் பற்றிய
மயங்கச் செய்யும் வினைகள், மாய்ந்தொழியும்.
பாடல்
எண் : 7
மல்லல்
மும்மதில் மாய்தர எய்ததுஓர்
வில்லி
னான்உறை வேற்காடு
சொல்ல
வல்ல சுருங்கா மனத்தவர்
செல்ல
வல்லவர் தீர்க்கமே.
பொழிப்புரை :வளமை பொருந்திய
முப்புரங்களும் அழிந்தொழி யுமாறு கணை எய்த ஒப்பற்ற மேருவில்லை ஏந்திய சிவபிரான்
உறையும் திருவேற்காட்டைப் புகழ்ந்து சொல்லவல்லவர்கள் சுருங்கா மனத்தினராவர்.
அங்குச் சென்று தரிசிக்க வல்லவர் நீண்ட ஆயுள் பெறுவர்.
பாடல்
எண் : 8
மூரல்
வெண்மதி சூடும்முடிஉடை
வீரன்
மேவிய வேற்காடு
வார
மாய்வழி பாடுநி னைந்தவர்
சேர்வர்
செய்கழல் திண்ணமே.
பொழிப்புரை :மிக இளைய வெண்மையான
பிறைமதியைச் சூடும் திருமுடியை உடைய வீரனாகிய சிவபிரான் எழுந்தருளியுள்ள
திருவேற்காட்டை, அன்போடு வழிபட
நினைந்தவர், அப்பெருமானின் சிவந்த
திருவடிகளைத் திண்ணமாகச் சேர்வர்.
பாடல்
எண் : 9
பரக்கி
னார்படு வெண்தலை யிற்பலி
விரக்கி
னான்உறை வேற்காட்டூர்
அரக்கன்
ஆண்மை அடரப்பட் டான்இறை
நெருக்கி
னானை நினைமினே.
பொழிப்புரை :பிரமனின் தலையோட்டில்
பலியேற்கின்ற சமர்த்தனாகிய சிவபிரான் உறையும் திருவேற்காட்டில் அரக்கன் ஆகிய
இராவணனின் ஆண்மையை அடர்த்துக் கால்விரலால் சிறிதே ஊன்றி நெருக்கிய அவனை
நினைமின்கள்.
பாடல்
எண் : 10
மாறு
இலாமல ரானொடு மாலவன்
வேறு
அலான்உறை வேற்காடு
ஈறு
இலாமொழி யேமொழி யாஎழில்
கூறி
னார்க்குஇல்லை குற்றமே.
பொழிப்புரை :ஒப்பற்ற தாமரை மலர்
மேல் உறையும் நான்முகன், திருமால் ஆகியவர்களை
வெற்றி கொள்வானாகிய சிவன் உறையும் திருவேற்காட்டு இறைவனைப் பற்றிய மொழியை
ஈறிலாமொழியாக, அப்பெருமானுடைய அழகிய
நலங்களைக் கூறுபவர்களுக்குக் குற்றமில்லை.
பாடல்
எண் : 11
விண்ட
மாம்பொழில் சூழ்திரு வேற்காடு
கண்டு
நம்பன் கழல்பேணிச்
சண்பை
ஞானசம் பந்தன் செந்தமிழ்
கொண்டு
பாடக் குணமாமே.
பொழிப்புரை :விரிந்த மலர்களையுடைய
மாஞ்சோலைகள் சூழ்ந்த திருவேற்காட்டை அடைந்து, அங்கெழுந்தருளியுள்ள இறைவன்
திருவடிகளைப் பரவி, சீகாழிப்பதியுள்
தோன்றிய ஞானசம்பந்தன் உரைத்த இப்பதிகச் செந்தமிழ் கொண்டு பாடிப்போற்றுவார்க்கு
நன்மைகள் விளையும்.
திருச்சிற்றம்பலம்
No comments:
Post a Comment